தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். ‘உண்மையைப் போலியானதிலிருந்து பிரித்துக்காட்டும் சாதாரண விஷயமல்ல பகுத்தறிவு என்பது; உண்மையை உண்மையைப்போலத் தோற்றமளிப்பதிலிருந்து பிரித்துக்காட்டுவதே பகுத்தறிவு.’ இது எத்தனை சத்தியமான வார்த்தை என்பதை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நிதர்சனமாய்ப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் தவறு எது, உண்மையெது என்று அறிந்துகொள்ளுவது அத்தனை கடினமான காரியமாக இருக்கவில்லை. பொதுவாகவே அந்த விஷயத்தில் மக்களுக்கு அதிகம் பிரச்சனை இல்லாமலிருந்தது. இன்றைக்கு அதுவே இமாலயப் பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. தவற்றைத் தவறென்று சொல்லுவது தவறு என்கிறது பின்நவீனத்துவ சமுதாயம். கிறிஸ்தவ சமுதாயமும் அந்த சிந்தனைப் போக்கைக் கொண்ட கலாச்சாரத்தைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறது. தவற்றைத் தவறாகப் பார்க்கும் காலம் போய், அதோடு சேர்ந்து வாழ வற்புறுத்துகிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம். அதுதான் உண்மையான ஒற்றுமையாம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் உண்மை, உண்மையைப்போல் தோற்றமளிப்பதோடு ஒருங்கிணைந்து வாழ்வதுதான் யதார்த்தம் என்கிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம்.
உண்மை வேறு, உண்மையைப்போல் தோற்றமளிப்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல. உண்மைக்கு வெகு அருகாமையில் நிற்கிறது என்பதற்காக உண்மையைப்போலத் தோன்றுவதையெல்லாம் உண்மையாகக் கருதிவிடக்கூடாது. ஸ்பர்ஜன் தன்காலத்திலேயே இத்தகைய ஆபத்தை சந்தித்திருக்கிறார். அதற்கெதிராக அவர் போராடத் தவறவில்லை. வேதசத்தியங்களைத் தகர்த்து வேறு திசையில் பாப்திஸ்து யூனியன் சபைகள் இங்கிலாந்தில் போக ஆரம்பித்தபோது ஸ்பர்ஜன் அதை இனங்கண்டு தன்னுடைய சபையை அதிலிருந்து விலக்கிக் கொண்டார். மேலே நாம் பார்த்த ஸ்பர்ஜன், என்றோ சொன்ன கருத்து இன்றைக்கு சிந்தித்துப் பார்க்க வேண்டியளவுக்கு கோலியாத்தைப் போல வளர்ந்து நிற்கிறது.
ஒரு காலத்தில் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு வேதத்தில் இருந்த நம்பிக்கை இன்று அறவேயில்லை. வேதம் மட்டுமே அதிகாரம் கொண்டதென்று சொல்லுகிறவர்களெல்லாம் அதை மேற்போக்காகத்தான் சொல்லுகிறார்களே தவிர அதை உறுதியாக நம்பி நடந்துகொள்வதில்லை. காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றவகையில் வேத வார்த்தைகளுக்கும், வசனங்களுக்கும் விளக்கங்கொடுத்து அதன் மெய் அதிகாரத்தை இன்றைக்கு அநேகர் சிதைத்து வருகிறார்கள். இவெஞ்சலிக்கள் சமுதாயத்தில் இவர்கள் அதிகரித்திருப்பதுதான் பெருங்கவலையான காரியம். காலத்துக்கு ஏற்றவிதத்தில், சட்டையை மாற்றிக்கொள்ளுவதுபோல் சத்தியத்தை மாற்றியமைத்துக்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறது இன்றைய கிறிஸ்தவ சமுதாயம். வேதவசனங்களுக்கு நினைத்தவிதத்தில் பொருள் காண்பதும். ஏன், வேதவார்த்தைகளுக்கும், சத்தியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் காலத்துக்கேற்ற விதத்தில் பொருள் காண்பதும் வழமையாகிக் கொண்டிருக்கிறது.
பாவத்திற்கு புதுவிளக்கம்
இன்று சிலர் பாவத்திற்கு புது விளக்கம் கொடுத்து வருகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கலாச்சார அடிப்படையில் மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதுதான். கிறிஸ்துவைப் பலரும் விசுவாசிக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை சிதைப்பது எப்படி நியாயமாகும்? டிம் கெலர் என்ற அமெரிக்க போதகர் பாவமென்பது ‘மனிதன் தன்னை முதன்மைப்படுத்துவது’ என்று விளக்குகிறார். அதாவது, அவன் சுயத்தில் எல்லாவற்றிற்குமான நிறைவேற்றத்தைக் கண்டு அதில் தங்கியிருப்பதே அவரைப் பொறுத்தவரையில் பாவமாகும். மனிதன் சுயத்தில் அல்லாது கர்த்தரை அடிப்படையாகக் கொண்டு தன்னில் எல்லாவற்றிற்குமான நிறைவேற்றத்தைக் காண வேண்டும் என்கிறார் கெலர். இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. உண்மையைப் போல இது தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இது பாவத்திற்கு வேதம் கொடுக்கும் விளக்கத்தைத் தரவில்லை.
கர்த்தரின் கட்டளைகளை மீறுவது பாவம் என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 3:7; ரோமர் 4:15). அதாவது கர்த்தரின் கட்டளைகளை மனிதன் நிறைவேற்றத் தவறியதால்தான் ஆரம்பத்தில் ஏதேனில் பாவம் பிறந்தது. அந்த அடிப்படையில் சகல மனிதர்களும் கட்டளைகளை மீறுகிறவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். அந்த ‘மீறுதலே’ அவர்கள் சுயத்தில் தங்கியிருப்பதற்கும், சுயத்தில் திருப்தியடைவதற்கும் காரணம். மனிதன் சுயத்தில் தங்கியிருப்பதல்ல பாவம்; அது பாவத்தினால் ஏற்பட்ட விளைவு. மனிதன் கர்த்தரின் கட்டளைகளை மீறி வாழ்வதே பாவம் என்பது வேதம் பாவத்திற்கு அளிக்கும் தெளிவான விளக்கம். அந்த மீறுதல் மனிதனைப் பாவியாக்கி அவன் சகல பாவங்களையும் செய்யும் நிலைக்கு உள்ளாக்கியிருக்கிறது; அவன் தன்னை முதன்மைப்படுத்தி வாழும்படிச் செய்திருக்கிறது. இதைத்தான் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தெளிவாகப் போதிக்கின்றன. இன்று இதைத் தவிர்த்து பாவத்திற்கு மறுவிளக்கம் கொடுக்க பலர் முனைந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் பின்நவீனத்துவ கலாச்சாரத்திற்கேற்றவகையில் வேதத்திற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று டிம் கெலர் போன்றவர்கள் நம்புவதுதான். பின்நவீனத்துவ சமுதாயம் ஒழுக்கத்தை நிராகரித்து, சத்தியம் என்று ஒன்றில்லை என்று சிந்திக்கும் போக்கைக் கொண்டிருப்பதால் அவர்களைக் கவர, சத்தியம் இதுதான் என்று சொல்லிப்போதிக்கின்ற பழமையான சீர்திருத்தவாத, தூய்மைவாத கிறிஸ்தவப் போதனைகள் இந்தப் பின்நவீனத்துவ காலத்துக்கு உதவாது என்று முடிவுகட்டி பாவம் முதற்கொண்டு வேத சத்தியங்களுக்கெல்லாம் பின்நவீனத்துவ சிந்தனைப் போக்கின்படி இவர்கள் விளக்கங்கொடுத்து வருகிறார்கள்.
நான் சமீபத்தில் வாசித்த இன்னுமொரு ஆக்கத்தில் (Toward a Cross-Cultural Definition of Sin by T. Wayne Dye) அதை எழுதிய ஒரு முன்னாள் மிஷனரி பாவத்துக்குக் கொடுத்திருந்த விளக்கம் என்னை அதிரச் செய்தது. இதுவும் பின்நவீனத்துவ விளக்கந்தான். அந்த முன்னாள் மிஷனரி நாடுகளின் கலாச்சாரத்துக்குத் தகுந்தவிதத்தில் பாவத்தை விளக்க வேண்டும் என்கிறார். ஒரு நாட்டில் பலதார மணமுடித்தல் வழக்கத்தில் இருந்தால் அதைப் பத்துக்கட்டளைகளின் அடிப்படையில் பாவமாகப் பார்ப்பது மேலைநாட்டு வழக்கமாம். மேலை நாடுகளில் கிறிஸ்தவர்கள் அந்தவகையில் பாவத்தை இனங்காணப் பழகியிருப்பதால் அந்தக் கண்ணோட்டத்தோடு இன்னொரு நாட்டில் காணப்படும் கலாச்சாரத்தை பாவமாகப் பார்க்கக்கூடாது என்று இந்த மிஷனரி எழுதியிருக்கிறார். ஆகவே, நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறுவதால் ஒரு நாட்டில் பாவமாகக் கருதப்படுவது இன்னொரு நாட்டில் கலாச்சாரமாக மட்டுமே இருக்கும் என்பது இவரது விளக்கம். கலாச்சாரத்தின் அடிப்படையில் மட்டுமே எந்த நடத்தையையும் எந்நாட்டிலும் விளங்கிக்கொள்ள வேண்டுமே தவிர பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு எதையும் பாவமாகப் பார்க்கக்கூடாது என்று இவர் சொல்லியிருக்கிறார். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விளக்கம். இந்த மனிதரின் விளக்கம் அடிப்படையிலேயே வேதவிரோதமானது. கர்த்தருக்கு எதிரானது. இவரது விளக்கம் பாவத்திற்கு மட்டும் மறுவிளக்கம் தராமல், பத்துக்கட்டளைகளுக்கும் மறுவிளக்கம் தந்து இறுதியில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையே சிதைத்துவிடுகிறது. எந்தளவுக்கு பின்நவீனத்துவப் பார்வை கிறிஸ்தவர்களைப் பாதித்திருக்கிறது என்பதற்கு இது இன்னொரு உதாரணம். உண்மையைப் போலத் தோற்றமளிக்கும் விதத்தில் பொய்யைப் பரப்பி வருபவர்கள் தொகை இன்று அதிகம்.
ஓரின இச்சை (Same-sex orientation)
ஓரினச் சேர்க்கையை வேதம் ஆணித்தரமாக இயற்கைக்கு மாறானதாக விளக்க, அந்த வாழ்க்கையுள்ளவர்களை சபையில் ஏற்றுவாழ வேண்டும் என்று மேலைநாட்டுக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒரு சாராரால் இன்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஓயேஸிஸ் டிரஸ்ட் (Oasis Trust) என்ற கிறிஸ்தவ நிறுவனத்தை நடத்தும் ஸ்டீவ் சோக் (Steve Chalke) என்ற பாப்திஸ்து போதகர் இங்கிலாந்தில் இதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதேவேளை, ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என்றும், அந்த வாழ்க்கை பாவகரமானது என்றும் ஏற்றுக்கொள்ளுகிற கிறிஸ்தவர்களில் ஒரு சாரார், அந்த வாழ்க்கையை நடைமுறையில் வாழாதவரையில் மனத்தளவில் ஓரின இச்சை கொண்டிருப்பது (orientation) பாவமில்லை என்ற புதுவிளக்கத்தைக் கொடுத்து வருகிறார்கள். அதாவது, கிறிஸ்தவன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால்தான் பாவம், ஓரின இச்சையை இருதயத்தில் தொடர்ந்து கொண்டிருப்பது பாவமில்லை என்கிறார்கள் இவர்கள். இதை சபையில் போதித்து வருகிறார்கள் பல போதகர்கள். தன் சபைப் போதகர் இதை விளக்கி, கோபப்படுவதைப் போலத்தான் இதுவும், அதனால் இது பாவமில்லை என்று சொன்னதாகச் சொல்லி என்னிடம் வருத்தப்பட்டுக்கொண்டார் ஒரு பெண்மணி. ஓரினச் சேர்க்கையில் நடைமுறையில் ஈடுபடாவிட்டாலும் அத்தகைய இச்சை எங்களுக்கு தொடர்ந்திருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள் சில ஆங்கிலிக்கன் இவெஞ்சலிக்கள் போதகர்கள். ‘அந்த இச்சை போய்விடும் என்று கிறிஸ்து வாக்குத்தத்தம் செய்யவில்லை; அதனால் கடைசிவரை தனிமையில் வாழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என்றும், ‘அந்தப் பலவீனத்திற்கு மத்தியில் கிறிஸ்துவை மகிமைப்படுத்துவதே எனக்கு முக்கியம்’ என்றும் வோன் ரொபட்ஸ் (Vaughan Roberts) என்ற ஆங்கிலிக்கன் இவெஞ்சலிக்கள் போதகர் ஒருவர் இங்கிலாந்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். (ஊழியத்திலிருக்கும் இவருடைய மூன்று நண்பர்கள் தங்களுடைய ஓரின ஓரியன்டேஷனை வெளிப்படுத்தி அதை நியாயப்படுத்தும் வகையில் Living Out என்ற ஒரு வலைப்பூவையும் வைத்திருக்கிறார்கள்.) ஓரினச் சேர்க்கையைப் பற்றி விளக்கும் மிக முக்கியமான ஆறு வேதப்பகுதிகளுக்கு (ஆதியாகமம் 19:5; லேவியராகமம் 18:22; 20:13; ரோமர் 1:26-27; 1 கொரிந்தியர் 6:9; 1 தீமோத்தேயு 1:10) இவர்களெல்லாம் புதுவிளக்கம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஓரினச் சேர்க்கைப் பற்று, ஓரினச் சேர்க்கை இச்சை, அடிப்படையில் ஓரினச் சேர்க்கை ஆசைகொண்ட உள்மனப் போக்கு இதெல்லாம் ஒரே விஷயத்தைக் குறிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள். அடிப்படையில் ஓரினச்சேர்க்கை ஆசைகொண்ட உள்மனப்போக்கை நடைமுறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் செயலில் இருந்து வேதம் பிரித்துப் பார்க்கவில்லை. பிரித்துப் பார்க்கிறது என்று இவர்கள் தவறாகப் போதிக்கிறார்கள். இப்படிப் போதிப்பவர்களில் வோன் ரொபட்ஸ் மட்டுமல்ல, கெரிஸ்மெட்டிக் கல்வினிஸ்ட் என்று தன்னை இனங்காட்டிக் கொள்ளும் ஜோன் பைப்பரும் (John Piper) ஒருவர். அவருடைய இணைய தளமான Desiring Godல் இந்தவகையில்தான் அவர் விளக்கங் கொடுத்திருக்கிறார்.
ரோமர் 1:26ல் தேவன் அவர்களை ‘இழிவான இச்சைரோகங்களுக்கு’ (vile affections, vile passions, degrading passions, shameful lusts) ஒப்புக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறது. கிரேக்கத்தில் ‘பேதோஸ்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இச்சை’ என்று அர்த்தம். புதிய ஏற்பாட்டில் இது கேடான இச்சையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதே வசனம் இந்த இச்சையை சுபாவத்துக்கு விரோதமானது என்று விளக்குகிறது. அதாவது, இயற்கைக்கு மாறானது என்று அர்த்தம். ஏன் இயற்கைக்கு மாறானது என்று எழுதியிருக்கிறது என்று கேட்பது அவசியம். ‘இயற்கை’ என்று இங்கு அடையாளங் காணப்படுவது ஆதியில் கர்த்தர் ஆணையும், பெண்ணையும் உருவாக்கிய முறையைத்தான். ஆதியில் தேவன் ஆண், பெண்ணிலும், பெண் ஆணிலும் ஆசைகொள்வதைத்தான் மனித இருதயத்தில் இயற்கையாக ஏற்படுத்தியிருந்தார். அதற்கு முற்றிலும் மாறான, இயற்கைக்கு விரோதமானதுதான் ஆண் ஆணில் ஆசைகொள்வதும், பெண் பெண்ணில் ஆசைகொள்வதும். இத்தகைய ஆசையை வேதம் இயற்கையானதாகக் காணவில்லை; பாவமாக அதுவும் மிகவும் கீழ்த்தரமான, இழிவான பாவமாகப் பார்க்கிறது. அதன் காரணமாக தேவகோபம் மனிதன்மேல் இருப்பதாக ரோமர் 1 விளக்குகிறது.
வோன் ரொபட்ஸூம் ஜோன் பைப்பரும் விளக்குவதுபோல் இந்த ‘சுபாவத்துக்கு விரோதமான இச்சை’ கிறிஸ்தவர்களில் இயற்கையாகக் காணப்படும் பாவமற்ற ஆசையல்ல. வேதவிரோதமான விளக்கத்தை கலாச்சார அடிப்படையில் கொடுத்து இவர்கள் பொய்யை உண்மையைப் போலத் தோற்றமளிக்க வைக்கும் செயலைச் செய்திருக்கிறார்கள். அல்பர்ட் மொஹ்லரின் ‘God and the Gay Christian, A Response to Matthew Vines’ என்ற pdf நூல் இந்த விஷயத்தில் அடிப்படை வேதபோதனையை விளக்கி ‘ஓரின ஓரியன்டேஷனை’ (இருதயத்தில் ஓரின இச்சைப் போக்கு) பாவமானதாக, கிறிஸ்தவனில் காணப்படக்கூடாததாக ஆணித்தரமாக விளக்குகிறது. ஓரினச்சேர்க்கையையும், ஓரின ஓரியன்டேஷனையும் வேதம் அனுமதிக்கிறது என்று விளக்க முனையும் மெத்தியூ வைனின் வாதங்களை அல்பர்ட் மொஹ்லரின் நூல் தைரியத்தோடு தகர்த்தெறிகிறது.
ஓரினச்சேர்க்கை அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமுதாயத்தில் சாதாரண உறவு முறையாக ‘எபோலா’ வைரஸைப் போல உலகெங்கும் பெருகிவருவதால் அதை எதிர்த்துக் குற்றப்படுத்தாமல் சுவிசேஷத்தை அந்த வாழ்க்கைமுறையைக் கொண்டவர்களுக்குக் கொடுத்தால் பெரும் பயனிருக்குமே என்ற ‘உயர்ந்த நோக்கத்தால்’ வேதபோதனைகளுக்கு மறுவிளக்கம் (redefining) கொடுத்து ஓரின ஓரியன்டேஷனைக் கிறிஸ்தவர்கள் கொண்டிருப்பது தப்பில்லை (செயல் மட்டுமே தப்பு) என்று சொல்லிவருவது கிறிஸ்தவ சமுதாயத்தில் பெருகி வருகிறது.
ஓரினச் சேர்க்கையையும், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஓரின ஓரியன்டேஷனையும் எதிர்ப்பது நமக்கு ஒருபோதும் அரசியல் ஆகிவிடக்கூடாது. ஓரினச் சேர்க்கையாளர்களை நாம் வெறுக்கக்கூடாது. அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் இயற்கைக்கு மாறான ஈனத்தனமான செய்கையில் ஈடுபடும் அளவுக்கு பாவத்தில் விழுந்திருக்கிறார்கள். அதை அறியாதிருக்கிறார்கள். அவர்களும் கிறிஸ்துவை அறிந்து விசுவாசிக்கும்படி சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதே நமது இலக்காக எப்போதும் இருக்க வேண்டும். அதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு நிலைதடுமாறிக் கொண்டிருப்பவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பி இரட்சிப்பை அடைய வழி இருக்கிறது. அப்படி மனந்திரும்பி இரட்சிப்பு அடைகிறவர்கள் தொடர்ந்தும் பழைய ஈன வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது. அந்த வாழ்க்கையை விட்டுவிலகி நல்வாழ்வு வாழ்வதற்கு கிறிஸ்துவின் சுவிசேஷம் வழிவகுத்திருக்கிறது. பாவத்திலிருந்து விடுதலையை மட்டும் தராமல், பாவ வாழ்க்கையில் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்கக்கூடிய வல்லமையையும் கிறிஸ்துவின் திருஇரத்தம் தருகிறது. கிறிஸ்துவின் இரத்தம் நம்மைச் சகல பாவங்களிலும் இருந்து சுத்திகரித்து புதுவாழ்க்கை வாழ வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. ஓரின ஓரியன்டேஷனைப் போக்க வல்லமையற்றதாக கிறிஸ்துவின் இரட்சிப்பு இருக்குமானால் கிறிஸ்துவின் சுவிசேஷமே மதிப்பற்றதாகிவிடும். ஓரின ஓரியன்டேஷனில் இருந்து விடுதலை கொடுக்க கிறிஸ்துவால் இயலாவிட்டால் கிறிஸ்தவ பரிசுத்தமாக்குதலும் கேலிக்குரியதாகிவிடும். ஓரின ஓரியன்டேஷனை பாவமற்ற வெறும் சோதனை மட்டுமே என்று வாதிடும் வோன் ரொபட்ஸ் போன்றவர்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அடித்தளத்தையே தகர்க்கிறார்கள்.
கிறிஸ்துவின் கட்டளைகளையும், வேதபோதனைகளையும் காலத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி மாற்றியமைப்பதில் ஈடுபடும் ‘கிறிஸ்துவின் பெயரில்’ நடந்துவரும் திட்டமிட்ட பரவலான பிரச்சாரத்தை நம்மால் எதிர்த்து நிற்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவ சுவிசேஷத்தைக் கேட்டுத் திருந்தி கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் எல்லா விஷயத்திலும் கிறிஸ்துவுக்கு அடிமையாக பாவத்தை வெறுத்து, அதிலிருந்து அடியோடு விலகி அவரை மேன்மைப்படுத்துபவர்களாக சபையில் வாழவேண்டும். தங்களுடைய பழைய வாழ்க்கைப் போக்குகளுக்கு புது நியாயம் கற்பித்து, பாவத்துக்குப் புதுவிளக்கம் கொடுத்து வாழ்கிறவர்களாக அவர்கள் இருக்க முடியாது; அதற்கு இடங்கொடுப்பது ஒருபோதும் மெய்க்கிறிஸ்தவமாக இருக்காது. ஓரின ஓரியன்டேஷன் பாவமற்ற இச்சைதான் என்று வாதிடுபவர்கள் நிழலை நிஜமாக்கப் பார்க்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் இந்தப் போலிப் போதனையை இனங்கண்டு எதிர்த்து நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.