திருமறைத்தீபம் என்ற அற்புத பொக்கிசத்தை இலவசமாகப் பெற்று பயனடையும் வாசகர்களில் அடியேனும் ஒருவன். கிறிஸ்துவின் வருகை சமீபமாகவரும் இவ்வேளையில் வார்த்தைகளினால் விபரிக்க முடியாத காத்திரமான வேதாகம விளக்கங்களை திருமறைத் தீபம் கிறிஸ்தவ உலகிற்கு வழங்கி வருகிறதென்பதில் இரண்டு கருத்துக்கு நிச்சயமாக இடமிருக்க முடியாது.
இறுதியாகத் திருமறைத்தீபத்திலே வெளிவந்த ஆரம்ப அற்புத கட்டுரையான “ஆபத்தான மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும்” என்ற தலைப்பில் வெளிவந்த ஆய்வுத்தொடரை இலங்கை வாழ் ஒவ்வொரு மீட்கப்பட்ட கிறிஸ்தவர்களும் கட்டாயம் வாசித்தேயாக வேண்டும். இந்த மொழிபெயர்ப்பினை மெதடிஸ்டு திருச்சபையில் தற்போது அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூக்குரலிடுவோரின் கவனத்திற்கு, அடியேன் பிரதியாக்கம் செய்து, அநேகருக்குக் கொடுத்து, வாசிக்கச் செய்து அகக்கண்களைத் திறக்கச் செய்ய ஆசிரியர் பாலா அவர்கள் கிறிஸ்துவின் கிருபைகொண்டு உதவி செய்திருக்கிறார்.
இம்மடல், ஆசிரியர் பாலா அவர்களின் நேரடிக் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் இரட்டிப்பு மகிழ்வு அடைவேன்.
சகோ. சுரேந்திரன் இராஜநாயகம்,
மட்டக்களப்பு.
ஜூலை-செப்டம்பர், 2014 ‘திருமறைத்தீபம்’ என் கரம் கிட்டியது. நீங்கள் தொடர்ந்து திருமறைத்தீபத்தை அனுப்பி வைத்து எனது ஆவிக்குரிய ஜீவியத்தில் பெரிதும் உதவி வருகின்றீர்கள். கர்த்தருடைய வார்த்தை பேதையை உயிர்ப்பிக்கும் என்பது எத்தனை உண்மையும் சத்தியமும் நிறைந்தது. இந்த இதழில் “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது” என்ற கட்டுரையை வாசித்தேன். சுவிசேஷம் அறிவிக்கப்படும்போது ‘மதம் மாற்றுகிறார்கள்’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதற்கான சரியான பதிலைச் சொல்லும் வகையில் துண்டுப் பிரதிகள் தமிழில் இல்லை. அந்தக் குறையை இந்தக் கட்டுரை தீர்த்து வைத்தது.
இந்து மதத்தினரும் மற்றவர்களும் பொதுவாக சொல்வது, ஒருவனுக்கு ஒரு அப்பாவும் ஒரு அம்மாவும் தான் இருப்பார்கள். ஒருவர் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர் ஆகும்போது எப்படி அப்பாவை அல்லது அம்மாவை மாற்றுவது என்று கேள்வி கேட்கிறார்கள். எல்லா மதமும் சம்மதம். எல்லா நதியும் ஒரு கடலில்தான் சங்கமிக்கும் என்ற பொதுவான அறிவில் வாதிடுவோருக்கு பதில் சொல்லும் வகையில் ஒரு துண்டுப் பிரதி எழுதி வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
M. மகேந்திரன்,
போகவந்தலாவ, ஸ்ரீ லங்கா