சமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்

கடந்த வருடம் எண்பது வயதை எட்டினார் அல்பர்ட் என். மார்டின். ‘போதர்களுக்கெல்லாம் போதகர்’ என்று அழைக்கப்படும் அளவுக்கு ஆண்டவர் அவருடைய ஊழியத்தை அவருடைய வாழ்நாளில் உயர்த்தியிருக்கிறார். இத்தகைய பாராட்டை அவர் தானே சூட்டிக்கொள்ளவில்லை; போதகர்கள் அவரை அப்படிக் கணிக்கிறார்கள். இந்த வயதிலும் போதக ஊழியத்திலும், பிரசங்கத்திலும் அவர் பேர் பெற்றவராகத் தொடர்ந்தும் பலராலும் எண்ணப்பட்டு வருகிறார். இதை சமீபத்தில் நான் நேர்முகமாக அனுபவிக்க நேர்ந்தது. முப்பது வருடங்களாக அவரை நான் தெரிந்து வைத்திருந்து, அவருடைய ஊழியத்தினால் பயனடைந்து, அவரோடு நட்பையும், அன்பையும் அனுபவித்திருந்தபோதும் இம்முறை நான் கேட்க நேர்ந்த அவருடைய பிரசங்கம் என் எண்ணத்தில் அவரை இன்னும் ஒருபடி மேலாக உயர்த்தியிருக்கிறது.

அவருடைய வயதின் தன்மையை இப்போது ஓரளவுக்கு நான் அவருடைய நடையில் பார்க்க முடிந்தபோதும் பிரசங்க மேடையில் அவரை நாற்பது வயது நிரம்பிய ஒரு இளைஞனாகத்தான் பார்த்தேன். வயதால் ஏற்படும் சோர்வையோ, தள்ளாமையையோ அங்கே நான் பார்க்கவில்லை. சங்கீதம் 133 அவருடைய பிரசங்கத்தின் கருப்பொருளாக இருந்தது. சகோதரர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையை அவர் அந்த சங்கீதத்தில் காணப்படும் இரண்டு உதாரணங்களான ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்படும் தைலத்திற்கும் மற்றும் எர்மோன் மேலும், சீயோன் பர்வதங்கள் மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பிட்டு விளக்கிய விதத்தை அத்தனை அருமையாக நான் அன்றுதான் முதல்தடவைக் கேட்டேன். அன்று அல்பர்ட் என். மார்டினின் பிரசங்கம் அவரை எட்ட முடியாத உயரத்திற்கு என் சிந்தையில் உயர்த்தியது. நாற்பது வயதில் ஆத்துமாக்கள் மத்தியில் பிரசங்க ஊழியத்தில் பேர் பெற்று பிரசங்கத்தைக் கர்த்தருக்காக கடுமையான உழைப்போடு தயாரித்து ஆவியில் தங்கியிருந்து பிரசங்கிக்கும் ஓர் வாலிபப் பிரசங்கியாகத்தான் அவர் அன்று என் கண்ணுக்குத் தென்பட்டார். அந்தளவுக்கு அவருடைய படிப்பறை உழைப்பை நான் அந்தப் பிரசங்கத்தில் பார்க்க முடிந்தது. எபிரெய மொழியில் அந்த வேதப்பகுதியில் காணப்படும் நேரடி அர்த்தத்தை அவர் ஆங்கிலத்தில் எளிமையாக வெளிப்படுத்திய முறையும், சங்கீதக்காரன் பயன்படுத்தியிருக்கும் இரண்டு உதாரணங்களின் உள் அர்த்தத்தை அவர் என் மணக்கண் முன் நிழற்படம்போல் நிறுத்திய அழகும், எத்தகைய ஒற்றுமையையும், உறவையும் சகோதரர்களிடம் கர்த்தர் இருதய தாகத்தோடு எதிர்பார்க்கிறார் என்பதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களின் இருதயத்தில் இறக்கத் துடிக்கின்ற அவருடைய பிரசங்கத் துடிப்பையும் இந்த வயதில் அவரில் பார்த்து அன்று நான் அசந்துவிட்டேன் என்று மட்டுந்தான் சொல்ல வேண்டும். அல்பர்ட் என். மார்டினின் எத்தனையோ பிரசங்கங்களை என் வாழ்நாளில் நான் கேட்டிருந்தபோதும் அந்தப் பிரசங்கத்தில் நான் பார்த்தவையும், கற்றவையும் என்னுடைய வாழ்க்கையில் இறுதிவரையிலும் நிற்காமல் போகாது. இத்தகைய பிரசங்கியை உருவாக்கிய கர்த்தர் எத்தனைப் பெரியவர்!

பிரசங்க ஊழியத்தில் கர்த்தரால் அழைக்கப்பட்டு ஈடுபட்டு வருகின்ற எல்லோருமே அதில் சமமான வரத்தையும், ஆற்றலையும், ஆவியின் வல்லமையையும் கொண்டிருப்பதில்லை. எல்லாப் பிரசங்கிகளும் சமமான ஆவியின் ஆற்றலைக்கொண்டிருப்பார்கள் என்று நினைப்பது முழுத்தவறு. சிலருக்கு கர்த்தர் கூடிய ஆற்றலைக் கொடுத்து மேலானவிதத்தில் பயன்படுத்தியிருப்பதை வேதத்திலும், சபை வரலாற்றிலும் நாம் வாசிக்கிறோம். தீர்க்கதரிசிகளும், இயேசுவும், பவுலும், பேதுருவும், லூத்தரும், கல்வினும், ஜோன் நொக்ஸும், ஓவனும், பனியனும், எட்வர்ட்ஸும் அத்தகைய பிரசங்கிகளாக இருந்தனர். அந்தவகையில் இந்த நூற்றாண்டில் கர்த்தர் அல்பர்ட் என். மார்டினைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரைப்போல வேறு சிலரையும் நாம் பார்க்காமலில்லை. மற்றப் பிரசங்கிகளால் அவர் பிரசங்க ஊழியத்தில் மேலானவராகக் கருதப்படுகிறார்.

பிரசங்க ஊழியத்தில் சிலர் ஏனையோரைவிட சிறப்பான விதத்தில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டபோதும், பிரசங்கத் தயாரிப்பில் கருத்தோடு, கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தைக் கர்த்தர் எல்லாப் பிரசங்கிகளிடமும் எதிர்பார்க்கிறார். எபிரெய, கிரேக்க மொழிகளில் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் அவற்றின் அர்த்தத்தைத் தெளிவாக, எளிமையாக விளக்கிப் பிரசங்கித்து அவற்றால் நாம் கற்றுப் பயனடைய வேண்டிய பாடங்களை ஆவியின் வல்லமையோடும், அன்பால் நிரம்பிய கண்டிப்போடும் ஆணித்தரமாக ஆத்துமாக்கள் முன் நிறுத்தவேண்டிய பணி ஒருசில பிரசங்கிகளுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட சிறப்பான அம்சம் அல்ல. அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் நான் மறுபடியும் பார்த்ததும், கற்றதும் அதுதான். பிரசங்கப்பணியை எந்தளவுக்கு உயர்ந்ததாக, தேவபயத்தோடு எதிர்கொள்ள வேண்டியதாக அவர் கருதுகிறார் என்பதற்கு அவருடைய அன்றைய பிரசங்கம் ஓர் உதாரணமாக இருந்தது. தற்காலத் தமிழ் பிரசங்கிகளும், போதகர்களும் இந்தளவுக்கு பிரசங்கத்தைக் கருத்தோடு அணுகாமல் இருப்பது நம்மத்தியில் கிறிஸ்தவம் சிறந்ததாகக் காணப்படாமல் இருப்பற்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் எப்படி மறுக்க முடியும்?

பிரசங்கம் ஆவியின் வல்லமையோடு இருக்கவேண்டும் என்பதை ஒத்துக்கொள்ளாதவர்கள் இருக்க முடியாது. ஆவியின் வல்லமை என்பது நம்முடைய குரலைப் பெருமளவுக்கு உயர்த்திப் பிரசங்கிப்பதிலோ, பிரசங்க மேடையில் அளவுக்கதிகமான அங்க அசைவுகளைக் கொண்டிருப்பதிலோ தங்கியிருக்கவில்லை; பிரசங்கி நேர்மையோடும், தேவபயத்தோடும், ஆத்தும ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உழைத்துத் தயாரித்த பிரசங்கத்தை பிரசங்க வேளையில் ஆவியானவர் அவரிலும் ஆத்துமாக்களிலும் இறங்கிப் பயன்படுத்துகிறதையே ஆவியின் வல்லமை என்கிறது வேதம். அத்தகைய ஆவியின் வல்லமையைக் கருத்தோடு உழைத்துத் தயாரித்துப் பிரசங்கிக்கப்படாத பிரசங்கங்களில் துப்பரவாகக் காணமுடியாது. அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் ஆவியானவர் இருந்தார்; அவர் பிரசங்கியையும், ஆத்துமாக்களையும் என்னையும் அசைத்து ஆட்கொண்டார்.

அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கம் 90 நிமிடங்களில் கொடுக்கப்பட்டது. சாதாரணமாக அவர் 50 நிடங்களுக்கு பிரசங்கிப்பார். கூடிய நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக பிரசங்கத்தின் முடிவில் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அப்படி அவர் செய்திருக்க வேண்டிய அவசியமேயில்லை. ஒருவராகிலும் நேரம்போனதாகவே எண்ணவில்லை. இவ்வளவு சீக்கிரம் பிரசங்கம் முடிந்துவிட்டதா என்ற எண்ணம் மட்டுமே எனக்கு ஏற்பட்டது. அந்தளவுக்கு பிரசங்கத்தில் ஆழமாக நான் உட்பட அனைவரும் பதிந்துபோயிருந்தார்கள். அன்றைய கூட்டம் போதகர்களை மட்டும் கொண்டிருந்த கூட்டமல்ல. சபை மக்களும், வாலிபர்களும், சிறுவர்களும் கூட்டத்தில் இருந்தார்கள். இருந்தபோதும் எதையும் எவரும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு பிரசங்கம் தலைக்கு மேல் போவதாக இருக்கவில்லை. ஆழந்த, நுண்ணிய வேத சத்தியங்களால் பிரசங்கம் நிரம்பியிருந்தபோதும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி இருந்தது. எந்தளவுக்கு இந்தப் பிரசங்கி தன் சபை மக்களை சத்தியத்தில் வளர்த்திருக்கிறார் என்பதற்கு அந்தப் பிரசங்கம் அன்று உதாரணமாக இருந்தது. அப்படி சத்தியத்தில் வளர்க்கப்படாதவர்களுக்கு வேதப் பிரசங்கம் போரடிப்பதில் ஆச்சரியமில்லை. ஆழ்ந்த, நுணுக்கமாக, இறையியல் போதனைகள் அவசியமில்லை என்று இருப்பவர்களுக்கு வேதம் அவசியமில்லை; வேதப் பிரசங்கம் தேவையில்லை. அந்த நோக்கத்தோடு வளரும் கிறிஸ்தவம் மெய்க் கிறிஸ்தவமாக இருக்காது; நீண்ட நாட்களுக்கு அது நிலைக்கப்போவதுமில்லை.

அல்பர்ட் என். மார்டினின் அன்றைய பிரசங்கத்தில் நான் இன்னுமொன்றையும் கவனித்தேன். கடுமையாக உழைத்துத் தயாரித்த அந்தப் பிரசங்கத்தின் உதாரணங்களை அவர் நிச்சயம் தன்னுடைய படிப்பறையில் பல தடவைக்கள் தனக்குள்ளாகவே சொல்லிப்பார்த்திருக்க வேண்டும். அது என்னுடைய ஊகந்தான். நான் அப்படிச் சொல்லுவதற்குக் காரணமிருக்கிறது. அன்று அவர் தங்குதடையிலாமல் அந்த உதாரணங்களோடு ஒன்றிப்போய் உணர்ச்சியோடு ஆத்துமாக்கள் கண்ணசையவிடாதபடி சொன்ன முறை அதை எனக்கு உணர்த்தியது. இந்தவிதமாகப் பிரசங்கிக்க ஒரு பிரசங்கி எந்தளவுக்கு தன்னுடைய பிரசங்கப் பொருளிலும், பிரசங்கத்திலும் ஒன்றிப்போயிருந்திருக்க வேண்டும். பிரசங்கிக்கு பிரசங்கம் வெறும் பேச்சுப்பொருளாகவோ, மற்றவர்களுக்காக மட்டும் தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. பிரசங்கியின் வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்ததாக அது எப்போதும் இருக்கவேண்டும். அது முதலில் பிரசங்கிக்காகத் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அந்தளவுக்கு தன்னுடைய பிரசங்கத்தில் தானே பிணைந்து அதில் திளைத்து அனுபவித்த ஒரு பிரசங்கி மட்டுமே அல்பர்ட் என். மார்டின் அன்று பிரசங்கித்ததுபோல் பிரசங்கிக்க முடியும். அந்தவிதத்தில் நான் கேட்டுப் பயன்பட்ட இன்னுமொரு பிரசங்கி டெட் டொனலி. அவரும் ஒரு சிறந்த பிரசங்கியாக இருந்தபோதும் அல்பர்ட் என். மார்டினே தனக்கு பிரசங்கத்தில் முன்மாதிரி என்று தாழ்மையோடு சொல்லுகிறவர் அவர்.

இறுதியாக அன்றைய பிரசங்கத்தில் நான் அனுபவித்த இன்னுமொரு விஷயத்தை விளக்கி இதை முடிக்க விரும்புகிறேன். அன்று கிறிஸ்தவ ஒற்றுமை எப்படி இருக்க வேண்டும் என்று மட்டும் சங்கீதம் 133 மூலம் அல்பர்ட் என். மார்டின் தன்னுடைய பிரசங்கத்தில் விளக்கிக் காட்டவில்லை. அதற்கு முன்னுதாரணமாக அவர் அன்று பிரசங்க மேடையில் நின்றார். அன்று கூடியிருந்த கூட்டம் அந்த ஒற்றுமையை அவரோடு வாழ்ந்து அனுபவித்து அதற்கு சாட்சியாக இன்றும் நிற்கும் கூட்டம். கிறிஸ்தவ ஒற்றுமை பலருக்கு பேச்சாக மட்டுமே இருக்கிறது. அது வெறும் காலங்குலத் தடிப்புள்ளதாகவே இருக்கிறது. நுனிப்புல் மேய்வது போல் என்று சொல்லுவார்களே அதுபோல் போக்குக்கு நம் சரீரத்தின் தோலைக்கூடத் தொடாததொரு ஒற்றுமையையே இன்றைக்கு அநேகர் விரும்புகிறார்கள்; நாடுகிறார்கள். அதுவல்ல கிறிஸ்தவ ஒற்றுமை என்பதை மார்டின் அன்று பிரசங்கத்தில் விளக்கினார். அவர் அதைத் தன் வாழ்க்கையில் நடைமுறையில் தொடர்ந்தும் காட்டி வருகிறார். அந்த ஒற்றுமையின் அடையாளங்களில் ஒன்றுதான் அன்று கூடியிருந்த கூட்டமும்.

கடந்த வாரம் என்னுடைய பிரசங்கத்தில் நான் சொன்னேன் – இன்றைக்கு ஒற்றுமை தலையிலிருந்து விழுந்துவிடுகின்ற முடிபோலத் தளர்ந்து, பலவீனமானதாக இருக்கின்றதென்று. இன்று வெறும் சாதாரண கருத்து வேறுபாடுபோதும் ஒற்றுமை எந்தளவுக்கு பலவீனமானதாக இருக்கின்றதென்று கண்டுகொள்ளுவதற்கு. நிச்சயமாக அத்தகைய தன்மைகொண்டதல்ல வேதம் போதிக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை. அது மிகவும் ஆழமானது; அழுத்தமானது; தியாகமுள்ளது; தடிப்புள்ளது. சாதாரண வேறுபாடுகளால் தளர்ந்து போகாதது. அன்பெனும் சங்கிலியால் பிரிக்க முடியாதபடி கட்டப்பட்டது அந்த ஒற்றுமை. அத்தகைய அன்போடு கூடிய ஒற்றுமையை இன்றைக்குப் பலர் விரும்புவதில்லை. ஏன், தெரியுமா? சுயநலந்தான் காரணம். காலங்குளத் தடிப்புள்ள தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையும், கிறிஸ்தவ நம்பிக்கையும், கிறிஸ்தவ ஊழியமும் எங்கே தோலுரிக்கப்பட்டுவிடுமோ என்ற பயந்தான் பலரை இன்றைக்கு ஆழான கிறிஸ்தவ ஒற்றுமையைவிட்டுத் தள்ளி நிற்க வைத்திருக்கிறது. அத்தகைய வாழ்க்கையை எவரும் தன்னுடைய கணவனோடோ மனைவியோடோ வாழமுடியுமா? வாழ்வதுதான் தகுமா? சத்தியத்தின் அடிப்படையில், அன்பைப் பிணைப்பாகக்கொண்டு, நெருக்கமான உறவை நிரந்தரமானதாகக் கொண்டிருக்கும் குறிக்கோளோடு, தியாகங்கள் பல செய்து நிலைநிறுத்தப்படுவதே மெய்யான கிறிஸ்தவ ஒற்றுமை (எபேசியர் 4). அத்தகைய கிறிஸ்தவ ஒற்றுமையை நாடாமலும், அதை விரும்பாமலும், அதற்காக உழைக்க மறுப்பவர்களுக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை எதற்கு?

_____________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 25 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s