இருபது வயதாகிவிட்டது

கடந்த வருடத்தின் இறுதிக் காலாண்டிதழோடு திருமறைத்தீபம் இருபது வருடங்களைப் பூர்த்தி செய்திருக்கிறது. இருபது வருடங்கள் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய காலப்பகுதி; மனிதனுடைய வாழ்க்கைக்கு அத்திவாரமிடும் அடிப்படைக் காலப்பகுதி. இருபது வயதாகிறபோது ஒருவன் வளர்ந்து பிற்கால வாழ்க்கைக்குத் தன்னைத் தயாராக்கிக்கொள்ளுகிற நிலையை அடைந்துவிடுகிறான். பிள்ளைப் பருவத்தைத் தாண்டி வாலிபனாகி, கல்விகள் பல கற்று இருபதைத் தொடுகிறபோது அவன் மனிதனாக எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளத் தேவையானதை அடைந்து விடுகிறான். அதுவே பெண்ணாக இருக்கும்போது இருபது வயதில் அவள் ஒருவனுக்கு மனைவியாகி குடும்பம் நடத்துகிற நிலைக்குத் தயாராகி விடுகிறாள். இருபது வருடங்கள் நிமிடங்களைப் போலப் பறந்துவிடுவதுபோல் நம் பார்வைக்குப்பட்டாலும் அந்த வருடங்கள் எவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான காலப்பகுதி.

நம் பத்திரிகை இருபது வருடங்களைத் தாண்டியிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கிறபோது அந்த வருடங்கள் பறந்தோடிவிட்டதுபோல் என் மனதுக்குப்பட்டபோதும் எத்தனையெத்தனை காரியங்களை அந்த வருடங்கள் பத்திரிகை மூலம் செய்திருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. பத்திரிகை ஆரம்பித்தவிதமே அற்புதமானதுதான். என் நண்பர்களான இருவரின் சலிக்காத தூண்டுதலின் பலனே பத்திரிகை. அதற்காக ஜெபித்து என்னை ஊக்குவித்ததோடு பொருளுதவி செய்து ஆரம்பகாலப்பகுதியில் ஐந்து வருடத்தேவைகளை அவர்கள் தாங்கி பத்திரிகை தொடர்ந்து வெளிவர உதவியிருக்கிறார்கள். ஒருவர் இப்போது கர்த்தரை அடைந்துவிட்டார். ஐந்து வருடங்கள் நிறைவேறிய நிலையில் அவர்களால் தொடர்ந்து தேவைகளைத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டபோது கர்த்தர் அந்தத் தேவைகள் சந்திக்கப்படுகிற வழிகளை ஏற்படுத்தித் தந்தார். இன்றுவரை கர்த்தரே பத்திரிகையைத் தாங்கி நடத்தி வருகிறார். அவரில்லாமல் எதுவும் நடக்க முடியாது. அவர் நடத்துகிறதை எவரும் நிறுத்தவும் முடியாதென்பதை அவருடைய இறையாண்மை நமக்கு போதிக்கிறதல்லவா.

ஆரம்பத்தில் பெரிய சைஸில் வெளிவந்த பத்திரிகை வாசகர்கள் பலரின் வேண்டுகோளினால் இப்போதிருக்கும் சைஸில் வெளிவர ஆரம்பித்தது. அதையே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழில் வந்துகொண்டிருக்கும் பத்திரிகைகளைவிடத் திருமறைத்தீபம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பத்திரிகை நடத்தி எனக்குப் பழக்கமில்லை. எழுதுவதை நான் பள்ளிப் பருவத்தில் இருந்து செய்து வந்திருக்கிறேன். அதுவேறு, பத்திரிகை நடத்துவது என்பது வேறு. வெறும் எட்டுப்பக்கங்களோடு மட்டும் ஆரம்ப இதழை ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாதமும் வெளிவருவதென்பது என்னுடைய போதக ஊழியப்பணிகளின் மத்தியில் கஷ்டமானது என்பது எனக்குப் புரிந்திருந்தது. எனவே காலாண்டிதழாக வெளியிட முடிவு செய்தேன். சபைக்கு கொடுக்க வேண்டிய நேரம் இதற்குப் போகிறது என்பதால் இதை சபை வெளியீடாக வெளியிட முடிவு செய்தேன். எப்போதுமே எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஈவுகளை நாம் சபை மூலமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எனக்குத் தெளிவிருந்தது. பத்திரிகை சம்பந்தமான அனைத்து வேலைகளும் என் பொறுப்பாக இருந்தது. காலம் போகப்போக பத்திரிகை வளர சபையும் நடைமுறையில் பத்திரிகையை முத்திரை ஒட்டிப் போஸ்ட் செய்யும் பணியுட்பட பல காரியங்களில் ஈடுபட்டது. சபை ஆங்கில சபையாக இருந்ததால் பத்திரிகையில் வருவதை அவர்களால் வாசிக்க வழியில்லை. இருந்தாலும் சுவிசேஷப் பணியில் அவர்கள் எனக்கு ஆதரவு தர எப்போதும் தடையாக இருக்கவில்லை.

ஆரம்ப காலத்தில் பத்திரிகை நடத்துவதற்காக நான் கம்பியூட்டர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதான் (1995) தமிழில் கணினி மென்பொருள் வெளிவர ஆரம்பித்திருந்தது. அதன் விலையும் ஆரம்பத்தில் அதிகம். பெரும் பத்திரிகைகள் நடத்துகிறவர்களே அத்தகைய மென்பொருளை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். சென்னையில் ஒரு கம்பேனியில் அதை நான் வாங்கினேன். என் நண்பரொருவர் அதற்குப் பணம் கொடுத்தார். சபைக்கு அன்று பத்திரிகை செலவுகளை சந்திக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. தமிழ் மென்பொருளை இன்றைக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. டைப் செய்யத் தெரிந்திருந்தாலும், வார்த்தைக்கு வார்த்தை தொடர்பில்லாமல் இருந்த தமிழ் டைப்பிங் கற்றுக்கொண்டேன். அதுவே போகப்போகப் பழகிவிட்டது. பேஜ் மேக்கரில் பத்திரிகையை எப்படித் தயாரிப்பது என்பதையெல்லாம் நானே எனக்குத் தெரிந்தவரையில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். எழுதுவது மட்டுமல்லாமல் அட்டைப் படத்தில் இருந்து எல்லா வேலைகளையும் தனியொருவனாகப் பல வருடங்கள் செய்ய வேண்டியிருந்தது. இந்த விஷயத்தில் துணை செய்யவோ, உதவியாளர்களை வைத்துக்கொள்ளவோ அன்று எவரும் இருக்கவில்லை; வசதியும் இருக்கவில்லை. நானும், கணினியுமாக சேர்ந்து உழைத்து முதல் இதழ் வெளிவந்தது. அது தொடர்ந்து வளர்ந்து இன்று மரமாக நிற்கின்றது. இன்று என்னோடு தோளோடு தோளாக இருந்து நண்பர் ஜேம்ஸ் இந்தப் பணியில் இணைந்து இயங்குகிறார். இதை எண்ணிப்பார்த்து சந்தோஷப்படுவது மட்டுமல்லாமல் இதில் கர்த்தரின் செய்கையைத்தான் நான் பெருமளவில் சிந்தித்துப் பார்த்து அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

பத்திரிகையில் எதை எழுதுவது என்பதில் எனக்கு சந்தேகமிருக்கவில்லை. நான் விசுவாசிக்கின்ற சீர்திருத்த சத்தியங்களை ஆணித்தரமாக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அது போய்ச்சேர வழி ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அதேபோல் சீர்திருத்த கிறிஸ்தவ போதனைகளையே ஆரம்பத்தில் இருந்து இன்றைக்கும் பத்திரிகை வெளியிட்டு வருகின்றது. தமிழ் கிறிஸ்தவர்களுக்கு அதை விளக்குவது மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எழுத வேண்டும் என்பதிலும் நான் தெளிவாக இருந்தேன். குழப்பமான போதனைகளைத் தன் மத்தியில் வளர்த்துக்கொண்டு சீர்திருத்த வரலாறு பற்றிய தெளிவான ஞானமற்ற நிலையில் இருந்து வந்த தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீர்திருத்த கிறிஸ்தவத்தை அவர்கள் அறிந்துகொள்ளுவதில் பத்திரிகை இருபது வருடங்களில் தன் பங்கைச் செய்திருக்கிறது என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதைக் கர்த்தரே பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.

பத்திரிகைக்கு என்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்ற பெரிய எண்ணங்கள் எதுவுமில்லாமல் ஒருசில கொள்கைகளை மட்டும் நடைமுறையில் நிறைவேற்ற வேண்டும் என்றிருந்தேன். முதலில் அது நல்ல எளிமையான தமிழில் இருக்க வேண்டும் என்பதில் எனக்கு உறுதி இருந்தது. கிறிஸ்தவ தமிழ் என்று பெயர்பெற்றுவிட்ட தமிழில் எழுதாமல் வாசகர்களுக்கு புரியக்கூடிய தமிழில், அதுவும் கொச்சையானதாக இல்லாமல் ஓரளவுக்கு இலக்கியத் தரம் கொண்ட தமிழில் எழுத வேண்டும் என்பதை நான் கொள்கையாக வைத்திருந்தேன். அதன் பலனை ஆரம்ப இதழ்களே எனக்குத் தெரியப்படுத்தின. கிறிஸ்தவ வாசகர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தாகம் எனக்கிருந்தது. அதுபற்றி அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன். நடைமுறை சூழலில் தமிழ் கிறிஸ்தவர்கள் முகங்கொடுக்கும் சவால்கள், இறையியல் பிரச்சனைகள் என்பது போன்றவற்றிற்கும் பத்திரிகை விளக்கமளித்திருக்கிறது. காலம் போகப்போக எதை எழுத வேண்டும் என்பதில் கர்த்தர் எனக்கு தெளிவான வழியைக் காட்டி வந்திருக்கிறார். நான் மட்டுமல்லாமல் வேறு பலரும் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட நல்ல ஆக்கங்களும் பத்திரிகையில் வெளிவந்திருக்கின்றன.

இத்தனை வருட பத்திரிகை ஊழியத்தில் பார்த்ததும் கற்றதும் அநேகம். ஒரே சத்தியத்தின் அடிப்படையில் ஒரே கொள்கையை விளக்கி எழுதி வருவது சிலருக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி அளித்திருக்கிறது. ஏனெனில், தமிழ் கிறிஸ்தவ சமுதாயம் இன்றைக்கு பரவலான பலவிதமான போதனைகளைப் பின்பற்றி வருவதால் அந்த சிந்தனைப் போக்கை வளர்த்துக்கொண்டவர்களுக்கு பத்திரிகையின் இந்தத் தனித்துவப் போக்கு தவறானதாகப் பட்டிருக்கிறது. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்கு இது பற்றி இப்போது விளக்குவது அவசியமாகிறது. ஒரே சத்தியத்தை அடிப்படைக் கோட்பாடுகளில் கொண்டிராமல் தற்காலத் தமிழ் கிறிஸ்தவம் இருந்துவருவதால் அதுவே சரியானது என்று எண்ணுவது தவறு. அடிப்படைப் போதனைகளில் வேதம் வெவ்வேறான போதனைகளைக் கொண்டிருக்க வழிகாட்டவில்லை. கர்த்தர் ஒருவரே; விசுவாசம் ஒன்றே என்று பவுல் எபேசியர் 4ல் விளக்குகிறார். அந்த அடிப்படையில் சீர்திருத்த கிறிஸ்தவப் போதனைகளை வேத அடிப்படையில் விளக்குகிறபோது அதைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு பத்திரிகையின் போக்கு புதிராகத்தான் இருந்திருக்கும். பத்திரிகையை வாசிக்க வாசிக்க பின்னால் அதைப் புரிந்துகொண்டிருக்கிற வாசகர்கள் அநேகர். வேதத்தையும், 1689 விசுவாச அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டே சகல போதனைகளும் பத்திரிகையில் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதை மீறி சத்தியத்திற்கு பல தோற்றங்களும், வர்ணங்களும் இருக்கின்றன என்று காண்பிப்பதோ, சத்தியத்தை சத்தியமாக விளக்காமல் விடுவதோ சத்தியத் துரோகம் என்று நான் நம்புகிறேன்.

வேத போதனைகளையும், சீர்திருத்த கிறிஸ்தவத்தையும் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகள் சத்தியமானவை என்றும் கிறிஸ்தவத்தின் நியாயமான, தவிர்க்க முடியாதொரு வெளிப்பாடு என்றும் எண்ணி வருகிறார்கள். 19ம் நூற்றாண்டில் தலைதூக்கி வளர்ந்து இன்றைக்கு செழிப்பு உபதேசம் மற்றும் மோசமான பெனிஹின் போன்றோரின் அற்புத ஊழியம் வரைக்கும் கொண்டுபோயிருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகளும், ஊழிய முறைகளும் வேதம் அறியாதவை. வரலாற்றுக் கிறிஸ்தவம் காணாதவை. வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளிலும் இல்லாதவை. ஆகவே அவசியமான வேளைகளில் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனைகளிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆத்துமாக்களுக்கு வேத வெளிச்சமளிப்பது எம் கடமை. நாம் தனிப்பட்ட முறையில் பெந்தகொஸ்தெ, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களல்ல; அவர்களுடைய போதனைகளையே மிகத் தவறானவைகளாக வேத அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறோம். அவர்களுடைய கண்கள் திறக்கவும் ஜெபிக்கிறோம். அந்த வகையில் திருமறைத்தீபத்தால் கண்கள் திறக்கப்பட்டவர்களின் தொகை ஏராளம்.

பத்திரிகை எந்தத் திருச்சபைப் பிரிவுக்கும் எதிரானதல்ல. நிச்சயமாக கத்தோலிக்க மதத்தை நாம் கிறிஸ்தவமாக பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பது வேதத்துரோகம். புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவப் பிரிவுகளனைத்தையும் நாம் மதிக்கிறோம். இருந்தபோதும் வேதத்தையும், வரலாற்றுக் கிறிஸ்தவம் நமக்குத் தந்துள்ள 1689 விசுவாச அறிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு திருச்சபை பற்றி விளக்கங்களைத் தருகிறபோது இன்றைய காலப்பகுதியில் காணப்படும் நடைமுறைத் தவறுகளை நம்மால் சுட்டிக்காட்டாமல் இருக்க வழியில்லை. வேத அடிப்படையிலும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையிலும் திருச்சபையைத் தொடர்ந்து சீர்திருத்தத்திற்கு உட்படுத்துவதே நம் காலத்தில் தொடர வேண்டிய சீர்திருத்தமாகும். சீர்திருத்தம் என்பது முடிந்துபோனதல்ல; இன்றும் தொடர வேண்டியது.

கிறிஸ்தவ ஒற்றுமையை பத்திரிகை பெரிதும் மதிக்கிறது; ஆனால், போலித்தனமான உதட்டளவில் நிற்கும் ஒற்றுமையை அல்ல. கிறிஸ்தவ ஒற்றுமை சத்தியத்தின் அடிப்படையிலானதாக அன்பால் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். சத்தியத்தின் அடிப்படையில் காணப்படாத ஒற்றுமை மெய்யான ஒற்றுமையல்ல. திருமறைத்தீபத்தைப் பல்வேறான திருச்சபைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் வாசிக்கிறார்கள். யார் வாசிப்பதற்கும் நாம் தடைபோடுவதில்லை. ஆனால், பத்திரிகையில் வருவதனைத்தும் வேத அடிப்படையிலும், வரலாற்றுக் கிறிஸ்தவத்தினதும் அடிப்படையில் அமைந்ததாக மட்டுமே இருக்கும். சத்திய வாஞ்சை கொண்ட பல்வேறு திருச்சபைப் பிரிவினரையும் பத்திரிகை நண்பர்களாகக் கொண்டிருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன் பத்திரிகை முதன் முதலாக வெளிவந்தபோது தமிழினத்தில் அது சந்தித்த பெரும் சவால் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் செழிப்பு உபதேசப் போதனையே. அந்தப் போதனைகள் இன்றும் காணப்பட்டபோதிலும் வேறு எத்தனையோ சவால்களை இந்தக் காலப்பகுதியில் பத்திரிகை முகங்கொடுத்து அவை பற்றி விளக்கியிருக்கிறது. இந்துப் பின்னணியிலான சமுதாயக் கட்டுப்பாடுகளையும், கலாச்சாரத்தையும் கிறிஸ்தவர்கள் விட்டுவிலக வேண்டிய அவசியத்தை வேதபூர்வமாக விளக்கியிருக்கிறது. பழைய சவால்களிலிருந்தே இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில் 21ம் நூற்றாண்டில் புதிய சவால்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றையும் பத்திரிகை நிச்சயம் முகங்கொடுத்து தமிழின கிறிஸ்தவ விழிப்புணர்வுக்கு வழிகோலுமுகமாக தன்னுடைய விளக்கங்களை வேதப்பூர்வமாகத் தொடர்ந்தளிக்கும். அந்தப் பணியில் பத்திரிகையை உங்கள் ஜெபத்தில் தாங்குங்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s