கடந்த வருட இறுதியில் போதகர்களுக்கான ஓர் ஆவிக்குரிய கூட்டத்தில் கலந்துகொண்டேன். இதில் பல்லாண்டுகளாக நான் கலந்துகொண்டிருக்கிறேன். அநேக விதங்களில் எனக்கும் என் நட்புக்குரிய அநேக போதகர்களுக்கும் இது பெருமளவில் ஆவிக்குரிய வாழ்க்கையிலும், ஊழியத்திலும் துணைபுரிந்திருக்கிறது. இந்தக் கூட்டங்களில் முக்கிய அம்சம் போதகர் அல்பர்ட் என். மார்டின் நடத்துகின்ற கேள்வி-பதில் நேரம். இது ஒன்றரை மணி நேரத்துக்கு இரண்டு நாட்களுக்கு நடக்கும். இந்த நேரத்தில் பல போதகர்கள் தங்களுடைய இருதயத்தில் இருந்து வரும், ஊழியத்தில் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகள், இறையியல், வாழ்க்கை சம்பந்தமான விஷயங்கள் பற்றி கேள்விகளை முன்கூட்டியே கொடுப்பார்கள். அந்தக் கேள்விகளுக்கு விளக்கங்களை போதகர் மார்டின் அளிப்பார். இது வெறும் கேள்வி பதில் நேரமல்ல. மிகவும் ஆழமான ஆவிக்குரிய, இறையியல் விளக்கங்கள் நடைமுறைக்குத் தகுந்தவிதத்தில் கொடுக்கப்படும் முக்கியமான நேரம். இது ஒருபோதும் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில், தனிப்பட்ட விஷயங்களும், பொதுவில் கலந்துகொள்ளக்கூடாத விஷயங்களும் இதில் விவாதிக்கப்படும். இந்த நேரத்தில்தான் அல்பர்ட் என். மார்டினை அவருடைய சொந்தத் தளத்தில் நாம் பார்த்து வந்திருக்கிறோம் (He is in his element). அதாவது, சொல்லுவதெல்லாம் பதிவு செய்யப்படுகின்றதே என்ற கவலை எதுவும் இல்லாமல், தைரியமாக, தெளிவாக அவருக்கே உரியவிதத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் இருக்கிறோம் என்ற பலத்த நம்பிக்கையோடு நண்பர்களுக்கு மத்தியில் இங்குதான் பாஸ்டர் மார்டின் அவராக இருந்து வெளிப்படையாகப் பேசக் கேட்டிருக்கிறேன். இந்த நேரம் போதகர்களுக்கு பொன்னான நேரம். என்னுடைய எத்தனையோ கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கிறது. அல்பர்ட் என். மார்டின் தன்னுடைய விளக்கத்தைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அங்கிருக்கும் ஏனைய மூத்த போதகர்களின் எண்ணங்களையும் கேட்பார். இன்னொரு முக்கிய விஷயமென்னவென்றால் இந்தக் கேள்வி&பதில் நேரத்தை அல்பர்ட் என். மார்டினே செய்ய வேண்டும் என்று ஏனைய போதகர்கள், முக்கியமாக மூத்த போதகர்கள் அவரைக் கேட்டு வந்திருக்கிறார்கள். இதற்கு அவர் மட்டுமே தகுந்தவர் என்பது எல்லோருடைய ஏகோபித்த முடிவாகவும் இருந்து வந்திருக்கிறது. அதில் இன்றுவரை மாற்றங்கள் இல்லை.
இந்தக் கேள்வி நேரத்தில் பாஸ்டர் மார்டின் கேள்விகளை அணுகும் முறை அபாரமானது. சட்டென்று எதற்கும் பதில் தந்துவிடாமல், கேள்வியைப் பல கோணங்களில் ஆராய்ந்து புரிந்துகொண்டு அதற்கான இறையியல் விளக்கங்களைப் படிப்படியாகக் கொடுத்து அதற்குப் பிறகு நடைமுறையில் அதை அணுக வேண்டிய விதத்தையும் அவர் விளக்குவார். ஓர் ஓவியன் தனக்கு முன்னால் இருக்கும், தான் வரைகின்ற ஓவியத்தைப் பல கோணங்களில் தள்ளி நின்று எப்படிப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன் பிறகு தூரிகையில் தகுந்த வர்ணத்தை எடுத்து அந்த ஓவியத்தைத் தீட்டுகிறானோ அதேபோல்தான் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களை அல்பர்ட் என். மார்டின் அணுகியிருக்கிறார். கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் விதமே அலாதியானது. ஒரு விஞ்ஞானியைப் போல அவர் கேள்விகளை அணுகிப் பதிலளிப்பதை நான் கண்டிருக்கிறேன். ஒரு சட்ட நிபுணனைப்போல அந்தக் கேள்விகளை அலசி ஆராய்ந்து தகுந்த தரமான பதில்களை வேதத்தில் இருந்து விளக்குவதை வருடக்கணக்கில் கண்டிருக்கிறேன். சாணத்தில் தீட்டப்படும் கத்தி கூரடைவதைப்போல அவருடைய ஒவ்வொரு பதில்களும் இருக்கும். இசைஞானியொருவர் மேடையில் வாத்தியக்கருவியை லாவகமாகக் கையாண்டு கூட்டத்தாரை மெய்மறக்கச் செய்வதுபோல் அல்பர்ட் என். மார்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
கேள்விகளுக்கு பதில் தந்து முடிந்தபின் பாஸ்டர் மார்டின் இன்னும் உப கேள்விகள் இருக்கின்றனவா என்று கேட்கத் தவறுவதில்லை. அவற்றிற்கும் அவர் பதில் தருவார். தன் முன் கூடியிருக்கும் சபையார் கருத்துக்களையும் அவர் கேட்கத் தவறுவதில்லை. முக்கியமாக அவருடைய பதில்களிலும், நடந்துகொள்ளும் முறையிலும் தாழ்மை குடிகொண்டிருக்கும். மிக முக்கியமாக தனக்குத் தெரியாததொன்றைத் தெரிந்துகொண்டதுபோல அவர் என்றுமே காட்டிக் கொண்டதில்லை. இந்தத் தடவையும்கூட ஒரு விஷயத்திற்கு அவர் பதிலளித்தபோது தனக்குத் தெரிந்தவரை, கர்த்தர் வெளிப்படுத்தியிருக்கும்வரை பதிலளித்த அவர் அதற்கு மேல் கர்த்தர் தனக்கு எதையும் வெளிப்படுத்தவில்லை என்று மிகத் தைரியமாகத் தாழ்மையோடு தெரிவித்தார். தெரியாது என்று பதில் சொல்லுவதற்கு அவர் ஒருபோதும் தயங்கி நான் பார்த்ததில்லை. அதை அறியாமையால் அவர் சொல்லுவதில்லை. முதிர்ந்த ஞானியாக வேதம் அதைத் தனக்கு வெளிப்படுத்தவில்லை என்ற தாழ்மையோடு சொல்லுவார். வேதம் வெளிப்படுத்தாத விஷயங்களைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளுவது அவருடைய அகராதியில் என்றுமே இருந்ததில்லை. அதே நேரம் கர்த்தர் தெளிவாக வெளிப்படுத்தியிருப்பவற்றை பயமறியாது ஆணித்தரமாக விளக்குவதற்கும் அவர் என்றுமே தயங்கியது கிடையாது. அவருடைய பதில்கள் என்றும் எவரையும் காயப்படுத்தியதில்லை. தனிப்பட்ட விதமாக எவரையும் அவர் தாக்குவதில்லை. அவருடைய பதில்கள் இருதய சுத்தத்துடன் வெளிப்படையாக தைரியத்தோடு வருவதற்குக் காரணம் அவர் அவருடைய நண்பர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருப்பதுதான். உதாரணமாக இந்த வருடம் பக்கத்தில் என்னுடைய சக ஊழிய நண்பர் அமர்ந்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய சபையில் ஒரு காரியத்தை அவர் நடைமுறையில் செய்திருந்தார். அதுபற்றி நான் அவரோடு முதல் நாள் விவாதித்திருந்தேன். இந்த விஷயம் பற்றி ஒன்றுமே தெரியாமல் அன்றைய வினாவிடை நேரத்தில் யாரோ ஒருவர் அந்த விஷயத்துக்கு விளக்கம் கொடுக்கும்படிக் கேட்டிருந்தார். அதற்கு மார்டின் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த விஷயம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை என்று தன்னுடைய கருத்தைத் தெளிவாக விளக்கினார். நான் என் நண்பனைத் திரும்பிப் பார்த்து புன்னகை செய்தேன். பாஸ்டர் மார்ட்டினுக்கு என் நண்பனுடைய சபையில் நடந்ததொன்றும் தெரியாது. இருந்தபோதும் அவர் வேதம் விளக்குவதை எவர் மனதும் புண்படாமல் தெளிவாக விளக்கத் தவறவில்லை. இதற்காக என் நண்பனோ நானோகூட அவரைத் தவறாகக் கணிக்கவில்லை. அவருடைய பதில் எங்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக அந்தக் கேள்வி&பதில் கூட்டங்களில் என் நண்பர்களோடு அமர்ந்து பயன்பட்டிருக்கிறேன் என்று எண்ணும்போது நான் எந்தளவுக்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை.
இதுவரை இந்தக் கேள்வி&பதில் நேரத்தைப் பற்றி சொல்லி வந்திருக்கிறேன். இப்போது இந்தக்கூட்டத்தில் அல்பர்ட் என். மார்டின் தந்த ஒரு விளக்கத்தை வாசகர்கள் முன்வைக்க விரும்புகிறேன். அதை எழுத்தில் வடிக்குமுன் அவரை ஒரு வார்த்தை கேட்டுவிடவேண்டுமென்று அப்படிச் செய்ய எனக்கு அனுமதி உண்டா என்று பாஸ்டர் மார்டினை நான் கேட்டபோது அவர், ‘தாராளமாகச் செய்துகொள் நண்பா, உன்னை நான் நம்புகிறேன்’ என்று அவர் பதிலளித்தார். அவரே சொல்லிவிட்டார். அதற்கு மேல் என்ன வேண்டும்?
இந்த வருடக்கூட்டத்தில் பாஸ்டர் மார்டினிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ‘உங்களுடைய வாழ்நாள் அனுபவத்திலிருந்து கிறிஸ்தவ வாழ்க்கையைக் குறித்து எத்தகைய ஆலோசனையை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க விரும்புகிறீர்கள்?’ என்பது. அதற்கு பாஸ்டர் மார்டின் கீழ்வரும் விளக்கத்தைக் கொடுத்தார்.
- உன்னுடைய வேதாகமத்தில் நல்ல பரிச்சயம் இருக்குமாறு பார்த்துக்கொள். ஒரு கிறிஸ்தவ மனிதனாகிய உனக்குள் அதன் மூலமே கர்த்தர் செல்வாக்கு செலுத்துகிறார் என்பதை உணர்ந்து வேதத்தை அறிந்துகொள். வேதத்தை முறையாக ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக வாசிப்பதை வழக்கமாகக் கொள். இதை ஆங்கிலத்தில் consecutive reading என்று அழைப்பார்கள். அங்குமிங்குமாக எந்தப் பகுதியையாவது வாசிக்காமல் ஆதியாகமத்தில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் வேதத்தை வாசித்து அதில் நல்ல தேர்ச்சியடைய வேண்டும். இறையியல் அறிவு பெருகுவதற்கு என்றில்லாமல் உன்னுடைய ஆவிக்குரிய உணவாக அதை எண்ணி வாசிக்க வேண்டும். தியானத்தோடு வாசிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த வகையில் முழு வேதத்தையும் வாசிக்கும்போது நீ வேதமனிதனாக அதில் முழுத்தேர்ச்சியுள்ளவனாவாய். இதைக் கிறிஸ்தவ வாழ்க்கையில் வழமையாகக் கொள்ள வேண்டும்.
- அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16ன்படி வாழக் கற்றுக்கொள். அங்கே பவுல் சொல்லுகிறார், ‘நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.’ அதேபோல் நீயும் எப்போதும் கர்த்தருக்கும் மனிதர்களுக்கும் முன் உன் மனச்சாட்சி உன்னைக் குற்றப்படுத்தாதபடி பார்த்துக்கொள்.
- வேதத்தைக் கற்று இறைபோதனையைப் பெற்றுக்கொள்ள கணினியில் தங்கியிருக்காதே. கணினியை உன்னுடைய முதன்மையான ஊடகமாகப் பயன்படுத்தி இறையியல் அறிவைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துவிடு. அதாவது வலைப்பூ இறையியல் அறிஞனாக (Blog theologian) மாறிவிடப் பார்க்காதே. வரலாற்றாலும், திருச்சபையாலும் உறுதிசெய்யப்பட்ட இறையிலறிஞர்களையும், அவர்களுடைய நூல்களையும் நாடிப் போய் இறையியல் போதனையைப் பெற்றுக்கொள்ளப் பார். வலைப்பூவை இன்று எவரும் உருவாக்கலாம்; எதையும் அதில் எழுதலாம். அதற்காக அதில் வருவதெல்லாம் உண்மையும், நன்மையானதுமாகிவிடாது. காலத்தால் ஊர்ஜீதம் செய்யப்பட்ட, திருச்சபை வளர்த்தெடுத்துள்ள இறையியலறிஞர்களின் நூல்களுக்கு எதுவும் ஒப்பாகி விட முடியாது. ஜே. ஐ. பெக்கர், ஜெரி பிரிஜ்ஜஸ் போன்றோரின் இக்கால எழுத்தாளர்களின் நல்ல நூல்களை வாங்கி வாசி.
- ஜெபத்தோடு வாழ்க்கையில் ஆழமான நல்ல நட்பை மற்றவர்களோடு வளர்த்துக்கொள். அத்தகைய நட்பு வளர்க்கப்பட வேண்டியது. மேற்போக்காக எவரோடும் பழகப் பார்க்காதே. தாவீதையும், யோனத்தானையும் எண்ணிப்பார். நல்ல நட்பை வளர்ப்பது மட்டுமல்ல அதைப் பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும். நல்ல நட்பை உதாசினப்படுத்துவதாலேயே இழக்க நேரிடும். மற்றவர்களைத் தெரிந்துகொள்ளவும், அவர்கள் உன்னைத் தெரிந்துகொள்ளவும் இடங்கொடு. அதன் மூலமே நல்ல நட்பை வளர்க்க முடியும்.
ஒரு மூத்த போதகரின் இந்த முதிர்ச்சியான ஆலோசனை உங்களுக்குத் துணை செய்யும் என்று நம்புகிறேன்.