பத்திரிகையின் கடந்துபோன இந்த இருபது வருடங்களில் நான் நினைத்துப் பார்த்துக் குறிப்பிட வேண்டிய பல பேரிருக்கிறார்கள். அவர்களில் பலரை நான் பத்திரிகை மூலமாகத்தான் சந்தித்தேன். பலரோடு ஏற்கனவே இருந்த உறவை பத்திரிகை நெருக்கமாக்கியிருக்கிறது. அவர்களுடைய உண்மைப் பெயரை வெளியிட்டு அவர்களை நான் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு புனைப் பெயரைக்கொடுத்தே எழுதப்போகிறேன். இவர்களுடைய சத்திய வேட்கையும், இலக்கியத் தாகமுந்தான் இவர்களை என்னோடு நெருக்கமாக்கியிருக்கிறது. பொதுவாகப் பணத்தை முதன்மைப்படுத்தி சுயநல நோக்கோடு இயங்கி வரும் தமிழினக் கிறிஸ்தவத்தில் இவர்கள் அழுக்கில்லாத முத்தாக இருந்து வருகிறார்கள். இவர்கள் வாசிப்பதோடு சிந்திக்கவும் செய்கிறார்கள். தமிழினக் கிறிஸ்தவத்தில் பொதுவாக அதைப் பார்ப்பது அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தில் இவர்களுக்கு அதிக வாஞ்சையிருக்கிறது. அதை வெறும் இறையியல் போதனையாக மட்டும் இவர்கள் பார்க்கவில்லை. தங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான வேத இறையியலாகப் பார்த்து நடைமுறையில் அதன்படி வாழ முயற்சி செய்து வருகிறவர்கள். இவர்களுடைய சந்திப்பும், உறவும் என்னைத் தொட்டிருக்கிறது. இவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதற்கு நான்தான் பெருமைப்பட வேண்டும். இவர்களிடம் நான் பார்த்ததும், கற்றதும் அநேகம். திருமறைத்தீபம் எங்களை இணைத்து உறவை நெருக்கமாக்கி வளர்த்திருக்கிறது என்பதை எண்ணும்போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன. கர்த்தரில்லாமல் எதுவுமில்லை என்பதை இந்த நெஞ்சங்கள் உணர்த்துகின்றன.
முகிலன்
ஸ்ரீ லங்காவில் பல வருடங்களுக்கு முன் முதன் முறை சந்தித்தேன். நான் வந்திருப்பது அறிந்து என்னைப் பார்க்க வந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டபின் பத்திரிகையைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்ப இதழிலிருந்து பத்திரிகையை அவர் வாசித்திருக்கும் விதம் என்னை அதிசயிக்க வைத்தது. இப்படியும் வாசிக்கிறவர்கள் இருக்கிறார்களா என்று எண்ண வைத்தது. எந்த இதழில் எந்தப் பக்கத்தில் என்ன எழுதியிருந்தேன் என்றளவுக்கு பத்திரிகையில் வந்திருந்த ஆக்கங்களில் அவருக்குப் பரிச்சயம் இருந்தது. உண்மையிலேயே பத்திரிகை அவரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததைக் கவனித்து வியந்து நின்றேன். சீர்திருத்தப் போதனைகளில் பெரும் வாஞ்சையை பத்திரிகை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது. சத்தியத்தை நாடித் தேடிக்கொண்டிருந்த அவருக்கு பத்திரிகை செய்திருக்கும் உதவியறிந்து கண்கள் கசிந்தன. கர்த்தர் எத்தனை பெரியவர். ஆவிக்குரிய தாகமுள்ள அந்த சகோதரரின் வாழ்க்கையில் இந்தப் பத்திரிகை தன் பங்குக்கு உதவி செய்திருக்கிறதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவித்தேன். இன்றைக்கும் பத்திரிகையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்ற அன்பு சகோதரன் இவர். ‘முகிலன் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்’ என்று இன்றும் சிலர் என்னிடம் சொல்லித் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள். நாங்கள் அடிக்கடி தொடர்பு கொள்வதில்லை; சந்திப்பதும் சில தடவைகள்தான். இருந்தபோதும் பத்திரிகை எங்களை இணைத்திருக்கிறது. மானசீகமான நட்பை உண்டாக்கியிருக்கிறது.
நெடுமாறன்
தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு சகோதரர். சீர்திருத்த சபையொன்றை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் பத்திரிகையை வாசித்து அதில் மிகுந்த ஆர்வம் காட்டும் சகோதரர். ஒரு சபை மூப்பராக இப்போதிருக்கிறார். பத்திரிகையைப் படித்து அதில் அவர் மூழ்கிப்போயிருக்கும் விதம் என்னைத் தலைகுனிய வைத்திருக்கிறது. நானே நினைவுகூரத் தடுமாறும் அளவுக்கு எந்த இதழில் எந்த ஆக்கம் வந்திருக்கிறது என்பதை இவர் கைவிரல் நுனியில் வைத்திருக்கிறார். வாசிப்பது ஒன்று; வாசித்தவற்றை ஆராய்ந்து பார்த்து சிந்திப்பது என்பது வேறு. அந்தவகையில் வாசித்தவற்றை ஆராய்ந்து சிந்தித்து பல தடவைகள் அது பற்றி என்னோடு பேசியிருக்கிறார். தன்னுடன் இருப்பவர்களுக்கெல்லாம் இவர் பத்திரிகையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது வரப்பிரசாதம் என்று ஒருமுறை சொன்னார். சீர்திருத்த போதனைகளில் ஒருசில விஷயங்களில் கருத்து வேறுபாடு இவருக்கு இருந்தபோதும் பத்திரிகையின் அவசியத்தையும், பயன்பாட்டையும் நன்கு உணர்ந்தவர். ஒருசில இறையியல் கருத்து வேறுபாடுகள் நட்புக்கு இடையூறாக இருக்காது என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். பத்திரிகையை வாசித்து வருவதனாலும், அதன் போதனைகளில் ஆர்வம் காட்டுவதனாலும் சில துன்பங்களையும் வாழ்க்கையில் சந்தித்தவர். இருந்தபோதும் தவறாது பத்திரிகையைத் தொடர்ந்து வாசித்து வரும் நல்ல மனிதன். வேதம் அறிந்த மனிதர். சத்தியத்தில் இவர் காட்டும் ஆர்வம் இவரைக் கைவிடாது என்பது என் நம்பிக்கை. இவரோடு எனக்கு நல்ல தொடர்பிருக்கிறது. இவருடைய நட்புக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன்.
கருணாநிதி
இன்றும் நல்ல நண்பர். பத்திரிகை வெளிவருவதற்கு முன்பிருந்தே இவரோடு அறிமுகம். பல காலமாக தொடர்பு நீடித்திருந்து வருகிறது. பத்திரிகையின் தாசர் என்று இவரைச் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு அதன் போதனைகளில் ஒன்றிப்போய் தானும் வாசித்து, மற்றவர்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறார். அவருடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் பல மாறுதல்களை பத்திரிகை நிச்சயம் கொண்டுவந்திருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்காக வெளியிடப்படுவதே இந்தப் பத்திரிகை. சத்தியம் சத்தியமாக விளக்கப்படாதா என்று ஏக்கத்தோடிருப்பவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே திருமறைத்தீபம். இவரின் ஆத்மீகத் தாகத்தைத் தீர்த்துவைக்கின்ற ஊழியத்தின் ஒரு சிறு பங்கை பத்திரிகை மூலம் என்னால் வழங்க முடிவதே எனக்கு என்றென்றைக்கும் போதுமானது. இவர் சாதாரணமானவர். நல்ல நேர்மையான விசுவாசி. தாழ்மைக்கு உதாரணம். சத்தியத்தைத் தன்னால் முடிந்தளவுக்கு பல தியாகங்களைச் செய்து மற்றவர்களுக்கு அறிவித்து வருகிறவர். திருமறைத்தீப ஊழியத்திலும், நாம் வெளியிடும் நூல்களிலும் அதிக அக்கறை காட்டுகிறவர். அவற்றை வாசித்து சிந்தித்து செயல்பட்டாலே தமிழ் கிறிஸ்தவம் தலைதூக்கிவிடும் என்று சொல்லுகிறவர். அவரோடு எனக்கிருக்கும் நட்பு ஆழமானது; பெரியது. சத்தியம் உருவாக்கியிருக்கும் நல்ல நட்பாகத்தான் இதைப் பார்க்கிறேன்.
சூரியப்பிரகாசன்
ஒரு போதகர். இளம் வயதில் இறைவனை அடைந்துவிட்டவர். ஆத்தும பாரத்தோடு நல்ல ஊழியத்தைச் செய்து ஆத்துமாக்களை வளர்த்து வந்தவர். இவருடைய ஊழியம் வளர்ந்திருந்தது. மக்களின் அன்பைப் பெற்றவர். பல வருடங்களாக ஸ்ரீ லங்காவில் இவரை எனக்குத் தெரிந்திருந்தது. அண்ணா என்று அன்போடு எப்போது பார்த்தாலும் அழைக்கின்றவர். ‘வேதப்புத்தமும், திருமறைத்தீபமும் போதும் எனக்கு, ஊழியத்தை நன்றாகச் செய்வதற்கு’ என்று அடிக்கடிச் சொல்லி சக ஊழியர்களை ஊக்கப்படுத்துகிறவர். பெரிதாகப் படிப்பெதுவுமின்றி, ஆங்கில அறிவும் இல்லாமலிருந்தபோதும் சத்திய வாஞ்சையுடன் நேர்மையாக ஊழியம் செய்தவர். தன் மக்களுக்கு திருமறைத்தீபத்தை அறிமுகப்படுத்தி அவர்களை வாசிக்க வைத்திருக்கிறார். திருமறைத்தீபமே அவருடைய சபையாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இன்றைக்கு அவரில்லை; நல்லதோர் இடத்துக்குப் போய்விட்டார். அவருடைய நினைவு எனக்கு அடிக்கடி வராமலில்லை.
நோவா
சாதாரண விவசாயி. வருடக்கணக்காக இவரை எனக்குத் தெரியும். கல்லூரிப் படிப்பு இவருக்கு இல்லை. ஆனால், சிந்திக்கத் தெரிந்தவர். திருமறைத்தீபத்தில் வரும் ஆழ்ந்த ஆத்மீக சத்தியப் போதனைகளை இவர் சாவகாசமாக வாசித்துப் புரிந்துகொள்ளுகிறார். பெரிய வேத சத்தியமொன்றை இவர் இலகுவாக ஒருமுறை விளக்கியதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவரால் எப்படி இந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது என்று வியந்து, ஒருமுறை அவரையே அதுபற்றிக் கேட்டேன். ‘ஐயா, நல்ல எளிமையான தமிழில் புரியும்படியாத்தானே எழுதுறீங்க. அதில் என்ன பிரச்சனையிருக்கு’ என்று பதில் வந்தது. அன்றுதான் முக்கியமானதொரு உண்மையைப் புரிந்துகொண்டேன். கர்த்தரே பேசியதுபோலிருந்தது. நம்மக்களுக்கு சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவது பிரச்சனையல்ல. புரியும்படியாக அது எழுத்திலும், பேச்சிலும் இருக்குமானால் அவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளுவார்கள் என்பதை நான் உணர்ந்தேன். இன்றைக்கும் அக்கறையோடு பத்திரிகையை வாசித்து மற்றவர்களிடம் வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். ‘எல்லாப் போதகர்களும் பத்திரிகையை அக்கறையோடு வாசித்தாலே போதும் கிறிஸ்தவம் நம் நாட்டில் நன்றாக இருக்கும்’ என்று அடிக்கடி சொல்லி போதகர்களுடைய இன்றைய நிலையை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டுக்கொள்ளுவார். தான் சந்திக்கும் ஊழியர்களிடம் பத்திரிகையையும், நம் நூல்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். சந்திக்கும் வேளைகளில் தன்னுடைய அனுபவங்களையும் குறைபாடுகளையும் வெளிப்படையாகப் பேசுவார். சுவிசேஷ வாஞ்சை இவருக்கு அதிகமாக இருக்கிறது. அவரோடு பேசினாலே அது ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு இருக்கிறது. தூரத்தில் இருக்கும் இவர் என்னுடைய நினைவுகளில் வராத நாளில்லை. நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய பட்டியலில் இவர் பெயர் நிச்சயம் இருக்கிறது. இவரைப் போன்றவர்களுக்கு துணை செய்வதற்காக திருமறைத்தீபம் வெளிவருவதை நினைக்கும்போது இந்தப் பத்திரிகையை வெளியிடுவதில் இருக்கும் இடர்பாடுகளையெல்லாம் ஒரு நிமிடம் மறந்து நான் சந்தோஷமடைகிறேன்.
காவலன்
கடந்த ஏழெட்டு வருடங்களாக அறிமுகம். பத்திரிகை இவரை நன்றாக சிந்திக்க வைத்திருக்கிறது. வாசிப்பதெல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுகிறார். குடும்பத்தில் மனைவி உட்பட எல்லோருக்கும் அவற்றை விளக்கி உதவி செய்கிறார். கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சபையாருக்கும் அந்த சத்தியங்களை விளக்கி வழிநடத்துகிறார். நாம் வெளியிடும் நூல்களை ஆர்வத்தோடும், கவனத்தோடும் வாசித்துத் தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தை வளர்த்துக்கொள்ளுகிறார். இந்த முறையில் சத்தியத்தையும். கிறிஸ்தவ இலக்கியத்தையும் பற்றி வாஞ்சையோடு பேசுகிற எத்தனை பேரை நாம் சந்திக்க முடிகிறது. பத்திரிகையே இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடிக்கடி சந்திக்கக்கூடிய வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இவரை மறக்க முடியாது. இன்றும் பத்திரிகையிலும் நூல்களிலும் ஆர்வம் காட்டித் தொடர்ந்து வாங்கி வாசிக்கிறார், மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
இயேசுதாசன்
திருமறைத்தீபத்தை அப்பா வாசித்து அறிமுகப்படுத்த அதை ஆர்வத்தோடு வாசித்து வளர்ந்த வாலிபர். இரண்டாம் தலைமுறையாக திருமறைத்தீபம் இவருடைய குடும்பத்திற்கு ஆத்தும உணவை அளித்திருக்கிறது. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்தையும், ஆத்மீக வாழ்க்கையையும் பத்திரிகையைப் பயன்படுத்தி வேதத்தைப் படித்து வளர்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பே இவருடைய அறிமுகம் திருமறைத்தீபத்தின் மூலம் கிடைத்தது. இவருடைய அப்பாவை நான் நேரில் சந்தித்ததில்லை. மகனோடு இன்றைக்கு உறவைக் கர்த்தர் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். எத்தனை பெரிய உறவுகளை பத்திரிகை உருவாக்கியிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது இதயம் நெகிழாமலில்லை.
செல்வன்
ஐரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகின்ற இந்த சகோதரன் எந்தளவுக்கு திருமறைத்தீபத்தை வாசித்து தன்னை வளர்த்துக்கொண்டு தன்னோடிருக்கும் சபை மக்களுக்கு சத்தியங்களை முடிந்தவரை விளக்கிச் சொல்லி சத்திய ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார் என்பதை எண்ணி ஆண்டவருக்கு இன்றும் நன்றி கூறுகிறேன். எல்லா இதழ்களையும் டெப்லெட்டில் இறக்கிப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். ஊழியக்காரராக இல்லாமலிருந்தாலும் ஊழியக்காரர்களுக்கு இன்று இருக்கவேண்டிய சத்திய வாஞ்சையும், சீர்த்திருத்த போதனைகளில் வெளிச்சமும் இவருக்கு இருக்கிறது. இதற்கு பத்திரிகை துணைசெய்திருக்கிறது என்பதை நினைத்து நெகிழ்கிறேன். பலவருடங்களாக இவரோடு எனக்குத் தொடர்பிருந்து வருகிறது. அடிக்கடி பேசிக்கொள்ளுகிறோம். எல்லாம் இறையியல் சம்பந்தமானதுதான். வயது வித்தியாசம் எங்களுக்குள் அதிகம் இருந்தாலும் நல்ல இனிய நண்பன்.
அழகன்
மேற்கத்திய நாடொன்றில் குடியேறி வாழ்ந்து வருகிறார். மனைவியோடு இவரும் பத்திரிகையில் நல்ல ஆர்வம் கொண்டு வாசித்து வருகிறார்கள். சீர்திருத்த போதனைகளில் இவர் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதற்கு ஏதோவொரு விதத்தில் நான் தூபம் போட்டிருக்கிறேன் என்பதை எண்ணி மகிழ்கிறேன். முப்பது வருடங்களுக்கு மேல் உறவும், தொடர்பும் இருந்துவருகிறது. இடையில் தூரதேசக் குடியேற்றத்தால் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிருந்தது. மறுபடியும் தொடர்புகொள்ளவும் உறவை நீடித்துக்கொள்ளவும் கர்த்தர் அனுமதித்திருக்கிறார். பத்திரிகையை டெப்லெட்டில் இறக்கி வைத்துக்கொண்டு கேட்பவர்களுக்கெல்லாம் அவர்களுடைய டெப்லெட்டில் இறக்கித் தருகிறார். சீர்திருத்த சத்தியம் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் எங்கெல்லாமோ எப்படியெல்லாமோ போகக் காரணமாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். மெய்யான நட்புக்கும் அன்புக்கும் இவர் ஓர் அடையாளம். இன்று வேதத்தை விளக்கவும், தேவைப்பட்டால் பிரசங்கிக்கவும் கர்த்தர் இவரைப் பயன்படுத்துகிறார்.
அர்ஜுனன்
பத்திரிகையை அவருக்குத் தெரிந்த ஒரு போதகர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவருடைய இறையியல் தெளிவுக்கு அது உதவியிருக்கிறது. உடனடியாக என்னைத் தொடர்புகொண்டார். சிலவருடங்களுக்கு நேரில் பார்க்காமலேயே இந்த தொடர்பு வளர்ந்து நட்பாக மாறியது. பேசுவதெல்லாம் சத்தியத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும். ஒரு முறை நான் ஸ்ரீ லங்கா போயிருந்தபோது நான் வந்திருப்பதறிந்து உடனடியாக சந்திக்க வந்தார். அதுதான் முதல் தடவையான நேரடிச் சந்திப்பு. எத்தனையோ விஷயங்களைப் பற்றி & எல்லாம் சத்தியத்தைப் பற்றியதுதான் & பேசினோம். அன்று வளர்ந்த நட்பு இன்றும் தொடர்கிறது. திருமறைத்தீபத்திலும், நம் நூல்களிலும் அதிக ஆர்வம் காட்டி வாசிப்பதோடு விநியோகமும் செய்து தியாகத்தோடு இலக்கியப்பணியில் தன் பங்கைச் செய்து வருகிறார். இன்று சத்தியத்தின் அடிப்படையில் சீர்திருத்த சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் இவருடைய அன்புக்கும், நட்புக்கும் பத்திரிகை ஒருவிதத்தில் காரணமாக இருந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்து எப்படி இதயம் நெகிழாமல் இருக்க முடியும்.
இதுவரை நான் குறிப்பிட்டிருப்பவர்களெல்லாம் வாசகர்களில் ஒரு பகுதியினர். இன்னும் எத்தனையோ பேரைப் பற்றி நான் எழுதியிருக்க முடியும். அதற்கும் ஒரு காலம் வரும். இந்த இருபது வருட பத்திரிகை ஊழியம் இப்படி எத்தனையோ பேரை அறிமுகப்படுத்தி அவர்களோடு ஓர் இணைப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. இந்தவிதத்தில் கர்த்தர் திருமறைத்தீபத்தைப் பயன்படுத்தி பலருடைய வாழ்க்கையில் சத்திய விளக்கேற்றி எண்ணையூற்றி ஒளிவீச வைத்து வருவதை அறிந்து மலைக்கிறேன். வாசகர்களாக இல்லாமல் பத்திரிகையோடு தொடர்புள்ள, அதில் அக்கறைகாட்டுகின்ற, அதற்காக ஜெபிக்கின்ற அநேகர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் எழுத இடம் போதாது. திருமறைத்தீபம் வேத சத்தியத்தையும் வரலாற்றுக் கிறிஸ்தவத்தையும் வெளிப்படுத்தி வரும் பத்திரிகையாக மட்டுமல்லாமல் கிறிஸ்துவின் மீட்பின் வரலாற்றில் அவரால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கருவியாக அன்பால் கட்டப்பட்ட ஒரு கூட்டத்தையே இணைத்து வைத்திருக்கிறது. சகல மகிமையும் கர்த்தருக்கே.