பரிசுத்தமாகுதல் பற்றிய ஜே. சீ. ரைலின் விளக்கங்கள்

1. சிலபேர் சொல்லுவதுபோல், விசுவாசிகளின் பரிசுத்தம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த முயற்சிகள் எதுவுமில்லாமல் விசுவாசத்தின் மூலம் மட்டும் கிடைக்கிறதா?

பரிசுத்தத்தின் ஆரம்பம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தில் ஆரம்பிக்கிறது என்பதை வேதம் தெரிந்த எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை பரிசுத்தமாகுவதற்கு வழியே இல்லை. அதேவேளை இந்த ஒரு விஷயத்தில் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தோடு விசுவாசியின் தனிப்பட்ட செயல்களும் அவசியம் என்பதை வேதம் நிச்சயமாக விளக்குகிறது. ‘தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்’ (கலா 2:20) என்று எழுதிய பவுலே, ‘என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்’ (என் சரீரத்தை அடக்கி எனக்கு அடிமையாக்குகிறேன்) என்றும் சொல்லியிருக்கிறார். வேதத்தின் வேறொரு இடத்தில் பவுல், ‘நம்மை சுத்திகரித்துக் கொண்டு பூரணப்படுத்தக்கடவோம்’ (2 கொரி 7:1) என்று விளக்கியிருக்கிறார். எபிரெயருக்கு எழுதியவர், ‘ஜாக்கிரதையாயிருப்போம்’ (எபி 4:11) என்றும், ‘பொறுமையோடு ஓடக்கடவோம்’ (எபி 12:1) என்றும் எழுதியிருக்கிறார். [தமிழ் வேதத்தில் (ப.தி.) பின்வரும் வசனங்கள் எழுத்துபூர்வமாக பின்வரும் விதத்தில் இருந்திருக்க வேண்டும். எபி 4:11 ல், ‘நாம் கடினமாய் உழைப்போம்’ என்றும்; எபி 12:1ல், ‘விடாமுயற்சியோடு ஓடக்கடவோம்’ என்றிருந்திருக்க வேண்டும். – ஆர்]

விசுவாசம் நம்மை எப்படி நீதிமானாக்குகிறது என்பதற்கும், அது நம்மை எப்படிப் பரிசுத்தமாக்குகிறது என்பதற்கும் இடையில் வேறுபாடிருப்பதை வேதம் சுட்டிக்காட்டுகிறது. நீதிமானாக்கும் விசுவாசம் கர்த்தரின் கிருபையாக இருந்து கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கவும், அவரில் தங்கியிருக்கவும் செய்கிறது (ரோமர் 4:5). கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற அனைவரும் அவரால் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆனால் பரிசுத்தமாக்கும் விசுவாசமோ கர்த்தரின் கிருபையாக, கடிகாரத்தை இயக்கும் அச்சானி போன்ற ஸ்பிரிங்காக இருந்து விசுவாசியைப் பரிசுத்தத்தை நோக்கிப் போகச் செய்கிறது. பவுல் சொல்லுவது போல், ‘அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்’ (கலா 5:6). புதிய ஏற்பாட்டில் எந்தப் பகுதியிலும் ‘விசுவாசத்தினால் வரும் பரிசுத்தம்’ (Sanctification by faith) என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்க முடியாது. நியாயப்பிரமாணத்தின் அடிப்படையிலான கிரியையினால் அல்லாமல் விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்படுகிறோம் என்றே வேதம் போதிக்கிறது. அதேநேரம் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் நாம் பரிசுத்தமாகிறோம் என்றும் வேதத்தின் எந்தப் பகுதியிலும் நாம் வாசிப்பதில்லை. மாறாக யாக்கோபு சொல்லுகிறார், ‘. . . ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்’ (யாக் 2:17).

2. சிலர் செய்வதுபோல, மலைப்பிரசங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தமாகுதலுக்கான நடைமுறைப் போதனைகளையும் பவுலின் கடிதங்களின் இறுதிப்பகுதிகளில் காணப்படும் நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான போதனைகளையும் நாம் அவசியமானதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா?

நல்ல வேத போதனைகளை பெற்றிருக்கும் கிறிஸ்தவர்கள் கடவுளோடு நல்லுறவைக் கொண்டிருப்பதற்காக ஜெபத்தோடும், தியானத்தோடும் அன்றாடம் இயேசு கிறிஸ்துவிடம் வருவதை வழமையாகக் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் பற்றித் தர்க்கம் செய்ய மாட்டார்கள். புதிய ஏற்பாடு இது பற்றிய பொதுவான போதனையைக் கொடுப்பதோடு நின்றுவிடுவதில்லை. உண்மையில் அது இதுபற்றிய அநேக விளக்கங்களைக் கொடுப்பதோடு குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்களையும் அளிக்கிறது.

நம்முடைய நாவை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும், கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, நம்முடைய இயற்கையான விருப்பங்கள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் உறவு, மேலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் இடையில் இருக்கும் உறவு, கணவன், மனைவி, அதிகாரிகள், குடியானோர், உடல்நலக்கேட்டின்போது நம்முடைய நடத்தை, நல்ல சுகத்தோடு இருக்கும்போது நம் நடத்தை ஆகிய இவையனைத்தைப் பற்றியும் வேதம் மிகவும் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கின்றது. பரிசுத்தமாக வாழ்வது என்பது வெறும் கண்ணீர் விடுவதோ ஆதங்கப்படுவதோ, உணர்ச்சி வசப்படுவதோ, நரம்புகள் புல்லரித்துப் போவதோ, சில பிரசங்கிகள் மீது அதீத அபிமானம் கொள்ளுவதோ அல்லது குறிப்பிட்ட ஆவிக்குரிய கூட்டத்தோடு நெருக்கமாக இணைவதோ அல்ல. பவுல் ரோமர் 8:29ல் சொல்லுவதுபோல், ‘தேவனுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதாகும்.’ இதை மற்றவர்கள் நம்மில் பார்க்க முடியும்; நம்முடைய குணாதிசயத்திலும், வழமையான நடவடிக்கைகளிலும் காண முடியும்.

3. இந்த உலகத்தில் முழுமையான பரிசுத்தத்தை விசுவாசியால் அடைய முடியும் என்று போதிப்பது ஞானமானதா?

பூரணத்துவத்தை இலக்காகக் கொண்டு வாழும்படி வேதம் பல இடங்களில் விசுவாசிகளை வற்புறுத்துகிறது (2 கொரி 13:2). ஆனால், வேதத்தில் ஓரிடத்திலாவது இந்த உலகத்தில் விசுவாசிகள் பாவத்திலிருந்து பூரண விடுதலையை அடைய முடியும் என்றோ, அதை எவராது அடைந்திருக்கிறார்கள் என்றோ நாம் வாசிப்பதில்லை. ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியைவிடப் பரிசுத்தமாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் முழுமையான பூரணத்துவத்தை கிறிஸ்தவ வரலாற்றில் எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் எந்தவொரு சிறந்த கிறிஸ்தவர்களும் அடைந்ததாக அவர்கள் கூறியது கிடையாது. வேத வரலாற்றில் நாம் காணும் சிறந்த கிறிஸ்தவர்களான தாவீது, பவுல், யோவான் போன்றோர் எந்தவிதத் தயக்கமுமில்லாது தங்களில் காணப்படும் பலவீனத்தையும் இருதயத்தில் காணப்படும் பாவத்தையும் குறிப்பிட்டு விளக்கியிருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் பாவமற்ற பூரணப்பரிசுத்தத்தை அடைந்திருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுக்கு பாவத்தின் தன்மைபற்றியோ அல்லது கர்த்தரின் பரிசுத்தத்தைப் பற்றியோ அதிகம் தெரியாது என்றே நான் நினைக்கிறேன். இந்தப் போதனை பாரதூரமான மனக்குழப்பமூட்டக்கூடியதால் இதனை நான் அறவே மறுக்கிறேன். இது சிந்திக்கிறவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதோடு அவர்கள் இதைத் தவறானதாகக் கருதுவதால் கர்த்தரை அவர்கள் அறிவதற்கும் இது தடையாயிருந்துவிடுகிறது. இவ்வுலகில் பூரணப் பரிசுத்தத்தை அடைய முடியாதென்பதை உணர்ந்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளில் சிறந்தவர்களுக்கு இந்த மனச்சோர்வை ஏற்படுத்திவிடுகிறது. அதேவேளை பலவீனமான விசுவாசிகள் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளவும் இது வழியேற்படுத்திவிடுகிறது.

4. சிலர் சொல்லுவதுபோல, ரோமர் 7ம் அதிகாரம் விசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியதல்ல, அது அவிசுவாசிகளின் அனுபவத்தைப் பற்றியது என்று ஆணித்தரமாக சொல்லுவது ஞானமாகுமா?

பவுலினுடைய காலத்தில் இருந்தே இது பிரச்சனைக்குரியதாக இருந்துவருகிறது. அதேநேரம், சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும், வேதம் கற்ற இன்னும் அநேக கிறிஸ்தவர்களும் பவுல் இந்தப்பகுதியில் கிறிஸ்தவர்களுடைய அனுபவத்தைப் பற்றியே விளக்குவதாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள். (ரைல் இந்த இடத்தில் பவுல் தன்னுடைய அனுபவத்தை விளக்குவதாக நம்பி விளக்கவுரை அளிக்கின்ற ஹெல்டேன், ஓவன் உட்பட அநேகருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார்). இத்தகைய பலத்த வாதங்களை முன்னெடுத்து வைக்கும் சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் பெரியவர்களின் கருத்தை உதறித்தள்ளுவது ஞானமற்ற செயல்தான்.

5. ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை அது விளக்குகின்ற உண்மைக்கு மாறானவிதத்தில் விளங்கிக்கொள்ளுவது ஞானமானதா?

சந்தேகமில்லாமல் இந்த வார்த்தைப் பிரயோகம் வேதபூர்வமானதுதான். (ரோமர் 8:10; கலா 2:20; எபே 3:17; கொலோ 3:11). சிலர் இந்த வார்த்தைப் பிரயோகம், விசுவாசிகள் செய்கின்ற எதற்கும் அவர்கள் பொறுப்பானவர்களல்ல என்ற பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார்கள். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே சகலத்தையும் செய்கிறார். அது நிச்சயம் உண்மையல்ல! இப்படிச் சொல்லுவது, விசுவாசிகளுக்குள் இருக்கும் கிறிஸ்து அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் மூலமே இருக்கிறார் என்பதை உதாசீனப்படுத்துகிறது. உயிர்த்தெழுந்திருக்கும் நமது பிரதான ஆசாரியரான கிறிஸ்து, அவர் மறுபடியும் வருவதற்கு முன்பாக தற்போது தன்னுடைய பிதாவின் வலது பாகத்தில் இருந்து முக்கியமாக நமக்காகப் பரிந்துரை செய்து வருகிறார். நமது ஆலோசகராக நம்மோடு எப்போதுமிருக்கப் போகிற பரிசுத்த ஆவியானவரே நாம் பரிசுத்தமாகுதலில் தொடரும்படி நம்மைத் தூண்டுகிற விசேஷ கிரியையைச் செய்து வருகிறார். ‘கிறிஸ்து நமக்குள் இருக்கிறார்’ என்ற வேதபோதனையைச் சிலர் உண்மைக்கு மாறாகத் திரித்து விளக்குவதுபோல், திரித்து விளக்கப்படும் போதனைகளின் மூலமே பாரதூரமான போலிப்போதனைகள் ஆரம்பமாகின்றன.

6. சிலர் செய்வதுபோல, மனமாற்றத்தை அர்ப்பணித்தலில் இருந்து (consecration), அதாவது மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கையில் (the higher life) இருந்து பிரித்துப் பார்ப்பது ஞானமானதா?

மனமாற்றமடைந்தவர்களும், பூரணமான அர்ப்பணிப்போடு மேன்மையான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறவர்களுமாக இருவகைக் கிறிஸ்தவர்கள் இருப்பதாக ஒரு கருத்து இருந்து வருகிறது. அதாவது மனமாற்றமடைந்த பிறகு, அதிலிருந்து சடுதியாக சட்டென்று இன்னொரு உயர்தர அர்ப்பணிப்புள்ள அனுபவத்தை அடையலாம் என்பதே இந்தக் கருத்து. இது விசுவாசிக்கு இரண்டாம் தடவையாக மனமாற்றம் தேவை என்ற கருத்தைத் தோற்றுவிக்கிறது. இத்தகைய விளக்கத்தைக் கொடுக்கிறவர்கள் மனமாற்றத்தைப் பற்றிய மிகத் தாழ்வான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.

வேதம் சுட்டிக்காட்டுகின்ற இருவகை மனிதர்கள் விசுவாசிகளும், அவிசுவாசிகளுமே; ஆவிக்குரிய ஜீவனுள்ளவர்களும், ஆவிக்குரிய ஜீவனற்றவர்களும். இந்த இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பாவமும், கிருபையும் சந்தேகமில்லாமல் வித்தியாசமான அளவுகளில் காணப்படும். விசுவாசியைப் பொறுத்தளவில் அவன் படிப்படியாக கிருபையிலும், ஞானத்திலும், ஆவிக்குரிய சிந்தையிலும் வளரவேண்டும். ஆனால், மனமாற்றத்தில் இருந்து சடுதியான சட்டென்று அர்ப்பணிப்புள்ள வாழ்க்கைக்குத் தாவிவிடுகிற அனுபவத்தை நான் வேதத்தில் காணவில்லை.

ஒரு மனிதன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையில்லாமல் மனமாற்றத்தை அடைய முடியும் என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கிருபையில் வளர வளர விசுவாசி மேலும் மேலும் அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையை கர்த்தருக்காக வாழ்வான். ஆனால், மறுப்பிறப்பை அனுபவித்தும் ஒருவன் கர்த்தருக்கான அர்ப்பணிப்புள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது என்று எவராவது கூறினால் என்னைப் பொறுத்தளவில் அவர்களுக்கு மனமாற்றத்தைப் பற்றிய தவறான எண்ணங்களே இருக்கின்றன என்றுதான் அர்த்தம்.

7. பாவத்தை எதிர்த்துப் போராடுவதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று விசுவாசிகளைப் பார்த்துச் சொல்லுவது ஞானமானதா?

இந்த ‘உன்னை ஒப்புக்கொடு’ என்ற வார்த்தைப் பிரயோகம் புதிய ஏற்பாட்டில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வருகிறது (ரோமர் 6:13-19). ஆங்கில மொழிபெயர்ப்பான KJVல் ‘Yield yourselves’ என்றிருக்கிறது. இந்த வசனங்களில் ‘ஒப்புக்கொடுப்பது’ கிறிஸ்தவனின் கடமையாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் ‘ஒப்புக்கொடுத்தலை’ இன்னொருவருடைய கரத்தில் நாம் எந்த செயலிலும் ஈடுபடாமல் ஜடத்தைப்போல இருந்து அப்படியே நம்மை அர்ப்பணிப்பது என்ற அர்த்தத்தில் விளக்கவில்லை. மாறாக இந்த வசனங்கள் அதை, இன்னொருவர் நம்மைப் பயன்படுத்த சகல அக்கறையோடும் நம்மை ஒப்புக்கொடுப்பது என்ற அர்த்ததில் காணப்படுகின்றது. (Offer yourselves to God, Rom 6:13, NIV).

வேதத்தில் இருபது முப்பது வசனங்களுக்குமேல் விசுவாசிகள் அமைதியாக ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டும் என்று போதிக்காமல் அவர்கள் எழுந்து நின்று செயல்பட வேண்டும் என்று விளக்குகின்றன. கிறிஸ்தவ வாழ்க்கையை வேதம் ஒரு போராட்டத்திற்கும், போராளியின் வாழ்க்கைக்கும், மல்யுத்தத்திற்கும் ஒப்பிட்டு விளக்குகின்றது. ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என்று வேதம் வேறு எதற்காக சொல்லுகிறது? (எபே 6:10-18).

சேர முடியாத இரண்டு விஷயங்களை ஒன்று சேர்க்க அநேகர் விடாமுயற்சி செய்து வருவார்கள். நீதிமானாக்குதல் நாம் விசுவாசிக்க வேண்டும் என்று சொல்லுகிறது; விசுவாசிப்பது மட்டுமே இங்கு கடமை. பரிசுத்தமாகுதல் நம்மை ஜாக்கிரதையாக இருக்கவும், ஜெபிக்கவும், போராடவும் சொல்லுகிறது.

இந்த விளக்கங்களை நான் மிகுந்த மனத்தாங்கலுடன் கொடுக்கிறேன். இந்தக் காலத்தில் (ரைல் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில்) விசுவாசிகள் மத்தியில் காணப்படும் ஒருவித மனப்போக்கு எதிர்காலத்தை நினைத்து என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. வேதம் பற்றி அநேகருக்குத் தெளிவான அறிவில்லாமலிருப்பதால் கிறிஸ்தவம் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. பரபரப்பான விஷயங்களில் பேரார்வம் காட்டுவது அதிகரித்துவருகிறது. புதிய குரலையும், புதிய போதனையையும் ஆயிரக்கணக்கில் நாடிப்போய், நாம் கேட்பது உண்மையா என்ற சிந்தனையே இல்லாமல் கேட்டு வருகிறார்கள். கூட்டத்திலும், அழுகையிலும், முடிவில்லாமல் கட்டுப்பாடின்றி எழுகின்ற உணர்ச்சிப் பிரவாகத்திலுமே அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். பிரசங்கி சாதூரியமானவராகவும், உணர்ச்சிவசப்படுகிறவராகவும் இருந்தாலே போதும், அவர் சொல்லுவதெல்லாம் உண்மையென்று நம்பிவிடுகிறார்கள்.

விசுவாசிகள் மத்தியில் தனிப்பட்ட பரிசுத்தமாகுதல் பெருமளவுக்கு அதிகரிக்க வேண்டுமென்பதே என்னுடைய அனுதின ஜெபமும், இருதயத்தின் ஆவலுமாய் இருக்கின்றது. அது பெருகவேண்டுமென்று உழைக்கின்ற அனைவரும் வேதபோதனைகளை மட்டும் தெளிவாகப் பின்பற்றி அவற்றைப் பயன்படுத்தி ஒன்று சேர முடியாத போதனைகளை நிதானத்தோடு ஆராய்ந்து அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். ‘நீ தீழ்ப்பானதிலிருந்து (தீங்கானதிலிருந்து) விலையேறப்பட்டதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்’ (எரே 15:19).

பதவிளக்கம்:

நீதிமானாக்குதல் (Justification) – ஒரு மனிதனை நீதிமானாக்குவது என்பது அந்த மனிதன் நீதியானவன் என்று அறிவிப்பதாகும். இது சட்டரீதியிலான ஒரு வார்த்தை. நியாயஸ்தலத்தில் நீதிபதி, ஒருவரைப் பார்த்து உண்மையானவன் என்று கூறி அவரை நீதிமானாக அறிவிக்கிறார். கிறிஸ்து தன்னுடைய மக்களுக்கு செய்திருக்கும் கிரியையின் அடிப்படையில் கர்த்தர் விசுவாசிகளை நீதிமான்களாக்குகிறார். இதில் விசுவாசிக்கு எந்தப் பங்கும் இல்லை.

பரிசுத்தமாகுதல் (Sanctification) – பரிசுத்தமாகுதலென்பது கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகள் தங்களில் மேலும் மேலும் பரிசுத்தமடையும்படி அவர்களில் செய்கின்ற அடிப்படைக் கிரியை. இதில் விசுவாசிகளுக்கு பங்கு இருக்கிறது. இது தொடர்கின்ற பரிசுத்தம். இந்தக் கிரியை இந்த உலகில் ஒருபோதும் பூரணமடையாமல் பரலோகத்தில் மட்டுமே பூரணமடையும்.

[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்கவெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் ரைல் தன்னுடைய நூலுக்கு அளித்துள்ள முகவுரையின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார். ஆங்காங்கே எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேதப்பகுதிகளுக்கு தன்னுடைய எழுத்துபூர்வமான மொழியாக்கத்தையும் தந்திருக்கிறார்.

இந்த ஆக்கத்தின் இறுதிப் பத்திகளில் ரைல் தான் வாழ்ந்த 19ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் இருந்த நிலை பற்றி அங்கலாய்ப்புடன் விளக்குகிறார். அதற்கும் தற்காலத் தமிழினத்தில் காணப்படும் கிறிஸ்தவத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்கள். நீதிமானாக்குதல், பரிசுத்தமாகுதல் போன்ற அடிப்படை வேதசத்தியங்களில் அன்றுபோல இன்றைக்கும் கிறிஸ்தவர்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை முதன்மைப்படுத்தி வேதத்திற்கு மதிப்பளிக்க மறுக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் செழிப்பு உபதேச இயக்கமே பரவலாக எங்கும் காணப்படுகிறது. இந்த இயக்கத்தின் தவறுகளையும், கோளாறுகளையும் இனங்கண்டு அதற்கு விலகி நின்று வேதக்கிறிஸ்தவத்தில் அக்கறை காட்டாமல் சத்திய அறியாமையால் அதற்கு வக்காலத்து வாங்குகிறவர்களே எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். ரைலின் இந்த ஆக்கம் இந்த 21ம் நூற்றாண்டுக்கு எத்தனைப் பொருத்தமானதாக இருக்கின்றது. – ஆசிரியர்]

பரிசுத்தமாகுதல் – சிந்திக்க வேண்டிய சீரான எண்ணங்கள்

பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லை – எபி 12:14

பரிசுத்தமில்லாமல் இருப்பதால் வரும் அழிவை எண்ணிப்பார்க்க வேண்டும். பரிசுத்தமில்லாமல் இரட்சிப்புக்கு வழியில்லை. மெய்யான பரிசுத்தமில்லாமல் எத்தனை பெரிய, கணக்கற்ற மதக்கிரியைகளைச் செய்தாலும் அவற்றால் எந்தப் பயனுமில்லை. உங்களுடைய விருப்பங்கள் என்ன? உங்களுடைய இருதயம் எதையெல்லாம் நாடுகின்றது? எத்தகைய தீர்மானங்களை வாழ்க்கையில் எடுக்கிறீர்கள்? இதெல்லாம் நம்மை ஆராய்ந்து பார்க்க உதவும் கேள்விகள்.

நாம் பரிசுத்தமடைய வேண்டுமானால் நாம் பாவிகள் என்பதை உணர்ந்து கிறிஸ்துவிடம் போய் நம்முடைய அடிப்படைத் தேவையைக் கூறவேண்டும்.

எந்தவிதத்தில் நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பித்தோமோ அதேபோல் நாம் அதில் தொடர வேண்டும். கிறிஸ்துவிடம் அடிக்கடி போக வேண்டும். அவர் தலையாயிருக்கின்ற அவருடைய சரீரத்தின் எல்லா அங்கத்தவர்களும் அவரிடத்தில் இருந்துதான் அனைத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்தமாகுதலில் தேங்கிப் போயிருக்கிற விசுவாசிகள் பொதுவாகவே கிறிஸ்துவோடு அன்றாடம் இருக்க வேண்டிய அவசிய ஐக்கியத்தை உதாசீனப்படுத்துகிறார்கள்.

நம்முடைய இருதயத்திடம் இருந்து நாம் பெரிய விஷயங்களை இந்த உலகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடாது. இந்தப் பாதையை நாம் பாவிகளாகவே ஆரம்பித்தோம்; அதில் தொடருகிறபோது நம்மைத் தொடர்ந்து பாவிகளாகவே காண்கிறோம். ஆனால், நிச்சயமாகப் புதுப்பிக்கப்பட்ட, மன்னிப்புப்பெற்ற, நீதிமான்களாக்கப்பட்ட பாவிகளாக இறுதிவரை இருப்போம்.

இருந்தபோதும் பரிசுத்தமாகுதலின் உயர்ந்த கட்டத்தை எட்ட நாம் கடினமாக உழைத்துப் போராட வேண்டும். பரிசுத்தமாக இருப்பது சந்தோஷமான வாழ்க்கை. தங்களுடைய வாழ்க்கையை சமாதானத்தோடு வசதியாக வாழ்ந்துவிடுகிறவர்கள் எப்போதும் பரிசுத்தமாகுதலில் ஈடுபடுகிறவர்கள். ‘உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.’ (சங். 119:165).

[இது ஜே. சீ. ரைலின் ‘பரிசுத்தத்தன்மை’ என்ற மூல நூலின் சுருக்க வெளியீடான ‘பரிசுத்தத்தன்மையின் அம்சங்கள்’ என்ற கிருபை வெளியீடுகளின் (Grace Publications, UK) ஆங்கில நூலில் உள்ள இரண்டாம் அதிகாரத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கம். இந்தத் தமிழாக்கத்தை ஆசிரியரே செய்திருக்கிறார்.]

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s