இந்த வருடத்தின் முதல் இதழ் இது. இதில் விசேஷம் என்னவென்றால் இந்த இதழ் வழமையான இதழைப் போலில்லாமல் வந்திருப்பதுதான். திருமறைத்தீபம் தன்னுடைய இருபது வருட நிறைவை நினைவுகூர்ந்து கர்த்தருக்கு நன்றி தெரிவிப்பதோடு வாசகர்களுக்கு ஊக்கந்தரும் விதத்தில் இந்த இதழை வெளியிட்டிருக்கிறோம். அதற்காக ஆவிக்குரிய செய்திகள் இதில் இல்லை என்பதில்லை. ஜே. சீ. ரைலின் நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல், கிறிஸ்தவனில் பாவம் ஆகிய வேதபோதனைகளுக்கான விளக்கங்கள் இதில் வந்திருக்கின்றன.
இருபது வருடங்களைத் திருமறைத்தீபம் தாண்டி வந்திருக்கிறது. அதன் ஊழியப்பணி பற்றிய ஒரு விளக்கத்தை நான் தந்திருக்கிறேன். அத்தோடு இந்த இருபது வருடங்களில் பத்திரிகை மூலமாகக் கர்த்தர் எனக்கு அறிமுகம் செய்து வைத்துள்ள அன்புள்ளங்கள் எத்தனை எத்தனையோ! அவர்களையெல்லாம் நான் நினையாத, கர்த்தருக்கு நன்றி சொல்லாத நாளில்லை. அத்தனைப் பேரையும் பற்றி என்னால் இந்த இதழில் குறிப்பிட்டிருக்க வழியில்லை. அவர்களில் சிலரைப்பற்றி என் எண்ணங்களை அவர்களுடைய பெயர்களைக் குறிப்பிடாமல் தந்திருக்கிறேன். பத்திரிகை அவர்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கும் காரியங்களே அவர்களை இங்கு குறிப்பிடும்படிச் செய்திருக்கிறது. அது உங்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். விட்டுப்போனோரின் பெயர்கள் எத்தனையோ. அவர்களை நான் நினையாமலில்லை. அவர்களைப் பற்றி எழுதும் ஒரு காலம் வரலாம்.
இந்த இதழில் அநேக வாசகர்களின் கடிதங்கள் வந்திருக்கின்றன. முக்கியமாக இதழின் இருபதாவது நினைவு வருடத்தை மனதில் வைத்து பத்திரிகை தங்களுடைய வாழ்க்கையில் செய்திருக்கும் நன்மைகளை அவர்கள் நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதைச் சொல்லாமலிருந்திருந்தால் எனக்கே அது தெரிய வந்திருக்காது. இதழின் மூலமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கே எல்லா மகிமையும். இந்தளவுக்கு பத்திரிகையைப் பயன்படுத்தி வரும் தேவனை பத்திரிகை குழுவினர் போற்றுகின்றனர். வருகின்ற வருடங்களிலும் நாங்கள் இந்த இலக்கியப் பணியில் ஊக்கத்தோடும், தேவபயத்தோடும், தாழ்மையோடும் ஈடுபட்டு வர எங்களுக்காகத் தொடர்ந்து ஜெபியுங்கள். நன்றி! – ஆசிரியர்.