வாழ்த்துக்கள்!

திருமறைத்தீபம் தனது இருபது வருட ஊழியப்பணியை நிறைவு செய்வதை நினைவுகூருமுகமாக பல வாசகர்கள் தங்களுடைய அனுபவங்களை என்னோடும் உங்களோடும் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களில் புதிய வாசகர்களும் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையை வாசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எப்படியெல்லாம் திருமறைத்தீபத்தைக் கர்த்தர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதை இந்தக் கடிதங்கள் தெளிவாக விளக்குகின்றன. தங்களுடைய உள்ளத்தில் இருப்பதை, உணர்வுபூர்வமாக அனுபவித்தவற்றை அப்படியே எழுதியிருக்கிறார்கள். அவற்றை வாசிக்குப்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய (பத்திரிகைக் குழுவினரின்) இந்த எளிய ஊழியப்பணியை எத்தனை வல்லமையாகப் பயன்படுத்தி ஆவிக்குரிய வளர்ச்சியை அநேகருக்குக் கொடுத்திருக்கிறார்; கொடுத்துவருகிறார் என்பதை உணர்ந்து மலைத்துப் போனேன். கர்த்தருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டேன். இந்த இலக்கியப்பணியில் அவர் இருக்கிறார்; நடத்துகிறார்; தன் மகிமைக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதை உணராமல் இருக்க முடியாது. பணத்திற்கோ, பகட்டிற்கோ, பெயருக்கோ, பெருமைக்காகவோ அல்லாது தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் வேதபூர்வமான திருச்சபை ஊழியங்கள் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு சுயநலமற்று செய்யப்பட்டு வருகிறது. இனியும் தங்களுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களுடைய கடிதங்களை ஈ&மெயில் மூலமோ வேறுவகையிலோ எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவற்றை அடுத்து வருகின்ற இதழ்களில் முடிந்தளவுக்கு பிரசுரிக்க முயற்சிக்கிறோம். அன்புடன் – ஆர்.

ஆத்தும தாகந்தீர்க்கும் பத்திரிகை

gunaசாதாரண மனிதர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய அருமையான சத்தியங்களை சமுதாயத்தின் எல்லாத்தரப்பினருக்கும் பயன்படக்கூடிய எளிய நடையில் நம்முடைய இனத்தின் பண்பாட்டுத் தேவைகளுக்கேற்ற விதத்தில் விளக்கி உணர்த்தி வருகிறது திருமறைத்தீபம். பல நாடுகளுக்கும் போய் இருபது வருடகால இலக்கியப் பணியைச் செய்திருக்கும் திருமறைத்தீபம் எந்தளவுக்கு திருச்சபையின் எல்லாத்தரப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும், வாலிபர்களுக்கும் அவசியமானது என்பதை அதன் செல்வமிக்க, நடைமுறைக்குகந்த ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் வேதத்தின் அடிப்படைப் போதனையான அதன் அதிகாரத்தையும், போதுமான தன்மையையும், கிறிஸ்துவின் தன்மையையும் சிலுவைத் தியாகத்தையும், மகத்துவமான சுவிசேஷத்தையும், பாவிகளுக்கான இரட்சிப்பையும், மீட்பின் கிரியையில் திருச்சபையின் மையத்தன்மையையும், நடைமுறைக்கேற்ற கிறிஸ்தவ வாழ்கைக்குகந்த போதனைகளையும் வாசகர்கள் உணரவும் ஏற்றுக் கொள்ளவும் திருமறைத்தீபத்தின் மூலம் கர்த்தர் செய்திருக்கும் கிரியை அதை எந்தளவுக்கு அவர் ஆசிர்வதித்திருக்கிறார் என்பதையும் உணர்த்துகிறது.

திருமறைத்தீபத்தின் நோக்கம் & பவுல் எபேசி 4:15ல் சொல்லுவதுபோல சத்தியத்தை அன்போடு வெளிப்படுத்தி எல்லோரும் தலையாகிய கிறிஸ்துவுக்குள் வளரவேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

திருமறைத்தீபத்தின் போதனைகள் & இதன் போதனைகள் வேதம் சார்ந்து அமைந்து வரலாற்றில் எழுந்திருக்கும் வினாவிடைப்போதனைகள், விசுவாச அறிக்கைகள், பியூரிட்டன் எழுத்துக்கள் மற்றும் தற்கால சீர்திருத்த போதகர்களின் ஆக்கங்களை உள்ளடக்கியதாக இருந்து வருகிறது.

திருமறைத்தீபத்தினால் வரும் நன்மைகள் – இது விசுவாசிகளுக்கு பரிசுத்தத்தில் வளரத் துணை செய்து, திருச்சபைகளை சத்தியத்தில் வளர்த்து, கேடானவர்களுக்கு கர்த்தரின் எச்சரிக்கையையும் கொடுத்து வருகிறது. எந்தவொரு சபையும், ஆத்துமாவும் வேதம் வெளிப்படுத்தும் சத்தியங்களை அறியாமலும், சபை வரலாறு தெரியாமலும், பியூரிட்டன்களின் எழுத்துக்களில் பரிச்சயம் இல்லாமலும் இருந்து சாக்குப்போக்கு சொல்லிவர வழியில்லை. ஏனெனில், கடந்த இருபது வருடங்களாக 79 இதழ்களில் விலைமதிப்பில்லாத ஆத்மீக சத்தியங்களை போதகர்களுக்கும், சபை மக்களுக்கும் திருமறைத்தீபம் அளித்து வந்திருக்கிறது. எந்தவொரு தமிழ் சபையிலிருக்கும் பத்துப்பேராவது திருமறைத்தீபத்தில் கொடுக்கப்படும் சத்தியங்களை சிந்தித்து வாசித்து, மனப்பூர்வமாக ஏற்று ஊக்கத்தோடு மற்றவர்களுக்கு வழமையாகப் போதித்து வருவார்களானால் தனியொருவனின் பக்திவிருத்தியில் எழுப்புதலும், திருச்சபையில் தேவபயமும் உண்டாகும். இன்னுமொருவிதத்தில் சொல்லப்போனால், தனிமனிதனின் வாழ்க்கையிலும், சபைகளில் சீர்திருத்தமும் உருவாக திருமறைத்தீபம் நிச்சயம் பயன்படும். போதகர்கள் திருமறைத்தீபத்தைப் பயன்படுத்திப் போதித்தும், சபையார் அதைப்பெற்று ஆர்வத்தோடு வாசித்தும் வருவார்களானால் அநேக இடங்களில் ஆவிக்குரிய வல்லமையில்லாதிருந்து வரும் அநேக தமிழ் சபைகள் பெரிதும் சீர்திருந்தும்.

திருமறைத்தீபத்தின் சிறப்பம்சம் – திருமறைத்தீபத்தின் ஆசிரியர் ஆத்துமாக்களுக்கு சத்தியத்தில் தெளிவிருக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருப்பதால் பத்திரிகையில் வரவேண்டிய ஆக்கங்களைக் கவனத்தோடு தயாரித்து சாதாரண வாசகனும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் எழுதி வெளியிட்டு வருகிறார். அவர் தற்கால கிறிஸ்தவ எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், நம்முடைய பிதாக்களின் பொன்னான எழுத்துக்களையும் கவனத்தோடு தயாரித்து தமிழில் தந்து வருகிறார். முரண்பாடில்லாத வகையில் சத்தியத்தை சத்தியமாக எழுதுவதும், போதிப்பதும் இன்றைக்குப் பரவலாக எதிர்ப்பைக் கொண்டு வந்தாலும், அதற்காக எல்லோரையும் குளிரவைக்கும் நோக்கத்துடன் எழுதாமல், தான் விசுவாசிப்பதைத் தைரியமாக ஆசிரியர் எழுதி வருகிறார். சத்தியத்தை அவர் சத்தியமாக தெளிவாக மனித பயமின்றி எழுதி வருகிறார். அவருக்கு உண்மையான ஆத்தும தாகமிருப்பதால் சத்தியமறியாதவர்களும், அதை இலகுவாக உடனடியாகப் புரிந்துகொள்ள இயலாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து உணர்ந்து அவர்களுக்கு துணைசெய்யும்படி விடாமுயற்சியுடன் எழுதி வருகிறார்.

திருமறைத்தீபத்தால் வரும் ஆசீர்வாதங்கள் – திருமறைத்தீபம் வேதமல்ல. அது ஆவியினால் அருளப்பட்டதுமல்ல. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உண்மையான, தரமான ஆவிக்குரிய இலக்கியங்கள் அநேகம் இல்லாத நிலையில் திருமறைத்தீபம் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள தனி மனிதனுக்கும், திருச்சபைகளுக்கும் அவசியமான ஊடகமாக இருந்து வருகிறது. சுத்தமான சத்தியங்களையும், வேதநடைமுறைகளும் திருச்சபையில் காணப்பட பத்திரிகை பேருதவி செய்யும்.

எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் தமிழ் வாசகர்கள் திருமறைத்தீபத்தைப் பெற்று தங்களுடைய ஆவிக்குரிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஜெபத்தோடு தவறாது வாசிக்க அவர்களை நான் ஊக்குவிக்கிறேன். நிச்சயம் இதன்மூலம் திருச்சபைக்கு தலையாக இருப்பவர் உயர்த்தப்படுவார்; மகிமை பெறுவார். அநேக தமிழ்ச் சபைகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் சிறந்த ஆவிக்குரிய இலக்கியங்களை வழங்கி வந்துள்ள ஆசிரியருக்கும், அவரோடு இருபது வருடங்களாக இணைந்துழைத்திருப்பவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

போதகர் குணசீலன் குஞ்சன்,
கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை,
கோலாலம்பூர், மலேசியா

vimal2003ம் ஆண்டில் இருந்து திருமறைத்தீபத்தை நாங்கள் வாசிக்க ஆரம்பித்தோம். பத்திரிகை திருச்சபை வரலாற்றில் எங்களுக்கு நல்லறிவு தந்து, திருச்சபை வாழ்க்கையை எவ்வாறு நிதானத்தோடு நடத்துவது என்று போதித்து எங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையை பெலப்படுத்தி வேதபூர்வமானதாக அது அமைந்திருக்க வழிகாட்டியிருக்கிறது. திருமறைத்தீபத்தைக் கனடாவில் இருக்கும் தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் விநியோகித்து வருகிறோம். கெரிஸ்மெட்டிக் இயக்க சிந்தனைப் போக்கில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சீர்திருத்த போதனைகளைப் பின்பற்ற பத்திரிகை சிலருக்கு உதவியிருக்கிறது. கிறிஸ்தவ இலக்கியத்துக்கு தன்னுடைய பங்கைச் செய்து வரும் போதகர் பாலாவுக்கு நாம் நன்றிகூறுவதோடு அவருக்கு நீடிய ஜீவனைக்கொடுக்க கர்த்தரிடம் வேண்டுகிறோம். வாழ்த்துக்கள்!

விமல், ஐரா தம்பதியினர்
டொரான்டோ, கனடா

சத்தியத்தை சமாளிக்காத திருமறைத்தீபம்

parthiதிருமறைத்தீபம் என்ற காலாண்டு சீர்திருத்த நூல் 20 ஆண்டுகாலமாக தமிழர் மத்தியில் வலம் வர தேவன் பாராட்டிய இரக்கத்திற்காக எம் திரியேக தேவனுக்கும், இதைத் தனது உழைப்பால் எழுதி வெளியிடும் ஆசிரியருக்கும், வெளியீட்டுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த நூலைப்பற்றி எழுத நினைத்தால் பக்கங்கள் போதாது. ஆனால் இந்தப் புத்தகத்தின் 20 வருட சேவையை ஒரு கூற்றில் சொல்ல ஆசைப்படுகிறேன். ‘சத்தியத்தை சமாளிக்காமல் சத்தியமாக சாட்சி கொடுக்கும் நூல்.’

நான் இந்தப் புத்தகத்தைக் கடந்த ஐந்து வருடங்களாகத்தான் வாசித்து வருகிறேன். வாசிக்கத் தொடங்கியபோது இந்த நூல் எனக்கு spiritual buffet போன்றே தெரிந்தது. உடனடியாகவே ஆவியில் முதிர்ந்தவர்களுக்கும், வாலிபர்களுக்கும் மிகப்பொறுத்தமான ஆக்கங்களை சுமந்து வருகின்ற இதழ் என்பதை அறிந்துகொண்டேன். மேலைத்தேசங்களில் இருந்ததுபோல சீர்திருத்தங்களையும், எழுப்புதல்களையும் எங்களுடைய தமிழினம் அனுபவரீதியாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இதன் தாக்கங்கள் சிறு சிறு சீர்திருத்த சபைகளில் இலங்கையில் இருந்து வந்தாலும் அவை மத்தியில் சபைப்பிதாக்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பியூரிட்டன் போன்றோரின் கிறிஸ்தவ விசுவாசங்களை அப்படியே பின்பற்றுகிறவர்கள் அரிதாகவே உள்ளனர். இருந்தபோதும் சீர்திருத்தப் போதனைகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று எந்த சபையும் சொல்ல முடியாதபடி இந்த நூல் அனைத்துச் சத்தியங்களையும் வெளிப்படுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை போல சபைகள் இருந்து வந்த நிலையில் இந்த இதழ் சக்கரையை எமக்குத் தந்துகொண்டிருந்தது என்பதைத் தெளிவாக உங்களுக்குச் சொல்லும் சந்தர்ப்பமாக இதைக் கருதுகிறேன்.

இந்த இதழில் வருகின்ற சத்தியங்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது குடும்பம் மற்றும் சபை வாழ்க்கைக்கும் தேவையான ஆக்கங்கள் நிறைந்ததாகவே இருந்து வருகிறது. என் வளர்ச்சிக்கும், நான் பணிபுரியும் சபையின் வளர்ச்சிக்கும் இந்த இதழ் காரணமாக இருந்திருக்கிறது என்பதும் உண்மையே. நான் மட்டுமல்ல பலரும் இதழில் வருகின்ற ஆக்கங்களால் வளர்ந்து வருகிறார்கள் என்பதைப் பலரிடம் இருந்து நான் கேள்விப்பட்டதும் உண்டு.

விசேஷமாக நான் ஓர் ஆக்கத்தைப்பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கிறிஸ்துவின் பலியைப் பற்றி எழுதப்பட்ட ஆக்கத்தை (கோபநிவாரண பலி) வாசித்தவுடன் என்னை அறியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்பட்டது. ‘நடுநிலையாளரும் கரகாட்டக்காரனும்’, ‘கோபநிவாரண பலி’ ஆகிய இரண்டு ஆக்கங்களும் நம் ஆண்டவர் சிந்திய உன்னத இரத்தத்தின் மகத்துவத்தை ஆங்கிலத்தில் வாசித்து அறிந்துகொள்ள முடியாத மக்களுக்கு தமிழில் விளக்கிப் பேருதவி செய்திருக்கிறது என்று மிகவும் சந்தோஷப்பட்டேன். இப்படியான சத்தியங்கள் இதழின் மூலமாக நமது சமுதாயத்துக்கு கிடைத்து வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

திருமறைத்தீபம் இலங்கை, இந்தியா முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனது தனிப்பட்ட விருப்பமும் ஜெபமும் இந்த நூலானது எல்லா சபை மக்களின் கைகளில் கிடைத்து அதன் சத்தியங்களை ஆவியானவர் ஒவ்வொரு இருதயங்களிலும் அசைவாட வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே நாம் இந்த இதழை விநியோகம் செய்து வருகிறோம்.

பல தீய சக்திகளும், புயல்காற்று, மழை போன்ற ஆத்மீகரீதியிலான தொல்லைகளும் இந்தத் தீபத்தை அணைக்க முற்பட்டபோதும் தேவன் தனது காயப்பட்ட கரத்தினால் அதைப் பாதுகாத்து வருகிறார். உண்மையோடும், சத்தியத்தோடும், உறுதியோடும் ஆவியின் வல்லமையால் கிறிஸ்துவின் விருப்பு வெறுப்புகளை தெளிந்தவிதத்தில் வரலாற்றில் இருந்தும், வேதத்தில் இருந்தும் வெளிப்படுத்தி வலம் வரும் திருமறைத்தீபம் 20 ஆண்டுகள் அணையாமல் இருந்து ஆவியின் துணையோடு எரிந்துகொண்டு இருக்கிறது. இயேசு மறுபடியும் வரும்வரை இந்தத்தீபம் அணையாமல் இருக்க தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பது நமது ஜெபமாக இருக்கவேண்டும்.

தேவன் தாமே இதை எழுதி வெளியிடுகிற ஆசிரியரோடும், இதைப்பிரசுரிக்க உதவுகின்ற எல்லாக் கரங்களோடும் இருந்து இதழை நமது இனத்திற்கு ஆசீர்வாதமாகவும், சீர்திருந்தி வாழுவதற்கு ஏற்ற நூலாகவும், சத்தியத்தைப் பறைசாற்றுகிற நூலாகவும், சுவிசேஷத்தை எடுத்துரைக்கிற இதழாகவும் இருக்க ஆசீர்வதிப்பாராக.

Rev. S. N. பார்த்திபன்,
சீர்திருத்த புரட்டஸ்தாந்து மிஷன், வவுனியா, ஸ்ரீ லங்கா
(Associated with the Continuing Free Church of Scotland)

grantமொழி தெரியாததால் திருமறைத்தீபத்தை என்னால் வாசிக்க முடியாது. ஆனால், ஆசிரியருக்கு வரும் கடிதங்களின் மூலம் எந்தளவுக்கு இந்த இதழ் அநேகருக்குப் பயனுள்ளதாக இருந்துவருகிறது என்பதை உணர முடிகின்றது. கடிதங்களின் மூலம் மட்டுமல்லாமல் இமெயிலிலும், தொலைபேசி மூலமும் கேள்விகள் பல கேட்டு பதில் தேடி வருகிறவர்களுடைய சத்திய வேட்கையை அறிந்து மகிழ்கிறேன். இவர்களுக்கெல்லாம் திருமறைத்தீபம் ஆவிக்குரிய வெளிச்சம் தந்து கிருபையிலும் கர்த்தருடைய ஞானத்திலும் வளரத் துணை செய்து வருவது கர்த்தரின் பெரிய கிருபை. ஒரே இதழை மாறி மாறி எத்தனையோ பேர் பல இடங்களில் வாசித்து வருகிறார்கள் என்பதை வாசகர்களின் கடிதங்கள் மூலம் அறிந்து பேராச்சரியம் அடைந்தேன். எந்தளவுக்கு திருமறைத்தீபம் வாசகர்களுக்கு பயன்பட்டு வருகிறதென்பதை உணர்ந்து கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். நிச்சயம் கர்த்தர் இதழைப் பயன்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேகமேயில்லை. மிகச் சிறிதாக, எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட இதழ் கர்த்தரின் ஆசீர்வாதத்தால் இன்று பெரிதாக வளர்ந்து உலகமெங்கும் இருந்து வருகின்ற தமிழ் வாசகர்கள் சத்தியத்தை தங்களுடைய சொந்த மொழியில் அறிந்துகொள்ளும்படிப் பயன்பட்டு வருவதை உணர்ந்து அவருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன்.

கிரான்ட் லிங்கன்
உதவியாளர், சவரின் கிரேஸ் சபை
ஆக்லாந்து, நியூசிலாந்து

சத்திய எழுச்சி ஏற்படுத்தும் இதழ்

annaduraiதிருமறைத்தீபம் 20 ஆண்டுகளைக் கடந்து 21வது ஆண்டைத் தொடங்குவது பெரும் மகிழ்ச்சிக்குரியது. இது போற்றத்தக்க காரியம். இது அநேகருடைய வாழ்வில் சத்திய எழுச்சியை ஏற்படுத்தி, கிறிஸ்தவத்தின் உண்மைத் தன்மைகளை அறிய வைத்திருக்கிறது என்பது மிகவும் உண்மை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் திருமறைத்தீபத்தை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது வெளிவந்துகொண்டிருக்கிறது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அந்த வருத்தம் நீங்கும்படி பல பழைய இதழ்கள் கிடைக்கப்பெற்று வாசித்துப் பயனடைந்தேன்.

இப்பொழுதும் திருமறைத்தீபம் கைக்குக் கிடைத்தவுடன் இரண்டு முறையாவது வாசித்துவிடுவேன். முதலில் விளங்கிக்கொள்ளாததை இரண்டாம் முறை விளங்கிக்கொள்வேன். அத்தோடு நான் திருமறைத்தீப இதழை வாசிக்க அறிமுகப்படுத்திய அநேகரோடு போனில் பேசி வெளிவந்த செய்திகளைப் பலருடன் பகிர்ந்துகொள்வேன்.

திருமறைத்தீபத்தில் வெளிவரும் ஆசிரியரின் பல ஆக்கங்களும், கட்டுரைகளும், உண்மைக் கிறிஸ்தவத்தை சரியானபடி அறிந்துகொள்ள செய்திருப்பதோடு, கிறிஸ்தவ சமுதாயத்தில் உள்ள குளறுபடிகள், வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலைமை, போலியான சடங்காச்சார கிறிஸ்தவம் என பலவிதமான விஷயங்களை அறிந்துகொள்ள முடிந்தது. பல இறையியல் போதனைகளைப் படித்து நான் தெளிவு பெற்றேன். அதில் ஒன்று கிறிஸ்துவின் மரணம் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே என்பது.

மேலும் 2014 ஏப்ரல் – ஜூன் மாத இதழில் வந்த “சிந்திக்க வேண்டிய இறையியல் பயிற்சி” எனக்கு நல்ல பயனளித்தது. நான் வாசிக்கக் கொடுத்த அநேகரும் அதைப்படித்துப் பயன் பெற்றதாக சொல்லக் கேட்டிருக்கிறேன். வேதம் தெரியாமல் போதகனாக இருப்பது எவ்வளவு சரியில்லாதது என்பதை அதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிந்தது.

அது மாத்திரம் அல்ல. திருமறைத்தீபத்தில் வெளிவந்துள்ள பல சீர்திருத்த போதகர்களின் போதனைகள் பெரிய வெளிச்சத்தை எனக்கு தந்திருக்கிறது. அதில் சபையின் முக்கியத்துவம், கர்த்தருடைய நாளின் முக்கியத்துவம், ஆராதனை ஒழுங்கு, குடும்பம், பிள்ளை வளர்ப்பு என்று பல காரியங்களை சொல்லலாம். எனக்கு மாத்திரமல்ல, என்னைப்போல அநேகம் பேர் இப்படிப் பயனடைந்து வருவது குறித்து சந்தோஷத்தோடு ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்.

ஒருமுறை நான் இரயிலில் பயணம் செய்தபோது திருமறைத்தீப இதழை வாசித்துக்கொண்டு இருந்தேன். அதை பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் அதைக் கொடுங்கள் என்று வாங்கி வாசித்துவிட்டு, நான் இதுவரை இப்படி ஒரு இதழை வாசித்தது இல்லையே என்று சொல்லி அதை எனக்குத் தாருங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டார். இப்படியெல்லாம் அநேகருக்கு பயனுள்ள சத்தியத்தை எளிமையான முறையில் படித்துப் புரிந்துகொள்ள உதவும் இந்த இதழ் தொடர்ந்து சத்திய வாஞ்சையுள்ளவர்களுக்கு உதவ வேண்டும், தெரியாத பல சத்தியங்களைப் புரிந்துகொள்ள வைக்க உதவும்படியாகத் தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன். இதன் ஆசிரியருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

போதகர் த. அண்ணாதுரை,
கிருபை சுவிசேஷ சபை,
வீரியபாளையம், தமிழ்நாடு

ஆத்மீகத் தீனிப்போடும் தீபம்

arul-slநாவினிக்கும் தமிழில் இருபதாண்டுகள்
திருமறையின் போதனையும்
திருச்சபையின் சாதனையும்
திரட்டி எமக்களித்திடும்
திருமறைத் தீபமே!

நீ காலண்டு சஞ்சிகையாய்
பூ வாண்டு வந்திடுவாய் . . . நீ
நா இனிக்கும் தமிழினிலே
நா லைந்து (4×5) வயதினையும்
தாண்டிவிட்டாய்!

இவ்வாறாக இருபது வருடங்களை எட்டி நிற்கும் இந்த திருமறைத்தீபம் சஞ்சிகையை இலங்கை வாசகர்களுக்கு அனுப்பிவைக்கின்ற குழுவில் குறைந்தது 14 வருடங்கள் ஈடுபாடுள்ளனவனாய் செயற்பட சந்தர்ப்பம் கிடைத்தமை இறைவன் எனக்களித்த அரிய சந்தர்ப்பமாகவே கருதுகிறேன். இதன் பணியின் கனியாகப் பலர் தவறான போதனையிலிருந்து விடுபட்டு மெய் விசுவாசத்தில் வளர்ந்ததையும், விசுவாச வாழ்க்கையின் போராட்டத்திலும் இவ்வுலக நெருக்கத்திலும் சோர்ந்து போயிருந்த விசுவாசிகள் பலரைத் திருமறைத்தீபம் தூக்கி நிறுத்தியதையும், கள்ளப்போதனையில் சிக்கிய பலரது கண்களைத் திறந்ததையும் அவர்கள் கைப்பட எழுதிய மடல்களிலிருந்து வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அதன் பயனாக எனது வாழ்க்கை சீர்பெற்றுள்ளது. பலர் தொலைபேசியூடாக அடுத்த திருமறைத்தீபம் எப்போது எமது கைக்கு வரும் என்று ஏங்குவதையும் கேட்டிருக்கிறேன்.

திருமறைத்தீபத்திற்கு எதிராகக் குரல் எழுப்ப முயன்ற சிலர் அதிக நாட்கள் தொடர முடியாதபடி துவண்டு போவதையும் குறிப்பிடாதிருக்க முடியாது. இவ்வாறான நெருக்கங்கள் மத்தியிலும் உலகெங்குமுள்ள தமிழ் கிறிஸ்தவர்களுக்கு தீபம் தியாக சிந்தையுடன் ஆத்மீகத்தீனி போடுகிறது.

இப்பணியின் பலனாக இன்று தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பல பயனுள்ள நூல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. “இப்பணி தொடர்க, இறை ஆசி பெறுக” என்று அதன் ஆசிரியரையும், அதன் தொடர்ச்சியான வெளியீட்டிற்காக ஜெபிப்போரையும், செலவுகளைத் தாங்குவோரையும் இறைவன் தொடர்ந்து போஷித்துப் பராமரிக்க வேண்டுமென்று வாழ்த்தி ஜெபித்து நிற்கிறேன்.

கிருபை இலக்கிய குழு சார்பாக,
அருட்செல்வன் (கொழும்பு)

அற்புதமான பொக்கிஷம்

karthiதிருமறைத்தீபம் – என் வாழ்வில் தேவனுடைய பெரிதான கிருபையால் நான் வாசித்துவருகிற ஓர் அரிய புத்தகம். நான் எது சத்தியம் என்று அறியாமல் எத்தனையோ புத்தகங்களைத் தேடித் திரிந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டு கிடைத்த ஓர் “அற்புதமான பொக்கிஷம்” திருமறைத்தீபம். அதுவரை நான் “சீர்திருத்தம்” என்ற வார்த்தையைகூட கேள்விப்பட்டது கிடையாது. அந்த வருடம் முதல் இன்றுவரை தொடர்ந்து படித்து வருகிற புத்தகம் இது. அப்போது அந்த புத்தகம் அளவில் பெரிதாக வெளிவந்து கொண்டிருந்தது. இப்போது கைக்கு அடக்கமானதாக இருக்கிறது. அந்த நாட்களில் வாசித்துவந்த நூல்களில் இது மட்டும் வித்தியாசமான ஒன்றாகத் தோன்றியது. ஏனெனில், இதில் வேதம் எதைக் கூறுகின்றது, வேதம் எதை எதிர்பார்க்கின்றது என்ற அடிப்படையில் கிறிஸ்தவத்தை எடுத்துரைத்த ஆசிரியரின் நோக்கம் தேவனது கிருபையினால் என்னைக் கவர்ந்தது.

சத்தியம் நடைமுறைக்கு சாத்தியமானதுதான் என்று இந்துக் குடும்பத்தில் இருந்து வந்த எனக்குத் திருமறைத்தீபம் புரியவைத்த விதம் சொல்லில் அடங்காதது. வேதத்தில் ஒரு விசுவாசி கற்று அறிய வேண்டிய தேவையான அடிப்படைக் காரியங்களையும், எது சத்தியம், எது அசத்தியம் என்பதைப் பகுத்து அறியவும் மிக பிரயோஜனமான ஒரு புத்தகம் இது.

இப்புத்தகத்தின் ஆசிரியரான போதகர் பாலா அவர்களின் விடாமுயற்சி, கடின உழைப்பு, சத்திய ஆர்வம், ஆத்தும கரிசனை, கருத்துப் பரிமாறல் ஆகிய அனைத்தையும் தாங்கி வரும் கருத்துப்பேழை திருமறைத்தீபம். சிந்திக்க வைக்கும் தலைப்புகள், இறையியல் போதனைகள், வரலாற்று நிகழ்வுகள், இரட்சிப்பின் அடிப்படைப் போதனைகள், கிறிஸ்தவ வினாவிடை போன்றவை மூலம் தனித்தன்மையோடு வேதத்திற்கு நம்மை அழைத்து செல்லும் காலாண்டு நூல் இது.

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அவர்களுடைய தாய்மொழியில் வேதம் சார்ந்த புத்தகங்கள் இல்லை என்ற ஏக்கத்தைத் தகர்த்தெரிகிற வகையில் வெளிவரும் நூல் இது. பெயருக்கு ஏற்றாற்போல் திருமறையின் தீபமாகவே தொடர்ந்து பிரகாசித்து வருகிறது இந்நூல். கள்ள உபதேசங்கள், அவை தோன்றிய விதம், அவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அவைகளை நாம் எவ்வாறு தவிர்ப்பது போன்ற நடைமுறைப் பயன்பாடுகள் அதிகம் பொதிந்து காணப்படும் நூல் இது. தற்போது உலகம் போய்கொண்டிருக்கும் சூழ்நிலையில் புரிந்துகொள்ளுதலோடு, சிந்தித்துச் சொல்ல வேண்டிய விதத்தில் சுவிசேஷத்தைச் சொல்லி சபைக்கு ஆத்துமாக்களை வழிநடத்த உதவுகிற ஒப்பற்ற அரிய நூல்.

அநேக நல்ல பல நூல்கள் வெளிவர உதவிய நம் தேவனுக்கும் போதகர் ஆர். பாலா மற்றும் அவரது திருச்சபைக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நம் தேவன் தாமே இன்னும் இந்நூலின் மூலமாக அநேகரை ஆசீர்வதிப்பாராக.

ஏ. கார்த்திக்கேயன்,
கிருபை சபை, மதுரை

சத்திய ஒளி வீசும் தீபம்

Kannaதிருமறைத்தீப இதழை ஆரம்பத்திலிருந்து பெற்று வாசித்து பயன் அடைந்து வருபவர்களில் நானும் ஒருவன். இவ்விதழை இருபது ஆண்டுகாலமாக தமிழ் கிறிஸ்தவர்கள் மத்தியில் தவழச் செய்த கர்த்தரைப் போற்றுகிறேன். மேலும் இந்த இதழை முறையாகத் தயாரித்து வெளியிட உதவி வரும் கரங்களுக்கு எமது நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக. வேத சத்தியத்தை அப்படியே போதிப்பதில் இது தவறியதில்லை. அது மட்டுமல்ல, பல வேத அடிப்படையிலான சத்தியங்களை மிகவும், ஆழமாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் வெளியிட்டு வருவதால் வாசிக்கின்றவர்களுக்கு அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆசிரியரின் கடுமையான உழைப்பை இது வெளிப்படுத்துகிறது.

மேலும் இவ்விதழ் சீர்திருத்த போதனைகளை அள்ளித் தருகிறது. சீர்திருத்தவாதிகளையும் அவ்வப்போது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இன்றைய தமிழ்த்திருச்சபைகளை அழித்துக்கொண்டிருக்கும் போலிச் சத்தியங்களை இந்த இதழ் இனங்காட்டித் தந்து மெய்யாகவே திருமறைத்தீபமாக ஒளிவீசுகிறது. அதைக் கருத்தோடு வாசிப்பவர்கள் நிச்சயம் தங்களை சீர்திருத்திக்கொள்ள முடியும்.

நான் இருக்கும் திருச்சபையில் அவ்வப்போது கிடைக்கின்ற பிரசங்க வாய்ப்புகளைப் பயன்படுத்தி இவ்விதழ் தருகின்ற போதனைகளை அப்படியே என் சபைக்கு நான் கொடுக்கத் தவறியதில்லை. என்னுடைய பிரசங்கங்களுக்கு இவ்விதழ் வலிமை சேர்த்திருக்கிறது. பிரசங்கங்களை எவ்வாறு எளிமையாகக் கொடுப்பது என்பதை இவ்விதழ் மூலம் நான் கற்றுப் பயனடைந்திருக்கிறேன். ‘எது பிரசங்கம்’ என்ற ஆக்கம் என்னையும் என் பிரசங்கத்தையும் உருமாறச் செய்திருக்கிறது. அதன் மூலம் எமது சபையும் பயன் அடைந்து வருகின்றது.

இந்த இதழில் வருகின்ற எல்லா ஆக்கங்களும் பயனுள்ளவை என்றே நான் சொல்வேன். தொடர்ந்து இந்த எழுத்துப் பணிக்காகவும் ஆசிரியருக்காகவும் நானும் எனது சபையிலிருப்பவர்களும் ஜெபித்து வருகிறோம்.

நன்றி,

கண்ணா
உதவியாளர், கிருபை சீர்திருத்த பாப்திஸ்து சபை
கோலாலம்பூர், மலேசியா

என் வாழ்வில் திருமறைத்தீபம்

jagdeeshதிருமறைத்தீபத்தைப் பற்றி எழுதுவதானால் நான் எத்தனையோ காரியங்களை எழுத முடியும். நான் ஆவிக்குள் வளர்வதற்கும், கலப்படமில்லாத போதனைகளிலிருந்து என்னைக் காத்துக்கொள்ளுவதற்கும் இவ்விதழ் என் வாழ்க்கையில் வழிகாட்டியாய் அமைந்திருக்கிறது. நான் சிறுவனாக இருக்கும்போது என்னுடைய குடும்பத்தார் அனைவரும் கிறிஸ்துவின் அன்பைத் தெரிந்துகொண்டோம். ஆனால், எனக்குள் இருக்கும் பாவத்தை உணர்ந்து இயேசுவுக்காக வாழவேண்டும் என்ற உணர்வோடு இருந்தபோது வேதத்தைப் பலமுறை வாசித்தபோதும் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்’ (அப் 10:30-31). அக்காலகட்டங்களில் திருமறைத்தீபம் என் கையில் கிடைத்தது. ஆனால், எனக்கோ வாசிக்கும் பழக்கம் குறைவு. இருந்தும் ஏதோவொரு உந்துதலால் இதழை வாசிக்க ஆரம்பித்தேன். நான் இதுவரை கற்றுக்கொண்டிருந்ததெல்லாவற்றையும்விட இதழில் நான் வாசித்த விஷயங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன.

திருச்சபை என்றால் என்ன, சபை அங்கத்துவம் என்றால் என்ன என்பது பற்றியும் மேலும் கிருபையின் போதனைகள், கிறிஸ்தவ கோட்பாடுகள், இரட்சிப்பு, பாவம் இவைகளைப்பற்றிய தொடர்ச்சியான தெளிவான போதனைகளைப் பகுதி பகுதியாக திருமறைத்தீபம் விளக்கிவந்தது. இவற்றைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ச்சியாக வேதத்தோடு ஒப்பிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். வேலை காரணமாக ஒரு சில மாதங்கள் தனிமையில் இருக்க நேரிட்டது. அப்போது வாசிக்கும் பழக்கம் அதிகரித்தது. என் வாழ்வில் வேதத்திற்கு அடுத்த இடத்தில் திருமறைத்தீபம் இருக்க ஆரம்பித்தது. இதனால் தேவன் என்னை சத்தியத்தில் நிரப்பினார். கற்றுக்கொண்டவற்றையெல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். ஆனால், என் சொந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் வாழவும் வேலை செய்யவும் கர்த்தர் வழியேற்படுத்தித் தந்தார். கிறிஸ்தவ பண்பாட்டைப்பற்றி ஏற்கனவே படித்து அறிந்துகொண்டிருந்ததால் வெளிநாட்டுக் கலாசாரத்திற்கும் கிறிஸ்தவ பண்பாட்டிற்கும் இடையில் எனக்குள் போராட்டம் ஆரம்பமானது. அங்கே சபை ஐக்கியம் கிடைத்தாலும் சொந்த மொழியில் நல்ல ஆகாரம் கிடைக்கவில்லை. நான் வெளிநாடு சென்ற வேளையில் சிறிது காலம் திருமறைத்தீபம் கிடைக்கவில்லை. மறுபடியும் திருமறைத்தீபத்தைத் தொடர்ந்து வாசிக்கும் வசதி ஏற்பட்டது. அதன் மூலமாய் ஆவிக்குரிய ஆலோசனைகளை மறுபடியும் பெறமுடிந்தது.

இப்படியாக வெளிநாட்டில் வாழ்கிற வேளையில் கிறிஸ்துவை அறிந்தும் பாவத்தில் வீழ்ந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளத் துணிந்த ஒரு சகோதரனை சந்தித்தேன். அவர் என்னிலும் முதியவர். அவருக்கு தேவனுடைய வார்த்தைகளை எடுத்துக்காட்ட வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் போதனைகளைச் சுட்டிக்காட்டி ஆலோசனை வழங்கி திருமறைத்தீபத்தையும் வாசிக்கக் கொடுத்தேன். திருமறைத்தீபத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட காரியங்களைப் பயன்படுத்தி ஞானத்தோடு மற்றவர்களுக்கு துணைபோக தேவன் எனக்கு கிருபை பாராட்டினார். அந்தச் சகோதரன் உயிர்மீட்பு அடையும்படிச் செய்தார். நான் பெற்றுக்கொண்ட கிருபையை மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற வாஞ்சை எனக்குள் அதிகரித்தது. நான் அந்தளவுக்கு தேறினவனல்ல; ஆனால் வேதத்தில் உள்ளவற்றைத் தொகுத்து தேவன் திருமறைத்தீபத்தின் மூலம் வழங்கி என்னை ஆசீர்வதிக்கிறார். மீண்டும் சொந்த நாட்டுக்குச் சென்று ஆத்துமாக்களை உற்சாகப்படுத்தும்படிச் செய்தார். அநேகர் வியக்கத்தக்கவிதமாக ஞானத்திலும் கிருபையிலும் என்னை வழிநடத்தினார். என்னுடைய திருமணத்திற்குத் தேவையான ஆலோசனைகள், குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் போன்ற ஆலோசனைகளை திருமறைத்தீபத்தினூடகப் பெற்றுக்கொண்டேன். வேறு நாட்டில் வாழ்ந்தாலும் இப்படியாய் நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் தந்திருக்கும் திருமறைத்தீபத்தை மற்றவர்களும் வாசிக்க வேண்டும்; தேவ அன்பை அவர்களும் ருசிபார்க்க வேண்டும் என்று அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறேன். இந்த விஷயத்திலும் அநேகருக்கு ஆலோசனைகள் தரவும், கேள்விகளுக்கு பதில் கூறவும் தேவன் எனக்கு உதவி வருகிறார். இதற்கெல்லாம் துணையாயிருந்திருக்கும், இருந்து வரும் திருமறைத்தீபம் தன்னுடைய இருபது வருட ஊழியத்தை நிறைவு செய்திருப்பதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.

ஜெயதீஸ்
Paris, France

விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் திருமறைத்தீபம்

நான் முதன் முதலாக மட்டக்களப்பில் எனது உறவினர் வீட்டில் உங்களது திருமறைத்தீபம் பத்திரிகையை வாசித்தேன். பல பயனுள்ள விஷயங்களை அதிலிருந்து கற்றுக்கொண்டேன். 2004ம் ஆண்டில் இருந்து அதனை நான் வாசித்து வருகிறேன். தேவனுடைய சபைக்குள் பக்க வழியாகப் பிரவேசிக்கின்ற இடறலான போதனைகளைக் குறித்து நம் இனத்திற்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று நான் பலமுறை சிந்தித்ததுண்டு. திருமறைத்தீபத்தை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தக் குறையைத் தேவன் ஆசிரியர் பாலாவின் மூலமாக நிறைவேற்றியுள்ளார் என்பதைக் கண்டுகொண்டேன். இருபது ஆண்டுகளை எட்டிநிற்கும் இவ்விதழ் தொடர்ந்து என் கரங்களை வந்தடையும் என்ற மனநிறைவோடு அதன் பணி தொடர வாழ்த்துகிறேன்.

சின்னப்பு பிரான்ஸிஸ் ஜீவரட்னம்,
யாழ்ப்பாணம். ஸ்ரீ லங்கா.

வாழ்க்கையை மாற்றிய திருமறைத்தீபம்

arulமுதன் முறையாக போதகர் பாலா அவர்களை 1990 ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு 1992ல் பாப்திஸ்து சபைகளால் நடத்தப்பட்ட ஒரு மகாநாட்டில் அவரும் ஒரு பிரசங்கியாராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் பிரசங்கித்த வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பிரசங்கத்தில் அவர் அடிக்கடி சொன்ன வார்த்தைகள், “சொன்னபடி செய்யும் சுப்பனாக இருக்க வேண்டும்” என்பது. நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து “அந்நாட்களில் இஸ்ரவேலில் இராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான்” என்பதை நம் சமுதாயத்துக்கு ஒப்பிட்டு அன்று அவர் பேசினார். அன்றிலிருந்து அவருடைய போதனைகளைக் கேட்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தேன். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அவருடைய போதனைகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய ஏக்கத்தை நீக்கும்படியாக, 5 வருடங்களுக்குப்பின் திருமறைத்தீபம் வெளிவந்தது. ஆரம்பத்தில் 8 பக்கங்கள் மட்டுமே இருந்திருந்தாலும் முழுவதும் போதனைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதுவரை கல்வினின் ஐங்கோட்பாடுகள் மட்டுந்தான் சீர்திருத்த கிறிஸ்தவம் என்று நினைத்திருந்தேன். ஆனால் வேதத்திலுள்ள போதனைகளில் கல்வினின் ஐங்கோட்பாடுகள் ஒரு சிறுபகுதிதான் என்பதை உணர்ந்து அதிர்ந்து போனேன். அப்போதுதான் 1689 விசுவாச அறிக்கை என்று ஒன்று இருப்பதையே அறிந்துகொண்டேன். அது என்னை மேலும் சிந்திக்க வைத்து தொடர்ந்து சீர்திருத்த போதனைகளைப் படிக்கத் துணை செய்தது. இதற்குத் திருமறைத்தீபம் பேருதவியாக இருந்து வருகிறது.

போதகர் பாலா அவர்கள், தமிழ்நாட்டுப் போதகர்களுக்கு வேதபோதனைகளைக் கற்றுத்தர ஆரம்பித்த இறையியல் வகுப்புகளில் நானும் (போதகனாக இல்லாதிருந்தும்) கலந்துக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி இன்றுவரை ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். அவ்வகுப்புகளில், இறையியல் போதனைகளோடு, உழைப்பு, நேரம் தவறாதிருத்தல், தனிமனித ஒழுக்கவியல் சம்பந்தமான அனைத்துப் போதனைகளையும் போதித்தது மட்டுமல்லாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டியது இருதயத்தை சம்மட்டியால் அடித்ததுபோல் தாக்கியது.

டிஸ்பென்சேஷனலிசத்தைக் குறித்து திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கமே என்னை அந்தத் தவறான போதனையில் விழுந்துவிடும் ஆபத்திலிருந்து விடுவித்தது. அந்தந்த காலகட்டங்களில் காணப்படும் போலிப் போதனைகளைக் கண்டறிந்து, அதுவும் சிலவேளைகளில் அந்தக் கள்ளப்போதனைகள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாகவே அதைக் குறித்த அபாய எச்சரிக்கை திருமறைத்தீபத்தில் வந்து என்னைக் காத்திருக்கிறது.

பல வருடங்களாக விசுவாசியாக இருந்து வருகிறேன் என்று நான் சொல்லிக்கொண்டிருந்தபோது “பத்துக்கட்டளைகள்” குறித்த போதனைகள் திருமறைத்தீபத்தில் வெளிவந்து என்னுடைய அறியாமையை வெளிப்படுத்தி என்னைத் தற்பரிசோதனை செய்துகொள்ள வைத்து ஆண்டவருக்கு விசுவாசமாக வாழ வைத்தது. எனக்கு மட்டுமல்ல இந்தப் புத்தகத்தைப் பிறருக்கும் கொடுக்க அவர்களும் அதே உணர்வு கொண்டிருந்ததை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள்.

கிறிஸ்தவ கோட்பாடுகள் என்ற தலைப்பில் வினாவிடைப் போதனைகளிலுள்ள போதனைகளை விளக்கி திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்தன. இரண்டு வரிகளிலுள்ள பதிலில் இவ்வளவு சத்தியங்களா என்று எண்ணி வியப்படைந்திருக்கிறேன். தொடர்ந்தும் அவை வரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்.

பிரசங்கத்தைப் பற்றி திருமறைத்தீபத்தில் வெளிவந்த ஆக்கங்கள் பிரசங்கத்தின் மகா உன்னதமான தன்மையை எனக்குப் போதித்தது. நான் பிரசங்கியாக இல்லாவிட்டாலும் பிரசங்கம் கேட்கும் விதத்தில் இது அதிகமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதேவேளை மற்றவர்களின் பிரசங்கங்களைக் கேட்கும்போதும் அது ஆவியின் மூலம் வருகிற பிரசங்கம்தானா என்பதைக் கண்டறியவும் அந்த ஆக்கங்கள் பேருதவியாக இருந்தன.

திருமணமாகி பல வருடங்களாகி இருந்தாலும் “தாம்பத்திய உறவில் நெருக்கம்” (அலன் டன்) என்ற தலைப்பில் வந்த ஆக்கங்கள் இடியெனத் தாக்கி என்னுடைய திருமண வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவர காரணமாக இருந்திருக்கிறது. அது புத்தகமாக வராதா என்ற என்னுடைய ஏக்கத்தை ஆண்டவர் சீக்கிரமாகவே நிறைவேற்றினார். எனக்கு அறிமுகமானவர்களுக்கு இந்தப் புத்தகத்தைக் குறித்து எடுத்துச் சொல்லியும் வருகிறேன்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக, மற்றவர்களிடம் சரளமாகப் பேசத் தயங்கிய எனக்கு போதகர் பாலா அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களுந்தான் தைரியத்தைத் தந்து பேச வைத்தது. இதன்மூலம் ஆண்டவருடைய நற்செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.

இவ்விதழ் 20 வருடங்களைக் கடந்து வந்துள்ள இவ்வேளையில், போதகர் பாலா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவருடைய மனைவி மற்றும் சபையார் யாவருக்கும் என்னுடைய நன்றிகள்.

அருள் செல்வம்,
நாமக்கல், தமிழ்நாடு

அணையாது எரியும் சத்தியதீபம்

premதிருமறைத்தீபம் பத்திரிகை 20 வருடங்கள் கடந்து வந்துள்ளது என்று சொல்லுவதைக் காட்டிலும் 20 வருடங்கள் வளர்ந்து வந்துள்ளது என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். தமிழர்களுக்குத் தேவையான நல்ல தரமான கிறிஸ்தவப் போதனைகளை முதல் இதழ் தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு இதழிலும் படிக்க முடிகின்றது.

என்னுடைய தனிப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கையில் இதன் பங்கு மிகவும் அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னுடைய இளமைப் பருவத்தில் இதை வாசிக்க ஆண்டவர் கிருபை பாராட்டியிருக்கிறார். கள்ளப் போதனைகளையும் தவறானப் போதனைகளையும் தோலுரித்துக்காட்டி நான் சரியான கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர இது துணை செய்திருக்கிறது.

திருமறைத்தீபத்திற்கு நான் பெரிதும் கடமைபட்டுள்ளவன். திருமறைத்தீபத்திலிருந்தே ஓய்வுநாள் கட்டளையின் போதனைகளை நான் அறிந்துகொண்டேன். அதற்கு முன்பு ஓய்வுநாளை எந்தளவுக்கு அலட்சியப்படுத்தியிருக்கிறேன் என்பதை உணர்ந்து பெரிதும் வருந்தினேன். ஒருவேளை திருமறைத்தீபத்தில் ஓய்வுநாள் குறித்த போதனைகள் வராதிருந்திருக்குமானால் கண்ணிருந்தும் குருடனைப் போல்தான் நான் வாழ்ந்து வந்திருப்பேன். ஆண்டவருக்கு நன்றி.

வேத சத்தியங்களை சரியாகவும் நல்ல எளிமையான தமிழிலும் இதில் இடம்பெறுவது சிறப்பு. எனக்குத் தமிழ் மட்டுமே நன்றாகத் தெரியும். எனவே கர்த்தர் எனக்குத் தந்த அவருடைய கிருபையின் சாதனமாகவே நான் திருமறைத்தீபத்தைப் பார்க்கிறேன். ஆகவே வெளிவந்துள்ள அனைத்து இதழ்களையும் ஒன்றுக்கு இரண்டு பிரதிகளாக சேகரித்து அவைகளை பைண்டிங் செய்து வைத்து தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அவைகளை நான் பயன்படுத்தி வருகிறேன்.

1995 ஆம் ஆண்டு அதாவது 20 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் பிரதியையும் தற்போது 2014 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள பிரதியையும் நான் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதத்தைப் பற்றியும் (வேதம் மட்டுமே), திருச்சபையைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ள போதனைகள் சற்றும் மாறாமல் பிசகாமல் ஒரே சமன் கோட்டில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறேன். இதுவே திருமறைத்தீபம் இன்றுவரை அணையாமல் சுடர்விட்டு எரிந்து அநேகருக்கு வெளிச்சம் தருகிறவிதமாக இருப்பதற்குக் காரணம் என்பதை நான் உணருகிறேன்.

இவ்வேளையில் போதகர் பாலா அவர்களுக்கும், அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிற அவருடைய சபைமக்களுக்கும், அவருக்கு உதவியாக இருக்கிற பத்திரிகை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். கர்த்தருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.

ஐசக் பிரேம்குமார்,
உதவியாளர், கிருபை சீர்திருத்த திருச்சபை, சென்னை.

தீபத்தால் நான் அடைந்த பலன்கள்

jamesதிருமறைத்தீபம் 20 ஆண்டுகளைக் கடந்து வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. ஏனென்றால், இதனால் நான் அடைந்த பலன்கள் மிகுதி. இதனைக் கர்த்தர் என் வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இதனை எண்ணி நான் எப்போதும் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்.

பெயர் கிறிஸ்தவளாக (Nominal Christian) வாழ்ந்து வந்த என்னுடைய வாலிப வயதில் ஆண்டவர் என்னை இரட்சிப்பின் பாதையில் நடத்தி வேதப்பூர்வமான சத்தியங்களைக் கற்று வளரச் செய்ததில் திருமறைத்தீபத்திற்கு மிக பெரும் இடமுண்டு.

வாசிப்பதில் அதிக நாட்மில்லாமல் வாழ்ந்து வந்த எனக்கு திருமறைத்தீபத்தின் 10 வது ஆண்டு இதழில் வெளிவந்த ‘மோட்சப் பயணம்’ குறித்த ஆக்கங்கள் என்னை வாசிக்கத் தூண்டின. நான் வாசித்த முதல் கிறிஸ்தவ புத்தகம் ‘மோட்சப் பயணம்.’ திருமணமான பிறகும் இன்றுவரை ஒவ்வொரு நாளும் அதில் சில பக்கங்களையாவது வாசிப்பதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஸ்பர்ஜன் மோட்சப் பயணம் புத்தகத்தை 100 முறை வாசித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. என்னால் முடியுமோ என்னமோ தெரியவில்லை, ஸ்பர்ஜனைவிட ஒரு முறையாவது இந்த புத்தகத்தை அதிகமாக வாசித்து விட வேண்டும் என்கிற விதத்தில் என் ஆவலைத் தூண்டிவிட்டது அந்த ஆக்கம்.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே வந்துள்ள இதழ்களையும் வாசிக்க முற்பட்டபோது அவைகளில் ‘நூல் அறிமுகம்’ என்ற பகுதியின் மூலம் தமிழிலுள்ள நல்ல கிறிஸ்தவ சத்தியங்கள் கொண்ட புத்தகங்களைக் குறித்து நான் அறிந்துகொண்டேன். எனக்கென்று தனியொரு புத்தக அலமாரியை ஏற்படுத்தி அதில் அந்த புத்தகங்களில் ஒவ்வொரு பிரதியை நான் வாங்கி வைத்து இன்றும் வாசித்துப் பயன்பெற்று வருகிறேன்.

திருமறைத்தீபத்தை வாசித்தே திருச்சபை வரலாறு குறித்த போதனைகளை நான் அறிந்து கொண்டேன். பெயர் கிறிஸ்தவளாக வாழ்ந்துவந்ததினால் திருச்சபையை மிகவும் சாதாரணமாக எண்ணியிருந்தேன். சத்தியத்தின் மெய்த்தன்மையைக் காக்க எத்தனை பேர்களின் இரத்தம் சிந்தப்பட்டு, உயிர் தியாகம் செய்யப்பட்டு அந்த அஸ்திபாரத்தின் மேல் திருச்சபை கட்டப்பட்டது என்பதை உணர்ந்து நான் வெட்கப்பட்டேன். நான் வாசித்தவை திருச்சபையின் மதிப்பையும் அவசியத்தையும் பன்மடங்கு என்னில் அதிகரிக்க வைத்தன.

வாசிப்பதில் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல் நல்ல தரமான புத்தகங்களையும் எனக்கு அறிமுகம் செய்து திருச்சபையின் நன்மதிப்பை எனக்கு காட்டி இன்றும் என்னைக் கிறிஸ்துவின் வழியில் நடத்தும் திருமறைத்தீபத்திற்கும் அதன் ஆசிரியர் போதகர் பாலா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அதன் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

திருமதி. ரோஸ்லின் ஜேம்ஸ்,
கிருபை சீர்திருத்த திருச்சபை
சென்னை

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s