கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள் – The Distinguishing Traits of a Christian
கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring)
இந்தக்காலத்தில் வெளியிடப்படும் நூல்களின் தொகை (ஆங்கிலத்தில்) அதிகம். ஒரே விஷயத்தைப் பற்றி புதிய புதிய எழுத்தாளர்கள் புதுக்கோணத்தில் எழுதி வருகிறார்கள். அவற்றில் நிச்சயம் வாசிக்க வேண்டியவையும் உண்டு. வெளியிடப்படும் நூல்கள் எல்லாவற்றையுமே வாங்கவோ, வாசித்துவிடவோ முடியாது. தரமான நூல்களை வாசிக்காமல் இருக்க முடியாது. என் நண்பனொருவன் வாசிக்கவே பிறந்திருக்கிறான். நல்ல வாசிப்பாளி; வாசிப்பவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளும் திறமையுள்ளவன். நான் வேகமாக வாசிப்பவனில்லை. நேரமெடுத்து வாசிப்பதே என் பழக்கம். டாக்டர் லொயிட் ஜோன்ஸ் அந்தவகையைச் சேர்ந்தவர் என்பதை அவருடைய எழுத்தில் வாசித்து அறிந்திருக்கிறேன்.
தவிர்க்கக்கூடாத, வாசிக்க வேண்டிய நூல்கள் என்றிருக்கின்றன. எத்தனைப் புதிய நூல்கள் வந்தாலும் இந்நூல்கள் காலத்துக்கும் தொடர்பவை; சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்கள். அத்தகையவற்றை அறிமுகப்படுத்துவதே என் நோக்கம். இது பலவருடங்களுக்கு முன் நான் வாசித்த நூல். இன்றும் அதன் பிரதி என் நூல்களின் மத்தியில் இருக்கிறது. அவசியம் வாசிக்கவேண்டிய நூல்கள் என்ற என் பட்டியலில் இது நிச்சயம் இடம் பெறும். அது கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய ‘கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதிசயங்கள்’ (The Distinguishing Traits of a Christian) என்ற நூல். இந்த நூல் எழுதப்பட்டது 19ம் நூற்றாண்டில் (1813ல்). இருந்தும், இன்றும் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இணையத்திலும் இலவசமாக வாசிக்கும் வசதியிருக்கிறது. அநேகருடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இது பேருதவி புரிந்திருக்கிறது. கார்டினர் ஸ்பிரிங்கைப் பற்றிச் சொல்லிவிட்டு அதற்குப் பிறகு நூலைப்பற்றி விளக்குகிறேன்.
அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினர் ஸ்பிரிங் 1785ல் பிறந்தார். 1808ல் சட்டம் படித்து சட்டத்தரணியாகப் பணிபுரிந்தார். கர்த்தரின் அழைப்பை உணர்ந்து இறையியல் கற்று 1810ல் நியூயோர்க் நகரில் பிரஸ்பிடீரியன் சபைப் போதகராக அறுபத்திமூன்று வயதில் தான் இறக்கும்வரை பணிபுரிந்தார். அவருடைய ஊழியப்பணிக்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிரசங்கத்தை அதிகமாகப் பயன்படுத்தி எழுப்புதலை ஏற்படுத்தினார். பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரியின் போர்ட் அங்கத்தவராக 1809ல் நியமனமான ஸ்பிரிங் ‘பிரசங்க மேடையின் வல்லமை’ என்ற நூலையும் எழுதினார். அந்நூல் இறையியல் கல்லூரியில் கற்பவர்களை போதகஊழியத்தில் அனுபவம் பெற்றவர்களோடு ஒப்பிட்டு ஆராய்கிறது. அந்நூலின் சாரம்சமே, அனுபவமுள்ள மெய்ப்போதகர்களின் கீழ் வளருகிறவர்கள் மட்டுமே நல்ல திறமையான போதகர்களாக முடியும் என்பதுதான். ஸ்பிரிங் வேறு சில நூல்களையும் எழுதியிருக்கிறார். அவர் 1873ல் இறைவனடி சேர்ந்தார்.
கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் முக்கியமானது. கிறிஸ்தவர்களுக்கும், திருச்சபைக்கும் பெரிதும் துணைபுரிந்திருக்கும் நூல் இது. எத்தனையோ காலங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தபோதும், இன்றைய சூழ்நிலைக்கு அத்தனை பொருத்தமானதாக நூலின் போதனைகள் அமைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் கார்டினர் ஸ்பிரிங் வேத அடிப்படையில் கிறிஸ்தவத்தை விளக்கியிருப்பதுதான். காலத்துக்குக் காலம் தன்னை உருமாற்றிக்கொள்ளுவதல்ல கிறிஸ்தவம். காலங்கள் மாறினாலும், சமுதாயமும், கலாச்சாரமும் மாறினாலும், மதநம்பிக்கைகள் மாறினாலும் மெய்க்கிறிஸ்தவ போதனைகள் என்றும் மாறாதவை. இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து நிற்கும், வெறும் உணர்ச்சிவசப்படுதலையும், கலாச்சாரத்துக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொண்டிருக்கும், ஆவியின் பிரசன்னமில்லாத உப்புச்சப்பற்ற ‘கிறிஸ்தவத்தை’ இந்நூல் நிச்சயம் தோலுரித்துக் காட்டுகிறது.
நூலின் ஆரம்பத்தில் மெய்க்கிறிஸ்தவமல்லாத, கிறிஸ்தவத்தின் பெயரில் தோற்றமளித்துக்கொண்டிருக்கும் ஆவியற்ற மதநம்பிக்கையை விளக்குகிறார் ஸ்பிரிங். ஏழு அடையாளங்களைத் தெளிவாக விளக்கி எது மெய்க்கிறிஸ்தவமல்ல என்று படம்பிடித்துக் காட்டுகிறார். இவற்றைமட்டும் நம்பித் தங்களைக் கிறிஸ்தவனாக எண்ணிக்கொண்டிருக்கிறவர்களை எச்சரிக்கிறார் ஸ்பிரிங். சுவிசேஷத்தைக் கேட்டு, இடுக்கமான பாதையில் காலெடுத்து வைத்து, பரலோகத்துக்குரிய மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் கொண்டிருப்பதே மெய்க்கிறிஸ்தவம். அது ஆவியானவரால் நம்மில் நிகழும் அற்புதம். அதற்குக்குறைவான எதுவும் கிறிஸ்தவமாகாது என்பதை கார்டினர் ஸ்பிரிங் வலியுறுத்துகிறார். தவறான எண்ணங்கள் ஒருவரைத் தவறான வழியில் அழைத்துச் சென்று தவறான வாழ்க்கையை வாழவைத்துவிடுகின்றது என்பதை ஸ்பிரிங்கின் விளக்கங்கள் தெளிவுபடுத்துகின்றன. விசாலமான பாதை கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்து, மனதுக்கு இதமூட்டினாலும், அதுவல்ல ஒருவரை பரலோகத்துக்கு அழைத்துச் செல்வது. அந்தவகையில் விசாலமான பாதையை நம்பி அதில் வீறுநடை போட்டுக்கொண்டிருப்பவர்கள் எத்தனைப் பரிதாபகரமானவர்கள் என்பதை இந்த ஏழு போலிக்காரணிகளும் சுட்டிக்காட்டுகின்றன. இந்த எச்சரிப்பு எத்தனை அவசியமாக இருக்கின்றது இன்று. இந்த ஏழு போலிக்காரணிகளும் எது மெய்யான கிறிஸ்தவமல்ல என்பதை விளக்குவதோடு, மெய்யான கிறிஸ்தவத்தின் மெய்த்தன்மையை நாம் விளங்கிக்கொள்ளுவதற்கும் உறுதியான அத்திவாரமிடுகின்றன; நம்மை சிந்திக்க வைக்கின்றன.
அந்தக்காலத்துப் பிரசங்கிகளிடம் ஆத்துமாவின் உணர்ச்சிகளுக்கு தூபம்போட்டு, நளின வார்த்தைகளால் போலி ஆசீர்வாதங்களை அள்ளித்தெளிக்கும் வழக்கம் இருக்கவில்லை என்பதை கார்டினர் ஸ்பிரிங்கின் எழுத்தில் பார்க்கிறோம். ஆத்துமாக்களைக் கவருவது அவருடைய நோக்கமல்ல; ஆவிக்குரிய விஷயத்தை சிந்திக்கவைக்கவே அவர் முயலுகிறார். அவரைப்பொறுத்தவரையில் ஆவிக்குரிய விஷயமென்பது வாழ்வுக்கும், சாவுக்கும் இடைப்பட்ட விஷயம். அதில் விளையாட்டுக்கும், கேளிக்கைக்கும் இடமில்லை. இயேசுவைப் போலவும், பவுலைப்போலவும் ஆத்துமாக்களின் இருதயத்தை சத்தியத்தால் ஊடுருவிச் சிந்திக்கவைக்கிறார் கார்டினர் ஸ்பிரிங். ஆவிக்குரியவிதத்தில் ஒருவரை இருதயப் பரிசோதனையில் ஈடுபட வைக்கின்றன அவருடைய வார்த்தைகள்.
அதையடுத்து மெய்க்கிறிஸ்தவம் எது என்பதை விளக்க ஆரம்பிக்கிறார் கார்டினர் ஸ்பிரிங். மெய்க்கிறிஸ்தவத்தை அடையாங்காட்டும் பதினொரு காரணிகளை அவர் அருமையாக விளக்குகிறார். ‘கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன், அதனால் நான் கிறிஸ்தவன். வேறு எதுவும் எனக்கு அவசியமில்லை. நான் பூரணமானவனாயில்லாவிட்டாலும், அடிக்கடி பாவங்களைச் செய்துவிட்டாலும், குறைகள் கொண்டவனாக இருந்தாலும், தொடர்ச்சியான மனந்திரும்புதலைக் கொண்டிராவிட்டாலும், கீழ்ப்படிவில்லாதிருந்தாலும், இயேசு என்னைக் கைவிடமாட்டார். என் விசுவாசத்தைப்பற்றிக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கவும், பரிசோதிக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று ஒருவித குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் சம்மட்டி தலையில் இறங்கியதுபோல்தான் இருக்கும். அவர் விளக்குகின்ற, கிறிஸ்தவத்தை அடையாளப்படுத்தும் அறிகுறிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்த அடையாளங்கள் கடுமையானதாக இருப்பதாக அவர்கள் சொல்லுவார்கள் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை. எதைச் செய்தாவது, எதைச் சொல்லியாவது ஒருவனை எப்படியாவது ஞானஸ்நானம் எடுக்கவைத்து பரலோகத்துக்குள் நுழைத்துவிடவேண்டும் என்று தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சுவிசேஷப்பிரசங்கிகளுக்கும் கார்டினர் ஸ்பிரிங்கின் வார்த்தைகள் புரியாது. ஆனால், உண்மை கசக்கத்தான் செய்யும்; அறுவைச் சிகிச்சை நோகத்தான் செய்யும். இயேசுவின் மலைப்பிரசங்க வார்த்தைகளைவிட்டு ஒரு சொட்டும் விலகாமல் கார்டினர் ஸ்பிரிங் விளக்கியிருக்கும் உண்மைகள் நம் தோலைக்கூடத் தொட்டு உரசாத அனுபவங்களை நாடுபவர்களுக்கு மிளகாயைக் கடித்ததுபோலத்தானிருக்கும். ஆனால், அவையே பரலோக நிச்சயத்திற்கு ஒருவரை வழிகாட்ட முடியும்.
வெறும் பல மணிநேர ஜெபத்தையும், தியானத்தையும், ஓடியாடிச் செய்யும் சேவையையும் மட்டும் பரிசுத்தவாழ்க்கைக்கு அடையாளங்களாகக் கருதிக் கொண்டிருக்கும் தற்கால ‘இயேசுவுக்குத் தீர்மானம் எடுக்கும்’ கூட்டத்துக்கு கார்டினர் ஸ்பிரிங் மெய்க்கிறிஸ்தவத்திற்கு அடையாள அறிகுறிகளாக வலியுறுத்தும், சுவிசேஷத்தாழ்மை, சுவிசேஷக் கீழ்ப்படிவு, சுயவெறுப்பு, உலகத்தைத் துறந்துவாழ்தல், தொடர்ச்சியான மனந்திரும்புதல் போன்ற ஆவிக்குரிய விஷயங்கள் இடுக்கமானவையாக, சிறைவாசத்துக்கு ஒப்பானவையாகத்தான் தெரியும். ஆனால் இவை இல்லாத கிறிஸ்தவத்துக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்ற இயேசுவின் போதனைகளை எப்படி மறுக்க முடியும்? பரலோக வாழ்க்கையை அடைவதற்கான வழிமுறைகளாக கார்டினர் ஸ்பிரிங் இவைகளைக் காட்டவில்லை; பரலோக வாழ்க்கையை அடைந்திருப்பவர்களின் அறிகுறிகளாகத்தான் அவர்களில் இவற்றை எதிர்பார்க்கிறார். இவை கிருபை நிகழ்ந்திருப்பதற்கான அடையாளங்களே தவிர கிருபையை அடைவதற்கானவையல்ல.
கார்டினர் ஸ்பிரிங் (1785-1873) அவருக்கு முன் வாழ்ந்திருந்த அமெரிக்காவின் மிகச்சிறந்த சிந்தனையாளரும், பிரபல பிரசங்கியுமாயிருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (1703-1758) ஏற்கனவே எழுதியிருந்த ‘ஆவிக்குரிய உணர்வுகள்’ (Religious Affections) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டே தன்னுடைய ஆக்கத்தை வரைந்திருக்கிறார். எட்வர்ட்ஸின் நூலே இதை எழுத கார்டினர் ஸ்பிரிங்கைத் தூண்டியிருக்கிறது. எட்வர்ட்ஸின் அழிவற்ற ஆக்கத்தின் அருமையான சத்தியங்களை வாசித்துப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் எளிமையான ஆங்கிலத்தில் தனித்துவத்தோடு தந்திருக்கிறார் கார்டினர் ஸ்பிரிங்.
கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை அடிப்படையாகக்கொண்டு, அதன் அரைவாசிப்பகுதியைப் பயன்படுத்தி ‘யார் மெய்க்கிறிஸ்தவன்’ என்ற தலைப்பில் ஓர் ஆக்கத்தை ஆங்கிலத்தில் வரைந்திருக்கிறார் ஜெரமி வோக்கர். அதைத் தமிழாக்கி உங்களுக்குத் தந்திருக்கிறோம். ஆங்கிலத்தில் கார்டினர் ஸ்பிரிங்கின் நூலை வாசிக்க முடியாதவர்களுக்கு ஜெரமி வோக்கரின் ஆக்கம் ஆசீர்வாதமாக இருக்கும். இதை வாசித்துவிட்டு ஆங்கிலத்தில் இருக்கும் ஸ்பிரிங்கின் நூலையும் பெற்று வாசியுங்கள். நிச்சயம் உங்களுக்கு அது பயனளிக்கும். எந்தக்காலத்திலும் மெய்க்கிறிஸ்தவம் தலையெடுத்து நிற்க இதைப் போன்ற நூல்களை நாம் வாசிப்பது அவசியம்.
கார்டினர் ஸ்பிரிங்கின் ஆங்கில நூல் இணையத்தில் இலவசமாக வாசிக்கும்படி இருக்கிறது (PDF). இணைய நூலுக்கு அல்பர்ட் என். மார்டின் முகவுரை எழுதியிருக்கிறார். நூலை அமேசோன் (Amazon) வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம். வேறு பதிப்பகத்தார்களும் அதை விற்பனை செய்கிறார்கள். ஜெரமி வோக்கரின் ஆக்கத்தை வாசிக்க இங்கே அழுத்தவும்.