இந்த இதழுக்கான ஆக்கங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது முதலில் ஜே. சி. ரைலின் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பின்பு அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியலடிப்படையில் விளங்கிக்கொள்ள உதவுமுகமாக நான் ஒரு ஆக்கத்தை எழுதினேன். அதற்குக் காரணம் ரைல், ‘விசுவாசத்தைக் கொண்டிருந்தும் முழு நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் ஒருவர் பரலோகத்தை அடைந்துவிடலாம்’ என்று விளக்கியிருப்பதுதான். அது 1689 விசுவாச அறிக்கையும் (அதி. 18) அளிக்கும் போதனை. இதைப் பியூரிட்டன் பெரியவர்கள் 17ம் நூற்றாண்டில் அதிகம் விளக்கிப் போதித்திருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளில் உருவான மாற்றங்கள் பாவம் மற்றும் இரட்சிப்பு பற்றிய போதனைகளை வேறு திக்கில் கொண்டுபோய் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனைகளை இருட்டடிப்புச் செய்துவிட்டன. என்னுடைய ஆக்கம் வேதபூர்மான பியூரிட்டன் பெரியவர்கள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையிலானது. இந்த இரு ஆக்கங்களையும் விளங்கிக்கொள்ளத் துணையாக 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரம் இதில் வந்திருக்கிறது.
அத்தோடு ஜெரமி வோக்கரின், ‘யார் மெய்யான கிறிஸ்தவன்?’ என்ற ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய ‘கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதியங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற நூலின் முக்கிய பாகத்தை அடிப்படையாக வைத்து தன்னுடைய ஆக்கத்தை ஜெரமி வோக்கர் எழுதியிருக்கிறார். கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் தவறாது வாசிக்கவேண்டிய கிறிஸ்தவ இலக்கியம் (Christian classic). அது இன்றும் ஆங்கிலத்தில் அச்சில் இருந்து ஆங்கிலமொழி அறிந்த விசுவாசிகளுக்கு பயனளித்து வருகிறது. தவறான மருந்தைக் குடித்துக் கலங்கிப் போயிருக்கிற வியாதியஸ்தனுக்கு நல்ல வைத்தியமளித்தால் அவனுக்குப் புத்துயிர் ஏற்படுவதுபோல், கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் கிறிஸ்தவம் என்ற பெயரில் போலித்தனமாக பவனிவரும் மாயமானின் கையில் அகப்பட்டு ஆவிக்குரிய சிக்கலுக்குள்ளாகியிருக்கிறவர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் ஆவிக்குரிய அரிய மருந்து. அதை வாசிக்க வசதியில்லாதவர்களுக்கு ஜெரமி வோக்கரின் ஆக்கம் ஓர் அன்பளிப்பு.
ஜெரமி வோக்கரின் ஆக்கத்தில் காணப்படும் ஒரு வேதபூர்வமான இறையியல் விளக்கம் உங்கள் சிந்தனையில் குழப்பத்தை உண்டு பண்ணிவிடக்கூடாது என்பதற்காக பரிசுத்த ஆவியானவரின் கிரியையான பாவ உணர்த்துதலைப் பற்றி (Conviction of sin) விளக்கும் ஓர் ஆக்கத்தை எழுத ஆரம்பித்தேன். அது மிக அவசியமானது என்பதை எழுதி முடித்த பின்பே உணர்ந்தேன். பாவத்தை உணராமல் இரட்சிப்பை அடைய முடியாது என்றாலும் அதுவே இரட்சிப்புக்கு அடையாளமாகிவிடாது என்பதை இந்த ஆக்கம் விளக்குகிறது. ஒருவர் இரட்சிப்பை அடைவதில் பாவத்தை உணர்தலின் பங்கு என்ன என்பதை வேதரீதியில் விளக்குவதாக இந்த ஆக்கம் அமைந்திருக்கிறது. பலருடைய இருதயத்திலும் காணப்படும் இரட்சிப்பு பற்றிய சந்தேகங்கள் நீங்க இந்த இரு ஆக்கங்களும் உதவும் என்று நம்புகிறேன்.
மொத்தத்தில் இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் இரண்டு முக்கிய வினாக்களுக்கு விடையளிக்கின்றன.
இரட்சிப்படைவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
இரட்சிப்படைந்திருக்கிறேன் என்பதை நான் எப்படி அறிந்துகொள்ளுவது?
இவை இரண்டும் தனித்துவம்கொண்ட வெவ்வேறான வினாக்கள். முதலாவது கேள்விக்குப் பதில் – பாவத்தில் இருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை இரட்சிப்புக்காக விசுவாசி என்பது. (அப்போ. 2:21). உன்னையும், உனக்குள்ளேயும் பார்த்துக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு இயேசுவை நோக்கிப் பார், அவருடைய சுவிசேஷத்தின்படி அவரை விசுவாசி என்பதுதான் இந்தக் கேள்விக்குப் பதில். இரண்டாவது கேள்விக்கு வித்தியாசமான பதில் அளிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதில், இரட்சிப்பை அடைவதற்காக நமக்களிக்கப்பட்டிருக்கும் கிருபையின் சாதனங்களில் தங்கியிருக்கவில்லை; கிறிஸ்துவோடு நமக்கிருக்கும் ஆவிக்குரிய உறவை நிரூபிக்கும் சான்றுகளில் தங்கியிருக்கிறது. இதற்கு பதில், ‘நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து கிறிஸ்துவுக்குள் இருக்கிறோமா என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்’ என்பதுதான். இந்த இரண்டாவது கேள்வியை அநேகர் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. பொதுவாக, கிறிஸ்தவர்கள் எல்லோருமே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே இதற்குப் பதிலாக அநேகர் வேதத்தில் இருந்து சில வசனங்களை எடுத்துக்காட்டி நம்மை நம்பவைக்கப் பார்ப்பார்கள். ஆனால், அதுவல்ல இதற்குப் பதில். கேள்வியைப் புரிந்துகொள்ளாததால் இந்நிலை ஏற்படுகிறது. இரண்டாவது கேள்வி, எப்படி இரட்ச்சிப்பை அடையலாம் என்பதல்ல; அது அடைந்திருக்கும் இரட்சிப்பின் நிச்சயம் பற்றியது. கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கின்றது. அதையே ஜெரமி வோக்கர் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். உண்மையில் இந்த இதழிலுள்ள ஆக்கங்கள் அனைத்துமே இந்த இரண்டு கேள்விகளுக்குத்தான் பதிலளிக்கின்றன.
இந்த இதழ் சிறிது சிறிதாக உருவாகி முழுமையடையும்போதே இதழ் முழுவதும் ஒரே சத்தியத்தை, அதோடு தொடர்புடைய பல அம்சங்களை விளக்கும் ஆக்கங்களைக் கொண்டு அமைந்திருப்பதை அவதானித்தேன். பரிசுத்த ஆவியானவரே இந்தவிதமாக வழிநடத்தி இதழ் முழுதும் இன்றைய காலகட்டத்தில் நம்மினத்துக்கு மிகவும் அவசியமான இரட்சிப்புப் பற்றிய போதனைகள் வரும்படியாகச் செய்திருப்பதை எண்ணி ஆச்சரியப்பட்டேன்; அவருக்கு நன்றி கூறினேன்.
இந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்களை வாசிக்கின்றபோது புதிய விஷயங்களை வாசிக்கிறோம் எனும் உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அதில் ஆச்சரியமில்லை. பொதுவாகவே இத்தகைய போதனைகள் நம்மினத்தில் அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தின் ஆழமான போதனைகள் இன்றும் மறைபொருளாக நம்மினத்தில் இருந்துவருகின்றன. மேலோட்டமாக எதையும் நுனிப்புல் மேய்வதுபோல் மேய்ந்துவிட்டுப் போய்விடுகிற காரணத்தால் வேதத்தில் இரத்தினக்கற்கள் போலப் பரவலாகக் காணப்படும் அரிய அவசியமான போதனைகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு பிரசங்கமேடைகள் வாக்குத்தத்த ஆசீர்வாத வசனங்களாலும், ஜெபத்தாலும் மட்டுமே நிரம்பி வழிகின்றன. பரலோகத்தை அடைவதற்கு அடிப்படைத் தேவையான மெய்ச்சுவிசேஷமும், இரட்சிப்பைப்பற்றிய போதனைகளையும்விட நமக்கு வேறென்ன தேவை?
இரட்சிப்பின் நிச்சயமாகிய போதனை பற்றிய விளக்கங்களும், மெய்க் கிறிஸ்தவத்தின் அடிப்படை அம்சங்களான சுவிசேஷம், மனந்திரும்புதல், விசுவாசம் ஆகிய கிருபைகள் பற்றிய விளக்கங்களும் உங்களுக்கு கிறிஸ்தவத்தைப் பற்றிய மேலும் தெளிவான வேதப்பார்வையைத் தந்து, கிறிஸ்தவ வாழ்க்கையை நீங்கள் கர்த்தரின் மகிமைக்காக நேர்மையான இருதயத்தோடும், பரிசுத்தத்தோடும், முழுநிச்சயத்தோடும் வாழத்துணைபுரியுமானால் அதைவிட மனமகிழ்ச்சி தரும் காரியம் பத்திரிகைக் குழுவினருக்குக் கிடையாது.