கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் –

இரட்சிப்பின் நிச்சயம் (Assurance of Salvation) என்ற வேதபோதனை பற்றி நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் எந்தளவுக்கு வேதஞானம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றிய விளக்கமான போதனைகள் பரவலாகக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். என்னுடைய போதகப் பணியில் ‘இரட்சிப்பின் நிச்சயம்’ குறித்து சந்தேகம் கொண்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘நான் உண்மையிலேயே இரட்சிப்பை அடைந்திருக்கிறேனா’ என்ற சந்தேகந்தான் அது. அந்த சந்தேகத்தோடேயே அநேக நாட்கள் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; ஆலோசனைகள் அளித்திருக்கிறேன்.

Beekeஇரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஞானம் கிறிஸ்தவர்களுக்கு மிக அவசியமானது. அது கிறிஸ்தவ அனுபவம். கிறிஸ்தவர் அல்லாதவர்களிடம் அதைக் காணமுடியாது. அதுபற்றி ஓர் ஆக்கத்தில் எழுதியிருக்கும் ஜொயல் பீக்கி எனும் சீர்திருத்தவாத போதகர், ‘இன்றைய தலைமுறையினரிடம் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை அதிகமாக இருப்பதல்ல பிரச்சனை; அது இருக்கிறதா என்று சந்தேகப்படும் விதத்தில் அருகிக் காணப்படுவதே பிரச்சனை’ என்று எழுதியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயமாகிய  அனுபவத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அதிகம் நாட வேண்டும் என்று கூறும் அவர், ‘அது இருக்கும்போதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர  முடியும், உயர முடியும்’ என்கிறார். ‘தங்களில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர்களே சிறுபிள்ளைகளுடைய இருதயத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்; எழுப்புதலுக்காக ஜெபிப்பார்கள்; இயேசு மத்தேயு 28ல் கொடுத்திருக்கும் கட்டளையை நிறைவேற்ற சுவிசேஷ வாஞ்சையோடும் ஊக்கத்தோடும் பாடுபடுவார்கள்; பரலோகத்தையும் தங்களுடைய வீடாக எண்ணி இவ்வுலகில் வாழ்வார்கள்’ என்றும் பீக்கி எழுதுகிறார் (Masters Journal, Spring 1994, Pgs 43-71). இந்தப் போதனை நம்மினத்தில் தெளிவாகப் போதிக்கப்படாததால் அதுபற்றி ஜே. சி. ரைல் எழுதிய ஓர் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு இந்த இதழில் வந்திருக்கிறது. அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியல் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ளுவதற்கு வசதியாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.

இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனை நம்மினத்தில் காணப்படாததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு.

முதலில், அந்தப் போதனை ஏனைய அடிப்படைப் போதனைகளைப் போல (பாவம், விசுவாசம், மனந்திரும்புதல், நீதிமானாக்குதல், பரிசுத்தமாக்குதல்) நேரடியாக, வெளிப்படையாக வேதத்தில் காணப் படவில்லை. அதாவது அது பலபகுதிகளில் பரவலாகக் காணப்பட்டபோதும் படித்து ஆராய்ந்து கண்டுகொள்ள வேண்டியவிதத்திலேயே காணப்படுகிறது. இறையியல் போதனைகளைத் தெளிவாக அறிந்திராதவர்களுக்கு இதுபற்றிய விளக்கமில்லாதிருப்பதில் ஆச்சரியமில்லை.

இரண்டாவதாக, சுவிசேஷ ஊழியம் வேத அடிப்படையில் அமையாமல், ஒருவன் விசுவாசிக்கிறேன் என்று சொன்னால் போதும் அதுபற்றி அவனை ஒரு கேள்வியும் கேட்கக்கூடாது என்றும், ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலே அவன் விசுவாசிதான் என்றும், விசுவாசிக்கிறவனும் தன்னுடைய விசுவாசத்தை ஒருபோதும் எந்தவிதத்திலும் சந்தேகிக்கக்கூடாது என்றும் விளக்குகின்ற அரைகுறை சுவிசேஷ ஊழியம் பலகாலமாக நம்மினத்தில் காணப்படுவதால் ‘விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ (1 கொரி 11:28 – ‘தன்னைத்தானே சோதித்தறிந்து’) என்ற பரிசுத்த வாழ்க்கைக்கு அவசியமான வேதபோதனைக்கே இடமில்லாமல் போய் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில்  அரைகுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை வாழும் கூட்டமே இன்று நம்மினத்தில்  பெருகிக் காணப்படுகிறது. இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை யொன்றிருக்கிறதே என்ற உணர்வுகூட இன்றைக்கு அநேகருக்கு இல்லை. கிறிஸ்தவம் என்ற பெயரில் காணப்படும் இத்தகைய தவறான சுவிசேஷ  ஊழியத்தை மேலைநாடுகளில் Easy believism என்று அழைப்பார்கள்.

மூன்றாவதாக, உணர்ச்சிக்கு மட்டும் இடங்கொடுத்து இறையியலைத் துவம்சம் செய்திருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவம் இன்றைக்கு நாம் ‘எதை விசுவாசிக்க வேண்டும்’ என்பதில் அக்கறை காட்டாமல், ‘எந்தளவுக்கு அதிக உணர்ச்சிவசப்படவேண்டும்’ என்பதில் மூழ்கிப்போயிருக்கும் ஒருவித கிறிஸ்தவத்தை வளர்த்துவிட்டிருக்கிறது. இந்தக் ‘கிறிஸ்தவத்தில்’ இரட்சிப்பின் நிச்சயத்துக்கு இடமில்லை. பரிசுத்தமான வாழ்க்கையின் மூலம் வரும் இரட்சிப்பின் நிச்சயத்தை அறியாமல் வெறும் உணர்ச்சிவசப்படும் நிலையை மட்டும் விசுவாசத்தின் ஆழத்துக்கு அறிகுறியாக எண்ணும் மாயத்தோற்றத்தை அது உருவாக்கிவிட்டிருக்கிறது.

நான்காவதாக, விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றே என்ற தவறான எண்ணம் பொதுவாகப் பரவலாக இருந்து இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய தெளிவான போதனைகளுக்கு நம்மினத்தில் இடமில்லாமல் செய்திருக்கிறது.

பதினாறாம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பித்தபோது இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை முக்கியத்துவம் பெற்றது. ஏனெனில், கத்தோலிக்க மதம் ஒரு விசுவாசி எந்தவிதத்திலும் இரட்சிப்பின் நிச்சயத்தை வாழ்க்கையில் கொண்டிருப்பது ஆபத்தானது என்று அதை நிராகரித்தது. அத்தகைய நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர் வீணான நம்பிக்கையைக் கொண்டிருந்து கிறிஸ்தவ வாழ்க்கையை உலகரீதியில் வாழ்ந்துவிடக்கூடும் என்று அது போதித்தது. அத்தோடு கிறிஸ்தவர்களில் மிகச் சிறந்த சிலர் மட்டுமே அத்தகைய நிச்சயத்தை அனுபவிக்க முடியும் என்றும், அதை அவர்கள் கடவுளிடமிருந்து கிடைக்கும் விசேஷமானதொரு வெளிப்படுத்தல் மூலம் மட்டுமே அடையலாம் என்றும் விளக்கியது. கத்தோலிக்க மதத்தின் இத்தகைய தவறான விளக்கங்களால் சீர்திருத்தவாதிகளான ஜோன் கல்வின் போன்றோர் இரட்சிப்பின் நிச்சயத்தைக்குறித்து வேதபூர்வமான போதனைகளை, வேதத்தை ஆராய்ந்து அளிப்பதில் தீவிரமாயிருந்தார்கள். இதுபற்றிய கல்வினின் போதனைகளை கத்தோலிக்க மதப்போதனைகளின் பின்புலத்தின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும்.

தவறான போதனைகளில் இருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கவும், வேதரீதியிலான போதனைகளை அளிக்கவுமே பதினேழாம் நூற்றாண்டில் விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் எழுத்தில் வடிக்கப்பட்டு திருச்சபைகளுக்கு உதவின. 1689 விசுவாச அறிக்கையில் அதன் 18ம் அதிகாரம் இரட்சிப்பின் நிச்சயத்தை நான்கு பத்திகளில் அருமையாக விளக்குகிறது. அதன் போதனையைப் புரிந்துகொள்ளுவதற்கு அதற்குப் பின்புலமாக இருந்த வரலாற்று சம்பவங்களையும், வரலாற்றில் உருவாகியிருந்த இறையியல் போதனைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். அது பற்றி இந்த ஆக்கத்தில் சுருக்கமாக விளக்கப் போகிறேன்.

இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனையை விளங்கிக்கொள்ள நாம் விசுவாசம் என்றால் என்ன? இரட்சிப்பின் நிச்சயம் என்றால் என்ன? என்பதையும், அவை இரண்டிற்கும் இடையிலிருக்கும் தொடர்பையும் முறையாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறார். நம்மினத்தில் அநேகருக்கு விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் உறவோ, வேறுபாடோ சரியாகத் தெரியாமல் இருக்கிறது. விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றுதான் என்றளவில் மேலெழுந்தவாரியாக இவற்றைப் பற்றிய எண்ணங்களையே பெரும்பாலானோர் கொண்டிருக்கிறார்கள்.

(1) முதலில், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசமும், வளரக்கூடிய இரட்சிப்பின் நிச்சயமும் ஒன்றல்ல. ஒன்றிற்கான இன்னொரு பெயர் அல்ல மற்றது. இரண்டும் வெவ்வேறானவை; தனித்துவமானவை. இதை சீர்திருத்த விசுவாச இறையியலறிஞர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்; அதுதான் வேத உண்மையும்கூட. இரட்சிக்கும் விசுவாசமாகிய கிருபையில் கிறிஸ்துவில் இருக்கவேண்டிய அடிப்படை ஆரம்ப நம்பிக்கையானது உள்ளடங்கியிருந்தபோதும் ஒருவரது தனிப்பட்ட இரட்சிப்பின் நிச்சயம் அந்த விசுவாசத்தின் தன்மையில் அடங்கியிருக்கவில்லை. விசுவாசமிருந்து இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருக்கலாம்.

(2) அடுத்ததாக, விசுவாசத்திற்கும் இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவிருக்கிறது. ஜோன் கல்வினில் இருந்து எல்லா சீர்திருத்த அறிஞர்களும் இதைப்போதித்து வந்திருக்கிறார்கள். விசுவாசத்தை  அடைகின்ற ஒருவர் அது தருகின்ற அத்தனை ஆவிக்குரிய கிருபையின் ஆசீர்வாதங்களுக்கும், ஒன்று தவறாமல், சொந்தக்காரராகிறார். அவற்றில்  ஒன்று இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசத்தின் கனியே இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசமில்லாமல் இரட்சிப்பின் நிச்சயம் இருக்க வழியில்லை. விசுவாசத்தை அடிப்படையாகக்கொண்டு அதில் இருந்து வளருவதே இரட்சிப்பின் நிச்சயம் என்று பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘விசுவாசம், காலம் செல்லச்செல்லத் தானே வளர்ந்து உயர்ந்து இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்.’

(3) கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைந்த உடனேயே ஒரு புது விசுவாசிக்கு இரட்சிப்பின் நிச்சயம் உயர்ந்தளவில் இருந்துவிடலாம். அத்தகைய அனுபவத்தை பிலிப்பி பட்டணத்து சிறை அதிகாரி அடைந்ததால்தான் அவனால் இரட்சிப்பை அடைந்தவுடனேயே விசுவாசமுள்ளவனாகி ‘மனமகிழ்ச்சியோடு’ இருக்க முடிந்தது (அப்போ 16:34). விசுவாசமே அந்தச் சிறை அதிகாரி இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய வழிகோலியது. இருந்தபோதும் விசுவாசத்தை அடைந்த எல்லோருக்குமே ஆரம்பத்தில் இரட்சிப்பின் நிச்சயம் உடனடியாக இருந்துவிடாது; அப்படி இருந்துவிடவேண்டுமென்ற அவசியமுமில்லை. ஏனெனில் இயேசுவில் வைக்கும் விசுவாசம் மட்டுமே இரட்சிப்புக்கு அவசியமானது; இரட்சிப்பின் நிச்சயமல்ல. வேதம் இரட்சிப்பிற்கு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. விசுவாசம் இரட்சிப்பைத் தருகிறது; இரட்சிப்பின் நிச்சயம் நம்மை விசுவாச வாழ்க்கையில் வளரவும் உயரவும் வைக்கிறது. இரண்டும் ஒரேநேரத்தில் ஒரு விசுவாசியிடம் இருந்துவிடாது. இதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் மூன்றாவது பத்தியில் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். ரைலும் தன் ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

(4) விசுவாசத்தைப் பற்றியும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றியும் இதுவரை சொன்னவைகள் மிக முக்கியமான உண்மைகள். இருந்தபோதும் பதினேழாம் நூற்றாண்டு பியூரிட்டன்கள் இரட்சிப்பின் நிச்சயம் பற்றி மேலும் தெளிவான விளக்கங்களை அளித்தார்கள். அந்த விளக்கங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை இன்னும் அதிகமாக விளங்கிக்கொள்ள உதவுகின்றன. பியூரிட்டன் பெரியவர்களின் விளக்கங்கள் கல்வினின் போதனைகளை ஒத்திருந்தபோதும் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர்கள் இன்னொரு கோணத்தில் பார்த்து விளக்கமளித்திருக்கிறார்கள். அதில்  இருபகுதிகள் காணப்படுவதாக விளக்கினார்கள். இப்படி விளக்கமளிப்பதன் மூலம் அதன் மெய்த்தன்மையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.

இதை நாம் 1689 விசுவாச அறிக்கையின் 3ம் பத்தியில் கவனிக்கிறோம். அந்தப் பத்தி பின்வருமாறு ஆரம்பிக்கின்றது, ‘இத்தவறிழையாத (நிச்சயமான,  உறுதிப்படுத்தப்பட்ட, விழுந்துவிடாத) இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல’ என்று அது விளக்குகிறது. விசுவாச அறிக்கையின் இந்த விளக்கத்தை நாம் குழப்பமில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். இரட்சிப்பு கிடைக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்துக்கு அத்திவாரம் போடப்படுவதில்லை என்பதல்ல இதன் விளக்கம். ஒருவர் இரட்சிப்பை அடைகின்றபோது அந்தவேளையில் இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்றே பியூரிட்டன் பெரியவர்கள் இங்கு எழுதியிருக்கிறார்கள். விசுவாசம் இரட்சிப்பின் நிச்சயத்தை அடைய உதவுகின்றபோதும் நடைமுறையில் அதை அனுபவபூர்வமாக ஒரு விசுவாசி உணராமல் இருந்துவிடலாம் என்றுதான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதற்கான காரணத்தையும் அவர்கள் இந்தப் பத்தியில் தந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் நிகழும் சோதனைகளாலும், கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுவதாலும், உலக நேசத்தாலும், பாவத்தைச் செய்துவிடுவதாலும், வேறு பல அம்சங்களாலும் ஒருவர் கிறிஸ்துவில் விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாமலோ, அதைக் குறைந்தளவிலோ கொண்டிருக்கலாம் என்று அவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

பியூரிட்டன் பெரியவர்களின் இத்தகைய விளக்கத்துக்குக்கான காரணத்தைப் பார்ப்போம். முதலில் 1689 விசுவாச அறிக்கையின் பதினெட்டாம் அதிகாரத்தின் மூன்றாம் பத்தியில் அவர்கள் இந்த விஷயத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனையை சிதறடித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பின் நிச்சயத்தை விசுவாசிகள் சிறப்பான வெளிப்பாடுகள் எதுவுமின்றி சாதாரண கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுவதன் மூலம் அடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும் விளக்கியிருக்கிறார்கள். அத்தோடு இரட்சிப்பின் நிச்சயத்தை ஒவ்வொரு விசுவாசியும் அவசியம் நாடி வாழவேண்டும் என்று அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். அதை நாடுவதற்கு கிறிஸ்தவர்கள் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் உண்மையாக இருந்தபோதும் பியூரிட்டன் பெரியவர்கள், ஒருவர் விசுவாசத்தை அடைந்தும் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவத்தில் உணராது இருந்துவிடலாம் என்று சொன்னதற்கு இறையியல் காரணமுண்டு.

அவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை இரண்டுவிதமாகப் பார்க்கிறார்கள் (objective and subjective). முதலாவதாக, அதை அடிப்படையிலேயே கிறிஸ்தவ விசுவாசத்தோடு தொடர்புடைய கிருபையாகப் பார்க்கிறார்கள். இரண்டாவதாக, அது இருப்பதை விசுவாசி அனுபவத்தில் உள்ளரங்கமாக உணராமல் (conscious presence of assurance) இருந்துவிடலாம் என்கிறார்கள். முதலாவது, விசுவாசி கர்த்தரை அறிந்திருப்பதைப் பற்றிய உண்மை; இரண்டாவது அவன் தான் கர்த்தரால் அறியப்பட்டிருப்பதை உள்ளரங்கமாக உணர்ந்திருப்பதைப் பற்றிய உண்மை. முதலாவதை அறியும் தகுதியை ஒரு விசுவாசி நிச்சயம் கொண்டிருப்பார்; இருந்தும் இரண்டாவதை அவர் நடைமுறையில் உணராமல் இருந்துவிடலாம். விசுவாசத்தோடு இணைந்திருக்கும் இரட்சிப்பின் கிருபையை உணரக்கூடிய நிலையில் விசுவாசி இருந்தபோதும் வாழ்க்கையில் அதை உள்ளரங்கமாக உணராது இருந்துவிடலாம் என்பதே பியூரிட்டன் பெரியவர்களின் போதனை. ஒருவர் அதை உணராது இருந்துவிடுவதால் அவர் கிறிஸ்தவரல்ல என்று ஆகிவிடாது. அதை அதிகளவில் உணர்ந்து வாழ முயற்சிசெய்வது அவருடைய கடமை. ‘சகோதரரே, உங்கள் அன்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; . . .’ (2 பேதுரு 1:10) என்று பேதுரு எழுதியிருப்பது இரட்சிப்பின் நிச்சயத்தை அடையும்படி நாம் முழுமுயற்சி எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். கிறிஸ்தவன் அதை உணராதிருப்பதற்குக் காரணம், ஊக்கத்தோடு கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்தி கர்த்தரோடு ஐக்கியத்தில் ஆழமான உறவில்லாமல் இருந்துவிடுவதாலேயே. இந்த உண்மையைப் பல பகுதிகளில் வேதம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு புதுக் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ விசுவாசம் பற்றிய ஞானம் அதிகம் இல்லாதிருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உணராதிருந்துவிடலாம். ஒரு விசுவாசிக்கு கர்த்தரோடிருக்க வேண்டிய ஐக்கியம் தளர்ந்திருக்கும்போது இரட்சிப்பின் நிச்சயத்தை அவர் உயர்ந்தளவில் கொண்டிருக்க முடியாதுதான். அதைத்தான் பியூரிட்டன் பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். இதையே ஜே. சி. ரைலும் தன்னுடைய ஆக்கத்தில் விளக்கியிருக்கிறார். தான் பாவத்தைச் செய்து அதற்காக வருந்தி ஜெபித்தபோது விசுவாசியான தாவீது தன்னில் பரிசுத்த ஆவியே இல்லாததுபோல் உணர்ந்து ஜெபிக்கவில்லையா (சங் 51). சங்கீதத்தின் பல பகுதிகளில் இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்த சங்கீதக்காரனின் குரலைக் கேட்கிறோம் (38; 73; 88). அதற்குக் காரணம் அந்த நிலையில் அவனில்  இரட்சிப்பின் நிச்சயம் (assurance) மிகத்தாழ்ந்த நிலையில் இருந்ததுதான். அதேநேரம் பவுல், ‘ஆயினும் நான் வெட்கப்படுகிறதில்லை, ஏனென்றால், நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்’ (2 தீமோ 1:12) என்று ஆணித்தரமாக உறுதியாகச் சொல்லவில்லையா? அதற்குக் காரணம் அவ்வேளையில் பவுலில் இரட்சிப்பின் நிச்சயம் உறுதியாக உயர்ந்த நிலையில் இருந்ததுதான். இந்த உள்ளரங்கமான உணர்வுப்பூர்வமான அனுபவம் கிறிஸ்தவர்களில் அவர்கள் இருக்கின்ற ஆவிக்குரிய நிலைக்குத்தக்கதாக வாழ்நாளில் மாறி மாறிக் காணப்படும் (1689 வி. அ, 18:4).

இரட்சிப்பின் நிச்சயத்துவத்தை அனுபவத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊக்குவிப்பதற்காகத்தான் யோவான் தன்னுடைய நிருபங்களை அதைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு எழுதினார்.  ‘உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்’ என்று யோவான் (1 யோவான் 1:4) எழுதுகிறார். ‘என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்’ (யோபு 19:25) என்று யோபு சொன்னது வெறும் அறிவு சார்ந்த உண்மையல்ல; அது தொல்லைகளின் மத்தியில் அவருடைய இரட்சிப்பின் நிச்சயம் எந்தளவுக்கு உயர்வான நிலையில் இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. நீங்கள் ‘சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கின்ற சந்தோஷமுள்ளவர்களாய் களிகூர்ந்து’ (1 பேதுரு 1:6-9) காணப்படுகிறீர்கள் என்று பேதுரு சொல்லுவது இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிப்பவர்களைப் பார்த்துத்தான். அத்தகைய இரட்சிப்பின் நிச்சயத்தை ஊக்கத்தோடு நாட முயலும்படியே எபிரெயருக்கு எழுதியவரும் சொல்லுகிறார், ‘. . . தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும் . . . , சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் (பரிசுத்தஸ்தலத்தில்) சேரக்கடவோம் (எபிரெயர் 10:19-22).

கிறிஸ்தவ வாழ்க்கையை உருவகமாக எழுத்தில் வடித்து விளக்குகின்ற ஜோன் பனியன் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றித் தன்னுடைய மோட்சப் பயணம் நூலில் விளக்கியிருக்கிறார். மோட்ச வாயிலை அடைவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு கிறிஸ்தியானுக்கு இரட்சிப்பின் நிச்சயம் இருக்கவில்லை. அவனுடைய உள்ளத்தில் பல குழப்பங்கள் இருந்தன (193ம் பக்கம்). நன்னம்பிக்கை அவனுக்கு வேத வார்த்தைகளை நினைவூட்டி தைரியப்படுத்துகிறான். சோதனைகள் வந்திருக்கின்றன என்பதால் ஆண்டவர் உன்னைக் கைவிட்டுவிட்டார் என்று அர்த்தமல்ல என்று சொல்லி ஆறுதல் கூறுகிறான். அதற்குப் பிறகு கிறிஸ்தியானுக்கு மனத்துணிவு வருகிறது. இருவரும் மோட்ச வாயிலுக்குள் நுழைகிறார்கள். பியூரிட்டன் பாப்திஸ்தாக இருந்த பனியன் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய இந்த உண்மையைத்தான் விளக்கியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயம் இல்லாதிருந்தபோதும் கிறிஸ்தியான் மெய்விசுவாசிதான் அவனுடைய விசுவாசமே அவனைக் கரைசேர்த்தது. கிறிஸ்துவில் வைக்கும் உறுதியான விசுவாசமே ஒருவரை பரலோகத்துக்கு கொண்டு சேர்க்கிறது. அந்த விசுவாசம் கிறிஸ்தியானுக்கு சந்தேகமில்லாமல் இருந்தது.

விசுவாசமிருந்தும் ஒருவர் இரட்சிப்பின் பூரண நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் பரலோகத்தை அடைந்துவிடலாம். இதை ரைல் தன்னுடைய ஆக்கத்தில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதையும் நாம் குழப்பில்லாமல் விளங்கிக்கொள்ள வேண்டும். பரலோகம் அடைய விசுவாசமே தேவை. அந்த விசுவாசத்தைக் கொண்டிருந்தும் இவ்வுலகில் கிறிஸ்தவர்கள் இரட்சிப்பின் நிச்சயத்தை எப்போதுமே பெரியளவில் கொண்டிருப்பதில்லை. அது சில சூழ்நிலைகளுக்கும், அவர்களுடைய பரிசுத்த வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் ஏற்றவகையில் தாழ்ந்தும், உயர்ந்தும் காணப்படும். கிறிஸ்தவனின் வாழ்க்கையில் இரட்சிப்புபற்றிய சந்தேகங்களும், கேள்விகளும் எழாமலிருக்காது. அத்தகைய நிலை ஏற்படுவது கிறிஸ்தவ வாழ்க்கையில் சகஜம். பாவ சரீரத்தை சுமந்து இந்த உலகில் வாழ்கிறவரை இங்கு பூரண விசுவாசத்துக்கும், பூரண இரட்சிப்பின் நிச்சயத்துக்கும் இடமில்லை (ரோமர் 7). அதனால் விசுவாசம் உறுதியாக இருந்தும் இரட்சிப்பின் நிச்சயம் மரணத்தருவாயில் ஒருவருக்கு முழுதாக இல்லாமல் இருந்துவிடலாம். இரட்சிப்பின் நிச்சயத்தை நாடி வாழ்ந்து வளர வேண்டியது விசுவாசியின் கடமை. விசுவாசி அதை வாழ்க்கையில் பல நிலைகளில் கொண்டிருப்பது அவனுடைய விசுவாசத்தோடு சம்பந்தப்பட்ட அனுபவமே. இதை ரைல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

இரட்சிப்பின் நிச்சயம் ஒருவரில் உயர்ந்தளவில் இருக்கும்போது எப்படி இருக்கும் என்று சில ஆவிக்குரிய பெரியவர்கள் விளக்கியிருக்கிறார்கள். பியூரிட்டன் பெரியவரான தொமஸ் வொட்சன் சொல்லுகிறார், ‘அது ஒரு மனிதன் பரலோகத்தை அடையுமுன்பே அதை இவ்வுலகில் அடையச் செய்கிறது.’ இன்னொரு பெரியவரான தொமஸ் புரூக்ஸ் சொல்லுகிறார், ‘கிருபையின் ஸ்தானம் ஒருவருக்கு பரலோகத்தை அடையும் தகுதியை அளிக்கிறது; அந்த நிலையில் அம்மனிதன் தன்னை உணரும்போதும் அவன் பரலோகத்தை அடையும் தகுதியை மட்டுமல்லாமல் பரலோகத்தை இங்கேயே கொண்டிருக்கிறான்.’

முடிவாக . . .

இன்று இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய தெளிவான போதனைகள் நம்மினத்தில் மிகவும் அவசியம். கிறிஸ்துவை விசுவாசித்து வாழுகின்ற வாழ்க்கையைப் பற்றிய தவறான போதனைகள் நம்மினத்தை சிலந்திவலைபோல் சுற்றி ஆக்கிரமித்திருக்கின்றன. கிறிஸ்தவ விசுவாசத்தைப் பற்றிய அடிப்படைப் போதனைகளையே போதகர்கள் அறியாதவர்களாக இருந்துவருகிறார்கள். பரிசுத்தமாக்குதலாகிய வேத சத்தியத்தைப் பற்றி அவர்களுக்குப் பெரிதும் தெரியாதிருக்கிறது. இத்தகைய இறையியல் தெளிவற்ற குழப்பநிலை நடைமுறையில் கிறிஸ்தவத்தைத் தாழ்ந்த நிலையில் வைத்திருக்கிறது. போலித்தனமான உணர்ச்சிவசப்படும் செயல்களைச் செய்து அவற்றை ஆவிக்குரிய அனுபவமாகத் தவறாக எண்ணி மெய்யான ஆவிக்குரிய வல்லமையில்லாது கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் நம்மினத்தில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வருகிறவர்களுக்கு இன்று  பரிசுத்தமாக்குதல், பற்றியும் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனையும் அவசியம். உண்மையான ஆவிக்குரிய அனுபவத்தையும், இரட்சிப்பின் நிச்சயத்தையும் நாடாமல் உலகத்தைச் சார்ந்து அவர்கள்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்களில் பெரும்பாலானோர் ஆவிக்குரிய அனுபவமே இல்லாது இருந்து அது இருப்பதாகத் தவறாக எண்ணி வாழ்ந்து வரலாம். அந்த ஆபத்தையும் 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரத்தின் முதல் பத்தி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மெய்விசுவாசிகள் ஆவிக்குரிய அனுபவத்தில் இரட்சிப்பின் நிச்சயத்தின் உயர்ந்த நிலையை இந்த உலகத்தில் அடைய முடியும் என்று வேதமும், 1689 விசுவாச அறிக்கையும் சொல்லுகின்றன. அது நிரந்தரமாக ஒரே நிலையில் எப்போதும் இருந்துவிடாது. அதை உணராது ஒரு கிறிஸ்தவன் இருந்துவிடலாம் என்று ரைல் சுட்டிக்காட்டுகிறார். அந்தவொரு காரணத்துக்காகவே ஒவ்வொரு கிறிஸ்தவனும் இரட்சிப்பின் நிச்சயத்தை முழுதும் அடைந்து வாழ வேண்டும் என்ற வாஞ்சையோடு ஆவிக்குரிய சாதனங்களனைத்தையும் விசுவாசத்தோடும், கருத்தோடும், ஜெபத்தோடும் பயன்படுத்த வேண்டும். பரிசுத்தவானின் விடாமுயற்சி இதற்கு அவசியம். பரிசுத்தவான்களின் விடாமுயற்சியில்லாமல் (1689:17) இரட்சிப்பின் நிச்சயத்தை (1689:18) நினைத்துப் பார்க்க முடியாது. அதனால்தான் இந்த இரண்டும் அடுத்தடுத்து விசுவாச அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இரட்சிப்பின் நிச்சயம் ஆவியானவர் நம்மில் ஏற்படுத்தும் அனுபவம். அவரில்லாமல் அது கிடைக்காது. கிறிஸ்தவன் அதை அடைவதற்காகச் செய்யும் முயற்சிகளில் ஆவியின் துணையோடுதான் ஈடுபடுகிறான். இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ்வதைவிட ஒரு கிறிஸ்தவனுக்கு வேறு என்ன தேவை? ஆனால், அதை அறியாது நம்மினத்துக் கிறிஸ்தவம் மாயமானைத் தேடுவதுபோல் எதையெல்லாமோ நாடி ஓடித் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறதே. இரட்சிப்பின் நிச்சயத்தோடு வாழ முயலுங்கள். அதைத்தான் கர்த்தரும் எதிர்பார்க்கிறார். ரைலின் ஆக்கம் உங்களுக்கு உதவட்டும்.

வாசகர்களின் நலன் கருதி விசுவாச அறிக்கையிலுள்ள (18 வது அதிகாரம்) “கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும்” என்ற அதிகாரத்தின் பகுதியை அப்படியே இங்குத் தந்திருக்கிறேன்.

1689 விசுவாச அறிக்கை – கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் (The Assurance of Grace and Salvation)

தாம் இரட்சிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுளின் தயவு தம்மோடு இருப்பதாகவும் தற்காலிக விசுவாசிகளும், மறுபிறப்பு அடையாதவர்களும் தவறான நம்பிக்கையையும், மாம்சத்திற்குரிய ஊக்கத்தையும் கொண்டிருந்தாலும் அத்தகைய நம்பிக்கைகள் இறுதியில் வீண்போகும். இருப்பினும், இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து, உண்மையுடன் அவரில் அன்பு செலுத்தி, நல்மனச்சாட்சியுடன் அவருக்காக வாழ்பவர்களின் இவ்வுலக வாழ்வில் தாம் கிருபையின் ஸ்தானத்தில் இருக்கும் நிச்சயத்தை அடைவர். அவர்கள் தேவ மகிமையின் நம்பிக்கையிலும் மகிழ்ச்சி அடைவார்கள். அத்தகைய நம்பிக்கை அவர்களை ஒருபோதும் அவமானத்திற்குள்ளாக்காது.

யோபு 8:13,14; மத்தேயு 7:22,23; ரோமர் 5:2,5; 1 யோவான் 2:3; 3:14,18,19,21,24; 5:13.

இரட்சிப்பின் நிச்சயமானது ஊகத்திற்கிடமானதோ அல்லது தவறும் இயல்புடைய நம்பிக்கையில் அமைந்ததோ அல்ல. ஆனால், அது நற்செய்தியில் வெளிப்படுத்தப்படும் கிறிஸ்துவின் இரத்தத்தையும், நீதியையும் ஆதாரமாகக் கொண்ட தவறிழைக்காத விசுவாசத்தின் நிச்சயமாக இருக்கிறது. (இது கிறிஸ்துவின் வரலாற்று நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டது). அத்தோடு, இது பரிசுத்த ஆவியின் உள்ளான கிருபையின் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டது. ஏனெனில், அவ்வித கிருபைகளுக்கே கடவுள் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார். மேலும் இது நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோமென்று நம்முடைய ஆவியினூடாக சாட்சியளிப்பதோடு, இரட்சிப்பின் நிச்சயமான அனுபவத்தின் மூலம் நமது இருதயத்தைத் தாழ்மையுடனும் பரிசுத்தமாகவும் வைத்திருக்கும் புத்திர சுவிகார ஆவியின் சாட்சியையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.

ரோமர் 8:15,16; எபிரெயர் 6:11,17-19; 2 பேதுரு 1:4,5,10,11; 1 யோவான் 3:1-3

இத்தவறிழையாத இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும். அற்புதமான வெளிப்படுத்தல் எதன் மூலமாகவும் அல்லாமல் கடவுளால் இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை ஆவியின் மூலமாக அறிந்து கிருபையின் சாதனங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்நிச்சயத்தை விசுவாசி அடைய முடியும். ஆகவே, தனது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கிக்கொள்ளுவதில் முழுமுயற்சி எடுப்பது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாக இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் பரிசுத்த ஆவியின் மேலான சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதோடு, கடவுளிடம் மேலான அன்பையும் நன்றியறிதலையும் கொண்டு கடமையுணர்வுடைய தமது கீழ்ப்படிவில் உற்சாகமும் அதிக வல்லமையும் பெறுகிறார்கள். மேற்கூறப்பட்டவையே இரட்சிப்பின் நிச்சயத்துவத்தினால் ஏற்படுபவையாக இருப்பதோடு மனிதர்கள் இழிவான வாழ்க்கை வாழ்வதற்கு இந்நிச்சயம் வழிகாட்டியாக இருக்கமாட்டாது என்பதற்கும் உறுதியான சான்றுகளாக உள்ளன.

சங்கீதம் 77:1-12; சங்கீதம் 88; 119:32; ஏசாயா 50:10; ரோமர் 5:1,2,5; 6:1,2; 14:17; தீத்து 2:11,12,14; எபிரெயர் 6:11,12; 1 யோவான் 4:13.

மெய்யான விசுவாசிகள் தமது இரட்சிப்பின் நிச்சயம் சில வேளைகளில் உயர்ந்தும், சில வேளைகளில் தாழ்ந்தும் இருப்பதை உணருவார்கள். இது அதனைப் பாதுகாப்பதில் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததனாலோ அல்லது அவர்கள் குறிப்பிட்ட ஒரு பாவத்தைச் செய்து தங்கள் மனச்சாட்சியைக் காயப்படுத்தி ஆவியைத் துக்கப்படுத்தியதாலோ அல்லது திடீரென்றோ தீவிரமாகவோ ஏற்பட்ட சோதனையாலோ அல்லது கடவுள் தமது முகதரிசனத்தை மீளப்பெற்றுக்கொண்டு தம்மில் பயமுள்ளவர்களின் மீது இருள்படியச் செய்வதாலோ ஏற்படலாம். எது நடந்த போதிலும் கடவுளால் பிறந்த புதிய சுபாவம், விசுவாச வாழ்க்கை, கிறிஸ்துவின் மீதும் சக விசுவாசிகளின் மீதும் உள்ள அன்பு, இதய சுத்தி மற்றும் கடமையுணர்வு ஆகிய இன்றியமையாத காரியங்கள் நிலைத்திருக்கும். இவற்றின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவர் அவர்களில் செய்யும் செயலின் மூலமாகவும் அவர்களது இரட்சிப்பின் நிச்சயம் ஏற்ற காலத்தில் புதுப்பிக்கப்படும். அதற்கிடைப்பட்ட காலத்தில் இந்தக் காரியங்களின் செல்வாக்குகள் அவர்கள் முற்றிலும் அழிந்து போகாவண்ணம் அவர்களைப் பாதுகாக்கின்றது.

சங்கீதம் 30:7; 31:22; 45:5,11; 51:8,12,14; 77:7,8; 116:11; உன்னதப்பாட்டு 5:2,3,6; புலம்பல் 3:26-31; லூக்கா 22:32; 1 யோவான் 3:9.

One thought on “கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் –

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s