திருமறைத்தீப எழுத்துப்பணி மூலம் ஆண்டவர் வழிநடத்திக் கற்றுத்தருகின்ற பாடங்கள் எத்தனையோ. இதழ் வெளியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. பலருடைய அன்போடுகூடிய வற்புறுத்தல் காரணமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அதில் எத்தனையெத்தனை பொறுப்புக்கள், சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் என்று முகங்கொடுத்த விஷயங்களுக்கெல்லாம் எல்லை இல்லை. முக்கியமாக இதழை ஒவ்வொரு தடவையும் கவனத்தோடு தயாரித்து, சரிபார்த்து அச்சிடுபவர்களுக்கு நேரத்தோடு அனுப்பிவைப்பதென்பது சாதாரணமான விஷயமல்ல. தொடர்ச்சியாக வருடாவருடம் சளிக்காமல், ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும், ஆவிக்குரிய சந்தோஷத்தோடும், சரியானபடி இதழின் தரம் எந்தவிதத்திலும் தேய்ந்துவிடாதபடி தயாரிப்பது என்பது இலகுவான செயலா? அனுபவம் பல விஷயங்களை இதில் கற்றுத்தந்திருக்கின்றது.
கடந்த சில வருடங்களாக இந்தப்பணியில் நல்ல ஆத்துமாக்கள் பங்குகொண்டு வெவ்வேறு விதங்களில் துணைபுரிந்து வருவதால் தனியொருவனாக உழைக்க வேண்டிய பாரம் குறைந்திருக்கிறது. அவர்களுடைய துணை பெரிது. நிச்சயம் அநேகர் இந்தப்பணிக்காக ஜெபித்து வருவது எங்களுக்குத் தெரிந்ததே. உங்கள் ஜெபத்தில் தளராதீர்கள்; தொடருங்கள். மொழி தெரியாதிருந்தும் இந்தப்பணிக்காக ஊக்கத்தோடு ஜெபித்தும், உதவியும் வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகம். ஒத்த கருத்தும், ஒரே விசுவாசமும், தேவ அன்பும், ஐக்கியமும் எங்களை இணைத்து இந்தப்பணியைத் தொடரச் செய்கிறது.
இந்த இதழைத் தயாரிக்க ஆவியானவரின் வழிநடத்துதல் அற்புதமாக இருந்தது. அதுபற்றி இந்த இதழின் இன்னொரு பக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இத்தனை வருடங்களாக ஒவ்வொரு இதழில் வரவேண்டிய விஷயங்களைக் காட்டித்தந்து ஊக்கத்தோடு எழுதவைத்து, வழிநடத்தி நாடு கடந்து எங்கெங்கோ வாழுகின்ற நெஞ்சங்களுக்கெல்லாம் ஆவிக்குரிய உணவைப் பரிமாறிக்கொண்டிருக்கும் நம்மாண்டவரின் கிருபையும், கருணையும் பெரிது. வெளிநாட்டுப் பிரயாணங்களின்போது இதழ் தங்கள் வாழ்க்கையில் செய்து வருகின்ற ஆவிக்குரிய காரியங்களை விசுவாச நெஞ்சங்கள் விளக்குகின்றபோது, அது இதழைத் தயாரிப்பதில் ஏற்படும் அத்தனைப் பாரங்களையும் பனிபோல் அகற்றி, கர்த்தருக்கே சகல மகிமையும் என்று தொடர்ந்து ஜெபத்தோடு இந்தப் பணியில் ஈடுபட வைக்கிறது. நன்றி! – ஆசிரியர்.