உங்கள் ஆத்துமாவைப் பற்றிய எந்தவித அக்கறையும் இல்லாமல், அசட்டையாக இருப்பீர்களானால் இந்த ஆக்கத்தில் கொடுக்கப்படும் போதனையை நீங்கள் சட்டை செய்ய மாட்டீர்கள். விசுவாசமும், இரட்சிப்பின் நிச்சயமும் உங்களுக்கு வெறும் வார்த்தைகளாக மட்டுமே தென்படும். வாழ்க்கையில் இவைகள் உங்களுக்கு அர்த்தமுள்ளவைகளாக இருக்காது. கலிலியோவைப்போல இவைகளைப்பற்றி எந்தக் கவலையும் கொண்டிருக்க மாட்டீர்கள். என்ன பரிதாபமான நிலையில் இருக்கிறது உங்களுடைய ஆத்துமா! உங்களை எண்ணி நான் கவலையடைகிறேன்.
வாசகர்களே, நீங்கள் பரலோகம் போக வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புவீர்களானால், அதை வேதப்பூர்வமான வழிகளில் தேடுவீர்களானால், இந்த ஆக்கத்திலுள்ள போதனைக்கு வேதத்தில் எவ்வளவு ஆழமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுகொள்வீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள்! உங்களுக்குண்டாகும் கிறிஸ்தவ ஆறுதலும், மனசாட்சிரீதியாக உங்களுக்குண்டாகும் சமாதானமும், நான் இந்த ஆக்கத்தில் விளக்குகிற விஷயத்தைக் குறித்த உங்களுடைய ஆழமான புரிந்துகொள்ளுதலைப் பொறுத்தே அமையும்.
இயேசுவை விசுவாசிப்பதும், இயேசுவினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்ற முழுமையான நிச்சயத்தைக் கொண்டிருப்பதும் இரண்டு தனித்துவமான போதனைகள் என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு மனிதன் கிறிஸ்துவில் இரட்சிக்கும் விசுவாசத்தைக் கொண்டிருந்தும், தன் வாழ்நாளில் ஒருபோதும் அதைப்பற்றிய நிச்சயத்தினால் உண்டாகும் நம்பிக்கையைப் பவுல் அனுபவித்ததைப்போல அனுபவிக்காமல் இருந்துவிடலாம். விசுவாசத்தை நம்மில் கொண்டிருந்து அதனால் உண்டாகும், கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மெல்லிய நம்பிக்கை ஒருரகம்; விசுவாசத்தில் ஆனந்தத்தையும் சமாதானத்தையும் கொண்டிருந்து, நம்பிக்கையில் மேலதிகமாக உயர்வது என்பது இன்னொரு ரகம். கடவுளின் பிள்ளைகள் அனைவருமே விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் எல்லோரும் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.
இந்த விஷயத்தைப்பற்றி சில சிறந்த மனிதர்களுக்கும், நல்ல மனிதர்களுக்கும் வித்தியாசமான அபிப்பிராயங்கள் இருந்திருக்கின்றன என்பதை நான் அறிவேன். நான் இங்குக் குறிப்பிட்டுள்ள இந்த வேறுபாட்டை அநேக சிறந்த தேவஊழியர்கள் கூட அனுமதிப்பதில்லை என்பதையும் நான் அறிவேன். இருந்தாலும் எந்த மனிதனும் இந்த விஷயத்தில் எனக்குத் தலைவனாக நான் பார்ப்பதில்லை. காயப்பட்டிருக்கும் ஒரு மனச்சாட்சிக்கு கொஞ்சமாவது மருந்திடும் விஷயம்பற்றி எல்லோரையும்போல எனக்கும் பயமிருக்கிறது. இருந்தபோதும் நான் கொடுத்திருக்கும் விளக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் கொடுப்பது சம்மதமில்லாததொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில் போய் முடியும். அதுமட்டுமல்லாமல் அத்தகைய விளக்கங்கள் ஓர் ஆத்துமா நித்திய ஜீவனின் வாசலை அடைவதை நீண்டகாலத்துக்கு தள்ளிவைத்து விடும்.
இரட்சிப்பின் நிச்சயத்தை முழுமையாக அனுபவித்திருக்காவிட்டால் கிறிஸ்துவோடு உனக்கு எந்தத்தொடர்பும் இருக்க முடியாது என்று ஒரு ஆத்துமாவை எண்ணவைக்கவோ, கடவுள் துன்பத்தை ஏற்படுத்தியிருக்காத ஒரு நொருங்குண்ட இருதயத்தை வருத்தப்படவைக்கவோ, துவண்டுபோயிருக்கிற கடவுளின் பிள்ளையை தளர்ந்துபோக வைக்கவோ நான் விரும்பமாட்டேன்.
ஒரு மனிதன் கிறிஸ்துவை நாடிவருவதற்கு கிருபையின் மூலம் போதுமான அளவுக்கு விசுவாசத்தைக் கொண்டிருக்கவும், அவரில் மெய்யாகவே தங்கியிருக்கவும், மெய்யாகவே நம்பிக்கை வைக்கவும், அவருடைய பிள்ளையாயிருக்கவும், இரட்சிப்பை அடையவும் கூடியவனாக இருக்கிறான் என்பதை சொல்லுவதற்கு நான் கொஞ்சவும் தயங்கமாட்டேன். இருந்தாலும் உயிர் துறக்கும் வரையிலும் அவன் தன் ஆத்துமாவில் சந்தேகங்களையும், பயத்தையும், கவலைகளையும் கொண்டிராமல் இருக்க மாட்டான்.
இதைப்பற்றி ஒரு பழைய எழுத்தாளர் சொல்லுகிறார், “ஒரு கடிதம் எழுதப்பட்டும் முத்திரையிடப்படாமல் இருக்கலாம். அதுபோல, ஒருவருடைய இருதயத்தில் கிருபையின் கிரியை காணப்படலாம்; ஆனால், பரிசுத்த ஆவியானவர் இரட்சிப்பின் நிச்சயமாகிய முத்திரையை இன்னும் பதிக்காமல் இருந்துவிடலாம்.”
ஒரு குழந்தை பெரும் சொத்துக்கு வாரிசாகப் பிறந்தும், தனக்கிருக்கின்ற செல்வத்தைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாமல், குழந்தைத்தனமாகவே வாழ்ந்து, குழந்தைத்தனமாகவே மரித்து, ஒருபோதும் தன்னுடைய நிலைமையின் அருமை பெருமைகளை உணராமலேயே இருந்துவிடலாம்.
அதுபோலவே, ஒரு மனிதன் கிறிஸ்துவின் குடும்பத்தில் குழந்தையாக இருந்து, குழந்தையைப் போல் சிந்தித்து, குழந்தையைப்போல் பேசி, இரட்சிப்பை அடைந்திருந்தும் அதன் உயிர்த்துடிப்புள்ள நம்பிக்கையை ஒருபோதும் அனுபவியாமலும் அதன் மூலம் தனக்குக் கிடைக்கிற ஆவிக்குரிய சொத்தின் ஆசீர்வாதங்களை அறியாமலும் இருந்துவிடலாம்.
ஒரு மனிதன் இரட்சிக்கப்பட இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிதாவை அடைய அதைவிட வேறுவழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்துவால் மட்டுமல்லாமல் வேறு வழிகளின் மூலம் கிருபை கிடைப்பதாக நான் அறிந்திருக்கவில்லை.
எந்த மனிதனும் தன் பாவத்தையும், சீரழிந்த நிலையையும் உணர்ந்து, மன்னிப்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் இயேசுவிடம் வந்து, அவரில் தங்கியிருந்து அவரில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும். இவ்விதமான விசுவாசத்தைக் கொண்டிருப்பவன், அந்த விசுவாசம் எத்தனை பெலவீனமானதாக இருந்தாலும் நிச்சயமாக பரலோகம் சென்றடைவான் என்று வேதம் போதிப்பதை நான் பல பகுதிகளில் இருந்து எடுத்துக்காட்டக்கூடியவனாக இருக்கிறேன்.
சமநிலையுடையதும், மகிமையானதுமான சுவிசேஷம் அளிக்கப் பட்டிருக்கும் தன்மையில் இருந்து அதை சுருக்கவோ, குறைக்கவோ முயலக்கூடாது. ஆணவமும், பாவத்தை நேசிக்கும் தன்மையும் ஏற்கனவே செய்திருப்பதற்கு மேலாக பரலோக வாசலைக் கடினமானதாக்கவோ, அதன் பாதையை இடுக்கமானதாக்கவோ முயலக்கூடாது. ஆண்டவராகிய இயேசு மிகுந்த இரக்கமும் கருணையுமுள்ளவர். அவர் விசுவாசத்தின் தன்மையைத்தவிர அதன் அளவைப் பொருட்படுத்துவதில்லை. அவர் அது எத்தனை சத்தியமானது என்பதைத் தவிர அதன் விகிதத்தை அளவிடுவதில்லை. அவர் காயப்பட்ட நாணலை முறிப்பதுமில்லை, புகைகிற சூளையை அவிப்பதுமில்லை. சிலுவையை நாடி வந்த எவரும் அழிந்துபோனார்கள் என்று சொல்வதற்கு அவர் அனுமதிப்பதில்லை. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார் (யோவான் 6:37).
ஆம் வாசகர்களே! ஒருவனின் விசுவாசம் கடுகு விதையளவு இருந்தாலும், அது அவனை இயேசுவிடம் கொண்டு வந்து அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொடச் செய்யுமானால் நிச்சயமாக அவன் இரட்சிக்கப்படுவான்; பரலோகத்தில் இருக்கும் மிக வயதான விசுவாசியைப்போலவே அவனும் இரட்சிப்படைவான், பேதுருவும் யோவானும் பவுலும் இரட்சிக்கப்பட்டது போலவே அவனும் இரட்சிக்கப்படுவான். பரிசுத்தமாகுதலின் அளவு ஒருவருக்கொருவர் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் நீதிமானாக்குதலில் அதற்கு இடமேயில்லை. எழுதப்பட்டது எழுதப்பட்டதுதான், ஒருபோதும் மாறாது. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ” என்றுதான் இருக்கிறதே தவிர “அவரை ஆழமாகவும் உறுதியாகவும் விசுவாசிக்கிறவன் எவனோ” என்றில்லை. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” (ரோமர் 10:11).
இதுவரையில் நீங்கள் கவனிக்கும்படி நான் சொல்லிவந்திருப்பது என்ன தெரியுமா? ஓர் ஆத்துமா கடவுள் தனக்கு அளித்துள்ள மன்னிப்பையும் அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதையும் குறித்த முழுமையான நிச்சயமில்லாமல் இருந்துவிடலாம் என்பதுதான். பயமும், சந்தேகமும் அவனை வாட்டிவிடலாம். அநேக கேள்விகளும் அநேக கவலைகளும், அநேக போராட்டமும், அநேக சந்தேகமும், மப்பும் மந்தாரமுமான நிலையும், புயலும் பெருங்காற்றுமான நிலையும் இறுதிவரை இருந்துவிடலாம்.
ஏற்கனவே சொன்னதை திரும்பவும் சொல்லுகிறேன் & ஒருவன் தன் வாழ்வில் இரட்சிப்பின் நிச்சயத்தை ஒருபோதும் அடையாமல்போனாலும், அவன் சாதாரணமாக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம் அவனை இரட்சிக்கும் வல்லமையுடையதாக இருக்கிறது; ஆனால் அந்த விசுவாசம் அவனை பெலத்தோடும், பெரும் ஆறுதல்களோடும் பரலோகத்திற்கு கொண்டுசெல்லும் என்று நான் சொல்லமாட்டேன். அந்த விசுவாசம் அவனைப் பாதுகாப்போடு பரலோகமாகிய துறைமுகத்தில் இறக்கிவிடும்; ஆனால் அவன் முழுமையான நம்பிக்கையோடும், பேரானந்தத்தோடும், தன் பாய்மரங்களனைத்தையும் அகல விரித்துப் பாய்ந்து போகும் கப்பலைப்போல பரலோகத்தை அடைய மாட்டான். போகிற வழியில் அவன் வானிலையால் தாக்கப்பட்டும், பெருங்காற்றில் மோதியும், தன்னுடைய பாதுகாப்பைப்பற்றி அறிந்திராமலும், மகிமையில் தன்னுடைய கண்களைத் திறந்தால் அதுபற்றி நான் சிறிதும் ஆச்சரியப்படமாட்டேன்.
வாசகர்களே! விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் இந்த வேறுபாட்டை நாம் மனத்தில் வைத்திருப்பது மிக மிக முக்கியம் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவத்தைப்பற்றி சிந்திக்கின்ற ஒருவர் சிலவேளைகளில் புரிந்துகொள்ளுவதற்கு கடினமாக இருக்கும் ஒரு விஷயத்தை இந்த வேறுபாடு விளக்குகிறது.
நினைவில் வைத்திருங்கள் – விசுவாசமே வேர்; இரட்சிப்பின் நிச்சயம் மலர். சந்தேகமில்லாமல் வேரின்றி ஒருபோதும் மலர் இருக்கமுடியாது; அதே வேளை வேரிருந்தும் மலரில்லாமல் இருந்துவிடலாம் என்பதும் உண்மை.
இயேசுவின் பின்னால் சென்று அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் தொட வேண்டும் என்றுச் சொல்லி அவரை நாடி வந்த பெண்ணிடம் விசுவாசத்தைப் பார்க்கிறோம். (மாற்கு 5:25). ஸ்தேவான், கொலை பாதகர்களான யூதர்கள் மத்தியில் “அதோ வானம் திறந்திருக்கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்று சொன்னதில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம். (அப்போஸ்தலர் 7:56).
“ஆண்டவரே என்னை நினைத்தருளும்” என்று கெஞ்சிய மனந்திரும்பிய கள்ளனின் வார்த்தைகளில் விசுவாசத்தைப் பார்க்கிறோம் (லூக்கா 23:42). யோபு புழுதியில் அமர்ந்து பருக்கள் நிறைந்தவனாக இருந்தும் “என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19:25) என்றும், “அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்றும் சொன்ன வார்த்தைகளில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.
பேதுரு நீரில் முழ்குகிறபோது “ஆண்டவரே, என்னை இரட்சியும்” (மத்தேயு 14:30) என்று கூப்பிட்டதில் அவனுடைய விசுவாசத்தைப் பார்க்கிறோம். அதே பேதுரு பிறகு ஆலோசனை சங்கத்தின் முன் நிற்கிறபோது “வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்போஸ்தலர் 4:11-12) என்று சொன்னதில் அவனுடைய இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.
ஆவலோடும் நடுக்கத்தோடும் “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” (மாற்கு 9:24) என்ற அந்த மனிதனின் வார்த்தைகளில் விசுவாசத்தைப் பார்க்கிறோம். “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?” (ரோமர் 8:33-34) என்ற உறுதியான வார்த்தைகளில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.
தமஸ்குவிலுள்ள யூதாவின் வீட்டில் துக்கத்தோடு, கண்பார்வையற்ற வனாக, தனிமையில் ஜெபித்த பவுலில் விசுவாசத்தைக் காண்கிறோம். (அப்போஸ்தலர் 9:11). அதே பவுல் முதிர்ந்த வயதிலும் தன்னுடைய இறுதி நாட்களை அமைதியோடு எதிர்பார்த்து “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்” “நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப் பட்டிருக்கிறது” (2 தீமோத்தேயு 1:12; 4:8) என்று சொல்லுகிறபோது அதில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் காண்கிறோம்.
விசுவாசமே ஜீவன். இது எப்பேற்பட்ட ஆசீர்வாதம்! ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையிலுள்ள இடைவெளியை யாரால் விளக்க முடியும்? இருந்தும் விசுவாசமாகிய ஜீவனானது பெலவீனத்தோடும், சுகவீனத்தோடும், வலியோடும், கவலையோடும், தளர்ச்சியோடும், பாரத்தோடும், ஆனந்தமற்றும், புன்னகையற்றும் கடைசிவரை இருந்துவிடலாம்.
இரட்சிப்பின் நிச்சயம் என்பது விசுவாசமாகிய ஜீவனை விட மேலானது. அது சுகம், வலிமை, ஆற்றல், வேகம், செயல்திறன், சக்தி, அழகு ஆகிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
வாசகர்களே, இரட்சிக்கப்பட்டிருக்கிறோமா? இல்லையா? என்பதல்ல நம்முன் இருக்கும் கேள்வி, அதன் சிறப்புகளை அனுபவிக்கிறோமா? இல்லையா? என்பதே நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் விஷயம். நமக்கு சமாதானம் இருக்கிறதா? இல்லையா? என்பதல்ல கேள்வி, பெரிய அளவிலான சமாதானத்தையா? குறைந்த அளவிலான சமாதானத்தையா? கொண்டிருக்கிறோம் என்பதைப்பற்றித்தான் நான் விளக்கிக்கொண்டிருக் கிறேன். இது உலகத்தானுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள கேள்வியல்ல. இது கிறிஸ்தவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட கேள்வி.
விசுவாசத்தைக் கொண்டிருக்கிறவன் நன்றாயிருக்கிறான். இந்த ஆக்கத்தை வாசிக்கின்ற அனைவரும் அதைக் கொண்டிருந்தால் அது எனக்கு அதிக சந்தோஷத்தை அளிக்கும். விசுவாசிக்கிறவர்கள் மும்மடங்கு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்; அவர்கள் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; நீதிமான்களாக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்கள் நரகத்தின் வல்லமைக்கு அப்பாற்பட்டவர்கள். சாத்தான் தன்னுடைய சூழ்ச்சிகள் அனைத்தையும் பயன்படுத்தினாலும் அவர்களை கிறிஸ்துவின் கரத்தில் இருந்து ஒருபோதும் பறித்துக்கொள்ள முடியாது.
இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கும் ஒருவன் இதையெல்லாம்விட மேலானதை அனுபவிக்கிறான். அவன் ஆவிக்குரியவற்றில் காண்பது அதிகம்; உணர்வது அதிகம்; அறிந்துகொள்ளுவது அதிகம்; ஆனந்திப்பது அதிகம். அவன் வாழும் நாட்களும் உபாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதைப்போல், ‘பரலோகத்தின் நாட்களெல்லாம் பூமியில் இருக்கும்’ என்பதுபோல் காணப்படும்.
வாசகர்களே, நீங்கள் யாராக இருந்தாலும், வாழ்க்கையில் உங்களுடைய இரட்சிப்பின் முழு நிச்சயத்தையும் அடைவதைத்தவிர வேறு எதிலும் திருப்திகொள்ளாதீர்கள் என்று உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். குழந்தையிடம் காணப்படுவதுபோன்ற விசுவாசத்தோடுதான் உங்கள் வாழ்க்கை ஆரம்பமாகவேண்டும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்போது இரட்சிக்கப்படுவீர்கள்” என்கிறது வேதம். ஆனால், விசுவாசத்தில் ஆரம்பித்து இரட்சிப்பின் நிச்சயத்தை நோக்கிப் போங்கள். “நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று நான் அறிவேன்” என்று சொல்லுகிறவரை ஓய்ந்து இருந்துவிடாதீர்கள்.
நான் சொல்லுகிறதை நம்புங்கள், இரட்சிப்பின் நிச்சயத்தைத் தேடுவது மிகவும் சிறப்பானது. உங்களுடைய கிருபை போதுமானது என்றிருப்பீர்களானால் அவற்றைத் தள்ளிவைக்கிறவர்களாகிவிடுவீர்கள். நான் விளக்கிக்கொண்டிருக்கிற விஷயங்கள் உங்களுடைய சமாதானத்துக்குத் தான். இந்த உலகத்துக்குரிய காரியங்களில் நம்பிக்கை இருப்பது நல்லது தான்; ஆனால் பரலோகத்துக்குரிய காரியங்களில் நம்பிக்கை இருப்பது அதைவிட எத்தனை மேலானது.
உங்களுடைய விசுவாசம் அதிகரிக்க வேண்டுமென்று நீங்கள் அனுதினமும் ஜெபியுங்கள். உங்கள் விசுவாசத்தைப் பொறுத்தே உங்கள் சமாதானமும் இருக்கும். ஆவிக்குரிய வேர் உங்களில் வளருவதற்கானதைச் செய்யுங்கள், கடவுளின் ஆசீர்வாதத்தினால் அது உங்களில் மலராகிய இரட்சிப்பின் நிச்சயத்தை உடனடியாகவோ அல்லது பிற்பாடோ அடையச்செய்யும். உடனடியாக முழு நிச்சயத்தையும் நீங்கள் அடையாமல் இருந்துவிடலாம். சிலவேளைகளில் நல்ல விஷயங்களுக்காகக் காத்திருப்பது நல்லது. எந்தவித பிரச்சனையையும் சந்திக்காமல் இலகுவாக அடையும் விஷயங்களை நாம் மதிப்பதில்லை. இரட்சிப்பின் நிச்சயம் உங்களைக் காத்திருக்க வைத்தபோதும் அதற்காகக் காத்திருங்கள். அதைக் கண்டடைவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு அதைத் தேடுங்கள்.
அடிக்குறிப்புகள்:
- இயேசுவை விசுவாசிக்கிறவன் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. அப்படி ஒருவனும் வெட்கப்பட்டதில்லை. நீங்கள் விசுவாசித்தால் நீங்களும் வெட்கப்படும் நிலை நிச்சயம் வராது. கண்டனத்திற்கும் மரணத்திற்கும் இடையில், மரிக்கும் தருவாயிலிருந்த மனந்திரும்பிய ஒருவன் பேசிய விசுவாச வார்த்தைகள் எவ்வளவு அருமையானது. அவனுடைய இறுதி வார்த்தைகள் நம்மை நோக்கிப் பின்வருமாறு உரத்த சத்தத்தோடு சொல்லுகிறது, “இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்பிய ஒருவனும் கெட்டுப்போனதில்லை.” – டிரெய்ல்.
- தேவனுடைய மகிமைக்கு அடுத்தபடியாக நாம் விரும்பக்கூடிய மிக பெரிய விஷயம் நம்முடைய இரட்சிப்பு; ஆனால் நாம் விரும்பக்கூடிய மிகவும் இனிப்பான விஷயம் நமது இரட்சிப்பின் நிச்சயம். பரலோகத்தில் நாம் அனுபவிக்கப் போகும் வாழ்க்கையின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதைவிட மேலானதொன்றை இந்த உலகத்தில் நாம் அடையமுடியாது. இந்த உலகத்தைவிட்டுப் போகிறபோது எல்லாப் பரிசுத்தவான்களும் பரலோகத்தை அனுபவிப்பார்கள்; அவர்களில் சிலர் இந்த உலகத்தில் இருக்கின்றபோதே பரலோகத்தை அனுபவிப்பார்கள். – ஜோசப் கார்லைல்.