பெருமறையில் இருக்கும் எல்லாக் காரியங்களையும் சிறு அறிவு படைத்த எம்மால் புரிந்திட முடியுமோ? இல்லையே. அதை புரிய வைக்கும் பணியை திருமறை செவ்வனே செய்கிறது. இன்னுமொரு முக்கிய விடயம் யாதெனில், நாம் வேதத்தை அனுதினம் வாசித்தாலும், வேதத்தைப்பற்றிய வேதத்திற்குப் புறம்பான அநேக தகவல்கள் நாம் வாசிக்கும் வேதத்தினூடாக கிடைக்கப் பெறுவதில்லை. உதாரணமாக தமிழ் வேத மொழிபெயர்ப்பு யாரால், எப்போது, எங்கு செய்யப்பட்டது என்ற விடயத்தைக் குறிப்பிடலாம். ஒரு கிறிஸ்தவன் இந்த தகவல்களை அறிந்து வைத்திருத்தல் மிக அத்தியாவசியமானதொன்றே. இதுபோல இன்னும் பலவுள. இப்படியான கிறிஸ்தவர்கள் அறிய வேன்டிய முக்கியமான தகவற் திரட்டுக்களை, போதகர் திரு பாலா அவர்கள் ஊடாக வெளிவரும் திருமறைத்தீபம் ஏந்தி வருகின்றது. திருமறைத்தீபத்தின் அட்டைப்படம் மனதைக் கவர்வதோடு, அதுவும் ஒருவித செய்தியைச் சுட்டும். அவ்வப்போது தலை காட்டும் கவிதைகள் இனியவை. தமிழ்க் கிறிஸ்தவர்கள் அநேகர் தெரிந்திராத தகவல்கள் மேல்நாட்டுக் கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். அப்படியான அருந்தகவல்களையும் போதகர் திரு பாலா அவர்கள் தேடி எடுத்து, நமக்கான தமிழ்ச்சுவையில் தந்துவிடுகின்றார்.
எதையும் துணிவுடன் பேசுவது திருமறைத்தீபத்தின் இயல்பு. சில கிறிஸ்தவர்கள் காட்டும் சிலவகை கொள்கைகளை பாரபட்சமின்றி தவறெனச் சுட்டிக்காட்டி, அதை நேரடியாகவே விளக்குவது ஒருவித மேலான்மைத் துணிச்சல்தான். ஏனென்றால், அமைதி என்கின்ற ஆயுதம் கிறிஸ்தவர்க்கு ஆடையென்பதால் அநேகர் இப்படியான விடயங்களைக் கண்டும் காணாமலும் கையாள்வர். ஆனாலும் திருமறைத்தீபத்தின் நேரடிப்பேச்சு, பேதுரு அவர்களின் செயலை பவுல் அவர்கள் நேரடியாகத் துணிவோடு சுட்டிக்காட்டியதை நினைவுபடுத்துகிறது.
திருமறைத்தீபம் இடும் தலைப்புக்கள் தனித்துவம். ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு சில நாடுகள் அங்கீகாரம் கொடுத்த காலத்தில் ‘அசிங்கம் அந்தஸ்திற்கு அலைகிறது’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை உலாவந்தது. இப்படியான கவிநயமான தலைப்புக்கள் ஒருவித தனித்துவம்தான். கிறிஸ்தவம் சார்ந்த வரலாறுகள் அநேகம்.
திருமறைத்தீபத்தின் ஊடாக வந்தது, ஒரு நல்ல செய்கையே.
திருமறைத் தீபமே
இன்னும் சுடர் விடு.
உன் சுடர் பட்டு
மாயக் கொள்கைகள் எரிந்து
புது வெளிச்சம் காணட்டும்.
வாழ்த்துக்களுடனும், அன்புடனும்,
யோ. யோகராசா (புரட்சி) இலங்கை.