– அலன் டன் –
[இந்த இதழிலும், இனி வரவிருக்கின்ற இதழ்களிலும் டாக்டர் அலன் டன் கர்த்தரின் புதிய உடன்படிக்கை மக்களைப் பற்றிய விளக்கங்களை (The New Covenant people of God) நான்கு ஆக்கங்களின் மூலம் கொடுக்கவிருக்கிறார். அதன் முதலாவது பகுதியான ‘புதிய உடன்படிக்கை கர்த்தரின் மக்களும் காலக்கூறு கோட்பாடும்’ என்ற பகுதியை இந்த இதழில் வாசிக்கலாம். Dispensationalism என்ற போதனையையே ‘காலக்கூறு கோட்பாடு’ என்று இந்த ஆக்கம் முழுவதும் பெயரிட்டிருக்கிறேன். வரலாற்றைப் பெரும்பாலும் ஏழு காலப்பகுதிகளாகக் கூறிட்டு (பிரித்து) தொடர்ச்சியாக அடுத்தடுத்து வரும் அந்தந்தக் காலப்பகுதியில் கர்த்தர் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார், செயல்படப்போகிறார் என்று விளக்குவதே காலக்கூறு கோட்பாடு. காலத்தைக் கூறுகளாகப் பிரித்துப் பார்ப்பது காலக்கூறு கோட்பாடு தன் போதனையை நிலைநிறுத்துவதற்கு அவசியமாகிறது. காலத்தைக் கூறுபோடுவதன் அடிப்படையிலேயே அது பழைய உடன்படிக்கையில் ஒருவித மக்கள் கூட்டமும் (இஸ்ரவேல்), புதிய உடன்படிக்கையில் இன்னொருவித மக்கள் கூட்டமாக (திருச்சபை) இருவகை மக்கள் கூட்டமிருப்பதான தன்னுடைய அனுமானத்தை நிரூபிக்க முயலுகிறது. காலக்கூறு கோட்பாட்டுக்கு எதிரான உடன்படிக்கை இறையியல் (Covenant Theology) காலங்களாக வரலாற்றைப் பிரித்துப் பார்க்காமல் கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கைகளின் அடிப்படையில் அவருடைய மக்களின் வரலாற்றை விளக்குகிறது. உடன்படிக்கை இறையியல் கர்த்தருடைய மக்களை இருவகையாகப் பிரிப்பதை அடியோடு நிராகரித்து அவர்கள் என்றும் ஒரே மக்களாகத்தான் (one people of God) மீட்பின் வரலாற்றில் இருந்துவருகிறார்கள் என்று வலியுறுத்துகிறது.
எரேமியா 31:31-34 வரையுள்ள வேதப்பகுதிக்கான மெய்யான விளக்கத்தையே அலன் டன் இந்த ஆக்கம் முழுவதும் தந்திருக்கிறார். காலக்கூறு கோட்பாடு, இந்த வேதப்பகுதி திருச்சபைக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம்பந்தமில்லாதது, பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலருக்கு மட்டுமே சொந்தமானது என்று விளக்குகிறது. அது எத்தனை தவறான விளக்கம் என்பதை ஆணித்தரமாக அலன் டன் இந்த ஆக்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய உடன்படிக்கையான கர்த்தரின் திருச்சபையையே (கர்த்தரின் மெய்யான மக்களையே) இந்த வேதப்பகுதி தீர்க்கதரிசனமாக உரைக்கிறது என்பதைத் தெளிவாக இறையியல்ப்பூர்வமாகவும், வேதத்தை வேதத்தோடு ஆராய்ந்து விளக்கும் வேதவியாக்கியான விதிமுறைகளை கவனத்தோடு பயன்படுத்தியும் அவர் விளக்கியிருக்கிறார். வேதத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு வேதவியாக்கியான விதிமுறைகள் மிக மிக அவசியம். அவற்றை வேதம் தனக்குள்ளேயே கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘எழுத்துப்பூர்வமாக’ வேதத்தை வியாக்கியானம் செய்யும் முறையைக் காலக்கூறு கோட்பாடு தவறாகப் பயன்படுத்துகிறது. அதுவே அதன் தவறான விளக்கங்களுக்கு அத்திவாரமாக இருந்துவிடுகிறது. எழுத்துப்பூர்வமாக, உண்மையாக வேதத்தை எப்படி விளக்குவது என்பதை எரேமியா 31:31-34 வரையுள்ள வசனங்களைப் பயன்படுத்தி அலன் டன் யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்.
இந்த ஆக்கமும், இனிவரவிருக்கின்ற ஆக்கங்களும் திருச்சபைக்கும், அவற்றில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கும் மிக அவசியம். ஏனெனில், எரேமியா 31:31-34ன் அடிப்படையில் புதிய உடன்படிக்கையே கர்த்தரின் திருச்சபை. திருச்சபை அங்கத்தவர்கள் புதிய உடன்படிக்கையின் கர்த்தரின் மக்கள். கர்த்தர் எப்போதும் உடன்படிக்கையின் தேவனாக இருந்து வருகிறார். உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அவர் மீட்பின் வரலாற்றில் செயல்படுகிறார். அதன் அடிப்படையிலேயே அவர் தன் மக்களோடு உறவுகொள்கிறார்; அவர்களை ஆசீர்வதிக்கிறார். அதைப் பழைய ஏற்பாட்டின் பழைய உடன்படிக்கையில் தெளிவாகக் காண்கிறோம். புதிய ஏற்பாட்டு நாயகனான இயேசு கிறிஸ்து தொடர்ந்து புதிய உடன்படிக்கையின் தேவனாக இருந்து வருகிறார். எரேமியா 31:31-34 கிறிஸ்துவுக்குள் புதிய உடன்படிக்கையில் நிறைவேறி ஆவிக்குரிய யூதர்களையும், புறஜாதியாரையும் அவருடைய மக்களாக்கியிருக்கிறது. புதிய உடன்படிக்கையின்படி அவர்கள் ஆவிக்குரிய மக்களாக அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி திருச்சபையில் உடன்படிக்கைகளை மீறாதவர்களாக வாழ்ந்து வரவேண்டும். எரேமியா 31:31-34 வெளிப்படுத்தும் உண்மைகள் கர்த்தரின் திருச்சபை பற்றிய நம்முடைய சிந்தனைகளும், நடவடிக்கைகளும் வேதப்பூர்வமாக கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
புதிய உடன்படிக்கை மக்களாகிய கிறிஸ்தவ விசுவாசிகள் புதிய உடன்படிக்கையின் அடிப்படையிலேயே கர்த்தரைப் பின்பற்றி திருச்சபை அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். திருச்சபையையும், சபை அங்கத்துவத்தையும் வெறும் சடங்காகப் பார்க்கும் இந்தத் தலைமுறையின் சுவிசேஷ கிறிஸ்தவம் வேதபோதனைகளை அசட்டைசெய்து கர்த்தரை நடைமுறை வாழ்க்கையில் நிந்தை செய்துவருகின்றது. திருச்சபை அமைப்பும், அங்கத்துவமும் அதற்கு வெறும் சடங்காகிப் போயிருக்கிறது. கீரைக் கடைக்கும் திருச்சபைக்கும் வித்தியாசமில்லாத சமூக சூழ்நிலையில் நாம் இன்று வாழ்கிறோம். மேலைநாட்டில் திருச்சபைகளை நாடுகிறவர்கள் கேட்கிற கேள்வி என்ன தெரியுமா? சத்தியம் போதிக்கப்படுகிறதா? ஆராதனை வேதரீதியில் இருக்கிறதா? ஒழுங்கு இருக்கிறதா? என்பதல்ல. எங்கள் பிள்ளைகள் விளையாட நர்சரி இருக்கிறதா? ஐக்கிய உணவுக்கு வழியிருக்கிறதா? வாலிபர்கள் டென்ஷன் ஆகாமல், அவர்களுடைய அட்ரலின் கொதிப்படையாமலிருக்க அவர்களைக் குஷிப்படுத்தும் கூட்டங்கள் இருக்கிறதா? என்பதுதான். திருச்சபையின் புனிதத்தன்மையையும், சபைக் கோட்பாடுகளையும் அறியாமல் வாழ்ந்து வரும் நம்மவர்கள் அவர்களுக்கு எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் சளைத்தவர்களல்ல என்பதைக் காண்பித்து வருகிறார்கள்.
திருச்சபையும், அதில் அங்கத்துவமும் வெறும் சடங்கல்ல; அவை கர்த்தரின் உடன்படிக்கையைப் பின்பற்றி விசுவாசத்தோடும், ஒழுக்கத்தோடும், ஒழுங்கோடும் வாழும் வாழ்க்கை முறை. புதிய உடன்படிக்கையின்படி அமையும் திருச்சபை அங்கத்தவர்கள் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதில் இணைகிறார்கள்; கர்த்தரின் உடன்படிக்கையின்படி சபையில் இருந்து வாழத் தங்களை அர்ப்பணிக்கிறார்கள். நம்மினத்தில் இந்தப் புரிதல் இல்லாமலிருப்பதற்கு சபைத் தலைவர்கள் பெருங்காரணம். கர்த்தரின் உடன்படிக்கையின் தார்ப்பரியங்கள் தெரியாமலும், புரியாமலும் சுவிசேஷம் சொல்லுவதும், சபை நிறுவுவதும் நம்மத்தியில் வீரியத்தோடும் வைராக்கியத்தோடும் கர்த்தருடைய உடன்படிக்கைக்குப் பணிந்து வாழும் திருச்சபைகள் அமையத் தடையாயிருக்கின்றன. திருச்சபையையே தன்னுடைய இலட்சிய நோக்காகக் கொண்டு இறையாண்மையுள்ள கர்த்தர் கிறிஸ்துமூலம் செயல்பட்டு வர, அந்தத் திருச்சபையை அலட்சியப்படுத்தி அதன் புனிதத்திற்கு ஊறு விளைவிக்கும் ஊழியங்கள் பெருகிக் காணப்படுகின்றன. அத்தகைய இழி செயல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டு புதிய உடன்படிக்கைத் திருச்சபையில் கிறிஸ்துவின் மகிமையை இலக்காகக் கொண்டு வாழ்கிறவனே மெய்கிறிஸ்தவன்.
இந்த ஆக்கம் கர்த்தரின் புதிய உடன்படிக்கை பற்றிய வியாக்கியானம். இது கவனத்தோடு சிந்தித்து ஆராய்ந்து வாசிக்க வேண்டியது. ஒரு முறைக்கு மேலாக வாசிப்பது விளக்கப்பட்டிருக்கும் சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும். வேகமாக வாசித்துவிடாமல் பொறுமையாக வாசிப்பது எழுதியவரின் போக்கில் உங்களையும் சிந்திக்க வைக்கும். கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு வேத வசனங்களையும் ஒப்பிட்டு சிந்தியுங்கள். உங்களுடைய ஆவிக்குரிய அறிவுக்கும் வளர்ச்சிக்கும் இது நிச்சயம் துணைசெய்யும். – ஆசிரியர்.]
கர்த்தரின் புதிய உடன்படிக்கை மக்களும் காலக்கூறு கோட்பாடும்
வேதப்பூர்வமாக நடந்துவருகின்ற எந்தப் போதகனும் தீத்து 1:9ல் சொல்லியிருப்பதுபோல், ‘ஆரோக்கியமான உபதேசத்தில் புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப்பற்றிக்கொள்ளுகிறவனாயிருக்க வேண்டும்.’ தொடர்ச்சியாக வரவிருக்கும் இந்த ஆக்கத்தில் எரேமியா 31:31-34 வரையுள்ள வசனங்களில் காணப்படும் தீர்க்கதரிசனம் புதிய உடன்படிக்கை மூலம் எப்படி நிறைவேறியிருக்கிறது என்பதை நாம் ஆராயப்போகிறோம். இதற்குக் காரணம் நாம் நம்முடைய சகோதரர்கள் என்று கருதுகின்ற அநேகரிடம் பரவலாகக் காணப்படும் தவறான போதனைகளை நாம் இனங்கண்டு சுட்டிக்காட்டி அவற்றிற்கு மாறான வேதபோதனைகளை நிலைநிறுத்துவதே. இந்த விஷயத்தில் நாம் பெரோயாவிலிருந்த (அப்போஸ்தலர் 17:11) விசுவாசிகளில் காணப்பட்ட தாழ்மையைப் பின்பற்ற வேண்டும். அவர்களைப்போல வேதத்தை ஆராய்ந்து பார்த்து சத்தியத்தில் முதிர்ச்சி அடைந்துவருகிற அதேவேளை, கர்த்தருடைய மெய்யான மக்களனைவரிடமும் அன்புகாட்டுகின்ற விஷயத்தில் ஒருபோதும் முரண்பாடாக நடந்துகொள்ளக்கூடாது (எபேசியர் 4:13-16).
‘இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும் அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப் பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும், எல்லோரும் என்னை அறிந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.’ (எரேமியா 31:31-34)
இந்த வசனங்களில் கர்த்தர் பழைய உடன்படிக்கையைவிடப் புதிய உடன்படிக்கை வித்தியாசமாக இருக்கும் என்கிறார். அதாவது பழைய உடன்படிக்கையைப் போலல்லாது புதிய உடன்படிக்கை அழிவில்லாமல் இருக்கும் என்கிறார். புதிய உடன்படிக்கை நித்தியமானது. புதிய உடன்படிக்கையின் மக்களுடைய இருதயத்தில் நியாயப்பிரமாணம் எழுதப்பட்டிருப்பதோடு அவர்களில் ஒன்றுவிடாமல் அனைவரும் ஆண்டவரை விசுவாசிப்பவர்களாக இருப்பார்கள். புதிய உடன்படிக்கையின் மக்களனைவருடைய பாவங்களனைத்தும் முற்றாக மன்னிக்கப்பட்டிருக்கும். நான் அவர்களுடைய தேவனாகவும், அவர்கள் என்னுடைய மக்களாகவும் இருப்பார்கள் என்ற பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தம் புதிய உடன்படிக்கையின் மக்களில் நிறைவேறியிருக்கும்.
புதிய உடன்படிக்கை புதிய ஏற்பாட்டு சபையைச் சார்ந்தது என்பதைக் காலக்கூறு கோட்பாட்டாளர்கள் மறுக்கிறார்கள்
காலக்கூறு கோட்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் விசுவாசிகள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டபோதும், காலக்கூறு கோட்பாடு வேதம் போதிக்கும் புதிய உடன்படிக்கை பற்றிய போதனைகளை சரியாகப் புரிந்துகொள்ளாத தவறான போதனை என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதற்கு காலக்கூறுகோட்பாட்டின் தவறான பல அம்சங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும். முதலாவதாக, அந்தக் கோட்பாடு வேதத்தை ‘எழுத்துப்பூர்வமாக’ மட்டுமே வியாக்கியானம் செய்வோம் என்று மார்தட்டிக்கொள்ளுகிற அம்சத்தைக் கவனிப்போம். உதாரணமாக, எரேமியா 31:31ல், ‘இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்’ என்ற வசனத்தில் உள்ள இஸ்ரவேலையும், யூதாவையும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக இஸ்ரவேல் நாடாகவும், யூதாவை யூதா இனமாகவும் மட்டுமே விளங்கிக்கொள்ளுகிறார்கள். அத்தோடு எரேமியாவின் தீர்க்கதரிசனம் அந்த நாட்டோடும் இனத்தோடும் சம்பந்தப்பட்டதாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது, அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறினால் அது பழைய ஏற்பாட்டின் அடிப்படையில் இஸ்ரவேல், யூதா சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும் என்கிறது காலக்கூறு கோட்பாடு. ஆனால், எழுத்துப்பூர்வமாக வேதத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று நாம் சொல்லுகிறபோது, வேதம், அது தானே தன்னில் கொண்டிருக்கிற இலக்கிய வகைகளின் அடிப்படையில் விளக்கப்படுத்துகிற தன்மையோடிருக்கிறது என்பதையே குறிக்கிறோம். இஸ்ரவேல், யூதா என்ற வார்த்தைகளைக் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில் புதிய ஏற்பாடு எப்படி விளக்குகிறது என்பதைக் கவனியுங்கள். பழைய ஏற்பாட்டுப் பதங்களைப் புதிய ஏற்பாடு, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய கிறிஸ்துவின் திருச்சபையைச் சுட்டிக்காட்டவே பயன்படுத்துகிறதை நாம் காண்கிறோம்.
காலக்கூறு கோட்பாட்டின் வேதவியாக்கியான விதிகளில் இரண்டாவது, கிறிஸ்து தன்னுடைய இரண்டாவது வருகைக்குப் பின்பு இந்த உலகில் ‘எழுத்துப்பூர்வமான’ ஆயிரவருட அரசாட்சியை நிலைநாட்டுவார் என்பது. அதன் மூன்றாவது வேதவியாக்கியான விதி, இஸ்ரவேல் மறுபடியும் யூததேசமாக இந்த உலகத்தில் நிலைநிறுத்தப்படும் என்பது. ஆயிரவருட அரசாட்சியின்போது இஸ்ரவேல் மறுபடியும் தேசமாக புதுப்பித்து அமைக்கப்படும் என்பது காலக்கூறு கோட்பாட்டாளரின் நம்பிக்கை. அதுமட்டுமல்லாது இந்தப் புதிய யூததேசம் புதுப்பிக்கப்பட்ட எருசலேமில் இருந்த ஆலயத்தையும், அதன் தகனபலிகளையும் கொண்டிருக்கும் என்கிறார்கள். எரேமியாவின் 31ம் அதிகாரத்தின் புதிய உடன்படிக்கைபற்றிய தீர்க்கதரிசனம் ஆயிரவருட அரசாளுகையின்போது இருக்கப்போகும் இந்த யூத இஸ்ரவேல் நாட்டையே குறிக்கிறது, புதிய உடன்படிக்கையின் சபையை அல்ல என்றும் அவர்கள் விளக்குகிறார்கள். காலக்கூறு கோட்பாட்டு போதனையாளர் புதிய உடன்படிக்கை சபையில் நிறைவேறியது என்பதை முற்றாக நிராகரிக்கிறார்கள். ஜே. டுவைட் பென்டிகோஸ்ட் எனும் காலக்கூறு கோட்பாட்டாளர், ‘எரேமியாவின் 31:31-34 தீர்க்கதரிசனம் தேசிய இஸ்ரேலில் மட்டுமே தவிர ஒருபோதும் சபையில் நிறைவேற முடியாது’ (Things to Come) என்று கூறியிருக்கிறார். சார்ள்ஸ் ரைரி எனும் இன்னொருவர், ‘புதிய உடன்படிக்கை எதிர்காலத்தில் இருக்கப்போவது மட்டுமல்ல அது ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கப்போகிறது’ (Dispensationalism Today) என்கிறார். இன்னொருவரான ஜோன் வுல்வர்ட், ‘கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின்போது அமையப்போகும் ஆயிரம் வருட அரசாட்சியில் இருக்கப்போகும் இஸ்ரவேலிலேயே புதிய உடன்படிக்கை நிறைவேறும் என்பது பிரிமில்லேனியலிசத்தின் கோட்பாடு’ (The Millennial Kingdom) என்று கூறுகிறார்.
காலக்கூறு கோட்பாட்டாளர்கள் எரேமியா 31:31-34 தீர்க்கதரிசனத்தை எதிர்காலத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குப் பின்னர் அமையப்போகும் ஆயிரம்வருட அரசாட்சியின்போது ஆபிரகாமின் வழிவந்த யூத இனத்தைக்கொண்டு அமையப்போகும் கடவுளின் மக்களாகிய தேசிய இஸ்ரவேலாகக் கணிக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் புதிய உடன்படிக்கை என்பது திருச்சபைக்கு சொந்தமானதும் அதன் ஆசீர்வாதமும் அல்ல. காலக்கூறு கோட்பாட்டாளர் சபையை இஸ்ரவேலிலிருந்து பிரித்து ஆண்டவருடைய இரண்டுவிதமான மக்களாக, தனித்தனியே தனித்துவமான வாக்குத்தத்தங்களுக்கு சொந்தமான இருபிரிவினராக விளக்குகிறார்கள். சார்ள்ஸ் ரைரி சொல்லுகிறார், ‘காலக்கூறு கோட்பாட்டாளர் இஸ்ரவேலையும், சபையும் பிரித்தே வைக்கிறார்கள் . . . இஸ்ரவேலையும், சபையையும் பிரித்துப்பார்க்காதவன் காலக்கூறு கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவனாக இருக்க முடியாது’ (Dispensationalism Today). அவர் தொடர்ந்து, ‘புதிய உடன்படிக்கையிலும் வேதத்தின் ஏனைய பகுதிகளிலும் உள்ளடங்கியிருக்கும் இஸ்ரவேலுக்கான வாக்குத்தத்தங்களை திருச்சபை நிறைவேற்றுமானால் காலக்கூறு கோட்பாடு அழிந்ததுபோல்தான்’ (The Basis of the Premillennial Faith) என்று கூறியிருக்கிறார். புதிய ஏற்பாடு, புதிய உடன்படிக்கையை திருச்சபைக்கு அடையாளமாகவும், இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் சபையில் நிறைவேறுகின்றவையாகவும் காட்டுகின்றதா?
புதிய உடன்படிக்கை திருச்சபையைச் சார்ந்தது
எரேமியா 31:31-34 வேதப்பகுதி மட்டுமே பழைய ஏற்பாட்டில் ‘புதிய உடன்படிக்கை’ என்ற வார்த்தைப் பிரயோகத்தை மீட்பின் வரலாற்றில் நாம் வாழ்ந்துவருகின்ற காலப்பகுதியைக் குறிப்பதற்காகப் பயன்படுத்துகிறது (கிறிஸ்துவின் வருகைக்கு சற்று முன்னதான காலம்வரை). புதிய ஏற்பாட்டில் நாம் ‘புதிய உடன்படிக்கை’ என்ற பதத்தை வாசிக்கிறபோது எரேமியா 31:31-34 வேதப்பகுதி நம்முடைய நினைவுக்கு வருவது நியாயமானதே.
கிறிஸ்துவின் சபையாக, இயேசுவின் சீடர்களாக ஆண்டவரின் பந்தியில் பங்குபெற நீங்கள்கூடி வருகிறீர்களா? அப்படியானால் நீங்கள் புதிய உடன்படிக்கையில் பங்குகொள்கிறீர்கள். ஆண்டவரின் பந்தி புதிய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது என்று இயேசு சொல்லியிருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது’ என்றார் இயேசு (லூக்கா 22:20; 1 கொரி 11:25). இஸ்ரவேலர் பஸ்கா பண்டிகை மூலம் நினைவுகூர்ந்து கொண்டாடிய, எகிப்திலிருந்து அவர்களடைந்த மீட்பின் அடிப்படையில் பழைய உடன்படிக்கை அமைந்திருக்க, ஆண்டவரின் பந்தி மூலம் கிறிஸ்தவர்கள் நினைவுகூருகிற கிறிஸ்துவின் மரணத்தின் மூலமும், உயிர்த்தெழுதலின் மூலமும் திருச்சபைக்குக் கிடைத்த விடுதலையின் அடிப்படையில் புதிய உடன்படிக்கை அமைந்து காணப்படுகிறது (1 கொரி 5:7). கிறிஸ்துவின் வாழ்க்கையையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் அடிப்படையாகக் கொண்டே புதிய உடன்படிக்கை காணப்படுகிறது. விசுவாசத்தின் மூலம் அவரோடு இணைந்திருக்கும் அனைவரும் புதிய உடன்படிக்கையின் சமூகமாக, சபையாக இருக்கிறார்கள்.
சபையின் அப்போஸ்தலர்களின் ஒருவனாக இருந்த பவுல் தன்னைப் ‘புதிய உடன்படிக்கையின் ஊழியன்’ என்று அழைக்கிறார் (2 கொரி 3:6). தன்னுடைய இனத்தவர்களான யூதர்கள் மத்தியில் பவுல் ஊழியஞ்செய்திருந்த போதும் அவர் குறிப்பாக புறஜாதிகள் மத்தியில் ஊழியஞ் செய்வதற்காக அழைக்கப்பட்டார் (ரோமர் 11:3; 1 தீமோ 2:7). பவுலினுடைய எழுத்துக்களின் மூலம் கிறிஸ்துவை விசுவாசித்திருக்கும் அனைவரும் பவுலின் புதிய உடன்படிக்கையின் ஊழியத்தை அனுபவித்திருக்கிறார்கள். ஆகவே, எரேமியா இஸ்ரவேலின் குடும்பம், யூதாவின் குடும்பம் என்று குறிப்பிட்டபோது அதில் நிச்சயம் இந்தப் புறஜாதி விசுவாசிகளும் அடங்கியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் வரவிருக்கின்ற ஆயிரவருட ஆட்சியின்போது நிறுவப்படும் இஸ்ரவேல் நாடாக புதிய உடன்படிக்கை இருக்குமானால், பவுல் தன்னைப் ‘புதிய உடன்படிக்கையின் ஊழியன்’ என்றும் புறஜாதிகளின் அப்போஸ்தலன் என்றும் எப்படி ஒரே நேரத்தில் அழைத்திருக்க முடியும்?
யூத இனத்திலிருந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்தவர்களுக்கு எழுதப்பட்ட நிருபம் எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம். அவர்களில் பலர் எதிர்ப்பையும், துன்பத்தையும் வாழ்க்கையில் அனுபவித்திருந்தனர். சிலர் சிறைவாசத்தை அனுபவித்தும், வேறு சிலர் தங்கள் உடமைகளை இழந்தும் போயிருந்தனர் (எபி 1:32-33). இதன் காரணமாக சபையிலிருந்த சிலர் பழைய யூத மதத்திற்குத் திரும்பி பழைய உடன்படிக்கையின் ஆராதனையைத் தொடர எண்ணியிருந்தனர். நிருபத்தை எழுதியவர் இந்தச் செய்கையை விசுவாசத்தை விட்டுவிலகுவதற்கு (Apostasy) ஒப்பானதாகக் கருதினார். இதை எழுதியவருடைய நோக்கம் புதிய உடன்படிக்கைக்கு பழைய உடன்படிக்கை வழிவிட்டுக்கொடுத்துவிட்டதென்பதையும், இப்போது இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தே ஆண்டவரை ஆராதிக்க வேண்டுமென்பதையும், புதிய உடன்படிக்கையின் மக்களாகிய சபையின் ஆசாரியரும், அரசரும் கிறிஸ்துவே என்பதையும் நிருபத்தின் வாசகர்கள் உணரவேண்டுமென்பதுதான். எபிரேயர் 8:1-2 வசனங்கள் அந்த நிருபத்தின் பிரதான போதனையைப் பின்வருமாறு சுட்டிக்காட்டுகின்றன – ‘பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், பரிசுத்த தலத்திலும் . . . கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்குண்டு.’ நம்முடைய அரசராவதற்கு இயேசு கிறிஸ்து இனி வரவிருக்கின்ற ஆயிரவருட ஆட்சிக்காகக் காத்திருக்கவில்லை. அவர் இப்போதே ராஜாதி ராஜாவாகவும், கர்த்தாதி கர்த்தராகவும் இருக்கிறார் (1 தீமோ 6:15). எபிரெயர் 8:6-7 வசனங்கள் கிறிஸ்து ‘விசேஷித்த வாக்குத்தத்தங்களின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக இருக்கிறார்’ என்கின்றன. அத்தோடு ‘அந்த உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால் இரண்டாம் உடன்படிக்கைக்கு இடந்தேட வேண்டுவதில்லையே’ என்றும் கேள்வியெழுப்புகின்றன. புதிய உடன்படிக்கையில் வாக்குத்தத்தஞ் செய்யப்பட்டவற்றையும், இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்டவற்றையும் பிழையாயிருந்த பழைய உடன்படிக்கையால் நிறைவேற்ற முடியவில்லை. பாவத்திலிருக்கும் மனிதனைக் கண்டித்து தன்னுடைய அடையாளங்களாலும், நிழல்களாலும் கிறிஸ்துவிடம் போகும்படிக் காட்டுகின்ற பழைய உடன்படிக்கையால் உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவின் ஆவியால் நமக்குக் கிடைக்கின்ற நித்திய ஜீவனைக் கொடுக்க முடியவில்லை. அந்த ஆவியானவரே எபிரேயர் நிருபத்தை எழுதியவரை வழிநடத்தி, இந்த விசேஷ உடன்படிக்கையே இன்று நமக்குரிய உடன்படிக்கையான புதிய உடன்படிக்கையாக எரேமியா 31:31-34 (எபி 8:8-12) வரையுள்ள வசனங்களின் மூலம் சுட்டிக்காட்ட வைத்து வழிநடத்தியிருக்கிறார். எபி 8:13ல் நிருப ஆசிரியர் ‘பழையதும் நாள்பட்டதுமாயிருக்கிற’ முந்தின உடன்படிக்கை புதிய உடன்படிக்கைக்கு வழிவிட்டு ‘உருவழிந்துபோக’ப் போகிறது என்பதைத் தெளிவாக விளக்குகிறார். விசுவாசிகளாகிய வாசகர்கள் பழைய உடன்படிக்கைக்குத் திரும்புவது அறவே முடியாத காரியம் மட்டுமல்ல, பழைய உடன்படிக்கையின் இஸ்ரவேல், வருங்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட தேசமாக ஒருபோதும் இருக்கவழியில்லை. புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையை உருவழிந்துபோகச் செய்திருப்பதால் பழைய உடன்படிக்கை இப்போது மறைந்துவிட்டது.
எபிரெயர் 9:14-15ல், பழைய உடன்படிக்கையின் மிருகப்பலிகளை புதிய ஏற்பாட்டின் கிறிஸ்து மூலமான மேலான இரத்தப்பலியோடு தொடர்புபடுத்தி விளக்கும் ஆசிரியர், இயேசுவே புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தர் என்பதைக் காட்டுகிறார். நம்முடைய மனச்சாட்சியை சுத்தப்படுத்தி ஜீவனுள்ள தேவனுக்குப் பணிசெய்ய வைக்கக்கூடிய திட்ப உறுதியுடைய உடன்படிக்கையாக இந்தப் புதிய உடன்படிக்கை இருக்கிறது. மேலும் எபிரெ 10ம் அதிகாரத்தில், பழைய உடன்படிக்கையின் அத்தனைப் பலிகளின் மாதிரிகளினதும், நிழல்களினதும் இறுதி நிறைவேற்றமாகவே இயேசு கிறிஸ்துவின் மரணம் இருப்பதாக அதை எழுதியவர் விளக்குகிறார். அவர் சங்கீதம் 110ஐ 12-13ம் வசனங்களில் சுட்டிக்காட்டி இயேசுவே முடிசூட்டப்பட்டிருக்கும் மேசியா என்பதைக் காட்டுகிறார். மறுபடியும் 16-17 ஆகிய வசனங்களில் எரேமியா 31:31-34ஐ சுட்டிக்காட்டி நமது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களாக புதிய ஜீவனையும், நீதிமானாக்குதலையும் நாம் அடைந்திருப்பதாகக் கூறுகிறார். எபிரெயர் 12ல், நாம் பழைய உடன்படிக்கையின் அடிப்படையில் இனிக் கர்த்தரை அணுகுவதில்லை (18-21 வசனங்கள்), புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவின் மூலமே அவரை அணுகுகிறோம் (22-24) என்றும் விளக்குகிறார்.
ஏற்கனவே நான் ஒரு கேள்வியைக் கேட்டேன், ‘புதிய ஏற்பாடு சபையைப் புதிய உடன்படிக்கையாகக் காட்டுகிறதா? இஸ்ரவேலுக்குத் தரப்பட்ட வாக்குத்தத்தங்கள் சபையில் நிறைவேறியதாகக் கணிக்கிறதா? இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையும் அவருடைய கிரியைகளும், பவுலின் ஊழியமும், எபிரேயருக்கு எழுதப்பட்ட நூலும் இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்ற அழுத்தமான பதிலையே தருகின்றன.
திருச்சபையே புதிய உடன்படிக்கையின் இஸ்ரவேல்
இரண்டுவிதமான இஸ்ரவேலர்கள் எரேமியாவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்கதரிசனத்தை அளித்தபோதும் அந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் அதைக் கேட்டு விசுவாசிக்கவில்லை. அந்நாட்டின் யூத இனமக்கள் மத்தியில் இன்னொரு கூட்டம் இருந்தது. அந்தக்கூட்டத்தார் விசுவாசிகளான யூத இஸ்ரவேலர். சிறுபான்மையினரான இவர்களை ‘மிகுந்திருப்பவர்கள்’ (Remnant) என்று இறையியலடிப்படையில் அழைப்பார்கள். பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையில் உள்ள தொடர்பை விளங்கிக்கொள்ளுவதற்கு இந்த ‘மிகுந்திருப்பவர்கள்’ பற்றிய விளக்கம் மிகவும் அவசியமானது. இந்தப் போதனை ஆதி 3:15ல் உள்ளடங்கிக் காணப்படுகிறது. ஆதாம் பாவத்தில் விழுந்த நாளிலிருந்து மனிதகுலம் இரண்டு பகுதியாகத் தொடர்கிறது. பெண்ணின் வித்தும், சாத்தானின் வித்துமாக அந்த இரு பகுதியும் காணப்படுகிறது. பாவத்தில் வீழ்ந்த ஆதாம் அவனைப்போன்ற குற்றவுணர்வுகொண்ட பாவிகளான வித்துக்களை உருவாக்குகிறான் (சாத்தானின் வித்து). ஆனால், கிருபையின் மூலமாக அந்தப் பாவவித்துக்களில் சிலவற்றை ஆண்டவர் பெண்ணின் வித்தாக, வாக்குத்தத்தத்தின் மூலம் அருளப்பட்ட ஒரே வித்தான கிறிஸ்துவின் மூலம் சாத்தானை வெற்றிகாணும் மிகுந்திருப்பவர்களாக மாற்றியமைக்கிறார். ஆபிரகாமின் வழித்தோன்றல்களில் இந்த இருவகை ஆவிக்குரிய தன்மையுள்ளவர்கள் காணப்படுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே பவுல் ரோமர் 9ல் ஈசாக்கை இஸ்மவேலோடும், யாக்கோபுவை ஈசாவோடும் ஒப்பிடுகிறார் (ரோமர் 9:7-13). பழைய உடன்படிக்கையின் மக்கள் மத்தியில் இந்த இருவகை மக்களையும் நாம் இனங்காணுகிறோம். பழைய உடன்படிக்கையின் இஸ்ரவேல் யெகோவாவை நம்ப மறுத்த அவிசுவாசிகளான சாத்தானின் வித்தைத் தன்னில் உள்ளடக்கியிருந்தது. அதன் காரணமாக யெகோவா அவர்களுக்கு விசுவாசமுள்ள கணவனாக இருந்தபோதும் அவருடைய உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள் (எரேமியா 31:32). இருந்தபோதும் விசுவாசத்தில் இருந்து விலகிப்போன அந்த நாட்டில் ஆண்டவருடைய வார்த்தையைக்கேட்டு அவருக்குக் கீழ்ப்படிந்த மக்கள் இருந்தார்கள். இந்த இருவகை இனத்தையே நாம் தாவீதின் வித்திலும் காண்கிறோம். தாவீதின் உடன்படிக்கையின் கீழ் விசுவாசத்தை விட்டு விலகிப்போன அரசர்களையும், விசுவாசமுள்ள அரசர்களையும் பார்க்கிறோம். எல்லாம்கூடி வந்த காலப்பகுதியில் இந்த விசுவாசமுள்ள மிகுந்திருந்தவர்களை (பெண்ணின் வித்தை) தண்ணீரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி அழைப்பது யோவான் ஸ்நானனின் பணியாக இருந்தது. யோவான் ஸ்நானன் சரீரரீதியில் ஆபிரகாமின் வழியில் வந்தோம் என்றுகூறி உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களுக்கு சொந்தக்காரர்களாகத் தங்களைக் கருதியவர்களை நிராகரித்து (லூக்கா 3:8), தான் அறிமுகப்படுத்திய இயேசுவை விசுவாசித்தவர்களைத் தேடினார் (யோவான் 1:29). தன்னுடைய ஞானஸ்நானத்தில் இந்த விசுவாசிகளை இனங்கண்ட இயேசு இப்படியாக மிகுந்திருந்த விசுவாசிகளில் இருந்தே தன்னுடைய சீடர்களைத் தெரிவுசெய்தார். தன்னையே மேசியாவாக ஏற்று விசுவாசிக்கும்படி தன்னுடைய சீடர்களைப் பணித்தார் இயேசு. தன்னுடைய சீடர்களுக்கு ஆவியானவரைத் தந்து அவர்களுடைய புதிய ஏற்பாட்டு சாட்சியத்தின் மூலம் தன்னுடைய திருச்சபையைக் கட்டியெழுப்பி மிகுந்திருந்தவர்களை இக்காலத்தில் அதிகரிக்கப்பண்ணுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆவிக்குரிய நம்முடைய மூதாதையர்களை விசுவாசத்தின் அடிப்படையில் வந்த இந்த சந்ததியிலேயே இனங்காணுகிறோம். எபிரேயர் 11 விசுவாசத்தின் அடிப்படையிலான நம்முடைய வம்ச வரலாற்றை விபரிக்கிறது. அந்த மீட்பின் வரலாற்றில் பெண்ணின் வித்து எக்காலத்திலும் பிரதிநிதித்துவப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
ரோமர் 9-11
ரோமர் 9-11 வரையுள்ள அதிகாரங்களில் பவுல், தன்னுடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் கர்த்தர் விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை மறுதலிக்கிறார். பவுலின் காலத்தில் சுவிசேஷத்தை நிராகரித்த அநேக யூதர்களே இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். புதிய உடன்படிக்கையின் ஊழியனாக பவுல் இருப்பாரானால், இஸ்ரவேலின் குடும்பத்துக்கு புதிய உடன்படிக்கை வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டிருக்குமானால், இத்தனை யூதர்கள் கிறிஸ்துவையும் புதிய உடன்படிக்கையையும் நிராகரிக்கும்போது கர்த்தர் விசுவாசமாக நடந்துகொள்ளுகிறார் என்று எப்படிக்கூற முடியும்? என்பதே குற்றச்சாட்டு. விசுவாசிக்கும் மிகுந்திருப்பவர்களுக்கு விசுவாசமாகக் கர்த்தர் நடந்துவருகிறார் என்பதே இதற்கான பவுலின் பதிலாக இருக்கிறது. இந்தப்பகுதியில் பவுலினுடைய வாதங்களைப் புரிந்துகொள்ளுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஏனெனில், இஸ்ரவேல் என்ற பதத்தைப் பவுல் இரண்டு விதங்களில் இப்பகுதியில் பயன்படுத்துகிறார். முதலில், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களைக்குறித்து இந்தப்பதத்தைப் பயன்படுத்துகிறார். இரண்டாவதாக, பழைய உடன்படிக்கையின் தேசத்து மக்களைக்குறிக்கப் பயன்படுத்துகிறார். ரோமர் 9:6ல் பவுல் சொல்லுகிறார், ‘. . . இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் அல்லவே.’ ஆதி 3:15ல் நாம் பார்க்கும் இருவகை வித்துக்களையும் (சாத்தானின் வித்தும், பெண்ணின் வித்தும்) இனங்காட்டுவதற்காக இஸ்ரவேல் என்ற பதத்தைப் பவுல் இரண்டுவித அர்த்தங்களில் இந்தப் பகுதியில் பயன்படுத்துகிறார். கர்த்தர் தன்னுடைய இறையாண்மையுள்ள கிருபையின் மூலம் இரட்சிக்கும் மக்களைப்பற்றி விளக்கும்போது, அவர்களை இஸ்ரவேலர் என்ற பதத்தின் மூலம் மீட்பின் அடிப்படையில் பவுல் இனங்காட்டுகிறார். அதேவேளை, மாம்சத்தின்படி தன்னுடைய இனத்தாரான மக்களை இஸ்ரவேல் இனமாக அடையாளங்காட்டுகிறார் (ரோமர் 9:3-4; 10:1-3; 11:1). இன்னோருவிதத்தில் சொல்லப்போனால், பழைய உடன்படிக்கையில் அவிசுவாசிகளான இஸ்ரவேல் தேசத்து மக்கள் மத்தியில் மிகுந்திருக்கும் (Remnant believers) மெய்யான விசுவாசிகள் காணப்பட்டார்கள்.
ரோமர் 9-11 வரையுள்ள அதிகாரங்களில் பவுல், ‘சகல இஸ்ரவேலர்’ (all Israel) என்ற பதத்தின் மூலம் இந்த விசுவாசிக்கும் மிகுந்திருப்பவர்களைக் கருத்தில் கொண்டே விளக்கமளிக்கிறார் (ரோமர் 9:6; 11:26). கர்த்தரின் திட்டங்களின்படி இம்மிகுந்திருப்பவர்களின் எண்ணிக்கை நிறைவானதாகவும், பூரணமானதாகவும் இருக்கும் என்கிறார் பவுல். ரோமர் 11:5-7 வரையுள்ள வசனங்களில், விசுவாசிகளான யூதர்களைப் பவுல், இஸ்ரவேல் தேசத்தில் இருந்து கர்த்தரின் கிருபையால் தெரிவுசெய்யப்பட்ட மிகுந்திருப்பவர்களாக அடையாளங்காணுகிறார். ரோமர் 11:12ல் இவர்களுடைய ‘நிறைவைக்’ குறிப்பிடும் பவுல் இந்த யூத இனத்து மிகுந்திருப்பவர்களின் இரட்சிப்பு பூரணமானதாக இருக்கும் என்கிறார். கர்த்தர் விசுவாசமற்றவர் அல்ல என்றும், இந்த மிகுந்திருக்கும் யூதர்களின் நிறைவு மூலம் அவர் தன்னுடைய தெரிந்துகொள்ளுதலின் நோக்கங்களைப் பூரணமாக நிறைவேற்றுவார் என்கிறார் பவுல். விசுவாசிக்கும் இந்த யூதர்கள் அங்கீகரிக்கப்படுவதை உயிர்த்தெழுதலுக்கு சமமானதாக பவுல் விளக்குகிறார் (ரோமர் 11:15). சரீரப்பூர்வமான உயிர்த்தெழுதலை அல்லாது ஆவிக்குரிய மறுபிறப்பையே உயிர்த்தெழுதலாக இங்கே பவுல் குறிப்பிடுகிறார்.
அதேவிதமாக, பவுல் புறஜாதிகளின் நிறைவைக் குறித்தும் பேசுகிறார் (ரோமர் 11:25). அதாவது, சகல நாடுகளிலும் இருந்து கிருபையின் மூலமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசிக்கின்ற மிகுந்திருப்பவர்களின் பூரண எண்ணிக்கையையே இந்த வசனத்தில் பவுல் குறிப்பிடுகிறார். தெரிந்துகொள்ளுகின்ற கிருபையின் மூலமாகக் கர்த்தர், தெரிந்துகொள்ளப்பட்ட பூரண எண்ணிக்கைகொண்ட மிகுந்திருக்கும் யூதர்களையும், அதேவிதமாக தெரிந்துகொள்ளப்பட்ட மிகுந்திருக்கும் பூரண எண்ணிக்கையுடைய புறஜாதி இனத்தாரையும் ஒரே ஒலிவ மரத்தில் இஸ்ரவேலர் என்ற அடையாளத்தைக் கொண்டிருப்பவர்களாக ஒட்டவைக்கிறார் (ரோமர் 11:16-24). ரோமர் 11:25ம் வசனத்தில், பழைய உடன்படிக்கை இஸ்ரவேல் (தேசிய இஸ்ரவேல்) புறஜாதிகளின் நிறைவு உண்டாகும்வரை ‘ஒரு பங்குக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்’ என்கிறார் பவுல். (இந்த வசனத்தில் ‘உண்டாகும்வரை’ என்ற பதம் தத்துவரீதியில் அடுத்தடுத்து நடக்கிற ஒன்றைக் குறிக்கவில்லை. Not used to convey a sequential idea. காலக்கூறு கோட்பாடு அந்த அர்த்தத்தில் இதை எடுத்து புறஜாதி சபை முதலில் இரட்சிக்கப்பட்டு, உயரெடுத்துக்கொள்ளப்பட்டு அதற்கு அடுத்தபடியாக தேசிய இஸ்ரவேல் நிறுவப்பட்டு இரட்சிக்கப்படும் என்று தவறாகப் போதிக்கிறது)
இங்கே பவுல் சொல்லுவதென்ன? இஸ்ரவேலரில் ஒரு பங்கினரின் இருதயம் கடினப்பட்டும், இன்னொரு பகுதியினரான மிகுந்திருப்பவர்கள் மீட்கப்பட்டும் வருகின்ற நிலையில் அதேவிதமாக, அதேசமயம் புறஜாதியினரின் மத்தியிலும் ஒருபகுதியினர் கர்த்தரால் மீட்கப்பட்டு வருகிறார்கள். மிகுந்திருப்பவர்களான மீட்கப்பட்ட இந்த இருபகுதியினரும் கர்த்தரின் இரட்சிப்படையும் இஸ்ரவேலுக்கு அடையாளமாக இருக்கும் ஒலிவ மரத்தில் இணைக்கப்படுகிறார்கள். இந்தவிதமாக விசுவாசிக்கும் மிகுந்திருக்கும் யூதர்களும், விசுவாசிக்கும் மிகுந்திருக்கும் புறஜாதியினரும் ஒரே ஒலிவ மரத்தின் இணைகின்றபோதே ரோமர் 11:26ல் சொல்லியிருக்கிறபடி ‘இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லோரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ இந்த வசனத்தில் காணப்படும் ‘இஸ்ரவேலரெல்லோரும்’ (all Israel) என்ற பதம் ஆவிக்குரியவிதத்தில் இரட்சிப்படைந்தவர்களுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இஸ்ரவேல் தேசத்தைக் குறித்தல்ல. ‘இந்தப்பிரகாரம்’ என்பது வடமொழிக்கலப்புடையதாக இருந்தாலும் சரியான மொழிபெயர்ப்பு. இது ‘இந்தவிதத்தில்’ என்ற அர்த்தத்தை சரியாகக் கொடுக்கிறது. இதன்மூலம் பவுல் எந்தவிதத்தில் எல்லா இஸ்ரவேலரும் இணைந்து ஒரே மக்களாகிறார்கள் என்பதை விளக்குகிறாரே தவிர எப்போது அது நிகழும் என்பதை இங்கே விளக்கவில்லை. ரோமர் 9:6லும் வருகின்ற மிகுந்திருக்கும் இரட்சிக்கப்படுகின்ற யூதர்களைக் குறிக்கின்ற ‘எல்லா இஸ்ரவேலரும்’ புறஜாதிகள் மத்தியில் இரட்சிக்கப்படுகின்ற முழுமையான எண்ணிக்கையோடு இணைந்து ஒரே ஒலிவ மரமாக, கர்த்தருடைய உண்மையான இஸ்ரவேலாக இருப்பார்கள். மிகுந்திருக்கும் விசுவாசிக்கும் யூதர்களையும், புறஜாதி விசுவாசிகளையும் கொண்டமையும் இந்த இரட்சிக்கப்பட்ட இஸ்ரவேலின் வாக்குத்தத்த நிறைவேற்றத்தையே ஏசாயா 59:2-21ம் எரேமியா 31:31-34ம் விளக்குகின்றன. அதையே பவுல் ரோமர் 11:26:28 வரையுள்ள வசனங்களில் சுட்டிக்காட்டுகிறார். கர்த்தரின் வாக்குத்தத்தமான ‘அவர்களுடைய பாவத்தை நான் போக்குகிறபோது இதுவே நான் அவர்களோடு ஏற்படுத்துகின்ற உடன்படிக்கை’ என்ற வார்த்தைகள் புதிய உடன்படிக்கையின் இஸ்ரவேலில், அதாவது பவுலின் வார்த்தைகளின்படி ‘எல்லா இஸ்ரவேலரிலும்’ நிறைவேறுகின்றது. நீங்கள் யூதனாக இருந்தாலும் சரி, புறஜாதியாராக இருந்தாலும் சரி, இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து, உங்களுடைய பாவங்களுக்கு அவருடைய திருஇரத்தத்தின் மூலம் மன்னிப்பு கிடைத்திருந்தால் கர்த்தருடைய மெய்யான இஸ்ரவேலான, அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் முழுத் தொகையிலும் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள். இரட்சிக்கப்படுகின்ற ஒவ்வொரு பாவியாலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கர்த்தருக்கு மகிமையுண்டாகிறது (ரோமர் 11:33-36).
நீங்கள் Replacement Theology (பதிலீட்டு இறையியல்) என்ற இறையியல் போதனையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்பது எனக்குத் தெரியாது. இந்தப் போதனை இஸ்ரவேலின் இடத்தில் திருச்சபை அமைகிறது என்று விளக்குகிறது. இது காலக்கூறு கோட்பாட்டின் அணுமானமான கர்த்தருக்குச் சொந்தமான இரண்டுவிதமான மக்கள் (இஸ்ரவேலும், திருச்சபையும்) இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தழுவி இந்த விளக்கத்தை அளிக்கிறது. இந்தப் போதனை விளக்குவதுப்போல் திருச்சபை இஸ்ரவேலை நீக்கிவிட்டு அதனுடைய இடத்தில் அமரவில்லை, மாறாக பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் மிகுந்திருப்பவர்களாக இருந்தவர்களின் புதிய உடன்படிக்கை வெளிப்பாடே திருச்சபை. இப்போது நாம் புதிய உடன்படிக்கையில் கர்த்தரின் மீட்பின் நோக்கங்களை நிறைவேற்றி முதிர்ச்சியுற்று விருத்தியடைந்திருக்கும் அவருடைய இரட்சிக்கப்பட்டிருக்கும் மக்களைக் (அவரது இஸ்ரவேலை) காண்கிறோம். அருடைய மெய்யான மக்களே இப்போது புதிய உடன்படிக்கையாக, கிறிஸ்தவ இஸ்ரவேலாக இருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டில் காணப்படும் அநேக வார்த்தைகளைப் போல, இஸ்ரவேல் என்ற வார்த்தையும் கிறிஸ்துவின் மரணத்தாலும், உயிர்த்தெழுதலாலும் மறுவரையறை செய்யப்பட்டு திருச்சபையைக் குறிப்பதற்காகப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘எல்லா இஸ்ரவேலர்’ என்ற பழைய ஏற்பாட்டுப் பதம் புதிய ஏற்பாட்டு திருச்சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ‘ஆபிரகாமின் வித்து’ என்ற பதமும் அதே அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆபிரகாமுக்கு ஒரு வித்தைக் கொடுக்கப்போவதாக கர்த்தர் வாக்குத்தத்தஞ் செய்திருந்தார். அந்த வித்து ஈசாக்கு மூலமாகக் கொடுக்கப்பட்டு விருத்தியடைந்து இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களாக இருந்தது. ஆபிரகாமுக்கு மகனாக ஈசாக்கு கொடுக்கப்பட்டதுபோல, இயேசுவே ஆபிராகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் முடிவான குறிக்கோளாக இருந்தார் (கலா 3:16). கர்த்தரின் சகல வாக்குறுதிகளும் இப்போது இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களுக்கே உரித்தானவையாக இருக்கின்றன. அவர்களே ஆபிரகாமின் சந்ததியாகவும் (வித்து) வாக்குத்தத்தின்படியே சுதந்திரராகவும் இருக்கிறார்கள். கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தில் கர்த்தரின் உடன்படிக்கையின் வாக்குறுதிகளை அடையும்படியாக விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ளவேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்த யூத வைராக்கியர்களின் போதனைகளை உடைத்தெறிகிறார் பவுல். கலாத்தியர் 4ல் பவுல், பழைய உடன்படிக்கையின் தேசிய இஸ்ரவேலை மாம்சத்தின் வழியில் ஆகாரின் மகனாகப் பிறந்த இஸ்மவேலாக உருவகித்து விளக்குகிறார். அதேவேளை கிறிஸ்தவர்களை திருச்சபையாக, சாராளுக்கு வாக்குத்தத்தத்தின் மூலம் மகனாகப் பிறந்த ஈசாக்கில் அடையாளங்கண்டு விளக்குகிறார். இங்கே இரண்டு வித்துக்களை அவர்களுடைய பிறப்பின் வழியில் காண்கிறோம். ஒன்று இந்த உலகோடு மட்டும் தொடர்புடைய வாழ்வைக் கொண்டதாக இருக்கிறது. இன்னொன்று கர்த்தரின் வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றமாக இருக்கின்றது. சாராளின் செயலிழந்துபோன கர்ப்பத்தில் அற்புதமாகப் பிறந்த ஈசாக்கைப் போலவும் (ரோமர் 4:16:21), மரித்து உயிர்த்தெழுந்தவர்களாக மாதிரிப்படிவத்தின் மூலம் சுட்டிக்காட்டியும் கிறிஸ்தவர்கள் இனங்காட்டப்படுகிறார்கள் (எபிரெயர் 11:19). இங்கே நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை, புதிய உடன்படிக்கையின் மக்கள் மறுபிறப்படைந்து ஜீவிக்கின்ற, வரப்போகும் உலகத்தில் வாழப்போகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதே. இதன் காரணமாகத்தான் பவுல் கலாத்தியரில் சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் இக்காலத்தில் அர்த்தமில்லாதது என்று தொடர்ந்து விளக்குகிறார். சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனம் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் செயலில் இருந்த ஆபிகாமின் உடன்படிக்கைக்கு அடையாளமாகவும், தேசிய இஸ்ரவேலில் ஒருவர் அங்கத்தவராக இருப்பதற்கு அடையாளமாகவும் இருந்தது. ஆனால், இப்போது புதிய உடன்படிக்கையில் விருத்தசேதனம் செய்வதோ, செய்யாமல் இருப்பதோ எந்தவிதத்திலும் பயனற்றதாக அன்பினூடாக செயல்படும் விசுவாசமே அவசியமானதாக இருக்கிறது (கலாத்தியர் 5:6). இருதயத்தில் நிகழ்கின்ற மறுபிறப்பாகிய விருத்தசேதனத்தில் மட்டுமே பவுல் அக்கறைகாட்டுகிறார். ‘ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவன் யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்திலே உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது’ என்கிறார் (ரோமர் 2:28-29). ஆவியானவர் பாவியாகிய ஒருவனின் இருதயத்தில் விருத்தசேதனத்தைச் செய்யும்போது அவன் ஜீவனை அடைந்து புதிய சிருஷ்டியாகிறான் (2 கொரி 5:17). ‘கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுமில்லை. புது சிருஷ்டியே காரியம். இந்தப்பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ அவர்களுக்கும் தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக.’ (கலாத்தியர் 6:15-16). ஒரு மனிதனின் சாதாரண பிறப்பில் எதுவுமில்லை. அவன் மறுபிறப்பை அடைந்திருக்கிறானா என்பதே முக்கியம்; அவன் புது சிருஷ்டியா, ஆவியால் மறுபிறப்படைந்து கிறிஸ்துவை விசுவாசிக்கிறானா? அந்தவிதமாக ஆவியினால் அற்புதமாக புதுசிருஷ்டியாகி இப்போது விசுவாசிக்கிறவனே கர்த்தரின் இஸ்ரவேலில் அங்கத்தவனாகி அவருடைய வாக்குத்தத்தங்களுக்கு சொந்தக்காரனாகி, எரேமியா 31:31-34 வரையுள்ள வசனங்களில் சொல்லப்பட்டிருப்பவைகளை அனுபவிக்கிறான். இதுவே ரோமர் 9-11 வரையுள்ள பகுதிகள் விளக்குகின்ற உண்மை.
எபேசியர் 2:11-22
இந்தப் பகுதியே நாம் இந்தப் போதனையைக் குறித்து கடைசியாகக் கவனிக்கப் போகிற வசனப்பகுதி. இந்தப்பகுதியில் ஆபிரகாமினதும், பழைய ஏற்பாட்டின் ஏனைய உடன்படிக்கைகளினதும் அடையாளமாக இருந்த சரீரப்பிரகாரமான விருத்தசேதனம் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அர்த்தமற்றது என்பதைப் பவுல் விளக்குகிறார். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் புறஜாதியினர் ‘கிறிஸ்துவை அறியாமலும், இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களாகவும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களாகவும்’ இருந்தார்கள் என்கிறார் பவுல் (எபேசியர் 2:12). ஆனால், அந்நிலை தொடரவில்லை. இப்போது எல்லோரும் கிறிஸ்துவுக்குள் இருந்து இஸ்ரவேலின் காணியாட்சிக்கு உரித்தானவர்களாக இருக்கிறோம். பழைய உடன்படிக்கையில் யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் இடையில் அவர்களைப் பிரிப்பதற்காக எழுப்பப்பட்டிருந்த சுவர் கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றது. (எருசலேமின் ஆலயத்தில் புறஜாதியினரை யூதர்களிடம் இருந்து பிரித்துவைப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த சுவராக அநேகர் இந்தச் சுவரைக் கருதுகிறார்கள்). இயேசு கிறிஸ்து இந்த இரு இனங்களையும் இணைத்து ஒரு புதிய மனிதனாக, புதிய மானுடமாக மாற்றியிருக்கிறார். விசுவாசிக்கின்ற யூதர்களும், புறஜாதியினருமான நாமே கர்த்தரின் ஒரே மக்களாக இருக்கிறோம்; இயேசு கிறிஸ்துவின் மூலமாக பரலோக ஆலயத்தின் பரிசுத்த தலத்தில் பிதாவின் முன்னிலையில் ஒரே ஆவியின் மூலம் நுழையும் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறோம். யூத, புறஜாதி விசுவாசிகளான நாமே கர்த்தரின் வீடு, ஆலயம், இவ்வுலகில் அவருடைய வாசஸ்தலமாக, திருச்சபையாக இருக்கிறோம். ‘ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்கேற்ற பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள். அந்தப்படியே: இதோ தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்தில் சொல்லியிருக்கிறது’ (1 பேதுரு 2:5-6 – பேதுரு இந்த வசனத்தில் உபாகமத்தில், பழைய உடன்படிக்கை இஸ்ரவேலைக் குறிக்கும் வசனத்தைப் பயன்படுத்தி இப்போதுள்ள புதிய உடன்படிக்கை மக்களை, திருச்சபையைப் பற்றிப் பவுல் பேசுகிறார்).
பழைய உடன்படிக்கை பயன்படுத்துகிற வார்த்தைகளை எடுத்து புதிய ஏற்பாடு புதிய உடன்படிக்கைத் திருச்சபையைப் பற்றி விளக்கமளிக்கிறது. ‘இப்படியிருக்க ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதியவையாயின’ 2 கொரி 5:17). இந்த வசனத்தின்படி அனைத்தையும் புதியவையாக்கியது எது? இயேசுவின் உயிர்த்தெழுதல். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலோடு புதிய சிருஷ்டி ஆரம்பமானது. அவருடைய உயிர்த்தெழுதல் எல்லாவற்றிற்கும் புதிய அர்த்தத்தைத் தந்து வேத வசனங்களுக்கு புதிய அர்த்தத்தை அளித்தது. புதிய ஏற்பாடு ஆலயத்தைப்பற்றியும், பலிகளைப்பற்றியும், ஆசாரியத்துவத்தைப்பற்றியும், தேசத்தைப்பற்றியும், வித்தைப்பற்றியும் தொடர்ந்து குறிப்பிட்டாலும் இந்தப் பதங்களெல்லாம் இயேசுவின் உயிர்த்தெழுதலால் புதிய உடன்படிக்கைக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆகவே, இப்போது நாம் எரேமியா 31:31ல் ‘இஸ்ரவேலின் குடும்பம்’ என்ற பதத்தை வாசிக்கும்போது இயேசுவின் உயிர்த்தெழுதலால் அதற்கு புதிய அர்த்தம் பிறந்திருப்பதை உணரமுடிகிறது. இந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறிய அந்த இஸ்ரவேல் கர்த்தரின் இஸ்ரவேல், கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கை இஸ்ரவேல்.
இயேசுவை விசுவாசிக்கின்ற காலக்கூறு கோட்பாட்டைப் பின்பற்றுகிற சகோதரர்கள் கிறிஸ்துவுக்குள் நம்மோடு இருப்பவர்களே. ஆனால், இஸ்ரவேலையும், திருச்சபையையும் கர்த்தருடைய இருவகை மக்களாகப் பிரித்து விளக்குகின்ற அவர்களுடைய இறுதிக்காலப் போதனைகளில் சிலவற்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வேதம் தன்னைத் தானே எவ்வாறு விளக்குகின்றது என்பதை அறிந்துகொள்ள நாம் ஆசைப்படுகிறோம். பழைய ஏற்பாட்டு வார்த்தைப்பிரயோகங்களைக் கிறிஸ்துவோடிருக்கும் ஐக்கியத்தின் அடிப்படையிலும், அவரது உயிர்த்தெழுதலின் மூலம் பெறும் இரட்சிப்பின் அடிப்படையிலும் புதிய ஏற்பாடு மறுவரையறை செய்து விளக்குவதை நாம் காண்கிறோம். கர்த்தரின் மக்களைக் குறிக்கப் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தையான இஸ்ரவேல் புதிய உடன்படிக்கையாக கிறிஸ்துவின் மக்களாகிய திருச்சபையைக் குறிக்கப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவின் திருச்சபையையே புதிய உடன்படிக்கைக் கர்த்தரின் மக்களாக தீர்க்கதரிசனமாக எரேமியா 31:31-34 வரையுள்ள வசனங்களில் விளக்கப்பட்டிருக்கின்றதென்ற முடிவுக்கு நாம் வருகிறோம். எரேமியா 31:31-34 வரையுள்ள வசனங்களின் அடிப்படையில் புதிய உடன்படிக்கை கர்த்தரின் மக்களை இந்த தொடர் ஆக்கங்களில் நாம் தொடர்ந்து ஆராயவிருக்கிறோம். கிறிஸ்துவின் சகல மக்களும் கட்டியெழுப்பப்படும்படியாக கர்த்தர் நமக்கு சத்தியத்தில் அதிக ஞானத்தையும், பகுத்தறிவையும், அத்தோடு சத்தியத்தை அன்போடு விளக்குகிற கிருபையையும், தாழ்மையையும் தரும்படியாக அவரை நாடுவோம் (எபேசியர் 4:15).
பதப்பொருள் விளக்கம்
காலக்கூறு கோட்பாடு (Dispensationalism)
உடன்படிக்கை இறையியல் (Covenant Theology)
பதிலீட்டு இறையியல் (Replacement Theology)