இது ஸ்பர்ஜன் நெடுங்காலத்துக்கு முன் தன்னுடைய இறையியல் மாணவர்களுக்கு சொன்ன வார்த்தைகள். எப்படியாவது, என்ன செய்தாவது புத்தகங்களை வாங்கி வாசிக்கத் தவறாதீர்கள் என்று அவர் தன் மாணவர்களை வற்புறுத்தத் தவறவில்லை. அவருடைய மனைவி சூசானா இதற்கென ஒரு நிதியை ஏற்படுத்தி புத்தகம் வாங்கும் வசதியில்லாதவர்களாக இருந்த போதகர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் புத்தகங்களை அனுப்பி உதவி செய்திருக்கிறார். புத்தகங்களின் அருமையை ஸ்பர்ஜன் தன் வீட்டில் கற்றிருந்தார். நல்ல காரியங்கள் எல்லாவற்றிற்கும் வீடுதான் ஆரம்பம் இல்லையா? இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நிரம்பியிருப்பது புத்தகங்கள் அல்ல; டிவியின் அலறலும், நவீன தொலைநுட்ப செய்திப்பரிமாறல் கருவிகளுந்தான். ஸ்பர்ஜனின் குடும்பத்தார் வாசிப்புக்கு முதலிடம் தந்திருந்தார்கள். ஸ்பர்ஜனின் தாத்தாவின் புத்தக அறை ஸ்பர்ஜனுக்கு பிடித்தமான ஒன்று. ஐந்து வயதிலேயே அதை நாடிப்போய் புத்தகங்களைக் கையில் எடுத்து தொட்டுத் தடவிப் பார்க்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அவருடைய சொந்த நூலகத்தில் 20,000க்கும் மேல் நூல்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவைகளை (12,000) விமர்சனம் செய்து அவரே ஒரு நூலை வெளியிட்டிருந்தார். ஐந்து வயதில் ஆரம்பித்த புத்தக வாஞ்சையும், வாசிப்பும் அவரை எந்தளவுக்கு வாழ்க்கையில் கர்த்தரின் கிருபையால் உயர வைத்தது என்பது உங்களுக்கே தெரியும்.
தான் வாசித்து பயனடைந்திருந்த நூல்களின் அருமைகளை விளக்கி தன் மாணவர்களை வாசிக்கும்படி அறிவுறுத்தி வாசிக்கவும் செய்தார் ஸ்பர்ஜன். போதகர்களுக்கான தன்னுடைய இறையியல் கல்லூரியில் கற்று வீடு திரும்பியபின் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்குள் மெத்தியூ ஹென்றியின் ஆறு வால்யூம்கள் உள்ள வேதவியாக்கியான நூல்களை முழுமையாக வாசித்து முடிக்கும்படி தன் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். புத்தகப் படிப்பை அலட்சியப்படுத்தியவரல்ல ஸ்பர்ஜன். வேதத்தில் தெளிவான ஆழமான அறிவில்லாமல் கர்த்தரோடு மேலான ஐக்கியத்தையும் உறவையும் வைத்திருக்க முடியாது என்பதை அவர் நம்பியதாலேயே வேதத்தைக் கற்றுக்கொள்ள நல்ல நூல்களின் அவசியத்தை வற்புறுத்தினார். அத்தோடு வேதத்தை விளக்கிப் போதிப்பதற்கு அவர்களுக்கு வேதத்தில் அறிவும், தெளிவும் தேவையாயிருந்தது. புத்தகங்கள் இல்லாமல் இவற்றை எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும்? ஆண்டவர் என்ன, வேதத்தின் மூலமல்லாமல் நேரடியாகப் பேசியா நமக்கு வேத அறிவைக் கொடுக்கிறார்? அல்லது நம் தலைக்குள்தான் ஒரு கம்பியூட்டர் சிப்பைப் பொருத்தியிருக்கிறாரா, நேரத்துக்கு நேரம் அறிவை நமக்கு வாரி வழங்குவதற்கு? வேதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒருவராலும் கர்த்தரைப் புரிந்துகொள்ள முடியாது; நல்ல நூல்களைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஒருவராலும் வேதத்தைப் புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் ஸ்பர்ஜன் சொன்னார், “வாசிக்க ஆரம்பியுங்கள். வாசிக்காதவனை ஒருவரும் அறிந்துகொள்ள முடியாது. பிறரிடம் கற்றுக்கொண்டவைகளைப் பகிர்ந்துகொள்ளாதவனைப்பற்றி எவரும் பேசமாட்டார்கள். மற்றவர்களின் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளாதவன் மூளை இல்லாதவன் என்பதைத்தான் நிரூபிக்கிறான். நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று பவுல் அறைகூவலிடுகிறார் – ‘புத்தகங்களைக் கொண்டுவா.’ அதில் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று ஸ்பர்ஜன் எழுதியிருக்கிறார்.
ஸ்பர்ஜன் வாரத்திற்கு ஆறு நூல்களை வாசித்திருக்கிறார். கணக்கிட்டுப் பார்த்தால் அவர் வருடத்துக்கு 300 நூல்களுக்கு மேல் வாசித்திருக்க வேண்டும். அவருடைய வாசிப்பு பன்முகத்தன்மையுள்ளதாக இருந்தது. பலதரப்பட்ட நூல்களையும் அவர் வாசித்திருக்கிறார். ‘என் மாணாக்கர்களுக்கான விரிவுரைகள்’ என்ற போதக, பிரசங்க ஊழியத்திலுள்ளவர்களுக்கு அவரெழுதிய நூல்களில் அவருடைய வாசிப்பின் பன்முகத்தன்மையைக் காணலாம். தன்னுடைய பிரசங்கங்களுக்கு அவர் பயன்படுத்தியிருக்கும் உதாரணங்கள் வேதத்தில் இருந்து மட்டும் வரவில்லை. அவர் வாசித்த நூல்கள் பலவற்றில் இருந்தும் வந்திருக்கின்றன. தன்னுடைய வாசிப்பை வேதத்தோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், வேத வியாக்கியான நூல்கள், வரலாற்று நூல்கள், விஞ்ஞான நூல்கள், அறிவியல் நூல்கள், புனைவுகள் என்று பரந்த தளத்தைக்கொண்டதாக அவருடைய வாசிப்புப் பயிற்சி இருந்தது. பழந்தமிழ் இலக்கியமான நாலடியாரில் ஒரு வரி வருகிறது, ‘தெளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்பாலுண் குருகின் தெரிந்து.’ நீரை நீக்கிப் பாலைப்பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையவர்கள் நூலின் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்பார்களாம் என்பது இந்த வரிகளுக்குப் பொருள். இந்த வரிகளுக்கொப்பவே ஸ்பர்ஜனின் வாசிப்பு இருந்தது.
அமெரிக்காவில் கிறிஸ்தவரும், செனட்டருமாக இருந்த டேனியல் வெப்ஸ்டர் தன் தேசத்தின் நிலைகுறித்துப் பேசியபோது, ‘கிறிஸ்தவ நூல்கள் மக்களைப் போயடையும்படி அதிகமாக விநியோகிக்கப்படாவிட்டால் நம்தேசத்துக்கு என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. சத்தியம் பரவலாக பரப்பப்படாவிட்டால் போலிப் போதனைகள் அதன் இடத்தைப் பிடித்துவிடும். கர்த்தருடைய வார்த்தையையும், அவரைப்பற்றிய அறிவையும் மக்கள் அடையாமல் போனால் பிசாசும், அவனுடைய செய்கைகளுமே அதிகரித்துவிடும். சுவிசேஷ நூல்கள் ஒவ்வொரு குக்கிராமத்தையும் அடையாமல் போனால், அசத்தியமானதும், கீழ்த்தரமானதுமான நூல்கள் அங்குபோய்ச் சேர்ந்துவிடும். நாடுபூராவும், பட்டிதொட்டியெல்லாம் சுவிசேஷக் கிறிஸ்தவம் தன் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டால், கலவரமும் தவறான ஆட்சிமுறையும், தாழ்வும், துன்பங்களும், அநீதியும் இருட்டும் குறையாமலும், இறுதிவரை முடிவில்லாமலும் ஆளத்தொடங்கிவிடும்’ என்று கூறியிருக்கிறார். இதெல்லாம் வெறும் வார்த்தைகளா என்ன?
சில பிரசங்கிகளுக்கு புத்தகமென்றாலே அலர்ஜி. வாசிக்க விருப்பமில்லை என்று வெளிப்படையாக சொல்லுவதைவிட்டுவிட்டு, ‘ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது’ என்றும், அதிகப்படிப்பு ஆவியற்ற அறிவுஜீவியாக்கிவிடும் என்றும் எகத்தாளம் பண்ணுவார்கள். இவர்களுக்கு புத்தக அலர்ஜி இருப்பதற்கு படிப்பறிவு இல்லாதது ஒருகாரணமாக இருக்கலாம். அல்லது தொடர்ச்சியான வாசிப்பை பழக்கத்தில் கொள்ளாமல் இருந்திருப்பது காரணமாக இருக்கலாம். தெளிவான இறையியல் ஞானமோ, அதில் ஆர்வமோ இல்லாதது ஒருகாரணமாக இருக்கலாம். ஏன், சோம்பலும் இதற்கு ஒரு பெருங்காரணம். எதுகாரணமாக இருந்தபோதும் பிரசங்கியொருவன் புத்தகங்களின் அவசியத்தை அலட்சியப்படுத்துகிறானெனில் அவனுக்கு கிறிஸ்தவத்தைப்பற்றிய சரியான, தெளிவான ஞானமில்லை என்றுதான் அர்த்தம். புத்தகங்களின் துணையில்லாமல் வேதத்தில் பாண்டித்தியம் பெற்ற பிரசங்கிகளைக் கண்டுபிடிப்பதும், குதிரைக்கொம்பு தேடுவதும் ஒன்றுதான். ‘என் வாழ்நாளில் நான் புத்தகங்கள் வாசிக்காத பிரசங்கிகளைக் கண்டது மிகக்குறைவு’ என்று ஜோன் வெஸ்லி சொல்லியிருக்கிறார்.
அறிவு இருக்கின்ற இடத்தில் ஆவியானவர் இருக்க வழியில்லை என்று நினைப்பது அடிமுட்டாள்தனம். இந்த எண்ணம் அநேக கிறிஸ்தவர்களின் இருதயத்தில் பதிந்திருக்கிறது. ஆவியானவர் அறிவைக் கொடுக்கின்றவர், அறிவை நோக்கி வழிநடத்துகின்றவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆவியானவர் வருகின்றபோது ‘நான் போதித்தவற்றை உங்களுடைய நினைவுக்குக் கொண்டுவருவார்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஆவியானவரே சத்தியவேதத்தின் உண்மைகளை நமக்குப் புரியவைக்கிற சத்திய விளக்கவுரையாளராக இயங்குகிறார். அவரில்லாமல், அவரால் வழிநடத்தப்படாமல் சத்தியம் நமக்குப் புரியாது. சத்தியத்தில் தெளிவேற்படுத்துகிறவர் அறிவை அலட்சியப்படுத்துவாரா? கிறிஸ்தவ அறிவில் நாம் வளர வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோளாக இருக்கிறது. அவரே நமக்குள்ளிருந்து நம்முடைய பரவலான வாசிப்பிலும் நமக்குத் துணைசெய்கிறவராக இருக்கிறார். சத்திய வேதம் நமக்கு நூலாகத் தரப்பட்டிருக்கிறது. அதன் விளக்கவுரையாளராக இருக்கும் ஆவியானவருக்கு புத்தகங்கள் எப்படிப் பிடிக்காமல் போகும்? நூல்களை நாம் வாசிப்பது கர்த்தருடைய அறிவில் வளரத்தான். அந்த அறிவு வேதத்தோடு மட்டும் நின்றுவிடுகிறது என்று நினைப்பது ஒருவருடைய அறிவின்மையைக் காட்டுகிறது.
வேதம் கர்த்தருடைய சிறப்பான வெளிப்பாடாக (special revelation) இருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசிக்க சிறப்பான வெளிப்பாடு அவசியம். அதேநேரம் கர்த்தர் பொதுவான வெளிப்பாட்டின் மூலம் (general revelation) மனிதர்களோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். பொதுவான வெளிப்பாட்டால் விசுவாசத்தைத் தரமுடியாது. ஆனால், கர்த்தர் இருப்பதையும், அவரைப்பற்றியும் அது நமக்கு சாட்சியாக இருக்கிறது. இயற்கையை கிறிஸ்தவன் கவனிக்காமலும், படிக்காமலும் இருந்தால் கர்த்தரின் மேன்மையைக் கண்களால் பார்த்து உணர்ந்து அவரைப் போற்ற வழியேது? வரலாற்றை அவன் கற்றுக்கொள்ளாவிட்டால் கர்த்தரின் மீட்பின் வரலாற்றையும், அவருடைய மகத்துவ செயல்களையும் அவன் அறிந்து களிகூர வழியேது? கர்த்தரின் மனிதர்களான சீர்திருத்தவாதிகளினதும், பியூரிட்டன் பெரியவர்களினதும் ஆக்கங்களில் ஆர்வம் கொண்டு வாசிக்காவிட்டால் அவர்களைப் பயன்படுத்தி கர்த்தர் நமக்குப் போதிக்கும் பெரும் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள வழியேது? ஆவியானவர் இவற்றின் மூலமாக நம்மில் வேதஞானம் பெருகும்படிச் செய்கிறார் என்பதை உணராமல் வாழ்கிறவர்களின் இழப்பு மிகப்பெரியது?
திருமறைத்தீபம் இதழொன்றை வாசித்துவிட்டு இந்தளவுக்கு ஆழமாக வேதத்தைப் படிக்கவேண்டுமா? சாதாரணமாக கிறிஸ்தவ விசுவாசத்தையும், மனந்திரும்புதலையும் மட்டும் ஆத்துமாக்கள் தெரிந்துகொண்டால் போதுமே என்று ஓர் ஊழியக்காரர் சொன்னாராம். பரிதாபம்! அவருக்காகவும், அவர் ஊழியம் செய்துவரும் மக்களுக்காகவும் நான் அனுதாபப்படுகிறேன். வேறொருவர், ‘தபாலில் வருகின்ற எத்தனையோ புஸ்தகங்களை வாசிக்கவேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொண்டாராம். நாம் கேட்டு எழுதாமல் தபாலில் நம்மை வந்தடைகின்றவற்றையெல்லாம் வாசிக்க வேண்டுமா என்ன? வெறும் தியானச் செய்திகளைத் தாங்கிவரும் சாம் ஜெபத்துரை போன்றோரின் உப்புச்சப்பில்லாத எண்ணங்களையும், சுயவிளம்பரத்தோடு ஊழியத்துக்கு பணம்கேட்டு பேங்க் அக்கவுண்ட் விபரங்களோடு வரும் சிறுபத்திரிகைகளையும், வாக்குத்தத்த வசனங்களை அவை எங்கு, எதற்கு, யாருக்கு கொடுக்கப்பட்டவை என்ற எந்த அறிவும் இல்லாமல் சகலருக்கும் பஞ்சாமிர்தம்போல் அள்ளி வழங்கும் சூர்ப்பணகைப் பத்திரிகைகளையும் வாசித்து என்ன ஆகப்போகிறது? அது எந்த வேதஞானத்தை உங்களுக்குக் கொடுக்கப்போகிறது? ‘பணமே கொடுக்காமல் எதுவும் கிடைக்குமானால் சவுகரியமாக இருக்கும்’ என்றாராம் இன்னொருவர். இந்தப் பேச்செல்லாம் வாசித்து அறிவை அதிகரித்துக்கொள்ள விரும்புகிறவர்கள் பேசுகிற பேச்சல்ல; இது வெறும் அலட்சிய மனப்பான்மை மட்டுமே.
கிறிஸ்துவைப் பிரசங்கித்ததற்காகத் தன் வாழ்நாளில் பன்னிரெண்டு வருடங்களை சிறையில் கழித்திருந்தார் ஜோன் பனியன். அவருடைய சிறந்த எழுத்துக்களெல்லாம் சிறைவாசத்தின்போதே உருவாயின. இதை மனதில் வைத்துக்கொண்டு என் நண்பரொருவர் ஒருமுறை என்னைப் பார்த்து, “பாஸ்டர் நீங்கள் சிறையில் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “என்ன இப்படிச் சொல்லிவிட்டீங்க” என்றேன். என் முகமாற்றத்தைக் கவனித்து ஒருகணம் திகைத்துப்போன அவர், “பாஸ்டர், நான் சொன்னதை தப்பாக எடுத்துக்கொள்ளாதீங்க, ஜோன் பனியனைப் போல நீங்களும் நல்ல இலக்கியங்களை எங்களுக்கு எழுதிக் கொடுத்துதவலாமே என்ற ஆர்வக்கோளாறால் அப்படிச் சொல்லிவிட்டேன்” என்றார். நானும் என்னைச் சுற்றியிருந்தவர்களும் அதைக்கேட்டுக் குபீரெனச் சிரித்தோம்.
ஜோன் பனியன் இருபது வயதில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பள்ளிப்படிப்பெல்லாம் கிடையாது. இருந்தாலும் வாசிக்கவும் எழுதவும் தானாகவே கற்றுக்கொண்டார். அவருடைய மனைவி புத்தகங்கள் வாசிப்பவர். நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் இருந்து வந்திருந்த அவரிடம் இரண்டு கிறிஸ்தவ நூல்கள் இருந்தன. பனியன் அவற்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அக்காலத்தில் பனியனுக்கு தன்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தைக் குறித்து சமாதானம் இருக்கவில்லை. கடும் முயற்சி செய்து ஒழுக்கத்தோடு இருக்க அவரால் முடிந்தபோதும் இரட்சிப்பைக் குறித்த சந்தேகம் உள்ளத்தை வாட்டியது. மார்டின் லூத்தர் கலாத்தியர் நிருபத்துக்கு எழுதிய வியாக்கியான நூலை அவர் வாசித்தபோதுதான் விசுவாசத்தின் மூலமாக மட்டும் நீதிமானாக முடியும் என்பதை ஆவியின் மூலமாக அனுபவரீதியாக உணர்ந்தார். அன்று அவருக்கு சமாதானம் கிட்டியது. இப்படி எத்தனை பேர் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாசித்ததன் மூலமாக கிறிஸ்துவை விசுவாசித்தும், கிறிஸ்தவ அனுபவத்தில் வளர்ந்தும் இருக்கிறார்கள் தெரியுமா?
பனியன் சிறைக்குப் போனதற்குக் காரணம் கிறிஸ்துவைப் பிரசங்கித்ததுதான். பலரைச் சிறையில் இருந்து விடுதலை செய்த இரண்டாம் சார்ள்ஸ், பனியனை மட்டும் விடுவிக்கவில்லை. சிறைவாசத்தின்போதே பனியன் தன்னுடைய அறுபது நூல்களில் பெரும்பாலானவற்றை எழுதினார். எழுதுவதற்கு சிறையில் அவருக்கு அனுமதி இருந்தது. அக்காலத்தில் சிறைவாசம் கொடியது. அதிக வெளிச்சத்துக்கும், சுகாதாரத்துக்கும் அங்கு இடமிருக்கவில்லை. அரை கிலோ ரொட்டி மட்டுமே அவருடைய ஒரு நாள் உணவு. கொடிய நோய்கள் சிறையில் அநேகரின் உயிரை மாய்த்திருக்கின்றன. இந்தக் கோரமான சிறைவாசத்தின்போதே அவர் ‘மோட்ச பிரயாணத்தையும்’, ‘பாவிகளில் பெரிய பாவிக்குக் கிடைத்த அளப்பரிய கிருபை’ என்ற பிரபலமான நூல்களை எழுதினார்.
எழுத்துக்கூட்டி வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருந்த ஜோன் பனியன் வாசிப்பதைப் பயிற்சியாகக் கொண்டிருந்து சிந்திக்காதவராக இருந்திருந்தால் இத்தகைய எழுத்துப்பணியாற்றி இருக்க முடியாது. அவருடைய வாசிப்பும், எழுத்தும் கிறிஸ்துவை மேன்மேலும் அறிந்துகொள்ளுவதையும், அவரைப் பிரசங்கிப்பதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. வேதத்துக்கு அடுத்தபடியாக பனியன் சிறையில் பல தடவைகள் வாசித்த நூல், பொக்ஸ் எழுதிய ‘இரத்தப்பலியாய் மரித்தவர்களின் சரிதம்.’ மோட்ச பயணத்தைக்கூட நூலாக வெளியிடும் நோக்கத்தோடு அவர் எழுதவில்லை; தன்னுடைய சந்தோஷத்துக்காகவும், நன்மைக்காகவுமே எழுதினேன் என்று அவரே குறிப்பிட்டிருக்கிறார்.
ஒருமுறை பென்சில்வேனியாவில் இருக்கும் பிரின்ஸ்டன் இறையியல் கல்லூரிக்குப் போன அனுபவத்தை திருமறைத்தீபம் இதழில் எழுதியிருக்கிறேன். பேராற்றல் வாய்ந்த இறையியல் வல்லுனர்களும், பிரசங்கிகளுமான ஆர்ச்சிபால்ட் அலெக்சாண்டர், சார்ள்ஸ் ஹொட்ஜ், ஆர்ச்சிபால்ட் அலெக்சாண்டர் ஹொட்ஜ், பென்ஜமின் வார்பீல்ட், கிரேஷம் மேய்ச்சன் போன்றோர் வாழ்ந்தும், போதித்தும், எழுதியும், உலாவியும் வந்திருந்த அந்தப் புனித தளத்தில் கால்பதித்து நடந்துபோனது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அங்கிருந்த பியூரிட்டன் பெரியவர்கள் பயன்படுத்திய நூலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பெரிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஆர்வத்தோடு போனபோது அந்த நூலகம் என்னைத் திகைக்க வைத்தது. எண்ணி இருபத்தைந்து முப்பது நூல்கள்தான், அதுவும் உருவத்தில் மிகச்சிறியவை அங்கிருந்ததைக் கவனித்தேன். பியூரிட்டன் பெரியவர்கள் பயன்படுத்தும்படி இருந்த நூல்கள் அத்தனையே. ஆனால் அதுவல்ல நான் சொல்ல வருவது. குறைந்தளவான அந்த நூல்களைப் பயன்படுத்தி வைராக்கியத்தோடு கற்றும், வாசித்தும் வளர்ந்த அந்த ஜாம்பவான்கள் எத்தனை ஆசீர்வாதமான ஆவிக்குரிய கிறிஸ்தவ இலக்கியங்களையும், தேர்ந்த வழித்தோன்றல்களையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் தெரியுமா? குறைந்தளவாக இருந்த அந்த சிறப்பான நூல்களே 17ம் நூற்றாண்டின் மாபெரும் எழுப்புதலுக்கு வழிகோலின. ஜோன் ஓவன், ஜோன் பிளேவல், ரிச்சரிட் சிப்ஸ் போன்றோரையும் இன்னும் அநேகரையும் எழுத வைத்தன. ‘நூல்களைக் கொண்டு வா’ (2 தீமாத்தேயு 4:13) என்று சிறையிலிருந்த பவுல் தீமோத்தேயுவுக்கு ஏன் சொன்னார் என்று இப்போது புரிகிறதா?
கிறிஸ்தவ இலக்கியங்கள் அருகிக் காணப்பட்டு, வாசிப்பு பெருமளவிற்கு இல்லாமலிருக்கும் இன்றைய கிறிஸ்தவ சூழலை ஆவிக்குரிய எழுப்புதலின் காலமாக எண்ணுவதைப்போன்ற மடமைத்தனம் வேறொன்றில்லை. நாம் வாழுகின்ற இன்றைய தமிழ் கிறிஸ்தவ சூழல் ஆவிக்குரிய எழுப்புதல் பற்றிய அரிச்சுவடியும் அறியாத அறியாமையின் காலப்பகுதி. பால் தினகரனையும், மோகன் சி. லாசரஸையும், பால் தங்கையாவையுந்தான் எழுப்புதல் பிரசங்கிகளாகத் தமிழ் கிறிஸ்தவம் எண்ணிப் பின்பற்றுமானால் நாம் ஆவிக்குரிய முழுப்பஞ்ச காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்ல முடியும். வேதப்பிரசங்கத்துக்கு அறவே இடங்கொடுக்காமல், அல்லேலூயா சொல்லியும், பாட்டுக்கச்சேரி நடத்தியும், வாக்குத்தத்த வசனங்களை மட்டும் வாரியிரைத்து, உணர்ச்சிகளுக்குத் தூபம்போடும் ஒருவகை கிறிஸ்தவ மாயையை மக்களை மயக்கி உருவாக்கிவிட்டிருக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கம் தொடரும்வரை எழுப்புதல் நம்மை எட்டிப் பார்க்கக்கூட வழியில்லை. நாம் வாசிக்கின்ற தமிழ் வேதத்தில் ஆயிரக்கணக்கான வடமொழிசார்ந்த, புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமலும், வேதத்தைப் ஆழமாக ஆராய்ந்து படித்துப் பயன்படுத்தாமலும் இருக்கும் சமூகம் கர்த்தரின் சித்தத்தைத் தெளிவுற அறிந்திருக்க வழியேது? பிரசங்கம் வெறும் சாட்சியாகவும், கதையாகவும், உப்புச்சப்பில்லாத வெறும் அசட்டுப் பேச்சாகவும் தொடர்ந்திருக்கும்போது கிறிஸ்தவம் தலைநிமிர்ந்து நிற்க வழியேது? இப்போது புரிகிறதா, ஏன் வாசிக்கும் பழக்கம் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தில் இல்லை என்று?
வாசிப்புக்கு பெற்றோர் வீட்டில் அத்திவாரத்தைப் போடாமல் அதை வேலைவெட்டி இல்லாதவனின் பொழுதுபோக்காக அலட்சியப்படுத்தி வருகிறார்கள். ஒரு நூலைக்கூட அவர்கள் ஒழுங்காக வாழ்க்கையில் வாசித்திருக்க மாட்டார்கள். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரீட்சைக்காக நூல்களையும், கேள்விக்கான பதில்களையும் மனனம் செய்வதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். சிந்திப்பதற்கு படிப்பில் இடம் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் வாழ்க்கையில் கட்டுரை எழுதிப்பழகியதில்லை. அதற்கெல்லாம் கல்வி ஸ்தலங்களில் இடமில்லை. போதகர்களும், திருச்சபைகளும் வாசிப்பை அறவே ஊக்கப்படுத்துவதில்லை. இந்தச் சமூகசூழலில் வளரும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் இளம் வாலிபர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கின்றது. பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட ஒரு சிறு நூலைக்கூட வாசித்து கருத்துச்சொல்ல முடியாமல் தவிக்கும் நம்மவர்களைப் பார்த்து நான் மனம்நொந்து போயிருக்கிறேன். அதையும்விட மனக்கஷ்டத்தைக் கொடுப்பது தமிழில் எழுத்துப் பிழையின்றி இலக்கணச் சுத்தமாக ஒரு பத்திகூட எழுதத் தெரியாமல் அநேகர் இருப்பது. எனக்கு வரும் வாசகர்கள் பலரின் கடிதங்களே இதற்குச் சாட்சி.
நம்மினத்தில் விஷயங்களைப் பெற்றுக்கொள்ளப் பயன்படும் ஊடகங்களாக இன்றைக்கு டி.வியும், இணையமுமே இருக்கின்றன. அவற்றிலும் எழுத்தைவிடக் காட்சிக்கும், படங்களுக்குமே பெரும்பாலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சமூகத்தில் வாசிப்பிற்கு இடறலேற்படுத்தி வைத்திருப்பது இந்தவிதமாகக் கண்ணுக்கும், காதுக்கும் மட்டும் வேலைகொடுக்கும் அனுதின நடவடிக்கைகளே. சினிமாவும், டி.வியும், இணையமும் இதற்கு வழிகோலியிருக்கின்றன. மேலைநாட்டாரும் இந்தப் பிரச்சனையை உணராமல் இல்லை. வாசிப்பது எப்படி? என்ற தன்னுடைய நூலில் மோர்டிமர் ஜே. அட்லர் சிந்திக்கவேண்டிய உண்மையொன்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘வாசிப்பு பிரச்சனையாக உருவெடுத்திருப்பதற்கு ஒரு காரணம் ஊடகங்கள் சிந்தனைக்கு இடமில்லாதபடி செய்திருப்பதுதான். வாசகன் சிந்திப்பதற்கு வழியே இல்லாமல் மிகத்திறமையாக அறிவுஜீவிகளைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தைப் பற்றிய சகல ஆய்வுகளையும், கணக்கீடுகளையும் செய்து தீர்க்கமான முடிவுகளோடு ஊடகங்கள் வாசகனுக்கு முன் வைக்கின்றன. ஒரு விஷயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளுவதற்கான எந்த உழைப்பும் இல்லாமல் சுலபமாக முடிவெடுப்பதற்கு வாசகனுக்கு அது வசதியானதாக இருந்துவிடுகிறது. உண்மையில் வாசகன் அந்த விஷயத்தைப் பற்றி முடிவே எடுக்கவில்லை. யூஎஸ்பி ஸ்டிக்கில் பதிவுசெய்யப்பட்ட ஓர் ஆய்வினை கம்பியூட்டரில் போட்டுப் பார்ப்பதைப்போல அதை அவன் மனதில் பதிவுசெய்திருக்கிறான். பட்டனைத் தட்டி ஒரு கோப்பை மறுபடியும் திருப்பிப்பார்ப்பதுபோல் அந்த விஷயங்களை தேவைக்கேற்ப பார்த்துப் பயன்படுத்திக்கொள்கிறான். சிந்திப்பதற்கே எந்த அவசியமுமில்லாமல் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்கிறான்’ என்று எழுதியிருக்கிறார் மோர்டிமர் அட்லர். வாசகன் சிந்தனையை ஓரங்கட்டி வைக்கவே ஊடகங்கள் உதவுகின்றன.
இதனால் என்றுமில்லாத வகையில் இன்று வாசிப்பு அருகிக் காணப்படுகிறது. தமிழில் பிரபல எழுத்தாளர்களே தலையிலடித்துக்கொள்ளும் அளவுக்கு வாசிப்பு தாழ்ந்த நிலையை அடைந்திருக்கிறது. தமிழில் மூன்று பிரபல எழுத்தாளர்கள் ஆயிரம் புத்தகங்களை விற்பதே அத்தனைப் பாடாக இருக்கிறது என்று ஆசுவாசத்தோடு அங்கலாய்க்கிறார்கள். ஓர் எழுத்தாளர் எழுதிய சினிமா விமர்சனத்துக்கு அறுநூறு பாராட்டுக் கடிதங்கள் வந்ததாம். அதே சமயத்தில் வெளிவந்த மூன்று நூல்களைப்பற்றி ஒருவரும் ஒரு வார்த்தை எழுதவில்லையாம். ‘காதுக்கும் கண்ணுக்கும் மட்டுந்தான் வேலையா, மூளைக்கு இல்லையா’ என்று அவர் மனக்கஷ்டத்தோடு புலம்பியிருக்கிறார். இந்தளவுக்கு வாசிப்பதும், எழுதுவதும் நம்மத்தியில் தாழ்ந்த நிலையில், குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும்போது அதை ஊக்குவித்து வளர்ப்பதெப்படி?
எதை, எப்படி வாசிப்பது?
‘புஸ்தகங்களையும், விசேஷமாக தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டு வா’ என்று பவுல் சிறையிலிருந்து தீமோத்தேயுவுக்கு எழுதிய வார்த்தைகளை வைத்து ஓர் ஆக்கத்தை எழுதிய நண்பர் வென்டூரா இந்த வசனங்களுக்கு ஸ்பர்ஜனும், ஜோன் கல்வினும் தந்திருக்கும் விளக்கங்களை நினைவுறுத்துகிறார்.
“அப்போஸ்தலனாக இருந்தபோதும் அவர் வாசிக்க வேண்டும். . . . தேவ ஆவியின் வழிநடத்தலைப் பெற்றிருந்தபோதும் பவுல் புத்தகங்களை நாடினார்! முப்பது வருடங்களுக்குக் குறையாமல் பிரசங்க ஊழியத்தைச் செய்திருந்தபோதும் அவருக்கு இன்னும் புத்தகங்கள் தேவையாக இருந்தது! நேரடியாக ஆண்டவரைக் கண்ணால் கண்டிருந்தபோதும் அவருக்குப் புத்தகங்கள் தேவையாக இருந்தது! மற்ற மனிதர்களைவிட அவருக்குப் பரந்த அனுபவம் இருந்தபோதும் புத்தகங்களை அவர் தேடினார்! சாதாரண மனிதர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாத மூன்றாம் வானத்தைத் தரிசிக்கும் அனுபவம் அவருக்குக் கிடைத்திருந்தபோதும் புத்தகங்கள் அவருக்கு அவசியமானதாக இருந்தது! தீமோத்தேயுவுக்கும் ஒவ்வொரு பிரசங்கிக்கும் அவர் சொல்லுகிறார், ‘வாசிப்புக்கு உங்களை ஒப்புக்கொடுங்கள்.’” (2 தீமோ 4:13 வசனத்திலிருந்து ஸ்பர்ஜன் செய்த ஒரு பிரசங்கத்தின் பகுதி).
‘மரணத்தை எதிர்நோக்கியிருந்த நிலையிலும் பவுல் புத்தகங்களைத் தேடுவதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. நன்றாக வளர்ச்சியடைந்துவிட்டோம் இனிமேல் செய்யவேண்டியதொன்றுமில்லை என்று நினைத்து வாழ்கிறவர்கள் எங்கே? இவர்களில் எவரால் தன்னைப் பவுலோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? தங்களுடைய சொந்தக் கருத்துக்களை தெய்வீக வெளிப்படுத்தல்களாக தம்பட்டமடித்து, புத்தகங்களை நிராகரித்து சகலவிதமான வாசிப்பையும் கண்டனம் செய்கிறவர்களின் முட்டாள்தனத்தை இந்த வார்த்தைகள் மறுதலிக்கின்றன. கிறிஸ்தவர்கள் எல்லோரும் தாங்கள் பயனடையும்படித் தொடர்ந்து வாசிப்பதைப் பழக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதையே இந்தப் பகுதி சிபாரிசு செய்கிறதென்பதை நாம் உணர வேண்டும்’ என்கிறார் ஜோன் கல்வின்.
வாசிப்புப் பயிற்சிபற்றி தரவிருக்கும் செய்முறை ஆலோசனைகளை நான் போதகர்களையோ, இறையியல் மாணவர்களையோ மட்டும் கருத்தில் கொண்டு கொடுக்கப்போவதில்லை. வாசிப்பு சமுதாயத்தின் சகல தரப்பினருக்கும் அவசியமானது. சமுதாயத்தை சிந்திக்க வைப்பது, உயர்த்துவது வாசிப்பு. ஆதலால், கிறிஸ்தவர்கள் அனைவரும் வாசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஆணும், பெண்ணுமாக அந்தப் பயிற்சியில் சீர் பெறுவது அவர்களையும், திருச்சபையையும் உயர்த்தும். தாழ்ந்த நிலையில் இருக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் குத்து விளக்கேற்றி வைத்ததுபோலிருக்கும். வாசிப்புப் பயிற்சியோ அதற்கான ஆழமான போதனைகளோ இல்லாத கல்விமுறை அமைப்பின் கீழ் நம்மவர்கள் கற்று வளர்ந்து வந்திருப்பதால் வாசிப்பைப் பற்றிய அரிச்சுவடி விளக்கத்தில் இருந்து இந்த ஆலோசனைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.
இந்த ஆலோசனைகள் கிறிஸ்தவ நூல்கள் வாசிப்பதைப்பற்றியது மட்டுமல்ல. ஆவிக்குரிய வளர்ச்சிக்கு கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ நூல் வாசிப்பில் அதிக அக்கறை காட்டவேண்டுமென்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும், கிறிஸ்தவ வாசகன் பரவலான வாசிப்புப் பயிற்சியைக் கொண்டிருப்பது அவசியம். அவனுடைய சிந்தனை கிறிஸ்தவ வேதத்தை அடிப்படையாகக் கொண்டு சகலத்தையும் ஆராயும் சிந்தனையாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ வாசகனுக்கு வேத அறிவு மட்டுமல்லாமல் பொது அறிவு, மொழி, இலக்கியம், அறிவியல், சமூகம் ஆகியவற்றிலும் பரிச்சயம் அவசியம். ஆகவே, ஆரோக்கியமான வாசிப்பைப்பற்றியதாக இந்த ஆலோசனைகள் அமையும்.
1. வாசிப்பு என்றால் என்னவென்பதை அறிவுப்பூர்வமாக உணர்ந்திருக்க வேண்டும்
வாசிப்பு ஒரு கலை. நமக்கு மொழி தெரிகிறதென்பதற்காக வாசிப்பு சும்மா வந்துவிடாது. வயலினைக் கையில் வைத்திருக்கிற அனைவராலும் அதை வாசித்துவிட முடிகிறதா? அதேபோல ஒருவருக்கு மொழி தெரிந்திருக்கிறது, அவர் கையில் புத்தகம் இருக்கிறது என்பதற்காக அவர் வாசிக்கிறார் என்று அர்த்தமில்லை. வாசிப்பு, பழக்கத்தில் இருக்க வேண்டிய ஒரு முயற்சி. அதனால்தான் மேலைநாடுகளில் பெற்றோர்களும், கல்வி ஸ்தலங்களும் பிள்ளைகளுக்கு மிகச்சிறுவயதிலேயே வாசிப்பைக் கற்றுக்கொடுக்கிறார்கள்; அவர்களை வாசிக்கத்தூண்டி புத்தகங்களைக் கொடுத்து வாசிக்க வைக்கிறார்கள். மேலைத்தேசங்களில் இது சாதாரணமாக நிகழ்கிறது. அவர்களுடைய கல்வியின் அடிப்படை அம்சமாக வாசிப்பதும், எழுதுவதும் இருந்துவந்திருக்கிறது. (இந்நிலைமையில் அங்கும் இப்போது பிரச்சனைகள் இல்லாமலில்லை.) இருந்தபோதும் அந்நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கிறபோது பொதுவாகப் பெற்றோர்களும், கல்வி ஸ்தலங்களும் நம்மினத்தில் இதை முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கவில்லை. வீட்டில் ஆரம்பித்து பள்ளியில் உரம்போட்டு வளர்க்கப்பட்டிருக்காத நிலையில் வாசிப்பு என்பது எவருக்கும் இயற்கையாகவும், சுலபமாகவும் வந்துவிடாது.
ஓர் ஆக்கத்தின் பத்தியை வாசித்து அதன் பொருளை விளங்கி விளக்கிச் சொல்ல முடியாமல் தவிக்கும் போதகர்களை நம்மினத்தில் நான் சந்தித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கத்தைத் தொட்டில் பழக்கமாகக் கொள்ளாததால் வந்த தொல்லை இது. வாசிப்பதையும், சிந்திப்பதையும் அவர்கள் வாழ்க்கையில் வளர்த்துக்கொள்ளவில்லை. அவிசுவாசியாக இருந்த காலங்களில் ஒன்றையும் வாசித்திராமல், விசுவாசியாக வந்தபின் ஆவிக்குரியவற்றையும் வாசிக்காமல் ஒருவருக்கும் பிரயோஜனம் இல்லாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். இவர்களைப் போன்றோரே வேதத்தை விட்டுவிட்டு பாட்டு, கச்சேரி, உபவாச ஜெபம், பிணி தீர்த்தல் என்று வாசிப்புக்கும், வேத அறிவுவளர்ச்சிக்கும் இடமில்லாத செயல்களில் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
வாசிப்பதற்கு ஓரளவுக்கு மொழியறிவு அவசியம். பேசுவதற்கு உதவும் பேச்சுத் தமிழ் மட்டும் வாசிப்புக்குப் போதுமானது என்று எண்ணிவிடக்கூடாது. மலேசியாவிலும், தமிழகத்திலும் ஒரு பிரச்சனையைக் கவனித்திருக்கிறேன். சொந்த மொழியென்று ஒன்றிருந்தும் கல்வி கற்பது வேறொரு மொழியாக இருப்பதால் எந்த மொழியிலும் முறையான, முழுமையான பயிற்சி இல்லாமல் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். மலேசியாவில் தமிழர்களாக இருக்கிறவர்கள் மலே மொழியில் கல்வி கற்கிறார்கள். அவர்களால் தமிழ் பேச முடிந்தாலும் எழுதுவதும் வாசிப்பதும் மலே மொழியாக இருக்கிறது. அதுவும் அந்த மொழியையும் அரைகுறையாகவே கற்றிருக்கிறார்கள். தமிழில் வாசிப்பதும் எழுதுவதும் அநேகருக்கு அங்கு பிரச்சனையாக இருக்கிறது. இதனால் அவர்கள் மத்தியில் வாசிப்பு பின்தங்கிக் காணப்படுகிறது. இந்த நிலைமையை தமிழகத்திலும் காணலாம். கல்லூரிக்குப் போகும்வரை தமிழில் படித்துவிட்டு, கல்லூரியில் மொழி தெரியாமலேயே ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பிக்கும் வித்தை இங்கு நிகழ்கிறது. இதெல்லாம் அரைகுறையான மொழியறிவைக் கொண்டிருக்க மட்டுமே உதவும்.
வாசிப்பதற்கு வார்த்தைகள் அதிகம் தெரிந்திருக்க வேண்டும். நூலில் காணப்படும் வார்த்தைகளுக்குப் பொருள் தெரியாவிட்டால், அந்த வார்த்தைகளில் பரிச்சயம் இல்லாவிட்டால் வாசிப்பு தடைப்படும். இது அநேகரில் காணப்படும் குறையாக இருக்கிறது. தமிழ்மொழி தாய்மொழியாக இருப்பவர்களும் மிகக்குறைந்தளவான வார்த்தைகளையே பேச்சிலும் எழுத்திலும் கையாளுகிறார்கள். பொதுவாகவே நாம் கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் தமிழில் இருக்கும் கிறிஸ்தவ நூல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ‘வேதக் கிறிஸ்தவ மொழி நடை.’ தமிழ் வேதத்தை ஒத்த நடை அது. அதற்குக் காரணம் தமிழ் இலக்கிய வாசிப்பின்மையும், வார்த்தைப் பஞ்சமும்தான். சமீபத்தில் மறைந்த எழுத்து வேந்தனாகிய ஜெயகாந்தன் பள்ளிக்குப் போகாவிட்டாலும் ஐந்து வயதில் தமிழில் சரியாக எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் அன்றைய தலைவர்களில் ஒருவராகவும், இலக்கியவாதியாகவுமிருந்த ஜீவா அவரைத் தமிழைப் பிழையில்லாமல் எழுதவும், தமிழிலக்கியங்களை வாசிக்கவும் வைத்தார். ஜெயகாந்தனின் ஆரம்ப வாசிப்பு நூல்களாக பழந்தமிழ் இலக்கியங்களும், பாரதியாரின் கவிதைகளும் இருந்திருக்கின்றன. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் வார்த்தைகளை நமக்குக் கொடுப்பது நம்மொழியில் இருக்கும் இலக்கியங்களே. இலக்கியவாசனையும், வாசிப்பும் ஜெயகாந்தனுக்கு வார்த்தைகளில் பரிச்சயத்தை உண்டாக்கி வார்த்தைகளை உருவாக்கவும் உதவியிருக்கிறது. வில்லியம் கேரி வாலிப வயதில் கிரேக்கத்தையும், இலத்தீன் மொழியையும் கற்றுக்கொள்ள அது சம்பந்தமான இரு சிறு நூல்களைத் தேடிப்பெற்று வார்த்தைகளுக்கு கஷ்டப்பட்டுப் பொருளறிந்து மனனம் செய்து வந்திருக்கிறார்.
வாசிப்பு நுனிப்புல் மேய்வதாக இருக்கக்கூடாது. அதைத்தான் அநேகர் வாசிப்பாக இன்று கருதி வருகிறார்கள். நுனிப்புல் மேயும் வாசிப்பில் ஈடுபடுகிறவர்கள் வெகுவேகமாக ஒரு நூலை மேற்போக்காக மேய்ந்துவிட்டுப் போயிருக்கிறார்களே தவிர உண்மையில் ஆழமான, ஆரோக்கியமான வாசிப்பில் ஈடுபடவில்லை. வாசித்ததைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டால் போதும் அவர்களுடைய வாசிப்பின் அருமை தெரிந்துவிடும். இதற்கு தினத்தந்தி போன்ற பத்திரிகைகளும், தற்காலத்து முகநூலும் ஒரு காரணம். தினத்தந்தி சிந்திக்க விரும்பாதவர்களுக்காக, சோம்பேறிகளுக்காக உருவான பத்திரிகை. சுடச்சுட, இரத்தினச் சுருக்கமாக, கொட்டை எழுத்தில் பொருளற்ற செய்திகளை அது வழங்கும். அதை ஆரம்பித்த ஆதித்தனார் நன்றாக நம்மினத்து மக்களைப் புரிந்துவைத்திருந்தார். சிந்திக்காத, சிந்திக்க மறுக்கும் மக்களாக நம்மவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்கள் எண்ணப்போக்குக்கேற்ப தினத்தந்தி வந்தது; வெற்றியடைந்தது. இழப்பு யாருக்கு? தமிழுக்கும், தமிழினத்துக்குந்தான்.
உண்மையான வாசிப்பு ஆழமானதும், காத்திரமானதும், தீர்க்கமானதுமாகும். அத்தகைய வாசிப்பு அக்கறையுள்ள வாசிப்பாக இருக்கும். ஒரு தடவை மட்டும் நூலை வாசிப்பதோடு அது நின்றுவிடாது. வாசித்த நூலின் பொருள், நோக்கம், ஆழம், இலக்கு எல்லாவற்றையும் தீர்க்கமாக அறிந்துகொள்ளாதவரையில் எதையும் மெய்யான வாசிப்பாகக் கருத முடியாது. மெய்யான வாசிப்பு நூலின் பல்வகைப் பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் பார்க்கும். அது முழுமையான வாசிப்பாக இருக்கும். அத்தகைய வாசிப்பு வாசகனை உயர்த்தும்; சிந்தனையாளனாக்கும். அது ஒரு நூலோடு நின்றுவிடாமல் மேலும் நூல்களை நாடிப் போகும்படித் தூண்டும்; நூல்களுக்காக ஏங்கும், அவற்றைத் தேடும் – பசியோடிருப்பவன் உணவைத் தேடி அலைவதைப்போல.
2. வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்
இதை எழுதுகிறபோதே இன்னுமொரு பிரச்சனை, அதுவும் நம்மினத்தில் இருக்கும் பிரச்சனை நினைவுக்கு வராமலில்லை. அது நேரத்துக்கு மதிப்பளிக்காத நமது பண்பாட்டுக் குறை. நம்மினத்தில் அது கலாச்சாரமாகவே வளர்ந்துவிட்டிருக்கிறது. அது நிச்சயம் உங்களிடத்திலும் இல்லாமலிருக்காது. ஐந்து நிமிடம் தாமதித்தே ஆண்டவரை ஆராதிக்க நாம் சபைக்குப் போகிறோம்; இந்துக்கோவிலுக்குள் எவரும் கேட்பாரின்றி நுழைவதுபோல. நம்முடைய ஆண்டவருடைய இறையாண்மையையே அசட்டை செய்கிற பண்பாடு நம்முடையது. நேரத்தை நமக்கு வசதிப்பட்டவிதத்தில் மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அதை ‘மீதப்படுத்த’ வேண்டும் என்ற எண்ணமே நமக்கு துப்புரவாகக் கிடையாது. நிலைமை இப்படி இருக்கும்போது வாசிப்புக்கு நேரத்தை ஒதுக்க வேண்டிய உங்களுடைய பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது. முதலில் இந்த விஷயத்தில் உங்களுடைய பண்பாட்டுச் சீரழிவை சரிப்படுத்தியாக வேண்டும். நேரத்தைக் கர்த்தருடையதாகக் கணிக்க ஆரம்பிக்க வேண்டும். அதில் வெற்றி காண்கிறவர்களே வாசிப்பை அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்; அவர்களே வாசிப்பிலும் சிறக்க முடியும்.
வாசிப்பதற்கு நேரமா? என்ற அதிர்ச்சிகூட ஏற்படும். புத்தகம் வாசிப்பது பொழுதைப் போக்குவதற்கு அடையாளம் என்று கருதும் சமூகத்தைச் சேர்ந்தவர்களான நம்மில் அந்த எண்ணம் ஊறிப்போயிருக்கலாம். வாசிப்பதற்கு நேரம் கொடுப்பதை நம்முடைய பெற்றோரும் ஊக்குவிக்கவில்லை அல்லவா? ‘வாசித்துப் பொழுதைப் போக்குகிறானே, ஆமான வேலையொன்றைச் செய்கிறானில்லையே’ என்று காதுகள் கேட்டுக்கேட்டுப் பழகிவிட்டதால் நேரத்தை வாசிப்புக்கு ஒதுக்குவதற்கு இயற்கையாகவே ஒரு தயக்கம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. வாசிப்பு பழக்கமானதாக இயல்பாக நம்மிடம் இல்லாததால் ஆரம்பத்தில் சங்கடமாகத்தான் இருக்கும். பணம் பண்ணுவதை மட்டுமே குறியாகக் கொண்டிருந்து, நேரத்தை ஒதுக்கி வாசிப்பதைப்போன்ற அருமையான ஆசீர்வாதமான செயலொன்றில்லை என்பதை நம் சமூகம் உணராது வாழ்ந்து வருகிறது. அந்த எண்ணத்திற்கு புறமுதுகு காட்டி நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டும்.
வாசித்துப் பழகியவர்களுக்கு இது பெரிய காரியமல்ல. அவர்கள் இதற்காக நேரத்தை ஒதுக்குவதோடு கிடைக்கும் நேரத்தையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளுவார்கள், பஸ்ஸிலும், டிரெயினிலும், ஆபிஸ் ஓய்வு நேரத்திலும், படுக்கைக்கு போகுமுன்னும் என்று எல்லா சமயங்களையும் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இது பெரிய விஷயந்தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்கியாக வேண்டும். சோம்பேறித்தனத்திற்கு முடிவுகட்டவேண்டும். என்ன செய்வீர்களோ தெரியாது, குறைந்தளவு ஒரு மணி நேரத்தையாவது இதற்காக ஒதுக்க வேண்டும். வாசித்தே பழக்கமில்லாதபடியால் அதை ஆரம்பிக்கும்போது அவர்களால் நிதானிப்போடு மனதைக் கட்டுக்குள்வைத்து வாசிப்பில் கவனம் செலுத்துவதென்பது இலகுவாக இருக்காது. இதற்காக ஒதுக்குகின்ற நேரமும் வேறு எதனாலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இடையிடையே எந்தத் தொந்தரவும், தலையீடும், குறுக்கீடும் வரமுடியாத நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டும். இதை வாசிக்கும்போதே ஒரு மணி நேரமா? என்று தூக்கிவாரிப்போடும். வாசித்ததே இல்லையல்லவா, அப்படித்தான் நினைக்கத்தோன்றும். அதனால், கட்டுப்பாட்டோடும், ஒழுங்கோடும் நேரத்தை இதற்காக ஒதுக்குவதைத் தவிர வேறு வழியில்லை. நாம் கருத்தோடும், கவனத்தோடும் இருக்கவேண்டிய வாசிப்புப் பயிற்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்; தினத்தந்தி பத்திரிகை வாசிப்பதற்கோ, முகநூலை வாசிப்பதற்கோ தேவையான நேரத்தைப் பற்றியல்ல. அதனால் வாசிப்புக்கு ஒவ்வொரு நாளும் நேரத்தை ஒதுக்குங்கள்.
3. நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டும்
வாசிப்பே இல்லாதிருந்திருப்பவர்களுக்கு எதை வாசிப்பது, எங்கு ஆரம்பிப்பது என்ற பிரச்சனை எழுவதில் ஆச்சரியமில்லை. இதற்கு அனுபவசாலிகளின் துணை நமக்குத்தேவை. உங்கள் சபைப் போதகர் வாசிப்புப் பயிற்சியுள்ளவராக இருந்தால் அவர் உதவலாம் (இருந்தால் ஆச்சரியந்தான்!). வாசிப்பில் தேர்ந்த நண்பர்கள் இருந்தால் அவர்களுடைய துணையை நாடலாம். இருந்தாலும் நான் சில ஆலோசனைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
முதலில் கிறிஸ்தவ நூல்களைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து ஆரம்பிப்போம். நம்மினத்தில் இது பிரச்சனைக்குரிய விஷயந்தான். பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கம் பரவலாக இருந்துவரும் சமுதாயத்தில் அது பற்றிய விளம்பரப்பிரச்சாரத்தைத் தாங்கி வரும் கையேடுகளும், சிற்றிதழ்களும், நூல்களும் அதிகம். தமிழகத்திலும், ஸ்ரீ லங்காவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் புத்தகக் கடைகளில் அவையே நிரம்பிக் காணப்படும். அவற்றின் பக்கம் போகாதிருப்பது நல்லது. இந்த விஷயத்தில் நமக்கு ஓரளவுக்கு இறையியல் ஞானம் அவசியமாகிறது. வேதப்பூர்வமான கிறிஸ்தவத்தில் நாட்டம் கொண்ட சுவிசேஷ கிறிஸ்தவர்களாக நீங்கள் இருந்தால் நிச்சயம் பெனிஹின், ஜொய்ஸ் மாயர், ரிக் வொரன் போன்றோரின் நூல்கள் பக்கம் தலைவைத்தும் படுக்காமல் இருப்பது நல்லது. இவர்களுடைய எழுத்துக்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆபத்தானவை. இவர்களுக்கு நிறைய பணமிருப்பதால் தமிழில் தங்கள் எழுத்துக்களை மொழிபெயர்த்து கடைகடையாக விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
நல்ல கிறிஸ்தவ நூல்கள் என்கிறபோது, வேதப்பூர்வமாக எழுதப்பட்ட, வேதத்தைத் தெளிவாக, பிழையற்று விளக்குகிற, வேத சத்தியங்களைப் பலகோணங்களில் எந்தவித வேதமுரண்பாடுமின்றி விளக்குகிற நூல்களைத்தான் குறிப்பிடுகிறேன். நம்மினத்தில் அத்தகைய நூல்கள் அதிகமில்லை என்பது நமக்குத் தெரியாமலில்லை. ஆனால், இருப்பவற்றைத் தேடித்தேடி வாசிக்க வேண்டும். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லாமல் இருக்க முடியாது. முக்கியமாக தமிழ் வாசகர்களை நான் மனதில் கொண்டு எழுதியபோதும், ஆங்கில வாசிப்பில் பயிற்சி பெற்று எளிமையாக எழுதப்பட்ட ஆங்கில நூல்களைப் பெற்று வாசிப்பதிலும் ஈடுபட வேண்டும். ஆங்கில நூல்கள் எல்லாவற்றையுமே தமிழாக்குவது என்பது ஒருக்காலும் நடக்கப்போகிற காரியமல்ல.
நூல்களைத் தெரிவு செய்கிறபோது மூன்று முக்கிய அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். முதலில், அதை வெளியிட்டிருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெளியீட்டாளர் அல்லது பதிப்பகத்தார் தங்களுடைய கோட்பாடுகளையே எழுத்தில் பரப்புவார்கள். வாட்ச் டவர் நிறுவனம் (யெகோவாவின் சாட்சிகள்) கிறிஸ்தவம் என்ற போர்வையில் தன்னுடைய வேதப்பூர்வமற்ற போதனைகளை வெளியிட்டு வருகின்றது. அவர்களுடைய நூல்கள் வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவ நூல்கள் போன்று தெரியும். யார் வெளியிட்டிருப்பது என்று தேடிப்பார்த்தால் அது வாட்ச் டவர் வெளியீடாக இருக்கும். இப்படியாக ஆவிக்குரியதாக இல்லாத, ஆபத்தான நூல்கள் புத்தகக் கடைகளில் நிறைய இருக்கின்றன. அவற்றைத் தவிர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். பாலை விஷமாக்க ஒரு துளி விஷம் போதுமானதுபோல், நம் இருதயத்தைக் கெடுக்க ஒரு நூல் போதுமானது. இத்தகையவை வீடுதேடி வந்தால் அவற்றைத் தொடவும் கூடாது. வெளியீட்டாளர்களின் (Publisher) பெயர்களை விசாரித்து எத்தகைய கோட்பாடுள்ள நூல்களை அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் உதவும். நம்மினத்தில் இது கொஞ்சம் கஷ்டமான காரியம். அநேக போதகர்களுக்கே இதுபற்றிய ஞானமிருக்காது. இருந்தாலும் இதை மனதில் வைத்திருங்கள். உதாரணமாக ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் வரும் வெளியீடுகளெல்லாம் செழிப்பு உபதேசமுள்ளதாகவும் தனிநபர் துதிபாடும் எழுத்துக்களாகவும் இருக்கும். பெயரைப் பார்த்தவுடனேயே உள்ளே என்ன இருக்கும் என்பதை நினைவில் கொண்டு அதைத் தொடுவதை விட்டுவிடலாம். நூல்களின் பதிப்பாளர், வெளியீட்டாளர் யார், அவர்களுடைய கோட்பாடுகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதைப் பயிற்சியாக வளர்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, நூலை எழுதியவரைப்பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அவருடைய பின்புலத்தை அறிந்துகொள்ளுவது நல்லது. கிறிஸ்தவரா, அப்படியானால் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்? என்ன செய்கிறார், எத்தகைய போதனைகளைப் பின்பற்றுகிறார்? என்பவற்றைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். ஆங்கில நூல்களில் நூலாசிரியரைப்பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கும். தமிழில் ஒன்றும் இருக்காது. எந்த எழுத்தாளரும் தங்களுடைய நம்பிக்கைகளையே நூல்களில் வெளியிடுவார்கள். அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்வது அவர்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். ஹெரல்ட் கேம்பிங் என்ற மனிதர் ரேடியோ ஊழியம் செய்து வருகிறார். பல நூல்களை வெளியிட்டு வருகிறார். அவருக்கு திருச்சபையில் நம்பிக்கை இல்லை. அவருடைய நூல்கள் திருச்சபையின் அவசியத்தைப்பற்றியதாக இருக்காது. இதைத் தெரிந்துவைத்திருந்தால் அந்த மனிதருடைய நூல்களைத் தவிர்த்துவிடலாம். கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை நம்பாத ஒருவர் அதற்கு எதிரான விளக்கத்தைத்தான் தன் நூலில் தந்திருப்பார். காலக்கூறு போதனையைக் கொண்டிருக்கும் ஒருவர் அதன் அடிப்படையிலேயே, இரட்சிப்பைப் பற்றியும், சபையைப்பற்றியும் விளக்குவார் (டார்பி, ஸ்கோபீல்ட் போன்றோர்). இதையெல்லாம் அறிந்திருந்து வாசிக்க வாசகனுக்கு ஓரளவுக்கு இறையியல் ஞானம் இருப்பது அவசியம். இதற்கு நம்பத்தகுந்த எவரிடமும் நூல்கள் பற்றிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அத்தோடு ஆவிக்குரிய நூல்களை எழுதுகிறவர்கள் முதலில் தங்களுடைய வாழ்க்கையில் அவற்றைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க வேண்டும். சபைக்கே போகாத, சபையோடு தொடர்பில்லாத, சபை வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுக்காத, சபை ஊழியத்தில் ஈடுபட்டிருக்காத ஒரு மனிதன் சபையைப்பற்றி எழுத முடியுமா? ஆவிக்குரிய வாழ்க்கையைப்பற்றி ஆலோசனை தரமுடியுமா? ஆகவே நூலை எழுதியவர் யார்? அவருடைய பின்புலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். வாசிக்க வேண்டும் என்பதற்காக கையில் கிடைத்ததையெல்லாம் வாசிக்க வேண்டும் என்பதில்லை. ஒருவருடைய கல்வி அறிவு, இறையியலறிவு, திருச்சபைப் பின்னணி ஆகியவற்றை அறிந்திருந்தால் அவருடைய எழுத்துக்களை வேதப்பூர்வமானவையாக இருக்குமா என்று ஊர்ஜீதப்படுத்திக்கொள்ள உதவும். வாசிப்பைப் பயிற்சியாகக் கொண்டு அந்தப் பயணத்தில் தூரம்போகப்போக இந்த விஷயத்தில் அனுபவம் ஏற்படும்.
மூன்றாவதாக, நூலைப்பற்றி நூலுக்குள்ளும், நூலுக்கு வெளியிலும் வந்திருக்கும் விமர்சனங்களை (reviews) ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆவிக்குரிய கிறிஸ்தவ நூல்களைப்பற்றிய இத்தகைய விமர்சனங்கள் தமிழில் காண்பதரிது. வாசிப்பு தரமான நிலையில் இல்லாததால் அத்தகைய விமர்சனக் குறிப்புகளும் அரிதாகக் காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் அத்தகைய நூல் விமர்சனங்கள் அதிகமாக இருக்கின்றன. நூல் விமர்சனம் என்கிறபோது திருமறைத்தீபம் இணைய தளத்தில் ‘படித்ததில் பிடித்தவை’ பகுதியில் வந்துகொண்டிருக்கும் விமர்சனங்களைப் போன்றதைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தகைய விமர்சனங்கள் வாசிக்குமுன் நூலைப்பற்றித் தெரிந்துகொள்ள உதவுகின்றன. அத்தோடு விமர்சகரைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்!
இது வாசிப்புப் பயிற்சியைப்பற்றிய பொதுவான ஆக்கமே தவிர கிறிஸ்தவ வாசிப்பை மட்டும் விளக்குவதல்ல. எனவே, கிறிஸ்தவ நூல்களை மட்டுந்தான் வாசிக்க வேண்டுமென்பதில்லை. கிறிஸ்தவ வாசிப்பு ஆவிக்குரிய அறிவுக்கும் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. ஆனால் அதற்கு வெளியில் போய் ஏனைய தளங்களைப்பற்றிய அறிவையும் சேகரித்துக்கொள்ள வேண்டும். அறிவியல், விஞ்ஞானம், கல்வி, தொழில் நுட்பம், அரசியல், சமூகம், இலக்கியம், புனைவுகள் என்று ஒருவருடைய வாசிப்பின் எல்லையை விரிவாக்கிக்கொள்ள வேண்டும். இங்கும் நான் மேலே விளக்கிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் நூல்களைத் தெரிவு செய்வது அவசியம். கிறிஸ்தவர்களாகிய நம்முடைய அறிவு பரந்ததாக, விரிவானதாக இருக்க வேண்டும்; அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதேநேரம் அனைத்தையும் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தோடு அலசிப்பார்க்கக்கூடிய பக்குவமும் இருக்க வேண்டும்.
ஆவிக்குரியவனாக இருந்து உலகந்தெரியாதவனாக இருக்கக்கூடாது. அப்படி அநேகர் இருந்து வருகிறார்கள். உலகத்தைப்பற்றிய வேதஞானமில்லாததால் ஏற்படும் குறைபாடு இது. உலகத்தை சாத்தானுடையதாக மட்டும் பார்க்கும் அறிவிலித்தனமிது. பக்திவிருத்தியுள்ளவர்களாக இருப்பதற்கு உலகத்தோடு சிநேகம் கொள்ளக்கூடாது; உலகத்தை நேசிக்கக்கூடாது. உலக சிநேகம் தேவனுக்கு எதிரி என்றெல்லாம் யோவான் எழுதியிருப்பது உண்மைதான். ஆனால், யோவானின் வார்த்தைகளின் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும். உலகத்தின் மாம்சத் தன்மையின்படி நாம் நடந்துகொள்ளக்கூடாது. அதன் சிந்தனைப் போக்கும், நடவடிக்கைகளும், இச்சையும் நம்மில் இருக்கக்கூடாது என்றுதான் யோவான் அறிவுறுத்துகிறாரே தவிர உலகத்தை அடியோடு துறந்து துறவிபோல் இருக்கும்படி அல்ல. இந்த உலகத்தில் வாழ்கிறபோது அதை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. இந்த உலகம் ஆண்டவருக்குச் சொந்தமானது; பிசாசுக்கல்ல. ஆவிக்குரிய வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அத்தோடு ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு அனைத்தையும் அணுக வேண்டியவர்களாக இருக்கிறோம். அதைச் செய்வதற்கு நாம் உலகத்தைப்பற்றித் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த ஆக்கத்தை எழுதுவதற்காக ஆவிக்குரியவர்களின் நூல்களை மட்டுமல்லாது கிறிஸ்தவரல்லாத, அதே நேரம் கற்றறிந்த ஒருவருடைய வாசிப்புபற்றிய ஒரு நூலையும் நான் வாசிக்க நேர்ந்தது. கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கிணற்றுத் தவளைகளாக இருந்துவிடலாகாது.
ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியதாக இல்லாத நூல்களை வாசிக்கக்கூடாது என்று பலர் கருதுகிறார்கள். அப்படியானால் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, பல்கலைக்கழகத்திற்கோ போகாமல் இருந்துவிட வேண்டும். அங்கெல்லாம் ஆவிக்குரியவற்றையா சொல்லித்தருகிறார்கள்? ஆவிக்குரியவன் நல்ல விசுவாசத்தைக் கொண்டிருந்து வேத அறிவில் தேர்ந்து ஆவிக்குரிய கண்ணோட்டத்தோடு உலகத்தைப் பார்க்கத் தெரிந்தவனாக இருக்கவேண்டும். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சமூகத்தில் அறிவிப்பதற்கு ஆவிக்குரியவன் சமூகத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும். தாமரை இலை மேல் தண்ணீராக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள எத்தனையோ விஷயங்களை கிறிஸ்தவன் நீதியாக அனுபவிக்கலாம். உலகத்தைப் படைத்த கர்த்தர் அனைத்தையும் சகலருக்கும், கிறிஸ்தவனுக்கும் சேர்த்துத்தான் கொடுத்திருக்கிறார். ஆவிக்குரியவன் வேதாந்தியாக இருந்துவிடலாகாது. நீதியாக அனுபவிக்கக்கூடியவற்றை சுயகட்டுப்பாட்டோடு அனுபவித்து நீதியற்றவைகளைத் தள்ளிவைக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.
நம்மினத்தில் வருகின்ற செய்தித்தாள்களில் பெரும்பாலானவை தரம் குறைந்தவை. அரசியலும், சினிமாவும், கசமுசா செய்திகளுந்தான் அவற்றின் போக்கு. செய்தித்தாள்களில் தரமானவை இருந்தால் அவற்றை வாசிப்பது நல்லது. உலக நடப்புகளையும், உலகத்துக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ளவும், ஆவிக்குரிய பார்வையோடு அவற்றை அணுகி விசுவாசத்தின் அடிப்படையிலான சொந்தக்கருத்தை உருவாக்கிக்கொள்ளவும் அது உதவும். நம்மில் அநேகர் நாளிதழ்கள் வாசிப்பதே கிடையாது. அதற்கடுத்தபடியாக நல்ல வார, மாத இதழ்கள் இருப்பின் வாசிக்கலாம். காலச்சுவடு, கணையாழி போன்றவற்றைக் குறிப்பிடுகிறேன். என்னைப்பொறுத்தளவில் இலக்கியத் தரமுள்ள, கிறிஸ்தவர்கள் வாசிக்கக்கூடிய வார, மாத இதழ்கள் மிகக்குறைவு. இந்தியா டுடே தமிழில் வருகிறது. ஆனால் ஆங்கிலம் கலந்த அதன் தமிழால் தமிழர்களுக்கே அவமானம். அரசியல் சார்புள்ளவையாகவும், மதச் சார்புள்ளவையாகவும், சினிமாவைப் பற்றியதாகவும் பெரும்பாலானவை இருந்துவிடுகின்றன. சிற்றிதழ்கள் பல வெளிவருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆராய்ந்து பார்த்து பயனுள்ளவையாக இருப்பின் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை தமிழ் வாசிப்பில் பரிச்சயத்தை ஏற்படுத்தும். இலக்கிய வாசிப்பு அறவே இல்லாதிருக்கிற நிலையில் இதுவாவது உதவக்கூடும். தமிழைப் பேசுகிறவர்களாகவும், தமிழ் வேதம் வாசிக்கிறவர்களாகவும் இருக்கிற நாம் தமிழ்ப்பேச்சிலும், வாசிப்பிலும் சொதப்பலாக இருப்பது மரியாதைக்குரியதல்ல.
திருக்குறளையும், பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகளையும் வாசியுங்கள். அவர்களுடைய மத நம்பிக்கைகள் நம்முடையதைப் போன்றதல்ல. தெரிவுசெய்த கவிதைகளைத் தமிழுக்காகப் படியுங்கள். ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை. ஒன்று தெரியுமா? வில்லியம் கேரி இராமாயணம் முழுவதையும் கற்று அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, உள்ளூர் மக்கள் மீதோ அவர்களுடைய மொழிமீதோ தனக்குக் காட்டம் இல்லை என்பதை நிரூபிக்க டேனிஸ் அதிகாரிகளுக்குக் அதைக் கொடுத்தார். உள்ளூர் மொழியையும், இலக்கியத்தையும் கற்றுக்கொள்ளவும் அது கேரிக்கு உதவியது. கேரி வருவதற்கு நூறு வருடங்களுக்கு முன் வந்த சீகன்பால்கும் இதையே செய்திருந்தார். இவர்கள் இருவரும் தேவைக்கேற்ப, தங்களுடைய சுவிசேஷ ஊழியத்துக்காக மொழியையும், இலக்கியங்களையும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர கத்தோலிக்க வீரமாமுனிவரைப்போல அவற்றிற்கு அடிமையாகிவிடவில்லை; கிறிஸ்தவ வேதபோதனைகளுக்கு முரண்பட்டு நடந்துகொள்ளவில்லை. தமிழையும் தமிழிலக்கியத்தையும் கற்ற கத்தோலிக்க ரொபட் டி நொபிளி, வீரமாமுனிவர் போன்றோர் இந்துக் கலாச்சாரத்துக்கு அடிமையானர்கள். கிறிஸ்தவர்களான சீகன்பால்கும், கேரியும் இதற்கு இடங்கொடுக்கவில்லை. அதேபோல் கிறிஸ்தவர்களான ஜீ. யூ. போப் ஐயரும், ரொபட் கால்டுவெலும் அதை அனுமதிக்கவில்லை. மெய்க்கிறிஸ்தவர்கள் புறஜாதிப் பண்பாட்டுச் சாக்கடையில் விழுந்து தங்களை அசிங்கப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். புலவர் தெய்வநாயகம், சாது செல்லப்பா இன்னும் இவர்களைப்போன்ற சிலர் இதிகாசங்களையும், தமிழிலக்கியத்தையும் கிறிஸ்தவ மயமாக்கச் செய்யும் சித்து வேலைகளை வேதம் அடியோடு வெறுக்கிறது.
நம்முடைய வாசிப்பு வளரவும் உயரவும், தமிழில் பரிச்சயம் ஏற்படவும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களின் எழுத்துக்களைப் படிப்பதில் தவறு இல்லை; அவசியமும்கூட. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் வந்தவைபோன்ற இலக்கியத்தரமுள்ள நூல்கள் இன்று அரிது. பழம் எழுத்தாளர்களான கல்கி, நா. பார்த்தசாரதி, மு. வரதராசன், அகிலன் போன்றோரின் நூல்களை வாசியுங்கள். இவர்களுடைய எழுத்து நடை இலகுவானது. இவர்களுடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் வாசிப்பில் தேர்ச்சி பெறவும், வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலக்கியப் பரிச்சயமில்லாததால் அநேகர் குறைந்தளவான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நான் அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். தற்காலத்தில் நவீன மயமாக்குதலின் காரணமாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் அநேக கலைச்சொற்களுக்கு புதிய வார்த்தைகள் தமிழில் உருவாகியிருக்கின்றன. இந்தக் கலைச்சொற்களைப் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்தும் அவசியம் நேர்கிறது. இன்று பொதுவாகவே ஆங்கிலமும் தமிழும் கலந்த ‘வை திஸ் கொலைவெறி டி’ வாடையடிக்கும் தங்லிஸ் பேசியும், எழுதியும் இளைய சமூகம் வளர்ந்து வருகிறது. இந்தப்போக்கு தமிழைச் சிதைத்து தமிழில் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுகிறது. இப்போதும் நான் புதிய கலைச்சொற்களுக்கான தமிழ் வார்த்தைகளைக் கற்றுப் பயன்படுத்தியும் வருகிறேன்.
4. வாசிப்பைக் கருத்தோடு விடாப்பிடியாகத் தொடரவேண்டும்
வளர்ந்துவிட்ட பிறகு வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுவது சிறுவயதில் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவதைப் போலிருக்காது. சிறுவயதில் விஷயங்கள் மனதில் உடனே பதிந்துவிடும். வளர்ந்தபின் அதில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாசிப்புப் பழக்கமே இல்லாதிருந்தவர்களுக்கு கண்களை ஒருசில பக்கங்களில் நிலைநிறுத்தி, வாசிக்கும் விஷயத்தை உள்வாங்கிச் சிந்திப்பது கடினமாக இருக்கும். நீண்டநேரம் அவர்களால் சில பக்கங்கள்வரை பொறுமையாக வாசிக்க முடியாது. அதை அவர்கள் வழமையாகச் செய்திராததால் ஏற்படும் தடங்கல் இது. அத்தோடு இணைய, முகநூல், டுவிட்டர் கலாச்சாரமும் இதைப் பிரச்சனைக்குரியதாக்கி விடுகின்றன. புதிதாக வாசிக்க ஆரம்பிக்கும் எவரும் இதனால் தளர்ந்துபோகத் தேவையில்லை. இப்படி நிகழும் என்பதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து விடாப்பிடியாக உங்களுடைய நேரத்தையும் நினைவுகளையும் கட்டுப்படுத்தி வாசிப்பில் ஈடுபட வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று சொல்லுவார்கள். அதுபோல முயற்சி செய்து வாசிப்பைப் பழக்கத்தில் கொண்டுவர வேண்டும்.
இந்த விஷயத்தில் ஆரம்ப அதிர்ச்சிகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றிகொண்டுவிட்டால் அதற்குப் பிறகு தொடர்ச்சியாக அதைச் செய்வதைக் கடமையாக வைத்திருக்க வேண்டும். ஆகவே, வாசிப்பை சாதாரணமானதாக நினைத்து அதில் இறங்கி, தண்ணீர் ஜில்லென்று இருக்கிறதென்று குளிப்பதை விட்டுவிடுகிறவனைப் போல் ஆகிவிடாதீர்கள். நிச்சயம் அது இலகுவானதல்ல. ஒருதடவை தண்ணீருக்கு பழக்கப்படுத்திக்கொண்டால் அப்புறம் குளத்தையே நாம் தூள்கிளப்பி விடுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும்.
தொடர்ந்து வாசிப்பதை நிலைநிறுத்திக்கொள்ளுவதே இங்கு முக்கியமானது. அதுவும் ஒவ்வொரு நாளும் நேரத்தை இதற்காக ஒதுக்கிப் பத்துப் பதினைந்து பக்கங்களாவது வாசித்துவிட வேண்டும்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் . . .
என்று ஔவையார் பாடியிருக்கிறார். பழகப்பழக எல்லாம் பழக்கத்தில் வந்துவிடும் என்பதை ஔவைப்புலவி இவ்வாறு விளக்கியிருக்கிறார். வாசிப்பது நாள் தவறாத பழக்கமாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள்.
5. ஒருதடவைக்கு மேல் நூல்களை வாசிக்க வேண்டும்
ஒரு தடவை மட்டும் ஒரு நூலை வாசிப்பதில் தவறில்லை. ஒரு தடவை மட்டுமே வாசிக்க வேண்டிய நூல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இங்கே நாம் வாசிப்புப் பயிற்சியைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் அதற்கு அவசியமான விஷயங்களை அலட்சியப்படுத்த முடியாது. ஒரு தடவைக்கு மேலாக நூல்களை வாசிப்பதனால் அதை இன்னும் கூர்ந்து கவனிக்க, ஆராய உதவும். முதல் வாசிப்பில் எப்போதுமே நாம் அந்தக் கவனத்தைச் செலுத்துவதில்லை. அனுபவித்து வாசிக்கும் வாசிப்பு முதல் வாசிப்பு. அந்த வாசிப்பின்போது நாம் நூல் சொல்லுகிற விஷயத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளும் எண்ணத்தோடு மட்டுமே வாசிப்போம். வேறு விஷயங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவதில்லை. நூல் அருவி போல் ஓடி எங்கு போய் முடிகிறது என்பதை அறிந்துகொள்வதில் மட்டுமே நம் கவனம் இருக்கும். நூலின் பன்முகத்தன்மையையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து உணர அதை இரண்டாவது தடவையாக வாசிக்க வேண்டும்.
வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் ஒரு தடவைக்கு மேல் நூலை வாசிக்கும்போது அதன் வசனப் பிரயோகங்களையும், வார்த்தைகளையும், அழகியல் அம்சங்களையும், ஆழமான கருத்துக்களையும் கவனிக்க முடியும். அதிக வாசிப்புப் பழக்கம் இல்லாதிருப்பவர்களுக்கு வார்த்தைகளில் பரிச்சயம் உண்டாகும். வாசிக்காதவர்களிடம் ஒருபோதும் நாம் அதிகமான வார்த்தைப் பயன்பாட்டை எதிர்பார்க்க முடியாது. வாசிப்பு வார்த்தைகளை அறிமுகப்படுத்தும். சம்பாஷனையை இனிமை சுரக்கச் செய்யும். நூல்களில் காணப்படும் பிரதேச மொழிப்பயன்பாடு, உவமைகள், உருவகங்கள், பழமொழிகள், எழுத்தாளனுடைய எழுத்தின் தனித்தன்மை என்று பல்வேறு பன்முகத்தன்மைகளை ஒரு தடவைக்கு மேற்பட்ட வாசிப்பு நமக்கு அறிமுகப்படுத்தும்.
வாசிப்பது எப்படி? என்ற நூலை எழுதியுள்ள மோர்டிமர் அட்லர், பன்முகத் தன்மையுள்ள வாசிப்புப் பயிற்சிபற்றி விளக்கியிருக்கிறார். அதன்படி முதல்தடவை வாசிப்பை ஆரம்ப அல்லது அடிப்படை வாசிப்பென்றும், இரண்டாவது தடவை வாசிப்பை ஆராயும் வாசிப்பென்றும் எழுதியிருக்கிறார். ஆராயும் வாசிப்பின்போதே நூலையும், நூலாசிரியரையும், நூலில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும், பலகோணங்களில் அறிந்து கொள்கிறோம் என்பதை விளக்குகிறார். அதேநேரம் அவர் வேக வாசிப்பைப்பற்றியும், வாசித்தவற்றைப் புரிந்து மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தைப்பற்றியும் விளக்குகிறார். நான்கு தளங்களில் வாசிப்பு இருக்க வேண்டுமென்று விளக்கும் அட்லர் பலவகை நூல்களையும் வாசிக்கும்போது பின்பற்ற வேண்டிய பொதுவான விதிமுறைகளையும் விளக்குகிறார். ஆழமான நூல் வாசிப்பில் ஈடுபட அட்லரின் நூல் நிச்சயம் உதவும். உண்மையில் வாசிப்பு ஆழமானதாகத்தான் இருக்க வேண்டும். அட்லரின் நூல் பிரயோஜனமானது. நிச்சயம் நம்மினத்துக் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட வேண்டியது. தமிழில் வாசிப்பைப்பற்றி இந்தளவுக்கு விளக்கும் நூல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழில் இத்தகைய நூலொன்று தேவை.
6. வாசிப்பவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
வாசிப்பில் ஆரோக்கியமான வாசிப்பு என்று ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். அது நுனிப்புல் மேயும் வாசிப்பைவிடச் சிறப்பானது. அத்தகைய வாசிப்பில் ஈடுபடுகிறவர்கள் குறிப்பெடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்கள் நூலின் பக்கங்களிலேயே கோடிட்டும், அடையாளமிட்டும், அதற்குப் பக்கத்தில் குறிப்புகளை எழுதியும் வைப்பார்கள். இது மறுபடியும் அந்தக் குறிப்புகளைக் கவனித்துப் படிக்க உதவும். இத்தகைய கோடிடுதலும், குறிப்பெடுத்தலும் நூலைக் கவனத்தோடு வாசிக்கச் செய்யும். வாசித்தவற்றை மனதில் இருத்திக்கொள்ளவும், சிந்திக்கவும் உதவும். வாசித்து முடித்த நூல்கள்பற்றிய விபரங்களை ஒரு நோட்புக்கில் குறிப்பெடுத்து வைத்திருப்பதும் பிரயோஜனமாய் இருக்கும்.
என்னுடைய நண்பன் ஒருவன் எத்தனை புத்தகங்களை வாசித்தாலும் புத்தகம் முழுதும் குறிப்புகளாலும், கோடுகளாலும் நிரம்பியிருக்கும். புனைவுகளை வாசிப்பதற்கு அது தேவைப்படாது. அறிவைத் தரும் நூல்களை வாசிக்க அது அவசியம். வாசித்தபிறகு வாசித்தவற்றை மறந்துவிடுவதற்காக எவரும் நூல்வாசிப்பில் ஈடுபடுவதில்லை.
அனுபவமுள்ள வாசகர்கள் வாசித்த நூல்களைப்பற்றி குறிப்பெழுதி வைக்கத் தவற மாட்டார்கள். ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்தேன், ஸ்பர்ஜன் தான் வாசித்த 12,000 நூல்களைப்பற்றி குறிப்பெழுதி வைத்திருந்தார் என்று. அது பின்பு நூலாக வெளிவந்தது. சோம்பேறித்தனமில்லாமல் இதைச் செய்வதை வழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
7. வாசிப்பவற்றை மனதில் அசைபோட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்
வாசிப்பது சிந்தனைக்கு அவசியம். வாசித்தவற்றைப் புல்லை அசைபோடும் மாட்டைப்போல மனதில் அசைபோட்டுச் சிந்திக்க வேண்டும். வாசிப்பதோடு வாசித்தவை நம்மில் ஜீரணிக்க வேண்டும். ‘நான் சிந்தித்துச் சிந்தித்து நரைத்தவன். நரைத்தபின் சிந்திக்கத் தொடங்கியவன் இல்லை’ என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாசகங்கள் நினைவுக்கு வருகிறது. வாசிப்பு சிந்திக்க வைக்கும்; சிந்தனை நம்மை மேலும் வாசிக்கச் செய்யும். வாசித்த நூலின் போதனைகளை, அணுகு முறையை, கருத்துக்களை மனதில் அசைபோட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாசிப்பது, வாசித்த அனைத்தையும் நம்பிவிடுவதற்காக அல்ல; அதிலுள்ளவற்றையெல்லாம் வேதமாக எடுத்துக்கொள்ளுவதற்காக அல்ல. எந்த நூலையும் புறவயமான பார்வையோடு அணுகி வாசிக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காது தள்ளி நின்று வாசிக்க வேண்டும். வாசிக்கும்போதும், வாசித்த பிறகும் வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாசகன் வாசித்தவைப்பற்றி மட்டும் அல்லாமல் வாசித்த நூல் எழுப்பும் கேள்விகளையும் ஆராய வேண்டும். நூலில் சொல்லப்படாத, நூல் சொல்லத் தவறியவற்றையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நூலைப்பற்றியும், நூலாசிரியனைப்பற்றியதுமான புறவயப்பார்வை இதற்கு உதவும்; அவசியமும் கூட.
திருமறைத்தீபத்தையும், நாம் வெளியிட்டிருக்கின்ற நூல்களையும் இந்தவகையில் வாசித்து சில நண்பர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர் தான் வாசித்த அல்பர்ட் என். மார்டினின் ஒரு நூலைத் தன்னுடைய சொந்த நடையில் ஒவ்வொரு அதிகாரத்திலும் இருப்பவற்றைக் குறிப்பெடுத்து வைத்திருப்பதாகச் சொன்னார். அது அந்த சத்தியங்களைத் தெளிவாகத் தன்னுடைய மனதில் இருத்திக் கொள்ளவும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும் உதவுவதாகச் சொன்னார். இப்படியும் சிலர் இருப்பதும், வாசிப்பதும் என்னை உற்சாகப்படுத்துகிறது. திருமறைத்தீபத்தின் இதழ்களில் எந்த ஆக்கம் எந்த இதழில் எந்த ஆண்டில் வந்தது என்பதையெல்லாம் நினைவில் வைத்திருந்து அதுபற்றி என்னோடு கலந்துரையாடியிருக்கும் இரண்டு நண்பர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களுடைய அத்தகைய வாசிப்புப் பழக்கம் அவர்களை நிச்சயம் சிந்திப்பவர்களாக, தெளிவான கருத்துடையவர்களாக மாற்றாமல் போகாது.
8. வாசிப்பவற்றை உரையாடல் மூலம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்
முதலில் இதற்கு நேரம் தேடுவது அநேகருக்கு பெருங்கஷ்டமாகிவிடுகிறது. இன்று நேரத்தை வேலையும், குடும்பப்பாரமும், செல்போனும், சமூக வலைப்பின்னல்களும் ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதால் இதையெல்லாம் தாண்டி மற்றவர்களோடு உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென்பது சமூகத்தில் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கிறது. ஒரு காலத்தில் பிரபல வியாபாரியாக இருந்த என் தந்தை ஒவ்வொரு இரவும் தனக்கு நெருங்கிய நான்கு நண்பர்களோடு மூன்று மணிநேரங்களுக்கு கச்சேரி வைப்பதுபோல பேசிக்கொண்டிருப்பார். பத்துவயதுப் பையனாக இருந்தகாலத்தில் பக்கத்து அறையில் தூங்குவதுபோல் பாசாங்கு செய்து இந்தக் கச்சேரியைக் கேட்டு ரசித்திருக்கிறேன். ஒவ்வொருவரும் பேசுகின்ற பொருளைப்பற்றித் தங்களுடைய எண்ணங்களை எடுத்து வைப்பார்கள். ஆழமான, காரசாரமான விவாதத்திலிருந்து நகைச்சுவையுள்ள சம்பாஷனைவரை இந்தக் கச்சேரியில் இருக்கும். அரசியலில் இருந்து எல்லாமே இருக்கும். அந்தச் சம்பாஷணைகளில் ஏற்புடையதாக இல்லாதவைக்கு என் கருத்தை மனதிற்குள் கொடுத்திருக்கிறேன்; பேச முடியுமா என்ன? இந்தக் கச்சேரியைக் கேட்டு வளர்ந்தவன் நான். இன்றைக்கு இப்படிப்பட்ட உரையாடல்களுக்கு யாருக்கு நேரமிருக்கிறது. ஒரு காலத்தில் நம் பேரக்குழந்தைகளுக்கு, ‘உங்களுக்குத் தெரியுமா? நாங்கள் அந்தக் காலத்தில் ஒருவரோடொருவர் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்’ என்று சொல்ல, அதைக்கேட்டு அவர்கள் வாயைப்பிளந்து ‘அப்படியா’ என்று கேட்கிற காலம் வரும்போலிருக்கிறது. அந்தளவுக்கு உரையாடலைவிட வாட்ஸ்செப்பும், டெக்ஸ்டும், முகநூலும், இன்ஸ்டகிராமுமாக காலம் முற்றிப்போயிருக்கிறது.
சம்பாஷனைகள் அனைத்துமே வாசிப்புப்பற்றியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் சம்பாஷனை பிரயோஜனமுள்ளதாக இருக்க வாசித்தவற்றை இன்னொருவரோடு பகிர்ந்துகொண்டு அதுபற்றி விவாதிப்பது வாசிப்பையும், சிந்தனையையும், அறிவையும் வளர்க்கும். இப்படி வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ள அநேகர் இல்லாத குறையை தமிழ் கிறிஸ்தவர்களிடம் நான் காண்கிறேன். வெட்டிப் பேச்சுப் பேச நிறையபேர் இருக்கிறார்கள். கிறிஸ்தவ வாலிபர்களுங்கூட உலகத்தானைப்போல சினிமா நடிகர்களையும், பாடல்களையும்பற்றி அரட்டை அடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகநூலே அவர்களுடைய முகத்தைத் காட்டுவதாக இருக்கும். கிறிஸ்தவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இது. வேதத்தைப்பற்றியும், நூல்களைப் பற்றியும் வாசிக்க அதிகம்பேர் இல்லை. அது தற்காலத்து கிறிஸ்தவ சூழலைத்தான் இனங்காட்டுவதாக இருக்கிறது. போதகர்களில் அநேகர் வாசிப்புப் பழக்கமில்லாதவர்களாக இருப்பது கண்கூடு. என்னிடம் வாசித்தவைபற்றிப் பேசத் துடித்த போதகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போது என்ன வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டுவிட்டால் தொடரும் சம்பாஷனைக்கு அது முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. அப்படியே நாமே முன்வந்து கேட்டுவைத்தாலும் அவர்களால் சம்பாஷனையைத் தொடரமுடியாமல் போய்விடுகிறது. வாசிப்புப் பயிற்சி இல்லாதது பொருளற்ற சம்பாஷனைக்குக் காரணமாகிவிடுகிறது.
வாசிக்கும் பயிற்சியுள்ளவர்களோடு நல்ல நட்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அத்தகைய சிறுகூட்டம் உங்களைச் சுற்றி இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர். என் சபையில் இளம் வாலிபனொருவனுக்கு வாசிப்புப் பழக்கம் உண்டு. அடிக்கடி சில நூல்களை அவனுக்கு அறிமுகப்படுத்தி வருகிறேன். வாசித்து முடிந்ததும் அதுபற்றி சுருக்கமான விவாதத்தில் ஈடுபடுவோம். அவனுடைய எதிர்காலம் நன்றாக இருக்கப்போவது எனக்குத் தெரிகிறது. இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே இரண்டு நூல்களை அவனுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்னொருவர் வாசிப்பில் அதிக ஈடுபாடு காட்டுகிறவர். சபை ஆராதனை முடிந்தபிறகு சமீபத்தில் வாசித்த நூல்கள்பற்றிப் பேசுவோம். ஆராதனைப் பிரசங்கத்தோடு தொடர்புடைய நூல்கள்பற்றிப் பேசுவோம். வாசிப்பும், வாசித்தவைபற்றிப் பேசுவதும் எத்தனை அருமையானது தெரியுமா? அது கர்த்தரைப்பற்றிய விஷயங்களாக இருப்பதுதான் அதை மேலானதாக்குகிறது.
9. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வாசிப்பதைப் பழக்கத்தில் வைத்திருக்க வேண்டும்.
வாசிப்பு அனுபவம் வளர வளர ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை ஒரே சமயத்தில் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவைத்தால் இரண்டு அல்லது மூன்று நூல்களை வெவ்வேறு சமயங்களில் அவற்றின் சில பக்கங்களையாவது ஒரு நாளில் வாசிப்பதைப் பழக்கத்தில் வைத்திருக்கலாம். வாசகன் அஷ்டாவதானியாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஒரே விஷயத்தை வாசித்து சிந்திக்காமல் பல விஷயங்களைப்பற்றி வாசிக்கவும் அதுபற்றி சிந்திக்கவும் முடியும். அஷ்டாவதான வாசிப்பு பண்முக சிந்திப்பை ஏற்படுத்தும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வாசிக்கும்போது அவை வெவ்வேறுவகை நூல்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு வேதசம்பந்தமான ஒரு நூலையும், பொதுவான அறிவியல் விஷயங்கள்பற்றிய ஒரு நூலையும், இலக்கியப் புதினமொன்றையும் வாசிக்கலாம். கிறிஸ்தவ நூல்களிலேயே பல்வகை நூல்கள் இருக்கின்றன. வேத வியாக்கியான நூலொன்றையும், கிறிஸ்தவ வாழ்க்கைபற்றி விளக்கும் நூலொன்றையும், கிறிஸ்தவ வரலாற்றை விளக்கும் நூலொன்றுமாக வெவ்வேறு நேரத்தில் வாசிக்கலாம். இந்தவகையில் வாசிப்பில் ஈடுபடும்போது அதிக நூல்களை நாம் வாசித்து முடிக்கவும், அதுபற்றி சிந்தித்து கருத்துக்களை மனதில் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
ஒரு நூலை எத்தனை வேகமாக வாசித்து முடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அதற்காக நத்தைபோல் ஊருகின்றதாக வாசிப்பு இருந்துவிடக்கூடாது. இந்த விஷயத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறான ஆற்றலையும், கிரகிக்கும் சக்தியையும் கொண்டிருப்பார்கள். வாசிப்பு பழக்கத்தில் வருகின்றபோது இந்தவிஷயத்தில் உங்களுடைய திறமையை நீங்களே அறிந்துகொள்ளுவீர்கள். வாசிப்பவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுகின்ற அளவுக்கு வாசிப்பின் வேகம் இருக்கவேண்டும். போகப்போக அனுபவம் அதிகரிக்க வேகத்தை அதிகரித்துக்கொள்ளவும் முயற்சி எடுக்கவேண்டும்.
ஸ்பர்ஜன் ஒருவருடத்தில் முன்னூறுக்கு மேற்பட்ட நூல்களை வாசித்திருக்கிறார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தளவுக்கு தமிழில் நூல்கள் இல்லை. இருப்பவற்றையும், நல்ல இதழ்களையும், ஆங்கில நூல்களையும் இந்தவகையில் வருடாவருடம் வாசித்து வாசிப்பின் பலனை அடையவேண்டும். உலகம் ஒரேமாதிரியாக எப்போதும் இருக்கவில்லை. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் எண்ணங்களும் போக்கும் மாறிக்கொண்டிருக்கிறது. அதேபோல் கிறிஸ்தவத்திலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நல்ல மாற்றங்கள் மிகக் குறைவே; போலியானவையும், ஆபத்தானவையுந்தான் அதிகம். இவற்றையெல்லாம் அறிந்து, உணர்ந்து சிந்தித்து நம்முடைய வேதநம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் இவைபற்றிய வாசிப்பு நிச்சயம் அவசியம். புதிது புதிதாக எழுந்துகொண்டிருக்கும் போலிப்போதனைகளையும், தவறான போக்குகளையும் இனங்காட்டுகின்ற நூல்களை வாசிக்காமல் இருந்துவிடக்கூடாது. இறையியல் நம்பிக்கைகள் அரவே இல்லாததும், இருப்பவற்றை நம்பாததுமான கிறிஸ்தவம் ஆண்டுவருகிற காலப்பகுதியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1689 விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனைகள் போன்ற நூல்களில் ஆணித்தரமான தேர்ச்சி நமக்கிருப்பது அவசியம். அத்தகைய நூல்களை நாம் வாசிக்க வேண்டும். முடிந்தவரை ஒவ்வொரு வருடமும் அதிக நூல்களை வாசித்து முடிக்குமளவுக்கு வாசிப்புப் பயிற்சியில் வளர வேண்டும்.
10. ஆவிக்குரிய அனுபவசாலியான வாசிப்புப் பழக்கமுள்ள ஒருவரை மேற்பார்வையாளராகவோ, துணையாகவோ வைத்துக்கொள்ளுங்கள்.
நல்ல வாசிப்பனுபவம் இல்லாதிருக்கிறவர்கள் இன்னொருவரோடு சேர்ந்து வாசிப்பது பலன்தரும். அப்படியொருவரையோ, சிலரையோ தேடிப்பிடியுங்கள். இது ஒருவருக்கொருவர் வாசித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், உங்களுடைய வாசிப்பின் இலக்கை அடையவும் உதவும். முடிந்தால் அனுபவமுள்ள ஒருவரின் மேற்பார்வையின் கீழ் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடலாம். ‘குருவில்லான் வித்தை . . . விழல்’ என்கிறது தமிழிலக்கிய வெண்பா ஒன்று. அதாவது குருவில்லாமல் வித்தை கற்க முடியாது என்பது இதற்குப் பொருள். குருவே இல்லாவிட்டாலும் ஏகலைவனைப் போலாவது ஒரு குருவை நினைவில்கொண்டு வித்தையைக் கற்றுக்கொள்ள வேண்டும். வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் மாதமொருமுறை கூடி வாசிப்பில் ஈடுபடலாம். வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். இது வாசிப்புப் பயிற்சியில் வளரவும், உயரவும் உதவி செய்யும்.
முடிவாக . . .
நல்ல சபைகளில் இருப்பவர்கள் வாசிப்பை ஆத்துமாக்கள் மத்தியில் ஊக்குவிக்கவேண்டும். கட்டாயப்படுத்தும்படி நான் சொல்லவில்லை. இதன் பயன்பாட்டை விளக்கி ஊக்குவிப்பது நல்லது. நல்ல போதகர்கள் வாசிப்பைப் பழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுடைய வாசிப்பின் தன்மையை அவர்களுடைய போதனைகளிலும், பிரசங்கத்திலும் பார்க்க முடியும். அது அவர்களுக்குக் கீழிருக்கும் ஆத்துமாக்களை வாசிக்க வைக்கும். இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் வாசிப்பு இல்லாமலிருப்பதற்கு போதகர்களும் பெருங்காரணமாக இருக்கிறார்கள் என்பதை எவராவது மறுக்க முடியுமா என்ன? அவர்கள் வாசித்திருந்தால், அதைப் பகிர்ந்துகொண்டிருந்தால், ஆத்துமாக்களை ஊக்குவித்து அவர்களோடு அதுபற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தால் வாசிப்பு இன்று அக்கினிபோல ஜூவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்குமே! எந்தவித ஆரோக்கியமான வாசிப்பிலும் ஈடுபடாமல் இருக்கும் போதகர்களால் நிச்சயமாக ஆவிக்குரியவிதத்தில் வேதத்தைப் பயன்படுத்திப் பிரசங்கிக்கவோ, போதிக்கவோ முடியாது. வாசிப்பில்லாமல் போதிக்கலாம் என்று நினைப்பது பெருந்தவறு. அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேதம் இடங்கொடுக்கவில்லை. போதகர்களே! உங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்காக வாசியுங்கள்; நீங்கள் பணிபுரியும் சபை மக்களின் நன்மைக்காக வாசியுங்கள்; கர்த்தர் உங்களை வாசிக்கிறவனாக இருக்கும்படி எதிர்பார்க்கிறார். நீங்கள் எப்படி, எந்த நிலையிலிருக்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் மக்கள் இருக்கப்போகிறார்கள். இந்த விஷயத்தில் மனந்திரும்பி உங்களுடைய அழைப்பைக்குறித்து ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். ஸ்பர்ஜன் சொல்லுவதுபோல் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கி வாசியுங்கள்.’
சீர்திருத்த சபைகளில் பணிபுரிகிறவர்களும், அங்கிருக்கும் ஆத்துமாக்களும் வாசிப்பைத் தவிர்க்கவே முடியாது. எல்லா சபையாரும் வாசிப்பில் ஈடுபடவேண்டும்; அதேநேரம் சீர்திருத்த சபை வாசிப்பில்லாமல் சீர்திருத்த சபையாக இருக்க வழியில்லை. வேதம் மட்டுமில்லாது, விசுவாச அறிக்கைகளையும், வினாவிடை நூல்களையும் பயன்படுத்தி, வியாக்கியானப் பிரசங்கத்தையும், போதனையையும் அளித்து வரவேண்டிய சீர்திருத்த சபைகள் வாசிப்பில்லாமல் இருப்பது மிகவும் முரண்பாடான செயல். சீர்திருத்த விசுவாசத்தை வாசிப்பில்லாமல் புரிந்துகொள்ள முடியாது. அதன் மகோன்னதப் பன்முக விளக்கங்களையும், பரிமாணங்களையும் அறிந்துகொள்ள ஆரோக்கியமான வாசிப்புப் பழக்கம் அவசியம். வாசிப்பில் அக்கறைகாட்டாது சீர்திருத்தவாத கிறிஸ்தவனாகவோ, போதகனாகவோ இருந்துவிட முடியாது.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போது சாலமோனின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன, ‘அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு’ (பிரசங்கி 12:12). இங்கே சாலமோன் சொல்லுவதை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்தக் காலத்தில் சாலமோன் அளவுக்கு வாசித்தவர்களும், எழுதியவர்களும் இருந்திருக்க முடியாது. சாலமோனே வேதத்தில் சில நூல்களை எழுதியிருக்கிறான். அந்தளவுக்கு அவன் பெரிய ஞானி. அப்படியானால் நூல்கள் வாசிப்பதையும், அதிக நூல்கள் இருப்பதையும் சாலமோன் அலட்சியமாகப் பேசியிருக்க முடியாது. சாலமோன் இங்கே சொல்லுவதெல்லாம், வாசிக்கவேண்டும் என்பதற்காகப் பொருளற்றவிதத்தில் வாசிக்கக்கூடாது என்பதுதான். எழுதிக் குவிக்கவேண்டுமென்பதற்காகப் பொருளற்றவிதத்தில் நூல்கள் வெளியிடக்கூடாது என்பதுதான். அத்தகையவற்றிற்கு முடிவே இருக்காது. வாசிப்பதையும், எழுதுவதையும் என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பது முக்கியம். வெறும் புத்தகப்பூச்சியாக இருந்துவிட்டால் அதில் நன்மையில்லை. அத்தகைய உபயோகமில்லாத வாசிப்பால்தான் உடலுக்கு இளைப்பு. நல்ல நூல்களை மட்டும் அன்னப்பறவையைப்போலப் பக்குவத்தோடு பிரித்தெடுத்து வாசித்து ஆவிக்குரியவிதத்தில் சிந்தனை வளர்ச்சியும், பக்திவிருத்தியும் உண்டாகுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேவ பயத்திலும், பக்திவிருத்தியிலும் உயர்வடையச் செய்யாத வாசிப்பால் எந்தப் பயனும் இல்லை. வேதத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு சிந்தித்துக் காரியங்களில் நுண்ணுணர்வோடு கூடிய முடிவுகளை எடுக்க உதவாத வாசிப்பால் பயனில்லை. தேவஞானத்தில் வளரச்செய்வது நல்ல வாசிப்பு. அத்தகைய வாசிப்பு இருக்க வேண்டுமென்பதையே எதிர்மறையாக சாலமோன் சொல்லியிருக்கிறார்.
இதை வாசித்தபிறகு வாசிக்க வேண்டும் என்ற வாஞ்சை இருதயத்தில் எழுந்திருக்கிறதா? இருந்தால் நல்லதுதான். வாசிப்பதில் வாஞ்சையும் வைராக்கியமும் இல்லாதவர்கள் ஒருநாளும் வாசிக்கப்போவதில்லை. ஜோன் பனியனுக்கு அத்தகைய வாஞ்சை இருந்ததால்தான் தன் மனைவியிடம் இருந்த நூலை வாங்கி வாசித்தார். எழுதப்படிக்கத் தெரியாதிருந்த பனியன் கஷ்டப்பட்டு, ஊக்கத்தோடு வாசித்தார். அந்த நூல் இலகுவானதுமல்ல; இருந்தாலும் அவர் வாசிப்பதைக் கைவிடவில்லை. கஷ்டப்பட்டு வாசிப்புப் பயிற்சியில் ஈடுபட்டதாலேயே பின்பு அத்தனை நூல்களை எழுத்தில் வடிக்க முடிந்தது. உடனடியாக வாசிக்க ஆரம்பியுங்கள். சோம்பலை உதறித்தள்ளுங்கள். உங்களுக்காகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுங்கள். நல்ல வாசகன் உப்பைப் போன்றவன். உப்பு உணவை சுவையாக்கும்; ஆவிக்குரிய நல்ல வாசகன் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதமாக இருப்பான்.