திருமறைத்தீபம் பத்திரிகை ஊழியத்தில் பங்குகொண்டு துணை செய்பவர்களில் ஒருவர் ஸ்ரீ லங்காவில் பத்திரிகையை அச்சிட்டு உதவும் மில்டன். இந்த வருடம் அவர் உடல்நலமில்லாமல் அவதிப்பட்டிருக்கிறார். கர்த்தரின் கிருபையால் இப்போது நலமாக உள்ளார். அவருக்காக ஜெபியுங்கள். தொடர்ந்து இதழ் அங்கு அச்சிடப்பட்டு தடங்கலில்லாமல் விநியோகிக்கப்படவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.
இந்த இதழை நேரத்தோடு முடித்துவெளியிட கர்த்தர் உதவினார். அவருடைய பெரும் வழிநடத்துதலை ஒவ்வொரு இதழ் தயாரிப்பின்போதும் காண்கிறோம். இந்த இதழில் வாசிப்பைப்பற்றிய முழு ஆக்கமொன்று வந்திருக்கிறது. நம்மினத்தில் வாசிப்பு மிகவும் தாழ்ந்த நிலையிலிருப்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள் என்பது தெரியவில்லை. கிறிஸ்தவம் தரமற்று இருந்துவருவதற்கு இது ஒரு பெருங்காரணமென்பதை நான் நம்புகிறேன். வாசிப்பு என்கிறபோது சிந்தனைத் திறத்தைக் கொண்டிருந்து நல்லவற்றைப் பயனற்றவையிலிருந்து பிரித்தெடுத்து, காத்திரமான வாசிப்பில் ஈடுபட்டு ஆவிக்குரிய அறிவைப் பெற்று பக்திவிருத்தியைப் பெருக்கிக்கொள்ளத் துணைபுரியும் வாசிப்பையே குறிப்பிடுகிறேன். வாசகர்களாகிய உங்களை இந்த ஆக்கம் சிந்தித்து செயல்பட வைக்குமானால் அதுவே இதற்குக் கிடைத்த பயனாக இருக்கும்.
‘நான்’ எனும் நச்சுப்பாம்பு நம்மில் விஷத்தைப் பரப்பி ஆவிக்குரிய வாழ்க்கையை வாழமுடியாமலும், ஆவிக்குரிய பணி செய்ய இயலாமலும் ஆக்கிவிடாமலிருக்க அன்றாடம் தாழ்மையோடிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய கடமையை விளக்குகிறது ‘சிற்றெரும்பும் கட்டெறும்பும்’ எனும் ஆக்கம்.
புதிய உடன்படிக்கையின் மெய்த்தன்மையை அறிந்து வைத்திருக்கிறீர்களா? அதுபற்றிய இறையியல்ப்பூர்வமான ஆக்கத்தை அலன் டன் நான்கு பாகங்களாக எழுதி வருகிறார். அதன் முதலாவது பாகத்தின் மொழியாக்கம் இந்த இதழில் வந்திருக்கிறது. இது பொறுமையாக சிந்தித்து வாசிக்க வேண்டிய இறையியல் ஆக்கம். புதிய உடன்படிக்கை மக்களாக அதன் ஆசீர்வாதங்களை அனுபவித்து வருகிற நாம் அதைப்பற்றிய வேதப்பூர்வமான சிந்தனையைக் கொண்டிருப்பது அவசியம். உங்கள் ஆதரவுக்கும், ஜெபங்களுக்கும் நன்றி! – ஆசிரியர்.