ஏமி கார்மைக்கள்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை

Amy-Carmichaelசமீபத்தில் இயன் மரேயின் கைவண்ணத்தில் புதிதாக வெளிவந்த ஏமி கார்மைக்களின் நூலை உடனடியாக என்னுடைய சபையின் புத்தக அறையில் இருந்து பெற்று வாசிக்க ஆரம்பித்தேன். நூலை வாசித்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. இதற்கு முன் ஏமி கார்மைக்கள் பற்றி எலிசபெத் ஸ்கொக்லன்ட் என்ற பெண்மனி எழுதிய நூலை வாசித்திருக்கிறேன். அந்த நூல் ஏமியைப் பற்றிய சரியான புரிதலை எனக்குள் ஏற்படுத்தவில்லை. அவரைப்பற்றிய வேறு நூல்கள் வாசித்ததில்லை. இந்தப் புதிய நூலை வாசிக்கத்தூண்டிய காரணங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். செந்தாளி என்ற என்னுடைய நல்ல நண்பி அமெரிக்காவில் வாழ்கிறார். அவரை நான் அமெரிக்க பிரயாணங்களின்போது சந்தித்தவேளையெல்லாம், ‘பாஸ்டர் நீங்கள் கட்டாயம் டோனவூர் போக வேண்டும். அங்கு ஒரு செய்தியாவது கொடுக்கவேண்டும். நிச்சயம் எல்லோரும் அதை விரும்புவார்கள். அங்கிருப்பவர்களுக்கு நான் எழுதிச் சொல்லிவிடுகிறேன்’ என்று வற்புறுத்திக் கேட்டிருந்தார். கட்டாயம் போக முயற்சிக்கிறேன் என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன். டோனவூர் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதிகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. செந்தாளியின் அன்புக்கட்டளை காரணமாக பல வருடங்களுக்கு முன் சுனாமி நிவாரணப் பணியின் நிமித்தம் கன்னியாகுமாரி போகும் வழியில் டோனவூர் போகும் வாய்ப்பு கிட்டியது. அது மிகப்பெரிய காம்பிளெக்ஸ். ஏமி கார்மைக்கள் தங்கியிருந்த அறையையும், அந்தக் காம்பிளெக்ஸையும் சுற்றிப் பார்த்தேன். மிகவும் அருமையாகக் கவனித்து உபசரித்தார்கள் அங்கிருந்த ‘சிஸ்டர்ஸ்.’ மூன்று நாள் தங்கியிருந்துவிட்டுப் போகவேண்டும் என்று அன்போடு வற்புறுத்தினார்கள். அதை நிறைவேற்ற முடியாதபடி என்னுடைய பிரயாணம் இருந்ததால் அவர்கள் உபசரிப்பை ஏற்று உணவருந்திவிட்டு செல்ல மட்டுமே முடிந்தது.

ACஅதற்கு முன் ஒன்றைச் சொல்லியிருக்க வேண்டும். செந்தாளி சிறு பெண்ணாக இருந்தபோது டோனவூர் ஐக்கியத்தால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பெண்மணி. எத்தனையோ இந்தியக் குழந்தைகளுக்கு வாழ்வளித்திருந்த அந்த ஐக்கியம் செந்தாளிக்கும் வாழ்வளித்திருந்தது. அந்த நன்றியை செந்தாளி இன்றும் மறக்கவில்லை. செந்தாளியின் அன்பு வற்புறுத்தலை நிறைவேற்றிய பிறகுதான் ஏமி கார்மைக்களைப்பற்றிய நூல்களைத் தேட ஆரம்பித்தேன். ஆனால் அவரைப்பற்றியும், அவருடைய பணிகளைப்பற்றியும் முழுமையான ஒரு புரிதலை என்னால் அடைய முடியவில்லை. அச்சூழ்நிலையில்தான் இப்புதிய நூலைப்பற்றிக் கேள்விப்பட்டேன். அதை வாசிக்கும் ஆர்வமும் உண்டானது. இன்னுமொரு காரணம் அதை எழுதியவரைப்பற்றியது. இதை எழுதிய இயன் மரே சீர்திருத்த பிரெஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர். அத்தோடு வரலாற்று எழுத்தில் சிறப்பானவர். சீர்திருத்த போதனையின் வழிவந்திராத ஏமி கார்மைக்களை எந்தக் கோணத்தில் இயன் மரே காட்டப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஓர் ஆர்வமும் எனக்குள் எழுந்தது. இயன் மரே எழுதியிருப்பதால் உண்மைகளை மறைக்காமல் ஏமியின் வாழ்க்கையைச் சித்தரித்திருப்பார் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அது நூலை வாசிக்கத்தூண்டியது.

முக்கியமானவர்களின் வாழ்க்கைச் சரிதங்களை எழுதியிருப்பவர்கள் ஒரு தவற்றைச் செய்துவிடுகிறார்கள். அதாவது, அவர்களைப்பற்றி யதார்த்தமாக எழுதாமல் கற்பனாவாதத்தைக் கையாண்டுவிடுகிறார்கள். அவர்கள் எந்தத் தவறையும் செய்யமுடியாதவர்கள் என்ற தோற்றத்தை சரிதத்தில் உருவாக்கிவிடுகிறார்கள். உள்ளதை உள்ளதுபோல் காட்டத்தவறும் இந்த முயற்சி சென்டிமென்டலிசத்திற்கு வித்திட்டுவிடுகிறது. அந்த முறையிலேயே கிறிஸ்தவப் பெரியவர்களைப் பார்க்க வாசகன் பழகிவிடுகிற நிலையும் ஏற்படுகிறது. இவர்களைப்போல வாழ்வது கஷ்டம்; தவறே செய்ய முடியாவர்கள்; எட்டமுடியாத தூரத்தில் இருப்பவர்கள் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்திவிடுகிறது. இந்த ஆபத்து இயன் மரேயின் நூலில் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. இயன் என் நம்பிக்கையை ஓரளவுக்கு வீணாக்கவில்லை. ஏமியைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் என்று தெரிகிறது. அவரைப்பற்றிய இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு எனக்கு நூலில் விடைகிடைக்காவிட்டாலும், அது இன்னும் சில கேள்விகளை எழுப்பியிருந்தாலும் ஓரளவுக்கு ஏமி கார்மைக்களைப்பற்றிய புரிதலை அடைய நூல் நிச்சயம் உதவியிருக்கிறது. இந்த ஆக்கத்தில் நான் முதலில் ஏமியின் வாழ்க்கையையும், பணிகளையும்பற்றி விளக்கிவிட்டு அடுத்து வரவிருக்கின்ற ஆக்கத்தில் அவரைப்பற்றிய மதிப்பீட்டை வழங்கவிருக்கிறேன்.

ஏமி கார்மைக்களின் குடும்ப வரலாறும், கிறிஸ்தவ நம்பிக்கையும்

இனி நூலின் உள்ளே நுழைந்து ஏமியின் வாழ்க்கையை ஆராயலாமே. ஏமி கார்மைக்கள் 1867ல் வட அயர்லாந்தில் டிசம்பர் 16ம் தேதி பிறந்தார். அல்ஸ்டர் பிரெஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்ததாக அவருடைய குடும்பம் இருந்தது. சங்கீதப் புத்தகத்தில் இருந்து பாடல்களைப் பாடுவதையும், குடும்ப ஆராதனையையும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்றுவதையும் தீவிர வழக்கமாகக் கொண்டிருந்த பக்திமிக்க குடும்பப் பாரம்பரியத்தைத் கொண்டிருந்தார் ஏமி. ஓய்வு நாளைக் கர்த்தருக்காகவும், அவருடைய வார்த்தைக்காகவுமே அவருடைய குடும்பம் செலவிட்டது. 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை வேதமாகக் கொண்டு வளர்ந்த பின்னணி ஏமியினுடையதாக இருந்தது. அவருடைய ஆரம்பக் கல்வியை இங்கிலாந்தில் ஹரகேட்டிலிருந்த போர்டிங் ஸ்கூலில் பெற்றுக்கொண்ட ஏமியினுடைய குடும்பம் ஓரளவுக்கு பணவசதி படைத்தது; மத்தியதரக் குடும்பமாக இருந்தது. 1885ல் தந்தை இறந்தபோது ஏமியினுடைய படிப்பு முடிவுக்கு வந்தது. குடும்பத்தில் தனக்கு இளையவர்களாக இருந்தவர்களைக் கவனிப்பதிலும், ஓவியம் பயில்வதிலும் ஏமி கவனம் செலுத்தினார்.

பிரெஸ்பிடீரியன் சபைப்பின்னணியில் வளர்ந்திருந்த ஏமி, கர்த்தரை விசுவாசித்த காலப்பகுதியில் சுவிசேஷ கிறிஸ்தவர்கள் மத்தியில் சுயபக்திவிருத்தியில் கவனம் செலுத்துவது தீவிரமாகிக்கொண்டிருந்தது. ஆவிக்குரிய பயனுள்ள வாழ்க்கைவாழ சுயபக்திவிருத்தி அத்தியாவசியம் என்ற கருத்து மேலோங்கிக்கொண்டிருந்தது. இதற்கு அக்காலகட்டத்தில் உருவாகி வளர்ந்துகொண்டிருந்த ஆவிக்குரிய இயக்கமொன்று காரணமாக இருந்தது. கம்பிரியாவில் கெஸ்சிக் என்ற பகுதியிலும் வேறு சில இடங்களிலும் வருடாந்தர ஆவிக்குரிய கூட்டங்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தோர் நடத்தி வந்தனர். இது முக்கியமாக ஆங்கிலிக்கன் சபைப்பிரிவினரின் மத்தியில் தோன்றியிருந்தபோதும், ஏனைய சபைப்பிரிவினர் மத்தியிலும் இதன் செல்வாக்கு பரவ ஆரம்பித்தது. அன்ட்ரூ போனர் போன்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த சீர்திருத்த பிரெஸ்பிடீரியன்களும் இந்தக்கூட்டங்களுக்கு சென்றிருந்தனர். அக்கூட்ட நிகழ்ச்சிகள் ‘தனக்குப் பயனுள்ளதாக இருந்தபோதும் சில நடவடிக்கைகள் தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கக்கூடியனவாக இருந்தன’ என்று அன்ட்ரு போனர் குறிப்பிட்டிருப்பதாக இயன் மரே நூலில் சுட்டிக்காட்டுகிறார். ஏமி கார்மைக்கள் பதினெட்டு வயதாக இருக்கும்போது கெஸ்சிக் கூட்டமொன்றில் கிளாஸ்கோவில் கலந்துகொண்டார். 1887ம் ஆண்டு பெல்பாஸ்டில் (அயர்லாந்து) நிகழ்ந்த இத்தகைய கூட்டங்களிலும் ஏமி கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் ஹட்சன் டெயிலர், ரொபட் வில்சன் போன்றோர் உரையாற்றியிருந்தனர். ரொபட் வில்சன் கெஸ்சிக் (கன்வென்சன்) கூட்டங்களின் ஆரம்பத் தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

கெஸ்சிக் கூட்டங்கள் மூலம் உருவான, 65 வயதுள்ளவராக இருந்த ரொபட் வில்சனின் தொடர்பு பின்னால் அவருடைய குடும்பத்தில் வளர்ப்பு மகளைப்போல வாழ்வதற்கான வசதியை ஏமிக்கு பெற்றுக்கொடுத்தது. ஏமிக்கு வில்சனின் மீது அதிக மதிப்பிருந்தது. தன் வீட்டில் வளர்ந்த ஏமிக்கு உலக மிஷனரி ஊழியம்பற்றிய ஆர்வத்தை வில்சன் ஊட்டி வளர்த்தார். கெஸ்சிக் கன்வென்சன், வில்சனின் தொடர்பு, அவருடைய போதனைகள், வாழ்க்கைமுறை ஆகியன ஏமியை மிஷனரி ஊழியத்தில் ஆர்வம் காட்டவைத்ததில் ஆச்சரியமில்லை. பிரெஸ்பிடீரியனாக வளர்ந்த ஏமியில் கெஸ்சிக் ஆவிக்குரிய கூட்டப்போதனைகளின் தாக்கம் எந்தளவுக்கு இருந்தது என்பதை அவரைப்பற்றிய மதிப்பீட்டைச் செய்யும்போது பார்ப்போம். இருந்தபோதும் கெஸ்சிக் கன்வென்சன் கூட்டப் போதனைகள்பற்றி இந்த இடத்தில் சொல்லாமல் இருக்கமுடியாது.

கெஸ்சிக் போதனைகளைப் போதித்த முக்கியமானவர்களில் ஒருவர் அன்ட்ரூ மரே. சிறந்த கிறிஸ்தவரான இவரும் கெஸ்சிக் போதனையாளர்களும் பரிசுத்தவாழ்க்கை வாழ்வதுபற்றிய வித்தியாசமான போதனையை அளித்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த எவ். பி. மேயர் போறோரும் இதன் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர். இந்தப் போதனைகள் பரிசுத்தமாகுதலில் தனி மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்வின் பொறுப்பைவிட கிறிஸ்து நமக்குள் இருந்து செய்கின்ற கிரியைகளுக்கும், அந்தக் கிரியைகளுக்கு நம்மை ஆவிக்குரிய ஜெபம், தியானங்கள் மூலம் ‘ஒப்புக்கொடுத்து’ வாழ்கின்ற முறையே மிகவும் அவசியமானதென்றும் வலியுறுத்திப் போதித்தனர் (Let go and let God). இது வழமையாக பரிசுத்தவாழ்க்கை வாழ்வதுபற்றி அப்போஸ்தலர் காலத்திலிருந்து வந்திருந்த போதனைகளுக்கு முரணாக இருந்தது. கெஸ்சிக் கன்வென்சன் கூட்டங்களில் காணப்பட்ட சூழ்நிலை, நடவடிக்கைகள், போதனைகள் ஆகியவை ஆவிக்குரிய உணர்வுகளை உருவாக்கத் தேவையானவை என்ற எண்ணமும், அத்தகையவற்றிற்கு தன்னை இழந்து ஒப்புக்கொடுப்பதன் மூலமே ஒருவரால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய வாழ்வை வாழமுடியும் என்ற கருத்துகளும் மேலோங்கின. இந்தப் போதனைகள் ஆவிக்குரிய உணர்வலைகளைத் தூண்டி அநேகருக்கு ஆவிக்குரிய வாழ்கை வாழ்வதில் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருந்தாலும் அவற்றில் காணப்பட்ட முக்கியமான இறையியல் தவறுகளை எல்லோரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஆங்கிலேயத் திருச்சபை பிஷப்பாக இருந்த ஜே. சி. ரைல் அவற்றைப் பாரதூரமானவையாக உணர்ந்து தான் பணிபுரிந்த ஆங்கிலிக்கன் பிரிவில் அவற்றிற்கெதிரான எச்சரிக்கைகளை விடுத்திருந்தார். அவர் எழுதிய ‘பரிசுத்தமாகுதல்’ (Holiness) என்ற நூலின் நீண்ட அறிமுகப்பகுதி கெஸ்சிக் போதனையைத் தோலுரித்துக்காட்டி அதற்கெதிரான வேதபூர்வமான பரிசுத்தமாக்குதலுக்கான விளக்கத்தை அளிக்கிறது. இத்தகையப் போதனைகள் அமெரிக்காவிலும் இந்தக் காலத்தில் தலையெடுத்தன. பென்ஜமீன் வோர்பீல்ட் எனும் இறையியலறிஞர் தன்னுடைய ‘பூரணத்துவம்’ என்ற பெரும் நூலில் இப்போதனைகளை இனங்காட்டி, அவற்றின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றிற்கெதிரான வேதவிளக்கங்களைத் தந்திருக்கிறார். 20ம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற பிரசங்கியாக இருந்த மார்டின் லொயிட் ஜோன்ஸ் கெஸ்சிக் கூட்டங்கள் எதிலும் பேச மறுத்ததோடு அதன் போதனைகளையும் முற்றிலும் நிராகரித்தார். பியூரிட்டன் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டிய மார்டின் லொயிட் ஜோன்ஸ் பியூரிட்டன் பரிசுத்தமாக்குதலுக்கு எதிர்மாறான போதனைகளாக கெஸ்சிக் போதனைகள் இருப்பதைக் கண்டார்.

1900ங்களின் ஆரம்பத்திலேயே அமெரிக்காவில் இன்றைய கெரிஸ்மெட்டிக் இயக்கத்துக்கு ஆரம்பகட்டமான அசூசா தெரு எழுப்புதல் நிகழ்வுகளும் உருவானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டு பெந்தகொஸ்தே போதனைகளில் காணப்பட்ட பரிசுத்தமாக்குதல் தொடர்பான போதனைகளின் சாயலைக் கெஸ்சிக் போதனைகள் அன்றே கொண்டிருந்தன. நாம் வெளியிட்டிருக்கும் அல்பர்ட் என். மார்டினின் ‘வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை’ என்ற நூலும் இந்த விஷயத்தை மனதில் வைத்தே எழுதப்பட்டிருக்கும் அருமையான நூல். எந்தளவுக்கு ஏமி கார்மைக்களில் கெஸ்சிக் போதனைகளின் தாக்கமிருந்தது என்பதை இயன் மரே தெளிவாக விளக்கியிராவிட்டாலும் சிலவற்றை நூலில் அடிக்கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.

மிஷனரிப் பணியில் ஆர்வமும், ஆரம்ப நடவடிக்கைகளும்

1892ம் ஆண்டு ஜூலை மாதம் மிஷனரி ஊழியத்திற்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்ற உந்துதல் தனக்குள் உருவானதாக ஏமி குறிப்பிடுகிறார். இதற்கு அவருடைய வளர்ப்புத் தந்தையும் காரணமாக இருந்திருப்பதை முன்பே கண்டோம். ஆகஸ்டு மாதம் ‘சீன உள்ளூர் மிஷன்’ என்ற மிஷனரி நிறுவனத்தோடு தொடர்புகொண்டு இலண்டனில் அவர்களோடு ஓர் இன்டர்வியூவுக்கு ஏற்பாடு செய்துகொண்டார் ஏமி. மிஷன் அவரை ஏற்றுக்கொண்டது. தன் பெட்டி படுக்கைகளை எல்லாம் தயார்செய்துகொண்டு பிரயாணத்துக்குத் தயாராக இருந்தவேளை மிஷனைச் சேர்ந்த டாக்டர் ஏமியின் உடல்நிலை இந்தப்பணிக்குத் தயாராக இல்லை என்று நிராகரித்துவிட்டார். ஏமி மறுபடியும் வில்சனின் வீட்டுக்கே திரும்ப நேர்ந்தது; ஆனால் நீண்டகாலத்துக்கு இருப்பதற்கு அல்ல. அதற்குப் பிறகு ஜப்பானுக்குப் போகத் தீர்மானித்த ஏமி, ஜப்பான் சுவிசேஷக் குழுவினரோடு தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக 1893ல் ஜப்பான் சென்றார். ஜப்பான் வாழ்க்கை ஏமிக்கு நல்ல அனுபவத்தைத் தந்தது. சுவிசேஷப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஏமி மொழியைக் கற்றுக்கொள்வதில் தீவிரமாக ஈடுபட்டார். அத்தோடு அங்கு காணப்பட்ட சில தவறான சுவிசேஷ அறிவிப்பு முறைகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை அவரை சிந்திக்க வைத்தன. சிறுமிகளை கிறிஸ்துவுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால் வெறுமனே சுவிசேஷம் சொன்னால் போதாது, தையல் கற்பித்தோ, நூற்கவோ பழகிக்கொடுத்து சுவிசேஷத்தைக் கொஞ்சம் குறைத்துச் சொன்னால் அதிகம் பேர் ஆண்டவரிடம் வருவார்கள் என்று சுவிசேஷப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் சொன்னதை ஏமி ஏற்றுக்கொள்ளவில்லை. ‘மெய்யான ஆர்வத்தோடு இரண்டு பேர் வந்தால் போதும் நூறுபேர் விளையாடுவதற்காக வருவதைவிட. இந்தமாதிரி ஆத்துமாக்களுடன் விளையாடுவது நல்லதல்ல’ என்று ஏமி இதைப்பற்றி எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சில மிஷனரிகள் இயேசு படங்களை வைத்து சுவிசேஷம் சொல்லி வந்ததையும் ஏமி துப்புரவாக விரும்பவில்லை. தேவகுமாரனை எவ்வாறு மனிதகுமாரனில் இருந்து பிரித்துப் பார்க்கமுடியும் என்று ஏமி மிகவும் வருத்தப்பட்டார். அப்போஸ்தலர்கள் தேவனுடைய வார்த்தையில் முழு நம்பிக்கைவைத்துப் பிரசங்கிப்பதைவிட ஆத்துமாக்களுடைய உணர்வுகளைத் தூண்டுவதற்கு எதையும் செய்யவில்லை என்றும், தேவ வல்லமை நீங்கியதனாலேயே திருச்சபை படங்களை நாடி ஓடுகிறது என்றும் ஏமி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியப் பயணமும், வோக்கரின் அறிமுகமும்

ஏமி ஜப்பானில் அதிக காலம் இருக்கவில்லை. அதற்குப் பிறகு கெஸ்சிக் மிஷன் நிறுவனத்தின் மூலமாக இலங்கைக்குப் போனார். அதுவும் அவருடைய வளர்ப்புத் தந்தையின் உடல்நலக்குறைவின் காரணமாக நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர் மறுபடியும் சொந்தநாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது. அங்கு வந்த பிறகு அவருக்கு ஒரு திருப்பம் வாழ்வில் ஏற்பட்டது. அது ஒரு பெரிய திருப்பந்தான். இங்கிலாந்து திருச்சபையின் கிளையான செனானா மிஷனரி நிறுவனத்தின் மூலமாக இந்தியாவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. இருபத்தி ஏழு வயதில் அக்டோபர் மாதம் 11ம் நாள் 1895ம் வருடம் ஏமி இந்தியாவுக்குப் பயணமானார். அந்தப் பயணம் ஒருவழிப்பயணமாக அமையும் என்பதை அவர் வாழ்வில் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்; தெரிந்திருந்தாலும் அது அவருக்கு எந்தக் கவலையையும் அளித்திருந்திருக்காது. அந்தளவுக்கு கிறிஸ்துக்குப் பணிசெய்வதில் இளம் வயதிலேயே தீவிர பொறுப்புணர்ச்சி ஏமியிடம் இருந்தது.

பெங்களூர் மிஷன் ஆஸ்பத்திரியை அடைந்த ஏமி அந்தக் காலத்தில் இந்தியாவில் 15 மில்லியன் மக்கள் பேசிய தமிழ் மொழியை முதலில் கற்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. முதன் முறையாக இந்தியாவில் நிலவிவந்த இருளும், பிசாசின் கைங்கரியங்களும் சூழ்ந்திருந்த வெளிப்படையான சமுதாயத் தீங்குகளை வாழ்வில் உணர ஆரம்பித்தார் ஏமி. இந்து சமுதாயத்தின் ஆணிவேராக இருந்த ஜாதிமுறையும், கணவன் இறந்தபின் மனைவி உடன்கட்டை ஏறுதலும் அவருடைய கவனத்தைத் தொட்டன. சமுதாயம் இருந்த நிலை மட்டுமல்லாது திருச்சபை அப்போதிருந்த நிலை அவருக்கு துன்பம் தந்தது. சமுதாய இருளுக்கு மத்தியில் கிறிஸ்தவம் என்ற பெயரில் பெயரளவிலான ஒரு மதத்தையே ஏமி அன்று கண்டார். எத்தனையோ காலங்களாக மிஷன் ஊழியங்கள் இருந்திருந்த போதிலும் இருதயத்தைத் தொட்டுத் திருப்பியிருந்த சுவிசேஷக் கிறிஸ்தவத்தை அங்கு அவரால் காணமுடியவில்லை. கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் இருந்தவர்கள் கையில் வேதப்புத்தகமே இல்லாதிருந்தது. அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் மட்டுமே கிறிஸ்தவ ஊழியம் செய்வேன் என்று பணிசெய்தவர்களையே அவர் பெரும்பாலும் கண்ணால் கண்டார். அவர்களுக்கு இயேசுவின் சுவிசேஷமென்றால் என்னவென்பதும் தெரியாதிருந்தது. ‘முற்களும், களைகளும் நிரம்பி வழிந்த திருச்சபையையே நான் கண்டேன்’ என்று ஏமி எழுதியிருக்கிறார். இருள்பரவியிருந்த இந்து சமுதாயத்தில் ஊழியம் செய்வதன் மூலம் சந்திக்கக்கூடிய நெருடல்களால் தளர்ந்துபோன மிஷனரிகள் சமுதாயத்திற்கேற்றவிதத்தில் ஒத்துப்போகும் சுவிசேஷ ஊழியத்தைச் செய்யும் முரண்பாட்டுக்கு இடங்கொடுக்கும் சோதனையில் வீழ்ந்திருந்தனர். பெங்களூரில் இதைக் கண்ட ஏமி சோகமுற்றார்.

rev-thomas-walkerஏமி கார்மைக்களுக்கு அன்று கிடைத்த பெரும் ஆசீர்வாதம் தொமஸ் வோக்கர் என்ற மனிதனின் உருவத்தில் வந்தது. இவரைப்பற்றிச் சொல்ல வேண்டும். தென் தமிழகத்தில் ஏமியின் வாழ்க்கையிலும் பணிகளிலும் இந்த மனிதர் பெரும் இடத்தைப் பெற்றிருந்தார். ஏமியைவிட எட்டு வயது கூடியவர் வோக்கர். ஏமியின் பணிகளெல்லாம் இவரின் துணையும் செல்வாக்குமில்லாமல் வளர்ந்திருக்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு உயிர்வாழ்ந்த காலம் முதல் இவர் ஏமிக்கு உற்ற துணையாக இருந்து வழிகாட்டியிருக்கிறார். இங்கிலாந்து திருச்சபையின் போதகர்களில் ஒருவராக இருந்த வோக்கர் சி. எம். எஸ். மூலம் திருநெல்வேலி மாகாணத்தில் (அன்று தின்னவெலி) பணிபுரிந்து வந்திருந்தார். தமிழைப் பயிலத் துணை செய்வதாக வோக்கரும் அவருடைய மனைவியும் கொடுத்த வாக்குறுதிகள் 1896ல் ஏமியைத் திருநெல்வேலியில் போய் வாழவைத்தது. வோக்கர் தமிழை முறையாகக் கற்றுப் பிரசங்கம் செய்த வேத இறையியல் திறமைகளைக் கொண்டவராக இருந்தார். அவருடைய பிரசங்கத்திறமையை மட்டுமல்லாது, அதன் மூலமான ஆவியானவரின் செயல்பாட்டையும் ஏமி தன் புலன்களால் உணர்ந்தார். அன்று வோக்கர் தமிழகத்தில் பணிபுரிந்த கிறிஸ்தவப் பிரிவே இன்றைக்கு சி. எஸ். ஐ. (தென்னிந்திய திருச்சபை) பிரிவாக இயங்கி வருகிறது. அன்று வோக்கரோடு ஏமிக்கு ஏற்பட்ட உறவு எத்தனைப் பெரிய மாற்றங்களையும், நிலைநின்று பெயர் சொல்லவைத்த பணிகளையும் ஏமி செய்வதற்கு வழிவகுத்திருக்கிறது.

தொமஸ் வோக்கர் 1885ல் மிஷனரியாக தமிழகம் வந்து செனானா மிஷனைச் சேர்ந்த செல்வி ஹொட்ஜை 1890ல் மணம்புரிந்தார். தமிழகம் வந்தநாள் தொடக்கம் அவர் திருநெல்வேலியில் இருந்த பிஷப்புகளுக்கு துணைசெய்து நிர்வாகப்பணிகளைக் கவனித்துக்கொண்டார். பின்னால் அவற்றைத் துறந்துவிட்டு சுவிசேஷப் பணியில் ஈடுபட்டு ஊழியத்திற்கு தகுந்தவர்களுக்கு பயிற்சிகொடுக்க ஆரம்பித்தார். ஸ்பிரிங் இல்லாத கட்டை மாட்டுவண்டியில் ஒரு சிறு கூட்டத்தோடு பிரயாணம் செய்து பல இடங்களில் சுவிசேஷப் பணிபுரிந்தார் வோக்கர். அத்தோடு ஊழியத்திற்காகப் பலரைத் தயாரிப்பதற்காக போதனைகளையும் தந்து வந்தார். 1904வரையில் எட்டுவருடங்களுக்கு வோக்கர் ஏமியின் வழிகாட்டியாக பலவிதங்களில் துணைசெய்து வந்தார். வோக்கரின் மனைவியின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டபோதே வோக்கர் மனைவியோடு இங்கிலாந்து போக நேர்ந்தது. அதற்குப் பிறகு ஏமி தனியாகவே தன் பணியைத் தொடர வேண்டியிருந்தது. வோக்கரோடிருந்த காலங்களில் ஏமிக்கு நல்ல பாதுகாப்பு இருந்தது மட்டுமன்றி அவர் வோக்கரிடம் கற்றுக்கொண்டவைகள் அநேகம்.

டோனவூர் ஐக்கியமும், ஏமியின் சமூகத் தொண்டும்

ஆரம்பத்தில் வோக்கரோடு சுவிசேஷப் பணிகளுக்குப் போய்க்கொண்டிருந்த ஏமியின் கவனம் குழந்தைகள் மீது திரும்பியதற்குக் காரணம் ஏழு வயதுள்ள ஒரு பெண்குழந்தைதான். அவள் பெயர் பிரீனா. அவள் ஏமியைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத்தேடிப் பல தூரங்களைக் கடந்து ஓடி வந்தாள். கடவுளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவளுடைய பெற்றோர்கள் அவளைக் கோயிலுக்கு அர்ப்பணித்திருந்தனர். அதை விரும்பாத சிறுமி ஏமியைத் தேடி வந்திருந்தாள். ஏற்கனவே சில தடவைகள் கோயிலிருந்து தப்ப முயற்சித்திருந்த அவள் கண்டுபிடிக்கப்பட்டு தீச்சூடு போடப்பட்டிருந்தாள். இப்போது அவள் ஏமியிடம் தஞ்சமடைந்திருந்தாள். அதற்குப் பிறகு நான்கு சிறுமிகள் வேறு காரணங்களுக்காக ஏமியால் காப்பாற்றப்பட்டிருந்தனர். இந்தக் கொடூரமான சமுதாய இழிவே ஏமியைக் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்க்கும் பணியில் வழிநடத்தியிருந்தது. அந்தக் காலத்தில் சிறுமிகளாக இருந்த பெண்பிள்ளைகளைக் கோயிலுக்கு சாமிக்கு திருமணம் செய்துகொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்படி அனுப்பிவைக்கப்படும் சிறுமிகள் கோயிலில் பூசாரிகளுக்குக் கீழிருந்து வளருவது மட்டுமல்லாமல் பூசாரிகளினுடையதும், ஊர்ப்பெரியவர்களினதும் சரீர ஆசைக்குப் பலியாகி விபச்சாரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இது தமிழகத்தில் நிகழ்ந்து வந்திருந்த பெருங்கொடுமை. பெண்குழந்தைகளை இப்படிக் கோயிலுக்கு அனுப்பிவைப்பதற்கு ஜாதிப் பிரச்சனை, திருமணப்பிரச்சனை, பொருளாதாரம் போன்ற பல காரணங்கள் இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சியிலுங்கூட இந்தவழக்கம் தொடர்ந்தது.

திருநெல்வேலி மாகாணத்தில் 1932ல் எழுதப்பட்ட ஏமியின் கடிதத்தின்படி 3000 கோயில்கள் இருந்தன. அப்படியானால் அவற்றில் எத்தனைக் குழந்தை விபச்சாரிகள் இருந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். இதை உணர்ந்த ஏமி கடுங்கோபமும், துன்பமும் அடைந்தார். இந்த சமுதாய இழிவை எதிர்த்து நிற்பதென்பது அந்தக் காலத்தில் சாதாரண விஷயமல்ல. மேல்ஜாதிப் பிராமணர்களோடு மட்டுமல்லாமல் ஏனைய உயர்சாதியினர், தாழ்ந்த சாதியினரோடும் போராட வேண்டும். எத்தனையோ சரீர ஆபத்துக்களையுங்கூட சந்திக்க நேரிடும். ஒரு பெண்ணால் செய்யக்கூடிய காரியமா அது. இதற்கெல்லாம் உதவி செய்துவருகிற நோக்கத்தில் பிரிட்டிஷ் அரசும் அன்றில்லை. முடிந்தவரை தங்களுடைய ஆட்சியையும், வருவாயையும் காத்துக்கொள்ளும் எண்ணத்திலேயே பிரிட்டிஷார் இருந்தனர். ஏமி தன்னந்தனியாக இந்தப் போராட்டத்தில் குதிக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் வோக்கரின் உதவி அவருக்கு இருந்தது. பல தடவைகள் இந்தப் போராட்டத்தின் காரணமாக கோர்ட்டுப் படியேற வேண்டியிருந்தது. ஒருதடவை ஒரு சிறுமியைக் காப்பாற்ற அவளை நாட்டைவிட்டே அனுப்ப நேர்ந்தது. 1901 ல் ஆரம்பித்து 1904ல் ஏமி பதினேழு குழந்தைகளை இந்தக்கொடுமையிலிருந்து காப்பாற்றியிருந்தார். வோக்கரோடு தொடர்ந்து சுவிசேஷப் பணியில் ஈடுபட முடியாதபடி இந்தக் குழந்தைகளை வளர்க்கும் முழுநேர வேலையில் ஏமி தன்னை அர்ப்பணிக்கும் நிலை ஏற்பட்டது. அதுவே கடவுள் காட்டுகிற வழியாகக் கருதி தன்னை அதற்கு ஏமி ஒப்புக்கொடுத்தார். இந்தக் குழந்தைகள் அன்போடு அழைக்கும் ‘அம்மா’ வாகவும் மாறினார். அந்தப் பெயரே கடைசிவரை ஏமியின் பெயராக நிலைத்தது.

இந்தக் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக இடத்தைத் தேடியபோதுதான் டோனவூர் கண்டுபிடிக்கப்பட்டது. ‘டோனா’ என்பது சி. எம். எஸ். நிறுவனத்துக்கு ஆதரவளித்து வந்த ஒரு ஜெர்மன் பெண்மணியின் பெயர். அவருடைய பெயரே இந்தக் கிராமத்துக்கு வைக்கப்பட்டிருந்தது. அவருடைய பணத்தில் 1824ல் ஒரு சிறு சபைக்கட்டடமும் இங்கு கட்டப்பட்டது. 1886ல் வோக்கர் முதல் தடவை இந்த ஊருக்கு வந்திருந்தார். 1900ல் ஏமி இந்த ஊருக்கு முதல் தடவை வந்தபோது அது அவருக்கு பார்த்ததுமே பிடித்துப்போய்விட்டது. இறுதியில் டோனவூரே ஏமியின் நிரந்தர வாழ்க்கை ஸ்தலமாகியது. அங்கு மூன்று அறைகள் கொண்டதாக இருந்த சிறுவீட்டில் வோக்கர் தம்பதியினரின் துணையோடு தான் காப்பாற்றிய பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்தார் ஏமி. அதுவே பின்பு வளர்ச்சியடைந்து டோனவூர் ஐக்கியமாகி 1000க்கு மேற்பட்ட சிறுமிகளும், சிறுவர்களும் இருந்து வளர்ந்து ஏமியின் கண்காணிப்பில் கல்வி பயின்ற நல்லூழியமாக இருந்தது. இதற்காக ஏமியோடு சேர்ந்து உழைப்பதற்காக அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட பலர் நியமிக்கப்பட்டிருந்தனர். நாளடைவில் ஒரு பெரும் பிள்ளைகள் காப்பகமாக பல்வேறு ஊழியர்களைக் கொண்டு வளர்ந்த ஸ்தாபனமாக டோனவூர் ஐக்கியம் மாறியது. கல்விஸ்தலங்களும், மருத்துவமனையும், பயிற்சி ஸ்தலங்கள் என்று பல்வேறு பணிகளும் டோனவூர் ஐக்கியத்தில் ஒவ்வொன்றாக ஆரம்பிக்கப்பட்டன. இங்கு வளர்ந்த பிள்ளைகளுக்கு ஏமி சுவிசேஷத்தை அறிவிக்கத் தவறவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கும் அநேகர். அப்படி ஞானஸ்நானம் பெற்ற எல்லொருமே கடைசிவரை விசுவாசிகளாக இருந்துவிடவில்லை. இருந்தும் பிள்ளைகளை வளர்த்துக் கல்வி புகட்டுவதோடு மட்டும் இருந்துவிடாமல் கிறிஸ்தவ சுவிசேஷத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் ஏமி கருத்தோடு செயல்பட்டார். பிள்ளைகளுக்கும், வேலை செய்கிறவர்களுக்கும் ஆராதிப்பதற்கு வசதியாக ஓர் ஆராதனைத்தளமும் டோனவூரில் கட்டப்பட்டது. உள்ளூர் பிரசங்கிகள் இதில் செய்தி கொடுத்தனர். அப்படி நல்ல பிரசங்கிகள் கிடைக்காதவேளையில் அங்கிருப்பவர்களே செய்தி கொடுத்தனர். பக்கத்து ஊர்களுக்குப் போய் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியிலும் தன்கீழிருந்தவர்களை ஏமி பயன்படுத்தினார்.

இந்தக் காலத்தில் ஆங்கிலேயத் திருச்சபையின் மிஷனரி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு இந்தியா வந்த ஸ்டீபன் நீல் ஏமியின் கீழ் டோனவூரில் பணிசெய்ய வந்திணைந்தார். பிள்ளைகளுக்கு போதிப்பதும், நிர்வாகக் கடமைகளைக் கவனிப்பதும் நீலின் பணியாக இருந்தது. நாட்கள் போகப்போக ஏமிக்கும் நீலுக்கும் இடையில் உறவு பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் ஸ்டீபன் நீல் கர்த்தரின் வேதம் தவறுகளேதுமற்று அவரால் ஊதியருளப்பட்ட வெளிப்படுத்தல் என்பதை நம்ப மறுத்ததுதான். ஏமி ஸ்டீபன் நீலை டோனவூர் பணிகளில் இருந்து விலக்கினார். இதைச் செய்வதற்கு ஒரு பெண்ணுக்கு பெருந்தைரியம் இருந்திருக்க வேண்டும். பெரும் மனத்தாங்களுடன் ஏமி இதைச் செய்ய நேர்ந்தது. அதற்குப்பின் ஸ்டீபன் நீல் திருநெல்வேலி சீ. எஸ். ஐ. பிரிவின் பிஷப்பாக பதவியேற்றார். இதிலிருந்து அந்தக் காலத்திலேயே சி. எஸ். ஐ. பிரிவு தென்னிந்தியாவில் எந்த நிலையில் இருந்திருக்கிறது என்பதை உணர முடியும்.

குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு கல்வியறிவூட்டி சுவிசேஷத்தை அறிவித்ததோடு எழுத்துப் பணியிலும் ஏமி ஈடுபட்டார். முப்பந்தைந்து நூல்கள்வரைத் தன் வாழ்நாளில் ஏமி எழுதி வெளியிட்டிருந்தார். அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும், தியான நூல்களாகவும், வாழ்க்கைச் சரிதங்களாகவும் இருந்தன. டோனவூர் பணிகளுக்குத் தேவையான பணத்தை இந்த வெளியீடுகள் மூலம் பெற்றுப் பயன்படுத்திக் கொண்டார் ஏமி. வாசிப்பதிலும், மற்றவர்களை வாசிக்க வைப்பதிலும் அவர் அக்கறை காட்டினார். டோனவூரில் இதற்காக ஒரு நூலகத்தை ஏற்படுத்தி அங்கிருந்தவர்கள் அதைப் பயன்படுத்தும்படிச் செய்தார்.

வயதாகி வரும் காலத்தில் ஏமி ஒரு விபத்தின் காரணமாக நடமாட முடியாத நிலையை அடைந்தார். அப்படியும் அவருடைய பணிகளை அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இறுதியில் தன்னுடைய 83ம் வயதில் 1951ம் ஆண்டு ஜனவரி 18ம் நாள் ஏமி கர்த்தரின் பாதத்தை அடைந்தார். தன்னுடைய நினைவாக கல்லறை எதுவும் டோனவூரில் கட்டக்கூடாது என்று அவர் உறுதியாகச் சொல்லியிருந்தார்.

டோனவூர் பணிகள் இன்று தொடர்ந்தும் நடந்து வருகின்றன. தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் சி. எஸ். ஐ. பிரிவின் மேற்பார்வையின் கீழ் இதற்காக உருவாக்கக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் இப்பணிகள் தொடர்கின்றன. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் விஷயத்தில் இந்திய அரசாங்கம் சட்டங்களை உருவாக்கியிருப்பதால் ஏமியின் காலத்தில் இருந்ததுபோல எவரையும் எவரும் நினைத்தபடி தத்தெடுத்து வளர்ப்பது என்பது இன்று முடியாத காரியம். இந்திய சட்டங்களுக்கு ஏற்றவிதத்தில் டோனவூரும் தன்னுடைய பணிகளில் மாற்றங்களைச் செய்துகொண்டது. ஏமியின் நோக்கங்களையும், இலக்குகளையும் பூரணமாகக் கொண்டதாக டோனவூர் பணிகள் இன்றுதொடர்கின்றன என்று சொல்வதற்கில்லை. முக்கியமாக ஏமியின் சுவிசேஷ நோக்கங்களை அப்படியே பின்பற்றும் நிறுவனமாக இன்று டோனவூர் இல்லை என்பதாகத்தான் நான் கேள்விப்படுகிறேன். தமிழகத்து சீ. எஸ். ஐ. சபைப்பிரிவு சுவிசேஷ இயக்க இலக்குகளைக்கொண்டதாக இன்று இல்லை. லிபரலிசத்தைப் பின்பற்றும் அந்தப்பிரிவின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் சுவிசேஷ நோக்கங்களை எதிர்பார்க்க முடியாது.

கிறிஸ்துவை வாழ்நாளெல்லாம் நேசித்து தியாகங்கள் பல செய்து தன்னுடைய சுகதுக்கங்களுக்கு மதிப்பளிக்காமல் சேவை செய்திருக்கும் ஏமி கார்மைக்களை நாம் எப்படி எடைபோடுவது? சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பூப்போன்ற குழந்தைகளை அதன் கோரமான அரக்கத்தனத்தில் இருந்து காப்பாற்றி வளர்த்த சமூகசேவையை ஏமி தனியொருவராக பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்திருக்கிறார். சமூகப்பணியைக் கிறிஸ்தவரல்லாதவர்களும் செய்யலாம், செய்து வருகிறார்கள்; அது கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட சொத்துரிமையல்ல. ஆனால், ஏமியின் சமூகத் தொண்டு கிறிஸ்துவில் அவர் வைத்திருந்த அன்பினால் உருவான தன்னலமற்ற தொண்டு. தமிழ் சமூகத்தில் நிலவி வந்த அகோரத் தீங்கை, குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை வெறுத்து, ஆபத்துக்களைச் துச்சமாக எண்ணி குழந்தைகளை அவர் காப்பாற்றிப் பாதுகாத்தார். கிறிஸ்துவின் அன்பு மட்டுமே ஒருவரை இதைச் செய்யவைக்கும். அந்தவிதத்தில் ஏமியின் சமூகத் தொண்டைப் பாராட்டலாம். இந்தவிதத்திலேயே வில்லியம் வில்பர்போர்ஸ் இங்கிலாந்தில் அடிமை ஒழிப்புக்காகப் போராடினார். வில்லியம் கேரியும் கணவனை இழந்த மனைவிகள் உடன்கட்டை ஏறுவதை எதிர்த்துப் பேசி அதைத்தடுக்க முயற்சிகள் எடுத்தார். ஜி. யூ. போப் மற்றும் கால்டுவெல் போன்றோர் சாதிப்பாகுபாட்டுக்கு எதிராகப் பேசியும், நடந்தும் வந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பு சமுதாயக் கோரங்களை, பண்பாட்டுச் சீரழிவுகளைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டிராமல் தன்னலமற்று ஒருவர் அவற்றிற்கெதிரான நடவடிக்கைகளை எடுக்க வைக்கும். அந்தவிதத்தில் ஏமி சமுதாயப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த குழந்தைகளை மீட்டு வளர்த்து வாழ்வளித்தது கிறிஸ்தவ அன்பின் காரணத்தினால்தான். அத்தகைய இருதயம் நமக்கிருக்க வேண்டும்.

இந்தளவுக்கு ஏமியின் கிறிஸ்தவ அன்பையும், சமூகத் தொண்டையும் நாம் வரவேற்றுப் பாராட்டினாலும் அதற்கு மேல் போய் அவருடைய வாழ்க்கையையும், பணிகளையும் பாரபட்சமற்ற வகையில் எடைபோடுவது அவசியம். அத்தகைய மதிப்பீட்டைத்தான் இனித் தொடர்ந்து எழுதவிருக்கிறேன். மறுபடியும் இந்தப் பக்கங்களில் சந்திப்போம்.

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s