வாசிப்பு சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாதது. வாசிக்காதவர்களால் சிந்திக்கவும், வளரவும் முடியாது. கல்லூரிப்படிப்பு இல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்தவர்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், வாசிப்பில்லாமல் வாழ்க்கையில் உயர்ந்தவர்களைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார, வாழ்க்கைத்தர வளர்ச்சி மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. வாசிப்பில்லாமல் வெறும் இணையத்தைச் சார்ந்தவைகளைக் கொண்டு மனிதர்கள் வளரவில்லையா? என்று சிலர் கேட்கலாம். அது, ஒரு துறையைச் சார்ந்த வளர்ச்சி மட்டுமே, அதுவே உண்மையான வளர்ச்சிக்கு அறிகுறி அல்ல.
வளர்ச்சி என்பது மனிதனின் அறிவு, மனோபாவம், சிந்தனை, விவேகம், ஒழுக்கம், நடத்தை என்பவற்றைச் சார்ந்தது. இவை மனிதனை மனிதனாக்குகிற விஷயங்கள். இவற்றின் வளர்ச்சியைப் பொறுத்தே மனிதனின் வளர்ச்சியைக் கணிப்பிட முடியும். இவற்றின் அடிப்படையிலேயே சமூக மாற்றங்களும் நிகழும். நல்ல சமூகமாற்றங்களுக்கு இந்த விஷயங்களில் மனிதனின் வளர்ச்சி முக்கியமானது. இந்த விஷயங்களில் மாற்றம் ஏற்பட மனிதனுக்கு மொழி அவசியமாகிறது. மொழியைப் புறக்கணிக்கும் சமுதாயம் உயர முடியாது. அதேநேரம் மொழியைத் தவறாகப்பயன்படுத்தும் சமுதாயமும் உயர முடியாது. மொழிவளர கல்வி அவசியம். மனிதனின் அடிப்படை சமுதாயத்தேவைகளில் ஒன்று கல்வி. அது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.
கல்வி மொழிக்கு எத்தனை அவசியமானதோ, அந்தவிதத்தில் அது அரசியல் கலந்ததாக இருந்துவிடக்கூடாது. அரசியல் சார்பற்ற கல்வி அமைப்பு சமூகம் உயர ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை. இதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அறுபதுகளில் தி. மு. க. தமிழகத்தில் மொழி வெறியை ஏற்படுத்தியது. தி. மு. க ஆட்சிக்கு வர அது வித்திட்டது. மக்கள் சுயமொழி வெறியால் வேற்று மொழி எதிர்ப்பாளர்களாக, அந்த மொழிகளைப் பின்பற்றும் மத எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இந்தியும், ஆங்கிலமும், புறக்கணிக்கப்பட்டது. இந்து மதமும் புறக்கணிக்கப்பட்டு பகுத்தறிவுவாதம் தலைதூக்கியது. இதெல்லாம் எந்தவகையில் மொழிவளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்று ஆராய்ந்தால் பெரியளவுக்கு மொழி வளர்ச்சி நிகழ்ந்திருப்பதாகக் கொள்ள முடியாது. உண்மையில் தமிழகம் புறக்கணித்திருக்கும் விஷயங்களால் அதற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள்தான் அதிகம் என்று சொல்லலாம். குறுகிய மாநிலப் பார்வைகொண்ட பரந்தநோக்கில்லாத சமூகப் பார்வையை தி. மு. க உருவாக்கியது. அரசியல் நோக்கங்களுக்கு மொழிவெறி துணைபோயிருந்தாலும் உண்மையான சமூக வளர்ச்சிக்கு அது உதவவில்லை. அதனால்தான் அரசியல் கலப்பில்லாத நேர்மையான கல்வி மக்களுக்குத் தேவை என்கிறேன்.
சுயமொழிக்கல்வி என்பதிலெல்லாம் எனக்கு நாட்டமில்லை. மனிதனின் வளர்ச்சிக்குத் துணை செய்யும் கல்வியே தேவை. பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் கல்வி அளிக்க வேண்டும். சுயமொழிக் கல்வி குறுகிய மாநில, வட்டார மனப்பான்மையையே வளர்க்கும். மாநிலப் பாதுகாப்புக்கு அது அவசியம் என்று கருதுவது இன்றைய உலகில் கண்ணைக்கட்டிக்கொண்டு உலகம் தெரியவில்லை என்று சொல்வது போலாகும். இணைய உலகமும், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார அணுகுமுறையும் குறுகிய மனப்பான்மைக்கு பேரெதிரியாக உருவாகி விட்டிருக்கிறது. மனிதன் எங்கிருந்தாலும் உலகின் இன்னொரு பகுதியோடு தொடர்புகொள்ளவும், சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் கூடியவனாக இன்று இருக்கிறான்.
கல்வியில் மொழிக்கு முதலிடம் அமைகிறது. எதைக்கற்றாலும் மொழியில்லாமல் கற்க முடியாது. மனிதனுக்கு வாசிக்கவும், எழுதவும் அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டும். அதை அளிப்பதே சிறந்த கல்வி. இந்த இடத்தில்தான் கீழைத்தேய நாடுகளின் கல்வி முறையில் பெருங்குறைபாடிருப்பதைப் பார்க்கிறோம். இந்நாடுகளில் கல்வி பொருளாதார மேன்மையை மட்டும் இலக்காகக் கொண்டதாக மாறி சிந்தனைபூர்வமான தேர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்ளுவதற்கான அடிப்படை அம்சங்களைப் புறக்கணித்து வெறும் பட்டங்களை மட்டும் பெற்றுத்தரும் கல்வியாக மாறியிருக்கிறது. இதற்கு அரசியல் நிச்சயம் ஒரு பெருங்காரணம் என்பதை மறுக்கமுடியாது. இன்றைய கல்விமுறையின் கீழ் வளரும் பிள்ளைகளுக்கு வாசிப்பிலும், எழுத்திலும் தேர்ச்சியில்லை. பட்டப்படிப்பை ஆரம்பிப்பதற்கு முன் அவர்கள் வாசித்திருப்பதும் எழுதியிருப்பதும் மிகக் குறைவு. எழுத்துப்பிழையில்லாமல் சொந்த மொழியில் எழுதத் தெரியாமலும், வாசிப்புத்தேர்ச்சியில்லாமலும் பட்டப்படிப்பை ஆரம்பிப்பவர்களின் பட்டப்படிப்பு எப்படியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.
எந்தக் கல்விமுறையும் கல்லூரிப் படிப்புக்கு முன் மாணவனை வாசிப்பதிலும், எழுதுவதிலும் தேர்ச்சியுள்ளவனாக்க வேண்டும். மேலை நாட்டுப் பாடசாலைகளில் இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நம் சமுதாய மனப்பான்மை இதைப் புறக்கணித்து தேவையற்றதாக ஆக்கியிருக்கிறது. வீட்டில் பெற்றோர் இதற்கு பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் வாசிப்பது பொழுதைப் போக்குகின்ற செயலாகக் கருதப்படுகின்றது. நல்ல மார்க்குப் பெற்றுத் தேரவேண்டும் என்ற வணிக நோக்குக் கொண்ட ஒரே உறுதியால் வாசிப்பதிலும், எழுதுவதிலும் பிள்ளைகளை ஆர்வமற்றவர்களாக்கியிருக்கிறார்கள். இது மாற வேண்டும். இந்த மாற்றமேற்பட முழு சமுதாயமும் இணைந்து இயங்க வேண்டும்.
ஓரளவுக்கு கல்வி பயின்றிருக்கும் சிலரிடம் வாசிப்புப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டபோது நான் அவதானித்திருக்கும் விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் பள்ளிவாழ்க்கையில் ஒரு நூலையாவது முழுமையாக வாசித்ததில்லை. அத்தகைய ஊக்கத்தைப் பள்ளியில் அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஒரு கட்டுரையாவது அவர்கள் எழுதியதில்லை. எப்படிக் கட்டுரை எழுத வேண்டும், அதற்கான விதிகள் என்ன என்பது பற்றிய ஆரம்ப விளக்கங்களைக்கூட எவரும் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கவில்லை. அதன் விளைவு என்ன? அவர்களுக்கு சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளுக்குக் கூட பொருள் தெரியவில்லை. தங்களுடைய குடும்பத்திலும், சுற்றுச் சூழலிலும், வட்டாரத்திலும் பேசக் கற்றிருக்கும் மொழிதவிர வேறு ஞானமில்லை. பொதுவாக தமிழில் பயன்படுத்தப்படும் பழமொழிகளும், உவமைகளும், மொழி அணிநலன்களும் அவர்களுக்குப் பரிச்சயமில்லாதவையாக இருந்தன. இலக்கியவாடை அரவே இல்லை. எது இதற்கெல்லாம் காரணம்? ஆரம்ப வாசிப்புப் பயிற்சியையும், எழுத்துப் பயிற்சியையும் அவர்கள் அடையமுடியாமல் போனதுதான்.
சமீபத்தில் கணையாழி இலக்கிய இதழின் பொன்விழாவை (50ம் ஆண்டு) நினைவுகூரும் கூட்டத்தில் முன்னாள் இந்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமை உரையாற்றியிருந்தார். அவரது உரையை நான் வாசிக்க நேர்ந்தது. சிதம்பரத்துக்கு இலக்கியப் பரிச்சயம், இலக்கிய இதழ் தொடர்பிருந்தது அறிந்து ஆச்சரியப்பட்டேன். அதைவிட முக்கியம் அவர் தன் உரையில் குறிப்பிட்ட விஷயங்கள்தான். நிதர்சனமான சில உண்மைகளை இனங்காட்டிப் பேசியிருந்த அவர் அவற்றிற்கான தெளிவான தீர்வுகளையும் சுட்டிக்காட்டி விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குப்பட்டது. கணையாழி இதழை ஆரம்பித்தவர் கஸ்தூரி ரங்கன். அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றியிருக்கிறார். கணையாழி இலக்கிய இதழாகத்தான் இருந்திருக்கிறது. அதன் வாழ்க்கையில் இடையில் தொய்வு ஏற்பட்டு மறுபடியும் எழுந்து நடைபோட ஆரம்பித்தது. சிதம்பரம் தன் பேச்சில், ‘வந்திருக்கும் கூட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தபோதும் அது 150 ஆக இருப்பது மகிழ்ச்சி தரவில்லை’ என்றார். ஐயாயிரமோ பத்தாயிரமோ பேர் வந்திருக்க வேண்டிய கூட்டம் இது என்று குறிப்பிட்ட அவர் இன்றைக்கு சிறுகதைகள், நாவல்கள் 500 பிரதிகள் மட்டுமே போகிறதென்பது சமுதாய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல என்றார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களாக இருந்ததைக் குறிப்பிட்ட அவர் இளைஞர்களிடம் இலக்கியம் போய்ச்சேராமலிருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார். ‘ஆறே முக்கால் கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகள் கடந்த ஓர் இதழ் அதிக பிரதிகள் விற்பனையாகவில்லை என்றால் எங்கோ கோளாறு இருக்கிறது நம் சமூகத்தில் என்று அர்த்தம்’ என்றார் சிதம்பரம். தழுவல் ஆங்கில இதழ்களும், நூல்களும் நாட்டில் இலட்சக் கணக்கில் விற்கிறபோது தமிழில் இரண்டாயிரம் போவது தவிப்பாக இருக்கிறது என்பது மிகப் பெரிய கோளாறுக்கான அறிகுறி என்றார் அவர். இதை மட்டும் சொல்லிவிடாமல் ஒரு முக்கிய காரணத்தை அவர் விளக்கினார். நாம் ‘தமிழில் பேசுவதில்லை, தமிழில் எழுதுவதில்லை. பல தமிழ்க்குடும்பங்கள் தமிழுக்குப் பதிலாக ஆங்கிலத்தைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளும் சூழல் வந்துகொண்டிருக்கிறது. தமிழில் பேசத் தயங்குகிறார்கள், கூச்சப்படுகிறார்கள்’ என்றார்.
சிதம்பரத்தின் பேச்சில் பல உண்மைகள் இருந்தன. தமிழில் பேசுவதில்லை, எழுதுவதில்லை என்று குறிப்பிட்ட அவர் அதற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டவில்லை. ஆங்கில மோகம் மட்டும் அதற்குக் காரணமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்விநிலை அந்தளவுக்கு மோசமாக வாசிக்கவும், எழுதவும் மாணவர்களை ஊக்குவித்து வளரச் செய்யாமல் இருந்திருப்பதையும், இருந்து வருவதையும் அவர் அறியாமல் இருந்திருக்கிறாரா, அறிந்தும் அதைப்பற்றி பேசாமல் இருந்திருக்கிறாரா என்று சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. ஆங்கில மோகம் என்பது முழுத்தமிழகத்தையும் பாதித்திருக்கும் ஒன்றல்ல. பெரும்பான்மையானவர்களுக்கு அதை அடைகின்ற வசதியில்லை. கல்வி இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருந்தால் வாசிக்கும் பழக்கமும், நூல் விற்பனையும் வளர்ந்திருக்கும். நான் பிரயாணம் செய்கிறபோது விமானத்தில் அநேகர் தடித்த நூல்களை வாசித்துக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். பத்துப்பதினொரு மணிநேரப் பிரயாணத்திலும் அவர்கள் வாசிக்கிறார்கள் என்றால் வீட்டில் எந்தளவுக்கு வாசிக்கிறவர்களாக இருப்பார்கள் என்று சிந்திக்க வேண்டும். இளமையில் வாசிக்கும் கலையை அவர்களுடைய கல்வி அவர்களுக்குத் தந்திருப்பதால் வாசிப்பு அவர்களுக்கு இயல்பாக வருகிறது. அவர்களோடு இணைந்ததொன்றாக இருக்கிறது. வாசிப்பதையும், எழுதுவதையும் அடிப்படை அம்சங்களாகக் கருதும் கல்வி அமைப்பு நமக்கு முதலில் தேவை. அது அமையும்போது வாசிப்பும், நூல்வளர்ச்சியும் தன்னால் ஏற்படும்.
இனி வாசிப்பின் அவசியத்திற்கான காரணங்களை அவதானிப்போம்.
1. வாசிப்பு மொழியில் தேர்ச்சி பெற உதவும். நாம் சிந்திப்பது நம்முடைய தாய்மொழியில். சிந்தித்தவற்றைப் பகிர்ந்துகொள்ளுவது நம்முடைய தாய்மொழியில். தாய்மொழியில் தேர்ச்சி பெறாமல் இவற்றைச் செய்ய முடியாது. இதற்கு நாம் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். புதிய வார்த்தைகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு வாசிப்பில் ஈடுபட வேண்டும். வார்த்தைகளில் பரிச்சயமேற்படுகிறபோது நம்முடைய வாசிப்பும், எழுத்தும், சம்பாஷனையும் வளரும். வார்த்தைகளைப் பயன்படுத்தியே சம்பாஷனையில் ஈடுபடுகிறோம். வார்த்தைகள் சம்பாஷனையை சிறக்கச் செய்யும். நம் சம்பாஷனையில் பயன்படுத்தும் மொழி பெரும்பாலும் குடும்பத்தில் கற்றுக்கொண்டிருக்கிற வட்டாரவழக்காகவே இருக்கும். அதற்காக அதுதான் நல்லது என்று அர்த்தமல்ல. சென்னை நகரத்தில் பேசப்படும் சேரிப் பேச்சு மேடைப் பேச்சுக்கு உதவுமா? அந்தப் பேச்சில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்தான் எழுதுவதற்கு உதவுமா? வாசிப்பில் வளர்கிறவர்கள் இந்தவகைப் பேச்சோடு மட்டும் நின்றுவிட மாட்டார்கள். சந்தர்ப்பத்திற்கேற்ற வகையில் பேச்சை நல்ல தமிழில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள அவர்களால் முடியும். கல்லூரிப்படிப்புக்கூட இல்லாத எழுத்தாளர்களில் பலருக்கு பலவித வட்டார வழக்குகளில் பரிச்சயமேற்பட்டிருப்பது எப்படி? அவர்கள் வார்த்தைகளை அள்ளித்தெளித்து எழுதுவது எப்படி? எப்படிச் சுற்றிச்சுற்றிப் பார்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வாசிப்பை அடிப்படை அம்சமாக வளர்த்துக்கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை அறிந்துகொள்ளலாம்.
2. சிந்திக்க வாசிப்பு அவசியம். வாசிக்க வாசிக்கத்தான் சிந்தனை வளருகிறது. சிந்தனைக்கு சோறிடு என்பார்கள். வாசிக்காதவர்களால் அதிகம் சிந்திக்க முடியாது. ஒரு குறுகிய வட்டம்போல அவர்களுடைய பேச்சும் சிந்தனையும் ஒரே இடத்தை மட்டுமே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும். வாசிப்பில் வளருகிறவர்கள் பல விஷயங்களைப் பற்றிய பன்முகச்சிந்தனையை வளர்த்துக்கொள்ளுவார்கள். வாசித்தவற்றைப்பற்றி அதிகம் சிந்தித்து அவைபற்றிய சொந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். வாசிக்கிறவர்கள் சிந்திப்பதற்தாக இன்னும் வாசிப்பைத் தேடி ஓடுவார்கள். வாசிக்க வாசிக்க அவர்களுடைய தேடுதலும் அதிகரிக்கும். இன்றைக்கு நம்மினத்தில் போதகப் பணியில் இருக்கும் பெரும்பாலானோருக்குக்கூட ஒரு நல்ல ஆக்கத்தை வாசித்து சிந்தனைபூர்வமான கருத்துத் தெரிவிப்பது கஷ்டமானதாக இருக்கிறது. சிறுவயதிலிருந்து வாசிப்பில் வளராமல் இருந்திருப்பதே இதற்குப் பெருங்காரணம். வாசிப்பு, வாசித்துவிட்டு மறந்துவிடுகிறதாக இருக்கக் கூடாது. மெய்யான வாசிப்பு ஒருவனை வாசித்தவற்றைப்பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வைக்கும்.
3. அறிவு வளர வாசிப்பு அவசியம். ஏட்டுப்படிப்பால் அறிவு வளராது. வணிக நோக்குமட்டும் கொண்ட தற்காலக் கல்வி முறை அறிவை வளர்க்க உதவவில்லை. அறிவு என்பது வெறும் செய்தித்தொகுப்பை மனதில் இருத்திக்கொள்ளுவது அல்ல. மற்றவர்கள் எழுதியதை, சொன்னவற்றை மனதிலிருத்திக்கொள்ளுவது அல்ல. அறிவு என்பது படித்தவற்றைப்பற்றிச் சிந்தித்து, ஆராய்ந்து, அதில் தெளிவுபெற்று தனக்கென அவற்றைப்பற்றிய சொந்தக் கருத்துக்களைக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நம்மை அழைத்துச்செல்ல வித்திடுவது. படித்தவற்றை வாந்தியெடுப்பதுபோல் பரீட்சைத்தாளில் கொட்டித்தீர்த்து அதிக மார்க்குகளை அடைவதே இன்று அறிவு என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறது. அது அறிவல்ல; பிரதியெடுக்கும் அச்சியந்திரம். எவன் சிந்தனையாளனோ அவனே அறிவாளி. எவன் புதிய சிந்தனைகளைக் கொண்டிருக்கிறானோ, புதிய வழிமுறைகளைக் கண்டுகொள்கிறானோ அவனே அறிவாளி. அத்தகைய அறிவை அளிப்பதாக நடைமுறைக் கல்வி இல்லை. தொடர்ச்சியான, ஆழமான, சிந்தனைபூர்வமான வாசிப்பு ஒருவனை அறிவாளியாக்கும்.
கிறிஸ்தவனுக்கு வேத அறிவு தேவை. வேத அறிவு கடவுளைப்பற்றிய ஞானத்தை நமக்கு அளிக்கிறது. அந்த ஞானமே நாம் ஜெபிப்பதற்கும், ஆராதிப்பதற்கும், கிறிஸ்தவ வாழ்க்கையை அவரை நம்பி அவருடைய வழிகளைப்பின்பற்றி வாழவும் உதவுகிறது. வேத அறிவில்லாவிட்டால் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை. வேதத்தை எந்தளவுக்கு வாசித்து, அதன் போதனைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைத் அர்ப்பணிப்போடு தியானித்துப் பின்பற்றுகிறோமோ அந்தளவுக்கு நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயர்வோம். இதற்கு வாசிப்பு அவசியம். வாசிக்காத கிறிஸ்தவன் கடவுளைப்பற்றிய நல்லறிவை எப்படிப் பெறுவான், கிறிஸ்தவனாக எப்படி வாழ்வான்? அதனால்தான் ‘வாசிக்காத கிறிஸ்தவன்’ என்ற பதம் மிகவும் முரண்பாடானது. இதற்கும் மேலாக கிறிஸ்தவனுக்கு வேதம் கண்ணாடி போன்றது. இதுவரை சாத்தானின் பிள்ளையாக இருந்து பாவத்தில் வாழ்ந்திருந்தவன் இப்போது கடவுளின் பிள்ளையாக வேதத்தின் மூலமாக சகலத்தையும் அறிந்து ஆராய்ந்து வாழவேண்டியவனாக இருக்கிறான். வேதமே அவனுக்கு அனைத்தைப்பற்றியும் விளக்குகிற அதிகாரப்பூர்வமான ஆயுதமாக இருக்கிறது. வேதமில்லாமல் அவனுக்கு கிறிஸ்தவ பார்வை இருக்க முடியாது. இதற்கு அவன் வாசிக்கிறவனாக இருந்து வேத அறிவில் வளர வேண்டியவனாக இருக்கிறான். பவுல் தீமோத்தேயுவுக்கு, ‘நீ கற்று நிச்சயித்தவைகளில் நிலைத்திரு’ என்று எழுதினார். வேதத்தை தீமோத்தேயு கற்று அதில் தேர்ந்தவனாயிருந்தான்.
4. உலகத்தை அறிந்துகொள்ள வாசிப்பு அவசியம். நாம் ஒருபோதும் உலகந்தெரியாதவர்களாக இருந்துவிடக் கூடாது. கண்கள் எப்படி நமக்கு சுற்றியிருப்பவற்றைக் காட்டி வழிநடத்துகிறதோ அதேபோல் வாசிப்பு நமக்கு உலகத்தைப் புரியவைக்கும். வாசிக்காதவர்கள் உலகந்தெரியாதவர்களாகத்தான் கடைசிவரை இருந்துவிடுவார்கள். கிணற்றுத்தவளையாக ஒன்றுந்தெரியாதவர்களாக இருந்துவிடுவார்கள். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களையும், அவர்களுடைய சிந்தனைகளையும், உலகத்து மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கைமுறை, சிந்தனைகள், கலை, அரசியல், பண்பாடு போன்ற அனைத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ளவும், ஆராயவும் நமக்கு வாசிப்பு தேவைப்படுகிறது. வாசிப்பில்லாவிட்டால் குறுகிய மனப்பான்மையோடு கடைசிவரை வாழ்ந்து மடிந்துவிடுவோம். ஒருமுறை ஒரு குக்கிராமத்துக்குப் போயிருந்தேன். அவர்களுக்கு எத்தனை தடவை எடுத்துச்சொல்லியும் நான் தூரதேசத்திலிருந்து வருகிறேன் என்பதை அவர்கள் கடைசிவரை நம்பவேயில்லை. அவர்கள் தங்களுடைய கிராமத்துக்கு வெளியில் அதிகம் போனதில்லை. நியூசிலாந்து என்று ஒரு நாடு இருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எதையும் தெரிந்துகொள்ளாமல் கடைசிவரை அப்படியே இருந்துவிடப் போகிறார்கள். இன்றைய இணைய யுகத்தில் உலகந்தெரியாதவர்களாக இருந்துவிடுவது பெரிய ஆபத்து.
வாசிப்பின் மூலம் உலகத்தை எடைபோட்டு இனங்கண்டுகொள்ளுகிறபோது நம்முடைய குறுகிய மனப்பான்மைகள் மடிய வாய்ப்புண்டு. குறுகிய வட்டத்தில் இருந்து நாம் நினைப்பது மட்டுமே சரி என்றிருந்த மனப்பான்மை மாறி எது சரி என்பதைக் கண்டுகொள்ள வாசிப்பு உதவும். நம்மில் ஏற்படும் சிந்தனை மாற்றமே நம்மைச் சுற்றியிருப்பவர்களில் மாற்றங்களை ஏற்படுத்தப் பயன்படும். முதலில் அது நம் குடும்பத்திலேயே ஆரம்பமாகிவிடும். நான் மிகவும் பிற்போக்கு சிந்தனைகளோடு வளர்ந்த இந்துக்குடும்பத்தில் பிறந்தேன். அந்தக் குலத்தின் பிற்போக்கு சிந்தனைகளில் இருந்து அடியோடு பிரிந்து நின்று சிந்திக்க எனக்கு முறையான கல்வியும், வாசிப்பும் பேருதவி புரிந்தன. வாசிப்பு மனிதர்களைப்பற்றியும், சமுதாயத்தைப்பற்றியும், குல வழக்கங்களைப்பற்றியும், உலகத்தைப்பற்றியும் சிந்திக்க வைத்தது, ஆராய வைத்தது, பகுத்தறிந்து எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை உருவாக்கியது. ஆழமாக ஆணிவேர்விட்டுப் பதிந்து புரையோடிப்போயிருந்த குலவழக்கங்களில் இருந்து எனக்கு வாசிப்பும், சிந்தனையும் விடுதலை தந்தது.
5. மனிதர்களைப் புரிந்துகொள்ள வாசிப்பு அவசியம். வாசிக்காதவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டிருப்பது மட்டுமல்ல, சிந்தனை, நடத்தை, பிற மனிதர்களை நடத்துகின்ற முறை ஆகியவற்றிலும் பின்தங்கிய நடைமுறைகளைக் கொண்டிருப்பார்கள். இங்கிதம் தெரியாதவர்களாக இருப்பார்கள். வாசிப்பு நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்தி நல்லொழுக்கத்தையும், நன்னடத்தையையும் வளர்த்துக்கொள்ள உதவும். பிற மனிதர்களை சமூக, உளவியல் ரீதியில் அறிந்து புரிந்துகொள்ள வாசிப்பு உதவும். வாசிப்பில்லாதவனுக்கு பிற மனிதனைப் புரிந்துகொள்ள முடியாதது மட்டுமல்ல, அவனோடு எப்படிப் பழகுவது என்பதும் தெரியாது. சம்பாஷனை செய்வதில் அவனுக்கு குழப்பங்கள் இருக்கும். எதிலும் அறிவுப்பூர்வமான சொந்தக் கருத்துக்கள் இல்லாததால் அவனால் எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது கடினம். மனித உள்ளத்தையும், மனோபாவத்தையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள வாசிப்பு துணை செய்கிறது.
மனித உறவுகளைப் புரிந்துகொள்ள இலக்கியம் நமக்கு உதவும். இலக்கிய பாத்திரங்கள் மனிதர்களையும், வாழ்க்கையையும் நமக்குப் போதிக்கின்றன. நாம் வாழும் சமூகத்தை அவற்றின் மூலமாக நாம் பார்க்கவும், அறிந்துகொள்ளவும் அவை உதவுகின்றன. நல்ல இலக்கியங்கள் நமக்கு நகர்ப்புறத்தான், கிராமத்தான், செல்வந்தன், பிச்சைக்காரன், சமுதாய விரோதிகள் என்று அத்தனை பேரையும் இனங்காட்டி அவர்களுடைய மனப்போக்கை அறிந்துகொள்ள உதவுகின்றன. இதேநேரம் கிறிஸ்தவனுக்கு கிறிஸ்தவ வாசிப்பு இதற்கு ஒருபடி மேலேபோய் வேத அடிப்படையில் மனித உறவுகளை அறிந்துகொள்ளவும் மனிதனோடு உறவாடவும் துணை செய்கின்றது. பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பாகமே மனித உறவுகள் பற்றியதுதானே.
6. வாழ்க்கையில் முன்னேற வாசிப்பு அவசியம். வாழ்க்கை முன்னேற்றம் என்பதன் மூலம் நான் பணவசதியைப்பற்றிச் சொல்ல வரவேயில்லை. வாசிப்பில்லாமல் பணம் சம்பாதித்துவிட முடியும்; மனிதனாக வாழத்தான் முடியாது. இருதயத்திலும், நடத்தையிலும், சக மனிதர்களோடு இருக்க வேண்டிய நடைமுறை அனுபவ வாழ்க்கைபற்றிய விஷயங்களிலும் ஏற்படும் முன்னேற்றத்தைத்தான் வாழ்க்கை முன்னேற்றமாக நான் கருதுகிறேன். இதைத்தான் பண்பாடு என்றும் கூறுவார்கள். ஜோன் பனியன் வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்ததில்லை; ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அனுபவித்திருக்கிறார். அவருடைய மோட்ச பிரயாணம் அதை விளக்குகிறது. ஜோன் நியூட்டன் வாழ்க்கையின் கடை நிலைக்குப் போய்வந்தவராக அவருடைய சரிதம் நமக்குக் காட்டுகிறது. அங்கேயே இருந்துவிடாமல் முன்னேறிக் கடவுளுக்குப் பணிசெய்ய அவருக்கு வேதமும், வேத இலக்கிய வாசிப்பும் வகைசெய்திருக்கின்றது. புதிய ஏற்பாட்டில் பவுலை நாம் இந்தவகையில்தான் காண்கிறோம். தவறுகள் செய்யாதவர்களல்ல தாவீதும், சாலமோனும்; சிந்தனைபூர்வமான வேதவாசிப்பும், இருதய மாற்றமும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற வகை செய்தன.
7. ஆத்மீக விடுதலை அடைய வாசிப்பு அவசியம். சமீபத்தில் ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய ஒத்துழையாமை இயக்கத்தைச் சேர்ந்த அருமையான பிரசங்கியொருவரின் வாசிப்பு பற்றிய ஆக்கத்தை வாசித்தேன். அதன் தலைப்பு, ‘ஆத்துமவிருத்திக்குதவுகின்ற ஒரு நூலை எப்படி வாசிப்பது’ என்பதாகும். இதிலிருந்து அவர் ஆவிக்குரிய நூல் வாசிப்பைப்பற்றி விளக்குகிறார் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். ஆவிக்குரிய நல்ல நூலொன்றை வாசிக்கின்றபோது நாம் செய்தித்தாள் வாசிக்கின்ற விதத்தில் அதை அணுகக்கூடாது. வேதத்தின் மூலம் பேசுகின்ற தேவன், வேத வார்த்தைகளை விளக்குகின்ற நூல்கள் மூலமும் நம்மோடு பேசுகிறவராக இருக்கிறார். அதனால் அந்நூல்களை ஜெபத்தோடும், கருத்தோடும், நிதானத்துடனும் வாசிக்க வேண்டும். அதன் மூலம் கர்த்தர் நம்மோடு பேசவேண்டும் என்ற இருதய தாகத்தோடு வாசிக்க வேண்டும். வாசித்தவற்றைப்பற்றித் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். நல்ல ஆவிக்குரிய நூல்கள் மூலம் கர்த்தர் பலரோடு பேசியிருக்கிறார்; ஆத்தும விடுதலையைத் தந்திருக்கிறார். ஜோன் பனியனுடைய வாழ்க்கையிலும் ஒரு நூல் அந்தவகையில் அவருக்கு ஆத்தும விடுதலைக்கான வழியைக் காட்டியிருக்கிறது. நம் முன்னோர்களில் பலர் இதற்கு சாட்சியாக இருந்திருக்கின்றனர். ஆகவே, நல்ல கிறிஸ்தவ நூல்களை உலகத்து நூல்களைப் போல அணுகாமல் அவற்றின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றவிதத்தில் இருதயத்தைப் பக்குவப்படுத்தி ஜெபத்தோடு வாசியுங்கள். ஆத்மீக விடுதலையைத் தேடி வாசியுங்கள்.
8. ஆத்மீக வளர்ச்சிக்கு வாசிப்பு அவசியம். வேத வாசிப்பு எந்தளவுக்கு ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமோ அந்தளவுக்கு நல்ல ஆத்மீக நூல்களும் நமக்கு அவசியம். அருமையான கிறிஸ்தவ இலக்கியங்கள் அதிகமாக உருவாயிருந்த காலங்களில் எல்லாம் ஆத்மீக வளர்ச்சியுள்ளதாக கிறிஸ்தவ திருச்சபையும், கிறிஸ்தவர்களும் இருந்திருப்பதைக் கிறிஸ்தவ வரலாறு நமக்குக் காட்டுகிறது. கிறிஸ்தவ இலக்கியங்களை வாசிக்காதவர்கள் தங்களுடைய விசுவாசத்தைப்பற்றிய அதிக ஞானமில்லாதவர்களாக இருப்பார்கள். இதில் பெரிய ஆபத்து என்னவென்றால் அவர்களுக்கு எது சரி, எது தவறு என்று ஆராய்ந்தறிந்துகொள்ளுகிற பக்குவம் இருக்காது. தங்களுக்குத் தெரிந்தது மட்டுமே சரியானது என்ற கனவுலகில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். தங்களுடைய விசுவாசத்தை நிச்சயப்படுத்திக்கொண்டு அதில் நிலைத்திருப்பது அவர்களால் முடியாத காரியமாக இருக்கும். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இந்த ஆபத்து அதிகம். மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள் யார் என்று அறிந்துகொள்ள முடியாதளவுக்கு வேத ஞானமும், வேத அடிப்படையிலான கிறிஸ்தவ வளர்ச்சியும் இல்லாமல் உணர்ச்சிகளுக்கு மட்டும் அடிமையான கிறிஸ்தவம் பெருகிக் காணப்படுகிறது. இந்நிலைமை காணப்பட்ட காலங்களில் எல்லாம் கிறிஸ்தவம் மேன்மையானதாக இருந்ததில்லை.
ஆத்மீக வளர்ச்சி பெற கிறிஸ்தவன் கிறிஸ்தவ இலக்கியங்களை நாடிப்போய் வாசிக்க வேண்டும். மோட்ச பயணம் போன்ற நூல்களை பல தடவைகள் தியானத்தோடு வாசித்து வாழ்க்கையை அதற்கேற்றபடி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நல்ல ஆத்மீக நூல்களைத் தேடித்தேடி வாசித்து சிந்தித்து ஆராய்கிறபோது (வேதத்தைக் கையில் வைத்துக்கொண்டு) சரி எது, தவறு என்பது தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும். தவறான போதனைகளை வாழ்க்கையில் தவிர்த்துக்கொண்டு வேதக்கிறிஸ்தவனாக வாழக்கற்றுக்கொள்ள முடியும். ஆரோக்கியமான வாசிப்பு வாசிக்கிறவனை கர்த்தருக்கு அருகில் கொண்டுபோகும். அவனுடைய சிந்தனையில் சத்தியம் குடிகொண்டிருப்பதால் அவனால் மற்றவர்களுக்கும் அவனிருக்கும் திருச்சபைக்கும் பயனுண்டாகும். வாசிக்காத கிறிஸ்தவனால் அவனுக்கோ மற்றவர்களுக்கோ எந்தப் பயனும் இருக்க முடியாது.
9. கிறிஸ்தவ போதனைகள் சிறப்பாக அமைய வாசிப்பு அவசியம். திருச்சபையில் போதிக்கும் பணியில் இருப்பவர்களுக்கு வாசிப்பு இன்றியமையாதது. வேத சத்தியங்களைப பகுத்துப்பார்த்து விளக்குவதற்கு அவர்களுக்கு வேதத்தைத் தவிர, அதை விளங்கிக்கொள்ளத் துணை செய்யும் உபகரணங்கள் அவசியம். வேத வியாக்கியான நூல்கள், மூலமொழிகளில் வார்த்தைகளை விளங்கிக்கொள்ள துணை செய்யும் நூல்கள், இறையியல் போதனைகளைத் தரும் நூல்கள், சிறந்த கிறிஸ்தவ தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் என்று அநேக நூல்களை அவர்கள் ஊழியத்தில் இருக்கும் நாள்முழுவதும் வாசிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போதனை செய்வதற்கு இந்தளவுக்கு ஒருவர் உழைத்து வாசிக்கவும், படிக்கவும் வேண்டியிருக்கிறது என்பதை அனேகர் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தளவுக்கு போதக ஊழியம் இன்று சீரற்று காணப்படுகின்றது. வாசிப்பை வாழ்க்கையில் அன்றாட வழக்காகக் கொண்டிராதவர்கள் போதக ஊழியத்தில் இருப்பார்களானால் அவர்களுக்குக் கீழிருந்து செய்தி கேட்பவர்களுக்காக நாம் வருத்தப்பட வேண்டும்.
இதுவரை பெருமளவுக்கு வாசித்திருந்திராவிட்டாலும் இனியாவது போதனை செய்வதில் கவனத்தைச் செலுத்தி தாழ்மையோடு வாசிக்கும் வழக்கத்தை வாழ்க்கையில் வளர்த்துக்கொள்வதைப் போதகர்கள் கடமையாகக் கொள்ள வேண்டும். பெருந்தொகையில் தமிழில் நூல்கள் இல்லாவிட்டாலும் இருக்கின்ற நல்ல நூல்களைப் பயன்படுத்திக்கொண்டால் போதகர்களாகிய உங்களுடைய போதனையின் கீழ் வருகிறவர்கள் ஆத்மீகப் பயனடைவார்கள். போதிக்கிறவர்கள் அன்றாடம் தங்களுடைய கடமைகளில் ஒன்றாக வாசிப்புக்கு இடமளிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தை அதற்குக் கொடுக்க முடியாதவர்கள் ஒருநாளும் போதனையில் வளரவோ, சிறக்கவோ முடியாது. தொடர்ச்சியான, ஊக்கத்தோடு கூடிய வாசிப்புப் பழக்கம் நீண்ட காலத்துக்கு உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும், ஊழியப்பணிகளிலும் பெரும் ஆத்மீக எழுச்சியை ஏற்படுத்தும்.
10. ஆராக்கியமான வாசிப்பு எழுத்தில் தேர்ச்சியடைய துணைபுரியும். வார்த்தைகளைப் பயன்படுத்திக் கோர்வையாக எழுதுவது என்பது சும்மா வந்துவிடாது. வசனங்களைத் தொகுத்து சொல்லவருகின்ற கருத்துக்களைத் தெளிவாக சிந்தனைபூர்வமாக எழுதுவதற்கு சீரான வாசிப்புப் பழக்கம் உதவுகிறது. மொழிக்குரிய அணிநலன்களைத் தகுந்த இடத்தில் பயன்படுத்தி சரளமாகத் தடையின்றி நதி ஓடுவதுபோல எழுதுவதற்கு அதிகமான வாசிப்பு அவசியம். வாசிக்க வாசிக்க வாசகன் மொழியை, வார்த்தைகளை, மொழிக்குரிய அணிநலன்களைக் கற்றுக்கொள்கிறான்.
எந்தளவுக்கு ஒருவர் வாசிப்பில் தேர்ச்சியுள்ளவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவருடைய எழுத்தும் பேச்சைப்போலவே சிறப்பாக இருக்கும். என் அனுபவத்தில் நம்மினத்தில் அநேகர் சாதாரணமான ஒரு விஷயத்தைப்பற்றி எழுதுவதில்கூடத் தேர்ச்சியில்லாதவர்களாக இருப்பதை உணருகிறேன். அதற்கு முக்கிய காரணம் வாசிப்பின்மையே. எழுதுகிறவன் எப்போதுமே வாசிக்கிறவனாக இருப்பான். வாசிக்கிறவனின் எழுத்து எப்போதுமே சிந்திக்க வைப்பதாக இருக்கும்.