ஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு

தன்னலமற்ற கிறிஸ்தவ அன்பின் நிமித்தமாக, சுயதுக்கங்களுக்கும், ஆசாபாசங்களுக்கும் மதிப்பளிக்காமல் சமூகத்துக்குப் பணியாற்றியிருக்கும் ஏமி கார்மைக்கலின் பணிகளை எவ்வாறு மதிப்பிடுவது? ஏமியைப்பற்றிய நூலை எழுதியிருக்கும் இயன் மரே இந்த விஷயத்திலுள்ள சிக்கலை விளக்காமலில்லை. ஏமியைப்பற்றி இதுவரை நூல்கள் எழுதியிருக்கும் பிரேங்க் ஹௌட்டனும், எலிசபெத் எலியட்டும் அவருக்கு அளவுக்குமீறிய வர்ணத்தைத் தீட்டியிருப்பதை இயன் சுட்டிக்காட்டுகிறார். ஏமிக்கு தன்னைப்பற்றிப் பெரிதாகப் பேசுவதும், தன்னை முன்னிலைப்படுத்துவதும் பிடித்தமில்லாததாக இருந்தது. இறப்பதற்கு முன்பே தனக்கு எந்தக் கல்லறையும் வைத்துப் பாராட்டுதல்கள் எழுதக்கூடாது என்று வற்புறுத்திக் கூறியிருந்திருக்கிறார். இருந்தும் ஏமியைப்பற்றி எழுதியிருக்கிறவர்கள் அவரை ஒரு ‘புனிதப் பெண்ணாகவே’ காட்ட முயன்றிருக்கிறார்கள். இதனால் வாழ்க்கைச் சரிதமெழுதுகிறவர்கள் உண்மை நிலையைக் காட்டாமல் வாசகர்களைத் திசைதிருப்பிவிடுகிற நிலை உருவாகிறது. கயஸ் டேவிஸ் இதைப்பற்றி எழுதுகிறபோது, ‘டோனவூர் வைரஸ்’ என்று இதை வர்ணித்திருக்கிறார் என்று இயன் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, ‘பாகுபாடற்றவிதத்திலும், கவனத்தோடு ஆராயப்படாமலும், ஒருவித தனிநபர் துதிபாடலுக்கு வழிவிட்டிருக்கிறது. இது நன்மையானதல்ல’ என்று கயஸ் டேவிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ACஇயன் மரே தன்நூலில் மேற்குறிப்பிட்ட தனிநபர் துதிபாடலுக்கு இடமளிக்கவில்லை. ஏமியைக் கூடுமானவரையில் அவர் எப்படிப்பட்ட கிறிஸ்தவ பெண்மணி என்று சரியாகக் கணித்துக்காட்டியிருக்கிறார். ஏமியின் குறைபாடுகளைத் தவறாமல் கவனத்தோடு சுட்டிக்காட்டி விளக்கியிருக்கிறார். அவர் விட்ட தவறுகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும் காரணமாக இருந்திருப்பதை அவர் சுட்டாமலில்லை. ஏமியின் கிறிஸ்தவ வாழ்க்கையையும், பணிகளையும்பற்றியே அதிக கவனம் செலுத்தி ஆராய்ந்திருக்கும் இயன் மரே அவருடைய கிறிஸ்தவக் கோட்பாடு, நம்பிக்கைகளைப்பற்றி அதிகளவில் விவரிக்கவில்லை. முக்கியமாக ஏமியின் சபைப் பின்புலம், சபை வாழ்க்கை, சபை அணுகுமுறைபற்றி எதுவுமே தெரிவிக்காமலிருந்திருப்பது இந்நூலின் பலவீனமாக நான் கருதுகிறேன். ஏமியின் சமூகப்பணிக்கும், கிறிஸ்தவ அன்பிற்கும் மட்டுமே முக்கியமளித்து இயனின் நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு தடவை மட்டும் இந்தியாவில் கால் பதித்துவிட்டு (அறிமுகம்), புரிந்துகொள்ளக் கடினமான இந்தியப் பண்பாட்டைப்பற்றியும், அந்நாட்டு கிறிஸ்தவ பணிபற்றியும், ஏமியைப்பற்றியும் எழுதிவிடுவது ஒருவருக்கு அத்தனை சுலபமான காரியமல்ல. ஏமியைப்பற்றி நூல்கள் எழுதியுள்ள பிரேங்க் ஹௌட்டனும், எலிசபெத் எலியட்டும்கூட இந்தியாவுக்கு ஒருசில தடவைகளே போயிருந்திருக்கின்றனர். எனவே, இயன் மரே தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இயன் மறைக்காமல் ஏமியைப் பற்றிய பல குறைபாடுகளை விளக்கியிருப்பது பாராட்டத்தக்கது. குறைகாண வேண்டுமென்பதை நோக்கமாகக் கொள்ளாமல் அந்தக் குறைபாடுகள் இல்லாமலிருந்திருந்தால் ஏமியின் பணிகள் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும் என்பதைக்காட்ட இயன் அவற்றை விளக்கியிருக்கிறார். எப்படியோ, ஏமியைப்பற்றி அறிந்துகொள்ள நான் ஆவலோடிருந்த எத்தனையோ விஷயங்களை இயனின் நூல் வெளிப்படுத்தாவிட்டாலும் ஏமியைப்பற்றியும், இன்றைய டோனவூர் ஐக்கியத்தின் நிலையைப்பற்றியும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்கால இந்திய கிறிஸ்தவத்தின் நிலைபற்றியும் சரியாகக் கணிக்க நூல் உதவியிருக்கிறது.

ஏமி சிறந்த கிறிஸ்தவ விசுவாசி

ஏமி கார்மைக்கல் கிறிஸ்துவை நேசித்தார். அவருடைய நேசம் தன்னலமற்ற முழுமையான நேசமாக இருந்தது. சிறுவயதிலேயே கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்து வந்திருந்த ஏமிக்கு வேதபோதனைகளும், ஆரம்பகாலத் திருச்சபை வாழ்க்கையும் கிடைத்திருந்தது. கிறிஸ்துவை விசுவாசித்தபின் அவர் தியானத்திலும், ஜெபத்திலும் அதிக அக்கறை காட்டினார். அவர் கர்த்தரோடு தனிமையிலும், ஜெபத்திலும் கழித்த நாட்கள் அநேகம். கர்த்தரோடு தனிமையில் ஜெபித்தும், தியானித்தும் உறவாடுவதை அவர் கிறிஸ்தவ வாழ்க்கையின் முக்கிய அம்சமாகக் கருதினார். இதைக் கெஸ்சிக் கன்வென்ஷன் கூட்டங்கள் அவருக்குக் கற்றுத்தந்திருக்கின்றது. இது கெஸ்சிக் போதனையாளருக்கு மட்டும் சொந்தமானதல்ல. பியூரிட்டன் பெரியவர்கள் இதைப்பற்றி அதிகம் வற்புறுத்தி எழுதியிருக்கிறார்கள். அதற்கு அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த மரே மெக்செயின், அன்ரூ போனர் போன்றோரின் வாழ்க்கையிலும் எழுத்துக்களிலும் இதை அதிகம் காணலாம். ஜே. சி. ரைலும், ஸ்பர்ஜனும் இதுபற்றி வற்புறுத்திப் பிரசங்கித்தும், எழுதியும் இருக்கிறார்கள். ரைல் சொல்லுகிறார், ‘கிருபையின் சாதனங்களைப் பயன்படுத்துவதில் குறைபாடேற்படாதபடி கவனத்தோடிரு. உன்னுடைய ஜெபங்களும், வேத தியானமும், கர்த்தரோடு உறவாடுகிற நேரமும் கொஞ்சமும் குறையாமல் பார்த்துக்கொள்.’ வேத தியானமும், ஜெபமும் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இன்றியமையாதவை மட்டுமல்ல, இணைபிரியாதவை. இவையில்லாத கிறிஸ்தவம் கிறிஸ்தவமல்ல. தண்ணீரில்லாமல் செடி வளரவும், வாழவும் முடியாதே. வேத தியானமும், ஜெபமும் இல்லாத வாழ்க்கை பரிசேயத்தனம் மட்டுமே. மிகவும் ‘பிசி’யாகப் போய்விட்ட நம்முடைய அன்றாட கிறிஸ்தவ வாழ்க்கையில் இந்த இரண்டிற்கும் பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஏமியின் நடைமுறை தியானவாழ்க்கைக்கு ரொபட் வில்சன், தொமஸ் வோக்கர் போன்றோரின் செல்வாக்கு அதிகம் உதவியிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் அதைப் பின்பற்றிய ஏமி டோனவூரிலும் எல்லோரும் அதைப்பின்பற்ற முன்மாதிரியாக இருந்திருக்கிறார். எதற்கும், எதிலும் கர்த்தரில் தங்கியிருந்த ஏமி அவருடைய வழிகாட்டுதலை நாடாமல் எதையும் செய்ய முற்படவில்லை. இத்தகைய தியான வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள் அவர் இறுதிவரை வாழ்ந்தார். அதுவே பெரும் எதிர்ப்புகளுக்கும், ஆபத்துகளுக்கும் மத்தியில் அவருடைய பணியைத் தொடருவதற்கான வல்லமையைத் தந்திருந்தது. பல சமயங்களில் ஏமி தனித்து நின்று பெரும் சவால்களை வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. கிறிஸ்துவில் பெரு நம்பிக்கையும், அன்பும் இல்லாத ஒருவரால் இத்தகைய காரியங்களை வாழ்க்கையில் தளராது செய்திருக்க முடியாது. சுயத்தில் தங்கியிராது கர்த்தரில் தங்கியிருந்து அவருக்காக தன் பணிகளைச் செய்த சிறந்த விசுவாசி ஏமி.

சிறந்த விசுவாசி என்பதற்காக ஏமி கார்மைக்கல் பூரணமான விசுவாசத்தைக் கொண்டிருந்த குறைபாடற்ற பெண்மணி என்று எண்ணிவிடக்கூடாது. அந்தவகையில்தான் அவரைப்பற்றி எழுதியிருக்கும் சில வாழ்க்கைச் சரிதங்கள் காட்ட முயன்றிருக்கின்றன. அது உண்மையல்ல. ஏமியின் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பல சங்கடங்களை அவர் சந்தித்து தவறுகளையும் விட நேர்ந்திருக்கிறது. பரிசுத்த வாழ்க்கை ஏற்றமும் இறக்கமும் கொண்டதாகவே கடைசிவரை இருக்கும் என்பது வேதம் போதிக்கும் உண்மை. அந்த ஏற்ற இறக்கங்களை ஏமியும் தன் வாழ்வில் கண்டிருக்கிறார். சில வேளைகளில், கோபப்பட்டும், தவறாக ஒருவரைக் கணித்தும், பின்பு அதற்காக வருந்தியும், தவறான முடிவுகளை சில வேளைகளில் எடுத்தும் பின்னால் அவற்றைத் திருத்திக்கொண்டும், அளவுக்கு மீறி அதிகாரத்தை செலுத்தியும், சிலரோடு முரண்பட்டும் ஏமி நடந்திருப்பதை இயன் மரே சுட்டிக்காட்டியிருக்கிறார். இதெல்லாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் சிறந்த மனிதர்களிலும் காணப்பட்டிருக்கின்றன. தன்னை அன்றாடம் திருத்திக்கொண்டு வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கையே தவிர குறைபாடுகளே இல்லாமல் வாழ்வதல்ல. குறைபாடுகள் ஏமியை அதிகம் கர்த்தரில் தங்கியிருக்க உதவியிருக்கின்றன. தியானத்திலும், ஜெபத்திலும் ஆவியின் உதவியை நாடவும், திருத்தமுள்ள வாழ்க்கையை வாழவும் உதவியிருக்கின்றன. அவற்றை இயன் மரே மறைக்காமல் தனக்கேயுரிய பாணியில் நூலில் விளக்கியிருப்பது ஏமி கார்மைக்கலைப்பற்றி வந்திருக்கும் ஏனைய நூல்களைவிட அதை முக்கியமானதாக்குகிறது.

ஏமியின் வேதநம்பிக்கைகள்

ஏமி வேதத்தைக் கர்த்தருடைய தவறுகளற்ற அதிகாரமுள்ள வார்த்தையாக நம்பினார். வேதத்திற்கு அவர் வாழ்க்கையில் முதலிடம் தந்திருந்தார். வேதவாசிப்பில் அன்றாடம் கவனம் செலுத்தியதோடு வேதத்தின் அதிகாரத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கைக்குப் பல சமயங்களில் சவால்கள் நேரிட்டபோதிலும் அடிப்படை வேத நம்பிக்கையை அவர் ஆணித்தரமாக வெளிப்படுத்தத் தவறவில்லை. பெரும் இறையியலறிவு பெற்றிருந்த பெண்மணியல்ல ஏமி. இருந்தும் வேதத்தின் தன்மையில், அதிகாரத்தில் அவருக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. அதாவது வேதத்தைப்பற்றிய அடிப்படை இவெஞ்சலிக்கள் நம்பிக்கைகள் அவரில் ஊறிப்போயிருந்தன.

தென்னிந்திய ஆங்கிலேயத் திருச்சபையில் 1939ல் பிஷப்பாக நியமிக்கப்பட்ட ஸ்டீபன் நீல் தான் பிஷப்பாக வருவதற்குமுன் 25ம் வயதில் ஏமியின் கீழ் சிறுவர்களுக்கு கல்வி பயிற்றும் பணியில் வந்திணைந்தார். அவருடைய பெற்றோர் மருத்துவப்பணி செய்வதற்காக டோனவூருக்கு வந்திருந்தனர். ஸ்டீபன் நீல் கேம்பிரிஜ் டிரினிட்டி கல்லூரியில் கற்றிருந்தார். துடிப்புள்ள இளைஞராகவும், அதிகம் கற்றவராகவும், அதேவேளை வயதில் மூத்தவரான ஏமியைவிட அனுபவம் குறைந்தவராகவும் இருந்தார். அக்காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலேயத் திருச்சபையின் மிஷனரிக்கிளையாக இருந்த சி. எம். எஸ்., வேதம் பழைய புதிய ஏற்பாடுகளைக் கொண்ட கர்த்தரின் ஆவியினால் ஊதி அருளப்பட்ட தவறுகளற்ற வார்த்தை (2 தீமோத்தேயு 3:16; 2 பேதுரு 1:21) என்ற நம்பிக்கையை இழக்க ஆரம்பித்து, மிஷனரி ஊழியத்துக்குப் போகிறவர்களுக்கு அத்தகைய நம்பிக்கை இருக்கத் தேவையில்லை என்று தீர்மானித்தது. இதனால் சி. எம். எஸ். இரண்டாகப் பிரியவும் நேரிட்டது. சி. எம். எஸ். மூலம் இந்தியா வந்திருந்த ஸ்டீபன் நீல் இதை நம்ப ஆரம்பித்து ஏமியின் கொள்கைகளில் குறைகாண முயன்றார். வேதம் மட்டுமே கர்த்தருடைய வார்த்தை என்று ஸ்டிபன் நீல் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஏமிக்கு நீலோடு பலமுறை இதுபற்றிய வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சில வருடங்களுக்கு இந்தப் பிரச்சனை ஏமிக்கு பெருந்தலைவலியையும், துன்பத்தையும் அளித்தது. ஏமி இதைச் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தன் பணிகளுக்கு ஸ்டீபன் நீலின் துணை மிக அவசியமாக இருந்தபோதும், வேதத்தை வேதமாக ஏற்றுக்கொள்ள நீல் தவறியதால் டோனவூர் ஐக்கியத்தில் இருந்து அவரை ஏமி தைரியத்தோடு நீக்கினார். அதற்குப் பிறகு டோனவூர் ஐக்கியத்தில் பேசுவதற்கு நீலுக்கு அவர் இடமளிக்கவில்லை. மனக்கஷ்டத்தோடு பலவித ஏச்சுப் பேச்சுக்களுக்கு மத்தியில் இதை செய்ய நேர்ந்தபோதும் ஏமிக்கு சத்தியம் முக்கியமானதாகப்பட்டது. பெரும் இறையியல் ஞானம்கொண்டிருந்திராத ஏமிக்கு வேதம் எத்தகைய அதிகாரம் கொண்டது என்ற உண்மை தெரியாமலிருக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கைச் சரிதத்தில் இதைப்பற்றி ஏமி எந்தக்குறிப்பும் எழுதிவைக்கவில்லை. பிரேங்க் ஹௌட்டனுடைய நூலிலும் இது பற்றிய விபரம் இல்லை. எலியட் தன் நூலில் இதுபற்றி விளக்கியிருக்கிறார். சத்தியத்திற்காக சாதாரண மங்கையான ஏமி எதிர்ப்புகளுக்கு மத்தியில் தூண்போல நின்றது அவருடைய ஆழமான அடிப்படை வேதநம்பிக்கையைக் காட்டுகிறது.

ஏமி கர்த்தருடைய சித்தத்தை நாடிய முறை

கர்த்தருடைய சித்தத்தை நாடுவதில் ஏமி வேதத்தைப் பயன்படுத்திய முறையில் தவறுகள் காணப்பட்டன. இதை இயன் மரே தன்நூலில் விளக்கியிருக்கிறார். உள்மனதில் ஒரு விஷயத்தைப்பற்றி எந்தத் தீவிரமான எண்ணத்தைக் கடவுள் உண்டாக்குகிறார் என்பதிலேயே ஏமி அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். அத்தகைய ஆழமான உள்மன உணர்வே ஒரு விஷயத்தைப்பற்றிய தீர்மானத்தை எடுக்க அவரைப் பொதுவாக வழிநடத்தியிருக்கிறது. இது கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் மூலம் உருவான நம்பிக்கையா? என்பதை இயன் விளக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உருவான கெஸ்சிக் போதனைகளில் கடவுளின் வழிகாட்டுதல்பற்றிய இத்தகைய போதனைகள் காணப்பட்டன. அதன் கிறிஸ்தவ வாழ்க்கைபற்றிய போதனை பெரும்பாலும், நீண்ட தியானம், ஜெபம், ஆழமான உணர்வுகளின் வழிநடத்துதல் என்பவற்றில் ஊறியிருந்தது. அதுவரை இருந்து வந்திருந்த பரிசுத்த வாழ்க்கைபற்றிய போதனைகளில் இருந்து இது வேறுபட்டதாக இருந்தது. ஏமி மிஷனரி ஊழியத்துக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் பெண்ணாகப் போகத் தீர்மானித்ததற்கும் இருதயத்தின் ஆழமான உள்ளுணர்வு வழிநடத்துதலே காரணமாக இருந்திருக்கிறது. கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளும், ரொபட் வில்சனின் தொடர்பும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில் சி. ஐ. எம். மூலம் மிஷனரியாகப் போகத் தீர்மானித்து அது நடக்காமல் போனதால் உடனடியாக ஜப்பான் போகத் தீர்மானித்ததற்கும் இத்தகைய உள்ளுணர்வு வழிநடத்தல் காரணமாக இருந்தது. அங்கிருந்து சடுதியாக பின்பு கெஸ்சிக் மிஷன் மூலம் இலங்கைக்குத் திடீரென கிளம்பிப்போய் சிறிதுகாலம் இருந்ததற்கும் இதுவே காரணம். அப்போது ஏமிக்கு வயது 26. இலங்கையில் இருந்தபோது ரொபட் வில்சன் ஏமியின் செய்கை பிடிக்காமல் இங்கிலாந்துக்கு உடனடியாகத் திரும்பி வரும்படி கடிதம் எழுதி 2 தீமோ. 4:9 வேதவசனத்தை அதற்கு ஆதாரமாகக் காட்டியிருந்தார். அந்த வசனம், ‘நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு’ என்பதாகும். அதைப் பார்த்தவுடன் உடனடியாக எந்த எதிர்ப்புமில்லாமல் ஏமி இங்கிலாந்து திரும்பினார். கெஸ்சிக் தலைவர்களில் ஒருவராக இருந்த ரொபட் வில்சனும் கர்த்தரின் சித்தத்தை நாட வேதத்தை இந்தவிதத்தில் பயன்படுத்தியிருப்பது சரியல்ல.

ஒரு காரியம்பற்றிய தீர்மானத்தை எடுப்பதில் உள்ளுணர்வு சொல்லுவதைப் பின்பற்றும் வழிமுறை டோனவூரில் பல விஷயங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது என்கிறார் இயன் மரே. ஒரு காரியத்துக்கு பணம் செலவழிக்க வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஏமி பின்பற்றிய வழியை இயன் மரே விளக்குகிறார். அந்தக் காரியத்துக்கு பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதை ஏமி எப்படித் தீர்மானித்திருக்கிறார் தெரியுமா? யோசுவா 3:15லுள்ள வசனத்தைப் பயன்படுத்தி. ‘யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே;’ என்கிறது அந்த வசனம். ‘தண்ணீரின் ஓரத்தில்பட்ட’ என்பது ஆங்கிலத்தில் ‘dipped in the water’ என்று வரும். இதில் dipped என்ற வார்த்தையை plunged என்று அர்த்தப்படுத்தி இதன் மூலம் கர்த்தர் அந்த வசனத்தில் ‘விசுவாசத்தோடு காரியத்தில் குதிக்க வேண்டும்’ என்று சொல்லுகிறார், அதனால் பணம் அந்த விஷயத்துக்கு செலவழிக்கப்பட வேண்டும் என்று ஏமி கார்மைக்கல் முடிவுகட்டியிருக்கிறார். வேத நம்பிக்கை ஏமிக்கு இருந்திருந்தபோதும் தீர்மானங்களை எடுப்பதில் வேதவசனங்களை அது காணப்படும் சந்தர்ப்பசூழ்நிலைகளைப் பொறுத்தே அர்த்தப்படுத்தி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருந்திருப்பது தெரிகிறது. இப்படி எடுக்கப்பட்ட தீர்மானங்களை எதிர்க்கவும் அவர் எவரையும் பெரும்பாலும் அனுமதிக்கவில்லை.

கர்த்தரிடம் இருந்து எதன் மூலமும் இல்லாமல் நேரடியாக நமக்கு வழிகாட்டுதல் கிடைக்கிறது என்ற ஆக்ஸ்போர்ட் குழுவினரின் போதனையை ஏமி 1930களில் எதிர்த்திருக்கிறார். அத்தோடு தனி மனிதன் ஒருவன் பிணி தீர்க்கின்ற வரத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் நம்பி டோனவூரில் அதற்கு எந்தவித இடமும் கொடுக்காமல் இருந்திருக்கிறார். இத்தகைய பெந்தகொஸ்தே வழிமுறைகளை ஏமி பின்பற்றியிராவிட்டாலும், வேதத்தை அதன் இலக்கண, வரலாற்று அமைப்பின்படி விளங்கியே எப்போதும் அர்த்தப்படுத்த வேண்டும் என்பதில் பெருங்குறைபாடுடையவராக இருந்தார். இதற்காக வழிகாட்டுதலுக்கு ஏமி வேதத்தை நாடவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. வேதத்தை அவர் நாடியபோதும், வேதத்தை அர்த்தப்படுத்திக்கொள்ளும் முறையில் அவரிடம் இருந்த குறைபாடு வசனங்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் புரிந்துகொள்ளுவதைத் தடைசெய்திருக்கிறது. தவறாக ஒரு வசனத்தைப் புரிந்துகொண்டு அதன் மூலம் கர்த்தர் நம்மோடு பேசவேண்டும் என்று எதிர்பார்ப்போமானால், நம்முள்ளுணர்வுகள் நம்மைச் சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது. நாம் ஒரு விஷயத்தைப்பற்றிய எத்தகைய உணர்வுகளை ஆழமாக இருதயத்தில் கொண்டிருக்கிறோம் என்பதன் அடிப்படையில் அத்தகைய உள்ளுணர்வுகளைக் கர்த்தரின் சித்தமாக எடுத்துக்கொள்ளுவது முழுத்தவறு. இது ஏமி பல தவறான முடிவுகளை எடுக்க வழிநடத்தியிருந்தது.

வேதத்தை ஏமி பயன்படுத்திய விதத்தைப்பற்றி இயன் மரே கொடுக்கும் இன்னொரு உதாரணமும் இங்கே கவனிக்கத்தக்கது. ‘வேத வசனங்களின் சரியான அர்த்தத்தை அறிந்திருப்பது அடிப்படையான விஷயமானாலும், வேதவசனங்களுக்கான தெளிவான விளக்கத்தைவிட அதன் பயன்பாட்டிலேயே ஏமி அதிகம் கவனம் செலுத்தினார்’ என்கிறார் இயன் மரே (பக்கம் 131). இதற்கான ஓர் உதாரணத்தையும் இயன் தருகிறார். ஏமியின் சிந்தனை இந்த விஷயத்தில் தவறானதாகப்படுகிறது. வேத வசனங்களுக்கான அர்த்தத்தை அறிந்துகொள்ளுவது அடித்தளமானது என்று நம்பினால் அதில்தான் ஒருவர் முதலில் கவனத்தை செலுத்தவேண்டும். வசனங்களின் அர்த்தத்தின் அடிப்படையிலேயே பயன்பாடுகளை முறையான விதத்தில் பெற்றுக்கொள்ள முடியும். வசனங்களின் அர்த்தம் சரியாக விளக்கப்படாவிட்டால் அதிலிருந்து எழும் நடைமுறைப் பயன்பாடுகள் தவறானதாகவே அமையும். எந்தளவுக்கு பயன்பாடுகளில் நாம் ஆர்வம் காட்டுகிறோமோ அந்தளவுக்கு வசனங்களுக்கான சரியான தெளிவான அர்த்தத்தைப் பெற்றுக்கொள்ளுவதும் அவசியம். இந்த விஷயத்திலும் நான் ஏமியில் கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் தாக்கத்தைத்தான் காண்கிறேன். கர்த்தர் வசனங்களின் மூலம் நம்மோடு என்ன பேசுகிறார் என்று அறிந்துகொள்ளுகிற ஆர்வத்தில் அவற்றின் சூழ்நிலைக்கேற்ற விளக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறையில் அதன் மூலம் கர்த்தர் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்று அறிந்துகொள்ள முயலுகின்ற செயல் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. இந்திய கிறிஸ்தவ சமுதாயத்தில் இது அநாவசியத்துக்கு அதிகம். இத்தகைய பிரெக்டிக்கள் ‘தியானச்செய்தி’ கொடுக்கும் முறை பெரும்பாலான கிறிஸ்தவர்களிடம் பெருமளவுக்கு உண்டு. கெஸ்சிக் போதனையாளர்களிடம் இது வாடிக்கையாக இருந்தது. இந்த விதத்தில் வேதத்திற்கு அர்த்தம் கொடுத்திருப்பதை ரொபட் வில்சனிலும், ஏமியிலும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

வேத வசனங்களை, அவை தெளிவாக போதிக்கும் விஷயத்தைத் தவிர்த்து வேறுவிதமாக ஏமி எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கான இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். மிஷனரி அழைப்பை மாற்றிக்கொள்ள முடியாத நிரந்தர அழைப்பாகவும், சகல தியாகங்களையும் செய்து வாழவேண்டிய அழைப்பாகவும் ஏமி கருதினார். இதற்கு ஆதாரமாக அவர் பயன்படுத்திய வேதவசனங்கள் நசரேய விரதத்தை விளக்கும் எண்ணாகமம் 6:2-4. ஏமி எழுதி வெளியிட்ட ‘கர்த்தரின் மிஷனரி’ என்ற நூலுக்கு இதுவே தலைப்பாக இருந்தது. அதில் அவர் எழுதினார், ‘கடவுளின் மிஷனரி மெய்யான நசரேயனைப் போன்றவன், அவன் எல்லாவற்றிலும் இருந்து தன்னைப் பிரித்துக் கர்த்தருக்காக மட்டும் ஒப்புக்கொடுத்தவன்.’ அத்தோடு மிஷனரிப் பணியை ‘விசேஷ அழைப்பு’ என்றும், ‘அனைத்திலிருந்தும் பிரிக்கின்ற அழைப்பு’ என்றும், ‘முற்றாகப் பிரிந்து தியாகத்தோடு வாழும் பணி’ என்றும் ஏமி விளக்குகிறார்.

அந்தக் காலத்தில் இந்தியாவில் பொறுப்பில்லாமல் உல்லாசத்திற்கு இடங்கொடுத்து வாழ்ந்திருந்த சில மிஷனரிகளுடைய வாழ்க்கை இந்தவிதத்தில் மிஷனரி அழைப்பைப்பற்றி ஏமியைக் கருத வைத்திருக்கலாம். இதற்காக நீதியான ஓய்வையும், விளையாட்டு போன்றவற்றையும் ஏமி நிராகரிக்கவில்லை. வேறு எதிலும் கவனம் போகாமல் நிலையான தியாகத்தோடு கூடிய மிஷனரி வாழ்க்கையை வற்புறுத்திய ஏமி அதற்காகப் பழைய ஏற்பாட்டு நசரேய விரதத்தைப் பின்பற்ற வேண்டுமென்று எண்ணாகமப் பகுதியை ஆதாரம் காட்டி வற்புறுத்தியிருப்பது வேதபூர்வமான போதனையல்ல. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நசரேய விரதத்தைப் பின்பற்ற முயல்வது அநாவசியமான பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்க வழியேற்படுத்திவிடும். மிஷனரிப் பணியை ‘சிறப்பான பணியாகக்’ கருதினால் படைப்பில் ஏற்படுத்தப்பட்ட திருமணத்தையும் அதோடு கூடிவருகின்ற பொறுப்புக்களையும் என்னவாகக் கருதுவது? திருமண வாழ்க்கையையும், குழந்தைகளையும் பிரிந்து மிஷனரிப் பணி செய்யும்படி கர்த்தர் வேதத்தில் சொல்லவில்லை. திருமண பந்தத்தைக் கர்த்தர் சிறப்பானதாக, முக்கியமானதாகக் கருதி ஏற்படுத்தியிருக்கிறார். தியாகத்தோடு மிஷனரிப் பணிபுரிய விசேஷ கிறிஸ்தவர்களாக நாமிருக்கவேண்டுமென்று வேதம் எந்த இடத்திலும் போதிக்கவில்லை. ஏமி கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் சமூகப்பணி செய்ததும் இந்த நசரேய விரத நம்பிக்கையால்தான்.

வேதத்தை விளங்கிக்கொள்ளும் முறையில் ஏமி தவறான வழியைப் பின்பற்றியிருந்தபோதும் பல தவறான போதனைகளில் இருந்து தன்னைப் பாதுகாத்தும் வாழ்ந்திருக்கிறார். 1905ல் உருவான ஒரு போதனை, விசுவாசிகள் தங்களுடைய பழைய பாவங்களை பொதுவில் அறிக்கையிட வேண்டும் என்பது. ஏமி வோக்கரோடு இணைந்து இந்தப்போதனையை எதிர்த்தார். ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் ‘விசுவாசப் பிணி தீர்ப்பு’ போன்ற அற்புதங்களையும் ஏமி நிராகரித்து அவற்றிற்கு இடங்கொடாதிருந்திருக்கிறார்.

ஏமியும் திருச்சபையும்

பாராட்டத்தக்க பணிபுரிந்திருக்கும் ஏமியின் நூலில் எனக்குக் குறையாகப்படுவது திருச்சபைபற்றிய விபரங்களோ, விளக்கங்களோ அதில் இல்லாததுதான். ஆரம்பத்தில் 25 வயதில் மிஷனரிப்பணிபுரிய அவர் சபைமூலமாக வந்ததாகத் தெரியவில்லை. அப்படியே திருச்சபை அனுப்பி இருந்தால் ஒருபெண் தனியாக அந்தப்பணிக்கு அனுப்பப்பட்டிருக்க மாட்டாள். ஏமி தன்னந்தனியாகத் தன்னுடைய ஆழமான உள்ளுணர்வை மட்டும் நம்பி இந்தக்காரியத்தில் இறங்கியிருக்கிறார். தொடக்கத்தில் சி. ஐ. எம். மிஷன், அதற்கும்பிறகு கெஸ்சிக் மிஷன், பின்பு செனானா மிஷன் என்று திருச்சபைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் ஏமி தனியாளாக இந்தப் பணியில் இறங்கி இந்தியா வந்திருக்கிறார். அங்கும்கூட தற்செயலாகத்தான் (நிச்சயம் அதில் கர்த்தரின் கரம் இல்லாமலில்லை) குழந்தைகளை விடுவிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். கெஸ்சிக் கன்வென்ஷன் போதனைகளின் மூலம் அங்கு வந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மிஷனரி ஆர்வம் ஏமியின் இந்தச் செயல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். திருச்சபைகள் அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் மிக மோசமாக இருந்தன என்று ஏமி எழுதியிருப்பதில் இருந்து திருச்சபை பற்றிய அவருடைய கருத்தையும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண் தனியாக இந்தவிதத்தில் அதுவும் ஆபத்துக்கள் நிறைந்த பணிக்குப் போக வேதம் நிச்சயம் அனுமதிக்கவில்லை. மிஷனரிப் பணிக்குப் போகிற ஒருவருக்கு சபைப் போதகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் தேவை என்பதும் வேதபோதனை. இதையெல்லாம் எண்ணி ஆராய்ந்து பார்த்து ஏமி செயலில் இறங்கியதாகத் தெரியவில்லை. வேதம், வேதம் என்றிருந்தால் இத்தகைய அற்புத பணியை ஏமி செய்திருக்க முடியாதே? என்று விதண்டாவாதம் செய்கிற குரல்கள் நிச்சயம் எழும் என்பது எனக்குத்தெரியும். எப்படிச் செய்கிறோம் என்பது முக்கியமல்ல, என்ன சாதித்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று பிரெக்மெட்டிக்காக வாதிடுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். நம்மைப் படைத்து நமக்கு வேதத்தைத் தந்திருக்கிற சர்வ இறையாண்மையுள்ள கர்த்தர் அனைத்தையும் தன் வேதத்தைப்பின்பற்றிச் செய்யும்படியே சொல்லியிருக்கிறார். அவர் நேசிக்கும் திருச்சபை அவர் வழியில் நிறுவப்பட்டு அவர் விதித்திருக்கும் பணியை அவர் வழியில் செய்ய வேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருப்பதாக வேதத்தில் வாசிக்கிறோம்.

திருச்சபை அனுப்பாமல் ஏமி இந்தியா வந்தது மட்டுமல்ல டோனவூர் ஐக்கியத் தேவைகளுக்கு அவர் தன்னுடைய தனிப்பட்ட நண்பர்களின் உதவியை மட்டுமே நாடியிருக்கிறார். திருச்சபைகளை அவர் அணுகியதாக விபரங்கள் இல்லை. தென் தமிழகத்திலும் அவருக்கு திருச்சபைகளோடு நெருங்கிய தொடர்புகள் இருக்கவில்லை. ஸ்டீபன் நீலோடு ஏற்பட்ட பிரச்சனை அவரை சி. எஸ். ஐ. திருச்சபைக்கு வெகுதூரத்தில் நிறுத்தி வைத்திருந்தது.

டோனவூர் ஐக்கியம் விருத்தியடைந்தபோது சிறுவர்கள் மத்தியில் மனந்திரும்புதல் ஏற்பட்டது. பலர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். ஞானஸ்நானம் பெற்றவர்கள் எல்லோருமே தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை என்று இயன் மரே குறிப்பிட்டிருக்கிறார். இது ஏமிக்கு வருத்தத்தை அளித்திருக்கிறது. இதைப் பற்றிச் சொல்லும்போது இயன் மரே, ‘ஓர் ஆத்துமாவுக்கு உதவி செய்யும் வாய்ப்பிற்காக ஆயிரந்தடவைகள் ஏமாற்றத்தை அனுபவிப்பதில் தவறில்லை’ என்று ஏமி எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். மனந்திரும்பியவர்களுக்காக டோனவூர் ஐக்கியத்திலேயே ஆராதனைக்காக ஒரு கட்டடம் எழுப்பப்பட்டது. இது நல்லெண்ணத்தில் நிகழ்ந்தபோதும், உண்மையில் திருச்சபையாக இல்லாத சமூகப் பணியாற்றும் டோனவூர் ஐக்கியம் போன்ற ஒருநிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டது வேதவழியில் சபை அமைத்ததாகாது. டோனவூர் ஐக்கியத்தில் போதகராக இருந்து பணிபுரிந்து பிரசங்கம் அளித்து ஊழியத்தைச் செய்வதற்கு தகுதியானவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. தேவைக்கேற்றவிதத்தில் செய்தி கொடுக்க வெளியில் இருந்து பிரசங்கிகள் வரவழைக்கப்பட்டனர். முடியாதபோது ஐக்கியத்தில் இருந்த யாரோ அதைச் செய்திருக்கிறார்கள். நிச்சயம் டோனவூர் திருச்சபையாகவும் இல்லாமல், அதேவேளை ஓய்வு நாளில் நியாயமாக திருச்சபை செய்யவேண்டிய பணியைச் செய்து இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்திருக்கிறது. இதற்கும்மேல் போய் பக்கத்தில் இருந்த கிராமங்களில் சுவிசேஷம் சொல்ல டோனவூர் ஐக்கியத்தில் இருந்து குழுக்களும் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் வாசிக்கிறோம். திருச்சபைபற்றிய விஷயத்தில் ஏமி வேதபூர்வமாக நடந்துகொண்டதாகவே தெரியவில்லை.

ஏமியின் பணியின் மூலம் நிச்சயம் கிறிஸ்துவை பலர் விசுவாசித்திருந்திருக்கிறார்கள். ஏமியின் சுவிசேஷ வாஞ்சை பாராட்டப்பட வேண்டியது; பின்பற்ற வேண்டிய உதாரணமது. இருந்தபோதும் ஒரு பெண் தனியொருவராக சபை அமைப்பு பற்றிய வேத போதனைகளையெல்லாம் உதறிவிட்டு திருச்சபைப் பணியில் ஈடுபட்டது எவருக்கும் நல்லுதாரணமல்ல. வேதபோதனைகளை நிராகரித்துவிட்டு சமூகப்பணியில் ஈடுபட்டு அதற்குத் தொட்டுக்கொள்ள துவையல் வைத்துக்கொள்ளுவது போல் ஒரு கட்டடத்தைக் கட்டி அதற்குத் திருச்சபை என்று பெயரிட்டு சிறுபிள்ளைகளையும், அவர்களுக்குப் போதிப்பவர்களையும் சபையாகக் காட்டி நடக்கும் புற்றீசல்கள் போன்ற ஆயிரக்கணக்கான ஊழியங்களை இந்தியாவில் இன்று காண்கிறோம். திருச்சபையை நேசிக்கும் இயேசு அதுபற்றி அவசியமான ஆழமான போதனைகளைத் தெளிவாக வேதத்தில் தந்திருக்கிறார். சுவிசேஷ ஊழியம் எந்தப் பெயரில் நடந்தாலும் சபைபற்றிய சத்தியங்களுக்கு இடங்கொடுக்காமல் நடக்குமானால் அவை பின்பற்றக்கூடிய உதாரணங்களல்ல.

ஏமியின் பணிகளின் சிறப்பு

ஏமி கார்மைக்கலின் சிறப்பான பங்களிப்பு அவர் சமூகத்துக்குச் செய்திருக்கும் பணிதான். அதை எந்தவிதத்திலும் மறுக்கமுடியாது. அந்தப் பணியின் சிறப்பை தமிழகத்தில் அந்தக் காலத்தில் நிலவி வந்த பண்பாட்டுச் சீரழிவின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முடியும். தமிழகத்தில் கோவிலுக்கு பெண்குழந்தைகள் பொட்டுக்கட்டி தேவதாசிகளாக அனுப்பிவைக்கப்பட்ட சமூக சீரழிவு நிலவி வந்தது. அது பிரிட்டிஷ் அரசின் கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்ந்து வந்ததாக இயன் மரே குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளுவது கடினமாக இருக்கிறது. அவர்கள் இதில் ஏன் தலையிட வேண்டும் என்றிருந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் அரசு இதுபோன்ற பலவிஷயங்களில் தன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. கணவன் இறந்தபிறகு மனைவி உடன்கட்டை ஏறும் முறையை கேரி எதிர்த்தபோது அதற்கு பிரிட்டிஷ் அரசு அவரோடு இணைந்து போராடவில்லையே. வியாபாரத்துக்காக நாட்டில் நுழைந்த பிரிட்டிஷ் அரசு இந்திய சமூக மாற்றங்களுக்காகவா போராடப் போகிறது?

சுவிசேஷப் பணிபுரிய இந்தியா வந்த ஏமி அழிவின் விளிம்பில் நின்ற ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளுக்கு வாழ்வுகொடுக்கும் சமூகத்தொண்டாற்றும் பணிக்கு வழிநடத்தப்பட்டார். இதெல்லாம் ஏமி தன் வாழ்க்கையிலேயே கேள்விப்பட்டிராத, சந்தித்திராத சமூக சீரழிவு. ஏமிக்குத் தெரிந்ததெல்லாம் இது கோரமான ஒழுக்கக்கேடு என்பது மட்டுமல்ல, பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடூரமான பாவம் என்பதுதான். அன்றைய தமிழ் சமுதாயத்தில் காணப்பட்ட இந்த அகோரமான பண்பாட்டுச் சீரழிவை எதிர்த்து அதிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றவே டோனவூர் ஐக்கியம் ஏமி மூலம் உருவானது. அந்தப்பணியில் பின்பு இணைந்துகொண்டதுதான் பிள்ளைகளுக்கு கல்வியறிவளிப்பதும், மருத்துவப் பணிபுரிவதும். இப்படிப்பட்ட பணியில் ஈடுபடப்போகிறோம் என்று ஏமி கனவுகூட கண்டிருக்க வழியில்லை.

அன்றைய இந்திய சமுதாயத்தில் வெளிநாட்டவர் ஒருவர் இதைச் செய்வதற்கு பெருந்தைரியம் தேவை. சமூகம் என்ன சொல்லும் என்றெல்லாம் கவலைப்படாமல் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் இதில் ஏமி இறங்கியதுதான் அவருடைய பெருந்தைரியத்தையும். சுவிசேஷ அன்பையும் காட்டுகிறது. பல தடவை இந்தப் போராட்டத்தில் வோக்கரோடு கோர்ட்டுப்படி ஏறியிருக்கிறார் ஏமி. அன்றைக்கு பிரிட்டிஷ் அரசு மட்டுமல்ல இந்திய சபைகள்கூட இதில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கின்றன. ஏமி மூலம் ஆயிரக்கணக்கான பெண்குழந்தைகளும், ஏன் ஆண்குழந்தைகளுங்கூட இந்த விபச்சாரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஏமி சாதிப்பாகுபாடு பார்ப்பதையும் வேம்பாகக் கருதி எதிர்த்தார். வெளிநாட்டவர்கள் நம் பண்பாடு புரியாமல் இதையெல்லாம் எதிர்த்திருக்கிறார்கள் என்று கேரி, சீகன்பால்கு, கால்டுவேல், ஜி. யூ. போப் போன்ற அநேக மிஷனரிகளை இன்றும் இந்தியாவில் ஒரு பகுதியினர் குறைகூறி வருகிறார்கள். இந்த அலங்கோலங்களைப் பண்பாடாகக் கருதும் ஒரு பண்பாடு சீரழிந்த பண்பாடாகத்தான் இருக்க முடியும். இவற்றைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்கள் கடவுள் படைத்த மனிதனை மனிதனாக மட்டும் பார்ப்பதால்தான். வெளிநாட்டு மிஷனரிகள் எல்லோருமே இந்த விஷயத்தில் ஏமியைப்போல சாதியை எதிர்த்தார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்பவாதிகளாகப் பலர் தன் காலத்திலேயே நடந்துகொண்டிருந்ததை ஏமி தன் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார். சமுதாயச் சீரழிவுகளை ஏற்று அதற்கு ஒத்துப்போகக்கூடிய, இயேசு இல்லாத ஒருவகைக் கிறிஸ்தவத்தை உருவாக்க முயன்று வந்த மினஷரிகளும் அன்றிருந்திருக்கிறார்கள். இவர்களை ஏமி துச்சமாகக் கருதி துணிந்து தன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்தவிதத்தில் அன்றைய டோனவூரின் பணியை நிச்சயம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.

தான் காப்பாற்றி வளர்த்த பிள்ளைகளுக்கு கல்வியையும், வாசிப்பையும், கிறிஸ்தவ சுவிசேஷத்தையும் சேர்த்து வழங்கினார் ஏமி. கல்வியின் அவசியத்தை அவர் உணர்ந்து தகுந்தவர்களைக் கல்வி புகட்ட நியமித்தார். பிள்ளைகளின் தொகை வளர அத்தோடு ஆண்பிள்ளைகளுக்கான காப்பகமும் உருவாகி மருத்துவ சேவைக்கான தேவையும் ஏற்பட்டது. அப்படி வளர்ந்து இன்று பெருமரமாக டோனவூர் ஐக்கியம் தொடருகிறது. பலவிஷயங்களில் ஏமியில் குறைபாடுகள் இருந்தபோதும் 1900ங்களில் அவர் செய்திருந்த இந்தப் பணி மிகச் சிறந்ததே.

இந்த இடத்தில் சமூகத்தொண்டில் (social service) கிறிஸ்தவர்களின் பணி என்ன என்பதைப்பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் மனிதனை மனிதனாகப் பார்த்து நடத்தும் இருதயத்தை மறுபிறப்பின் மூலம் தருகின்ற கிறிஸ்து, மனிதனின் சகல தேவைகளையும் தீர்க்கும் சுவிசேஷத்தைத்தான் நமக்குத் தந்திருக்கிறார். சுவிசேஷத்தால் மறுபிறப்படைகின்ற ஒருவரின் பஞ்சத்துக்குத் தீர்வு கிறிஸ்தவ விசுவாசத்தினால் உடனடியாக ஏற்படும் என்று வேதம் எங்குமே போதிக்கவில்லை. அப்படி தேவ அன்பை கிறிஸ்துவில் ருசி பார்க்கிறவர்கள் தங்களுடைய வறுமை வாழ்க்கையை கிறிஸ்துவின் வழியில் துன்பத்தின் மத்தியில் வாழக் கற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் வேதம் போதிக்கிறது. ஆவிக்குரிய இருதய மாற்றம் ஒருவரின் ஒழுக்கத்தை சீராக்கி அவர் மூலமாக சூழ்நிலையையும் பாதிக்கிறது. சுவிசேஷத்தின் மூலம் ஏற்படும் மறுபிறப்பே மனிதனைத் தன்னையும், சுற்றுச்சூழலையும் மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகிறது. இதனால் சுவிசேஷத்தால், நேரடியாக உடனடியாக வறுமையும், சமூகச் சீரழிவுகளும் அகன்றுவிடும் என்பதில்லை. கிறிஸ்துவை அடைகிறவர்கள் மாற மாற எல்லா விஷயங்களிலும் பெருமாற்றங்கள் சிறிது சிறிதாக நேரும்.

ஆவிக்குரிய மாற்றத்தை அடையாதவர்கள் செய்கிற சமூகத் தொண்டு ஓரளவுக்கு சமுதாயத்தில் வெளிப்புற மாற்றங்களைக் கொண்டுவருமே தவிர ஆவிக்குரிய மாற்றங்களை ஒருபோதும் கொண்டுவர முடியாது. அதனால் சமூகத்தொண்டை சுவிசேஷ ஊழியத்தோடு இணைத்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சமுகத்தொண்டு செய்து, அதைச் செய்வதால் எவரும் கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள் என்று நம்புவதும் தவறு. சமூகத்தொண்டைப் பயன்படுத்தி எவரையும் கிறிஸ்தவர்களாக மாற்ற முயல்வதும் பெருந்தவறு. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில்லாதது. சமூகத்தொண்டு இந்த உலகத்தைச் சார்ந்த தற்காலிக மாற்றங்களை மட்டும் கொண்டுவருவது; சுவிசேஷப்பணி நிரந்தரமான ஆவிக்குரிய மாற்றத்தைக் கொண்டுவருவது.

கிறிஸ்தவர்கள் ஒருவரின் வறுமையைப் போக்க உதவும்போதும், ஏமிபோல் பெண்குழந்தைகளைப் பாதுகாக்க முயலும்போதும், வில்பர்போசைப்போல அடிமைமுறைக்கெதிராகப் போராடுகிறபோதும், கேரிபோல் உடன்கட்டை ஏறுவதற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றபோதும், சாதிப்பாகுபாட்டை வெறுத்து அதற்கு இடங்கொடுக்காது இருக்கும்போதும் கிறிஸ்துவால் தங்களுடைய வாழ்க்கை மாற்றப்பட்டிருப்பதன் காரணமாக பத்துக்கட்டளைகள் போதிக்கும் நற்கிரியைகளை அன்போடு செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அது மெய்க்கிறிஸ்தவன் இயல்பாகச் செய்கின்ற செயல். அது கிறிஸ்தவ அன்பின் பிரதிபலிப்பு. அதற்கு சமூகத்தொண்டு என்ற பெயர் அவசியமில்லை. திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் இதைப்புரிந்துகொண்டு மறுபிறப்பின் இயல்புக்கேற்றபடி வாழுகின்றபோது எந்த தேசத்தில் இருந்தாலும் சமுதாயத்தீங்குகளிலும், இடர்பாடுகளிலும் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றி கைகொடுக்க முயலுவார்கள். நல்ல சமாரியன் உவமை இதைத்தானே விளக்குகிறது. அவன் என்ன சமூகத்தொண்டா செய்தான்? தேவ அன்பை இயற்கையாக ஏமியைப்போல வெளிப்படுத்தினான். இன்னொன்று தெரியுமா? ஏமியைப்போல நற்கிரியைகளைச் செய்யும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்ய வேண்டும். கிறிஸ்தவன் பிரதிபலன் எதிர்பார்த்து செய்யும் எதுவும் நற்கிரியையாக இருக்காது. கிறிஸ்துவிடம் ஒருவர் வரவேண்டும் என்ற ஆர்வத்தில் சமூகத் தொண்டு செய்வது சுயநலம் கலந்த செயலாக மாறிவிடுகிறது. அது நற்செய்கையாக இல்லாமல் போவதோடு சுவிசேஷத்தையும் அசிங்கப்படுத்துகிற செயலாகிறது. ஏமி எந்த நன்மையையும் எதிர்பார்க்காமல், கிறிஸ்துவிடம் குழந்தைகள் வரவேண்டும் என்ற எண்ணம்கூட இல்லாமல் அவர்களுக்கு வந்திருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்ற முனைந்தார். அப்படிக் காப்பாற்றியவர்களுக்கு வாழ்வளிப்பதற்காக சுவிசேஷத்தைச் சொன்னாரே தவிர அவர்களை மதம் மாற்றுவதற்காக அல்ல.

1900ங்களில் தமிழகம்

இறுதியாக இந்த ஆக்கத்தில் 1900களின் தமிழகத்தை சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியில் சமுதாய இழிவுகள் பண்பாட்டின் பெயரில் அன்றும் தொடர்ந்திருக்கின்றன. சாதிப்பாகுபாடு, தேவதாசி முறை, உயர்குலப் பிராமணர்களின் ஆதிக்கம், கோயில்கள், பூஜை, புனஸ்காரம் எல்லாம் கொடிகட்டிப் பறந்திருக்கின்றன. ஏமியின் கண்கள் மூலமாக அன்றைய தமிழகத்தை இயன் மரேயின் நூலில் ஓரளவுக்கு பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் மத்தியில் வெளிநாட்டு மிஷனரிகள் பல இடங்களில் சுவிசேஷப் பணிபுரிந்திருப்பது மட்டுமல்ல, திருச்சபைகளும் நிறுவப்பட்டு இயங்கி வந்திருக்கின்றன. இங்கிலாந்து திருச்சபை தமிழகத்தில் தென்னிந்திய திருச்சபையை நிறுவியிருந்திருக்கிறது. ஏமியின் நூலில் கவனித்ததுபோல அன்றே தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவ வேதத்தில் ஆணித்தரமான நம்பிக்கையைக் கொண்டிராமல் இருந்துள்ளது. இல்லாவிட்டால் வேதத்தை தேவனுடைய வார்த்தையாக நம்ப மறுத்த ஸ்டீபன் நீல் அதன் பிஷப்பாக 1939ல் எப்படி வந்திருக்க முடியும்? இன்றைக்கு வேத நம்பிக்கையற்ற பரிசேயப் பிரிவைப்போல இயங்கி வந்துகொண்டிருக்கிறது தென்னிந்திய சி. எஸ். ஐ. திருச்சபைகள். அதற்குள் சாதி முதற்கொண்டு ஏமி எதிர்த்து நின்ற அத்தனைப் புறளிகளும் தொடர்கின்றன. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குழந்தைகளுக்கு வாழ்வு கொடுக்க அந்தத் திருச்சபை அன்று எதையும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படி அது ஆதரவளித்திருந்தால் நிச்சயம் ஏமியின் எழுத்துக்களில் அதுபற்றிய குறிப்புகள் இருந்திருக்கும். பண்பாட்டிற்கு ஏற்றவிதத்தில் அதற்கு இடங்கொடுத்த பரிசேய ஊழியத்தையே அச்சபைகள் அன்று செய்துவந்திருக்கின்றன. இன்று டோனவூர் பணியை அது மேற்பார்வை செய்து வருகின்றது என்பது எதைக் காட்டுகிறது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சுயாதீனமான ஒரு நிர்வாகத்தில் முற்றாக இந்தியர்களைக் கொண்டு இயங்கும் டோனவூர் ஐக்கியம் ஏமியின் சுவிசேஷக் கோட்பாடுகளைப் பின்பற்றி இயங்குகிறது என்றும் உறுதியாக சொல்ல முடியாது.

இன்றைக்கு தேவதாசி முறை தமிழகத்தில் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருக்கின்றது என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது. சமீபத்திய நிகழ்வான ‘இந்தியாவின் மகள்’ அதை நமக்கு நினைவுறுத்துகிறது. இன்றைய சமுதாயத்திலும் சாதிப்பேய் தொடர்ந்து அசைக்க முடியாதபடி ஆளுகிறது. அது ஆளும் இடத்தில் பெண்களுக்கு சமத்துவம் சமுதாயத்தில் இருக்க வழியில்லை. குழந்தைகளைத் தத்தெடுப்பது என்பது இன்று சட்டத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அநேக கொடுமைகளுக்கு முடிவுகட்டப்பட்டிருந்தபோதும் சமுதாயத்தில் பல சீரழிவுகள், ஒழுக்கக்கேடுகள் இன்றும் தொடர்கின்றன. இதற்கெல்லாம் சமுதாய சீர்திருத்தப்பணி எந்தப் பெரு மாற்றத்தையும் ஒருபோதும் கொண்டுவந்துவிட முடியாது. அதையெல்லாம் கிறிஸ்தவர்களல்லாத தி.க.வைச் சேர்ந்த பெரியார் போன்றோர் செய்து என்னத்தைக் கண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் இல்லாமல் போக கிறிஸ்தவ அன்பை வெளிப்படுத்தும் கிறிஸ்துவின் சுவிசேஷமே தேவை. சுயநலமற்ற சுவிசேஷப் பணியும், வேதபூர்வமான மெய்யான திருச்சபைகளுமே மக்களுக்கு வாழ்வளிக்க முடியும். கிறிஸ்துவின் சுவிசேஷம் தருகின்ற விடுதலையை வேறெந்த சீர்திருத்தமும் தந்துவிட முடியாது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s