திரும்பிப் பார்க்கிறேன்

ஆரம்பமாகப் போகிறது இன்னுமொரு வருடம். அதற்கு சில மணி நேரங்களே இருக்கின்றன. புதிய வருடத்தை எதிர்நோக்குகிறபோது என்னால் பின்னால் திரும்பிப் பழைய வருடத்தை ஒருதரம் எட்டிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படி எட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நடந்தவற்றை மறந்துவிடுவது மனிதனின் இயல்பு. வேதம் அவனை நன்றியற்றவனாகவே வர்ணிக்கிறது. ஆனால் கிறிஸ்தவனால் அப்படி இருக்கமுடியாது. எதிர்காலத்திற்காக ஜெபத்தில் ஆண்டவரில் நாம் தங்கியிருக்கும்வேளையில் அவர் நம்மிலும் நமக்கு வெளியிலும் நடத்தியிருக்கும் செயல்களுக்காக நாம் நன்றியறிதலுடன் அவரை நினைத்துப் பார்ப்பது அவசியம். முடியப்போகிற இந்த வருடம் ஆரம்பித்தபோது எத்தனை எதிர்பார்ப்புகளோடும், நம்பிக்கையோடும், ஜெபத்தோடும் அதை எதிர்பார்த்திருந்தோம். மறந்துவிட்டீர்களா? அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறியிருக்கின்றனவா? ஆண்டவரில் தங்கியிருந்து எதை அனுபவித்திருக்கிறோம், எதைச் சாதித்திருக்கிறோம் என்று ஒருதடவை திரும்பிப்பார்த்து அவருக்கு நன்றிகூற மறக்கலாமா? நீங்கள் எப்படியோ, புதிய வருடத்தை வா, வா என்று வரவேற்கிறபோது என்னால் பழைய வருடத்தை ஒருதடவை திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அது கற்றுத்தரும் பாடங்களை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை.

சவாலே சமாளி

2015ன் ஆரம்பத்தில் அதை எதிர்பார்ப்புகளோடு வரவேற்றேன். ஆண்டவருக்காக சாதித்து வாழவேண்டும் என்ற அக்கறை நமக்கிருக்கிறதில்லையா. அதெல்லாம் நிறைவேற எதையெல்லாம் சந்திக்கவேண்டியிருக்கும் என்ற எண்ணங்களோடு அதை வரவேற்றேன். வாழ்க்கையில் நம்முடைய விசுவாசத்தையும், உறுதியையும் சோதித்துப் பார்க்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொருவரும் சந்தித்திருக்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அத்தகைய சந்தர்ப்பங்களுக்குக் குறைவில்லை. எதிர்நீச்சலடிப்பதுதானே கிறிஸ்தவ வாழ்க்கை. கடைசிவரையும் நிலைத்திருப்பவனே நல்ல விசுவாசி என்கிறது வேதம். எத்தனைச் சவால்களை எதிர்நோக்கினாலும், அடிபட்டாலும், பிசாசு நம்மைத் துவைத்தெடுத்தாலும், சிலவேளைகளில் சறுக்கிவிட்டாலும் தொடர்ந்தும் எழுந்து நின்று எதிர்நீச்சலடிப்பவனே மெய்விசுவாசி. நமக்குக் கிடைத்திருக்கும் விசுவாசம் நிலைத்திருக்கக்கூடிய விசுவாசம். அதை நாம் இழந்துபோகப்போவதில்லை. ஆனால், அது எதிர்நீச்சல் அடித்து வாழவேண்டிய விசுவாசம். உண்மையான விசுவாசத்தைக் கொண்டிராதவர்கள் விழுந்துவிடுவது மட்டுமல்ல, எழுந்து நிற்க முடியாமல் உலகத்தைச் சார்ந்து வாழ ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களுக்கு விசுவாச வாழ்க்கை கடினமானதாகத் தெரியும். சாவால்களும், எதிர்ப்புகளும் அவர்களுக்கு கசப்பு மருந்தாகிவிடும். அதையெல்லாம் தாங்க முடியாமலும், வாழும் வாழ்க்கையில் நிம்மதியில்லாமலும், உலக வாழ்க்கையில் தேமாவைப்போல நிம்மதிகாண ஓடிவிடுவார்கள்.

நம் விசுவாசம் அப்படிப்பட்டதல்ல. சவால்களும், எதிர்ப்புகளும் போகவேண்டிய அடுத்தகட்டத்துக்கான படிக்கற்கள் நமக்கு. அவை நம்மை நிச்சயம் சோதிக்கும். சரீரத்தின் அத்தனைப் பாகங்களையும் பலவீனப்படுத்தும்; நம்முடைய உதிரத்தை வேகும் நெருப்பாக்கும். தொடர்ந்தும் தாங்க முடியுமா? என்று எண்ணுமளவுக்கு மனதைச் சலிப்படையச் செய்யும். அதுவரை நண்பர்களைப்போலத் தோற்றமளித்து சுற்றி நின்றிருந்தவர்கள் இனி நம்மோடு இருக்கப்போவதில்லை என்ற உண்மையைப் பவுல், தான் நீதிஸ்தலத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட நிலையில் உணர்ந்தபோது எத்தகைய மனச்சலிப்பேற்பட்டிருக்குமோ அத்தனையும் நமக்கும் ஏற்படும். அதுவரை பயிற்சிகொடுத்து ஊழியப்பணிக்காகத் தயாரித்த பன்னிருவர்களில் ஒருவனான பேதுரு முட்டாள்தனமாக நடந்துகொள்கிற வேளையிலும், தன் போதனைகளைக் கடினமானவை என்று தன்னோடிருந்தவர்கள் தன்னைவிட்டு விலகிப்போனபோதும், யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுத்த வேளையிலும் மானுடத்தை முழுமையாகச் சுமந்து நின்ற நம் ஆண்டவர் இயேசுவுக்கு எத்தனை மனச்சுமை ஏற்பட்டிருக்குமோ அத்தனையும் நமக்கேற்படும். அதுதானே கிறிஸ்தவ வாழ்க்கை. முட்டாள்தனமாக நடந்துகொண்ட பேதுரு உண்மை விசுவாசியாக இருந்தபடியால்தானே வாழ்க்கையில் எதிர்நீச்சலடித்து உலகம் பேசுமளவுக்கு விசுவாசமான பிரசங்கியாக உருவானான். எத்தனைச் சலிப்பேற்பட்டபோதும், மலைபோல் சாவால்கள் எழுந்து நின்றபோதும் இயேசு கடைசிவரை நிலைத்து நின்று தன்னுடைய திட்டங்களைப் பூரணமாக நிறைவேற்றிக் காட்டியிருப்பது, எத்தனை சவால்களைச் சந்தித்தபோதும் நல்ல விசுவாசம் நிலைத்திருக்கும் என்பதால்தான்.

கடந்துபோன வருடத்தில் நானும் என் பங்குக்கு சவால்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுத்து எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தது. ஒன்று தெரியுமா? அவற்றிற்கு முகங்கொடுக்கும்வேளையில் நமக்கு தளர்ச்சி ஏற்பட்டாலும் அவற்றைக் கடந்து போகிறபோது எத்தனை பெரிய ஆண்டவர் நம்மோடிருந்திருக்கிறார் என்ற நம்பிக்கை நம்மில் பெருமரமாக வளரும். கடந்தவருடத்திலும் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுகின்ற பேரலைகளை நான் ஆவியின் துணயால் கடந்து வந்திருக்கிறேன். என் உற்ற நண்பர்களில் சிலர் அத்தகைய சவால்களை சரீரப் பாதிப்பு மூலமும், சபையில் பிசாசின் தலையெடுப்பாலும், இருதயத்தில் பாவம் தலைதூக்கி பிசாசின் கையில் விழுந்துவிட்டிருக்கிறவர்களின் பொய்க்குற்றச்சாட்டு மூலமும் சந்தித்திருக்கின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு நல்ல நண்பரான ஆவிக்குரிய போதகரைப்பற்றி சில விஷமிகள் புத்தகமே எழுதும் அசிங்கத்தில் விழுந்திருக்கின்றனர். கிறிஸ்தவ வாழ்வில் இப்படியும் நடக்குமா? என்று ஆண்டவரை அறியாதவர்கள் கேட்கும்படி தேவஇராஜ்ஜியத்துக்குள் இருப்பதுபோல் இனங்காட்டிக்கொள்ளுகிற சிலர் நடந்துவருவதைப்பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆண்டவர் இயேசுவையே பிசாசு விட்டுவைக்கவில்லையே. பாவிகளோடு கூட்டுச்சேர்ந்து தண்ணிப் பார்ட்டி வைத்துக்கொண்டிருக்கிறான் என்று அவரைப்பற்றி பொய்க்குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்களே யூதப் பரிசேயர்கள். இந்நேரங்களிலெல்லாம் நம்மால் ஒருவருக்கொருவர் ஊக்கத்தோடு ஜெபிக்கும் சந்தர்ப்பங்களை ஆண்டவர் அளித்திருக்கிறார். எல்லாவற்றையும் கொண்டு நடத்துகிற சர்வவல்லவரின் ஆத்மீகத் திட்டங்கள் இந்தவகையில்தானே நம்மிலும், நம்மைச்சுற்றி இருக்கும் விசுவாசிகளிலும் நடந்துவருகின்றன. குத்துச்சண்டை ரிங்கில் இறங்கிப் பல அடிகளை வாங்கி மூக்கில் இரத்தம் வடிந்தபோதும் எழுந்து நின்று பின்னால் திரும்பிப்பார்த்து ஆண்டவர் உதவியிருக்கிறார் என்று நம்மால் நன்றிசொல்ல முடிகிறது. அதனால், பழைய வருடத்தின் போராட்டங்கள் எனக்கு புதிய வருடத்தை எதிர்நோக்குவதில் பெரு நம்பிக்கையை அளிக்கின்றன. தளர்ந்துவிடாதீர்கள், நண்பர்களே, விசுவாச வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். எல்லாவற்றிற்கும் மத்தியில் நம் தேவன் நம்மோடிருந்து பாதுகாக்கிறார்.

கிறிஸ்தவ வாழ்க்கையில் படிக்கற்களாக அமையும் தடைகளைப்பற்றி எழுதுகிறபோது, ஆசீர்வாதமான கிறிஸ்தவ வாழ்க்கையை கஷ்டங்களே இல்லாமல் சரீர, பொருளாதார செழிப்புள்ள வாழ்க்கையாக இருக்கும் என்று நம்மை நம்பவைக்க முயலும் போலிச் செழிப்புப் போதனை சாமியார்களைப்பற்றி எண்ணிப்பார்காமல் இருக்க முடியாது. நம்மினத்து கிறிஸ்தவத்தில் இத்தகைய போதனை வழங்கும் சாமியார்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். வேதகிறிஸ்தவத்தை வெறும் பணவசதி அளிக்கும் வாழ்க்கையாக இனங்காட்ட முயலும் இவர்கள் இயேசு வாழ்ந்த வாழ்க்கையை ஒரு முறை ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எத்தகைய வாழ்க்கைக்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கு உதாரணமாக இயேசுவின் மானுட வாழ்க்கை இருந்திருக்கிறது. எந்தத் துன்பத்தையும் வாழ்க்கையில் சந்திக்காமல் பாலும், தேனும் அருந்தியா அவர் வாழ்ந்துகாட்டினார்? பணியாளர்கள் புடைசூழ மாடமாளிகையில் சொகுசொடிருந்தா ஊழியப்பணி செய்தார்? தன்னையே இரத்தப்பலியாகக் கொடுக்கும் அளவுக்கு அவருடைய வாழ்க்கை தாழ்மை ததும்ப அமைந்திருந்தது. இறுதியில் அவருக்கே சகல வெற்றியும். கிறிஸ்தவ வாழ்க்கையை நிரந்தரமற்ற இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்ட வாழ்க்கையாக வர்ணித்துப் பிரசங்கிக்கிறவர்கள் வலையில் விழாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

செழிப்புப் பிரசங்கிகள் ஒருபுறமிருக்க கல்வினிச ஐம்போதனைகளை நம்புகிற கெரிஸ்மெட்டிக் பிரசங்கியான ஜோன் பைப்பரின் போதனையிலும் எனக்கு சிக்கல் இருக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையின் தலையாய நோக்கம் கிறிஸ்துவின் ஆனந்தத்தில் திளைத்திருப்பது மட்டுமே என்று அவர் எழுதிப் பிரசங்கித்து வருகிறார். அதாவது அதுவே கிறிஸ்தவ வாழ்க்கையில் அதிமுக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அந்த ஆனந்தத்தில் திளைப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதல்ல என்றும் விளக்கிவருகிறார். ஓரளவுக்கு இதில் உண்மையிருந்தபோதும் இதுவே கிறிஸ்தவ வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வேதம் போதிப்பதாக எனக்குத் தெரியவில்லை. கிறிஸ்தவ வாழ்க்கை நமக்கு ஆனந்தம், சமாதானம், நம்பிக்கை எல்லாவற்றையும் இதுவரை இருந்திராதவிதத்தில் தந்தாலும் அது இடறல்களும், துன்பமும், சவால்களும், எதிர்ப்புகளும், ஏன் அதிக மனத்துன்பத்தையும், சரீரத்துன்பத்தையும் அனுபவித்து வாழவேண்டிய பரிசுத்தத்திற்கான வாழ்க்கை என்ற உண்மையை இது பின்னுக்குத் தள்ளிவிடுவதுபோல் எனக்குத் தோன்றுகிறது. துன்பத்திலும் ஆவிக்குரிய இன்பம் காணப்பழகி வாழவேண்டிய வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை. இன்பமும், துன்பமும் கிறிஸ்தவ வாழ்க்கையில் மாறிமாறிக் கடைசிவரை (பரலோகம் போகும்வரை) இருந்துகொண்டே இருக்கும் என்பதைத்தான் வேதம் சுட்டுகிறது. வேதபோதனைகளின் ஓர் உண்மையை, அதை மட்டுமே வேதம் உச்சகட்டமாக நம்மிடம் எதிர்பார்ப்பதுபோல் விளக்குவது ஆபத்து. வேதபோதனைகளின் சமநிலைத்தன்மையை இது பாதிக்கிறது.

மனிதனைக் கடவுள் படைத்திருப்பதன் நோக்கத்தை விளக்கும் சீர்திருத்த வினாவிடைப் போதனை, கடவுளை மகிமைப்படுத்துவதற்கும், அவரை ஆனந்தத்தோடு அனுபவித்து வாழ்வதற்குமாகவே மனிதன் படைக்கப்பட்டிருப்பதாக விளக்குகிறது. இதை ஜோன் பைப்பர் தலைகீழாக மாற்றி, கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கம், அவன் அவரை ஆனந்தத்தோடு அனுபவிப்பதன் மூலம் அவரை மகிமைப்படுத்துவதுதான் என்று கூறுகிறார். இது இந்த வினைவிடைப்போதனைக்குக் கொடுக்கப்படும் இதுவரையும் இருந்திராத தலைகீழான விளக்கம். இந்த விளக்கம் சரியானதல்ல. உண்மையில் வினாவிடைப்போதனை விளக்குவது என்ன தெரியுமா? கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கம் அவன் அவரை வாழ்நாள் முழுவதும் மகிமைப்படுத்துவதைத் தன்னுடைய தலையாய நோக்கமாக வைத்திருந்து அப்படி மகிமைப்படுத்துவதன் மூலம் அவரை அனுபவித்து ஆனந்தத்தோடு வாழவேண்டும் என்பதே. இதை இன்னொருவகையில் சொல்லப்போனால், கிறிஸ்துவில் மனிதன் வாழ்நாள்வரை இன்பம்கண்டு வாழ்வதற்கு வழி அவரை அனைத்துக்காரியங்களிலும் மகிமைப்படுத்துவதுதான். ஆகவே, கடவுளை மகிமைப்படுத்துவதே மனிதனின் தலையாக நோக்கமாக இருக்கவேண்டும். அதுமட்டுமே அவனுக்கு உண்மையான ஆனந்தத்தை அன்றாடம் கொண்டுவரும். எப்படி மகிமைப்படுத்துவது என்று கேட்பீர்களானால், அவருடைய வார்த்தையின்படி நித்தமும் தவறாது வாழ்ந்து பரிசுத்தமடைந்து அவரை மகிமைப்படுத்தவேண்டும் என்பதே அதற்குப் பதில். ஜோன் பைப்பரின் விளக்கம் வேதசமநிலையைப் பாதித்து கிறிஸ்தவன் கிறிஸ்துவில் அடையும் ஆனந்தத்தை மட்டுமே உச்சநிலையில் வைக்கிறது. எப்படி ஆனந்திப்பது என்பதைப் பைப்பர் விளக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த ஆனந்தத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருக்கும் சாவல்களுக்கும், இடர்களுக்கும், துன்பங்களுக்கும் என்ன பங்கு என்பதையும் அவர் விளக்கவில்லை. கிறிஸ்துவில் எத்தனை ஆனந்தத்தை அடைந்தாலும், அன்றாடம் சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றைச் சமாளித்து எதிர்நீச்சல்போட்டு வாழாத வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்க முடியாது.

கர்த்தருக்காக என்ன சாதித்திருக்கிறோம்?

சவால்களும், எதிர்ப்புகளும் மட்டுந்தானா கிறிஸ்தவ வாழ்க்கை என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இல்லை. அவற்றைத் தாங்கி முன்னேற உதவிய ஆண்டவர் அவருக்காக எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உழைக்கவும் நிறைவடைகின்ற இந்த வருடத்தில் எனக்கு உதவியிருக்கிறார். எல்லாம் தானே நடக்கும் என்று சாமியாரைப்போல ‘சும்மா’ இருந்துவிடாமல் நேரத்தைப் பயன்படுத்தி உழைக்க ஆண்டவர் உதவியிருக்கிறார். திருமறைத்தீபம் நான்கு இதழ்களை நல்லபடியாக முடிக்கவும், இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதவும், சில நூல்களை எழுதி முடித்து வெளியிடவும், வாரத்தில் தொடர்ந்து மூன்று தடவைகள் பிரசங்கிக்கவும், பல நாடுகளில் பலதடவைகள் ஊழியப்பிரயாணங்களை மேற்கொண்டு நல்ல ஆரோக்கியத்துடன் சுவிசேஷ ஊழியத்தை மேற்கொள்ளவும், இத்தனையும் போதாதென்று ஆண்டவருக்காக இன்னும் என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார்க்கவும் அவர் உதவியிருக்கிறார். நாம் ஊக்கத்துடன் சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடுகிறபோது ஆண்டவரின் வருகையின் காலம் சமீபிக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா? நிறைவுபெறுகிற வருடத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது, செய்து முடித்த பணிகளை நினைத்துப்பார்க்கிறபோது நிச்சயம் மனநிறைவு ஏற்படுகிறது. கர்த்தர் நம்மோடிருந்திருக்கிறார், வழிநடத்தியிருக்கிறார் என்ற மனநிறைவே அது. நாம் செய்கின்ற எதையும் அவரின்றி செய்துவிடமுடியாது. நாம் நன்மையாக செய்கின்ற அனைத்தையும் அவர்மூலம் அவருக்காகவே செய்கின்றோம். நிறைவடைகின்ற வருடம் நிச்சயம் இனி வரப்போகிற வருடத்தை ஊக்கத்தோடு எதிர்நோக்க உதவுகிறது. இம்மட்டும் நம்மோடிருந்த தேவன் இனியும் தொடர்ந்து நம்மோடிருப்பார் என்ற நம்பிக்கையை அது தருகிறது.

முடிகின்ற வருடத்தின் முக்கிய பணியாக நான் தொடர்ந்து பிரசங்கித்து வந்திருக்கின்ற பத்துக்கட்டளைகள் பற்றிய பிரசங்கங்களைக் குறிப்பிடுவேன். 2013ல் இருந்து அவற்றைப் பிரசங்கித்து வந்திருக்கிறேன். இப்போது ஒன்பதாம் கட்டளையை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். அவற்றின் மூலம் ஆத்துமாக்களை ஆண்டவர் ஆசீர்வதித்திருப்பது மட்டுமல்லாமல் என்னோடும் அடிக்கடி பேசியிருக்கிறார். எத்தனை தடவைகள் அந்தக் கட்டளைகளை ஆராய்ந்து படித்துப் பார்த்தாலும் தொடர்ந்தும் நமக்குள்ளிருக்கும் பாவத்தை அவை சுட்டிக்காட்டி அடைந்திருக்கும் ஆவியின் மூலம் பாவங்களைத் தொலைக்க வேண்டிய கடமையை வலியுறுத்தத் தவறுவதில்லை. எந்தளவுக்கு பூரணத்துவத்தைவிட்டு விலகியிருக்கிறோம் என்பதை அவை நினைவூட்டி, தொடர்ந்தும் நம்மைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளத் தூண்டுகின்றன. வாராவாரம் ஓய்வுநாளில் 1689 விசுவாச அறிக்கையை ஆழமாக விளக்கிப் போதித்திருக்கும் அனுபவத்தையும் முக்கியமானதாகக் கருதுகிறேன். வரலாற்றிறையியலின் முக்கியத்துவத்தையும் (Historical Theology), வெட்கப்படாமல் அறிக்கையிட வேண்டிய நம்முடைய விசுவாசத்தையும் அந்தப் பாடங்கள் உணர்த்தின. அதேநேரம் இறையியல் வாடையே இல்லாது தொடர்ந்து இருந்துவரும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தை நினைத்து என்னால் மனம்வருந்தத்தான் முடிகிறது.

இவைதவிர பல நல்ல நூல்களை வாசிக்க முடிந்த ஆசீர்வாதத்தையும் எண்ணிப்பார்க்கிறேன். இன்னும் எத்தனையோ நூல்களை வாசிக்காமல் போய்விட்டோமே என்ற ஆகங்கமும் கூடவே இருக்கிறது. வாசித்த அனுபவம் வாசிப்பின் அவசியத்தை உணர்த்துகின்ற ஒரு நூலை வெளியிடும்வரை என்னை அழைத்துப் போயிருக்கிறது. நூல்கள் இல்லாமல் நாம் இந்த உலகில் என்ன செய்யப்போகிறோம் என்பது தெரியவில்லை. அதிக படிப்பு உடலுக்கு நல்லதில்லை என்ற தவறான எண்ணத்தால், வாசிக்காமல் சிந்தனையைத் தூங்க வைத்துக்கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. நிறைவு பெறுகிற வருடத்தில் நான் எழுதியிருக்கும் நூல்களில் சிறப்பானதாக எனக்குப்படுவது ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ நூல்தான். தமிழில் இத்தகைய நூலில்லாத குறையை இது தீர்த்து வைப்பது மட்டுமல்ல, இரட்சிப்புபற்றிய தெளிவான சிந்தனைகளை வாசகர்கள் வளர்த்துக்கொள்ளவும் நிச்சயம் துணைசெய்யும். இது எப்போதும் கையில் வைத்திருந்து சிந்தித்து ஆராய்ந்து வாசிக்கவேண்டிய போதனைகளை உள்ளடக்கிய நூல். இதை எழுதி முடிக்க உதவிய ஆண்டவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு அதிக மனநிறைவைத் தந்த இன்னொரு விஷயம், நாம் வெளியிட்டிருந்த திருச்சபை வரலாற்றின் முதலாம் பாகம் அத்தனைப் பிரதிகளும் வேகமாக விற்றுத்தீர்ந்ததுதான். ஏதோவொருவிதத்தில் கர்த்தர் அதைப் பலருடைய வாழ்வில் பயன்படுத்தியிருக்கிறார். இரண்டாம் பாகமும் அதேபோல் விற்பனையாகி அநேகருடைய கண்கள் திறக்க கர்த்தர் கிருபை பாராட்டவேண்டும். இரண்டாம் பாகம் முதலாவதைப் போலவே முக்கியமானது, ரோமன் கத்தோலிக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்டு மறுபடியும் எவ்வாறு திருச்சபை வளர்ந்தது என்பதைப்பற்றியது அது. நிறைவு பெறும் வருடத்தில் எத்தனையோ பணிகளைச் செய்யக் கர்த்தர் உதவியிருந்தபோதும் செய்து முடிக்க முடியாமல் போன சில விஷயங்கள் என் பலவீனத்தை உணர்த்தி நான் தாழ்மையோடு தொடர்ந்திருந்து வர உதவுகிறது. கர்த்தர் அனுமதிக்கின்றவற்றை மட்டுமே நம்மால் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அவர்வழிப்படி நடந்துவர இது உதவுகிறது.

நம்பிக்கையூட்டும் புதிய வருடம்

புதிய வருடம், இதோ வந்துவிட்டேன் என்று கூப்பிடும் தூரத்தில் நிற்கிறது. என்னவென்ன சவால்களை அது கொண்டுவருமென்பது நமக்குத் தெரியாது. இருந்தபோதும் கர்த்தருக்காக சாதிக்க வேண்டியவை ஏராளம். புதிய வருடத்தில் திருமறைத்தீபத்தின் 20வது வருட நினைவு நாள் சிறப்பாக நடத்தும் ஏற்பாடுகளை நண்பர்கள் செய்துவருகிறார்கள். அது கர்த்தருக்கு நன்றி பகலும் நன்நாளாக இருக்கப்போகிறது. கர்த்தரின் கிருபையின் செயலை அதில் பலர் பகிர்ந்துகொள்ளப்போகிறார்கள். பத்துக்கட்டளைகள் முதல் பாகத்தையும், மனிதனின் சுயாதீன சித்தத்தையும் பற்றிய நூல்களை முதலில் வருட ஆரம்பத்தில் முடித்து வெளியிட வேண்டும். இன்னும் எத்தனையெத்தனையோ ஆவிக்குரிய பணிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. வேறெதிலும் அநாவசியத்துக்குக் கவனம் போய்விடாமல் கர்த்தருக்காக செய்ய வேண்டியவைகளைச் செய்யவேண்டும். இதிலெல்லாம் நம்குடும்பத்துக்கும் பங்கிருக்கிறது. அவர்கள் துணையில்லாமல் இதையெல்லாம் செய்துவிட முடியுமா என்ன?

புதிய வருடத்தில் உலகம் சந்திக்கின்ற ஆபத்துக்களும் அதிகம். ஐசிஸின் தீவிரவாதம் நிறைவுபெறுகிற வருடத்தில் நாடுகளைக் கதிகலங்க வைத்தது. ஒரு மில்லியன் மக்கள்வரை அகதிகளாக ஐரோப்பாவை நாடிப்போகும்படிச் செய்தது. அதிலும் 3600 பேர்வரை கடலில் உயிரிழந்திருக்கிறார்கள். புதிய வருடத்தில் இதெல்லாம் எந்தளவுக்குப் பெருகுமோ யாருக்குத் தெரியும்? அல்னீனியாவால் ஏற்படும் இயற்கைப் பாதிப்புகள் பற்றி பத்திரிகைகள் எச்சரித்து வருகின்றன. பின்நவீனத்துவ சமுதாயம் தன் ஆளுகையை இதுவரைத் தொட்டிராத சமுதாயங்களனைத்தையும் வியாபித்துக்கொள்ள தொடர்ந்து எத்தனிக்கும். கிறிஸ்தவ வேதப்பார்வைக்கு முரணான உலகப் பார்வையைக் கொண்டு இறையாண்மைகொண்ட தேவனை இந்த உலகம் தொடர்ந்து எள்ளிநகையாடும். திருச்சபை எதிர்நோக்கும் சவால்களுக்கும் எல்லையிருக்காது. சத்தியத்தைவிட மனிதனின் சந்தோஷமே பெரிது என்று அவனுடைய சிந்தனைக்கேற்றபடியான கிறிஸ்தவத்தை உருவாக்கும் ஊழியத்தில் ஈடுபடுகிறவர்கள் அதிகரிப்பார்கள். கலாச்சாரத்துக்கு முதன்மையான இடத்தைக்கொடுத்து வேத ஒழுக்கத்திற்கு இரண்டாமிடத்தைக் கொடுக்கும் போதனைகள் பெருகும். எதிர்மறையான சவால்கள் என்று பார்க்கும்போது புதிய வருடம் ஒருவிதத்தில் கவலையைத்தான் ஏற்படுத்துகிறதாக இருக்கிறது. வளரும் இளம் சமுதாயத்திற்கு இருக்கும் ஆபத்துக்களுக்கும் குறைவில்லை. இருந்தாலும் உன்னதத்தில் இருக்கின்ற கர்த்தர் இதையெல்லாம் பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறார் (சங்கீதம் 2) என்ற வேதவார்த்தைகள் நமக்கு நம்பிக்கையூட்டுகின்றன. சர்வவல்லவரான ஆண்டவர் தன்னுடைய திட்டங்களைத் தொடர்ந்து புதிய வருடத்திலும் வெற்றிகரமாகத்தான் நிறைவேற்றப் போகிறார். அவருடைய மக்களை சுவிசேஷத்தின் மூலம் அழைத்துக்கொள்ளத்தான் போகிறார். பிதா என்னிடத்தில் கொடுத்த ஒரு ஆடும் தவறப்போவதில்லை என்று சொன்னபடி பாவிகளின் மத்தியில் இருக்கும் அந்த ஆடுகளைத் தன்னிடம் அழைத்து அவர்களுக்கு பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் கொடுக்கத்தான் போகிறார். இதைவிட நமக்கு என்ன வேண்டும்? இயேசு கிறிஸ்துவின் வருகையும் புதியவருடத்தோடு சமீபிக்கிறது என்பதும் எத்தனை பெரிய உண்மை. நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் புதிய வருடத்தை எதிர்நோக்கி கர்த்தருடைய பணியில் தளராது ஈடுபடுவோம். என்னுடைய புதுவருட வாழ்த்துக்களையும் இந்நேரம் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

One thought on “திரும்பிப் பார்க்கிறேன்

  1. To,Mr.Bala,Thank you for the encouragement letter which is very neededto me at Present.  It may be useful toall who read it by spending a very little time.Happy  New Year 2016   God bless you,Vivekanandan.S

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s