இது என்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி ஆச்சரியம் தரவில்லை. முதன் முதலாக சமீபத்தில் இதை உணர்ந்து நானே ஆச்சரியப்பட்டேன். பத்துக்கட்டளைகளை 2013ல் இருந்து பிரசங்கித்து வரும் நான், சமீபத்தில் எட்டாம் கட்டளையை ஆரம்பித்தேன். அந்தக் கட்டளையில், செய்யக்கூடாத காரியங்களை ஆண்டவர், ‘திருடாதே’ (களவு செய்யாதிருப்பாயாக) என்ற வார்த்தை மூலம் பொதுவாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார். உண்மையில், செய்யக்கூடாதவற்றை மட்டும் அந்த வார்த்தைகள் விளக்காமல், செய்யவேண்டியவற்றையும் விளக்குகின்றன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அந்தக் கட்டளைகளில் உள்ள அனைத்தும் நம் பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதில்லை. ஆழமாக நிதானத்தோடு வேதத்தை வேதத்தோடு ஆராய்ந்து படிக்கும்போது அநேக உண்மைகளை ஆவியானவர் அறியவைக்கிறார்.
இதில் திருடாதே என்று சொல்லப்படுவதில் முதலில், ஆட்களைத் திருடும் பாவத்தைச் செய்யக்கூடாது என்று ஆண்டவர் சொல்லுகிறார். சாதாரணமாகப் பேச்சில் ஒருவருடைய இருதயத்தைத் திருடினேன் என்கிறபோது அதற்குப் பொருள் வேறு. அதை நல்ல விஷயமாகத்தான் நினைப்போம். காதலன் காதலியை நேசிப்பதையும் அல்லது ஒருவரோடிருக்கும் நட்பைக் குறிப்பதாகவும் அதை எண்ணுவோம். ஆனால், இந்தக் கட்டளை பாவகரமான விஷயத்தைச் சொல்லுகிறது. அதாவது ஆள்கடத்தலையும் (Kidnapping), எவரையும் அடிமையாக வைத்திருத்தலையும் (Slavary) இந்தக்கட்டளை பாவமாகக் கருதுகிறது. இதெல்லாம் இன்றைக்கு நடக்காமல் இல்லை. வயதுவராத சிறுவர்களை கட்டாய வேலைக்குட்படுத்துவதும், பிச்சையெடுக்க வைப்பதும் ஆள்கடத்தலுக்குள்ளும், அடிமைத்தனத்திற்குள்ளும் வந்துவிடுகிறது. எத்தனைபேர் இதை நினைத்துப் பார்த்திருக்கிறோம்? பழம் வேதவியாக்கியான இறையியலறிஞர்கள் வரலாற்று வினாவிடைப் போதனைகளில் இந்தக் கட்டளையை விளக்கும்போது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இந்த ஆள்கடத்தலுக்குள் அடங்கியிருக்கும் இன்னொன்றைத்தான் அவர்கள் ‘இருதயத் திருட்டு’ என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக ஆதி. 31:20ஐ சுட்டிக்காட்டுகிறார்கள். இந்த வேதப்பகுதியில் லாபானிடம் சொல்லாமலும், அவனுக்குத் தெரியாமலும் யாக்கோபு தன் மனைவி பிள்ளைகளையும், தனக்குச் சொந்தமான அனைத்தோடும் கானானில் இருக்கும் தன் தகப்பனிடம் ஓடிப்போனான். 20ம் வசனம் அதைத் ‘திருட்டளவாய்ப்’ போய்விட்டான் என்கிறது. (NKJV – stole away, NASB – deceived, ESV – tricked). இதற்கு எழுத்துபூர்வமாக திருடனைப்போல ஓடுதல், ஏமாற்றுதல், திசைதிருப்புதல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். அந்தவகையிலேயே இந்த வார்த்தைக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அமைந்திருக்கின்றன. லாபானுக்குத் தெரியாமல் யாக்கோபு செய்தகாரியம் ‘லாபானின் இருதயத்தைத் திருடுதலாக’ இங்கே காட்டப்பட்டிருக்கிறது. அதாவது, லாபானை நம்பவைத்து ஏமாற்றுதலே யாக்கோபு செய்த காரியம். ஆதி. 31:26ல், லாபான் யாக்கோபுவைக் கண்டுபிடித்து இதே வார்த்தையையும் (திருட்டளவாய் – stolen away), ஆள்கடத்தலைக் குறிக்கும் இன்னொரு வார்த்தையையும் (சிறைகளைப்போலக் கொண்டு வந்தது – like captives taken) பயன்படுத்தி அவனுடைய தவறைச் சுட்டிக்காட்டுகிறான். அப்சலோம், தாவீதை அரசபதவியிலிருந்து இறக்குவதற்காக இஸ்ரவேலருக்கு அநேக காரியங்களைத் தருவதாகப் பொய்யாக வாக்களித்தபோது இதேவிதமாக ஏமாற்றி அவர்களுடைய ‘இருதயத்தைத் திருடினான்’ (stole the hearts).
ஒருவரை நம்பவைத்து ஏமாற்றி நடந்துகொள்ளுவதை வேதம், ‘இருதயத் திருட்டாக’ வர்ணிக்கிறது; எட்டாம் கட்டளைக்கு எதிரான பாவமாகக் கருதுகிறது. எந்த விஷயத்திலாவது எவரையும், ஏன், உங்கள் பெற்றோர், போதகர், உற்ற நண்பர்கள், சபையார், மனைவி, பிள்ளைகளைக்கூட, அவர்களுடைய இருதயம் அறிந்திராதவகையில் நடந்து அவர்களை ஏமாற்றி வருகிறீர்களா? அப்படிச் செய்வது அவர்களுடைய இருதயத்தை வேறுதிசையில் திருப்புவதாகும்; அதைத் திருடுவதாகும். அதாவது, உங்களுடைய உண்மை நோக்கத்தை அவர்களுடைய இருதயத்துக்குத் தெரியாமல் மறைத்து உங்களை நம்பும்படிச் செய்வதே ‘இருதயத் திருட்டு.’ இத்தகைய இருதயத் திருட்டுக்காக இருதயங்களை வசப்படுத்தும் manipulation என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் ‘தகிடுதத்தம்’ என்ற வார்த்தையைக் க்ரியா அகராதி பயன்படுத்துகிறது. ஒரு காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காகச் செய்யும் சுயநலச் செயலே தகிடுதத்தம். இது முறையில்லாத குறுக்குவழி. இப்படி நடந்துகொள்கிறவர்களை க்ரியா அகராதி ‘சூத்திரதாரிகள்’ (manipulators) என்று அழைக்கிறது.
இதை விளக்கும்போது என்னால் போதகப் பணியில் இருப்பவர்களைப்பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. பிரசங்கத்தை உண்மையோடு ஆராய்ந்து விளக்காமல், சுயலாபத்துக்காக, பிரசங்க மேடையில் நின்று ஆத்துமபாரமுள்ளவனைப்போலப் பிரசங்கிப்பது ஆத்துமாக்களை ஏமாற்றித் தகிடுதத்தம் செய்து அவர்களுடைய ‘இருதயத்தைத் திருடும்’ சூத்திரதாரம்தான். சுயலாபத்துக்காக ஆத்துமாக்களுடைய இச்சைகளின்படி சபை நடத்தி (people-pleaser) நல்லவன்போல் ஊழியம் செய்வதும் ‘இருதயத் திருடல்தான்.’ இதைத்தான் தாவீதின் மகன் அப்சலோம் செய்தான். நல்ல போதகன்போல் நாடகமிட்டு பணஆசையால் சபையார் கேட்பதையெல்லாம் செய்து சத்தியத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் நடந்து வருவது இந்த ‘இருதயத் திருட்டுக்குள்ளேயே’ அடங்குகிறது. இது இருதயங்களை ஆசைகாட்டி வசப்படுத்தி ஏமாற்றிவரும் ஆள்கடத்தல் திருட்டு. எத்தனை போதகர்களும், பிரசங்கிகளும் இன்று இதைச் செய்துவருகிறார்கள். கர்த்தருக்கும், வேதத்திற்கும் மட்டும் அடிமைப்பட்டு நடந்துகொண்டால் பல வருடங்களுக்கு பணவசதியோடு சபை நடத்தமுடியாது என்பது நன்றாகத் தெரிந்திருந்து, சத்தியத்தை ஒதுக்கிவைத்து, ஆத்துமாக்களை இழக்க மனமின்றி அவர்களுடைய பேச்சுக்களுக்கு இசைந்துபோய் தன்காரியத்தை சாதித்துக்கொள்ளுகிற ஊழியர்கள் எட்டாம் கட்டளைக்கெதிராக நடந்து ‘இருதயத் திருட்டு’ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; கர்த்தரையும் இதன் மூலம் வஞ்சிக்கிறோம் என்ற பயம்கூட அவர்களுக்கில்லை. சபைக்குள் தனக்கென ஒருகட்சியை உருவாக்கி தன் பதவியைப் பாதுகாத்துக்கொள்ளுவதும், சுயலாபத்துக்காக கட்சிப் பிரிவினையை உருவாக்கி சபையைப் பிரிப்பதும் இந்த இருதயத் திருட்டுக்குள்தான் அடங்குகிறது. இதெல்லாம் எத்தனைப் பெரிய பாவம் தெரியுமா? நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது என்ற பயம் நமக்கிருக்கட்டும்.
இந்த இருதயத் திருட்டில் இதுவரை சொன்னளவுக்கு சீரியஸானதாக இல்லாவிட்டாலும் நிச்சயம் அடங்கியிருக்கும் இன்னொன்று தொலைக்காட்சி விளம்பரங்கள். ஒரு பொருளை விற்க அவர்கள் அதுபற்றி எத்தனை ஆசைவார்த்தைகளைக்காட்டி அந்தப் பொருளை உயர்வானதாக நம்முன் வைக்கிறார்கள். அது அந்த விளம்பரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் இருதயத்தைத் திருடுவதாகும்; அந்தப் பொருளை வாங்க வைக்கச் செய்யும் உத்தி அது. இதுவரை நான் விளக்கியிருப்பதெல்லாம் ஆள்கடத்தலாகிய பாவத்தில் அடங்கியிருப்பதை உணர்கிறீர்களா? அடுத்த தடவை எட்டாம் கட்டளையை வாசிக்கும்போது இதையெல்லாம் கொஞ்சம் மனதில் வைத்து வாசிப்பீர்களா?