இது அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள திரித்துவ பாப்திஸ்து திருச்சபையில் நடைபெற்ற போதகர்களுக்கான மகாநாட்டின் ஆரம்பநாள் இரவுக்கூட்டத்தில் அந்தச் சபையின் முன்னாள் போதகர் அல்பர்ட் என். மார்டின் அளித்த பிரசங்கத்தின் தமிழாக்கம்.
போதகர்களுக்கான இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுகிறவர்களுக்கு இதற்கான தலைப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அறிந்திராத மற்றவர்களுக்காக இப்போது நான் அதை குறிப்பிட விரும்புகிறேன், “கிறிஸ்துவின் மணவாட்டியின் அழகை அதிகரித்தலும் பாதுகாத்தலும்” என்பதே அந்தத் தலைப்பு. இத்தலைப்பிற்கு ஆதாரமாகவும் அதை மேலும் விபரிக்கும் வகையிலும் இந்த மாலை வேளையில் நான் “கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் அழகு பூரணமாக அவளின் திருமண நாளில் வெளிப்படுத்தப்படவுள்ளது” என்கிற தலைப்பில் தேவசெய்தியைக் கொடுக்கப் போகிறேன்.
இந்தத் தலைப்பைப் படிப்பதற்கான ஆரம்பகட்டமாக, நாம் தெரிந்திருக்க வேண்டியதும் நினைவுகூர வேண்டியதுமான ஒன்று இருக்கிறது. என்னவென்றால், கடவுள் தம்முடைய மக்களோடு ஏற்படுத்திக் கொண்டுள்ள சிறப்பான உடன்படிக்கையின் உறவைக் காட்டுகிறதற்கு, “வருகிறவரான மணவாளன்” என்கிற உவமையின் மூலம் தம்முடைய கிருபைக்கு உரியவர்களை தம்முடன் சேர்த்துக்கொள்ளுகிறதாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேலரோடு கடவுள் சிறப்பான உடன்படிக்கையை ஏற்படுத்திய போதும் இப்படியே செய்தார். இஸ்ரவேலருக்கான மணவாளனாக உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதை கடவுள் விரும்பியிருக்கிறார். இது பழைய ஏற்பாட்டின் அநேக வேதபகுதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம். ஏசாயா 54:5, “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.” மேலும் எரேமியாவின் மூலமாக, “நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 2:2). அடுத்து, நான் இப்பிரசங்கத்தின் ஆரம்பத்தில் வாசித்த நீண்ட ஒரு பகுதியான, எசேக்கியேல் 16. இதில் கடவுள் மறுபடியுமாக இஸ்ரவேலரோடு திருமண உடன்படிக்கையில் நுழைவது குறிப்பிடப்பட்டுள்ளது. எசேக்கியேலின் மூலமாக கடவுள், தன்னுடைய விபசார மனைவியோடு பேசுகிறார், தானே அவளுடைய மணவாளன் என்கிற உண்மையை அவளுக்கு நினைவூட்டுகிறார். வசனம் 8ல் கடவுள் சொல்லுகிறார், “நான் உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன், நீ என்னுடையவளானாய்”. இதே கருப்பொருள், ஓசியாவின் புத்தகத்தில் மறுபடியும் மிகவும் உறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இஸ்ரவேலரின் மணவாளனான யேகோவாவுக்கு உண்மையில்லாத மனைவியாக இஸ்ரவேல் இருந்தாள்; அதாவது அவள் விபசாரியான மனைவியாக இருந்தாள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆவிக்குரிய அனுபவம் அத்தீர்க்கதரிசியின் நிஜமான திருமண அனுபவமாகவும் இருந்தது. அவர் திருமணம் செய்திருந்த அவருடைய மனைவி வெட்கங்கெட்ட விபசாரப் பெண்ணாக மாறினாள். இப்படியான வார்த்தைப் பதங்களைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று அதிகமாக யோசித்தேன். ஆனால் கடவுள் இப்படித்தான் அவளை வேதத்தில் சுட்டிக்காட்டுகிறார். அந்தத் தீர்க்கதரிசி அந்தப் பெண்ணோடு திருமண உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அவளோ வெட்கங்கெட்ட விபசாரப் பெண்ணாக மாறிப் போனாள். அவளுடைய கேடுகளின் மத்தியிலும் அவர் அவளை நேசித்து மறுபடியுமாக அவளுக்கு ஆணையிட்டுத் தருகிறார்.
புதிய ஏற்பாட்டில், மாற்கு 2:19-20 வசனங்களில், ஆண்டவராகிய இயேசு தம்முடைய மக்களின் மணவாளனாக இருக்கிறார் என்பதை இந்த இரண்டு வசனங்களில் மூன்று தடவைக்குக் குறையாமல் சொல்லியிருக்கிறார். யோவான் 3:29ல், அவர் யோவான்ஸ்நானனின் ஊழியத்தை “மணவாளனின் நண்பனாக” அடையாளங் காட்டுகிறார். இயேசுவுக்கு முன்னோடியான யோவான்ஸ்நானன் தன்னுடைய பாத்திரத்தை, “தம்முடைய மணவாட்டியைத் தம்முடன் கொண்டுபோக வரப்போகும் மணவாளனின் நண்பனாகக்” காண்கிறார். மேலும், மத்தேயு 22:1-10 வசனங்களில், ஆண்டவராகிய இயேசு பரலோகராஜ்யத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது, ஒரு ராஜா தன்னுடைய மகனுக்காக ஏற்படுத்திய திருமண விருந்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். இவ்வாறாக புதிய ஏற்பாட்டில், இயேசு கிறிஸ்துவே தம்முடைய மக்களுக்கான மணவாளன் என்கிற உண்மையை சுட்டிக்காட்டும் மலைச்சிகரம் போன்ற அநேக வேதப்பகுதிகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் நான் வாசித்த வேதப்பகுதிகளான எபேசியர் 5:25–33, வெளிப்படுத்தின விசேஷம் 19 மற்றும் 21 அதிகாரங்களையும் இவற்றோடு இணைத்துக்கொள்ளலாம்.
வேதத்தை நாம் புரட்டிப்பார்க்கிறபோது, அதில் அநேக உவமைகளை நாம் காண்கிறோம். அவற்றின் மூலம் கடவுள் தம்முடைய புதிய உடன்படிக்கையின் சமூகமான திருச்சபையின் இயற்கை தன்மை, சிறப்புத் தன்மைகள், மற்றும் பொறுப்புக்களை விளக்குகிறார். உதாரணமாக, கடவுளுடைய மக்களை, கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு அவரோடு இணைக்கப்பட்டுள்ள சரீரமாக அதில் விவரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவை ஜீவனாகக் கொண்ட திராட்சச்செடியின் கொடிகளாக கடவுளின் மக்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள். அத் திராட்சைச்செடி எல்லாக்கொடிகளின் ஜீவனாகவும், அவைகள் கனிகொடுக்கும்படிச் செய்வதாகவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாட்டில் திருச்சபையை ஜீவனுள்ள ஆலயமாக உருவகப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியினால் ஜீவனுள்ள கல்லின் மேல் கட்டப்பட்ட ஆலயமாகவும், பரிசுத்த ஜனமாகவும், ராஜரீக ஆசாரியக்கூட்டமாகவும் இன்னும் பலவிதமான உவமைகளையும் நாம் பார்க்கலாம். இந்த உவமைகள் எல்லாம், திருச்சபையின் சிறப்புத்தன்மைகள் மற்றும் பொறுப்புகளைப்பற்றிய அற்புதமான உண்மைகளை எடுத்துரைத்தாலும், இயேசு தம்முடைய திருச்சபையாகிய மணவாட்டியின் மணவாளனாக இருக்கிறார் என்பதைப் போன்று சிறப்பானதாகவோ, மிக நெருக்கமானதாகவோ, உருக்கமானதாகவோ இல்லை எனலாம்.
கிறிஸ்து தம்முடைய திருச்சபையாகிய மணவாட்டியின் மணவாளனாக இருக்கிறார் என்கிற இந்த உவமை அவருடைய மணவாட்டியாகிய திருச்சபை தனது திருமணநாளின்போது கொண்டிருக்கப்போகும் அழகை சம அளவில் வலியுறுத்துகிறதாக இருக்கிறது. அந்தத் திருமண நாள் ஆண்டவராகிய இயேசு தம்முடைய மகிமையிலும் வல்லமையிலும் மறுபடியுமாக வரப்போகிற நாள். அப்போது அவர் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை முதலாவது கருத்தில் கொள்ளுகிறார், “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்” (1 தெசலோனிக்கேயர் 4.16). மக்கள் பெரும்பாலும் சொல்லுவார்கள், இயேசு மறுபடியும் வருகிறபோது நான் உயிரோடு இருக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப ஆசை என்று. அப்படியானால் ஆண்டவர் அன்று உங்களைப் பார்த்துச் சொல்லப் போகிறார், “சற்றுப் பொறு, எனக்கு வேறு ஒரு வேலை இருக்கிறது” என்று. முதலாவது, கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்- முதலில் எழுந்திருப்பார்கள். அந்நாளில் ஆண்டவர் பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளை மீண்டும் அவர்களின் சரீரத்தோடு இணைப்பார். தம்மால் மீட்கப்பட்ட யாவருக்கும் முழுமையாக மீட்கப்பட்ட ஆவியையும் புதிதாக்கப்பட்ட சரீரங்களையும் தந்து, தம்முடைய விலையுயர்ந்த மணவாட்டியாக்குவார். பிறகுதான் திருமண நாள், அந்தவேளையில் பரலோக மணவாளன் தம்முடைய மணவாட்டியை தம்முடன் என்றென்றும் இருக்கும்படி அழைத்துச் செல்லுவார். இத்தனையும் அந்த நாளில் நடக்கப்போகிறது.
ஆகவே இத்தலைப்பின் அடிப்படையில், நான் சில காரியங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இன்று திங்கட்கிழமை இரவாக இருந்தபோதும் நீங்கள் வேத வார்த்தைகளைக் கேட்பதற்கு கவனத்தோடு வந்திருக்கிறீர்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆண்டவரில் தங்கியிருந்து ஜெபத்தோடு போராடி உழைத்துத் தயாரித்த, வேதத்தின் அடிப்படையில் இவையாவும் உண்மை என்கிற என் நம்பிக்கையின் அடிப்படையில், இவற்றை விளக்குகிறேன். என் எதிர்பார்ப்பு அதன் உண்மை வடிவை அடையும் என்று நம்புகிறேன்.
I. மணவாட்டியின் குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான அவளுடைய இயற்கைத் தன்மை
முதலாவதாக நாம் பார்க்க வேண்டியது, மணவாட்டியின் குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான அவளுடைய இயற்கைத் தன்மை. நாம் உச்சக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம். மணவாட்டியின் புதிய தோற்றத்தை அவளின் முழுமையான அழகை நாம் நிச்சயம் காணப்போகிறோம். ஆனால் அவள் எப்படியிருப்பாள் என்பதில் இருந்து இதை நாம் ஆரம்பிக்கக் கூடாது. மாறாக, ஆண்டவர் அவளை ஏற்றுக்கொண்டபோது அவள் எப்படியிருந்தாள் என்பதில்தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். கிறிஸ்துவின் மணவாட்டிகளான ஆண், பெண், சிறுவர், சிறுமிகள் எல்லாருமே ஆதாமின் குமாரர்களாக, குமாரத்திகளாகதான் இவ்வுலகில் பிறந்திருக்கிறார்கள். பிறப்பின்படி அவர்களில் யாருமே தேவகுமாரனுடைய கண்களைக் கவரும் வகையில் இருக்கவில்லை. அவர்கள் அவரைக் கவரக்கூடியவர்களாக இல்லாதது மட்டுமல்ல, அவருக்கு ஏற்ற மணவாட்டியாகவும் இருக்கவில்லை. அவர் அவர்களை முழுமையாக அறிந்திருக்கிறார். அவர்கள் எப்படியிருந்தாலும் அவர் தம்முடைய இருதயத்தை அவர்கள் மேல் வைத்து, அவர்களை தமக்கு ஏற்ற மணவாட்டியாக்கத் தீர்மானித்தார்.
குறைகள் நீக்கப்பட வேண்டியதும் பரிதாபகரமானதுமான தன்மை என்று நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதை இரண்டு வகையாக சொல்லலாம். இவை கிறிஸ்துவின் மணவாட்டியான அவருடைய மக்களின் இயற்கைத் தன்மையாக இருக்கிறது.
அ) கண்டனத்திற்குரிய நடத்தை
முதலாவது, மணவாட்டியின் நிலையைப் பற்றியது. இயற்கையாக அவள், கண்டனத்திற்குரிய நடத்தையும், பலவிதமான குறைபாடுகளினால் அழிந்துகொண்டுமிருப்பவள். இப்போது விசுவாசிகளாகவும் இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களுமாக இருக்கிற நீங்களும் நானும் பிறப்பில் இவளின் இந்தத் தன்மையையே கொண்டிருந்தோம். நேற்று மாலை போதகர் வில்லியம் ஹியூஸ், பரிசுத்த ஆவியின் உதவியினால் “பாவத்தில் நம்முடைய நிலை என்ன” என்பது பற்றிய வேதத்தின் பல்வேறு முக்கிய போதனைகளை விளக்கினார். ஆகவே அவைகளில் சில அம்சங்களை இன்னும் சில வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி விவரிக்க இருக்கிறேன்.
ரோமர் 5:12ல் நாம் வாசிக்கிறோம், “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” எல்லோரும் எப்போது பாவம் செய்தோம்? எல்லாருக்கும் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட ஒருவன் பாவம் செய்தபோது, எல்லாரும் பாவம் செய்தோம். பவுல் இப்படியும் சொல்லியிருக்கலாம், “ஆதாமுக்குள் நாம் யாவரும் மரிக்கிறோம்” என்று. என்றும் ஜீவனுள்ள மகிமையுள்ள கிறிஸ்து தமக்கான மணவாட்டியைக் கூட்டிச்சேர்த்தபோது நம் எல்லோருடைய நிலையும் இதுவே. ஆம், நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதவறிச் சென்றிருந்தோம். நாம் யாவரும் அவரவருடைய வழிகளில் சென்று கொண்டிருந்தோம். ஆம், நாம் யாவரும் பாவம் செய்து தேவமகிமையற்றவர்களானோம். கடவுளின் மகிமையையும், சிறப்புகளையும், உயர்வையும் வெளிப்படுத்தும்படியாக கடவுளின் சாயலில் நாம் உண்டாக்கப்பட்டோம். எந்த நோக்கத்திற்காக கடவுள் நம்மைப் படைத்தாரோ அந்த நோக்கத்திலிருந்து நாம் விழுந்தோம். இந்த பிரச்சனைகளெல்லாம் எப்போது ஆரம்பமானது? ஆதாம் நம்முடைய பிரதிநிதியாக நின்றபோது, நாம் ஆதாமின் அரையில் இருந்தபோது ஆரம்பமானது. ஆதாம் வீழ்ந்தபோது நாமும் சுயமாகவும், தன்னிச்சையாகவும் வீழ்ந்தோம்.
இவையெல்லாமே எப்போது ஆரம்பமானது என்பதற்கு தாவீது பதிலளித்திருக்கிறார். என் தாய் கர்ப்பந்தரித்தபோது நான் பாவத்திலும் அக்கிரமத்திலும் உருவானேன் என்கிறார் அவர். அந்த இரவு, என் தாயின் கருவறையிலுள்ள முட்டையில் விந்தணு நுழைந்ததின் விளைவாக இந்த உலகத்தில் பிறந்தது, வழி தவறிப்போன ஒரு ஆடு. அப்படிக் கருத்தரிக்கப்பட்டது, மாம்ச சிந்தை கொண்டதும் கடவுளுக்கு எதிரியுமான ஒன்று. அது கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருப்பது. அப்போஸ்தலனாகிய பவுல், உலகத்தின் பாவத்தன்மையை பழைய ஏற்பாட்டின் பகுதிகளைக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துக்காட்டி, முடிவாகச் சொல்லுவதைக் கவனியுங்கள், “மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 3:19). இதுவே மணவாட்டியின் மூலமுதல் தன்மை. அவள் நீதியின்படி பாவத்திற்கும், கண்டனத்திற்கும், மரணத்திற்கும் உரியவள். அவள் கிறிஸ்துவின் மணவாட்டியாக வருமுன், நீதியின்படி அவளுடைய கண்டனத்திற்குரிய நடத்தையினால் பரலோகத்திலிருந்து விலக்கப்பட்டவளாக மட்டும் இருக்கவில்லை, பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருப்பவளாக இருந்தாள்.
ஆ) பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருப்பவள்
கடவுள் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யூதா மற்றும் எருசலேமின் பாவ நிலையைக் குறித்து அறிவிக்கிறபோது, முதலாவது அதிகாரத்தில், “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.” (ஏசாயா 1:6) என்கிறார். எசேக்கியேல் 16வது அதிகாரத்தில், கடவுள் தம்முடைய அழகான மணவாட்டியாக வந்தவளின் ஆரம்பகால நிலையை விவரிக்கிறார். அவர் அவளை கண்டெடுத்தபோது, அவள் புதிதாய்ப் பிறந்த குழந்தை, இன்னும் தொப்புல் கொடி அறுக்கப்படாதவளாகவும், சுத்தமாவதற்கு தண்ணீரில் குளிப்பாட்டப்படாதவளாகவும், உப்பால் சுத்திகரிக்கப்படாதவளாகவும், துணிகளில் சுற்றப்படாதவளாகவும் இருந்தாள் என்பதை நினைவூட்டுகிறார். தீர்க்கதரிசி சொல்லுகிறார், வெளியில் வீசப்பட்டவளாக இருந்தாள் என்று. அதாவது பிறந்தபோது தெருவில் கிடந்தாள். வசனம் 22, அவளுடைய ஆரம்ப கால நிலையை மேலும் விவரிக்கிறது, “நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய்.” போதகர் மார்டின், இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஏனென்றால், நீங்கள் நற்பண்பற்றவர்களாக இருப்பதினாலும், நானும் நற்பண்பற்றவனாக இருப்பதினாலுந்தான் இந்தவகையில் விபரிக்கப்பட்டிருக்கிறோம். ஆதாமின் குமாரரும் குமாரத்திகளுமான நம்முடைய உருக்குலைந்த நிலை கேவலமானதாக இருக்கிறது. மணவாட்டியைப்பற்றி சரியான வகையில் நீங்கள் நினைக்க வேண்டுமானால் அவளுடைய ஆரம்ப கால நிலையிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான், பரலோக மணவாளன் அவளின் நிலையை மாற்றி, அவளுடைய நடத்தையின் சட்டபூர்வமான காரியங்களைச் சரிசெய்து, அவளின் குறைபாடுகளை நிவிர்த்தியாக்கி, அவளை நீதியுள்ள நித்திய மணவாட்டியாக தமக்காக ஏற்படுத்தச் செய்திருக்கிற காரியங்களின் சிறப்புகளை அறிந்துகொள்ள முடியும்.
எபேசியர் நிருபத்தைத் திருப்பிக்கொள்ளுங்கள். அதில் பரலோக மணவாளனின் அன்பையும் அதன் விளைவாக அவரின் செயல்களையும் நாம் பார்க்கிற அதேவேளையில், மணவாட்டியின் உருக்குலைந்த நிலையையும் விபரமாக அங்கு பார்க்க முடிகிறது. அதாவது, நான் எபேசியர் 2:1-3 வசனத்தைக் குறிப்பிடுகிறேன், “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” இதுவே மணவாட்டியின் ஆரம்பகால நிலை. அவளுடைய நடத்தையின்படி அவள் மரணத்திற்கு உரியவள்; உண்மையில் நரகத்திற்கு உரியவள். அதுமட்டுமல்லாமல், அவள் பலவித குறைபாடுகளைக் கொண்டவளாக உருக்குலைந்த நிலையில் இருந்தாள். எனவேதான் நான் அவளுடைய நிலையைக் குறிப்பிட “குறைகள் நீக்கப்பட வேண்டியதும் பரிதாபகரமானதுமான நிலை” என்று சொன்னேன். அதாவது அவளுடைய கண்டனத்திற்குரிய நடத்தையையும் அவளுடைய குறைபாடுகளை விளக்குவதற்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஏற்கனவே நான் சொன்னதுபோல் இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால், பரலோக மணவாளன் தம்மோடு இருக்கும்படியான மணவாட்டியாக சேர்த்துக்கொள்ளும் எவரும் இந்தவிதமான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டுமென்று சொல்லுகிறார். அதாவது, அவர்கள் தங்களுடைய நடத்தையையும், பெருங்குறைபாடுகளையும் வாழ்க்கையில் கருத்தோடு எதிர்நோக்குகிறவர்களாக இருக்க வேண்டும்.
ஆண்டவராகிய இயேசு இந்த உலகில் ஊழியம் செய்தபோது, சொன்னார், “பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்று. மகிமையுள்ள பரலோக மணவாளனான ஆண்டவராகிய இயேசுவே சொல்லியிருக்கிறார், என்னுடைய மணவாட்டியாக இருக்கும்படி நான் சேர்த்துக்கொள்ளும் நபர்கள், இயற்கையாக எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். இன்று காலை ஞாயிறு வேதப்பாட வகுப்பை எடுத்த போதகர் ஜெரமி வோக்கர், பழம்பெரும் வேத வல்லுனரான ஆன்ட்ரூ ஃபுலரின் வாழ்க்கைச் சரீதம் மற்றும் ஊழியத்தைப்பற்றி விளக்கினார். அதில், பாவிகளுக்கான கடவுளின் அழைப்பை சுவிசேஷத்தின் மூலம் அறிவிப்பது மட்டுமே ஒருவனில் விசுவாசத்தை ஆரம்பிக்கும் அதிகாரங்கொண்டது என்ற வேதக்கண்ணோட்டத்தின்படி ஃபுலர் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார் என்றார். பாவிகள் தங்களுடைய பாவத்தின் 10 கிலோ, அல்லது 15 கிலோ, அல்லது 2.5 அவுன்ஸ் என்ற அளவில் உணர்வதினால் விசுவாசம் ஒருபோதும் நிகழாது. சுவிசேஷ அழைப்பின் வாக்குறுதியாக விசுவாசம் இருக்கிறது. விசுவாசம், பாவி தனிப்பட்டவிதத்தில் தான் இருக்கும் நிலையின் உண்மையான தன்மையை அறிந்து உணருவதின் மூலம் வருவது. கடவுளிடம் வந்து நாம் இப்படிச் சொல்ல முடியாது, “கடவுளே, ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை ஏற்றுக்கொள்ளுகிறேன். நான் உம்மிடம் வர வேண்டும் என்று எனக்குத் தெரிகிறதுமட்டுமல்லாமல், என்னுடைய உள்ளுணர்வும் அப்படிச் சொல்லுகிறது” என்று. ஆண்டவரிடம் வருவது என்பது நம்முடைய உண்மையான பாவத் தன்மையை உணர்ந்தவர்களாக, அவருக்கு எதிரியாகவும் பரிசுத்தமற்றவராகவும் இருப்பதை அறிந்து உணர்ந்தவர்களாக வர வேண்டும். நம்முடைய இயற்கைப் பாவத் தன்மை இந்த உலகத்தின் ஆகாய அதிகாரப் பிரபுவாகிய பிசாசின் வழிகளில், அதாவது இப்போது கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வீரியத்துடன் செயல்பட்டு வருகிற பாவ வழிகளின் மீது ஆர்வம் கொள்ளுகிறதாக இருக்கிறது.
இதில் நாம் படிக்க வேண்டிய ஒரு பயன்பாடும் இருக்கிறது. என்னவென்றால், இன்று இரவு இங்கு அமர்ந்திருக்கிற நீங்கள் எல்லாரும், “ஆதாமுக்குள் நாம் மரிக்கிறோம்”, “வழிதவறிப் போன ஆடுகளைப் போல் இருக்கிறோம்”, “அவரவர் தம் தம் வழிகளில் நடக்கிறவர்களாக இருக்கிறோம்”, “மாம்ச சிந்தை தேவனுக்கு எதிராக இருக்கிறது, அது நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படியாமலும் கீழ்ப்படியக் கூடாமலும் இருக்கிறது” என்கிற இந்த வசனங்களை அறிந்து, தனிப்பட்ட விதத்தில் அவற்றை உணர்ந்து சிந்திக்கிறவர்களாக இருக்க வேண்டும். பிரசங்கியார் சொல்லுவதற்கு மேலாக இன்னும் கேடானதாகவே என்னுடைய இருதயம் இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டியதற்கு ஆண்டவரே நன்றி. என்னுடைய பாவக்கடன்களின் குற்றவுணர்வினால் நான் கட்டப்பட்டவனாக இருக்கிறேன். ஆதாமினால் வந்த குற்றவுணர்வு, கடவுளின் நியாயப்பிரமாணத்தை மீறிய என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளினால் வந்த குற்றவுணர்வே என்பதையெல்லாம் உங்கள் இருதயங்களில் சுழல விடுங்கள். நேற்று இரவு போதகர் வில்லியம் ஹியூஸ், பத்துக்கட்டளைகளைப்பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் விவரித்தார். கடவுள் எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறாரோ அதையெல்லாம் நம்முடைய இயற்கைத் தன்மை செய்ய மறுக்கிறது. எதையெல்லாம் கடவுள் செய்யாதே என்று சொல்லுகிறாரோ அதையெல்லாம் செய்வதற்கு நம்முடைய மனம் அலைகிறது. இதுதான் மணவாட்டியின் இயற்கைத் தன்மை; -குறைகள் நீக்கப்பட வேண்டியதும், பரிதாபகரமானதுமான தன்மை.
II. கிருபையினால் மணவாட்டி அழகுபடுத்தப்படுதல்
அடுத்து நாம், இரண்டாவது தலைப்பைப் பார்க்கலாம், “கிருபையினால் மணவாட்டி அழகுபடுத்தப்படுதல்” என்பதே அது. இயற்கையாக மணவாட்டியின் பரிதாபகரமானதும் குறைகள் நீக்கப்பட வேண்டியதுமான நிலையை பார்த்த நாம், இப்போது கிருபையினால் அவளுடைய அழகுபடுத்துதலைப் பார்க்கப் போகிறோம். இதைப் படிக்கிறபோது நம்முடைய இருதயங்கள் கடவுளுக்கு நன்றியை அறிவிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இதில் “கிருபை” என்ற வார்த்தையின் மூலம் நான் குறிப்பிடுவது என்னவென்றால், “தகுதியில்லாதவர்களுக்கான வெகுமதி”. அதாவது கண்டனத்திற்குரிய நடத்தையும் பலவிதமான குறைபாடுகளுடன் அழிந்துகொண்டுமிருக்கிற, நரகத்திற்கு உரியவர்களான ஆண்கள், பெண்கள் மீது காட்டப்படும் கடவுளின் இரக்கத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இது ஆதாமின் குமாரரும் குமாரத்திகளுமான நம்மைக் கிறிஸ்துவின் அழகான மணவாட்டியாக ஆக்குவதற்கான அழகுபடுத்தும் நடவடிக்கைகளில் இருக்கும் கடவுளின் கிருபையுள்ள மனநிலையையே காட்டுகிறது.
மணவாட்டியை அழகுபடுத்துவதிலுள்ள இரண்டு முக்கிய அம்சங்களைக் கவனியுங்கள்.
- மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகள்
- மணவாட்டியை அழகுபடுத்தும் செயல்முறைகள்
1. மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகள்
முதலாவது, மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன்நிபந்தனைகளைப் பார்ப்போம். மணவாட்டியை அழகுபடுத்துவதற்கான முன் நடவடிக்கைகளாக செய்ய வேண்டியது என்ன? பரலோக மணவாளனான கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கண்டனத்திற்குரிய நடத்தைக்கான பிராயச்சித்தப் பலியாக தம்மையே கொடுத்ததைப் பார்க்கிறோம். நித்தியத்தில் உண்டான ஆலோசனையின்போது, கிறிஸ்து தம்முடைய மக்களின் மீதுள்ள அன்பை எவ்வாறு காட்டினார் என்பதல்ல முக்கியம். அது நிச்சயமாக இவ்வுலகத்தைவிடப் பெரிதாக இருந்தபோதும், கடவுள் தம்முடைய எந்தவொரு பண்பையும் நிராகரித்து செயல்படுவதில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். கடவுள் அன்பாக இருக்கிறார். கடவுள் தம்முடைய அன்பை கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதேவேளை கடவுள் நீதியுள்ளவர், பரிசுத்தமுள்ளவர். கடவுள் தம்முடைய அன்பைக் காட்டுவதற்காக தம்முடைய மற்ற எந்தப் பண்புகளையும் சமரசம் செய்துக்கொள்வதில்லை; செய்யவும் மாட்டார். கிறிஸ்துவினுடைய அன்பின் எந்தவொரு அம்சமும் கடவுளுடைய நீதியை இல்லாமல் ஆக்குவதில்லை. இன்று இரவு நாம் பாடிய பாடலின் வரிகள் இரட்சிப்பின் சந்தோஷத்தை எப்படி விவரிக்கிறது கவனியுங்கள் – “கிருபையும் நீதியும் இணைந்து இரக்கத்தை நோக்கிச் செல்லுகிறது” என்கிறது. இதைத்தான் நான் அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஆக, பரலோக மணவாளன், பாவத்தின் காரணமாக நரகத்திற்கு உரியவளும், அழுக்கும் குறைபாடுகளும் கொண்ட மணவாட்டியை தம்முடைய அழகான மணவாட்டியாக அழகுபடுத்துவதற்கு முன்பாக, அவளுடைய பாவத்தின் குற்றவுணர்வு, நித்திய தண்டனைக்கான அவளுடைய நடத்தை ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும். கிறிஸ்து பாவிகளைத் தமக்கேற்ற மணவாட்டியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை துவங்குவதற்கு முன்பாக, அவர்கள் பாவத்தினிமித்தமாக கடவுளின் நியாயத்தீர்ப்பிற்கும் தண்டனைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் சந்திக்க வேண்டியுள்ளது.
எபேசியர் 5வது அதிகாரத்தில் பவுல், கணவர்களுக்கான போதனையை மையமாகச் சொன்னாலும், கிறிஸ்துவில் இருந்துதான் ஆரம்பிக்கிறார். கிறிஸ்துவினுடைய மரணத்தின் மகத்துவங்களை எடுத்துக்காட்டிப் போதிக்கிறார். எபேசியர் 5வது அதிகாரத்தை திருப்பிக்கொள்ளுங்கள், “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25-27). கிறிஸ்து தன் மனைவியாகிய சபைமீது தம்முடைய அன்பை எப்படிக் காட்டினார்? தம்மையே அவளுக்காக கொடுத்ததின் மூலமாக. தம்முடைய மணவாட்டியை “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்ளும்” தம்முடைய அன்பின் நோக்கத்தை நிறைவேற்ற அவர் தம்மையே கொடுக்க வேண்டியிருந்தது. எப்படி? இதற்கு விடைகாண இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களுக்கு நாம் போக வேண்டும், “ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.” (எபேசியர் 5:1-2). பரிதாபகரமான பாவிகளை, பரலோக மணவாளன் தம்முடைய அன்பிற்கு உரியவர்களும் தம்முடன் என்றென்றும் இருப்பதற்குமான மணவாட்டியாக மாற்றுவதற்கு முன்பு கடவுளின் பார்வையில் சில காரியங்களைச் செய்தேயாக வேண்டும். அவர் என்னச் செய்தார்? தம்மை கடவுளுக்கான பலியாக ஒப்புக் கொடுத்தார்.
இன்னொருவிதமாகச் சொல்ல வேண்டுமானால், பரலோக மணவாளன் இந்த உறவில் தம்மை உட்படுத்திக்கொள்ள தம்முடைய உயிரையே கொடுத்தார். இதன் மூலம் கடவுளின் அரசாட்சியில் தம்முடைய மணவாட்டிக்காக குறிக்கப்பட்ட நியாயத்தீர்பை அவர் ஏற்றார். அந்த நியாயத்தீர்ப்பு அவரை முழுமையாகவும் தயவுதாட்சண்யமில்லாத தேவகோபத்திற்கும் உட்படுத்தியது. அந்த நியாயத்தீர்ப்பு அவரை முழுவதுமாக நொறுக்கி மரணத்திற்கு உட்படுத்தியது. அப்போது அவருடைய பெலவீனம், சோர்வு அனைத்தும் அவருடைய கதறுதலின் வார்த்தையாகிய “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்பதில் பார்க்க முடிகிறது. ஆனால் பரத்திலிருந்து அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. வேதத்திலிருந்து இதற்கான பதிலை நாம் தேடிப்பார்த்தால், அது இதுவாகத்தான் இருக்கும், “என் நேச குமாரனே, உம்முடைய மணவாட்டிக்காக உம்முடைய உயிரையே கொடுத்து கீழ்ப்படிவின் உச்சத்தைக் காட்டியிருக்கிற இந்த வேளையில், என்றுமில்லாத வகையில் உம்மை நான் நேசிக்கிறேன். உம்முடைய மணவாட்டியின் நடத்தையின் குற்றங்களும், நரகத்திற்குரியவளான நிலையும் நீக்கப்பட வேண்டுமானால், என் மகனே இவைகளை நீர் அனுபவித்தே ஆக வேண்டும். நித்தியத்தில் நீரும், ஆவியானவரும், நானுமாக சேர்ந்து இதற்கான ஆலோசனை செய்தபோது, இந்தவிதமாகவே திட்டமிட்டோம். இதற்காகவே நீர் உம்மை ஒப்புக்கொடுத்தீர். இதற்காகவே நீர் ஆத்துமாவும் சரீரமும் கொண்ட மனிதனாக மரியாளின் வயிற்றில் உருவானீர். காலம் நிறைவேறியபோது இதற்காகவே நீர் ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாகி, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழானீர்.” ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபிரெயர் 2.14-15) என்று நாம் வாசிக்கவில்லையா? கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கண்டனத்திற்குரிய நடத்தைகளுக்காக தம்மையே பலிகொடுப்பது மணவாட்டியின் அழகுபடுத்துதலின் முன்நிபந்தனையாகும்.
இதைப்பற்றிய வேத சத்தியங்களை பாடலாசிரியர் ஒருவர் சரியாகவும் அழகாகவும் விவரித்திருக்கிறார், “தம் மணவாட்டியைத் தேடி பரலோகத்திலிருந்து வந்தார், அவள் தம்முடைய பரிசுத்த மணவாட்டியாக இருக்கும்படி தம்முடைய இரத்தத்தையே விலைக்கிரயமாகக் கொடுத்தார், அவளின் வாழ்வுக்காக அவர் தம் உயிரையே கொடுத்தார்”. தம்முடைய மணவாட்டியைப் பெறுதற்காக அவர் கொடுத்த விலைக்கிரயம் தேவகுமாரனான அவருடைய தூய இரத்தம். நான் உங்கள் முன் வைக்கிற இந்த வேத சத்தியங்கள், கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் அழகுபடுத்தல் தேவகுமாரனாகிய அவரின் பரிசுத்தமான பாவமற்ற வாழ்க்கையிலும், பிராயச்சித்தப் பலியிலும், பரிந்துரைக்கும் செயலிலும் இணைந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இயேசுவின் இந்த செயல்கள் அவரைப் பரலோக மணவாளனாகக் காட்டுகிறது. கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தின் மூலம் சம்பாதித்த இவையாவும் தன்னுடைய பாவத்தை உணர்ந்து வருந்தி அவரை விசுவாசிக்கிற ஒவ்வொரு விசுவாசிக்கும் உரியது. இப்படி இந்தத் தலைப்பைப்பற்றி இன்னுமதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நாம் மணவாட்டியின் அழகுபடுத்துதலின் செயல்முறையைப் பார்ப்போம்.
2. மணவாட்டியின் அழகுபடுத்துதலின் செயல்முறை
இது என்ன? எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், கிறிஸ்து தம்முடைய மணவாட்டியின் கறைகளையும் குறைபாடுகளையும் எப்படிக் கையாளுகிறார் என்பதைப் பற்றியதாகும். அதாவது கறைகளையும் குறைபாடுகளையும் சுத்தப்படுத்தி நீக்குதலாகும். இதில் மணவாளன் மணவாட்டியின் அசுத்தங்கள் மற்றும் குறைபாடுகளின் உண்மையான நிலையைக் காண்கிறார். எசேக்கியேல் 16லும், எபேசியர் 2:1-4லும், ரோமர் 3:10-18லும் மற்றும் இதுபோன்று பல பகுதிகளிலும் இதைக் காணலாம். மணவாளன் தம்முடைய மணவாட்டியை அழகுபடுத்த விரும்புகிறார். அவளுடைய நடத்தையின் காரணமாக அவள் அடையவேண்டிய நரகம் மற்றும் தண்டனையை நீக்குவதற்கான கோரிக்கைகளை கிறிஸ்து செய்தார். பிறகு அவளை அழகுபடுத்தும் செயல்களில் கவனம் காட்டுகிறார்.
மறுபடியும் நாம் எபேசியர் 5வது அதிகாரத்தைப் பார்க்கலாம், “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” இந்த வசனத்தை முழுமையாக நாம் பார்க்கிறபோது தம்மைத்தாமே அவர் ஒப்புக்கொடுத்ததற்கான மூன்று காரணங்களை நாம் காண்கிறோம். ஏன் அவர் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்? தேவனுக்கு சுகந்த வாசனையான காணிக்கையாக தம்மை ஏன் ஒப்புக்கொடுத்தார்? வசனம் என்ன சொல்லுகிறதென்று பாருங்கள். முதலாவது காரணம், அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்க வேண்டும். இரண்டாவது காரணம், கறைகளோ சுருக்கங்களோ இல்லாத மகிமையுள்ள சபையாக தமக்கு தாமே ஒப்புவிக்க வேண்டும். மூன்றாவது காரணம், பரிசுத்தமும் பிழையற்றதுமாக அதைத் தம்முன் நிறுத்த வேண்டும். ஆகவே, கிறிஸ்துவின் மணவாட்டியைக் குறித்து நாம் சிந்திக்கிறபோது, பரலோக மணவாளன் தன் மணவாட்டிக்காக என்ன செய்திருக்கிறார், செய்துகொண்டிருக்கிறார், செய்யப் போகிறார் என்பதை நாம் கவனிக்க மறக்கக் கூடாது.
(அ) திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறார்
முதலாவதாக, மணவாட்டியைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்குகிறார். இந்த அழகுபடுத்தும் செயலுக்கு துவக்கமும், தொடர்ச்சியும், முடிவும் உண்டு. பரலோக மணவாளன் புதிய வானத்திலும் புதிய பூமியிலும் தம்மோடு என்றென்றும் இருப்பதற்கு ஏற்றவகையில் எப்படி இவைகளைச் செய்திருக்கிறார் என்பதை சுருக்கமாக நாம் பார்ப்போம். முதலாவது, அழகுபடுத்துதலின் துவக்கம். எப்படி அது துவங்குகிறது? மறுபிறப்பு மற்றும் மனமாற்றமாகிய சுத்திகரித்தல் மற்றும் பரிசுத்தமாக்குதலை நிகழ்த்துகிறதின் மூலம். இவ்வாறே அழகுபடுத்துதல் துவங்குகிறது. இந்த அழகுபடுத்துதலுக்காக தெய்வீக அழகு நிலையில் நுழைகிறபோது, இப்படியே கிறிஸ்து துவங்குகிறார். அவர் அவளைப் பரிசுத்தமாக்குகிறார். பரிசுத்தமாக்குதல் என்கிற வார்த்தை எப்போதும் தொடர்ச்சியாக நடக்கும் செயலைக் குறிக்கின்றதாகவே இருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக பாவத்தை விட்டு விலகுதல், பாவத்தை அழித்தல், தொடர்ந்து கிறிஸ்துவைப் போலாகுதலைக் குறிக்கிறது. ஆனால் இந்த பகுதியிலும் வேறு சில பகுதிகளிலும் இந்த வார்த்தை தொடர்ச்சியாக நிகழ்கின்ற ஒன்றைப்பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக, அழகுபடுத்துதலின் ஆரம்ப நிலையை இது சுட்டிக்காட்டுகிறது.
இதற்கான விளக்கத்தை அறிந்துகொள்ள பீட்டர் ஓ’பிரையன் (Peter O’Brien) என்பவர் எபேசியர் நிருபத்திற்கு எழுதிய விளக்கவுரை எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. எபேசியர் நிருபத்தின் ஏதாவது ஒரு பகுதியையோ அல்லது எபேசியர் நிருபத்தை முழுவதுமாகவோ போதிக்கிறவர்களாக இருந்தால், உங்களுடைய உழைப்பைப் பயனுள்ளதாக்கவும் உங்களுடைய சபை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கவும் பீட்டர் ஓ’பிரையனின் விளக்கவுரை உங்களுக்கு உதவும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை பரிசுத்தமாக்குகிறார் என்கிற வாக்கியத்திற்கான விளக்கத்திற்கு அவருடைய முடிவை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். பரிசுத்தமாக்குதல் என்பது பொதுவான பயன்பாட்டிலிருந்து ஒன்றைப் பிரித்தெடுத்தல் என்பதாகும். அதாவது கடவுளின் விசேஷ நோக்கங்களுக்காகப் பிரித்தெடுத்தல். பழைய உடன்படிக்கையின்படி ஒரு சாதாரண பேனாவாக இருந்தாலும், அது கடவுளின் பணிகளுக்காக பிரித்தெடுக்கப்பட்டிருக்குமானால், அது பரிசுத்தமாக்கப்பட்டதாகும். இந்த வகையிலேயே பவுல் இவ்வார்த்தையை இங்கு பயன்படுத்தியிருக்கிறார். கிறிஸ்து சபையை நேசித்து அதற்காக தம்மையே ஒப்புக்கொடுத்து, அதைத் தமக்காகப் பிரித்தெடுத்தார். அதை எவ்வாறு செய்தார்? அவளைச் சுத்தப்படுத்துகிறதின் மூலம். பாவத்தின் ஆளுகையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் நம்மை நீங்கலாக்கி, இனி நமக்காக வாழாமல் நமக்காக மரித்து உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழும்படிச் செய்கிறார். இப்படியே அவர் நம்மைப் பிரித்தெடுக்கிறார். இவ்வசனத்தின்படி, கிறிஸ்து திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் இதைச் செய்து முடித்திருக்கிறார்.
இதை ஞானஸ்நானத்தோடுகூட சிலர் ஒப்பிடுவார்கள். ஆனால் நான் பீட்டர் ஓ’பிரையன் கொடுக்கும் விளக்கத்தையே நம்புகிறேன். அதாவது இந்த வார்த்தைப் பிரயோகத்தை இதன் பின்னணியோடு பார்க்கிறபோது இது தீத்து 3 மற்றும் யோவான் 15:3ல் சொல்லப்பட்டுள்ள போதனைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. கடவுள் அருளும் மறுபிறப்பை அடைகிறபோது நாம் பாவத்தின் சாபத்திலிருந்து சுத்திகரிக்கப்படுகிறோம். தீத்து 3:5-7ல் பவுல் சொல்லுகிறார், “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் தமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.” இத்தோடு யோவானில் சொல்லப்பட்டுள்ள “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவான் 15:3) என்கிற வசனத்தையும் சேர்த்துப் பார்க்கிறபோது, “நடைபெறுகிற” செயல்தான் இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதையே முனைவர் மரே (Professor Murray), “நிச்சயமான பரிசுத்தமாக்குதல்” (Definitive Sanctification) என்கிறார்.
உதாரணமாக, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தைத் துவங்குகிறபோது சொல்லியவைகளைக் கவனிப்போம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டு நிருபங்களிலிருந்து கொரிந்து சபை மக்கள் ஆவிக்குரியவிதத்தில் முதிர்ச்சியானவர்கள் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். முதல் அதிகாரம் முதல் வசனத்தில், “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது” என்று இருக்கிறது. அவர்கள் மாய்மாலக்காரர்களோ, கடவுளுக்கு எதிராக, வேண்டுமென்றே நடக்கிறவர்களோ அல்ல. சிறந்த சபைகளிலும்கூட மறுப்பிறப்படையாதவர்கள் இருந்துவிடக்கூடும் என்பது நமக்குத் தெரியும். அதற்குக் காரணம் அச்சபைகள் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் முறைகளில் கவனமில்லாமல் இருந்திருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. பவுல் கொரிந்தியர்களைப் பார்த்துச் சொன்னவைகளைக் கவனியுங்கள், “தேவ வசனம் உங்களிடத்தில் வந்தபோது மனுஷஞானத்திற்குரியதாய் வராமல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வந்தது. அநேகர் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமுள்ளவர்களுமானீர்கள்” என்கிறார். பவுல் அவர்களை “பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்” என்கிறார். அதாவது கடவுளுக்கும் அவருடைய பணிகளுக்குமாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். இதன் அடிப்படையிலேயே பவுல் கொரிந்து சபையாருக்கு அநேக ஒழுக்கம் மற்றும் நடைமுறைக்கான போதனைகளைத் தருகிறார். அதன்பிறகுதான் அவர்களுடைய பாவங்களைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியே நீங்கள் தொடருவீர்களானால் நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்கிறார். முன்பு நீங்கள் அப்படியிருந்தீர்கள், ஆனால் இப்போது நீங்கள் கழுவப்பட்டிருக்கிறீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள், நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் சொல்லவில்லை, நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றே சொல்லுகிறார்.
இந்தப் பரிசுத்தமாக்கப்படுதல் அதாவது பிரித்தெடுக்கப்படுதல் மனமாற்றத்தின்போது நிகழ்வதாகும். மறுபிறப்பு, பாவத்தின் வல்லமையிலிருந்து இயேசு கிறிஸ்து மூலமாக ஜீவனுள்ள தேவனிடத்தில் திரும்பி மனந்திரும்புதலுக்கும் விசுவாசத்திற்கும் நேராக நம்மை நடத்துமானால், நம்மில் இந்த அழகுபடுத்துதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனலாம். இதன் மூலம் கடவுள் நம்மில் புதிய இருதயத்தை ஏற்படுத்தி, நம்முடைய உள்ளான மனது கடவுளின் வெளிப்படுத்தப்பட்டுள்ள கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி அவைகளை அதில் எழுதுகிறார். இது நம்முடைய இருதயம் சொல்லுவதைக் கேட்டு நடப்பதல்ல, கடவுளுடைய கட்டளைகளின்படி நடப்பதாகும். அந்தக் கட்டளைகளின்படி நடப்பதை விரும்புகிற இருதயம், அந்தக் கட்டளைகளின்படி நடக்காதபோது வருந்துகிற இருதயமாகவும் இருக்கிறது. இதுவே பரிசுத்தமாக்கப்பட்ட இருதயம். பாவத்தின் ஆளுகையிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் கடவுளுக்கும் அவருடைய பணிகளுக்குமாக பிரித்தெடுக்கப்பட்ட இருதயம். இதை விளக்க இன்னும் அநேக வேதப்பகுதிகளைக் குறிப்பிட முடியும், 1 பேதுரு 1:22-23, எசேக்கியேல் 36:25-27 மற்றும் பல. ஆனால் அவைகளையெல்லாம் விளக்குவதற்கு இப்போது நேரம் போதாது. எனவே அழகுபடுத்துதலில் அடுத்த பரிமாணத்திற்குப் போகலாம்.
அழகுபடுத்துதல் ஆரம்பமாகிவிட்டது. எப்படி? மறுபிறப்பு மற்றும் மனமாற்றத்தின் மூலம். இந்த அழகுபடுத்துதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக அது தொடருகிறதாகவும் இருக்கும். மணவாட்டியை அழகுபடுத்துதலில் ஆரம்பப்படியோடு கிறிஸ்து நின்றுவிடவில்லை. அதைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு போகவும் பூரணப்படுத்தவும் உறுதிப்பூண்டார். எபேசியர் 5வது அதிகாரத்தின் மத்தியிலுள்ள இந்த சில வசனங்களை விளக்கப்படுத்துவதிலுள்ள பிரச்சனை என்னவென்றால், இங்கு பவுல், அழகுபடுத்துதலின் ஆரம்பமாக திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்தலைச் சொன்னவுடனேயே அதன் முழுநிறைவைப்பற்றியும் சொல்லுகிறார். மறுபடியுமாக வசனத்தை கவனியுங்கள், எபேசியர் 5:26-27, “தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” இது அழகுபடுத்துதலின் முழுநிறைவைக் குறிப்பதாகும். இங்கே அழகுபடுத்துதலின் தொடர்ச்சியை அவர் குறிப்பிடவில்லை. அடுத்த சில வசனங்களுக்குப் பிறகு நாம் பார்த்தால், வசனம் 29ல், “தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்” என்று இருக்கிறது. நாம் அவருடைய சரீரத்தின் அங்கங்களாக இருப்பதினால் கிறிஸ்து சுத்திகரிக்கப்பட்டதும் பரிசுத்தமாக்கப்பட்டதுமான தம்முடைய மணவாட்டியை அவர் தொடர்ந்து போஷித்துக் காப்பாற்றுகிறவராகவும் இருக்கிறார். தம்முடைய மணவாட்டி முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போஷித்து நடத்துகிறார். இதை அவருடைய அன்பின்படியும், பொறுமையின்படியும், மனதுருக்கத்தின்படியும் செய்கிறார். வேதத்தின் இதர பகுதிகளிலும் இந்த நிருபத்தின் ஏனைய பகுதிகளிலும் கிறிஸ்துவின் இந்த எதிர்பார்ப்பை அடிக்கடி பார்க்கலாம் – “தரித்துக்கொள்”, “களைந்துபோடு”, “ஆவியில் நட”, “அன்பில் நட” என்ற இவ்வார்த்தைகள் யாவும் அழகுபடுத்துதலின் தொடர்ச்சியை நமக்குக் காட்டுகின்றன. வேறுவிதத்தில் சொல்வதானால், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நீங்கள் மெய்யான விசுவாசியாக இருந்தால் இன்று நீங்கள் ஒரு அழகு நிலையத்திற்கு (Beauty parlour) வருகை தந்திருக்கிறீர்கள். ஏனென்றால், கிறிஸ்து உங்களை நேசித்து, உங்களுக்காக தம்மையே ஒப்புக்கொடுத்து, திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கினார். தொடர்ந்து அவர் உங்களைப் போஷிக்கிறார், காப்பாற்றுகிறார். நீங்கள் மென்மேலும் அழகாக இருக்கும்படி பிதாவினிடத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலமாக அவரே நேரடியாக உங்களை நடத்துகிறதுமல்லாமல், தொடர்ச்சியான தம்முடைய பரிந்துரைக்கும் ஜெபத்தையும் உங்களுக்காக செய்து வருகிறார்.
இந்த அழகுபடுத்துதலில் இரண்டு அடிப்படையான காரியங்கள் இருக்கின்றன. அவைகளை தூய்மைவாதிகளும் (Puritans) 1689 விசுவாச அறிக்கையும் அதிகமாக நமக்குத் தெரிவிக்கிறது. அவை, பாவத்தை அழிப்பதில் அதிக ஆர்வமும், கிறிஸ்துவைப் போலாவதில் முன்னேற்றமுமாகும். இப்படியே அழகுபடுத்துதல் நம்மில் தொடருகிறது. அது நம்மில் தொடராதிருந்தால், அது நம்மில் ஆரம்பமாகவேயில்லை என்றே அர்த்தம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார்” என்கிற பவுலின் இந்த வார்த்தைகளை நான் உறுதியாக நம்புகிறேன். இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கிற நீங்கள், கிறிஸ்துவின் மணவாட்டி என்று உங்களைப்பற்றிய வேதப்பூர்வமான உறுதியைக் கொண்டிருப்பீர்களானால் ஒரு நாள் நிச்சயமாக நாம் கிறிஸ்துவின் மகிமையுள்ள மணவாட்டியாக எல்லாவகையிலும் இருப்போம் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
இதைக் குறித்து கர்னால் (Gurnall), “எவனொருவனும் தான் கிறிஸ்துவினுடையவன் என்பதை அவனுடைய பரிசுத்த வாழ்க்கையின் மூலம் காட்டாவிட்டால் தான் ஆவியினால் மறுப்பிறப்படைந்திருக்கிறேன் என்று சொல்லாதிருப்பானாக” என்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் நிச்சயமாக இதை நாம் வெளிப்படுத்துவோம். ரோமர் 8:13 சொல்லுகிறது, “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” “பாவத்தை அழித்தல்”, “வலது கையைத் தரித்துப் போடுதல்”, “வலது கண்ணை பிடுங்கிப் போடுதல்” என்று நம்மில் தொடர்ந்திருக்கும் பாவத்திற்கு (Remaining sin) எதிராக எல்லாவகையிலும் போராடுகிறவர்களாக நாம் இருக்க வேண்டும். நம்மைப் பாவம் ஆளாதிருந்தாலும், நம்மில் பாவம் தொடர்ந்திருக்கிறது. ஆகவே நாம் அதிகமாக ஆவியில் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் ஆவியானவர் நமக்காக நம்முடைய மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதில்லை. ஆவியினால் மாம்சத்தின் செய்கைகளை நாம் அழித்தால் மட்டுமே பிழைப்போம்.
அடுத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை, அதாவது கிறிஸ்துவை போலாகுதலில் முன்னேறுதல். இதற்கான வேதப்பகுதி, 2 கொரிந்தியர் 3:18, இங்கு பவுல் பழைய, புதிய உடன்படிக்கைகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார். இங்கு புதிய உடன்படிக்கையின் சிறப்பான ஆசீர்வாதத்தை நாம் காணலாம், “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.” இது கட்டளை வாக்கியமல்ல. இது ஒரு நிகழ்வைக் குறிக்கிற வாக்கியம். ஒரு சாயலிலிருந்து இன்னொன்றுக்கு மாறுகிறதாகும். இது ஆவியாயிருக்கிற கர்த்தரால் நிகழ்வது. ஆகவே இது தவறுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. பூரணமான மணவாட்டியைப் பெறுவதற்காக கிறிஸ்து மரித்திருப்பதால், அதனோடு தொடர்புடைய அனைத்தையும் அவர் செய்கிறார். அதாவது மறுபிறப்பு மற்றும் மனமாற்றத்தின் மூலம் தொடங்கிய அவர், பாவத்தை அழித்தல் மற்றும் கிறிஸ்துவைப் போலாகுதலிலும் தொடரும்படிச் செய்கிறார். ஆகவே இவைகள் நம்மில் தொடராமல் நாம் கிறிஸ்துவின் மணவாட்டி என்று சொல்லிக்கொள்ளுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது நம் அனைவரையும் உள்ளடக்கியது. பவுல் சொல்லுவதை கவனியுங்கள், “நாமெல்லாரும்”, அப்போஸ்தலரும் தேவனுடைய ஊழியர்களும் மட்டும் என்று குறிப்பிடவில்லை.
அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துவைப் போலாகுதல் என்பது நம்முடைய தனித்தன்மையோடு தொடர்புடையதல்ல. மாறாக 1 கொரிந்தியர் 13ல் சொல்லப்பட்டுள்ளபடி அதிகமதிகமாக மாறுவதாகும். “அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” இவைகளில் அதிகமதிகமாக வளர்ந்து இதன் உண்மைத் தன்மையைக் கொண்டிருப்பதாகும். இவைகள் இயேசு கிறிஸ்துவின் தன்மையை வெளிப்படுத்துவதாகும். அதேபோல் கலாத்தியர் 5:22-23 வசனங்களிலுள்ளவைகளையும் கொண்டதாகும், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” மறுபடியும் கவனியுங்கள், அன்பில்லாமல் வேதத்தில் எதுவும் இல்லை. கிறிஸ்து நம்மில் தம்முடைய அழகுபடுத்தும் செயலைச் செய்வாரானால், நம்மில் இந்தவிதமான கனிகள் அதிகமதிகமாக வெளிப்படும். கடவுளின் கிருபையால் நாம் தொடர்ந்து கிறிஸ்துவைப் போன்ற சாயலில் வளருகிறவர்களாக இருப்போம்.
(ஆ) அழகுபடுத்துதலின் முழுநிறைவும் மணவாட்டியின் திருமணநாளில் அது வெளிப்படுத்தப்படுதலும்
இப்போது நாம் கிறிஸ்துவின் அழகுபடுத்துதலின் முழுநிறைவைக் குறித்துப் பார்க்க இருக்கிறோம். மணவாட்டியினுடைய அழகின் முழுநிறைவு அவளின் மகிமைப்படுத்துதலில் இருக்கிறது. ரோமர் 8:30ல் வாசிக்கிறோம், “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று.
முழுநிறைவடையும் அழகில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. அவைகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்? நாம் நீதிமானாக்கப்பட்டிருந்தால், நம்முடைய கண்டனத்திற்குரிய நடத்தையின் கடன்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற யாதொருவன் மீதும் எந்தவித கண்டமும் இல்லை. கிறிஸ்துவின் மணவாட்டியாயிருக்கிற ஒவ்வொருவரும் முற்றிலுமாக மகிமையான ஆவியாயிருக்கிறார்கள். நம்மில் மகிமைப்படுதலுக்கான வேலை தொடங்கப்பட்டுள்ளது. அது தொடருகிறதாகவும் இருக்கிறது. நம்முடைய கடைசி மூச்சு உள்ளவரை, பாவத்தின் கடைசித் துளிவரை முழுமையாக நீங்கும்படி மகிமைப்படுதலுக்கான காரியங்கள் தொடர்ந்து நம்மில் நிகழ்கிறது. பிறகு நாம் பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளோடு இருப்போம்.
மணவாட்டியினுடைய அழகின் முழுநிறைவேற்றம் நம்மில் பெரும்பாலானோரில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதலாவதாக, பாவத்தின் எச்சங்கள் முழுமையாக நீங்கும்படி நம்முடைய ஆவிகள் முற்றிலும் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுதல். இரண்டாவது, நாம் கடவுளின் பிரசன்னத்தை அடைந்ததும் நம்முடைய ஆவிகள் பரிசுத்த ஆவியின் முழுமையான செயலின்படி கிறிஸ்துவைப் போலாவதற்கான கிருபைகளின் அனைத்தையும் பெற்று பாவமற்ற பூரண நிலையை அடைதல். நம்முடைய காத்திருப்பு, நீடிய பொறுமை, சாந்தம் மற்றும் பரிசுத்தமாவதற்காக நாம் செய்த பல செயல்களின் மூலம் இதை நாம் அடைவதில்லை. பூரணராக்கப்பட்ட நீதிமான்களின் ஆவிகளோடு இணைக்கப்படுகிறபோதே இதை நாம் அடைகிறோம்.
(1) முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட ஆவி
முழுநிறைவான அழகிலுள்ள இரண்டு கூறுகளில், முதலாவது, முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட ஆவி. நம்மில் பெரும்பாலானோர் இதை மரணத்தின் மூலம் அடைவோம். மணவாளன் வருகிறவரை உயிரோடிருக்கிற மணவாட்டிகள் யாவரும் இதை இரண்டாம் கூறாகிய முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தோடு இணைந்துகொள்ளுகிற போது அடைவார்கள். கிறிஸ்துவின் மணவாட்டியாகிய ஒவ்வொருவரும் இதை அடைவார்கள். பிலிப்பியர் 3:20-21 வசனங்களில், பவுல் சொல்லுகிறார், “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” உயர்த்தப்பட்ட நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து மறுபடியுமாக வருகிறபோது அவர் இந்த அற்புதமான காரியங்களைச் செய்வார். இதை விவரமாக 1 கொரிந்தியர் 15லும் வாசிக்கலாம்.
(2) முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரம்
நம்முடைய முழுநிறைவடைகிற அழகிலுள்ள இரண்டாம் கூறு,- முற்றிலும் மகிமைப்படுத்தப்பட்ட சரீரமாகும். நம்முடைய கர்த்தர் உயிர்த்தெழுந்தபோது இருந்த சரீரத்தைப்போல நம்முடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரமும் இருக்கும் என்று சொல்லி நமக்குத் தரப்பட இருக்கிற மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தின் மேன்மைகளைக் கட்டுப்படுத்துவது சரியல்ல என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால், அவர் பரலோகத்திற்குப்போனபோது அவருடைய உயிர்த்தெழுந்த சரீரத்தில் மேலும் என்னவெல்லாம் சேர்க்கப்பட்டதோ என்று நாம் அறியோம். அவர் உயிர்த்தெழுந்தபோது இருந்த சரீரமே சிறப்பானதாக இருந்தது. அதாவது, பூட்டப்பட்டிருந்த கதவைத் திறக்காமலேயே அவரால் உள்ளே நுழைய முடிந்தது. ஒரு இடத்தில் அவர் தம் சீடர்களோடு உணவருந்திக் கொண்டிருந்தவர், அடுத்த கனம் அவர் எருசலேமில் இருந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்த வசனப்பகுதி, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் என்கிறது. உலகத்தோற்றத்திற்கு முன்பு பிதாவோடு அவருக்கு இருந்த மகிமைக்கு ஒப்பாக என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அது முற்றிலும் அழகுபடுத்தப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டதுமான ஆவியாக, பூரணப் பரிசுத்தத்தோடும், பூரணக் கீழ்ப்படிவோடும், கடவுளைப் பற்றிய எண்ணங்களை அதிகமாக கொண்டிருந்து, நூற்றுக்கு நூறு சதவீதம் அவருக்குக் கீழ்ப்படிகிற ஆவியையுடைய சரீரம். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது, அன்பான சகோதரரே, நம்முடைய கதறலெல்லாம், ஆண்டவராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும் என்பதாகவே இருக்கும்.
III. முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பு
இதன் இரண்டு கூறுகளை நாம் பார்த்தோம். மறுபடியுமாக எபேசியர் 5 ஆம் அதிகாரத்திற்கு வருவோம். முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பை பாருங்கள், “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” நன்றாக கவனியுங்கள், “மகிமையுள்ள சபையாக அதை தமக்குத் தாமே தருகிறார்.” ஒரு விளக்கவுரையாளர் சொல்லுகிறார், அவர் தம்முடைய மணவாட்டியைப் பரிசுத்தத்தில் மிகச்சிறப்பாக இருக்கச் செய்வார் என்பதே இப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்று. இதைக் குறித்து நான் அதிகமாக தியானித்தபோது, நான் கர்த்தரிடம், “ஆண்டவரே, இந்த வாக்கியத்தோடு என்னால் போராட முடியவில்லை, உம்முடைய சபையை நீரே உமக்கு எப்படி மகிமையுள்ளதாக தருவீர்” என்றேன். நம்முடைய திருமணங்களில், அப்பாவோ, மாமாவோ, அல்லது நண்பரோ மணவாட்டியை மணவாளனுக்குத் தருவார்கள். ஆனால் இங்கு மணவாளனே தனக்கு மணவாட்டியைத் தருகிறார். அதை மகிமையுள்ளதாகவும் கடவுளின் மகிமையைக் கொண்ட முழுமையான பிரகாசமுள்ளதாகவும் தருகிறார். இந்த மகிமை இப்போது மணவாளனில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அப்போது, அவர் தம்முடைய மணவாட்டியைப் பார்க்கிறபோது, அவளில் ஆதாமின் வழித்தோன்றலிடத்தில் காணப்படுகிற எந்தவிதமான சோர்வும் முகவாடலும் இருக்காது. அப்போது அவர் நம்மைக் குறித்து, “இதோ என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமும்” என்றும் “இவளைப் பாருங்கள், இவள் முழுவதுமாக என்னுடைய தன்மைகளைப் பிரதிபலிக்கிறாள். இவள் பூரணமாக என்னுடைய மகிமைப்படுத்தப்பட்ட சரீரத்தைப் பிரதிபலிக்கிறாள்” என்றும் சொல்லுவார். நம்மை அவர் தமக்குத் தாமே தருவதினால் நம்மை கட்டி அணைத்துக்கொள்ளுவார். இதை அவர் எப்படிச் செய்யப் போகிறார் என்று அறிய இரவில் என் படுக்கையில் படுத்துக்கொண்டு என் மூளையை கசக்கியும் அதை அறிய முடியவில்லை. ஒன்று மட்டும் தெரியும், அவர் நிச்சயமாக அப்படிச் செய்யப்போகிறார் என்று. ஏனென்றால், இது நடைபெறுவதற்காகவே அவர் தம்மைத்தாமே மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். அவர் சிலுவையில் தொங்கியதின் மூலம் தம்முடைய மணவாட்டிக்கான விலைக்கிரயத்தைச் செலுத்தி, அவள்மீதிருந்த சட்டபூர்வமான கண்டனத்திற்குரிய நடத்தையின் கடன்பாடுகளை நீக்கி, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் தந்தார். முழுநிறைவான அழகின் சுருக்கக் குறிப்பின்படி “அவள் மகிமையில் மணவாளனுக்குக் கொடுக்கப்படுவாள்.”
இதைக்குறித்து விளக்கும் பவுல், சுருக்கக் குறிப்பைத் தருவதோடு திருப்தியடையவில்லை. அவர் தரும் முழுநிறைவான அழகின் விரிவான குறிப்பையும் தருகிறார். அதைக் கவனியுங்கள், “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல்”. இவைகள் எதிர்மறையானவைகள். கறைகள், சுருக்கங்கள், மற்றும் ஏதேனும் இருந்தால் அவற்றையும் இங்கு சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். அவளுடைய ஆவியில் எந்தக் கறையும் இல்லாமல், அவளுடைய சரீரத்தில் எந்தக் கறையும் இல்லாமல், முற்றுமுடிய எல்லாப் பிழைகளும் நீக்கப்பட்டவளாக இருக்கும்படிச் செய்கிறார். அவளுடைய வயதையோ, பெலவீனத்தையோ காட்டும் எந்தச் சுருக்கங்களாக (திரை) இருந்தாலும் அவையாவும் என்றென்றைக்குமாக நீக்கப்பட்டு, கறைகளோ, சுருக்கங்களோ இல்லாமல் நித்தியத்திற்குமாக இருப்பாள். அதுமட்டுமல்லாமல், அவள் பரிசுத்தமும் பிழையற்றவளுமாக இருப்பாள். இதே வார்த்தைப் பிரயோகம், எபேசியர் 1:4லும் இருப்பதைக் கவனியுங்கள், “தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே”. இதற்காகவே திரித்துவ தேவன் நம்முடைய இரட்சிப்பிற்கான திட்டத்தை நித்தியத்தில் ஏற்படுத்தினார்கள். மணவாளன் தம்முடைய மணவாட்டியை பரிசுத்தமும் பிழையற்றதுமாகக் கொடுக்கிறபோது அந்தத் திட்டத்தின் மெய் வடிவத்தைக் காண முடிகிறது.
இதைக் குறித்து ஆழமாக நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் மனதில் ஒரு கற்பனை உருவானது. ஒருவேளை இப்போது நாம் கிறிஸ்துவால் கிறிஸ்துவுக்கு கொடுக்கப்படப்போகிற நேரமாக வைத்துக் கொள்ளுவோம். நம் ஆண்டவர் பிதாவைப் பார்த்து இப்படிச் சொல்லுவார், “பிதாவே, கடைசியாக ஒரு முறை என் மணவாட்டியை நான் சோதனையிட்டுப் பார்க்க வேண்டும்” என்று சொல்லி, “காபிரியேல் இங்கே வா” என்று அழைப்பார்; அதாவது தேவதூதனான காபிரியேல். பிறகு “காபிரியேல் ஒரு சக்திவாய்ந்த பூதக்கண்ணாடியைக் கொண்டு வா” என்பார். அதன்பிறகு என்னுடைய தோல் மருத்துவ நிபுணர் ஒவ்வொரு வருடமும் செய்வதுபோல செய்யச் சொல்வார். அவர் ஒரு பெரிய பூதக்கண்ணாடியை எடுத்து, என்னுடைய சரீரம் முழுவதையும் சோதித்துப் பார்ப்பார். தோலில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுகிறதா, அல்லது சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என்று பார்ப்பார். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை சோதனையிடுவார். அப்படி ஏதேனும் காணப்பட்டால் அதைச் சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவார். நான் குறிப்பிட விரும்புவது, மாசு, கறை ஏதேனும் இருக்கிறதா என்று அவர் சோதித்துப் பார்ப்பார் என்பதைத்தான். காபிரியேல் மணவாட்டியின் உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால்வரை சோதனை செய்தபிறகு, ஆண்டவரிடம் வந்து, “சர்வவல்லவரான ஆண்டவரே உம்முடைய மணவாட்டியில் எந்தவொரு கறையோ சுருக்கங்களோ அல்லது வித்தியாசமான எதுவும் இல்லை. முற்றுமுடிய முழுமையாக பூரணமானவளாக இருக்கிறாள்” என்பார். பிறகு ஆண்டவர் தம்முடைய மணவாட்டியைத் தம்மோடு என்றென்றும் இருக்கும்படி தமக்கென்று கட்டி அணைத்துக்கொள்ளுவார். அன்பானவர்களே, நாம் தியானிப்பதற்கு எவ்வளவு அருமையான போதனை இது. மணவாட்டியின் அழகு முழுநிறைவை அடைந்திருக்கிறது, 1 யோவான் 3ன்படி, திருமண நாளில் இது மனிதர்களாகிய அனைவருக்கும் வெளிப்படுத்திக் காட்டப்படவிருக்கிறது. “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.”
தேவதூதர்கள் மத்தியில் இது எத்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகிறது தெரியுமா? திரித்துவ தேவனுடைய திட்டத்தின்படி எல்லாம் நடந்து, மீட்பின் நோக்கம் நிறைவேறுவதைக் காணும்போது, கேரூபீன்களுக்கும் சேராபீன்களுக்கும் இது எவ்வளவு வியப்பைத் தரப்போகிறது தெரியுமா? வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் யோவான் அன்று நடக்கப்போகிற சிலவற்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு பாடப்படப்போகிற அற்புதமான ஸ்தோத்திரப் பாடல்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
பயன்பாடு
இந்தப் பிரசங்கத்தை முடிக்கும் வண்ணமாக நான் எதைச் சொல்லப் போகிறேன். இப்போது இதை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லுவது சரியாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. மாறாக, சில பயன்பாடுகளை நான் சொல்லத்தான் வேண்டும். அன்பான பிரசங்கிக்கும் நண்பர்களே, பிரசங்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறபோது இவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக எப்போதும் வைத்திருங்கள். நீங்கள் ஊழியம் செய்யும் மக்கள், கரையற்ற நிலை, சுருக்கமற்ற நிலை என்பதற்கு வெகுதூரத்திலுள்ளவர்களாக இப்போது இருக்கலாம். அநேக கறைகளும், அநேக சுருக்கங்களும், அநேக தழும்புகளும், இன்னும் அநேகமாக என்னென்னவோ அவர்களில் இருக்கலாம். கிறிஸ்துவின் ஆயுதமாக இருக்க நீங்கள் உங்களை ஒப்புவித்திருக்கிறீர்கள். இவர்களைப் பெறும்படிதான் கிறிஸ்து மரித்தார். ஒரு நாள் இவர்களில்தான் தம்முடைய மகிமையை வெளிப்படுத்த போகிறார். விடாமல் முன்னேறுங்கள், தொடர்ந்து ஜெபியுங்கள், தொடர்ந்து பிரசங்கியுங்கள், தொடர்ந்து ஆண்டவர்மீது விசுவாசமாயிருங்கள். புதிய சுருக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். ஆசீர்வாதத்திற்காக வேறு புதிய வழிகளைத் தேடாதீர்கள். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியை பூரணமானவளாகச் செய்வதற்கு தம்முடைய பிரத்தியேக வழியையே கையாளுகிறார். அவருடைய வழிமுறைகளையே பின்தொடருங்கள், அவருடைய கிருபையிலேயே உங்கள் நம்பிக்கை இருக்கட்டும். நீங்கள் ஊக்கமிழந்து ஆண்டவரே, இவைகளை நம்புவதற்கு எனக்கு கடினமாக இருக்கிறது, என்னிலேயே இதைப் பார்க்க முடியாதிருக்கிறதே என்று சொல்லலாம். அதாவது, நீங்கள் உங்களுடைய சொந்த பாவங்களில் போராடிக்கொண்டிருந்து, அதில் கொஞ்சம் முன்னேற்றம் கண்டு, சில மாதங்களுக்கு அதில் தொடர்ந்திருந்து, “ஓ, நான் இதில் முன்னேறியிருக்கிறேன்” என்று நீங்கள் சொல்லிய கொஞ்சக் காலத்திற்குள்ளாக உங்களுடைய பெலவீனத்தினால் மறுபடியுமாக நீங்கள் விழுந்துவிட்டால், ஆண்டவரே எப்படி இது நடந்தது, என்மீது நானே இப்படிச் சேற்றை வாரியிறைத்துக் கொண்டேனே, இது என்னில் தொடர்ந்து இருக்கிறதே என்று நீங்கள் புலம்புவீர்களானால், நான் சொல்லுவதை சற்று கவனியுங்கள், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
உங்களுடைய உழைப்பு உங்களுடைய வேலை ஒருபோதும் வீணாகப் போகாது என்ற ஊக்கத்தை உங்களுக்குக் கொடுக்கிற நாளாக இந்நாளை வைத்துக்கொள்ளுங்கள். நமக்காக வைத்திருக்கிற அந்த மகிமையுள்ள உயிர்த்தெழுதலின் சரீரத்தைப்பற்றிய போதனையை நினைவில் வைத்திருங்கள். உறுதியாக முன்னேறுங்கள், கிறிஸ்துவின் செயலின் மீதுள்ள நம்பிக்கையில் பெருகுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான உங்களுடைய உழைப்பு ஒருநாளும் வீண்போகாது. நீங்கள் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறபோது, அவரிலேயே உங்கள் நம்பிக்கையை வையுங்கள். அவருடைய மகிமையையே தேடுங்கள். பாவக் கடன்களைச் சுமந்துதிரிகிற பெரும் கூட்டத்தினரை கிறிஸ்துவிடம் அழைப்பதற்கான அவருடைய வாயாக நீங்கள் இருக்கிறீர்கள். அவர்களுடைய குறைபாடுகள் மூடப்படும்படி அவர்களை கிறிஸ்துவிடம் அழைக்கும் அவருடைய வாயாக நீங்கள் இருக்கிறீர்கள். “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும்” என்கிற இயேசுவின் வார்த்தையை எப்படிச் செய்யப் போகிறீர்கள்? பிரசங்கிகளாகிய உங்களுடைய வாயைப் பயன்படுத்தி உண்மையோடு வேதபூர்வமான சுவிசேஷத்தை பிரசங்கிப்பதின் மூலமாகத்தான் அதைச் செய்யப்போகிறீர்கள். அவர் அவர்களை அழைத்து, திருவசனமாகிய தண்ணீர் முழுக்கினால் பரிசுத்தமாக்குவாரானால், அவர்கள் தொடர்ந்து அழகுபடுத்தப்படும்படியான காரியங்களையும் அவர் செய்கிறவராக இருக்கிறார். நீங்கள் வேத வசனங்களைப் பிரசங்கித்தபிறகு, கடவுளுடைய ஆசீர்வாதத்திற்காக ஜெபியுங்கள். அப்போது அதன் பலனை சபை மக்களின் வாழ்க்கையில் பார்க்க முடியும். கிறிஸ்து தம்முடைய அழகு நிலையத்தில் தம்முடைய வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவ்வேலை முடிகிறபோது அதன் முழுநிறைவைக் காண்பீர்கள். அதாவது “கர்த்தரோடு என்றென்றும் இருப்பது”, “கர்த்தரைப் போல் இருப்பது” ஆகிய இவை இரண்டையும் நாம் அடைவோம். மீட்கப்பட்ட ஒருவனுக்கு இதைவிட வேறென்ன விருப்பமாக இருக்க முடியும். ஆண்டவராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும்!