முழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . . (பாகம் 2)

இது கடந்த இதழின் தொடர்ச்சி. ரொப் வென்சூராவை பொது ஆசிரியராகக் கொண்டு வெளிவந்திருக்கும் ‘ஐம்போதனைகளுக்கு அப்பால்’ எனும் ஆங்கில நூலின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அதன் உள்ளடக்கங்களை விளக்கியும் விமர்சித்தும் எழுதப்பட்டிருக்கும் ஆக்கம். வரப்போகும் இதழ்களில் இதன் தொடர்ச்சியை வாசிக்கலாம். – ஆசிரியர்.

2. வரையறுக்கப்பட்ட தத்துவம் அல்லது நெறிப்படுத்தப்பட்ட தத்துவம் (Regulative Principle) – சாம் வோல்டிரன்

வரையறுக்கப்பட்ட தத்துவத்தை சாம் வோல்டிரன் ஆறு தலைப்புகளில் இந்நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

  1. வரலாற்று அர்த்தம்
  2. திருச்சபையின் அடிப்படையிலான விளக்கம்
  3. வேத ஆதாரம்
  4. அதன் பல்வேறுபட்ட செயல்பாடுகள்
  5. அதன் அவசியமான கட்டுப்பாடு
  6. தற்கால எதிர்ப்புகள்

முதலாவது தலைப்பின் மூலம் வோல்டிரன் வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கான விளக்கத்தைத் தந்து அதை நியாயப்படுத்துகிறார். இறையியல் வரலாற்றில் உருவான இறையியல் வார்த்தைகள் அவசியமானவை என்றும், அந்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவற்றின் வரலாற்று அர்த்தம்  தெரியாமல் இருந்துவருவது தப்பானதும், மற்றவர்களைத் தவறாக வழிநடத்துவதுமாகும் என்று வோல்டிரன் விளக்குகிறார். திரித்துவம் என்ற பதத்தைப் பயன்படுத்திக் கொண்டு திரித்துவப் போதனைக்கு முரணான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பது அர்த்தமற்ற செயல். வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆராதனையின்போது அதற்கு எதிரான ஆராதனை முறைகளைக் கையாண்டு வருவது மிகத் தவறானது என்கிறார் வோல்டிரன்.

வரையறுக்கப்பட்ட தத்துவம் என்ற வார்த்தைப் பிரயோகம் உருவான விதத்தை முதலில் கவனிப்போம். ஏற்கனவே விளக்கியதுபோல் இது வரலாற்றோடு சம்பந்தப்பட்ட இறையியல் வார்த்தைப் பிரயோகம். இது உருவானதற்குக் காரணம் 16ம் நூற்றாண்டு சீர்த்திருத்தமே. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் புரொட்டஸ்தாந்து சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாதப்பிரதாபங்களுக்குக் காரணம் ‘வேதம் மட்டுமே’ என்ற இறையியல் நம்பிக்கையே. ரோமன் கத்தோலிக்க மதம், வேதம் தவிர்ந்த மனித சிந்தனைகளையும் வேதமாகக் கருதிப் பயன்படுத்தி அதன் வழிநடந்து வேதத்தின் அதிகாரத்தை இல்லாமலாக்கிக் கொண்டிருந்தபோது புரொட்டஸ்தாந்தியர்கள் வேதம் மட்டுமே சகல அதிகாரமும் கொண்ட கர்த்தரின் வார்த்தை என்றும், அதன்படி மட்டுமே கிறிஸ்தவர்களும், திருச்சபையும் எதையும் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னார்கள். அதனால் ‘பாரம்பரியத்துக்கு’ கர்த்தரின் ஆராதனையிலும், சபையிலும் இடமில்லை என்று வாதிட்டார்கள். அவர்களே ‘வரையறுக்கப்பட்ட தத்துவம்’ என்ற பதம் பின்னால் உருவாவதற்குக் காரணமாக இருந்தார்கள். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் ஆராதனையிலும், திருச்சபைக் காரியங்களிலும் பாரம்பரியத்தைப் பின்பற்றலாம் என்று வாதிட்டதால் வரையறுக்கப்பட்ட தத்துவத்திற்கு மாறான இவர்களுடைய போதனை பின்னால் ‘வழமையான தத்துவம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் லூதரன்களுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான வாதப்பிரதாபங்கள் பெரிதாக நிகழ்ந்தன. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் கர்த்தரின் ஆராதனையில் நிகழும் காரியங்களுக்கு வேத ஆதாரங்கள் அவசியமானவை என்று வலியுறுத்தினார்.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து சபையில் இந்த விஷயம் பற்றிய பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அந்தப் போராட்டமே இந்நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப் பிரபலமாக்கி கர்த்தரின் ஆராதனையில் அதன் அவசியத்தை மேலானதாகக் காட்டியது. இந்தப் போராட்டத்தின் காரணமாக இங்கிலாந்து சபையில், சபை, மற்றும் ஆராதனையில் இந்தத் தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்களே சபை நீக்கம் செய்யப்பட்ட பியூரிட்டன்கள் (தூய்மைவாதிகள்). இந்தத் தத்துவத்தை அவர்களே விசுவாச அறிக்கைகளில் தெளிவாக விளக்கி எழுதினார்கள். பியூரிட்டன்களின் வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்கும் ஜி. ஐ. வில்லியம்சன் என்ற தற்கால இறையியலறிஞர், ‘கர்த்தரால் கட்டளையிடப்பட்டதெல்லாம் சரியானவை, அவரால் கட்டளையிடப்படாதவையெல்லாம் தவறானவை’ என்று சுருக்கமாக, எளிமையாக எழுதியிருக்கிறார். இதுபற்றி சீர்திருத்த சபையைச் சேர்ந்த இறையியலறிஞரான பேர்னமென் விளக்குகின்றபோது, இங்கிலாந்து சபையோ, “கர்த்தரால் தடைசெய்யப்படாத அனைத்தையும் ஆராதனையிலும், திருச்சபைக் காரியங்களிலும் சேர்த்துக்கொள்ளும்படி சபை ஆணையிடலாம்” என்ற தத்துவத்தைக் கொண்டு இயங்குகிறது. ஆனால், நம்சபை முறைப்படி, “ஆராதனையிலும், சபைக்காரியங்களிலும் வேதத்தில் தெளிவாகவும், உள்ளடக்கமாகவும் விளக்கியிராத எதையும் சபை ஆணையிட்டுப் பின்பற்றும்படி வற்புறுத்த முடியாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறது” என்று விளக்குகிறார்.

ஆராதனை தொடர்பான பியூரிட்டன் வரையறுக்கப்பட்ட தத்துவத்தையும், இங்கிலாந்து ஆங்கிலிக்கன் சபையின் வழமையான தத்துவத்தையும் ஜி. ஐ. வில்லியம்சன் அருமையாக விளக்குகிறார்.

பியூரிட்டன் வரையறுக்கப்பட்ட தத்துவம்:

  • மெய்யான ஆராதனை — கட்டளையிடப்பட்டவை மட்டுமே
  • தவறான ஆராதனை – கட்டளையிடப்படாத அனைத்தும்

இங்கிலாந்து சபையின் (ஆங்கிலிக்கன்) வழமையான தத்துவம்:

  • மெய்யான ஆராதனை – கட்டளையிடப்பட்டவையும், குறிப்பிட்டு நிராகரிக்கப்பட்டிராத அனைத்தும்
  • தவறான ஆராதனை – கண்டிப்பாக நிராகரிக்கப்பட்டவை மட்டும்

‘வேதம் மட்டுமே’ என்ற சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் வைராக்கியக் கோட்பாட்டின்படி அதன் போதனைகளின் அடிப்படையில் மட்டுமே திருச்சபைக் காரியங்களும், கர்த்தரின் ஆராதனையும் அமைய வேண்டும் என்ற ‘வரையறுக்கப்பட்ட தத்துவத்தை’ சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் போதித்து விசுவாச அறிக்கைகளும் வலியுறுத்துமானால், அதற்கான வேத ஆதாரங்கள் யாவை என்று பார்ப்பது அவசியம். இந்தத் தத்துவத்தை சீர்திருத்த பியூரிட்டன்கள் வலியறுத்தியதற்குக் காரணமே இது வேதத்தில் பரவலாகப் போதிக்கப்பட்டிருப்பதுதான். அதையே சாம் வோல்டிரன் அடுத்தபடியாக இந்நூலில் விளக்குகிறார். அதற்கு அடிப்படை வசனமாக அவர் மத்தேயு 18:20ஐ முன்வைக்கிறார். இயேசு சொன்னார், ‘ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.’ எழுத்துபூர்வமாக மொழிபெயர்த்தால் இந்த வசனத்தில் – ‘நான்’ இருக்கிறேன் – என்ற வார்த்தை வந்திருக்க வேண்டும். இந்த வசனத்தை 15-20 வரையுள்ள வசனங்களின் அடிப்படையில் விளங்கிக்கொள்ளுவது அவசியம். சபையில் காணப்படவேண்டிய ஒழுங்கு நடவடிக்கை முறைகளை இந்தப் பகுதியில் இயேசு விளக்குகிறார். இந்தப் பகுதி திருச்சபையைப் பற்றித்தான் விளக்குகிறது என்பதற்கு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘சபை’ என்ற வார்த்தை ஆதாரமாக இருக்கிறது. அதே வார்த்தையை இந்தப்பகுதியோடு தொடர்புடைய மத்தேயு 16ம் அதிகாரமும் பயன்படுத்துகிறது. இந்தப் பகுதியின் மூலம் வோல்டிரன் பின்வரும் உண்மைகளை முன்வைக்கிறார்.

  1. இந்த வசனத்தின் ‘இரண்டு பேராவது மூன்று பேராவது’ என்ற பதங்கள் தனி நபர்களை அல்லாமல் திருச்சபையைக் குறிக்கும் வார்த்தைகள்.
  2. ‘கூடியிருக்கிறார்களோ’ (கூடிவருகிறார்களோ) என்பது திருச்சபை அதிகாரபூர்வமாக கூடிவருவதைக் குறிக்கும் வார்த்தை. இது 1 கொரிந்தியர் 14லும் பல தடவைகள் சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  3. ‘என்னுடைய நாமத்தில்’ என்பது இயேசுவின் அங்கீகாரத்தோடு அவருடைய பிரசன்னத்தைத் தன் மத்தியில் கொண்டிருந்து அதிகாரபூர்வமாகக் கூடிவருவதைக் குறிக்கும். இது சபைக்கு மட்டுமே உரிய ஆசீர்வாதம். இதுவும் திருச்சபையைக் குறித்தே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  4. இந்த வசனப்பகுதி 1 கொரிந்தியர் 5:1-13ன் தொடர்புடையதாக இருக்கின்றது. இருபகுதிகளும் (1 கொரிந்தியர் 4-5) தேவ பிரசன்னத்தைக் கொண்டிருந்து திருச்சபை அதிகாரத்தோடு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை விளக்குகின்றன.

இந்த விளக்கங்களின் அடிப்படையில் சாம் வோல்டிரன் முக்கியமான போதனையை அளிக்கிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் ஆலயமாக இருந்தது தேவனுடைய பிரசன்னம் இருந்த இடமே. தேவனுடைய பிரசன்னமே ஆலயத்தை அவருடையதாக்கியது. அந்தவகையில், அவருடைய பிரசன்னம் அகன்றபோது எருசலேம் ஆலயம் தன் மகிமையை இழந்தது. அவரில்லாத ஆலயம் அவருடையதல்ல. இந்த உண்மையின்படி புதிய ஏற்பாட்டில் தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் ஒரே ஆலயம் திருச்சபை மட்டுமே. ‘கூடிவருகின்ற சபையே’ தேவனுடைய பரிசுத்த ஆலயமாக இருக்கின்றது (1 கொரிந்தியர் 3:16) என்கிறார் பவுல். அவருடைய மக்கள் அவருடைய சிறப்பான பிரசன்னத்தைக் கொண்டிருந்து அவருடைய அங்கீகாரத்தோடு கூடிவருவதே திருச்சபை.

வோல்டிரன் இந்தப் போதனையின்படி சில விளக்கங்களைத் தருகிறார்:

  1. தேவனுடைய பிரசன்னத்தைக்கொண்டு அவருடைய மக்கள் கூடிவரும்போது அவர் ஆராதனை செய்யப்படவேண்டும்.
  2. அவருடைய நாமம் சிறப்பாக நினைவுகொள்ளப்படுகிற இடமே அவருக்குரிய ஆராதனை நிகழும் ஆலயமாக இருக்கிறது.
  3. புதிய உடன்படிக்கையின்படி இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் ஆலயம் திருச்சபையாகும்.

அடுத்தபடியாக வோல்டிரன் இதுவரை தந்துள்ள விளக்கத்தின்படி தேவனுடைய ஆலயமாகிய திருச்சபையில் அவருடைய காரியங்கள் மிகவும் கவனத்தோடு, பயபக்தியோடு அவருடைய வார்த்தையின்படி நிகழ வேண்டும் என்பதை 1 தீமோ. 3:15ஐ ஆதாரமாக வைத்து விளக்குகிறார். ‘தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்கு தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.’ இந்த வசனத்தில் திருச்சபை தேவனுடைய வீடாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அது ஜீவனுள்ள தேவனுடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் அவருடைய ஆலயம்.

மேலே பார்த்தவிதத்தில் இன்றைக்கு திருச்சபையைப் பார்க்கும் நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லை. புதிய உடன்படிக்கையின்படி பழைய ஏற்பாட்டு ஆலயத்தை நினைவுபடுத்துகின்ற, ஆண்டவருடைய பிரசன்னத்தைக் கொண்டிருக்கும், அவருடைய மக்கள் அவரைக் கூடி ஆராதிக்கும் ஆலயம் திருச்சபையே. அதன் காரணமாகவே அவருடைய ஆலயத்தில் அவருடைய மக்கள் உலகப்போக்கின்படியும், தங்களுடைய சிந்தனைகளின்படியும் அவரை ஆராதனை செய்யக்கூடாது. தேவனுடைய வார்த்தையின்படி அவர் அங்கீகரித்துக் கேட்கின்ற ஆராதனையே அவருடைய ஆலயமாகிய சபையில் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும். இதுவே ஆராதனை பற்றிய ‘வரையறுக்கப்பட்ட தத்துவம்.’ இதன் மூலம் ஆண்டவர் தன்னுடைய ஆராதனையை வரையறுத்து வார்த்தையினால் கட்டுப்படுத்தியிருக்கிறார் என்று அறிந்துகொள்ளுகிறோம். இதை வோல்டிரன் பல வேத ஆதாரங்களின் மூலம் விளக்கியிருக்கிறார்.

(1.) பாவிகள் தன்னை எப்படி, எந்தவிதத்தில் ஆராதனை செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கும் உரிமை கர்த்தருக்கு மட்டுமே உண்டு. இதை நிரூபிக்கும் எத்தனையோ வேதவசனங்கள் பழைய ஏற்பாட்டில் காணப்படுகின்றன. காயினும் ஆபேலும் கர்த்தரை ஆராதிக்க வந்தபோது அந்த ஆராதனையை அவர்கள் தாங்கள் நினைத்தவிதத்தில் கொடுக்க முடியவில்லை. கர்த்தருக்குரியதை அவர் வெளிப்படுத்தியிருப்பதால் அந்த முறையில் கொடுக்கப்பட்ட ஆபேலின் ஆராதனையை மட்டுமே அவர் ஏற்றுக்கொண்டார். அதேபோல் அந்நிய அக்கினியை அவருக்கு முன் கொண்டுவந்த ஆரோனின் புத்திரர்களான நாதாபையும் அபியூவையும் அவர் எரித்தார். இந்தவிதமாக கர்த்தர் தனக்கு முன் தான் கட்டளையிட்டுத் தந்துள்ள விதத்தில் ஆராதனை செய்யாதவர்களைத் தொடர்ந்து நியாயந்தீர்த்திருப்பதை பழைய ஏற்பாடு நமக்கு நினைவூட்டுகிறது. இந்த வரைமுறை புதிய உடன்படிக்கையிலும் தொடர்கிறது.

(2.) வேதம் போதிக்காத, அதில் காணப்படாத ஆராதனை முறைகள் இறுதியில் அவர் ஏற்படுத்தித் தந்திருக்கும் ஆராதனையை நிராகரிக்கின்றவையாக இருக்கின்றன. மத்தேயு 13ல் ஆண்டவர், தேவனுடைய கட்டளையை நீ ஏன் உன்னுடைய பாரம்பரியத்தின் மூலம் மீறுகிறாய் என்று கேட்கிறார். பாரம்பரியமும், மனித சிந்தனைகளும் அவருடைய கட்டளையோடு இணைந்து வாழ வழியில்லை. யெரொபெயாம் தாணிலும், பெத்தேலிலும் ஏற்படுத்திய ஆலய வழிபாடுகள் கர்த்தருடைய ஆலய வழிபாட்டை நிராகரிக்கின்றவையாக இருந்தன. அந்தப் பாவத்தை ஆண்டவர் பொறுத்துக்கொள்ளவில்லை.

(3.) ஆராதனையில் கர்த்தருடைய வார்த்தைகளை மீறிய அம்சங்களைத் திணிப்பது வேதத்தின் போதுமான தன்மையையும், கிறிஸ்துவின் ஞானத்தையும் கேலிக்குரியதாக்குகின்றன.

(4.) கர்த்தரால் கட்டளையிட்டுத் தரப்படாத அத்தனை ஆராதனை முறைகளையும் வேதம் அடியோடு வெறுத்துக் கண்டிக்கிறது (லேவி 10:1-3; உபா. 17:3; 4:2; 12:29-32; யோசுவா 1:7; 23:6-8; மத். 15:13; கொலோ 2:20-23).

வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் பல்வகைப் பயன்களை அடுத்து விளக்கும் வோல்டிரன், மெய்யான திருச்சபை சீர்திருத்தம் நிகழ இத்தத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்காமல் இருக்கமுடியாது என்பதில் தனக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடுகிறார். திருச்சபை ஆராதனையோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் இத்தத்துவம் திருச்சபையின் அத்தனை அம்சங்களோடும், அமைப்போடும், மக்களோடும் தொடர்புடையதாக இருப்பதாகக் கூறுகிறார். வோல்டிரனின் விளக்கம் எனக்கு மிகவும் சரியாகவே தெரிகிறது. நம்முடைய வாழ்க்கையின் சகல பகுதிகளும் வேதத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியமானபோதும், திருச்சபையைப் பொறுத்தவரையில் வேதத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாக, அதைத் தவிர வேறு எதற்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்படாததாக திருச்சபையும் அதன் சகல பகுதிகளும் அமைந்திருக்க வேண்டுமென்பதே வரையறுக்கப்பட்ட தத்துவம். இந்த வேதபோதனை திருச்சபையைப் பொறுத்தவரையில் எந்தவிதத்தில் பாதிக்கிறது என்பதை வோல்டிரன் விளக்குகிறார்.

(1.) திருச்சபைபற்றிய போதனைகள் – திருச்சபைபற்றிய போதனைகள் வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும். நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் திருச்சபைக் கோட்பாடு என்பதை அறியாமலும், அதை உதாசீனப்படுத்தியும் சபைகள் நடந்துவருகின்றன. பெரும்பாலானோர் வேதம் தெரியாமல் திருச்சபைக் கோட்பாடு விஷயத்தில் வேதம் தெளிவான போதனையைத் தரவில்லை என்று கூறித் தான்தோன்றித்தனமாக நடந்துவருகிறார்கள். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களில் வேதத்திற்கு முரண்படாதவிதத்தில் நாம் தீர்மானங்களை எடுத்து வாழமுடியும். ஆனால், திருச்சபையைப் பொறுத்தவரையில் கர்த்தர் வேதத்தில் அதன் அமைப்புக்கும், நிர்வாகத்துக்கும், பொறுப்புக்கும் தேவையான அத்தனைப் போதனைகளையும் வரையறுத்து விளக்கமாகத் தந்திருக்கிறார். இதை 1689, 1:6 பத்தி தெளிவாக விளக்குகிறது. அவற்றை மீறி சபை நடத்துவது கர்த்தருக்கு எதிரான செயல். அறியாமையைக் காரணம்காட்டி செய்யவேண்டியதை செய்யாமலிருப்பதைக் கர்த்தர் பொறுத்துக்கொள்ளுவதில்லை. வேதத்தை உதாசீனப்படுத்தியும், நிராகரித்தும் சபை நடத்தப் பார்ப்பது கத்தோலிக்க காட்டாட்சிக் காலத்துக்கு மறுபடியும் போய்ச்சேருவதில்தான் முடியும்.

(2.) திருச்சபை அமைப்பும் நிர்வாகமும் – பியூரிட்டன்கள் வேதம் திருச்சபை அமைப்பைப்பற்றித் தெளிவாகப் போதிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆங்கிலிக்கன் பிரிவினரும் (ஹூக்கரின் போதனை), ஏனையோரும் இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் கர்த்தர் பொதுவான போதனைகளை மட்டுமே தந்து நாம் சுதந்திரமாக இதுபற்றித் தீர்மானங்களை எடுத்து சபை நடத்தலாம் என்று நம்புகிறார்கள். அதுவே ‘வழமையான தத்துவம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 1689, 1 வது அதிகாரத்தின் 6ம் பத்தி, வரையறுக்கப்பட்ட தத்துவம் திருச்சபையையும், அதன் ஆராதனையையும் கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது. இதன் மூலம் வேதத்தின் போதுமான தன்மையையும் இந்தப் பகுதி நிலைநாட்டுகிறது. இந்தப் பகுதி தேவனுடைய ஆலயமாகிய திருச்சபையில் மனித சிந்தனைகளுக்கோ, பாரம்பரியத்துக்கோ இடமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. திருச்சபையின் அமைப்பும், அதன் தலைவர்களும் யாராயிருக்க வேண்டும், அவர்கள் எத்தகைய தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதையெல்லாம் வேதம் தெளிவாக விளக்குகிறது. இத்தகைய வேதபோதனைகளையெல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு சபை நடத்தப்பார்ப்பது கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் முறைகளைப் பின்பற்றுவது மட்டுமல்ல கர்த்தரின் வேதத்தையே சிதைக்கும் செயலாகும். நம்மினத்தில் இந்த உணர்வற்ற நிலையில் கிறிஸ்தவம் இருந்து வருகிறது. திருச்சபை என்றாலே என்னவென்று தெரியாமல் நடந்துவருவது மட்டுமல்ல, நிறுவனங்களும், சொந்த ஊழியங்களும் சிலந்திவலைபோல் பரவி வேத அதிகாரத்தில் துப்புரவாக நம்பிக்கையற்ற ஒருவகைக் கிறிஸ்தவத்தை நம்மினம் உருவாக்கி வைத்திருக்கிறது. கர்த்தருடைய திருச்சபையை தேவனுடைய ஆலயமாகக் கணித்து நடக்கும் தேவபயமுள்ள கிறிஸ்தவமல்ல இது; காயினின் இறுமாப்பை இருதயத்தில் சுமந்து நடந்துவரும் போலிக் கிறிஸ்தவம் மட்டுமே.

(3.) திருச்சபையின் கடமைகள் – வரையறுக்கப்பட்ட தத்துவத்தை ஜி. ஐ. வில்லியம்சன் விளக்கியிருக்கும் விதத்தில் திருச்சபை மட்டுமே பின்பற்றும்படியாகக் கர்த்தர் எதிர்பார்க்கிறார். குடும்பத்திற்கோ, உலக நிறுவனங்களுக்கோ அத்தகைய வரையறுக்கப்பட்ட தத்துவம் கொடுக்கப்படவில்லை. ‘எது கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அது மட்டுமே சரியானது, கட்டளையாகக் கொடுக்கப்படாததெல்லாம் தவறானது’ என்ற வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப் பின்பற்ற வேண்டிய கர்த்தரின் ஆலயமான திருச்சபை இருப்பதலால் அதன் கடமைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அரசுக்கும், குடும்பத்துக்கும், திருச்சபைக்கும் கர்த்தர் தனிப்பட்ட சிறப்பான கடமைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை சீர்திருத்த கிறிஸ்தவம் வலியுறுத்துகிறது என்பதை வோல்டிரன் சுட்டிக்காட்டுகிறார். அந்தவிதத்தில் திருச்சபை தன்னுடைய கடமைகளை வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் பொறுப்போடு நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

  1. திருச்சபை தன் கடமைகளை கவனத்தோடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
  2. திருச்சபை அரசுக்கும், குடும்பத்துக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் கடமைகளில் தலையிடுவதையும், அவற்றின் கடமைகளை செய்யப்பார்ப்பதையும் கவனத்தோடு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
  3. திருச்சபை தனக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தாரைவார்த்துக் கொடுப்பதை கவனத்தோடு தவிர்த்துக் கொள்ளுவதோடு, தன் கடமைகளை வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் செய்வதற்கும் எந்தவிதத்திலும் அனுமதிக்கக் கூடாது. – இந்த மூன்றாவது அம்சத்தை இக்காலத்தில் கருத்தோடு சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நிறுவனங்களும், சபையற்ற தனி மனிதர்களும் திருச்சபையின் கடமைகளைக் கேட்பாரின்றி செய்து வருவதும், செய்யப்பார்ப்பதும் நம்மினத்தில் இபோலா வைரஸ்போல் பரவலாக இருக்கிறது. திருச்சபையின் கடமைகளைத் திருச்சபை மட்டுமே செய்ய வேண்டியது மட்டுமல்லாமல் திருச்சபையின் தெய்வீக நாயகன் அவற்றை நிறைவேற்றும் சகல வசதிகளையும், வல்லமையையும் திருச்சபைக்கே அளித்திருக்கிறார். சுவிசேஷப்பணியும், சபை நிறுவும் பணியும், சபை ஊழியர்களை உருவாக்கி, அங்கீகரித்துப் பயன்படுத்தும் தெய்வீகக் கட்டளையின் அடிப்படையிலான கடமையும், உரிமையும் திருச்சபைக்கே இருக்கிறது. அதைச் செய்வதற்கு வேறு எதையும், எவரையும் அனுமதிப்பது திருச்சபைக்குத் தகாது. சபை மட்டுமே ஒருவனை சீடனாக்கி, ஞானஸ்நானம் அளித்து கிறிஸ்துவின் கட்டளைகள் அனைத்தையும் பின்பற்ற வைக்க முடியும். சபை மட்டுமே தனக்குத் தேவையான ஊழியர்களை வளர்த்துத் தயார் செய்துகொள்ள முடியும். வரையறுக்கப்பட்ட வேததத்துவத்தின் அடிப்படையிலான திருச்சபையின் கடமைகள் பற்றிய இந்த உண்மைகளை நீங்கள் உணர வேண்டியது அவசியம். இதை உணரும்போதே கிறிஸ்துவின் திருச்சபை எப்படி இருக்க வேண்டும் என்ற தரிசனம் உங்களுக்குள் ஏற்படும். அப்போதே நீங்கள் பவுல் எபேசியர் 3:21ல் சொன்ன, ‘சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக’ என்ற வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுவீர்கள்.

(4.) திருச்சபை ஆராதனை – வரலாற்றில் வரையறுக்கப்பட்ட தத்துவம் ‘வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவம்’ என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறது. வரையறுக்கப்பட்ட தத்துவத்தின் பயன்பாடு ஆராதனையோடு மட்டுமே தொடர்புள்ளதாக இல்லாதிருந்தபோதும், இதுவே முக்கியமானதாகும். இங்கே திருச்சபை பற்றிய ஒரு முக்கிய உண்மையை வோல்டிரன் விளக்குகிறார். அதாவது, திருச்சபையை இரண்டுவிதமாக வேதத்தில் நாம் காண்கிறோம். முதலாவதாக, அது ஒரு நிறுவனமாக அல்லது அமைப்பாக விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு அப். 20:17ல் பவுல் சபையில் மூப்பர்களை அழைக்கும்படிக் கூறுகிறார். இங்கே சபையின் நிர்வாக அமைப்பை நாம் காண்கிறோம். இரண்டாவதாக, சபை ‘கூடிவருகின்றதாக’ அதைச் சேர்ந்தவர்கள் கூடிவரும் கூட்டத்தைப்பற்றி வேதம் விளக்குகிறது. உதாரணமாக, மத்தேயு 18:17ல் இயேசு ‘சபைக்குத் தெரியப்படுத்து’ என்று சொல்லுகிறார். அதேபோல் 1 கொரிந்தியர் 14:34-35ல் பவுல், பெண்கள் சபையில் அமைதியாய் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார். இந்த இரு இடங்களிலும் கூடிவரும் சபைக்கூட்டம்பற்றியே வேதம் விளக்குகிறது. இந்த உதாரணங்களின்படி சபையைக் குறித்த வரையறுக்கப்பட்ட தத்துவம் சபைபற்றிய இந்த இரண்டு அம்சங்களையும் ஆளுகிறதாக இருக்கின்றது. ஆகவே, நிறுவனமான சபையையும், அதன் கடமைகளையும், அரசமைப்பையும், அதன் போதனைகளையும் வரையறுத்து ஆளுகின்ற வரையறுக்கப்பட்ட தத்துவம், சபையின் அதிகாரபூர்வமான கூட்டங்களையும், அதன் ஆராதனைக்கூட்டங்களையும் ஆளுகின்றதாக இருக்கின்றது. அதற்குக் காரணம் அது சபையின் வரையறுக்கப்பட்ட வேத தத்துவமாக இருப்பதால்தான்.

நம்மினத்தில் வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப்பற்றி அறிவுபூர்வமாக உணர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிது. அதை ஓரளவுக்கு அறிந்திருந்தபோதும் உணர்வுபூர்வமாகப் பின்பற்றுபவர்கள் அறவேயில்லை என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் திருச்சபை ஊழியங்கள் எல்லாம் தலைகீழாக மனித சிந்தனைப் பிரகாரம் நம்மினத்தில் நடந்துவருகின்றன. வேதத்தைத் தந்து அதன் மூலம் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் கர்த்தர், தான் தீவிரமாக நேசிக்கும் தன்னுடைய சபையைத் தன் சிந்தனைப்படி மட்டுமே நடக்கவேண்டுமென்ற உறுதியோடு கட்டளைகளைத் தந்திருக்கிறார் என்பது பெரும்பாலோரினுடைய சிந்தனையில் இல்லை. திருச்சபை பற்றிய வரையறுக்கப்பட்ட போதனைகளின்படி நடந்துவராத ஊழியங்கள் இந்த உலகத்தில் அவற்றின் சுயநல நோக்கங்களை அனுபவித்தபோதும், கர்த்தரின் வேத நோக்கங்களை நிறைவேற்றவோ, அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவோ ஒருபோதும் முடியாது.

கீழ்வரும் வசனங்களை வாசித்து திருச்சபை ஆராதனை கர்த்தரின் வார்த்தையின்படி நடந்துவர ஜெபத்தோடு முயற்சி செய்யுங்கள்.

  1. தொடர்ச்சியான வேத வாசிப்பும், வேதப்பிரசங்கங்களும் ஆராதனையில் முக்கிய இடத்தைப் பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் – 1 தீமோ 4:13; அப் 2:42; 20:7-9; 1 கொரி 14.
  2. கூடிவரும் முழு சபையும் நன்றியுணர்வோடு கர்த்தரைப்போற்றிப் பாடி ஆராதனை செய்யும்படி கவனமாக இருங்கள் – மத்தேயு 26:30; 1 கொரி 14:15; 26; எபே 5:19; கொலோ 3:16.
  3. சபை ஆராதனையின்போது ஜெபம் முக்கிய இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள் – அப் 2:42; 1 கொரி 14:13-17; 1 தீமோ 2:1-8. 4.
  4. கடைசியாக மாபெரும் திருநியமங்களை (ஞானஸ்நானமும், திருவிருந்தும்) சபை முறையாகக் கைக்கொள்ளும்படியாக கவனத்தோடு நடந்துகொள்ளுங்கள் – மத் 28:19-20; 1 கொரி 11:23-26.

இதுபற்றி மேலும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமானால் 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரத்தை ஜெபத்தோடு கவனமாக சிந்தித்து வாசியுங்கள். அந்த அதிகாரம் கர்த்தரின் ஆராதனைத் தத்துவங்களை அருமையாக விளக்குகிறது. இவை தவிர காணிக்கைஎடுத்தலும் ஆராதனையின்போது இடம் பெறலாம்.

ஓய்வு நாள்

சாம் வோல்டிரன் ஆராதனையில் பயன்படுத்தப்பட வேண்டிய வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்கும்போது ஓய்வு நாளின் பின்னணியிலேயே அதை விளக்குகிறார். அதாவது கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளை விசுவாசத்தோடு கர்த்தரின் நாளாகக் கணித்து அந்த நாளில் உலகக் காரியங்களை வாழ்க்கையில் தவிர்த்து, முழு நாளையும் கர்த்தருக்குரியதாக அனுமானித்து, அந்நாளின் முக்கிய கடமையாக சபையின் பொது ஆராதனைகளில் பயபக்தியோடு கலந்துகொள்கிறார்கள் என்ற அனுமானத்துடனேயே வரையறுக்கப்பட்ட தத்துவத்தை விளக்குகிறார். ஆண்டவருடைய மக்களுக்காக வரையறுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ள ஆராதனை நாள் ‘ஆண்டவரின் நாளான’ ஓய்வு நாள் (வாரத்தின் முதல் நாள்). இந்த நாளை ஆண்டவரின் நாளாகக் கருதாமலும், அதற்குத் தங்களை ஒப்புக்கொடுத்தும் வாழாதவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தத்துவம் அவசியமாகப்படாது. இறையாண்மையுள்ள கர்த்தருக்குக் கீழ்ப்படியாத இருதயம் ஓய்வு நாளை கர்த்தருக்குரியதாகப் பார்க்காது. இன்றைக்கு நம்மினத்தில் ஓய்வு நாளைப் பற்றிய தெளிவான போதனைகளைத் தரும் சபைகள் மிகக் குறைவு. ஓய்வு நாளைப் பரிசுத்தத்தோடு பயன்படுத்தி வராதவர்கள் வரையறுக்கப்பட்ட தத்துவத்தை எங்கே, எப்படிப் பயன்படுத்த முடியும்?

ஆராதனையில் ‘துதித்தல்’

நம்மினத்தில் பெரும்பாலான சபைகளில் ஆராதனைவேளையில் ‘துதித்தல்’ என்ற பெயரில், வெறுமனே ஆண்டவரைப்பற்றி நினைவில் வந்த காரியங்களை எல்லோரும் சேர்ந்து சொல்லுகிற ஒரு முறை கர்த்தரால் ஒருபோதும் ஏற்படுத்தப்படாதது. ஆங்கிலத்தில் praise, worship என்ற இரு வார்த்தைகளுக்கும் தமிழில் ‘துதி, ஆராதனை’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். ஆனால், துதித்தலும் ஆராதனை செய்தலும் ஒன்றுதான்; அவற்றிற்கு அர்த்தம் ஒன்றுதான். இவற்றிற்கான கிரேக்க மொழி அர்த்தத்தையும், எந்த ஒத்தவாக்கிய அகராதியையும் ஆராய்ந்து பார்த்தாலே போதும், இந்த உண்மை புலப்படும். தமிழ் வேதத்தில் ஆராதனைக்கு ‘துதி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக துதியும், ஆராதனையும் ஒன்று என்பதை உணராமலும் ஆராதனையின்போது தனியாக ‘துதித்தல்’ என்ற ஒரு செயல்முறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் தமிழ் கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர். இதில் விசேஷம் என்னவென்றால் மேலை நாட்டிலோ, இந்தியாவின் வேறு மாநிலங்களிலோ இதைப் பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரையில் ஆராதனையும் துதியும் ஒன்றுதான். தமிழ் மொழிபெயர்ப்பிற்கு மட்டும் அடிமைப்பட்டு நல்ல வேத மொழிபெயர்ப்புக்களைப் பயன்படுத்தி ஆராயாமல் இருந்து வருவதன் ஆபத்தை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

இந்தத் “துதிக்கும் முறை” கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே ஆராதனை முறைகளில் இருந்து வந்ததே தவிர புதிய ஏற்பாட்டில் ஓரிடத்திலாவது சபை ஆராதனை வேளையில் இப்படிச் செய்யும்படிக் கர்த்தர் கூறவில்லை. இந்த முறையில் ஆதிசபை ஆராதனை நடந்ததாக வேதத்தில் எந்த இடத்திலும் வாசிக்க முடியாது. நல்ல ‘பீலிங்கைத்’ தருகிறது, நாங்களும் சுயமாக எதையாவது ஆராதனை வேளையில் சொல்லுவதற்கு உதவுகிறது என்ற நினைப்பில் பலர் இதைச் செய்து வந்தாலும், கர்த்தர் கட்டளையிட்டு இப்படிச் செய்யும்படிச் சொல்லவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். அவர் கேட்காததை உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக ஆராதனையில் திணிப்பது எந்தவிதத்தில் தேவபயத்தின் அறிகுறியாக இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள்.

ஆராதனையில் ‘கைதட்டுதல்’

நம்மினத்தில் ஆராதனையின்போது கைதட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாகவே உருவெடுத்திருக்கிறது. சந்தோஷமாக ஆராதனை செய்ய உதவுகிறது என்பதைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் எவரும் முன்னெடுத்து வைக்க முடியாது. வேதம் இதைப் போதிக்கவில்லை. கர்த்தர் இதைச் செய்யும்படிக் கேட்கவில்லை. கைதட்டுவதும், உடலை அசைத்து ஆட்டி உணர்ச்சிவசப்பட்டும், மற்றவர்களை உணர்ச்சிவசப்படும்படிச் செய்வதெல்லாம் மனித சிந்தனையே தவிர கர்த்தர் இவற்றைக் கேட்கவில்லை. உலக சந்தோஷம் வேறு, ஆராதனையின்போது இருக்க வேண்டிய தேவபயத்தோடு கூடிய சந்தோஷம் வேறு. இந்த இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் கிறிஸ்தவர்கள் என்று உங்களை அழைத்துக்கொள்ளுவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இன்றைக்கு நம்மினத்து ஆராதனையில் இல்லாததொன்று தேவபயமே. கைதட்டாமலும், உடலை அசைக்காமலும், உணர்ச்சியை அள்ளிக்கொட்டாமலும் கர்த்தரில் சந்தோஷத்தை அனுபவிக்கலாம். இதற்காக உணர்ச்சியில்லாமல் ஆராதனை செய்யும்படி நான் சொல்லவரவில்லை. கர்த்தருக்குரிய ஆராதனையை, ஆவிக்கேற்றவிதத்தில் அமைதியோடு அவர் கட்டளையிட்டுத் தந்திருக்கும் காரியங்களைப் பயன்படுத்தி அவருக்குக் கொடுக்கும்படியே அறிவுறுத்துகிறேன்.

சபையிலும், ஆராதனைவேளையிலும் பெண்கள்

பெண்கள் ஆராதனையில் எதைச் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை இங்கு சொல்லாமலிருக்க முடியாது, சாம் வோல்டிரன் அதையும் விளக்கியிருக்கிறார். கர்த்தரின் வரையறுக்கப்பட்ட சபைப் போதனைகளே அவர்கள் திருச்சபையில் எதைச்செய்யலாம், செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்கிறது. உலக ஞானத்தைப் பின்பற்றி நடந்து அந்தக் காரியங்களைத் தீர்மானிக்க முடியாது. சபையாரோடு அவர்கள் சமமாக இணைந்து கர்த்தரை ஆராதிக்கலாம். சபை மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் மதித்து நடந்து அவர்களுக்குக் கீழ், சொந்தக் கணவர்களை மீறாமல் பின்புறத்தில் இருந்து பெண்களுக்கேற்ற பல நல்ல பணிகளைச் செய்யலாம். ஆனால் பாடல்பாடி ஆராதனையை வழிநடத்துவது, வேத வாசிப்பைச் செய்வது, பிரசங்கிப்பது, சத்தமிட்டு எல்லோருக்கும் முன் நின்று ஜெபிப்பது போன்ற சபை மூப்பர்கள் செய்ய வேண்டிய எதையும் செய்யும்படி கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. அவர்கள் சபையில் நிதானத்தோடு ஆண்களுக்கும், தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கும் மதிப்பும், மரியாதையும் அளித்து, தங்களுடைய ஸ்தானத்தை மீறாமல் பக்தியோடு நடந்துகொள்ள வேண்டும். இவற்றை மீறி நடப்பது அவலட்சணம் என்று பவுல் மூலம் கர்த்தர் புதிய ஏற்பாட்டில் விளக்கியிருக்கிறார் (1 கொரி 14; 1 தீமோ 2). இப்படி எழுதுவதால் பெண்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விடும் என்ற மனித பயத்தோடு இதை நான் எழுதாமல் இருந்துவிட முடியாது. கர்த்தருக்கே நாமெல்லோரும் பயப்பட வேண்டும். சபை சபையாக பெண்கள் இன்றைக்கு வேதத்தை மீறி நடந்துகொள்கிறார்கள் என்பதற்காகவும், அதை சபைத்தலைவர்கள் சகித்துக்கொள்ளுகிறார்கள் என்பதற்காகவும் வேதத்தை மீறுகிற செயல் ஒருபோதும் சரியானதாக இருக்க முடியாது. பெண்கள் இன்றைக்கு சமூகத்தில் செய்யாத காரியங்கள் இல்லை, அதனால் சபையிலும் எல்லாவற்றையும் செய்யலாம் என்ற அசட்டுத்தனமான, பின்நவீனத்துவ உலகப் பண்பாட்டைக் கர்த்தரின் சபையில் திணிப்பதும் வேதத்திற்கு விரோதமான கீழ்ப்படியாமை மட்டுமே. பாவத்தின் காரணமாக பண்பாடு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் கர்த்தரின் வார்த்தையும், சித்தமும் ஒருபோதும் மாறாது. திருச்சபை பற்றியும், ஆராதனை பற்றியும் அவர் தந்திருக்கும் தெளிவான விளக்கங்கள் இந்த உலகில் சபையிருக்கும் வரையில் மாறாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டியவை.

ஆராதனைப் பாடல்கள்

பாடல்கள் பாடும்போது எதைப்பாடுவது என்ற கேள்வி எழும். நம்மினத்தில் காணப்படும் பாடல் புத்தகங்களில் உள்ள பாடல்களில் பிரச்சனைகள் உள்ளன. முதலில் பெரும்பாலானவை யார் எழுதியது என்பதே தெரியாது. எழுதியவர்கள் எத்தகைய இறையியல் நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள வழியில்லை. பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களின் பாடல்களை சீர்திருத்த சபைகளில் பாடுவது தகுந்ததல்ல. அந்தப் பாடல்களில் இறையியல் தவறுகளும், குளறுபடிகளும் இருக்கும். உதாரணத்திற்கு கத்தோலிக்க விசுவாசத்தையும், பாரம்பரியத்தையும் இன்னும் துறக்காமலிருக்கும் தந்தை பேர்க்மென்சின் பாடல்கள் போன்றவை. சபை ஆராதனையில் பயன்படுத்தும் பாடல்களை நாம் கவனத்தோடு தெரிவுசெய்ய வேண்டும். சபைத்தலைவர்களுக்கு இதில் பெரிய பொறுப்பு இருக்கிறது. இறையியல் போதனைகளைத் தெளிவாகக் கொண்டிருப்பனவாகவும், வெறும் இசைக்காக எழுதப்பட்டதாக இல்லாமலும், குத்துப் பாட்டை நினைவுறுத்தும் வகையில் இல்லாமலும், தேவ பயத்தோடு பாடக்கூடியனவாகவும் அவை அமைய வேண்டும். முக்கியமாக யார் பாடல்களை எழுதியது என்பதில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும்.

சிலர் வேதத்தில் காணப்படும் சங்கீதப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்பார்கள். இதுபற்றி என் நிலையைத் தெரிவிக்க வேண்டும். இதுவே வோல்டிரனின் நிலையாகவும் இருக்கிறது. உண்மையில் இதுபற்றிய புதிய ஏற்பாட்டுப் போதனைகளை ஆராய்ந்து பார்க்கும்போது சங்கீதங்களை மட்டுந்தான் பாடவேண்டும் என்று அவை சொல்லுவதாக எனக்குப்படவில்லை. இருந்தபோதும் எந்த சபையிலும் பாடப்படும் பாடல்களில் சங்கீதங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலைநாட்டு சீர்திருத்த சபைகளில் கீர்த்தனைப் பாடல்களோடு சங்கீதப் பாடல்கள் கொண்ட புத்தகங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழினத்தைப் பொறுத்தவரையில் இறையியல்பூர்வமானதாகவும், விசுவாசமிக்க வேதபோதனைகளிலும் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சிறந்தவர்களால் எழுதப்பட்டதாகவும் இருக்கும் பாடல்கள் மிகக்குறைவாக இருப்பதனால் சங்கீதப்பாடல்களை அதிகம் பயன்படுத்திக்கொள்ளுவது ஆராதனையை வேதபூர்வமாக கர்த்தருக்கு அளிப்பதில் நாம் கவனத்தோடு நடந்துகொள்ள உதவும். எதைப் பாடவேண்டும், எப்படிப் பாடவேண்டும் என்பதை நம் கையில் முழுதாக விட்டுவிடாமல் அவை எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைக் கர்த்தரே தீர்மானித்து அவற்றைப் பின்பற்றும்படி நம்மை எதிர்பார்க்கிறார்.

ஆராதனையின் சந்தர்ப்பசூழ்நிலை

அடுத்ததாக வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்தில் ஆராதனையின் சந்தர்ப்பசூழ்நிலை பற்றிய அவசியமானதொரு உண்மையைக் கவனிப்பது அவசியம். வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவம் கர்த்தருடைய ஆராதனையின் பகுதிகளைத்தான் கட்டுப்படுத்தி அவை எவையாக இருக்கவேண்டும் என்று விபரிக்கிறதே தவிர ஆராதனை சம்பந்தமான சூழ்நிலைகளைப் பொறுத்தவரையில் இயற்கையையும், கிறிஸ்தவ ஞானத்தையும் பயன்படுத்தி முடிவுகள் எடுக்கும்படிச் சொல்லுகிறது. அதை 1689 விசுவாச அறிக்கையின் அதிகாரம் 1:6ல் காண்கிறோம். இதை அதிகாரம் 22ம் விளக்குகிறது. உதாரணமாக சபை ஆராதனைக்காக எந்த நேரத்தில் கூடி வரவேண்டும், எத்தனை ஆராதனைகள் நிகழ வேண்டும், எத்தகைய இருக்கைகளில் அமர வேண்டும் அல்லது நிலத்தில்தான் அமர வேண்டுமா, ஆராதனைக்குரிய இசைக்கருவி எதுவாக இருக்க வேண்டும் (நிச்சயம் கர்த்தருடைய ஆராதனைக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும்) என்றெல்லாம் வேதம் நமக்கு வரையறுத்து விளக்கமளிக்கவில்லை. சிலர் இசைக்கருவிகளே தேவையில்லை என்பார்கள். நன்றாக சபையார் பாடக்கூடுமானால் இசைக் கருவிகள் அவசியமில்லைதான். அதை நான் குஜராத் சபையில் கண்டிருக்கிறேன். எல்லாராலும் இசையின் துணையில்லாமல் பாடமுடியாத காலப்பகுதியில் நாம் இருந்துவருவதால் பாடுவதற்கு துணை செய்யக்கூடிய பொருத்தமான கருவியைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. இசையரங்கமாக சபை ஆராதனையை மாற்றிவிடாமல் இருந்தால் சரி. ஆராதனையின் சந்தர்ப்பங்களைப் பொருத்தவரையில் சபைத்தலைவர்கள் நிதானத்தோடு நடந்து வேதத்தில் அதுசம்பந்தமான வேதத்தின் பொதுவான போதனைகளைப் பின்பற்றி, ஞானத்தோடு நடந்து ஆராதனையைக் கர்த்தருக்குரியதாக நடத்திவரவேண்டும்.

இதையெல்லாம் விளக்கியபிறகு சாம் வோல்டிரன் வரையறுக்கப்பட்ட ஆராதனையை நிராகரிக்கும் மூவருடைய 10க்கருத்துக்களை சுருக்கமாக விளக்கி வேத ஆதாரங்களோடு அத்தகைய கருத்துக்களை நிர்மூலம் செய்கிறார். ஜோன் பிரேம், மார்க் டிரிஸ்கல், ஸ்டீபன் கோர் ஆகியவர்களே அந்த மூவரும். அவற்றை இங்கு விளக்குவது இந்த ஆக்கத்தை மிகவும் நீண்டதாக்கிவிடும். இன்றைக்கு வரையறுக்கப்பட்ட தத்துவத்தையும் அது சம்பந்தமான ஆராதனைத் தத்துவங்களையும் சரிவர சபை வரலாற்றுப்பூர்வமாகவும், இறையியல்பூர்வமாகவும், வேதபூர்வமாகவும் அறிந்திராதவர்கள் அவற்றைப் பாரம்பரியமாகக் கருதி உதறித்தள்ளுவது பொதுவாகவே மேலைநாட்டில் நிகழ்ந்து வருகிறது. உண்மையில் சாம் வோல்டிரன் விளக்குவதுபோல் அவற்றைப்பின்பற்றி நடக்கும்போதுதான் கர்த்தரின் சபையும், ஆராதனையும் வேதபூர்வமாக இந்த உலகில் பரிசுத்தத்தோடு நடந்து கர்த்தருடைய மகிமைக்காக இயங்கி வரமுடியும். இதில் எந்த சந்தேகமுமில்லை. சிலர் உரத்துச் சத்தமிடுகிறார்கள் என்பதற்காக வேதம் பொய்த்துப் போவதில்லை; கர்த்தரின் வழிமுறைகளில் மாற்றமேற்படுத்த வேண்டிய அவசியமுமில்லை. உலகத்தின் போக்கில் ஆராதனை செய்யப்போய்த்தான் இஸ்ரவேல் அடிவாங்கியது; இறுதியில் இல்லாமலும் போனது. பழைய ஏற்பாட்டு வரலாற்றை ஒருதடவை திரும்பிப் பார்த்தாலே போதும், இந்த உண்மை தெளிவாகவே புலப்படும்.  (தொடரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s