வருடங்கள் மழைத்துளிபோல விழுந்து உருண்டோடி விடுகின்றன. புதிய வருடமொன்றைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அதோடு வரும் பொறுப்புக்களும் ஏராளம். இந்த வருடத்திலும் கர்த்தர் நமக்குதவட்டும். முன்னதாகப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது தமிழகத்தில் பத்திரிகையின் 20ம் வருட நன்றிகூறும் நினைவுக்கூட்டம் நடந்து முடிந்திருக்கும். கர்த்தர் நல்லவர்; நம்மைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார். அவருக்கே சகல மகிமையும்.
இந்த இதழின் ஆரம்ப ஆக்கமாக முன்னாள் மூத்த போதகர் அல்பர்ட் என். மார்டினின் திருச்சபைபற்றிய அருமையான பிரசங்கம் வந்திருக்கிறது. இயேசு தன் மணவாட்டியான திருச்சபையை அதன் ஆரம்ப நிலையில் இருந்து எப்படியெல்லாம் காப்பாற்றி, விடுவித்து தன்னுடைய நியாயத்தீர்ப்பு நாளுக்காக அழகுபடுத்தி வருகிறார் என்பதை அருமை நண்பர் அற்புதமாக விளக்கியிருக்கிறார். இதை அவர் பிரசங்கிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன் மிச்சிகனில் அவருடைய வீட்டில் இரண்டு மணிநேரம் அவரைச் சந்தித்து அளவளாவியபோது, இதுவரை இந்தளவுக்கு எசேக்கியேல் 16ல் இந்த உண்மைகளை நான் பார்க்கவில்லை என்றும் இதைப் பிரசங்கிக்கும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார். இருவாரங்களுக்குப் பின் அதை நேரிலும் கேட்கும் ஆசீர்வாதத்தை அடைந்தேன். அதை நீங்கள் அடைய இப்போது தமிழில் தந்திருக்கிறோம்.
‘ஐம்போதனைகளுக்குப் பின்னால்’ என்ற நூலுக்கான விளக்கத்தின் தொடர்ச்சி இதில் வந்திருக்கிறது. வரையறுக்கப்பட்ட தத்துவத்தைப்பற்றிய விளக்கங்கள் நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து படிக்கவேண்டியவை. தொமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ நூலின் அறிமுக ஆக்கமும் இதில் வந்திருக்கிறது. தவறாது நூலை வாங்கி வாசித்து மனந்திரும்புதல் பற்றிய ஆழமான சத்தியங்களை அறிந்து அதன்படி வாழமுயற்சி செய்யுங்கள்.
கடைசி ஆக்கமாக எட்டாம் கட்டளை விளக்கும் ஆள்கடத்தல் திருட்டில் அடங்கியிருக்கும் தகிடுதத்த ‘இருதயத் திருடல்’ பற்றி விளக்கியிருக்கிறேன். இதுபற்றி எத்தனையோ உண்மைகளை எழுதியிருக்கலாம். ஆனால், இடம்போதாமல் போய்விட்டது. இருந்தாலும் அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். தகிடுதத்த சூத்திரதாரிகளாக இல்லாமல் இருப்பதை இந்த வருடத்தின் இலட்சியமாகக்கொள்வோம். நன்றி! – ஆசிரியர்.