[பேராசிரியர் ஜோன் மரே ‘மீட்பின் நிறைவேற்றம்’ என்ற ஆங்கில ஆக்கத்தில் விளக்கியிருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய ஆழமான சத்தியங்களை எளிமையாக தொடர்ச்சியாக விளக்கப்போகிறேன். அதன் முதல் பகுதியாக இந்த ஆக்கம் அமைகிறது. பேராசிரியர் ஜோன் மரேயைப் பற்றி நம்மினத்தவர்களுக்கு அதிகம் தெரியாவிட்டாலும், அவர் சீர்திருத்த இறையியலறிஞர்கள் மிகவும் மதிக்கின்ற ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர். வெஸ்ட்மின்ஸ்டர் இறையியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அவர், இப்போது நம் மத்தியில் இல்லை. வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த சத்தியத்தையும் ஆணித்தரமாக விளக்கும் ஆற்றல் அவருக்கிருந்தது. பேராசிரியர் மரேயின் எழுத்துக்கள் என்றும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டியவை. அந்தவகையில் அவர் எழுதியிருக்கும் பாவநிவாரணபலிபற்றிய விளக்கங்கள் திருச்சபைக்குப் பொக்கிஷமாக அமைகின்றன. இத்தகைய இறையியல் விளக்கங்கள் இன்று தமிழில் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய இதை உங்கள் முன் படைக்கிறேன். – ஆர்].
கிறிஸ்துவின் பாவநிவாரணபலிபற்றி வேதம் நமக்குத் தெளிவான, தேவையான போதனையைத் தருகிறது. இன்று பாவநிவாரணபலிபற்றிய வேத அறிவு அநேகருக்கு இல்லை. உண்மையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அடிப்படையே இந்தப் பாவநிவாரணபலி என்றுதான் கூறவேண்டும். வேதத்தின் ஒரு வசனம் சொல்லுகிறது, ‘இரத்தம் சிந்தாமல் பாவத்திற்கு மன்னிப்பில்லை’ என்று. அந்தளவுக்கு கிறிஸ்துவின் பாவநிவாரணபலி சுவிசேஷத்தின் அடித்தளமாக அமைந்திருக்கிறது. பாவிகளின் ம¦ட்பின் நிறைவேற்றத்துக்கு இத்தனை அவசியமாக இருக்கும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலி பற்றிய வேதபூர்வமான தெளிவான புரிந்துகொள்ளுதல் நமக்கு அவசியம். பாவநிவாரணபலிபற்றிய உண்மைகள் தெரியாமல், அதுபற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருப்போமானால் அது நாம் பிரசங்கிக்கும் சுவிசேஷத்தை மாற்றிவிடவோ அல்லது சிதைத்துவிடவோ கூடிய ஆபத்தை விளைவிக்கும்.
பாவநிவாரணபலியைப் பற்றிய எந்த விளக்கமும் அதற்கான காரணகர்த்தாவாக ஆண்டவருடைய உச்சகட்ட அன்பைச் சுட்டுவதாக இல்லாமலிருந்தால் அது முறையான விளக்கமாக அமையமுடியாது. அதை நிரூபிப்பதற்கான அருமையான வேதவசனமாக யோவான் 3:16 இருக்கிறது.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
தெய்வீக வெளிப்படுத்தலாக இருக்கும் இந்த வசனமே பாவநிவாரணபலிபற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அவசியமான இறுதி வார்த்தையாக இருக்கவேண்டும். இதைத் தாண்டி நம்மால் போகமுடியாது; போகவும்கூடாது.
பாவநிவாரணபலிக்கு அத்திவாரமாகவும், அதேநேரம் அதை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும் தேவனுடைய அன்பு விசேஷ தன்மை கொண்டது என்று வேதம் விளக்குகிறது. தேவனின் இந்த அன்பைப்பற்றி பவுலைவிடப் பெரிதாகப் பேசியவர்கள் எவரும் இல்லை.
31இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோமர் 8:31-32)
இதே பவுல், இத்தகைய தேவ அன்புக்குக் காரணமாயிருக்கின்ற கடவுளின் நித்திய ஆலோசனையை நமக்கு விளக்கி மேலேகுறிப்பிட்ட வேதவசனங்களுக்கு அந்த ஆலோசனையே அர்த்தத்தை அளிப்பதாகக் கூறுகிறார்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். (ரோமர் 8:29)
எபேசியர் 1:4-6 ஆகிய வசனங்களில் இதையே இன்னும் வெளிப்படையாக பவுல் விளக்குகிறார்.
4தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.
கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் ஊற்றாக இருக்கும் தேவனுடைய அன்பை சாதாரணமான அன்பாக நாம் கருதக்கூடாது; அந்த அன்பே தேவனுடைய மக்களைத் தெரிந்துகொள்ளுகிறதாகவும், முன்குறிக்கிறதாகவும் இருக்கிறது. கடவுள் தன்னுடைய ஆற்றலுள்ளதும், நித்தியமானதுமான அன்பை எண்ணிக்கையற்ற தம்முடைய மனிதர்கள்மீது காட்டியிருப்பதுமட்டுமல்லாமல், அந்த அன்பின் உறுதியான நோக்கத்தையே கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.
கடவுளுடைய இந்த இறையாண்மைகொண்ட அன்பை நாம் ஆழமாக சிந்தித்துப் பார்த்து விளங்கிக்கொள்ளுவது அவசியம். உண்மையில் கடவுள் அன்புரூபமானவர். கடவுளுடைய அன்பு நிலைதடுமாறுவதில்லை; தாம் நினைத்தபோது கடவுள் அன்புள்ளவராகவும், ஏனைய வேளைகளில் அன்பற்றவராகவும் நடந்துகொள்வதில்லை. அவர் தன் தன்மையில் நிரந்தரமாக எக்காலத்துக்கும், காலங்களுக்கு அப்பாலும் அன்புரூபமானவராக இருக்கிறார். கடவுள் நித்தியத்திற்கும் ஆவியானவராகவும், ஒளியாகவும் இருப்பதுபோல் எப்போதும் அன்புரூபமானவராகவும் இருக்கிறார். ஓர் உண்மையை மறந்துவிடாதீர்கள் & ஆக்கினைத்தீர்ப்பைத் தலைமேல்தாங்கி நித்திய நரகத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறவர்களை மீட்டு, அவர்களைத் தன்னுடைய பிள்ளைகளாகத் தத்தெடுத்து ஆசீர்வதிக்கவேண்டிய கட்டாயம் கடவுளுடைய தெரிந்துகொள்ளுகிற அன்பிற்கில்லை என்பதை நாம் உணரவேண்டியது அவசியம். தம்முடைய சுயாதீனமான, இறையாண்மைகொண்ட நன்மையான சித்தத்தின் காரணமாகவே அவர் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்துகொண்டு அவர்களைக் கிறிஸ்துவுடன் உடன்பங்காளிகளாக்கியிருக்கிறார். இது அவருடைய தன்மையாகிய நல்லெண்ணத்தின் ஆழத்தில் இருந்து புறப்பட்டதாகும். அன்பின் காரணமாகக் குறிப்பிட்ட மக்களைத் தெரிந்துகொண்டு அவர்களை மீட்பதற்கான முழுக்காரணமும் அவரில் மட்டுமே தங்கியிருக்கிறது. அவர் என்றும் இருப்பவராக இருந்து அதைச் செய்கிறார். ஜோன் மரே சொல்லுகிறார், ‘பாவநிவாரணபலியாகிய கிறிஸ்துவின் கிரியை கடவுளுடைய அன்பை சம்பாதிக்கவில்லை; அது கடவுளுடைய அன்பை நிர்ப்பந்திக்கவில்லை’ என்று. அதாவது, பாவநிவாரணபலியின் காரணமாக கடவுளின் அன்பு மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. மாறாக, கடவுளுடைய அன்பே பாவநிவாரணபலி நிகழ வேண்டிய அவசியத்தை உண்டாக்கி, அன்பின் உறுதியான நோக்கத்தை நிறைவேற்றும் கருவியாகக் கடவுளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுளின் அன்பு மட்டுமே பாவநிவாரணபலிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இந்த முறையில் கடவுளின் அன்பை சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? மீட்புக்கு ஆதாரம் கடவுளின் நித்திய அன்பு. நம்முடைய ஆத்மீக விடுதலைக்கு மூலகாரணம் கடவுளின் நித்திய அன்பு.
மேலே நாம் பார்த்திருக்கும் உண்மைகளின் அடிப்படையில் பாவநிவாரணபலிக்கு அத்திவாரமாகவும், அதனை அவசியமாக்குவதாகவும் கடவுளின் அன்பே என்பதை நாம் உறுதியாக நம்பவேண்டும். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் பாவநிவாரணபலிக்குக் காரணம் மனிதனின் நிர்ப்பந்தமான, பரிதாபகரமான நிலையோ, மனிதனின் தேவைகளோ அல்ல. இன்றைய சுவிசேஷப் பிரசங்கங்களில் மனிதனின் தேவையே அதிகமாக வலியுறுத்தப்படுகிறது; மனிதனை முதன்மைப்படுத்தி சுவிசேஷம் விளக்கப்படுகிறது. வேதபோதனைகள் அதற்கு மாறாக அமைந்திருக்கின்றன. கடவுளின் நித்திய அன்பு வைராக்கியத்துடன், கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்புக்கு அவசியமானதாகக் கண்டு அதை சிலுவையில் நிறைவேற்றியிருக்கிறது. சுவிசேஷம் மனிதனுக்கு இன்று அவசியமாயிருப்பதற்குக் காரணம் மனிதனின் பாழான ஆத்மீக நிலையோ, அவனுடைய பல்வேறுபட்ட தேவைகளோ அல்ல; கடவுளின் நித்திய, நிரந்தர அன்பே அதற்கு மூலகாரணம்.
இதுவரை நாம் பார்த்திருக்கும் சத்தியங்கள் உண்மையாக இருந்தபோதும் அவை முக்கியமானதொரு கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்வி, ‘தேவனுடைய அன்பு பாவநிவாரணபலியைக் கட்டாயமானதாக்கி அதை நிறைவேற்றியிருப்பதற்கு காரணம் என்ன?’ என்பதுதான். அதாவது, கிறிஸ்து இரத்தம் சிந்தவேண்டியதன் அவசியமென்ன? மகிமையின் தேவனாகிய தேவகுமாரன், அந்நிலைக்குத் தன்னைத் தாழ்த்தி பாவநிவாரணபலியாகத் தன்னை ஒப்புக்கொடுத்ததற்கு என்ன காரணம்? ஆண்டவர் மனிதனாகப் பிறந்ததற்குக் காரணம் என்ன? இங்கிலாந்தின் கென்டபெரியைச் சேர்ந்த அன்சலோம், ‘வல்லமையுள்ள தேவன் ஆவியின் மூலமும் வார்த்தையின் மூலமும் தன் அன்பைக்காட்டித் தன்நோக்கத்தை நிறைவேற்றியிருக்கலாமே?’ என்று கேட்கிறார். இந்தக் கேள்விகள் இடக்குத்தனமான கேள்விகள் அல்ல; கிறிஸ்துவின் மீட்புக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ளுவதற்காகக் கேட்கப்படுகின்ற அவசியமான கேள்விகள். இந்தக் கேள்விகளை உதாசீனப்படுத்துவோமானால் மீட்புக்கான உண்மையான காரணத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். தேவன் ஏன் மனிதனாகப் பிறந்தார்? சிலுவையில் மரித்த தேவன் ஏன் அத்தனைக் கொடூரமான மரணத்தைச் சந்தித்தார்?
இந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்கள் அனைத்திலும் இருவகை பதில்கள் முக்கியமானவை என்பதை ஜோன் மரே சுட்டிக்காட்டுகிறார்.
- அனுமானத்தின் காரணமான தேவை (Hypothetical necessity).
- கட்டாயத்தின் காரணமான தேவை (Absolute necessity).
அதாவது, பாவநிவாரணபலி அவசியமானது என்பதை அடிப்படையாகக்கொண்டு அதற்கான காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்த இரண்டுவகை பதில்களும் அளிக்கப்படுகின்றன. ஆகஸ்தீன், தொமஸ் அக்குயினாஸ் ஆகியோர் முதலாவது கருத்தைக் கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள். புரொட்டஸ்தாந்து, சீர்திருத்த திருச்சபைப் பிரிவினர் இரண்டாவது கருத்தைக் கொண்டிருந்தனர்.
சில அனுமானங்களின் காரணமாக பாவநிவாரணம் அவசியம் என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்கள் கொடுக்கும் விளக்கத்தைக் கவனிப்போம். அவர்கள், பாவநிவாரணபலி இல்லாமலேயே கடவுள் பாவத்தை மன்னித்து மனிதர்களை இரட்சித்திருக்க முடியும் என்றும், அனைத்துக் காரியங்களையும் செய்யமுடிந்த ஆற்றலுள்ள கடவுளுக்கு அதை நிறைவேற்ற எத்தனையோ வழிகளுண்டு என்றும் கருதுகிறார்கள். இருந்தபோதும், இறையாண்மையும் ஞானமும்கொண்ட கடவுள் பாவநிவாரணபலியைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் பாவிகளின் இரட்சிப்பிற்கான வழியை ஏற்படுத்தினார் என்கிறார்கள். அது ஏன் என்பதற்கு அவர்கள் தரும் விளக்கம் என்ன தெரியுமா? பாவநிவாரணபலி மூலம் மட்டுமே மேலதிகமான பலாபலன்கள் உண்டு என்றும், அதன் மூலம் மட்டுமே கிருபை மகோன்னதமான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது என்றும், இந்தக் காரணங்களுக்காக பாவநிவாரணபலி அவசியமானது என்று கடவுள் தீர்மானித்தார் என்கிறார்கள் இந்தப் பிரிவினர். பாவநிவாரணபலி இல்லாமலேயே கடவுளால் மனிதர்களை இரட்சித்திருக்க முடியும் என்றாலும், தன்னுடைய இறையாண்மையுள்ள ஆணையின் மூலம் அவர் வேறுவழிகளைத் தெரிந்துகொள்ளவில்லை என்பது இவர்களுடைய கருத்தாக இருந்தது. இரத்தம் சிந்தாமல் பாவத்திற்கு நிவாரணமும், இரட்சிப்பும் கிடையாது என்கிறது வேதம்; இருந்தாலும், கடவுளின் தன்மையிலோ அல்லது பாவநிவாரணத்தின் தன்மையிலோ இரத்தம் சிந்துவதைக் கட்டாயமாக்கும் வகையில் எதுவுமே காணப்படவில்லை என்று அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். இதுவே அனுமானத்தின் காரணமாக பாவநிவாரணம் தேவை எனும் எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறவர்களின் விளக்கமாக இருக்கிறது.
இரண்டாவது விளக்கம், கட்டாயத்தின் அடிப்படையிலான தேவை. இந்த வார்த்தைப் பிரயோகத்தில் ‘கட்டாயம்’ என்ற வார்த்தை, தன்னுடைய இலவசமானதும் இறையாண்மையுடையதுமான கிருபையின் அடிப்படையிலேயே கடவுள் தன் தயவுள்ள சித்தத்தின் மூலமும், ஆணையின் மூலமும் எவரையும் இரட்சிக்கிறார் என்பதைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாவநிவாரணம் ஏன் அவசியம் என்பதற்கு இவர்கள் அளிக்கும் விளக்கத்தைக் கவனிப்போம். அதாவது பாவத்தில் இருக்கும் மனிதரை இரட்சிப்பது கடவுளைப் பொறுத்தவரையில் அதிமுக்கியமானதோ, கட்டாயமானதோ இல்லை. அவருக்கு அதைச் செய்யவேண்டிய அவசியமும் கிடையாது. பாவத்திற்குக் காரணகர்த்தா அவர் அல்ல; மனிதன் அவரை நிராகரித்ததே பாவம் சம்பவித்ததற்குக் காரணம். அப்படியிருக்கும்போது பாவநிவாரணபலி ஏன் கட்டாயமானதாகிறது? இறையாண்மையுள்ள கடவுள் தன்னுடைய சித்தத்தினால் தம்முடைய மகிமையின் புகழ்ச்சிக்காக கிறிஸ்துவின் பாவநிவாரணபலியைத் திட்டமிட்டு நிறைவேற்றி அதன் மூலம் இரட்சிக்கிறார் என்கிறார்கள் இந்தப் பிரிவினர். கடவுளுடைய இறையாண்மையும், ஞானமும், அன்பும் அதைக் கட்டாயமானதாக்குகிறது என்பது இந்த விளக்கத்தைத் தருகிறவர்களின் வாதம். ‘கட்டாயத்தின் அடிப்படையிலான தேவை’ என்ற வார்த்தைப் பிரயோகம் இதைத்தான் விளக்குகிறது. நன்மையே உருவான கடவுள் தன்னுடைய மகிமையின் புகழ்ச்சிக்காகத் தம்முடைய நித்திய அன்பின் அடிப்படையில் மனிதகுலத்தில் குறிப்பிட்ட தொகையினரை நித்திய வாழ்வுக்காகத் தெரிவுசெய்திருப்பதால், தன்னுடைய ஒரே குமாரனைப் பலிகொடுப்பதன் மூலம் அந்த நோக்கத்தை நிறைவுசெய்யவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகிறார். இந்த அவசியமான கட்டாயம் அவருடைய பூரணமான குணாதிசயங்களில் இருந்தே புறப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்லப்போனால், எவரையும் இரட்சிக்க வேண்டிய அவசியம் கடவுளுக்கு இல்லாவிட்டாலும், இரட்சிப்பது என்று முடிவுசெய்துவிட்டதால், இந்த இரட்சிப்பைப் பூரணமாக நிறைவேற்ற, இரத்தம் சிந்தி மீட்பைப் பெற்றுத்தரக்கூடிய கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் மூலம் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகிறது. இது அனுமானத்தின் அடிப்படையிலான தேவை என்ற விளக்கத்திற்கு முற்றிலும் மாறானது.
இதுவரை நாம் பார்த்திருப்பவற்றை வாசிக்கும்போது, இது என்ன, கடவுளுக்கு எது அவசியம், அவசியமில்லை என்றெல்லாம் இப்படி ஆராய்வது தேவையில்லாமல் வேதத்தில் இல்லாத விஷயத்தை தேடுவதுபோல் இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். அதுவும் இரத்தம் சிந்தாமல் பாவநிவாரணம் இல்லை என்று வேதவசனம் தெளிவாகச் சொல்லும்போது கடவுளுக்கு எது முடியும், முடியாது என்று கேட்பதெல்லாம் சரியா? என்றுகூட நினைக்கத்தோன்றலாம். ஆனால், கடவுளால் எது முடியும், எதைச் செய்வது அவருக்கு அவசியம் என்றெல்லாம் சிந்திப்பது அவரையோ, வேதத்தையோ குறித்து சந்தேகமெழுப்பும் கேள்விகள் என்று நினைத்துவிடக்கூடாது. கடவுளால் பொய் சொல்ல முடியாது, அவரால் தன்னை மறுதலிக்க முடியாது என்று உறுதியாக நாம் சொல்வது நம்முடைய விசுவாசத்தின் காரணமாகத்தான். அத்தகைய தெய்வீக ‘முடியாதவைகள்’ அவருடைய மகிமையாக இருக்கின்றன. ஆகவே அவரால் முடியாத அத்தகைய விஷயங்களைப்பற்றி நாம் சிந்திக்காமல் இருப்போமானால் அவருடைய பூரணத்துவத்தையும் மகிமையையும் நாம் மறுதலிக்கிறவர்களாகிவிடுவோம்.
இதற்குமேல் கேட்கவேண்டிய முக்கியமானதொரு கேள்விக்கு வருவோம். இதுவரை நாம் பார்த்திருப்பவற்றை ஆணித்தரமாகப் போதிக்கும் வசனங்கள் வேதத்தில் இருக்கின்றனவா? என்பதுதான் அந்தக் கேள்வி. மறுபடியும் கூறுவதானால், பாவிகளுக்காக அவர்களுடைய இடத்தில் இருந்து கிறிஸ்து தன்னையே பலிகொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றாமல் கடவுளால் பாவிகளை இரட்சிப்பதற்கு வேறு எந்தவிதத்திலும் முடியாது என்பது மட்டுமல்லாமல், அதைச் செய்வது அவருடைய பூரணத்துவம் மற்றும் நோக்கங்களின் அடிப்படையில் கட்டாயமானதாக இருப்பதால், சுயாதீனமாகவும் இறையாண்மையுடனும் திட்டமிடப்பட்ட இரட்சிப்பு மகிமையின் ஆண்டவர் தன்னையே பலியாகக்கொடுத்து இரத்தம் சிந்தியே நிறைவேற்றப்பட வேண்டும். இனி நான் விளக்கவிருக்கும் வேதவசனங்கள் இதை ஆணித்தரமாகப் போதிக்கின்றனவாக இருக்கின்றன. இந்த வசனங்களனைத்தையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தும், தனித்தனியாக அவற்றின் உள்ளர்த்தங்களை அவை தரப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களுக்கேற்ப ஆராயும்போது இதுவரை நான் விளக்கியிருக்கும் உண்மைகள் தெளிவாகப் புலப்படும்.
1. முதலாவது பட்டியலில் தரப்போகிற வசனங்கள் மிகவும் வலிமையாக என் வாதத்தை முன்னெடுத்து வைக்கின்றவையாக இருக்கின்றன.
10ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
17அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. (எபிரெயர் 2:10, 17)
இந்த வசனங்களைக் கவனமாக வாசியுங்கள். அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கு அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாயிருந்தது என்கிறது வசனம். அதாவது, அப்படிச் செய்வது அவருக்குப் பொருத்தமானதாக இருந்தது என்பது இதற்கு அர்த்தம். ஏன்? அதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அவருடைய ஞானத்திற்கும் அன்பிற்கும் ஏற்றபடி அப்படி நிகழ்வதே தகுந்தது என்று சொல்லி முடித்துவிட முடியாது. அதையே யூகத்தின் அடிப்படையிலான அவசியமாகக் கருதுகிறவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த வசனங்கள் அதைவிட மேலான உண்மைகளை வலியுறுத்துகின்றன. ஜனத்தின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்கேதுவான ‘தேவகாரியங்கள்’ நிறைவேற வேண்டும் என்று 17ம் வசனம் கூறுகிறது. இறையாண்மையின் அடிப்படையிலான கிருபையின் தேவகாரியங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த தேவகாரியங்கள் நிறைவேற இரட்சிப்பின் அதிபதி தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இயேசு கிறிஸ்து இந்தவிதமாக உபத்திரவங்களைச் சந்தித்து, பாவநிவாரணபலியாகத் தம்மை ஒப்புக்கொடுத்து இரத்தம் சிந்துவதே தேவகாரியங்களை நிறைவேற்றி பாவிகளுக்கு விடுதலைதரப் பூரணமான ஒரே வழி என்பதை இந்த வசனங்கள் வலியுறுத்துகின்றன. இரண்டு வசனங்களிலும் ‘ஏற்றதாயிருந்தது’, ‘வேண்டியிருந்தது’ என்று முடியும் வார்த்தைகளைக் கவனியுங்கள். இவ்வாறு நடப்பதே கடவுள் செய்கின்ற தேவகாரியங்களுக்கேற்ற பொருத்தமான செயல் என்பதை அந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன.
2. யோவான் 3:14-16 போன்ற வசனப்பகுதிகள் கிறிஸ்து தன்னைப் பாவிகளுக்காக சிலுவையில் ஒப்புக்கொடுத்தது அவர்களை நித்திய நரகத்தில் இருந்து விடுவிப்பதற்கு என்ற மாற்றுக் காரணத்தை முன்வைக்கின்றன என்பது உண்மைதான். நித்திய நரகத்தை அனுபவிப்பதில் இருந்து பாவிகளை விடுவிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒரே வழி தேவகுமாரனைக் கடவுள் அவர்களுக்காக அனுப்பிவைத்ததுதான். இருந்தபோதும், இதைத்தவிர அவர் வேறு எதையும் செய்திருக்க முடியாது என்ற மேலதிக உண்மையை இந்தப் பகுதி விளக்குவதை ஒருவராலும் மறுதலிக்க முடியாது.
3. வேறு சில வேதப்பகுதிகளான எபிரெயர் 1:1-3; 2:9-18; 9:9-14; 22-28 ஆகியவை, கிறிஸ்துவின் பூரணத்துவமான தனித்துவம் கொண்ட குணாதிசயங்களிலேயே அவருடைய சிலுவைபலியின் நிறைவேற்றமும், வெற்றியும் தங்கியிருப்பதாக விளக்குகின்றன. நாம் உறுதிப்படுத்தப்படும்படியாக விளக்கிக்கொண்டிருக்கும் உண்மையை நிரூபிக்க இந்தக் காரணம் மட்டுமே போதாது. இருந்தபோதும் இந்தப் பகுதிகளை ஆழ்ந்து, ஆராய்ந்து கவனிக்கும்போது அவை மேலும் தெளிவான உண்மைகளை வெளிப்படுத்துவதைக் கவனிக்கலாம். இந்தப் பகுதிகள் அனைத்தும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் பூரணத்துவத்தையும், முடிவையும், நிலையான தொடரும் பயன்பாட்டையும் வலியுறுத்துவனவாக இருக்கின்றன. பாவநிவாரணபலியின் அத்தகைய குணாதிசயங்கள் பாவம் எந்தளவுக்கு கோரமானது என்பதையும், இரட்சிப்பின் நிறைவேற்றத்திற்கு பாவம் அடியோடு அகற்றப்படவேண்டியது எந்தளவுக்கு முக்கியமானது என்பதையும் விளக்குகின்றன. இந்தக் காரணிகளே எபிரெயர் 9:23க்கு அதிக பலமளிக்கின்றன.
ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே.
பரலோகத்திலுள்ளவைகளுக்கு சாயலானவைகள் மிருகங்களைப் பலிகொடுப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படவேண்டியதாக இந்த உலகத்தில் இருந்தபோதும், பரலோகத்திலுள்ளவைகளுக்கு இவற்றைவிட விசேஷமான குமாரனின் இரத்தப்பலி மூலம் மட்டுமே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது என்று இந்த வசனம் கூறுகிறது. இயேசுவின் இரத்தப்பலி மூலம் மட்டுமே இது நடக்கக்கூடியதாக இருக்கிறது என்பதை இந்த வசனம் ஆணித்தரமாக விளக்குகிறது. அந்தவகையில் இயேசுவின் இரத்தம் மட்டுமே இந்தப்பலிக்கு ஏற்றதாக இருப்பதற்குக் காரணம், இயேசு பிதாவின் குமாரனாக இருப்பதும், பிதாவின் மகிமையைக் கொண்டிருப்பதும், பிதாவின் குணாதிசயத்தை அப்பட்டமாகத் தன்னில் கொண்டிருப்பவராக இருப்பதும்தான். அவருடைய ஒரேதடவையான பூரணமான சிலுவைபலி மட்டுமே பரிசுத்தமாக்கப்படுகின்ற அனைவரையும் பூரணர்களாக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. ஆகவே, இந்த வசனங்கள் விளக்கும் தகுதிகளைக் கொண்டிருக்கும் ஒருவர், அத்தகைய பூரணமான பலியைச் செலுத்துவதன் மூலம் மட்டுமே பாவத்தை அழித்து, பரிசுத்தமான தெய்வீக சந்நதியில் நிற்கும்படியாக அநேக பிள்ளைகளைக் கொண்டு நிறுத்தும் பாவநிவாரணத்தை நிறைவேற்ற முடியும் என்று கூறுவது சரியானதே. என்ன நோக்கங்களுக்காகவும், முடிவுக்காகவும் இயேசு இரத்தஞ்சிந்த வேண்டியிருந்ததோ அந்த நோக்கங்கள் நிறைவேற பாவநிவாரணபலி அவசியமாக இருந்தது.
இவை தவிர எபிரெயர் 9:9-14; 22-28 ஆகிய வசனங்களும் இந்த உண்மைகளை விளக்கப் பயன்படுகின்றன. இந்தப் பகுதிகள் முக்கியமாக லேவியராகமத்தில் விளக்கப்பட்டிருக்கும் பலிகளைச் சுட்டிக்காட்டும் கிறிஸ்துவின் பாவநிவாரணபலியின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. நாம் எப்போதுமே லேவியராகமப் பலிகள் அனைத்தும் கிறிஸ்துவின் பலிகளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதாகக் கவனித்திருக்கிறோம். லேவியராகமப் பலிகள் கிறிஸ்துவின் பலியின் விசேஷ தன்மைகளை சுட்டிக்காட்டும் முக்கிய அம்சங்களான பாவத்தைக் கழுவுதல், கோபநிவாரணம், ஒப்புரவாக்குதல் ஆகியவற்றை விளக்குவனவாக இருக்கின்றன. ஆனால், இந்தவிதத்திலான விளக்கத்தைத் தருவதாக எபிரெயர் 9 காணப்படவில்லை. எபிரெயர் 9, பரலோகத்தில் உள்ளவைகளுக்கு சாயலானவைகளை விளக்குபவையாக லேவியராகமப்பலிகள் இருப்பதாகக் காட்டுகின்றன. இதை 9:23ல் காண்கிறோம். லேவியராகமப்பலிகள் இரத்தபலியைக் கொண்டதாக ஏற்படுத்தப்பட்டதற்குக் காரணம், அதற்கு சாயலாக இருக்கும் பரலோகச் சுத்திகரிப்பும் அதேமுறையில் இரத்தப்பலியைக் கொண்டதாக இருக்கும் என்பதற்காகத்தான். பரலோகச் சுத்திகரிப்பு இரத்தப்பலியின் மூலமாக இருப்பது அவசியமாகக் காணப்படுவதால்தான் லேவியராமகப்பலிகள் அதேவிதமான இரத்தப்பலியை அவசியமாகக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. இந்த இடத்தில் நம் மனதில் எழ வேண்டிய முக்கியமான கேள்வி எது தெரியுமா? பரலோக சுத்திகரிப்புக்கு அத்தகைய இரத்தப்பலியின் அவசியம் என்ன? என்பதுதான். அது யூகத்தின் காரணமாக உருவானதா அல்லது கட்டாயத்தின் காரணமானதா? கீழ்வரும் விளக்கங்கள் அதற்குப் பதிலளிப்பவையாக இருக்கின்றன.
(அ) எபிரெயர் 9ஐ, அந்தப் பகுதியின் சந்தர்ப்பத்தின் அடிப்படையில் ஆராயும்போது, அது பாவமும், அதன் விளைவுகளுமே நிலைத்திருந்து தொடரும் பலாபலன்களை அளிக்கும் கிறிஸ்துவின் பலியின் அவசியத்திற்கான காரணிகளை நிர்ப்பந்திக்கின்றன என்பதை விளக்குவதாக இருக்கின்றது. அந்தக் காரணிகள் வெறும் யூகமல்ல; அவை உறுதியானவையும் கட்டாயமானவையுமாகும். பாவத்தின் விளைவுகளும் அதை அகற்றுவதற்கான அவசியமும் உண்டாக்கும் தத்துவார்த்தமான வாதம், யூகத்தின் அடிப்படையிலான அவசியம் என்ற வாதத்தோடு பொருந்திப்போகவில்லை. பாவத்தின் கோரத்தன்மை, கடவுள் அதை அழித்துக் கழுவுவதை தவிர்க்கமுடியாததாக்குகிறது; அதாவது அவசியமான கட்டாயமாக்குகிறது.
(ஆ) இந்தப் பகுதி வெளிப்படுத்தும் இன்னொரு உண்மை, கிறிஸ்துவின் பாவநிவாரணபலி சிலுவையில் நிகழ்ந்த விதமும், அதன் பலாபலன்களும் கிறிஸ்துவின் பூரணத்துவத்தில் முழுமையாகத் தங்கியிருக்கின்றன என்பதாகும். பாவத்தை அழிப்பதற்கான அத்தகைய பாவநிவாரணபலி அவசியமாக இருந்தால் அவரைத் தவிர வேறு எவருமே அதை நிறைவேற்றியிருக்க முடியாது.
(இ) இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தோடு தொடர்புடையதாக காணப்படும் பரலோகத்துக்குரிய அம்சங்கள் உண்மையானவை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த ஒப்பீட்டை ஆராய்ந்து பார்க்கும்போது பரலோகத்துக்குரியவை இந்த உலகத்துக்குரியவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது நித்தியமானவைகள் அழிந்துபோகப்போகிறவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன; பூரணமானவைகள் பூரணமற்றவைகளோடு ஒப்பிடப்பட்டிருக்கின்றன. என்றும் நிலைத்திருப்பவைகள் நிலைத்திருக்காதவைகளோடு ஒப்பிடப்பட்டுள்ளன. கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை நித்தியமானதாகவும், முடிவானதாகவும், பரலோகத்துக்குரியதாகவும் அதனுடைய குணாதிசயங்களின்படி புரிந்துகொள்ளுகிறபோது, கடவுளின் அநேக பிள்ளைகளை மகிமைக்குக் கொண்டுவருவதற்கான அவருடைய திட்டத்தின் நிறைவேற்றுதலை அனுமானத்தின் அடிப்படையில் மட்டும் அவசியமானதாகக் காண்கிற நிலை உருவாவதில் ஆச்சரியமில்லை. கிறிஸ்துவின் பாவநிவாரணபலியை அனுமானத்தின் அடிப்படையில் மட்டும் அவசியமானதாகக் கண்டால் அதோடு தொடர்புடைய அத்தனைப் பரலோகத்துக்குரியவைகளையும் அந்த அடிப்படையிலேயே கருதவேண்டி வரும். அத்தகைய வாதம் முறையானதும், சரியானதும் அல்ல.
எபிரெயர் 9:23ன்படி, பாவத்தை அழிப்பதற்காக கிறிஸ்து இரத்தம் சிந்துதல் (14, 22, 26) அவசியமான கட்டாயமாக விளக்குகிறது; அது அனுமானத்தின் அடிப்படையிலானதல்ல. அதில் சந்தேகப்படுவதற்கோ, அல்லது அதை நிரூபிப்பதற்கோ எந்த அவசியமும் இல்லை.
4. கிருபையை ஆதாரமாகக் கொண்டு, அவசியமான கிறிஸ்துவின் பாவநிவாரணபலியைத் தன்னுள் உள்ளடக்கியுள்ள இரட்சிப்பு, ஒருவருக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளித்து, அவரைப் பரிசுத்தமாக்கி கடவுளோடு ஐக்கியத்தை உண்டாக்கும் இரட்சிப்பாகும். பரிசுத்தமாக்குதலோடும், கடவுளுடைய நீதியோடும் சம்பந்தமுடையதாக இந்த இரட்சிப்பை நாம் பார்ப்போமெனில், அது பாவமன்னிப்பை மட்டும் அளிக்கின்றதாக இல்லாமல் நீதியையும் சம்பாதித்துத் தருவதாக இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய நீதிமானாக்குதல் இரட்சிப்படைவதற்கு முன் நாம் கண்டனத்துக்குரியவர்களாகவும், குற்றவாளிகளாகவும் இருப்பதாக நம்மை எதிர்கொள்ளுகிறது என்பதையும் நாம் கவனத்தில் வைப்பது அவசியம். அத்தகைய நிலைமையில் இருந்து நம்மை விடுவிப்பதற்காக அந்த நீதிமானாக்குதல் நீதியை நமக்காக சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. கிருபை ஆளுகின்றபோதும், நீதியைச் சம்பாதிக்காத கிருபை மெய்யானதல்ல; அத்தகைய கிருபை இருக்கமுடியாது. அத்தகைய நீதி பாவிகளை நீதிமானாக்க முடியுமா? என்ற கேள்விக்குப் பதிலளிப்பது அவசியம். நம்முடைய நிலைமையில் இருந்து நம்மை விடுவிக்கக்கூடியதும், நீதிமானாக்குதலுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றக்கூடியதுமான நீதி கிறிஸ்துவின் நீதியாக மட்டுமே இருக்க முடியும். அத்தகைய நீதி கிறிஸ்துவின் கீழ்ப்படிதலையும், அவர் மனிதனாகப் பிறந்து மரித்து உயிர்த்தெழுவதையும் அவசியமாக்குகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நீதிமானாக்குதலுக்கு பாவநிவாரணபலி மிகவும் அவசியமாக இருப்பது மட்டுமல்லாமல், அதில்லாமல் நீதிமானாக்குதல் நிகழவழியில்லாதபடி அதை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. நீதிமானாக்குதல் இல்லாமல் பாவிகளுக்கு இரட்சிப்பிருக்க வழியில்லை; அதேவேளை மீட்பர் சம்பாதித்துத் தரும் கடவுளின் நீதியில்லாமல் பாவிகள் நீதிமான்களாவதற்கும் வழியில்லை. பவுல் கலாத்தியர் 3:21ல் சொல்லுவதைக் கவனியுங்கள்,
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
இதன் மூலம் பவுல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் அல்லாமல் நியாயப்பிரமாணத்தின் மூலம் நீதிமானாக்குதல் நிகழ்ந்திருக்குமானால் அப்படியே ஆகியிருக்கும் என்கிறார். அதை அவர் சொல்லுவதற்குக் காரணம் நீதிமானாக்குதல் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்பதை வலியுறுத்துவதற்காகத்தான்.
5. கிறிஸ்துவின் சிலுவையே கடவுளின் அன்பை வெளிப்படுத்தும் உச்சகட்ட நிகழ்வாக இருக்கிறது (ரோமர் 5:8; 1 யோவான் 4:10). கிறிஸ்து தன்மேல் சுமந்து நிறைவேற்றியிருக்கும் அதிக பாரமுள்ள சிலுவைபலி அதன் மூலம் அவர் காட்டியிருக்கும் அன்பின் மேன்மையை வெளிப்படுத்துகிறது. இதையே பவுல் ரோமர் 8:32ல் விளக்குகிறார்,
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?
கிறிஸ்துவின் சிலுவைத்தியாகம் அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தி எல்லையற்ற ஈவுகளையெல்லாம் அவர் நமக்கு அள்ளித்தரக்கூடியவராக இருக்கிறார் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.
இருந்தபோதும் அத்தகைய விலைமதிப்பற்ற பாவநிவாரணபலி அவசியமில்லாதிருந்திருக்குமானால் சிலுவைபலி கடவுளின் உன்னதமான அன்பை வெளிப்படுத்தியிருக்குமா? என்று கேட்பது அவசியம். தெய்வீகப் பேரன்பின் உச்சகட்ட அடையாளமாக கிறிஸ்துவின் சிலுவைபலி நிறைவேற்றப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களுக்கு கிறிஸ்துவின் பலியைத் தவிர வேறு எதுவும் அவசியமானதாக இருந்திருக்க முடியாது என்பதுதான் என்ற முடிவுக்கே நம்மால் வரமுடிகிறது. இந்த அடிப்படையிலேயே யோவான், 1 யோவான் 4:10 தந்திருக்கும் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது.
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் (கோபநிவாரணபலி) தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.
கிறிஸ்துவின் சிலுவைபலி இல்லாதிருந்தால் கல்வாரிச் சிலுவையினதும், அதனுடைய உச்சகட்ட அன்பினதும் உட்கருத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்குத் தேவையான அம்சங்கள் இல்லாமல் போயிருக்கும்.
6. இறுதியாக, சிலுவைபலியின் அவசியத்தை கடவுளின் நீதி நிறைவேற்றப்பட்ட முறையில் இருந்தும் அறிந்துகொள்ளலாம். பாவம் கடவுளுக்கு எதிரானதாக இருப்பதால் அவர் அதற்கெதிராகத் தன்னுடைய பரிசுத்தக் கோபத்தைக் காட்டுவது அவசியம். அதாவது தெய்வீக நீதியின் மூலம் பாவம் அழிக்கப்படவேண்டும். (நாகூம் 1:2; ஆபகூக் 1:13; ரோமர் 1:17; 3:21-26; கலாத்தியர் 3:10, 13). இத்தகைய மீறமுடியாத கடவுளின் நியாயப்பிரமாணத்தின் பரிசுத்தமும், பரிசுத்தத்தின் எதிர்பார்ப்புகளின் மாறாத்தன்மையும், சற்றும் மாற்றமடையமுடியாத நீதியின் கட்டளைகளும், பாவத்தில் இருந்து இரட்சிப்படைவதற்கு அதிலிருந்து கழுவப்படுவதையும், கோபநிவாரணபலியையும் (கிருபாதாரபலி) தவிர்க்கமுடியாதபடி செய்துவிடுகிறது. இந்த உண்மையே, மகிமையின் தேவனின் பலியையும், கெத்சமனேயில் அவர்பட்ட துன்பத்தையும், கல்வாரிச் சிலுவையில் அவர் நிராகரித்துக் கைவிடப்பட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறது. இந்த உண்மையே, கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு கடவுள் நீதியானவராகவும், நீதியை சம்பாதித்துத் தருகிறவராகவும் இருக்கிறார் என்பதன் உள்ளர்த்தங்களைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. கிறிஸ்துவின் கீழ்ப்படிவே பரிசுத்தத்தையும், நீதியின் கட்டளைகளையும் முழுமையாக நிறைவேற்றுவதாக இருக்கிறது. கடவுள் தன்னுடைய நீதியை வெளிப்படுத்துவதற்காக கிறிஸ்துவை கோபநிவாரண பலியாக்கினார்.
முடிவாக . . .
மேலே நாம் ஆராய்ந்து விளக்கியிருக்கும் காரணங்களுக்காக கிறிஸ்துவின் பாவநிவாரணபலி மிகவும் அவசியமான, கட்டாயமான சிலுவைத் தியாகமாக கடவுளின் திட்டத்தில் அமைந்திருக்கிறது. இது எந்த அனுமானத்தின் அடிப்படையிலானதுமல்ல. கடவுள் எதையும் செய்யக்கூடியவராகவும், அவற்றை எந்தவிதத்திலும் செய்யக்கூடியவராகவும் இருந்தபோதிலும், அவருடைய பரிபூரணமான, பரிசுத்த அன்பின் அடிப்படையிலான திட்டத்தின்படி, அந்தத் திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றக்கூடிய பூரணமான நியமமாக கிறிஸ்துவின் கோபநிவாரணபலி மட்டுமே அமைந்துகாணப்படுகின்றது. வேறு எந்தவிதத்திலும் கடவுள் தன்னுடைய அன்பின் திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றியிருக்க வழியில்லை. அவருடைய பூரணப்பரிசுத்தம், ஆற்றல், ஞானம் ஆகியவற்றின் அடிப்படையில் அவரே தன் சித்தத்தின்படி உருவாக்கி நிறைவேற்றியிருப்பதே கிறிஸ்துவின் கோபநிவாரணபலியான மீட்புக்குரிய சிலுவைத் திட்டம். அதைத்தவிர வேறெதுவும் கடவுளின் மக்களுக்கு மீட்பைப் பெற்றுத்தந்திருக்க முடியாது. இந்தக் காரணங்களனைத்தும் அனுமானத்தின் அடிப்படையிலான தேவை என்ற கருதுகோளை வல்லமையற்ற, பொருத்தமற்ற வாதமாக்குகிறது. ஒருபுறம் பாவத்தின் கோரத்தன்மையும், மறுபுறம் அதை அழிப்பதற்கான ஒரே வழியான சிலுவைபலியும், அந்தப் பலியை நிறைவேற்றப் பூரணத்தகுதி பெற்றவராக கிறிஸ்து மட்டுமே இருப்பதும், தெய்வீக அன்பின் பூரணவெளிப்பாடாக இந்தச் சிலுவைபலி செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தோடு தொடர்புடைய இத்தனை அம்சங்களையும் கணக்கில் எடுக்க அனுமானத்தின் அடிப்படையிலான அவசியமாகிய வாதம் தவறிவிடுகிறது. தேவ அன்பின் மகத்துவத்தை கிறிஸ்துவின் கோபநிவாரணபலியில் மட்டுமே நாம் பார்க்கிறோம்.