திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தியளிக்க முடியாமல்போன, தென்மாநிலத்தைச் சேர்ந்த அருமைச் சகோதரர் ஸ்டீபன் ஜனவரியில் நடந்த பல சபைகள் கூடிவந்த குடும்ப மகாநாட்டின்போது கொடுத்த செய்தியின் சாராம்சம்:
‘திருமறைத்தீபத்தில் வெளிவரும் ஒவ்வொரு வாக்கியமும் ஆவிக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன. தலைப்புகள் தலைசிறந்தவையாக இருக்கின்றன. வாசிக்காதவன் சிந்திக்கிறவனாக இருக்க முடியாது என்று எழுதியும், பேசியும் ஆசிரியர் தொடர்ந்து வாசிப்பை வலியுறுத்தி வருவது மிகவும் அவசியமானது. எனக்குத் தெரிந்த போதகர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் புத்தகங்கள் வாசிப்பதற்கு வாழ்க்கையில் இடங்கொடுப்பதில்லை. நான் கொடுக்கும் புத்தகங்களைக்கூட இரண்டு பக்கங்கள் வாசித்துவிட்டு திருப்பித் தந்துவிடுகிறார்கள். அவர்களால் தொடர்ந்து வாசிக்க முடியாமல் இருப்பது மட்டுமல்ல, அதிலிருக்கும் போதனைகள் அவர்களுக்குப் பிடிக்காதவையாக இருக்கின்றன. அவர்களிடம் அதில் என்ன தவறிருக்கிறது என்று ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர்கள், இதெல்லாம் மக்களுக்கு உதவாது; சபை நடத்த உதவாது என்றார்கள். இதுதான் நம்முடைய நாட்டுக் கிறிஸ்தவம் இன்றிருக்கும் நிதர்சனமான நிலை. இதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எப்படியெல்லாம் திருமறைத்தீபத்தைப் பட்டிதொட்டியெல்லாம் நம் மாநிலத்தில் ஆத்துமாக்கள் கையில் கொண்டு சேர்க்க முடியும் என்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்தப் பொறுப்பு இதழை வாசிக்கின்ற நம் கையில் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். நம் காலத்தில் நாம் வாசிக்கும் கிறிஸ்தவர்களாக உயர்வது மட்டுமல்லாமல் மற்றவர்கள் வாசிப்பதற்கு நாம் வழிசெய்து கொடுக்க வேண்டும். அதுவே நம்மின மக்களுக்கு ஆவிக்குரிய விடுதலையைக் கொண்டுவரும். இதை ஜெபத்தில் வைத்து ஆத்துமபாரத்துடன் உழைக்கும்படியாக உங்களைத் தாழ்மையோடுகேட்டுக்கொண்டு, என் வாழ்த்துக்களை இந்த 20ம் ஆண்டு நிறைவு விழாவில் ஆசிரியருக்கும், பத்திரிகைக்குழுவினருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
– ஸ்டீபன், விருதுநகர்.