கிறிஸ்துவின் பாவநிவாரணபலி மகத்தானது. மீட்பின் நிறைவேற்றத்துக்கு எந்தளவுக்கு அது கட்டாயமானதாக, அவசியமானதாக இருக்கிறது என்று வேதம் சுட்டுவதை ஏற்கனவே கவனித்திருக்கிறோம். இனி அந்தப் பாவநிவாரணபலிபற்றி வேதம் கொடுக்கும் விளக்கங்களை ஆராய்வோம். அந்த விளக்கங்களை வேதம் ஒரே பகுதியில் தராமல் பல்வேறு பகுதிகளில் பரவலாகத் தந்திருப்பதால் அவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து ஆராய்வது அவசியமாகிறது. பாவநிவாரணபலியைப்பற்றி வேதம் விளக்கும்போது சில முக்கியமான பதங்களைப் பயன்படுத்தி அதுபற்றிய ஆழமான சத்தியங்களை விளக்குவதைப் பார்க்கிறோம். அத்தகைய பதங்களாக பலி, கோபநிவாரணபலி, ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகியவை இருப்பதைக் கவனிக்கிறோம். கோபநிவாரணபலி என்ற வார்த்தையை நாம் தமிழ் வேதத்தில் காணமுடியாது. அது நான் உருவாக்கியிருக்கும் பதம். Propitiation என்று ஆங்கிலப் பதத்தை தமிழ் வேதம் (பழைய திருப்புதல்) கிருபாதாரபலி என்று மொழிபெயர்த்திருக்கிறது. இந்த வார்த்தை Propitiation என்ற பதத்திற்கான சரியான மொழிபெயர்ப்பு இல்லை. கிரேக்க வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த ஆங்கில வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு கோபநிவாரணபலி என்பதே. அதுவே Propitiation என்ற பதம் விளக்கும் அடிப்படை உண்மைகளை வெளிக்கொணருவதாக இருக்கிறது. இது தவிர ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகிய பதங்களும் கிறிஸ்து நிறைவேற்றிய பாவநிவாரணபலியில் அடங்கிக் காணப்படும் ஆழமான உண்மைகளை வெவ்வேறு கோணத்தில் விளக்குகின்றன. இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி விளக்கக்கூடிய ஒரு பதத்தை நாம் வேதத்தில் தேடிப்பார்த்தால் நமக்குக் கிடைக்கும் வார்த்தையாக ‘கீழ்ப்படிவு’ அமைகின்றது.
தேவகுமாரனாகிய கிறிஸ்து பிதாவுக்குக் கீழ்ப்படிந்து நிறைவேற்றிய அத்தனைப் பணிகளையும் விளக்குகின்றதாக அவருடைய கீழ்ப்படிவு காணப்படுகின்றது. வேதத்தின் பல்வேறு பகுதிகளில் பரவிக்காணப்படும் இந்தப் போதனை, கிறிஸ்துவின் பணிகளனைத்தையும் ஒருசேர விளக்கும் அம்சமாக இருக்கின்றது என்று நாம் உறுதியாகக் கூறமுடியும். இது எந்தளவுக்கு உண்மையானது என்பதைப் பழைய ஏற்பாட்டின் ஒரு வேதப்பகுதியான ஏசாயா 53 தெளிவாகச் சுட்டுகிறது. அந்தப் பகுதி கிறிஸ்துவின் மானுட வாழ்க்கையின் துன்பங்களை விபரித்து அவரை துன்புறுத்தலுக்கான ஊழியராக நம்முன் கொண்டு நிறுத்துகிறது. கிறிஸ்து ஊழியராகவே நம்முன் நிறுத்தப்படுகிறார் என்பதை ஏசாயா 52:11ல் காண்கிறோம், “இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.”
இங்கே ஆங்கில வேதத்தில் servant என்று காணப்படும் பதம் தமிழில் ‘தாசன்’ என்றிருக்கிறது. அது வடமொழி கலந்த பழந்தமிழ். இதை இன்றைய தமிழில் வேலையாள், ஊழியன் என்று கூறலாம். அதாவது, ஒருவருக்குக் கீழிருந்து அவருக்குக் கீழ்ப்படிந்து பணிசெய்கிறவர் என்ற அர்த்தத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இங்கே இயேசு ஊழியராக வர்ணிக்கப்படுகிறார். அவர் ஊழியராக இருந்தே அநேகரை நீதிமான்களாக்குகிறார் என்கிறது ஏசாயா 53:11, “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்.”
இதுபற்றி நமக்கு எந்தவித சந்தேகமும் உண்டாகாதபடி இயேசு கிறிஸ்து தன்னுடைய வார்த்தைகளினாலேயே தான் மானுடப் பிறப்பெடுத்ததற்கான நோக்கத்தை யோவான் 6:38ல் விளக்குகிறார், “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.”
தன்னுடைய பணிகள் அனைத்திலும் மீட்பின் நிறைவேற்றத்திற்கான உச்சகட்ட இறுதிப்பணிபற்றி இயேசு விளக்கும்போது, யோவான் 10:17-18ல் கூறுகிறார், “நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.”
கிறிஸ்து மட்டுமல்ல, அவருடைய கீழ்ப்படிவைப் பவுல் அப்போஸ்தலன் தன்னுடைய வார்த்தைகளில் ரோமர் 5:19ல் விளக்குகிறார், “அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.”
மேலும் பவுல் பிலி 2:7-8ல் இதைப்பற்றி எழுதியிருப்பதைக் கவனியுங்கள்,
7தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
கலாத்தியர் 4:4-5ல் இதுபற்றி விளக்கும் பவுல், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரியினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” என்கிறார்.
இதுவரை நாம் கவனித்துள்ள கிறிஸ்துவின் கீழ்ப்படிவுபற்றி எபிரெயருக்கு எழுதியவரும் தனக்கே உரிய முறையில் 5:8-10 வரையுள்ள வசனங்களில் விளக்குகிறார், “அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”
மேலும் எபிரெயர் 2:10ல் பின்வரும் விளக்கத்தைக் காண்கிறோம்.
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
அநாதி காலத்தில் அன்பின் அடிப்படையில் திரித்துவ தேவன் திட்டமிட்ட மீட்பின் நிறைவேற்றத்திற்காக இயேசு கிறிஸ்து பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அனைத்தையும் நிறைவேற்றவேண்டியிருந்தது. அத்தகைய கீழ்ப்படிவை அவர் தன்னுடைய மானுடத்தின்மூலம் நிறைவேற்றவேண்டியிருந்தது. இது நினைத்துப் பார்ப்பதற்கே பேராச்சரியத்தைத் தரும் தெய்வீக உண்மை. முதலில், தேவனாக எப்போதும் இருந்த அவர் கீழ்ப்படிய வேண்டியிருந்ததை நினைத்துப் பாருங்கள். பாவத்தைத் தன்னில் கொண்டிராத அவர் மானுடத்தில் கீழ்ப்படிய வேண்டியிருந்தது மட்டுமல்ல, அவருடைய கீழ்ப்படிவு பூரணமானதாக இருக்கவேண்டிய அவசியமும் இருந்தது. பாவிகளாகிய நாம் கீழ்ப்படிவைக் கற்றுக்கொள்ளுகிறபோது, தவறுகளைச் செய்து திருந்திக் கீழ்ப்படிவைக் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால், கிறிஸ்துவைப் பொறுத்தளவில் அவர் தவறுகள் செய்வதற்கு எந்த வழியும் இல்லை. பூரணமான தெய்வீகத்தோடும், மானுடத்தோடும் இருந்த தேவகுமாரன் அந்நிலையில் தன்னுடைய மானுடத்தில் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர். இது நமக்கு மலைப்பை ஏற்படுத்தும் தேவஇரகசியம். பிறந்து, பிள்ளைப்பருவத்தை அடைந்த இயேசு சிறிது சிறிதாக கீழ்ப்படிவைத் தன் வாழ்க்கையில் கற்றுக் கீழ்ப்படிந்திருக்கிறார். அவருடைய தெய்வீகம் எந்தவிதத்திலும் அவருடைய மானுடத்தின் கீழ்ப்படிவினால் குறைவடையவோ, அல்லது பூரணக் கீழ்ப்படிவை இலகுவாக்கவோ, அல்லது அதற்குத் தடையாகவோ இருந்ததில்லை. அவர் தன் மானுடத்தில் மன, உளரீதியிலும், ஆத்துமாவிலும், சரீரரீதியிலும் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டு பிதாவின் கட்டளைகளனைத்தையும் நிறைவேற்றியிருக்கிறார். இப்படியாக இயேசு வாழ்ந்தது எத்தனை பெரிய ஆசீர்வாதத்தை நமக்குக் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா? அவர் பூரணமாகக் கீழ்ப்படியக் கற்றுக்கொண்டு, அதில் வளர்ந்து கீழ்ப்படிந்தது, இரட்சிப்படைந்த நாம் அதேவிதத்தில் கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் வல்லமையைத் தந்திருக்கிறது. கிறிஸ்தவனால் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடிவதற்குக் காரணம் கிறிஸ்து அப்படி வாழ்ந்து மானுடத்தில் வெற்றிகண்டிருப்பதால்தான்.
கிறிஸ்துவின் கீழ்ப்படிதலைப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்ப்பது வழக்கம். முதலாவது, நேரடிக் கீழ்ப்படிதல் (Active Obedience). இரண்டாவது, சுமக்கும் கீழ்ப்படிதல் (Passive Obedience). இங்கே ஆங்கில வார்த்தைகளுக்கு எழுத்துரீதியிலான மொழிபெயர்ப்பைக் கொடுக்காமல் அவை விளக்கும் உள்ளர்த்தங்களின்படி வார்த்தைகளைத் தந்திருக்கிறேன். ஆண்டவருடைய கீழ்ப்படிதலில் இருவகைகள் உள்ளன. முதலாவது, பிதாவின் கட்டளைகளனைத்தையும், தீர்க்கதரிசனங்களையும் அவர் தன் வாழ்வில் ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் கீழ்ப்படிந்து நிறைவேற்ற வேண்டும். மீட்பை நிறைவேற்ற இது மிகவும் அவசியம். அப்படியான இந்தக் கீழ்ப்படிவையே நான் நேரடிக் கீழ்ப்படிதல் என்று விளக்கியிருக்கிறேன். இரண்டாவதாக, மீட்பின் நிறைவேறுதலுக்காக கிறிஸ்து வாழ்வில் பல்வேறு துன்பங்களையும், இறுதியில் சிலுவைத் துன்பத்தையும், மரணத்தையும் அவற்றிற்குத் தம்மை முழு மனத்தோடு ஒப்புக்கொடுத்து சுமக்க வேண்டும். இதை சுமக்கும் கீழ்ப்படிதல் என்று விளக்கியிருக்கிறேன். இந்த இருவகைக் கீழ்ப்படிதலும் மீட்பு நிறைவேற அவசியமானவை.
மேலே பார்த்துள்ள கிறிஸ்துவின் கீழ்ப்படிவைப்பற்றிய தவறான எண்ணங்களை நம்மனதில் இருந்து அகற்றிக்கொள்ளுவது அவசியம். (1) சுமக்கும் கீழ்ப்படிவை நாம் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் Passive என்ற வார்த்தை தவறாகப் புரிந்துகொள்வதற்கு இடங்கொடுத்துவிடுகிறது. வார்த்தைகளுக்கு எப்போதுமே பல அர்த்தங்கள் இருப்பதும் நாம் அறிந்ததே. அதுவும் வார்த்தைகளை எப்படி எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தும் அவற்றின் பொருள் மாறும். Passive Obedience என்ற பதம் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிற கீழ்ப்படிவு என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது இந்தத் துன்பங்கள், அவருடைய விருப்பமில்லாமல், அவருடைய செய்கைகள் எதுவும் இல்லாமல் அவர் மேல் சுமத்தப்பட்டதாகவும், அதற்கு அவருடைய பங்கு எதுவுமில்லை என்றும், அவர் வேட்டையாடப்பட்ட இரைபோல என்று எண்ணிவிடக்கூடாது. இப்படி எண்ணுவது கீழ்ப்படிவின் கருத்தையே மாற்றிவிடும். விருப்பமில்லாமல், ஈடுபாடில்லாமல் செய்கின்ற எதுவும் கீழ்ப்படிவாக இருக்கமுடியாது. அதனால்தான் ‘சுமக்கின்ற கீழ்ப்படிவு’ என்று Passive Obedience க்கு விளக்கம் தந்தேன். அவர் துன்பங்களையும், பாரங்களையும், ஏன், மரணத்தையும் தன்னில் சுமந்து கீழ்ப்படிந்தார். அப்படி அவற்றை சுமந்தபோது அவையெல்லாவற்றையும் பூரண விருப்பத்தோடும், பூரண ஈடுபாட்டோடும் சுமந்தார். தன்னுடைய சரீரத்தைப் பற்றிச் சொல்லும்போது ‘தானே தன் சரீரத்தை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பேன், அதை எவரும் என்னிடம் இருந்து எடுத்துவிட முடியாது’ என்று இயேசுவே கூறியிருக்கிறார். அவருடைய கீழ்ப்படிவு மரணத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதுவரை போயிருக்கிறது என்று பவுல் விளக்கியிருக்கிறார். இதையும் நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது, அவருடைய கீழ்ப்படிவு மரணம்வரையும் போகவில்லை, மாறாக அவர் தன்னுடைய ஆவியைத் தானே விடுகிறவரை அவர் மரணத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவு முழுமையானது; முழு ஈடுபாட்டோடு அவரால் நிறைவேற்றப்பட்டது. கிறிஸ்து மீட்பை நிறைவேற்ற பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தபோது தன்னுடைய மனம், சித்தம், சிந்தனை, சரீரம் அனைத்திலும் அவற்றை உணர்ந்து, தன்னுடைய பொறுப்புக்களை முழுமையாக அறிந்திருந்து, விருப்பச் சித்தத்தோடும், வைராக்கியத்தோடும், ஆர்வத்தோடும் கீழ்ப்படிந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்ற Passive என்ற பதத்தை நாம் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. அவர் அனைத்துத் துன்பங்களையும் தன்னில் சுமந்து அனுபவித்து மரணத்திற்கு முழுவிருப்பத்தோடும், ஈடுபாட்டோடும் தன்னை ஒப்புக்கொடுத்த சுமக்கும் கீழ்ப்படிவு அவருடைய கீழ்ப்படிவுகளின் ஒருபகுதி; முக்கிய பகுதி. மீட்பின் நிறைவேற்றத்திற்கு அது அவசியமானது.
(2) அடுத்ததாக கிறிஸ்துவின் வாழ்க்கையில் அவருடைய கீழ்ப்படிவை ஆராயும்போது, அதில் ஏதாவதொரு பகுதியை எடுத்து இது நேரடிக் கீழ்ப்படிவு, இது சுமக்கும் கீழ்ப்படிவு என்று அந்தச் செய்கைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்து விளக்க முடியாது; கூடாது. அதற்காகவல்ல இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது. அவருடைய நேரடிக் கீழ்ப்படிவுக்கும், சுமக்கும் கீழ்ப்படிவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு அவை நிகழ்ந்த குறிப்பிட்ட காலம் சம்பந்தப்பட்டதல்ல. அவருடைய பூரணக்கீழ்ப்படிவின் அத்தனைப் பகுதிகளுமே நேரடிக்கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு என்ற முறையில் விளக்கப்படுகின்றன. ஆகவே, கிறிஸ்துவின் நேரடிக்கீழ்ப்படிவு அவருடைய கீழ்ப்படிவுள்ள வாழ்க்கையைக் குறிப்பதாகவும், அவருடைய சுமக்கும் கீழ்ப்படிவு அவர் பட்ட சிலுவைத் துன்பங்களையும், மரணத்தையும் குறிப்பதாகவும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது.
எதற்காக நேரடிக் கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு ஆகிய பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்ற கேள்வி இங்கு அவசியமாகிறது. இந்தப் பதங்கள், கிறிஸ்து பாவிகளுக்காகத் தன்னைப் பலியாகக் கொடுத்த கீழ்ப்படிவின் வெவ்வேறுபட்ட அம்சங்களை விளக்கவே பயன்படுத்தப்படுகின்றன. இதைப் புரிந்துகொள்ளுவதற்கு நாம் கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். நியாயப்பிரமாணம், இருவிதமான அம்சங்களைத் தன்னில் கொண்டிருக்கிறது. அதாவது, குற்றங்களுக்கான தண்டனைகளையும், நேர்மறையான கட்டளைகளையும் அவை உள்ளடக்கியுள்ளன. நியாயப்பிரமாணம், நேர்மறையான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதோடு, சகலவிதமான குற்றங்களுக்கும், பாவங்களுக்குமான தண்டனைகளை சுமப்பதையும் வற்புறுத்துகிறது. நேரடிக் கீழ்ப்படிவு, சுமக்கும் கீழ்ப்படிவு என்று பிரித்து கிறிஸ்துவின் கீழ்ப்படிவை ஆராய்கிறபோது நியாயப்பிரமாணத்தின் மேற்குறிப்பிட்ட இரண்டு அம்சங்களையுமே அவற்றின் மூலம் விளக்குகிறோம். கிறிஸ்து, தம்முடைய மக்களுக்கான ஆசாரியராக வந்து அவர்களுடைய பாவங்களுக்கான சாபமாகவும், குற்றவாளியாகவும் இருந்ததோடு, நியாயப்பிரமாணத்தின் நேர்மறையான கட்டளைகளையும் நிறைவேற்றினார். இதை இன்னொருவிதமாக விளக்கினால், அவர் பாவத்திலிருந்து விடுதலை அடைவதற்கான வழிமுறைகளை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், நீதிக்கட்டளைகளையும் நிறைவேற்றினார். அவர் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்றது மட்டுமல்லாமல், நியாயப்பிரமாணத்தின் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்தார். சுமக்கும் கீழ்ப்படிவு முதலாவதையும், நேரடிக்கீழ்ப்படிவு இரண்டாவதையும் விளக்குகின்றன. கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் நீதிக்கட்டளைகளை பாவிகளுக்கான நிவாரணபலியாக இருந்தே நிறைவேற்றினார். அதேபோல் பாவத்தின் மீதிருந்த கர்த்தரின் தண்டனைகளை அவர் தன்மேல் பூரணமாகத் தாங்கியபோது அதைப் பாவிகளுக்கான நிவாரணபலியாக இருந்தே நிறைவேற்றினார். கிறிஸ்துவின் கீழ்ப்படிதலே பாவ மன்னிப்புக்கும், நீதிமானாக்குதலுக்கும் அடித்தளமாக அமைந்திருக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலை நாம் உயிரற்ற வெறும் விளக்கமாகப் பார்க்கக்கூடாது. அதுவும், ஒப்புக்கு அவர் பிதாவுடைய கட்டளைகளை நிறைவேற்றினார் என்றும் நினைக்கக்கூடாது. அவருடைய கீழ்ப்படிதலில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை வேறு எவரையும்விட எபிரெயருக்கு எழுதியவர் 2:8-10 வரையுள்ள வசனங்களில் மிக அழகாக விளக்கியிருக்கிறார், “8அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”
இந்த வசனங்களில் இயேசு தான் அனுபவித்த துன்பங்களின் மூலம் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்று விளக்குகின்றன. அத்துன்பங்களின் மூலம் அவர் பூரணமானார் என்றும் விளக்குகின்றன. அதுமட்டுமன்றி தனக்குக் கீழ்ப்படிகின்ற அனைவருக்கும் நித்திய இரட்சிப்பை அடைவதற்கு அவர் காரணராகி பிரதான ஆசிரியர் என்று தேவனால் நாமம் தரிக்கப்பட்டார் என்கிறார் எபிரெயருக்கு எழுதியவர்.
மேலே பார்த்த வசனங்களை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது பின்வரும் உண்மைகள் தெளிவாகின்றன. 1) மானுடத்தைத் தாங்கி இந்த உலகத்தில் பிறந்ததன் மூலம் மட்டும் இயேசு கிறிஸ்து இரட்சிப்புக்கானவைகளை நிறைவேற்றி நம்முடைய மீட்பை சம்பாதித்துவிடவில்லை. 2) அவருடைய மரணத்தினால் மட்டும் நம்முடைய இரட்சிப்பு சம்பாதிக்கப்படவில்லை. 3) சிலுவையில் அவர் மரித்ததனால் மட்டும் இரட்சிப்பு நிறைவேற்றப்படவில்லை. 4) மீட்புக்காகச் செலுத்தப்பட்ட உச்சகட்ட விலையான சிலுவை மரணம் கிறிஸ்துவின் கீழ்ப்படிவின் அதியுயர்ந்த அடையாளமாக இருக்கிறது. அத்தகையக் கீழ்ப்படிவின் சிறப்பு, அவர் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் சிலுவைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்ததில் அல்லாமல் முழு விருப்பச்சித்தத்தோடும், பூரணக்கீழ்ப்படிவோடும் அவர் சிலுவையில் மரித்ததிலேயே தங்கியிருக்கிறது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிவைப்பற்றி நாம் ஆராயும்போது வெறுமனே அவருடைய மீட்புக்குரிய செயல்களை மட்டும் ஆராயவில்லை; அவற்றை நிறைவேற்றுவதற்கு அவசியமாக, அந்தச் செயல்களின் பின்புலமாகக் காணப்பட்ட அவருடைய சித்தம், வைராக்கியம், உள்ளுணர்வு ஆகியவற்றையும் நாம் எண்ணிப்பார்க்கிறோம். மீட்புக்காகச் செலுத்தப்பட்ட உச்சகட்ட விலையான, அவருடைய கீழ்ப்படிதலின் அதியுயர்ந்த அடையாளமாக இருந்த அவருடைய சிலுவை மரணத்தை ஆராய்கிறபோது நாம் வெறுமனே அவருடைய மரணத்தை மட்டும் நினைத்துப் பார்க்காமல், அந்தச் சிலுவை மரணத்திற்குப் பின்னால் இருந்த கிறிஸ்துவின் வைராக்கியம், விருப்பச்சித்தம், கடமைப்பொறுப்பு, உள்ளுணர்வுகள் அத்தனையையும் கணக்கில் எடுக்கிறோம். அதுமட்டுமல்லாமல், இங்கே நாம் ஒரு முக்கியமான கேள்வியையும் கேட்க வேண்டிய அவசியம் எழுகிறது. அந்தக் கேள்வி இதுதான், அதியுயர்ந்த உச்சகட்டத் தாழ்மையோடு கூடிய தியாகத்தினதும், கீழ்ப்படிவினதும் அடையாளமாகத் தன்னுடைய உயிரைக் கொடுப்பதற்கான பரிசுத்த வைராக்கியத்தையும், விருப்பச்சித்தத்தையும் எப்போது நம்முடைய ஆண்டவர் அடைந்தார்? என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய மானுடத் தன்மையிலேயே கீழ்ப்படிந்து மரணத்திற்கு தம்மை ஒப்புக்கொடுத்தார் என்பதுதான் அந்தக் காரணம். நாம் இதுவரை எபிரெயருக்கு எழுதப்பட்ட நூலில் கவனித்து வந்திருக்கும் வசனங்களே இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கின்றன. இந்த வசனங்கள், மிகவும் தெளிவாக இயேசு கிறிஸ்து கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார் என்றும், அந்தக் கீழ்ப்படிவைத் தாம் அனுபவித்த துன்பங்களில் இருந்து கற்றுக்கொண்டார் என்றும் தெரிவிக்கின்றன. அந்தத் துன்பங்களின் மூலம் அவர் பூரணப்படுவதும், அதன் மூலம் அவர் இரட்சிப்பின் நாயனாக இருப்பதும் அவசியமாகிறது. பரிசுத்தமாக்குதலின் மூலம் பாவத்திலிருந்து விடுதலை அடையும் பூரணத்துவத்தை அல்ல நாம் இங்கே குறிக்கிறோம். ஏனெனில், இயேசு கிறிஸ்து எப்போதும் பூரணப்பரிசுத்தமானவர், யாருக்கும் தீங்கிழைக்க முடியாதவர், பாவமற்றவர், பாவிகளிலிருந்து வேறுபட்டுக் காணப்படுகிறவர். அப்படியானால் இரட்சிப்பின் நாயகனாக அவர் இருப்பதற்கு துன்பங்களில் இருந்து கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டு எத்தகைய பூரணத்துவத்தை அவர் அடைய வேண்டியிருந்தது? தன்னுடைய மானுடத் தன்மையில் கீழ்ப்படிவதன் மூலம் அவர் தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டியிருந்தது. அப்படி வளருவதன் மூலமே அவர் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டார். அவருடைய இருதயமும், சித்தமும், சிந்தையும் அவர் மானுடத்தில் அனுபவித்த எரியும் கொப்பறையான சோதனைகள் மூலமும், துன்பங்களின் மூலமும் வளர்ச்சியடைந்து பூரணப்பட்டன. அத்தகைய சோதனைகள், துன்பங்களின் மூலம் அவர் அனுபவபூர்வமாக கற்றுக்கொண்டவைகளே, கடவுளின் ஞானமும், அன்பும் நியமித்திருந்த உச்சகட்டமான சிலுவைத் துன்பத்திற்கும், மரணத்திற்கும் முகங்கொடுக்கும் வல்லமையை அவருக்கு அளித்தன. கீழ்ப்படிவை இந்தமுறையில் அவர் கற்றுக்கொண்டு வளர்ந்தே, தவறுகளற்ற, பாவமற்ற பிதாவின் சித்தத்தின் பாதையில் போகும்படிக்கு அவருடைய இருதயமும், சிந்தையும் ஒருங்கிணைந்து வளர்ந்து, சுயாதீனமாகவும், தானே விரும்பி முன்வந்தும் அவரால் தன்னுடைய சரீரத்தை மரணத்துக்கு சிலுவையில் ஒப்புக்கொடுத்து ஆவியையும் துறக்க முடிந்தது.
இந்தவிதமாகத் தன் மானுடத்தில் அவர் கீழ்ப்படிவைக் கற்றுக்கொண்டும் கீழ்ப்படிந்தும் வந்தே இரட்சகராக பூரணத்துவத்தை அடைந்தார். அதாவது, இந்தவிதத்திலேயே அவர் பூரணமான இரட்சகராக வருவதற்கான அனைத்தும் அவருடைய மானுடத்தில் நிகழ்ந்தன. எந்த நோக்கத்துக்காக அவர் அனுப்பப்பட்டாரோ அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கான அனைத்தும் அவரில் நிகழும்படி சோதனைகள், துன்பங்கள், பாடுகள் மூலமாக அவர் தயார்செய்யப்பட்டார். அவருடைய இத்தகைய கீழ்ப்படிவே இறுதியில் அவரை சிலுவைக்குக் கொண்டுவந்து, நிறைவான பூரண இரட்சகராக இருக்கும்படி அவரை வழிநடத்தியது. இரட்சிப்பின் நாயகனாக, அதை நிறைவேற்றியவராக அவர் இருப்பதற்கு அவருடைய மானுடத்தில் வளர்ந்த இந்தக் கீழ்ப்படிவே காரணமாக இருந்தது. இந்தக் கீழ்ப்படிவின் மூலமே அவர் நமக்கு இரட்சிப்பைப் பெற்றுத்தந்தார்.
ஆகவே, கீழ்ப்படிவை உயிரற்ற, ஜடமாக நம்மோடு சம்பந்தமில்லாததாக நாம் எண்ணக்கூடாது. அவருடைய பூரணமான மானுடத்துக்குக் காரணம் இந்தக் கீழ்ப்படிவே. அது அவரில் காணப்பட்டு, அவர் அதற்கு உதாரணபுருஷராக இருந்தார். அவரிலேயே கீழ்ப்படிவு நிரந்தரமாக முழுமையடைந்தது. விசுவாசத்தின் மூலம் அவரோடு இணைக்கப்படுகின்ற நாம் அந்தக் கீழ்ப்படிவை நம்வாழ்க்கையில் அனுபவிக்கிறோம். அதற்கு உரித்தானவர்களாகிறோம். இது எத்தனை பெரிய ஆச்சரியந்தரும் உண்மை தெரியுமா? இந்தக் கீழ்ப்படிவு இரட்சிப்புப்பற்றிய போதனைகளின் மையமாகக் காணப்படும் கிறிஸ்துவுடனான இணைப்பினதும், ஐக்கியத்தினதும் முக்கியத்துவத்தைப் பறைசாற்ற உதவுகிறது.
கிறிஸ்து தன்மேல் சுமந்து நிறைவேற்ற வந்த பாவநிவாரணபலிக்கு அவருடைய கீழ்ப்படிவு எத்தனை அவசியமாக இருந்திருக்கிறது என்பதை இதுவரை கவனித்தோம். இந்த இடத்தில் கிறிஸ்து மூலம் விசுவாசத்தை அடைந்திருக்கிறவர்கள் முக்கியமானதொரு பயன்பாட்டை சிந்தித்துப் பார்க்காமல் இருக்க முடியாது. கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு கீழ்ப்படிவைக் காணமுடியாதிருக்கிறது அல்லது அது அவர்களில் பலவீனமாயிருக்கிறது என்பது நாம் அறிந்திராத உண்மையல்ல. அதற்கு எத்தனையோ காரணங்களை நாம் முன்னெடுத்து வைக்கலாம். எல்லாவற்றையும்விட இந்த இடத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய பேருண்மை என்ன தெரியுமா? ஒருவன் தன் விசுவாசத்தைப்பற்றி என்னதான் பறைசாற்றிக்கொண்டாலும், அந்த விசுவாசம் அடித்தளமாகக் கொண்டிருக்கும் குணாதிசயமான கீழ்ப்படிவு அவனில் இல்லாவிட்டால் அந்த இருதயம் மெய்யாகவே மறுபிறப்பை அடைந்திருக்கிறதா என்று கேட்காமல் இருக்க முடியாது. கீழ்ப்படிவு உச்சகட்டத்தில் இருக்க வேண்டும் என்று இங்கு நான் சொல்லவில்லை; எத்தனை பலவீனமாக ஒரு விசுவாசி இருந்தாலும் அவனுடைய இருதயம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறதாக, தாழ்மையுள்ளதாக இருக்கவேண்டும். ஏனெனில், அதுவே மெய்க்கிறிஸ்தவனின் அடையாளம். கிறிஸ்துவின் பூரணக்கீழ்ப்படிவு நாம் அவருக்குக் கீழ்ப்படியக்கூடிய இரட்சிப்பை நமக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அவரோடு இணைக்கப்பட்டிருக்கிற நாம் கீழ்ப்படிவின் பிள்ளைகளாக இருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்து வருகிறீர்களா? இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்.