சிந்தனைச் சித்திரம்

– திருமறைத்தீபம் 20ம் ஆண்டு நிறைவு விழா –

கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி பெங்களூரில் திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கெம்பஸ் குருசேட் நிறுவனத்தின் மிகப்பெரிய கட்டடத்தில் கூட்டத்தை பெங்களூர் சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குபோனபோதே இத்தனைப் பெரிய இடத்தை எப்படி நிரப்பப்போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் பெங்களூரில் அன்று போக்குவரத்து நெருக்கடி மற்ற நாட்களைவிட அதிகம். கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச்சேருவதற்கே ஒன்றரை மணிநேரம் எடுத்தது. கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் வேறு உள்ளுக்குள். வருகிறவர்களை வரவேற்று உபசரித்து இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளையும், புத்தகங்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றையும் செய்வதற்காக இருபது பேருக்கு மேற்பட்ட சகோதரர்கள், திருமறைத்தீப 20ம் ஆண்டு விழாவை சிறப்பிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த, மஞ்சள் நிறத்தில் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தைகளைக்கொண்டிருந்த நீல நிற டீ-சேர்ட்டை அணிந்து சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் பெங்களூரையும், தமிழகத்தின் திருச்சபைகளையும் சேர்ந்த சகோதரர்கள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பெங்களூர் சபையினர் பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பது மட்டுமல்ல ஒழுங்கோடு கூட்டத்தை நடத்தும் வகையிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதும் பார்த்த உடனேயே தெரிந்தது.

இந்த 20ம் ஆண்டுவிழா நடத்தவேண்டும் என்ற எண்ணம் சில போதக சகோதரர்கள் மனதில் எழுந்தபோது, அது அவசியமா? என்ற எண்ணம் முதலில் எழுந்தது. யோசித்துப் பார்த்ததில், இத்தனை வருடம் இதழை நடத்த கர்த்தர் செய்திருக்கும் பெருங்காரியங்களை நினைவுகூரவும், அவருக்கு நன்றிகூறவும், கிறிஸ்தவ இலக்கியங்களின் அவசியத்தை வலியுறுத்தி அந்தப்பணியை முன்னெடுத்துச் செல்லவும் இது நல்ல சந்தர்ப்பமாக அமையும் என்று போதகர் முரளிக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியதால் அதற்கு சம்மதித்தேன். ஆண்டுவிழாவை நல்லவிதமாக நடத்துவதற்காக பெங்களூர் சபையினர் மூன்று மாதங்களாக உழைத்திருக்கிறார்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது. விழாவை நடத்தலாம் என்று தீர்மானித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தபின்பு அதைப் பயன்படுத்தி வாசிப்புபற்றிய புரிந்துணர்வை ஏன் ஆத்துமாக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடாது என்று தோன்றியது. அதோடு புதிய நூல்களையும் அதில் வெளியிட்டுவைக்கலாம் என்றும் தீர்மானித்தோம். இதற்கான புதிய நூல்களையும், முக்கியமாக ஐந்து வால்யூம்கள் கொண்ட திருமறைத்தீப தொகுப்பையும் பல மாதங்களுக்கு தியாகத்தோடு உழைத்து சகோதரர் ஜேம்ஸ் தயாரித்திருந்தார். இது ஆண்டவருக்கான அன்புச் சேவை. இதெல்லாம் ஆண்டுவிழாவை மேலும் முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் ஆக்கியது.

சிறப்பு விருந்தினர்

IMG_0147கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக யாரைப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்தபோது அதற்கு மிகவும் பொருத்தமானவராக ரொபட் வெட்டி தென்பட்டார். நெடுங்காலமாக உடல்நலன் காரணமாக அவர் நீண்ட பயணங்களை மேற்கொள்ளவில்லை. அது தெரிந்திருந்ததால் சாத்தியப்படாது என்று எண்ணி வேறுயாரை வைக்கலாம் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆண்டுவிழாபற்றிக் குறிப்பிட்டு ஒரு முறை நீங்கள் ஏன் இந்தியா வரக்கூடாது என்று ஒரு நாள் ரொபட்டிடம் கேட்டேன். அதுபற்றி சிந்திக்கிறேன் என்று ரொபட் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், இன்னும் நாள் இருக்கிறது, நவம்பரில் முடிவைச் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டுவிட்டேன். இந்தியா வர நான் தயார், பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று ரொபட் நவம்பரில் சொன்னதும் உடனடியாக அந்தப் பணியில் ஈடுபட்டேன். அதற்குப் பிறகு ரொபட்டைச் சந்திக்கின்ற போதெல்லாம் இந்தியா போகவேண்டும் என்ற ஆர்வத்தையும், துடிப்பையும் அவரில் பார்த்தேன். அது சந்தோஷத்தை அளித்தது.

ரொபட் வெட்டி அவர்களைப்பற்றிச் சொல்லியாக வேண்டும். அவர் தீவிர கிறிஸ்தவ இலக்கிய ஆர்வலர். எழுபத்தாறு வயதுள்ள சீர்திருத்த கிறிஸ்தவரான அவர், தீர்க்கமான விசுவாச அறிக்கைகளின் அடிப்படையிலான போதனைகளை வைராக்கியத்தோடு பின்பற்றுவதோடு, இன்றும் அந்தப்போதனைகளை உள்ளடக்கி வெளிவரும் நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கி வாசித்து வருகிறார். ஒரு நாளைக்கு ஓரிரு நூல்களை வாசித்து முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பணத்தை சம்பாதித்துத்தராத எந்தச் செயலிலும் ஈடுபடுவதை வீண்விரயமாகக் கருதும் இன்றைய சமுதாயத்தில் ஆத்மீக அறிவைக் கூர்தீட்டி மின்னும் பட்டயமாக வைத்திருப்பதற்காகவே வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் சிலரில் அவரும் ஒருவராக இருக்கிறார். இந்த வாசிப்பு அவரை ஒரு சொந்த நூல்நிலையத்தையே வீட்டில் ஏற்படுத்தும் அளவுக்கு வழிநடத்தியிருக்கிறது. ஏழாயிரத்துக்கும் மேலான புத்தகங்களை அவர் தன் நூலகத்தில் வைத்திருக்கிறார். தான் மறைந்தபிறகு மற்றவர்கள் அதைப்பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு டிரஸ்டை நிறுவி அதைப் பொதுச்சொத்தாகும் வழிகளையும் செய்து வைத்திருக்கிறார். ரொபட்டின் வாசிப்பும், கிறிஸ்தவ இலக்கிய ஆர்வமும், நல்ல கிறிஸ்தவ நூல்களை முடிந்தவரை ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடவும் வைத்திருக்கிறது. தன்னுடைய சொந்தப் பணத்தை செலவிட்டு, பெஷிபிக் கடல் பகுதியில் நியூசிலாந்துக்குப் பக்கத்து நாடுகளாக இருக்கும் ராரடொங்கா, சமோவா நாடுகளின் மொழிகளில் சீர்திருத்த சத்தியங்களை விளக்கும் நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார். வெஸ்ட்மின்ஸ்டர் ஸ்டேன்டர்ட்ஸ் என்ற பதிப்பகத்தை ஆரம்பித்து ஏறக்குறைய 40 வருடங்களுக்கு மேலாக ஆங்கிலத்தில் சீர்திருத்த போதனைகளையளிக்கும் நூல்களையும், துண்டுப்பிரதிகளையும் வெளியிட்டு வந்திருக்கிறார்; அந்தப் பணி இன்றும் தொடர்கிறது.

இதையெல்லாம்விட விசேஷமானது திருமறைத்தீப இதழ் வெளியீட்டுப் பணியில் ரொபட் வெட்டியின் பங்கு. இதழை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் என் மனதில் உதயமாகவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அதற்கு ரொபட் வெட்டியும் அவருடைய நண்பருமே காரணம். நல்ல சபைகள் அமையவும், போதகர்கள் சத்தியத்தில் தெளிவடைந்து போதிக்கவும் சிறந்த கிறிஸ்தவ இலக்கியங்கள் அவசியம் என்பதை அடிக்கடி என்னிடம் சொல்லி, அன்புக்கட்டளையிட்டு, வற்புறுத்திய அவர்களுடைய தூண்டுதலால் ஆரம்பித்தது 1995ல் திருமறைத்தீப இதழ். சின்னதாக ஆரம்பித்த இந்த இதழ் பணி இன்று இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதழ் ஆரம்பமான காலத்தில் என்னை எப்படி உற்சாகப்படுத்தி தன்னால் முடிந்த உதவிகளை இதழ் பணிக்காகச் செய்தாரோ அந்த உதவிகளை இன்றும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் ரொபட் வெட்டி. அவருடைய நண்பர் பல வருடங்களுக்கு முன் கர்த்தரை அடைந்துவிட்டார். திருமறைத்தீபத்தின் வெளியீட்டிலும், வளர்ச்சியிலும் தமிழே தெரியாத ஒருவர் இந்தளவுக்கு ஆர்வம்காட்டி, தனக்கும் இந்தப்பணியில் சந்பந்தமுண்டு என்று தானே தீர்மானித்து ஆவிக்குரிய சந்தோஷத்தோடு அதன் ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் அதன் ஆக்கங்களைப்பற்றிக்கேட்டுத், தன்னுடைய நூலகத்தில் வைப்பதற்காக இரண்டு பிரதிகளை இன்றும் வாங்கிக்கொள்ளும் ரொபட் வெட்டி இதழின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது இதழுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்றே சொல்லுவேன்.

விழா நிகழ்வுகள்

சிறப்பு விருந்தினரான ரொபட் வெட்டி அவர்களைத்தவிர ஸ்ரீ லங்காவின் வவுனியாவில் இருந்து புரொட்டஸ்தாந்து சீர்திருத்த சபையின் போதகரான பார்த்திபன் விழாவில் கலந்துகொண்டார். இவர்களோடு இன்னும் சில தமிழகப் போதகர்கள் விழா நிகழ்ச்சி நிரலின்படி தங்களுடைய இதழனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்திருந்தனர். விழா நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பைப் போதகர் முரளி ஏற்றிருந்தார். அதற்கு அவரே தகுதியானவர் என்பதை ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தோம். அதுவும் விழாவுக்கான சகல ஏற்பாடுகளையும் அவரும் அவருடைய சபையினருமே செய்திருந்தனர். திரு. ரொபட் வெட்டி, தன்னுடைய உரையில் திருமறைத்தீப இதழுக்கும் தனக்கும் இடையில் உள்ள உறவை விளக்கினார். தமிழே தெரியாத அவர் இதழின் பணியில் காட்டிவரும் அக்கறைக்கான காரணத்தைக் கூறினார். சீர்திருத்த போதனைகளை வேதபூர்வமாகவும், தெளிவாகவும் தமிழுலகுக்கு அளித்து வருகிற பத்திரிகை என்பதே தன்னை அதில் ஈடுபாடுகாட்ட வைத்திருப்பதாகவும், இதழாசிரியர் மேல் தனக்கிருக்கும் நம்பிக்கையும் முக்கிய காரணம் என்றார். அடுத்து புத்தகங்களைத் தான் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை விளக்கினார். இளம் வயதில் கிறிஸ்தவனாக வந்தபிறகே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், தான் முதலில் படித்த கிறிஸ்தவ புத்தகம் மோட்சபயணம் என்றார். நண்பரொருவருடைய துணையோடு அதை வாசித்து முடித்ததாகக் கூறிய அவர், அன்று முதல் வாசிப்பு தன்னுடைய வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்ததாக விளக்கினார். இப்போது 7000க்கும் குறையாத கிறிஸ்தவ ஆங்கில நூல்களைத் தன்னுடைய சொந்த நூலகத்தில் வைத்திருப்பதோடு பழம் கிறிஸ்தவ இலக்கியங்களை வேறு மொழிகளில் வெளியிடுவதையும் நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருவதாகக் கூறினார். இறுதியில் வாசிப்பில்லாமல் கிறிஸ்தவனாக இருக்க வழியில்லை என்று விளக்கிய வெட்டி, வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள் என்றுகூறி தன்னுடைய உரையை முடித்தார்.

IMG_2552போதகர் பார்த்திபன் தன் சிற்றுரையில், திருமறைத்தீபத்தைப்பற்றித் தன்னைப் பேச அனுமதித்தால் பல மணிநேரங்கள் தன்னால் பேசமுடியும், ஆனால் அதை இந்த நேரத்தில் செய்யமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறி உரையை ஆரம்பித்தார். தான் ஸ்கொட்லாந்தில் இறையியல் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலத்தில் அருமையாக இருக்கும் செய்திகள் தமிழினத்தைச் சென்றடையாமல் இருக்கிறதே என்று தான் அதிக மனத்துன்பத்தோடு இருந்ததாகச் சொன்னார். அந்தவேளையில் தனக்கு புதிய ஏற்பாடு விரிவுரையாளராக இருந்த மொரிஸ் ரொபட்ஸ் திருமறைத்தீபத்தின் ஆசிரியரையும், இதழையும் தனக்கு அறிமுகப்படுத்தி ஆசிரியரோடு தொடர்புகொள்ளும்படி ஆலோசனை சொன்னதாகக் கூறினார். அதற்குமுன் இதழைப்பற்றியும், ஆசிரியரைப்பற்றியும் எதுவும் தெரியாமல் இருந்ததாகவும், அத்தகைய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும், இப்போது ஒருவித தாகத்தோடும், வெறியோடும் இதழையும், ஏனைய நூல்களையும் வாசிப்பதும், விநியோகிப்பதும் ஆசிரியருக்குத் தெரிந்ததே என்றும் கூறினார். தொடர்ந்து அவர், சீர்திருத்தப் போதனைகள் தமிழினத்தைச் சென்றடைய இதழ் பெரும்பணி செய்து வருவதாகவும், இறையாண்மையுள்ள கடவுள் தன்னுடைய மக்களுக்கு இரட்சிப்பளிப்பதற்காகவே தன் குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார் என்ற வேத உண்மையை இந்த இதழில் மட்டுமே தான் தமிழில் வாசித்திருப்பதாகவும், அத்தோடு, தேவனுடைய அன்பைக் கொச்சைப்படுத்தி அநேக பிரசங்கிகள் பொதுவாகப் பிரசங்கித்து வரும் இந்தக் காலத்தில் அந்த சிறப்பான அன்பை அவர் தன்னுடைய மக்களிடமே காட்டுகிறார் என்பதைத் தான் ‘பிரசங்கிகளும், பிரசங்கமும்’ என்ற புத்தகத்தில் வாசித்ததாகவும் குறிப்பாகத் தெரிவித்தார். ஆழ்கடலில் இருந்து முத்தெடுப்பது என்பது இலகுவான செயலல்ல என்று குறிப்பிட்ட போதகர் பார்த்திபன், அத்தகைய விலைமதிப்பில்லாத முத்துக்களை வேதக் கடலில் இருந்து தேடித்தேடி தமிழினத்துக்குத் தந்து வருவதற்காக ஸ்ரீ லங்கா வாசகர்கள் சார்பாக ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார். இறுதியில் திருமறைத்தீபம் எங்கள் கண்களைத் திறந்துவிட்டிருக்கிறதென்றும், அது எங்களுடைய இருதயங்கள் தேவனை நோக்கி அசைய வைக்கிறதாகவும், எங்கள் கால்களை சரியான பாதையில் போகவைக்கிறதாகவும் இருக்கிறதென்று கூறித் தனது சிற்றுரையை முடித்தார்.

Jeroldஅதற்குப் பிறகு உரையாற்றிய மதுரை போதகர் ஜெரால்ட், எல்லோருக்கும் வாழ்த்துத் தெரிவித்த பிறகு, ரொபட் வெட்டி அவர்களைத் தான் தீப்பெட்டியாகவும், ஆசிரியரைத் தீக்குச்சியாகவும் பார்ப்பதாகக் கூறினார். மறைந்து கிடந்த அருமையான சத்தியங்களைத் தமிழில் நாம் வாசித்துப் பயன்படும்படியாக தீக்குச்சியான ஆசிரியரை பற்றியெரியச் செய்திருக்கின்ற, நிர்பந்தித்திருக்கின்ற பலரில் முதன்மையானவராக ரொபட் வெட்டி இருந்திருப்பதை அறிந்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். இதழ் இத்தனைக்காலமாக வெளிவருவதற்குத் துணையாக இருந்துள்ள ஆசிரியரின் சபையாருக்கும் அவர் தன் நன்றியைத் தெரிவித்தார். அத்தோடு, திருமறைத்தீபத்தைத் தான் ஓர் இறையியல் இதழாகப் பார்ப்பதாகவும், வேதத்தின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படுகின்ற வேதம், கடவுள், படைப்பு, வீழ்ச்சி, மீட்பு ஆகியவற்றை, இதழ் தன்னுடைய ஆரம்பகால நோக்கங்களில் இருந்து எந்தவிதத்திலும் விலகாமல் தொடர்ந்து விளக்கி வருவது சிறப்பானது என்று கூறினார். எந்தப் பத்திரிகையிலும் இல்லாத ஒரு சிறப்பு திருமறைத்தீபத்தின் தலைப்புகள் என்று குறிப்பிட்ட போதகர் ஜெரால்ட், பத்து மில்லி கிறிஸ்தவம், கரகாட்டக்காரனும் நடுநிலையாளனும், கடவுளும் புழுவும் போன்ற தலைப்புகளை உதாரணங்காட்டி, அவை வாசகர்களை வாசிக்கத் தூண்டுவது மட்டுமல்லாமல் ஆழமான சத்தியங்களை விளக்கும் அருமையான ஆக்கங்களாக இருப்பதாகவும் பாராட்டுத் தெரிவித்தார். திருமறைத்தீபத்தின் சிறப்புகளில் முக்கியமானது அதன் எளிமையான, இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய அழகான தமிழ்நடை என்று கூறிய ஜெரால்ட் அதற்குச் சான்றாக ஐந்தாம் வயதுவரை மட்டுமே கல்விகற்று திருமறைத்தீபத்தை இன்றுவரை வாசித்துப் பயனடையும் ஒரு முதிய சகோதரரைத் தனக்குத் தெரியும் என்று கூறினார். திருமறைத்தீபம் எனும் கலங்கரை விளக்கினால் கரைசேர்க்கப்பட்ட அநேகரில் தானும் ஒருவன் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறித் தன்னுடைய உரையை முடித்தார்.

அடுத்துப் பேசிய சென்னைத் திருச்சபையைச் சேர்ந்த போதகரும், சீர்திருத்த வெளியீடுகள் பதிப்பகத்தின் நிர்வாகியுமான ஜேம்ஸ், திருமறைத்தீபம் முக்கியமாக திருச்சபைக்கு அளித்துவரும் விசேட இடத்தைப் புள்ளிவிபரங்களோடு விளக்கினார். தீபத்தின் முதல் இதழே திருச்சபை வரலாற்றின் அவசியத்தை விளக்குவதோடு ஆரம்பித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘கூடில்லாக் குருவிகள்’ என்ற ஆக்கத்தின் மூலமாகத் தீபம் திருச்சபைக்கு நிறுவனங்கள் எந்தவிதத்தில் ஆபத்தாக இருந்துவிடுகின்றன என்பதை விளக்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுவரை வந்துள்ள இதழ்களின் பக்கங்கள் 3138 என்றும், அவற்றில் 7016 தடவைகள் திருச்சபை என்ற வார்த்தை வந்திருப்பதாகவும், ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு தடவைகள் அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதுவரை வந்துள்ள 84 இதழ்களில் ஒவ்வொரு இதழிலும் 80 தடவைகளுக்கு மேல் திருச்சபை என்ற வார்த்தை இருப்பதாகவும், இதெல்லாம் அனைத்து சத்தியங்களையும் விளக்கிவரும் திருமறைத்தீபம் கர்த்தர் நேசிக்கும் திருச்சபைக்கு முக்கியமான இடத்தை அளிக்கத் தவறவில்லை என்பதை அழகாக விளக்கித் தன் உரையை முடித்துக்கொண்டார்.

அதுவரை பேசிய எல்லோருமே விழாவுக்குத் தகுந்த முறையில் சுவையோடும், அதேநேரம் கனமான விஷயங்களைத் தங்களுடைய சிற்றுரைகளில் பகிர்ந்துகொண்டனர். கடைசியாக நான் என்னுடைய உரையை சுருக்கமாகத் தந்தேன். 2 தீமோத்தேயு 4:13ல் இருந்து, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினேன். இந்த வசனத்தின்படி பவுலுக்கு வேதமும் தேவைப்பட்டது; புத்தகங்களும் தேவைப்பட்டது. அதுவும் புத்தகங்களைப் பவுல் மிகவும் துன்பங்களை அனுபவித்துவந்த சிறையில் இருந்து கேட்டார். இதிலிருந்து எந்தளவுக்கு தம்முடைய வாசிப்புக்கு எதுவும் தடையாக வந்துவிடக்கூடாது என்பதில் பவுல் கவனத்தோடு இருந்திருக்கிறார் என்பதைக் கவனிக்கிறோம். இதேபோல்தான் ஜோன் பனியனும் சிறைவாசத்தைப் பயன்படுத்தி வாசிப்பிலும், எழுதுவதிலும் ஈடுபட்டிருந்திருக்கிறார். இவர்களைப்போல வாசிக்காதவர்கள் வாழ்க்கையில் உயரமுடியாது. வாசிக்காதவனால் சிந்திக்க முடியாது. வாசிக்கிறவனிடம் இருந்தே நாம் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்; அவனையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். நம்முடைய மக்கள் மத்தியில் நாம் காண்கிற வருத்தம் தருகிற காரியம் என்ன தெரியுமா? அவர்கள் வாசிப்பை வாழ்க்கையில் பழக்கமாகக் கொண்டிராமல் இருப்பதுதான். வாசிப்பு அவசியம் என்பதால்தான் ஆண்டவர் 66 நூல்களை நமக்கு அன்றாடம் வாசிக்கும்படித் தந்திருக்கிறார்; வாசித்து அவரைப்பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தந்திருக்கிறார். புத்தக வாசிப்பில்லாமல் கிறிஸ்தவன் பயனுள்ளவனாக இருந்துவிட முடியாது. ‘வாசிக்காத கிறிஸ்தவன்’ என்பது முரண்பாடான வார்த்தைகள். போதகர்களும்கூட வாசித்து சிந்திக்காதவர்களாக நம்மினத்தில் இருக்கிறார்கள். எல்லோரும் காட்சிக்காக அலைகிறவர்களாக இருக்கிறார்கள். வாசிப்பில்லாமல் கிறிஸ்தவம் நம்மினத்தில் தலைநிமிர்ந்து நடக்கமுடியாமல் இருக்கிறது. வாசிக்கிறவன் தனக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறவனாக இருப்பான். வாசிப்பு உயரும்போது சுவிசேஷப் பணிகளும், கிறிஸ்தவமும் நம்மினத்தில் உயரும். வாசிப்பில்லாமல் இருப்பது வைரஸ்போல் நம்மினத்தில் எங்கும் பரவியிருக்கிறது. ரொபட் வெட்டி அருமையாக சொன்ன வார்த்தைகளை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள்: வாசியுங்கள், வாசியுங்கள், வாசியுங்கள். இதுவே என் சிற்றுரையின் சாரமாக இருந்தது.

நேரமும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. -கூட்டத்தைக் காலத்தோடு முடிக்க வேண்டுமென்பதால் உரையாற்ற வேண்டியிருந்த வேறு சிலர் அன்று உரைநிகழ்த்த முடியாமல் போனது. எல்லோருடைய உரைகளுக்குப் பின் திருமறைத்தீபத்தின் வரலாற்றை விளக்கும் 27 நிமிட ஒளி, ஒலி நாடா காட்டப்பட்டது. அதை அருமையாக வடிவமைத்துத் தந்திருந்தார் போதகர் ஜேம்ஸ். உண்மையிலேயே அந்தக் காட்சிப் படம் திருமறைத்தீபத்துக்குப்பின் அணிதிரண்டு பணிபுரிந்து வருகிறவர்களை ஒருதடவை நினைத்துப் பார்க்க வைத்தது. மேலாக எல்லாம் வல்ல ஆண்டவர் தீபத்தின் மூலம் செய்துவரும் அதிசயங்களைப் பார்த்து மலைக்க வைத்தது என்றும் கூறலாம்.

special editionவிழாவில் திருமறைத்தீபத்தின் 20 வருட இதழ் தொகுப்புகள் ஐந்து வால்யூம்களாக வெளியிடப்பட்டன. அவற்றை அத்தனை அருமையாகத் தயாரித்த பெருமை சீர்திருத்த வெளியீடுகளின் நிர்வாகியான சகோதரர் ஜேம்ஸைச் சாரும். அந்தப் பிரதிகளை ரொபட் வெட்டி அவர்கள் வெளியிட்டு வைத்தார். அவரே இன்னொரு புதிய நூலான ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ நூலையும் பெற்று வெளியிட்டார். அந்த நூலின் சிறப்பைச் சுருக்கமாக விளக்கிய அவர், தமிழில் அத்தகைய நூல் வெளிவந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். ஸ்ரீ லங்காவில் இருந்து வந்திருந்த போதகர் பார்த்திபன் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை வெளியிட்டு வைத்தார். வரவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தை ஆரம்பித்து நடத்திய போதகர் முரளி ஜெபத்துடன் கூட்டத்தை நிறைவு செய்தார். வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையை சேர்ந்த சகோதரர் பிரேம் உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

new booksகிறிஸ்தவ இலக்கியத்தை முதன்மைப்படுத்தி ஆத்மீக வளர்ச்சிக்கு அவசியமான வாசிப்பை வலியுறுத்திய, அன்றைய இரண்டரை மணிநேர நிகழ்ச்சியில் ஐந்நூறு பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தது தமிழினத்தில் வியப்பான செயல்தான். ஆர்ப்பாட்டங்கள் எதுவுமில்லாமல் அமைதியாக நிகழ்ந்த கூட்டத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அநேகர் கலந்துகொண்டது ஆச்சரியத்தைத் தந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அன்று அதிகமாக புத்தகங்களையும் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் விரைவில் ஒலிபரப்பாகவிருக்கிறது. விழா சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும், முக்கியமாக பெங்களூர் சபையாருக்கும், சகோதரர் ஜேம்ஸுக்கும், பல திருச்சபைகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் இதழ்குழுவின் சார்பாக என்னுடைய நன்றிகள். இந்த உழைப்பெல்லாம் கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ இலக்கிய வாசிப்பில் இன்னும் ஒருபடி உயரச்செய்யவேண்டும் என்பதே என்னுடைய வாஞ்சையும், ஜெபமும். திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா நிச்சயம் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக இருந்தது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s