பல ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ லங்காவிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளில் பணிபுரிந்துவிட்டு நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்து வாழவந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஓரளவுக்குப் பழக்கமேற்பட்ட பிறகு சில விருந்துகளில் அவரைச் சந்தித்தவேளை பலவிஷயங்கள்பற்றிப் பேசும் வாய்ப்புக்கிடைத்தது. அவர் தன்னை கிறிஸ்தவராகத்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார். பேச்சு எங்கள் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள்பற்றித் திரும்பியது. என்னுடைய பிள்ளைகள் அரசு கல்லூரிகளுக்குப் போகவில்லை என்றும், கிறிஸ்தவ கல்லூரியொன்றுக்குப் போவதாகவும் சொன்னேன். அதற்கு அவர் காரணம் கேட்டபோது நாட்டில் அரசு பள்ளிக்கூடங்கள் நடந்துவரும் முறைபற்றியும், அதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகங்கள்பற்றியும் சாதாரணமாகத்தான் விளக்கினேன். அந்த நண்பருக்கு முகம் மாறிவிட்டது. அரசுபள்ளிக்கூடங்களைப்பற்றி உயர்வாகப்பேச ஆரம்பித்தார். பேச்சு சரியான திசையில் போகவில்லை என்பதை உணர்ந்து அத்தோடு நிறுத்திக்கொண்டேன். அவரும் அதற்குப் பிறகு என்னை மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்திருப்பவனைப்போல உற்றுப்பார்ப்பதாக எனக்குத் தோன்றியது. இதை நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு உலகக் கண்ணோட்டம் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் இல்லாத பெரிய குறையை உணர்ந்து வருந்துகிறேன். இதைக் கொஞ்சம் நான் விளக்கித்தான் ஆகவேண்டும்.
முதலில் கிறிஸ்தவம் என்றால் என்ன என்று பார்ப்போம். கிறிஸ்தவம் என்பது வெறும் மதம் அல்ல; அது வாழ்க்கை நெறி. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் அடியோடு மாற்றப்பட்டு, அவரை விசுவாசித்து அவருக்காக, அவருடைய வார்த்தையின்படி மட்டும் இந்த உலகத்தில் கடைசிவரை வாழுகின்ற ஒரு வாழ்க்கை முறை அது. யாரோ ஒரு தலைவரையோ, அல்லது வெறும் போதனைகளையோ பின்பற்றுவதல்ல கிறிஸ்தவம். இருதயம் அடியோடு மாற்றப்பட்டு, சிந்தனை, எண்ணங்கள், நோக்கங்கள், விருப்புவெறுப்புகள், நடத்தை அனைத்தும் இயேசுவால் மாற்றப்பட்டு அவருடைய வார்த்தை மட்டும் எல்லாமாகமாறி அதன்படி ஒவ்வொருநாளும் அவருடைய துணையோடு வாழமுயற்சி செய்யும் வைராக்கிய வாழ்க்கை அது. சரியானது எது, என்பதை வாழ்க்கையில் முதல்முறை அறிந்துகொண்டு அதைச் செய்வதற்கவசியமான பத்துக்கட்டளைகளின்படி வாழ ஆரம்பிக்கும் வாழ்க்கை இது. இது நிகழுவதற்காகவே ஒவ்வொரு மெய்க்கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினால் இருதய மாற்றத்தை அடைந்து அவரையும் தன்னில் பெற்றிருக்கிறான். இதன் காரணமாக கிறிஸ்தவன் இந்த உலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் இதற்கு முன்னில்லாத வகையில் வித்தியாசமாகப் பார்த்து அணுகி, இயேசு தன் வார்த்தையில் போதித்திருக்கும் வழிப்படியான எண்ணங்களை அந்த விஷயங்களைப்பொறுத்து விசுவாசித்துப் பின்பற்றுவான். இந்த உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த விஷயத்தைப்பற்றிய கிறிஸ்தவனின் பார்வை வித்தியாசமானதாகத்தான் இருக்கும்; அதாவது அது இயேசுவின் பார்வையாக, வேதக்கண்ணோட்டமாக, இயேசு அணுகும்விதத்தில் அமைந்திருக்கும். இதுதான் வேதக்கிறிஸ்தவம்; சுவிசேஷக் கிறிஸ்தவம்; சீர்திருத்தக் கிறிஸ்தவம்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் உலகத்தில் எதுவும் ‘கடவுளுக்குரியது (Sacred), உலகத்துக்குரியது (Secular)’ என்ற பிரிவினைக்கு இடமில்லை. கடவுள் எல்லாவற்றையும் உருவாக்கியவர்; எல்லாவற்றிற்கும் உரித்துள்ளவர். கடவுளில்லாமல் எதுவுமில்லை; கடவுள் சம்பந்தப்படாததொன்றும் இந்த உலகில் இல்லை. அவரை ஒதுக்கிவைத்துவிட்டு எதையும் ஆராயவோ, எதைப் பற்றியும் சிந்திக்கவோ முடியாது. பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இது புரிவதில்லை. மிகவும் சாதாரணமான உணவு விஷயத்தில்கூட அவருக்குப் பங்கிருக்கிறது. நாம் சாப்பிடுகிற எதுவும் நம் நலத்துக்குக் கேடானதாகவும், உயிருக்கு ஆபத்தானதாகவும் இருந்துவிடக்கூடாதென்கிறது வேதம். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை வேதம் பாவமாகக் கருதுகிறது. தேவையானளவுக்கு சாப்பிடாமல் இருப்பதையும் பாவமாகக் கருதுகிறது வேதம்; அப்படிச் செய்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால். இதேவகையில்தான் உலகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அங்கு கடவுள் வந்துவிடுகிறார். உதாரணத்திற்கு, திருமணம் செய்யவேண்டும் என்று வந்தவுடன், கிறிஸ்தவன் திருமணத்தை எதிர்நோக்கும்விதமே வித்தியாசமாக இருக்கும். அவன் அதை இயேசுவின் கண்ணோட்டத்தோடு பார்ப்பான். தான் வாழுகின்ற இந்து சமுதாயமும், இந்துப்பண்பாட்டைத் தொடர்ந்து பின்பற்றிவரும் போலிக்கிறிஸ்தவ சமுதாயமும் அதைப் பார்க்கும்விதத்தில் அவன் பார்க்கமாட்டான். திருமணம் அவனுக்கு வெறும் சடங்காகவோ அல்லது உடலுறவில் ஈடுபடுவதற்கும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுவதற்கும், உற்றார் உறவினர்களைத் திருப்திப்படுத்துவதற்கும், சந்ததியைப் பெருக்கிக்கொள்ளுவதற்குமான ஒரு மீடியமாக மட்டும் இருக்காது; அவனுக்கு அது ஆண்டவர் வாழ்க்கையில் கொடுத்திருக்கும் இன்னுமொரு பெரிய பொறுப்பாகத் தென்படும். அதனால் அந்தத் திருமணவாழ்வை அமைத்துக்கொள்ளுவதில் ஆரம்பம் முதல் இறுதிவரை அவன் ஆண்டவருடைய ஆலோசனையின்படி நடந்துகொள்ளப் பார்ப்பான். இதைத்தான் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் என்கிறேன்.
கிறிஸ்தவம் நம்மினத்தில் கிறிஸ்தவ வேதத்தின்படி, ஆவிக்குரியவிதத்தில் இன்றைக்கு பரவலாகக் காணப்படாததால், இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று அறிவித்து ஞானஸ்நானம் எடுத்து சபைக்குப் போய்வருவதோடு பெரும்பாலானோருடைய கிறிஸ்தவம் நின்றுவிடுகிறது. அவர்கள், அத்தனை உலக சம்பந்தமான விஷயங்களிலும் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தைக் கொண்டிராது உலகத்தார் கொண்டிருக்கின்ற பார்வையையும், சிந்தனையையும் கொண்டிருந்து உலகத்தாரைப்போலவே வாழ்ந்துவருகிறார்கள். இதற்கு விதிவிலக்குகளை அங்குமிங்குமாகப் பார்க்கமுடிந்தாலும் பொதுவாக எல்லோரும் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமில்லாதவர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். சபைக்குப் போவதும், ஜெபிப்பதும், வேதத்தைக் கொஞ்சம் வாசிப்பதோடும் பெரும்பாலானோருடைய கிறிஸ்தவம் நின்றுவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழும்போது சமுதாயத்தில் முகங்கொடுக்கின்ற அநேகவிஷயங்களை வேதபோதனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுத்து அதைப்பின்பற்றுகிற இருதயத்தையும் வழக்கத்தையும் பெரும்பாலானோரில் காணமுடியாது இருக்கின்றது. உதாரணத்திற்கு இலங்கையில் புலிகள் மேலோங்கி இருந்த காலப்பகுதியில் எத்தனையோ கிறிஸ்தவர்கள் அவர்களை ஹீரோக்கள் போல நினைத்து அவர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள். புலிகள் இல்லாமல் போனபிறகும் இன்றும் இது தொடர்கிறது. இது சரியா? வன்முறையை வழிமுறையாகக் கொண்டிருக்கும் எந்தக் குழுவையும் கிறிஸ்தவன் ஆதரிக்கக் கூடாது என்றெல்லாம் சிந்தித்துப்பார்க்கும் நிதானத்தை அவர்களில் காணமுடியவில்லை. தமிழீழத் தமிழனாகத் தங்களைப் பார்க்கிறார்களே தவிரக் கிறிஸ்தவனாக சிந்திக்க முடியவில்லை அவர்களால். அநேக கிறிஸ்தவர்களுக்கு போர் என்றாலே அலர்ஜி. அதாவது போரே இருக்கக்கூடாது, நியாயமான விஷயத்துக்கும் நாடுகள் போரில் இறங்கக்கூடாது என்று அனாபாப்திஸ்துகளைப்போல எண்ணிவருகிறார்கள். கருவில் உயிரோடு இருக்கும் குழந்தையை அழிப்பது உயிர்க்கொலை (abortion) என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? கல்வி அவசியம் என்பதற்காக அரசு எந்தமுறைக் கல்வியை அளித்தாலும் அதை நம்பிள்ளைகள் மேல் திணிக்கலாமா? என்று எத்தனைபேர் கேட்கிறார்கள். அரசு எதைப்போதித்தாலும் கல்வி அவசியம் என்பதற்காக எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் குழந்தைகளை அனுப்பத்தயாராக இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களால் கிறிஸ்தவனாக சிந்திக்க முடியாமலிருக்கிறது. அரசியலில் ஈடுபடலாமா, கூடாதா, நாட்டில் தேர்தல் வருகிறபோது எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும், கட்சிப்பணியில் ஈடுபடலாமா கூடாதா, என்பதையெல்லாம் வேதபோதனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து முடிவெடுக்கும் நிதானம், ஞானம்கூட பெரும்பாலானோருக்கு இல்லாமலிருக்கிறது. இதையும்விட மோசமானது மனிதநலவாத இயக்கங்களிலும், மனித உரிமைகள் இயக்கங்களிலும் இணைந்து பணிபுரிவது. இதேபோல்தான் சினிமா நடிகர்களை ஹீரோக்களாக எண்ணி ஆதரிப்பதும் அவர்களுடைய படங்களைத் தங்களுடைய முகநூலில் கொண்டிருப்பதும். இதையெல்லாம் ஒரு கிறிஸ்தவனால் எப்படிச் செய்ய முடிகிறது? பெயருக்கு மட்டும் கிறிஸ்தவனாக இருப்பதால் நடப்பதா இது அல்லது கிறிஸ்தவ வேதப்பார்வை அறவே இல்லாததனால் வந்ததா இது, என்று கேட்டுப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது பொதுவாகவே நம்மினத்துக் கிறிஸ்தவர்களில் சாதாரணமாகக் காணப்படும் விஷயம்.
இதற்கெல்லாம் காரணமென்ன என்பதை சிந்திக்காமல் இருக்கமுடியாது. முதல் காரணம், சுவிசேஷக் கிறிஸ்தவம் நம்மினத்தில் சார்ள்ஸ் பினி, பில்லிகிரேகம் போன்றவர்களின் அடிப்படை நம்பிக்கையான, மனிதன் கடவுளை சுயமுயற்சியால் கண்டுகொண்டு வாழமுடியும் என்பதைப் பின்பற்றி இயேசுவுக்காகக் கையுயர்த்தும் ஒருவகைப் போலிக்கிறிஸ்தவத்தை உருவாக்கியிருப்பதுதான். இந்தப் போலிக்கிறிஸ்தவம் ஆவிக்குரிய வல்லமையில்லாததால் இதைச்சார்ந்தவர்களுக்கு பக்திவிருத்திக்குரிய முறையில் சிந்திக்க முடியாமலிருக்கிறது; வாழமுடியாதிருக்கிறது. இவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறோம் என்று நம்பினாலும், கிறிஸ்துவையும், ஆவியையும் தங்களில் கொண்டிராதவர்களாக தங்களைத் தாங்களே ஏமாற்றி வாழ்கிறார்கள். இவர்களுக்கு மெய்யான மனந்திரும்புதலைத் தரக்கூடிய இயேசுவின் வல்லமையான சுவிசேஷம் இன்று தேவை; ஆவியானவரின் உயிர்மீட்பு எழுப்புதல் இவர்களுடைய இருதயத்தில் நிகழவேண்டும்.
இரண்டாவதாக, கிறிஸ்தவர்கள் மத்தியில் இன்றைக்கு வேதப்பிரசங்கம் தெளிவான முறையில் ஆவிக்குரிய பயன்பாடுகளோடு பிரசங்கிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்று சுவிசேஷப்பணிக்கு வந்திருப்பவர்கள், வேதஅறிவில்லாமல், போதக ஊழியத்துக்குத் தேவையான ஞானமும் தகுதியுமில்லாமல் பிரசங்க மேடையை சாட்சிசொல்லுவதற்கும், வாக்குத்தத்தங்களை அள்ளித்தெளிப்பதற்கும் பயன்படுத்திவருவதால், அவர்களோடு இணைந்து ஆத்துமாக்களும் ஆவிக்குரிய வேதஞானமில்லாமல் நம்மினத்தில் இருந்துவருகிறார்கள். ஆதியாகமத்தில் இருந்து வெளிப்படுத்தல்வரையுள்ள நூல்களில் தேர்ச்சியுள்ளவர்களாக கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை ஆத்துமாக்கள் கொண்டிருக்கும்விதத்தில் விளக்கிப் போதித்துப் பிரசங்கிக்கும் வல்லமையுள்ளவர்களை நம்மினத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். போதாக்குறைக்கு பெரும்பாலான பிரசங்கிகளும் சாதி, சடங்கு, பண்பாடு என்ற பாசிபிடித்த குட்டைக்குள் வீழ்ந்துகிடப்பதால் அவர்களுக்கு உலகக் கண்ணோட்டம் எங்கிருந்துவரும்? நம்மினத்தில் வாழ்க்கை சம்பந்தமாகவும், உலகம் சம்பந்தமான விஷயங்களிலும் ஆவிக்குரியவிதத்தில் வேதத்தைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியாமல் திசைதடுமாறிய நிலையில் இருந்துவரும் எத்தனையோபேரை நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களுக்காக வருத்தப்பட்டிருக்கிறேன்; ஆலோசனை தந்திருக்கிறேன். இந்த விஷயங்களில் முடிவெடுக்க முடியாத பலவீனத்தோடு இவர்கள் வாழ்ந்து வருவதற்குக் காரணம் ஆவிக்குரிய வேதபோதனையும், ஆத்துமவிருத்தியளிக்கும் அன்போடுகூடிய போதகக் கண்காணிப்பும் இவர்களுக்குக் கிடைக்காமல் இருப்பதுதான். மூலமொழியில் இருந்து பிசகாமலும், இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதுமான தமிழில் வேதம் இல்லாதகுறைமட்டுமல்லாது, சத்தான போதனையையும் தகுந்த ஆத்துமவிசாரிப்பையும் கொடுக்கத் தகுதியும், வல்லமையும் இல்லாத ஊழியர்களால் நம்மினம் ஆடிக்காற்றில் அல்லாடிக் கொண்டிருக்கும் ஆல்இலைபோல் இருந்துவருகிறது. அதற்கு கிறிஸ்தவ வாழ்க்கையை ஆவிக்குரியவிதத்தில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி இந்த உலகத்தில் வாழத்தெரியவில்லை.
இவற்றோடு இன்னொரு முக்கியமான காரணம் நம்மினத்தில் வாசிப்பு துப்புரவாக இல்லாமலிருப்பது. வாசிப்பில்லாமல் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை ஒருவன் வளர்த்துக்கொள்ளுவதென்பது முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படும் கதைதான். வாசிப்பைப்பற்றி எவ்வளவோ எழுதியிருப்பதால் மறுபடியும் அதை இங்கு விளக்கத்தேவையில்லை. ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை வாங்கி வாசியுங்கள். உங்களுக்கே புரியும் நான் என்ன சொல்லவருகிறேன் என்பது.
கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தைக் கொண்டிராமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்பது அநேகருக்குப் புரிவதில்லை. அத்தகைய கண்ணோட்டம் இல்லாமலிருந்தால் நாம் ‘லிபரல்களாகத்தான்’ இருந்துவருவோம். ஆங்கிலத்தில் ஆவிக்குரிய விஷயங்கள் சம்பந்தமாக ‘லிபரல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது வேதத்தை நிராகரித்து உலகப்பிரகாரமான கொள்கைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறோம். அது ஆபத்தானதுதானே. கீழைத்தேய நாடுகளில் கிறிஸ்தவத்தின் செல்வாக்கு நாடுதழுவியதாக இருந்ததில்லை. அநேக நாடுகள் மதநம்பிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தாலும், கிறிஸ்தவ செல்வாக்கு அதிகமில்லாததாகவே தொடர்ந்திருக்கின்றன. இத்தகைய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்துவரும் கிறிஸ்தவர்கள் பெரும்போராட்டத்துடனேயே வாழநேர்கிறது. உலகப்பிரகாரமான சிந்தனைகளையும், உருவவழிபாட்டையும், அதோடு தொடர்புடைய சம்பிரதாயங்களையும் எண்ணப்பாட்டையும் கொண்டிருக்கும் சமுதாயத்தில் அவர்கள் அன்றாடம் மனத்தளவிலும், செயலளவிலும் கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான அம்சங்களுக்கு முகங்கொடுத்து வாழ்கிறார்கள். இது அங்கு சகஜம். மெய்க்கிறிஸ்தவனாக இருந்து கிறிஸ்தவ உலகப்பார்வையில்லாதிருந்தால் இத்தகைய சமுதாயத்தில் அவர்களால் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்விதத்தில் வாழ்வது பெருங்கஷ்டம். இந்நாடுகளில் அரைவேட்காட்டு கிறிஸ்தவர்களாக இருப்பவர்களே, சிந்திக்க மறுத்து சமுதாயத்தில் சாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, தாய், தந்தைவழி வரும் நெருங்கிய உறவில் திருமண பந்தத்தில் ஈடுபட்டு, பணம் வேண்டுமென்பதற்காக சிந்தனையை அடகுவைத்து வேதத்திற்கு விரோதமான தொழில்களில் ஈடுபட்டுப் பலவீனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
கீழைத்தேய நாடுகள் கிறிஸ்தவ அரசுகளால் ஆளப்படவில்லை. பொருளாதாரம், கல்வி, சமுதாய ஒழுங்கு, மதவிஷயங்களெல்லாம் ஆளும் பெரும்பான்மையினரால் தீர்மானிக்கப்படுகின்றன. கிறிஸ்தவனின் சுற்றுச்சூழல் இந்நாடுகளில் அவிசுவாச நம்பிக்கைகளைக்கொண்டு, உலகப்பிரகாரமானதாக இருந்துவருகின்றது. இந்தச் சுற்றுச்சூழலுக்கு இடங்கொடுத்து விசுவாசத்தைக் கெடுத்துக்கொள்ளாமலும், அதேவேளை வேதபோதனைகளை அனைத்து விஷயங்களிலும் கைக்கொள்ளுவதும் விசுவாசியின் கடமையாகிறது. தன்னுடைய சுற்றுச்சூழல் கஷ்டமானது என்பதால் வேதத்தைப் பலவிஷயங்களில் ஒதுக்கிவைத்துவிட்டு சூழலுடன் ஒத்துப்போய் வாழ்கிறவன் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் இல்லாதவனாகத்தான் இருப்பான். இன்று அத்தகைய சுற்றுச்சூழலும் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது. இந்தியாவில் மூன்றாம் பாலென்று ஒன்றை சட்டம் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கை இந்நாடுகளில் வலுப்பெற்று வருகிறது. கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் இல்லாதவர்களால் இதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது; இவற்றை எதிர்த்து எப்படி வாழ்வது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் போகும்.
சுற்றுச்சூழல் எப்படி இருந்தபோதும், கிறிஸ்தவன் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டத்துடன் அனைத்தையும் எதிர்த்து வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்த வேண்டும் என்பது கிறிஸ்தவ விசுவாசத்தைப் பொறுத்தவரையில் தவிர்க்க முடியாததொன்று. முரண்பாட்டுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை. ஒன்று, ஒருவன் பாவத்தை அன்றாடம் எதிர்த்து, தொடர்கின்ற மனந்திரும்புதலோடு கிறிஸ்தவனாக வாழவேண்டும் இல்லையெனில் முரண்பாடுகள் கொண்ட அரைவேட்காட்டு மனிதனாக போலிக்கிறிஸ்தவ வாழ்க்கை வாழவேண்டும். போலிக்கிறிஸ்தவர்கள் மெய்க்கிறிஸ்தவர்கள் அல்லர். சுற்றுச்சூழல் தங்களுடைய விசுவாச வாழ்க்கைக்கு பொருந்திப்போகாத நிலை இருந்தபோது மோசேயும், யோசுவாவும், ஆபிரகாமும், யோசேப்பும், தானியேலும் அவனுடைய நண்பர்களும் சிந்திக்க மறுத்து முரண்பாடுகளைக்கொண்ட வாழ்க்கை வாழவில்லை; அவர்கள் விசுவாசத்தின் அடிப்படையிலான உலகக்கண்ணோட்டத்துடன் சுற்றுச்சூழலை எதிர்த்து வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தினார்கள். இயேசுவும் தன் வாழ்நாளில் இந்த உலகத்தில் இதைத்தான் செய்தார். பவுலும் இதேவிதமாகத்தான் வாழ்ந்தார். இவர்கள் எல்லோரும் உலகத்துக்கு அடிமையாகி கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டமில்லாது வாழவில்லை. கிறிஸ்தவனாக இருந்தும் கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டமில்லாமல் வாழ்ந்து தன் வாழ்க்கையை அசிங்கப்படுத்திக் கொண்டதற்கு உதாரணமாகத்தான் லோத்துவை வேதத்தில் காண்கிறோம்.
சீர்திருத்த கிறிஸ்தவ விசுவாசிகள் கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டம் கொண்டிராதிருப்பது அந்த விசுவாசத்திற்கே அவமானம் தேடித்தரும் செயல். சீர்திருத்த கிறிஸ்தவம் வேதபூர்வமான உலகக் கண்ணோட்டத்துடன் நாம் வாழ உதவுகிறது. மார்டின் லூத்தரோ, ஜோன் கல்வினோ, ஜோன் பனியனோ அல்லது ஜோன் ஓவனோ கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமில்லாது இருந்துவிடவில்லை. கிறிஸ்தவ உலகக்கண்ணோட்டம் கொண்ட சீரிய சிந்தனையாளராக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் இருந்தார். இந்த வரிசையில் நவீன காலத்தில் ஜே. சி. ரைல், சார்ள்ஸ் ஸ்பர்ஜன், ஆபிரகாம் கைப்பர் இவர்களுக்குப் பிறகு மார்டின் லொயிட் ஜோன்ஸ் போன்றோரையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இந்த சீர்திருத்த விசுவாசிகள் சிந்தனையாளர்களாக கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டமுடையவர்களாக நமக்கு உதாரணபுருஷர்களாக இருந்திருக்கிறார்கள். தற்காலத்து சீர்திருத்த விசுவாசியும் இறையியல் வல்லுனருமான அல்பர்ட் மொஹ்லர் இத்தகைய கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும்விதத்தில் நடைமுறை சுற்றுச்சூழல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் சம்பந்தமான விஷயங்களை ஆராய்ந்து வேதரீதியில் தன்னுடைய Briefing எனும், கணினி சார்ந்த அன்றாடச் செய்திகளை ஆங்கிலத்தில் 22 நிமிடங்களுக்கு அளித்து வருகிறார். கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்துக்கு அல்பர்ட் மொஹ்லரின் செய்திகள் அருமையான உதாரணமாக இருந்துவருகின்றன. யாரையும் பொருட்படுத்தாமலும், யாருக்கும் தலைவணங்காமலும், இந்த இறையியல் வல்லுனர் வேதவிளக்கங்களைத் தொடர்ந்து அளித்து வருகிறார்.
கிறிஸ்தவ உலகக் கண்ணோட்டத்தை எப்படிக்கொண்டிருப்பது, என்று சுருக்கமாக விளக்கப்போனால் எனக்கு இரண்டு வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. பவுலே அந்த இரண்டு வசனங்களிலும் இதைப் பொதுவானவிதத்தில் விளக்கியிருக்கிறார்.
1அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 2நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோமர் 12:1-2)
8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். (பிலிப்பியர் 4:8-9)
இந்த வசனங்களின் மூலம் பவுல் வேதத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து வேதக்கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டு ஆண்டவருக்குரிய வாழ்க்கை வாழும்படியாகச் சொல்லுகிறார். கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள், சமுதாய இழிவுகளுக்கு வாழ்க்கையில் இடங்கொடுத்து கிறிஸ்துவை ஏமாற்றி வாழாதீர்கள். இந்த உலகத்தை சமாதானப்படுத்தி வாழ்வீர்களானால் பரலோகத்தில் உங்களை ஆண்டவர் வரவேற்கமாட்டார். தேமா உலகத்தோடு சமாதானத்தை ஏற்படுத்திக்கொண்டதால் பரலோகத்தை இழந்துபோனான். யூதாசுக்கும் அதேகதிதான். உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள்; கிறிஸ்துவுக்காக உலகத்தை எதிர்த்து வாழப்போகிறீர்களா? உலகத்தோடு ஒத்துப்போய் இருதயத்தைப் பாழாக்கிக்கொள்ளப்போகிறீர்களா?