புத்தகக்கடைக்குப் போயிருக்கிறீர்களா?

என்ன பூக்கடைக்குப் போயிருக்கிறீர்களா, என்று கேட்பதுபோல் கேள்வி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? பூக்கடைக்குப் போய்வருவது நமக்கு சகஜந்தானே; புத்தகக்கடைக்குப் போவதுதான் நமக்கு வழக்கத்திலேயே இல்லாததொன்று. புத்தகக்கடைக்குப் போவது எனக்குப் பூக்கடைக்குப் போய்வருவதுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. விதவிதமான பூக்களைப் பார்த்தும், அவற்றின் மணத்தை நுகர்ந்தும் மகிழ்வதுபோல்தான் நான் புத்தகங்களை அனுபவிக்கிறேன். பூக்களைப் புத்தகங்களோடு ஒப்பிடுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். எத்தனை நறுமணத்தைப் பூக்கள் தந்தாலும் புத்தகங்களைப்போல எண்ணங்களைப் பூக்களால் பகிர்ந்துகொள்ள முடியுமா? பூக்கள் கண்களுக்கும், நாசிக்கும் விருந்தளிக்கின்றன; புத்தகங்கள் இருதயத்துக்கும், அறிவுக்கும், ஆவிக்கும் விருந்தளிக்கின்றன. பூக்கடை எனக்குப் பிடிக்கும்; புத்தகக்கடை அதைவிட எனக்குப் பிடிக்கும். இதென்னடா, இந்த ஒப்பீட்டுக்கு ஓர் ஆக்கமா என்று நினைத்து தொடர்ந்து வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள். சில புத்தகக்கடைகளுக்கு சமீபத்தில் போய்வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப்பீடிகை!

இந்திய வேதாகம சங்கம்

IMG_0029எந்த நாட்டுக்கும், நகரங்களுக்கும், ஊர்களுக்கும் போனாலும், புத்தகக்கடைகளுக்கும், நூலகங்களுக்கும் முடிந்தவரை போவதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறேன். விமானநிலையங்களில்கூட புத்தகக்கடைகளை நான் விட்டுவைப்பதில்லை. ஒவ்வொரு பிரயாணத்தின்போதும் எப்படியாவது சில புத்தகங்களைக் கையோடு கொண்டுவந்துவிடுவேன். விமான, இரயில் பயணங்களில் புத்தகங்களும், வார, மாத இதழ்களும் கையில் இல்லாமல் பயணம் செய்வதில்லை. நேரத்தைத் போக்குவதற்காக மட்டுமல்லாமல் சிந்தனைக்கும், அறிவுக்கும் தீனியளிக்க புத்தகங்களும், இதழ்களும் உதவுமே. சரி புத்தகக்கடைகளுக்கு வருவோம். ஜனவரி மாதம் பெங்களூரில் இரண்டு புத்தகக்கடைகளுக்குப் போயிருந்தேன். முதலில் போனது இந்திய வேதாகம சங்கம், காரணம், ஏதாவது புதிய தமிழ் வேதப் பிரதிகள் அச்சிடப்பட்டு வந்திருக்கிறதா என்று பார்ப்பதற்காகத்தான்; முடிந்தால் வாங்கிவிடவுந்தான். பலவிதமான வேதப்புத்தகங்கள் வித்தியாசமான அளவுகளில் பெரிதும், சிறிதுமாக பல மொழிகளில் அங்கிருந்தன. கடையில் பலர் வேலைக்கிருந்தார்கள். வரவேற்று வேதப்புத்தகங்களை எடுத்துக்காட்டினார்கள். வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது. எல்லாக் கடைகளிலும் இப்படி இருக்குமென்று சொல்லமுடியாது.

ஆங்கிலத்திலும், தமிழிலும் அடுத்தடுத்து இருக்கும்வகையில் வெளியிடப்பட்டிருந்த புதிய ஈ. எஸ். வி. மொழிபெயர்ப்பொன்றை வாங்கினேன். பெரிய எழுத்தில் வெளியிடப்பட்டிருந்த தமிழ் வேதமொன்றையும் வாங்கினேன். அங்கே வைக்கப்பட்டிருந்த தமிழில் வெளிவந்திருந்த வேதப்புத்தகங்களையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தபோது முதல்தடவையாக ஒரு விஷயம் மண்டையில் தட்டியது. இதற்குமுன் இதை நான் கவனித்ததேயில்லை. எல்லாத் தமிழ் வேதங்களிலும் அச்சு ஒரேவிதத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருந்துவந்திருக்கிறது என்பதுதான் அது. என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? உங்கள் கையில் இருக்கும் வேதத்தை எடுத்து அச்சைக் கவனியுங்கள். அது நாற்பது, ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்ததைப்போன்ற அதே எழுத்துரு பயன்படுத்தப்பட்டு இன்றும் அச்சிடப்பட்டு வருகிறது. இதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். இந்த 21ம் நூற்றாண்டில் கணினியில் பயன்படுத்தக்கூடிய எத்தனையோவிதமான நவீன எழுத்துரு வடிவங்கள் பரவலாக, இலவசமாகக்கூடப் பெற்றுப்பயன்படுத்தக்கூடிய வசதி இருக்கும்போது இந்திய வேதாகம சங்கம் தொடர்ந்தும் ஏன் பிரிட்டிஷ்காலத்து எழுத்துருவைப்பயன்படுத்தி அச்சிட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் கேள்வி. அதுவும் எந்த அளவு வடிவில் இருக்கும் வேதத்தை எடுத்தாலும் அதே அச்சுப்பதிவுதான். எப்போதோ வடிவமைக்கப்பட்ட வேதத்தை அதில் எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதைத்தேவைக்கேற்ற அளவுக்கு பெரிதாகவோ சிறிதாகவோ ஸ்கேன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் சில வேதப்புத்தகங்களில் எழுத்துப் பதிவு மங்களாக, தெளிவாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். வானத்தில் இருந்து தமிழ் வேதம் விழுந்ததாக நம்மினத்தில் அநேகர் நினைத்துக்கொண்டிருப்பதால் இந்திய வேதாகம சங்கமும் தெய்வீகமான தமிழ் வேதத்தின் அச்சில்கூட எந்தமாற்றத்தையும் செய்யக்கூடாதென்று நினைக்கிறதோ என்னவோ. நான் வெளியிட்டுவருகின்ற நூல்களில்கூட எந்தளவுக்கு எழுத்துரு வடிவங்களை சிறப்பாக அமைக்கலாம் என்று கவனத்தோடு வெளியிட்டு வருகிற இந்தக்காலத்தில் இந்திய வேதாகம சங்கம் வேதத்தை வெளியிடுவதில் எந்த அக்கறையும் இல்லாமல் தொடர்ந்து பழங்காலத்து அச்சு வடிவத்தைப் பயன்படுத்தி வருவதை நாம் அக்கறையில்லாத் தன்மையாக மட்டும் காணவில்லை; நம்மினத்து கிறிஸ்தவத்தின் பலவீனமான, தாழ்ந்த நிலைக்கு இன்னோரு உதாரணமாகத்தான் காண்கிறேன்.

ஈ. எல். எஸ். புத்தகக்கடை

IMG_0081நண்பரும் நானும் அடுத்ததாக ஈ. எல். எஸ். புத்தகக்கடைக்குப் போனோம். போகும் வழியில் டிராபிக் ஹெவியாக இருந்தது. ஓரிடத்தில் மட்டும் கொளுத்தும் மத்தியான வெயிலில் அரை மணிநேரம் கார் அசையாமல் நின்றது. இறங்கி நடந்துபோய்விடலாமா என்றிருந்தது. ஒருவழியாய் கார் நகர கடையைத் தேடிப்பிடித்துப் போய்ச்சேர்ந்தோம். உள்ளே எயார்கண்டிஷன் இருந்ததால் மூச்சுவிட முடிந்தது. உண்மையில் ஜனவரிமாத பெங்களூர் காலநிலை நியூசிலாந்து ஸ்பிரிங் போல குளு குளு என்றிருக்கும். ஆனால் மத்தியான வெயில் கொஞ்சம் தலையைச் சுடும்.

ஈ. எல். எஸ். புத்தகக்கடை பெரிதாக இருந்தது. ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும், கன்னட மொழியிலும் அடுக்கடுக்காக எங்கும் வியாபித்து இருந்தன. நம்முடைய நூல்களை சென்னை ஈ. எல். எஸ். விற்பனை செய்வதால் இங்கும் இருக்குமோ என்ற ஆர்வத்தில் தமிழ் நூல்கள் இருந்த பகுதியை முதலில் பார்க்க ஆரம்பித்தேன். உண்மையில் ஆங்கில நூல்களோடு ஒப்பிடும்போது கடையில் தமிழ் நூல்கள் அத்தனை அதிகமாக இருக்கவில்லை. நம்முடைய நூல்கள் அங்கிருக்கவில்லை. என்னை கடையில் இருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு மேலாளரை அவருடைய அறையில் சந்தித்தேன். வாலிப வயதில் இருந்த மேலாளரோடு பேச்சுக்கொடுத்தபோது அவருக்கு நூல்கள் பற்றியோ, அதை எழுதியவர்களைப்பற்றியோ அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. தன் மனைவி நியூசிலாந்துக்குப் போக இருப்பதாக அவர் சொன்னார். மேலும் பேசிப்பயனில்லை என்பதால் புத்தகங்களை மறுபடியும் ஆராய ஆரம்பித்தேன்.

கடையில் தமிழில் இருக்கும் நூல்களைப்பற்றி என்ன சொல்லுவது? நூற்றுக்குத் தொண்ணூற்றைந்துவரை கெரிஸ்மெட்டிக் நம்பிக்கையைக் கொண்டவர்களால் எழுதப்பட்ட நூல்களே மலிந்து காணப்பட்டன. வால்டர் ஜெயபாலன் எழுதிய ‘பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு’ நூலை மட்டுந்தான் அங்கே வாங்க முடிந்தது. நண்பர் ஆங்கில நூல்களில் அதிக சிரத்தை காட்டினார். உண்மையில் ஆயிரக்கணக்கான ஆங்கில நூல்களின் மத்தியில் பத்துக்குமேற்பட்ட நல்ல நூல்களை வாங்க முடிந்தது. வால்டர் ஏ. எல்வெல்லின், இவாஞ்சலிக்கள் டிக்ஷனரியை அங்கே பெற முடிந்தது. வேறு சில நல்ல ஆங்கில நூல்களும் இருந்தன. ஆர். சி. ஸ்பிரவுல் எழுதிய ஒரே ஒரு நூல் மட்டும் இருந்தது. நண்பரும் நானும் பத்துக்குமேற்பட்ட நல்ல ஆங்கில நூல்களை வாங்கிக்கொண்டோம்.

ஆர்வமுள்ள பணியாளர் ஒருவர் சில நூல்களை அறிமுகம் செய்ய முயற்சி செய்தார். என்னடா சுற்றிச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே, எதை வாங்குவது என்று தெரியாமல் முழிக்கிறார்களோ என்னவோ, என்று நினைத்தாரோ தெரியாது. அவர் காட்டிய நூல்கள் எல்லாம் கெரிஸ்மெட்டிக் நம்பிக்கை கொண்டவர்களால் எழுதப்பட்டது. வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட உண்மையைச் சொல்லிவிடுவது நல்லது என்று, அவரிடம் ஒருபடியாய் எத்தகைய நூல்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றும், அங்கிருக்கும் நூல்களில் என்ன பிரச்சனை என்பதையும் விளக்கினேன். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார். நான் சொன்னது அவருக்குப் புரிந்ததோ இல்லையோ, முகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் நம்மினத்துக் கிறிஸ்தவ விற்பனையகங்களின் உண்மை நிலை. பெங்களூரில் ஆங்கிலத்தில் வாசிக்கிறவர்கள் தொகை அதிகம் என்பதால்தான் அத்தனை ஆங்கில நூல்களும், அதில் பத்தாவது நல்ல நூல்களும் இருந்ததற்குக் காரணம். அதைச் சென்னையில் பார்க்க முடியாது.

சென்னையில் குருக்குள்

பெங்களூரில் இருந்து சென்னை சென்றபோது இவாஞ்சலிக்கள் லூத்தரன் இறையியல் கல்லூரியான குருக்குள்ளின் புத்தகக்கடையைப் பார்ப்பதற்காக நண்பருடன் போனேன். புத்தகக்கடையில் சீகன்பால்குபற்றிய நூல்களும் வேறு நூல்களும் கிடைக்குமா என்று பார்ப்பதே என் நோக்கமாக இருந்தது. வசதியான அந்த வளாகத்திலுள்ள முதல் கட்டடத்தில் ஒரு அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. நாளாந்தம் அங்கு விற்பனை நடப்பதாகத் தெரியவில்லை; அதைக் கவனித்துக்கொள்ள யாரும் அன்று இருக்கவில்லை. வாட்ச்மேனிடம் அதுப்பற்றிக் கேட்க, அவர் யாரையோ தேடிப்பிடித்து அழைத்துவந்தார். வந்தவர் அறையைத் திறந்து காட்டியபோதும் அவருக்கு விலையொன்றும் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ நூல்களையெல்லாம் அலசிப்பார்த்து இரண்டை மட்டும் வாங்கிக்கொண்டோம்.

ஒருவர் வாசிக்கின்ற நூலும், அவருடைய நூலகமும் அவருடைய விசுவாசத்தைத் தெரிந்துகொள்ள உதவும் என்பார்கள். குருக்குள் புத்தகக்கடை நூல்கள் எல்லாமே அதன் பெயருக்கேற்றதாக இருக்கவில்லை. ‘இவாஞ்சலிக்கள்’ என்று பெயர்வைத்துக்கொண்டிருக்கும் அந்த இறையியல் கல்லூரி புத்தகக்கடையில் இருந்த அனைத்துப் புத்தகங்களும் ‘லிபரல்’ எண்ணங்களையும், பார்வையையும் கொண்டவை. சமுதாய சீர்திருத்தம் பற்றியும், தலித் பிரச்சனை பற்றியும், சாதி பற்றியும் இருந்த புத்தகங்களுக்கு மத்தியில் மார்டின் லூத்தர் ஆரம்பித்துவைத்த சீர்திருத்தக் கருத்துக்களோ, போதனைகளோ கொண்ட ஒரு நூலையாவது நான் காணவில்லை. புத்தகக்கடையே இப்படி என்றால் அந்த இறையியல் கல்லூரியின் போதனைகளும், இவாஞ்சலிக்கள் லூத்தரன் திருச்சபைகளின் நிலையும் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். ‘இவாஞ்சலிக்கள்’ என்ற பதத்திற்கு நம்மினத்தில் அர்த்தமே வேறு.

நியூ புக் லேண்ட்ஸ்

IMG_0783கடைசியாக நான் போய்ப் பார்த்த புத்தகக்கடை தியாகராஜ நகரில் இருக்கும் நியூ புக் லேண்ட்ஸ். இதுவரை நான் போயிருந்த இடங்களைப்போல இந்த விற்பனையகத்தில் கிறிஸ்தவ நூல்கள் மட்டும் விற்பனையில் இருக்கவில்லை. இது சகல நூல்களையும் விற்கும் சென்னையில் உள்ள ஒரு முன்னணி புத்தக நிலையம். இதைப்பற்றி நான் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்பீர்கள். அதற்கு முக்கியமான காரணமுண்டு. இதற்கு முன் பல கடைகளுக்கு நான் போயிருக்கிறேன். இருந்தாலும் இந்தக் கடைக்குப் போனது ஒரு புது அனுபவமாக இருந்தது.

மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனைப்பற்றிய ஒரு புதிய தொகுப்பு ‘மனா’ லட்சுமணன் எழுதி வெளிவந்திருப்பதை அறிந்து அதை எங்கே பெற்றுக்கொள்ளலாம் என்று எழுத்தாளர் ஜெயமோகனை எழுதிக் கேட்டேன். அவர் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடையில் கிடைக்கும் என்றார். ஒரு மாதிரியாக கடையைத் தேடிப்பிடித்தேன். தி நகரில் வட உஸ்மான் தெருவின் மேம்பாலம் முடியுமிடத்தில் கடை இருந்தது. பழைய எண், புதிய எண் குழப்பத்தால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இத்தனை தூரம் வந்துவிட்டோம், எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடு சிலரிடம் விசாரித்து அங்கு போய்ச்சேர்ந்தேன். நண்பர் வெட்டியும் என்னோடிருந்தார். திரும்பிவர கொஞ்ச நேரமாகும் என்று கார் டிரைவரிடம் கூறினேன். அது முழு உண்மையல்ல. புத்தகக் கடைக்குள் நுழைந்துவிட்டால் நான் அத்தனை சீக்கிரம் வெளியில் வந்துவிடுவதில்லை என்பது டிரைவருக்கு எங்கே தெரியும். தெருவில் இருந்து பார்க்கிறபோது கடை பெரிதாகத் தெரியாவிட்டாலும் உள்ளே நுழைந்துவிட்டால் இடம் பெரிதுதான் என்பது புரியும். உள்ளே நுழைந்தவுடனேயே எனக்குள் ஒரு புல்லரிப்பு ஏற்பட்டது. கடையைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால் மட்டுமல்ல, உள்ளே ஆயிரக்கணக்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்ததாலும் ஏற்பட்ட புல்லரிப்பு அது.

கடையின் மேலாளர் சீனிவாசன். கடை இலக்கிய வாஞ்சையுள்ள நர்மதா பதிப்பகத்தால் ஆரம்பிக்கப்பட்டது. திரு சீனிவாசன் ஆரம்பகாலத்தில் இருந்து கடையை மேற்பார்வை செய்துவருகிறார். அவரோடு பேச்சுக்கொடுத்து விபரங்கள் அறிந்துகொள்ள முயன்றேன். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வந்திருக்கும் காரணத்தைச் சொன்னேன். உடனடியாக வரிசைக்கிரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஜெயகாந்தன் நூல்களின் அருகில் அழைத்துச் சென்றார். அடுத்த ஒருமணி நேரம் கடையை அலசிப் பார்க்கும் செயலில் ஈடுபட்டேன். எழுத்தாளர்களின் பெயர் வரிசைப்படி அவர்களுடைய நூல்களெல்லாம் வரிசைக்கிரமாக வைக்கப்பட்டிருந்தன. பிரபலமான பழைய புதிய எழுத்தாளர்களின் நூல்களனைத்தும் அங்கே இருந்தன. அழகிரிசாமி, சி. சு. செல்லப்பா, மு. வரதராசனிலிருந்து இக்காலத்து ஜெயமோகன், ராமகிருஷ்ணன்வரை எல்லோருடைய நூல்களும் இருந்தன. நான் தேடிக்கொண்டிருந்த ஜெயமோகனின் காடு நூல் அங்கு கிடைத்தது. இதுவரை இந்தளவுக்கு இலக்கிய நூல்களை ஒரே கடையில் நான் பார்த்ததில்லை. சிற்றிதழ்கள் இன்று எத்தனை புத்தகக் கடையை அலங்கரிக்கின்றன? நுழைந்த உடனேயே கடையில் அவை கண்ணில் படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் மட்டும் 70,000 நூல்கள் இருப்பதாக சீனிவாசன் சொன்னார். அதுதவிர ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான நூல்களும் இருக்கின்றனவாம். சென்னைவாசிகள் அதிர்ஷ்டக்காரர்கள் என்று நினைக்கத் தோன்றும். அது நினைப்பாக மட்டுந்தான் இருக்க முடியும் என்பதை திரு சீனிவாசனோடு தொடர்ந்து பேச்சுக்கொடுத்தபோது தெரிந்தது. இத்தனை பெரிய புத்தகக் கடையில் ஆயிரக்கணக்கான இலக்கிய நூல்களை வைத்திருக்கிறீர்களே, எத்தனை பேர் வாசிக்கிறார்கள், கடை நடத்தும் அளவுக்கு லாபமிருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை சார் என்று அவர் உடனடியாக சொன்னார். 9 மில்லியன் மக்கள் வாழும் சென்னை மாநகரத்தில் ஆயிரம் பேர் மட்டுமே தீவிர வாசகர்களாக அங்கே புத்தகங்களை வாங்கி வாசிக்கிறார்களாம். அதிர்ச்சி தரும் செய்தி இது. வாசிப்பு நம்மினத்தில் கீழ் நிலையில் இருக்கிறது என்பது எனக்குத் தெரிந்திருந்தபோதும் இது கொஞ்சம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்தது. ஆயிரம் கஸ்டமர்களை வைத்து எப்படிக் கடை நடத்துகிறீர்கள்? என்பது என்னுடைய அடுத்த கேள்வியாக இருந்தது. இல்லை சார், இங்கே ஆயிரம் பேர்தான் புத்தகங்களை வாங்கி வாசித்தாலும் வெளிநாடுகளில் இருந்து பத்தாயிரம் பேர்வரை நூல்களை ஆர்டர் செய்து வாங்கி வாசிக்கிறார்கள், அவர்களாலேயே கடை நடத்த முடிகிறது என்று பதில் வந்தது. வெளிநாட்டுத் தமிழர்களாவது தமிழகத்தின் மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படத்தான் முடிந்தது. சீனிவாசன் ஆழம் சிற்றிதழுக்கு ‘வாசிக்கும் பழக்கம் குறைத்திருக்கிறதா’ என்ற தலைப்பில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

நியூ புக் லேண்ட்ஸ் கடையில் வாசிக்கிறவர்களைத்தான் வேலைக்கு வைக்கிறோம் என்று சீனிவாசன் சொன்னார். அதுவும் ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கடைகளுக்குப் போயிருந்தபோதும் இங்குதான் கடைக்காரரோடு புத்தகங்களைப்பற்றியும், நூலாசிரியர்களைப் பற்றியும் பேச முடிந்தது. சீனிவாசன் சொன்னார், ‘சார், சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே போதும் அரசு மாறிவிடும்’ என்று. அவை உண்மையான வார்த்தைகள். வாசிக்கிறவர்களே சிந்திக்கிறவர்கள். மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் கோமாளித்தன அரசுகளுக்கு நாட்டில் வாய்ப்பிருக்காது. ஒரு காலத்தில் இலக்கிய வாசிப்பில் இளைஞர்களுக்கு இருந்த நாட்டம் இன்று இல்லை. இருபது இருபத்தியோரு வயது இளைஞர்கள் எல்லாம் வட்செப்பிலும், இன்ஸ்டகிராமிலும், முகநூலிலும் குறுஞ்செய்தி அனுப்பி குதூகலித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர வாசிப்பையே அறியாதிருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறை எப்படி இருக்கப்போகிறது? பெங்களூரில் இருந்தபோது தொலைபேசியில் சிறிது நேரம் எழுத்தாளர் ஜெயமோகனோடு பேசினேன். ஓரிருதடவை கடிதம் எழுதியிருந்தபோதும் அவரை நேரில் பார்த்ததில்லை. அதற்கு இந்தத் தடவை வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இருந்தாலும் ஐந்துநிமிடங்களுக்கு மேல் அவரோடு பேசியபோது அவருடைய இளம் வாசகர்கள் வாசிக்கிறவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும், நல்ல தமிழில் எழுதக்கூடியவர்களாகவும் இருப்பதை சுட்டிக்காட்டினேன். தன்னுடைய நூல்களைக்கூட அதிகம் பேர் வாசிப்பதில்லை என்றும், தமிழ் நாட்டில் வாசிப்பு அருகியே இருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். நம்மினத்தில் வாசிப்பின்மை பற்றிய நம்முடைய ஆதங்கம் பெரிதாகி அநேகரை வாசிக்க வைக்க என்ன செய்யலாம் என்று தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது. ஜனவரி மாதத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் மிகவும் நல்ல முயற்சி; அதற்குப் போகமுடியாதபடி போனது ஒரு புறம் வருத்தமே.

திரு சீனிவாசனோடு என் நண்பர் ரொபட்டும் நானும் பேசிய சந்தர்ப்பம் மகிழ்ச்சியளித்தது. புத்தகக்கடைக்குப் போய் நூல்கள் வாங்காமல் இருக்க முடியுமா? வேதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர்களில் ஒருவரான பெப்ரீசியஸின் அகராதி மீள்வெளியீடு செய்யப்பட்டு கடையில் இருந்தது. அதுவரை அது அச்சில் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை. அதை வாங்கிக்கொண்டேன். தமிழ் வேத மொழிபெயர்ப்பில் பெப்ரீசியஸின் மொழிபெயர்ப்பே அது வெளிவந்த காலத்தில் எல்லோருக்கும் பிடித்தமானதாக இருந்திருக்கிறது என்று வாசித்திருக்கிறேன். அத்தோடு 6000 ரூபாய்க்கு என் வாசிப்புக்கும், எழுத்துப் பணிக்கும் அவசியமான நூல்களை வாங்கி நீயூசிலாந்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தேன். இரண்டரை மணிநேர அந்த சந்திப்பும், புத்தகக் கடை அனுபவமும் மனதுக்கு இதமாக இருந்தது. என் நண்பரைப் பார்த்து சொன்னேன், ‘இங்கேயே ஒரு பாயைப் போட்டுப் படுக்க இடம்கொடுத்தார்களானால் இரவிரவாக இந்த நூல்களையெல்லாம் அலசிப்பார்க்க வசதியாக இருக்கும்’ என்று. உண்மையில் கடையைவிட்டு வெளியில் வர கஷ்டமாகத்தான் இருந்தது. சென்னைவாசிகளே, நீங்கள் ஏன் நியூ புக் லேண்ட்ஸ் புத்தகக் கடைக்கு ஒருமுறை போய்வரக்கூடாது? சீனிவாசன் அவர்களையும் சந்தித்துப் பேச மறக்காதீர்கள். தரமான ஒரு புத்தகக் கடைக்குப் போன இதமான அனுபவத்தோடு வேறுவேலைகளைக் கவனிக்க நண்பரோடு கடையை விட்டு வெளியில் வந்தேன். ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். கடை மேலாளர் சீனிவாசன் நம்முடைய வெளியீடுகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டினார். இனி நமது வெளியீடுகள் நியூ புக் லேண்ட்ஸிலும் கிடைக்கும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s