தமிழில் வேதமொழிபெயர்ப்பு: அவசியமான ஓர் அலசல்

‘தமிழ் வேதத்தில் காணப்படும் குறைபாடுகளை இன்றைய கிறிஸ்தவர்களிடம் சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று நண்பர் ஒருவர் சமீபத்தில் சொன்னார். பெரும்பாலும் இன்று எல்லோரும் பயன்படுத்திவரும், பழைய திருப்புதல் தமிழ் வேதாகமத்தில் காணப்படும் குறைபாடுகளைப்பற்றி இதழில் ஏற்கனவே சில தடவைகள் எழுதியிருக்கிறேன். இன்று நேற்றென்றிராமல் தமிழ் கிறிஸ்தவர்கள் வேதமொழிபெயர்ப்பு என்று ஆரம்பித்தபோதெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்திருக்கிறார்கள் என்று நம்மிடம் இருக்கும் வரலாற்று ஆவணங்கள் சொல்லுகின்றன. பெப்ரீஷியஸ், இரேனியஸ், பேர்சிவெல், பவர், லார்சன், மொனஹன் என்று வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்களெல்லாம் இந்த எதிர்ப்பை சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய மொழிபெயர்ப்பும் சிறந்ததென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் இவர்களுடைய முயற்சியையும், உழைப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேதாகமத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது அதை வேதநிந்தனையாகவோ அல்லது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மீதிருக்கும் நம்பிக்கையைக் குறைவுபடுத்தும் முயற்சியாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த ஆபத்து இருக்கிறது என்பது நான் அறிந்ததுதான். இதற்காக நல்ல தமிழில், மூலமொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளைச் சார்ந்து புதிய மொழிபெயர்ப்பு நம்மினத்துக்கு அவசியம் என்பதை சிந்திக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்கள் மறுக்கமாட்டார்கள். இருந்தபோதும் அடிப்படையிலேயே தமிழ் கிறிஸ்தவர்களிடம் ஒருதடவை மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தை மறுபடியும் திருத்தக்கூடாது என்ற எண்ணம் ஊறிப்போயிருப்பது தெரிகிறது. இந்தக் குறுகிய மனப்பான்மை தமிழில் சிறந்த வேதமொழிபெயர்ப்பு உருவாவதற்கு ஒரு தடையாக அமைந்திருக்கின்றது. இதற்குக் காரணம் வேதமொழிபெயர்ப்பு பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாததும், தெரிந்திருக்கிறவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பான்மை இல்லாததுமே.

உலகத்தில் இருக்கும் ஏனைய நூல்களை மொழிபெயர்ப்பதற்கும் வேதத்தை மொழிபெயர்ப்பதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஏனைய நூல் மொழிபெயர்ப்புகளையும் கவனத்தோடு செய்யவேண்டியிருந்தாலும் வேதமொழிபெயர்ப்பில் அதிக கவனம் காட்டவேண்டும். வேதம் கடவுளுடைய வார்த்தையாக இருப்பதனாலும், அது ஆவியால் அருளப்பட்டிருப்பதனாலும் ஏனோதானோவென்று அது மொழிபெயர்க்கப்படக்கூடாது. பல மொழிப்பாண்டித்தியம் பெற்ற சுவிசேஷ கிறிஸ்தவர்கள் சில வருடங்களை செலவிட்டு நிதானத்தோடும், கவனத்தோடும் ஈடுபாடுகாட்டி செய்யவேண்டிய மொழிபெயர்ப்புப் பணி அது. இருந்தபோதும் அது மொழிபெயர்ப்பு மட்டுமே. மொழிபெயர்ப்பு ஒருபோதும் பூரணமானதாக இருந்துவிடாது. தமிழ் வேதம் ஒரு மொழிபெயர்ப்பு மட்டுமே என்பதையும், அதற்கும் ஆவியால் அருளப்பட்ட மூல வெளிப்படுத்தலைக்கொண்டு காணப்படும் சுருள்களுக்கும் இருக்கும் வேறுபாடும், அவைபற்றிய அவசியமான உண்மைகளையும் அறிந்துவைத்திராததாலேயே தமிழ் கிறிஸ்தவர்கள் அநாவசியத்துக்கு பரலோகத்தில் இருந்து விழுந்த தெய்வீகநடை கொண்டதாக தமிழ் வேதாகமத்தைத் தொடர்ந்து எண்ணி வருகிறார்கள்.

ஆவியால் ஏவப்படுதலும் (Inspiration), மொழிபெயர்ப்பும் (Translation)

தன்னுடைய சித்தத்தைக் கடவுள் வெளிப்படுத்தியபோது அதை மனிதர்களைக்கொண்டு எழுத வைத்தார். அப்படி அவரால் தெரிந்துகொள்ளப்பட்டு அவருடைய சித்தத்தை எழுத்தில் வடித்தவர்களின் செயலினாலேயே இன்று வேதம் நம் கையில் புத்தகமாக இருக்கிறது. தொடக்கத்தில் கடவுள் தன் சித்தத்தை (வேதத்தை) எபிரெய மொழியிலும், கிரேக்க மொழியிலும் தந்தார். பழைய ஏற்பாடு எபிரெய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது. கடவுளிடமிருந்து நேரடியாக அவருடைய சித்தத்தை வெளிப்படுத்தலாகப் பெற்றுக்கொண்டவர்கள் (Revelation) ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு அவற்றை எழுத்தில் வடித்தார்கள். ஆவியானவரின் இந்த வழிநடத்துதல் அற்புதமானது. அதாவது, ஆவியானவர் எழுதியவர்களுடைய ஆற்றலையும், மொழி வளத்தையும், ஏனைய சிறப்பம்சங்களையும் பயன்படுத்திக்கொண்டபோதும் எந்தவிதத்திலும் கடவுளின் சித்தம் குறைவுபடாதவகையில் வேதவார்த்தைகளை மட்டும் அவர்கள் எழுதும்படிப் பார்த்துக்கொண்டார். அதாவது அந்த மனிதர்களுடைய சுய கருத்துக்களும், குறைபாடுகளும் வேதத்தில் பதியப்படாதபடி ஆவியானவர் அவர்களை வழிநடத்தினார். அது மாபெரும் அற்புதம். இந்தவகையில் உலகில் எந்த நூலும் எழுதப்படவில்லை. இதை ஆங்கிலத்தில் Divine Inspiration என்று சொல்லுவார்கள். இதை ஆங்கில வேதம் God breathed என்கிறது (2 தீமோ 3:16). இந்திய வேதாகம இலக்கியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இதைச் சரியாக ‘தேவ சுவாசத்தால்’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. ஏனெனில் வேதம் கர்த்தரால் ஊதி அருளப்பட்டது என்பது இதற்கு அர்த்தம். இது தெய்வீக வழிநடத்துதல். இதனால்தான் வேதம் குறைபாடுகளும், தவறுகளும் அறவே இல்லாத தெய்வீக வார்த்தை என்பதை நாம் நம்புகிறோம். இதைப் பவுல் 2 தீமோ 3:16ல், “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்று விளக்குகிறார். இதையே பேதுருவும், 2 பேதுரு 1:20-21ல், “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

பேதுரு 20ம் வசனத்தில் தீர்க்கதரிசனமென்று சொல்லுவது வேதத்தையே. வேதத்தைக் கடவுள் வெளிப்படுத்தலாக தந்தபோது அது எவருடைய தனிப்பட்ட புரிந்துகொள்ளுதலின்படியும், விளக்கத்தின்படியும் கொடுக்கப்படவில்லை என்பதையே ‘சுயதோற்றமான பொருளையுடையதாக இல்லை’ என்ற பதங்கள் குறிக்கின்றன. பழைய திருப்புதலில் இந்த மொழிபெயர்ப்பு தெளிவாக இல்லை. தமிழிலிருக்கும் ஒரு புதிய மொழிபெயர்ப்பு (இந்திய வேதாகம இலக்கியம் வெளியிட்டது) இதைச் சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. ‘வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் தீர்க்கதரிசியின் சொந்த விளக்கத்தினால் உண்டானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று அதிலிருக்கிறது. வேதம் ஆவியின் வழிநடத்துதலின் மூலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது; மனித சிந்தனைகளுக்கும், தவறுகளுக்கும் அதில் இடமில்லை.

மேலே நான் விளக்கியிருக்கும், கடவுளின் வார்த்தை நமக்குத் தரப்பட்டிருக்கும் விதத்தின்படி, வேதம் அது எழுத்தில் வடிக்கப்பட்ட காலத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த மூலச் சுருள்களுக்கு மட்டுமே இந்த உண்மைகள் பொருந்தும். அந்த மூலச் சுருள்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களால் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வரவிருக்கும் சந்ததிகளைப் போய்ச்சேர்ந்தன. கடவுள் தன் வார்த்தையை இந்தவிதத்தில் அற்புதமாகப் பாதுகாத்துப் பராமரித்து நமக்களித்திருக்கிறார். அதேபோல புதிய ஏற்பாட்டு மூலச்சுருள்களும் பாதுகாக்கப்பட்டு பின்னால் பல மொழிகளில் வேதம் மொழிபெயர்க்கப்படுவதற்குப் பயன்பட்டன. இன்றும் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மூலச்சுருள்களுக்கு மட்டுமே பவுல் 2 தீமோ 3:16லும், பேதுரு 2 பேதுரு 1:20-21லும் சொன்ன வார்த்தைகள் பொருந்தும். அவையே ஆவியினால் மனிதகுறைபாடுகளும், தவறுகளும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கொடுக்கப்பட்டன. இந்த உண்மை மொழிபெயர்ப்புக்கு ஒருபோதும் பொருந்தாது. ஆவியால் அருளப்பட்டு நம்மிடம் வந்திருந்த மூலச் சுருள்களைப் பயன்படுத்தியே வேதத்தை டின்டேலும் அவருக்குப் பின்வந்த அநேகரும் மொழிபெயர்த்தார்கள். மொழிபெயர்ப்புகள் மூலத்தை எழுத்துபூர்வமாக (literal, formal translation)  ஒத்திருக்கின்றவரை அவற்றை நாம் நம்பிப் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் பல மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றபோதும் திருச்சபைகள் எல்லாவற்றையும் வேதமாக ஏற்றுக்கொள்ளுவதில்லை. அவற்றை ஆராய்ந்து பார்த்து சிறந்த மொழிபெயர்ப்புகளை மட்டுமே வேதமாக நம்பிப் பொதுஆராதனைக்குப் பயன்படுத்திக்கொள்ளுகின்றன. அவ்வாறு பயன்படுத்தியபோதும் எந்தத் திருச்சபையும் மொழிபெயர்ப்புகளை மூலச் சுருள்களைப்போலக் கருதிப் பயன்படுத்துவதில்லை. மொழிபெயர்ப்புகள் மனிதர்களால் கவனத்தோடு செய்யப்பட்டபோதும் அவற்றில் குறைபாடுகள் வந்துவிடலாம். வேதசத்தியங்களனைத்தும் தவறின்றி, மாற்றமின்றி மொழிபெயர்க்கப்படுகின்றவரை அவற்றை நம்பிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இருந்தபோதும் மிகச் சிறப்பான மொழிபெயர்ப்புகளுங்கூட பூரணமானவையாக இருந்துவிட முடியாது.

மொழிபெயர்ப்புப்பற்றிய இந்த உண்மை நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கப்படவில்லை. இது பெருமளவுக்கு திருச்சபைகளினதும், போதகர்களினதும் தவறு. இந்த உண்மை அவர்களுக்கே தெரிந்திருக்கிறதோ என்னவோ? இதன்காரணமாகத்தான் நம்மினத்துக் கிறிஸ்தவர்களால் தமிழ் மொழிபெயர்ப்பான பழைய திருப்புதலிலும் குறைபாடுகள் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவமின்றி இருக்கின்றனர். அத்தோடு தமிழ் மொழிபெயர்ப்பு பரலோகத்தில் இருந்து நேரடியாகக் கொடுக்கப்பட்டதாக நினைத்து அதில் எந்த மாற்றமும் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருந்துவருகிறார்கள். இது தமிழில் நல்ல வேதமொழிபெயர்ப்பு உருவாவதற்குப் பெருந்தடையாக இருந்துவருகிறது. ஒருபுறம் தவறான பொதுமொழிபெயர்ப்பான திருவிவிலியம் (1995) போன்றவைகள் சத்தியத்துக்கு மதிப்புக்கொடுக்காமல் மொழிபெயர்க்கப்படுகின்றவேளை, இன்னொருபுறம், விடமாட்டேன் போ, என்ற மனப்பாங்குடன் விடாப்பிடியாக பழைய திருப்புதலை உடும்புப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிறவர்களைத்தான் இங்கு பார்க்க முடிகின்றது.

இந்திய வேதாகம இலக்கிய மொழிபெயர்ப்பு (IBL)

IBLவெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் கிறிஸ்தவர்களுக்கு பழைய திருப்புதலின் (OV) தமிழ்நடை புரியாமலிருக்கிறது. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; அந்தத் தமிழ் அப்படிப்பட்டது. இருந்தும் வெளிநாட்டுத் தமிழர்கள் தமிழில் வேதத்தை வாசிக்க விரும்புவது பாராட்ட வேண்டிய விஷயம். அதனால் கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் கிறிஸ்தவர்களுடைய வேண்டுகோளின்படி இந்திய வேதாகம இலக்கியம் (IBL) என்ற அமைப்பு புதிய மொழிபெயர்ப்பொன்றை வெளியிடத் தீர்மானித்தது. வில்லியம் ஸ்கொட் என்பவரைப் பொது முகாமையாளராகக் கொண்ட இந்த அமைப்பு 1611 கிங் ஜேம்ஸ் பழைய திருப்புதல் (KJV) ஆங்கில மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டு பழைய திருப்புதலில் காணப்படும் வடமொழி வார்த்தைகளையும், இன்று புழக்கத்தில் இல்லாத கடினமான வார்த்தைகளையும் அகற்றி அவற்றிற்குத் தற்கால தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு புதிய மொழிபெயர்ப்பை வெளியிட்டது. இதை முற்றும் புதியதொரு மொழிபெயர்ப்பாகக் கணிக்க முடியாது. மூலமொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளிலிருந்த சுருள்களை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் வெளியிடப்பட்ட புத்தம் புதிய மொழிபெயர்ப்பல்ல இது. 1611 கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாகக்கொண்டு பழைய திருப்புதலின் (OV) தமிழில் மாற்றங்களைச் செய்து வெளிவந்துள்ள பதிப்பு மட்டுமே. இந்த மொழிபெயர்ப்பு 2000ம் ஆண்டில் வெளிவந்தது. இதில் ஒரு சிறப்பு, ஒருபக்கத்தில் ஆங்கிலத்தில் 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பையும் கொண்டு வெளிவந்ததுதான். எவரும் ஆங்கிலத்தையும், தமிழையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ள இது துணை செய்கிறது.

நிச்சயம் தற்காலத் தமிழ் கிறிஸ்தவர்களும், முக்கியமாக இளைஞர்களும், கிறிஸ்தவரல்லாதவர்களும் இலகுவாக வாசித்துப் புரிந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு பயனுள்ளதாக இருக்கும். அத்தோடு 1611 கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மொழியில் மட்டும் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் இந்த மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மைபற்றி சந்தேகங்கொள்ள வேண்டியதில்லை. பொதுஆராதனையிலும் இது பயன்படுத்தத் தகுந்தது. தமிழ் மட்டுந்தெரிந்திருந்து போதக, பிரசங்கப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது பேருதவி புரியும்.

இதில் சில வேதவசனங்கள் நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கீழ்வரும் உதாரணங்களைப் பார்த்தே அதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

யூதா 1:3 (ப.தி.) – பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

இதில் ‘பிரியமானவர்களே’ என்ற வார்த்தைப்பிரயோகம் புதிய திருப்புதலில் மாற்றப்பட்டிருப்பது எனக்கு சந்தோஷத்தை அளித்தது. ஏனெனில், இந்த வார்த்தையைப் பயன்படுத்தி கேட்கிறவர்களை சலித்துப் போக வைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டுப் பிரசங்கிகள். புதிய மொழிபெயர்ப்பு இதை ‘அன்பானவர்களே’ என்று சரியாக தற்காலத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறது.

பழைய திருப்புதலில் ‘கருத்துள்ள’ என்ற வார்த்தை சரியாக ‘ஆர்வமுள்ள’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வாசிப்பவர்களுக்கு யூதா சொல்லவருவதைத் தெளிவாக்குகிறது. ‘கருத்துள்ள’ என்பதற்கான deligent என்ற ஆங்கில வார்த்தைக்கு ஒன்றுக்குமேற்பட்ட பொருள்கள் உண்டு. கருத்துள்ள, கவனத்தோடு என்ற பொருளும் உண்டு. இந்த இடத்தில் யூதா அதைக் குறிக்கவில்லை; ஆர்வமுள்ள என்ற இன்னொரு அர்த்தத்தோடுதான் அதை எழுதியிருக்கிறார். பழைய திருப்புதல் அதை சரிவர மொழிபெயர்க்கவில்லை. அதேநேரம் எத்தனைபேருக்கு பழைய திருப்புதலின் ‘ஒருவிசை’ என்ற வார்த்தைக்குப் பொருள் தெரிந்திருக்கிறது? இலக்கியம் படித்து மணிப்பிரவாள நடையில் பரிச்சயம் இருப்பதால் ஒரேதடவை என்பதை ‘ஒருவிசை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் இந்தளவுக்கு ஒரு பிராமணனைத் தேடி இதற்குப் பொருளறிந்துகொள்ளுகிற நிலை சாதாரணத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. இந்தப் புதிய மொழிபெயர்ப்பு அதைச் சரியாக ‘முடிவாக ஒப்புக்கொடுக்கப்பட்ட’ என்று மொழிபெயர்த்திருக்கிறது. இங்கே யூதா சொல்ல வருவது என்ன தெரியுமா? ஆண்டவர், ஒட்டுமொத்தமாக ஒரே தடவை, முடிவாக சத்தியத்தை நமக்களித்திருக்கிறார் என்பதுதான். அதைப் பழைய திருப்புதலின் ‘ஒரேவிசை’ அக்கிரகாரத்திலிருப்பவர்களுக்குப் புரியும்படியாக விளக்கியிருந்தாலும் அதற்கு வெளியில் வாழும் நமக்குப் புரியும்படி விளக்கவில்லையே.

இப்போது புதிய மொழிபெயர்ப்பை வாசியுங்கள், யூதா 1:3 – “அன்பானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் ஆர்வமுள்ளவனாயிருக்கும் அதேவேளையில், பரிசுத்தவான்களுக்கு முடிவாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நாங்கள் துணிவோடு போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது அவசியமென்று நான் உணர்கிறேன்.”

அதேவேளை எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான வேதவசனங்களை இந்த மொழிபெயர்ப்பு கவனத்தோடு திருத்தியிருக்கிறது. உதாரணத்திற்கு, யோவான் 3:16, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

இங்கே ‘ஒரேபேறான’ என்ற பதம் தொடர்ந்தும் புதிய மொழிபெயர்ப்பில் காணப்படுகிறது. ‘கெட்டுப்போகாமல்’ என்பது ‘அழிந்துபோகாமல்’ என்று தற்காலத்திற்கு ஏற்றமுறையில் பழைய பேச்சுத்தமிழைத் திருத்தியிருக்கிறது. ‘நித்தியஜீவன்’ என்பது ‘நித்தியவாழ்வு’ என்று மாற்றப்பட்டிருக்கிறது. நித்தியஜீவன் என்பதைத் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை. அது எல்லோருக்கும் தெரிந்த வார்த்தைதான். சில வடமொழி வார்த்தைகள் தமிழோடு கலந்துபோய்விட்டவை; அவை தமிழையும் அழகுபடுத்துகின்றன. அவற்றை நாம் நீக்கிவிட முயலக்கூடாது.

இப்போது புதிய மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள். யோவான் 3:16 – ‘தேவன் நம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அழிந்துபோகாமல் நித்தியவாழ்வை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’

இன்னுமொரு உதாரணத்தைத் தருகிறேன். யாக்கோபு 2:20, “வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?”

புதிய மொழிபெயர்ப்பு (IBL) – அறிவற்ற மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் செத்துப்போனதென்பதற்கு உனக்கு நிரூபணம் வேண்டுமோ?

இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளையும் கவனியுங்கள். பழைய திருப்புதலில் ‘வீணான மனுஷன்’ என்றிருக்கிறது. சிந்திக்காமல் நடந்துகொள்ளுகிற ஒருவனைக் குறிக்க ‘வீணான’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்காலத்தில் ‘வீணான மனிதன்’ என்ற வார்த்தை கெட்டவன், அழிந்தவன் என்றெல்லாம் பொருளுடையதாக இருக்கிறது. இந்த இடத்தில் இது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. புதிய மொழிபெயர்ப்பு அதை ‘அறிவற்ற மனிதன்’ என்று சரியாகவும் நல்ல தமிழிலும் மொழிபெயர்த்திருக்கிறது. ‘மனுஷன்’, மனிதன் என்று திருத்தப்பட்டிருப்பதும் அவசியமானது. இன்று மனுஷன், மனுஷாள் என்றெல்லாம் பிராமணர்கள் மட்டுமே பேசுவார்கள். இதே வசனத்தில், ‘செயல்களில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ’ என்ற பழைய திருப்புதலின் வாக்கியம் தெளிவாக இல்லை; காரணம் இது அந்தக் காலத்து மொழிநடை. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைக்கதை வசனத்தில் இந்த மொழிநடையைக் காணலாம். ‘அறியவேண்டுமோ’ என்ற வார்த்தைக்கு மூலமொழியில் பயன்படுத்தப்பட்டிருந்த பதத்தை ஆங்கில வேதம் do you want to know என்று சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. இந்த வார்த்தைகளுக்கு சாதாரணமாக ‘உனக்குத் தெரியவேண்டுமா?’ என்பதே பொருள். மொழிபெயர்ப்பாளன் மூலமொழியில் இந்த வார்த்தை இந்த சந்தர்ப்பத்தில் எந்தவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இந்த வார்த்தைகள் இலக்கண அமைப்புப்படி ‘உனக்குத் தெரியவேண்டுமா?’ அல்லது ‘உனக்கு நான் உறுதிப்படுத்த வேண்டுமா?’ என்ற அர்த்தமும், அழுத்தமும் உள்ளதாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பழைய திருப்புதல் (OV) அந்த அழுத்தத்தைக் கொண்டுவரும்விதத்தில் இதை மொழிபெயர்க்கவில்லை. இன்றைய கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும் இதன் பொருளறிய தடுமாறுவார்கள். புதிய மொழிபெயர்ப்பு ‘உனக்கு நிரூபணம் வேண்டுமோ?’ என்று இருக்கவேண்டிய அழுத்தத்தை வெளிப்படுத்தி மொழிபெயர்த்திருக்கிறது. நிரூபணம் என்ற வடமொழி இங்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அது வழக்கில் உள்ள வார்த்தைதான்.

1 தீமோ. 1:16 (ப.தி.) – “அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன்.”

இந்த வசனத்தில் காணப்படும் ‘திருஷ்டாந்தம்’ என்ற வார்த்தை புதிய மொழிபெயர்ப்பில் ‘எடுத்துக்காட்டு’ என்று மாற்றப்பட்டிருப்பது அவசியமான மாற்றம்.

புதிய மொழிபெயர்ப்பு (IBL): ‘அப்படியிருந்தும், நித்திய வாழ்வை அடையும்படி இனிமேல் இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்படிக்கு, மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம் பெற்றேன்.’

1 கொரி. 16:13; 1 தீமோ. 2:8; 1 கொரி 14:35, எபேசி. 5:22; 1 பேதுரு 3:1 ஆகிய வேதப்பகுதிகளில் பழைய திருப்புதலில் ‘புருஷர்கள்’ என்ற வடமொழி வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். முதல் இரண்டு பகுதிகளிலும் இதை ‘மனிதர்கள்’ என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனைய பகுதிகளில் இதைக் ‘கணவர்கள்’ என்ற அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். பழைய திருப்புதலில் எல்லாப் பகுதிகளிலும் புருஷர்கள், புருஷர் என்றிருப்பது வாசிக்கிறவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அத்தோடு புருஷன் என்ற வார்த்தை கணவனைக் குறிப்பதற்காக கிராமப்புறங்களில் பரவலாக இன்றும் பயன்படுத்தப்பட்டாலும் நகர்ப்புறங்களில் குறைவு. இந்த வார்த்தையை ‘மனிதன்’ என்ற வார்த்தைக்கு மாற்று வார்த்தையாக எவரும் இன்று பயன்படுத்துவதில்லை. புதிய மொழிபெயர்ப்பு இந்த வசனங்கள் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றமுறையில் முதலிரண்டு பகுதிகளிலும் ‘மனிதர்கள்’ என்ற தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறது. ஏனைய பகுதிகளில் ‘கணவர்கள்’, ‘கணவன்’ என்று சரியாக மொழிபெயர்த்திருக்கிறது. 1 கொரி. 11:1-16 வரையுள்ள வசனங்களில் ‘புருஷன்’ என்று பழைய திருப்புதலில் இருந்தவற்றை ‘மனிதன்’ என்று சரியாகவே புதிய மொழிபெயர்ப்பு மாற்றியிருக்கிறது.

இத்தனை நன்மைகள் இருந்தபோதும் இதன் குறைபாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

(1) அகற்றப்பட வேண்டிய வடமொழி வார்த்தைகள், வார்த்தைப்பிரயோகங்கள் இந்த மொழிபெயர்ப்பில் அடியோடு அகற்றப்படவில்லை. பெரும்பாலானவை மாற்றப்பட்டிருந்தபோதிலும் தொடர்ந்தும் ஆங்காங்கு அவை தலைகாட்டுகின்றன. வடமொழிப்பதங்களே இல்லாத தமிழாக இருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை; அப்படி எதிர்பார்ப்பது தமிழுக்கே நல்லதல்ல. ஏற்கனவே சொன்னதுபோல், சில வடமொழி வார்த்தைகள் தமிழோடு கலந்துவிட்டவை; அவை தமிழுக்கு மூக்குத்தி போட்டதுபோல தமிழை மேன்மைப்படுத்துபவை. இருந்தாலும் பொதுவாக நம்மினத்தவர் பயன்படுத்தாத வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த நன்மையுமில்லை. சில வடமொழி வார்த்தைப்பிரயோகங்களை எழுத்தாளர்கள் நாவல்களிலும், சிறுகதைகளிலும் கட்டுரைகளிலும் சுவைக்காகப் பயன்படுத்துவது வழக்கம். இலக்கிய வாசகர்களை முன்வைத்தே எழுத்தாளர்கள் அவற்றைப் பயன்படுத்துவார்கள். சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரும் வாசித்து அன்றாடம் பயன்படுத்த வேண்டிய வேதத்திற்கு அவை தேவையில்லை. தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி பத்திரிகைகள் ஒருநாள் மட்டும் இன்று இந்த மொழிநடையில் வந்தால் தமிழ்நாட்டில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? புரிகிறதல்லவா! உதாரணத்திற்கு, சங்கீதம் 94:1ல் ‘சங்கீர்த்தனம்’ என்ற பதம் மாற்றப்படவில்லை. இந்து இலக்கியங்களில் ஆண்டவருடைய பெயரைத் துதித்துப் பாடுவதைக் குறிக்க இந்தப்பதம் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப் பாடித்துதிப்பதை அவாள் ‘நாமசங்கீர்த்தனம்’ என்பார்கள். இதற்கு அர்த்தந்தெரிந்திருக்கிற தற்காலத் தமிழர்கள் எத்தனை பேர்? 1 கொரி 1:28ல், ‘அவமாக்குதல்’ என்ற வார்த்தை, பழைய திருப்புதலில் (OV) இருந்தது தொடர்ந்தும் இந்த மொழிபெயர்ப்பில் இருக்கிறது. அந்த வார்த்தைக்கு ‘பயனில்லாமல் செய்தல்’ என்பது பொருள். எத்தனை பேருக்கு அவமாக்குதல் என்பதற்கு அர்த்தம் தெரியும்? தெரியாத வார்த்தைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு வேதம் படித்தால் அதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

காங்கிரஸின் பக்தவச்சலம் தமிழகத்து முதன்மந்திரியாக இருந்த காலம்வரை வடமொழி ஆதிக்கம் தமிழர்கள் மத்தியில் பரவிக்காணப்பட்டது. பிராமணத்தமிழ் கலந்து எழுதுவதும், அதன் தாக்கமும் இலக்கியத்தில் தொடர்ந்திருந்தது. உண்மையில் அத்தகைய தமிழுக்கே அன்று சமுதாயத்தில் மதிப்பிருந்தது. ஒருவன் கல்வியில் சிறந்தவன் என்பதற்கு இந்த பாஷையே அடையாளமாக இருந்தது. கோயில் தொடக்கம் கல்லூரி, ஆபிஸ்வரை வடமொழித்தமிழ் ஆட்சிதான். குருகுல கல்விமுறை வேண்டும் என்று ராஜாஜி அன்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறார். அதுமட்டும் வந்திருந்தால் இந்தத் தமிழில்தான் குழந்தைகள் அவஸ்தைப்பட்டிருக்கும். சாதாரணத் தமிழில் பேசுவதை அன்று கொச்சையானதாகவும், படிப்பறிவில்லாதவனின் பேச்சாகவும் பார்க்கும் நிலையே இருந்தது. அதனால்தான் தமிழ் வேதமும் அன்று மதிக்கப்பட்ட, புழக்கத்தில் இருந்த அந்தத் தமிழில் தொடர்ந்திருந்தது. இன்று நாவல்களுக்கோ, சிறுகதைக்கோ அவசியமாயிருந்தாலொழிய எழுத்தாளர்கள் வடமொழித் தமிழைப் பயன்படுத்துவதில்லை. சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ நாவலில் இத்தகைய பிராமணத் தமிழைக் காணலாம். இத்தகைய நடையைப் பயன்படுத்துவதில் தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்றோர் திறமையான எழுத்தாளர்களாக இருந்திருக்கின்றனர்; தங்களுடைய கதை மாந்தர்களுக்கேற்ப அந்தப் பாஷையைப் பயன்படுத்திக்கொண்டனர். இலக்கிய ஆர்வம் உள்ள தமிழர்களுக்கு இந்த நடைபுரியும்; அவர்கள் அதிகம் வாசிப்பதால். தமிழினத்தில் இலக்கியம் என்றாலே பெரும்பாலானோர் இன்று கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள். இலக்கிய ஆர்வம் கொண்டிருந்து வாசிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை நம்மினத்தில் மிகமிகக் குறைவு; இது தமிழ் எழுத்தாளர்களுக்கே தெரிந்ததுதான். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் வடமொழிப் பதங்களைத் தமிழில் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

மேலும் “பண்ணக்கடவது”, “செய்யக்கடவது”, “கடவோம்”, “செய்யும்படிக்கு”, “அறியும்படிக்கு” போன்ற வார்த்தைப்பிரயோகங்களையும் இன்று பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவது இல்லை. பழைய திருப்புதலில் காணப்படுகிற இவையும் இந்தப் புதியமொழிபெயர்ப்பில் தொடர்ந்திருக்கின்றன. ‘சமாதானத்தோடே போங்கள்’ என்று ஏன் எழுத வேண்டும்? ‘சமாதானத்தோடு போங்கள்’ என்று எழுதலாமே (யாக். 2:16). ‘பசியாறுங்கள்’ என்பது புரிகிறது; இது பேச்சுத் தமிழ். இப்படி எழுத்தில் இன்று எழுதுவதில்லை. ஆங்கிலத்தில் filled என்றிருப்பதை ‘உணவருந்துங்கள்’ என்று மாற்றியிருக்கலாம் (யாக். 2:16). இவை தவிர “பிரபஞ்சம்”, “வசனிப்பு (பேச்சு)” போன்ற வார்த்தைகளும் இதில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றையும் கவனித்துத் தற்காலத் தமிழ் நடைக்கேற்ப மாற்றியிருந்தால் இந்த மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்திருக்கும்.

பழைய திருப்புதலில் (OV) காணப்படும் ஒருசில வடமொழி வார்த்தைப்பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தியிருக்கலாம். உதாரணத்திற்கு யூதா 1:1ல், ‘தூய்மையாக்கப்பட்டவர்களுக்கு’ என்ற பதம். இது பழைய திருப்புதலில் ‘பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு’ என்றிருக்கிறது. தமிழ் கிறிஸ்தவர்களில் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் இருந்தால் அது வியப்பானதே. இந்தப் பதம் இன்றும் வழக்கில் இருக்கிறது; பேச்சிலும், எழுத்திலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது; எல்லோராலும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய வார்த்தைப்பிரயோகமுங்கூட. இதைப்போய்த், ‘தூய்மையாக்கப்பட்டவர்களுக்கு’ என்று மாற்றியிருப்பது அவசியமில்லை. அதேநேரம் 3ம் வசனத்தில் அதே வார்த்தை (saints) ‘பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு’ என்று இருக்கிறது. பழைய திருப்புதலின் தமிழில் பூரணத்தூய்மையை நான் எதிர்பார்க்கவில்லை; அது தமிழாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்லுகிறேன். இங்கே கொஞ்சம் மொழிபெயர்ப்பாளர்கள் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். தூய்மை போன்ற வார்த்தைகளை நாம் அன்றாடப்பேச்சில் அதிகம் பயன்படுத்துவதில்லை. மேடைப்பேச்சில் பயன்படுத்துவோம்; எழுத்தில் பயன்படுத்துவோம். அவை இலக்கியச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகள். வேதத்தை நாம் இலக்கியத்தரத்திற்கு தூய தமிழில் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்வது சாதாரண மக்களை அது சென்றடைவதைத் தடுத்துவிடும். இலக்கிய வார்த்தைகளுக்கும், சாதாரணப் பேச்சுவழக்கிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும்வகையில் அது மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே சுட்டியிருப்பதுபோல் பழைய திருப்புதலில் காணப்படும் சில வடமொழிப் பதங்களைத் தமிழாக்க முனையக்கூடாது. இத்தகைய பதங்கள் தனித்துவமான கிறிஸ்தவ சத்தியங்களை விளக்கும் தனித்தன்மை வாய்ந்த பதங்கள்; இதுவரை தமிழிலும் இல்லாதிருந்த வார்த்தைகள். கலைச்சொற்களைப்போல இத்தகைய வார்த்தைகள் குறிப்பிட்ட வேதசத்தியத்தை விளக்குவதால் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் முதன்முறையாக வார்த்தைகளை உருவாக்க வேண்டியிருந்திருக்கிறது. உதாரணத்திற்கு கடவுள் ‘கர்த்தர்’ என்று பழைய திருப்புதலில் அழைக்கப்படுகிறார். ஆண்டாண்டு காலமாக கிறிஸ்தவர்கள் இதைப்பயன்படுத்தி வருகிறார்கள். இது காரணத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் வார்த்தை. ஏற்கனவே தமிழில் காணப்படும் வார்த்தைகள் இந்த வார்த்தை வெளிப்படுத்தும் வேதசத்தியத்தை வெளிக்கொணராததாலேயே, மொழிபெயர்ப்பாளர்கள் இதை உருவாக்க நேர்ந்தது. இதைத் தமிழ்ப்படுத்தி நமக்கு ஆகப்போவதொன்றுமில்லை. இத்தகைய வார்த்தைகள் தமிழோடு கலந்துபோய் விடுகின்றன; தமிழுக்கு அழகூட்டுகின்றன. ‘கிறிஸ்தவ தமிழ்’ என்பதைக் குறைகூறுகிறபோது இத்தகைய வார்த்தைகளைக் குறித்து நான் அதைச் சொல்லவில்லை. கலைச்சொற்களாக இல்லாதிருக்கும் வார்த்தைகளுக்கு நல்ல தமிழில் இருக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அநாவசியத்துக்கு தொடர்ந்தும் கச்சைகட்டிக்கொண்டு வடமொழி வார்த்தைகளைப் பயன்படுத்துவதையே அநேகர் விரும்பவில்லை. பொதுமொழிபெயர்ப்பாகிய திருவிவிலியம் (1995) வேதத்தை முழுமையான தமிழில் கொண்டுவருகிறோம் என்று சத்தியக்குளறுபடி செய்து இத்தகைய கலைச்சொற்களாக இருக்கும் வார்த்தைகளையும் இல்லாமலாக்கிவிட்டிருக்கிறது. அது பெருந்தவறு; கிறிஸ்தவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலது.

மேலே குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு உதாரணமாக “விசுவாசம்”, “விசுவாசி”, “அவிசுவாசம்”, “அவிசுவாசி”, “இரட்சிப்பு”, “பரலோகம்” போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். இதெல்லாம் வடமொழித்தாக்கம் கொண்ட கலைச்சொற்கள். இவற்றைத் தமிழாக்கம் செய்வது அதிகப்பிரசங்கித்தனம் என்பது என் கருத்து. விசுவாசத்தை நம்பிக்கை என்று மாற்றுவது சரியானதல்ல. புதிய மொழிபெயர்ப்பு ‘பரலோகம்’ என்ற வார்த்தையை அது வடமொழிப்பதம் என்பதற்காக தமிழில் ‘விண்ணுலகம்’ என்று மாற்றியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இது அநாவசியமான முயற்சி மட்டுமல்ல சரியானதும் அல்ல. பரலோகம் என்ற பதத்தை உருவாக்கியபோது அதைச் செய்தவர்கள் ஆண்டவர் இருக்கும் இடத்தை மனதில் வைத்து அதை உருவாக்கினார்கள். ஆண்டவர் இருக்கும் இடம் ‘பரம்.’ அதனால் அதற்கு பரலோகம் என்று பெயர் வைத்தார்கள். பரம் என்பதற்கும் பல அர்த்தங்கள் இருந்தாலும் அதில் மேலுலகம் என்பது முக்கியமான கருத்தாக இருக்கிறது. மோட்சம் என்ற வார்த்தையும் பரலோகத்தைக் குறிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் வடமொழி வார்த்தைதான். விண்ணுலகம் என்பது இதைக் குறிக்கவில்லை. ‘விண்’ என்ற வார்த்தைக்கும் பல அர்த்தங்கள் இருந்தாலும் வானம் என்ற அர்த்தம் அதில் மேலோங்கி நிற்கிறது. விண் என்றாலே சாதாரணமாக நாம் வானுலகையே நினைப்போம்.

(2) மூல மொழிகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை அப்படியே தமிழாக்கியிருந்தபோதும் அதை முழுமையாக செய்திருப்பதாகத் தெரியவில்லை. சில இடங்களில் ஆங்கிலத்தில் காணப்படும் சில வார்த்தைகள் தமிழாக்கம் செய்யப்படவில்லை. சங். 94:1ல் to whom vengence belongeth என்றிருக்கிறது. இதைத் தமிழில் ‘நீதியைச் சரிக்கட்டுகிற’ என்று பழைய திருப்புதலில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இதையே இந்தப் புதிய திருப்புதலிலும் காண்கிறோம். இது திருத்தப்பட்டிருக்க வேண்டும். பழைய திருப்புதலில் இந்த வசனத்தை உள்ளபடி மொழிபெயர்க்காமல், மொழிபெயர்த்தவர் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். கடவுளிடம் பழிவாங்கும் குணம் இருக்கமுடியாது என்று மொழிபெயர்ப்பாளர் தீர்மானித்து, அதைத் தவிர்த்து மொழிபெயர்த்திருக்கிறார். உண்மையில் ‘பழிவாங்குதல்’ என்றுதான் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் மட்டுமே அதைச் செய்யக்கூடியவராக இருக்கிறார் என்பதுதான் சங்கீதக்காரனின் விளக்கம். இதைத் தவிர்ப்பதால் முழு சங்கீதத்தின் பொருளும், தாக்கமும் மாறிவிடுகிறது.

1 கொரி 1:10ல் ஆங்கில கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு. ‘that ye all speak the same thing’  என்ற வார்த்தைப்பிரயோகத்தைக் கொண்டிருக்கிறது. புதிய தமிழ்மொழிபெயர்ப்பு இதை அப்படியே எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்காமல் இதன் சாராம்சத்தை மட்டும் ‘ஒத்துப்போய்’ என்று தந்திருக்கிறது. உண்மையில் ஒருவருக்கொருவர் ஒத்துப்போவதைத்தான் இந்த வசனம் அறிவுறுத்தினாலும் மொழிபெயர்ப்பாளனின் பணி வியாக்கியானம் செய்வதல்ல; உள்ளதை உள்ளபடி எழுத்துபூர்வமாக மொழிபெயர்ப்பதே. மொழிபெயர்க்காமல் விடப்பட்ட இந்த வார்த்தைப்பிரயோகம் இந்த வசனத்தைப் பொறுத்தவரையில் மிகமுக்கியானது. இது அழுத்தம் காரணமாக இந்த வசனத்தில் ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வசனப்பகுதிகளைத் தவிர்த்துவிடுவது நூலாசிரியர் சொல்லவந்த விஷயத்தின் ஆழத்தையும், அழுத்தத்தையும் இல்லாமலாக்கிவிடுகிறது. இது என்னைப் பொறுத்தவரையில் பெருங்கவனக்குறைவு. கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பை ஏனைய மொழிகளில் கொண்டுவரும் திரித்துவ வேதாகம சங்கம் வார்த்தைக்கு வார்த்தை எழுத்துபூர்வ மொழிபெயர்ப்பைச் செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. அதை இந்தப் புதிய மொழிபெயர்ப்பு முழுமையாகப் பின்பற்றியிருக்க வேண்டும்.

1 கொரி. 11:17ம் வசனம் ‘உங்களைப் பாராட்டாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளை கொடுக்கிறேன்’ என்றிருக்கிறது. ‘கட்டளை’ என்ற வார்த்தை அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்படுவதை உணர்த்துகிறது. ஆனால், இங்கே பவுல் ‘போதனை’ அளிப்பதையே குறிப்பிடுகிறார்; கட்டளையாகச் சொல்லவில்லை. பழைய திருப்புதலில் இருந்தது இங்கே திருத்தப்படவில்லை. இந்த வசனப்பகுதி, ‘இந்தப் போதனையை உங்களுக்குக் கொடுக்கும்போது உங்களை நான் பாராட்டவில்லை’ என்றிருந்திருக்கவேண்டும். இதேபகுதியில் 19ம் வசனத்தில் ‘மார்க்கபேதங்கள்’ என்ற வடமொழி ‘போலிப்போதனைகள்’ என்று திருத்தப்பட்டிருக்கலாம். 21ம் வசனத்தில் பழைய திருப்புதலில் ‘இராப்போஜனம் பண்ணுதலல்லவே?’ என்றிருந்தது இந்தத் திருத்தப்பதிப்பில் ‘திருவிருந்து ஆசரிப்பல்லவே?’ என்றிருக்கிறது. இராப்போஜனம் ‘திருவிருந்து’ என்று திருத்தப்பட்டது அவசியம். ‘ஆசரிப்பல்லவே’ என்ற பதம் பெரும்பாலானோருக்குப் புரியாது. அதைப் பயன்படுத்தியிருக்கவேண்டிய அவசியமில்லை. ‘நீங்கள் கூடிவருவது திருவிருந்து எடுப்பதற்காக அல்ல’ என்றுதான் பவுல் இந்தப் பகுதியில் சொல்லுகிறார். 29ம் வசனத்தில் ‘என்னத்தினாலெனில்’ என்பது ‘எதனாலெனில்’ என்று தற்கால நடையில் திருத்தப்பட்டிருக்கலாம்.

குறைபாடுகள் இருந்தபோதும் இந்த மொழிபெயர்ப்பு ஒரு நல்ல முயற்சி. தற்காலத் தமிழ்நடை என்பதைப் பொறுத்தளவில் பழைய திருப்புதலுக்கு மாற்று மொழிபெயர்ப்பாக இந்த மொழிபெயர்ப்பை நிச்சயம் தமிழ் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். நிச்சயம் போதகப் பணியில் உள்ளவர்களுக்கு இது பேருதவி புரியும். இதில் காணப்படும் குறைபாடுகள் மாபெரும் குறைபாடுகள் அல்ல; புதிய பதிப்புகளில் அவற்றை மேலும் திருத்தி வெளியிடலாம். இந்தப் புதிய மொழிபெயர்ப்பிலுள்ள நன்மை, வாசிக்கிறவர்கள் பிரச்சனையில்லாமல் தடையில்லாமல் நல்ல தமிழில் வேதத்தை வாசிக்க முடியும். அதைப் பழைய திருப்புதலை வாசிக்கும்போது பெரும்பாலானவர்களால் அடைய முடியவில்லை. ஒரே தெருவில் இருக்கும் எண்ணற்ற ஸ்பீட் பிரேக்கர்கள்போல, வடமொழி வார்த்தைகளில் அடிக்கடி தடுக்கி விழாமல் வாசிக்கமுடிவதால் வேத வாசகர்களுக்கு இன்னும் வாசிக்கவேண்டும் என்ற தூண்டுதல் தானாகவே ஏற்படும். வேத வாசிப்பும் அதிகரிக்கும்.

இந்த இடத்தில் இந்தப் புதிய மொழிபெயர்ப்பு பற்றிய முக்கியமானதொரு விஷயத்தைச் சொல்லாமலிருக்க முடியாது. ஆங்கிலத்தில் இருக்கும் KJV மொழிபெயர்ப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறோம் என்று உள் அட்டையில் இந்திய வேதாகம இலக்கியம் அறிவித்திருந்தாலும், பல்வேறு இடங்களில் முழுமுற்றாக அதைப் பின்பற்றாமல் மொழிபெயர்ப்பில் மாற்றங்களைச் செய்திருக்கிறது. அதற்குக் காரணமில்லாமலில்லை. KJV ஆங்கில மொழிபெயர்ப்பு Textus receptus என்ற கிரேக்க மூலச்சுருளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டது. அதற்குப் பின்வந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் வேறு கிரேக்க மூலச் சுருள்களையும் பயன்படுத்திப் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்திய வேதாகம இலக்கியம் பல இடங்களில் NASB, NKJV, ESV போன்ற ஆங்கில மூலங்களைத் தழுவி அவசியமான மாற்றங்களைச் செய்திருக்கிறது. என்னைப் பொறுத்தளவில் இந்த மாற்றங்கள் நல்லவை மட்டுமல்லாமல் அவசியமானவை. இது இந்த மொழிபெயர்ப்பை இன்னும் பயனுள்ளதாக்குகிறது. இருந்தபோதும் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த விபரங்களை மறைக்காமல் பதிப்புரையில் விளக்கியிருக்கவேண்டும். விற்பனைக்குப் பாதிப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லாமல் விட்டிருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்னுமொரு நன்மை இந்த மொழிபெயர்ப்பு கிங் ஜேம்ஸ் (1611) ஆங்கில மூலத்தை அவசியமான திருத்தங்களோடு தமிழில் கொண்டுவந்திருப்பதால் இந்திய வேதாகம சங்கம் 1995ல் வெளியிட்ட பொதுமொழிபெயர்ப்பான திருவிவிலியத்தில் இருந்த பெருந்தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் இதில் இடமில்லை. கர்த்தரின் வேதத்தை வாசிக்கிறோம் என்ற நம்பிக்கையோடு பயமின்றி இதை வாசிக்கலாம்.

இருந்தபோதும் இங்கும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இந்த மொழிபெயர்ப்பு வெளிவந்தபோது ஆவலோடு நான் ஒரு பிரதியைப் பெற்று வாசித்துப் பார்த்துவிட்டு சக நண்பர்களையும் இதை வாங்கிப்பயன்படுத்தும்படி ஆலோசனை தந்தேன். ஒரு வருடத்திற்குப் பிறகு மறுபடியும் இதில் வேறு பதிப்புகள் வந்திருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள சென்னையில் இருந்த இந்திய வேதாகம இலக்கிய செயலகத்துக்குப்போனபோது அதிர்ச்சியான ஒரு விளக்கமே கிடைத்தது. அந்த மொழிபெயர்ப்பை வெளியிடுவதை நிறுத்திவிட்டோம் என்று ஒரேபோடாக போட்டார்கள். ஏன் என்று ஆசுவாசத்துடன் கேட்டேன்? அதற்கு மேசைக்கு முன் நின்றவர், ‘பழைய திருப்புதலையே எல்லோரும் கேட்கிறார்கள்; இந்தப் புதிய மொழிபெயர்ப்பை விற்பனை செய்வது கஷ்டமாய் இருக்கிறது’ என்றார். அத்தோடு, இனி பழைய திருப்புதலோடு இணைத்தே இனி கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிடப்போகிறோம் என்றார். இது எந்தளவுக்கு மொழிபெயர்ப்பு பற்றிய விஷயத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு புரிதல் இல்லை என்பதை உணர்த்தியதோடு, பழைய திருப்புதலைப் பரலோகத்தில் இருந்து விழுந்த மொழிபெயர்ப்புபோல் நம்பி வாழ்கிற நம்மினத்துக் கிறிஸ்தவர்களின் அறியாமையை எண்ணி அழுவதா, சிரிப்பதா என்பதும் தெரியவில்லை. ஒரு நல்ல முயற்சி இப்படி அரைகுறையாக முடிந்து பயனில்லாமல் ஆற்றில் கரைந்துவிட்டதே என்ற வருத்தமே ஏற்பட்டது. தமிழில் நல்ல வேதமொழிபெயர்ப்பில்லாமல் அநேகர் தவித்துக்கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்தப் புதிய மொழிபெயர்ப்பு இளவேனிற்கால இளங்காற்றுபோல் வீச ஆரம்பித்திருந்தது. அதையும் அனுபவித்து ஏற்றுக்கொள்ளும் வேதஞானமும், முதிர்ச்சியும் இல்லாத நிலையில் நம்மினத்து கிறிஸ்தவம் இருந்துவருகிறது. இந்திய இலக்கிய வேதாகம சங்க பொது முகாமையாளரைச் சந்தித்து இதுபற்றிப் பேசி இனியும் என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அப்படி இந்த மொழிபெயர்ப்பு திரும்பவும் இன்னும் அவசியமான திருத்தங்களோடு வெளியிடப்படுமானால் சிந்திக்கின்ற கிறிஸ்தவர்களாவது கிறிஸ்தவ அறிவிலும், கிருபையிலும் மேலும் வளர வசதியாக இருக்கும்.

தமிழ் வேதமொழிபெயர்ப்புகளின் பன்முக பலவீனங்கள்

பொதுவாகவே எல்லோரும் இன்று பயன்படுத்திவரும் பழைய திருப்புதலில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டும்போது தமிழ் கிறிஸ்தவர்களில் ஒருதரப்பினர் உண்மையை உணரமறுத்து, கடவுளை நிந்திக்கும் செயலாக அதைக் கணிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுபோய்விட்டது என்று அர்த்தமல்ல. எதையும் வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவேண்டிய சமுதாயம் அந்த வேதம் சிறந்தமொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறையுள்ளதாக இருக்கவேண்டும். தமிழ் மொழிபெயர்ப்பில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்ததற்குக் காரணமே அது நம்மக்களுடைய மொழியில் சரியான மொழிபெயர்ப்பாக இருக்கவேண்டும் என்ற வைராக்கியம் மொழிபெயர்த்தவர்களுக்கு இருந்ததால்தான். தொடக்கத்தில் இருந்த மொழிபெயர்ப்பைத் தொடக்கூடாது, அப்படித் தொடுவது கடவுளை நிந்திக்கும் செயலாகும் என்று அன்றிருந்த திருச்சபைகளோ கடவுளின் ஊழியர்களான பெப்ரீஷியஸோ, இரேனியஸோ, பேர்சிவெலோ, லார்சனோ, பவரோ நினைக்கவில்லையே. தொடர்ந்தும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு சரியான மொழிபெயர்ப்பை திருச்சபைப்பணிகளில் பயன்படுத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் தாங்கள் வாழ்ந்த காலப்பகுதியில் அவர்கள் ஏற்கனவே இருந்த மொழிபெயர்ப்பைக் கவனத்தோடு திருத்தியிருக்கிறார்கள். இவர்கள் மேலைத்தேய மிஷனரிகளாக இருந்ததால் இதற்காகத் தமிழையும் பண்டிதர்களிடம் கற்று அதில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள்.

ஸ்ரீ லங்காவில், பீட்டர் பேர்சிவெல் 1850ல் தனக்கு முன் இரேனியஸ் 1840ல் செய்திருந்த தமிழ் மொழிபெயர்ப்பைத் திருத்தி வெளியிட்டார். இது ‘பரிசோதனை மொழிபெயர்ப்பாக’ இருந்தது. பேர்சிவெல் மெத்தடிஸ்ட் மிஷனைச் சேர்ந்தவர். நன்கு தமிழ்ப்புலமை கொண்டிருந்தவர். தமிழில் சில நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பு Jaffna Bible என்று அழைக்கப்பட்டது. இதை மொழிபெயர்க்க அவருக்கு ஆறுமுகநாவலர் என்பவர் பெருந்துணையாக இருந்தார் என்றும், இந்த மொழிபெயர்ப்பு ஆறுமுகநாவலருடைய மொழிபெயர்ப்பே என்றும் சபாபதி குலேந்திரன் தொடக்கம் முக்கியமான பலர் தங்களுடைய நூல்களில் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து தோமா இந்தியாவுக்கு வந்தார் என்ற வரலாற்றால் நிரூபிக்கப்படாத செய்தியைப்போல நின்று நிலைத்துவிட்டது.

பேர்சிவெல் ஆறுமுக நாவலரிடம் இருந்து தமிழ் கற்றார் என்ற சிரிப்புக்கிடமான செய்திகளும் உள்ளன. இந்தக் கூற்றுக்களில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. நம்மினத்து வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளில் நம்பக்கூடிய ஆதாரங்கள் இல்லாதபடியால் அவற்றில் எதையும் நம்பி ஏற்பது முடியாததாக இருக்கிறது. ஆறுமுகநாவலர் தீவிர இந்து சிவபக்தர். கிறிஸ்தவர்களை அவருக்குப் பிடிக்காதிருந்தது மட்டுமல்ல, அவர்களோடு வாதம் செய்து வெல்லுவதிலும் அவர் சிரத்தை காட்டியிருக்கிறார். சாதி அமைப்புக்கு பேராதரவு தந்து, இந்து மத வளர்ச்சியில் பேரார்வம் காட்டிய ஒரு மனிதர் வேத மொழிபெயர்ப்பில் பெரும் பங்குகொண்டிருந்தார் என்பதையும், பேர்சிவெல் அதற்கு அவரில் தங்கியிருந்தார் என்பதையும் ஏற்க முடியவில்லை. சிவபக்தரான ஆறுமுகநாவலரை மட்டும் நம்பி மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபடவேண்டிய அவசியம் பேர்சிவெலுக்கு இருக்கவில்லை. பேர்சிவெலுக்கு தமிழில் நல்ல பரிச்சயமும், பாண்டித்தியமும் இருந்திருக்கிறது. தமிழ் பாண்டித்தியம் இருந்த கிறிஸ்தவர்களோடும் அவருக்குப் பெருந்தொடர்பு இருந்தது. அத்தோடு மொழிபெயர்ப்புப் பணிக்கான வரையறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறி அவர் ஆறுமுகநாவலரின் வலையில் விழுந்திருக்க மாட்டார். ஆறுமுகநாவலருக்கு பேர்சிவெலைவிட வயது மிகமிகக்குறைவு. பேர்சிவெல் ஆரம்பித்து நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் சிறுவனாக இருந்து கல்வி பயின்று பின்பு 25 வயதில் அங்கேயே ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார் நாவலர். இதை மட்டும் வைத்து வேதமொழிபெயர்ப்பு நாவலருடையது என்ற முடிவுக்கு வருவதும், அந்தச் செய்தியைப் பரப்பிவிட்டிருப்பதும் பெருந்தவறு.

இக்காலங்களில் நூல்கள் பெரும்பாலும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. ஐரோப்பியரே “உரைநடை” தமிழில் உருவாவதற்கு மூலகாரணம். அதேபோல் அடையாளக் குறிகளையும் அவர்களே அறிமுகப்படுத்தினர். இதைக்குறித்து நாம் வெட்கப்படவோ மறுத்துரைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. நல்லது எங்கிருந்து, யாரிடமிருந்து வந்தாலும் நல்லதுதான். ஆதிமொழி தமிழ்தான் என்றும், ஆதாம் தமிழன் என்றும் நினைத்தும் பேசியும் வருகிற அடிமுட்டாள்தனத்தை நாம் மனதில் கொண்டிருக்கக்கூடாது. அத்தகைய ஆணவம் நம்மை வளர, உயரவிடாது. முதல் முதலாக மோட்சப் பயணம் 1793ல் வெளிவந்தபோது அது உரைநடையில் இருக்கவில்லை. உரைநடையில் ஆங்கிலத்தில் இருந்த நூலை மொழிபெயர்த்தவர்கள் செய்யுள்வடிவில் வடமொழித் தாக்கம் மிகுந்திருந்த தமிழில் வெளியிட்டார்கள். அன்று சிறந்ததாகக் கருதப்பட்ட சாமுவேல் பால் என்பவருடைய மொழிபெயர்ப்பைத் தழுவி 1887ல் ‘முத்திவழி அம்மானை’ என்ற பெயரில் மோட்சப் பயணத்தை சுவிகரனார் என்பவர் வெளியிட்டார். அம்மானை என்பது செய்யுள் வடிவில் உள்ள நாட்டார் பாடல் இலக்கியம். சமுதாயத்தின் அடித்தள மக்களுக்கு நாட்டார் பாடல் வடிவங்களில் அன்று நல்ல பரிச்சயம் இருந்தது. இதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து எச். ஏ. கிருஷ்ணபிள்ளை என்பவர் மோட்சப் பயணத்தைத் தழுவிய ஒரு காப்பியத்தை ‘இரட்சண்ய யாத்திரிகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். இது கற்றறிந்தவர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய மொழியில் செய்யுள் வடிவில் இருந்தது. இத்தகைய மொழிநடைக்கே அன்று மதிப்பும், வரவேற்பும் இருந்தது. இதையெல்லாம் நான் விளக்கக் காரணம் தமிழ் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த பெப்ரீஷியஸ், இரேனியஸ், பேர்சிவெல் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் செய்யுள் இலக்கியமே உயர்மட்டத்தில் புழக்கத்தில் இருந்ததோடு, அவையும் வடமொழித் தாக்கத்தை அதீதமாகக் கொண்டிருந்தன என்பதை உணர்த்தத்தான். உரைநடைக்கு இலக்கணம் அமைக்கும் முயற்சிகள் அன்று மெதுவாகத் தலைதூக்கியிருந்தபோதும் இன்று நாம் லாவகமாகப் பயன்படுத்தி வருகின்ற உரைநடைக்கு அன்று இடமிருக்கவில்லை. உரைநடையில் எழுதுவதை அன்று அநேகர் தகுதியற்ற சில்லறைத்தனமான எழுத்துநடையாகக் கருதினர். இந்தச் சூழ்நிலைத் தாக்கத்தைத்தான் அக்காலத்தில் செய்யப்பட்ட தமிழ் வேதமொழிபெயர்ப்புகளிலும் இன்று நம் கையில் இருக்கும் பழைய திருப்புதலிலும் காண்கிறோம். பழைய திருப்புதலின் நடையைப்பற்றி டாக்டர் ரமணி நாயுடு என்பவர், ‘. . . இன்றைய கிருத்துவ தமிழ் தனக்கென ஒரு வரைமுறையை வகுத்துக்கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒருவகைத் தமிழைக்கொண்டிருப்பது குறித்து கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து’ என்று எழுதியிருக்கிறார் (தமிழ்நேசன்.ஓர்க்).

பேர்சிவெலுடைய மொழிபெயர்ப்புக்கும் அவருக்கு முன் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்ட இரேனியஸுடைய மொழிபெயர்ப்புக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. இவர்கள் இருவருடைய மொழிபெயர்ப்புகளுமே அதிகம் வடமொழித் தாக்கமுள்ளவையாக இருந்தன. இருந்தபோதும் இரேனியஸ் தனக்கு முன் பெப்ரீஷியஸ் செய்திருந்த மொழிபெயர்ப்பை இலகுவான தமிழில் கொண்டுவர முயன்றார். ‘பண்டிதர்களுக்குங்கூட பெப்ரீஷியஸ் வேதாகமம் புரியக்கடினமாகவே இருந்தது’ என்று சரோஜினி பாக்கியமுத்து எழுதுகிறார் (தமிழ் கூடல் வலைத்தளத்தில்). இரேனியஸ் வடமொழி வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு “ஜலம்” அவருடைய மொழிபெயர்ப்பில் “தண்ணீர்” என்று மாற்றப்பட்டிருந்தது. இரேனியஸின் மொழிபெயர்ப்பு தமிழில் அவசியமான மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தது. இரேனியஸின் மொழிபெயர்ப்பில் இருந்த பிரச்சனை அவர் எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பை விரும்பாது கருத்துபூர்வமான மொழிபெயர்ப்பு வழிமுறையைக் கையாண்டதுதான். இன்று பேசப்படுகிற Dynamic equivalence முறையை இரேனியஸ் அன்றே பின்பற்றியிருக்கிறார். இரேனியஸின் மொழிபெயர்ப்பில் பாராட்டவேண்டிய விஷயம் சகலரும் புரிந்துகொள்ளக்கூடிய இலகுவான தமிழ் வார்த்தைகளையும், உரைநடையையும் பயன்படுத்த முயன்றதுதான். செந்தமிழ் என்று அன்று கருதப்பட்ட கடுந்தமிழைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை. இருந்தாலும் அன்றைய நிலையில், வடமொழித் தாக்கமும், ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த சூழ்நிலையில் இத்தகைய மாற்றங்களை அநேகர் விரும்பவில்லை. கல்வியறிவில்லாத அடித்தள மக்கள் மட்டுமே அந்தளவுக்கு வடமொழித் தமிழறியாதவர்களாக இருந்தனர்.

இரேனியஸின் பணிகளை ஆராயும் ஓர் ஆய்வுக்கட்டுரையாளர் தமிழில் வேதமொழிபெயர்ப்பை ஆரம்பித்து வைத்த சீகன்பால்குவின் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு எழுதுகிறார், ‘சீகன்பால்குவின் வசனநடை மரபான தமிழ்நடையில் இருந்து (பிராமணத்தமிழ்) வேறுபட்டிருந்த காரணத்தினால் தரங்கை மிஷனரிகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்ப்பண்டித நடையில்லாத தமிழ் விவிலியநடை இம்மண்ணில் எந்தவித வரவேற்பும் பெறாது என்ற அவதானிப்புகளும் நிலவிவந்தன’ என்று எழுதியிருக்கிறார். (செ. ஜெயசெல்வின், தமிழ் கூடல்). இரேனியஸ் இந்தப் பண்டித நடையை மாற்றமுயன்றார்; அந்த முயற்சியும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்புக்கு வக்காலத்து வாங்கிய, அன்று தஞ்சாவூரில் இருந்த வேதநாயகம் சாஸ்திரிகள் இரேனியஸின் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் பேசினார். இரேனியஸ் பெப்ரீஷியஸின் அழகான தமிழ் மொழிபெயர்ப்பை அடித்தள வர்க்கத்தினரான சூத்திரர்களின் அசிங்கமானதும், தகுதியற்றதுமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கெடுத்துவிட்டார் என்று பகிரங்கக் குற்றச்சாட்டெழுப்பினார். அப்படி இரேனியஸ் பயன்படுத்திய அசிங்கமான அடித்தள சமுதாயத்து சூத்திர வார்த்தை என்ன தெரியுமா? தமிழில் இன்று நாம் சரளமாகப் பயன்படுத்தும் ‘தண்ணீர்.’ பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்பில் அதற்கு வடமொழி வார்த்தையான ‘ஜலம்’ பயன்படுத்தப்பட்டிருந்தது. எந்தளவுக்கு அன்று கல்வியறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியிலும், மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியிலும் வடமொழி சார்ந்த பிராமணத் தமிழ் மோகம் இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளுகிறோம்.

இரேனியஸின் வேதமொழிபெயர்ப்பை பீட்டர் பேர்சிவெல் விரும்பவில்லை. அவர் அதைத் திருத்தியபோது மறுபடியும் வடமொழி வார்த்தைகளையே பெரிதும் பயன்படுத்தினார்; தண்ணீர் பழையபடி ஜலமாயிற்று. இரேனியஸ் செய்திருந்த மாற்றங்களையெல்லாம் மறுபடியும் திருத்தினார். இருந்தபோதும் பேர்சிவெலுடைய இந்தத் திருத்த மொழிபெயர்ப்பும் அநேகராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குக் காரணம் அவருடைய மொழிநடை கவிதை நடையாகவும், அளவுக்குமீறிய கடுமையான வடமொழி வார்த்தைப்பிரயோகங்களையும் கொண்டிருந்ததுதான்.

பேர்சிவெலுக்கு பின்வந்த ஹென்றி பவர் என்பவர் செய்த மொழிபெயர்ப்பே இன்றுவரை எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. Textus Receptus என்ற கிரேக்க புதிய ஏற்பாட்டையும், பெப்ரீஷியஸின் மொழிபெயர்ப்பையும் அடிப்படையாகக்கொண்டு பவரின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. இவர் பலமொழி பாண்டித்தியம் பெற்றிருந்த அறிஞர். இவருடைய பழைய, புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்புகள் 1871ல் சென்னையிலிருந்த வேப்பெரியிலுள்ள ஒரு அச்சகத்தில் முதல்தடவையாக அச்சிடப்பட்டது. 1858ல் ஆரம்பமான மொழிபெயர்ப்பு 1871லேயே முழுமை பெற்றது. சகல கிறிஸ்தவ சபைகளும் ஏற்றுக்கொள்ளும்விதமாக இது வெளியிடப்பட்டதால் இதனை ‘ஐக்கியத் திருப்புதல்’ என்று அழைத்தார்கள். ஹென்றி பவருடைய திருப்புதல் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பவரின் மொழிபெயர்ப்பிலும் வடமொழித்தாக்கம் அதிகமாக இருந்தபோதும், பேர்சிவெலின் திருத்தப்பதிப்பில் காணப்பட்ட வடமொழித்தாக்கத்திற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. பேர்சிவெல் பயன்படுத்திய வடமொழி வார்த்தைகளை அன்று கற்றறிந்திருந்தவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. பவர் சாதாரண மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்த வடமொழி வார்த்தைகளையே அதிகம் பயன்படுத்தினார். இருவருமே வடமொழி வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியபோதும் பவரினுடையது சகலரும் அன்று அறிந்திருந்த வடமொழி வார்த்தைகள். இதிலிருந்து வடமொழித்தாக்கம் எந்தளவிற்கு 140 வருடங்களுக்கு முன் தமிழ் சமுதாயத்தில் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சபாபதி குலேந்திரன் எழுதிய ‘கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு’ நூல் 1967ல் வெளியிடப்பட்டது. நூல் முழுவதும் குலேந்திரன் அதிகமாக வடமொழிப்பதங்களை சரளமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது இன்றும் வாசிக்கக்கூடியதாக இருந்தபோதும் இந்தளவுக்கு வடமொழிப்பிரயோகங்களை எவரும் எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்துவதில்லை. ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல் தமிழகத்தில் காங்கிரஸ் முதலமைச்சரான பக்தவச்சலத்தின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தமிழில் அடிப்படையிலேயே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குலேந்திரனுடைய நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தமிழுக்கு ஓர் உதாரணத்தைத் தருகிறேன், ‘தமிழின் விஸ்தாரத்தினால் வரும் மற்றக் கஷ்டம், ஒரே வசனத்திலேயே சொற்களுக்கு வெவ்வேறு விகுதிகளை உபயோகிக்கலாம்.’ இன்னோரிடத்தில், ‘இவை முன்வந்தவைகளைப்போல் சில தடவைகளில் மாத்திரம் வராமல் எப்பொழுதும் எழும்பியதால், இவை சிறியனவெனச் சொல்ல இயலாது. இவையிரண்டும் தமிழ்பாஷையின் விஸ்தாரத்தினால் எழும்பியவை.’

இன்று ‘கிறிஸ்தவ தமிழ்’ என்று ஒன்றிருப்பதை கிறிஸ்தவர்கள் அல்லாதாரும் அறிவார்கள். இந்தத் தமிழ் உருவானதற்கு பெப்ரீஷியஸின் தமிழ் மொழிபெயர்ப்பே காரணம் என்று சபாபதி குலேந்திரன் எழுதியிருக்கிறார். பழைய திருப்புதல் (OV) வேத மொழிபெயர்ப்பு இந்தக் கிறிஸ்தவ தமிழால் நிறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்துவதால் அநேக கிறிஸ்தவர்களுக்கு பேச்சிலும் எழுத்திலும் இந்தத் தமிழே வந்துவிடுகிறது. முக்கியமாக நம்மினத்தில் பிரசங்கம் செய்கிறவர்களின் பிரசங்கங்களிலும், ஜெபத்திலும் இதன் வாடை அளவுக்குமேல் இருக்கும். இரேனியஸ் இந்த நடையைத்தான் மாற்றமுயன்றார். எபிரெய, கிரேக்க மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்படுகிறபோது வேதம் தமிழில் இருக்கவேண்டுமே தவிர எபிரெய, கிரேக்க வாடை அதில் இருக்கக்கூடாது. எபிரெய, கிரேக்க வாடை மட்டுமல்லாது பிராமணத்தமிழும் நிரம்பிவழியும் பழைய திருப்புதல் இந்த 21ம் நூற்றாண்டில் அவசியமான, தவிர்க்கமுடியாத, தள்ளிப்போடக்கூடாத பெரிய மாற்றத்தை நாடி ஏங்கி நிற்கிறது.

இதையெல்லாம் நான் விளக்கமாக சுட்டி வருவதற்கான காரணம் இன்று நாம் பயன்படுத்திவரும் பழைய திருப்புதல் (OV) தற்காலத் தமிழில் இல்லை என்பதற்காகத்தான். தமிழறிஞர்களாலும் புரிந்துகொள்ள முடியாத, சாதாரணத் தமிழ் வாசகனும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் வேதம் இருக்குமானால் கடவுளின் வெளிப்படுத்தலான சத்தியத்தை நம்மினத்து மக்கள் முன் நாம் எப்படி வைக்கமுடியும்? சிந்தித்துப் பாருங்கள். வேதத்தைப் பயன்படுத்தியே நாம் சுவிசேஷப் பிரசங்கங்களை அளிக்கவேண்டியிருக்கிறது. ஆண்டவரை அறியாத, திருச்சபையின் பக்கம் காலடி எடுத்துவைத்திராத மக்கள் முன் தற்காலத் தமிழில் இல்லாத வேதத்தை எப்படி வாசிக்க முடியும்? ஆண்டவருடைய வார்த்தை என்பதால் அது மக்கள் புரிந்துகொள்ள முடியாத மொழியில் இருக்க வேண்டுமா? அது சமஸ்கிரதத்தில் அர்ச்சனை செய்யும் கோயில் பூசாரிக்கும், அங்கு சாமி கும்பிடப்போகிறவர்களுக்கும் சரி. நமக்கு சரிப்பட்டு வருமா? மக்கள் தங்களுடைய சொந்த மொழியில் வாசித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் ஆண்டவர் வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார். அதுவே சகலரும் வாசிக்க முடியாமல் இலத்தீனில் மட்டும் இருந்த வேத மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க டின்டேலைத் தூண்டியது. எவரும் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியில் வேதம் இருக்கவேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. கிராமங்களில் நான் சுவிசேஷம் சொல்லப்போகிறபோது முடிந்தவரை எந்த வேதப்பகுதியையும் நான் என்னுடைய சொந்த வார்த்தைகளில் விளக்குவதே வழக்கம். கல்வியறிவில்லாத அந்த மக்கள் சலித்துப்போகும்படியாக நாம் எதையும் செய்யக்கூடாது. புரிந்துகொள்ளமுடியாத மொழியில் பேசுகிறோம், எதையோ வாசிக்கிறோம் என்று மனதில்பட்டாலே அவர்கள் சலிப்படைந்து எழுந்துபோய்விடுவார்கள் அல்லது கவனத்தை வேறெதிலோ காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு உதவாத தமிழில், தமிழ் வேதம் இருப்பது நாம் வருந்தவேண்டிய விஷயந்தான். தொடர்ந்து நல்ல புதிய மொழிபெயர்ப்பொன்று உருவாகாதவரையில் சுவிசேஷம் நம்மினத்தில் பரவி ஆழமாகக் கால்பதிப்பதென்பது நடக்காத காரியம். 16ம் நூற்றாண்டில் சுவிசேஷம் பரவ வேதமொழிபெயர்ப்பு பெருங்காரணமாக இருந்திருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு நம்முடைய மொழிபெயர்ப்பே இன்று தடையாக இருந்துவிடுகிறதே.

திருச்சபையில் கிறிஸ்தவர்கள் வேத அறிவில் வளர வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாசிக்கும்போது அவர்களுக்கு வேதம் தடங்கலில்லாமல் புரியவேண்டும். வேதத்தை அன்றாடம் வாசித்து சிந்தித்து அவர்கள் அதை ஆராயவேண்டும். வேதஞானமில்லாத கிறிஸ்தவ சமுதாயம் வளர முடியாது; கிறிஸ்தவ அனுபவத்தில் சிறக்க முடியாது. வீட்டில் வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத தமிழில் வேதமிருப்பதை அறிந்திருந்தும் ஒன்றும் செய்யவழியில்லாத நிலையில் கிறிஸ்தவ சமுதாயம் இன்று வாய்பொத்திக் கைகட்டிச் செயலற்றிருக்கிறது. பெரும்பாலான பிரசங்கிகளுக்கு அதை வாசித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் நல்ல பிரசங்கங்களைத் தயாரிக்கும் அளவுக்கு ஞானத்தைக் கொண்டிருக்க பழைய திருப்புதல் தடையாக இருக்கிறது. எத்தனையோ பிரசங்கிகளோடு பேசிப்பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன். ஓய்வுநாட்களில் ஆத்துமாக்கள் சத்தான போதனைகளைக் கேட்க வழியில்லாமல், அரைகுறைப் பிரசங்கங்களாலும், போதனைகளாலும் தமிழினம் தள்ளாடிக்கொண்டிருப்பதற்கு, புரியாத ஒருவகைக் ‘கிறிஸ்தவ தமிழில்’ வேதமொழிபெயர்ப்பு இருப்பதும் ஒரு காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

துணைநூற்பட்டியல்:

  1. கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு, சபாபதி குலேந்திரன் (1967).
  2. விவிலியத் தமிழ், முனைவர் அ. ஆலிஸ்.
  3. கிறிஸ்தவமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி
  4. தமிழ்நேசன், வலைத்தளம்
  5. தமிழ்கூடல், வலைத்தளம்
  6. Jaffna Version of the Tamil Bible, Internet article
  7. பரிசுத்த வேதாகமம், IBL, Chennai
  8. பரிசுத்த வேதாகமம் (OV)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s