[இந்த ஆக்கத்தை எழுதியவரை டே. மெ என்ற அவருடைய பெயரின் ஆரம்ப எழுத்துக்களின் மூலம் மட்டுமே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அருமை நண்பரான டே. மே அவர்களின் கர்த்தருக்கான விசேஷ ஊழியப்பணிகள் அவருடைய பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட முடியாதபடி செய்கின்றன; இதை அவரே கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆங்கில மூலத்தில் இருந்து தமிழாக்கம் செய்தவர் நண்பர் ஜேம்ஸ். இந்த ஆக்கத்தில் உள்ள வேத வசனங்கள் இந்திய வேதாகம இலக்கியம் (IBL) வெளியிட்டுள்ள புதிய மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. – ஆசிரியர்]
கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும்.
தீத்து. 2:13-14 – நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மேன்மையான தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் வருகைக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குக் கற்பிக்கிறது. அவர் நம்மைச் சகல தீமைகளிலிருந்தும் மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ளவர்களாகவும் இருக்கும்படி, தமக்கென நம்மைத் தூய்மையாக்குவதற்காக, தம்மைத்தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார்.
இந்த ஆக்கம் பக்தி வைராக்கியத்தைப் பற்றியது; இதைக் கிறிஸ்தவ வைராக்கியம் என்றும் சொல்லலாம். இரண்டும் ஒரே விஷயத்தை விளக்கும் வெவ்வேறு வார்த்தைப்பிரயோகங்கள். சமீப காலமாக இதைப்பற்றி நான் அதிகம் சிந்தித்து வருகிறேன். ஏனென்றால் வயது போய்க்கொண்டே இருப்பதாலும், முதுமை தலைதூக்கி உடல் வலிமையும் குறைந்துகொண்டே போவதாலும், இதற்கு மத்தியில் எப்படி இந்த விஷயத்தில் நான் ஊக்கத்தோடு இருக்கப்போகிறேன் என்பதால்தான் அதிகம் இதைப்பற்றி சிந்தித்து வருகிறேன். நான் வழக்கமாக ஒவ்வொரு நாளும் காலைவேளையில் என் தனிப்பட்ட தியானத்தின்போது ஒரு பாடல் பாடுவேன். கடந்த இலையுதிர்காலத்தின்போது சில பாடல்கள் எனக்கு ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றிய உண்மையை உணரச் செய்தன. அதாவது என் வாழ்க்கைப் போராட்டத்தில் என்னுடைய வலிமையை விட வேறு அநேக விஷயங்களும் சம்பந்தப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். அந்த பாடல் ஒன்றின் சில வரிகளைக் கேளுங்கள்.
நாங்கள் சேவிக்க வேண்டியபடி உம்மை சேவித்தது இல்லை;
ஐயோ, அநேக கடமைகள் செய்யாமல் விடப்பட்டிருக்கிறது,
குறைந்த உற்சாகத்தோடு செய்யப்பட்ட வேலை,
போர்களில் இழப்பு, அல்லது அரிதாகவே வெற்றி!
கர்த்தாவே, வைராக்கியத்தைத் தாரும், வலிமையைத் தாரும்
உமக்கு உழைக்கவும், உமக்கு போராடவும்.
இந்த வார்த்தைகள் ஒரு முக்கியமான வேத உண்மையைச் சுட்டிக்காட்டுகின்றன. இவை வலிமையை சுட்டுகின்ற அதேவேளை பக்திவைராக்கியத்தையும் அதோடு தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. இந்த உண்மையை உணர்ந்ததனால்தான் பக்தி வைராக்கியம் பற்றி இங்கே விளக்க முற்பட்டேன். முதலில் என் சொந்த நலனுக்காகவே இதைச் செய்தேன். இருந்தபோதும், இது நம் ஒவ்வொருவருக்கும்கூட மிகவும் அவசியமானது. குறிப்பாக கர்த்தரின் சிறப்பான பணியைச் செய்து வருகிற போதகர்களுக்கு இது மிகவும் அவசியமானது. வயது பாரபட்சம் எதுவுமில்லாமல் எல்லாருமே அக்கறைகாட்ட வேண்டிய ஒன்றுதான் பக்தி வைராக்கியம் (சங்கீதம் 71:9ஐ ஏசாயா 40:30-31 வசனங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்).
முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் கனம் குறையும்போது என்னைக் கைவிடாமலும் இரும். (சங்கீதம் 71:9)
இளைஞர் களைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் களைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். (ஏசாயா 40:30-31)
இந்த நேரத்தில், கிறிஸ்தவ வைராக்கியத்தை விளங்கிக்கொள்ளுவதற்கு துணையாக, பக்தி மற்றும் கிறிஸ்தவ வைராக்கியம் பற்றி விளக்கும் வேதத்தின் ஒரு முக்கிய பகுதியில் இப்போது நம்முடைய கவனத்தைச் செலுத்துவோம். நாம் இப்போது கவனிக்கப்போகிற பகுதி தீத்து 2:13-14. (குறிப்பாக 14வது வசனம்). இந்த பகுதியில் ஐந்து காரியங்களைக் கவனிக்கலாம்.
1. கிறிஸ்தவ வைராக்கியத்தின் அனல்போன்ற வீரியத்தன்மை. இங்கே நான் குறிப்பாக “பக்திவைராக்கியமுள்ள” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை மீது கவனத்தை செலுத்துகிறேன். இந்த வார்த்தை “அதீத ஆர்வம்” என்ற கிரேக்கம் மொழி வார்த்தையைச் சேர்ந்தது. எரிகிற அல்லது கொதிக்கிற என்பது இந்த வார்த்தையின் அடிப்படை அம்சம். இது அடிப்படையில் ஊக்கம், உற்சாகம், ஆர்வம், விருப்பம் இவைகளை தன்னில் கொண்டது. ‘கொதிக்கிற’ என்பது உற்சாகத்துடன் ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்திருப்பது. வேதம் “வைராக்கியம்” என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிற பெரும்பாலான இடங்களில் ஆத்திரத்தையும் கோபத்தையுமே சுட்டிக்காட்டுகிறது. இன்னும் குறிப்பாக சில இடங்களில் பகைமை, பொறாமை என்றும் அதைக் குறிப்பிடுகிறது. வேறு சில இடங்களில் பேராசை, இச்சை, அல்லது அதீத அன்பு என்பதையும் குறிப்பிடுகிறது. இவற்றில் பெரும்பாலானவைகள் ஒன்றில் நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கிறது. எனவே, வேதம் நீதியான வைராக்கியத்தையும் தீமையான வைராக்கியத்தையும் பற்றி நமக்குச் சொல்லுவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தப் போதனையைத் தொடர்ந்து படிக்கிறபோது நீதியான வைராக்கியத்திற்கும் தீமையான வைராக்கியத்திற்குமுள்ள வேறுபாடுகளை நாம் கண்டறியலாம். நாம் இப்போது ஆராய்ந்து வருவது நீதியான அல்லது பக்தி வைராக்கியத்தையே.
இதுவரை நாம் பார்த்த காரியங்கள் நமக்கு ஒரு பாடத்தைத் தரும் விதமாக ஒரு கேள்வியை எழுப்புகிறது. சரியான வழியில் நான் ஒரு வைராக்கியமுள்ள கிறிஸ்தவனாக இருக்கிறேனா? நீதியான காரியங்களுக்காக உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நான் வாழ்ந்து வருகிறேனா? இதற்கான பதிலை பவுல் நாம் பார்த்து வருகிற வேதப்பகுதியில் அற்புதமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.
2. கிறிஸ்தவ வைராக்கியத்தின் நடைமுறை வெளிப்பாடு. இங்கே பக்திவைராக்கியத்தின் மெய்யான வெளிப்பாடான ஒரு குறிப்பிட்ட தன்மை வலியுறுத்தப்படுகிறது. அதுதான் நற்செயல்கள். பவுல் சொல்லுகிறார், “நற்செயல்களைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்கள்” என்று.
பவுல் தீத்துவுக்கு எழுதிய இந்நிருபத்தில் “நற்செயல்” என்பது அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ள செய்தியாக இருக்கிறது. அது வெளிப்படையாக குறைந்தது ஐந்து இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (2:7, 3:1, 5, 8 மற்றும் 14).
2:7 நற்செயல்களைச் செய்வதின்மூலம் நீயே எல்லாவற்றிலும் உன்னை மாதிரியாகக் காண்பித்து,
3:1 ஆளுகைசெய்பவர்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், நன்மையானவற்றைச் செய்ய ஆயத்தமாயிருக்கவும்,
3:5 நாம் செய்த நீதியான காரியங்களுக்காக அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பின் முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்படுதலினாலும் நம்மை இரட்சித்தார்.
3:8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்செயல்களைச் செய்யத் தங்களை ஒப்படைக்கும்படி நீ இவைகளை வலியுறுத்திப் போதிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே மேன்மையானவையும் மனிதருக்குப் பயனுமுடையவைகள்.
3:14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி அன்றாடத் தேவைகளைச் சந்திக்கும்படி நற்செயல்களைச் செய்யப்பழகட்டும்.
ஒரு புறம், நம்முடைய நீதியான செயல்களின் மூலம் நாம் இரட்சிக்கப்படவில்லை என்பது இங்கே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; 3:5 வசனத்தை வாசித்துப் பாருங்கள். எனினும், மற்ற நான்கு வசனங்களும் விசுவாசிகளான நாம் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவை நம்முடைய ஆழ்மனதில் இருந்து கிளம்பும் உணர்வுபூர்வமான முயற்சியாக இருக்க வேண்டும். இவைகளை நாம் எப்படி ஒன்று சேர்த்துப் பார்ப்பது? நற்செயல்கள் என்பது, நாம் எப்படியாவது கிறிஸ்தவராகிவிடவேண்டும் என்பதற்காகச் செய்வது அல்ல, அவை கிறிஸ்தவனின் கனிகள் அல்லது கிறிஸ்தவனாக அவன் இருப்பதனால் அவனில் வெளிப்படும் நடைமுறைச் செயல்களாகும்.
நற்செயல் என்று பவுல் எதைக் குறிப்பிடுகிறார்? தீத்து 3:14ல் பவுல் ஒரு குறிப்பிட்ட வகையை வலியுறுத்துகிறார். நம்மை சுற்றி இருப்பவர்களின் எந்த அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே அது. அது உண்மையானால், நம்மை சுற்றியிருப்பவர்களின் எந்த அவசரத் தேவையும் நம்மை நற்செயல் செய்யும்படித் தூண்ட வேண்டும்? நம்மை சுற்றியிருப்பவர்களின் ஆவிக்குரிய தேவையே அவர்களின் அவசரத் தேவையாக இருக்கின்றது. இதுவே பாவத்தில் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியதுமான ஆத்மீக உண்மை. அவர்கள் பாவத்தில் இருந்து விடுபட்டு கடவுளோடு சரியான உறவை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் அவர்கள் நரகத்தில் நித்திய வேதனையை அனுபவித்து அழிந்து போக வேண்டியிருக்கும். எனினும், தீத்து 3:14ல் பவுல் குறிப்பிடுகிற இந்த அவசரத் தேவைகள் அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளை மட்டுமல்லாது சரீரப்பிரகாரமான தேவைகளையும் உள்ளடக்கியது. அதாவது உணவு, உடை, உறைவிடம் என்பவைகளும் அதில் அடங்கும். ஏழை எளியவர்களை நாம் மறந்துவிடக் கூடாது என்று வேதம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
எளியோரை நினைத்துக்கொள்ளும்படிக்கு மட்டும் சொன்னார்கள்; அதற்கு முன்பே நானும் அவ்வாறு செய்ய ஆர்வமுள்ளவனாயிருந்தேன். (கலாத்தியர் 2:10).
இவை நமக்குப் பாடம் கற்றுத்தரும்படியாக இன்னொரு கேள்வியை எழுப்புகின்றன. அது, நான் நற்செயல்களைச் செய்கிறவனாக இருக்கிறேனா? என்பதுதான். என்னால் முடிந்தவரையில் என்னை சுற்றியிருக்கிறவர்களின் அவசியமான ஆத்மீகம் மற்றும் சரீரத் தேவைகளைத் தீர்த்துவைக்கிறவனாக இருக்கிறேனா? இந்த நற்செயல்களைச் செய்வதற்கான ஆர்வம் நம்மில் இல்லாதபோது நாம் பக்திவைராக்கியமுள்ளவர்கள் என்று நம்மை நாமே அழைத்துக்கொள்ள முடியாது.
இனி தீத்து 2.14ல் இருந்து கிறிஸ்தவ வைராக்கியம் பற்றிய மூன்றாவது விஷயத்தை நாம் பார்ப்போம்.
3. கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான அடிப்படை வழிமுறை. பவுல் தீத்து 2:14ல் சொல்லுகிறார், நற்செயல்களைச் செய்வதற்கு வைராக்கியமுள்ளவர்களிடத்தில் அந்த வைராக்கியத்துக்கு அவசியமான இரண்டு குறிப்பிட்ட விஷயங்கள் காணப்படும் என்று.
அ. முதலாவது, நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் மீட்கப்பட்டவர்கள் அல்லது சகல அக்கிரமங்களிலிருந்தும் மீட்கப்பட்டவர்களாக இருப்பார்கள். நாம் அனைவரும் பிறப்பில் பாவத்திற்கு அடிமைகளாகப் பிறந்தவர்கள். கடவுளுக்கும் அவருடைய கட்டளைகளுக்கும் விரோதிகளாக சுயநலமும், சுயத்தை மட்டுமே மையமாக கொண்ட வாழ்க்கை வாழுகிறவர்கள். அந்த நிலையில் மற்றவர்களுடைய அவசரத் தேவைகளைத் தீர்ப்பதற்கான வைராக்கியத்தை நாம் எப்படி கொண்டிருக்க முடியும்? அக்கிரமங்களில் அடிமைகளாக இருப்பதிலிருந்து நாம் மீட்கப்படுவதின் மூலமாக மட்டுமே அது நிகழமுடியும்.
கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான இன்றியமையாத வழிமுறையான இரண்டாவது விஷயத்தையும் பவுல் விளக்குகிறார். முதலாவதைப் போலவே இரண்டாவதும் மிக முக்கியமானதும் அவசியமானதுமாகும்.
ஆ. நற்செயல்களில் ஆர்வமுள்ளவர்கள் கடவுளால் சுத்திகரிக்கப்பட்ட அவரால் தெரிந்தெடுக்கப்பட்ட அவருடைய சொந்த ஜனங்களாக இருப்பார்கள். இந்த வார்த்தைப்பிரயோகங்களைக் கொஞ்சம் விபரமாகப் பார்ப்போம். முதலாவதாக, நம்முடைய இரட்சிப்பில், கடவுள் நம்மை அவருடைய சொந்த ஜனமாக ஏற்படுத்தியிருக்கிறார். கடவுள் தம்முடைய பெரிதான கிருபையினால், தாமே விரும்பி நம்மைப் போன்றவர்களை தம்முடைய மக்களாக ஏற்படுத்தி நம்முடைய தேவனாகவும் இருக்கிறார்.
இந்த உண்மை மேலும் ஓர் உண்மைக்கு நம்மை வழி நடத்துகிறது. அதாவது, கடவுள் பரிசுத்தராக இருப்பதினால் அவரது சொந்த மக்களும் பரிசுத்தமாக வாழவேண்டும். என்றாலும், நாம் நல்ல செயல்களையல்லாமல், பல தீய செயல்களையே வாழ்க்கையில் செய்திருக்கிறோம். எனவே, நாம் கடவுளின் சொந்த ஜனங்களாக இருப்பதற்கு நம்முடைய தீய செயல்களிலிருந்து சுத்திகரிக்கப்படுவது மட்டுமே ஒரே வழி. இந்த உண்மை இன்னும் ஆழமாக வலியுறுத்தப்பட்டிருக்கிற மற்றொரு வேதப்பகுதியைக் கவனியுங்கள். எபிரெயர் 9:13-14 வசனங்களை வாசியுங்கள்.
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், உடலில் சுத்தமுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே மாசற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம், வாழும் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி சாவுக்கேதுவான செயல்களிலிருந்து உங்கள் மனச்சாட்சியைத் தூய்மையாக்குவது எவ்வளவு நிச்சயம்!
தேவனுக்கு நாம் ஊழியம் செய்யவேண்டுமானால், அவருக்குக் கீழ்ப்படிவதோடு, நற்செயல்கள் செய்வதும், செத்த கிரியையிலிருந்து நம்முடைய மனச்சாட்சி சுத்திகரிக்கப்பட வேண்டியதும் அவசியமானது என்று இப்பகுதியில் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, நம்முடைய மனச்சாட்சி குற்றத்தன்மை கொண்டதாகவும் கண்டனத்திற்குரியதாகவும் இருக்கிறபோது எப்படி நாம் நற்செயல்களைச் செய்வதற்கு வைராக்கியங் கொண்டவர்களாக இருக்க முடியும்?
எபிரெயர் 9:13-14 இதை மேலும் விளக்குகிறது. இந்தப் பகுதி நம்முடைய கெட்ட மனச்சாட்சி கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட முடியும் என்கிறது. அவைகள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே சுத்திகரிக்கப்பட முடியும். எபிரெயர் 9:22 தொடர்ந்து சொல்லுகிறது “. . . இரத்தம் சிந்துதல் இல்லாமல், பாவ மன்னிப்பு உண்டாகாது” என்று. நம்முடைய செத்த கிரியைகளிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் நம்முடைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த நேரத்திலும் நாம் உறுதியாக அறிந்திருப்பதற்குக் காரணம் கிறிஸ்துவின் இரத்தம்தான். இது நாம் பாவத்திலிருந்து மனந்திரும்பி இயேசுவை விசுவாசித்தபோது அனுபவித்த ஆரம்ப சுத்திகரிப்பு. இதன் மூலமாகத்தான் நாம் கிறிஸ்தவர்களாக, தொடர்ந்து நம்முடைய எல்லாப் பாவங்களிலிருந்தும் மனந்திரும்புகிறவர்களாகவும் விசுவாசத்தின் மூலம் தொடர்ந்து கிறிஸ்துவை பற்றிப் பிடித்திருக்கவும் கூடியதாக இருக்கிறது.
விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வேறுபாடுமிராதபடி செய்தார். (அப்போஸ்தலர் 15:9)
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து அனைத்து அநீதியிலிருந்தும் நம்மைத் தூய்மையாக்குவதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1 யோவான் 1:9)
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறபடியினால், அன்பானவர்களே, சரீரத்தையும் ஆவியையும் கறைப்படுத்தும் எதையும் நீக்கி, நம்மைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தூய்மையாக்குதலைத் தேவனிடம் கொண்ட அச்சத்தோடே நிறைவாக்கக்கடவோம். (2 கொரிந்தியர் 7:1)
இந்தவிதமான தொடர்ச்சியான சுத்திகரிப்பின் மூலமாக மட்டுமே சரியான முறையில் நாம் நற்செயல்களுக்காக வைராக்கியம் கொண்டிருக்க முடியும்.
நம்முடைய சுத்திகரிப்பு மற்றும் மீட்பில் கிறிஸ்துவின் பங்கை மறுக்க முடியாது. ஆனால், இப்போது நாம் கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான அவசியமான செயல்முறையின் மூலம் நமக்கு வருகின்ற பயன்பாடுகளைக் கவனிப்போம். முதலாவதாக, கடவுளுடைய பரிசுத்த மக்களாக இல்லாமலிருந்தால் மெய்யான பக்தி வைராக்கியம் ஒருவனில் ஒருபோதும் இருக்க முடியாது. சுயநலத்திலிருந்தும் அக்கிரமத்திலிருந்தும் விடுவிக்கப்படாத இருதயத்தில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கு வழியே இல்லை. கடவுளுக்கும் அவருடைய கட்டளைக்கும் விரோதமாக பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படாமல் இருப்பது நம்மை பக்தி வைராக்கியத்திலிருந்து எப்போதும் புறம்பே தள்ளியே வைக்கும்.
இந்த முதலாவது பாடத்தை சற்று எதிர்மாறானவிதத்தில் பார்ப்போம். அதாவது, கிறிஸ்து நம்மை விடுவித்து சுத்திகரித்திருப்பாரானால், நம்மில் நற்செயல்களைச் செய்கிறவராகவும் நம்மில் செயல்பட்டிருப்பார் என்று நாம் நம்பலாம். அவர் நம்மை இரட்சித்ததற்கு இதுவே முக்கிய நோக்கமாக இருக்கிறது. எனவே, நாம் அவரிடம் கேட்கிறபோது நற்செயல்களை செய்வதற்கான வைராக்கியத்தை அவர் நமக்குத் தருவார் என்று எதிர்பார்க்கக் கூடிய ஊக்கத்தை இது நமக்களிக்கிறது.
இதுதான் தீத்து 2:13-14 வசனங்களில் தரப்பட்டிருக்கும் கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பற்றிய மூன்றாவது குறிப்பு – கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கான இன்றியமையாத வழிமுறை. பவுல் இதைப்பற்றித் தொடர்ந்து விளக்குகிறார். மீட்பு மற்றும் சுத்திகரிப்பின் மூலம் நாம் பெற்றிருக்கிற பரிசுத்த வாழ்க்கையின் பலனே கிறிஸ்தவ வைராக்கியம். ஆனால் கிறிஸ்தவ வைராக்கியத்தோடுகூடிய பரிசுத்த வாழ்க்கை எங்கிருந்து வருகிறது? இந்தக் கேள்வி நம்மை அடுத்த விஷயத்துக்கு அழைத்துச் செல்லுகின்றது.
4. கிறிஸ்தவ வைராக்கியத்திற்குப் பின்னாலிருக்கின்ற கிருபையுள்ள பலி. 13-14 வசனங்களை சேர்த்துப் பார்க்கிறபோது, நற்செயல்களுக்கு வைராக்கியங்கொள்ள நம்மை வழிநடத்துகிற நம்முடைய மீட்பு மற்றும் சுத்திகரிப்பு அற்புதமானதும் ஆச்சரியமானதுமான கிறிஸ்துவின் பலியின் விளைவாக வருகிறது. இது கிறிஸ்து தம்மைத்தாமே நமக்காகக் கொடுத்ததன் விளைவாக உண்டாவது. அவர் எங்கே, எப்படித் தம்மைக் கொடுத்தார்? இந்த உலகத்தில் மெய்யான மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, ஊழியம் செய்ததன் மூலமே அவர் தம்மைக் கொடுத்தார். எனினும் சிறப்பான வகையில் அவர் தம்மைத் தந்ததைப் பற்றி வேதம் விளக்குகிறது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் எபிரெயர் 9:14ல் பார்த்தோம், “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” இவ்வாறே நாம் சுத்திகரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டோம். இயேசுவே தேவனுடைய குறைபாடுகளற்ற ஆட்டுக்குட்டியாக இருந்து சிலுவையில் நம்முடைய இடத்தில் இருந்து நம்மை அவர் மனமுவந்து ஏற்றார். நாம் அடைய வேண்டிய தண்டனைகளுக்காக அவர் தேவனால் தண்டிக்கப்பட்டார். நாம் முன்பு வாழ்ந்த அக்கிரம வாழ்க்கையிலிருந்து நம்மை விடுவிக்கும்படியான பலியாக கிறிஸ்து தம்மையே கொடுத்தார். நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால், இந்த பலியின் மூலமாகவே நம்முடைய பாவங்களிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அதன் விளைவாகவே, தேவனுடைய நீதிமன்றத்தில் நாம் மன்னிக்கப்பட்டவர்களாவும், குற்றமற்றவர்களாகவும், நீதியானவர்களாகவும் நிற்கிறோம். இது அற்புதமான பலி, அற்புதமான அன்பு, அற்புதமான கிருபை.
கிறிஸ்தவ வைராக்கியத்திற்குப் பின்னாலிருக்கின்ற கிருபையின் பலி நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? நாம் கொண்டிருக்கிற அல்லது எதிர்பார்க்கிற பக்திவைராக்கியம் சிலுவையில் சிந்திய கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே வருகிறது என்பதுதான் அது. “முடிந்தது” என்று அவர் சிலுவையில் சொன்ன உண்மையான வார்த்தைதான் நாம் நற்செயல்களுக்கான வைராக்கியத்தைக் கொண்டிருக்கச் செய்கிறது. இது அவருடைய சுத்த கிருபையினால் உண்டானது. கடவுளின் சாபத்திற்கு உரியவர்களாகிய நமக்கு கிறிஸ்துவின் மூலம் கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் அது. பக்தி வைராக்கியத்தை கிறிஸ்தவ வைராக்கியம் என்று அழைப்பதற்கு இதுவே காரணம். இந்த வைராக்கியம் கிறிஸ்துவினாலும் அவருடைய சிலுவை பலியினாலுமே உண்டானது.
இந்த நான்காவது உண்மை கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பற்றிய ஐந்தாவது இறுதி உண்மைக்கு நம்மை வழிநடத்துகிறது.
5. கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும். எங்கிருந்து இந்த பக்தியுள்ள கிறிஸ்தவ வைராக்கியம் வருகிறது? உண்மையில் இதற்கான பதிலை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தீத்து 2:13 வசனத்தின் இறுதி வாக்கியம் இதற்கான பதிலைத் தருகிறது. (இங்கு வைராக்கியத்தோடுள்ள தொடர்பை கவனியுங்கள்). நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தே கிறிஸ்தவ வைராக்கியம் ஆரம்பமாகிறது. அவரே அதை ஆரம்பிக்கிறார். நம்மிடம் கிறிஸ்தவ வைராக்கியம் இருக்குமானால் அது நிச்சயமாக அவரிடமிருந்தே வந்திருக்கும்.
இந்த இடத்தில் நான், கடவுளே நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றும் ஆதாரமும் என்ற வேத உண்மையைச் சுட்டிக்காட்டுகிற இரண்டு உதாரணங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
அ. முதலாவதாக, பழைய ஏற்பாட்டில் பக்தியுள்ள பினெகாஸைப் பற்றிய உதாரணத்தைக் கவனியுங்கள். எண்ணாகமம் 25:1-13 (குறிப்பாக 11-13) வாசியுங்கள்.
நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் மக்களை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் மக்கள்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
இந்த வசனங்கள் கடவுள் வைராக்கியமுள்ளவர் என்பதைத் தெளிவாக நமக்குக் காட்டுகின்றன. கடவுளின் வைராக்கியம் என்பது எப்போதும் பாவிகளின் மீதுள்ள அவருடைய கோபத்தோடும் நியாயத்தீர்ப்போடும் வெளிப்படுகிறது. இந்த இடத்தைக் கொஞ்சம் கவனத்தோடு பாருங்கள் – கடவுளுக்காக வைராக்கியங் கொண்டதற்காக பினெகாஸ் புகழப்படுகிறான். கடவுளுக்கான இந்த வைராக்கியமே கடவுளுடைய வைராக்கியம். வேறுவிதமாக சொல்லப்போனால், ஒழுக்கக்கேடான விக்கிரக ஆராதனைக்காரர்களை சாகடிப்பது என்ற பினெகாஸின் வைராக்கியம் கடவுளிடமிருந்தே அவனுக்கு வந்தது. எனவேதான் அவன் கடவுளின் வைராக்கியத்தைக் கொண்ட வைராக்கியமுள்ளவன் எனப்பட்டான். பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த பக்திமானின் வைராக்கியத்திற்கு ஊற்றும் ஆதாரமுமானவர் கடவுளே. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளின் வைராக்கியத்திற்கும் கடவுளே தொடர்ந்து ஊற்றாக ஆதாரமாக இருக்கிறார்.
ஆ. இரண்டாவது, ஜெபத்திற்கான பதிலாக பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் மூலமாக கடவுள் தம்முடைய புதிய உடன்படிக்கையின் மக்களுக்கு வைராக்கியத்தைத் தருகிறார். இது குறிப்பாக பெந்தெகொஸ்தே நாளன்றும் அதனைத் தொடர்ந்தும் உண்டானது. (அப்போஸ்தலர் 1:12-14; 2:1-4; 4:31 வாசியுங்கள்). (மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 4:5 – பரிசுத்த ஆவியானவரும் அக்கினியும்).
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஓர் ஓய்வு நாள் பயணத் தொலைவிலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் தாங்கள் தங்கிய அறைக்குப் போனார்கள்; அங்கே பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். அங்கே இவர்களெல்லாரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, தொடர்ந்து ஜெபித்து வந்தார்கள். (அப்போஸ்தலர் 1:12-14)
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து திடீரென்று ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அதுமட்டுமின்றி நெருப்பு மயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்வதைக் கண்டார்கள். அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின ஈவின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத் துவங்கினார்கள். (அப்போஸ்தலர் 2:1-4)
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைக்கப்பட்டது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் துணிவோடு பேசினார்கள். (அப்போஸ்தலர் 4:31)
அந்தச் சிம்மாசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் குமுறல்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு நெருப்பு தீபங்கள் சிம்மாசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. (வெளிப்படுத்தின விசேஷம் 4:5)
இங்கு ஓர் ஒழுங்கை உங்களால் பார்க்க முடிகிறதா? ஜெபம் – பரிசுத்த ஆவியின் நிரப்புதல் – தைரியமாகப் பேசுதல். பெந்தகொஸ்தே நாளில் பேதுருவின் தைரியமான பிரசங்கம் வைராக்கியத்தினால் ஏற்பட்டது. இத்தகைய வைராக்கியமான தைரியமே இப்படிப் பிரசங்கித்த அநேகரை கிறிஸ்தவ வரலாற்றில் இரத்த சாட்சியாக மரிக்கச் செய்தது. இப்படிப்பட்ட வைராக்கியம் எங்கிருந்து வந்தது? அது பரிசுத்த ஆவியின் நிரப்புதலினால் வந்தது. பரிசுத்த ஆவியானவர் பெந்தெகொஸ்தே நாளில் ஊற்றப்பட்டபோது எப்படிக் காணப்பட்டார்? “அக்கினிமயமான நாவுகள்போல பிரிந்திருக்கும் நாவுகள்” ஒவ்வொருவரின் மீதும் வந்திறங்கின என்று வாசிக்கிறோம். இங்கே பவுல், அக்கினி என்ற பதத்தை கடவுள் வைராக்கியத்தின் மூலம் ஏற்படுகிற தைரியமுள்ள பேச்சைத் தந்த பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.
இந்த ஆக்கத்தை நிறைவுசெய்யும்படி இதிலிருந்து நாம் எந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறோம்? அப்போஸ்தலர்களின் மறைவுக்குப் பிறகு கடவுள் தொடர்ந்தும் அந்நிய பாஷைகளையும் தீர்க்கதரிசனங்களையும், அப்போஸ்தலர்களையும் திருச்சபைக்குத் தருகிறதாக நான் நம்பவில்லை. இருந்தபோதும் இந்தப்பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இருக்கத்தான் செய்கிறது. தொடர்ந்தும் நாம் பரிசுத்த ஆவியினில் நிரப்பப்பட வேண்டும் என்று வேதத்தில் சுட்டுகிறது, “தீயசெயல்களைச் செய்யத் தூண்டும் மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து.” (எபேசியர் 5:18)
அது உண்மையானால், நாம் எப்படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படப் போகிறோம்? அப்போஸ்தலர் 2 மற்றும் 4ல் திருச்சபைகள் ஏற்படுத்தப்பட்டபோது நடந்த அதேவிதமாகவே அது நிகழவேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரை அதிகமாகத் தரும்படி நாம் கடவுளிடம் கேட்கவேண்டும். இந்த விஷயத்தில் நம்மை ஊக்கப்படுத்தும்படியான ஓர் அற்புதமான வாக்குத்தத்தம் லூக்கா சுவிசேஷத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. லூக்கா 11:13 படியுங்கள்.
பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக உறுதி அல்லவா என்றார்.
(இந்த இடத்தில் இந்த ஆக்கத்தை எழுதியவர் பரிசுத்த ஆவியானவரின் செயலைப் பற்றி விளக்கும் சத்தியத்தை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும். மெய்க்கிறிஸ்தவர்களாக இருக்கும் அனைவரும் பரிசுத்தஆவியை நிரந்தரமாக இரட்சிப்பை அடையும்போது தம்மில் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரே நமக்கு மறுபிறப்பளித்து நம்மில் குடிபுகுந்து ஜீவிக்கிறார்; ஒருபோதும் பிரியாதபடி நம்மில் நிரந்தரமாக இருக்கிறார். இருந்தபோதும் ‘பரிசுத்த ஆவியை எங்களுக்குக் கொடும் ஆண்டவரே’ என்று கிறிஸ்தவர்கள் ஜெபிக்க வேண்டியதன் காரணம் அவருடைய வல்லமையை நமக்குத் தருமாறு ஆண்டவரிடத்தில் விண்ணப்பிக்கவே. ஆவியானவரைக் கொண்டிருக்கிற நாம் அவருடைய வல்லமைக்காகவும், நிரப்புதலுக்காகவும் புரிந்துகொள்ளுதலோடு உணர்வுபூர்வமாக ஜெபிக்கவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆவியானவரின் நிரப்புதலே நம்மை பக்தி வைராக்கியத்தோடு அவருக்காக செயல்பட வைக்கிறது. இதையே இந்த ஆக்கத்தை எழுதியவர் இங்கே விளக்குகிறார். – ஆசிரியர்)
நமக்கு அதிகமான கிறிஸ்தவ வைராக்கியம் வேண்டுமா? தேவையில்லை என்று சொல்லும் துணிவுள்ளவர் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது. அது ஜெபத்திற்கு பதிலளிக்கும் வண்ணமாக பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் மூலம் வருகிறது. நமக்கு அதிக வைராக்கியம் வேண்டுமா? அப்படியானால் கடவுளின் ஆவியினால் அதிகமாக நிரப்பும்படி கடவுளிடம் கேட்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். அதுவே கிறிஸ்தவ வைராக்கியத்திற்கான ஊற்றாகவும் ஆதாரமாகவும் இருக்கிறது. நமக்குத் தேவையான முழுமையான அளவிலான வைராக்கியத்தை அவரிடம் கேட்கும்படி தேவன் நம்மை ஊக்கப்படுத்துவராக.
இந்த நேரத்தில் இந்த ஆக்கத்தை நிறைவு செய்யும் வண்ணமாக, நற்செயல்களுக்கான வைராக்கியத்தோடு தொடர்பில்லாதவர்களுக்கு ஒரு வார்த்தையைக் கூறவிரும்புகிறேன். இதுவரை நான் விளக்கி வந்திருக்கும் இந்த வைராக்கியம், ஏற்கனவே ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளிலிருந்து ஆரம்பமாகிறது – ‘இயேசு தம்மைத்தாமே சிலுவையில் ஒப்புக்கொடுத்ததோடு’ என்பதே இந்த வார்த்தைகள். உங்களைக் கட்டிவைத்து கண்டனத்திற்கும், தண்டனைக்கும் உரியதாக்கியிருக்கிற பாவத்திலிருந்தும் சுயநலத்திலிருந்தும் உங்களை விடுவிப்பதும் சுத்திகரிப்பதும் கிறிஸ்துவின் சிலுவை பலி மட்டுமே. இதை எப்படி நீங்கள் அனுபவிப்பது? உங்களுக்காகத் தம்மைத்தாமே கொடுத்திருக்கிற, சிலுவையில் அறையுண்ட மீட்பரிடம் போய் அவரை முழுமனதோடு விசுவாசிப்பதினால் மட்டுமே அது உங்களுக்குக் கிடைக்கும்.
God bless you sir.Vivek.S
LikeLike