மறுபடியும் இதழ் மூலம் உங்களைச் சந்திக்க கிருபையாய் கர்த்தர் வாய்ப்பளித்திருக்கிறார். இந்த வருடம் வேகமாகப் போய்க்கொண்டிருப்பதைக் காண்கிறேன். அதற்குள் மூன்றாவது இதழ் வந்துவிட்டது. தமிழில் நம் கரத்தில் இருக்கும் வேதத்தில் காணப்படும் தவிர்க்கவேண்டிய குறைபாடுகள் பற்றியும், புதிதாக வந்திருக்கும் ஒரு மொழிபெயர்ப்பு பற்றியும் ஆராய்ந்து விளக்கியிருக்கிறேன். கிறிஸ்தவ விசுவாசத்தில் வளரவும், கிறிஸ்தவம் சிறக்கவும் நல்ல வேத மொழிபெயர்ப்பு அவசியம். திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பமான 16ம் நூற்றாண்டிலேயே வேதமொழிபெயர்ப்புப் பணியும் ஆரம்பமானது. வேதமில்லாமல் எந்தச் சீர்திருத்தத்தை சீர்திருத்தவாதிகள் செய்திருக்க முடியும்? நம்மால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் வேதம் தொடர்ந்திருக்கக் கூடாது என்ற ஆதங்கத்தால் எழுதப்பட்டிருக்கும் ஆக்கம் இது.
அத்தோடு கிறிஸ்துவின் பாவநிவாரணபலியில் உள்ளடங்கியிருக்கும் சத்தியங்களை விளக்கும் ஓர் ஆக்கமும் இதில் வந்திருக்கின்றது. நல்ல நண்பரான போதகரொருவரின் ஆக்கமான ‘பக்தி வைராக்கியம்’ நிச்சயம் உங்களுக்குப் பலனுள்ளதாக இருக்கும். அறிவுபூர்வமான, உணர்வுபூர்வமான அத்தகைய வைராக்கியம் இன்று நமக்கு அவசியம் தேவை.
இவற்றோடு திருச்சபை அங்கத்துவத்தைப் பற்றிய ஓர் ஆக்கத்தையும் இதழில் நீங்கள் வாசிக்கலாம். இந்த விஷயத்தை விளக்கும், நான் சமீபத்தில் வாசித்த இரு நல்ல நூல்கள் இதை என்னை எழுதவைத்தன. ‘அங்கத்துவம் இல்லாத திருச்சபையா’ என்ற நூலை ஏற்கனவே நான் எழுதிவெளியிட்டிருக்கிறேன். திருச்சபை அங்கத்துவம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அதைப் பெற்று வாசியுங்கள். தொடர்ந்தும் நம்மினத்துக் கிறிஸ்தவம் விடாப்பிடியாக வேதத்தைப் பின்பற்றாமல் இருந்து வருகிறதே என்ற ஆதங்கம் எனக்கு; அதிருக்கும் இதயங்களும் நம்மத்தியில் இல்லாமலில்லை. வேதத்தின் அதிகாரத்தை உணராது, அதைப்பின்பற்றுகிற இருதயமில்லாது சுயநலத்திற்காக மட்டும் வாழ்ந்து வருகிற ‘கிறிஸ்தவம்’ கிறிஸ்து உருவாக்கியிருக்கும் கிறிஸ்தவமல்ல. அத்தகைய வேஷதார கிறிஸ்தவத்தை நாம் தோலுரித்துக் காட்டுவது அவசியம். வேதத்தை வாசிப்போம்; வேதத்தை மட்டும் பின்பற்றுவோம்; வேதநாயகனான கிறிஸ்துவின் மனங்குளிரும்படி அவருடைய வருகையை எதிர்பார்த்து பக்தி வைராக்கியத்தோடு வாழுவோம். – ஆர்.