சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்

ஜொனத்தன் லீமென் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ நூலும், இதுபற்றி விரிவாக எழுதப்பட்ட அவருடைய இன்னொரு நூலும் என்னை அதிகம் சிந்திக்கவைத்தன; இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு ஒரு காரணமாக அமைந்தன. முப்பத்திஐந்து வருடங்களாக நான் திருச்சபையில் போதகப்பணியில் இருந்துவருகிறேன். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கை ஆரம்பித்த காலத்திலேயே நின்று நிலைத்துப்போன அசைக்கமுடியாத நம்பிக்கை திருச்சபை பற்றியது. அதற்கு நான் ஆண்டவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அந்த நம்பிக்கை அன்றே என்னில் ஆணிவேராகப் பதிந்திருக்காவிட்டால் இன்று என்ன செய்துகொண்டிருந்திருப்பேன் என்பதை என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. இந்த முப்பத்திஐந்து வருடகால கிறிஸ்தவ பணியில் என்னோடு நெருங்கியிருந்து உறவாடிய நண்பர்களும், அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் பழக்கமானவர்களும் அநேகர். இவர்களில் திருச்சபை பற்றிய சரியான புரிதல் இல்லாமல் கிறிஸ்தவ சாகரத்தில் என்னென்னவெல்லாமோ செய்து நீச்சலடித்துக்கொண்டிருக்கிறவர்கள் தொகை ஏராளம்.

முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன் கடைசியாக சந்தித்திருந்த ஒரு நண்பன் இத்தனைக் காலத்துக்குப் பிறகு என்னை சமீபத்தில் தொடர்புகொண்டான். அவனுக்கு அன்றே ஐ.கியூ அநாவசியத்துக்கு அதிகம். இருவரும் ஓரிடத்தில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொண்டிருந்த காலம் அது; இளமைக்காலமும் கூட. ஜோன் மெக்காத்தரின் ‘கெரிஸ்மெட்டிக்ஸ்’ நூல் வெளிவந்திருந்த வருடம். அதை வாசித்துவிட்டு துள்ளிக்குதித்துக்கொண்டிருந்தோம். அது ஏற்படுத்திய தாக்கத்தால், கெரிஸ்மெட்டிக் அற்புத வரங்கள் இன்று இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபிப்பதற்காக TDNT வால்யூம்களைப் புரட்டிப்புரட்டி telos என்ற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து வந்திருந்த காலம். எத்தனையோ இறையியல் கருத்துக்களில் எங்களிருவருக்கும் ஒத்த கருத்திருந்ததால் நெருங்கியே இருந்தோம். சூழ்நிலைமாறி ஒருவரையொருவர் பிரிந்து இன்று வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறோம். அவன் தானிருந்த சபையைவிட்டுப் போய் என்னென்னவெல்லாமோ செய்து இன்றைக்கு கூடில்லாக்குருவியாக தனக்கென ஒரு நிறுவனத்தை அமைத்து கிறிஸ்தவ பணிபுரிந்து வருகிறான். இன்றும் விசுவாசியாக இருந்தபோதும் திருச்சபை பற்றிய அவனுடைய எண்ணங்கள் என்னைப் பொறுத்தவரையில் வேதபூர்வமானதாக இல்லை. அவனுக்கு அது ஒன்றும் பெரிதல்ல. ‘இன்னும் தொடர்ந்து கிறிஸ்தவனாகத்தான் இருக்கிறேன், கிறிஸ்துவுக்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், சபைத்தொடர்பும் இருக்கத்தான் செய்கிறது’ என்பதுதான் அவனுடைய சிந்தனையாக இருக்கிறது. இது ஒன்றும் அவன் மட்டும் எடுத்திருக்கும் நிலைப்பாடல்ல. கிறிஸ்தவ சமுதாயத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த எண்ணங்களோடேயே வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவை விசுவாசித்து ஏதோவொருவிதத்தில் எதைச்செய்தாவது கிறிஸ்தவ ஊழியம் செய்தால்போதும் சபையென்றெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளக்கூடாது என்பதுதான் இவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. இவர்கள் சபையை வெறுக்கவில்லை; சபையை அடியோடு ஒதுக்கவில்லை. ஆனால், திருச்சபை பற்றிய போதனைகளை முறையாக அறிந்திராது தங்களுடைய சிந்தனை வழிநடத்துகிறபடியெல்லாம் நடந்துவருகிறார்கள்; அதில் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார்கள். இந்த வார்த்தைகளை எழுதுகிறபோது எனக்கு நியாயாதிபதிகள் நூலில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. ‘அந்நாட்களில் இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்’ (நியாயாதிபதிகள் 21:25).

சமீபத்தில் நான் சந்தித்த ஒருவர் ஒரு கோப்பை என் கையில் தந்து நேரமிருக்கும்போது வாசித்துப் பாருங்கள் என்றார். அதை நான் வாசித்துப் பார்த்தேன். அவர் ஒரு கிறிஸ்தவர். தன் கைப்பணத்தையும் அங்குமிங்கும் இருந்து பெற்றுக்கொள்கிற பணத்தையும் கொண்டு பல இடங்களில் இருக்கும் போதகர்களுக்கு (அவர்கள் எதை விசுவாசிக்கிறார்கள் என்பதில் அக்கறை காட்டாமல்) பண உதவிசெய்து, அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்குப் போய்பேசியும் ஜெபித்தும் வருகிறார். இப்படித் தனக்கென எவருக்கும் எதற்கும் கணக்குக்கொடுக்கத் தேவையில்லாத ஒரு சொந்த ஊழியத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததடவை அவரை சந்தித்தபோது இதை எனக்கு ஏன் கொடுத்தீர்கள் என்பது தெரியவில்லை, இருந்தாலும் நீங்கள் எந்த சபையைச் சேர்ந்தவர், போதகரா? என்று கேட்டுவைத்தேன். நான் ஒருசபையிலும் இல்லை, போதகனும் இல்லை என்று அவர் பதில் தந்தார். அப்படியானால் நீங்கள் செய்கிற காரியங்களைச் செய்வதற்கு வேதத்தில் அனுமதியோ ஆதரவோ இல்லையே என்று கேட்டுவைத்தேன். அவர் அதற்கு, தான் நல்ல சமாரியனைப்போல இருந்து ஊழியம் செய்கிறேன் என்றார். நல்ல சமாரியன் கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்துப் பார்த்தபோது எனக்குத் தலைசுற்றல் வந்துவிடும்போலிருந்தது. இதுதான் இன்றைய நிலைமை.

திருச்சபை பற்றிய விஷயத்தில் அநேகர் வேதஞானத்தோடு நடந்துகொள்ளாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

(1) சபை பற்றிய இறையியல் அறிவின்மை – ஒரு முக்கிய காரணம் திருச்சபை பற்றிய வேத இறையியல் விளக்கங்களை சரிவரப்புரிந்துகொள்ளாமல் இருப்பது. இறையியலில் சபையைப்பற்றி விளக்குகிறபோது அதை இரண்டுவிதமாக பொதுவாக விளக்குவார்கள். அதாவது கண்களுக்குப் புலப்படாத சபை (Invisible), உள்ளூர் சபை (Local) என்று பிரித்து விளக்குவார்கள். இப்படி விளக்குவது பல்வேறு காரணங்களுக்காக அவசியமாகிறது. இந்தப்பதங்கள் எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை சரிவரப் புரிந்துகொள்ளாவிட்டால் தவறிழைக்க நேரிடும். முதலில், இந்தப் பதங்கள் இரண்டு சபைகள் இருப்பதாக நமக்குக் காட்டவில்லை; சபை ஒன்றே. இயேசு தன்னுடைய ஒரே சபையைத் தான் இந்த உலகத்தில் ஏற்படுத்தி தொடர்ந்து போஷித்து வருகிறார். இரண்டாவதாக, கண்களுக்குப் புலப்படாத சபை என்பது கண்ணால் காணமுடியாத சபை என்று முடிவுசெய்யக்கூடாது. சபை ஒருபோதும் கண்ணால் காணமுடியாமல் இருக்கமுடியாது. 115 தடவைகள் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சபை என்ற வார்த்தை கண்ணால் காணமுடியாதது என்ற அர்த்தத்தில் ஒரு தடவையாவது பயன்படுத்தப்படவில்லை. இது மிகவும் தவறான கருத்து. ஆங்கிலத்தில் சபையைக் குறித்து விளக்குவதற்காக Invisible என்ற வார்த்தையை இறையியலறிஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் அதைக் கண்ணால் காணமுடியாத ஒரு சபை இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஆண்டவருடைய சபையாகிய விசுவாசிகளின் ஆவிக்குரிய பிறப்பைப் பொறுத்தவரையில் அது கண்ணால் பார்க்கமுடியாத ஆவியின் செயல் என்ற அர்த்தத்தில் விசுவாசிகளின் ஆவிக்குரிய தன்மையை விளக்க மட்டுமே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விஷயம் தெரியாதோர் தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். சீர்திருத்த இறையியல் வல்லுனரும் பேராசிரியருமான ஜோன் மரே சபையைக் குறித்து Invisible என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை விரும்பவில்லை. சபை என்ற பதம் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அர்த்தத்தின் அடிப்படையில் மட்டுமே உலகளாவிய சபை என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கும் விளக்கம் கொடுக்க வேண்டும். சபை எப்போதும் கண்ணால் காணக்கூடியதாக, விசுவாசிகளைக் கொண்டு கூடிவருகின்ற அமைப்பாக மட்டுமே வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய சபை உலகமெங்கும் காணப்படும் உள்ளூர்சபைகளின் தொகையாக மட்டுமே இருக்க முடியும்; அது வேறுவிதத்தில் இருப்பதற்கு சபை என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மெய்யான அர்த்தம் இடம்கொடுக்கவில்லை.

(2) சபையில்லாமல் வாழ எத்தனிக்கும் துணிவு – சபையில்லாமல் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவர்கள் சபையைச் சேர்ந்தவர்கள் இல்லையா? என்று சிலர் துடிப்போடு கேட்பார்கள். இந்தக் கேள்வி எழும்பும் என்பது எனக்குத் தெரியாதல்ல. இப்படிப்பட்டவர்களை சிந்திக்க வைக்கத்தானே இதை எழுதியிருக்கிறேன். இவர்களுடைய எண்ணத்தில் சபை என்பது, இவர்களுடைய கற்பனையில் உலவிவரும் கண்ணால் காணமுடியாத சபை. உண்மையில் அப்படியொன்றில்லை; இருந்து அதில் அங்கத்தவர்களாக இருப்பதாக எண்ணி இவர்கள் வாழ்கிறார்கள். உள்ளூர் சபையில்லாமல் வாழமுடியும் என்று இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? சபையில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கடைசிவரை நடத்திவிடலாம், பரலோகம் போய்விடலாம் என்று வேதம் எந்த இடத்தில் விளக்குகிறது? காட்டுங்கள் பார்க்கலாம். இவர்கள் தாங்களே உள்ளூர்சபை தேவையில்லை என்று தனிப்பட்ட சுயநல காரணங்களுக்காக முடிவுகட்டிவிட்டு, தங்களைக் கிறிஸ்தவர்களாக அழைத்துக்கொண்டு சபையில்லாமல் வாழ்ந்து இந்தக் கேள்வியை ஆணவத்தோடு கேட்கிறார்கள். வேதம் மட்டுமே நமக்கு அதிகாரம்; வேதம் இதுபற்றி விளக்குகிற உண்மைகளே இந்த விஷயத்தில் இறுதி முடிவாக இருக்க முடியும். எனக்குத் தெரிந்து வேதத்தில் வெளிப்படையாக உள்ளூர் சபையில் அங்கத்துவம் இல்லாமல் வாழ்ந்த விசுவாசி இயேசுவுக்குப் பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்டிருந்து கடைசி நேரத்தில் மனந்திரும்பி இயேசுவோடு பரலோகம் போனவன் மட்டுமே. அப்போஸ்தலருடைய நடபடிகள் 8ம் அதிகாரத்தில் வரும் எத்தியோப்பிய மந்திரி விசுவாசத்தை அடைந்து பிலிப்புவிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டான். சபைபற்றிய வேறு விபரங்களை அந்தப் பகுதி தரவில்லை என்பதற்காக அவன் சபையில்லாமல் வாழ்ந்தான் என்ற தவறான முடிவுக்கு வரமுடியாது. அந்தப் பகுதி அவனுடைய விசுவாசம் எத்தகையது என்பதைச் சொல்லுவதோடு மட்டுமே நின்றுவிடுகிறது; அது விளக்கியிருப்பதற்கு மேல் அதில் வேறு எதையும் பார்ப்பதும், திணிப்பதும் வேதம் அறியாதவர்கள் செய்கிற செயல். சபையைப் பற்றி விளக்குகின்ற அத்தனைப் பகுதிகளையும் வைத்தே சபை பற்றிய உண்மைகளைத் தீர்மானிக்கவேண்டும். சரி சபையில்லாமல் வாழ்கிறவர்கள் கிறிஸ்தவர்களா? அந்தக் கேள்விக்கு அவர்கள் தங்களுடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்து பதில் தேடவேண்டும். கிறிஸ்துவை நேசிக்கிறேன் என்று சொல்லுகிறீர்களே, அந்தக் கிறிஸ்து நேசித்து துன்பப்பட்டு உயிரையே கொடுத்திருக்கும் அந்தச் சபையில்லாமல் வாழத்துடிக்கிற உங்களுடைய விசுவாசம் கிறிஸ்தவ விசுவாசமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. அது உண்மையான விசுவாசமாக இருந்தால் நிச்சயம் கிறிஸ்துவைப்போல அவருடைய சபைக்கு உயிரைப் பணயம் வைக்கத் துடிக்கிற விசுவாசமாக அது இருக்கும்; சுயநல நோக்கங்களுக்காக சபையில்லாமல் வாழ்ந்து வருகிற விசுவாசமாக அது இருக்காது.

(3) பிரச்சனைகளைக் காரணம் காட்டி சபை வாழ்க்கை இல்லாமல் இருப்பது – சிலர், வேலை, குடும்பப்பிரச்சினை, பண்பாடு, வீட்டில் எதிர்ப்பு, தூரம், ஞாயிறுதினத்தில் வேலை, அறியாமை என்று பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லி சபையில்லாமல் வாழ்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு இவர்களுக்கு சபை வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையில் அவசியமற்றதாகப் போய்விட்டிருக்கிறது. கிறிஸ்தவ சீடத்துவம் பற்றிய எந்த சிந்தனையும் இவர்களுக்கில்லாமலிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதாது; அந்தக் கிறிஸ்து நேசிக்கும் சபைக்கு விசுவாசமாக இருந்து அவருடைய சீடனாக சபை வாழ்க்கையை நடத்தவேண்டும் என்று கிறிஸ்துவே வேதத்தில் விளக்குகிறாரே. வேறுசிலர் கிறிஸ்தவ தலைவர்களின் ஒழுக்கக்கேடான வாழ்க்கையைக் காரணங்காட்டி சபையில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். தவறான ஊழியர்களின் வாழ்க்கை முறைக்குக் காரணம் கிறிஸ்துவின் சபையல்ல; வேஷதாரி ஊழியங்களும், மனிதனின் பாவமுமே. இதற்காக கிறிஸ்துவின் சபையை நிராகரிப்பதால் எந்தப் பயனுமில்லை. கிறிஸ்துவின் சபையில் வாழ்ந்து மட்டுமே அநுபவிக்கக்கூடிய சபை அங்கத்துவம், திருமுழுக்கு, திருவிருந்து, வேதப்பிரசங்கம், போதகக் கண்காணிப்பு, சீடத்துவம், ஐக்கியம் அனைத்தும் இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ முயற்சி செய்வது கிறிஸ்துவை நிந்திக்கின்ற ஆணவச்செயல். சிலுவையை சுமந்து அவரைப் பின்பற்றுவதற்குத் துணைபோகாத ‘விசுவாசம்’ மெய்விசுவாசமாக இருக்கமுடியாது. சபை வாழ்க்கை இல்லாமல் கிறிஸ்தவனாக வாழ்ந்து நல்ல குடும்பவாழ்க்கையையும் அமைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள்தனமான செயல்.

(4) ‘சபை’ என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் ஆத்மீகக்குழப்பம் – சபை வாழ்க்கையை இந்தளவுக்கு உதாசீனப்படுத்தி அநேகர் வாழமுயல்வதற்கு ‘சபை’ என்ற பெயரில் இருந்துவரும் அமைப்புகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அதாவது சபை என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு சபைக்குரிய எந்த அமைப்பையும், இலக்கணத்தையும் தன்னில் கொண்டிராமல் இருந்து வரும் அமைப்புகளையே இங்கே குறிப்பிடுகிறேன். இவற்றில் பெரும்பாலானவைகளுக்கு வேதம் போதிக்கும் சபையைப் பற்றிய உண்மைகள் தெரியாது. அப்படியே ஓரளவுக்குத் தெரிந்திருப்பவைகளும் அவற்றை நடத்திவருகிறவர்களின் சுயநல நோக்கங்களினால் சபையாக அமைய முடியாமல் இயங்கி வருகின்றன. சரியான பக்திவிருத்தியுள்ள தலைமையையும், கட்டுக்கோப்புள்ள சபை அமைப்பையும், அங்கத்துவத்தையும், சபை ஒழுங்கையும், விசுவாச அறிக்கையையும், ஆத்தும விருத்தியையும் நோக்கமாகத் தன்னில் கொண்டிராமல் ‘சபை’ என்ற பெயரில் காளான்கள்போல் தனிநபர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கொண்டு தனித்தியங்கும் இத்தகைய குழுக்கள் பட்டிதொட்டியெல்லாம் இருந்துவருகின்றன. இதற்குள் எவரும் போகலாம்; எதுவும் செய்துகொள்ளலாம். கேட்டவர்களுக்கெல்லாம் இங்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படும். ஞானஸ்நானம் மட்டுமே அங்கத்தவத்துக்கு அடையாளமாக இங்கு கருதப்படுகிறது. எந்தவித அங்கத்துவ விசாரணையையோ, சபை பற்றியும், அங்கத்துவம் பற்றியும் எந்தவிதப் போதனைகளையும் இவை வழங்குவதில்லை. இவற்றில் சபைக்கூட்டங்களைப் பார்க்கமுடியாது. வேதபூர்வமாக ஆராய்ந்து ஆத்துமாக்களால் நியமிக்கப்பட்ட மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் காணமுடியாது. இவற்றை ஆரம்பித்து வைத்த தனிநபர்களும் அவர்களுடைய குடும்பங்களுமே அதிகாரிகளாக எப்போதும் இவற்றை நிர்வகித்து வருவார்கள். முக்கியமான ஓரிருவர் அல்லது அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டிகள் எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும் காரணமானவர்களாக இருப்பார்கள். அத்தோடு திருவிருந்தைக் கலியாணவிருந்துபோல் வருகிறவர், போகிறவருக்கெல்லாம் கேள்விமுறையில்லாமல் கொடுக்கின்ற ஒரு வழக்கத்தையும் இவைகள் கொண்டிருக்கும். உண்மையில் கலியாணவீட்டில்கூட கண்டவர்களையும் தெரிந்து சாப்பிட அனுமதிக்கமாட்டார்கள்; இந்த அமைப்புகள் அதைவிட மோசமான நிலையில் இன்றிருக்கின்றன. ‘சபை’ என்ற பெயரில் காணப்படும் இத்தகைய குழுக்கள் வேதம் போதிக்கும் திருச்சபையை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளாதபடி செய்து அவர்களையும் சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக நடக்க வழியில்லாதபடி செய்திருக்கின்றன. இருந்தும் இந்த அமைப்புகள் தங்களை சபையாகக் கருதி அந்தப்பெயரிலேயே தங்களை இனங்காட்டி ஆத்துமாக்களை உண்மையறியாத, அறிந்துகொள்ள வழியில்லாத ஆத்மீகக் குழப்பத்தில் வைத்திருக்கிறார்கள்.

(5) கூடில்லாக் குருவிகளான கிறிஸ்தவ நிறுவனங்கள் – என் வாழ்க்கையின் அரைவாசிப் பகுதி கிறிஸ்தவ அனுபவத்தை அடைந்து அதில் தொடர்வதாக இருக்கிறது. கிறிஸ்தவனாக வந்த காலத்தில் இருந்தே திருச்சபைக்கு பேராபத்தாக நம்மினத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் இருந்துவருவதை நான் அவதானித்து வந்திருக்கிறேன். நிறுவனங்கள் தங்களுடைய சுயலாபத்துக்காக ஆத்துமாக்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு சபைவாழ்க்கையை இல்லாமலாக்கி விடுகின்றன. பாரம்பரிய சபைகளுக்கு மட்டும் ஒத்தூதி, வேத அடிப்படையில் ஊழியப்பணிபுரியும் சபைகளை உதாசீனம் செய்துவிடுகின்றன. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இளமையில் இந்த நிறுவனங்களின் வலையில் விழுந்து இன்றுவரை உறுதியான சபைவாழ்க்கையையும், சீடத்துவத்தையும் அடையாமல் வாழ்ந்துவருகிறவர்கள் என் மனக்கண்ணில் வந்துபோகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கட்டுக்கோப்போடு இருந்து வேதத்தை மட்டும் நம்பிப் பிரசங்கம் செய்து வளர்ந்து வருகின்ற சபைகள் போன்ற மாதிரி சபைகள் நம்மினத்தில் இந்த நிறுவனங்களை சமாளிக்கும் விதத்தில் என்றுமே இருந்ததில்லை. ஒன்றில் ‘லிபரல்’ பாரம்பரிய சபைகள், இல்லாவிட்டால் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து சத்தியத்தைப் புறக்கணிக்கும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் சபைகள்தான் இருந்தன. இவற்றிற்கு இடையில் தரம்வாய்ந்த நல்ல சபைகள் உருவாகி ஆத்துமாக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் நாடிவரும்படியாக அமையவில்லை. அங்குமிங்குமாக சிறு சபைகள் எழுந்தபோதும் அவை சபை அமைப்பையும், உறுதியான சபை அங்கத்துவத்தையும், விசுவாச அறிக்கைகளையும் கொண்டமையவில்லை. அவற்றின் தலைவர்கள் பக்திவிருத்தியோடு உறுதியான தலைமைத்துவத்தைத் தரத்தவறிவிட்டார்கள். சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளினதும், தலைமைத்துவத்தின் எதேச்சாதிகாரப் போக்கும் அநேக வாலிபர்களைத் தூரத்தில் நிற்கவைத்துவிடுகிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் தொடர்ந்து நம்மினத்துக் கிறிஸ்தவ சூழலை ஆக்கிரமித்து சபைக்கு எதிரியாகவே இயங்கிவருகின்றன.

மேல்வரும் காரணங்கள் திருச்சபை பற்றிய நல்லறிவை ஆத்துமாக்கள் பெற்றுக்கொள்ளவும், திருச்சபைகள் நல்லவிதத்தில் அமையவும் பெருந்தடையாக இருந்துவிடுகின்றன. வேதம் போதிக்கும் சத்தியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விசுவாசிகளைக் கூட்டி சபை அமைப்பையும், அங்கத்துவ முறையையும், போதகக் கண்காணிப்பையும், ஒழுங்கு நடவடிக்கையையும், ஓய்வுநாள் அனுசரிப்பையும், நம்பக்கூடிய நல்ல தலைமையையும் கொண்டு இயங்க ஆரம்பித்திருக்கும் சில திருச்சபைகளை கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் நம்மினம் கண்டுவந்திருக்கின்றது. மாபெரும் கிறிஸ்தவ சாகரத்தில் இவை நீச்சலடிக்கும் சிறு மீன்கள் மட்டுமே. இருந்தாலும் திருச்சபை பற்றிய நம்பிக்கையைக்கொண்டு வைராக்கியத்தோடு இயங்கி வரும் இவையே வருங்காலத்துக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியும். இவை சந்திக்கவேண்டிய போராட்டங்களும், முகங்கொடுக்க வேண்டிய இடர்பாடுகளும் நம்மினத்தில் அநேகம். இருந்தாலும், ‘என் சபையைக் கட்டுவேன்’ என்ற கிறிஸ்துவின் உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்து இருதயத்தைப் பாதுகாத்து இவை தொடர்ந்து திருச்சபைப் பணியை முன்னெடுக்குமானால் எதிர்காலம் நன்றாகத்தான் இருக்கும்.

மேலை நாடுகளில் எந்தவகை அமைப்புகளுக்கும் எதிரான மனப்பான்மை (Anti-institutionalism) சமுதாயத்தில் தலையெடுத்து இன்று கிறிஸ்தவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகிறது. அதிகார அமைப்புகளை எதிர்ப்பதும், தனக்காக மட்டும் வாழும் பின்நவீனத்துவ சிந்தனையும் சமுதாயத்தில் குடிகொண்டிருக்கிறது. இவை கிறிஸ்தவர்களையும் பெருமளவுக்குப் பாதித்திருக்கிறது. இந்த மனப்பான்மையால் ‘அமைப்பில்லாத திருச்சபை’யை நாடுகின்ற கிறிஸ்தவ கூட்டம் அங்கே வளருவதைக் காண்கிறோம். மேலைத்தேய சமுதாயம் திருச்சபை வாழ்க்கையை வரலாற்றில் அறிந்து அனுபவித்துவிட்டு இன்று அதைத்தூக்கியெறிந்துகொண்டிருக்கிறது. நம்மினத்திலோ விஷயமே வேறு. திருச்சபை பற்றிய போதனையையே அறியாமலும், அனுபவத்தில் ருசிபார்க்காமலும் அரைகுறை கிறிஸ்தவ அறிவைக்கொண்டிருந்து சுயநலத்துக்காக ‘சபை’ என்ற பெயரில் ஆத்மீகப் பணிசெய்யப் புறப்பட்டிருப்பவர்களைத்தான் இங்கு காண்கிறோம். அறியாமையும், சுயநலமும், சுயலாபமுமே நம்மினத்தில் திருச்சபை அமைவதற்குப் பெருந்தடையாக இன்றும் இருந்துவருகின்றன. இந்த நிலைமை மாறவும், திருச்சபை நம்மினத்தில் வேதபூர்வமாக அமைவதற்கும் என்ன வழி?.

வேதப்பூர்வமாக திருச்சபைகள் அமைய வேண்டிய விதம்

‘சபையை உன் தாயாக நீ எண்ணாவிட்டால் கடவுளை உன் ஆண்டவராகக் கொண்டிருக்க முடியாது’ என்று சபைப்பிதாக்களில் ஒருவரான சிப்பிரியன் சொல்லியிருக்கிறார். ஜோன் கல்வின் சொல்லுகிறார், ‘கர்த்தர் தன்னுடைய குழந்தைகளை சபையின் மார்பில் அரவணைத்து வைத்திருக்கிறார். அவளுடைய ஊழியத்தினாலும் உதவிகளினாலும் பிள்ளைப்பருவத்தில் அவர்கள் போஷிக்கப்படுவதற்காக மட்டுமல்ல, வளர்ந்த பின்னும் அவளுடைய தாய்ப்பாசத்தினாலும், அக்கறைகொண்ட கவனிப்பினாலும் அவர்கள் முதிர்ச்சி அடைந்து தங்களுடைய விசுவாசத்தின் இலக்கை அடைவதற்காகவும் சபையாகிய தாய் அவர்களைத் தன் நெஞ்சில் வைத்திருக்கிறாள்’ என்கிறார். சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் இந்தளவுக்கு திருச்சபையை அறிந்துவைத்திருந்தார்; அதற்கு மதிப்பளித்திருக்கிறார். இதைப் பெருமளவுக்கு அறியாமலும் உணராமலும் இன்றுவரையில் இருந்து வருகிறது நம்மினம்.

இதற்கு முன் வந்த ஆக்கத்தில் சபை அங்கத்துவம் என்பது இல்லாமலேயே திருச்சபை அமைக்க முற்படும் சிரிப்புக்கிடமான செயலைப்பற்றியும், அது இல்லாமலேயே சபை என்ற பெயரில் இயங்கிவரும் அநேக அமைப்புகளுக்குமான காரணங்களை விபரமாகக் கவனித்திருக்கிறோம். இந்த நிலைமை மாறவும், திருச்சபை நம்மினத்தில் வேதபூர்வமாக அமைவதற்கும் என்ன வழி? கீழே படிப்படியாக நான் விளக்கப்போகிற வேதம் போதிக்கும் ஏழு அம்சங்களை நம்மினத்தை மனதில்வைத்தே எழுதியிருக்கிறேன்.

(1) முதலில், திருச்சபை பற்றிய வேதபூர்வமான தெளிவான போதனைகள் நம்மத்தியில் இன்று அவசியமாகத் தேவைப்படுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே அத்தகைய போதனைகள் தெளிவான முறையில் நம்மினத்தில் கொடுக்கப்படவில்லை. சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்பதில் நம்மக்களுக்கு இருக்கின்ற ஆர்வம் அதன் இறுதி இலக்கான திருச்சபை பற்றியதில் என்றுமே இருந்ததில்லை; இப்போதும் இல்லை. எனவே திருச்சபை என்ற பெயரில் தங்களுடைய மனதில்பட்டதைச் செய்வதும் அல்லது நிறுவனங்களை அமைத்து ஊழியம் செய்வதும் இன்றுவரை நம்மினத்தில் தொடர்கின்றது. எனவே திருச்சபை பற்றிய போதனைகள் தெளிவாகக் கொடுக்கப்படாதவரையிலும், அதுபற்றி விளக்கும் நூல்கள் எழுதப்பட்டு பரவலாக ஆத்துமாக்களைப் போய்ச்சேராதவரையிலும் நிலைமை மாறுவது கடினமே. சீர்திருத்தப் போதனைகளில் நாட்டம் காட்டி வருகிறவர்கள் மத்தியிலும்கூட இன்றும் திருச்சபை வேதபூர்வமான முறையில் அமைக்கப்படாமலிருக்கின்றன. ஒரே போதகரோ அல்லது அவருடைய குடும்பம் போப்புப்போல இருந்து செயல்பட்டு வருவதோடு, அங்கத்துவ அமைப்புக்கோ, சபைக்கூட்டங்களுக்கோ இடங்கொடுக்காது கமிட்டிகள் அமைத்து சபை நடத்திவருகின்ற அமைப்புகளாகவே அவை இருந்துவருகின்றன; நிச்சயம் ஓரிரு விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்யும். அனுபவத்தில் அறிந்துவைத்திருப்பதைத்தான் இங்கே சொல்லுகிறேன். உள்ளூர் சபை போதகர்களோ, உதவிக்காரர்களோ அங்கத்துவ அமைப்போ இல்லாமல் ஒரே போதகரின்கீழ் இருபது முப்பது வருடங்கள் இருந்து வருகின்ற வேதஆதாரமற்ற செயல்கள் கேட்பாரின்றி இன்றும் தொடருகின்றன. இதையும்விட உள்ளூர் சபை என்ற பெயரில் இருக்கும் பத்து இருபது அமைப்புகள் ஒரே மனிதனின் ஆட்சியின் கீழ் எந்தப் போதகரையும், சபை அமைப்பையும் கொண்டிராமல் இயங்கிவரும் அலங்கோலமும் நம்மினத்தில் தொடர்கின்றது. ஏன் என்று கேட்டால் நம்பக்கூடிய தலைவர்கள் அவற்றைக் கொண்டு நடத்துவதற்கு இல்லை என்று பதில் கிடைக்கும். நம்பக்கூடியவர்களை இவர்கள் ஏன் தயார்செய்வதில்லை என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியவில்லை. இதெல்லாம் எதைச் சுட்டுகிறது? வேதம் தெளிவாகப் போதிக்கும், கர்த்தர் நேசிக்கின்ற திருச்சபை பற்றி இருந்து வரும் பெரும் அறியாமையைத்தான்.

முறையாக வேதபூர்வமாக அமைக்கப்பட்டிருக்கும் திருச்சபைகளில் இருந்து வளர்ந்து அனுபவம் பெறாதவர்களே நம்மினத்தில் இருந்து வரும் அநேக போதகர்கள். இதுவும் திருச்சபை ஒழுங்கற்று காணப்படுவதற்கு பெருங்காரணம். டாக்டர் ஒருவர் செயல்முறை அனுபவம் இல்லாமல் டாக்டராக முடியாது. வைத்தியசாலையில் நர்சாக இருக்கும் ஒருவர் அதில் அனுபவம் இல்லாமல் அந்தப்பணியைச் செய்ய முடியாது. அதேபோல்தான் இன்ஜினியர் வேலை செய்கிறவர்களும், மின்சாரத்துறையில் பணிபுரிகிறவர்களும். ஆனால், போதகப்பணி ஒன்றுதான் நம்மினத்தில் எந்தச் செயல்முறை அனுபமும் இல்லாமல் பெருந்தொகையானவர்கள் செய்துவருகிற பணியாக இருக்கிறது. கர்த்தர் அழைத்திருக்கிறார் என்ற அவர்களுடைய பேச்சைச் தவிர வேறு எந்தவிதமான இலக்கணங்களும் அவர்களுக்கு இருப்பதில்லை. ஆவிக்குரிய பணிக்கு அனுபவம் தேவையில்லை என்ற அதிகப்பிரசங்கித்தனமான எண்ணமும் இதற்குக் காரணமோ தெரியவில்லை. மேலைநாட்டுத் திருச்சபைகளில் திருச்சபை அனுபவம் இல்லாதவர்களை போதகர் பணிக்கு சபைகள் நியமிப்பதில்லை. எனக்குத் தெரிந்த ஒரு தமிழ் சபையில் வெறும் உலக வேலை செய்துவந்த ஒருவன், இந்துவாக இருந்து கிறிஸ்தவனாக மாறி வைராக்கியமுள்ளவனாக இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக போதக ஊழியத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறான். இதைப்போன்ற கொடுமை இருக்கமுடியாது. வேத ஞானமோ, பிரசங்க வரமோ, இறையியல் பயிற்சியோ, போதகப் பயிற்சியோ, ஆத்துமாக்களோடு பழகி வழிநடத்தும் அனுபவமோ எதுவுமே இல்லாமல் வெறும் பிணி தீர்க்கும் ஜெபக்கூட்டத்தை வாரத்துக்குப் பல தடவைகள் நடத்தி வருவதைத் தவிர இந்த மனிதனால் எதுவுமே செய்யமுடியாது. உண்மையில் அதைத்தான் அவர் செய்துவருகிறார். தமிழினத்தைப் பிடித்திருக்கின்ற இத்தகைய ஆவிக்குரிய பின்னடைதலை எந்தப்பெயரில் அழைப்பது?

இன்றைக்கு திருச்சபை பற்றி தமிழில் விளக்கும் நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பவையும் வேதபூர்வமான விளக்கங்களை அளிப்பதில்லை. போதகர்கள் என்ற பெயரில் பணிசெய்து வருகிறவர்களும் அதுபற்றித் தெரிந்திருந்தாலும் அந்தப் போதனைகளைக் கொடுக்கமாட்டார்கள். பொதுவாகவே அதைக் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணம் தன்னலந்தான். உண்மை தெரிந்துவிட்டால் ஆத்துமாக்கள் தொல்லை செய்வார்களே என்ற பயந்தான். அல்பர்ட் என். மார்டின் எழுதி நாம் தமிழில் வெளியிட்டுள்ள ‘அழிவில்லாத ஆத்தும ஆலோசனைகள்’ என்ற நூல், அவருடைய பல்லாண்டுகால வாழ்நாள் திருச்சபைப் பணியின் பிரதிபலிப்பாக இருக்கிறது. திருச்சபை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அதில் தெரிவித்திருக்கிறார். சுவிசேஷம், கிறிஸ்தவ வாழ்க்கை என்பதில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பு, திருச்சபை வாழ்க்கை என்பது பற்றியும் எழுதியிருக்கிறார். இது பலதடவை வாசித்துப் பயன்படுத்தப்பட வேண்டிய நூல். தன்னலம் இல்லாத திருச்சபை பற்றிய உண்மையான வாஞ்சையுள்ளவர்களே இதைப் பயன்படுத்திக் கொள்ளுவார்கள். இது தவிர பல வருடங்களுக்கு முன் நான் எழுதி ஒரு நூலை வெளியிட்டேன். அது இப்போது அச்சில் இல்லை. அதை மேலும் விபரமாக விளக்கி எழுதி வெளியிடும் நோக்கமிருக்கிறது. ஒரு சபை எந்தப் பிரிவைச் சேர்ந்ததாக, அதாவது பாப்திஸ்து அல்லது பிரஷ்பிடீரியன் பிரிவுள்ளதாக இருந்தாலும் திருச்சபை அங்கத்துவம், பரிசோதித்து நியமிக்கப்பட்ட பக்திவிருத்தியுள்ள தலைமைத்துவம், ஒழுங்குக் கட்டுப்பாடு, இவற்றையெல்லாம் கொண்ட அமைப்பு ஆகியவற்றில் தெளிவில்லாமலும் அவற்றைக் கொண்டதாக இல்லாமலும் இருக்குமானால் அவற்றை நம்பி அவற்றோடு நாம் பாதுகாப்பான உறவுவைத்துக்கொள்ள முடியாது. திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்து வாழ்வதை நாம் ஒப்புக்கொள்ளுவோமா? மாட்டோம். அவர்கள் என்ன சாக்குப்போக்குச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளுவோமா? மாட்டோம். இது தவறானால், வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய அத்தனையையும் ஓரங்கட்டிவிட்டு சபை ஊழியம் என்ற பெயரில் நடத்திவருவதையெல்லாம் எப்படி நியாயமானவையாகக் கருதி அங்கீகரிப்பது? ஆவிக்குரிய அத்தனையையும் ஆராய்ந்து மெய்யானதாகக் காட்டுவதற்காகத்தான் கர்த்தர் நமக்கு வேதத்தைத் தந்திருக்கிறார். அந்தத் தெய்வீக வேதம் போதிக்கின்றவற்றைத் தன்னில் கொண்டிராத ஊழியங்கள் எப்படி மெய்யானதாக, ஆவிக்குரியதாக இருந்துவிட முடியும்?

(2) ஆவிக்குரியவனாய், சத்தியமறிந்தவனாய், தன்னலமற்றவனாய், வேதத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற, ஏற்கனவே பரிசோதித்தறியப்பட்ட நல்ல ஊழியர்கள் உருவாக்கப்பட வேண்டும். 1 கொரிந்தியர் 12லும், ரோமர் 12லும், எபேசியர் 4லும் திருச்சபைக்கு வரங்களை அளிப்பதாக கிறிஸ்து விளக்குகிறார். அவரால் எழுப்பப்படாதவர்கள் அவருடைய பணியைச் செய்யமுடியாது; செய்யவும் கூடாது. இன்றைக்கு, ஆண்டவர் என்னோடு பேசியிருக்கிறார், ஊழியம் செய்ய அழைத்திருக்கிறார் போன்ற அசட்டுப்பேச்சுக்களுக்கு எல்லையில்லை. இது கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன கதை. பேசுகிற ஆண்டவர் வேதத்தின் மூலம் மட்டுமே இன்று வழிகாட்டுகிறார் என்பதை ஆணித்தரமாக நம்புகிறவன் நான். அப்படியில்லாவிட்டால் அவர் வேதத்தைத் தராமலேயே இருந்திருப்பார். வேதத்திற்கு இருதயத்தைத் தரமறுக்கிறவர்கள் கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கமுடியாது. வேதகிறிஸ்தவம் இன்று தேவையாக இருக்கிறது; வேதகிறிஸ்தவர்களாக நாம் இருக்கவேண்டும். இயேசு எழுப்புகிற ஊழியப்பணியாளர்கள் தங்களைத் தாங்களே ஊழியர்களாக அறிவித்துக்கொள்ளவோ, அந்தப்பணியில் நியமித்துக்கொள்ளவோ கூடாது. அது வேதம் போதிக்காத செயல்முறை. இயேசு எழுப்பும் ஊழியப்பணியாளர்கள் 1 தீமோத்தேயு 3ம், தீத்து 1ம் விளக்குகின்ற இலக்கணங்களை வாழ்க்கையில் கொண்டிருந்து ஆத்துமாக்கள் முன் அவற்றை வெளிப்படுத்தி வாழ்ந்துகாட்டியவர்களாக இருக்கவேண்டும். அத்தகையவர்கள் திருச்சபையால் தெரிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய இலக்கணங்களை இயேசு பவுல் அப்போஸ்தலன் மூலம் கொடுத்திருப்பதற்குக் காரணமென்ன? நம்மினத்துக் கிறிஸ்தவம் இத்தகைய இலக்கணங்களைக் கணக்கில் எடுப்பதில்லை. அந்தளவுக்கு அது வேதத்தை அலட்சியப்படுத்துகிறது. இன்று ஊழியப்பணிபுரிகிறவர்கள் பக்திவிருத்தியில்லாமலும், அடிப்படை சமூக இங்கிதங்களை அறியாமலும், அவிசுவாசிக்கிருக்கிற ஞானங்கூட இல்லாமலும் இருப்பதற்குக் காரணம் இந்த அடிப்படை இலக்கணங்களை அடியோடு கவனித்துப் பின்பற்றாமல் இருப்பதுதான். ஊழியங்கள் மோசமாக இருப்பதற்குக் காரணம் ஊழியக்காரர்கள் இந்த இலக்கணங்களைக் கொண்டிராததுதான். யாராக இருந்தாலும் இந்த இலக்கணங்களைக் கொண்டிராதவர்கள் ஊழியப்பணிசெய்வதில் பிரயோஜனமில்லை. ஆகவே, சபை நிறுவுதலுக்கு ஆரம்பம் இந்த இலக்கணங்களைக் கொண்டிருப்பவர்களை அந்தப்பணிக்காகத் தயார் செய்வதுதான். நன்றாகக் கவனியுங்கள், இந்த இலக்கணங்களைக் கொண்டிருக்கிறவர்களையே தயார் செய்ய முடியும்; தயார் செய்ய வேண்டும்.

வெறும் இறையியல் பாடங்களை மட்டும் கொடுத்து சபைத்தலைவர்களை உருவாக்கமுடியாது. சபைத்தலைமை என்பது வெறும் வேதஅறிவு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அவர்களுக்கு வேதஞானத்தோடு, வாழ்க்கை அனுபவமும், முதிர்ச்சியும் இருக்கவேண்டும். இந்த இலக்கணங்களைக் கொண்டவர்களை சபை அடையாளங்கண்டு அவர்களை சபை நிறுவும் பணிக்காகத் தயார்செய்ய வேண்டும். அத்தகையவர்களுக்கு முறையான வேதஇறையியலையும், வேதத்தைப் பகுத்துப் படிப்பதெப்படி, அதை விளக்குவதெப்படி என்ற பயிற்சியையும் அளிக்கவேண்டும். இன்று நம்மினத்தில் அநேகருக்கு வாசிக்கும் பழக்கம் அறவே கிடையாது. எனவே எல்லோரும் வேதத்தை முறையாக வாசிக்கிறார்கள் என்றும், அதன் போதனைகளை அறிந்திருக்கிறார்கள் என்றும் நம்பிவிட முடியாது. ஊழியத்துக்கு வருகிறவன் வாசிக்கிறவனாக இருக்கவேண்டும். அறிவைப்பெருக்கிக் கொள்ளும் ஆர்வமுள்ளவனாக இருக்கவேண்டும். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள் போதக ஊழியத்திற்கு ஆசைப்படுவது ஒரு முடவன் நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓட ஆசைப்படுவதுபோல்தான். ஊழியத்திற்கு வருகிறவர்கள் ஆவியில் நிரம்பியவர்களாக, ஜெபத்தில் சிறந்தவர்களாக, ஆத்தும ஆதாயத்துக்கும், கண்காணிப்புக்குமான இருதயமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இதுவே இன்று சபைத் தலைமைக்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய அடிப்படைத் தகைமைகள். இவையில்லாதவர்களை மக்கள் நம்பப்போவதில்லை; அவர்களைக்கொண்டு நிறுவப்படும் ஊழியமும் ஆவிக்குரியதாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

(3) உருவாக்கப்படுகின்ற ஊழியர்கள் திருச்சபைபற்றிய போதனையை அறிவுபூர்வமாகவும், அனுபவத்திலும் பெற்றிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 3, தீத்து 1 விளக்கும் இலக்கணங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது அந்த இறையியல் பாடங்களில் திருச்சபைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். திருச்சபை பற்றித் தெளிவாக அறிந்திராத ஒருவன் திருச்சபைப் பணியில் எப்படி ஈடுபடமுடியும்? சகல இறையியல் பாடங்களையும் கற்க வேண்டிய அவசியம் இருந்தபோதும், திருச்சபையை அனுபவரீதியில் நன்கு அறிந்திருக்கவேண்டும். முக்கியமாக திருச்சபை வாழ்க்கையை அனுபவித்து அதைக் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஒருவனுக்கு எத்தனைதான் கார் ஓட்டுவது பற்றி புத்தகப் படிப்பு இருந்தாலும் காரை அவன் ஓட்டிப் பழகும்வரை ஒரு பிரயோஜனமுமில்லை, அல்லவா? அதுபோலத்தான் இதுவும். திருச்சபை அமைக்கும் பணியில் ஈடுபடுகிற ஒருவனுக்கு அதுபற்றிய தெளிவான நடைமுறை ஞானமிருப்பது அவசியம். சுவிசேஷத்தைச் சொல்லி அதைக்கேட்டு மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கொண்டுதான் திருச்சபை அமைக்கவேண்டும். சுவிசேஷம் சொல்லுவதன் இறுதி இலட்சியம் மனந்திரும்பிய ஒரு ஆத்துமா திருச்சபையில் இணைக்கப்பட்டு கிறிஸ்துவின் விசுவாசமுள்ள சீடனாக சபையில் வாழவேண்டுமென்பதுதான். அது சுவிசேஷத்தின் இலக்காக இல்லாவிட்டால் இயேசு அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் காணப்படும் கட்டளை பொருளற்றதாகிவிடும். இன்று நம்மினத்தில் முறையாக அமைக்கப்பட்ட திருச்சபைகள் இல்லாதிருப்பதற்குக் காரணம் திருச்சபையைப் பற்றி ஒன்றுமே தெரிந்திராதவர்கள், அனுபவமில்லாதவர்கள் திருச்சபை அமைக்கப் புறப்பட்டிருப்பதால்தான். அவர்களுக்கு ஒரு ஆத்துமா மறுபிறப்பை அடைந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுகிற அறிவோ, பக்குவமோ இல்லை. இதனால்தான் விசுவாசிக்கிறேன் என்று ஏதோவொரு மயக்கத்தில் சொன்னவர்களுக்கெல்லாம் கூட்டங்கூட்டமாக ஞானஸ்நானம் கொடுத்துவிடுகிற அநியாயம் நடந்துவருகிறது. இத்தகைய அனுபவமற்றவர்களே வீடுவீடாகவும், கூட்டங்களிலும் ஜெபக்கூட்டம் நடத்துவதைத் தவிர வேறெதையும் செய்வதில்லை. அவர்களுக்கு வேதமும் தெரியாது, ஆவிக்குரிய ஞானமும், அனுபவமும் இல்லை. ஆகவே, நடைமுறைத் திருச்சபைப் போதனைகளுக்கு முக்கியத்துவங்கொடுப்பதாக ஊழியப்பயிற்சி அமைந்திருக்க வேண்டும்.

(4) மெய்யாகவே மறுபிறப்படைந்து வேதத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு நடக்கின்ற விசுவாசிகளைக்கொண்ட ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். இதுவரை எத்தகையவர்களை திருச்சபைப் பணிக்குத் தயார்செய்ய வேண்டும் என்று விளக்கினேன். அத்தகைய இலக்கணங்களைக் கொண்டவர்களே நிதானத்துடன் சபை நிறுவும் பணியில் ஈடுபட முடியும். இனி, எந்த முறையில் ஒரு ஐக்கியத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதைப் பார்ப்போம். சபையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லாமல் ஐக்கியத்தை ஏற்படுத்தவேண்டும் என்று சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். சபை உருவாவதற்குத் தேவையான அம்சங்களை விசுவாசிகள் கூடிவருகின்ற கூட்டம் கொண்டிருக்காமல் சபை உருவாக முடியாது. இந்த உண்மையை அநேகர் நினைத்தும் பார்ப்பதில்லை. உண்மையில் நம்மினத்தில் அது அநேகருக்குத் தெரியாது. ஒரு ஐக்கியத்தை அமைக்க முதலில் விசுவாசிகளைக் கூட்ட வேண்டும். சபை அமைப்புப் பணியில் ஈடுபட சபையால் அனுப்பப்பட்டிருக்கும் ஊழியனுடைய வேலை இது. எந்த சபைக்கும் போகாமலும் அல்லது நல்ல சபையொன்றைத் தேடி அலையும் ஆத்துமாக்கள் அந்த ஊரில் இருக்கலாம். இன்னொரு சபையில் இருந்து ஆத்துமத் திருடலில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. அதேநேரம் கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவதிலும், கெரிஸ்மெட்டிக் குழுக்கள் செய்வதுபோல் ஈடுபடக்கூடாது. இதெல்லாம் வேதமறியாதவர்கள் சுயலாபத்துக்காக செய்கின்ற அநியாயங்கள். அந்த ஊழியக்காரன் அந்த ஊரில் செய்துவரும் சுவிசேஷ ஊழியத்தின் மூலம் விசுவாசத்தை அடைந்தவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்களைக் கூட்டி ஒரு ஐக்கியமாக வேதப்படிப்பிலும், ஆராதனையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் முதலில் ஈடுபட வேண்டும். இது ஒரு ஐக்கியம் மட்டுமே, சபை அல்ல. ஆதலால் இது ஞானஸ்நானம் கொடுப்பதிலும் திருவிருந்து கொடுப்பதிலும் ஈடுபடக்கூடாது. இது இன்னும் சபையாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பவுல் அப்போஸ்தலன் பிலிப்பின் ஆற்றங்கரையில் லீதியால் போன்ற பெண்களுடன் அது சபையாக உருவாகுமுன் பல காலம் ஐக்கியமாகக் கூடிவந்திருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படியாக ஆரம்பத்தில் விசுவாசிகளாக கூடிவருகிறவர்களை சபைக்குரிய அம்சங்களைக் கொண்டிருக்கும் ஐக்கியமாக வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு ஓரிரு வருடங்கள் எடுக்கலாம். ஏன் தெரியுமா? கிறிஸ்துவை விசுவாசித்தவுடனேயே ஒரு விசுவாசிக்கு கிறிஸ்தவம் பற்றியும், திருச்சபை பற்றியும், சபையில் இருந்து அதற்குத் தன்னை உட்படுத்தி விசுவாசத்தோடு எப்படி வாழ்வது, போதகர்களிடம் இருந்து சீஷத்துவத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது பற்றியெல்லாம் தெரிந்துவிடப்போவதில்லை. அவன் சபை வாழ்க்கைக்குத் தயார்செய்யப்பட வேண்டும். போர்வீரனாக ஒருவன் தயார் செய்யப்படாமல் எந்தப் படையும் ஒருவனைச் சேர்த்துக்கொள்வதில்லை. போர்வீரர்களாக தயார்செய்யப்படாதவர்களை வைத்து அமைக்கப்படும் படை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்? இன்று சபை என்ற பெயரில் நடந்துவரும் அலங்கோலங்களுக்குக் காரணமே விசுவாசிகளை சரிவரத் தயார் செய்யாது சபை என்ற பெயரில் கூடிவருவதால்தான். அத்தோடு சபை வாழ்க்கையில்லாமலும் அல்லது தவறான போதனைகளுக்கு தங்களை உட்படுத்தியும் வாழ்ந்து வந்தவர்கள் இந்த ஐக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கக் கூடும். இவர்களெல்லாம் விசுவாசிகளா என்று முதலில் ஆராய்வது அவசியம். அப்படி ஆராய்ந்து பார்த்தபிறகு அவர்கள் மெய்விசுவாசிகளாக இருந்தால் எத்தகைய போதனைகளைப் பின்பற்றி ஐக்கியம் அமையப்போகிறதோ அந்தப் போதனைகளைக் கொடுத்து திருச்சபை அமைப்புக்கும், திருச்சபை வாழ்க்கைக்கும் இவர்கள் தயார் செய்யப்பட வேண்டும். இப்போது தெரிகிறதா, ஏன் இந்த ஊழியப்பணியை செய்கிறவனுக்கு அதிக ஞானமும், முதிர்ச்சியும், வேத அறிவும், அனுபவமும் தேவை என்று? ஒரு கத்துக்குட்டிக்கு இதையெல்லாம் எப்படிச் செய்யத் தெரியும்? விசுவாசி என்ற ஒரு அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஊழியப்பணி செய்யப் புறப்பட்டிருப்பவர்களால்தான் நம்மினத்துக் கிறிஸ்தவம் இன்று குப்பைமேட்டில் இருந்துவருகிறது.

(5) ஏற்கனவே கூடிவந்துகொண்டிருக்கும் ஐக்கியம் தகுந்த காலத்தில் திருச்சபையாக அமைக்கப்பட வேண்டும். இந்த ஐக்கியம் திருச்சபையாக உருவெடுப்பதற்கு அதைத் தற்காலிகமாகத் தலைமை தாங்கி போதனைகளை அளித்து சபை நிறுவும் ஊழியப்பணியில் ஈடுபட்டு வருகிறவருக்குப் பெரும் பொறுப்பிருக்கிறது. நல்ல சபையாக இந்த ஐக்கியம் உருவெடுப்பதற்காக அவர் சபை சட்ட விதிகளையும், எத்தகைய சத்தியங்களை பின்னால் சபை பின்பற்றப்போகிறது என்பதை விளக்கும் தெளிவான ஒரு விசுவாச அறிக்கையையும் தயாரித்து அவற்றை இந்த ஐக்கியத்தில் இருப்பவர்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தப் போதனைகளையெல்லாம் கொடுத்தபிறகு தகுந்த காலத்தில் ஐக்கியத்தில் இருப்பவர்கள் அது சபையாக உருவெடுப்பதற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்களா என்று அவர்களோடு பேசித் தீர்மானிப்பது அவசியம். ஐக்கியமாக வந்துகொண்டிருந்திருப்பவர்கள் திருச்சபையாக இயங்குவதற்கான தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். எந்தவிதப் பிரச்சனைகளோ, கேள்விகளோ இல்லாமல் ஏற்கனவே போதித்து விளக்கப்பட்டிருக்கும் சபை சட்ட விதிகள், விசுவாச அறிக்கை ஆகியவற்றிற்கு தங்களை எல்லோரும் ஒப்புக்கொடுத்திருந்தால் அவர்களை ஆரம்ப அங்கத்தவர்களாகக் கொண்டு அந்த ஐக்கியம் திருச்சபையாக, எல்லோரும் கர்த்தரின் முன் உடன்படிக்கை எடுத்து சபையாக வேதபூர்வமாக அமைக்கப்பட வேண்டும். அதை வழிநடத்தி வந்திருப்பவரும் அந்த அங்தத்தவர்களில் ஒருவனாக இணைந்துகொள்வார். இதுவே ஒரு ஐக்கியம் திருச்சபையாக உருமாறுவதற்கான வழிமுறைகள். ஐக்கியமாகக் கூடிவந்திருக்கின்ற காலப்பகுதியில் அவர்களுக்கு ஞானஸ்நானமோ அல்லது திருவிருந்தோ கொடுக்கும் அதிகாரம் கிடையாது. இவை சபை மட்டுமே கொடுக்கக்கூடிய திருநியமங்கள்.

ஐக்கியத்தில் இருக்கிற எல்லோருமே அது சபையாக உருவெடுக்கும்போது ஆரம்ப அங்கத்தவர்களாக இணைந்துகொள்ளுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு சில போதனைகளில் உடன்பாடு இருக்காமல் போகலாம். அவர்களுக்கு அவற்றை விளக்கிப் போதித்து அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்க்க முயலலாம். அப்படியும் அவர்கள் உடன்படாமலிருந்தால் அவர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த ஐக்கியம் சபையாக உருவெடுக்கும்போது சபையில் இணைய விருப்பமில்லாதவர்கள் வேறு இடங்களை நாட நேரிடும். அதில் தவறில்லை. அந்த சபை விசுவாசிக்கும் சத்தியங்களுக்கும், சட்டவிதிகளுக்கும் முழுமனதோடு ஒப்புக்கொடுக்காமல் அதில் எவரும் இணைவது நல்லதல்ல. அந்த சபையின் அங்கத்தவர்கள் எல்லோருமே அதன் விசுவாச அறிக்கைக்கும், சட்டவிதிகளுக்கும் முழுமனத்தோடு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவும், அவற்றிற்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும். இந்த முறையிலேயே அங்கத்தவர்களைக் கொண்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. ஐக்கியம் சபையாக உருவெடுக்கும்போது அது ஆணும், பெண்ணுமாக இருக்கும் குடும்பங்களைக் கொண்டு அமையும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களை மட்டும் கொண்டு ஒரு சபையை அமைக்கக் கூடாது. அப்படிப் பெண்கள் அதிகமாக இருந்து ஓரிரு ஆண்களே இருந்தால் மேலும் ஆண்கள் தொகை அதிகரிக்கும்வரை அது ஐக்கியமாகவே தொடருவது நல்லது. பெண்களை மட்டும் வைத்து சபை அமைத்தால் யாரை மூப்பர்களாகவும், உதவிக்காரர்களாகவும் பின்னால் தெரிவு செய்வது? ஆண்கள் மட்டுமே அந்தப் பணிகளில் நியமிக்கப்பட வேண்டும். இன்றைக்கு சபை என்ற பெயரில் இருந்துவரும் அநேக கூட்டங்கள் பெண்களை அதிகமாகவும், ஓரிரு ஆண்களை மட்டுமே கொண்டதாகவும் இருக்கின்றன. இது சரியல்ல. ஆணும், பெண்ணுமாக விசுவாசிகள் சபையில் இணைந்ததாக அப்போஸ்தலர் நடபடிகளில் அடிக்கடி வாசிக்கிறோம்.

(6) சபை அமைப்பில் மேற்பார்வை சபையின் பங்கு. இதுவரை ஒரு ஐக்கியம் எவ்வாறு சபையாக உருமாறுகிறது என்பதைக் கவனித்து வந்திருக்கிறோம். இங்கு கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. நம்மினத்தில் சபை நிறுவுவது என்பது காளான்கள் வளரும் வேகத்தையும் மிஞ்ஞிய செயலாக இருக்கிறது. அந்தளவுக்கு எந்தவித வேத வழிமுறைகள் எதையும் பின்பற்றாது நியாயாதிபதிகள் நூல் சொல்லுவதுபோல் ‘அவனவன் தன் இஷ்டத்துக்கு’ நடந்துவருவது நம்மினத்தில் சகஜம். இதுமிகவும் தவறானதும் ஆபத்தானதுமாகும். இதுவே நல்ல சபைகள் நம்மினத்தில் அமையமுடியாத நிலை இருப்பதற்குக் காரணம். இதற்குப் பரிகாரம் என்ன? வேதத்தைப் பின்பற்றினால் இந்தத் தவறைத் தவிர்த்துக்கொள்ளலாம். பொதுவாக எப்போதும் சபை நிறுவும் பணி ஏற்கனவே இருந்துவரும் வளர்ந்த, முதிர்ந்த ஒரு சபையால் செய்யப்பட வேண்டிய பணி. பவுல் அப்போஸ்தலன் மிஷனரிப் பணிக்கு அனுப்பப்பட்டபோது அவர் தான் நினைத்தபடி அதைச் செய்யப்போகவில்லை. அப்போஸ்தல நடபடிகள் 9ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம், அவர் விசுவாசத்தை அடைந்தபிறகு தன்னை எருசலேம் சபையில் இணைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி சபையில் சேர முற்பட்டபோது அப்போஸ்தலர்கள் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. பர்னபா பவுலோடு தனியே பேசி உண்மைகளை அறிந்துகொண்டு அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துப் போய் அதற்குப் பிறகே அப்போஸ்தலர்கள் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து பவுல் சபையில் இணைய அனுமதி அளித்தனர். அந்தளவுக்கு அன்றே சபையில் கட்டுப்கோப்பு இருந்திருக்கிறது. இது நடந்து பல வருடங்கள் கழிந்தே அந்தியோகியா சபை பவுலையும் பர்னபாவையும் மிஷனரிப்பணிக்கு அனுப்பிவைத்தது. அப்படி அனுப்பிவைக்கப்படும் காலத்துக்கு முன் பவுல் அந்தியோகியா சபையின் ஒரு தலைவராக இருந்திருக்கிறார் (அப்போஸ்தலருடைய நடபடிகள் 13). இதிலிருந்து ஒரு சபையே சபை நிறுவும் பணியில் ஈடுபட்டிருக்கும் வழமையை புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். இதற்குப் பிறகு இந்த முறையே தொடர்ந்திருப்பதை அப்போஸ்தல நடபடிகள் நமக்கு புலப்படுத்துகிறது.

இந்த வேதமுறையைப் பின்பற்றி புதிதாக நிறுவப்படும் சபை தனக்கென்று ஒரு மேற்பார்வை சபையைக் கொண்டிருக்குமானால் அந்தச் சபைப் போதகர்கள் நிறுவப்படும் சபைக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுப்பதோடு தேவையான ஆலோசனைகளையும் அளித்து வழிநடத்த முடியும். அதுவும் அனுபவமற்ற புதிய சபை ஆத்துமாக்களுக்கும், அதை ஆரம்பித்து நடத்துகிறவருக்கும் மேற்பார்வை சபையில் பக்கபலம் மிகவும் அவசியம். பிசாசுக்குப் பிடிக்காதது எந்தவித ஆவிக்குரிய செயலுந்தான். அவன் புதிய புதிய சபைகள் உருவாவதை விரும்புவானா? அவனுடைய குழப்பங்களையும், தாக்குதல்களையும் முறியடிக்க புதிய சபை மேற்பார்வை சபையின் பாதுகாப்பில் அது தனித்து இயங்கும்வரை நல்லபடியாக வளரலாம். அனுபவமற்றவர்களால் ஏனோதானோவென்று ஆரம்பிக்கப்பட்டு அலங்கோலத்தில் இருக்கும் எத்தனையோ, சபை என்ற பெயரில் இயங்கும் அமைப்புகளை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்; அவமானப்பட்டு அழிந்துபோயிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் தவிர்த்துக்கொள்ள ஒரு நல்ல மேற்பார்வை சபை இருப்பது எப்போதுமே நல்லதும் வேதபூர்வமானதுமாகும்.

அத்தோடு ஐக்கியமாகக் கூடிவந்திருந்த நிலையில் இருந்து திருச்சபையாக அமையும்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அதை வேதபூர்வமாக நடத்திவைக்கவும், போதகர் நியமனமாகும்வரை அந்தப் புதிய சபையில் ஞானஸ்நானம், திருவிருந்து ஆகியவற்றை நடத்தித் தரவும் மேற்பார்வை சபை உதவும். இதுவே வேதபூர்வமானது. நம்மினத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதும், திருவிருந்து எடுப்பதும் கேள்விமுறையில்லாது தெருவிருந்து போல் நடந்துவருகிறது. திருச்சபை பற்றிய உணர்வே இல்லாமல் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதுபோல் அனாமத்துக்கள் ஆவிக்குரியவர்களாக தங்களை இனங்காட்டிக்கொண்டு இவற்றைச் செய்துவருகிற அலங்கோலத்தை நம்மினத்தில்தான் பார்க்கிறோம்.

(7) புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சபைக்கு தலைமை அவசியம். இதுவரை ஒரு குறிப்பிட்ட ஊரில் சுவிசேஷப்பணி புரிந்து, ஒரு ஐக்கியத்தை அமைத்து அதன் பிறகு அந்த ஐக்கியம் எந்தமுறையில் அங்கத்துவ அமைப்பைக்கொண்டு சபையாக அமைக்கப்படுகிறது என்பதைப் பார்த்திருக்கிறோம். அமைக்கப்பட்டிருக்கும் அந்த சபைக்கு இப்போது தலைமை அவசியம். இந்த இடத்தில் ஒரு உண்மையை விளங்கிக்கொள்வது அவசியம். அதாவது, ஒரு சபைக்குத் தலைமை அவசியம், ஆனால் தலைமையோடு அது ஆரம்பிக்க வேண்டியதில்லை. ஏனெனில் சபை அமைவதற்குத் தேவையான உதிரிப்பொருட்களில் (essential ingredients) தலைமை ஒன்றல்ல. சபை அமைவதற்கு அவசியமானது மெய்யான விசுவாசத்தைக் கொண்டு புரிதலோடு சபை வாழ்க்கைக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் விசுவாசிகள். சபைத் தலைமையானது ஒரு சபை அங்கத்துவ அமைப்பைக்கொண்டு அமைந்தபிறகு, அதனால் அங்கீகரித்து நியமிக்கப்பட வேண்டியது. (Leadership is not the essence of a church but it is essential to the church.) இன்னொருவிதத்தில் சொல்லப்போனால், சபை அமைந்த பிறகே தலைமை அதற்குத் தேவை. புதிதாக அமைக்கப்பட்ட சபை அதன் முதல் கடமையாக தலைமைக்குத் தகுதியானவர்களை ஆராய்ந்து பார்த்து அந்தந்தப் பதவியில் வேதவிதிகளைப் பின்பற்றித் தகுந்தவர்களை நியமிக்கவேண்டும். சபையின் இன்றைய நிரந்தரமான பதவிகள் மூப்பர்களும் (போதகர்கள்), உதவிக்காரர்களுந்தான். இவற்றைத் தவிர பிரெசிடென்ட், செக்கரட்ரி, கமிட்டி போன்ற வேதத்தில் நாம் பார்க்கமுடியாத உலகத்தில் காண்கிற பதவிகளை சபையில் உருவாக்கக்கூடாது. இப்படிப்பட்டவற்றை சபையில் கொண்டிருந்தால் நாம் வேதத்தைவிட்டு விலகிப் போகிறோம் என்றுதான் அர்த்தம். அத்தோடு வேதபூர்வமாக ஆவிக்குரியவிதத்தில் சபை இயங்குவதற்கு இத்தகைய உலகத்தைச்சார்ந்த பதவிகள் பெருந்தடையும், ஆபத்தானவையுமாகும்.

ஓரு ஐக்கியம் சபையாக அமைக்கப்படுகிறபோது, அது சபையாக உருவாகும்வரையில் ஏற்கனவே அதை வழிநடத்தி வந்திருப்பவரே அந்தச் சபையில் தலைமைக்குத் தகுந்தவர் என்பதில் சந்தேகமில்லை. அத்தலைமைக்கான தகுதிகளைத் தன்னில் கொண்டிருந்ததனாலேயே அவர் சுவிசேஷத்தை அறிவித்து ஒரு ஐக்கியத்தை உருவாக்க அனுப்பப்பட்டிருக்கிறார் என்று ஊகிக்கிறேன். சபை அமைகிறபோது அவரும் அதன் அங்கத்தவர்களில் ஒருவராக இணைந்திருப்பார். ஆகவே, சபை உருவான உடனேயே அந்த சபை அங்கத்தவர்கள்கூடி அதை வழிநடத்தி வந்திருப்பவரின் தகுதிகளை வேதபூர்வமாக ஆராய்ந்து நிர்ணயித்து அவரைப் போதகப்பணிக்கு நியமிக்க வேண்டும். சபைத் தலைவர்கள் எப்போதுமே சபை அங்கத்தவர்களால் ஆராய்ந்து நியமிக்கப்பட வேண்டும். இதை வேறு எவரும் செய்வதற்கு அனுமதியில்லை. இதைச் செய்வதற்கு சபை அமைக்கப்பட்டபோது அது தன்னை ஒப்புக்கொடுத்திருக்கும் சபை சட்டவிதிகளையும், விசுவாச அறிக்கையையும் பின்பற்ற வேண்டும்; அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு முரண்படாதவிதத்தில் அவற்றைப் பின்பற்றி இதைச் செய்யவேண்டும். போதகர் நியமனத்தில் மேற்பார்வை சபையின் உதவியும், மேற்பார்வையும் சபைக்குத் துணையாக இருக்கும். இதேபோல் உதவிக்காரர் பணிக்கு, அதற்குரிய தகுதிகளைக் கொண்ட ஆண்கள் இருப்பார்களானால் அவர்களையும் சபை சட்டவிதிகளைப் பின்பற்றி நியமிக்கலாம். இதை நிறைவேற்றுகிறபோது ஒரு ஐக்கியம் முழுமையான திருச்சபையாக அங்கத்தவர்களையும், போதகரையும், உதவிக்காரரையும் கொண்டு வேதபூர்வமாக அமைந்துவிடுகிறது.

விசுவாசிகள்கூடி ஐக்கியமாக இருந்துவந்த ஒரு அமைப்பு உள்ளூர் திருச்சபையாக வேபூர்வமாக அமைக்கப்பட்டபின் அது வெகுகாலத்துக்கு சபைத் தலைமை இல்லாமல் (போதகர்களும், உதவிக்காரர்களும்) இருந்துவிடக்கூடாது. எவ்வளவு காலத்துக்கு என்பதை நான் நாள் கணக்கிட்டு சொல்ல விரும்பவில்லை. அதிக காலத்துக்கு தலைமை இல்லாமலிருந்தால் அது சபையின் ஆவிக்குரிய வளர்ச்சிக்குத் தடையாகவும் தீங்காகவும் முடிந்துவிடும். எனவே, சபை அமைக்கும் நோக்கத்தோடு ஒரு ஐக்கியத்தை ஒரு ஊரில் அமைக்கும்போதே சபைத்தலைமையையும் மனதில் வைத்து அதை ஆரம்பிக்க வேண்டும். அதனால்தான் எந்தவொரு ஐக்கியமும் ஆண்களையும் பெண்களையும் கொண்டதாக அமைக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே விளக்கினேன். அத்தோடு சபைத் தலைமை வேண்டுமென்பதற்காக வேதஇலக்கணங்களை உதாசீனப்படுத்தி தகுந்த இலக்கணங்களைக் கொண்டிராத எவரையும் இந்த ஆவிக்குரிய பதவிகளில் நியமித்துவிடக்கூடாது; அப்படிச் செய்வது சபைக்குப் பெருந்தீங்கிழைத்துவிடும்.

இதுவரை நான் விளக்கியிருப்பவையே புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் வேதபூர்வமான சபை அமைப்பு விதிகள். இவையெல்லாம் வேதத்தில் ஒரே இடத்தில் விபரமாகக் கொடுக்கப்படவில்லை. அப்போஸ்தல நடபடிகள் நமக்கு கிறிஸ்து எவ்வாறு தன்னுடைய அப்போஸ்தலர்களைக் கொண்டு திருச்சபையை எருசலேமில் நிறுவி அதன் மூலமாக ஏனைய பகுதிகளில் திருச்சபையை நிறுவினார் என்பதை விளக்குகிறது. அது நமக்கு சபை நிறுவும் பணிக்கான அநேக வேதவிதிகளைத் தெளிவாக உதாரணங்களின் மூலம் தருகின்றது. அந்த உதாரணங்கள் நமக்குக் கதை சொல்லுவதற்காகக் கொடுக்கப்படவில்லை. அவற்றை நாம் நடைமுறையில் பின்பற்றி நடக்கவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் அமைக்கப்பட்ட திருச்சபையின் வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சகல விபரங்களையும் புதிய ஏற்பாட்டின் ஏனைய நூல்கள் நமக்கு விளக்குகின்றன. இவற்றை முறையாக ஆராய்ந்து படிக்கும்போது திருச்சபை பற்றிய அத்தனைப் போதனைகளையும் வேதம் நமக்குத் தந்திருப்பதை உணரலாம். இல்லாமலா ஜோன் கல்வின் தன்னுடைய இன்ஸ்டிடியூட் நூலில் முக்கால்வாசிப் பகுதியை திருச்சபையைப் பற்றிய போதனைகளை அளிப்பதில் செலவிட்டிருக்கிறார்.

சுவிசேஷம் எந்தளவுக்கு நம்மினத்தில் இன்று சொல்லப்பட வேண்டுமோ அந்தளவுக்கு திருச்சபை பற்றிய தெளிவான போதனைகளும் நமக்கு இன்று தேவை. தேவனை அறியாதவர்கள் சுவிசேஷத்தின் மூலமாகக் கிறிஸ்துவை அறிந்து விசுவாசிப்பது மட்டும் போதாது. அது ஆரம்பம் மட்டுமே. அவர்கள் நித்திய இரட்சிப்பை அடையும்வரை தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையை சபைக்குத் தங்களை அர்ப்பணித்து நிதானத்தோடு இந்த உலகத்தில் வாழவேண்டிய பெருங்கடமை அவர்களுக்கு இருக்கிறது. அது திருச்சபை வாழ்க்கை இல்லாமல் முடியாது. நல்ல திருச்சபைகள் உருவாகி பக்திவிருத்தியுள்ள தலைமையோடும் ஒழுங்கோடும் அவை இயங்கிவரும்போது ஆத்துமாக்களுக்கு ஆத்துமப் பாதுகாப்பு கிடைக்கிறது. அத்தகைய ஆத்துமப் பாதுகாப்பை வழங்குகிற அளவுக்கு வேதபூர்வமான திருச்சபைகள் நம்மினத்தில் பெருமளவுக்கு இல்லை என்பதை விபரமறிந்தவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்ளுவார்கள். நல்ல திருச்சபைகள் உருவாகாதவரை நாம் கர்த்தரின் எழுப்புதலை நம்மினத்தில் காணமுடியாது. திருச்சபை பற்றிய போதனைகள் அதிகம் கொடுக்கப்பட்டு அதற்கான வைராக்கியம் வளருகிறபோதே மெய்யான ஆத்மீக சீர்திருத்தமும் நம்மினத்தில் ஆரம்பித்திருக்கிறது என்று நாம் ஆனந்தப்பட முடியும். அந்த நாள் என்று வரும்?

எபேசியர் 5:25-27

23. . . கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

One thought on “சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s