1517ல் திருச்சபை வரலாற்றில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் மார்டின் லூத்தர். அப்பணியில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக அவர் இருந்தார். அந்த சீர்திருத்தத்தின் மூலம் வேதத்தில் இருந்து வெளிக்கொணரப்பட்ட சீர்திருத்த போதனைகளுக்கும், இறையியலுக்கும் உருவம் கொடுத்து வளர்த்த மனிதனாக ஜோன் கல்வினை கர்த்தர் பயன்படுத்தினார். லூத்தர் சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தார். கல்வின் அதன்மூலம் வெளிவந்த போதனைகளுக்கு உருவம் கொடுத்தார்.
சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஜோன் கல்வினைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் அநேகம். அவருக்கு ஏற்பட்ட நிந்தனைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இருதயமில்லாத இறையியல் அறிஞர் என்று அடிக்கடி அவரை வர்ணித்திருக்கிறார்கள். ஆனால், அது உண்மையே அல்ல. நெகிழ்ந்த இருதயத்தைக் கொண்டு கிறிஸ்து இயேசுவின் ராஜ்ய விஸ்தரிப்பை மட்டுமே கண்ணுங் கருத்துமாக வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்து பணியாற்றியவர் ஜோன் கல்வின். திருச்சபைச் சீர்திருத்தப் பணியில் தன்னையே எரித்துக்கொண்டவர் கல்வின். அவருடைய இருதயம் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.
கல்வின் மிகப் பெரிய படிப்பாளி. சீர்திருத்த போதனைகளைத் தொகுத்து அதை மனிதர்கள் அறிந்துகொள்வதற்கு பெரும் பணிசெய்த, தேவனாலே பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். இந்த வருடம் ஜூலை 10ம் நாள் ஜோன் கல்வின் பிறந்த 507வது நினைவு வருடம். சீர்திருத்த சபைகள் உலகத்தின் ஏனைய பாகங்களில் இதை நினைவுகூர்ந்திருப்பார்கள்; பண்டிகையாக இதைக் கொண்டாடுவதற்காகவோ அல்லது கேளிக்கை விருந்து வைக்கவோ அல்ல. திருச்சபை வரலாற்று நிகழ்வுகளை நாம் நினைவுகூரவேண்டும் என்பதற்காகவும், நம்முடைய மக்கள் நடந்த காரியங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும், நம்முடைய இளம் தலைமுறையினர் அந்த மனிதர்கள் செய்த தியாக உழைப்பைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்திலே அதேவிதமாக நாமும் சத்தியத்தைக் காத்துக்கொள்ளுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காகவும் கருத்தரங்குகள் வைத்திருப்பார்கள்; சபைகளில்கூடப் போதனைகள் அளித்திருப்பார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9ம் அதிகாரத்தை எடுத்துப்பார்த்தால் 9:15, 16 வசனங்களிலே அங்கு கர்த்தர் அனனியாவிடம் சொல்லுகிறார், ‘நீ போ, (அங்கு எழுதியிருக்கிறபடி என்னுடைய மொழியில் சொல்லுகிறேன்), அவன் என்னால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக இருக்கிறான். புறஜாதிகள் மத்தியிலே அவன் என்னுடைய பெயரை எடுத்துச் சொல்லப்போகிறான். புறஜாதியார் மத்தியில் மட்டுமல்ல இஸ்ரவேல் மத்தியிலும் என்னுடைய பெயரை எடுத்துச்சொல்ல அவனைப் பயன்படுத்தப் போகிறேன். அந்த மனிதனுக்குத் தெரியப்படுத்துவேன், எந்த அளவிற்கு நீ எனக்காகத் துன்பப்படவேண்டும் என்பதை அவன் அறிந்துகொள்ள வேண்டும்’ என்று பவுலைக் குறித்து கர்த்தர் அங்கே சொல்லுவதைப் பார்க்கிறோம். ஆனால் அந்த வசனம் ஜோன் கல்வினைப் பொருத்த அளவிலே நிச்சயமாகப் பொருந்தும். பவுல் தான் பட்டபாடுகளையும் துன்பங்களையும், கஷ்டங்களையும் விபரித்து எழுதவில்லையா? பவுல் அன்று கர்த்தராலே பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். அதேவிதமாக 16-ம் நூற்றாண்டிலே பயன்படுத்தப்பட்ட இன்னொரு மாமனிதன் ஜோன் கல்வின்.
ஜோன் கல்வினுடைய வாழ்க்கையையும், பணிகளையும் நாம் அறிந்துகொள்வது அவசியம். நம்முடைய விசுவாசத்திற்கும் வரலாற்றிற்கும் பிரிக்க முடியாதபடி ஒரு தொடர்பு இருக்கிறது. இன்று சபை வரலாறு அறியாத அநேக சபைகளை நம்மினத்தில் காணலாம். சபை வரலாற்றுக்கும் சபைக்கும் தொடர்பே இல்லை என்றும், சபை வரலாறு உலகத்தைச் சார்ந்தது, அதற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை என்று எண்ணுகிறவர்களும் கூட நம்மினத்தில் அதிகமாக இருக்கிறார்கள். நம்மினத்து கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு சபை வரலாறே தெரியாது. மேலைநாடுகளில் திருச்சபை வரலாறு தெரியாமல் ஒருவரும் போதக ஊழியத்தில் இருக்கமுடியாது. போதக ஊழியத்திற்குப் போகிறவர்களுக்கு அது ஒரு முக்கிய பாடமாக இருக்கிறது. சபைமக்களும்கூட அதுபற்றி அதிகம் தெரிந்துவைத்திருப்பார்கள். நம்முடைய விசுவாசத்திற்கும் வரலாற்றுக்கும் பிரிக்க முடியாதபடி தொடர்பு இருக்கின்றது. திருச்சபை வரலாறு வரலாற்றில் சபை வளர்ந்தவிதத்தை மட்டுமல்லாது இறையியல் போதனைகள் எப்படி உருவெடுத்தன என்பதையும் விளக்குவதாக இருக்கின்றது. உண்மையில் நாம் விசுவாசிக்கும் சத்தியங்கள் வேதபூர்வமானதா, அப்போஸ்தல விசுவாசத்தின் தொடர்ச்சியா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள திருச்சபை வரலாறு உதவுகிறது. போலிப்போதனைகளை அடையாளம் கண்டு அவற்றை நம் வாழ்வில் தவிர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.
கல்வினின் வரலாறு நமக்கு சீர்திருத்த கால வரலாற்றையும், அதன் சத்தியங்களையும் விளக்குகிறது. அப்போஸ்தலர்களுடைய சத்தியங்களே சீர்திருத்த சத்தியங்கள் என்ற உண்மையை அம்மனிதனின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. அதே சத்தியங்களை நாம் விசுவாசிக்கின்றபோது, நாமும் அப்போஸ்தலர்களின் சத்தியங்களையே பின்பற்றுகிறோம் என்ற நம்பிக்கையை வரலாறு நமக்கு அளிக்கிறது. அதே சத்தியங்களின் அடிப்படையில் கல்வினுடைய காலத்துக்குப்பின் 17ம் நூற்றாண்டில் எழுந்த பியூரிட்டன் பெரியவர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். இத்தனை பெரிய மாமனிதர்கள் பின்பற்றிய அப்போஸ்தல போதனைகளையே நாமும் பின்பற்றி வருகிறோம் என்று உணர்கிறபோது நமது சரீர நரம்புகள் எல்லாம் புல்லரித்துப் போகவில்லையா?
வரலாற்றில் நம்மை இனங்கண்டுகொள்ளும்போதே நாம் தவறானவைகளைப் பின்பற்றுகிறோமா அல்லது சத்தியத்தைப் பின்பற்றுகிறோமா என்று அறிந்துகொள்ள முடியும். வேதத்தைப் படித்து இதை அறிந்துகொள்ள முடிகின்றபோதும் வரலாறு இன்னுமொருவிதத்தில் உதவுகிறது. அதாவது வரலாற்றில் எழுந்துள்ள சபைகள் சத்தியத்தைக் காத்துக்கொள்ளுவதற்கு எடுத்த நடவடிக்கைகளும், அவர்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள நூல்களும், விசுவாச அறிக்கைகளும் நம்முடைய சத்தியப்பாதுகாப்புக்கு உதவுகின்றன. வரலாற்றை நாம் உதாசீனப்படுத்துவது நமக்கோ சபைக்கோ எந்தவித்திலும் துணைசெய்யப்போவதில்லை; அத்தோடு அது மிகவும் அறிவீனமான செயல்.
அதனால்தான் கல்வினை நாம் நினைவுகூருவது அவசியமாகிறது. அதுவும் சீர்திருத்த வரலாற்றோடு தம்மைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறவர்கள் அதைச் செய்யாமலிருக்க முடியாது. சீர்திருத்த இறையியலைப் பயின்று வருகிறவர்களும் அவரை நினைவுகூர்ந்து அவருடைய வாழ்க்கையையும், பணிகளையும், எழுத்துக்களையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பொதுவில் இன்று சீர்திருத்தப் போதனைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பெயர் கல்வினிசம். இது ஏன், என்று கேட்டுப்பார்க்க வேண்டியது அவசியம். அதற்குக் காரணமே கல்வின் சீர்திருத்தப் போதனைகளை வரையறுத்து தெளிவான ஒரு அமைப்புக்குள் கொண்டுவந்ததினால்தான். அதற்கு அவரளித்திருக்கும் பங்களவிற்கு வேறு ஒருவரும் செய்ததில்லை. தகுந்த காலத்தில் அந்தப்பணிக்கு கர்த்தரால் எழுப்பப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட மனிதராக அவர் வரலாற்றில் காணப்படுகிறார்.
நான் என்னைக் கல்வினிஸ்ட் என்று அழைத்துக்கொள்வதில் என்றைக்குமே வெட்கப்பட்டதில்லை. சிலர் விபரம் தெரியாமல், என்னையா மனுஷனை பெரிசுபடுத்துகிறீர்கள் என்பார்கள். வேறு சிலர் கல்வினைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதால், நான் ஏதோ பெரிய ஆபத்தான விசுவாசத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுவார்கள். தவறான புரிந்துகொள்ளுதலே மனிதர்களை இப்படியெல்லாம் சிந்திக்கச் செய்கிறது. ஆராய்ந்து பார்க்கின்ற பக்குவத்தைக் கொண்டிருக்கிறவர்கள் கல்வினின் வாழ்க்கையையும், அவருடைய போதனைகளையும் தெரிந்துகொண்டால் மலைத்துப் போய்விடுவார்கள். அந்தளவுக்கு கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மாமனிதன் ஜோன் கல்வின். கல்வினிஸ்ட் என்று என்னை நான் அழைத்துக்கொள்ளுவது கல்வினை உயர்த்துவதற்காக அல்ல. இந்தப் பெயருக்குப் பின் பெரும் வேதசத்தியமும், இறையியல் வரலாறும் மறைந்து நிற்கிறது. அதை அறிந்துகொள்ளுகிறவர்களுக்குப் புரியும் இந்தப் பெயரின் பெருமை.
சீர்திருத்தவாதிகள் சுவிசேஷ ஊழியத்தில் ஆர்வமற்றவர்கள் என்ற பெருந்தவறான எண்ணம் இருந்துவருகிறது. அது எத்தனைப் பெரிய பொய் என்பதை ஜோன் கல்வினுடைய விசுவாசமும், திருச்சபைப் பணியும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. ஜோன் ஹெலோபோலஸ் என்பவர் கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றிய மிஷனரிகளுடைய பட்டியலொன்றை வரைந்திருக்கிறார் என்று டேவிட் மரே என்ற சீர்திருத்தப் போதகர் எழுதுகிறார். அந்தப் பட்டியலில் உள்ள பெயர்களைக் கவனியுங்கள்: ஜோன் கல்வின், ஜோன் எலியட், டேவிட் பிரேய்னாட், ஜொனத்தன் எட்வர்ட்ஸ், ஜோர்ஜ் விட்பீல்ட், வில்லியம் டெனட், சாமுவேல் டேவிஸ், வில்லியம் கேரி, ரொபட் மொபெட், டேவிட் லிவிங்ஸ்டன், ரொபட் மொரிசன், பீட்டர் பாக்கர், அடோனிராம் ஜட்சன், சார்ள்ஸ் சிமியன், ஹென்றி மார்டின், சாமுவேல் சுவெமர், ஜோன் ஸ்டொட், பிரான்ஸிஸ் சேபர், ஜோமஸ் கென்னடி. இவர்களைத் தவிர இன்னும் எத்தனையெத்தனையோ இந்தளவுக்குப் பிரபலமாகாத கல்வினின் போதனைகளைப் பின்பற்றுகிற மிஷனரிகள் இருந்திருக்கிறார்கள்; இருந்தும் வருகிறார்கள். உண்மையில் நவீன மினஷரிப் பணிக்கு வித்திட்டு வைத்திருப்பதே சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின்தான்.
இன்றைய இளந்தலைமுறை கல்வினைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். நம்மினத்தார் மத்தியில் அவரைப்பற்றிய புரிந்துகொள்ளுதல் அதிகம் இல்லை. போதகப் பணியிலிருப்பவர்களுக்கே அவரைப்பற்றித் தெரியாமலிருக்கிறபோது இளந்தலைமுறைக்கு அவரைப் பற்றி எப்படித் தெரிந்திருக்கப் போகிறது. போதகர்களுக்காக நான் நடத்திய கூட்டமொன்றில் ஒரீசாவில் இருந்து வந்திருந்த ஒரு வயதான போதகர் ‘ஸ்பர்ஜன் என்பவர் யார்?’ என்று கேட்டார். அக்கூட்டத்தில் ஸ்பர்ஜனின் வாழ்க்கையைப் பற்றிய செய்திகள் கொடுக்கப்பட்டன. இந்தளவுக்கு திருச்சபை வரலாறும், திருச்சபை கண்ட மாமனிதர்களின் வரலாறும் தெரியாத போதகர்கள் நம்மத்தியில் அதிகம். இந்த நிலைமை மாறவேண்டும். நம்மைப் பிடித்திருக்கும் அறியாமையாகிய பேரிருட்டு விலகவேண்டும். அதனால்தான் வாலிபர்களுக்கு இன்று கல்வினைப் பற்றிய போதனைகள் கொடுக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினரை எழுப்பிவிட வேண்டிய பெரும் பொறுப்பு நம் கையில் இருக்கின்றது. கல்வினின் உழைப்பைப் பற்றியும், அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையும்விட மேலாக கல்வின் விசுவாசித்த கிருபையின் போதனைகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இத்தகைய ஆவிக்குரிய பெரிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களைப் பற்றிய உண்மைகளையும் அறிந்துகொள்ளுகிறபோதுதான் நம்முடைய இளைய தலைமுறை ஆவிக்குரியவிதத்தில் வளர முடியும். கல்வினைப்போன்ற உதாரணபுருஷர்களை நம்மினம் எங்கே அறிந்திருக்கிறது? அத்தகைய உதாரணங்கள் இல்லாமல் வாழ்க்கையில் எப்படி உயரமுடியும்?
(1) முதலில் கல்வினின் ஆரம்பகால வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்போம்.
1509-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி பிரான்சிலே பாரிஸ் நகரத்திற்கு வடகிழக்கு பகுதியிலிருந்த நோயோன் (Noyon) என்ற இடத்தில் ஜோன் கல்வின் பிறந்தார். அது பாரிஸ் தலைநகரத்தில் இருந்து வடபகுதியில் 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. கல்வினுடைய தகப்பன் ஜெராட் நோயோனில் இருந்த பிஷப்புக்கள் நடத்தி வந்த ஆபிஸில் வேலை செய்து வந்தார். ஜோன் கல்வின் பிறந்த பொழுது மார்டின் லூத்தருக்கு வயது 26 ஆக இருந்தது. இருபத்தி ஆறு வயதிலேயே அவர் விட்டன்பேர்கில் இறையியல் போதித்துக் கொண்டு இருந்தார். அப்போது இன்னுமொரு சீர்திருத்தவாதியான சுவிட்ஸர்லாந்தில் இருந்த சுவிங்கிலிக்கு லூத்தரைவிட இரண்டு வயதுதான் குறைவாக இருந்தது. மார்டின் லூத்தருடைய நண்பரும் சீடருமாக இருந்த பிலிப் மெலாங்தனுக்கு கல்வினைவிட 12 வயதுதான் கூடுதலாக இருந்தது. கல்வினுக்கு எட்டு வயதாக இருந்தபொழுது மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க மதத்திற்கு எதிரான தன்னுடைய 95 குறிப்புகளை விட்டன்பேர்க் திருச்சபைக் கதவில் ஆணி அடித்துப் பதித்தார். கல்வினுக்கு அப்போது எட்டே வயதுதான். இதிலிருந்து இந்தச் சீர்திருத்தவாதிகள் எல்லோரும் கல்வின் சிறுவனாக இருந்தபோது வாலிப வயதில் மாபெரும் பொறுப்பாகிய திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுகிறோம். இதிலிருந்து வாலிப வயதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நம்மினம் வாலிபர்களை மதிப்பதில்லை அவர்களை எப்படி வளர்க்கவேண்டும் என்பதில் தவறிழைத்துவிட்டு அவர்களை உதாசீனப்படுத்துவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அவர்களுக்கு பெரியவர்கள் உதாரணமாக இருக்கவேண்டும். வாலிப வயதில் சீர்திருத்தவாதிகள் பெரும் பணிகளில் ஈடுபட்டதற்குக் காரணம் அவர்களை வளர்த்தவர்கள் அதில் குறைவைக்காததுதான். வாலிபர்களும் வாலிப வயதை வீணடித்துக்கொள்ளக்கூடாது. இன்றைக்கு வாலிபர்களின் கவனத்தைத் திருப்ப பிசாசு எத்தனையோ வழிகளைப் பயன்படுத்துகிறான். கிறிஸ்தவ வாலிபர்கள் தங்களுடைய நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்கிக்கொள்ளக்கூடாது.
கல்வினுக்குப் 11 வயதாக இருந்தபொழுது அவருடைய தகப்பன் அவரை நோயோன் கெத்தீட்டிரலில் ஒரு சாப்பிளினாக நியமனம் பெறவைத்தார். 11 வயதில் சாப்பிளினாக நியமனம் பெறுவது என்றால் லேசான காரியமா? இத்தனை சிறிய வயதில் ஜோன் கல்வின் எவ்வளவு திறமைசாலியாக இருந்திருப்பார் என்பதை நினைத்துப் பாருங்கள். இதில் கிடைத்த வருமானம் கல்வினின் படிப்புக்குத் துணை புரிந்தது. கல்வின் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் அவருடைய தந்தை ஆர்வம் காட்டினார். 14 வயதில் கல்வின் இறையியல் கல்வி பெறுவதற்காக பாரிஸிலிருந்த பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். கர்த்தரின் கிருபையின் காரணமாக அந்த அடிப்படை ஆரம்பப் போதனைகள் எல்லாம் கல்வினுக்குப் பேருதவியாக இருந்தன. கல்வின் திறமை வாய்ந்த இலத்தீன் மாணவராக இருந்தார். இலத்தீனை அவர் ஸ்கோடியர் என்பவரிடம் கற்றுக் கொண்டார்.
திறமையாக கல்வி பயின்ற கல்வினுக்கு 1528-ம் வருடத்தில் 17 வயதாக இருந்தபொழுது மாஸ்டர்ஸ் டிகிரி அவருக்குக் கிடைத்தது. இதிலிருந்து கல்வின் எந்தளவிற்கு ஞானமும், உழைப்புமுள்ளவராக இருந்திருப்பார் என்பதை நினைத்துப்பாருங்கள். கல்வின் திறமை வாய்ந்த படிப்பாளி. படிப்பதற்கு ஒருபோதும் அவர் சளிப்புக்காட்டாமல் அதைப் பயன்படுத்திக் கொண்டார். கிடைத்த வசதிகளையெல்லாம் படிப்பதற்காகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் அவர் மாஸ்டர்ஸ் டிகிரி வாங்கிய பிறகு அவருடைய தந்தை மனம் மாறி இறையியல் படித்துக் கொண்டிருந்த கல்வினை சட்டம் படிக்கும்படி 1528ல் ஓர்லீன்ஸுக்கும், 1529ல் போர்க்ஸுக்கும் அனுப்பிவைத்தார். அங்குதான் அவருக்கு லத்தின் மொழி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்காலத்தில் அது அவருக்குப் பேருதவியாய் இருந்தது. புதிய ஏற்பாடு எழுதப்பட்ட மொழி கிரேக்கம். அதையும் கல்வின் கற்றுக்கொண்டதால் பிற்காலத்தில் வேதத்தைத் தத்துவரீதியாக ஆராய்ந்து போதிக்கவும் நல்ல ஒரு பிரசங்கியாகவும் உருவாகுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. W.G. கிரேயர் என்ற ஒரு போதகர் கல்வினைப் பற்றி எழுதுகிறபோது சொல்லுகிறார், ‘1526-ம் 1531-ம் இடைப்பட்ட காலத்தில் ஜோன் கல்வின் ஓர்லீன்ஸ், போர்க்ஸ் என்ற இரு இடங்களிலும் இருந்த பல்கலைக்கழகங்களில் சட்டம் பயின்றார். அக்காலத்திலிருந்த இரண்டு மாபெரும் ஆசிரியர்களிடம் அவர் சட்டம் கற்றுக்கொள்ள முடிந்தது. கர்த்தரின் கரம் தம்முடைய பராமரிப்பின் அடிப்படையில் கல்வினை வழி நடத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம். அவர் அந்தக் காலத்திலிருந்த மிகவும் திறமையான பேராசிரியர்களிடம் இருந்து கல்வி கற்றுக்கொள்ள முடிந்தது. பிற்காலத்தில் திருச்சபை சீர்திருத்தத்தை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதற்கு அது மிகவும் வழியேற்படுத்திக் கொடுத்தது’ என்று கிரேயர் தன் நூலில் எழுதியுள்ளார். ஆனால் இதெல்லாம் கல்வினுக்கு அன்று தெரிந்திருந்ததா? நிச்சயம் இல்லை. கல்வினின் வாழ்க்கையில் ஆண்டவரின் கரம் இருந்ததை இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற சட்டம் பயின்றது கல்வினுக்கு பின்னால் பிரசங்க ஊழியத்திற்கும், சீர்திருத்தவாத கோட்பாடுகள்பற்றிய ஆத்மீகத் தர்க்கங்களில் ஈடுபடுவதற்கும் பேருதவி புரிந்தது. பெருங்கல்விமான்களோடு வாதத்தில் ஈடுபடுவதற்கு சாதாரண மனிதர்களால் முடியாது. கர்த்தர் கல்வினை வழிநடத்தி சீர்திருத்தப் பணியை சிறப்பாக அவர் செய்வதற்கான அத்தனை பயிற்சியையும் அவருக்கு அளித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் காண்கிறோம்.
கல்வினின் தந்தை 1529-ம் வருடம் இறந்தார். ஆனால் 1529-களில் கல்வினின் வாழ்க்கையில் கர்த்தர் இடைப்பட்டிருந்தாரா? என்பதைத் தெளிவாக சொல்லமுடியவில்லை. 1532-ம் வருடம் கல்வினுக்கு Doctor of Law பட்டம் கிடைத்தது. அவ்வேளையிலும்கூட கல்வினுக்கு வயது மிகவும் குறைவு. வாலிப வயதிலேயே அவர் சட்டக்கலையில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தார். கல்வின் அதிகாலையிலேயே எழுந்து படிக்க ஆரம்பிப்பார். அதற்குப் பிறகு ஒரு சின்ன ஓய்வு; வேறு வேலைகள். மறுபடியும் இரவு முழுவதும் படிக்க ஆரம்பிப்பார். எத்தனைப் பெரிய திறமைசாலியாக இருந்தபோதும் இப்படி நேரத்தைப் பயன்படுத்தி கடினமாக உழைத்துப் படித்ததால் கல்வினின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான உழைப்பால் அவருக்குப் பின்னால் பல வியாதிகள் வந்தன; ஆத்திரைட்டிஸ் வந்தது. கவுட் வந்தது (மூட்டு வலி). அது பயங்கரமானது. கல்லீரலில் கற்கள் வந்து மிகவும் துன்பப்பட்டார். ஆமரோய்ன், கம்டினிஸ், பல்லிகம் போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டார். புளுரசியும் இறுதியில் காசநோயும் அவருக்கு வந்தது. கடைசிக்காலத்தில் பிரசங்க வேளையில் பல தடவைகள் அவர் இரத்தம் கக்கியுள்ளார் என்று அறிகிறோம்.
ஜோன் கல்வின் வாழ்ந்தது 55 வயதுவரைதான். அவர் 1564ம் ஆண்டு கர்த்தரின் பாதத்தை அடைந்தார். ஆனால், நாம் 200 வயசு வாழ்ந்தாலும் சாதிக்க முடியாத, நினைத்துப் பார்க்கவும் முடியாதவைகளை அவர் தன் வாழ்நாளில் சாதித்திருந்தார். கல்வினின் மூலமாகக் கர்த்தர் பெருங்காரியங்களைச் செய்தார். கல்வின் தன்னுடைய சரிர நலத்தைபற்றி எழுதும்போது தொடர்ச்சியான சரீர உபாதைகள் தனக்கு மரணப் போராட்டமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
கல்வின் வாலிப வயதில் இருக்கும்போது மார்ட்டின் லூத்தரின் போதனைகளின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. கல்வினின் உடன்பிறவா சகோதரன் மார்ட்டின் லூத்தரின் போதனைகளில் ஆர்வம்காட்டிப் படிக்க ஆரம்பித்திருந்தார். கல்வினும் அதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். கல்வினுக்கு எப்போது எவ்வாறு இரட்சிப்பு கிடைத்தது? கடினமாக இருந்த கல்வினின் இருதயத்தை மாற்றி ஆண்டவர் எப்போது அவருக்கு இரட்சிப்பைக் கொடுத்தார்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடி சபை வரலாற்றை ஆராய்கிறபோது குறிப்பிட்ட இந்த ஆண்டிலோ, இந்த மாதத்திலோ, வாரத்திலோ அது நடந்ததாக சொல்ல முடியாது. பரிசுத்த ஆவியின் கிரியை அவருடைய வாழ்க்கையில் படிப்படியாக நிகழ்ந்து அவர் இரட்சிப்பை அடைந்திருக்கிறார் என்றே சொல்ல முடியும். இதைப்பற்றி கல்வின் விளக்கியிருக்கிறார். பிரென்சு மொழியில் அது எழுதப்பட்டிருக்கிறது. அதை ராபட்ரெய்ம் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். கல்வின் சொல்லுகிறார், ‘நான் ரொம்பவும் கஷ்டப்பட்டு சட்டம் படித்தேன். இருந்தபோதும் கர்த்தர் தம்முடைய பராமரிப்பின் அடிப்படையிலே என்னை வேறு வழியில் போகவைக்க ஆரம்பித்தார். நான் போப்புகளின் வழிமுறைகளைப் பின்பற்றி வந்திருந்தபோதும் கர்த்தர் நான் எதிர்பாராதவிதமாக திடீர் என்று என் வாழ்க்கையில் இடைப்பட்டு எனக்கு மனந்திரும்புதலைக் கொடுத்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுகின்ற ஒரு மனபான்மையை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் மூலமாக உண்மையான பக்திவிருத்தி என்ன என்பதை நான் என்னுடைய வாழ்க்கையில் அறிந்துகொண்டேன். என்னுடைய இருதயத்திலே அந்த பக்திவிருத்திக்கான தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. தொடர்ந்தும் கூட நான் சட்டத்தைப் படித்தேன். ஆனால் அதை நான் முற்றாகக் கைவிடாவிட்டாலும் ஒரு புதிய மனிதனாக அதை நான் கற்றேன்’ என்று சொல்லியிருக்கிறார். இன்றைக்கும்கூட அவர் எப்படி இரட்சிப்பை அடைந்தார் என்ற விவாதமும், ஆய்வும் கல்விமான்கள் மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது. இருந்தபோதும், அது உடனடியாக இன்ன நேரத்தில், இந்த நாளில் நிகழ்ந்தது சொல்லமுடியாவிட்டாலும் அது நிச்சயம் தன்னில் நிகழ்ந்திருக்கிறது என்பது கல்வினுக்குத் தெரிந்திருந்தது.
இப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வினுடன் கர்த்தர் இடைப்பட்டு மனந்திரும்புதலையும் இரட்சிப்பையும் அவருக்குக் கொடுத்தார் என்பதை அறிந்து கொள்ளுகிறோம். இரட்சிப்பை அடைந்த கல்வின் வேதத்தை வாசிக்க ஆரம்பித்தார். புதிய உத்வேகத்தோடு வேதத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அவருடைய வாழ்க்கை முன்பு இருந்ததுபோல பின்பு எப்பொழுதும் இருக்கவில்லை. இரட்சிப்படைந்த கல்வின், கர்த்தராலே அப்படி இரட்சிப்பை பெற்று சீர்திருத்தவாத காலத்தில் ஒரு முக்கிய மனிதனாக, அதிரடிப் பிரசங்கியாக, அருமையான போதகராக உருவெடுத்தார். பின்னால் ஜெனீவாவில் அவர் ஒரு சபையை நிறுவினார். மிகவும் திறமை வாய்ந்த ஒரு எழுத்தாளராக, ஒரு பெரும் பேராசிரியராக போதக ஊழியத்துக்குத் தயாராகிறவர்களுக்கு இறையியல் பயிற்சி கொடுக்கிறவராக இருந்தார். வாழ்க்கையில் இயற்கையாகவே கூச்சசுபாவம் கொண்டவராக இருந்தபோதும் கர்த்தருக்கு மட்டும் பயந்து உலகத்தில் எந்த மனிதனுக்கும் பயப்படாதவராக கல்வின் இருந்தார். கல்வினை நாம் எண்ணிப் பார்க்கிறபோது எதைக் கவனிக்கிறோம் தெரியுமா? கல்வினுக்குப் பின்னால் இருந்து அவருக்கு உதவி செய்கின்ற இறையாண்மையுள்ள தேவனைப் பார்க்கிறோம். அவரே கல்வினை ஒரு மாபெரும் மனிதராக மாற்றியிருந்தார். அவரே கல்வினை வளர்த்தார்; அவரை எழுப்பி சீர்திருத்தம் பரவுவதற்கு முக்கியமான மனிதராக ஜெனீவாவில் பயன்படுத்தினார். கல்வினைப்பற்றி எழுதிய ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார், “தன்னுடைய பலவீனங்களையும், குறைபாடுகளையும் நன்றாக அறிந்திருந்த ஒரு மனிதர் கல்வின். நாம் அவருடைய வாழ்க்கையைப் பார்த்து இப்படிப்பட்ட ஒரு தேவ மனிதன் என்று எண்ணி ஆச்சரியப்படுகிறபொழுது, கல்வின் நாம் அவரைப் பார்த்து ஆச்சரியப்படாமல் கர்த்தரைப் பார்க்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் எப்பொழுதும் நம்மைச் சுட்டிக்காட்டப் பார்ப்போம். கல்வினோ தன்னைப் பார்க்காமல் நாம் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கும்படியாக சொல்லுகிறார். நாம் நம்முடைய காதுகளின் மூலமாக நம் இருதயத்தைத் தாழ்த்தி அவருடைய பேச்சைக் கேட்கப் பார்ப்போம். கல்வினோ கர்த்தரின் பேச்சைக் கேள், கர்த்தரின் பேச்சைக் கேள் என்று நமக்குச் சொல்லுகிறார்” என்று எழுதுகிறார்.
எந்தவிதமான குறைபாடும் சொல்லாமலும், சிந்தித்துப் பார்க்காமலும் ஜோன் கல்வினை ஏற்றுக்கொள்ளும்படி நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்வது தவறு. இத்தகைய மாதிரியான மாபெரும் திறமைகளைத் தன்னில் கொண்டு பரிசுத்தமான மனிதனாக இருந்த கல்வினைக் கர்த்தரின் கிருபையே அத்தகையவராக மாற்றியிருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ளும்படி கல்வினின் வாழ்க்கை நம்மை அழைக்கிறது. கல்வின் எதிர்பார்ப்பதெல்லாம் கர்த்தருடைய சத்தியத்தை நம்முடைய வாழ்க்கை விதியாகக் கொண்டு நாம் நடக்கவேண்டும் என்பதுதான். தன்னுடைய வாழ்க்கை மூலம் நாம் கர்த்தரைப் பார்க்கவேண்டும் என்று கல்வின் நம்மை அழைப்பதைக் கவனியுங்கள். தன்னைப் பெருமைப்படுத்தாமல் ஆண்டவரை நாம் மகிமைப்படுத்த வேண்டும் என்கிறது ஜோன் கல்வினின் வாழ்க்கை வரலாறு.
(2) இரண்டாவதாக, ஜோன் கல்வின் 16-ம் நூற்றாண்டுத் திருச்சபை சீர்திருத்தத்தில் வகித்த பங்கை ஆராய்வோம்.
எத்தகைய பங்கை கல்வின் 16-ம் நூற்றாண்டு சீர்திருத்த காலத்துக்கு அளித்தார்? ஏற்கனவே விளக்கியதுபோல் கர்த்தருடைய வழிநடத்தலால் திருச்சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளம்போட்ட மனிதனாக மார்டடின் லூத்தரை நாம் திருச்சபை வரலாற்றில் பார்க்கிறோம். அதேவேளை சீர்திருத்தவாத போதனைகளுக்கு உருவம் கொடுத்து முறைப்படுத்திய மனிதனாக கல்வினைக் கர்த்தர் பயன்படுத்தி இருக்கிறார். இதுதான் இரண்டு மனிதர்களிடையேயும் உள்ள பெரிய வேறுபாடு. இந்த இரு மனிதர்களும் திருச்சபை வரலாற்றில் வகித்த பங்கை நாம் முழுமையாக உணரவேண்டுமானால் அதற்கு முன்னிருந்த நிலைமையை ஓரளவு புரிந்துகொள்ளுவது அவசியம்.
இவர்களுடைய காலத்துக்கு முன்பு அச்சுக்கூடம் இருக்கவில்லை. இவர்கள் காலத்தில்தான் அச்சுக்கூடம் உருவானது. இவர்களுக்கு முன் ஏறக்குறைய ஒன்பது அல்லது பத்து நூற்றாண்டுகளாக ரோமன் கத்தோலிக்க மதம் கடுங்கோலாட்சி வந்திருந்தது. இவர்கள் காலத்துக்கு முன் வேதம் இலத்தீன் மொழியில் மட்டுமே இருந்தது; மக்கள் வாசிக்கக்கூடிய மொழியில் அது இருக்கவில்லை. இலத்தீன் மொழியிலுள்ள வேதாகமச் சுவடிகளை ரோமன் கத்தோலிக்க குருமார்கள் மட்டுமே வைத்திருந்தார்கள். அந்தக்காலத்தில் கர்த்தருடைய வார்த்தைக்குப் பெரும் பஞ்சமிருந்தது. இன்றைக்கு நம்மினத்தில் இருப்பதையும்விட பல மடங்கு மோசமான நிலையில் இருந்தது. நமக்குத் தரமான மொழிபெயர்ப்பாக இல்லாவிட்டாலும் தமிழில் வேதாகமம் இருக்கிறது. அன்று அவர்கள் கையில் வேதாகமம் இருக்கவில்லை. அதை வாசிக்கவோ, கற்றுக் கொள்ளவோ எவருக்கும் அனுமதி இருக்கவில்லை. அதை மக்களுடைய மொழியில் மொழிபெயர்ப்பதற்குத் தடையும் தண்டனையும் இருந்தது. கர்த்தருடைய வார்த்தை மக்களுடைய கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது.
கிருபையின் மூலமாக விசுவாசத்தின் ஊடாக இரட்சிப்பு வருகிறது என்ற போதனையை ஒருவரும் கேட்க முடியாமலும், அதைப் பிரசங்கிப்பதற்கு இடமில்லாமலும் இருந்த காலம் அது. தனிப்பட்ட விதத்தில் யாரும் வேதத்திற்கு வியாக்கியானம் கொடுப்பதற்கு அன்று உரிமை இருக்கவில்லை. அப்படிச் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வேதத்தை வாசித்தவர்களையும், வேதத்திற்கு வியாக்கியானம் கொடுத்தவர்களையும் கத்தோலிக்கர்கள் பொது இடத்தில் தூணில் கட்டி, நெருப்பு வைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள். இத்தகைய கொடூரமான காலகட்டத்தில்தான் மார்டின் லூத்தரைக் கர்த்தர் எழுப்பினார். ஜெர்மன் மொழியில் வேதத்தை மொழிபெயர்க்க வைத்தார். வேதத்தை மக்கள் விரும்பி மறுபடியும் வாசிக்க முடிந்தது. இதற்குப் பிறகே பரிசுத்த வேதாகமம் ஏனைய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஜோன் கல்வின் நேரடியாக வேதமொழிபெயர்ப்பில் ஈடுபடாவிட்டாலும் அதில் அவருக்கிருந்த பங்கைக் குறைத்துமதிப்பிட முடியாது.
இக்காலத்தில் ஜோன் கல்வின் வேதத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். வேதத்தைப் பயின்று அதற்கு வியாக்கியானம் கொடுக்க ஆரம்பித்தார். 1534ம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க சபையிலிருந்து கல்வின் விலகினார். அன்று அப்படிச் செய்வதைக் கத்தோலிக்கர்கள் சும்மாவிடமாட்டார்கள். அப்படிச் செய்து ஒதுங்கிப்போய்விடுவது என்பது சுலபமானதல்ல. ஆனாலும் கல்வின் அதை தைரியமாகச் செய்தார். உடனே என்ன நடந்தது தெரியுமா? அடுத்த வருடமே அவரை பிரான்சிலிருந்து நாடு கடத்தினார்கள். கல்வின் சுவிட்ஸர்லாந்து நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். ஏற்கனவே அவர் வக்கீலாகவும், திறமைவாய்ந்த அறிவாளியாகவும் இருந்தார். அதனால் சுவிட்சர்லாந்தில் அவர் வக்கீலாக பணிபுரிய ஆரம்பித்தார். இந்தக் காலத்தில் அவர் தன்னுடைய உடன்பிறவா சகோதரன் மொழி பெயர்த்திருந்த பிரெஞ்சு வேதாகமத்திற்கு அறிமுக உரை எழுதினார்.
இந்தக் காலத்தில் பிரான்ஸில் கத்தோலிக்கமதம் தீவிரமாக இருந்ததால் கிறிஸ்தவர்கள் அங்கே கடுந்தொல்லைக்கு உள்ளானார்கள்; துன்புறுத்தப்பட்டார்கள். அநேகர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1536-ம் ஆண்டு கல்வினுக்கு வயது 26 ஆக இருந்தது. அப்போதுதான் அவர் தன்னுடைய அற்புதமான இறையியல் நூலான The Institute of the Christian Religion என்பதை எழுதினார். ஆரம்பத்தில் அது ஒரு கைப்பிரதி அளவில் இருந்தது. நாளடைவில் அதை மேலும் மேலும் திருத்தி விளக்கங்களை அதிகமாகக் கொடுத்து கல்வின் வெளியிட்டார். 1550ல் இருந்து 1559 வரையில் அது பலமுறை திருத்தப்பட்டு விரிவடைந்து இறுதியில் 80 அதிகாரங்களைக் கொண்டதாக இருந்தது. இன்று அது நூலாக 800 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது. அதை எழுதியபோது கல்வினின் நோக்கம் என்ன தெரியுமா? அதைக் கைப்பிரதிபோல் எழுதி பிரான்ஸ் நாட்டு அரசனுக்கு, கிறிஸ்தவம் எது என்பதை உணர்த்துவதற்காக அனுப்புவதுதான் கல்வினின் நோக்கமாக இருந்தது. இந்நூலில் கல்வின், கர்த்தர் யார், அவருடைய குணாதிசயங்கள் யாவை, பிதா குமாரன் ஆவியானவரின் திரித்துவத் தன்மைகள் யாவை, திருச்சபை என்பது எது, அதன் அமைப்பும், ஆராதனையும் எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் முறைப்படுத்தி அருமையாக தெளிவாக எழுதியிருந்தார். 26 வயதில் அந்த அளவுக்கு தேவனுடைய சத்தியத்தை அவர் கற்றுத் தேர்ந்திருந்தார்.
இதற்கெல்லாம் கல்வின் எந்தளவுக்கு உழைத்திருக்க வேண்டும் என்பதை நாம் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அன்று வேதம் மக்களுடைய மொழியில் வர ஆரம்பித்திருந்த ஆரம்ப காலம். கல்வின் வேதத்தின் மூலமொழிகளில், அதாவது பழைய ஏற்பாட்டை எபிரெய மொழியிலும், புதிய ஏற்பாட்டை கிரேக்க மொழியிலும் வாசிக்கக் கூடிய திறமை பெற்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் அன்று வேதவிளக்க வியாக்கியான நூல்கள் இருக்கவில்லை. எழுத்தில் இருந்ததெல்லாம் கத்தோலிக்கப் போதனைகள் மட்டுமே. கல்வின் வேதத்தைப் படித்து வேத இறையியல் சத்தியங்களுக்கு உருவம் கொடுக்க வேண்டியிருந்தது. அது சாதாரணமான விஷயமல்ல. எந்தளவுக்கு அவருடைய வாசிப்பும், கற்றறிந்துகொள்ளும் வைராக்கியமும் இருந்தது என்பது மட்டுமல்லாமல், எந்தளவுக்கு ஆவியானவர் அவரோடிருந்து அவரை வழிநடத்தியிருக்கிறார் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கல்வினிடமிருந்து நாம் உழைக்கவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
Institute என்ற நூலை எழுதிய பிறகு கல்வின் சுவிட்ஸர்லாந்து தேசத்தில் இருந்து இத்தாலிக்குப் போனார். அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு மறுபடியும் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸுக்குத் திரும்ப நினைத்தார். அதைச் செய்ய நினைத்து முதலில் ஜெர்மனிக்குப் போய், அங்கிருந்து கடைசியில் ஸ்டார்ஸ்பர்க் என்ற இடத்தில் போய் வாழ்வோம் என்று தீர்மானம் பண்ணினார். இது நடந்தது 1536ம் ஆண்டில். ஆனால், அவரே நினைத்து பார்க்காத ஒரு காரியம் அவருடைய வாழ்க்கையில் நடந்தது. ஜெர்மனியில் ஸ்டார்ஸ்பர்க்கிற்கு போவதற்கு முன் கல்வின் ஜெனீவாவில் கொஞ்சக்காலம் தங்கிவிட்டுப் போவதற்குத் தீர்மானம் செய்து அந்நகரை அடைந்தார். அப்படி அவர் ஜெனீவாவில் இருந்தபோது ஆண்டவர் அவருடைய வாழ்க்கையில் அதியற்புதமாக இடைப்பட்டார். என்ன நடந்தது தெரியுமா? அப்போது ஜெனீவாவிலிருந்து திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனிதனின் பெயர்தான் William Ferral. அவர் அஜானுபாகுவான தோற்றத்தை கொண்ட, மல்யுத்த வீரனைப்போன்ற சரீரத்தைக் கொண்டிருந்த உயரமான மனிதர். அதே நேரம் கல்வின் மிகவும் மெலிந்தத் தோற்றத்தையும், சரீர பலவீனமும் கொண்டவராக இருந்தார். இருவரும் எதிரும் புதிருமான தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள். கல்வினுக்கு இரவு பகலாகப் படித்து உழைத்து சரீரம் பலவீனப்பட்டிருந்தது. அவர் ஒல்லியாக இருந்தது மட்டுமல்லாமல் கூச்ச சுபாவமும் கொண்டவராக இருந்தார்.
கல்வின் ஜெனீவாவில் தன்னுடைய அறையில் ஒரு நாள் தங்கியிருந்து அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார். ஸ்டார்ஸ்பர்க்கு போய் மேலும் படிப்பதே அவருடைய திட்டமாக இருந்தது. அதற்கான திட்டத்தை அவர் தீட்டிக்கொண்டிருந்திருக்கலாம். ஒரு நாள் கல்வின் இருந்த அறைக்கு வில்லியம் பெயீரல் ஒரு மிருகம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளுக்குள் நுழைவதுபோல் வேகத்தோடு நுழைந்தார். கல்வினுக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் யார் என்பது கல்வினுக்குத் தெரிந்திருக்கவில்லை. யார் என்று கேட்பதற்குக்கூட கல்வினுக்கு உடனடியாக வாய் வரவில்லை. பெயீரல் கல்வினைப் பார்த்துச் சொன்னார். ‘நீ இப்படியெல்லாம் எங்கேயும் போகமுடியாது. ஜெனீவாவிற்கு நீ தேவை. நீ இந்த ஊரில்தான் இருக்கவேண்டும், இங்கிருந்து சீர்திருத்த பணியைத் தொடர வேண்டும். கல்வினுக்கு பேச்சுமுச்சு இல்லாமல் போய்விட்டது. இந்த சந்திப்பைப்பற்றியும், கல்வின் என்ன நினைத்தார் என்பதையும் ஒரு வரலாற்று அறிஞர் பின்வருமாறு எழுதியிருக்கிறார். ‘பெயீரல் இப்படிச் சொன்ன போது இதற்கு எதிராக எதையும் சொல்லுவதற்கு வார்த்தைகளை கல்வின் தேடிப் பார்த்தபோது அவரால் எதையும் சொல்ல முடியவில்லை. இந்த மனுஷன் அறைக்குள் நுழைந்து கர்த்தருடைய சாபம் எனக்கு வந்திருக்கிறது, நான் ஓய்வுபெறுவதற்காக எங்கும் போனால் சபிக்கப்பட்ட மனுஷனாகி விடுவேன் என்று சொல்லி, அமைதியாக எங்கேயாவது போய் வாழ்க்கையைப் படிப்பில் செலவிடலாம் என்று நினைத்திருந்த என்னை இந்த மனிதர் எந்தவித சாக்குபோக்கும் சொல்வதற்கு வழியில்லாமல் செய்துவிட்டார். அவருடைய வாதத்தினாலும், கர்த்தருடைய சாபம் என் மேல் வரும் என்று ஆணித்தரமாக சொன்னதனாலும் நான் ரொம்பவும் பயந்துபோய் அன்றைக்கே என் பிரயாணத்திற்கு முடிவுக்கட்டி ஜெனீவாவிலேயே இருந்துவிட்டேன்’ என்று கல்வின் சொல்லியிருக்கிறார் என்று ஒரு அறிஞர் எழுதியிருக்கிறார். பெயீரல் யார் அனுப்பியது? கர்த்தர் தான். சில நேரம் நமக்கும் இப்படி போகலாமா, அப்படி போகலாமா என்று வாழ்க்கையில் தீர்மானம் எடுக்கத் தயங்கிக்கொண்டு இருப்போம் இல்லையா? அந்த நேரம் யாராவது வந்து, ஏன் தேவையில்லாமல் யோசிக்கிறாய் இதைச் செய் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் கல்வினுக்கு அன்று நடந்தது. அன்றோடு கல்வினின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அந்த மாற்றம் என்ன? வில்லியம் பெயீரலோடு இணைந்து ஜெனீவாவிலிருந்து கல்வின் தேவனுடைய வார்த்தையைப் போதிக்க ஆரம்பித்தார். ஏதோ கர்த்தரே பெயீரலை அனுப்பித் தன்னுடைய கரத்தைப் பிடித்துத் தூக்கி வில்லியம் பெயீரல் மூலம் தன் வாழ்க்கை பயணத்தை மாற்றினார் என்பதைக் கல்வின் உணர்ந்தார். அந்த காலத்தில் கல்வின் வேதவியாக்கியானங்களை ஜெனீவாவிலிருந்து கொடுக்க ஆரம்பித்தார். மிக விரைவில் அவருடைய பெயர் ஜெனீவா முழுவதும் பரவ ஆரம்பித்தது. பெயீரலும், கல்வினும் தெளிவான வேதவிளக்கங்களை ஜெனீவா நகரம் முழுவதும் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் நகரத் தலைவர்களுக்கும் இடையில் பிரச்சனை உருவாகி நகரத்தில் ஒரு கிளர்ச்சிப் போராட்டம் எழுந்தது.
கல்வின் தன் சபையில் வெளிப்படையாகப் பாவம் செய்து வாழ்ந்த ஒரு மனிதனுக்கு திருவிருந்து கொடுப்பதை நிறுத்திவிட்டார். அதெல்லாம் அன்று சுலபமான காரியமல்ல. அரசியல்வாதிகளும், நகரத் தலைவர்களும், பிரபலமானவர்களும் சபையில் அமர்ந்திருந்தார்கள். கல்வினின் செயல் அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகரத் தலைவர்கள்கூடி முடிவெடுத்து உடனடியாகக் கல்வினை ஜெனீவாவிலிருந்து நாடு கடத்தினார்கள். 1538ல் மறுபடியும் நகருக்கு வரமுடியாத நிலை இருந்தது. கல்வின் ஜெர்மனியில் போய் இருந்தார். அங்கிருந்து மூன்று வருஷம் பிரசங்கம் செய்தார். 1540ம் வருடத்தில் 31 வயதாக இருக்கும்போது சபையிலிருந்த ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 1549-ல் அவள் இறந்து விட்டாள். 40 வயதாக இருக்கும்போது கல்வின் உடனடியாக மறுமணம் செய்துகொள்ளவில்லை. 1941-ம் ஆண்டில் மறுபடியும் கல்வின் ஜெனீவாவுக்கு திரும்பி வந்தார். சாகும்வரை அவர் நகரத்தை விட்டுப் போகவில்லை. அங்கிருந்து மேலும் அதிகமாகவும், அற்புதமாகவும் அவர் வேதத்தைப் பிரசங்கம் செய்தார். அதன் காரணமாக ஜெனீவாவின் திருச்சபை அதிகமாக வளர்ந்தது. இதையெல்லாம் கல்வின் போராட்டங்களுக்கு மத்தியில் செய்ய நேரிட்டது.
ஜெனீவாவில் எத்தனையோ அரசியல் போராட்டங்களுக்கு கல்வின் முகங்கொடுக்க நேரிட்டது. இருந்தபொழுதும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் இரண்டு தடவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரசங்கம் செய்தார். வாரத்தில் ஒரு நாள் விரிவுரைகள் அளித்தார். புதிய ஏற்பாட்டிலிருந்து பிரசங்கம் செய்வதை ஞாயிற்றுக்கிழமையில் வழக்கமாக வைத்திருந்தார். வார நாட்களில் பழைய ஏற்பாட்டிலும், சங்கீதங்களிலும் இருந்தும் அவர் பிரசங்கம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்வினின் பிரசங்கம் ஜெனீவா மக்களை அதிகம் பாதித்தது. அது அவர்களுடைய ஒழுக்கத்தைப் பாதித்து நகர மக்கள் திருந்த ஆரம்பித்தார்கள். ஒரு பெரிய ஆத்மீக எழுச்சி அன்று ஜெனீவாவில் ஏற்பட்டது. இதற்கு கல்வினின் பிரசங்க ஊழியமே காரணம். 24 வருடங்கள் கல்வின் ஜெனீவாவின் திருச்சபையில் போதகராக இருந்தார். 4000-க்கும் மேலான பிரசங்கங்களை அவர் அங்கு அளித்திருந்தார். அந்த சமயத்தில் இன்னொன்றும் நடந்திருந்தது. இங்கிலாந்திலும், ஸ்கொட்லாந்திலும், பிரான்ஸிலும் கத்தோலிக்கர்களாலே கிறிஸ்தவர்கள் பெருந்துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தார்கள். பெருந்தொகையானோர் கொலை செய்யப்பட்டார்கள். அநேகர் உயிர் தப்பி அகதிகளாக ஜெனீவாவுக்கு ஓடினார்கள். அப்படி வந்தவர்களால் ஜெனீவா திருச்சபை நிரம்பியது. அவர்களில் பலர் கல்வினிடம் இருந்து இறையியல் பயிற்சி பெற்றார்கள். கல்வின் ஜெனீவாவில் தியோடர் பீசாவைத் தனக்குத் துணையாக வைத்துக்கொண்டு புரொட்டஸ்தாந்து அக்காடமியொன்றை 1559ல் ஜெனீவாவில் நிறுவினார். அது இரண்டு பிரிவாக இருந்தது. முதலாவது ஆரம்பக் கல்வியைத் தருவதாகவும், இரண்டாவது உயர்கல்வியையும், இறையியல் கல்வியும் பயிற்சியும் அளிப்பதாகவும் இருந்தது. கல்வின் கல்விக்கு பெருமதிப்புக்கொடுத்தார். திருச்சபை சீர்திருத்தத்திற்கு கல்வி அவசியம் என்பதை அவர் பெரிதும் உணர்ந்திருந்தார். பரிசுத்தத்தின் தாய் அறியாமை என்ற கத்தோலிக்க மதக் கோட்பாட்டைக் கல்வின் அடியோடு நிராகரித்தார். கல்வி சமுதாயத்தின் மேல் தட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறவேண்டும் என்பதில் கல்வினும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்தனர்.
பல தேசங்களில் இருந்து வந்தவர்கள் ஜெனீவாவில் கல்வினிடம் இறையியல் கற்றுக்கொண்டார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜோன் நொக்ஸ். அவர் ஸ்கொட்லாந்தில் திருச்சபை சீர்திருத்தத்திற்காகப் பணியாற்றிய பெரும் அதிரடிப் பிரசங்கி. ஜோன் நொக்ஸ் நான்கு வருடங்கள் கல்வினுக்குக் கீழாக இருந்து கர்த்தரின் வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். கல்வினுடைய கல்லூரியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த ஜோன் நொக்ஸ், ‘அப்போஸ்தலர்களுடைய காலத்திற்குப் பிறகு இந்த உலகத்திலிருந்த கிறிஸ்துவின் இறையியல் கல்லூரி கல்வினுடையது தான்’ என்று கூறியிருந்தார். கல்வினுடைய ஊழியத்தைப்பற்றிப் மேலும் கருத்துத் தெரிவித்திருந்த ஜோன் நொக்ஸ், ‘நான் எங்கெல்லாமோ போய் சபையில் பிரசங்கம் கேட்டிருக்கிறேன். ஆனால் ஜெனீவாவில் மட்டுந்தான் வேதப்பூர்வமான பிரசங்கத்தைக் கேட்டது மட்டுமல்லாமல் வேதபூர்வமாக வாழ்கிற மக்களையும் பார்த்திருக்கிறேன்’ என்றார்.
கல்வினுடைய பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டவர்கள் மறுபடியும் தங்கள் சொந்த நாடுகளுக்கு மிஷனரிகளாகப் போய் தேவனுடைய வார்த்தைகளை அங்கு போதித்தார்கள். ஜோன் நொக்ஸ் ஸ்கொட்லாந்துக்குப் போய் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்து அங்கு சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாது கல்வின் ஜெனீவாவின் சபை மூலமாக அநேகரை மறுபடியும் பிரான்சு நாட்டுக்கு மிஷனரிகளாக அனுப்பிவைத்தார். அப்படிப்போன பலர் உடனடியாக கத்தோலிக்கர்கள் கையில் துன்புறுத்தப்பட்டு உயிரிழக்க நேரிட்டது. இருந்தும் மனந்தளராமல் மறுபடியும் மறுபடியும் கல்வின் பிரசங்கிகளை பிரான்சுக்கு அனுப்பிவைத்தார். பிரான்ஸுக்குப் போய் பல மிஷனரிகள் உயிரிழந்ததினால் கல்வினுடைய கல்லூரிக்கு ‘மரணத்தின் கல்லூரி’ (School of Death) என்ற பெயர் அன்று பொதுவில் வழங்கியது. பயங்கரமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கல்வினுடைய இந்தப் பணியால் பிரான்சில் 1200ம் மேற்பட்ட சபைகள் நிறுவப்பட்டன. பல சபைகள் 1000ம் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு வேதபூர்வமாக இயங்கி வந்தன. பிரான்சுக்கு மட்டுமல்லாமல் கல்வினிடம் பயிற்சி பெற்ற மிஷனரிகள் பிரேசில் நாடுவரை சுவிசேஷத்தைப் பிரசங்கித்து சபை நிறுவ அனுப்பிவைக்கப்பட்டார்கள். சீர்திருத்தவாதப் போதனையாளர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் ஆர்வம் இல்லை என்ற அபாண்டமான குற்றச்சாட்டு இங்கே அடிபட்டுப் போகிறது. சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் அளவுக்கு வேதபூர்வமாக சுவிசேஷத்தை அறிவித்து சபை நிறுவும் பணியில் ஈடுபட்டவர்கள் தொகை குறைவு. மிஷனரிப் பணிக்கெல்லாம் முன்னோடியாக அப்போஸ்தலர்களுக்குப் பிறகு 16ம் நூற்றாண்டிலேயே ஜோன் கல்வின் இருந்திருக்கிறார் என்பதை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்லுகிறது.
இன்று நாம் சீர்திருத்த சத்தியங்களைக் கற்றுப் பின்பற்ற முடிகிறது என்று சொன்னால் அதற்கு ஜோன் கல்வினுக்கு நாம் பெரிதும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எழுத்தில் இருக்கும் கல்வினுடைய போதனைகள் நமக்கு இன்று பேருதவிபுரிகின்றன. கல்வினின் மறைவுக்குப் பிறகு நெதர்லாந்து நாட்டில் இருந்த சீர்திருத்த சபைகள் மத்தியில் போலிப் போதனை தலைதூக்க ஆரம்பித்தது. ஜெக்கபொஸ் ஆர்மீனியஸ் என்ற மனிதன் கல்வினுடைய போதனைகளுக்கெல்லாம் முரணானதொரு போதனையை உருவாக்கி அதை அவனுடைய சீஷர்கள் சபை சபையாக போதிக்க ஆரம்பித்தார்கள். உடனேயே நெதர்லாந்தில் சினட் ஆப் டோர்ட் என்ற ஒரு திருச்சபை கவுன்சில் கூடி அந்தப் போதனை சரியானதா என்பதை வேதத்தை வைத்தும், கல்வினுடைய போதனைகளை வைத்தும் ஆராய்ந்தது. அப்படி ஆராய்ந்து அவர்கள் ஜெக்கபொஸ் ஆர்மீனியஸின் சீடர்களுடைய போதனைகளுக்கு எதிராக ஐந்து விளக்கத்தைக் கொடுத்தார்கள். அதற்குப் பேர்தான், கல்வினின் ஐம்போதனைகள்’ (The Five Points of Calvinism). அது கல்வினின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டது. ஜோன் கல்வின் தெளிவாக வேதபோதனைகளைக் கொடுத்திருந்தது நெதர்லாந்து திருச்சபை அதிகாரிகளுக்கு போலிப்போதனையை உடனடியாக இனங்கண்டு அதிலிருந்து திருச்சபையைக் காப்பாற்ற உதவியது. ஆர்மீனியனிஸ் சீடர்களும் போலிப்போதனையாளர்களாக அடையாளங் காணப்பட்டு உடனடியாக நாடுகடத்தப்பட்டார்கள்.
(3) மூன்றாவதாக, கல்வின் நமக்கு விட்டுச்சென்றிருக்கும் கிறிஸ்தவ இலக்கியப் பொக்கிஷங்களைக் கவனிப்போம்.
ஜோன் கல்வின் தனக்கு 26 வயதாக இருந்தபோது தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலான ‘இன்ஸ்டிடியூட்டை’ எழுதினார். கல்வின் தத்துவரீதியில் தெளிவாக எழுதக்கூடிய அருமையான எழுத்தாளராகவும் இருந்தார். கல்வினின் இந்த இறையியல் நூல் பலதடவைகள் அவரால் புதுப்பிக்கப்பட்டு உலகின் பல மொழிகளில் பல பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு விற்பனைக்கு இருக்கிறது. 1550ல் இருந்து 1559ம் ஆண்டு வரையிலும் கல்வின் அதை மறுபடியும், மறுபடியும் புதுப்பித்திருக்கிறார். இதைத் தவிர கல்வின் வேதத்தின் பெரும்பாலான நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். பவுலின் ரோமர் நூலுக்கு அவரெழுதிய விளக்கவுரை 1540ல் வெளியிடப்பட்டது. 1555ல் அவர் புதிய ஏற்பாட்டின் அனைத்து நூல்களுக்கும் விளக்கவுரை எழுதி முடித்திருந்தார். அதேவிதமாக பழைய ஏற்பாட்டு நூல்களுக்கும் அவர் விளக்கவுரை எழுதினார். அவை இன்றும் தொகுப்புகளாக ஆங்கிலத்தில் விற்பனைக்கு உள்ளன. கல்வின் தன்னுடைய பிரசங்கங்களை எழுதி வைக்கவில்லை. ஆனால், அவற்றைக் கேட்டு எழுத்தில் வரைந்த ஒரு உதவியாளர் இருந்திருக்கிறார். இதன் காரணமாக கல்வினின் அநேக பிரசங்கத் தொகுப்புகள் கிறிஸ்தவர்கள் வாசிக்கும்படியாக இன்று அச்சில் இருக்கின்றன. கல்வின் மூன்று வினாவிடைப் போதனைகளை எழுதியுள்ளார். ஆயிரகணக்கான கடிதங்களை எழுதியுள்ளார். அத்தகைய 1300 கடிதங்கள் இன்றும் இருக்கின்றன. அவை பலருக்கும் எழுதப்பட்ட இறையியல் போதனைகளைக் கொண்ட கடிதங்கள். கல்வினுடைய எழுத்துப் பணி மிகவும் அதிகம்.
கல்வினுடைய எழுத்துப் பணிக்குக் காரணம் வேதசத்தியங்களைத் துல்லியமாக மக்கள் அறிந்து வளரவேண்டுமென்ற ஆதங்கந்தான். சத்தியங்களை அறியாமல் திருச்சபை வளரவோ, தொடரவோ முடியாது என்பது கல்வினுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கத்தோலிக்க மதம் மக்கள் வேதத்தை வாசிக்கமுடியாதபடி செய்து சத்தியத்தை மறைத்துவைத்திருந்தது. கல்வின் வேதசத்தியங்களை வேதத்தில் இருந்து விளக்கி அவை மக்களைச் சென்றடையுமாறு செய்தார். அதற்கு அவருடைய எழுத்துப்பணி பேருதவியாக இருந்தது. கல்வின் வேதவசனங்களை மூலமொழிகளில் ஆராய்ந்து விளக்கங்கொடுத்தார். அவர் பழைய ஏற்பாட்டில் பிரசங்கம் செய்கிறபோது எபிரெய மொழி வேதத்தையும், புதிய ஏற்பாட்டில் இருந்து பிரசங்கம் செய்கிறபோது கிரேக்க மொழி வேதத்தையும் பயன்படுத்தியே பிரசங்கம் செய்தார். அந்தளவுக்கு அவருக்கு இந்த இருமொழிகளிலும் பாண்டித்தியம் இருந்தது. வேதத்தைத் தெளிவாகவும் துல்லியமாகவும் விளக்கிப் பிரசங்கம் செய்ய அவருக்கு இந்த வேதமொழி அறிவு பெருந்துணை செய்தது.
கல்வின் வாரத்தில் 30க்கும் மேற்பட்ட தடவைகள் வேத பிரசங்களையும், விளக்கவுரைகளையும் அளித்திருக்கிறார். மக்கள் அக்கறையோடு கூட்டங்கூட்டமாக அவருடைய போதனைகளை ஆர்வத்தோடு கேட்கக் கூடினார்கள். எந்தவிதமான குறிப்புகளையும் கையில் வைத்திராமல் தான் படிப்பறையில் தயாரித்திருந்த பிரசங்கங்களை மனதில் வைத்திருந்து தத்துவரீதியாக விளாவாரியாக பிரசங்கம் செய்யவும் விளக்கவுரை அளிக்கவும்கூடிய விசேட திறமை கல்வினுக்கு இருந்தது. அவர் சட்டத்தில் ஏற்கனவே டாக்டர் பட்டம் வாங்கியிருந்தார் என்று கவனித்திருக்கிறோம். அது அவருக்குப் பிரசங்கம் செய்யப் பேருதவிபுரிந்தது. அடுக்கடுக்காகத் தெளிவாக ஒன்று மாறியொன்றாக வாதப்பிரதாபங்களை நீதிபதி முன் வைக்கவேண்டிய பெருங்கடமை ஒரு சட்டத்தரணிக்கிருக்கிறது. அதற்கு தத்துவரீதியாக சிந்திக்கப் பயிற்சிபெற்ற மூளை அவசியம். அது கல்வினுக்குத் தாராளமாக இருந்தது. வாதங்களில் அவரை ஜெயிப்பது கடினமே.
(4) இறுதியாக, கல்வினின் போதனைகளின் முக்கியத்துவத்தைக் கவனிப்போம்.
ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருந்தேன், மார்டின் லூத்தரைக் கர்த்தர் திருச்சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளமிட எழுப்பியதுபோல் சீர்திருத்தப் போதனைகளை வகுத்துத் தொகுத்தளிக்கும் பெரும்பணிக்கு ஜோன் கல்வினை எழுப்பியிருந்தார். சீர்திருத்தம் ஆரம்பமான காலப்பகுதியில் கிறிஸ்தவப் போதனைகளை சபை அறிந்திருக்கவில்லை. சத்தியங்களெல்லாம் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சீர்திருத்தவாதிகள் இரவுபகலாக வேதத்தை ஆராய்ந்து மெய்சத்தியங்களை வெளிக்கொணர்ந்து மக்களிடம் பரப்பினார்கள். அதிலும் எல்லா சீர்திருத்தவாதிகளுக்கும் ஆரம்பத்திலேயே எல்லாப் போதனைகளிலும் முழுத்தெளிவு இருக்கவில்லை. திருவிருந்தை எடுத்துக்கொண்டால் மார்டின் லூத்தருக்கும், சுவிட்சர்லாந்து சீர்திருத்தவாதியான சுவிங்கிலிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. இவர்களுடைய போதனைகளுக்கும் கல்வினின் போதனைக்கும் இந்த விஷயத்தில் வித்தியாசம் இருந்தது. வேதமே இல்லாததுபோல் இருந்த 16ம் நூற்றாண்டில் வேதத்தை அதன் மூல மொழிகளில் கற்று சத்தியங்களை அறிந்துகொள்ள முயலுகிறபோது இத்தகைய கருத்துவேறுபாடுகள் உண்டாவதில் ஆச்சரியமில்லை. நமக்கு இன்று ஆங்கிலத்தில் இருக்கும் கிறிஸ்தவ இலக்கிய வசதி அன்றிருக்கவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் வேதத்தில் இருந்து திருச்சபை சீர்திருத்தத்திற்காகவும், மெய்யான கிறிஸ்தவத்தை நிலைநாட்டவும் கண்டுபிடிக்கப்பட்ட போதனைகளை சரிவர முறைப்படுத்தி விளக்கிப் போதிக்கவும், எழுத்தில் வடித்துத் தரவும் நிச்சயம் ஒருவர் தேவைப்பட்டார். அந்த விஷயத்தில் கர்த்தர் திருச்சபைக்குத் தந்த மாமனிதர் ஜோன் கல்வின். அதனால்தான் சீர்திருத்தப் போதனைகளுக்கு இன்னுமொரு பெயராக ‘கல்வினிசம்’ என்பது இன்றுவரை வழங்கிவருகிறது. இந்த விஷயத்தில் கல்வின் அளித்திருக்கும் பங்கைப்போல வேறு எவரும் அளித்ததில்லை என்பதில் சந்தேகமில்லை. பிரான்சு நாட்டு அரசனுக்கு கிறிஸ்தவத்தை விளக்கி அவன் சுவிசேஷத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகக் கல்வின் ஒரு துண்டுப்பிரசுரமாகத் தன்னுடைய ‘இன்ஸ்டிடியூட்’ என்ற சிறுநூலை எழுதினார் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். இது இன்று பெருநூலாக உருவெடுத்து அச்சில் தொடர்ந்திருக்கிறது. இதை ஆராய்ந்து பார்த்தால் கிறிஸ்தவ இறையியலை கல்வின் தெள்ளத் தெளிவாக ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை அருமையாக விளக்கியிருக்கிறார். பின்னால் வரலாற்றில் கல்வினின் ஐம்போதனைகளை சினொட் ஆப் டோர்ட் கவுன்சில் வெளியிட கல்வினின் இந்தப் போதனைகளே பேருதவி புரிந்தன.
கல்வின் எழுதி விளக்காத கிறிஸ்தவ சத்தியங்களே இல்லை என்று சொன்னாலும் அவருடைய முக்கியமான போதனைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுவது அவசியம். கல்வினுடைய போதனைகளே பின்னால் பதினேழாம் நூற்றாண்டில் எழுந்த பல விசுவாச அறிக்கைகளுக்கும், வினாவிடைப்போதனைகளுக்கும் பேருதவியாக இருந்திருக்கின்றன. தற்காலத்தில் பிரபலமாயிருக்கும் சீர்திருத்த இறையியல் நூல்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவற்றில் அதன் ஆசிரியர்கள் கல்வினையும் அவருடைய போதனைகளையும் பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் கவனிக்கலாம். அந்தளவுக்கு சீர்திருத்த இறையியல் போதனைகளுக்கு உருக்கொடுப்பதில் தன்னுடைய பெயரைப் பதித்துக் கொண்டிருக்கும் கல்வினை ‘சீர்திருத்த இறையியலின் தந்தை’ என்ற பெயரால் அழைப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன்.
(1) தெரிந்துகொள்ளுதல்
கர்த்தர் பாவிகளுக்கு அளிக்கும் இரட்சிப்பு பற்றிய போதனையைக் கல்வின் பாவிகள் அடைகின்ற மனந்திரும்புதலிலும் விசுவாசத்திலும் ஆரம்பிக்கவில்லை. அதற்கெல்லாம் முன்பாக உலகத்தோற்றத்திற்கு முன்பு நித்தியத்தில் திரித்துவ தேவன் பாவிகளை இரட்சிப்பதற்காக இட்ட திட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அதுவே சரியானது. இரட்சிப்பு தற்செயலாக நிகழும் அனுபவமல்ல. இறையாண்மையுள்ள கர்த்தர் நித்தியத்தில் அதைத் திட்டமிட்டுத் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுடைய பாவநிவாரணத்திற்கும் விடுதலைக்குமாகத் தன்னுடைய ஒரே குமாரனான இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பிவைத்தார் என்பதைக் கல்வின் ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அடையப்போவது யார்? அந்த மரணத்தால் உலகின் சகல மக்களுக்கும் பலனிருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு ஜோன் கல்வின் தெளிவாக பதிலளித்திருக்கிறார். கிறிஸ்துவின் மரணத்தினால் உலக மக்களுக்கு பொதுவான பலன்கள் இருக்கின்றன என்பது கல்வினிசப் போதனை. கர்த்தரின் பொதுவான கிருபையின் காரணமாக அவரால் நித்தியத்தில் தெரிந்துகொள்ளப்படாத மக்கள் யாவரும் அவருடைய பொதுவான கிருபையின் மூலம் கிறிஸ்துவின் மரணத்தின் பொதுவான பலன்களை அடைகிறார்கள். சுவிசேஷத்தைக் கேட்கும் வசதி அதன் காரணமாகத்தான் அவர்களுக்குக் கிடைக்கிறது. எவரும் சாக்குப்போக்குச் சொல்லமுடியாதபடி சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்கிறார் கல்வின்.
அதேநேரம் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் பலன்களை அனுபவிக்கிறவர்கள் யார் என்ற கேள்விக்கு கல்வின், யாரைக் கர்த்தர் நித்தியத்தில் தெரிந்துகொண்டாரோ, யாருடைய பாவவிடுதலைக்காக அந்தத் திட்டம் திரித்துவ தேவனால் தீட்டப்பட்டதோ, யாருக்காக கிறிஸ்து அனுப்பிவைக்கப்பட்டு சிலுவையில் மரித்தாரோ அவர்களுக்கே அந்த மரணத்தின் பலன் கிட்டுகிறது என்று விளக்குகிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால், நித்தியத்தில் இறையாண்மையுள்ள கர்த்தர் முன்குறித்துத் தெரிந்துகொண்ட மக்களே கிறிஸ்துவின் மரணத்தின் சிறப்பான இரட்சிப்புக்குரிய பலன்களை அடைகிறார்கள் என்று கல்வின் போதித்தார். இது இரட்சிப்புப் பற்றிய கல்வினிசப் போதனையின் முக்கியமான அம்சம்.
(2) மூலபாவம்
ஜோன் கல்வின், மனிதனைப் பிடித்திருக்கும் மிக மோசமான நோயாகக் பாவத்தை கண்டார். ஆதாம், ஏவாளின் பாவம் மனித வம்சத்தைப் பிடித்திருக்கும் மூலபாவம் என்று கல்வின் விளக்குகிறார். பாவத்தின் கோரத்தையும், அது செய்யும் கொடுமையையும் உணராதவர்களுக்கு இரட்சிப்பு சமீபிக்கப் போவதில்லை என்பதில் கல்வினுக்கு மிகவும் தெளிவிருந்தது. பாவம் மனிதனை, அவனில் எல்லாப்பகுதிகளையும் முழுமையாகப் பாதித்து, எந்தவிதத்திலும் அவன் தன்னில் ஆத்மீக மாற்றத்தை சுயமாக செய்துகொள்ள முடியாதபடி நித்திய தண்டனையை நோக்கி அவனை இழுத்துச் செல்லுகிறது என்பது கல்வினின் போதனை. பாவியே தன் பாவத்துக்குப் பொறுப்பானவன் என்றும் அவன் அடையப்போகும் தண்டனைக்கும் அவனே காரணம் என்றும் கல்வின் விளக்கியிருக்கிறார். பெலேஜியனிச, செமிபெலேஜியனிசப் போதனைகளுக்கெல்லாம் முற்றிலும் எதிரானது கல்வினின் பாவத்தைப் பற்றிய விளக்கங்கள்; அவையே வேதபூர்வமானவையுமாகும். இறையாண்மையுள்ள கர்த்தர் நேரடியாக மனிதனின் பாவத்தைத் தன்னுடைய கிருபையின் மூலமாக எதிர்கொண்டால் மட்டுமே அவனுக்கு கிறிஸ்துவின் இரட்சிப்பு கிடைப்பதற்கான வசதி ஏற்படுகிறது என்று கல்வின் விளக்கியிருக்கிறார். பாவத்தைப் பற்றிய வேதபூர்வமான விளக்கங்களை இன்று நம்மினம் கொண்டிராத இந்தக் காலங்களில் பாவத்தைப் பற்றிய ஜோன் கல்வினின் போதனைகள் அவசியம் தேவை.
(3) விசுவாசிக்க வைக்கும் கிருபை
வேதம் விளக்குகின்ற கிருபை எனும் வார்த்தை மிகப்பெரியது. இந்தக் கிருபையை இறையாண்மையுள்ள கிருபையாகக் கல்வின் காண்கிறார். அதுவே வேதம் போதிக்கும் உண்மையுங்கூட. இந்தக் கிருபை மட்டுமே பாவிக்கு மறுபிறப்பைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார் கல்வின். கிருபை கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட பாவியை அடைகிறபோது அது அவனில் ஆவியானவரின் மறுபிறப்பாகிய முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பாவி இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வைப்பதற்கு அவனை முழுமையாக மாற்றியமைப்பது இந்தக் கிருபைதான். இரட்சிப்பிற்காக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் பாவி கிருபையினால், அது தன்னில் நிகழ்த்தும் உள்ளார்ந்த ஆவிக்குரிய மாற்றத்தினால் கர்த்தரிடம் இருந்து விசுவாசத்தைப் பெற்று அவரை இரட்சிப்பிற்காக விசுவாசிக்கிறான் என்பது கல்வினின் போதனை. இதனால் இந்தக் கிருபையை திட்ப உறுதியான கிருபை என்று, அதாவது பாவியில் திட்டவட்டமாக ஆத்மீக மாற்றத்தைக் கொண்டுவரும் கிருபையாக கல்வின் விளக்கியிருக்கிறார். கல்வின் இந்தப் போதனைகளை வேதத்தில் கண்டு அவற்றிற்குத் தெளிவான விளக்கங்களைத் தந்தாரே தவிர இவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல.
(4) சுவிசேஷ அழைப்பு
இறையாண்மையுள்ள கர்த்தர் முன்குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே இரட்சிப்பை அடைவார்கள் என்று விளக்கியிருக்கும் கல்வின், அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ள சுவிசேஷம் அவசியம் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று போதித்தார். அதுவும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் யார் என்பது கர்த்தருக்கு மட்டுமே தெரிந்த உண்மையாக இருப்பதினால் சுவிசேஷம் மனிதகுலமனைத்திற்கும் பிரசங்கிக்கப்பட வேண்டியது அவசியம் என்பது கல்வினின் போதனை. பாவத்தில் இருக்கும் மனிதர்கள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டிய கடமையைக் கொண்டிருப்பதோடு, கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என்கிறார் கல்வின். அதனால்தான், சுவிசேஷம் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்று விளக்குகிறார் கல்வின். சுவிசேஷம் பற்றிய இந்த ஆணித்தரமான நம்பிக்கையே ஜோன் கல்வின் பெருந்தொகையானவர்களுக்கு ஜெனீவாவில் இறையியல் பயிற்சியளித்து எத்தனையோ நாடுகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அவர்களை அனுப்பிவைக்கச் செய்தது. கல்வினின் போதனைகள் சுவிசேஷம் அறிவிப்பதற்குத் தடையானவை என்ற போலித்தனமான மாயையைக் கிளப்பிவிட்டிருப்பவர்கள் கல்வின் சுவிசேஷத்தைப் பற்றி விளக்கியிருப்பவற்றை அறிந்திருக்கவில்லை; அவருடைய சுவிசேஷப் பணிகளையும் பற்றித் தெரிந்துவைத்திருக்கவில்லை.
ஜோன் கல்வின் பிரசங்கிக்காத, விரிவுரையளிக்காத, எழுதிவிளக்காத வேத சத்தியங்களே இல்லை எனலாம். அவரெழுதிய இன்ஸ்டிடியூட் அவற்றை முறையாகத் தொகுத்து நமக்குத் தருகிறது. கல்வினின் போதனைகளே இன்றுவரையும் சீர்திருத்த கிறிஸ்தவத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவதற்கும், விளக்குவதற்கும் அன்று முதல் இன்றுவரை இருந்துவரும் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியலறிஞர்களுக்கும், விசுவாசிகளுக்கும் உதவி வந்திருக்கிறது. எந்தப் போதனையை எடுத்துக்கொண்டாலும் ஒருமுறை கல்வின் சொல்லியிருப்பதைப் பார்த்துவிடுவோம் என்று சீர்திருத்த விசுவாசிகளை இன்றும் உந்திக்கொண்டிருக்கிறது கல்வினின் போதனைகளும் எழுத்துக்களும்.
கல்வினின் இறுதிக் காலம்
1546-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 6ம் திகதி கல்வின் தன்னுடைய இறுதிப் பிரசங்கத்தை ஜெனீவா திருச்சபையில் அளித்தார். அவர் கடைசியாக சொன்னது என்ன தெரியுமா? 1546ம் வருடம் பிப்ரவரி 28-ம் நாள் ஜெனீவாவில் இருந்த போதகர்கள், மூப்பர்கள் அனைவரையும் கூட்டி கல்வின் சொன்னார், ‘இந்த ஊருக்கு நான் வந்தபோது ஆத்மீகத்திற்கு இடமேயிருக்கவில்லை. பிரசங்கம் இருந்தது, ஆனால் சிலைகளைத் தேடிப்போய் உடைத்துக்கொண்டு இருந்தார்கள். கத்தோலிக்கர்கள் மேல் இருந்த வெறுப்பில் அவர்கள் அதைச் செய்தார்கள். இங்கு திருச்சபை சீர்திருத்தம் இருக்கவில்லை. மதம் குளறுபடியானதாக இருந்தது. நான் மாலை நேரத்தில் என்னுடைய அறையில் இருக்கும் வேளைகளில் துப்பாக்கியால் என்னைச் சுட முயன்றிருக்கிறார்கள். நாய்களை அனுப்பி அந்த மனிதனை கடி, கடி என்று கூறி என்னைக் கடிக்க அனுப்பியிருக்கிறார்கள். கடைசியாக ஒன்று சொல்லுகிறேன், கர்த்தர் உங்களைப் பாதுகாப்பார்! இந்த நகரமாகிய ஜெனீவாவில் நடக்கவிருந்த 3000 கிளர்ச்சிகளை, அவை நிகழாமல் நான் தடுத்திருக்கிறேன். நீங்கள் தைரியத்தோடு இருங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் இந்த சபையை வழி நடத்துவார், காத்துக் கொள்ளுவார். கர்த்தர் உங்களை வழி நடத்துவார். என்னுடைய வாழ்க்கையில் மிகுந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நீங்கள் பொறுத்துக்கொண்டிருந்திருக்கிறீர்கள். நான் என்னுடைய வாழ்க்கையில் சாதித்தது எல்லாம் ரொம்ப குறைவானதுதான். இப்படி நான் சொல்லுவதைத் தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளுவார்கள். என் வாழ்க்கையில் குறைபாடு இருக்கிறது என்று நான் சொல்லுவதை தீய நோக்கம் உள்ளவர்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளுவார்கள். ஆனால் திரும்பவும் நான் சொல்லுகிறேன், நான் செய்தது எல்லாம் ரொம்பச் சாதாரணமானதுதான். நான் ஒரு சாதாரண பிரசங்கி’ என்று கல்வின் சொல்லியிருக்கிறார்.
கல்வின் வேண்டுமானால் தான் செய்த பணிகளைப் பற்றி அதிகம் பறைசாற்றிப் பேசியிருந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவர் தொடர்ந்து சொன்னதென்ன? ‘என்னுடைய தவறுகள், என்னுடைய குறைபாடுகள் என்னை மனம் வருந்தச் செய்திருக்கின்றன. கர்த்தர் மேல் இருந்த பயம் எப்பொழுதும் என் கண்முன் இருந்திருக்கிறது. நான் போதித்த போதனைகளைப் பற்றிச் சொல்வதானால், எல்லாவற்றையும் நான் மிகுந்த விசுவாசத்தோடும் ஜாக்கிரதையோடும் செய்திருக்கிறேன். கர்த்தர் எனக்கு அதிக கிருபை காட்டி எழுத வைத்தார். அதையெல்லாம் நான் நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் செய்து வந்தேன். ஒரு வேத புத்தகத்திலிருந்து பிரசங்கம் செய்யும் ஒரு பகுதியையாவது நான் அசிங்கப்படுத்தி பிரசங்கம் செய்யவில்லை. அவற்றை அநாவசியத்துக்கு உருவகப்படுத்தாமல், அந்த வசனங்களோடு தொடர்பில்லாத என் சொந்த சிந்தனைகளைப் பயன்படுத்தியும் அவற்றை நான் விளக்கவில்லை. எப்பொழுதாவது வேத வசனத்தில் இல்லாததை விளக்குகின்ற சூழ்நிலை வருகிறபோது அதையெல்லாம் நான் என் கால்களுக்கு அடியில் போட்டு மிதித்திருக்கிறேன். எப்பொழுதும் வேதம் என்ன சொல்லுகிறதோ அதைத் தெளிவாக, எளிமையாக விளக்க நான் முயற்சி செய்திருக்கிறேன். இருதயத்தில் எந்தவித கோபமும் இல்லாமல் நான் எழுதியவைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. எந்த சிந்தனைகளைக் கர்த்தர் எனக்கு கொடுத்தாரோ அந்த சிந்தனைகளை கர்த்தரின் மகிமைக்காக என்னுடைய வாழ்நாளில் எழுதி உள்ளேன்’ என்று கல்வின் கூறியிருக்கிறார்.
மிகுந்த தாழ்மையோடு கல்வினைப்பற்றி தற்காலத்தில் என் நண்பரான போதகர் பின்வருமாறு எழுதியுள்ளார், ‘நீங்கள் கல்வினை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்களானால் கல்வினுடைய கர்த்தரை மகிமைப்படுத்துங்கள், கல்வினுடைய இரட்சகரை மகிமைப்படுத்துங்கள். அவரை நீங்கள் மதிக்கவேண்டுமானால் அவர் நேசித்த கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் மகிமைப்படுத்துங்கள். கல்வின் நமக்கு விட்டுச் சென்றுள்ளது எது? கர்த்தருக்காக உயிர்நீத்த வாழ்க்கையைத்தான் கல்வின் விட்டுச் சென்றுள்ளார். கல்வினின் வாழ்க்கை நமக்கு எதைப் போதிக்கிறது. வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு முன் மன்டியிட்ட மனிதனை நாம் கல்வினில் பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார் அந்த மாமனிதர். கர்த்தரின் சித்தத்தைத் தவிர வேறு எதையும் அவர் தன் வாழ்க்கையில் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. கல்வினுக்கு நாம் செலுத்தக்கூடிய மாபெரும் நன்றிக்கடன் எது தெரியுமா? கல்வினுக்கு இருந்த அதே இருதயத்தை நாமும் கொண்டிருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுவதுதான். கல்வின் நாம் கிறிஸ்துவை நோக்கிப் பார்க்கும்படிச் செய்கிறார். அவரைப் பின்பற்றுங்கள்; ஆனால், கல்வின் இயேசு கிறிஸ்துவை எப்படிப் பின்பற்றினாரோ அதேவிதமாகப் பின்பற்றுங்கள்’ என்று எழுதியிருக்கிறார் என் நண்பர்.
இதுவரை நாம் ஆராய்ந்து பார்த்திருக்கும் ஜோன் கல்வினின் வாழ்க்கையில் இருந்து நாம் அடைய வேண்டிய பயன்பாடுகளை சிந்தித்துப் பார்ப்போம.
1. கல்வினைப் போல நாம் தேவனுடைய வார்த்தைக்கு மட்டுமே முக்கியத்துவமளிக்க வேண்டும்.
16ம் நூற்றாண்டு திருச்சபை சீர்திருத்தம் இதை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அன்றிருந்த மாபெரும் பஞ்சம் சத்தியப் பஞ்சமே. கல்வினுடைய வாழ்க்கையும், பிரசங்க ஊழியமும் எழுத்துக்களும் அவர் சத்திய வேதத்திற்குக் கொடுத்திருக்கும் பேரிடத்தை அப்பட்டமாக நமக்கு விளக்குகின்றன. இன்று வேதம் உலகின் பல மொழிகளில் இருக்கின்றது. நம்முடைய தமிழ் மொழியில் வேதம் நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்டதாக இல்லாவிட்டாலும் நாம் வாசிக்கக்கூடியதாக இருப்பதே பெரிய ஆசீர்வாதம். அன்று வேதம் எல்லோரும் வாசிக்கக்கூடிய வசதி இல்லை. இன்று வேதம் கையிலிருந்தும், அதை ஆங்கிலத்தில் படித்து, வியாக்கியான நூல்களை ஆராய்ந்து சத்தியத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடிய வசதிகள் அதிகம் இருந்து சத்தியப் பஞ்சம் நம்மினத்தை வாட்டுகிறது. வாசிப்பில்லாமலும், சிந்திக்க மறுத்தும், உணர்ச்சிக்கு இடங்கொடுத்தும் ஆவிக்குரிய வாழ்க்கையை வேதமில்லாமல் வாழத்துடிக்கின்றதொரு கிறிஸ்தவ மாயையை நம்மத்தியில் காண்கிறோம். வேதமறியாத போதகர்கள் நம்மினத்தில் தடுக்கிவிழுமளவுக்கு பெருகிக் காணப்படுகிறார்கள்.
இன்று வேதவார்த்தைக்கு முக்கியமளிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கின்றது. வேதத்தின் மகத்துவத்தை, அதன் அதிகாரத்தை அதன் போதுமான தன்மையை, அது மட்டுமே ஆவிக்குரிய அனைத்து விஷயங்களிலும் ஆட்சி செய்யவேண்டும் என்ற மனப்பக்குவத்தை நாம் அடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வேதமில்லாத, வேதம் ஆளாத வாழ்க்கை வீணான வாழ்க்கை என்பதை நாம் கல்வினின் வாழ்க்கையில் இருந்து உணரவேண்டிய கட்டாயம் நமக்கிருக்கின்றது. நம்மினத்து மக்கள் கல்வினின் வாழ்க்கையில் இதைக் காணக்கூடியதாக அவர்கள் முன் நாம் கல்வினை வைக்க வேண்டும். வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும், அதன் சத்தியங்களில் பரலோக சந்தோஷத்தை உணர்வதிலும், வேதசத்தியங்கள் பரவும்படிச் செய்வதிலும், அதன்படி மட்டுமே வாழ்க்கையையும், திருச்சபையையும் அமைத்துக்கொள்ளுவதிலும் நமக்கு கல்வினுக்கிருந்த வைராக்கியம் தேவைப்படுகிறது. இது நம்மத்தியில் இருக்கும்படி நம்மை உந்தி வழிநடத்த கல்வினின் வாழ்க்கை நமக்குப் பயன்பட வேண்டும்.
2. கிறிஸ்தவ வாழ்க்கையை துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவை மகிமைப்படுத்தி வாழும் வாழ்க்கையாக கல்வினில் நாம் காண்கிறோம்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை முழுதும் அவர் துன்பத்தை அனுபவித்திருக்கிறார். பிறந்த உடனேயே அவரைக் கொலை செய்ய ஏரோது ராஜன் ஆட்களை அனுப்பினான். சிலுவை மரணத்திற்கு முன் அவர் பட்ட துன்பங்கள் அதிகம். இறுதியில் தன்னையே தன்னுடைய மக்களுக்காக அவர் பலிகொடுக்க நேரிட்டது. இயேசுக்கு பெயரே ‘துன்பப்படுகின்ற ஊழியக்காரன்’ என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார். இயேசுவைப் பின்பற்றி அப்போஸ்தலர்களும் பவுலும் சுவிசேஷத்திற்காக வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு உதாரணமாக இருந்து அப்படி நாமும் நிச்சயம் துன்பங்களை வாழ்க்கையில் அனுபவிப்போம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இயேசுவின் துன்பங்களை சபைக்காக இன்முகத்தோடு தன்னுடைய சரீரத்தில் தாங்கத் தயாராக இருப்பதாக பவுல் எழுதியிருக்கிறார்.
இன்று நம்மினத்துக் கிறிஸ்தவம் துன்பத்தை நாம் அனுபவிக்கக்கூடாத ஆபத்தாகப் பார்க்கிறது. துன்பமே இல்லாத வாழ்க்கையை இயேசு கொடுப்பார் என்ற போலித்தனமான சுவிசேஷ அறிவிப்புகளையும், பிணி தீர்ப்பதை மட்டுமே பிரதான அம்சமாகக் கொண்ட சுவிசேஷக் கூட்டங்களையுந்தான் புறஜாதியினர் கிறிஸ்தவமாக அறிந்திருக்கும் அளவுக்கு அவை ஆட்சிபுரிந்து வருகின்றன. இதற்கெல்லாம் முரணாக ஜோன் கல்வின் இயேசுவைப்போலவும், அப்போஸ்தலர்களையும், பவுலையும் போல வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அந்தத் துன்பங்கள் அவர் கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சியோடு வளரப் பேருதவியாக இருந்தன. துன்பங்களுக்கு முகங்கொடுத்து வெற்றிகரமாக கிறிஸ்துவுக்காக எப்படி வாழ்வது என்பதைக் கல்வினின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. மரண உபாதைகள் தன் வாழ்வில் தொடர்ச்சியாக இருந்ததாக அவர் எழுதியிருக்கிறார். அவர் சரீரத்தில் அத்தனை நோய்களை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். இத்தனைக்கும் மத்தியில் அந்த மனிதர் இயேசுவின் ஐக்கியத்தையும், அன்பையும் அன்றாடம் அனுபவித்து வாழ்ந்திருக்கிறார். துன்பங்களை வெற்றிகரமாக சந்தித்து வெற்றிகொள்ளுகிற கிறிஸ்தவ வாழ்க்கையே மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கை என்பதைக் கல்வினின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.
3. கடும் உழைப்பு நம் வாழ்க்கையில் இருக்கவேண்டிய அவசியத்தைக் கல்வினுடைய வாழ்க்கை உணர்த்துகிறது.
கல்வினின் உழைப்பு வாசகர்களை மலைக்க வைக்கும் உழைப்பு. அவர் படிப்பில் காட்டிய அக்கறையும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளக் காட்டிய ஆர்வமும் பெரிது. படிக்கும் காலத்தில் மட்டுமல்லாது சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்டு பிரசங்கங்களை அளித்தும், விரிவுரையாளராகப் பணிபுரிந்தும், எழுத்துப்பணியில் ஈடுபட்டபோதும் நேரத்தையும் காலத்தையும் பார்க்காமல் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். மனிதனை உழைப்பதற்காகக் கர்த்தர் படைத்திருக்கிறார் என்பதையும், படைப்பின் நியமங்களில் உழைப்பு முக்கியமான மூன்று பணிகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதையும் கல்வினே தன்னுடைய எழுத்துக்களில் விளக்கியிருக்கிறார். அதை வாழ்க்கையில் நிதர்சனமாகப் பின்பற்றிய மனிதன் கல்வின். அவருடைய தூக்கத்தையும் துறந்த கடுமையான உழைப்பு அவருக்கு உபாதைகளைக் கொண்டுவந்தது உண்மைதான். இருந்தபோதும் அவருடைய உழைப்பே நமக்கு அருமையான கிறிஸ்தவ இலக்கியங்களைத் தந்திருக்கிறது. அவருடைய உழைப்பே அன்று திருச்சபை சீர்திருத்தத்தை இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்கிறது. அவர் உழைத்துத் தயாரித்த அருமையான பிரசங்கங்களும் இறையியல் போதனைகளுமே ஜோன் நொக்ஸ் போன்ற அருமையான பிரசங்கிகளையும் உலகுக்குத் தந்தன.
நேரத்தைப் பயன்படுத்தி நேர்மையாக உழைப்பதை நாம் கல்வினிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பணத்திற்காக அல்லாமல் உழைப்பது மனிதத்தன்மையின் அடையாளங்களில் ஒன்று என்பதை உணர்ந்து உழைக்கும் மனிதர்களாக நாம் வாழவேண்டும். கல்வின் கர்த்தருக்காகவே உழைத்தார். உழைப்பில் முழு இன்பத்தையும் கண்டார். அது அவருக்குத் தொல்லையானதாகவோ, பாரமானதாகவோ இருக்கவில்லை. சோம்பேரித்தனத்தை அவருடைய வாழ்க்கையில் சொட்டும் பார்க்கமுடியாது. நேரத்தை அநியாயத்திற்கு வீணடித்து வாழ்கிற நம்மினம் உழைத்து வாழ்ந்து கர்த்தரை மகிமைப்படுத்தும் இனமாக வாழ கல்வினின் வாழ்க்கையும், திருச்சபைப்பணியும் நமக்கு உதவவேண்டும். முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு இது இன்று அத்தனை அவசியமாக இருக்கிறது.
4. கல்வினிடம் இருந்து நாம் வாசிக்கவும், எழுதவும், கற்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
கல்வினுடைய காலத்தில் நம் காலத்தில் இருந்ததுபோல் அதிக ஆவிக்குரிய நூல்கள் இருக்கவில்லை. ரோமன் கத்தோலிக்க மதம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆனால், சீர்திருத்தவாதிகளுக்கும் கல்வினுக்கும் அது தடையாக இருக்கவில்லை. எபிரெயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்று அவர்கள் வேதத்தை ஆராய ஆரம்பித்தார்கள். அவர்களுடைய வாசிப்பும், கற்றுக்கொள்கிற மனப்பான்மையும் கருத்தோடும் வைராக்கியத்தோடும் இருந்தது. வாசிப்பதிலும், படிப்பதிலும் கல்வின் அதிக நேரத்தை செலவிட்டிருக்கிறார். கற்ற விஷயங்களை மறுபடியும் மறுபடியும் ஆராய்ந்து சிந்தித்திருக்கிறார். அத்தகைய ஆழமான வாசிப்பும், ஆராய்ச்சியும், கல்வியும் அவர் சகல வேதநூல்களுக்கும் விளக்கவுரை எழுதத் துணைசெய்தன. அதிக வாசிப்பு கல்வினை அதிகம் சிந்திக்கவைத்தது, அதிகம் எழுத வைத்தது. ஆரம்ப காலத்தில் கல்வின் அதிகம் எழுதியிருக்கிறார். போகப்போக நேரம் போதாததால் அவர் குறிப்பெடுக்கிறவர்களைப் பயன்படுத்திக்கொள்ள நேரிட்டது. கல்வின் அளவுக்கு இல்லாவிட்டாலும், வாசிக்காமலும், சிந்திக்காமலும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையில்லாமலும் நாம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உயரமுடியாது என்பதை நாம் உணரவேண்டும். முக்கியமாக சீர்திருத்த திருச்சபைகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் வாசிக்காமலும், சிந்தித்து ஆராயாமலும் இருப்பது தங்களுடைய விசுவாசத்திற்கே எதிரானது என்பதை உணரவேண்டும்.
5. கல்வின் திருச்சபைக்குக் கொடுத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் அதன்படி வாழ நம்மை நிர்ப்பந்திக்கிறது.
கர்த்தர் திருச்சபை சீர்திருத்தத்திற்காகவே கல்வினை எழுப்பினார். கர்த்தருடைய இருதயத் தாகமும் நேசமும் அவருடைய சபைப்பணியிலேயே இருந்ததைக் காண்கிறோம். கல்வின் ஜெனீவாவில் திருச்சபையை உருவாக்கி அதன்மூலமே அத்தனை ஊழியங்களையும் செய்து வந்திருக்கிறார். பிரசங்கிகளை உருவாக்கி பிரான்சு மட்டுமல்லாமல் வேறு நாடுகளுக்கும் அனுப்பி சுவிசேஷத்தைப் போதித்து திருச்சபைகளை உருவாக்கும் பணியில் சபைமூலம் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவருடைய அருமையான இறையியல் நூலான இன்ஸ்டிடியூட்டில் முக்கால்வாசிப் பகுதி திருச்சபை பற்றியதாகவே இருக்கிறது. அந்தளவுக்கு கர்த்தரின் வார்த்தை திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்கிறது. இயேசு தான் தன்னுடைய சபையை நேசிப்பதாகக் கூறி அதை எப்படியெல்லாம் கருத்தோடு போஷிக்கிறார் என்பதைப் பவுல் மூலம் எபேசியர் 5ம் அதிகாரத்தில் விளக்கியிருக்கிறார்.
இன்று நம்மினத்தில் திருச்சபைக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் மதிப்பில்லாமல் இருக்கிறது. திருச்சபைக்கு மதிப்புக்கொடுத்து அதிலிருந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் குறைவு. திருச்சபைக்குப் போகவேண்டும் என்பதற்காக ஓய்வுநாளில் ஒருமுறை போய் தங்களுடைய கடமை முடிந்ததாக உலகத்தானைச் சார்ந்து வாழ்கிறவர்களே அதிகம். போதகர்கள்கூட நம்மினத்தில் திருச்சபைபற்றிய ஞானமும், வைராக்கியமும் இல்லாதவர்களாக இருந்து வருகிறார்கள். நாம் வாழும் காலம் திருச்சபைக்கு பெரிதும் மதிப்பில்லாத காலமாக இருக்கிறது. இதனால் கர்த்தர் தன்னுடைய திட்டங்களை மாற்றிக்கொண்டுள்ளார் அல்லது திருச்சபைக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது என்ற தவறான முடிவுகளையெல்லாம் நாம் எடுத்துவிடக்கூடாது. இது எதைச் சுட்டுகிறது என்றால் எந்தளவுக்கு திருச்சபை சீர்திருத்தம் இக்காலத்தில் நம்மினத்தில் அவசியமாக இருக்கிறது என்பதைத்தான். எழுப்புதலைக் காணாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். கல்வின் பிரசங்கித்ததுபோல் மனந்திரும்புதலையும், மறுபிறப்பையும், திருச்சபை அமைப்பையும், ஆராதனைபற்றியும், திருச்சபை வாழ்க்கை பற்றியும் இருதயங்களை அசைத்து உலுப்பியெடுக்கும் அதிரடி ஆவிக்குரிய பிரசங்கங்கள் இன்று தேவை. அத்தகைய ஆவிக்குரிய எழுப்புதலைக் கர்த்தர் மட்டுமே கொடுக்கக்கூடியவராக இருக்கிறார். கல்வினின் வாழ்க்கையும், பணியும் அத்தகைய மெய்யான எழுப்புதலை நாடி நாம் ஜெபிக்கவும், திருச்சபைக்கு மதிப்புக்கொடுக்கவும் நமக்குக் கற்றுக்கொடுக்கட்டும்.
6. ஜோன் கல்வினைப் பார்த்து நாம் மனந்தளரா விசுவாசத்தையும், தாழ்மையையும், பக்திவைராக்கியத்தையும் கொண்டிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
திருச்சபை வரலாற்றில் கல்வினைப்போலத் துன்பங்களை அனுபவித்த மனிதர்கள் அநேகர் இல்லை. அந்தளவுக்கு ஜோன் கல்வின் பலவிதத் துன்பங்களை வாழ்க்கையில் கிறிஸ்துவுக்காக அனுபவிக்க நேர்ந்தது. அவருடைய உடல்நலக்குறைவு, எதிரிகளிடம் இருந்து வந்த ஆபத்து என்ன என்பதைப் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இந்தப் பகுதியில் முக்கியமாக அவருடைய மனந்தளரா விசுவாசத்தைக் கவனிப்பது அவசியம். வாழ்க்கையில் சிறு பிரச்சனை வந்தாலே பொதுவில் நம்மில் அநேகர் தளர்ந்து போய்விடுகிறோம். அது நடக்காமல் இருக்காது. கல்வினுக்கு மனந்தளரக்கூடிய அளவுக்கு பெரும் பெரும் விஷயங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தன. கல்வின் சத்தியத்திற்காக பலவித போராட்டங்களை வாழ்க்கையில் சந்திக்க நேரிட்டது. அடிக்கடி ஜெனீவாவின் நகரத் தலைவர்களோடு அவருக்கு பிரச்சனை உண்டானது. திருச்சபையில் இருக்கவேண்டிய அவசியமான ஒழுங்குக் கட்டுப்பாடுகளை அவர் நடைமுறைப்படுத்தியது பலருக்குப் பிடிக்கவில்லை. கல்வினைப்பற்றித் தவறாகப் பேசவும் செய்தி பரப்பவும் செய்தார்கள். அதெல்லாம் கல்வினுக்குத் துக்கத்தைக் கொடுத்தபோதும் அவர் மனந்தளராமல் விசுவாசத்தோடு தன் பணியைத் தொடர்ந்தார். இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் இருக்கும் ‘பொலிட்டிக்கல் கெரக்ட்னஸ்’ அன்று கல்வினுடைய அகராதியில் இருக்கவில்லை. அதாவது மற்றவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக சொல்ல வேண்டிய உண்மையை சொல்லாமல் இருப்பதும், அதை மறைத்துவிடுவதும் அல்லது அதற்குப் புதுவிளக்கங் கொடுப்பது போன்ற அக்கிரமங்களைக் கல்வின் அறிந்திருக்கவில்லை. சத்தியத்தை சத்தியமாகப் பேசி எதிர்ப்புகளை வரவேற்று ஏற்றுக்கொண்டார் கல்வின்.
அத்தோடு கல்வின் மிகவும் தாழ்மையான மனிதர். அதற்குக் காரணமே அவர் விசுவாசித்த கிறிஸ்துதான். அவர் கிறிஸ்துவிடமிருந்து தாழ்மையைக் கற்றுக்கொண்டார். சீர்திருத்தவாதிகளுக்கு மத்தியிலும் அன்று கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு மற்றவர்கள் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு பேசியும் எழுதியும் வந்தபோதும் கல்வின் அவற்றிற்கு எதிர்ப்புக்காட்டி பேசவோ, எழுதவோ முயலவில்லை. அமைதியாக பிரச்சனைகளை அவர் அணுகியிருக்கிறார். மார்டின் லூத்தர் சத்தியம் பற்றிய ஒரு விஷயத்தில் தன்னைத் தவறாகப் புரிந்துகொண்டபோது கல்வின் அதைத் தாழ்மையோடு சந்தித்து விளக்கமளித்திருக்கிறார். சத்திய விரோதமாக நடந்துகொள்ளுகிறவர்களை அந்தக் காலங்களில் அரசு நாடுகடத்தும் அல்லது மரண தண்டனை விதிக்கும். அரசும், திருச்சபையும் இணைந்திருந்த காலப்பகுதியாக அது இருந்ததால் அரசு திருச்சபைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியைக் கொண்டிருந்தது. ஜெனீவா நகரம் சீர்திருத்தத்தைப் பெரிதும் நாடியதால் நகராட்சித் தலைவர்கள் வளரும் சீர்திருத்தத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தார்கள். அந்தக் காலத்தில் செவர்டியஸ் என்ற மனிதன் சத்தியவிரோதியாக நடந்துகொண்டான். அதனால் நகரத் தலைவர்கள் அவனுக்கு மரணதண்டனை விதித்தார்கள். கல்வின் செவர்டியஸின் போதனையை அடியோடு மறுத்து எழுதியும் பேசியும் வந்திருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதில் ஜோன் கல்வினுக்கு விருப்பமிருக்கவில்லை. ஜெனீவா திருச்சபைப் போதகராகவும், பிரபலமான சீர்திருத்தவாதியாகவும், ஜெனீவா மக்களால் மதிக்கப்பட்டவராகவும் அவர் இருந்தபோதும் நகராட்சி எடுக்கும் தீர்மானங்களைத் தடுக்குமளவுக்கு அவருக்கு அதிகாரமிருக்கவில்லை. செவர்டியஸுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டபோது பலர் கல்வினைத் தவறாகப் பேசினார்கள். இன்றும்கூட சபை வரலாற்றை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால், கல்வின் ஏச்சுப் பேச்சுக்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு தாழ்மையைக் கடைப்பிடித்தார்.
ஜெனீவாவில் கல்வினின் 400வது பிறந்த நாளை முன்னிட்டு நிறுவப்பட்ட “சீர்திருத்த சுவர்” என்று பிரபலமாக அழைக்கப்படும் நினைவுச்சின்னத்தின் மையத்திலுள்ள நால்வரின் உருவச்சிலைகள் – வில்லியம் பெfரல், ஜோன் கல்வின், தியோடர் பீசா, மற்றும் ஜோன் நொக்ஸ்.
ஜோன் கல்வின் பக்தி வைராக்கியமில்லாமல் தான் சாதித்திருக்கும் காரியங்களைச் செய்திருக்கமுடியாது. சீர்திருத்தவாதிகள் எல்லோருமே பக்திவைராக்கியமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். கல்வினுடைய பக்திவைராக்கியத்தை அவருடைய எழுத்துக்களிலும், பிரசங்கங்களிலும் காணலாம். அவருடைய பக்திவைராக்கியம் கர்த்தருக்கு விசுவாசத்தோடு அவரை வாழச்செய்தது மட்டுமல்லாமல் கர்த்தருடைய சுவிசேஷம் பரவி திருச்சபை பல நாடுகளில் தோன்றும்படி அவரை இரவு பகலாக உழைக்க வைத்தது. எதிர்ப்புகள், நாடுகடத்தல் போன்றவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் திருச்சபை சீர்திருத்தத்திற்காக பக்திவைராக்கியத்தோடு கல்வின் பணிபுரிந்தார். கல்வினின் வாழ்வுக்கும், சாதனைகளுக்கும் பின்னால் கர்த்தர் இருந்திருப்பதை நாம் நிச்சயம் மறுக்கமுடியாமல் இருந்தபோதும், அவருக்கிருந்ததைப் போன்ற பக்திவைராக்கியத்தை இந்தக் காலங்களில் நாம் கொண்டிருப்பது அவசியம். கல்வின் அதில் நமக்கு உதாரணபுருஷராக இருந்திருக்கிறார்.
Excellent Iyah.
LikeLike
Excellent. God bless your ministries.
LikeLike
God bless you sir,Vivek.S
LikeLike