இந்த இதழ் மாபெரும் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின் அவர்களின் நினைவு இதழாக வெளிவருகிறது. இந்த வருடம் ஜூலை மாதம் 10ம் திகதி அவருடைய பிறந்த தினம். ஐந்நூறு வருடங்களுக்கு மேலாகியும் அவருடைய வாழ்க்கையும், திருச்சபைப் பணியும் கிறிஸ்தவத்தில் இன்றும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. ஜோன் கல்வின் பெரும் ஞானி. தன்னடக்கத்தைத் தன்னில் அதிகம் கொண்டிருந்த அவர் தன்னுடைய கல்லறையில் பெரிதாக எதையும் எவரும் எழுதிவைப்பதையும், மரண ஆராதனையில் தன்னைப் பற்றி அதிகம் பேசுவதையும் விரும்பவில்லை. கர்த்தர் காலத்துக்குக் காலம் தன்னுடைய இராஜ்ய விஸ்தரிப்புக்காக சிலரைத் தெரிவு செய்து அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அப்படிப்பட்டவர்களான ஆபிரகாம், மோசே, யோசேப்பு, தாவீது, பவுல் என்று பலரைப் பற்றி வேதத்தில் நாம் வாசிக்கிறோம். இத்தகையவர்கள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் கர்த்தரால் தெரிவுசெய்யப்பட்டு விசேஷமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அது இறையாண்மையுள்ள கர்த்தருடைய விருப்பத்தையும், சித்தத்தையும் பொறுத்தது. தேவ இராஜ்யத்தில் எல்லா மனிதர்களையும் அந்தவிதத்தில் கர்த்தர் பயன்படுத்துவதில்லை.
இந்தவகையில் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் கர்த்தரால் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதரே ஜோன் கல்வின். திருச்சபைச் சீர்திருத்தத்தில் அவருடைய பெரும் பங்கு சீர்திருத்த வேத இறையியலை முறைப்படுத்தி அமைப்பதாக இருந்தது. பெரும் கல்விமானும், ஞானியும், பலமொழிப்பாண்டித்தியமும், தன்னடக்கத்தையும் கொண்டிருந்த கல்வினைவிட யார் அதற்குக் தகுதியானவராக இருந்திருக்க முடியும். ஜோன் கல்வின் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் ஆத்மீக சொத்துக்கள் அளப்பரியவை. இத்தனை இருந்தும் அவரை அநேகர் வெறுத்தார்கள். அவர் விசுவாசித்த சத்தியங்களை இன்றும் ஏற்றுக்கொள்ள மறுத்து வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அதெல்லாம் கல்வினுடைய தவறல்ல; கண்ணிருந்தும் குருடர்களாக அறியாமையைப் பெரும் சொத்தாக மதித்து வாழ்கிறவர்கள் விடுகின்ற தவறு அது. உண்மையில் ஜோன் கல்வினுடைய காலத்தில் அவர் மூலமாக நிகழ்ந்தது மாபெரும் ஆவிக்குரிய எழுப்புதல். ஆவியற்ற கத்தோலிக்க மதத்தில் இருந்து ஆத்துமாக்களுக்கு விடுதலை அளிக்க இறையாண்மையுள்ள கர்த்தர் அனுப்பிய ஆவிக்குரிய விடுதலை அது. அதில் கல்வினின் பங்கு பெரிது. இக்கல்வின் இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமுள்ளதாக இருக்கட்டும். – ஆர்.