கட்டுரை எழுதலாம் வாருங்கள்

என்னிடம் அடிக்கடி, நீங்கள் எப்படி இந்தக் கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என்றும், எழுதுவது எப்படி என்றும், நீங்கள் எழுதக் கற்றுக்கொடுத்தால் என்ன என்றும் பலர் கேட்டிருக்கிறார்கள். இது பற்றி என் நண்பரும் போதகருமான போல் கடந்த வருடத்தில் முதல் தடவையாகக் கேட்டார். அந்த வேளையில் அதுபற்றிய எண்ணமே என் மனதில் இல்லாதிருந்ததால் அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். அத்தோடு வாசிப்பதைப் பயிற்சியாகக் கொண்டிராத சமுதாயம் எப்படி எழுதப் போகிறது என்ற எண்ணமும் என்னை இந்த விஷயத்தில் கவனம் செலுத்துவதைத் தடுத்தது.

சமீபத்தில் மலேசியாவில் வாழும் ஒரு விசுவாசி இதுபற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் (விடமாட்டேன் என்று ஒரே பிடியாய் பிடித்துக்கொண்டதால்!) கட்டுரை எழுதுவது எப்படி என்று வாட்செப்பில் ஐந்து ஆடியோ செய்திகளை அனுப்பிவைத்தேன். பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் எனக்கு எழுதி அனுப்புவதற்கு நேரமிருக்கவில்லை. அது தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றுகூறி, இதை நீங்கள் எழுத்தில் நிச்சயம் எல்லோருக்கும் பயன்படும்படியாகத் தரவேண்டும் என்று வற்புறுத்தியதால், சரி, எழுதிவிடுவோம் என்று எழுத ஆரம்பித்தேன். உண்மையில் நான் ஆடியோ செய்தியாக சுருக்கமாக இதை அனுப்பியபோது என் மனதிலேயே இதை எழுத்தில் வடித்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றத்தான் செய்தது.

கட்டுரைகள், கதைகள், நாவல்கள் எழுதுவது பற்றியெல்லாம் தமிழில் நூல்கள் இல்லாமலில்லை. ஆனால் என்ன, ஆங்கிலத்தில் இருப்பதுபோன்ற தரமானதாக இல்லாததொன்றுதான் குறை. ஆங்கிலத்தில் அத்தகைய சிறப்பான நூல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மேலைத்தேய ஆங்கிலக் கல்வியின் தரம் அப்படிப்பட்டதாக உயர்நிலையில் இருப்பதுதான். சிறுவயதிலேயே வாசிப்பதும் எழுதுவதும் பிள்ளைகளின் அடிப்படைத் தேவையாக அந்தச் சமூகம் கருதுவதால் கட்டுரை எழுதுவதற்கு பள்ளிக்காலத்திலேயே அவர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். தாய்மொழிப்பயிற்சிக்கு அவர்கள் அத்தனை முக்கியத்துவம் தருவதால் எழுதுவது பற்றிய அநேக சிறப்பான நூல்கள் அவர்கள் மொழியில் இருக்கின்றன. அத்தகைய தரமான கல்வி நம்மினத்தில் இல்லாதது பெருங்குறைதான். எழுதுவது ஒரு கலைதான்; அது ஒரு ஈவாகவும் இருக்கிறது. இருந்தபோதும் தங்களுடைய சொந்த மொழியில் முறையாக எழுதுவது எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமான ஒரு பயிற்சி.

1970களில் வாலிபனாக நான் இருந்த காலத்தில் எழுத்தார்வம் என்னில் அதிகரித்தபோது அது பற்றி வாசித்து அறிந்துகொள்ளுவதற்காக நூல்களைத் தேடி அலைந்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பேராசியர் மு. வரதராஜன் முக்கிய எழுத்தாளராக இருந¢தார். பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்து வந்த அவர் கட்டுரை எழுதுவது, கடிதங்கள் எழுதுவது பற்றி நூல்கள் எழுதியிருக்கிறார். அவற்றால் ஈர்க்கப்பட்டு அவற்றை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறேன். நம்மினத்தில் கடிதங்கள் எழுதுவதெப்படி என்றுகூட ஒருவரும் சொல்லித் தருவதில்லை. மேலைநாடுகளில் அது ஒருகலையாகவே கருதப்படுகிறது. மு.வ.வின் கடிதத் தொகுப்பு நூல் அன்று எனக்கு உதவியிருக்கிறது. இன்று அந்தவகையில் தமிழில் என்ன இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. அடுத்த தடவை சென்னை நியூ லேண்ட் புத்தகக் கடைக்குப் போகிறபோது சீனிவாசகன் அவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சமீபத்தில் ஜெயமோகன் எழுதியிருந்த ‘கட்டுரை எழுதுவது எப்படி’ என்ற சிறு ஆக்கத்தை வாசித்தேன். அதை எப்படி எழுத வேண்டும் என்று 15 சிறுகுறிப்புகள் தந்திருந்தார்.

நான் இங்கே விளக்கப்போவது வெறும் கட்டுரை எழுதுவது எப்படி என்பதையல்ல; ஆவிக்குரிய கட்டுரைகளை எழுதுவது எப்படி என்பதைத்தான். பொதுவாக எந்தக் கட்டுரையை எழுதுவதற்கும் பயன்படுத்த வேண்டிய அம்சங்களை இதிலும் பயன்படுத்துவது அவசியம் என்றாலும் ஆவிக்குரிய கட்டுரைகளை எழுதுவதற்கான சில விசேஷ இலக்கணங்கள் இருக்கின்றன. அவை வேறுவிதமான கட்டுரைகளை எழுதுவதற்கு அவசியமானவையல்ல. இதை எழுதுகிறபோது ஒன்றை நான் சொல்லிவிடவேண்டும். என்னுடைய எழுதும் அனுபவத்தின் அடிப்படையிலும், நான் மற்றவர்களுடைய எழுத்துக்களைக் கவனித்திருக்கும் அனுபவத்தின் அடிப்படையிலுமே இதைப் பெரும்பாலும் எழுதியிருக்கிறேன். முக்கியமாக இதுவரை எழுதுகின்ற அனுபவம் இல்லாதவர்களை மனதில் வைத்து இதை எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் சொல்லுவதானால் இந்த ஆக்கத்தை, Writing for Dummies என்று சொல்லலாம்.

என்னுடைய போதக ஊழிய அனுபவத்தில் கவனித்திருக்கின்ற ஒன்று, நம்மினத்திலுள்ள அநேக போதகர்களுக்கும், ஊழியப்பணி புரிகிறவர்களுக்கும் சரியாக எழுதத் தெரியவில்லை என்பதுதான். இது கவலையளிக்கும் அளவுக்கு பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலான போதகர்கள் வாழ்க்கையிலேயே எழுதிவைத்துப் பிரசங்கிக்க வேண்டும் என்பதைக் காதால் கேட்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட போதனைகளை அவர்கள் இறையியல் கல்லூரிகளில் பெற்றிருக்கவில்லை. பெரும்பாலானோர், அரைத் தாள் குறிப்பு மட்டுமே வைத்திருப்பார்கள், அநேகர் அதைக்கூட கையில் வைத்திருப்பதில்லை. இது எதைச் சுட்டுகிறது என்றால் அவர்களுக்கு கல்லூரிப்படிப்புக் காலத்திலிருந்தே (கல்லூரிக்குப் போயிருந்தால்) எழுதுவது பற்றிய அனுபவமே இல்லாதிருந்திருக்கிறது என்பதுதான். நான் போதகப் பயிற்சி அளிக்கும் பணியை 25 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். இதற்காக குறிப்பிட்டவர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்பான போதனைகளை அளிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. அப்படியாவது தமிழினத்தில் ஞானமும், பக்திவிருத்தியுமுள்ள நல்ல போதகர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. இந்த நோக்கத்திற்குப் பெருந்தடையாக முக்கியமானதொன்றிருந்தது.

அப்படி நான் தெரிவுசெய்து போதனை அளித்தவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதைப் பற்றி விளக்கமாக ஒரு கட்டுரையை எழுதித்தர பெரிதும் தயங்கினார்கள். தங்களுடைய சொந்த மொழியில் அதைச் செய்வதற்கு அவர்களுக்கு மனதிருக்கவில்லை. ஒருவர் செய்யவே முடியாது என்று சொல்லிவிட்டார். அது எனக்கு அதிர்ச்சி தந்தது. இதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் மிகமுக்கியமான காரணம் அவர்களுக்கு எழுதும் பழக்கம் அறவே இருக்கவில்லை என்பதுதான். அதுவே எழுதவேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்களுக்கு அது அதிர்ச்சி தருவதாக இருந்திருக்கிறது. ஆகவே, எங்கே தொடர்ந்து வராமல் போய்விடுவார்களோ என்ற பயத்தில் அவர்களை எழுதவைக்கும் நோக்கத்தை மிகவும் கவலையோடு நான் விட்டுவிட நேர்ந்தது. நம்மினத்தில் எழுதுவதில் இந்தளவுக்குப் பிரச்சனை இருக்கும்போது அறிவும், ஞானமும் கொண்டு, சிந்தித்துக் காரணகாரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கும், போதித்து விளக்கும் படித்த போதகர்களை உருவாக்குவது எப்படி?

வாசிக்கும், எழுதும் கலை அறியாத சமூகம் விருத்தியடைவதென்பது மிகவும் கடினமானது. அவை சமுதாயத்தில் குறைவாக இருப்பதை உணர்ந்திருக்கும் தற்கால எழுத்தாளரான ஜெயமோகன் இன்றைய இளைஞர்களைத் திரட்டி சந்திப்புகளை ஏற்படுத்தி வாசிக்கவும், சிந்திக்கவும், பேசவும், எழுதவும் அவர்களைத் தூண்டி வருகிறார். இது கர்த்தரை அறியாதவர்கள் மத்தியில் இன்று நடக்கிறது. ஆவிக்குரியவர்கள் மத்தியில் இது ஏற்பட்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும். நம்மினத்து கிறிஸ்தவர்கள் சத்தான கிறிஸ்தவ சம்பாஷனையில் ஈடுபடும் அளவுக்கு விஷயம் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் தரமான வாசிப்புப் பழக்கமும், எழுதும் வழக்கமும் இல்லாததுதான்.

கட்டுரை எழுதுவது எப்படி? என்பதுதான் இந்த ஆக்கத்தின் கருப்பொருள். இதுவரை எதையும் எழுதியிராதவர்களை இனியாவது எழுத வைக்க இந்த ஆக்கம் பயன்படுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். இதை எங்கே எதிலிருந்து ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது என் மனக்கண்களில் அநேக அம்சங்கள் படமாக விரிகின்றன. முதலில் கட்டுரை என்பது என்ன என்று விளக்கிவிடுகிறேனே.

கட்டுரை என்பது என்ன?

கட்டுரை உரைநடை வகையைச் சேர்ந்தது. அதாவது இது பாடலோ, கவிதையோ அல்ல; அவை இன்னொரு இலக்கியவகை. உரைநடைக் கட்டுரையில் பலவகைகள் உள்ளன. பொதுவான கட்டுரை, அழகியல் கட்டுரை, முன்னுரைக் கட்டுரை, ஆய்வுக்கட்டுரை, விளக்கவுரைக் கட்டுரை, பிரசங்கக் கட்டுரை என்று இதைப் பலவகையாகப் பிரிக்கலாம். பொதுவான கட்டுரை என்பது எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் எழுதப்படுவது. அதைக் கதைபோலக்கூட எழுதலாம். அத்தகைய கட்டுரைக்கு அதிக ஆராய்ச்சிகள் அவசியமில்லை. மேற்கோள்கள் தேவையில்லை. வாசிப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அழகான மொழிநடையில் அந்தக் கட்டுரை எழுதப்படலாம். பொதுவான கட்டுரை சொல்லவருகின்ற விஷயத்தை மட்டும் விளக்குகிறதாக இருக்கும். கருப்பொருளை நளின நடையில் ஈர்க்கும் விதத்தில் சொல்லுவது மட்டுமே அதன் நோக்கம். என் வாழ்க்கையில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து வந்த காலத்தில் எனக்கு பேராசிரியர் மு. வவின் கட்டுரைகள் பிடித்திருந்தன. அவருடைய கட்டுரைகள் எளிமையானவை. நளினமான அழகியல் நடைக்கு அவர் அதிகம் இடம் கொடுக்காது விட்டாலும் விஷயத்தை எளிமையாகச் சொல்லி வந்திருக்கிறார்.

அதற்கு மேல் என்னை மிகவும் ஈர்த்த கட்டுரைகளை எழுதியவர் ஜெயகாந்தன். பொதுவான கட்டுரைகளை சுருக்கமாக அழகு தமிழில், நெஞ்சில் ஆணிவைத்து அடிப்பது போல் எழுதும் கலையில் தேர்ந்தவர் ஜெயகாந்தன், என்னைப் பொறுத்தவரையில் தன்னுடைய கதைகளுக்கு முன்னுரை சொல்லும் அவருடைய பாணி தனித்துவமானது. சிறிதளவு வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலம்பம் விளையாடுவதில் அவர் மன்னன். அவருடைய கட்டுரைகளில் கற்பனையும், அழுத்தமும், விஷய ஞானமும் இருக்கும். கச்சிதமாக எழுதுவார்; கணீரென்று இருக்கும் அவருடைய வசனங்களும் வார்த்தைகளும். அவருடைய கதைகளுக்குப் பிறகு கட்டுரைகள் எதையும் நான் விட்டுவைத்ததில்லை. அவருடைய கட்டுரைகளின் தலைப்பு, கதைகளின் தலைப்பைப் போன்றே அலாதியானவை. தலைப்பே வாசிக்கிறவனைத் தொடர்ந்து வாசிக்க வைத்துவிடும். சிலவேளைகளில் அவருடைய தலைப்பு ஒன்றும் விஷேசமானதாக இருக்காது. இருந்தாலும் எளிமையான அவருடைய தலைப்பே சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கும். ஜெயகாந்தன் புகழ்பாடுவதற்காக நான் இத்தனையையும் எழுதவில்லை. அவருடைய ஒரு பக்கக் கட்டுரைகளை அச்சிடுவதற்காக அவருக்குப் பின்னால் அலைந்து திரிந்திருக்கும் பிரபலமான பத்திரிகைகள் இருந்திருக்கின்றன. அவருடைய எழுத்துக்களில் இருந்து கட்டுரை எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் மறுக்கமுடியாது.

ஆய்வுக்கட்டுரை அதற்கு மாறானது. ஆய்வுக்கட்டுரைகள் வசீகரிக்கும் வார்த்தைகளையும், வசனங்களையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை: அவையல்ல அதற்கு முதன்மையானவை. ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவதொரு விஷயம் சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருப்பொருளை முன்வைத்து அதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கும். எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவிக்கும். ஆய்வுக்கட்டுரையில் விஷய ஞானமே முக்கியமானது. கருப்பொருள் உறுதியானதாகவும், ஆதாரங்கள் கணீரென்று வக்கீலின் வாதங்களைப் போலிருக்கவேண்டும். ஆய்வுக் கட்டுரைகளில் மேற்கோள்கள் பயன்படுத்தப்படலாம்; அளவோடு சோற்றில் உப்பு சேர்ப்பதைப்போல. எல்லாக் கட்டுரைகளுக்கும் மேற்கோள்கள் உப்பு போலத் தேவைப்பட்டாலும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு அவை மிக அவசியம். ஒரு கட்டுரையில் தன்மையைப் பொறுத்தளவில் மேற்கோள்கள் அதிகமாக இல்லாமலிருப்பின் மேற்கோள்களை அவற்றின் உடமையாளர்களின் பெயரோடு கட்டுரையிலேயே கொடுக்கலாம்; இல்லாவிட்டால் அடிக்குறிப்பாகக் கட்டுரையின் இறுதியில் தரலாம். இந்த முறையில் மேற்கோள்களை விளக்குவது ஆய்வுக்கட்டுரைக்கு அடிப்படையில் அவசியம்.

விளக்கவுரைக் கட்டுரைகள் என்று நான் கூறுவது வேத வியாக்கியானக் கட்டுரைகளையே. வேத வசனங்களுக்கான தெளிவான விளக்கங்களை அளிக்கும் உரைநடைக் கட்டுரைகள் அவை. கட்டுரைக்கான பல்வேறு அம்சங்களை அவையும் கொண்டிருந்தபோதும் வசீகரிக்கும் வார்த்தைகளும், வசனங்களும் இவற்றிற்கு அவசியமானவையல்ல. எடுத்துக்கொண்ட பொருளைத் தெளிவான ஆதாரங்களோடு விளக்கும் கட்டுரைகள் இவை. ஆய்வுக்கட்டுரைகளைப்போல இவையும் தெளிவானதாக இருக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் இது எளிமையாக வாசிக்கிறவர்கள் புரிந்துகொள்ளும்படி இருக்கவேண்டியது அவசியம்.

கட்டுரை எழுத அவசியமான ஆரம்ப அம்சங்கள்

(1) மொழித் திறமை – கட்டுரை எழுத மொழித் திறமை அவசியம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிந்தனைகளை அடுக்கடுக்காக எழுத்தில் வடிக்க மொழி அவசியம். தமிழர்களாக இருந்தும் தமிழில் தேவையான அளவு பரிச்சயமும் பாண்டித்தியமும் இல்லாதவர்களாக இன்று தமிழர்கள் இருந்துவருகிறார்கள். மலேசியா போன்ற நாடுகளில் பொதுவாக தமிழர்களுக்கு பேச்சுமொழி மட்டுமே வருகிறது. அவர்கள் மலே மொழியில் கல்வி கற்பதால் தமிழில் எழுத, வாசிக்க பெரும்பாலானோருக்கு இயலவில்லை. அது பெரிய பிரச்சனைதான். தமிழகத்திலும்கூட ஆரம்பக் கல்வியைத் தமிழில் அடைந்து பல்கலைக்கழகப் பாடங்களைத் திடீரென்று ஆங்கிலத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால் இரண்டு மொழியிலும் முன்னேற்றமில்லாமல் இருப்பவர்கள் தொகை எண்ணில் அடங்காது. ஆரம்பக் கல்வி பெறும்போது அவர்களுக்குத் தரமாக வாசிக்கவும், எழுதவும் பயிற்சியும் அளிப்பதில்லை. நம்மினத்தில் இன்றைக்கு நன்றாக வாசிக்கவும், எழுதவும் முடிந்தவர்கள் சொந்த உழைப்பாலேயே முன்னேறியிருக்கிறார்கள்.

எந்தக் கட்டுரை எழுதுவதற்கும் வார்த்தை வளமும், இலக்கண அறிவும், இலக்கியப் பரிச்சயமும், தனித்துவமான மொழிநடையும் அவசியம். இதெல்லாம் இல்லாமல் கட்டுரை எழுதுவதென்பது இயலாத காரியம். எழுதத் துடிப்பிருந்தும் தமிழில் வாசிக்கும், எழுதும் பழக்கமில்லாதவர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும். முடியாததென்று ஒன்றில்லை. தமிழர்களாக இருப்பதால் நமக்குத் தமிழ் தெரியும் என்று நினைத்துக் கனவுலகில் இருந்து வருகிறார்கள் நம்மில் அநேகர். வாசியுங்கள்! வாசிப்பு வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்கும். அத்தோடு எழுத்தாளர்கள் எவ்வாறு வார்த்தைகளைக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்து வாசிக்கவேண்டும். நல்ல தமிழகராதியைப் பயன்படுத்தியும் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாம். தமிழில் வார்த்தைகள் அநேகம்; அதுவும் ஒரே விஷயத்தை விளக்கும் பல வார்த்தைகள் உண்டு. சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வார்த்தைகளைத் தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டும். வார்த்தைப் பரிச்சயம் இல்லாமல் நல்ல கட்டுரை எழுதமுடியாது.

இலக்கண அறிவு – எழுத்தில் எப்போதும் இலக்கணச் சுத்தம் இருக்கவேண்டும். ஒரு காலத்தில் கல்லூரிக்கு வெளியில் இலக்கணப் பண்டிதரொருவரிடமிருந்து டியூசன் மூலம் நான் இலக்கணத்தைக் கற்றிருக்கிறேன். நான்கு வரி எழுதினாலும் இலக்கணச் சுத்தத்தோடு எழுதவேண்டும். இன்று தமிழிலக்கணத்தைக் கற்றுக்கொள்ள இலகுவான தமிழில் எழுதப்பட்ட அநேக இலக்கண நூல்கள் இருக்கின்றன. இதை நான் சொல்லுவதற்குக் காரணம் போதகப் பணியில் இருக்கின்ற அநேகருக்கு இலக்கணச் சுத்தத்தோடு ஒரு பத்திகூட இன்று எழுதத் தெரியாமல் இருப்பதால்தான். இளைய தலைமுறையினர் இந்த அவலங்களையெல்லாம் சிந்தித்துப் பார்த்து தங்களுடைய எதிர்கால முன்னேற்றத்திற்காகத் தமிழைக் கற்றுப் பயன்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.

இலக்கணத்தின் அவசியத்தைப்பற்றிப் பேசுகிறபோது வசன அமைப்புக்கும், எழுத்துக்கும் அவசியமான நிறுத்தக்குறியீடுகள் பற்றி விளக்காமல் இருக்கமுடியாது. பெரும்பாலும் எல்லோரும் அறிந்திருக்கும் உண்மை வசனத்தின் முடிவில் முற்றுப்புள்ளியிட வேண்டுமென்பது. ஆனால், வசனத்தில் எந்த இடத்தில் காற்புள்ளியைப் பயன்படுத்த வேண்டும், அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, உணர்ச்சிக்குறி, அடைப்புக்குறி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். நிறுத்தக்குறிகள் பல்வேறு வகைப்படும். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி, உணர்ச்சிக்குறி, அடைப்புக் குறி, மேற்கோள் குறி, வினாக்குறி, எச்சக்குறி, ஒற்றை மேற்கோள் குறி, இரட்டை மேற்கோள் குறி, பிறை அடைப்பு, பகர அடைப்பு, சாய்கோடு, அடிக்கோடு ஆகியவையே நிறுத்தக் குறிகளாகும். இவையெல்லாம் வசனங்களின் மூலம் நாம் வெளிப்படுத்த முயல்கின்ற அழுத்தங்களையும், உணர்ச்சிகளையும் தெளிவாக வெளிக்கொணரத் துணை செய்கின்றன. ஆதியில் தமிழில் இத்தகைய குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பனை ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் தமிழில் இவை இருக்கவில்லை. மேலைத்தேசத்தைச் சேர்ந்தவர்களே நிறுத்தக்குறியீடுகளை தமிழுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்தும்போது தமிழிலக்கணம் தவறிவிடாமல் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. தென் தமிழகத்தில் கிறிஸ்தவ பணிபுரிந்த புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களான ஜி யூ போப், கால்டுவெல் ஆகியோருக்கு நிறுத்தக் குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கிருந்திருக்கிறது. நிறுத்தக்குறிகள் அவசியமாக இருந்தபோதும் அவற்றைத் தவறுதலாக இடம்மாறிப் பயன்படுத்துவோமானால் எழுத்தில் நாம் சொல்ல வந்த விஷயமே மாறிவிடும்; அல்லது ஆபத்தில் கொண்டுபோய்விட்டுவிடும். உதாரணத்திற்கு, கீழ்வரும் வசனத்தைப் பாருங்கள்.

“கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து ஒருநாளுமில்லை ஆசீர்வாதம் இவ்வுலகில்”

இதையே நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தி பின்வருமாறு எழுதினால் எளிதில் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

“கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து ஒருநாளுமில்லை! ஆசீர்வாதம் இவ்வுலகில்!”

இதையே நிறுத்தக்குறிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கீழ்வருமாறு எழுதினால் சொல்ல வந்த விஷயமே தலைகீழாக மாறிவிடுகிறது.

கர்த்தரே எல்லாம் என்று நினைத்திருப்போருக்கு ஆபத்து! ஒருநாளுமில்லை ஆசீர்வாதம், இவ்வுலகில்!

நிறுத்தக் குறிகள் ஒவ்வொன்றையும் எங்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமாகத் தருவது இந்த ஆக்கத்தில் முடியாத காரியம். அவை பற்றிய சிறு விளக்கத்தை மட்டும் தருகிறேன். தமிழில் இருக்கும் நாம் பயன்படுத்திக்கொள்ள நூல்களைப் பெற்று வாசித்து இவற்றைப் பயன்படுத்தும் முறையை அறிந்துகொள்ளப் பாருங்கள். உதாரணத்திற்கு என்னிடமிருக்கும் இரண்டு நூல்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

  • நல்ல தமிழெழுத வேண்டுமா? – அ கி பரந்தாமனார்
  • தவறின்றித் தமிழ் எழுத – மருதூர் அரங்கராசன்

காற்புள்ளி இடுதல்

1. சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்:

தனித்தனியாகப் பிரித்தல்: கல்வி, மருத்துவவசதி, பாதுகாப்பு ஆகியவை சமுதாயத்துக்குத் தேவை.

அடுக்கு அடுக்காகப் பிரித்தல்: நட்புக்குத் தாவீதும் சாலமோனும், இயேசுவும் யோவானும், பவுலும் தீமோத்தேயுவும் நல்ல எடுத்துக்காட்டுகள்.

சொற்றொடரில், எழுவாய் ஒன்றாக நின்று, பல பயனிலைகளைப் பெற்றுவரும்போது, இறுதிப்பயனிலை தவிர ஏனையவற்றிற்கு காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: கணவன் கொலை செய்யப்பட்டான் என்று கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள், விம்மினாள், அரற்றினாள், ஏங்கினாள், கலங்கினாள், மயங்கினாள், விழுந்தாள்.

பொருள்மயக்கம் நீக்கித் தெளிவுபடுத்த வேண்டிய இடத்தில் காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: அண்ணன், தம்பி வீட்டுக்குச் சென்றதால் நான் பார்க்கவில்லை.

‘கல்வி, அறமும் பொருளும் இன்பமும் வீடும் நல்கும்’ -என்னும் சொற்றொடரில் எண்ணும்மைகளுக்குப் பின் காற்புள்ளி இடுதல் தவறு.

பெரிய சொற்றொடர்கள் இணைக்கப்படும்பொழுது எண்ணும்மை இருப்பினும் தெளிவுக்காகக் காற்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: குறிஞ்சிக் காட்சிகளைக் கூறுவதில் வல்லவராகிய கபிலரும், வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவதில் சிறந்தவராகிய பரணரும், பத்துப்பாட்டில் இரண்டு பாடல்களை இயற்றியவராகிய நக்கீரரும் கடைக்கழகப் புலவர்கள்.

‘உம்’ இடைச்சொற்கள் நெருங்கி வரும் இடங்களில் காற்புள்ளி இடவேண்டியதில்லை. அவை ஒன்றுக்கொன்று தொலைவில் அமைந்திருக்குமாயின் காற்புள்ளி இடவேண்டும் என்பதை மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் விளக்குகின்றன.

அரைப்புள்ளி

ஒரே எழுவாயில் பல பயனிலைகள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி பயன்படுத்தப்படுகின்றது.

உதாரணம்:

பலர் வயிற்றளவை மீறி உண்பர்; பசியாலும் உண்பர்; கிடைத்தபோதெல்லாம் உண்பர்; நாவிற்காக உண்பர்; வயிறு கெட்டும் உண்பர்.

கண்ணன் தேர்வு எழுதினான்; ஆனால் அதில் தேரவில்லை.

காரணம் காட்டும் ஏனென்றால் என்பதற்கு முன் அரைப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: நான் இன்று பேசமாட்டேன்; ஏனென்றால், என் தொண்டை நோயுற்றிருக்கிறது.

முக்காற்புள்ளி

உள் தலைப்பு அமைக்கும் போதும், ஒருவர் கூற்றை விளக்குமிடத்தும், சொற்றொடரில் கூறியதொன்றை விரித்துக் கூறும்போதும் முக்காற்புள்ளி இடப்படுகின்றது.

உதாரணம்:

வாழ்வு இருவிதமானது : ஒன்று உயிர் வாழ்வு; மற்றொன்று உடல் வாழ்வு.

பொருள் கூறுக: களிறு, பிணிமுகம்.

முற்றுப்புள்ளி

சொற்றொடரின் இறுதியில் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: நீ உள்ளே வா.

சுருக்கச் சொற்களுக்கும் எழுத்துக்களுக்கும் முற்றுப்புள்ளி இட வேண்டும். எடுத்துக்காட்டு :(அ) திரு. மணி. திருநாவுக்கரசு. (ஆ) திரு. திரு.வி.க.

பட்டப் பெயர்களுக்குப்பின் முற்றுப்புள்ளி இடவேண்டும்.

உதாரணம்: திரு. இ. செழியன், க.மு.

வினாக்குறி

வினாச் சொற்றொடர்களின் இறுதியில் இடப்படுகின்றது.

உதாரணம்: பாடுபட்டால் பயன் இல்லாமல் போகுமா?

சொற்றொடருக்கு நடுவில் கேள்விக்குறி வரக்கூடாது. ‘நீங்கள் யார் என்று அவர் கேட்டார்’ என்னும் சொற்றொடரில் யார் என்ற சொல்லுக்குப் பின்னால் வினாக்குறி கண்டிப்பாக இருக்கக்கூடாது.

உணர்ச்சிக்குறி

வியத்தல், வரவேற்றல், வாழ்த்தல், வைதலின்போது இது பயன்படுத்தப்படுகின்றது. நம்ப முடியாது என்பதையும் இகழ்ச்சியுடையது என்பதையும் காட்டுமிடங்களிலும் உணர்ச்சிக்குறியிடுதல் வேண்டும்.

உதாரணம்: (அ) அந்தோ! பல பழந்தமிழ் நூல்கள் அழிந்தனவே. (ஆ) வாழி! வாழி! தமிழ்நாடு வாழியவே!

கண்டவாறு உணர்ச்சிக்குறியை !, !!, !!! இவ்வாறெல்லாம் இடுதல் விரும்பத்தக்கதல்ல.

ஒற்றை மேற்கோள் குறி

சிறப்புக் காரணம் கருதி ஏதேனும் ஒரு சொல்லை அல்லது தொடரைக் குறித்துக் காட்டுகின்ற இடங்களிலும், உரையாடலுக்குள் இடம்பெறும் மற்றோர் உரையாடலைக் குறிக்கவும் ஒற்றை மேற்கோள் இடப்படுகின்றது.

உதாரணம்: பரதன், “நான் என் செய்வேன்! அண்ணன், ‘நீபோ. நான் பதினான்கு ஆண்டுகள் கழித்தே வருவேன்’ என்று சொன்னார். அதனால் வந்துவிட்டேன்”

பிரித்துக் காட்டுதற்கும், பிறருடையது என்று அறிவித்தற்கும், பழமொழிகளைத் தெரிவித்தற்கும் ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப் படுகின்றது.

உதாரணம்: (அ) ‘வு’, ‘வூ’, ‘வொ’, ‘வோ’ என்னும் எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வரா. (ஆ) ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்பது பழமொழி.

இரட்டை மேற்கோள் குறி

தன் கூற்றை வலியுறுத்தத் தன்னிலும் சிறந்தோர் கூறியவற்றை எடுத்தாளுகின்ற இடங்களிலும், பிறர் உரையாடலை அப்படியே கூறுமிடங்களிலும் இரட்டை மேற்கோள் இடவேண்டும்.

உதாரணம்: (அ) “அறம்தலை நின்றார்க்கு இல்லை அழிவு” என்றார் கம்பர். (ஆ) நெடுஞ்செழியன், “இப்போரில் நான் வெல்லாமற் போனால் என் குடிகள் தூற்றும் கொடுங்கோலனாவேனாக!” என்று சூளுரைத்தான்.

விடுகுறி (அல்லது) எச்சக்குறி

சில எழுத்துக்களை அல்லது எண்களை விட்டுவிடும் போது ’ இக் குறியிடுக.

உதாரணம்: 26-11-’54 என்பதில் 1954இல் உள்ள 19 விடப்பட்டது காண்க.

மேற்படிக்குறி

மேற்குறித்ததே இஃது என்று காட்டுவது மேற்படிக்குறி.

உதாரணம்: ஆடுகொடி – வினைத்தொகை கடிநாய் – ” ”

சிறுகோடு

ஒன்றைச் சேர்ப்பதைக் குறித்ததற்கும் விரித்துக் கூறுபவற்றைத் தொகுத்துக் கூறுமிடத்தும் சிறுகோடு இடப்படும்.

உதாரணம்: நண்பர், சுற்றத்தார், ஊரார் -எல்லாரும் என்னைக் கைவிட்டார்.

தொடர் விடுநிலைக் குறி

வேண்டாததை விடும்போது . . . இக் குறியிடப்படுகிறது.

உதாரணம்: அருமை மாணாக்கர்களே, உங்கள் படிப்பைக் கவனியுங்கள்! உங்கள் வீட்டைக் கவனியுங்கள்! உங்கள் நாட்டை நோக்குங்கள்! . . . குற்றங்குறை இருப்பின் மன்னிப்பீர்களாக!

இடைப்பிறவரல் வைப்புக் குறி

இக் குறி ஒரு சிறு சொற்றொடரின் முன்னும் பின்னும் உள்ள சிறு கோடுகளைக் குறிக்கும். கூறுகின்ற சொற்றொடரின் நடுவில் இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்றொடரைப் பிரிக்க இக்குறி இடப்படும்.

உதாரணம்: இறுதியாக – சுருங்கக் கூறுமிடத்து – நாங்கள் வீட்டுக்கே திரும்பி வந்தோம்.

பிறை அடைப்பு

ஒன்றனை விளக்க மற்றொரு சொல்லைப் பிறை அடைப்புக்குள் குறிப்பது உண்டு.

உதாரணம்: பாரதியார் நுழைவுத்தேர்வில் (entrance examination) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

பிறை அடைப்பு சொற்றொடரின் இறுதியில் வந்தால் பிறை அடைப்புக்குப் பிறகு புள்ளி வைக்க வேண்டும்.

உதாரணம்: குற்றங்கள் மூன்றாவன : இணைவிழைச்சு (காமம்), வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்).

முழுச் சொற்றொடரும் பிறை அடைப்புக்குள் இருப்பின் முற்றுப் புள்ளியையும் பிறைஅடைப்புக்குள் இட வேண்டும்.

உதாரணம்: நான் முதன்முதலாகச் சென்ற வெளியூர் திருப்பெருந் துறையாகும். (அது இக்காலத்தில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் படுகின்றது.)

பிறை அடைப்புக்குள் மேலும் பிறைஅடைப்பு தேவைப்பட்டால், பகர அடைப்பு இடவேண்டாம்; பிறை அடைப்பையே பயன்படுத்தலாம்.

பகர அடைப்பு

பிறருடைய உரைகளை மேற்கோளுக்காக எடுத்தாளும் போது, எழுதுகிறவர் இடையிடையே தம் கருத்தைத்தெரிவிக்கத் தம் கருத்தைப் பகர அடைப்பிற்குள் எழுதவேண்டும்.

உதாரணம்: “நரசிம்ம வர்மனின் படைத்தலைவர் விக்கிரம கேசரி [பிற்காலத்தில் பரஞ்சோதி] இரண்டாம் புலிகேசியை வெற்றிகொண்டு திரும்பும்போது பிள்ளையார் சிலையைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்”.

சாய் கோடு

இரண்டில் ஒன்றை அல்லது பலவற்றில் ஒன்றைத்தேர்வு செய்யக்கூடிய இடங்களில் சாய் கோடு இடப்படுகிறது.

உதாரணம்: பால் : ஆண்/பெண்

தொகையைக் குறிக்கும் எண்ணை அடுத்து, இருசிறு படுக்கைக் கோடுகளுடன் இணைத்து இடப்படுகிறது.

உதாரணம்: ரூபாய் 5000/=

அடிக்கோடு

முதன்மையான ஒன்றைக் கவனத்தை ஈர்க்குமாறு தருவதற்கு அடிக்கோடு இடப்படுகின்றது.

உதாரணம்: ஒப்போலை அளிக்க வருவோர் கண்டிப்பாக அடையாள அட்டை எடுத்துவர வேண்டும்.

இவற்றைத் தவிர, நூலில் அடிக்குறிப்பைப் பார்க்குமாறு கூறும் சில குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள் சில குறியிடுகளாவன:

உடுக்குறி *

குத்துவாட் குறி +

பிரிவுக்குறி $

சதுரக்குறி #

இணை குறி ‖

[மேல்வரும் நிறுத்தக்குறிகளையும் அவற்றிற்கான விளக்கங்களையும் இணையத்தில் தமிழ்நம்பியால் தரப்பட்டிருக்கும் விளக்கங்களைப் பயன்படுத்தி ஒருசில மாற்றங்களுடன் தந்திருக்கிறேன்.]

இலக்கியப் பரிச்சயம்

இலக்கண அறிவோடு இலக்கியப் பரிச்சயமும் அவசியம். ஒரு மோட்டார் வண்டிக்கு இயந்திரம் போல் இலக்கணம் என்றால், அதன் வடிவமைப்பு போல் இலக்கியம் இருக்கிறது. மொழிக்கு அழகூட்டுவது அதன் இலக்கியம். இலக்கணமா, இலக்கியமா முதலில் வந்தது என்ற கேள்வி உண்டு. உண்மையில் இலக்கியத்திற்குப் பிறகுதான் இலக்கணம் வந்திருக்கிறது. இந்திய மொழிகள் பலவற்றில் ஆரம்பத்தில் இலக்கணமே இருக்கவில்லை தெரியுமா? வில்லியம் கேரியே முதன் முதல் சில இந்திய மொழிகளில் இலக்கண நூல்களை அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

இலக்கியப் பரிச்சயமிருக்கிறவர்களுடைய எழுத்தில் சுவையும், அழகும் இருக்கும். எழுதுகிற கட்டுரை உப்புச் சப்பில்லாமல் விஷயஞானத்தை மட்டும் கொண்டிருந்தால் அது வாசகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தாது. எழுத்தில் நளினத்துக்கு அவசியமில்லாமல் விஷய ஞானத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைகள் நிச்சயம் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைக்கு இலக்கிய அம்சங்கள் அவசியமில்லை. ஆனால், எல்லாக் கட்டுரைகளும் அந்தவிதத்தில் அமையவேண்டியதில்லை. எழுத்தில் விஷயமும், அதை விளக்கும் நடையில் அழகும், நளினமும், சுவையும், எளிமையும் இருப்பது அவசியம். வாசகர்களை எழுத்து வாசிக்கத் தூண்ட வேண்டும். எழுத்தில் பழமொழிகள், உவமைகள், உருவகங்கள், சிலேடை போன்றவற்றைப் பயன்படுத்த இலக்கியப் பரிச்சயம் ஓரளவுக்கு அவசியம். அதுவே அதிகமாக இருந்தால் நல்ல எழுத்தாளனாக மாறலாம். நல்ல இலக்கிய நூல்களை வாசித்து இலக்கிய வளத்தை அடையப்பாருங்கள். எழுத வேண்டும் என்று துடிக்கிறவர்கள் இதையெல்லாம் முயற்சியெடுத்து அடையப் பார்ப்பது அவசியம்.

மொழிநடை

ஓரளவுக்கு வாசிக்கவும், எழுதவும் தெரிந்தவர்கள் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாசிப்பு என் வாழ்க்கையில் இல்லாதிருந்திருக்குமானால் இன்று நான் தமிழில் எழுதுவதிலும், பேசுவதிலும் செய்துவருகின்ற ஒன்றையும் நினைத்தும் பார்த்திருக்க முடியாது. வாசிப்பைப் பற்றி நான் இந்தளவுக்கு விளக்குவதை வாசகர்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். என் அனுபவத்தை வைத்து அப்பட்டமாக மறுபடியும் சொல்லுகிறேன் – தமிழ் வாசிப்பு என் வாழ்க்கையில் இல்லாதிருந்திருக்குமானால் என்னால் எழுத்திலும், பேச்சிலும் தேர்ச்சியடைந்திருக்க வழியேயில்லை. நான் எழுதி வெளியிட்டிருக்கும் ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலில் வாசிப்பின் அவசியத்தைத் தெளிவாகவே விளக்கியிருக்கிறேன். அதை வாங்கி வாசியுங்கள். முக்கியமாக நம்மினத்து கிறிஸ்தவர்களுக்காகவே அது எழுதப்பட்டிருக்கிறது.

கட்டுரை எழுதுவதற்கு தெளிவான அருவிபோல் ஓடும் மொழிநடை அவசியம். வாசிப்பே அதற்குத் தேவையான வார்த்தை வளத்தை அள்ளித் தருகிறது. வார்த்தைகளை வேறு வழியில் கற்றுக்கொள்ள முடியாது. தமிழ் அழகான, அருமையான பழமையான மொழி. அதன் வார்த்தை வளம் பெரியது. சிறுதொகை வார்த்தைகளை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு கட்டுரை எழுத முடியாது; கடிதம் வேண்டுமானால் எழுதலாம். தரமான கடிதத்தை எழுதக்கூட வார்த்தைகள் தேவை. வாசிப்பே அதிகளவு வார்த்தைகளைத் தெரிந்துகொள்ள ஒரே வழி. தகுந்த வார்த்தைப் பிரயோகம் கட்டுரைக்கு அழகு சேர்க்கும், வலிமை தரும், அழுத்தத்தை ஏற்படுத்தும். தமிழில் ஒரே விஷயத்திற்கு பல வார்த்தைகள் உண்டு. அதெல்லாம் தெரிந்துவைத்திருந்து எங்கே எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் அதிக வாசிப்பு நமக்குக் கற்றுத் தரும். நிச்சயம் நீங்கள் நல்ல நவீன தமிழகராதியொன்றை வாங்கி அடிக்கடி பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வெறும் சாதாரண அகராதியை வாங்காதீர்கள்; தரமானதொன்றைத் தேடிப்பெற்றுக்கொள்ளுங்கள். இன்று அநேக கலைச்சொற்கள் தமிழில் உருவாகியுள்ளன. அவற்றிலும் பரிச்சயம் இருக்கவேண்டும்.

ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, ஜானகிராமன், மு.வ, அழகிரிசாமி போன்றோரே எனக்கு 1960-1970களில் எனக்குத் தமிழையும், வார்த்தைகளையும் கற்றுக்கொடுத்தனர். ஆகவே, வாசியுங்கள். சோம்பேரித்தனத்திற்கு முடிவு கட்டிவைத்துவிட்டு நல்ல நூல்களை வாங்கி வாசியுங்கள்.

பேசுவதிலும் எழுதுவதிலும், இன்று கிறிஸ்தவர்களிடம் கிறிஸ்தவரல்லாதவர்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு வழக்கம் இருக்கிறது. அதாவது, வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும், 50 வருடங்களுக்கு முன்னிருந்த வடமொழித்தாக்கமுள்ள மொழியை அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகிறார்கள். நம்மினத்துக் கிறிஸ்தவர்கள், அதிலும் தமிழகத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இது பழகிப்போனதொன்று. இது கிறிஸ்துவை அறியாத சமுதாயத்தைத் தூரத்தில் தள்ளிவைத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஐம்பது வருடங்களுக்கு முன்னிருந்த, வேதத்தில் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் வடமொழித் தாக்கங்கொண்ட மொழிநடையையும், வார்த்தைகளையும் வேறு எங்கும் காணமுடியாது. 1970களின் ஆரம்பகாலம்வரை கிறிஸ்தவரல்லாதவர்கள் மத்தியில் அத்தகைய நடை பேச்சிலும் எழுத்திலும் இருந்திருக்கிறது. இன்றைக்கு அத்தகைய நடையை எவரும் பயன்படுத்துவதில்லை. வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழிநடையை தேவமொழியாகக் கருதிப் பயன்படுத்தி வரும் கொடுமையை இனியாவது விட்டுவிடவேண்டும். கிறிஸ்தவ சமுதாயத்தை இது ஒதுக்கிவைத்துவிடுகிறது. இந்த மொழிநடை கொச்சையானது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கின்ற ஒரு மொழிநடையல்ல. எழுத்தில் இன்று நிச்சயம் இதைப் பயன்படுத்தக்கூடாது.

எழுதுகிற ஒவ்வொருவரும் ஒரு மொழிநடையைத் தங்களுக்கென்று உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது தனித்துவமானது. இதைக் கற்றுக்கொடுக்க முடியாது. அதிகமான வாசிப்பும், எழுத்தும் ஒருவர் இதை அடையும்படிச் செய்யும். இது எழுதுகிறவரை அடையாளப்படுத்துவதோடு, அவருடைய எழுத்தின் தனித்தன்மையை வாசகர்கள் முன்வைக்கிறது. ஜெயகாந்தனின் எழுத்து நடை தனித்துவமானது. வார்த்தைகளைத் தெரிந்தெடுத்து சுருக்க வசனங்ளை அமைத்து, ஆணித்தரமான கருத்துக்களை முன்வைக்கும் அவருடைய எழுத்து. அது அவருடைய அதிகளவு வாசிப்பும், அவருக்கேயுரிய விருப்பவெறுப்புக்களும் அவரில் ஏற்படுத்தியிருந்தன. இதே போல்தான் அழகிரிசாமி, ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துநடை. ஆரம்ப எழுத்தாளர்கள் இதை உடனடியாக அடைந்துவிட முடியாது. வாசிக்க வாசிக்க, எழுத எழுத எழுதுகிறவன் தனக்கென ஒரு தனித்துவமான எழுத்து நடையை அமைத்துக்கொள்ளுகிறான். அதிக உழைப்பும், அனுபவமும் இதை ஒருவன் அடைய உதவுகின்றன. நல்ல எழுத்தாளர்களின் எழுத்து நடையைக் கூர்ந்து கவனித்து வைப்பதும் பெரிதும் உதவும்.

வேதஞானம்

இந்த ஆக்கத்தில் நான் பொதுவான கட்டுரைகளை எழுதுவதைப் பற்றியல்லாமல் வேதக் கட்டுரைகளை எழுதுவதை, கிறிஸ்தவர்களை மனதில் வைத்து எழுதுகிறேன். ஆகவே, இந்த இடத்தில் வேத அறிவைப்பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. எந்தக் கட்டுரையை எழுதுவதானாலும் விஷய ஞானம் இருக்கவேண்டும். பொதுவான சுருக்கக் கட்டுரைகளை எழுதுவதற்குங்கூட எழுதப்போகிற விஷயத்தைப் பற்றிய தகுந்த அறிவு இருக்கவேண்டும். விஷய ஞானமில்லாமல் ஒரு கட்டுரையை வரைய முடியாது. அப்படி தகுந்த விஷய ஞானமில்லாமல் எழுதுவோமானால் வாசகர்கள் நம்முடைய அறியாமையைத்தான் கண்டுகொள்வார்கள். இந்த விஷய ஞானத்தை அடைய வாசிப்பு மிக மிக அவசியம். இதுவரை எத்தனை தடவை வாசிப்பின் அவசியத்தை இந்த ஆக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறேனோ தெரியாது; வாசிப்பில்லாமல் ஒன்றும் நடக்காது என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் சரி. வாசிப்பு நமக்கு அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள பேருதவி புரியும்.

வேதக் கட்டுரைகளை எழுத வேதஞானம் தேவை. எழுதப்படுகிற பொருள்பற்றி எழுதுகிறவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒருமுறை ஒருவிஷயத்தைப்பற்றி எழுதி அது அச்சில் வந்துவிட்டால் அதைத் திரும்பவும் மாற்றமுடியாது. ஆகவே, எழுதப்போகிற விஷயத்தைக் கவனமாகப் படித்து ஆராய்ந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். உதாரணத்திற்கு ‘மூல பாவம்’ என்ற வேதம் போதிக்கும் பாவத்தைப் பற்றிய சத்தியத்தை விளக்கி எழுதத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைப்பற்றி எழுதுவதற்கு முன் அதுபற்றிய முழுமையான அறிவு அவசியம். மூல பாவத்தைப் பற்றிய அத்தனை உண்மைகளையும் ஒன்று தவறாமல் வேதத்திலிருந்தும், அதுபற்றி விளக்கும் நல்ல நூல்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்புகளையும் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். இப்படி நான் சொல்லுவதை புதுமையாக எண்ணாதீர்கள். ஒவ்வொரு நல்ல எழுத்தாளனும் இதைத்தான் செய்வான். மேலைநாட்டு எழுத்தாளர்கள் ஒரு நூலை எழுதுவதற்கு ஒரு வருடத்தையோ அல்லது ஓரிரு வருடங்களையோ எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமா? அதற்குக் காரணம் எழுதவேண்டிய பொருள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுத் தேவையான விபரங்களை சேகரித்துக்கொள்ளத்தான். இது கட்டுரைதானே, அதற்கு இந்தளவுக்கு உழைப்பு தேவையா? என்று சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். கட்டுரை எழுத நிச்சயம் ஓரிரு வருடங்கள் தேவையில்லைதான். இருந்தாலும் நான்கு பக்க கட்டுரை எழுதுவதானாலும் எழுதப்போகிற விஷயத்தைப்பற்றிய தகுந்த விஷயஞானம் மிகமிக அவசியம். அதுவும் கிறிஸ்தவர்கள் வேதக்கட்டுரை எழுதுகிறபோது கர்த்தருடைய வேதத்திற்குப் புறம்பான எந்தவிஷயத்தையும் எழுதாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

கட்டுரையின் முக்கிய அம்சங்கள் (அறிமுகம், சரீரம், முடிவுரை)

இதுவரை கட்டுரை எழுதுவதற்கு அவசியமான பொதுவான ஆரம்ப அம்சங்களைப் பற்றி விளக்கிவந்திருக்கிறேன். கட்டுரை எழுத ஆரம்பிக்கு முன் அதற்கான முன்னேற்பாடாக எங்கு ஆரம்பித்து எங்கு போய் எப்படி முடிக்கப்போகிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான ஒரு வரைபடத்தை அமைத்துக்கொள்வது அவசியம். பிரயாணம் போகிறபோது அதற்கான வரைபடத்தைப் பார்த்துப் போகப்போகிற வழியை நாம் கணக்கிட்டுக் கொள்ளுகிறோம் அல்லவா? பிரயாணத்திற்கான நேரத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுகிறோம். இந்த முன்னேற்பாடு பிரயாணத்தைத் திட்டமிட்டு நல்ல முறையில் முடிக்க உதவுகிறது. அதுபோலத்தான் கட்டுரை எழுதும்போதும் அதை எழுதுவதற்கான ஒரு திட்டத்தை முன்னேற்பாடாகத் தயாரித்துக்கொள்வது அவசியம்.

இனிக் கட்டுரையின் முக்கிய அம்சங்களைக் கவனிப்போம். கட்டுரையின் முக்கிய அம்சங்களைப் பலவிதங்களில் விளக்கலாம். சரீரத்தைப் பற்றி விளக்குவதானால் அது தலை, மார்பும், வயிறும், கரங்கள், கால்கள் என்று பிரித்து விளக்குவோம். அது போல் ஒரு கட்டுரைக்கும் வசதியாக அதைப் பிரித்துப் பார்க்கும்படியான முக்கிய அம்சங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரையில் அதைச் சுருக்கமாக மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம்.

  • அறிமுகம்,
  • சரீரம்,
  • முடிவுரை

இவை கட்டுரையின் சுருக்கமான பிரிவுகள். இப்பிரிவை மேலும் விளக்கமாகப் பின்னால் பிரித்துக்காட்டவிருக்கிறேன். இப்போதைக்கு இந்த மூன்று முக்கிய அம்சங்களையும் கவனிப்போம்.

(1) கட்டுரையின் அறிமுகம்

கட்டுரை எந்தப் பொருளை விவாதித்து விளக்குகிறது என்பதை சுருக்கமாக வாசகர்களுக்கு அறிவிக்கும் பகுதியே அதன் அறிமுகமாகும். அறிமுகத்தின் பணி கட்டுரையின் கருப்பொருளை அறிமுகம் செய்து வைப்பது. எழுத ஆரம்பித்தவுடன் எப்போதும் மனதில் வருகிற எதையும் எழுதிவிடக்கூடாது. கட்டுரையைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து ஆராய்ந்து அதற்கான அத்தனை அம்சங்களையும் குறிப்பெடுத்து வைத்து மனதில் ஒரு திட்டத்தோடு, போகிற வழி தெரிந்து எழுதவேண்டும். முக்கியமாக கட்டுரையின் அறிமுகத்தைக் கடைசியாகவே எழுத வேண்டும். இது சிலருக்கு ஆச்சரியமாகப்படும். இதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு கட்டுரையை முழுமையாக எழுதி முடித்தபிறகுதான் எழுத்தாளருக்கு அதுபற்றிய முழு விபரமும¢ தெளிவாகத் தெறியும். அதற்குப் பின் அந்தக் கட்டுரையை எப்படி வாசகர்களுக்கு அவர்களுடைய மனதைக் கவர்ந்து ஈர்க்கும் விதத்தில் அறிமுகப்படுத்துவது என்று சிந்தித்தே எழுத்தாளன் அறிமுகத்தை எழுதவேண்டும். அறிமுகம் சுருக்கமாக அதேவேளை சுவையாக இருக்கவேண்டும். அது இதயத்தைத் தொட்டு சுண்டி இழுக்கவேண்டும். கட்டுரையின் கருப்பொருளைக் கச்சிதமாக விளக்குவதாக இருக்கவேண்டும். அதை விளக்குகின்ற விதத்தில் அறிமுகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும். அறிமுகத்தை ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டும் எழுதலாம் அல்லது ஒரு தகுந்த ஆணி அடித்ததுபோல் இருக்கும் ஒரு மேற்கோளைப் பயன்படுத்தியும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அது அறிமுகத்துக்குரிய அடையாளங்களைக் கொண்டு கருப்பொருளை சுருக்கமாக விளக்குவதாக அமைய வேண்டும். அறிமுகத்தினால் ஈர்க்கப்படுகிறபோதே வாசகன் கட்டுரையைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பான். அறிமுகம் சலிப்பேற்படுத்தும் விதத்தில் இருக்குமானால் கட்டுரையை அவன் தொடர்ந்து வாசிக்கமாட்டான். ஆகவே, அறிமுகம் இறுதியாகத்தான் எழுதப்பட வேண்டும்.

(2) கட்டுரையின் சரீரம்

கட்டுரையின் அடுத்த முக்கிய அம்சம் அதன் சரீரமாகும். மனித உடலுக்கு சரீரம் எத்தனை அவசியமோ அதுபோல்தான் கட்டுரைக்கும். கட்டுரையின் சரீரமே அதன் கருப்பொருளை விபரமாக விளக்கும் அம்சமாகும். கட்டுரையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பது அதன் சரீரமே. இதுவே கட்டுரையில் நீளமான பகுதியாக அமையும். கட்டுரையின் கருப்பொருளை கட்டுரையின் தன்மைக்கேற்றவிதத்தில் விவாத நோக்கில் விளக்கி நிரூபிப்பது இந்தச் சரீரப் பகுதியே. இந்தப் பகுதி கவனத்தோடு சிந்தித்து ஆராய்ந்து எழுதப்பட வேண்டும். இதில் உதாரணங்களும், மேற்கோள்களும், வேதப் பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு கட்டுரையின் கருப்பொருளை எழுத்தாளன் வாசகன் முன் எடுத்துவைக்க வேண்டியவனாக இருக்கிறான். இந்தப் பகுதி பல பத்திகளைக் கொண்டு அமையும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

(3) கட்டுரையின் முடிவுரை

கட்டுரையின் கடைசி அம்சம் அதன் முடிவுரை. முடிவுரை பலவிதங்களாக எழுதப்படலாம். அதன் நோக்கமே கட்டுரையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து வாசகன் அதன் முடிவை அறிந்துகொள்ளச் செய்வதுதான். இது மிகவும் நீளமாக அமைய வேண்டிய அவசியமில்லை. முடிவுரை ஒரு மேற்கோளோடோ அல்லது ஒரு பத்தியில் முடிவை விளக்குவதாகவோ இருக்கலாம். உதாரணம் எத்தனை சுவையாக ஈர்ப்பதாக இருக்கவேண்டுமோ அதேபோல் முடிவுரையும் ஆணியடித்ததுபோல் கச்சிதமாக அமைந்திருக்க வேண்டும். கட்டுரையில் விவாதித்து விளக்கியிருக்கும் அம்சங்கள் அனைத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து வாசகனுடைய மனதில் இறுதியில் அழுத்தமாகத் தங்கும் விதத்தில் முடிவுரை அமைய வேண்டும்.

(இன்னும் வரும்)

One thought on “கட்டுரை எழுதலாம் வாருங்கள்

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s