புதிய வருடம் ஆரம்பமாகியிருக்கிறது. உங்களெல்லோருக்கும் பத்திரிகைகுழுவினரின் சார்பாக என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். புதிய ஆண்டு உங்களுக்கு ஆண்டவரின் ஆத்மீக ஆசீர்வாதங்களை அள்ளித்தரட்டும். ஒவ்வொரு வருடமும் பின்னோக்கிப்போக நாம் ஆத்மீக வாழ்க்கையில் முன்னோக்கிப் போகிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்த்தரின் கிருபையிலும், ஞானத்திலும் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறோம், திருச்சபையில் நல்லாத்துமாக்களாக இருந்து அவருடைய கட்டளைகளை எந்தளவுக்கு விசுவாசத்துடன் பின்பற்றியிருக்கிறோம் என்பதே முக்கியம். இந்தப் புதிய வருடம் அதில் உங்களை உயர்த்துவதாக இருக்கட்டும்.
இந்த இதழில் நான்கு ஆக்கங்களைக் காணலாம். வாசிப்பது பற்றி எழுதிய பிறகு, எழுதுவது எப்படி என்பது பற்றி இந்த இதழில் அது தொடர்பான முதலாவது ஆக்கத்தைத் தந்திருக்கிறேன். இதுவரை இந்த விஷயத்தைப்பற்றி நான் எதுவும் எழுதியது இல்லை. அதுபற்றி ஒருவருக்கு அளித்த ஆலோசனைகளே இந்த ஆக்கத்தை எழுதவைத்தது. அது உங்களுக்குப் பயனுள்ளதாக அமையுமானால் கர்த்தருக்கு நன்றி. அல்பர்ட் என். மார்டின் அவர்களின் தேவபயம் என்ற ஆங்கில நூலில் இருந்து ஒரு அதிகாரத்தை மொழிபெயர்த்து தந்திருக்கிறோம். வேதம் தேவ பயத்தைப்பற்றி அதிகமாகவே விளக்குகிறது. ஆனால், அதை இன்று மறந்துபோயிருப்பவர்களும், நிராகரிப்பவர்களுமே நம்மத்தியில் அதிகம். தேவபயத்தைப்பற்றிய உணர்வை இந்த ஆக்கம் உங்களில் ஏற்படுத்தட்டும். டேவிட் மெரெக் அவர்களின் பக்தி வைராக்கியம் பற்றிய இரண்டாவது ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கிறது. எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்த ஆக்கம் இது. நிச்சயம் உங்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இறுதியாக நூல் அறிமுகம் ஒன்றும் இதில் வந்திருக்கிறது. திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றி தமிழில் வந்திருக்கும் நூலை அதன் ஆசிரியர் கேட்டுக்கொண்டதற்கேற்ப திறனாய்வு செய்து தந்திருக்கிறேன். இந்த இதழையும் பல வேலைகளுக்கும், ஊழியப்பணிகளுக்கும் மத்தியில் நல்லபடியாக தயாரித்து அச்சிட்டு அனுப்பத் துணை செய்திருக்கும் தேவனுக்கும், அஞ்சலில் உங்களுக்கு அனுப்பிவைக்கத் துணைபுரிந்திருக்கும் என் சபையாருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். – ஆர்.