வேதம் விளக்கும் தேவபயம் – அல்பர்ட் என். மார்டின்

[அல்பர்ட். என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் தேவபயம் (Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம்.]

வேதாகமத்தில் ஆதிக்கம் செலுத்தும் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறது தேவபயம். நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்களின் சிந்தனைகளிலும் பிரசங்கங்களிலும் இந்த விஷயமே அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. ஒருவன் மெய்யான தேவபக்தியுள்ளவன் என்பதை விளக்குவதற்கு, நம்முடைய ஆவிக்குரிய முற்பிதாக்கள் “கடவுளுக்கு பயப்படும் மனிதன்” என்றே அவனைப் பெரும்பாலும் அழைத்தார்கள். இந்தப்பதம் எதைப் பிரதிபலிக்கிறதென்றால், தேவபயமுள்ள எந்தவொரு மனிதனும் தன் ஆத்துமாவின் தேவபக்தியை வெளிப்படுத்துவது தேவபயம் என்பதை உணர்ந்தவனாக இருப்பதைத்தான். சரீரத்திலிருந்து ஆவியை எடுத்துவிட்டால், கொஞ்ச நாட்களில் மிஞ்சுவது வெறும் நாற்றமெடுக்கும் பிணமே. தேவபக்தியிலிருந்து தேவபயத்தை எடுத்துவிட்டால், பரிசேயத்தனமும், வெறும் மதமும், மாய்மாலமுந்தான் நாற்றமெடுக்கும் பிணத்தைப் போல மிஞ்சும்.

வேதாகமப் போதனைகளில் தேவபயத்தின் ஆதிக்கத்தை இப்போது கவனிப்போம். வேதத்தில் தேவபயமே ஆதிக்கம் செலுத்தும் போதனை என்ற முடிவுக்கு வர நிச்சயமாக ஒருவருக்கு அதிக படிப்பு தேவையில்லை. உண்மையில், ஒரு நல்ல ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தினாலே நான் இப்போது உங்கள் முன் வைக்கிற பாடத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் கண்டறியலாம். அந்த ஒத்தவாக்கிய அகராதியில் “பயம்” என்ற வார்த்தையைப் பார்த்தீர்களானால், தேவபயத்தைக் குறிப்பிடும் கிட்டத்தட்ட 150 முதல் 175 வரையுள்ள குறிப்புகளை நீங்கள் கவனிக்கலாம். இந்தக் குறிப்புகளோடு, தேவபயத்தை விளக்கும் ஏனைய வேதப்பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், நிச்சயமாக தேவபயத்தைக் குறிப்பிடும் மேலும் நூற்றுக்கணக்கான குறிப்புகளை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், பழைய புதிய ஏற்பாடுகளில் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் ஒரு போதனை இந்நாட்களில் பெரிதும் மறக்கடிக்கப்பட்டு அல்லது அசட்டை செய்யப்பட்டிருப்பதுதான். இந்தப் போதனையின் ஆதிக்கத்தை நீங்கள் அறிந்துகொண்ட பிறகு, தேவபயத்தைப் பற்றிய வெறும் அறிவோடு இருந்துவிடமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் கடவுளையும் வேத சத்தியங்களையும் நேசிக்கிறேன் என்று ஒருவன் உரிமை பாராட்டிக்கொண்டு, வேதம் முழுவதும் இந்தளவுக்கு முக்கியத்துவமளித்து விளக்கப்பட்டுள்ள ஒரு போதனையைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்க முடியாது.

பழைய ஏற்பாட்டில் தேவபயம்

முதலாவதாக, தேவபயத்தைப் பற்றி பழைய ஏற்பாடு என்னச் சொல்லுகிறது என்று பார்ப்போம்.

நியாயப்பிரமாணங்களில் தேவபயம்

வேதாகமத்தில் தேவபயத்தின் ஆதிக்கம் என்று சொல்லுகிறபோது, ஆதியாகமம் 31வது அதிகாரம் வேதத்திலுள்ள எல்லாப் பகுதிகளிலும் மிகவும் முக்கியமான பகுதியாக இருக்கிறது. இங்கே முற்பிதாவாகிய யாக்கோபு, “என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார்” என்றார் (வசனம் 42). முழு வேதத்திலும் கடவுளின் பெயர் அவருடைய குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாயிருக்கிறது. இங்கு அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பெயர் “ஈசாக்கின் பயபக்திக்குரியவர்” என்பதாகும். நாம் கடவுளை சரியாக தெரிந்துவைத்திருப்போமானால், அவர் தன்னை ஈசாக்கின் பயபக்திக்குரியவர் என்று தன்னை அழைத்து தன்னுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்தியிருப்பதினால் நாம் அவரைப் பற்றிய மெய்யான வேதப்பூர்வமான பயத்தோடு அவரை நாடுகிறவர்களாக இருப்போம்.கடவுளைப் பற்றிய அறிவும், அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும், அவரைப் பற்றி ஈசாக்கு கொண்டிருந்த பயத்திற்கு நேராக என்னை வழிநடத்தாவிட்டால், நான் சரியான வகையில் கடவுளை அறிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

யாத்திராகமம் 18ல், மோசே தனி மனிதனாக இஸ்ரவேல் மக்களை நிர்வகித்து வந்ததைப் பற்றிய பிரச்சனை பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் அங்கு இஸ்ரவேலரின் அநேக வழக்குகளுக்கு முதிர்ச்சியான மனதோடு நியாயஞ் சொல்லிக்கொண்டு வந்தார். மோசே இதைத் தனி மனிதனாய் செய்ய முடியாதென்றும் அதற்குத் தகுதியான சிலரை தன்னோடு இந்த காரியங்களுக்காக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவருடைய மாமனாகிய எத்திரோ ஆலோசனை சொன்னார். இந்த நியாயஞ் சொல்லும் பொறுப்பை ஏற்பதற்கான தகுதியைக் குறித்துச் சொல்லுகிறபோது, வசனம் 21, “ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்” என்று அறிவிக்கிறது. வலிமைமிக்க இஸ்ரவேல் நாட்டில் நியாயஞ் செய்யும் நிர்வாகிகளுக்கான தகுதிகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டபோது அவர்கள் தேவபயமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவற்றில் உச்சகட்ட முக்கியத்துவம் வாய்ந்த குணாதிசயமாகக் கருதப்பட்டது. அவர்களிடம் வேறு எந்தத் தகுதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், முதன்மையான குணாதிசயமாகிய தேவபயம் இல்லாவிட்டால், அவர்கள் இஸ்ரவேல் நாட்டில் நியாயம் விசாரித்து பிரச்சனைகளைத் தீர்க்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த பொறுப்பிற்கு தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.

உபாகமம் 4ல், கடவுள் தம்முடைய கட்டளைகளையும் நியாயங்களையும் கொடுக்கும்படி ஏன் அவர்களைத் தெரிந்தெடுத்தார் என்பதை இஸ்ரவேல் மக்களுக்கு மோசே விளக்குகிறார். அவர்களுக்கான கடவுளுடைய வார்த்தையை மறக்க வேண்டாம் என்று மோசே அந்நாட்டினரைப் பின்வருமாறு அறிவுறுத்துகிறார், “அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில்” என்கிறது 12ம் வசனம். இந்தப் பகுதியில், கடவுள் தம்முடைய வார்த்தைகளை இஸ்ரவேலருக்கு தெரியப்படுத்தியதின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அவர்கள் தேவனுக்கு பயப்படுதல் என்றால் என்ன என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.

இஸ்ரவேல் நாடு பெற்றிருந்த சிறப்புரிமைகளைப் பவுல் புதிய ஏற்பாட்டில் பட்டியலிட்டுக் காட்டியபோது, “(1) இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? (2) அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே” (ரோமர் 3.1-2) என்று உறுதியாகச் சொல்லுகிறார். கடவுளுடைய வார்த்தைகள் அவர்களுக்கு செந்தமானவைகளாக இருப்பதே இஸ்ரவேலரின் விசேஷித்த ஆசீர்வாதமாக இருக்குமானால், தமக்கு பயப்படுவதை அவர்கள் கற்றுக்கொள்ளவே அவர்களுக்கு அவற்றைக் கொடுத்திருக்கிறேன் என்று கடவுள் தாமே சொல்லியிருப்பதினால், மோசேயின் வெளிப்படுத்தல்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பாகவும், உட்கருத்தாகவும் இருப்பது தேவபயமே.

யோபுவில் தேவபயம்

தமக்கு பயப்படும் பயத்தை கடவுள் இஸ்ரவேல் தேசத்திற்கும் கற்றுத்தரும் நடவடிக்கையிலிருந்து பழைய ஏற்பாட்டு விசுவாசியோடு அவருக்கிருந்த உறவைப்பற்றி யோபுவின் புத்தகத்தில் நாம் வாசித்தறிந்து கொள்ள முடிகிறது. பரிசேயர்கள் தங்களுடைய சொந்த நடவடிக்கைகளினால் கிருபையைப் பெற்றதாக பெருமையாக சொல்லிக்கொண்டதுபோல் அல்லாமல் வாழ்ந்த யோபுவைப்பற்றி கடவுளே பெருமைகொள்ளுகிறார். யோபுவின் புத்தகம் இப்படியாக துவங்குகிறது, “ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.” இதில் “உத்தமனும் சன்மார்க்கனும்” என்கிற வார்த்தைகள் யோபுவின் வாழ்க்கையில் வெளிப்புறமாக கவனிக்கக்கூடிய காரியங்களை விளக்குகின்றன. எனினும், கடவுள் இவ்விதமான யோபுவின் வாழ்க்கை முறைக்குக் காரணமான அவனுடைய உள்ளான மனதின் நிலையை விளக்குகிறார். யோபு “தேவனுக்கு பயந்தவன்” என்பதே அது. யோபுவின் வாழ்க்கையிலிருந்த இந்தவிதமான வெளிப்புறமான அம்சங்களும், உட்புறமான நிலையும் மறுபடியுமாக 8வது வசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, “கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபுவின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.” இந்த உட்புறமான, தன் ஆண்டவர் மீது யோபுவுக்கிருந்த பயமே அவனுடைய வெளிப்புறமான பக்திக்கான காரணம். 9வது வசனத்தில் வாசிக்கிறோம், “அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?” சாத்தான் சொல்லுகிறான், கடவுளே உம்முடைய நாமத்தின் மீதுள்ள பயமே யோபுவின் பக்திக்கான காரணம் என்று நினைக்கிறீர், ஆனால் யோபு உம்மை வழிபடுவதற்கு வேறு ஒரு முக்கியமான சுயநலம் கொண்ட காரணமிருக்கிறது என்கிறான். ஆனால் யோபுவின் முழுமையான சரித்திரம், கடவுள் யோபுவைப் பற்றி சொன்ன வார்த்தைகளின் உண்மையை நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாருங்கள், யோபுவின் பக்தியினுடைய சாராம்சமும், மெய் பக்தியைப் பற்றிய கடவுளுடைய மதிப்பீடும், தேவபயத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது.

சங்கீதங்களில் தேவபயம்

பழைய ஏற்பாட்டில் தேவபயமே மையப்போதனையாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். இப்போது சங்கீதப் புத்தகத்தைப் பார்க்கலாம். இதில் நாம் தேவபயத்தைப் பற்றிய அநேக குறிப்புகளைப் பார்க்கலாம். சங்கீதம் 2ல், கடவுள் தம்முடைய குமாரனை அவருடைய மேசியாவின் பணிக்கான அரியனையில் அமர்த்தி, அங்கிருந்து கிருபையையும் நியாயத்தீர்ப்பையும் அவர் செயல்படுத்துவதாகிய தம்முடைய நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். அந்த நோக்கத்தை அறிவித்துவிட்டு, கடவுள் கீழ்வரும் கட்டளையைத் தருகிறார்,

‘இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.’ (சங்கீதம் 2.10-11)

கடவுள் சொல்லுகிறார், “என் குமாரனைப் பற்றி நான் சொல்லிய கூற்றும் அவருக்கு நான் நிர்ணயித்திருக்கிற முக்கியமான இடமும் எதைக் காட்டுகிறதென்றால், அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய ஒரே மறுமொழி, தேவபயத்துடன் அவரைத் தொழுதுக்கொள்ளுவது மட்டுந்தான்.” “பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்”. அப்படியானால், கிறிஸ்துவைப் பற்றிய நம்முடைய பார்வையும் பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய உயர்த்துதலும் தேவபயத்துடன் அவருக்கு ஆராதனை செய்யும்படி நம்மைத் தூண்டாவிட்டால், பிதாவினுடைய ஆணையின்படியான அவருடைய குமாரனின் உயர்த்துதலை நாம் சரியாக விளங்கிக்கொள்ளவும் இல்லை, அதற்கேற்ற பதில் நடவடிக்கையை செய்யவும் இல்லை என்றே அர்த்தமாகும்.

சங்கீதம் 67 கடவுளுடைய இரட்சிக்கும் இரக்கத்தை பூமியின் கடைசிபரியந்தமும் அறிவிக்கும் நோக்கத்தைக் காட்டும் சிறப்பான நற்செய்தி சங்கீதங்களில் ஒன்று. இந்த சங்கீதக்காரன், தனக்கும், கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களுக்கும் இரக்கத்தைக் காண்பிக்கும்படி கடவுளிடம் கெஞ்சுகிறார், “தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங்கீதம் 67.2). பூமியிலுள்ள தேசங்களுக்கு அறிவிக்கப்படும் கடவுளுடைய இரட்சிக்கும் செய்தியின் முடிவு என்ன? 7வது வசனத்தில் அதற்கான பதிலைப் பார்க்கலாம், “தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.” வேறுவிதமான சொல்லுவதானால், கடவுளுடைய உடன்படிக்கையின் மக்களின் மூலமாக அவர் சொல்லும் நற்செய்தியின் ஒட்டுமொத்த நோக்கமே தேசங்களுக்கு தேவபயத்தைப் போதிப்பதே. இது கடவுளுடைய இரட்சிப்பைப் பற்றிய நம்முடைய அனுபவத்திலும் புரிதலிலும் தேவபயம் எவ்வளவு முக்கியமான அம்சமாக இருக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறதில்லையா? கடவுள் தம்முடைய மக்களை ஆசீர்வதிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார், அதன் மூலம் அவர்கள் மற்றவர்களுக்கு அவ்வாசீர்வாதத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் அப்படிச் செய்கிறார். அவர் தம்முடைய நோக்கத்தை இப்படிச் சொல்லியிருக்கிறார், “தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.” (வசனம் 7).

சங்கீதம் 103ல் தேவபயத்தைப் பற்றிய அநேக குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு பொதுவான அம்சமும் இருக்கிறது. அங்கு தேவபயம் கடவுளுடைய உண்மையான மனிதர்களுடைய தவிர்க்க முடியாத பண்பாக அடையாளங் காட்டப்பட்டிருக்கிறது. சங்கீதக்காரன், கடவுளுடைய உண்மையான மக்களைக் குறிப்பிடுவதற்கு இந்தவிதமான பின்வரும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார், “அவருக்கு பயப்படுகிறவர்கள்”. 11வது வசனத்தைக் கவனியுங்கள் – “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.” அவருடைய கிருபை எல்லோர் மேலும் இருக்கிறது என்று இவ்வசனம் சொல்லுகிறதா? இல்லை. கடவுளுடைய மீட்கும் அன்பு என்பது எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் எல்லா மனிதர்களையும் உள்ளடக்கும் ஒருவித பொதுவான மற்றும் மனிதாபிமானத்தின் அன்பு என்று சொல்லுவது பரிசுத்த வேதாகமத்தின் போதனை அல்ல. சங்கீதக்காரன், “அவருடைய கிருபை அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் இருக்கிறது” என்கிறார். அவருடைய சிறப்பான அன்பு அவருடைய மக்கள் மீது இருக்கிறது. அவருடைய மக்கள் யார்? அவருக்கு பயப்படுகிறவர்களே. அவர்மேல் பயமில்லாவிட்டால், அவருடைய தொடர்ச்சியான இரக்கம் அவர்களுக்குக் கிடையாது. 13வது வசனம் இதை வலியுறுத்துகிறது, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.” கடவுளுடைய பிள்ளைகள் என்பதும் அவருக்குப் பயந்தவர்கள் என்பதும் ஒன்றையே சுட்டுகிறது. இதன்படி, என்னில் தேவபயம் இல்லாவிட்டால், நான் கடவுளுடைய மீட்கும் அன்பின் கீழ் இருக்கிறேன் என்று உரிமைபாராட்ட முடியாது (வசனம் 11), அவருடைய பிள்ளை என்றும் உரிமைபாராட்ட முடியாது (வசனம் 13, 17). தேவபயமாகிய இந்தப் பண்பை தங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கொண்டிருக்கிறவர்களே தேவனுடைய பிள்ளைகள் என்று சங்கீதக்காரன் கருதுகிறார்.

சாலொமோனின் எழுத்துக்களில் தேவபயம்

தேவபயத்தைப் பற்றிய வேதப்பகுதிகளில் நீதிமொழிகள் 1 இன்னுமொரு முக்கியமான வேதப்பகுதி, குறிப்பாக 7வது வசனம். முதல் 6 வசனங்களில், சாலொமோன், நீதிமொழிகள் புத்தகத்தை, பலதரப்பட நோக்கங்கள் கொண்ட ஞானமுள்ள ஆலோசனைகள் நிரம்பிய புத்தகமாக அறிமுகப்படுத்துகிறார். பிறகு, அந்த அறிவையும் ஞானத்தையும் அடைவதற்கான வழிமுறைகளை வகுத்துக்காட்டத் தொடங்குகிறபோது, தனது உரையின் ஆரம்பமாக இந்த வாக்கியத்தை முன்வைக்கிறார், “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்” (வசனம் 7). வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயத்தைக் கற்பதென்பது, “அ, ஆ, இ, ஈ”யிலிருந்து ஆரம்பித்துப் பிறகு ஏனைய எழுத்துக்களையும் கற்பது போன்றது மட்டும் அல்ல. தேவபயத்தைக் கற்பதென்பது ஆரம்பத்தில் “அம்மா” என்ற வார்த்தையை எழுத்துக்கூட்டி உச்சரித்து, அதற்குப்பிறகு நீண்ட வார்த்தைகளை உச்சரிக்கும் திறனை வளர்ப்பது போன்றதுமல்ல; மாறாக, தேவபயமென்பது மையப்பகுதியாக இருக்கிறது. எப்படி தமிழில் உயிர் எழுத்துக்கள் ஆரம்பக் கல்வியோடு நின்றுவிடாமல், தொடர்ச்சியாக நாம் கற்கும் அனைத்தின் மையப்பகுதியாக இருக்கின்றனவோ அதுபோலவே தேவபயமும் நம் வாழ்க்கையின் மையப்பகுதியாக இருக்கிறது. அதாவது, ஒரு மனிதன் இயற்பியல் (Physics) சம்மந்தமான மிகச் சிக்கலான ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, ஆரம்பக் கல்வியாகத் தான் படித்த எண்களையும் எழுத்துக்களையுமே சார்ந்திருக்கிறான். போகப்போக இயற்பியல் புத்தகத்தில் அந்த எண்களும் எழுத்துக்களும் சிக்கலான முறையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும். அவன் இயற்பியல் வல்லுனரான பின்னரும், 4 அல்லது 5 வயதில் தான் படித்த அதே எண்களோடும் எழுத்துக்களோடுந்தான் அவன் பணிபுரிந்துகொண்டிருக்கிறான். அதேவிதமாகவே, தேவபயமும் ஞானத்தின் மையப்பகுதியாக இருக்கிறது. அது ஞானத்தின் ஆரம்பமாக மட்டுமல்லாமல், பரலோக ஞானத்தின் பாதையின் அனைத்து நிலையிலும் ஊடுருவிச் செல்லுவதாக இருக்கிறது. அந்த பயமில்லாமல், மெய்யான ஞானமென்பதில்லை என்று ஆண்டவர் சொல்லுகிறார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.

இப்போது நாம் பிரசங்கியின் புத்தகத்தைத் திருப்புவோம். மனித வாழ்க்கையின் அர்த்தத்தையும் நிறைவையும் கண்டுபிடிப்பதற்கான எல்லாவித சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த ஒரு மனிதனின் (சாலொமோன்) வார்த்தைகளை இதில் நாம் பார்க்கலாம். இவர் குறிப்பிட்டுள்ள சில காரியங்களை நீங்கள் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அவைகள் உங்களை ஈர்க்கிறவையாக, அதிகமாக ஊக்கப்படுத்துகிறவையாக இருக்கும். ஆரம்பத்தில் அவருக்கும் அப்படித்தான் இருந்தது என்பதையும் நாம் அதில் பார்க்கலாம். ஆனால் அவர் வாழ்க்கையைத் தொடர்ந்தபோது, ஒவ்வொரு வழிமுறையின் இறுதியிலும், அவர் கண்டது ஒன்றுமில்லை, மாயையும் வருத்தமுமாகத்தான் இருந்தது. கடைசி அதிகாரத்தின் கடைசி வசனத்தில் அவர் ஒரு முடிவுக்கு வருகிறவரை இது தொடர்ந்தது, “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்” (பிரசங்கி 12.13-14).

இந்த இறுதி வாக்கியம், உலகளவில் இயற்கையாக தேவபயமில்லாத பாவிகளுக்கான கடவுளுடைய கிருபையின் செயலைப்பற்றி சொல்லாவிட்டாலும் (ரோமர் 3.18), தேவ சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களுடைய மையக் கடமையாக தேவபயம் இருக்கிறது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

தீர்க்கதரிசிகளில் தேவபயம்

ஏசாயா 11:1-2ல், ஈசாயின் அடிமரத்திலிருந்து மேசியா வருவார் என்கிற அற்புதமான தீர்க்கதரிசனம் காணப்படுகிறது.

  1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
  2. ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.”

இந்த வசனங்கள், ஆவியானவர் மேசியாவின் மேல் வருவார் என்று வெளிப்படையாக அறிவிக்கின்றன. யோர்தான் கரையில் அவர் ஞானஸ்நானம் பெற்றபோது ஆவியானவர் வெளிப்படையாக அவர்மேல் வந்தும் இருக்கிறார். ஏசாயா சொல்லுகிறார், ஆவியானவர் அவர்மீது, “மரித்தோரை எழுப்பும், செவிடர்களைக் குணமாக்கும், ஊமையர்களைப் பேச வைக்கும் வல்லமைமிக்க ஆவியானவராக மட்டுமல்ல”, “கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியாகவும்” அவர்மேல் தங்கியிருப்பார். இதுதான் ஆவியானவருடைய ஊழியத்தின் ஒரு அம்சம். 3வது வசனத்தில் இது விரிவாக சொல்லப்பட்டுள்ளது, “கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்”. மேசியாவின் தனிச்சிறப்பான குணாதிசயமே கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் அவர் வாழ்ந்து, நகர்ந்து, திளைத்திருப்பார் என்று தீர்க்கதரிசி இங்கே முன்னுரைத்திருக்கிறார்.

தேவபயம் என்பது கடவுளுடைய தயவோடு சம்பந்தப்பட்டதல்ல என்ற எண்ணத்தை நம்முடைய எண்ணத்திலிருந்து முற்றிலுமாக எடுத்துவிடவேண்டும். நம்முடைய கர்த்தரை ஆவியினால் (தேவபயத்தின் ஆவி) பெலப்படுத்தியபோதுதான், பிதாவாகிய தேவன், இயேசு தம்முடைய நேச குமாரனாக இருக்கிறார் என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சத்தம் கேட்டது.

எரேமியா 32ல், புதிய உடன்படிக்கையைப் பற்றி எரேமியா விளக்குகிறார். அதாவது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணத்தின் விளைவுகளினால் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை என்று வேதத்தின் ஏனைய பகுதிகள் இதைப்பற்றிச் சொல்லுகின்றன. இந்த உடன்படிக்கை, எபிரெயர் 8 மற்றும் 10வது அதிகாரங்களில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளபடி கிறிஸ்துவின் இரத்தத்தினால் முத்திரையிடப்பட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய உடன்படிக்கை என்னவிதமான ஆசீர்வாதங்களை மனிதர்களுக்குக் கொண்டுவரப் போகிறது என்று ஆண்டவர் சொல்லுவதைக் கவனியுங்கள், “அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து” என்று இந்த வசனங்கள் விளக்குவதைக் காண்கிறோம். (எரேமியா 32:38-40).

கர்த்தர் சொல்லுகிறார், “இந்தப் புதிய உடன்படிக்கையில் இவ்வளவு வல்லமையாக நான் செயல்படுவதின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போகாதபடிக்கு நான் அவர்கள் இருதயத்தில் எனக்கு பயப்படும் பயத்தை வைப்பேன்” என்பதுதான். இந்தப் பகுதியின்படி, இந்த புதிய உடன்படிக்கையினுடைய பயனாளிகளின் இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படும் பயம் வைக்கப்படப் போகிறது. அது அவர்கள் விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் தொடரவும், அவர்களுடைய இரட்சிப்பின் தேவனிடத்தில் அன்போடும் கீழ்ப்படிதலோடும் இணைந்திருக்கும்படியாக செய்வதற்கான மையக் காரணமாக இருக்கப் போகிறது.

நீங்கள் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை விசுவாசிக்கிறீர்களா? அந்த உடன்படிக்கையின் இரத்தத்தை வெளிப்புற அடையாளமாகக் காட்டும் கர்த்தருடைய பந்தியில் தொடர்ச்சியாக கலந்துகொள்ளுகிறீர்களா? ஆண்டவர் சொல்லுகிறார், “அந்த உடன்படிக்கையின் பலாபலன்களில் உள்ளான மனரீதியாக பங்குள்ளவர்களாக நீங்கள் இருந்தால் மெய்யான தேவபயத்தில் நீங்கள் வாழுவீர்கள். அந்த பயத்திற்கு நீங்கள் அந்நியர்களாக இருந்தால், அந்த புதிய உடன்படிக்கையின் பலாபலன்களுக்கும் நீங்கள் அந்நியர்களாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். தொடர்ந்து நீங்கள் இறையாண்மையுள்ள தேவனுடைய கோபத்தின் கீழ்தான் இருப்பீர்கள். ஆவியானவரின் வல்லமையினால் புதிய உடனபடிக்கையின் பலன்கள் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு அளிக்கப்படுகிறபோதும், கர்த்தர் சொல்லுகிறார், அவர் தமக்கு பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் ஏற்படுத்துகிறார் என்று. தேவபயமே புதிய உடன்படிக்கையின் மையமாக, அதன் கருப்பொருளாக இருக்கிறது.

கடவுளுடைய முந்தைய உடன்படிக்கைகளின் கீழ், தெரிந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பாவியும் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறப்பிக்கப்பட்டும், அவர் வந்து தங்கியிருந்தும், நீதிமானாக்கும் நீதியைப் பெற்றும், அவனுடைய இருதயத்தில் கர்த்தருக்குப் பயப்படுதல் நடப்பட்டும் இருக்கிற ஆசீர்வாதத்தை அனுபவித்திருக்கிறான் என்பது உண்மைதான். இது பழைய ஏற்பாட்டு விசுவாசிகளின் தேவபக்தியுள்ள வாழ்க்கை முறையை விளக்குகிறதாக இருக்கிறது. மேலும், குற்றவுணர்வோடு சீர்குலைந்த நிலையில் இருக்கிற பாவிகளுக்கு, மீட்பின் வரலாற்றின் எந்தவொரு காலத்திலும், பாவிகளுக்கான ஒரே மத்தியஸ்தராகிய கிறிஸ்துவினுடைய செயலின் மூலமாகத்தான் இரட்சிக்கும் சகல பலன்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று வேதத்தின் ஒட்டுமொத்த போதனையிலிருந்து  அறிந்துகொள்ளுகிறோம். ஆயினும், புதிய உடன்படிக்கையில்தான், இந்த ஆசீர்வாதங்கள் வெளிப்படையாக உத்தரவாதத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது. எப்படியெனில், நிறைவேற்றப்பட்டுள்ள இரட்சிப்பிற்குள்ளாக யாரெல்லாம் மனந்திரும்புதலோடும், விசுவாசத்தோடும் கொண்டுவரப்படுகிறார்களோ அவர்கள் இந்த ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவார்கள் என்ற உறுதியை இது தருகிறது (எரேமியா 32:40).

இதுவரை நாம் பார்த்துள்ள குறிப்புகளின் அடிப்படையிலும், பழைய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகளின் அடிப்படையிலும், தேவபயமே பழைய ஏற்பாட்டின் போதனைகளில் ஆதிக்கம் செலுத்தும் மையப் போதனையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். இது ஒருவருடைய விருப்பத்தின் அடிப்படையிலான நல்லொழுக்கம் சம்மந்தமானதல்ல, கடவுளுடைய இரட்சிக்கும் செயலின் அடிப்படை அம்சமாகவும் மையமாகவும் இருக்கிறது.

புதிய ஏற்பாட்டில் தேவபயம்

சிலர் இதற்கு எதிராகப் பின்வருமாறு வாதம் செய்வார்கள், “உண்மைதான், நீங்கள் குறிப்பிட்ட பகுதிகளெல்லாம், இருட்டும் நிழலாட்டமுமான பழைய ஏற்பாட்டின் பகுதிகளாக இருக்கின்றன. இப்போது, நமக்கு புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய அன்பும் இரக்கமும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. முன்னடையாளங்களாக கொடுக்கப்பட்ட காளை, வெள்ளாட்டு கடாவின் இரத்தத்தினால் உண்டான சடங்குகள் கிறிஸ்துவுக்குள் எப்படி முழுமை பெற்றுவிட்டதோ அப்படியே முன்னறிவிக்கப்பட்ட இருண்ட தேவபயமென்ற தத்துவமும் கர்த்தருக்குள்ளான சந்தோஷத்தின் பிரகாசத்தினால் இல்லாமலாகிவிட்டது” என்று இவர்கள் வாதம் செய்வார்கள். இவர்கள் சொல்லுவது உண்மையா? புதிய ஏற்பாடு இத்தகைய எண்ணத்திற்கு துணைபோகிறதா என்று இனி ஆராய்வோம்.

சுவிசேஷ நூல்களில் தேவபயம்

புதிய ஏற்பாட்டைப் புரட்டுகிறபோது நாம் எதைப் பார்க்கிறோம்? கர்த்தராகிய இயேசு மரியாளின் வயிற்றில் கருத்தரிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மரியாள் தன் உறவுக்காரப் பெண்ணாகிய எலிசபெத்தைப் பார்க்கப் போகிறாள். மரியாள் அவள் வீட்டுக்குச் சென்றவுடன், ஆவியினால் நிறைந்து, தீர்க்கதரிசன வாழ்த்துரையைச் சொல்லுகிறாள். ஆவியினால் அறிவிக்கப்பட்ட அந்த வாழ்த்துரையில், பல நூற்றாண்டுகளாக, தேவன் தம்முடைய மக்களோடு அணுகும் விதத்தின் தத்துவத்தைத் தான் கண்டதாக எடுத்துரைக்கிறாள். அந்த தேவனைத்தான் இப்போது தன் கருவறையில் சுமந்து கொண்டிருப்பதாக சொல்லுகிறாள். தேவன் எப்போதும் தம் மக்களோடு எதைச் செய்து வந்திருந்தாரோ அதையேதான் இப்போதும் செய்கிறதாக மரியாள் கண்டாள். அதைத்தான் தம்முடைய குமாரனுடைய வருகையின் மூலமாகவும் அவர் தொடரப்போகிறார். மரியாள் சொல்லிய வாக்கியத்தை கவனியுங்கள், “வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது” (லூக்கா 1:49-50). கடவுள் தமக்கு பயப்படுகிறவர்களுக்கு இரக்கங் காட்டுவதே அவருடைய தொடர்ச்சியான வழிமுறையாக இருக்கிறது.

இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் கடவுள் தன்மீது இரக்கங் காட்டுவதை மரியாள் கண்டாள். இந்தத் தத்துவத்தையே, மேசியா வந்து தம்முடைய ஊழியத்தைச் செய்கிறபோதும் தொடருவார். அதன்படி, சுவிசேஷப் புத்தகத்தின் முதலாவது அதிகாரத்திலேயே கடவுள் இதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறார். அதாவது, தம்முடைய மக்கள் எப்போதும் தமக்கு பயப்படுகிறவர்களாக, தமக்கு பயப்படும் பயத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.

நம்முடைய கர்த்தரும் எதைப் போதித்தார்? உண்மையில், நம் ஆண்டவர், கர்த்தரைப் பற்றிய பயம் நமக்குத் தேவையில்லை வெறுமனே மகிழ்ச்சியாயிருப்பதும், கர்த்தரை நேசிப்பதுமே மனிதர்களுக்கு அவசியம் என்று சொல்லியிருந்தால், பயத்தின் எந்தவித அம்சத்தையும், குறிப்பாக, வரப்போகிற பயங்கரத்தைக் குறித்த பயத்தை அவர் தடை செய்திருப்பார். தேவபயமென்றால் என்ன என்பதைப் பற்றி பிறகு விரிவாகப் பார்க்கவிருப்பதால், இப்போது, தேவபயத்தில் இருக்கிற இரண்டு அடிப்படையான அம்சங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம். மனிதர்கள் கொண்டிருக்கிற எல்லாவித பயத்திலும் இவை இரண்டையும் பார்க்க முடியும். முதலாவது, பயங்கரத்தினிமித்தமாக உண்டாகிற பயம், இரண்டாவது, மதிப்பு மரியாதையினிமித்தமாக உண்டாகிற பயம். பயத்தின் இந்த இரண்டு அம்சங்களும் ஆரோக்கியமான தேவபயத்தில் இருக்கிறவைகள் என்று நம்முடைய ஆண்டவர் தம்முடைய போதனைகளில் மிகத்தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தம்முடைய 12 சீடர்களையும் ஊழியத்திற்கு அனுப்பியபோது, மனிதர்கள் தங்களுக்கு என்ன செய்வார்களோ என்று பயப்பட வேண்டாம் என்று உறுதியாக எச்சரித்திருந்தார். “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்றார் (மத்தேயு 10:28). இயேசு தேவபயத்திலிருந்து நம்மை வெளியில் கொண்டு வரும் ஊழியத்தைச் செய்யவில்லை. மாறாக, தம்முடைய சீடர்கள் எப்போதும் தேவபயத்தைப் பற்றிய பயங்கரத்தைக் கொண்டிருக்கும்படி கட்டளையிட்டார். பாவம் செய்கிறபோது, தேவன் என்ன செய்வார் என்பதைப் பற்றிய பயத்தை நினைவில் வைத்திருக்கும்படிக் கட்டளையிட்டார். இதே உண்மையை, எபிரெயர் நிருபத்தை எழுதியவரும் நமக்கு நினைவூட்டுகிறார், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” (எபிரெயர் 10:31). தேவபயத்தை இல்லாமலாக்குவதற்காக இயேசு வரவில்லை, அதை வலியுறுத்தி எடுத்துச் சொல்லவே வந்தார். பழைய உடன்படிக்கையில் நிழலாட்டமான வெளிப்பாட்டிலேயே தேவபயம் அடிப்படையாகச் சொல்லப்பட்டிருந்தால், புதிய உடன்படிக்கையின் முழுமையான வெளிப்பாட்டில் தேவபயம் இன்னும் அதிகமாக வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகளில் தேவபயம்

அப்போஸ்தலருடைய நடபடிகளின் ஆரம்ப அதிகாரங்களில், ஆதி சபையின் முதிர்ச்சியையும் அதன் மீதிருந்த கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் லூக்கா விவரிக்கிறார். இவை இரண்டும் எப்படி அழகாக ஒன்றாக இணைந்திருக்கிறது என்பதை கவனியுங்கள். நாம் அதை பிரித்துப் பார்த்தாலும் கடவுள் அவைகளை இணைத்திருக்கிறார். சபையைத் துன்புறுத்திக் கொண்டிருந்த சவுலின் மனமாற்றத்தைத் தொடர்ந்து, அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31ல் வாசிக்கிறோம், “அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.” ஆவியின் ஆறுதல் எங்கிருக்கிறதோ அங்கு தேவபயமில்லை என்றும், எங்கு கர்த்தரைப் பற்றிய பயமிருக்கிறதோ அங்கே ஆவியின் ஆறுதல் இல்லை என்றும் நாம் நினைக்கிறோம். ஆனால் அதுவல்ல உண்மை. கிறிஸ்துவின் மீதிருந்த ஆவியானவர், அவர் அளவில்லாமல் பெற்ற அந்த ஆவியானவர், தற்போது அவருடைய சபையின் மீது ஊற்றப்படுகிற ஆவியானவர் “கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தை அருளும் ஆவியானவர்” (ஏசாயா 11.2) என்றே வேதம் சொல்லுகிறது. இயேசு தாமே எப்படி கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தைக் கொண்டவராக இருந்தாரோ, கிறிஸ்துவினுடைய ஆவியினால் எந்தளவு அதிகமாக அவருடைய சபை நிரப்பப்படுகிறதோ, அந்தளவு அதிகமாக அச்சபை கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைத் தன் வாழ்க்கையிலும், ஆராதனையிலும், சாட்சியிலும் கொண்டிருக்க வேண்டும்.

பேராசிரியர் ஜோன் மரே சொல்லுவதைக் கவனியுங்கள், “பரிசுத்தமுள்ளவரும், குறைவில்லாதவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாகிய அவர், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அணிந்திருப்பாரானால், தேவபயத்தைப் பற்றிய எந்தவித எண்ணமும் உணர்வும் இல்லாமல், நம்முடைய இரட்சிப்பின் அதிபதியும் நாம் வாழும்படியான முன்னுதாரணத்தை வாழ்ந்து காட்டியவருமான அவருடன் நமக்கு உறவு இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? ஏன் திருச்சபை கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடக்கிறதென்றால், கிறிஸ்துவின் ஆவியானவர் திருச்சபை மீது தங்கியும், நிறைந்தும், வழிநடத்தியும் வருகிறார். அந்த ஆவியானவர் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியானவர்.”

நிருபங்களில் தேவபயம்

இப்போது நாம் புதிய ஏற்பாட்டின் நிருபங்களைப் புரட்டிப் பார்ப்போம். 2 கொரிந்தியர் 7:1ல் பவுல், “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” என்று சொல்லுகிறார். நாம் மாம்சத்தில் எதிர்த்துப்போராட வேண்டிய தொடர்ந்திருக்கும் பாவம் (Remaining, indwelling sin) விசுவாசியின் வாழ்க்கையில் தொடர்ந்திருக்கிறதா? ஒரு விசுவாசி, ஒரு புறம் மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதும், மறுபுறம் அதிகமதிகமாக இயேசுவுக்கு ஏற்றவிதத்தில் மாறுவதற்கு ஒவ்வொரு கிருபையிலும் வளர வேண்டுமென்று வேதம் எதிர்பார்க்கிறதா? சரியான முறையில் வழிநடத்தப்பட்ட எந்தவொரு கிறிஸ்தவனும் இந்தக் கேள்விகளுக்கு “இது உண்மை, ஆனால் அதை எப்படிச் செய்வது?” என்றே கேட்பான். நாம் மேலும் மேலும் பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்பதும், கர்த்தருக்கு முன்பாக நிற்பதற்கு நாம் அதிக கிருபையைப் பெறவேண்டுமென்பதுந்தான் நம்முடைய முதன்மையான எண்ணமாக இருக்க வேண்டுமா? அல்லது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாக, அதிக மகிழ்ச்சியும், சந்தோஷமும், சமாதானமும், துடிப்பும் பெற்றிருக்க வேண்டுமா? இந்த இரண்டு வினாக்களிலும் உண்மையிருக்கத்தான் செய்கிறது. ஆனால், இவை இரண்டுமே நம்முடைய முதன்மையான நோக்கத்திற்கானதல்ல என்றே நான் சொல்லுவேன். 2 கொரிந்தியர் 7:1ல் பவுல் சொல்லியிருக்கிறபடி, நாம் உயர்ந்த அளவிலான நடைமுறைப் பரிசுத்தத்தையும் தேவபக்தியையும் அடையவேண்டும். ஆனால், அதை தேவபயத்தின் சூழலில் இருந்து நாம் அடையவேண்டும் என்றே பவுல் விளக்குகிறார்.

தேவபயத்தின் சூழலில்தான் நடைமுறை தேவபக்தியில் நாம் முன்னேற வேண்டுமானால், நடைமுறை தேவபக்தியை அடைவதற்கு நாம் முக்கியமாக செய்ய வேண்டியது எது? நம்முடைய நெருக்கமான உறவுகளிடம் நாம் எப்படி நடந்துகொள்ளுகிறோம் என்பதைப்பொறுத்தே அது அமையும். மலைப்பிரசங்கம் மற்றும் நிருபங்களிலுள்ள பெரும்பாலுமான ஒழுக்கரீதியான போதனைகள், நம்முடைய நெருக்கமான உறவுகளைப் பற்றியதாகவே இருக்கிறது. நீங்கள் வேலை செய்யும் முதலாளியோடு மோசமாக நடந்துகொள்வதும், மனைவியை காட்டுமிராண்டித்தனமாக நடத்துவதும், கணவனை ஆளப்பார்ப்பதும், தாய் தகப்பனை நச்சரிப்பதுமாக நடப்பது தேவபக்தியே அல்ல. வேதத்திலுள்ள தேவபக்தியும் பரிசுத்தமும் அதிகமாக நடைமுறையோடு சம்மந்தமானது. குடும்பத்தில், வேலைஸ்தலத்தில், சபையில், பள்ளியில், நம்முடைய நெருக்கமான உறவுகளோடு நாம் தொடர்புகொள்ளும் விதத்தில் வெளிப்படக்கூடியதே தேவபக்தி. நம்முடைய பரிசுத்தமும், பரிசுத்தமாகுதலில் நம்முடைய முன்னேற்றமும் இந்த உறவுகளிடம் வெளிப்பட வேண்டும். இந்த உறவுகளிடத்தில் அதிகளவான பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு, நம்மை அதிகமாக ஊக்கப்படுத்தக் கூடியது எது?

எபேசியர் 5:21 மற்றும் அதைத் தொடர்ந்து வரும¢ வசனங்களில் பவுல், குடும்பத்திலுள்ள பலதரப்பட்ட உறவுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளை உறவு, எஜமான்-வேலைக்காரன் உறவு. வீட்டைப் பற்றிய இந்தக் காரியங்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்னுரையாக பவுல் என்னச் சொல்லுகிறார் என்று கவனியுங்கள், வசனம் 21, “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.” நெருக்கமான உறவுகள் சம்மந்தப்பட்ட நடைமுறை தேவபக்தியைக் குறித்து சொல்லப்பட்டுள்ள எல்லாக் கட்டளைகளும் தேவபயத்தின் கட்டமைப்பிற்குள் இருக்கிறது. ஆகவே, இந்த உறவுகளினிடத்தில் பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு ஏதாவது நாம் செய்கிறபோது, அதில் தேவபயத்தைப் பற்றிய எண்ணம் நிராகரிக்கப்படுமானால், அந்தவிதமான தேவபக்தி ஆண்டவருடைய வார்த்தையிலிருந்து வந்ததாகாது.

பிலிப்பியர் 2:12-13ல், பவுல் விசுவாசிகளைத் தங்களுடைய இரட்சிப்பிற்காக கடினமாக உழைக்கும்படி கட்டளையிடுகிறார், “ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” இங்கே இரட்சிப்பிற்காக பிரயாசப்படுவதின் சூழல் எதுவாகயிருக்கிறது? அது பயமும் நடுக்கமுமே. இவ்வார்த்தைகளின் அடிப்படையில், அவர்களுடைய சோர்வுற்ற ஆவிக்குரிய நிலையிலிருந்து முன்னேறுவதற்கு வேதத்தின் எந்தப் போதனை அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது? அதிக கவனத்துடன், சுய வெறுப்பைக் காட்டும் சீடர்களாக தங்களை அறிவித்துக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் வெறும் சடங்கை பின்பற்றுகிறவர்களாக இல்லாமலிருப்பதை வேதத்தின் எந்த சத்தியம் நமக்குக் காட்டுகிறது? இதற்கெல்லாம் பதிலாக, தேவபயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுவதுதான் என்று பவுல் சொல்லுகிறார். இத்தகைய மனநிலையைக் கொண்டிராமல், ஒருவன் இரட்சிப்பிற்காக பிரயாசப்படுவானானால், அவன் தேவனுடைய வார்த்தையால் அங்கீகரிக்கப்படாத வழியில் செல்கிறான். “பயமும் நடுக்கமும்” என்றால் என்ன என்பதைப் பற்றி பின்பு (தேவபயம் பற்றிய அல்பர்ட் என். மார்டினின் நூலின் ஏனைய அதிகாரங்களில் ஒன்றில்) பார்க்கலாம். ஆனால் இந்த நிலையில், தன் இரட்சிப்பிற்காக பிரயாசப்படுகிற எந்தவொரு மெய்யான கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் “பயமும் நடுக்கமும்” பிரதான இடத்தைக் கொண்டிருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இறுதி மட்டும் இது தொடர வேண்டுமா? தேவபயத்தின் பல்வேறு அம்சங்கள் நம்முடைய வாழ்க்கையில் தேவையில்லாத நிலை என்பது வருமா? அப்போஸ்தலனாகிய பேதுரு இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இயேசுவின் வார்த்தைகளையும், பவுலினுடைய வார்த்தைகளையும் நாம் பார்த்திருக்கிறோம். பேதுருவும் அதே வார்த்தையையே பயன்படுத்துகிறார். சுவாரஸ்யமான சூழ்நிலையில் அவர் இதைப் பற்றிச் சொல்லுகிறார். 1 பேதுரு 1:17-19 வசனங்களில் அவர் சொல்லுகிறார், “அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” இங்கே ஒரு கேள்வி எழலாம், கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறேன் என்ற வேதப்பூர்வமான உறுதியை ஒருவன் கொண்டிருந்தால், அது தேவபயத்தை நீக்கிவிடாதா? இல்லவே இல்லை. ஏனென்றால், முந்தைய வசனத்தில் பேதுரு, “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்” என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் மீட்கப்படுவதற்காக செலுத்தப்பட்டுள்ள விலைக்கிரயத்தைப் பற்றிய அறிவு, தேவபயத்தை உங்களில் இன்னும் அதிகமாக தீவிரமாக்க வேண்டுமே ஒழிய அதை நிராகரிக்கக் கூடாது. “கிறிஸ்துவின் விலையேறப்பட்ட இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறீர்கள்” என்ற உண்மையை அடிப்படையாக வைத்து, தேவபயத்தில் நாம் நடக்க வேண்டியதை வலியுறுத்துகிறார். நம்முடைய வாழ்நாள் முழுவதும் பயத்தோடு இருக்க வேண்டுமென்கிறார். என்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக வந்த அந்த நேரத்திலிருந்து, என்னுடைய கடைசி மூச்சு மட்டுமாக, நான் பரதேசியாய் சஞ்சரிக்கும் காலம் முழுவதும், தேவபயத்தை நான் கொண்டிருக்க வேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவபயம்

தேவபக்திக்கு தேவபயம் அடித்தளம் போன்றது. அது நித்தியத்திற்கும் தொடர வேண்டியது. விசுவாசிகளிலிருந்து தொடர்ந்திருக்கும் பாவத்தின் எச்சங்கள் நீக்கப்பட்டபிறகும்கூட, நாம் தொடர்ந்து தேவனுக்கு பயந்திருக்க வேண்டும். நம்முடைய கடைசி இரண்டு குறிப்புகள் வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து வருகிறது. முதலாவது குறிப்பு வெளிப்படுத்தின விசேஷம் 15 வது அதிகாரத்திலிருக்கிறது. இங்கு, அடையாள மொழிநடையில், கடவுளால் மீட்கப்பட்டவர்களைப் பற்றி விளக்கப்படுத்தப்படுகிறது. வசனங்கள் 2-4, “அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின்  நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல்  ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.”

அவருடைய அற்புதமான செயல்கள் மற்றும் நீதியின் வழிகளின் அடிப்படையில், அவருடைய பிரசன்னத்திலிருக்கிற அவரால் மீட்கப்பட்டவர்களுடைய பதில் நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்? 4ம் வசனம் இதற்குப் பதிலளிக்கிறது, “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?” மீட்கப்பட்டவர்கள் மகிமைப்படுத்தப்பட்டவர்களாக, நேரடியாக கடவுளுடைய பிரசன்னத்தில் ஆராதிப்பதாக இருந்தாலும் அவர்களிடம் தேவபயம் அங்கிருக்கிறது.

அதேவிதமான போற்றுதல் வார்த்தைகளை வெளிப்படுத்தின விசேஷம் 19:4-5 வசனங்களிலும் காண்கிறோம், “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.”

மீட்கப்பட்டவர்கள் பரலோகத்தில் முழுமையான மீட்பை அனுபவிக்கும் நிலையில் எப்படியிருப்பதாக ஆவியானவர் இப்பகுதியில் விவரிக்கிறார்? அவருக்கு பயப்படுகிறவர்களாக இருப்பதாகச் சொல்லுகிறார். தேவ ஊழியர்கள் என்பதற்கான தனித்துவமான அடையாளமாக அவர்களின் தேவபயம் இங்கே உணர்த்தப்படுகிறது.

வேத ஆதாரங்களிலிருந்து வரும் முடிவுகள்

பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணப்படும் இத்தகைய முக்கியமான வசனங்களின் அடிப்படையில் நாம் எத்தகைய முடிவுக்கு வருகிறோம்?

முதலாவது, தேவபயத்தை இல்லாமலாக்குவது, வேதப்பூர்வமான இரட்சிக்கும் மதத்தையே இல்லாமலாக்குவதாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது வேதத்திலிருந்து எத்தனை வசனங்களை நாம் குறிப்பிடுகிறோம் அல்லது இதற்காக எத்தனை வாக்குத்தத்தங்களை நாம் நம்புகிறோம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது. இதுவரை நாம் சுருக்கமாகப் பார்த்து வந்திருக்கிற வேத வசனங்களின் அடிப்படையில், உங்களுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் தேவபயமென்றால் என்ன என்பதை நீங்கள் அறியாதிருந்தால், மெய்யான வேதப்பூர்வமான இரட்சிக்கும் மதத்தின் முதன்மையான காரியத்தைப் பற்றி அனுபவபூர்வமாக நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றே தெரிகிறது. இது ஒரு முக்கியமான முடிவு, இதுவரை நாம் பார்த்த வேதப்பகுதிகள் இதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு கிறிஸ்துவே வேதப்பூர்வமான மதத்தின் ஒட்டுமொத்த ஆதாரமாக இருப்பதினால், அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆவியானவரும், அவரிலிருந்து அனுப்பப்பட்ட ஆவியானவரும், கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை அருளும் ஆவியானவராக இருப்பதினால், தேவபயமில்லாமல் எவரும் இருப்பது, அவர்கள் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. ரோமர் 8:9 சொல்லுகிறது, கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவன் கிறிஸ்துவினுடையவனல்ல என்று. இந்தப் போதனை உங்களுக்கு முற்றிலும் வேற்றுமையானதாக இருந்தால், இது உங்களுக்குக் குழப்பமானதாக இருந்தால், நீங்கள் சில துரிதமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நீங்கள் வேதத்தை ஆராய்ந்து, ஆண்டவரை நோக்கிக் கெஞ்சுங்கள். அவருக்கு பயப்படுவதென்றால் என்ன என்று உங்களுக்கு விளக்கும்படிக் கேளுங்கள். அவரைப் பற்றிய பயம் உங்களில் இல்லாமலிருந்தால், மெய்யான இரட்சிக்கும் விசுவாசத்தில் நீங்கள் இல்லை என்பதையே அது காட்டுகிறது.

இரண்டாவது முடிவு, மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சியின் துல்லியமான அளவீடு, ஒருவன் தேவபயத்தில் அதிகரிப்பதில்தான் இருக்கிறது. நெகேமியா 7:2ல் ஆனானி என்ற நபரைப் பற்றி வேதம் சொல்லுகிறது, “அநேகரைப் பார்க்கிலும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்தவன்” என்று. அவனுடைய ஆவிக்குரிய முதிர்ச்சியும், ஞானமும், தேவபக்தியும் அதிகமாக இருந்ததற்கான ஒரே காரணம், “அவன் அநேகரைப் பார்க்கிலும் தேவபயமுள்ளவனாக இருந்தான்” என்பதுதான்.

மூன்றாவது முடிவு, தேவபயத்தைப் பற்றி அறியாமலிருப்பது, வெளிப்படுத்தப்பட்டுள்ள மதத்தின் அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான போதனையைப் பற்றி அறியாமலிருப்பதாகும். சந்தேகங்களுக்கு இடமில்லாமல், இந்நாட்களில், அநேகர் மெய்யான கிறிஸ்தவர்களாக இருந்தும், துரதிஷ்டவசமாக தேவபயத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவத்தில் அவர்கள் தேவபயத்திற்கு அந்நியர்கள் அல்ல. ஆனால் அவர்களுடைய புரிதலில் அவர்கள் தேவபயத்தைப் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நீங்கள் அப்படியான கிறிஸ்தவரா? இந்த ஆக்கத்தில் இதுவரை நீங்கள் வாசித்தது உங்களுக்கு அறிமுகமில்லாததா? கிருபையில் வளருவது என்பது எப்போதும் அறிவில் வளருவதோடு இணைந்திருப்பதால் (2 பேதுரு 3:18), தேவபயத்தைப் பற்றிய தெளிவான புரிதலைப் பெறும்படி ஊக்கத்தோடு ஜெபிக்கிறவர்களாக, அதைக் குறித்து படிக்கிறவர்களாக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ளுவது மிகவும் அவசியமானது. இது நீங்கள் கிறிஸ்தவத்தில் மேலும் வளரவும் மேம்படவும் உங்களை வழி நடத்தும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s