கட்டுரை எழுதலாம் வாருங்கள்

கட்டுரை எழுதலாம் வாருங்கள்

(பாகம் 2)

வாசிப்பதும் எழுதுவதும் மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொள்கிறபோதும் அதற்கான வசதிகளை எல்லா சமுதாயமும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதில்லை. உலகத்தின் சில சமுதாயங்களில் வேலை மற்றும் வருமானத்தைப் பெற மட்டுமே இதில் கவனம் செலுத்தப்படுகிறது. வாசிப்பும் எழுத்தும் மனிதனுக்கு அத்தியாவசியம், ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களோடு தொடர்புகொள்ளக்கூடியவனாக படைக்கப்பட்டிருக்கும் மனிதன் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், பிறரின் சிந்தனைகளை அறிந்துகொள்ளவும் வாசிப்பும் எழுத்தும் அவசியமாகிறது. மனிதன் மிருகங்களைவிட வித்தியாசமாக, சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறான். மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் வாசிப்பும் எழுத்தும் தேவையில்லை; மனிதனுக்கு அவசியம். இதற்கெல்லாம் மேலாக கடவுளை மகிமைப்படுத்தவேண்டிய ஒரே நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிற மனிதன் கடவுளை அறிந்துகொள்ள வாசிப்பும் எழுத்தும் அவசியம். தன்னை வெளிப்படுத்தியிருக்கும் கடவுள் அதை எழுத்தில் தந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். படைப்பாகிய பொதுவான வெளிப்பாட்டைத் தருவதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லையே. பொதுவான வெளிப்பாட்டைவிட மேலான இரட்சிப்புக்கு வழிகாட்டும் சுவிசேஷத்தை அவர் எழுத்திலல்லவா தந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளுவதற்கும், கடவுளின் அனைத்துப் போதனைகளையும் அறிந்துகொள்ளுவதற்கும், பகிர்ந்துகொள்ளுவதற்கும் வாசிப்பும் எழுத்தும் அவசியமாகிறது. கிறிஸ்தவனுக்கு வாசிப்பும் எழுத்தும் மிகவும் அவசியம் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால், வேலைக்கும் வருமானத்திற்கும் மட்டுமே படிப்பு இருந்துவரும் இன்றைய சமுதாய சூழலில் வாசிப்பையும் எழுத்தையும் அதற்காக மட்டும் நாடக்கூடாது என்று கிறிஸ்தவர்களுக்கு புரியவைப்பதெப்படி?

வாசிப்பே ஒருவரை எழுதத்தூண்டுகிறது; எழுதவைக்கிறது என்பதை கட்டுரை எழுதுவது பற்றிய என்னுடைய முதலாவது ஆக்கத்தில் கடந்த இதழில் விளக்கியிருந்தேன். வாசிப்பில்லாமல் எழுதுவதை எண்ணியும் பார்க்க முடியாது. எழுதுவதற்கு அவசியமான அத்தனை சிந்தனை முத்துக்களையும் வாசிப்பே எழுதுகிறவனுக்குத் தருகிறது. கட்டுரை எழுதுவது பற்றிய முக்கியமான அம்சங்களை அனைத்தையும் முதலாவது ஆக்கத்தில் விளக்கியிருந்தேன். அவற்றை மறுபடியும் விளக்கவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் கட்டுரையில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டும் தந்துவிடுகிறேன்.

  1. முன்னுரை
  2. கட்டுரையின் சரீரம்
  3. முடிவுரை

இவை மூன்றுமே பொதுவாக எந்தக் கட்டுரையிலும் இருக்கக்கூடியவை. முதலாவதையும் மூன்றாவதையும் போதுமான அளவுக்கு முதல் ஆக்கத்தில் விளக்கியிருக்கிறேன். இந்த ஆக்கத்தில் இடைப்பட்ட அம்சமாகிய கட்டுரையின் சரீரத்தைப் பற்றி விளக்கலாமென்று நினைக்கிறேன்.

கட்டுரையின் நீளம்

முதலில், கட்டுரை எழுத ஆரம்பிக்கும்போது எத்தனை பெரிய கட்டுரை எழுதப்போகிறோம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். பத்திரிகையில் எழுதுகிறவர்களுக்கு பத்திரிகையாளர்கள் இத்தனை வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதித்தர வேண்டுமென்று கேட்பார்கள். உதாரணத்திற்கு 500 அல்லது 1000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை வேண்டும் என்று கேட்பார்கள். அல்லது ஒரு பக்கம் அல்லது நான்கு பக்க கட்டுரையாக இருக்க வேண்டும் என்று கேட்பார்கள். இதையே கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும், பிஎச்டி பட்டமெழுதுபவர்களிடம் எதிர்பார்ப்பார்கள். எதற்கும் ஒரு அளவிருக்க வேண்டுமில்லையா? கட்டுரை என்பது குறுநாவல், நாவல் என்பவற்றையெல்லாம் விட சுருக்கமானது. ஆகவே அது தன்னுடைய தன்மையைவிட்டு மாறிவிடக்கூடாது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் கணினியில் எழுதப் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற மென்பொருள் கருவிகள் எழுதும்போது தானாகவே எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம் என்பதை சுலபமாக நாம் அறியத்தருகின்றன. இதற்கெல்லாம் நான் எழுத ஆரம்பித்த காலத்தில் வசதிகள் இருக்கவில்லை.

எத்தனை வார்த்தைகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுகிறோம் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பது நன்மையானதே. அநாவசியத்துக்கு வார்த்தைகளைக் கொட்டாமல் இருக்க இது வசதியாயிருக்கும். வார்த்தைகளை அளந்து பயன்படுத்த இது உதவும். எழுதுவதைக் கட்டுப்பாட்டோடு சிந்தித்து எழுதுவதற்கும் இது துணை செய்யும். எழுதுகிறோம் என்று சிந்திப்பதற்கு ஒன்றுமேயில்லாமல் வார்த்தைகளை அளந்து தள்ளியிருப்பவர்களின் ஆக்கங்களை நான் வாசித்திருக்கிறேன். கட்டுரையில் நாம் வெளிப்படுத்த எண்ணியிருக்கும் முக்கியமான அம்சங்களையெல்லாம் சிந்தித்து அளவோடு தேவையான அளவுக்கு பயன்படுத்தவும் இந்தக் கட்டுப்பாடு துணை புரியும்.

கட்டுரையின் சரீரம்

கட்டுரையின் சரீரமே அதன் உயிர்நாடி. இந்தப் பகுதியிலேயே முன்னுரையில் சுருக்கமாகக் கொடிகாட்டப்பட்டு விளக்கப்பட்டிருக்கும் கருப்பொருள் காரண காரியங்களோடு விளக்கப்பட்டிருக்கும். கட்டுரையில் இந்தப்பகுதியே நீளமானதாக இருக்கும். கட்டுரையில் சரீரத்தை எழுதும்போது அதில் என்னென்னவற்றை விளக்கப்போகிறோம் என்பதை முன்பே சிந்தித்து தெளிவான குறிப்புகள் எழுதிவைத்துக்கொள்ள வேண்டும். எழுத ஆரம்பித்து போகிறபோக்கில் சிந்திப்பதென்பது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. அது பொருளுள்ள கட்டுரைகள் எழுத உதவாது. கருப்பொருளை கட்டுரையின் சரீரத்தில் அருவியோடுவது போல பொருளோடு படிப்படியாக ஆணித்தரமாக விளக்கவேண்டும். இங்குதான் எழுதுகிறவனின் அறிவுத்திறனையும், சிந்தனைத் திறனையும் காண்கிறோம். வாசிக்கிறவர்களுக்கு சலிப்பேற்படச் செய்யாமல் சுவையோடு அறிவுத்தாகத்தை ஏற்படுத்தும் விதத்தில் இந்தப்பகுதியை எழுதவேண்டும்.

ஆரம்ப எழுத்தாளர்கள் இதில் பயிற்சிபெற நல்ல கட்டுரையாளர்களின் கட்டுரைகளை வாசித்து பயிற்சிபெற வேண்டும். மு. வரதராசனின் கட்டுரைத் தொகுதி நினைவுக்கு வருகிறது. பிரபலமானவர்கள் என்று தேடிப்போகாமல் வரதராசனைப்போல நல்ல எழுத்தாளர்களின் கட்டுரைகளை வாசியுங்கள். அவர்கள் எந்தவிதத்தில் தங்களுடைய கருப்பொருளை சரீரப்பகுதியில் விளக்கியிருக்கிறார்கள் என்று சிந்தித்து வாசித்துப் பாருங்கள். ஆவிக்குரிய சிறந்த கட்டுரையாளர்கள் என்று தமிழெழுத்தாளர்கள் அதிகமில்லை. ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு எளிமையான கட்டுரைகளை எழுதியிருப்பவர்கள் என்றால் என் நினைவுக்கு வருகிறவர் ஜே. சி. ரைல். 19ம் நூற்றாண்டு கிறிஸ்தவ தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும் ரைல் இலகுவான ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதி விளக்குவதில் சிறப்பானவராக இருந்தார். நல்ல நவீன ஆங்கில கிறிஸ்தவ எழுத்தாளர்களின் அநேக நூல்கள் இன்று இருக்கின்றன.

சரீரத்தின் பத்திகள்

கட்டுரையின் சரீரத்தில் நாம் விளக்கப்போகும் விஷயங்களை பல பத்திகளில் (paragraphs) எழுதப் போகிறோம். இந்தப் பத்திகள் மூன்றாகவும் இருக்கலாம் இருபதாகவும் இருக்கலாம். எத்தனை பத்திகளைப் பயன்படுத்தி கட்டுரையை எழுதப்போகிறோம் என்பது பல அம்சங்களைப் பொறுத்து அமையும். அது எத்தகைய சத்தியத்தை விளக்குகின்ற கட்டுரை, எத்தனை வார்த்தைகளைக் கொண்ட கட்டுரை, ஆய்வுக் கட்டுரையா அல்லது பொதுவான கட்டுரையா என்பவற்றைப் பொறுத்தே எத்தனைப் பத்திகளைப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். எழுதப் போகும் விஷயத்தைப் பொறுத்து கட்டுரையின் நீளத்தைத் தீர்மானிக்க வேண்டும். பொதுவான ஒன்று அல்லது இரண்டு பக்க கட்டுரைகள் நான்கு அல்லது ஆறு பத்திகளைக் கொண்டிருக்கும். ஒரு பக்கத்திற்கு மூன்று அல்லது நான்கு பத்திகளைப் பயன்படுத்துவது நல்ல அளவுகோளாக இருக்கும்.

பத்திகளைப் பயன்படுத்துகிறபோது ஒவ்வொரு பத்தியும் ஒரு பொருளை மட்டும் விளக்குவதாக இருக்கவேண்டும். அந்தப் பொருள் தெளிவாக ஒரு வசனத்தில் விளக்கப்பட்டிருக்கும்; அந்த வசனம் நீளமானதாகவும் இருக்கும். இந்த வசனம் விளக்கும் அந்தப் பொருளையே அந்தப் பத்தி மேலும் விளக்குவதாக இருக்கும். ஒரே பத்தியில் பல விஷயங்களை விளக்கக்கூடாது. ஒரே பொருளை ஒன்றுக்கு மேற்பட்ட பத்திகளில் விளக்கலாம்; ஆனால் ஒவ்வொரு பத்தியும் ஒரு விஷயத்தை அல்லது பொருளை மட்டுமே விளக்கவேண்டும். இது பத்திகளைப் பொறுத்தவரையில் நிர்ப்பந்தமான விதி மட்டுமல்ல வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கவும் உதவும். ஒரு பத்தியில் விளக்கப்போகிற பொருளை வேத வசனங்கள் மூலமும், உதாரணங்கள் மூலமும் விளக்க வேண்டும். இதற்கு மேற்கோள்களையும் அளவு மீறாமல் பயன்படுத்தலாம். முக்கியமாக இவையெல்லாமே விளக்குகின்ற பொருளோடு தொடர்புடையதாக அந்தப் பொருளைத் தெளிவாக விளக்க உதவுகின்றவையாக மட்டுமே இருக்கவேண்டும்.

பத்திகள் தேவையற்றளவுக்கு மிகவும் நீண்டவையாக இருந்துவிடக் கூடாது. பத்திகள் சிறிதாகவோ நீளமானதாகவோ இருக்கலாம். அவை குறைந்தது மூன்று வசனங்களையும் கூடியது பத்து வசனங்களையும் கொண்டிருப்பது நல்லது. மிகவும் நீளமான பத்திகள் வாசகர்களுக்கு சலிப்பேற்படுத்தும். ஒரு பத்தியில் நாம் ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லப் போவதால் அது அளவுக்கு மீறி நீளமானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அத்தோடு அந்தப் பத்தியில் விளக்கப்படுகின்ற விஷயம் கட்டுரையின் கருப்பொருளை விளக்குவதோடு தொடர்புடைய பல விஷயங்களில் ஒன்றாக மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பத்தியில் விளக்கப்படும் விஷயமும் அதற்கு முன்னால் வரும் பத்தியோடும் வரப்போகும் பகுதியோடு இணைந்ததாக இருக்கவேண்டும். ஒரு பத்தியின் விஷயம் கட்டுரையின் கருப்பொருளை விளக்கும் அடுத்த பத்தியோடு தொடர்புடையதாக அதை நோக்கி வாசகனை அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும். கட்டுரையின் அனைத்துப் பத்திகளும் ஒன்றோடொன்று இணைந்ததாக கட்டுரையின் கருப்பொருளை சிறிது சிறிதாக விளக்கி தீர்க்கமான ஒரு முடிவை நோக்கி அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டும்.

பத்தியின் அமைப்பு

இதுவரை ஒரு பத்தியைப் பற்றி பொதுவான விளக்கங்களைத் தந்திருக்கிறேன். இனி எப்படி ஒரு பத்தியை எழுதுவது என்று பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஒரு பத்தியில் இருக்கவேண்டிய ஒரே பொருளை அந்தப் பத்தி முதலில் ஒரு வசனத்தின் மூலமாக தெளிவாகக் குறிப்பிட்டு அதை மேலும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். தமிழ் இனத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல விஷயங்களைப் பேச்சில் கொண்டிருப்பது பண்பாடாக இருக்கிறது. கேட்கிறவர்களுக்கு எதைப் பேசினோம் எப்படி அதோடு தொடர்பில்லாத இன்னொரு விஷயத்துக்குத் தாவினோம் என்பதெல்லாம் தெரியாது. இப்படிப் பேசியே பொதுவாக எல்லோருக்கும் பழகிவிட்டது. இது பேச்சுப் பண்பாட்டில் பழக்கமாகிவிட்டதென்பதற்காக அதுவே சரியென்று நினைப்பது முட்டாள்தனம். இது குழப்பமான தொடர்பற்ற பொருளற்ற சம்பாஷனைக்கு ஒரு உதாரணம் மட்டுமே. இந்தத் தகாத சம்பாஷனை வியாதியே இன்று பொதுவாக தமிழ் பிரசங்கிகளுக்குத் தொற்றி அவர்களுடைய பிரசங்கத்தைப் பொருளற்றதாகவும் குழப்பமானதாகவும் செய்திருக்கிறது. தத்துவரீதியாக (logical), படிமுறையாக, வரிசைக்கிரமமாக சிந்தித்து ஒரு விஷயத்தில் இருந்து இன்னொரு விஷயத்துக்கு காரணகாரியத்தோடு அழைத்துச் செல்லும் பிரசங்கங்களை தமிழ்ப்பிரசங்கிகளிடம் காணமுடியாமலிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். சமுதாயத்தில் பழக்கப்பட்டதொன்றாக சகஜமானதாக ஒரு விஷயம் இருப்பதென்பதற்காக அதுவே சரியானது, பண்பாடு என்று நினைப்பது கிறிஸ்தவனுக்கு அழகானதல்ல.

நம்மெல்லோருக்கும் ஆண்டவராக இருக்கும் கர்த்தர் நமக்கு படிமுறையான ஒழுங்கைக் கற்றுத் தருகிறார். அந்த தெய்வீகப் பண்பாடு நம்மினத்தின் தகாத பண்பாட்டில் இருந்து நமக்கு விடுதலை தர வேண்டும். படைப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அது படைப்பைப் பற்றி மட்டுமா விளக்குகிறது? படைப்பில் நாம் ஒழுங்கைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் சிருஷ்டியை ஒழுங்கோடு படைத்த கர்த்தரை நாம் அங்கு காண்கிறோம். அதன் மூலம் கர்த்தர் நமக்கு, தான் ஒழுங்கோடு சிந்திக்கிறவர், செயல்படுகிறவர் என்பதைத் காட்டுகிறார். பத்துக்கட்டளைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஒழுங்கைக் கவனியுங்கள். அந்தக் கட்டளைகள் சிந்தனையற்ற முறையில் ஏனோதானோவென்று கொடுக்கப்படவில்லை. எந்தக் கட்டளை முதலில் வரவேண்டும், எது அடுத்து வரவேண்டும், எந்த விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதையெல்லாம் கர்த்தர் சிந்தித்து தன்னுடைய தெய்வீக ஆலோசனையின்படி பத்துக்கட்டளைகளில் தந்திருக்கிறார். பத்துக்கட்டளைகள் கர்த்தர் ஒழுங்கின் தேவன் என்பதையும், நம்மிடம் ஒழுங்கை எதிர்பார்க்கிறார் என்பதையும் சொல்லாமல் சொல்லுகின்றன. நாம் விசுவாசிக்கும் ஆராதிக்கும் ஆண்டவர் ஒழுங்கானவர், ஒழுங்கைப் பின்பற்றுகிறவர், ஒழுங்கை நம்மில் நாடுகிறவர் என்பதை எந்தக் கிறிஸ்தவனும் மறந்துவிடக்கூடாது. ஒழுங்கற்று சிந்திக்கிறவர்களும், ஒழுங்கற்ற வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறவர்களும், ஒழுங்கை உதாசீனம் செய்கிறவர்களும் ஒருபோதும் கிறிஸ்தவர்களாக பிரயோஜனமுள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்கமுடியாது.

பத்தியின் ஆளும் வசனம்

இனி ஒரு பத்தியை எப்படி அமைப்பது என்பதைப் பற்றி மேலும் சிந்திப்போம். ஏற்கனவே சொன்னதுபோல் ஒரு பத்தி ஒரு முக்கிய கருத்தைக் கொண்டதாக மட்டுமே எப்போதும் இருக்கவேண்டியதால் அந்தக் கருத்தை ஒரு வசனத்தில் அந்தப் பத்தியில் தெளிவாகச் சொல்லி அதை ஆரம்பிக்கவேண்டும். இந்த வசனமே அந்தப் பத்தியை ஆளுகின்ற முக்கிய வசனமாக இருக்கும். உதாரணத்திற்கு, ‘தேவபயம் கிறிஸ்தவனுக்கு மிகவும் அவசியம்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொள்ளுவோம். இந்த வாக்கியம் ஒரு பத்தியின் ஆளும் வாக்கியமாக இருக்குமானால் இந்த வாக்கியத்தை விளக்கும்வகையில் அந்தப் பத்தியை எழுத வேண்டும். இவ்வேளையில் எழுதுகிறவன் இது சம்பந்தமான அதிக வாசிப்பில் ஈடுபட்டு விபரங்களை ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுவோம்.

அடுத்தபடியாக மேலே பார்த்த வசனத்தின் கருத்தை மேலும் சில வசனங்களின் மூலம் விளக்கவேண்டும். பத்தியில் சொல்லவந்த கருத்தின் எளிமையைப் பொறுத்து அதன் விளக்கம் அமையும். சுலபமாக விளங்கிக்கொள்ளக்கூடிய ஒரு கருத்திற்கு நீண்ட விளக்கங்கள் தேவைப்படாது. சொல்லவரும் கருத்து எளிமையாக இல்லாதிருந்தால் அது தெளிவாக விளக்கப்பட வேண்டும். அந்தக் கருத்திற்கான விளக்கத்தைத் தர வேத வசனங்களைப் பயன்படுத்தலாம். உதாரணங்களைக் கொடுக்கலாம். அவசியமானால் மேற்கோள்களைப் பயன்படுத்தலாம். பத்தி நீண்டுவிடப்போகிறது என்று தெரிந்தால் இன்னொரு பத்தியில் அதை விளக்கலாம். இதெல்லாம் சொல்ல வருகின்ற கருத்தைப் பொறுத்து அமையும்.

பத்திக்கான உதாரணம்

ஒரு பத்திக்கான உதாரணத்தை இப்போது பார்ப்போம். ஜோன் பனியன் எழுதிய மோட்ச பிரயாணம் நூலின் தமிழாக்கத்தில் ஒரு பத்தியை இங்கே உதாரணத்திற்குத் தருகிறேன். நன்னம்பிக்கை என்பவன் கிறிஸ்தியானிடம் கர்த்தருக்குரியதான தேவபயத்தை புத்தியற்றவர்கள் எவ்வாறு தங்களுக்குள் அடக்கப்பார்க்கிறார்கள் என்று கேட்கிறான். அதற்கு கிறிஸ்தியான் தரும் பதில் கீழ்வரும் பத்தியில் இருக்கிறது.

“முதலாவதாக இந்தப் பயஉணர்வு ஆண்டவரால் அருளப்பட்டது என்பதை அறியாமல், சாத்தான்தான் இந்தப் பயத்தை உருவாக்குகிறான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்தக் காரியங்கள் தங்களை வீழ்த்திவிடும் என்று நினைத்து அதை எதிர்த்து நிற்கிறார்கள். இரண்டாவதாக, இந்தப் பயங்கள் தங்கள் விசுவாசத்தை அழித்துவிடும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இதனால் தங்கள் இருதயத்தை அதற்கு விரோதமாகக் கடினப்படுத்திக்கொள்கிறார்கள். மூன்றாவதாக, தாங்கள் பயப்படக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறபடியால், இந்தப் பயஉணர்வை அசட்டை செய்து, கவலையேயின்றி தங்கள் விருப்பப்படி நடக்கிறார்கள். நான்காவதாக, பரிதபிக்கப்படத்தக்க தங்கள் பழைய சுயபரிசுத்த உணர்வை அது எடுத்துப்போடும் என்று நினைத்து, தங்கள் முழுபலத்தோடும் அதை எதிர்த்து நிற்கிறார்கள்” என்று விளக்கினான் கிறிஸ்தியான்.

இந்தப் பத்தியில் ஜோன் பனியன் தேவபயத்தை எப்படிச் சிலர் தங்களில் அடக்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதை சுருக்கமாக விளக்கியிருக்கிறார். அதை நான்கு காரியங்கள் மூலமாக பனியன் விளக்கியிருக்கிறார். பத்தி முழுவதும் தேவ பயத்தை சிலர் எப்படி அடக்கப்பார்க்கிறார்கள் என்பது பற்றி மட்டுமே விளக்குகிறது. பனியன் விளக்கியிருக்கும் நான்கு அம்சங்களும் ஒன்றொடொன்று தொடர்புடையவை. ஒரே கருத்தை விளக்கும் இந்தப் பத்தி குழப்பமில்லாததாக இருக்கிறது. தேவையற்ற விஷயங்கள் இதில் இல்லை. வாசகர்கள் தெளிவாக புரிந்துகொள்ளும்படியாக பத்தி அமைந்திருக்கிறது.

ஒரேயொரு பொருளை விளக்கும் பத்தி அதை விளக்கும் ஆளும் வசனத்தோடு ஆரம்பித்து, அந்த வசனத்தை மேலும் வசனங்களைப் பயன்படுத்தி விளக்குவதோடு நின்றுவிடக்கூடாது. பத்தியின் இறுதியில் ஒரு முடிவு வசனம் இருப்பது நல்லது. இது பத்தியை நிறைவு செய்கிற வசனமாக இருக்கும். இந்த விதத்திலேயே ஒரு கட்டுரையின் ஒவ்வொரு பத்தியும் அமைய வேண்டும்.

பத்திகள் ஒவ்வொன்றும் அடுத்து வரும் பத்தியை நோக்கி நம்மை அழைத்துப்போவதாக இருக்கவேண்டும். கட்டுரையின் மூலக்கருத்தை காரணகாரியங்களோடு ஒவ்வொரு பத்தியிலும் விளக்கி கட்டுரையின் முடிவை நோக்கி முறையோடு போவதாக இருக்கவேண்டும். பத்திகள் முடிவை நோக்கிச் செல்லுகிற போக்கில் குழப்பத்திற்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். இந்த விதத்திலேயே ஒரு கட்டுரையை எழுதி நிறைவு செய்யவேண்டும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s