கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல்

கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல்

(பக்தி வைராக்கியம் – 3)

– டேவிட் மெரெக் –

உங்களுடைய விரலில் ஒன்று துண்டிக்கப்பட்டால் என்னவாகும்? அதன் செயல்பாடு எப்படியிருக்கும்? நிச்சயமாக நன்றாக இருக்காது, இல்லையா? உயிரும் ஆரோக்கியமுமுள்ள சரீரத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே அது மற்ற விரல்களோடு சேர்ந்து சரியாக இயங்க முடியும். இதே நிலைதான் என்னுடைய காலுக்கும், ஈரலுக்கும், தலைக்கும். இந்த ஆக்கத்தில், நம்முடைய உடலைப் பற்றிய இந்த உண்மை நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்திற்கும் பொருந்தும் என்பதைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்.

பக்தி வைராக்கியத்தைப் பற்றிய போதனைத் தொடரில் இதுவரை இரண்டு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன். அதில் முதலாவதாக, தீத்து  2:13-14 வசனங்களிலிருந்து பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருகிறது என்பதைப் பார்த்தோம். பின்பு, தீத்து 2:13-14 வசனங்களை எழுதிய அதே பவுல் ரோமர் 12:11ல், பக்தி வைராக்கியம் நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பொறுப்பாக இருக்கிறது என்று விளக்கியிருப்பதைப் பற்றி விரிவாகப் படித்தோம். கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம், நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டியதும் தக்கவைத்துக்கொள்ள வேண்டியதுமான நம்முடைய பொறுப்பாக இருக்கிறது.

சென்ற ஆக்கத்தில், ரோமர் 12:11வது வசனத்தைப் பார்த்தபோது, நம்முடைய கவனம் முழுவதையும் அந்த வசனத்தில் மட்டுமே செலுத்தினோம். ஒரு பாராஷூட்டில் இறங்குவது போல் நேரடியாக ரோமர் 12வது அதிகாரத்தின் நடுப்பகுதியில் இறங்கினோம். 11வது வசனத்தில் இறங்கிய பிறகு, இறங்கிய இடத்தைப் பற்றிக் கவனமாக ஆராய்ந்தோம். ஆனால் நம்முடைய கண்களை உயர்த்தி மேற்கொண்டு பார்ப்போமானால், பல தகவல்களின் ஊடாக நாம் பாராஷூட்டில் வந்திருக்கிறோம் என்பதை அறியலாம். வசனம் 11, ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கான பல நடைமுறை வழிகாட்டிகளுக்கு மத்தியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை விஷயங்கள் 12வது அதிகாரம் தொடங்கி 14வது அதிகாரம் வரை மட்டுமல்லாமல் 15வது அதிகாரம் பாதி வரையும் தொடருகிறதாக இருக்கிறது. இந்த ஆக்கத்தில், ரோமர் 12:11வது வசனம் இருக்கும் பரந்த சூழலில் நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம். ஆரம்பமாக, ரோமர் 12:11ஐ நெருங்கி சுற்றியுள்ள வசனங்களான 12:1-16 வரையுள்ள வசனங்களைப் பார்ப்போம்.

இந்த வசனங்களை வாசிக்கிறபோது, நீங்கள் கவனித்தீர்களா, வசனம் 11 அதிலும் குறிப்பாக நம்முடைய முக்கியமான சொற்றொடர் “ஆவியிலே அனலாயிருங்கள்” என்பது எந்தவிதத்தில் இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது என்று. இவ்வசனங்களின் மையப் போதனையாக இருப்பது “ஆவியிலே அனலாயிருங்கள்” என்பதுதான் என்று நான் சொல்லுவது சரிதானே? இந்த இடத்தில் பக்தி வைராக்கியம் மையப் போதனையல்ல. பவுல் நாம் செய்யும்படி இங்கு குறிப்பிடுகிற நடைமுறைக் காரியங்களில் ஒன்றுதான் “ஆவியிலே அனலாயிருத்தல்”. எனினும், நான் கடவுளுடைய வார்த்தையான இந்தப்பகுதியை தியானிக்கும்போது, ஒரு உண்மையைக் கண்டறிந்தேன். அதாவது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை காரியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவைகள் அல்ல என்பதுதான். இவை ஒன்றொடொன்று இணைக்கப்பட்டுள்ளன. பவுல் இங்கு, ஆரோக்கியமான, கடவுளை பிரியப்படுத்தும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கான வரைபடத்தைத் தருகிறார். நம்முடைய உடல் பாகங்களைப் பற்றி நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட உதாரணத்தை நினைவுகூருங்கள். நம்முடைய உடல் பாகங்கள் சரியாக இயங்க வேண்டுமானால் அவைகள் ஆரோக்கியமான உயிருள்ள உடலோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுபோல, கிறிஸ்தவ வாழ்க்கை பற்றிய இந்த வரைப்படத்தின் அனைத்துப் பாகங்களும் சரியாக இயங்க வேண்டுமானால் கிறிஸ்தவ வாழ்க்கையில் இவையாவும் ஒன்றொடொன்று சரியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பற்றிய நம்முடைய பாடத்தில் இது எதை நமக்குக் காட்டுகிறது? 11வது வசனத்தில் பவுல் குறிப்பிடும், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் ஆர்வமுள்ள கிறிஸ்தவ இருதயம் என்பது ஆரோக்கியமான, கடவுளுக்குப் பிரியமான கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சங்களைத் தன்னில் கொண்டுள்ளது என்பதைத்தான் காட்டுகிறது. பக்தி வைராக்கியம் என்பது 11வது வசனம் அமைந்திருக்கும் சூழலிலுள்ள பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சங்களைக் கொண்டதாகும். பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் மற்ற அம்சங்களைக் கொண்டிராமல் பக்தி வைராக்கியத்தை உங்களில் கொண்டிருக்க முடியாது. பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இந்த அம்சங்கள் எங்கிருக்கிறதோ அங்கு மட்டுமே பக்தி வைராக்கியமும் இருக்கும். நான் என்ன சொல்லுகிறேன் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

நான் சொல்லுவது உண்மையாக இருந்தால், பவுல் 1 முதல் 16 வரையுள்ள வசனங்களிலும் அதைத் தொடர்ந்தும் சொல்லியிருக்கிற ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அம்சங்கள் நம்முடைய தனிப்பட்ட பொறுப்புகளுடன் சேர்ந்து நம்மில் கிறிஸ்தவ வைராக்கியத்தை தூண்டிவிடப் பேருதவியாக இருக்கும். இப்போது நாம் இந்தப் பகுதியை விரிவாகப் படிக்கலாம். இதைச் செய்கிறபோது நான், பவுல் இந்தப்பகுதியில் வலியுறுத்தியுள்ள ஒவ்வொன்றும் எந்தவிதத்தில் நம்முடைய பக்தி வைராக்கியத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நான் தொடர்ந்து விளக்கப்போகிறேன். இந்தவேளையில் நாம் குறிப்பாக 11வது வசனத்திற்கு முன்பிருக்கிற வசனங்களில் கவனம் செலுத்துவோம். இவைகளில் நாம், ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய குறைந்தபட்சம் 7 முக்கியமான அம்சங்களைக் காணலாம். இந்த ஆக்கத்தில், இந்த ஏழு அம்சங்களில் முதலாவது அம்சத்தை மட்டுமே நாம் பார்க்கப் போகிறோம். அது என்னவென்றால்,

ரோமர் 12:1ன் பிற்பகுதியிலுள்ள – “தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு” என்பதைப் பற்றி முதலில் நாம் கவனிப்போம். இங்கு பவுல் ரோமர் நிருபத்தின் முதலாவது பகுதியை முடித்துவிட்டு இரண்டாம் மற்றும் இறுதிப் பகுதிக்கு மாறுகிறார் என்பதை நாம் கவனிப்பது மிகவும் அவசியமானது. அந்த மாற்றத்தைக் குறிக்கிற வார்த்தைதான் “ஆகையால்”. முதல் 11 அதிகாரங்களில், பவுல் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்த கோட்பாடுகளை எடுத்துரைக்கிறார். ஆனால் அவர் கோட்பாடுகளோடு நிறுத்திக்கொள்ளவில்லை. தற்போது அவர் 12:1ல் அந்த கோட்பாடுகளின் பயன்பாட்டோடு ஆரம்பிக்கிறார். இனி எஞ்சியுள்ள இந்நிருபத்தின் வசனங்களில் பெரும்பாலும் அதன் பயன்பாடுகளையே பார்க்கலாம். அதேபோல், வேத வசனங்களைப் போதிக்கிறவர்கள், போதனை அளிக்கிறபோது எப்போதும் அதில் கோட்பாடுகளும் நடைமுறைகளும் இணைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நிருபத்தின் இரண்டாவது மற்றும் இறுதிப் பகுதியில் பவுலின் அணுகுமுறையை கவனியுங்கள். கிறிஸ்துவுக்குள் தனக்கு உடன் சகோதரரும் சகோதரிகளுமாகிய ரோமாபுரி விசுவாசிகளுக்கு பவுல் கனிவோடு வலியுறுத்துகிறார். ஒரு அப்போஸ்தலனாக, அவர் இவைகளைக் கட்டளைகளாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரரைப் போல் அவற்றை வேண்டுகோளாக முன்வைக்கிறார். கர்த்தருடைய வார்த்தைகளைப் போதிக்கிற, பிரசங்கிக்கிற யாவருக்கும் அவர் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார்.

ரோமர் 12:1ல் பவுல் நடைமுறைப் பயன்பாடுகளைக் கொடுக்கத் துவங்குவதினால், தேவபக்தியுள்ள வாழ்க்கைக்கு நம்மை ஊக்கப்படுத்தும் வலிமைமிக்க ஒன்றை முதலாவதாக எடுத்துரைக்கிறார். “தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு” என்று ஆரம்பிக்கிறார். தேவனுடைய இரக்கங்கள் என்பது, நமக்கு நாமே உதவ வலிமையற்றவர்களாகவும் பெரும் பிரச்சனையிலுள்ளவர்களாகவும் இருந்த நமக்கு உதவும்படியாக செயல்பட்ட அவருடைய மனதுருக்கத்தையும் தயவையும் உள்ளடக்கியது. நாம் தேவனுடைய குடும்பத்திலுள்ளவர்களாக அவருடைய இரக்கங்கள் நம்மீது இருப்பதை எடுத்துக்காட்டி, வசனம் 1ல் நாம் செய்யும்படி சொல்லப்பட்டுள்ளவைகளை செய்வதற்கு நம்மைப் பவுல் ஊக்குவிக்கிறார். இந்த வசனத்திலுள்ளவைகளுக்கு மட்டுமல்ல, நடைமுறைப் போதனைகளைத் தரும் ரோமர் நிருபத்தின் இறுதிவரையுள்ள அனைத்தையும் செய்வதற்கு நம்மை ஊக்கப்படுத்துவதாகவும் இதுவே இருக்க வேண்டும். ஆகவே, “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருப்பதற்கு, ஆவியிலே அனலாயிருப்பதற்கு, கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கு” நம்மை ஊக்கப்படுத்துவதாக தேவனுடைய இரக்கங்களே இருக்க வேண்டும்; இருக்கவும் செய்கிறது.

பவுல் இங்கு தேவனுடைய எந்த இரக்கங்களைக் குறிப்பிடுகிறார்? பக்தி வைராக்கியம் கொள்ளுவதற்கு நாம் இந்த இரக்கங்களால் ஊக்கப்படுத்தப்பட வேண்டுமானால் அந்த இரக்கங்களைப் பற்றி அறிந்திருப்பதும் அவசியம். இவ்வேளையில், ரோமர் நிருபத்தின் முதல் 11 அதிகாரங்களில் பவுல் விளக்கியுள்ள இரக்கங்களில் சிலவற்றை சுருக்கமாக விளக்கப்போகிறேன். இந்த இரக்கங்கள் கடவுளின் பொதுவான வெளிப்பாடுகளாகிய அவருடைய படைப்பு மற்றும் பராமரிப்பிலிருந்து ஆரம்பிக்கின்றன.

  • கடவுள் இரக்கத்துடன் தம்முடைய நித்திய வல்லமை மற்றும் தேவத்துவத்தை படைப்புகளின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் நாம் அவரை வழிபட்டு அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமென்கிறார் பவுல். (ரோமர் 1:18-21)
  • படைப்புகளின் மூலமான கடவுளின் வெளிப்பாட்டை நாம் நிராகரித்ததின் விளைவாக, அவர் இரக்கத்துடன் தம்முடைய பராமரிப்பின் மூலம் அவர்களை முட்டாள்தனத்திற்கும் கேட்டிற்கும் ஒப்புவித்து கேடானவர்களின் மீதுள்ள தம்முடைய கோபத்தை வெளிப்படுத்தினார். (ரோமர் 1:18, 21-31). இதன் மூலம் அவர் நம்மை எச்சரிக்கிறார்.
  • கடவுள் இரக்கத்துடன், தொடர்ந்து நமக்கு மனந்திரும்புதலுக்கான அழைப்பைத் தருவதன் மூலம் அவரது நற்குணம் மற்றும் நீடிய பொறுமையை நம்மீது பொழிந்தருளுகிறார். நாம் அடைய வேண்டிய அளவிற்கான தீர்ப்பை உடனடியாக அவர் செய்வதில்லை. (ரோமர் 2:4)
  • கடவுள் இரக்கத்துடன் நம்மை நம்முடைய தாயின் கருவறையில் உருவாக்கியபோதே தம்முடைய ஒழுக்கரீதியான கட்டளைகளை நம்முடைய மனச்சாட்சியில் எழுதியிருக்கிறார். இதன் விளைவாக, நாம் சரியானதை அல்லது தவறானதை செய்யும்போது நமக்குக் கிடைக்கப்போவது என்னவென்பதையும் தெரியப்படுத்துகிறார். எனினும், துக்ககரமான விஷயமென்னவென்றால், நாம் இன்னும் நம்முடைய பாவங்களிலேயே தொடர்ந்திருக்கிறோம் என்பதுதான். (ரோமர் 2:14-15, 1:31ஐ ஒப்பிடுக)

படைப்பு மற்றும் பராமரிப்பின் மூலமான கடவுளின் வெளிப்பாடு கடவுளின் இரக்கங்களுக்கான சான்றுகளாக இருக்கின்றன. நம்முடைய பாவ இருதயம் இவைகளை ஒழுங்காகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நம்மைக் கண்டனத்திற்குள்ளாக்க இவை போதுமானவை, ஆனால் நமக்கு இரட்சிப்பைத் தருவதற்கு போதுமானவையல்ல. இதற்கும் மேலான வெளிப்பாட்டைக் கடவுள் தந்திருப்பதினால் அவருக்கு நாம் நன்றி கூறவேண்டும்.

  • கடவுள் இரக்கத்துடன் இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நேரடியான வெளிப்படுத்தலாகிய பெலனும் ஜீவனுமுள்ள சுவிசேஷத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். (ரோமர் 1:1-4, 16-17). இப்படிப்பட்ட வெளிப்படுத்துதலில் ரோமர் புத்தகமும் ஒன்று. வெளிப்படுத்தப்பட்டுள்ள சுவிசேஷத்தில் கடவுளின் இரக்கங்கள் பின்வரும் வழிகளில் விளக்கப்பட்டிருக்கிறது:
    • கடவுள் இரக்கத்துடன் பாவத்தில் தொடர்ந்திருப்பவர்கள் மீதான கடவுளின் நியாயத்தீர்ப்பைக் குறித்த எச்சரிப்பை தம்முடைய வார்த்தையின் மூலம் தருகிறார். (ரோமர் 2:1-12)
    • கடவுள் இரக்கத்துடன் நம்முடைய குற்றம் மற்றும் பாவ நிலையை உள்ளபடி வெளிப்படையாகச் சொல்லுகிறார். நம்மைப் பற்றிய துர்ச்செய்தியை எடுத்துச்சொல்லி சுவிசேஷத்தை நாடும்படி நம்மை ஊக்கப்படுத்துகிறார். (ரோமர் 3:10-18)
    • கடவுள் இரக்கத்துடன் அவரிடமிருந்து வரும் நீதியாகிய ஈவைப் பற்றிச் சொல்லுகிறார். அந்த ஈவை இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம்தான் பெறமுடியுமே தவிர நம்முடைய சொந்த நடவடிக்கைகளின் மூலம் பெறமுடியாது. (ரோமர் 3:21-22, 27-28)
    • கடவுள் இரக்கத்துடன் தம்முடைய குமாரனை நமக்கான பதிலாளாக சிலுவையில் தம்மால் தண்டிக்கப்படும்படி இந்த உலகத்திற்கு அனுப்பினார். இதன் விளைவாக, கடவுளுடைய நியாயமான கோபம் திருப்தி செய்யப்படுகிறது. விசுவாசத்தினாலே நாம் கடவுளுடைய நீதிமன்றத்தில் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறோம். (ரோமர் 3:24-28)
    • விசுவாசத்தினாலே நமது பல அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது, இனி அவைகள் நமக்கு எதிரானவைகள் அல்ல. (ரோமர் 4:7-8)
    • கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் ஒருநாள் இவ்வுலகை சுதந்தரிப்பார்கள். (ரோமர் 4:13)
    • நாம் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம், தேவ மகிமையின் நம்பிக்கையினாலே களிகூருகிறோம். (ரோமர் 5:1)
    • நமக்காக கிறிஸ்து மரித்ததினால் தேவன் நம் மேல் வைத்திருக்கிற அற்புதமான அன்பு வெளிப்படுகிறது. (ரோமர் 5:6-8)
    • கடவுளுக்கு விரோதமாக இருந்த நாம் கிறிஸ்துவின் மூலம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் 5:10)
    • கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருப்பதினால் இனி நாம் பாவத்திற்கு அடிமைகள் இல்லை. (ரோமர் 6:6-11)
    • நரகத்தில் நித்திய மரணத்திற்கு பதிலாக ஆசீர்வாதமான நித்திய வாழ்வை எதிர்பார்க்கிறோம். (ரோமர் 6:23.)
    • தொடர்ந்திருக்கும் பாவத்தினால் நமக்கு ஏற்படுகிற போராட்டங்களிலிருந்து இறுதியில் கிறிஸ்து நம்மை விடுவிப்பார். (ரோமர் 7:14-25)
    • கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு எந்தக் கண்டனமும் இல்லை. (ரோமர் 8:1)
    • அற்புதமான ஈவாக நமக்குள் வாசம்பண்ணும்படி பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் நம்மை வழிநடத்தி, தேவனுக்குக் கீழ்ப்படியவும், பாவத்தை சாகடிக்கவும், இரட்சிப்பின் நிச்சயத்தைப் பெறவும் நம்மை பெலப்படுத்துகிறார். நம்முடைய எதிர்கால உயிர்த்தெழுதலுக்கான ஆதாரமாகவும் இருக்கிறார். எப்படி ஜெபிப்பது என்று நாம் அறியாதபோது நமக்காக ஜெபிக்கிறவராகவும் அவர் இருக்கிறார். (ரோமர் 8:4, 9-17, 26-27)
    • உண்மையில் நாம் கடவுளுடைய குடும்பத்தின் பிள்ளைகளாக தத்தெடுக்கப்பட்டிருக்கிறோம். உயிர்த்தெழுதலின்போது நாம் தேவனுடைய வீட்டிற்குப் போய் அவரோடு வாழுவதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். (ரோமர் 8:15-23)
    • நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற அனைத்தும் நமது நன்மைக்காக அதாவது நாம் கிறிஸ்துவைப் போல் அதிகமதிகமாக மாறவும் நம்முடைய இரட்சிப்பை முழுமை பெறச் செய்யவுமே நடக்கிறது. கடவுள் நமக்காக எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். (ரோமர் 8:28-32)
    • பிதாவாகிய தேவனுடையதும் கிறிஸ்துவினுடையதுமான அன்பை விட்டு எதுவும் நம்மை பிரிக்க முடியாது. நம்மை நேசிக்கிற கிறிஸ்துவினாலே நாம் அனைத்தையும் வெற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறோம். (ரோமர் 8:35-39)
    • கடவுள் தம்முடைய ஆளுகையின்படி நம்மைத் தெரிந்தெடுத்து நம்மீது இரக்கம் காட்டியிருக்கிறார். (ரோமர் 9:15)
    • நாம் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் கிறிஸ்துவின் மூலம் நாம் இரட்சிக்கப்படுவோம். (ரோமர் 9:24-29)
    • கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள். (ரோமர் 10:13)

கர்த்தரை நாம் அறிந்தவர்களாக இருந்தால் உண்மையிலேயே நம்மீது அவர் காட்டியிருக்கின்ற இரக்கங்கள் மகா பெரியவை. கடவுள் நம்மீது காட்டியிருக்கிற இரக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்க முடிந்தால், அவைகள் பக்தி வைராக்கியத்திற்கு வேராகவும், ரோமர் 12ல் சொல்லப்பட்டுள்ள காரியங்களைச் செய்யவும் நம்மை வல்லமையோடு ஊக்கப்படுத்த வேண்டாமா? இந்த வேளையில், மிகவும் சுருக்கமாக கடவுளுடைய இரக்கங்கள் நம்மில் ஏற்படுத்தும் ஊக்கத்தின் காரணமாகத் தொடரும் தேவபக்திக்குரிய வாழ்க்கையின் சில அம்சங்களைக் கவனிப்போம்:

  • 12:1 – கடவுளுக்காக நம்மை நாமே அர்ப்பணித்தல் – கடவுள் தம்முடைய இரக்கங்களினால் நமக்கு செய்திருக்கிற அனைத்தின்படி, நாம் நம்முடையவர்கள் அல்ல. நாம் அவருக்குரியவர்கள். ஆகையால் நாம் செய்யக்கூடிய ஒன்றேயொன்று மகிழ்ச்சியுடன் நம்முடைய சரீரம் மற்றும் அனைத்தையும் அவருக்குக் கொடுப்பது மட்டுமே. ஜீவபலியாக நம்மை நாமே அவருக்கென்று வாழும்படி வழங்கவேண்டும். அவருடைய சித்தத்தைச் செய்து அவரைப் பிரியப்படுத்துகிறவர்களாக அவருக்கென்று நம்மை நாமே பரிசுத்த பலியாக வழங்கவேண்டும். இப்படிச் செய்கிறபோது, “ஆவியிலே அனலாயிருந்து, கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதற்கு” நாம் அடித்தளமிடுகிறோம் என்று இங்கே வெளிப்படுகிறது, இல்லையா?
  • 12:2 – நம்முடைய சிந்தனையில் மறுரூபப்படுதல் – தேவனுக்கான ஜீவனுள்ள, பரிசுத்த பலியாக நாம் இருப்பதினால், நம்மை சுற்றியுள்ள அவிசுவாச உலகம் சிந்திப்பதுபோல் நாம் இனி சிந்திப்பதில்லை. உலகத்தின்படியாக சிந்திப்பதென்பது கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதென்பதற்கு எதிரானதும், குழப்பத்தை ஏற்படுத்துவதற்குமே வழிநடத்தும். மாறாக, நம்முடைய சிந்தை மறுரூபமாகவும் புதுப்பிக்கப்படவும் வேண்டுமென்று நாம் கடவுளுடைய உதவியை நாடுவோம். அதன் விளைவாக, கடவுளுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தத்தைப் பகுத்தறியும் பெலனை அடைவோம். நம்மைப் பற்றிய கடவுளுடைய சித்தத்தை அறிந்து அதை ஏற்கிறபோது, “ஆவியிலே அனலாயிருப்பதற்கும் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வதற்குமான” உதவியை அதிகமாக பெறுவோம்.
  • 12:3 – நம்மைப் பற்றியும் நம்முடைய வரங்களைப் பற்றியும் சரியாக மதிப்பிடுதல் – நம்மைப் பற்றியும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரங்கள் பற்றியுமான சரியான கண்ணோட்டத்துடன், தெளிந்த புத்தியும், தாழ்மையும் கொண்டவர்களாக இருக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்மைப் பற்றி எண்ண வேண்டியதற்கு மிஞ்சி பெருமையோடு ஒருபோதும் எண்ணக் கூடாது. ஆனால் அதேவேளை கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வரங்களையும் நாம் மறுக்கக்கூடாது. பக்திவைராக்கியத்தை சரியான முறையில் நாம் செயல்படுத்த வேண்டுமானால், நம்மைப் பற்றியும் நம்முடைய வரங்களைப் பற்றியுமான சரியான, தாழ்மையுள்ள பார்வை நமக்கிருக்க வேண்டும்.
  • 12:4-5 – கிறிஸ்துவின் சரீரத்தோடு நமக்குள்ள உறவை நினைவுகூருதல் – பவுல் இங்கு மனித உடலின் உதாரணத்தை எடுத்துக்காட்டி நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்கள் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார். இதற்குப் பொருள், நாம் நமக்காக மட்டும் வாழக்கூடாது என்பதுதான். மாறாக, முழு சரீரமும் பயன்பெறும்படி நாம் யாவரும் அவரவருக்குரிய பணிகளைச் செய்ய வேண்டும். (இதைக்குறித்து மேலதிகமாக பிறகு 12:9-10, 13 வசனங்களில் பார்க்கலாம்). கிறிஸ்தவ வைராக்கியத்தை வெளிப்படுத்த கிறிஸ்தவ சபையோடு நமக்குள்ள உறவைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.
  • 12:6-8 – கடவுளின் உக்கிராணக்காரனாக நம்முடைய வரங்களை சபையின் நன்மைக்காக பயன்படுத்துதல் – நம்முடைய வரங்கள் மற்றும் கிறிஸ்துவின் சரீரத்தோடு நமக்குள்ள உறவைப் பற்றிய சரியான பார்வையின் அடிப்படையில், கடவுளிடமிருந்து கிருபையாய் பெறப்பட்ட உக்கிராணப் பொறுப்பிற்கு ஏற்ப நம்முடைய வரங்களை நேர்மையாகவும், உற்சாகமாகவும், ஜாக்கிரதையாகவும் பயன்படுத்த வேண்டும். (11வது வசனத்திலுள்ள அதே வார்த்தைதான் இங்கு 8வது வசனத்திலும் இருக்கிறது – “ஜாக்கிரதையாயிருத்தல்”). சபையின் நன்மைக்காக வரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றபடியால், அதற்காகவே அவை பயன்படுத்தப்பட வேண்டும். (ஒவ்வொரு வரமும் மற்றவர்களின் நலனை நோக்கமாக வைத்து கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்). அப்படியான வரங்களை நாம் புதைத்து வைப்பதோ புறக்கணிப்பதோ கூடாது (மத்தேயு 25:14-30 – தாலந்துகள் உவமைகள், 1 தீமோத்தேயு 4:14). இப்படியான வரங்களைப் பயன்படுத்துவதில் நாம் “அசதியாயிருக்கக் கூடாது”. மாறாக, “ஆவியிலே அனலாயிருந்து, கர்த்தருக்கு ஊழியஞ் செய்ய வேண்டும்”. இப்படியே பக்தி வைராக்கியம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
  • 12:9-10 – நம்முடைய சகோதர சகோதரிகளிடம் மெய்யான அன்பைக் காட்டுதல் – நம்முடைய இருதயத்தில் பக்திவைராக்கியம் கொண்டு கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய சகோதர சகோதரிகளின் நன்மைக்காக நம்முடைய வரங்களைப் பயன்படுத்தும்படி தூண்டிவிட உதவியாயிருப்பது எது? இக்கேள்விக்கு பவுல் இங்கு பதிலளிக்கிறார். உண்மையும், கனிவும், பாசமும்கொண்ட சகோதர சிநேகமுள்ள இருதயத்திலிருந்தே இப்படியான பக்தி வைராக்கியம் பாய்ந்தோடும். இந்த இரண்டு வசனங்களும், பக்தி வைராக்கியத்திற்கு நம்மை உந்தித்தள்ளும் மெய்யான சகோதர சிநேகத்தின் இரண்டு பண்புகளை எடுத்துக்காட்டுகிறது.

முதலாவதாக, அந்த அன்பு, பகுத்தறியும் அன்பு (வசனம் 9). பக்தி வைராக்கியத்திற்கு பின்புலமாக இருக்கும் அன்பு தீமையை அருவருக்கும்; நன்மையைப் பற்றிக்கொண்டிருக்கும். நன்மையைப் பற்றிக்கொண்டிருப்பது என்பது நீதியினிமித்தமாக பக்தி வைராக்கியம் கொண்டிருப்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மறுபுறம், பாவத்தை அருவருப்பதற்கும் விட்டுவிலகுவதற்கு பதிலாக அதில் நிலைத்திருப்பதும் ஒரு வகையான வைராக்கிமே, ஆனால் அது பக்தியற்ற வைராக்கியம்.

இரண்டாவதாக, பக்தி வைராக்கியத்திற்கு பின்புலமாக இருக்கும் அந்த அன்பு, தாழ்மையான அன்பு (வசனம் 10). பக்தி வைராக்கியத்திற்கு வழிநடத்தும் சகோதர அன்பு என்பது என்னுடைய சொந்த விருப்பங்கள், குறிக்கோள்கள், திட்டங்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. இந்த அன்பு மற்றவர்களின் விருப்பங்கள், குறிக்கோள்கள், திட்டங்களைப் புறந்தள்ளி, அவர்களை அவமானப்படுத்துவதுமல்ல. இது மற்றவர்களுடைய விருப்பங்கள், குறிக்கோள்கள், திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மரியாதையுடன் நடத்தும். இது வைராக்கியத்தைப் பற்றிய உலகத்தின் சிந்தனையைவிட (நம்முடையதையும்விட) எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள்.

இதுவரை நாம் படித்த பகுதியிலிருந்து நாம் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டியவைகளாக கற்றுக்கொள்ள வேண்டியவைகள் யாவை?

நம்முடைய வாழ்க்கையில் பக்தி வைராக்கியம் தூண்டப்படவும், தொடர்ந்திருக்கவும் வேண்டுமா? அப்படியானால், நாம் ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையோடு இணைந்திருக்கிற அனைத்தையும் செய்வதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

  • கடவுளுடைய இரக்கத்தினால் நாம் ஊக்கப்பட வேண்டும்.
  • கடவுளுக்கான பரிசுத்தமான பலியாக நம்மை வழங்கி அவருக்கு புத்தியுள்ள ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
  • நம்முடைய மனம் மறுரூபமாக வேண்டும். அப்போதுதான் கடவுளின் சித்தத்தை நாம் சரியாக அறிந்து செயல்படுத்துகிறவர்களாக இருப்போம்.
  • நம்மையும், நம்முடைய வரங்களையும், சபையோடு நமக்குள்ள உறவையும் பற்றி நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
  • கடவுளின் உக்கிராணக்காரனாக நம்முடைய வரங்களை சபையின் நன்மைக்காக உற்சாகத்துடன் பயன்படுத்த வேண்டும்.
  • பகுத்தறியக்கூடியதும் தாழ்மையானதுமான சகோதர சிநேகத்தை நாம் அதிகமதிகமாகக் கொண்டிருந்து வெளிப்படுத்த வேண்டும்.

இவைகளைக் கொண்டிராமலும் நாம் வைராக்கியத்துடன் இருக்க முடியும். ஆனால் அது பக்தி வைராக்கியமாக இருக்காது. இவைகள் உங்களில் இருந்தால் மட்டும் உங்களில் பக்திவைராக்கியம் இருக்கிறதென்று அர்த்தம். இவைகள் அதிகமாக நம்மில் பெருகுவதற்கு தேவன் தாமே நமக்கு உதவுவாராக. கிறிஸ்தவ வைராக்கியத்திற்கு முக்கியமான உந்துசக்தியை ஒருபோதும் மறவாதிருக்க தேவன் தாமே நமக்கு விசேஷமாக உதவட்டும். கடவுளின் இரக்கங்களே அந்த முக்கியமான உந்துசக்தி. நரகத்திற்குரிய பாவிகளான நம்மீது பரலோகத்தின் பிதாவானவர் இரக்கத்தைக் காண்பித்திருக்கிறார். அவர் தம்முடைய இரக்கத்தினால், நம்மில் தொடங்கிய தம்முடைய செயலை நிச்சயமாக முழுமையடையவும் செய்வார்.

5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, 6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். (பிலிப்பியர் 1:5,6).

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s