தேவபயம்: சொற்பொருள் விளக்கம்
(வேதம் போதிக்கும் தேவபயம் – 2)
– அல்பர்ட் என். மார்டின் –
[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]
“தேவபக்தியின் உயிர்நாடியாக இருப்பது தேவபயம்” என்று ஜோன் மரே சொல்லியிருக்கிறார். பரிசுத்த வேதாகமத்தில் எங்கும் பரவலாக ஆதிக்கம் செலுத்தும் தேவபயம் இந்தத் தலைமுறையில் பொதுவில் அநேகரிடத்தில் இல்லாமல் போய்விட்டதை கவனத்தோடு வாழும் கிறிஸ்தவர்களால் கவனிக்காமல் இருக்க முடியாது. தேவபயத்தைப் பற்றி வேதப்போதனைகளிலுள்ள முக்கியமான உண்மைகளில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்ளுவதற்கான முயற்சியாக, இந்நூலின் முதலாவது அதிகாரத்தில், வேதாகமத்திலுள்ள தேவபயத்தின் ஆதிக்கத்தைப் பற்றி அறியவும் உணரவும் செய்தோம்.
இப்போது, தேவபயம் என்ற வார்த்தைக்கு வேதம் கொடுக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். இதன் மூலம் வேதம் தேவபயத்தை எந்தளவு வலியுறுத்துகிறது என்பதைக் கவனிக்கலாம். அத்தோடு தேவபயத்தைப் பற்றிய விஷயத்தில் வேதம் எதை வலியுறுத்துகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம். வேதாகமம் குறிப்பிடுகிற தேவபயத்தின் விளக்கத்தை எப்படி நாம் கண்டறிவது? வேதத்தில் ஆண்டவர் தேவபயத்தில் வருகிற “பயம்” என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதற்கு இரண்டு எபிரெய வார்த்தைகளையும் ஒரு கிரேக்க வார்த்தையையும் பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே, வேதத்தில் பயம் என்ற வார்த்தை பொதுவான விதத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதிலிருந்து நாம் ஆரம்பிக்கலாம். பிறகு, தேவபயத்தைக் குறிப்பிடுவதற்கு அந்த இரண்டு வார்த்தைகளின் அம்சங்கள் பொதுவான விதத்தில் எப்படி இணைக்கப்பட்டு அதற்கான பொருளைத் தருகிறது என்று பார்ப்போம்.
வேதத்தில் “பயம்” என்ற வார்த்தையின் பொதுவான பயன்பாடு
வேதத்தில் “பயம்” என்ற வார்த்தை பரவலாக எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? முதலாவது, திகில் அல்லது பய உணர்வை அனுபவிப்பதை இது விவரிப்பதாக இருக்கிறது. இந்த பயம் எப்படியானதென்றால், ஒன்பது வயது சிறுவன் ஒருவன், பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கிறபோது, ஒரு தெரு முனையைத் தாண்டியவுடன், எதிரே தன்மீது வெறுப்புக் கொண்டு தன்னை எப்போதும் அடிக்கிறவனாக இருக்கிற தன்னுடைய அண்டைவீட்டு இளைஞன் தெருவின் நடுவில் நின்று கொண்டிருப்பதைக் கண்டால் அவனுக்கு ஏற்படும் பய உணர்வைப் போன்றது. 14 வயது நிரம்பிய அந்த அண்டைவீட்டு இளைஞன் 5’10” உயரமுடையவன். அவன் தன்னைவிட வயதில் சிறியவனும் 4 அடி உயரமுள்ள 9 வயது சிறுவனை அடிப்பதில் அதிக நாட்டம் கொண்டவன். அந்த 9 வயது சிறுவன், தெரு முனையில் திரும்புகிறபோது, தன்னை வெறுக்கும் தன் அண்டைவீட்டான் அவனுக்கு ஒரு பெரிய மலையைப்போலத் தென்படுகிறான். அந்த நேரத்தில் அவனுக்கு திகிலும் பயமும் ஏற்படுகிறது. அவன் தன்னைத் தாக்கி தனக்குக் காயம் ஏற்படுத்தும் வலிமை கொண்டவன் என்பதை அறிந்து உணர்ந்திருப்பதினால் உண்டாகிற திகில் இது.
இந்தத் திகிலைக் குறிப்பிடுகிறதாக வேதத்தில் “பயம்” என்ற வார்த்தை சில முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. உபாகமம் 2ல், 24 வது வசனத்திலிருந்து தொடர்ந்து வரும் பகுதி இந்தத் திகிலைப்பற்றித்தான் குறிப்பிடுகிறது. கர்த்தர் தம்முடைய மக்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறார், “நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய். வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார்” (24-25).
கானானியர்கள் உங்களைப் பார்த்து பயப்படுவார்கள் என்று கர்த்தர் தம்முடைய மக்களைப் பார்த்துச் சொல்லுகிறார். அவர்களில் பயமும் திகிலும் ஊற்றப்படும். ஏனென்றால், கர்த்தர் தம்முடைய மக்களுக்கு தம்முடைய பிரசன்னத்தையும் வல்லமையையும் வழங்கி அவர்கள் யுத்தத்தில் வல்லவர்களாக இருக்கும்படி செய்வார். கானானியர்களில் பயமும் வேதனையும் நிறைந்திருக்கும். தேவபயத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைதான் இங்கு 25வது வசனத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதே போன்ற ஒரு குறிப்பு சங்கீதம் 105:36-38 வசனப்பகுதியிலும் இருக்கிறது. கர்த்தர் தம்முடைய மக்களை எகிப்திலிருந்து விடுவித்ததைப் பற்றிச் சொல்லுகிறபோது இப்படியாக நாம் வாசிக்கிறோம், “அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார். அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள்.” அதாவது, இஸ்ரவேலர்களின் தேவன் எகிப்தியர்களுக்கு அளித்த பயங்கரமான தண்டனையின் காரணமாக, இஸ்ரவேலர் தொடர்ந்து எகிப்தில் இருப்பது அவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது. இங்கே நாம் மறுபடியும் பேரச்சத்தினாலும் திகிலினாலும் உண்டான பயத்தைப் பார்க்கிறோம்.
புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் ஒரு பிரபலமான வேதப்பகுதியில், இதற்கான ஒரு உதாரணத்தை நாம் பார்க்கலாம். லூக்கா 2:9ல், தேவதூதன் திடீரென்று மேய்ப்பர்கள் முன் தோன்றியதைக் கண்டு அவர்கள் பயப்பட்டார்கள் – “அவர்கள் மிகவும் பயந்தார்கள்” (லூக்கா 2:9). தேவதூதன் திடீரென்று அவர்கள் முன் தோன்றியபோது அவர்களுக்கு உண்டான பயம் பேரச்சத்தினால் உண்டாகிய பயம். புதிய ஏற்பாட்டில் இன்னுமொரு குறிப்பு அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:11ல் காணப்படுகிறது. பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்ல முயற்சித்ததன் காரணமாக அனனியாவையும் சப்பீராளையும் கர்த்தர் அடித்ததினால் மரித்தார்கள் என்கிற செய்தி பரவியபோது, “சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று” என்று வேதம் சொல்லுகிறது. எனவே, பழைய மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டிலும், திகிலும் பேரச்சமுமாகிய உணர்வு பிடித்துக்கொள்ளுவதை விளக்குவதற்கு “பயம்” என்கிற இந்த பொதுவான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இன்னொருவிதமான பயமும் இருக்கிறது. இந்த இரண்டாவது விதமான பயத்திற்கும் அதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேறொரு அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த பயம் பெரு மதிப்பும், மரியாதையும், பயபக்தியும் கொண்டிருப்பதன் காரணமாக வருகிற பயம். மறுபடியும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட அந்த 9 வயது சிறுவனைப் பற்றிப் பார்ப்போம். இப்போது அவன் அந்தத் தெரு முனையில் திரும்பவோ, தன்னை வெறுக்கிற தன் அண்டைவீட்டு இளைஞனுக்கு முன்பாக நிற்கவோ இல்லை. இப்போது அவன் தன் பள்ளி நண்பர்களோடு இருக்கிறான். அவர்கள் ஊர் சுற்றிப்பார்க்க வாஷிங்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கு அவர்கள் வெள்ளை மாளிகைக்கு போயிருக்கிறார்கள். வெள்ளை மாளிகையில் நடந்து சென்று கொண்டிருக்கிறபோது, திடீரென்று ஒரு உயரதிகாரி அவனிடத்தில் வந்து, “அமெரிக்க அதிபர் உன்னோடு பேச விரும்புகிறார்” என்று சொல்லுகிறார். உடனே, அந்த சிறுவனின் கண்கள் பிதுங்கி, முச்சுத் திணறி, “அவர் என்னோடு பேச விரும்புகிறாரா?” என்று திக்கித் திணறிக் கேட்கிறான். அவரும் “ஆமாம், உன்னோடுதான். நீதானே பில்லி ஜோன்ஸ்” என்கிறார். அப்போது அவன் பயத்தால் நிரம்பியிருக்கிறான். இந்த பயம் பேரச்சத்தினால் உண்டான பயமல்ல. அதிபர் தன்னுடைய சேவகர்களுக்கு கட்டளையிட்டு அவர்கள் தன்னைச் சுடும்படி தன்னுடைய தலையில் துப்பாக்கியை வைப்பார்களோ என்று அவன் பயப்படவில்லை. இந்த பயம் பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர்கள் முன் ஒருவன் நிற்கிறபோது உண்டாகிற பயம். இந்தப் பெரு மதிப்பும், மரியாதையும் பயபக்தியின் நிமித்தமுமாக வருகிற பயம்.
லேவியராகமம் 19:3ல், “பயம்” என்கிற வார்த்தையில் இந்த அம்சம் எப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள், “உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்”. ஒவ்வொரு முறையும் தன் தாய் தகப்பனைப் பார்க்கிறபோது, அந்த 9 வயது சிறுவன் தன்னை விரோதிக்கிற தன் அண்டைவீட்டு இளைஞனை சந்திக்கிறபோது வருகிற அதே உணர்வு ஏற்பட வேண்டும் என்று கர்த்தர் தன் மக்களுக்கு இங்கே கட்டளையிடுகிறாரா? தங்கள் தாய் தகப்பனைப் பார்க்கிறபோதெல்லாம் அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட வேண்டும் என்று சொல்லுகிறாரா? நிச்சயமாக இல்லை. அவர்கள் தங்கள் பெற்றோருக்கு பயப்பட வேண்டும் என்கிறார். பயம் என்ற அதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அது முற்றிலும் வேறு அர்த்தத்தில் காணப்படுகிறது. பிள்ளைகள் தங்கள் தாய் தகப்பனை வெறுமனே தங்களைவிட உயரமானவர்களாகவோ, பெரியவர்களாகவோ, அறிவாளிகளாகவோ, அனுபவசாலிகளாகவோ மட்டும் பார்க்கக்கூடாது. அவர்கள் தங்கள் தாய் தகப்பனாக இருப்பதினால், தங்களைப் பற்றிய கர்த்தருடைய கட்டளைகளையும் சித்தத்தையும் மேற்பார்வை செய்யும் கர்த்தருடைய பிரதிநிதிகள் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். ஆகவே, அவர்களுடைய நிலையின் மதிப்பின் நிமித்தமாக, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பெருமதிப்பும் மரியாதையுடனும், பயபக்தியுடனும் நடத்த வேண்டும். இது திகிலினாலும் பேரச்சத்தினாலும் உண்டாகிற பயமல்ல.
வேதத்தில் தேவபயத்தைக் குறிப்பிடுவதற்கு “பயம்” என்ற வார்த்தையின் பொதுவான இந்த இரண்டு அர்த்தங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது (இன்றும் நாம் இந்த இரண்டையும் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம்). பொதுவாக, தேவபயத்தில் கர்த்தரைப் பார்த்துப் பயப்படுவதும், திகிலும் பேரச்சமும் கொள்ளுவதும் அடங்கியுள்ளது. இது வேதத்தில் பிரதானமாக இல்லாவிட்டாலும், இது இல்லை என்று சொல்லுவதற்கில்லை. கர்த்தருடைய மெய்யான பிள்ளைகள், பயத்தின் இரண்டாவது அம்சமாகிய பெரு மதிப்பையும் மரியாதையையும் பயபக்தியையும் கர்த்தரிடம் சிறப்பான விதத்தில் காட்டுவார்கள். இந்த பயம் அவர்களை கர்த்தரிடமிருந்து தூர ஓட வைக்காது. மாறாக, இயேசு கிறிஸ்துவின் மூலமாக கர்த்தரிடம் நெருங்கி வரவும், விசுவாசத்தோடும், அன்போடும், கீழ்ப்படிதலோடும் அவருக்கு ஆனந்தத்தோடு அடிபணிகிறதாக இருக்கும்.
பயம் என்ற வார்த்தை பொதுவான விதத்தில் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவொரு வேதப்பகுதியும் எந்த பயத்தைப் பற்றி விளக்குகிறது என்பதைக் கண்டறிய கவனத்தோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, அந்தப் பகுதி திகிலையும் பேரச்சத்தையும் பற்றிச் சொல்லுகிறதா? அல்லது பயபக்தியும், பெரு மதிப்பும் மரியாதையையும் பற்றிச் சொல்லுகிறதா? அல்லது இரண்டையும் குறிப்பிடுகிறதா? (சிலபகுதியில் இந்த இரண்டு அர்த்தங்களோடும் அது காணப்படுகிறது) என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பேரச்சமும் திகிலுமாகிய பயம்
பழைய ஏற்பாட்டு சான்றுகள்
பேரச்சமும் திகிலுமாகிய பயத்தைப் பற்றி முதலாவது நாம் பார்க்கலாம். இந்த பயம் வேதனைக்கும், தான் பயப்பட வேண்டியவரைவிட்டுத் தள்ளியிருப்பதற்கும் ஒருவனை வழி நடத்தும். தேவபயத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது பகுதி இந்தவிதமான பயத்தைப் பற்றியதுதான். கர்த்தர் ஆதாமை வைத்த இடமாகிய ஏதேன் தோட்டத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் அதை நாம் பார்க்கிறோம். அங்கு ஆதாம் பரிபூரணமான சுற்றுச்சூழலில், தன்னுடைய பரிசுத்த தன்மையின்படி விரும்பும் அனைத்தும் சூழ்ந்திருக்கிறவனாக இருந்தான். தடை செய்யப்பட்ட மரத்தின் கனியை சாப்பிடுகிற நாளில் அவன் சாவான் என்று கர்த்தர் ஆதாமுக்கு ஒரு பயமுறுத்தலைக் கட்டளையிட்டார். ஆதாமும் ஏவாளும் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போனபிறகு, கர்த்தர் வந்து மனிதனை அழைத்தபோது, அவன் சொன்னான், “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்” (ஆதியாகமம் 3:10). பயத்தின் முதல் அம்சத்தை விளக்குகிற அருமையான ஒரு பகுதி இது. இந்த பயம் தான் பயப்படுகிறதைவிட்டு தள்ளியிருக்க செய்யும்.
இது சம்பந்தமாக சில கேள்விகளும் எழுப்பப்படுவதுண்டு. இந்தவிதமான அச்சத்தை ஒருவன் கர்த்தரிடத்தில் கொண்டிருப்பது சரியானதா? இந்தவிதமான பயம் பரிசுத்த வேதாகமத்தில் கட்டளையிடப்பட்டும் எடுத்துரைக்கப்பட்டும் இருக்கிறதா? இந்த பேரச்சமும் திகிலுமாகிய உணர்வு பரிசுத்த வேதாகமத்தின் முக்கியமான கருப்பொருளாக இருக்கிறதா? ஜோன் மரே மிகவும் அருமையாகவும் துல்லியமாகவும் இதற்கான பதிலைத் தந்திருக்கிறார், “கடவுளுக்கு அஞ்சுவதற்கான காரணமிருக்கும்போது அஞ்சாமல் இருப்பது தேவபக்தியற்ற நிலையையே காட்டுகிறது.” ஆதாம் பாவம் செய்துவிட்டு, கர்த்தர் அழைத்தவுடன் அவருடன் சேர்ந்து மெல்ல நடந்து சென்று, அவரிடம் “ஹலோ ஆண்டவரே, இன்று நாள் எப்படியிருந்தது? மறுபடியும் உங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இன்று பொழுது உங்களுக்கு நல்லதாக அமையட்டும்” என்று சொல்லியிருந்தால், அதுதான் தேவபக்தியற்ற, கடின இருதயத்தைக் கொண்டுள்ள, உணர்ச்சியற்ற மனச்சாட்சியின் வெளிப்பாடாக இருந்திருக்கும். கடவுள் யார் என்பதும், அவருக்கு எதிராக பாவம் செய்வதின் பயங்கரத் தன்மையும், கடவுளுடைய பயமுறுத்தல் நிறைவேறும் என்பதின் நிச்சயத்துவமும் எஞ்சிய நிலையில் இன்னும் ஆதாமுக்குள் இருந்திருக்கிறது. இந்த பேரச்சமும் வேதனையும் இல்லாதிருந்திருந்தால் அவனில் தேவபக்தியற்ற வெட்கங்கெட்ட மதமும், முட்டாள்தனங்களின் ஒட்டுமொத்தமும் மட்டுமே இருந்திருக்கும்.
கடவுளுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்பு நம்மீது இருப்பதை வெளிப்படுத்தும் எந்தவொரு சூழ்நிலையிலும் இந்தவிதமான பயம் இருப்பதுதான் சரியானதும் ஒழுங்கானதுமாகும். கடவுளைப் பார்த்து நாம் பயப்படுவது சரிதானா? நிச்சயமாக, நாம் அவருக்குப் பயப்பட வேண்டியதை வேதம் எடுத்துரைக்கிறது. ஆதாம் பயப்பட்டது சரிதானா? நிச்சயமாக, அவன் பயப்பட்டது சரியானது. அவன் கடவுளுக்கு எதிராக பாவம் செய்திருந்தான். நன்மை தீமை அறியத்தக்க மரத்தைப் பற்றிய விஷயத்தில் “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” (ஆதியாகமம் 2:17) என்ற ஆண்டவருடைய வெளிப்படையான கட்டளைக்கு அவன் மனப்பூர்வமாகவும் கெட்ட இருதயத்தோடும் கீழ்ப்படியாமல் போனான். அப்போது, கர்த்தர் அவனை நெருங்கியபோது, ஆதாமுக்கு இந்த பேரச்சம் உண்டானதால், அது அவனைக் கர்த்தரைவிட்டு தூரம் போகச் செய்தது. இந்தவிதமான அச்சம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகிறபோது, கடவுளைப் பற்றி இந்த பயம் இருக்க வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறது. இந்த உண்மைக்கான ஒரு தெளிவான உதாரணத்தை சங்கீதம் 119:120ல் வாசிக்கலாம். இங்கு சங்கீதக்காரன் அறிவிக்கிறார், “உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.” மைக்கேல் வில்காக் (Michael Wilcock) என்பவர் இவ்வசனத்தை விளக்குகிறபோது சொல்லுகிறார், “வெறுமனே சும்மா இருப்பதை பயபக்தி என்று கருதி நாம் திருப்திப்பட்டுக்கொள்ளக் கூடாது. 120வது வசனம் அச்சத்தால் நடுங்குவதைப் பற்றிச் சொல்லுகிறது; ஏனென்றால் நம்முடைய கர்த்தர் பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்.”
உபாகமம் 17:13ல், பயத்தின் இந்த அம்சம் வேதத்தில் எப்படிக் கட்டளையிடப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். இஸ்ரவேலில் நியமிக்கப்பட்ட நியாயாதிபதிகளின் வழிமுறைகளை அலட்சியப்படுத்துகிறவன், கொல்லப்பட வேண்டும் என்கிற எச்சரிக்கையை இப்பகுதியில் காண்கிறோம். 13வது வசனத்தில் கர்த்தர் இக்கட்டளைக்கான காரணங்களை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார், “அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக்கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள்.” அண்டைவீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு மக்கள் போகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். இந்நிகழ்ச்சிக்கு அவர்களுடைய நண்பர்களில் ஒருவன் வரவில்லை. வந்திருந்தவர்களில் ஒருவன் அவனுக்கு என்ன நடந்தது என்று கேட்கிறான். அதற்கு இன்னொருவன் பதிலளிக்கிறான், அவன் கர்த்தருடைய கட்டளைகளை அலட்சியப்படுத்தினான். மற்றும் அக்கட்டளைகளை நடைமுறைப்படுத்துகிற நியாயாதிபதிகளின் சொல்லையும் கேளாமற் போனான். ஆகவே அவன் புறம்பே கொண்டுபோகப்பட்டு, நேற்று கல்லெறியப்பட்டு கொல்லப்பட்டான்”. என்ன குற்றம் செய்தான் என்று முதலாமவன் கேட்டபோது, ஏதோ சாதாரணமான ஒன்றுதான் என்பதுபோல் அவர்கள் விளக்கினார்கள். ஆனால் இது சாதாரணமானதல்ல, கடவுளுடைய கட்டளைகளை நிர்வகிக்கும்படி ஏற்படுத்தப்பட்டவர்களை அவன் அவமதித்திருக்கிறான். ஆகவேதான் அவன் மரணத்திற்குள்ளாக்கப்பட்டான். இதனால் அவனுடைய நண்பர்களுக்கு பயம் உண்டானது. அங்கு ஒரு பேரச்சம் ஏற்படுகிறது. இல்லாவிட்டால், அவன் செய்ததுபோல் ஏனையோரும் செய்ய முற்பட்டு அவனுக்கு நடந்த அதே கதிக்குள்ளாக்கப்பட்டிருப்பார்கள். கர்த்தர் இந்த வழிமுறைகளை அவர்களுக்கு தந்ததன் முக்கியமான காரணமே, தம்முடைய மக்கள் தம்மைப் பற்றிய பயத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகத்தான். அதாவது திகிலும் பேரச்சமும் கொண்ட பயம்.
உபாகமம் 21ல், அடங்காத துஷ்டனாயிருக்கிற ஒரு மகனை, அவன் பெற்றோர் திருத்துவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளையெல்லாம் முறைப்படி எடுத்தும் அவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிற ஒருவனை எப்படிக் கையாளுவது என்பது பற்றிய விஷயத்தில் கர்த்தர் இஸ்ரவேலருக்கு வழிமுறைகளைக் காட்டுகிறார். எல்லா நம்பிக்கையுமற்ற நிலையில், இக்கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது,
“அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.” (உபாகமம் 21:19-21)
இஸ்ரவேலிலிருக்கிற ஒரு இளைஞனைப் பற்றி கற்பனையாக எண்ணிப் பார்ப்போம். தன் பெற்றோருக்கு எரிச்சலூட்டும்படியான சோதனை அவனுக்கு ஏற்படுகிறது. அதாவது அவன் தன் அண்டை வீட்டு நண்பர்கள் நடப்பதுபோன்று தன் பெற்றோரின் கேள்விகளுக்கு ஏறுக்குமாறாக பதிலளிப்பதும் எல்லாம் அறிந்தவன் போல் தன்னைக் காட்டிக்கொள்ளுகிறதுமாக நடக்கத் துவங்கினான். தன் தாய் தகப்பனைப் பற்றித் தன் அண்டைவீட்டு நண்பர்களோடு பேசவும் ஆரம்பித்து, எவ்வளவு தூரம் தான் திறமையானவன் என்பதாக காட்டிக்கொண்டான். பிறகு ஒரு நாள் அவனுடைய நண்பர்கள் ஒரு இரகசிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அது அவர்கள் தங்களுடைய வீடுகளில் ஏற்படும் சூழலை எவ்வளவு திறமையாக கையாளுகிறார்கள் என்பதைப் பற்றித் தங்களைத் தாங்களே பெருமை பாராட்டிக்கொள்ளுவதற்கான கூட்டம். அந்த நாளில், அவர்களுடைய கூட்டத்தில் ஒருவர் வரவில்லை. பிறகு, அது ஐசெக் என்பதை எண்ணி அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அந்த கூட்டத்திலிருந்த சிலர், “ஐசெக்கிற்கு என்ன நடந்ததென்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டார்கள். “இல்லை. அவனுக்கு என்ன ஆயிற்று?” இக்கேள்விக்கான பதில் இப்படியிருந்தது, “அவனுடைய தாய் தகப்பனார் அவனை மூப்பர்களிடம் கொண்டு சென்றார்கள். இப்போது, அவன் கற்குவியலுக்கு அடியில் செத்துக் கிடக்கிறான்.” அதைக் கேட்டவுடன் அவர்கள் நடுவில் காணப்பட்ட கேளிச் சிரிப்பு குறைய ஆரம்பித்தது. தங்களைத் தாங்களே பெருமை பாராட்டிக்கொள்ளுவது நின்றது. அந்த கூட்டத்திலிருந்து ஒவ்வொருவராகப் பிரிந்தார்கள். பேரச்சமும் திகிலும் கொண்டவர்களாக அவரவர் வீட்டிற்குச் சென்றார்கள். இல்லாவிட்டால், அவர்களும் அதே குற்றத்திற்குள்ளாக்கப்பட்டு, அதே தண்டனைக்குட்படுத்தப்பட்டிருப்பார்கள். அவர்கள் நடுவில் தீமை பரவாமல் கட்டுப்படுத்தப்படுவதற்காக மட்டும் ஆண்டவர் இந்தக் கட்டளையைத் தரவில்லை. அவர்களுடைய இருதயத்தில் பயம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இதை கட்டளையிட்டிருக்கிறார். இதுவே பேரச்சத்தினாலும் பயங்கரத்தினாலும் உண்டாகிற பயம்.
புதிய ஏற்பாட்டு சான்றுகள்
சிலர் சொல்லுவார்கள், “அதெல்லாம் நிழலாட்டமான பழைய ஏற்பாட்டின் சூழ்நிலைக்குரியது. ஆனால் புதிய ஏற்பாடு புதிய சூழலுக்குரியது.” நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை கவனியுங்கள்: “என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 12:4-5)
இயேசு இங்கு கட்டளையிடும் பயம் எத்தகையது? இது பயபக்திக்கும் மரியாதைக்குமான பயமல்ல. மாறாக, இது பேரச்சத்தினாலும் பயங்கரத்தினாலும் உண்டாகிற பயம். கடவுளுடைய நித்திய தண்டனையினுடைய ஆணையோடு தொடர்புபடுத்தி உங்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கத் துவங்குவீர்களானால், அது உங்களில் பயங்கரமான அச்சத்தையே ஏற்படுத்தும். அத்தகைய கேடான செய்கைகளை கண்டிக்கின்ற கடவுள், நம்மை நித்திய நரகத்தில் தள்ளக்கூடிய வல்லமைமிக்கவர். இத்தகைய பயத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறதோடு மட்டுமில்லாமல், அந்த பயமிருக்க வேண்டுமென்றும் கட்டளையுமிடுகிறார்.
இதனோடு தொடர்புடைய இன்னொரு வேதப்பகுதி ரோமர் 11:20-21. இங்கு பவுல் இஸ்ரவேலரைப் பற்றிய ஒரு உண்மையைக் குறிப்பிடுகிறார். அதாவது, சரீரப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாக, கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் கீழ் வந்திருக்கிறார்கள். அவர் சொல்லுகிறார், “அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன”. தொடர்ந்து அவர் சொல்லுகிறார், சுபாவ கிளைகளை அவைகளினுடைய அவிசுவாசத்தினாலே கர்த்தர் முறித்துப் போட்டிருப்பதினால், கர்த்தருடைய மீட்பின் சிறப்புரிமைகளில் ஒட்டவைக்கப்பட்ட கிளைகளாகிய புறஜாதியாருக்கு இருக்கிற கடமைப் பொறுப்பு என்னவென்றால் “மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு” என்பதே.
எபிரெயர் நிருபத்தை எழுதியவர், தங்களுடைய விசுவாசத்தில் தடுமாற ஆரம்பித்த சிலருக்கு, கிறிஸ்துவைப் பற்றும் பூரண அறிவடையும்படி முன்னேறுங்கள் என்றும், கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலை தடுமாறாமல் இருக்கும்படியும் புத்தி சொல்லுகிறார். அவர்களில் சிலர் பிரகாசிப்பிக்கப்பட்டவர்களும், தேவனுடைய நல்வார்த்தைகளையும் இனிவரும் உலகத்தின் பெலன்களை ருசிபார்த்தவர்களுமாய் இருந்தும், கிறிஸ்துவோடும் புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களோடுமுள்ள இணைப்பை மறுதலிக்கும்படியான சோதனைக்குள்ளாகி, யூதமத சடங்குமுறைகளுக்கும் பழைய நிழலாட்டமான வழிமுறைகளுக்கும் திரும்பியிருக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு அவர் சொல்லிய புத்திமதியில் ஒன்று, “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” (எபிரெயர் 4:1). இங்குக் குறிப்பிடப்படுகிற பயம் எது? இது விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் தொடர்ந்து சென்று சுவிசேஷத்தின் முழுமையான இளைப்பாறுதலில் பிரவேசிப்பதிலிருந்து விழுந்துபோய்விடுவோமோ என்ற எண்ணத்தினால் உண்டாகிற திகிலும் பயமும். அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க முடியாமல் போவது, அவர்கள் கடவுளுடைய கண்டனத்திற்குரியவர்கள் என்பதையே காட்டுகிறது.
10வது அதிகாரத்தில் இதை மேலும் விரிவாக விளக்குகிறார்,
“சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே.”
அவர் சொல்லுகிறதைக் கேட்டீர்களா? கிறிஸ்துவையும் அவரில் மட்டுமே காணப்படும் மீட்பின் தனித்துவமான ஆசீர்வாதங்களையும் மறுதலிக்கிற ஒருவன், தவிர்க்க முடியாத கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு தன்னை உட்படுத்திக்கொள்ளுகிறான். பிறகு, விழுந்து போகிறவர்களுக்கான நியாயத்தீர்ப்பு தனக்கு வருமென்ற பயம் அவனைக் கவ்விக்கொள்ளுகிறது. ஏனென்றால், ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுவது பயங்கரமானது. கடவுளுடைய நியாயத்தீர்ப்பிற்கு தான் உரியவன் என்று நம்புகிறவனாக இருந்தும், அதைப் பற்றி பயப்படாமல் இருந்தானானால், அவன் வேதம் வெளிப்படுத்துகிற கடவுளுடைய பண்புகளைப் பற்றியும் அவருடைய நியாயத்தீர்ப்பின் பயங்கரத்தைப் பற்றியும் முற்றிலுமாக உணராதிருக்கிறான் என்பதைத்தான் காட்டுகிறான்.
கடவுளிடத்தில் பேரச்சமும் திகிலும் கொள்ள வேண்டியதின் கட்டாயம்
தேவபயத்தின் இந்த அம்சம், அதாவது, கடவுளிடத்தில் பேரச்சமும் திகிலும் கொள்ளுவது சரியானதுதானா? இக்கேள்விக்கு வேதம் நேரடியாக “ஆம்” என்று பதிலளிக்கிறது. ஆனால் இரண்டாவது கேள்வி என்னவென்றால், இந்த பேரச்சத்திற்கும் திகிலுக்கும் வேராக இருப்பது எது? எதிர்மறையாகச் சொல்லுவதானால், இந்த பயம் மனந்திரும்பாத மனிதர்களிலும் காணப்படுவதினால், இது கடவுளுடைய கிருபையின் செயலினுடைய வெளிப்பாடாக நாம் பார்க்க முடியாது. ஆனால் நேர்மறையாக சொல்லுவதானால், கடவுளுடைய பண்புகளான பரிசுத்தத்தையும் நீதியையும் பற்றி ஓரளவாவது அறிந்திருப்பதுதான் இப்பயத்திற்கு வேராக இருக்கிறது. கடவுள் பரிசுத்தராக இருப்பதினால், அவர் எல்லாப் பாவங்களையும் உளப்பூர்வமாக எதிர்க்கிறார். கடவுள் நீதியுள்ளவராக இருப்பதினால், அவர் எல்லா பாவங்களையும் தண்டிக்க வேண்டும். இது கடவுள் எப்படியான பரிசுத்தமும் நீதியுமுள்ளவருமான கடவுள் என்பதை நமக்கு அடையாளங் காட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக, அவர் பாவத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதும் இந்த பேரச்சத்திற்கும் திகிலுக்கும் வேராகக் காட்டப்படுகிறது. கடவுளுடைய பரிசுத்தத் தன்மையை ஆதாம் இந்தவிதமாகவே அறிந்திருந்தார். அந்தப் பரிசுத்தத் தன்மையின் சாயலே தனக்குள்ளாக வைக்கப்பட்டிருந்ததையும், தன்னுடைய பாவத்தின் விளைவாக அது கெடுக்கப்பட்டதையும் உணர்ந்தார். இந்தவிதமாக கடவுளுடைய பரிசுத்தமும் நீதியுமான தன்மையை ஆதாம் அறிந்திருந்தார். அதுவே, கடவுள் தன்னை அழைக்கும் குரலைக் கேட்டவுடன் கடவுளிடமிருந்து தன்னை ஒளித்துக்கொள்ள முயற்சிக்கக் காரணமாக இருந்தது. கடவுளுடைய குரல் ஆதாமுக்கு பயத்தையும் திகிலையும் ஏற்படுத்தியது.
வேதத்தை நாம் தொடர்ந்து வாசிக்கிறபோது, சில சொற்றொடரை நாம் பார்க்கிறோம். அதாவது, “அவர் தமது கோபத்தின் உக்கிரத்தை” (ஏசாயா 42:25) மற்றும் என் “சினத்தை” உன்மேல் ஊற்றுவேன் (எசேக்கியேல் 21:31) போன்றவை. மேலும் அத்தகைய உணர்ச்சி வெளிப்பாடுகளை “உக்கிரகோபாக்கினை” (ரோமர் 2:8) என்றும், நம்முடைய கர்த்தராகிய இயேசு வருகிறபோது “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்” (2 தெசலோனிக்கேயர் 1:7-8) என்றும் வாசிக்கிறோம். இந்த உணர்ச்சி வெளிப்பாடுகளின் வாக்கியங்களெல்லாம் நமக்கு எதைச் சுட்டிக்காட்டுகிறது? சர்வவல்லமையுள்ளவர் தம்முடைய பழிவாங்கும் பட்டயத்தை பிரயோகிக்கிறபோதும், நித்தியமான ஆண்டவர் அநித்தியமான சிருஷ்டிகளை தன்னுடைய கரத்தில் நியாயத்தீர்ப்புக்காக எடுக்கிறபோது அந்த சிருஷ்டிகள் பயத்தினாலும் திகிலினாலும் நடுங்க வேண்டும் என்ற வேதக் கோட்பாட்டையே நமக்குக் சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றல், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்கும்” (எபிரெயர் 10:31) என்பது உண்மை. கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் பாதையில் தான் இருப்பதை அறிந்தும் தேவபயத்தின் இந்த அம்சத்தை ஒருவன் கொண்டிராமல் இருந்தால், அவன் கடவுளுடைய பண்புகளைப் பற்றி அறியாமையிலோ அல்லது ஆவிக்குரிய முட்டாளாகவோ இருந்தால் மட்டுமே முடியும். கடவுளுடைய அந்த கோபத்தின் நாள் வருகிறபோது, உயிரோடிருக்கிற மனிதர்கள் அதாவது எல்லா நிலைகளிலும், இடங்களிலும் இருக்கிற மனிதர்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி “நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்” (வெளிப்படுத்தின விசேஷம் 6:16) என்று கதறுவார்கள்.
ஒரு மனிதன் ரயில் தண்டவாளத்தின் நடுவில் போய்க் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது அவனுக்கு எதிராக 200 அடி தூரத்தில் ஒரு ரயில் 110 கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. இருந்தும் அந்த நபர் தொடர்ந்து ரயிலை நோக்கி தண்டவாளத்தின் நடுவில் பாட்டுப்பாடிக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தால் அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவனைப் பற்றி இரண்டு முடிவுக்குத்தான் வருவோம். ஒன்று தனக்கு ஏற்படயிருக்கிற அழிவைப்பற்றி அறிந்துகொள்ள முடியாதபடிக்கு அவன் பார்வையில்லாதவனும் காது கேளாதவனுமாய் இருக்க வேண்டும், அல்லது என்ன நடக்கிறது என்பதை காணக்கூடிய விதத்தில் கண்ணும் காதும் செயல்படுகிறவனாக இருந்தால், அவன் பைத்தியம் பிடித்தவனாக இருக்க வேண்டும். எது காரணமாக இருந்தாலும், அப்படியொரு வேகத்தில் வருகிற ரயில் அவனுடைய உடலுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தை எந்தவிதத்திலும் விவரித்துச் சொல்ல முடியாது. என்ன நடக்கப் போகிறது என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. ஆனால் தனக்கு நடக்கவிருப்பதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளுவதற்கான தகுந்த நடவடிக்கையை அவன் எடுக்காமல் இருந்தால் எதையும் உணர்ந்துகொள்ள முடியாதவனாகவோ அல்லது பைத்தியம் பிடித்தவனாகவோதான் அவன் இருக்கவேண்டும். அவன் உண்மை நிலையை உணராதிருக்கிறான். ஆகவேதான் அவனுக்கு பயமில்லை. இதேவகையில்தான், எந்தவொரு மனமாற்றமடையாத நபரும் கடவுளைப் பற்றிய பயமும் திகிலும் கொண்டிராமல் இருப்பது, அவன் ஆவிக்குரிய குருடனாகவோ அல்லது ஆவிக்குரிய பைத்தியம் கொண்டவனாகவோதான் இருக்கவேண்டும். அவன் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் பண்புகளைப் பற்றி குருடனாக இருக்கிறான் அல்லது அந்த பண்புகளைப் பற்றி அறிந்திருந்தும் கடவுளுடைய உக்கிரக்கோபத்தையும் அந்த கோபம் நியாயத்தீர்ப்பில் தன் மீது காட்டப்படப் போகிறதையும் அறியாதிருக்கிற ஆவிக்குரிய பைத்தியம் பிடித்தவனாக இருக்கிறான்.
பரலோகத்தின் தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாவிகளுக்கு அருளப்படுகிற அவருடைய இரட்சிப்பிற்கும் அந்நியர்களாக இருந்து இவைகளை நீங்கள் வாசித்துக் கொண்டிருகிறீர்களா? அப்படியானால், கடவுளைப் பற்றிய பயத்தின் இந்த அம்சத்தை உங்களுடைய எண்ணத்திலிருந்து விரட்டித் தள்ளுவது மிகவும் கடினமானது என்பதை நீங்கள் அறிய வேண்டும். எந்த மனிதனும் பயத்தோடும் திகிலோடும் வாழ விரும்புகிறதில்லை. ஆதாமின் வாரிசுகளான எந்தவொரு மனிதனும், கடவுளுடைய கிருபையின் செயல் தன்னுடைய இருதயத்தில் துவங்குவதற்கு முன்பாக, தானாக அந்த பயத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலுகிறான். அதற்காக அவன் என்ன செய்கிறான்? இதெல்லாம் பெரிய விஷயமல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறான். அத்தோடு, கடவுளுடைய பண்புகளைப் பற்றியும் வேறுவிதமாக சிந்திக்கப் பார்க்கிறான். கடவுள் தம்முடைய படைப்புகளை மிகவும் நேசிக்கிறார், ஆகவே அவர் அவைகளுக்கு நித்தியகாலமாக அழிவைத் தருவார் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று தன்னைத்தானே அவன் சமாதானப்படுத்திக் கொள்ளுகிறான். அத்தகைய மனிதனைப் பற்றித்தான் சங்கீதம் 50 விவரிக்கிறது. 16-20 வசனங்களில், ஒரு மனிதன் தன்னைத்தான் மெய்யான விசுவாசியாக அறிவித்துக்கொள்ளுகிறான். ஆனால் அவனுடைய வாழ்க்கை முறை அவன் தன்னைப் பற்றிச் சொல்லுவதற்கு நேர்எதிர்மாறாக இருக்கிறது என்று ஆசாப் அதில் விவரிக்கிறார். அப்படியானவர்களுக்கு ஆண்டவர் சொல்கிறார்,
“இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.” (சங்கீதம் 50:21-22)
தாராளவாத கோட்பாடுகளைப் பின்பற்றுகிற ஒரு சபையின் போதகர், வரப்போகிற வாழ்வைப் பற்றிப் பிரசங்கித்ததை நான் ஒரு முறை கேட்டிருக்கிறேன். அதில் ஒரு இடத்தில் அவர் சொன்னார், “ஒரு விஷயத்தை நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். என்னவென்றால், கடவுள் தம்முடைய படைப்புயிர்களில் ஒருவரையும் நரகத்திற்கு அனுப்பமாட்டார். இதை நான் அறிவேன்.” இந்தவிதமான அனுமானத்திற்கு ஒருவன் வரவேண்டுமானால் வேதத்திலுள்ள சில வசனங்களை திரித்துப் போதித்தாலொழிய வேறுவிதத்தில் அப்படிச் சொல்ல முடியாது. தன்னுடைய இந்தக் கூற்றை நிரூபிக்க வேதத்திலிருந்து ஒரு வசனத்தைக் கூட அந்த மனிதன் காட்டவில்லை. அந்த மனிதன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் ரயில் தண்டவாளத்தில் நின்றுகொண்டான், எதிரே ரயில் வருகிறது, நிச்சயமாக அது தன்னை அழித்துவிடும் என்பதையும் அவன் அறிவான், இருந்தும் தன்னை அடித்து நொறுக்குமளவுக்கு வலிமையான ரயில் அது அல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தான். அவன் தனக்கு மட்டுமல்ல, அந்த இடத்தில் அதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கும் சொல்லுகிறான், முன்னால் ரயில் வருகிறதென்பது வெறும் மாயை என்று. கடவுளுடைய பண்புகளைப் பற்றி வேறுவிதமாக சிந்திக்க முயற்சிக்கிற எல்லோருக்குள்ளும் இந்த எண்ணமே இருக்கிறது. கடவுள் பூரண பரிசுத்தராகவும் எப்பக்கமும் வளைந்துக்கொடுக்காத நீதியுமுள்ளவராக இருக்கும்வரையும், கடவுளுடைய பண்புகளின் இந்த அம்சங்கள் நிச்சயமாக நியாயத்தீர்ப்பையும் தண்டனையையுமே கோருமென்று அவர்களுக்கே தெரியும். இந்தவிதமாக சிந்திப்பதை அவர்களால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
வேதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத அவிசுவாசிகள்கூட இந்தவிதமான பயத்தையும் திகிலையும் பற்றி அறிந்திருக்கிறார்கள். ரோமர் 1:32ல் வாசிக்கிறோம், “தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பைப்” பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ரோமர் 2:15ல் வாசிக்கிறோம், அவர்களுடைய சிந்தனைகளே அவர்களை குற்றப்படுத்துகிறது. இருந்தும் அவர்கள் தங்களுக்குள்ளாகவே சொல்லிக்கொள்ளுகிறார்கள், அந்த நியாயத்தீர்ப்பின் ரயில் இன்னும் வரவில்லை, அதெல்லாம் வெறும் மாயையே என்று. நியாயத்தீர்ப்பைக் கோருகிற கடவுளுடைய பண்புகளின் இந்த அம்சங்களை அவர்கள் மறுதலிக்க முயலுகிறார்கள் அல்லது இத்தகைய சிந்தனைகளை தங்களுடைய எண்ணங்களிலிருந்து விலக்குவதற்கும் தங்களுடைய உணர்வுகளை முற்றிலுமாக அடக்குவதற்குமான வழிகளில் ஈடுபடுகிறார்கள்.
இதைப் பற்றி நாம் மேலும் ஆராய்ந்து பார்ப்போம். தொழிற்நுட்ப வளர்ச்சியின் சாதனங்கள் மனிதகுலத்திற்கு அநேக பயன்களைத் தந்திருக்கிறது. அவைகளின் மூலமாக பல தகவல்கள் கண்டம் விட்டு கண்டம் ஒளியின் வேகத்தில் பரிமாறப்படுகிறது. இந்த தலைமுறையில், சுவிசேஷம் பரவுவதற்கும், தேவனுடைய வார்த்தையில் வளருவதற்கும் இந்த நவீன கண்டுபிடிப்பு சாதனங்கள் எப்படிப் பயன்படுகிறது என்பதைப் பற்றி கிறிஸ்தவர்கள் கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. அநேக சந்தர்ப்பங்களில், இவைகள் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் (உலகத்தின் ஒரு பகுதியிலிருக்கிற தாத்தா பாட்டி, மறுபகுதியில் இருக்கிற தன் பேரப்பிள்ளைகளோடு நேரடியாக அவர்களைப் பார்த்துப் பேசுவதற்கான எளிய சாதனங்கள் இருக்கிறது.), களிப்பையும், மனநிறைவையும், பாதுகாப்பையும், துரித செயல்பாட்டையும் கொண்டு வருகிறது.
இருப்பினும், பொறுப்புடன் சேகரிக்கப்பட்ட சில தகவல்களே மனிதர்களின் எண்ணவோட்டங்களைத் தாங்கிப்பிடித்திருக்கிறதென்பது எதைக் காட்டுகிறதென்றால், அநேக ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், இந்த தொழிற்நுட்ப சாதனங்களுக்கு அடிமைகளாகியிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. இத்தகைய அடிமைத்தனங்களுக்கு காரணமான இருப்பது என்ன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். என்னவென்றால், இந்த உலகத்தின் தேவனானவன், மனிதர்கள் சீக்கிரத்தில் சந்திக்க இருக்கிற வளைந்து கொடுக்காத நீதியும், எரிகிற பரிசுத்தமும் கொண்ட கடவுளுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றிக் கவனத்தோடு சிந்திப்பதிலிருந்து அவர்களை திசைதிருப்புவதற்காகவே இந்த அடிமைத்தனத்தை மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறான். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பமாக இருப்பது உண்மையானால், அத்தகைய பயத்தைப் பற்றிய அறியாமையில் இருப்பதற்கு, கடவுள் யார் என்பதைப் பற்றி மனிதர்கள் கவனத்தோடு சிந்திப்பதிலிருந்து அவர்களைத் தடை செய்வதைத் தவிர வேறு எதுவும் சிறந்த வழியாக இருக்க முடியாது.
நம்முடைய நாட்டிலும் உலகத்தின் ஏனைய பகுதிகளிலும் பொதுவான ஒரு பொழுதுபோக்கு கருவியாக எளிதில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் தொலைக்காட்சியை இடைவிடாமல் பார்ப்பதற்கும், பலவிதமான எலக்டிரானிக்ஸ் பொருட்களைப் பயன்படுத்தித் தொடர்ச்சியாக பலவிதமான சத்தங்களினால் தங்களுடைய காதுகளையும் பலவிதமான படங்களினால் தங்களுடைய கண்களையும் நிரப்புவதுவதற்கும், எலக்டிரானிக்ஸ் கருவிகளாகிய ஐபாட், ஸ்மார்ட்போன் மற்றும் இணைய சமூக தொலைதொடர்புகளைப் பயன்படுத்துவதற்கு அடிமைகளாக இருப்பதற்கும் எது காரணமாயிருக்கிறது? இந்தவிதமான கருவிகளைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில் இருக்கிற குறைபாடுகளாக அநேக காரணங்களைச் சுட்டிக்காட்டினாலும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக நான் சொல்லுகிற ஒரு காரணம் என்னவென்றால்: மனிதர்கள் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் உண்மையை எதிர்கொள்வதை மிகுந்த ஆர்வத்துடன் தவிர்க்கிறார்கள் என்பதுதான். தங்களுடைய சிந்தனைகளை ஐந்து நிமிடங்களுக்கு எந்தவிதமான தடையுமில்லாமல் கட்டுப்படுத்தி தனித்திருப்பதை மனிதர்கள் விரும்புவதில்லை. அவர்களுடைய மனச்சாட்சி முழுமையாக உணர்ச்சியற்ற நிலையில் இருந்தாலொழிய, அமைதியான சூழல் நியாயந்தீர்ப்பதற்கு வேகமாக வந்துக் கொண்டிருக்கிற கடவுளுடைய வாகனத்தின் சக்கரம் சுழளுகிற சத்தத்தை அதிகரிக்க செய்து அவர்களில் பயத்தை உண்டாக்கும். அப்போது ரயில் தண்டவாளத்தில் இருப்பதை அவர்கள் உணர்வார்கள். கடவுளை நம்புகிறதில்லை என்று அவர்கள் சொல்லலாம். இருந்தபோதும் கடவுள் பரிசுத்தமும் நீதியுமான பண்புகளைக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்கள் கொஞ்சமாவது தங்களில் கொண்டிருக்கிறார்கள். அதனிமித்தமாக அவர்கள் நியாயத்தீர்ப்பின் பாதையில் இருக்கிறோம் என்பதையும் அறிகிறார்கள் (ரோமர் 1:32 – இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்). “என்னுடைய சிந்தனையில் எப்போதும் எதையாவது நிரப்பிக்கொண்டிருந்தால் மட்டுமே, நியாயத்தீர்ப்பு நடக்கிறவரை நான் எந்த வேதனையும் கொள்ளாமல் இருக்க முடியும்” என்று அவர்கள் தங்களுடைய செயலுக்கான காரணத்தைச் சொல்லுகிறார்கள். ஆகவே அவர்கள் அதிகமான சத்தத்திற்கும் காட்சிகளுக்கும் தங்களை உட்படுத்தி மனதை நிரப்பும் பலவிதமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
கடவுளுடைய பிள்ளைகளிடத்தில் நியாயமாகக் காணப்பட வேண்டிய பேரச்சமும் திகிலும்
அடுத்த கேள்வி, இந்த விஷயத்தில் கடவுளுடைய பிள்ளைகளின் நிலையைப் பற்றியது. அவர்கள் தாங்கள் பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை அறிந்திருக்கிறவர்கள், தன்னுடைய பாவங்களுக்கான நியாயத்தீர்ப்பின் ரயில் தன்னுடைய ஆண்டவரை நொறுக்கியிருப்பதினால் தன்னை அது ஒருபோதும் நொறுக்காது என்பதை அறிந்திருக்கிறவர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் தனக்கு எந்தவிதமான கண்டனமும் இல்லை என்று அறிந்திருக்கிற கடவுளுடைய பிள்ளையும் தேவபயத்தின் இந்த அம்சத்தை அனுபவிக்க வேண்டுமா? அவன் இந்தவிதமான பேரச்சத்தையும் திகிலையும் பற்றித் தெரிந்திருக்க வேண்டுமா? அப்போஸ்தலனாகிய யோவான் இவ்விதமாக சொல்லவில்லையா, “அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” (1 யோவான் 4:18) என்று?
கடவுளுடைய உண்மையான பிள்ளைகளுடைய இருதயத்தில் எந்தவிதமான பயமும் திகிலும் இருப்பதை புறந்தள்ளுவது இவ்வசனத்தின் நோக்கமல்ல. மாறாக, இயேசு கிறிஸ்துவுக்குள் கடவுளுடைய அன்பை நாம் கட்டியணைத்துக் கொண்டால், கடவுளோடு நமக்குள்ள உறவின் ஒட்டுமொத்தமான சூழல் கடவுள் மீது பயமும் திகிலும் கொண்டதாக இருக்காது என்பதைத்தான் இவ்வசனம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. எனினும், இந்த ஒரு வசனம் வேதத்திலுள்ள ஏனைய பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளதை இல்லாமலாக்குவதற்காகவோ, கடவுளுடைய மெய்யான பிள்ளையினுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் பயமும் திகிலும் இருக்கிறது என்ற தெளிவான போதனையை இல்லாமலாக்குவதற்கோ கொடுக்கப்படவில்லை.
ஆதாம் பாவம் செய்வதற்கு முன்னும், அவனை பாவம் செய்வதிலிருந்து தடுத்து வைத்திருப்பதற்கு தேவபயத்தின் இந்த அம்சமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. கர்த்தர் தடை செய்யப்பட்ட மரத்தைப் பற்றிய கட்டளையைக் கொடுத்தபோது, அதை அவர் ஒரு பயமுறுத்துகிற வடிவில்தான் சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போகிறபோது கடவுளுடைய தண்டனையைப் பற்றிய பயத்தை அது அவனில் ஏற்படுத்தியிருக்கும். ஆண்டவர் சொன்னார், “தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” (ஆதியாகமம் 2:16-17). வெறுமனே கட்டளையைக் கொடுத்ததோடு கர்த்தர் தம்முடைய வார்த்தைகளை நிறுத்தியிருந்திருக்க முடியும். ஆனால் அக்கட்டளையைச் செயல்படுத்துவதை வலியுறுத்தவும், அதற்குக் கீழ்ப்படிவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தவும், அவர் என்ன செய்தார்? அதில் ஒரு பயமுறுத்தலை வைத்தார். அது எப்படிப்பட்டதென்றால், கர்த்தர் ஆதாமை நோக்கி, “அந்த மரத்திலுள்ள கனியை சாப்பிட நீ நினைத்தால், ஆதாமே கவனி! அதை நீ சாப்பிடும் நாளில், நிச்சயமாக நீ மரணமடைவாய்” என்றார். அதன் சாராம்சம், என்ன தெரியுமா? கர்த்தர் சொல்லுகிறார், “ஆதாமே, நான் நியாயத்தீர்ப்பின் கர்த்தர் என்ற பயம் உன்னில் இருக்குமானால், அதை சாப்பிடாதே, இல்லாவிட்டால், என்னுடைய நியாயத்தீர்ப்பின் ரயில் தண்டவாளத்தில் உன்னை நீயே நிறுத்திக்கொள்ளுகிறாய்” என்பதுதான்.
கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் பயத்தையே, ஆதாமின் வீழ்ச்சிக்கு முந்தைய நிலையிலும் தம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு ஊக்கப்படுத்தும்படியாகவும் ஆண்டவர் ஏற்படுத்தியிருப்பாரானால், மீட்கப்பட்ட நிலையில் வாழ்கிற நமக்கு, அதாவது இன்னும் பூரணமடையாத, நம்மில் எஞ்சியுள்ள சீர்கேட்டை தொடர்ந்து தூண்டக்கூடிய உலகத்தின் சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கிற நமக்கு இது எத்தனை அவசியமானது. நம்மில் தொடர்ந்திருக்கிற பாவம், நம்மில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அது நம்முடைய ஆண்டவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும்படிச் செய்து, கடவுளுடைய சிட்சையினால் பலவிதமான காயங்களை நம்மில் ஏற்படுத்தி நம்மைக் குத்திக் கிழிக்கக் கூடியது. மேலும், கிறிஸ்தவர்களாக தங்களை இனங்காட்டி பாசாங்கு செய்கிறவர்களிடத்தில், விசுவாச துரோகத்தையும் அது வெளிப்படையாக இனங்காட்டும். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில், மெய்யான விசுவாசிகளில் கடவுளுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றிய பயம் இருப்பதைப் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை.
சங்கீதம் 119:120வது வசனத்தை கவனியுங்கள்: “உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.” இந்த நடுக்கம், முன்பு நான் குறிப்பிட்ட, அந்த 9 வயது சிறுவன் தன்னை வெறுக்கிற அண்டை வீட்டு இளைஞனைப் பார்த்தபோது உண்டான அனுபவத்தைப் போன்றது. இது பயபக்தியினால் உண்டான நடுக்கமல்ல. அந்த பயத்தைப் பற்றி வேறு இடங்களில் சங்கீதக்காரன் சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கு கடவுளைப் பற்றியும் அவருடைய பண்புகளைப் பற்றியும் சிந்தித்ததினால் அவருக்கு நடுக்கம் உண்டாகிறது. தெய்வீக வெளிப்பாட்டினால் அவர் இந்த கடவுளைப் பற்றிச் சிந்திக்கிறார். இந்தக் கடவுளுடைய பரிசுத்தம் மற்றும் வல்லமையின் எல்லா மகிமையையும் மாட்சிமையையும் காணவும் அவரை நேசிக்கவும் வந்திருக்கிற அவர், நியாயத்தீர்ப்பிற்காக மனிதர்கள் அவருடைய கரத்தில் இருக்கிறதைப் பற்றி எடுத்துரைக்கிறார். அதைப் பற்றி வெறுமனே சிந்திப்பதே, அவருடைய உடலில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லுகிறார். அவிசுவாசியைவிட, விசுவாசியே கடவுளுடைய பண்புகளைப் பெரிதாகவும் துல்லியமாகவும் அறிந்திருக்கிறான். நியாயத்தீர்ப்போடு தொடர்புடைய நம்மை அச்சுறுத்தும் கடவுளுடைய பண்புகளைப் பற்றி சிந்திக்கிறபோது, கடவுள் உண்மையானவராக இருப்பதினால் அது நடுக்கத்தையே அவருக்கு ஏற்படுத்துகிறது.
இப்போதனையைப் பற்றிய பொதுவான எதிர்வாதமாகிய “இது பழைய ஏற்பாட்டிற்குரியது” என்ற வாதத்தை மறுபடியும் பார்ப்போம். இதைப் பற்றி புதிய ஏற்பாடு நமக்கு வேறொரு பார்வையைத் தருகிறதா? நிச்சயமாக இல்லை. உண்மையில், புதிய ஏற்பாடு இதை மேலும் வலியுறுத்தி செயல்படுத்தச் சொல்லுகிறது. 1 பேதுரு 1:17ல் இது பற்றிய நேரடியான கட்டளையை நாம் வாசிக்கலாம், “அன்றியும் பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்.” பட்சபாதமில்லாமல் நியாயத்தீர்ப்பு செய்கிற கடவுளைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் என்பதை மறக்குமளவுக்கு பொறுப்பற்றதன்மையையும், அதீத தன்னம்பிக்கையையும் உங்களில் இருக்கவிடாதீர்கள். உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உங்களைப் பற்றிய பரிசுத்தமான பயமிருக்கட்டும்; முடக்கிவிடும் பயமல்ல. ஏதோவொருவித ஊகத்தினால் ஏற்படும் பயத்தைக் கொண்டிருந்து தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுகிற விசுவாசிகளிடத்தில் காணப்படுவதே முடக்கிவிடும் பயமாகும். அப்படியானவர்கள், கிறிஸ்துவுக்குள் தாங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைப்பற்றி ஒருபோதும் உறுதி கொள்ளாதவர்கள். இந்தவிதமான முடக்கிவிடும் பயம் கடவுளை மகிமைப்படுத்துவதும் இல்லை, அவருடைய சுவிசேஷத்தின் வாக்குத்தத்தத்தின் நீதியை நிறைவேற்றுவதும் இல்லை.
பேரச்சத்தினால் உண்டாகிற இந்த பயத்தின் அம்சத்தை கடவுளுடைய பிள்ளை தன்னில் கொண்டிருக்க வேண்டுமா? நிச்சயமாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவனில் தேவபயத்தின் பிரதான அம்சமாக இந்த பயம் இருப்பதில்லை. ஆனால் ஞானத்தின் மையப் பகுதியாக இருக்கிற கர்த்தருக்கு பயப்படுதலில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்காமல் இல்லை. (எபிரெயர் 4:1ஐ பாருங்கள் – “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.”)
இந்த பேரச்சம் மற்றும் திகிலின் முக்கியமான தன்மை
இந்தப் போதனையை ஆழ்ந்து சிந்தித்து வருகிற நீங்கள், கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்திற்கும், பரிசுத்த ஆவியானவருடைய மறுபிறப்பின் செயலுக்கும் அந்நியர்களாக இருந்து நீங்கள் இதை செய்கிறீர்களா? கிறிஸ்துவோடுள்ள இரட்சிக்கும் இணைப்பிற்கும் மெய்யான சீடனுக்குமுரிய அறிகுறிகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? அப்படியிருக்குமானால், கடவுளுடைய பயங்கரமான நியாயத்தீர்ப்பைப் பற்றிய பயம் உங்களில் இல்லையா? சங்கீதம் 90:11ல் மோசே ஒரு கேள்வியை எழுப்புகிறார், “உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்?” கடவுள் தம்மைத்தாமே வேதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படித் தன்னை அவர் வெளிப்படுத்துகிற கடவுளாக இருந்தால், ரயில் தண்டவாளத்தில் நிற்கிற மனிதனை நோக்கி ரயில் வந்து கொண்டிருப்பதைப் போன்றுதான் அவருடைய நியாயத்தீர்ப்பு உங்களை நாடி வந்து கொண்டிருக்கிறது. உள்ளான மனதில் நடுக்கமும் பயமுமில்லாமல் இந்த உண்மையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியுமா? கடவுளுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்தித்துப் பார்த்தும், அந்த நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்படக் கூடிய ஒரு வழிமுறையாகிய அவருடைய கிருபைக்கும், சுத்திகரிக்கும் கிறிஸ்துவின் இரத்தத்திற்கும் அந்நியர்களாக தொடர்ந்து இருக்க முடியுமா? நீங்கள் கிறிஸ்தவராகும்படி உங்களை பயமுறுத்துகிறவர்களைப் பார்த்து நீங்கள் ஆத்திரப்படுவீர்களா? ஒருவேளை, ரயில் தண்டவாளத்திலிருக்கிற அந்த மனிதனைப் பார்த்து அங்கிருக்கிற ஒருவர், “ரயில் வந்து கொண்டிருக்கிறது. தண்டவாளத்தைவிட்டு வெளியே வா” என்று உரத்த சத்தமிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். ரயில் தண்டவாளத்தில் இருக்கிறவனை உரத்து சத்தமிட்ட நபர் எதிரில் வரவிருக்கிற அபாயத்தையும், அழிவையும் சுட்டிக்காட்டி அவனை பயமுறுத்த முயற்சிக்கமாட்டாரா? நிச்சயமாக அதைத்தான் செய்வார். கற்பனையாக ஒன்றை சொல்லிப் பயமுறுத்தமாட்டார். அப்பட்டமாக தெரியக்கூடிய உண்மையை, அதாவது ரயில் தண்டவாளத்தைவிட்டு வெளியில் வராவிட்டால் வேகமாக வருகிற ரயில் அந்த மனிதனை நொறுக்கி அவனுடைய உடலைச் சின்னாபின்னமாக்கிவிடும் என்ற உண்மையைச் சொல்லியே பயமுறுத்துவார்.
“வருங்கோபத்திற்கு பறந்தோடிப் போ” என்ற எச்சரிப்பின் வார்த்தையைக் கேட்கிறபோது, நீங்கள் மனந்திரும்ப வேண்டும். நீங்கள் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுகிறவரை ஓயக்கூடாது. கடவுளுடைய கணக்கின்படி, இப்போதிருந்து நியாயத்தீர்ப்பிற்கான நேரம் வரை இருக்கிற காலம் நொடிப்பொழுதைவிடக் குறைவானது. நினையாத நேரத்தில் நீங்கள் மரணமடையலாம். அது சீக்கிரமாகவேகூட நடக்கலாம். உங்களுடைய பாவத்திலிருந்தும், கடவுளுடைய கோபத்திலிருந்தும் நியாயத்தீர்ப்பிலிருந்தும் விலகி ஓடுவதற்கு காரணமான பயத்தை நீங்கள் கொண்டிருக்க ஆண்டவர் தாமே உங்களுக்கு அதை தந்தருளுவாராக. மத்தேயு 3:7ல், யோவான்ஸ்நானன், “வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?” என்று அங்கிருந்த மக்களுக்கு சொல்லியபோது, இந்த பாரத்தையே அவர் தன்னில் கொண்டிருந்தார்.
கடவுளுடைய பிள்ளைகளே, நம்முடைய ஆவிக்குரிய நிலைகளின் அளவைப் பொறுத்து சர்வவல்லவருடைய நியாயத்தீர்ப்பையும், கர்த்தருடைய பயங்கரத்தையும் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்ற தவறான எண்ணத்தில் விழுந்துவிடாதீர்கள். பணிவும், செய்த தவறுக்கு வருந்துவதும், மனத்தாழ்மையுமே வேதப்பூர்வமான தேவபக்தியின் சாராம்சம் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். ஆவியின் இந்தக் கனிகளைக் கொண்டிருக்கிற ஒருவனின் மனநிலை, தன்னிலுள்ள பாவத்தையும் சீர்குலைவையும் சரியாகப் பிரதிபலிக்கிறவண்ணமாக அவன் தன்னில் பயத்தையும் நடுக்கத்தையும் கொண்டிருப்பான். நொறுங்கின இருதயம் என்பதெல்லாம் வெறும் அனுமானந்தான் என்று சொல்லுகிறவர்கள் புதிய ஏற்பாட்டு தெய்வபக்திக்கு அந்நியமானவர்கள். அதேபோல் கடவுளுடைய பரிசுத்தத்தையும் நீதியுள்ள நியாயத்தீர்ப்பையும் முற்றாக நிராகரிக்கிறவர்களும் அதற்கு அந்நியமானவர்களே. ஒட்டுமொத்தமாக, விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் முன்னேறுவதற்கு நம்மை ஊக்கப்படுத்துவதில் பரிசுத்த பயத்தின் பங்கு சிறியதல்ல. பாவம் நம்மை மயக்குகிறதாகவும், கவர்ந்திழுக்கிறதாகவும் இருக்கிறபோது, நம்முடைய இரட்சகரின் மரணமும், அதனோடு தொடர்புடைய ஏனைய கிருபைகளும் நம்முடைய எண்ணத்திலும் இருதயத்திலும் மங்கியநிலையில் இருக்கிறபோது, கடவுள் தம்முடைய பிள்ளைகளை எழுப்பிவிடுவதற்காக பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த பயத்தைத்தான். அனைவரும் அறிந்திருக்கிற ஒரு எச்சரிப்பு, “பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6:23) என்பது. இது விசுவாசிகளுக்காக எழுதப்பட்டது. ரோமிலுள்ள திருச்சபையின் பரிசுத்தவான்களுக்கு எழுதப்பட்டது. ரோமிலுள்ள அந்த விசுவாசிகளை பவுல் “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்” (ரோமர் 8:13) என்ற இந்த வாக்கியத்தை எச்சரிப்பாக சொல்லித்தான், தொடர்ச்சியாக அவர்கள் பாவத்தை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கடைசியாக, இந்த பயம் நம்மை ஊக்கப்படுத்துவதற்காக மட்டும் கொடுக்கப்படாமல் மற்றவர்களைப் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்க்கும்படியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 கொரிந்தியர் 5:10-11 வசனங்களில் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார், “ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்”. ரயில் வந்து கொண்டிருக்கிற தண்டவாளத்தில் ஒருவன் நின்று கொண்டிருப்பதை நீங்கள் கண்டால், அந்த ரயில் என்னை இடிக்கப் போகிறதில்லை என்று சொல்லி நீங்கள் சும்மா இருந்துவிடுவீர்களா? அந்த ரயில் அவனை இடித்து நொறுக்கினால் என்ன நடக்குமோ என்று நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதே உங்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தி, அந்த மனிதனை ரயில் தண்டவாளத்திலிருந்து வெளியேறச் செய்வதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள். அதுபோலவே, தன்னை நோக்கி வேகமாக வந்த ரயிலிலிருந்து மீட்கப்பட்ட கடவுளின் பிள்ளை, தான் எதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை அறிந்திருப்பதினால், கடவுளுடைய கோபத்தின் ரயில் மற்றவர்களை நெருங்கி வருவதைக் கண்டு அவன் நடுக்கம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஆகவே, கர்த்தருடைய பயங்கரம் மற்றவர்கள் வருங்கோபத்திற்கு தப்பியோடும்படி அவர்களை வற்புறுத்த நம்மை ஊக்குவிக்கிறது. யூதா சொல்லுகிறார், “அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.” (யூதா 22, 23)
நம்முடைய இருதயத்திலும் எண்ணத்திலும் கர்த்தரைப் பற்றிய பயத்தின் இந்த அம்சம் நம்மில் அதிகரிக்க ஆண்டவர்தாமே அதை தந்தருள்வாராக. அதற்கேற்ற தாக்கம் நம்மில் இருப்பதாக. இந்த பேரச்சமும் திகிலும் மட்டும் கிருபையை பெற்றிருப்பதன் அடையாளமல்ல. பேலிக்ஸைப் போல் நடுக்கம் கொண்டும், குற்றத்தை உணர்ந்து வருந்தாத நிலையில் நீங்கள் இருக்கலாம் (அப்போஸ்தலர் 24:25 – “அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்”). ஆனால் இந்த பயம் இல்லாத இடத்தில் இரட்சிக்கும் கிருபை இருப்பதென்பது சந்தேகமே. ஏனென்றால், கிருபை கடவுளைப் பற்றிய அறிவை நமக்குத் தரும். அந்த கடவுள் தம்முடைய நியாயத்தீர்ப்பில் பயங்கரமானவராயிருக்கிறார்.
பேரச்சத்தினால் உண்டாகிற இந்த பயத்தைப் பற்றிய சிந்தனையை நாம் முடிப்பதற்கு முன்பாக, ஜோன் கல்வினினுடைய வார்த்தைகளை நாம் சற்று கவனிப்போம்:
“தெய்வபக்தியுள்ள இருதயம், தனக்கு பிடித்தவிதமான கடவுளைப் பற்றி கனவு கண்டுகொண்டிருக்காது. மாறாக, அது ஒரே மெய்யான கடவுளைப் பற்றி மட்டுமே சிந்திக்கும். மற்றும் அது தனக்குப் பிடித்தமான எல்லாவற்றையும் அவருடன் இணைத்துக்கொள்ளாது. மாறாக, அவர் தாமே வெளிப்படுத்தியிருப்பதில் மட்டுமே திருப்திப்பட்டுக்கொள்ளும். மேலும், அது உச்சக்கட்ட தீவிரத்தை எப்போதும் காட்டும். அவருடைய சித்தத்திற்கு மாறாக கண்டபடி அலைந்து திரிகிறதாக இருக்காது. அவரை நீதியுள்ள நியாயாதிபதியாகவும், துன்மார்க்கத்தை கடுமையாக தண்டிக்கிறவராகவும் அது பார்ப்பதினால், அவருடைய நியாயாசனத்தின் கூர்ந்த பார்வையையும், அவருடைய கோபத்தை தூண்டுவதற்கு காரணமாக இருப்பவற்றையும் அடக்கி ஒடுக்குகிறதாக இருக்கும். அல்லாமலும், பாவம் செய்வதிலிருந்து தன்னைத்தான் அடக்கிக்கொண்டு, வெறுமனே தண்டனையினுடைய பயத்தின் காரணமாக மட்டுமல்ல, மாறாக, கடவுளை தன் பிதாவாக நேசிப்பதினாலும் மதிப்பதினாலும், அவரை கர்த்தராகவும் தொழுது சேவிக்கும்.”
பெரும் மதிப்பினாலும் பயபக்தியினால் உண்டாகிற பயம்
தேவபயத்தின் முதல் அம்சமாகிய பேரச்சமும் திகிலுமாகிய பயத்தை நிராகரிக்காமல் அல்லது அதைக் குறைத்து மதிப்பிட்டுவிடாமல் இருந்தபோதிலும், விசுவாசிகளைப் பொறுத்தளவில், தேவபயத்தின் இரண்டாவது அம்சமே பரிசுத்த வேதாகமத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. வேதம் “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று சொல்லுகிறபோது, இதில் பேரச்சத்தினாலும் திகிலினாலும் உண்டாகிற பயத்தைப் பற்றி அதிகமாக வலியுறுத்தவில்லை. மாறாக, மதிப்பும், மரியாதையும், பயபக்தியினிமத்தமாக வருகிற பயத்தைப் பற்றித்தான் அதிகமாக சொல்லுகிறது. இந்த பயத்தைப் பற்றி கடவுள் சொல்லுகிறார், இது புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமாக மனிதர்களின் இருதயத்தில் கர்த்தர் தாமே வைக்கிறார். அது அவர்களை தம்முடைய வழிகளில் நடக்கவும், தம்முடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவும் செய்கிறது. (எரேமியா 32:39-41)
பழைய ஏற்பாட்டு உதாரணங்கள்
தேவபயத்தின் இந்த அம்சம், அதாவது பயபக்தியும் மரியாதையுமான இந்த பயம் ஒரு மனிதனில் இருப்பதற்கு அவனில் காணப்பட வேண்டியது என்ன? வேதத்திலுள்ள சில உதாரணங்களைக் கொண்டு தேவபயத்தின் இந்த இரண்டாவது அம்சத்தைப் பற்றி சிந்திப்போம். இதற்கு ஆரம்பமாக, பழைய ஏற்பாட்டின் சில உதாரணங்களைக் கவனிப்போம்.
யாக்கோபு. ஆதியாகமம் 28:12-22ல், யாக்கோபுவின் கனவைப் பற்றிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம். அவருடைய கனவில், அவர் ஒரு ஏணியைப் பார்க்கிறார், அதில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருக்கிறார்கள். அந்த அசாதாரண தரிசனத்தின் இடையில், உடன்படிக்கையின் தேவனாகிய யேகோவாவின் குரலை யாக்கோபு கேட்கிறார். அவர் யாக்கோபோடு தம்முடைய உடன்படிக்கையைப் புதிப்பிப்பதற்காக வந்திருக்கிறார். கனவிலிருந்து அவர் எழுந்தபோது, தான் கண்ட கனவிற்கு ஏற்ப சில காரியங்களைச் செய்யத் துவங்குகிறார். சில உறுதியான முடிவுக்கு அவர் வருகிறார்.
அவருடைய முதலாவது முடிவை 16 வது வசனத்தில் நாம் பார்க்கலாம், “யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.” அவர் சொல்லுவதன் சாராம்சம் என்னவென்றால், “நான் இந்த வெட்டவெளியில் வந்து தங்கினேன். கடவுள் இங்கு இருக்கிறார் என்பதைப் பற்றிய எந்த எண்ணமும் எனக்கு இருக்கவில்லை, அது என்னுடைய தவறு. கர்த்தர் தாமே இந்த இடத்தில் இருக்கிறார். அதை நான்தான் உணராதிருந்திருக்கிறேன்.” அதன் பிறகு யாக்கோபு, சில உண்மைகளின் அடிப்படையில் செயல்படுகிறார். அதாவது உலகத்தைப் படைத்த மகா ஆண்டவரும், உடன்படிக்கையை ஏற்படுத்துகிறவரும், உடன்படிக்கையைக் காக்கிறவருமாகிய யேகோவாவாகிய கர்த்தர் உண்மையிலேயே அங்கு இருந்திருக்கிறார், தான் அவருடைய பிரசன்னத்தில் இருந்திருக்கிறேன் என்பதை உணருகிறார். அதனடிப்படையிலான யாக்கோபுவின் செயலைப் பாருங்கள், “அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது (வியப்பை ஏற்படுத்தும் பயங்கரம்)! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்” (வசனம் 17). அவர் சொல்லுகிறதாவது, “கடவுள் இங்கு இருப்பாரானால், என்னுடைய தரிசனத்தில் தம்மைத்தாமே வெளிப்படுத்திய கடவுளாக இவர் இருப்பாரானால், அவர் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் தேவன், படைப்பின் தேவன், என்னுடைய முற்பிதாக்களின் தேவன். நானோ ஆதாமின் வீழ்ச்சியடைந்த மகன், புழுதியிலிருந்து உண்டாக்கப்பட்ட பெலவீனமான சிருஷ்டி. இப்பேற்பட்ட மகா பெரிய தேவனின் பிரசன்னத்தில்தான் நான் இருக்க வேண்டும்! இது எவ்வளவு அருமையான இடம்! இது தேவனுடைய வீடே தவிர வேறல்ல. இது பரலோகத்தின் வாசல்.”
யாக்கோபு வெளிப்படுத்திய இந்த பயம் திகிலையும் வேதனையையும் ஏற்படுத்தி அவரை ஓடச் செய்ததா? இல்லை, தொடர்ந்து வரும் வசனங்கள் தெளிவாகக் காட்டுகிறது – கடவுளுடைய மெய்த்தன்மையின் மீதிருந்த நம்பிக்கையும், கடவுளுடைய அன்பு மற்றும் இரக்கத்தின் மீதிருந்த உறுதியும் இணைந்ததன் வெளிப்பாடாக இருப்பதே இந்த பயம். நம்பிக்கையும் அன்பும் பூரண உறுதியுடன் வெளிப்படுத்தும் பயம் இது. இதை நாம், யாக்கோபு ஒரு தூணை நிறுத்தி, பயங்கரத்தின் மத்தியிலிருக்கிற அந்த தேவன் உண்மையுள்ளவரும், தன்னைக் காக்கிறவரும், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறவரும், தன்னை மறுபடியும் இவ்விடம் கொண்டு வரச் செய்கிறவருமாயிருக்கிற தேவன் என்று சொல்லி அந்தத் தூணை ஞாபகார்த்த சின்னமாக ஏற்படுத்தியதிலிருந்து நாம் அறியலாம். கடவுளுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும்வண்ணமாக, யாக்கோபு, உண்மையில் ஆச்சரியமும் கிருபையுமுள்ள இந்த தேவனுக்கு தன்னுடைய சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பகுதியைத் தருவதாக பொருத்தனை பண்ணினார்.
இது தேவபயத்தின் இரண்டாவது அம்சத்திற்கான அருமையானதும் தெளிவானதுமான உதாரணம். யாக்கோபு பயந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்த காட்சியை வியப்படைந்து “அற்புதமானது” என்றும் அவர் விவரித்திருக்கிறார். ஆகவே இந்த பயம் பேரச்சத்தையும் திகிலையும் ஏற்படுத்தி தான் பயப்படுகிறதைவிட்டு ஓடச் செய்யக்கூடியதல்ல. அதாவது அந்த சிறுவன், தன்னை வெறுக்கிற தன் அண்டைவிட்டு இளைஞனைக் கண்டபோது ஓடியது போல். யாக்கோபு கொண்ட பயம், தான் பயப்படுகிறதின் பிரசன்னத்தில் இருப்பதற்கு முழுமையான ஆர்வத்தைக் காட்டுகிறதும், தான் பயப்படுகிறதை மதிப்பதும், வழிபடுவதும், அன்புகாட்டுவதும் கீழ்ப்படிகிறதுமாக இருக்கச் செய்வது.
மோசே. அடுத்த உதாரணம் யாத்திராகமம் 3:1-6 வசனங்களிலிருந்து வருகிறது:
“மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.”
இங்கு மோசே ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். திடீரென்று, ஒரு புதர் கொழுந்துவிட்டு எரிவதை அவர் காண்கிறார். அந்த புதர் எரிந்தும் வெந்துபோகாமல் இருப்பதன் காரணத்தை அறிய அவர் விரும்புகிறார். அவர் அங்கு வந்ததற்கான ஒரே காரணமாக வேதம் இதைத்தான் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஒரு அசாதாரணமான நிகழ்வு அவருடைய கண்ணுக்குப்படுகிறது, அதைப் பார்ப்பதற்கு அவருக்கு ஆர்வம் அதிகரிக்கிறது. ஆனால் கர்த்தர் சொல்லுகிறார், “மோசே, ஏதாவது அறிவியல் ஆராய்ச்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு கிட்ட நெருங்கி வராதே. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய என்னிடத்தில் உனக்கான ஒரு வார்த்தை இருக்கிறது” என்றார். அங்கு கர்த்தர் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட மோசே, அந்த இடத்தை நோக்கி நெருங்குவதை விட்டு, என்ன செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள், “மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்” (வசனம் 6).
மோசே தேவனைப் பற்றிய பயத்தினால் நிறைந்திருந்தார் என்பதை இவ்வசனம் நமக்குக் காட்டுகிறது. ஆனால் அந்த பயம் அவரை கடவுளைவிட்டு ஓடும்படிச் செய்ததா? இல்லை, அந்த தேவன் தம்முடைய மக்கள் மீது தமக்கிருக்கிற மனதுருக்கத்தையும், அவர்களை விடுவிப்பதற்கான தம்முடைய நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறார் (வசனங்கள் 7-8). ஆதாம் செய்ததுபோல் அவரை விட்டு ஓடுவதற்குப் பதிலாக, கடவுளோடு தொடர்புகொள்ளவும், அவரோடு முகமுகமாய்ப் பேசவும் மெய்யான பயபக்தியோடு மோசே அவரை நெருங்கி வந்தார். மோசே தன்னுடைய முகத்தை மூடிக்கொள்ளுவதற்குக் காரணமாக இருந்த தேவபயம், கடவுளோடு நெருக்கமாக தொடர்புகொள்ளுவதற்கு எந்தவகையிலும் தடையாக இருந்துவிடவில்லை. மோசே தன் முகத்தை மூடியிருந்தாலும், அவர் கடவுளோடு பேசுகிறார். இந்த பயம், மதிப்பினாலும் மரியாதையினாலும் பயபக்தியினாலும் உண்டானது.
ஏசாயா. பழைய ஏற்பாட்டிலிருந்து நாம் கவனிப்பதற்கான கடைசி உதாரணம், ஏசாயா 6:1-5 வசனங்கள்:
“உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.”
தீர்க்கதரிசியும், விண்ணுலக சேனையும் ஆகிய இரண்டு பிரிவினரும் ஒன்றையே பார்க்கிறார்கள். கடவுளைப் பற்றிய இந்தக் காட்சியை சேராபீன்கள் பார்த்தபோது என்ன செய்தார்கள்? பரிசுத்தமான ஒரு பதட்டம் அவர்களை நிரப்பியது. சிங்காசனத்திற்கு முன்பாக அவரவருடைய நிலையில் அவர்களால் நிற்க முடியவில்லை, மாறாக, சிங்காசனத்திற்கு மேலாக அவர்கள் பறந்துகொண்டிருந்தார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய கால்களையும் முகத்தையும் மூடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் யாவரும் ஒருவகையில் பாவமறியாத தேவதூதர்களின் அம்சத்தைக் கொண்டவர்கள். இருப்பினும் அந்த மகா பெரிய கடவுளுடைய பிரசன்னத்தில், அவர்கள் தங்களுடைய கால்களையும் முகத்தையும் மூடிக்கொண்டார்கள். மோசே தன் முகத்தை மூடிக்கொண்டு “கடவுளே உம்மைப் பார்க்க எனக்கு பயமாக இருக்கிறது” என்று சொன்னதுபோல், அவர்களும் தங்களுடைய முகங்களையும் கால்களையும் மூடிக்கொண்டு கடவுளுடைய பரிசுத்தத்தினிமித்தம் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். மற்றும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” என்று சத்தமிட்டார்கள்.
நிச்சயமாக, சேராபீன்கள் பாவத்தினால் துக்கப்பட்டோ அல்லது தாங்கள் அதற்கு தகுதியற்றவர்கள் என்று வெட்கப்பட்டதினாலோ அப்படிச் செய்தார்கள் என்று எந்தக் குறிப்பும் அங்கு இல்லை. ஆனால் தீர்க்கதரிசி அந்த தேவனைக் கண்டபோது அவருடைய நிலை சேராபீன்களைப் போன்றிருக்கவில்லை. சேராபீன்கள் பார்த்த அந்தக் காட்சியை தீர்க்கதரிசி கண்டபோது, கடவுளுடைய பரிசுத்தத்தின் மாட்சிமையின் சிறப்புகளை மட்டும் காணவில்லை, வேறு ஒன்றையும் அவர் தன் பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய பதில்நடவடிக்கையில் துக்கமும், தகுதியற்ற தன் நிலையின் வெட்கமும், குற்றமனப்பான்மையும், வருத்தமும் இருந்தது. இத்தகைய மனப்பாங்கோடு மகிமையான சிருஷ்டிகரை சேராபீன்கள் பார்க்கவில்லை. பாவியாகிய சிருஷ்டி மட்டுமே இத்தகைய மனப்பாங்கோடு மும்மடங்கு பரிசுத்தரைக் காணமுடியும். ஆகவே, மாசற்றவனாக இருக்கிறேன் என்ற மனப்பான்மைக்கு மத்தியில் குற்றவுணர்வையும், பாவத்திற்கான வருத்தத்தையும் உண்டாக்குகின்ற மரியாதையையும் பயபக்தியையும் கொண்டிருப்பதே சரியானதும் தகுதியானதுமாகும்.
பரிசுத்த கடவுளை உற்று நோக்குகிற பாவமுள்ள சிருஷ்டியின் ஏற்புடைய ஒரே மனநிலை இதுவாகத்தான் இருக்க முடியும். பாவத்தின் எந்த வெட்கமும் இல்லாமல் சேராபீன்கள் தங்கள் முகங்களை மூடிக்கொண்டு “பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சத்தமிட முடியும். ஆனால் உங்களாலும் என்னாலும் அது முடியாது. பாவமற்றவர்களாகிய சேராபீன்களே கடவுளுடைய பிரசன்னத்தில் வரும்போது இந்தவிதமான பயபக்தியைக் காட்டாமல் இருக்க முடியாவிட்டால், அக்கிரமத்தை சுமந்துகொண்டிருக்கிற பாவமுள்ள ஆண்களும் பெண்களுமாகிய நாம் கடவுளுடைய பிரசன்னத்தில் அவரை நெருங்கி வருகிறபோது நம்முடைய பாவத்தினிமித்தமாக நமது தகுதியற்ற நிலையை எண்ணி வெட்கப்படாமலும் கடவுளைப் பற்றிய பயமும் பயபக்தியும் இல்லாமலும் இருக்க முடியுமா?
பிறகு கர்த்தர் இடிந்துபோன தம்முடைய ஊழியக்காரனுக்கு தம்முடைய மன்னிப்பையும் சுத்திகரிக்கும் கிருபையையும் சுட்டிக்காட்டுகிற வார்த்தைகளைத் தருகிறார். ஏசாயா 6:6-7 சொல்லுகிறது, “அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான்.”
எனினும், மனதை நொறுங்கிப் போகச் செய்கிற கடவுளுடைய பரிசுத்தத்தின் இந்த தரிசனமும் சரீரத்தை தளர்ந்து போகச் செய்கிற அவருடைய சிறப்பான வெளிப்பாடும் ஏசாயா தீர்க்கதரிசியை கர்த்தரைவிட்டு ஓடிப்போகச் செய்யவில்லை. மாறாக, கடவுளுடைய சுத்திகரிப்பையும் மன்னிப்பையும் பற்றிய நிச்சயத்துவத்தை பெற்றுக்கொள்ளவும், இஸ்ரவேலுக்கு கடவுளுடைய செய்தியை அறிவிக்கிறவனாக யாரை அனுப்புவது என்று திரித்துவ தேவனுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்கவும் செய்தார். அந்த உரையாடலைக் கேட்கையில், மன்னிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தீர்க்கதரிசி கடவுளிடம் நெருங்கி வந்து, அந்தப் பொறுப்பைச் செய்வதற்கு தன்னைக் கொடுக்கிறார். அவரை நொறுக்குகிற தேவபயம், இப்போது அவருடைய மனமெல்லாம் தெய்வீக மன்னிப்பையும் சுத்திகரிப்பையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த பயம் அவருடைய உள்ளுணர்வைக் கவர்ந்து, கடவுளுடைய அழைப்பிற்கு தன்னை அன்போடு அடிபணிய வைத்தது.
புதிய ஏற்பாட்டு உதாரணம்
இதெல்லாம் பழைய ஏற்பாட்டின் சூழல் என்று மறுபடியும் சிலர் வாதிடலாம். இப்படியானவர்கள் சொல்லுவார்கள், கர்த்தராகிய இயேசுவுக்குள், கடவுளுடைய மென்மையான பண்புகள் நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று. இது உண்மையா? சுவிசேஷ பகுதியில் வரும் ஒரு குறிப்பு இந்த எண்ணங்களையெல்லாம் என்றென்றைக்கும் இல்லாமலாக்கிவிடக் கூடியது. இயேசு தான் பிதாவை வெளிப்படுத்துகிறவராக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9). “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18). இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் குறிப்பிடுகிற அந்த சம்பவம் நீங்கள் யாவரும் நன்றாக அறிந்திருக்கிற ஒன்றுதான். அது பேதுருவும் அவருடைய நண்பர்களும் இரவு முழுவதும் மீன்பிடிக்க முயற்சித்தும் ஒன்றும் பிடிக்க முடியாதிருந்த நேரம். பேதுருவின் படகை கடற்கரையிலிருந்த மக்களுக்குப் போதிப்பதற்கான பிரசங்க மேடையாக இயேசு பயன்படுத்திக் கொண்டார். மக்களுக்கான போதனைகளை அளித்தப் பிறகு, அவர் பேதுருவை நோக்கி,
“ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படகிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படி அவர்களுக்கு சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.” (லூக்கா 5:4-11)
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிற எதிர்மறையாகத் தென்படுகிற இரண்டு நடவடிக்கைகளை எப்படி இணைத்துப் பார்ப்பது? ஒருபுறம் பேதுரு கர்த்தரிடம், தான் பாவியாக இருப்பதினால் தன்னை விட்டுப் போகும்படிச் சொல்லுகிறார், இன்னொருபுறம், தனக்குண்டான எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிச் செல்லுகிறார். பேதுருவுக்கு என்ன நடந்தது? நம்முடைய கர்த்தருடைய இந்த செயலின் உட்கருத்தை பேதுரு உணர்ந்துகொண்டார். இப்போது வலையில் மிகவும் அதிகமான மீன் பிடிபட்டிருப்பதற்கு பின்னிருக்கிற உண்மையை அவர் கண்டு கொண்டார். இதைச் செய்தவர் நிச்சயமாக மேசியாவாகிய தேவனுடைய குமாரனாகத்தான் இருக்கவேண்டும் என்று அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அந்த நேரத்தில் எந்தளவுக்கு அதை அறிந்திருந்தார் என்பது தெரியாது. இருந்தாலும் அந்த எண்ணம் அவரில் உதயமானவுடன், அவர் இயேசுவின் பாதத்தில் விழுந்து, மிகுந்த மரியாதையினிமித்தமாக பக்தியும் பயமுமுடையவராக, “ஆண்டவரே என்னைவிட்டுப் போய்விடுங்கள். படைப்பின் தேவனாகிய உம்மோடு நெருக்கமாக இருப்பதற்கு நான் சற்றும் ஏற்றவனல்ல. நான் பாவியான மனிதன்” என்று அவரைப் புலம்பச் செய்தது. இருப்பினும் அந்த நிகழ்வு அவர் இயேசுவோடு இன்னும் நெருக்கமாக இணைந்திருக்கும்படிச் செய்தது. பேதுரு தன் தொழிலையும், வீட்டையும், நண்பர்களையும் விட்டு கிறிஸ்துவைப் பின்தொடரச் செய்தது.
இது ஆவிக்குரிய அனுபவங்களின் முரண்பாடு இல்லை. ஆவிக்குரிய அனுபவத்தின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரு மனிதனுடைய இருதயத்தில் இல்லாவிட்டால், வேதம் போதிக்கின்ற கிறிஸ்துவோடு அவனுக்கு தொடர்பு இருக்கிறதென்பது சந்தேகமே. “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடுங்கள். நாம் இருவரும் நெருக்கமான உறவு கொண்டிருப்பதற்கு நான் ஏற்றவன் அல்ல” என்று சத்தமிட வைக்கும் நம்முடைய பாவத்தன்மையைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், இயேசுவை நாம் கட்டியணைத்துக்கொள்ள முடியும் என்று எண்ணுவது தவறானது. இருப்பினும், இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடவுளுடைய இருதயத்திலிருக்கிற அன்பையும் பாவ மன்னிப்பையும் கிறிஸ்து அருமையாக நமக்கு விளக்கியிருப்பதினால், நாம் அவரை பற்றிக்கொள்ள முடியும். இந்த சீடர்களைப் போல் நாமும் அவருடைய கிருபையின் மூலமாக எல்லாவற்றையும் விட்டு அவரை நாம் பின்பற்றுவோம்.
ஏசாயா 6ல் குறிப்பிடப்பட்டுள்ளதை இது மறுபடியும் சுட்டிக்காட்டுகிறது. இங்கு, ஒரு சிருஷ்டியானது கடவுளுடைய பிரசன்னத்தில் இருப்பது மட்டுமல்ல, பாவமுள்ள சிருஷ்டியாகிய தான் கடவுளிடத்தில் இவ்வளவு நெருங்கி இருப்பதை ஏதோ சரியில்லாததாக எண்ணுகிறது. எனவேதான் “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்கிறது. அதேநேரம், தனக்கான வேலை என்று வருகிறபோது, ஏசாயா செய்ததுபோல், அதை மகிழ்ச்சியோடு வரவேற்றது. இந்த பயம், தான் பயப்படுகிறதைக் கண்டு ஓடவைக்கக்கூடிய பேரச்சத்தையும் திகிலையும் போன்றதல்ல. இந்த பயம், ஒருவன் எதைக்கண்டு பயப்படுகிறானோ அதனிடம் அன்போடும் விசுவாசத்தோடும் நெருங்கி வரச் செய்யும் பெரும் மதிப்பும் பயபக்தியும் கொண்டது.
சுருக்கம்
சுருக்கமாக, தேவபக்தியின் மையமாக இருக்கிற தேவபயமென்பது, பயபக்தி, பெருமதிப்பு, மரியாதை ஆகிய இவையனைத்தையும் மிகவும் ஆழமாக வெளிப்படுத்துவதாகும். இது கடவுளை அவருடைய மகிமையிலும் பரிசுத்தத்திலும் காண்கிறபோது நம்முடைய எண்ணம் மற்றும் ஆத்துமாவின் பதில்நடவடிக்கையாக இருக்கிறது. தேவபயத்தை விளக்குகிறபோது ஜோன் மரே இதைப் பற்றி மிகவும் துல்லியமாக சொல்லியிருக்கிறார் “கடவுளுடைய மகிமை மற்றும் பரிசுத்தத்தின் கட்டுப்படுத்தும் உணர்வு மற்றும் இந்த பயஉணர்வு ஏற்படுத்தும் ஆழ்ந்த பயபக்தியுமாகிய இவையாவும் இணைந்ததுதான் தேவபயத்தின் சாராம்சம்” என்று. ஜோன் பிரவுன், 1 பேதுரு 2:17 வசனத்திற்கான விளக்கமளிக்கிறபோது தேவபயத்தைப் பற்றி அவர் சொல்லிய வார்த்தைகள் இதோ:
“நாம் அவருக்கு பயப்பட வேண்டும். அதாவது, அவருடைய நித்திய மகிமை மற்றும் மகத்துவத்தை பயபக்தியுடன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அவர் தம்முடைய வார்த்தை மற்றும் செயல்களின் மூலமாக இவைகளை நமக்கு வெளிப்படுத்தி, அவருடைய அன்பைப் பெறுவதே எல்லா ஆசீர்வாதங்களுக்கும் மேலானது என்றும், அவரால் கைவிடப்படுவதுதான் எல்லா தீமையிலும் கேடானது என்றும் உணரக் கூடிய நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்தி, நாம் அனுபவிக்கக் கூடிய முதன்மையான நன்மை அவருடைய அன்பைப் பெறுவதுதான் என்பதை வெளிப்படுத்தி அதை நாடி வரவும், அவரால் கைவிடப்படுவதாகிய பயங்கரமான தீமையை தவிர்க்கவும் நம்மை வழி நடத்துகிறார். இந்தவிதமான பயத்தைத்தான் ஒரு கிறிஸ்தவன் சிந்திக்கவும் கடவுளிடத்தில் காண்பிக்கவும் வேண்டும்.”
அப்போஸ்தலனாகிய பவுல், எல்லா மனிதர்களுடைய இயற்கையான நிலையைப் பற்றி விளக்குகிறபோது, மனந்திரும்பாத மனிதர்களின் நிலையைப் பற்றி “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை” (ரோமர் 3:18) என்று சொல்லிய மிக முக்கியமான ஒரு குறிப்பு தேவபயத்தின் நடைமுறைத் தாக்கத்தை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. அன்பான வாசகர்களே, கடவுளுடைய பரிசுத்த கட்டளைகளின் எதிர்பார்ப்புகளுக்கும், அவருடைய நேசகுமாரனுடைய சுவிசேஷத்தின் கோரிக்கைகளுக்கும் முற்றிலும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்களா? நீங்கள் ஏன் அந்தவிதமாக வாழுகிறீர்கள் தெரியுமா? உங்களுடைய கண்களுக்கு முன்பாக தேவபயம் இல்லாதபடியால்தான் அப்படி வாழுகிறீர்கள். உங்களுடைய வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறீர்களென்றால், உங்களைப் பிரியப்படுத்தக்கூடியதை செய்வதற்குக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாகவே பார்க்கிறீர்கள். உங்களுடைய இச்சைகள் என்ன சொல்லுகிறதோ அதையே செய்கிறீர்கள். உங்களுடைய விருப்பமும் தாகமும் எதற்காக ஏங்குகிறதோ அதையே நீங்கள் தேடுகிறீர்கள். தேவபயம், அதாவது கடவுளுடைய மகிமை மற்றும் பரிசுத்தத்தின் கட்டுப்படுத்தும் உணர்வு மற்றும் இந்த பயஉணர்வு ஏற்படுத்தும் ஆழ்ந்த பயபக்தி என்பதெல்லாம் உங்களுக்கு ஒன்றுமில்லாததாகப் படுகிறது. அதன் எந்தவொரு சாராம்சமும் உங்களில் இருக்கவில்லை. நண்பர்களே, இதுதான் உங்களுடைய நிலையாக இருந்தால், காலம் கடந்து போவதற்கு முன்பாக கர்த்தர்தாமே தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இந்த தேவபயத்தை உங்களுக்குப் போதிப்பாராக.
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். (சங்கீதம் 34:11)
என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். (நீதிமொழிகள் 2:1-5)