இன்னுமொரு இதழைக் கர்த்தரின் துணையோடு நிறைவு செய்து உங்கள் முன் படைத்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். பத்திரிகையின் ஆக்கங்களை வாசித்து தான் அவற்றை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறேன் என்று விளக்கியிருந்தார். தனக்குப் புரிபடாத விஷயங்களுக்கு மேலும் விளக்கங்களைக் கேட்டிருந்தார். நம்முடைய வாசகர்கள் சிந்தித்து வாசிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது அறிந்து மகிழ்கிறேன். சிந்தனைக்கு என்றோ வாழ்த்துக்கள் சொல்லி வழிஅனுப்பிவிட்டிருக்கும் சமுதாயத்தில் சிந்திக்கிறவர்களை சந்திக்கிறபோது நான் மகிழ்கிறேன்.
இந்த இதழில் அல்பர்ட் என். மார்டினின் தேவபயம் பற்றிய தொடர் கட்டுரை வந்திருக்கிறது. அத்தோடு டேவிட் மெரெக்கின் பக்தி வைராக்கியம் பற்றிய ஆக்கமும் வந்திருக்கிறது. இதெல்லாம் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்திற்கு அவசியம் தேவையான ஆவிக்குரிய அம்சங்கள்; நாம் அதிகம் காணமுடியாதிருக்கும் ஆவிக்குரிய இரத்தினக் கற்கள். புடவைக் கடைகளின் கண்ணாடி அறைகளுக்குப் பின்னால் அழகு ததும்ப அலங்காரத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் செலுலாயிட் பொம்மைகளைப் போலத்தான் இன்றைய கிறிஸ்தவம் இருப்பதாக நான் காண்கிறேன். தேவபயம் என்பதற்கு அர்த்தமே தெரியாத போலிக்கிறிஸ்தவம் இது. இதுதான் கிறிஸ்தவம் என்று சமுதாயத்தை நம்ப வைப்பதற்காக கச்சை கட்டிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறதாகத்தான் இன்றைய ஊழியங்களையும், சபைகளையும் நாம் காண்கிறோம். அதைவிட உண்மையாக வாழ்வது எத்தனையோ மேல். உண்மை பேசுகிறேன் என்று மற்றவர்களை நம்ப வைப்பதற்கு தலைகீழாக நிற்பதைவிட உண்மையைப் பேசுவது நல்லதல்லவா. உண்மைக்கு விளம்பரம் ஏன்?
மார்டின் லூத்தர் போலிக்கத்தோலிக்க மதத்திற்கெதிராக போர்க்கொடி உயர்த்தி அதற்கெதிரான 95 குறிப்புகளை விட்டன்பேர்க் கோட்டைக் கதவில் பதித்த நிகழ்வின் 500ம் நினைவு ஆண்டு இது. அன்று உதித்த திருச்சபை சீர்திருத்தம் பெருங்காரியங்களை ஐரோப்பாவிலும் அதற்குப் புறத்திலும் இத்தனை வருடங்களுக்குள் செய்திருந்தபோதும் அந்த வரலாறும், அது போதிக்கும் உண்மைகளும் இன்று கிறிஸ்தவ சமுதாயத்தில் மங்கி வருகிறதோ என்று என்னை எண்ண வைக்கிறது. லூத்தரும், கல்வினும், சுவிங்கிலியும் கலப்படக் கிறிஸ்தவத்திற்காகப் போராடவில்லை. சத்தியத்தை நிலைநாட்டப் போராடினார்கள். – ஆர்