தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்

(வேதம் போதிக்கும் தேவபயம் – 3)

– அல்பர்ட் என். மார்டின் –

[அல்பர்ட் என். மார்டின் எழுதி, ஹெரிட்டேஜ் வெளியீடுகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘மறந்துபோன தேவபயம்’ (The Forgotten Fear of God) என்ற நூலில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு அதிகாரம். மொழிபெயர்ப்பு: M. ஜேம்ஸ்]

கடந்த இரண்டு அதிகாரங்களில், தேவபயமாகிய இந்த மையப் போதனை வேதத்தில் எங்கும் பரவிக் காணப்படுவதைப் பற்றியும், இது சம்பந்தமாக வேதத்திலுள்ள உதாரணங்கள் மற்றும் சொற்பொருள் விளக்கத்தையும் பார்த்தோம். இப்போது நாம், தேவபயத்தின் அடிப்படை அம்சங்களைக் கண்டறியப் போகிறோம். தேவபயத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்கின்ற வேத சத்தியங்கள் விளக்கும் மூன்று பிரிவுகளை இதில் நாம் அடையாளங் காணப்போகிறோம். முதலாவது, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை நமக்கு இருக்க வேண்டும். இரண்டாவது, கடவுளுடைய பிரசன்னம் எங்கும் படர்ந்து நிறைந்திருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு உணர்வு இருக்க வேண்டும். மூன்றாவது, கடவுளுக்கான நம்முடைய கடமைப் பொறுப்புகளைப் பற்றிய தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

1. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை

கடவுள் தம்முடைய பரிசுத்தத்தில் மகத்துவமானவர்

ஏற்கனவே நாம் பார்த்த ஒரு வேதப்பகுதியாக இருந்தாலும், இப்போது நாம் கவனிக்கப்போகும் இந்தத் தலைப்பிற்காக மறுபடியும் அதை நாம் படித்துப் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 15:4ல் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. என்னவென்றால், “கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?” இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள், வெற்றி கண்ட பரிசுத்தவான்கள், அதாவது மீட்கப்பட்டவர்கள், மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் மேற்கொண்டவர்கள். அவர்கள் கடவுளுடைய பிரசன்னத்தில் இருக்கிறார்கள். அப்போதுதான் இவ்வசனங்களை நாம் வாசிக்கிறோம்,

அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதன் சொரூபத்திற்கும் அதன் முத்திரைக்கும் அதன்  நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். (வசனங்கள் 2-4)

தங்களுடைய கடவுளை அவர்கள் பார்த்தபோது, அவரைப் போற்றுகிறார்கள். அவர் யார் என்பதை அவர்கள் கண்டபோது, அவருடைய குணாதிசயங்கள், வழிகள், நியாயத்தீர்ப்புகள் ஆகியவற்றைப் பற்றிய சரியான பார்வை கொண்டு, தத்துவார்த்த ரீதியாக ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள், “யார் உமக்குப் பயப்படாமல் இருக்கலாம்?” அவர்கள் சொல்லுவதன் அடிப்படையான அம்சம் என்னவென்றால், அவர்கள் அவரைப் பார்க்கிறவிதமாக யார் ஒருவர் பார்த்தாலும் நிச்சயமாக அவருக்கு பயப்படுவார்கள். இது எதை உணர்த்துகிறதென்றால், நம்மில்  தேவபயம் உருவாவதற்கு கடவுளைப் பற்றிய சரியான பார்வை, தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது.

இந்நாட்களில் இருக்கிற ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நம்மில் தேவபயத்தை உருவாக்கக்கூடிய கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய இந்தவிதமான பார்வையை பெருமளவுக்கு நாம் இழந்திருக்கிறோம். உதாரணமாக, அவருடைய மகத்துவம், எங்கும் நிறைந்த தன்மை, பரிசுத்தம், அண்டசராசரங்களையும் ஆளுகை செய்கிற அவருடைய தன்நிகரற்ற சர்வஏகாதிபத்தியம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த சத்தியத்தை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். இயற்கை வனப்புடைய ஒரு நிலப்பகுதியைப் பார்க்கிறதாக வைத்துக் கொள்ளுங்கள். அதன் முற்பகுதியில், அழகிய புல்வெளி நிலம், பசும் புல் படர்ந்து பலதரப்பட்ட பூக்கள் நிறைந்து காணப்படுகிறது. அமைதி மற்றும் சமாதானத்தைப் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சியாக அது இருக்கிறது. ஆனால் அந்நிலத்தின் பின்புறத்தில், கரடுமுரடான பெரிய மலைகளும், பனியினால் மூடப்பட்ட உயர்ந்த சிகரங்களும் இருக்கின்றன. அந்த மலைகளின் பக்கங்களிலும், உச்சியிலும் மின்னல்களுடன் கூடிய பெரிய இடிமேகங்கள் முழங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலத்தின் முற்பகுதியில் மட்டும் ஒருவர் கவனம் காட்டுவாரானால், அவரால் அந்த நிலத்தின் ஒரு பகுதியை மட்டுமே சரியாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் அந்நிலத்தின் ஒட்டுமொத்த நிலையைப் பற்றிய விஷயத்தை அவர் குறைந்தளவே அறிந்திருப்பார். அந்நிலத்தின் காட்சியைப் பார்த்து எந்தவிதமான பயமும் படபடப்பும் ஏற்படாமல் வெறுமனே அமைதியை மட்டுமே உணருவாரானால், அவர் அந்நிலத்தின் முற்பகுதியை மட்டுமே கண்டிருக்கிறார், இன்னும் பிற்பகுதியைக் காணவில்லை என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் எப்போதாவது பெரிய பாறைகளுள்ள மலைகளுக்குச் சென்றிருந்தால் நான் எதைப் பற்றிச் சொல்லுகிறேன் என்பதை அறிவீர்கள். அந்த மலைகளின் பயங்கரமான, கம்பீரத் தோற்றம், அவைகள் நம்மீது சரிந்து நம்மை அப்படியே விழுங்கிவிடுமோ என்ற எண்ணத்தைத்தான் நம்மில் ஏற்படுத்தும்.

கடவுளுடைய குணாதிசங்களைப் பற்றிய விஷயத்திலும் இதுவே உண்மை. வேதம், கடவுளுடைய மென்மையான தன்மைகளான அவருடைய எல்லையற்ற இரக்கம், நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு, மனதுருக்கம், தகப்பனைப் போன்ற கனிவு ஆகியவற்றை நம்முன் வைக்கிறது. ஆனால் அவருடைய இந்தக் குணாதிசயங்களை வேதம் ஒருபோதும், நம்மை அச்சுறுத்தக் கூடிய ஏனைய குணாதிசயங்களான, அவருடைய பரிசுத்தம், கோபம், எங்கும் நிறைந்திருத்தல், சர்வவல்லமை போன்றவற்றிலிருந்து பிரித்துக் காட்டுகிறதில்லை. இந்நாட்களில், அநேகர் கடவுளுடைய குணாதிசயங்களின் இந்த அம்சங்களை மறந்துவிடுகிறார்கள். ஆகவேதான் தேவபயத்தை நம்மத்தியில் பார்ப்பது அரிதாக இருக்கிறது.

சிலுவை கடவுளுடைய பரிசுத்தத்தைப் பற்றிய நம்முடைய பார்வையை ஆழமாக்குகிறது

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் கடவுள் தம்முடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருப்பதனால், அது நம்மை பயந்து நடுங்கச் செய்வதைவிட அவருடைய அன்பிலேயே நம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தச் செய்கிறதாக அநேகர் நினைக்கிறார்கள். வேதம் சொல்லுகிறது (ஏசாயா 6:1-3), கடவுளுடைய பிரசன்னத்தில் அவருடைய பரிசுத்தத்தின் பயங்கரத்தைப் பார்த்தபோது பாவமற்ற சிருஷ்டிகளே தங்களுடைய முகங்களை மூடிக்கொண்டிருக்கிறதென்றால், கிறிஸ்துவினுடைய காயங்கள் மற்றும் அவருடைய பலியின் காட்சி நம்முடைய முகங்களை மூடவோ இருதயத்தில் நடுக்கம் கொள்ளவோ செய்ய வேண்டியதில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? வேதம் முழுவதிலும், சிலுவையைவிட வேறு எது நமக்கு இந்த உண்மையை தெளிவாக காட்டக் கூடியது? சிலுவை எதைக் காட்டுகிறது? கடவுளுடைய அற்புதமான அன்பையும் கிருபையையும் வெளிப்படுத்துகிறதோடு, அவருடைய வளைந்துகொடுக்காத நீதியையும் பற்றியெரிகிற கோபத்தையும் அது காட்டுகிறது. அவர் எந்தளவுக்கு தம்முடைய வளைந்துகொடுக்காத நீதியைக் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். தம்முடைய சொந்தக் குமாரனாக இருந்தபோதிலும் பாவத்திற்கு எதிரான தம்முடைய உக்கிரகோபத்தை முழுமையாக அவர் தன் குமாரன் மீது கொட்டித் தீர்த்தார். கறைதிரையில்லாத அவருடைய பரிசுத்தத்தைப் பாருங்கள். பிதாவாகிய தேவன் யாரைப் பார்த்து “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” (மத்தேயு 3:17) என்று சொன்னாரோ, அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு புறமுதுகு காட்டியவரைப்போல் அமைதலாக அவர் இருந்தது அவருடைய பரிசுத்தம் எப்படிப்பட்டது என்பதையே காட்டுகிறது. தன்னையே பலியாகக் கொடுத்து தன்னுடைய சொந்த இரத்தத்தினால் பாவமன்னிப்பை வாங்கிய இந்தக் கடவுளுக்கு முன்பாக நிற்கிறபோதுதான் “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்” (சங்கீதம் 2:11) என்ற அவருடைய கட்டளை நம்மை அவருக்கு அடிபணியச் செய்கிறது.

இன்னும் மனந்திரும்பாத சகோதரர்களுக்கு நான் சொல்லுகிறதென்னவென்றால், கர்த்தர் தாமே தம்முடைய குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளவைகளை மிகுந்த கவனத்தோடு நீங்கள் சிந்திக்கத் துவங்காதவரை, அதைப் பற்றிய பயமும் திகிலும் உங்களில் ஏற்படாதவரை, மலைகளே குன்றுகளே எங்களை அவருடைய முகத்தைவிட்டு மறைத்துக்கொள்ளுங்கள் என்று நீங்கள் கதறுகிறவரை, தேவபயத்தின் ஒரு துளிக்கூட உங்களில் இருக்க முடியாது. அன்பார்ந்த நண்பர்களே, அப்படி நீங்கள் செய்வீர்களானால், சுவிசேஷம் உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். என்ன அந்த நற்செய்தியென்றால், நீங்களும் நானும் பாவ மன்னிப்பைப் பெறும்படி பிதாவின் முகம் மறைக்கப்பட்ட நிலையை ஒருவர் அனுபவித்தார் என்பதுதான். அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

நீங்கள் ஆண்டவருடைய பிள்ளையாக இருந்தால், கடவுளுடைய மேன்மை, மகத்துவம், பரிசுத்தம் போன்றவற்றைப் பற்றிய வேதம் போதிக்கும் சத்தியங்களில் நீங்கள் மிகுந்த அக்கறையோடும் விழிப்புணர்வோடும் இருந்து வளராவிட்டால், நீங்கள் நிச்சயமாக தேவபயத்தில் வளர முடியாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இது ஏதோ ஒரு நாளில் நம்முடைய வாழ்க்கையில் ஒன்றரக் கலந்துவிடுகிற ஆவிக்குரிய அனுபவமல்ல. இதற்காக, கடவுளுடைய எல்லையற்ற மகிமை, பரிசுத்தம், மகத்துவம் போன்றவைகளை விவரித்துக்காட்டுகிற வேதப்பகுதிகளை (ஏசாயா 6, 10, வெளிப்படுத்தின விசேஷம் 1, 19 மற்றும் இதர பகுதிகள்) தியானிப்பதற்கு அதிகமான நேரத்தை ஒதுக்க வேண்டும். தேவபயம் ஒருவனில் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிற அந்தவிதமான சூழலுக்குள் நீங்கள் வருகிறவரை, தேவபயம் உங்களில் நிறைந்திருப்பதை உணருகிறவரை நீங்கள் தொடர்ந்து அவற்றைக் குறித்து தியானிக்க வேண்டும்.

கடவுளுடைய மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் பற்றிய இந்த ஆழமான சிந்தனைதான், பரிசுத்தத்திலும் தேவபக்தியிலும் நீங்கள் வளருவதற்கு உங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தக் கூடியது. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வைதான் தேவபயம் நம்மில் இருப்பதற்கான முதலாவது அம்சம். உங்களுடைய எண்ணங்களில் கடவுளைப் பற்றிய பயம் இல்லாமலிருந்தால், நீங்கள் கடவுளைப் பற்றி சிந்திப்பதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் பொருள். உங்களுடைய எண்ணங்கள் கடவுளைப் பற்றிய விஷயத்தில் வேதம் சொல்லுகிறபடி சிந்திக்க ஆண்டவர் தாமே உங்களுக்கு உதவுவாராக. அதுதான் நாம் அறிந்திருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாகிய தேவபயத்தை நம்மில் ஏற்படுத்தும்.

மறுபடியும், பேராசிரியர் ஜோன் மரே இதைப் பற்றி சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள்,

“நம்மில் இருக்கும் தேவபயம் என்பது கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி நம்முடைய இருதயமும் மனமும் புரிந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடாகும். கடவுள் யார், எப்படிப்பட்டவர் என்பதை சரியாக அறிந்திருப்பதென்பது, அவருக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணிப்பதைத் தவிர்த்து வேறு எதையும் பொறுத்துக்கொள்ளாமல் இருப்பதாகும்.”

2. எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னம்

தேவபயத்தின் முதலாவது அம்சமாகிய, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை இருக்க வேண்டும் என்பதைக் கவனித்த நாம், இப்போது தேவபயத்தின் இரண்டாவது அம்சத்தைக் கவனிக்கப் போகிறோம். அது எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னம் என்பதாகும். இது நம்முடைய வாழ்க்கையின் எப்பகுதியிலும் கடவுளுடைய பிரசன்னம் இருக்கிறது என்ற உணர்வு சம்பந்தமானது. நாம் மட்டுமே இருக்கக்கூடிய எந்தவொரு இடமோ அல்லது சூழ்நிலையோ இல்லை. நாம் இருக்கிற எல்லா இடங்களிலும் கடவுள் இருக்கிறார். அவர் தம்முடைய மகத்துவம், பரிசுத்தம், தகப்பனைப் போன்ற அன்பு, மனதுருக்கம், மேன்மை என்று இவையனைத்துடனும் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இங்குமங்குமாக இருக்கிறார் என்பதல்ல, அவர் தற்போது நாம் இருக்கிற அந்த இடத்தில்தானே இருக்கிறார். தேவபயம் எப்போதும் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற இந்த அம்சத்தைக் கொண்டதாகவே இருக்கும். இந்தக் காரணத்தினால்தான் பரலோகத்தில் நாம் பூரணராக்கப்பட்டவர்களாக தேவபயத்தைக் கொண்டிருப்போம். ஏனென்றால், பரலோகத்தில் கடவுள் நம் மத்தியில்தான் இருக்கிறார் என்ற உணர்வு எப்போதும் நம்மில் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும். இந்த உண்மையைத்தான் வெளிப்படுத்தின விசேஷம் 21:3 படம்பிடித்துக் காட்டுகிறது, “மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்”.

டாக்டர் A.W. டோசர் (Tozer), அநேக வருடங்களுக்கு முன் சொல்லிய ஒரு வாக்கியம் என் நினைவுக்கு வருகிறது, “கடவுள் என்பதே மனித மொழிகளில் மிகவும் ஆழமான வார்த்தை”. “எங்கும் நிறைந்திருத்தல்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் காண நாம் நேரடியாக அகராதியைப் புரட்டிப்பார்த்தால் தெரிந்துவிடும். அதைக் கொண்டு இந்த வார்த்தைக்கான முழுமையான விளக்கத்தை நாம் சொல்ல முடியும். ஆனால் “கடவுள்” என்ற வார்த்தையை விளக்க முயற்சியுங்கள் பார்ப்போம்! ஆயிரக்கணக்கான இறையியல் புத்தகங்கள், பல்வேறு காலங்களில் உலகமுழுவதுமுள்ள பலதரப்பட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இவையனைத்தையும் ஒன்றிணைத்து, ஒரே மொழியில் கொண்டு வந்து, பிறகு அவையனைத்தையும் வாசித்துப் பார்த்தால், அதன் முடிவில் கடவுளுடைய தன்மைகளையும் அவருடைய வழிகளையும் பற்றி ஒரு சிறு பகுதியைத்தான் நான் அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல நேரிடும். ஆகவேதான் “கடவுள்” என்பது மனித மொழிகளில் மிகவும் ஆழமான வார்த்தையாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து டோசர் சொல்லுகிறார், “ஒட்டுமொத்த மனித அறிவிலுள்ள ஆழமான உண்மை என்னவென்றால், கடவுள் இருக்கிறார் என்பதுதான்.” வேதம் அவரைப் பற்றி சொல்லுகிறதென்னவென்றால், அவர் எப்போதும் இருந்திருக்கிறார், இப்போதும் அவர் தொடர்ந்து இருக்கிறார். கடவுள் உயர்ந்தவராக “இருந்தவர்” என்பதல்ல,  “இருக்கப் போகிறவர்” என்பதுமல்ல. மாறாக, அவர் எப்போதும் உயர்ந்தவரும் மகிமையானவருமாக “இருக்கிறவர்”. மூன்றாவதாக டோசர் சொன்னது, “நம்முடைய மிகவும் ஆழமான ஒரு அனுபவம் என்னவென்றால், ‘கடவுள் இங்கு நம்மத்தியில் இருக்கிறார்’ என்று அங்கீகரிப்பதுதான்.”

ஒரு சுவாரசியமான விஷயமென்னவென்றால், வேதத்தில் எங்கெல்லாம் தேவபயத்தைப் பற்றி நேரடியாக விளக்கப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் தேவனுடைய பிரசன்னம் இருப்பதை உணர்ந்ததன் வெளிப்பாடாகவே அது விவரிக்கப்பட்டிருக்கிறது. தேவபயத்தைப் பற்றிய இந்தத் தொடரில் இதுவரை நாம் படித்த சில வசனங்களை மறுபடியுமாக நாம் சிந்தித்துப் பார்ப்போம். “யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்” (ஆதியாகமம் 28:16). மோசே எரிந்து கொண்டிருந்த முட்புதரின் முன் நின்றபோது சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்” (யாத்திராகமம் 3:6). ஏசாயா தரிசனத்தில் ஆண்டவரை கண்டபோது சொல்லியது, “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்” (ஏசாயா 6:5). தேவபயத்தை தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த இந்த மனிதர்களின் உதாரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால், கடவுளுடைய பிரசன்னத்தை உணர்ந்த அல்லது வெளிப்படுத்தப்பட்ட அனுபவமே அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை நீங்கள் கண்டு கொள்ளலாம். கடவுள் அங்கு இருந்தார். அவர் அங்கு இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய பிரசன்னத்தில் இருப்பதை அறிந்திருந்தார்கள். அந்த உணர்வே அவர்களில் தேவபயத்தை ஏற்படுத்தியது. இன்னும் சில உதாரணங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பார்ப்போம்.

சங்கீதம் 139

இந்த சத்தியத்தைத் தாங்கி நிலைநிறுத்துகிற ஒரு வேதப்பகுதிதான் சங்கீதம் 139. வேதத்திலுள்ள ஏனைய பகுதிகளைவிட இதுதான் இந்த சத்தியத்தை மிகவும் தெளிவாக விளக்குகிறது. கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான பார்வை கொண்டவனும் அதே நேரத்தில் அந்தக் கடவுள் மேன்மை, மகத்துவம், பரிசுத்தம், கிருபை, தயவு, இரக்கம் ஆகியவற்றைத் தன்னில் கொண்டவராக இங்கு இருக்கிறார் என்பதையும் உணர்ந்த ஒருவனின் வார்த்தைகளாகவே இந்த சங்கீதம் இருக்கிறது. இந்த சங்கீதத்தை எழுதிய தாவீதில், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் பரவிப் படர்ந்திருக்கிறது என்ற உண்மை நிறைந்திருக்கிறது. கடவுள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்ற தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துகிறதாக தாவீது இச்சங்கீதத்தைத் துவங்குகிறார்.

கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத்  தூரத்திலிருந்து அறிகிறீர்.  நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என்வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். (சங்கீதம் 139:1-4)

இதுவரை தாவீது, கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றி தான் அறிந்திருப்பவைகளான “எல்லாவற்றையும் பார்க்கிறவர்”, “எல்லாவற்றையும் அறிகிறவர்” என்பவைகளை விளக்குகிறார். ஆனால் இவைகளை தாவீது எப்படி பார்க்கிறார்? அதாவது, வேவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்தபடியே பூமியில் நடப்பவைகளைத் துல்லியமாகப் படம் எடுக்கிறதே, அதேவிதமாகத்தான் கடவுளும் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று சொல்லுகிறாரா? பெரியவரும், உயர்ந்தவரும், எல்லாவற்றையும் அறிகிறவரும், எல்லாவற்றையும் பார்க்கிறவருமான கடவுள், வானத்திலிருந்தபடியே, நாம் சாதாரணமாக பார்ப்பதுபோல், செயற்கைக்கோளின் கண்களைக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதாக சொல்லுகிறாரா? இல்லை, 5வது வசனத்தில் அவர் சொல்லுவதைக் கவனியுங்கள், “முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.” தாவீது சொல்லுகிறார், கடவுள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிகிறார். தன்னுடைய எண்ணங்களையும் புரிந்துவைத்திருக்கிறார், தன்னுடைய நாவில் சொல் உருவாவதற்கு முன்பாகவே அவைகளை அறிகிறவர். வேவு பார்க்கும் செயற்கைக்கோள்களைப் போல் வெகு தொலைவிலிருப்பவரல்ல. அவருடைய கரம் தன் மீது இருப்பதனால், தன்னைப் புரிந்துகொள்ளுகிறார், அறிந்துகொள்ளுகிறார் என்கிறார். இது பற்றிய தன்னுடைய எண்ணங்களைத் தாவீது தொடர்ந்து எப்படிச் சொல்லுகிறார் என்று கவனியுங்கள்.

இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமுள்ளதாகவும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது.  உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். (சங்கீதம் 139:6-8)

கடவுளுடைய அறிவுக்கும் பார்வைக்கும் அப்பால் தன்னால் செல்ல இயலாது என்பதை தாவீது ஏதோ சும்மா சொல்லிவிடவில்லை. அவருடைய பிரசன்னத்திலிருந்து தான் தூர சென்றுவிட முடியாது என்கிறார். எந்தத் திசையாக இருந்தாலும், எத்தனை தூரமாக இருந்தாலும், வானமாக இருந்தாலும், பாதாளமாக இருந்தாலும், கடவுள் அங்கு இருப்பார். தாவீது என்ன செய்கிறார், எங்கு போகிறார் என்பதையெல்லாம் கடவுள் தெரிந்து வைத்திருக்கிறார் என்பதல்ல, கடவுள் தாமே அங்கு இருக்கிறார். இது ஏதோ, கடவுள் தாவீதைப் பார்த்துக்கொண்டே இருப்பார் என்பதல்ல, தாவீது தான் இருக்கிற எவ்விடத்திலும் கடவுளும் அங்கே இருக்கிறார் என்பதைத்தான் குறிப்பிடுகிறார். 9 மற்றும் 10வது வசனங்களில் தாவீது சொல்லுவதைப் பாருங்கள்,

நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.

“விடியற்காலத்துச் செட்டைகள்” என்று காலையில் உதிக்கும் சூரிய கதிர்களையே தாவீது குறிப்பிடுகிறார். சூரியன் தன்னுடைய ஒளிக்கதிர்களை எவ்வளவு வேகமாக கடல்மேல் ஒளிரச் செய்கிறது என்பதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார். கடவுள் தம்முடைய அறிவினால் ஏதோ எல்லாவற்றையும் அறிந்திருப்பதாக தாவீது சொல்லவில்லை. அல்லது கடவுள் உருவமற்றவராக இருப்பதனால் ஏதோ ஒருவகையில் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதாகவும் நினைக்கவில்லை. மாறாக அவர் சொல்லுகிறார், “நான் எங்கு சென்றாலும் கடவுள் அங்கு இருக்கிறார். அவருடைய கரம் என்மேல் இருக்கிறது, அவருடைய கரம் என்னைத் தாங்குகிறது, அவருடைய கரம் என்னை மூடுகிறது”. இது தன்னுடைய தாயின் வயிற்றில் தான் உருவான நாட்களிலிருந்தே தொடருகிறதாக குறிப்பிடுகிறார், “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்” (சங்கீதம் 139:13). நாம் இப்போது படித்துக்கொண்டு வருகிற தேவபயத்தின் இரண்டாவது அம்சமாகிய “எங்கும் நிறைந்திருக்கும் கடவுளுடைய பிரசன்னத்தை” தாவீதின் தேவபயத்தில் உங்களால் பார்க்க முடிகிறதில்லையா? இந்த உணர்வே நம்மில் கடவுளைப் பற்றிய பிரமிப்பையும், ஆச்சரியத்தையும், பயபக்தியையும் ஏற்படுத்துகிறது. அதனிமித்தமாக, இத்தகைய கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் அவருடைய சித்தத்திற்கு எதிராக நடந்து அவரைக் கோபப்படுத்துவதை ஒரு கிறிஸ்தவன் யோசித்தும் பார்க்கமாட்டான். ஆகவேதான் வேதம் சொல்லுகிறது, தேவபயமென்பது தீமையைவிட்டு விலகுவது என்று. இந்த மாபெரும் கடவுள் இங்கு இருக்கிறார் என்ற உணர்வுடன் நான் வாழ்கிறவனாக இருந்தால், அவருடைய பரிசுத்த கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் எதிராக நடப்பதைப் பற்றி ஒருபோதும் என் மனதிலும் நினைக்க மாட்டேன்.

கடவுளுடைய பிரசன்னத்தை உணருகிறதின் தாக்கம்

பாவகரமான காரியங்களைச் செய்வதற்கான சோதனை ஏற்படுகிறபோது, திடீரென்று யாராவது ஒருவர் அந்த இடத்தில் வந்ததன் காரணமாக அந்த பாவத்தைச் செய்யாமல் நாம் எத்தனை முறை தடுக்கப்பட்டிருக்கிறோம்? எடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிற ஒன்றை எடுப்பதற்காக ஒரு குழந்தை யோசித்துக் கொண்டிருந்தாலும், தன்னுடைய சகோதரனோ, சகோதரியோ அந்த அறைக்கு வந்துவிட்டால் அதைச் செய்யாமல் இருந்துவிடுகிறது. தன்னுடைய செயல்களை நியாயந்தீர்க்க வலிமையில்லாத ஒருநபரின் பிரசன்னம், அந்த குழந்தையின் நடவடிக்கையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடுமானால், தான் செய்கிற எல்லா செய்கைகளுக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய ஒருவருடைய பிரசன்னத்தில்தான் எதையும் தான் செய்கிறேன் என்று அறிந்த ஒருவரின் செயல்பாடு எப்படியிருக்கும்? அது அந்த நபரின் நடத்தை மற்றும் ஒழுக்கம் சம்மந்தமான காரியங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா? நிச்சயமாக ஏற்படுத்தும்.

ஒருவேளை நீங்கள் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வாழுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஏதோவென்று, “கிரென்ட் கெனியன்” (Grand Canyon) என்ற பகுதிக்கு சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்களில் ஆழமாக ஏற்படுத்துகிறது. உடனே நீங்கள் கிரென்ட் கெனியனைப் பற்றிய எல்லா தகவல்களையும் திரட்டுகிறீர்கள். அந்த இடத்திற்கு இதுவரை நீங்கள் போனதில்லை. கடவுளுடைய அற்புதமான படைப்புகளில் ஒன்றாகிய அந்த இடத்தைப் பற்றிய எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள். கிரென்ட் கெனியனின் மேன்மை, மகத்துவம், அதனுடைய எல்லை கடந்த அற்புதங்கள் யாவற்றையும் பற்றிய தகவல்களைத் திரட்டத் துவங்குகிறீர்கள். மேலும், அதன் அற்புதக் காட்சிகளை விவரிக்கிற புகைப்படத் தொகுப்பு புத்தகங்களையும் சேகரிக்கிறீர்கள். பல வாரங்களாக இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களையெல்லாம் சேகரித்த பிறகு, உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்கிறீர்கள், இதெல்லாம் என் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதென்று. உங்களால் மறுக்க முடியாத ஒரு பதிலை அந்த கேள்வி உங்களுக்குத் தரும், கிரென்ட் கெனியனைப் பற்றி நான் கற்றுக் கொண்ட எல்லா தகவல்களும் என்னுடைய எண்ணத்திலும் வாழ்க்கையிலும் எந்தவிதமான பெரிய மாற்றங்களையும் செய்துவிடவில்லை என்பதுதான்.

ஆனால் ஒருவேளை, திடீரென்று ஒரு நாள் காலையில், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் எழுந்த ஒரு மாபெரும் ஒளி உங்களை கட்டித் தூக்கிக் கொண்டு, கை சொடுக்குகிற நேரத்தில் உங்களை கிரென்ட் கெனியனில் கொண்டு போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். என்ன நடக்கும்? நிச்சயமாக, அது காலை நேரம் என்பதனால், டூத் பேஸ்ட் எடுத்து பல் தேய்த்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். மாறாக, “அற்புதம், ஆச்சரியம். நான் கிரென்ட் கெனியனில் இருக்கிறேன். பல வாரங்களாக இவைகளைப் பற்றி நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அதை உண்மையில் கண்ணாரக் காண்கிறேன். நான் இப்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறேன்” என்பீர்கள், இல்லையா? என்ன நடந்தது? கிரென்ட் கெனியனைப் பற்றிய எந்த விஷயமும் மாறவில்லை. நீங்கள் இதுவரை படித்த அனைத்தையும் இப்போது நேரடியாகப் பார்க்கலாம். என்னதான் மாற்றம் ஏற்பட்டுள்ளது? நீங்கள் தற்போது கிரென்ட் கெனியனில் இருக்கிறீர்கள் என்பதுதான். கிரென்ட் கெனியனைப் பற்றி நீங்கள் படித்த அனைத்துத் தகவல்களும் உங்கள் கண் முன் வந்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும். ஏன்? ஏனென்றால், நீங்கள் படித்த அத்தனை விஷயங்களையும் நேரடியாக சென்று பார்க்கும் தொலைவில்தான் இருக்கிறீர்கள். தற்போது நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள்.

இதைத்தான் நான் கடவுளைப் பற்றிய விஷயத்திலும் குறிப்பிட விரும்புகிறேன். கடவுளைப் பற்றிய எல்லா தகவல்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். வேதப்பூர்வமான, நல்ல சீர்திருத்த சத்தியங்கள் வாயிலாகவும் கடவுளைப் பற்றி அறிந்திருக்கலாம். அவர் பரிசுத்தர், சர்வஏகாதிபத்தியமுள்ளவர், எல்லை கடந்தவர், மிகப் பெரியவர், முழுச் சுதந்திரமுடையவர் என்று பலவற்றையும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்த கடவுளின் பிரசன்னம் எங்கும் படர்ந்து நிறைந்திருக்கிறது என்ற அந்த உணர்வை உங்களில் வளர்த்துக்கொள்ளாதவரை, நீங்கள் அறிந்திருக்கிற அந்த அறிவு நீங்கள் வாழும் முறையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆகவேதான் சிலர், கடவுளைப் பற்றிய இறையியல் அறிவு குறைந்தளவே கொண்டிருந்தாலும், கடவுளின் பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற அந்த உணர்வை அதிகமாகக் கொண்டிருப்பதினால்தான் அவர்கள் மிகுந்த தேவபக்தியும், கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையையும் வாழுகிறார்கள். சிலர், கடவுளைப் பற்றி பெரிய அளவில் சீர்திருத்த சத்தியங்களாக அறிந்திருந்தும், அந்த கடவுள் எங்கோ தூரத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதினால், கடவுளைப் பற்றி குறைந்தளவு அறிந்தவர்களிடம் காணப்படுமளவுக்கு தேவபக்தியும் பயமும் இவர்களிடம் இருப்பதில்லை.

கடவுள் வானத்தில் சுற்றி வருகிற செயற்கைக்கோளல்ல. அவர் எப்போதும் இருக்கிறவர். ஒரு நபருக்கான இலக்கணங்களைக் கொண்டவர். உண்மையில் சொல்லுவதானால், அவர் இருக்கிற சூழலில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். பவுல் சொல்லுவதுபோல், “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” (அப்போஸ்தலர் 17:28). இது கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பதுபோன்ற கோட்பாடல்ல. கடவுளுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைப் பற்றி பெரியளவில் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனாலும் இது வேதம் போதிக்கும் உண்மை. தேவபயத்தில் கடவுளுடைய பிரசன்னத்தை உணர்தல் என்பது இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

கடவுளுடைய பிரசன்னத்தின் எங்கும் நிறைந்த தன்மையை அனுபவித்தவர்களின் வாழ்வில் ஏற்பட்ட நடைமுறைத் தாக்கத்தைப் பற்றிய இரண்டு உதாரணங்களை நாம் பார்ப்போம்.

ஆபிரகாமோடு கடவுளுடைய பிரசன்னம்

ஆதியாகமம் 17:1ல் நாம் வாசிக்கிறோம், “ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.” அதாவது, என்னுடைய கண் உன்மேல் இருக்கிறது, என் பிரசன்னம் உன்னோடு இருக்கிறது, எந்த சந்தர்ப்பத்தில் இருந்தாலும் என்னிடத்தில் உனக்குள்ள உறவைப் பற்றிய விழிப்புணர்வுடனேயே எப்போதும் நடக்க வேண்டும் என்று ஆண்டவர் சொன்னார். எப்படி நடத்தல்? “உத்தமனாயிருத்தல்”. தனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளுடைய குணாதிசயங்களை நம்புகிறவனும், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வை தன்னில் வளர்த்துக்கொண்டவனுமாகிய ஒருவனுடைய வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் நடத்தையின் வெளிப்பாட்டை இங்கு நாம் பார்க்கலாம். கடவுளுக்குக் கீழ்ப்படிகிற வாழ்க்கையை அவன் வாழுவான். இதைத்தான் நாம் ஆதியாகமம் 22ல் பார்க்கிறோம். வாக்குத்தத்தத்தின் மகனாகிய ஈசாக்கைக் கூட்டிக்கொண்டு, தகன பலியாக அவனைப் பலியிடுவதற்கு ஆபிரகாம் சென்றபோது இந்தக் கீழ்ப்படிவைத்தான் அது ஆபிரகாமில் காட்டுகிறது. கடவுள் தனக்குச் சொன்ன அந்தக் காரியத்தைக் கிட்டதட்ட செய்ய முற்படுகிற அந்த கடைசி நிமிடத்தில்தான் கடவுள் அதை செய்யாதபடிக்கு அவரை தடுத்தார். 12வது வசனத்தில், கடவுள் ஆபிரகாமிடத்தில் என்ன சொன்னார் என்று பாருங்கள், “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்றார். ஆபிரகாமுடைய தேவபயம்தான், தன்னுடைய நேச குமாரன் என்றும் பாராமல் மனப்பூர்வமாக கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்படி அவரைச் செய்ய வைத்தது.

யோசேப்போடு கடவுளுடைய பிரசன்னம்

இந்த போதனையைத் தருகிற இன்னொரு அற்புதமான வேதப்பகுதி ஆதியாகமம் 39. பார்வோனின் அரண்மனையில் அழகான இளம் ஆண்மகனாக இருந்தார் யோசேப்பு. பார்வோனின் அரண்மனையில் வேற்று மதங்களின் அநேக ஒழுக்கக்கேடான செய்கைகளும் இருந்திருக்கும் என்று நாம் உறுதியாக சொல்ல முடியும். இளம் வயதிலிருக்கும் ஒரு சாதாரண ஆண்மகனுக்கு இருக்கும் பாலியல் விருப்பங்கள் யோசேப்புக்கும் இல்லாமல் இருந்திருக்காது. இருந்தபோதும் அவர் தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, தன்னுடைய எஜமானாகிய போத்திபாரின் மனைவியிடமிருந்து பாலியல் தொல்லை வந்தது. ஆரம்பத்திலேயே யோசேப்பு அவளை நிராகரித்தார். தன்னுடைய கவர்ச்சியைப் பயன்படுத்தி அவள் யோசேப்பை மசிய வைக்க தொடர்ந்து முயற்சித்தாள். ஒரு நாள், இதன் உச்சகட்டமாக, வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்து, அவள் யோசேப்பை பிடித்துக்கொண்டு, தன்னோடு தகாத உறவு கொள்ளும்படி அவனிடம் கெஞ்சினாள். இருப்பினும், கடவுளுடைய பெரிதான கிருபையினால், யோசேப்பு அவளுடைய கேடான வசீகர செய்கைகளையெல்லாம் நிராகரித்தார். அவளை விட்டு ஓடினார். அவள் தன்னைப் பற்றிப் பிடித்திருந்தபடியினால், அவளுடைய கையில் தன் சட்டையை விட்டுவிட்டு ஓடினார். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்த இரவு மங்கை, யோசேப்பின் அந்த சட்டையையே ஆதாரமாகக் காட்டி யோசேப்புதான் தன்னிடம் முறைகேடாக நடக்க முயற்சித்ததாக குற்றஞ் சாட்டினாள். இதன்காரணமாக யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார்.

இருப்பினும், இந்த பயங்கரமான சோதனையின் மத்தியில், எது தன்னை இந்த சோதனையிலிருந்து காப்பாற்றியது என்பதைப் பற்றி யோசேப்பு சொல்லியிருக்கிறார். ஆதியாகமம் 39:9, யோசேப்பு போத்திபாரின் மனைவியிடம் சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.” தான் கடவுளுடைய முகத்திற்கு முன்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற உணர்வுதான் யோசேப்பை இப்படிச் செய்ய வைத்தது. போத்திபாருடைய மனைவியின் கேடான வசீகர பேச்சுக்களையெல்லாம் நிராகரித்ததற்கு அடித்தளமாக இருந்ததும் அதுதான்.

எந்தவொரு பாவத்திற்குமான முதல் படியாக, அந்த பாவத்திற்கான உறுதியான தூண்டுதல் உண்டாகிறபோது, கடவுள் அந்த இடத்தில் இருக்கிறார் என்ற உணர்வை அது நம்மிடத்திலிருந்து எடுத்து விடுகிறது. சிந்தித்துப் பாருங்கள். அநேக பாவங்களை நாம் செய்யாமல் இருப்பதிலிருந்து நம்மை தடுப்பது, இன்னொரு மனிதன் அந்த இடத்தில் இருப்பதுதான். உங்களுடைய மனைவியுடன் ஏதோ சிறு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம். யாரோ ஒரு மனிதன், அவன் கிறிஸ்தவனாகக் கூட இருக்க வேண்டிய அவசியமில்லை, அந்த நேரத்தில் அவன் அங்கு வந்தால் என்ன நடக்கிறது? வேறு ஒரு மனிதன் அங்கு வந்தது உங்களைக் கவனமாகப் பேசச் செய்கிறது, உடனடியாக நீங்கள் இனிய மனிதனாக மாறிவிடுகிறீர்கள். அல்லது உங்களுடைய பள்ளியில் யாரும் உங்களைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில் மற்றவர்களை ஏமாற்றப் பார்ப்பீர்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்களுடைய ஆசிரியர் அங்கு வந்து உங்களுடைய தோளில் கை வைத்தால், என்ன செய்வீர்கள்? உடனடியாக அதை நிறுத்திவிடுவீர்கள், இல்லையா? ஏன்? ஏனென்றால், இன்னொரு மனிதன் அங்கு வந்துவிட்டான் என்பதுதான். அப்படியானால், கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வு நம்மில் இருக்குமானால், அது எத்தகைய விளைவுகளை நம்மில் உண்டாக்கும் என்பது தெரிகிறதா? யோசேப்பில் அது என்ன செய்தது என்பதை நாம் பார்த்தோம். அவரை பாவம் செய்வதிலிருந்து அது விலக்கியது.

கடவுளுடைய பிரசன்னம் பாவத்திற்கு எதிராக நம்மை கட்டுப்படுத்துகிறது

இந்த உண்மையின் அடிப்படையில்தான், புதிய ஏற்பாட்டிலும் கூட, நாம் ஒழுக்கமுள்ளவர்களாக நன்னடத்தையுள்ளவர்களாக வாழவேண்டும் என்று சொல்லப்படுகிறபோதெல்லாம், நாம் தேவபயமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் இதை நாம் பார்க்கலாம்,

“இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2 கொரிந்தியர் 7:1).

பரிசுத்தமாகுதலை தேவபயத்தின் சூழலில் நாம் பூரணப்படுத்த வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார். அதாவது கடவுளுடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற உணர்வாகிய தேவபயத்தின் தவிர்க்கமுடியாத இந்த சூழலில் நாம் பூரணப்படுத்தப்பட வேண்டும். என்னுடைய உள்ளான மனதிலுள்ள எல்லா அசுத்தங்களும் நீங்குவதற்கு நான் ஏன் சிரத்தை எடுத்து முயற்சிக்க வேண்டும்? ஏனென்றால் கடவுள் இங்கு இருக்கிறார். அவர் பார்க்கிறார், அறிகிறார், தமக்குப் பிடிக்காதவைகளும், தம்முடைய பரிசுத்த குணாதிசயங்களுக்கு எதிரானவைகளையும் காணுகிறபோது துக்கப்படுகிறார். அவர் சும்மா எங்கோ இருந்துவிடவில்லை. 2 கொரிந்தியர் 6:16ல் சொல்லுகிறார், “நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்”. இந்த வாக்குத்தத்தத்தின் அடிப்படையில்தான் பவுல், “நம்மை சுத்திகரித்துக் கொண்டு பரிசுத்தமாகுதலை தேவபயத்தின் சூழலில் நாம் பூரணப்படுத்த வேண்டும்” என்று சொல்லுகிறார்.

அறிவின் மையமாக இருப்பது தேவபயம்தான். அந்த பயம், முதலில், கடவுளுடைய குணாதிசயங்களைப் பற்றிய சரியான புரிதலை அடித்தளமாகக் கொண்டது, இரண்டாவது, அவருடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருப்பதை உணருவதில் மேலும் கட்டப்படுகிறது. இந்த பயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இதைப் பற்றி நீங்கள் குறைந்தளவேனும் அறிந்திருந்தாலும் அதற்காக ஆண்டவருக்கு உங்களுடைய இருதயத்திலிருந்து நிச்சயமாக நன்றி கூறுவீர்கள். இந்த விளக்கங்கள், நம்முடைய கீழ்த்தரமான வாழ்க்கையையும், நம்முடைய ஆவிக்குரிய குறைபாட்டையும் சுட்டிக்காட்டுகிறதில்லையா? கடவுளுடைய அற்புதமான படைப்பு மற்றும் பராமரிப்பின் செயல்களை, கிரென்ட் கெனியனைப் பற்றிய புத்தகங்கள் மற்றும் படங்கள் வாயிலாக அதிகமாக நாம் கற்றறிந்திருக்கிறோம். ஆனால் நாம் கிரென்ட் கெனியனுக்குப் போய், நேரடியாக அதன் மகத்துவங்களை காணுவதற்கான வழிவகைகளைத்தான் செய்வதில்லை.

3. கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு

தேவபயத்தின் அடிப்படை அம்சங்களில் இது மூன்றாவது அம்சம். இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், தேவபயத்துடன் வாழுவதென்பது, வெறுமனே அவர் யார் என்று அறிவதும், அவர் இங்கு இருக்கிறார் என்று அறிவதும் மட்டுமல்ல. நான் எந்த இடத்திலிருந்தாலும், அங்கு இந்த மாபெரும் கடவுள் இருப்பதை உணர்ந்து, அந்த நிலையில் நான் அவருக்கு செய்ய வேண்டிய கடமை பொறுப்புகளை செய்கிறவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

ஜோன் மரே மிகவும் நுட்பமாக சொல்லிய வார்த்தைகளை சிந்தித்துப் பாருங்கள்,

“கடவுளோடு நமக்குள்ள உறவைத் தொடர்ச்சியாக உணர்த்துவதுதான் தேவபயம். தேவதூதர்களோடும், பிசாசோடும், சக மனிதர்களோடு, இன்னும் ஏனைய காரியங்களோடும் நாம் தொடர்புபடுத்தப்பட்டாலும், நம்முடைய முதன்மையான உறவு கடவுளோடு உள்ளது. கடவுளோடு நமக்குள்ள உறவின் அடிப்படையில்தான் ஏனைய உறவுகளெல்லாம் முடிவு செய்யப்படுகிறது. தேவபக்தியுள்ள ஒருவன், எந்தவொரு காரியத்தைச் செய்கிறபோதிலும், முதலாவது, கடவுளுக்கும் அவனுக்கும், கடவுளுக்கும் தான் செய்கிற காரியத்திற்கும் இடையில் இருக்கிற உறவைப் பற்றிய எண்ணத்தோடுதான் செயல்படுவான்.”

திருச்சபையில் நடக்கும் ஆராதனை வேளையைக் கொண்டு இந்த குறிப்பை நன்றாக விளக்கலாம். ஆராதனை வளாகத்திலுள்ள இருக்கையில் அமர்ந்து, நீங்கள் ஆராதனை செய்கிறபோது, நீங்கள் தேவதூதர்களுடன் அங்கிருக்கிறீர்கள் (1 கொரிந்தியர் 11:10; எபிரெயர் 1:13-14), பிசாசுகளும் அங்கிருக்கிறது (எபேசியர் 6:12; மாற்கு 13:19), மற்றும் அநேக மனிதர்களும் அங்கிருக்கிறார்கள். உங்களுடைய மனைவி, கணவன், தகப்பன், தாய், சகோதரர்கள், சகோதரிகள் அல்லது அறிமுகமானவர்கள் என்று இப்படியான உறவுகளுக்கு அருகில் அமர்ந்திருக்கலாம். உயிரற்ற பொருட்களுடனும் நீங்கள் அங்கு சேர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் அமர்ந்திருக்கிற இருக்கையோடு உங்களுக்குத் தொடர்பு உண்டு, உங்கள் கைகளில் வைத்திருக்கிற பாடல் புத்தகத்தோடும், மற்றும் உங்களுக்கு தேவையான பொருட்களைக் கொண்டுவர பயன்படுத்துகிற பையோடும் உங்களுக்குத் தொடர்பு உண்டு. நீங்கள் அமர்ந்திருந்து கடவுளை ஆராதிக்கிற வேளையில் இப்படிப் பலவிதமான காரியங்களோடு உங்களுக்குத் தொடர்பு உண்டு. ஆனால் நீங்கள் தேவபயத்துடன் திருச்சபை வளாகத்திற்குள் நுழைவீர்களானால், உங்களுடைய எண்ணம் மற்றும் சிந்தனை முழுவதிலும் வேறு எதனுடனும் இருக்கிற உறவைக் காட்டிலும் கடவுளோடு உங்களுக்கு இருக்கிற உறவே எல்லாவற்றையும்விட முதலிடம் பெறும். அப்போது நீங்கள் அங்கு அமர்ந்திருக்கிறபோது, சில கேள்விகளுக்கான பதிலைத் தேடிக்கொண்டிருப்பீர்கள்: என்னிடத்தில் கடவுளுடைய உறவு எப்படி இருக்கிறது?, கடவுளிடத்தில் என்னுடைய உறவு எப்படி இருக்கிறது?, அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதென்ன? அவர் என்னிடத்தில் எதிர்பார்ப்பதை இந்த நேரத்தில் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேனா? என்பவைகளைப் பற்றியதாக உங்கள் சிந்தனை இருக்கும். தேவபயத்துடன் நீங்கள் ஆராதிக்கிறவர்களாக இருந்தால், உங்களுடைய மிக முக்கியமான உறவு கடவுளுடன்தான் இருக்கும். உங்களுடைய மிகப் பெரிய கவலையே, கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்றுகிறீர்களா? இல்லையா? என்பதாகத்தான் இருக்கும்.

நீங்கள் பொது ஆராதனைக்குக் கூடுகிறபோது, நீங்கள் கடவுளுடைய மக்களோடு ஒருவராக, அவர்களோடு சேர்ந்து கடவுளை ஆராதிக்கிறீர்கள் என்பதில் உங்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இருப்பதில்லை. இந்தவிதத்தில் கூடுகிறபோது, நம்முடைய சகோதர சகோதரிகளோடு நமக்குள்ள உறவில் விரிசல் ஏற்படுமானால், அந்த விரிசல் சரிசெய்யப்படுகிறவரை நம்முடைய ஆராதனையை தள்ளி வைக்கும்படி நம்முடைய ஆண்டவர் போதிக்கிறார்,

23ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், 24அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (மத்தேயு 5:23-24)

அதேபோல், அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபையிலிருந்த சில ஒழுங்கற்ற செயல்களை சரிபடுத்தும்போது, கர்த்தருடைய பந்தியில் நாம் கூடுகிறபோது, நாம் யாவரும் சகோதர சகோதரிகள் என்ற எண்ணத்துடன் கூட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்,

“ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.” (1 கொரிந்தியர் 11:33)

இருப்பினும், எது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நாம் வரிசைப்படுத்துவோமானால், ஆராதனையில் கடவுளோடு நமக்குள்ள உறவைப் பற்றிய எண்ணமே முதன்மையானதாக இருக்க வேண்டும். இதைத் தவிர்த்த வேறுவிதமான எண்ணத்தோடு நாம் ஆராதனைக்குக் கூடுவோமானால், அதைப் பற்றி ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள்,

“இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது”. (மாற்கு 7:6)

தேவபயத்தின் முக்கியத்துவமும், அது வலியுறுத்தும், கடவுளுக்கான நம்முடைய பொறுப்புகளும், இதோடு தொடர்புடைய ஒரு முக்கியமான கேள்வியை நம்முன் எழுப்புகிறது, நீங்கள் ஆராதனையில் ஈடுபடுகிறபோது, உங்களுடைய மிக முக்கியமான உறவு என்னவாக இருந்திருக்கிறது, தற்போது அது என்னவாக இருக்கிறது? கடவுளோடுள்ள உறவாக அது இருக்கிறதா? அல்லது உங்களுடைய கைக்கடிகாரமாக இருக்கிறதா? ஆராதனை வேளையில் உங்களுக்குள்ளாக, “எப்படியோ முக்கால் மணிநேரம் கடந்து விட்டது, இன்னும் கால் மணிநேரந்தான் மீதமிருக்கிறது” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா? அல்லது உங்களுடைய தாய் தகப்பனின் உறவுதான் மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா? இங்கிருக்கிற நேரத்தில், உங்களுக்குள்ளாக, “நான் ஆராதனைக்கு வரவேண்டும் என்று என்னுடைய தகப்பனும் தாயும் சொன்னதனால்தான், இங்கிருப்பது எனக்கு கஷ்டமானதாக இருந்தாலும், நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று சொல்லிக் கொள்ளுகிறீர்களா? அல்லது உங்களுடைய மதிப்பு மரியாதைதான் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறதா? அதாவது, “நான் இந்த சபையின் அங்கத்தினராக இருக்கிறேன். ஆராதனைக்கு நான் வராவிட்டால் ஒருவேளை ஆவிக்குரிய காரியங்களில் நான் பின்தங்கியிருப்பதாக சிலர் என்னைப்பற்றி நினைப்பார்கள், ஆகவேதான் நான் இங்கு வந்து கூடியிருக்கிறேன்” என்று சொல்லுகிறீர்களா? இவைகள்தான் உங்களைத் திருச்சபைக்கு வரச்செய்கிறதா? இது எந்தளவு நடைமுறையோடு சம்மந்தமுடையது என்பது உங்களுக்குத் தெரிகிறதா? திருச்சபையின் வாயிலில் நுழைகிறபோதும் அதற்கு முன்னும் உங்களுடைய இருதயத்தில் ஆழமாகத் தோன்றுகிற எண்ணம் என்ன என்று சிந்தித்துப் பாருங்கள்? நீங்கள் தேவபயத்தோடு நடக்கிறவர்களாக இருந்தால், தேவபயத்தோடு ஆராதனைக்கு வருகிறவர்களாக இருந்தால், கடவுளுக்கான உங்களுடைய கடமை பொறுப்பைப் பற்றிய விழிப்புணர்வு கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள்.

கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளின் தன்மை

கடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு தேவபயத்தின் இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாக இருக்குமானால், அப்போது கடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்? கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகள் அனைத்தையும் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம்:

 1. அவர் மீது உச்சகட்ட அன்புகாட்டுதல்
 2. உளப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிதல்
 3. முற்றுமுடிய அவரில் நம்பிக்கை வைத்தல்

1. அவர் மீது உச்சகட்ட அன்புகாட்டுதல்.

முதலாம் பிரதான கட்டளை என்ன? கடவுள் நம்மில் ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பதென்ன? நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் இக்கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான அவருடைய பதிலை மத்தேயு 22:37-38ல் வாசிக்கலாம், “இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை”. இந்த உலகத்தில், சக மனிதர்களோடும், தேவதூதர்களோடும், பிசாசுகளோடும் இன்னும் ஏனைய காரியங்களோடும் நான் இருக்கிறேன். இவையெல்லாவற்றோடும் எனக்குத் தொடர்பு இருந்தபோதிலும், ஒருவன் கடவுளுடைய மெய்யான பிள்ளையாக இருந்தால், தேவபயத்தோடு வாழ்கிறவனாக இருந்தால், கடவுளுக்கான தன்னுடைய கடமை பொறுப்புகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறவனாகவும் அதற்கேற்றபடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுகிறவனுமாகவே இருப்பான். தனக்காக இந்த மாபெரும் கட்டளையை பூரணமாக நிறைவேற்றிய ஒருவரில் தன் இரட்சிப்பிற்காக நம்பிக்கை வைக்கிற ஒருவன், கடவுளில் உச்சகட்ட அன்புகாட்டுகிறவனாக இருப்பான்.

கடவுளுடைய பிள்ளைகளில் ஒருவருடைய வாழ்க்கையில் இது எந்தளவு செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு உறுதியான உதாரணத்தை உங்களுக்குக் காட்டுகிறேன். ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய ஒரு கிறிஸ்தவன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் வேலை செய்கிற அலுவலகத்தில், சில நாட்களுக்கு முன் அவருடைய சிறப்பான வேலையின் காரணமாகவும் கம்பெனிக்கு உண்மையாக இருந்ததன் காரணமாகவும் அவருக்குக் குறிப்பிடும்படியான சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது. எப்போதும் அவர் அலுவலகத்திற்கு போகிறபோது, வழியிலிருக்கிற ஒரு புதிய கார் நிறுவனத்தை பார்த்துக் கொண்டே செல்லுவார். அங்கிருந்த பளபளப்பான ஒரு கார் அவர் கண்ணில் எப்போதும் படும். அந்த கார் தன்னுடையதாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசை அவரில் உண்டாகிறது. அதை வாங்குவது பொருளாதாரரீதியாக தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏற்றதாக இருக்காது என்பதும், தன்னுடைய வருமானம் கூடியிருந்தாலும் கடவுளுடைய மெய்யான சீடனுக்குரிய கடமைகளை செய்வதற்கு அது ஏற்றதாக இருக்காது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இருந்தாலும் அந்த கார் பார்ப்பதற்கு அழகாக இருந்ததினால், அப்படி அவருக்கு தோன்றுகிறது. அவருடைய கண்ணில் இருக்கிற இச்சையை அந்த கார் வெளிப்படுத்துகிறது. அந்த காரை வாங்கினால் தன்னுடைய வருமான உயர்விற்கு ஏற்றபடி கடவுளுடைய பணிக்காக சபைக்கு தான் கொடுக்க வேண்டிய அளவிற்குக் கொடுக்க முடியாது என்பதை அவர் நன்றாக அறிவார். நமக்கு வருகிற எல்லா வருமானங்களினாலும் கடவுளை கனம்பண்ண வேண்டும் (நீதிமொழிகள் 3:9) என்று கடவுள் சொல்லியிருப்பதையும் அவர் அறிவார். ஆனால், கிறிஸ்தவ சுதந்திரத்தின்படி தன்னுடைய இந்த வருமான உயர்வின் அளவுக்கு, சபைக்கு தான் கொடுப்பதை உயர்த்துவதும் உயர்த்தாமல் இருப்பதும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின்படியானது என்று எண்ண ஆரம்பிக்கிறார். கடவுளைவிட அந்த காரின் நிறம், அழகு, வேகம் ஆகியவற்றை நேசிக்கும் சோதனைக்கு உட்படுகிறார். அந்த சோதனைக்கு அவர் இணங்கினால், அவர் தேவபக்தியில் நடக்கிறவராக இருக்க முடியாது. அவர் தேவபயத்தில் நடக்கிறவராக இருந்தால், விக்கிரக ஆராதனையைப்போல் அந்த புதிய காரோடு சரணடைகிறபடியான சோதனைக்கு உள்ளாகியிருக்க மாட்டார்.

புதிய கார்களை வாங்கக் கூடாது என்று நான் சொல்லுகிறேனா? நிச்சயமாக இல்லை. நான் சொல்லுகிறதென்னவென்றால், அந்தக் காரை வாங்குவதற்கு அந்தக் காரின் மீது தனக்கிருக்கிற ஆசை, ஆண்டவர்மீது தான் கொண்டிருக்கிற அன்புக்கு எதிராகவும், அதை முந்துகிறதாகவும் இருப்பதைத்தான் கூடாது என்கிறேன். அந்த காரின் மீது தனக்கு ஏற்பட்ட ஆசை, கடவுளுடைய வார்த்தைக்கு உளப்பூர்வமாகக் கீழ்ப்படிய வேண்டியதை தடை செய்யுமானால், அந்த நபர் தேவபயத்தில் நடக்கவில்லை என்பதையே காட்டுகிறது. நம்முடைய ஆண்டவர், பாவிகள் தம்மை நாடி வந்து தம்முடைய சீடர்களாகும்படி அழைத்தபோது, அவர் சொல்லிய வார்த்தைகளைக் கவனியுங்கள், “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:26). அவர் சொல்லுகிறார், “நீங்கள் என்னிடம் வந்தால், நியாயமான பராமரிப்பின்படி உங்கள் மீது இருக்கிற அன்பையும் நீங்கள் தியாகம் செய்ய வேண்டும்.” அவர்மீது அன்புகாட்டுதல் என்பது உங்களுடைய சொந்த வாழ்க்கையையும் அவருக்காக இழக்க தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். தேவபயத்துடன் வாழுதல் என்பது கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுவதாகும். அதற்காக எப்பேற்பட்ட விலை கொடுப்பதற்கும் தயங்காதிருப்பதாகும், அது ஒருவேளை அழகிய காரை வாங்குவதை தவிர்ப்பதாகவும் இருக்கலாம்.

கடவுளிடத்தில் முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்புகூர வேண்டும் என்ற அவருடைய தெய்வீக கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிவதென்பது இயலாத காரியம் என்று கடவுளுடைய எந்தவொரு மெய்யான பிள்ளைக்கும் நன்றாகத் தெரியும். கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டாமலிருக்கும் பாவத்தைச் செய்யாமலிருப்பதற்கு கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் வல்லமை தனக்குத் தொடர்ச்சியாக தேவை என்பதை எந்தவொரு மெய்யான கிறிஸ்தவனும் அறிந்திருப்பான். அதேவேளை, அவன் கடவுளுடைய பிள்ளையாக தேவபயத்துடன் வாழ்ந்து வருவதினால், கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதலாகிய தன்னுடைய கடமை பொறுப்பை மகிழ்ச்சியோடு அரவணைத்து, அக்கடமைப் பொறுப்பிற்கு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாழுவான். கடவுளுக்கு எதிராக யாரோ அல்லது எதுவோ தன் வாழ்வில் குறுக்கிடுவதை அவன் பொறுத்துக்கொள்ள மாட்டான். தேவபயத்துடன் வாழுவதென்பது கடவுளிடத்தில் உச்சகட்டமாக அன்புகாட்டுவதை உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து செய்வதாகும்.

2. உளப்பூர்வமாக அவருக்குக் கீழ்ப்படிதல்

கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளில் இரண்டாவது அம்சமாகிய, அவருடைய கட்டளைகளுக்கு எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிவதென்பது கடவுள் மீது நமக்கிருக்கும் உச்சகட்ட அன்பிற்கான நிரூபணம். இயேசு சொன்னார், “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்” (யோவான் 15:14). நம்முடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். அப்படிச் செய்யும்படி ஆண்டவர் சொல்லியிருக்கிறார் (ரோமர் 13:1). மதரீதியாக நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும், “தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்” (எபிரெயர் 13:7). நமக்கு மேலிருக்கும் அதிகாரிகளுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் (1 பேதுரு 2:18). ஆனால் கடவுளுக்கு மட்டும்தான் எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கீழ்ப்படிய வேண்டும். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்திற்கும், அவரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரிகளுடைய (நாட்டில், சபையில், வீட்டில், அலுவலகத்தில்) கட்டளைகளுக்கும் முரண்பாடு தென்படுமானால், அப்போது அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29ன்படி செயல்பட வேண்டும், “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தையை கவனியுங்கள் “அவசியமாயிருக்கிறது”. இது நம்முடைய கடமை பொறுப்பு. மனிதனுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது, பயப்படுவது அவசியம் என்கிறார் பேதுரு. தேவபயத்துடன் வாழ்ந்த மனிதன்தான் பேதுரு. அவர் யூத மதத் தலைவர்களைப் பார்த்து சொல்லுகிறார், “உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கடமை பொறுப்பை மிஞ்சுகிற அளவுக்கு எனக்கு ஒரு கடமை பொறுப்பு இருக்கிறது. அதுதான் என்னுடைய கடவுளுக்கான என் கடமை பொறுப்புக்கள்.” அதுதான் தேவபயம்.

தேவபயத்துடன் கீழ்ப்படிவதென்பதை விளக்குகிற ஒரு அற்புதமான உதாரணம், நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலேயே இருக்கிறது. நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி வேதம் சொல்லுகிற வார்த்தைகளைக் கவனியுங்கள்,

“ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.” ஏசாயா 11:2

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவபயத்துடன் நடந்து கொண்டார். தேவபயம் அவரில் எப்படிச் செயல்பட்டதென்று பாருங்கள்! பிதாவை அவர் உச்சகட்டமாக நேசித்ததை, அவர் கெத்செமனேயிலும் கொல்கொதாவிலும் இருந்தபோது நடந்த நிகழ்வுகள் காட்டுகிறது. பிதாவின் மடியிலிருக்கிற குமாரனாக இருந்தபோதிலும், பிதாவோடு உணர்வுரீதியாக தொடர்பு கொண்டிருப்பதை அவர் நேசித்தார், அதில் களிகூர்ந்தார். “நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர்” (யோவான் 11:42) என்று அவரால் தம்முடைய பிதாவிடம் சொல்ல முடிந்தது. ஆனால், கடவுளுடைய பக்கத்துணையும், ஆறுதலும் இல்லாத ஒரு வழியில் நடக்க வேண்டும் என்பது குமாரனுக்கான பிதாவின் திட்டமாக இருந்தது. கெத்செமனேயில், பாவமறியாத அவரை நமக்காக பாவமாக்கினார் என்பதன் ஆழங்களைப் பிதாவானவர் தாம் மிகவும் நேசிக்கிற தம்முடைய குமாரனுக்குத் தெரியப்படுத்தினார். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதற்காக தம்முடைய உயிரையே விடவேண்டியிருந்தது. இருப்பினும், அவர் தேவபயத்தின் ஆவியிலேயே நடந்தார். தம்முடைய பிதாவின் மீது அவருக்கிருந்த அந்த உச்சகட்ட அன்பு அவரை இப்படிச் சொல்ல வைத்தது, “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (லூக்கா 22:42). கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்பிலுள்ள இரண்டாவது அம்சத்திற்கான ஒரு அழுத்தமான உதாரணத்தை நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகள் காட்டுகிறது. அதாவது எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதாகும். அவருக்கு நடக்கவிருக்கிற பயங்கரமான நிகழ்வுகளைப் பற்றிய உண்மைகள் அவரை பின்னடையச் செய்யக்கூடியதாக இருந்தபோதிலும், வேதம் சொல்லுகிறது, அவர் “மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலிப்பியர் 2:8).

கெத்செமனேயின் வியாகுலங்களின்போது, பிதாவின் சித்தத்தை தம்முடைய முழு இருதயத்தோடு தழுவிக் கொண்டபோது, நம்முடைய ஆண்டவர் சொல்லிய வார்த்தைகளில் தேவபயத்தை எங்கு பார்க்கிறோம் என்று நீங்கள் கேட்கலாம். எபிரெயர் நிருபத்தை எழுதியவர், கெத்செமனேயில் நம்முடைய ஆண்டவரின் அனுபவத்தை விவரிக்கிறார்,

“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு” (எபிரெயர் 5:7-8).

3. அவரில் முழுமையான நம்பிக்கை வைத்தல்

கடவுளுக்கான நம்முடைய கடமை பொறுப்புகளில் மூன்றாவது, அவரில் முழுமையான நம்பிக்கை வைத்தலாகும். “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபிரெயர் 11:6). கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதலாகிய கடமை பொறுப்பை நிறைவேற்றுவதற்கான விழிப்புணர்வைப் பற்றி ஆபிரகாமின் வாழ்க்கையில் நாம் பார்த்தோம். தன்னுடைய சொந்த மகனைவிட கடவுள் மீதுதான் தனக்கு அதீத அன்பு இருக்கிறது என்பதை ஈசாக்கை பலியிடுவதற்காக கையை நீட்டிக் கத்தியை எடுத்ததன் மூலமாக அவர் நிருபித்தார். கடவுளிடத்தில் அன்புகாட்டுதலாகிய தன்னுடைய கடமை பொறுப்பை நிறைவேற்றுவதுதான் முதன்மையானது என்று அவர் நிருபித்தார்.

நிச்சயமாக, ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை நேசித்திருப்பார். ஈசாக்கை நேசிப்பதென்பது ஒரு தகப்பனுக்கு தன் பிள்ளையினிடத்தில் இயற்கையாக வரும் அன்பினாலானது. சாதாரணமாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தைகள் பிறப்பதற்கான வயதைக் கடந்தபிறகு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு கொடுக்கப்பட்டார். அதன்காரணமாக, அந்தப் பிள்ளை மீது இன்னுமதிகமான ஒரு ஈடுபாடு இருந்திருக்கும். இயற்கையான விதத்தில் மட்டுமல்லாமல், இன்னொரு விதத்திலும் அந்த அன்பு இருந்தது. அது ஆவிக்குரிய அடையாளத்தினாலும் நோக்கத்தினாலும் உண்டானது. ஈசாக்கின் மூலமாகத்தான் உடன்படிக்கையின் எல்லா வாக்குத்தத்தங்களும் நிலைநிற்கப் போவதினால் உண்டான அன்பு. இயற்கையாகவும், இன்னும் பலவிதங்களிலும் ஆபிரகாமுடைய அன்பு ஈசாக்கின் மேல் இருந்தபோதிலும், கடவுள் மீதே தன்னுடைய உச்சகட்ட அன்பு இருப்பதை அவர் உறுதி செய்தார். எந்தவிதமான கேள்விமுறையும் இல்லாமல் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தார், அவரிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருந்தார். ஆபிரகாமுடைய தேவபயத்தின் சிறப்புகளை கடவுள் தாமே சுட்டிக்காட்டினார் (ஆதியாகமம் 22:12). ஆபிரகாமின் தேவபயம் அவர் கடவுள் மீது முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. இந்த உண்மையை நாம் எபிரெயர் 11:17-19 வசனங்களிலிருந்து நாம் அறியலாம்,

“17மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துயெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.”

இந்த வசனங்களில் நாம் பார்ப்பது, ஆபிரகாம் கடவுள் மீது கொண்டிருந்த விசுவாசத்தினால்தான் ஈசாக்கை பலியாகக் கொடுத்தார் என்று. இப்படிப் பலியாகக் கொடுத்தாலும் கடவுள் நிச்சயமாக ஈசாக்கை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவராக இருக்கிறார் என்று ஆபிரகாம் உறுதி கொண்டிருந்தார். இதையே வேறுவிதமாக சொல்லுவதானால், ஆபிரகாமுடைய தேவபயம், அவரை கடவுளிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருக்கும்படி வழிநடத்தியது.

இந்தவிதமாக நடப்பதற்காகவே கடவுள் நம்மை அழைத்திருக்கிறார். நமக்கு ஈசாக்கைப் போன்று இருப்பவைகளைப் பார்த்து, அவர் கேட்கிறார், “இவைகளைவிட என்னிடத்தில் நீ அதிகமாக அன்புகாட்டுகிறாயா?” என்று. இயற்கையாக எழுகிற பாச உணர்ச்சிகளுக்கு மேலாக தன்னிடத்தில் அன்புகாட்டும்படியாக கடவுள் நம்மை அழைக்கிறார். பெற்றோர்களே, உங்களுடைய பிள்ளைகளைப் பற்றிய உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன? ஒருவேளை கடவுள் தம்முடைய பிரசன்னத்தில் நீங்கள் இப்போது இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது, கடவுள் எல்லாவற்றையும் அப்பட்டமாக காணக்கூடிய தம்முடைய அக்கினிமயமான கண்களைக் கொண்டு உங்களுடைய கண்களை உற்றுநோக்குகிறார். பிறகு, உங்களுடைய பிள்ளைகளுக்கு எது கிடைக்க வேண்டுமென்று நீங்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கிறீர்களோ, அதை கடவுள் கேட்கிறார் என்று வைத்துக்கொள்ளுவோம். அப்போது உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? நீங்கள் கொஞ்சமும் யோசிக்காமல், உங்களுடைய பிள்ளைகள் எப்படியிருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அப்படியே இருக்கட்டும் என்று உங்களுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு சொல்ல முடியுமா? அது ஒருவேளை, கடவுள் உங்களுடைய பிள்ளையை 7 வயதில் இரட்சித்து, 9 வயதில் தம்மிடமாக அழைத்துக் கொள்ளுவதாகவும் இருக்கலாம். அல்லது அவர்கள் கடவுளால் வழிநடத்தப்பட்டு, இன்னும் மனிதர்களால் கண்டறியப்படாத இடங்களுக்குச் சென்று கடவுளுடைய சுவிசேஷத்தை அறிவிக்கவும், அங்கேயே பசி பட்டினியில் சாகிறதாகவும் இருக்கலாம். அதாவது இந்த உலகத்தின் பார்வையில் வாழ்க்கையையே வீணடித்துவிட்டதாக பார்க்கப்படலாம். அப்போதும் உங்களுடைய பதில் அதுவாகத்தான் இருக்குமா? அப்படி இல்லாவிட்டால், என் அருமை பெற்றோர்களே, உங்களுடைய இந்தத் தயக்கம், உங்களுடைய பிள்ளைகளைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் இன்னும் தேவபயத்துடன் நடக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் நீங்கள் இன்னும் கடவுளிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டவும், அவரிடத்தில் முற்றுமுடிய நம்பிக்கை கொண்டிருக்கவும் இல்லை என்பதையே காட்டுகிறது.

சில இளம் பிள்ளைகள், தங்களுடைய பெற்றோரிடத்தில் ஆழமானதும், நெருக்கமானதுமான உறவைக் கொண்டிருப்பார்கள். கடவுள் தம்முடைய பராமரிப்பின்படி தம்முடைய பிள்ளைகளைப் பற்றிய சித்தத்தைத் தெரியப்படுத்துவார். சில இளம் பிள்ளைகளிடத்தில் ஆண்டவர் சொல்லுவார், “நீங்கள் இங்குதான் போக வேண்டும், நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்” என்று. அந்தவேளையில் அவர்கள், “ஆனால் ஆண்டவரே, இதை நான் சொன்னால் என் பெற்றோரால் புரிந்துகொள்ள முடியாதே. இதன்காரணமாக அவர்கள் எனக்கு எதிராகச் செயல்படலாம்” என்று சொல்லும்படியான சோதனைக்கு உட்படலாம். அப்படியான சூழ்நிலையில் கடவுள் உங்களை வைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த நேரத்தில், நீங்கள், கடவுளிடத்தில் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக, கடவுளுக்கான, கடவுளுக்கு மட்டுமேயான என்னுடைய இன்றியமையாத மற்றும் முதன்மையான கடமைப் பொறுப்புகளைச் செய்கிறதற்கு ஏற்றவகையில் என்னுடைய இருயத்தில் உம்மைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தும் என்று கேட்க வேண்டும். உங்களுடைய தகப்பனிடத்திலோ தாயினிடத்திலோ கடவுளுக்கு மேலாக அன்புகாட்டக் கூடாது. அப்படி நீங்கள் செய்யாமற் போனால் நீங்கள் கடவுளுடைய சீடர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் (மத்தேயு 10:37). சில நேரங்களில் உங்களுடைய தாய் தகப்பன், இருதயத்தில் வேதனைப்படும்படியான வழியில்தான் கடவுளுடைய சித்தத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டியிருக்கலாம். அதை நீங்கள் கண்ணீரோடு செய்ய வேண்டியிருக்கலாம். உங்களுடைய உள்ளான மனதில் கடும் வேதனையோடு செய்ய வேண்டியதாகவுமிருக்கலாம். கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின்படியாக செய்வதாக இருந்தால், நீங்கள் கட்டாயம் அப்படிச் செய்துதான் ஆக வேண்டும். அதனிமித்தமாக ஏற்படுகிற விளைவுகளை, நிச்சயமாக கடவுள் தீர்ப்பார் என்ற நம்பிக்கையோடு நாம் செய்ய வேண்டும்.

கடவுளுடைய மக்களின் வாழ்வில், தேவபயத்தின் இந்த அம்சங்கள் யாவும் எந்தவிதத்தில் கடவுள் பேரில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருக்கிறார். தேவபயத்தின் வெளிப்பாடாக நம்முடைய ஆண்டவருடைய கீழ்ப்படிவுக்கான சோதனைகளாக கெத்செமனேயும் கொல்கொதாவும் மட்டும் இருக்கவில்லை. பிதாவினிடத்தில் உச்சகட்ட அன்புகாட்டுதல், எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் கீழ்ப்படிதல் ஆகியவற்றிற்கிடையில், பிதாவினிடத்தில் நம்முடைய ஆண்டவருக்கு இருந்த நம்பிக்கை ஆழமான விதத்தில் சோதனைக்குள்ளாகியது. நம்முடைய ஆண்டவர் இறுதியாக சிலுவையில் சொல்லிய வார்த்தைதான், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:43). இந்த பூமியில் விசுவாசத்தை வெளிப்படுத்தும் மிகவும் அற்புதமான செயலாக இது இருக்கிறது. அந்நேரத்தில், தம்முடைய பிதாவினுடைய முகப்பிரகாசம் இருக்கவில்லை, வானங்கள் காரிருளினால் மூடப்பட்டிருந்தது, பிதாவினுடைய கோபத்தை தன்மேல் ஏற்றவராக இருந்தார், தம் மக்களுடைய பாவத்தின் மீது அவருக்கு வெறுப்பிருந்தது, முற்றிலுமாக இருளடைந்த ஒரு நிலை, இவையெல்லாவற்றின் மத்தியிலும், இயேசு கிறிஸ்து பிதாவின் மீதிருந்த தம்முடைய முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார், ஏசாயா 50:10, “உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்.” ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தம்முடைய கடைசி வார்த்தையை பேசியபோது, ஏசாயாவினுடைய இந்த தீர்க்கதரிசன வாக்கியத்தை முழுமையாக புரிந்துணர்ந்ததின் வெளிப்பாடாக இருந்தது. இருளில் நடக்கிறதாக இருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த தேவ ஊழியரை இங்கு நாம் பார்க்கிறோம். பிதாவினுடைய வாக்குத்தத்தத்தின் உறுதியை உணர்ந்தவராக அவர் சொன்னார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (லூக்கா 23:43).

மரணத்தை அனுபவிப்பதற்கு முன்பாகவே, ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீடர்களுக்கு அதைக் குறித்து தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார். அதாவது அவர் கைவிடப்படப் போகிறார் என்றும், காட்டிக்கொடுக்கப்படப் போகிறார் என்றும், மரணமடையப் போகிறார் என்றும் மட்டும் சொல்லவில்லை, மூன்று நாளைக்குப் பிறகு தாம் மரணத்திலிருந்து உயிர்த்தெழப் போவதையும் சொன்னார். சிலுவையில் தொங்குகிறவராக, தம்முடைய தலையைச் சாய்த்து, தம்முடைய கடைசி மூச்சைவிட்டபோது, தம்முடைய நேசமிகு பிதாவினிடத்தில் தம்முடைய ஆவியை ஒப்புவித்தார். பிதாவானவர் தம்மை மரணத்திலிருந்து எழுப்புவார் என்ற முழுமையான நம்பிக்கையினால் அப்படிச் செய்தார்.

கிறிஸ்தவர்களுடைய கடமை பொறுப்புகளும், தேவபயமும்

இதுவரை நாம் பார்த்த விஷயங்களிலிருந்து, தேவபயத்தை கீழ்ப்படிதலோடு இணைத்து சொல்லப்படுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. நம்முடைய ஆண்டவர், பயத்தையும், கீழ்ப்படிதலையும், அன்பையும் எப்படி இணைத்துச் சொல்லியிருக்கிறார் என்பதை கவனியுங்கள், உபாகமம் 10:12-13, “இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?”

அதேபோல், பிலிப்பியர் 2:12ல் சொல்லுகிறார், “நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, . . . அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்”. கடவுளுடைய பிள்ளையே, தேவபயத்தில் நீங்கள் வளர்ந்து பெருகுகிறீர்களா, அந்த பயத்தில் தொடர்ந்து நடக்கிறீர்களா? அப்படியானால், நீங்களும் நானும் இந்த உண்மையை தொடர்ச்சியாக நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்திலும், என்னுடைய வாழ்வில் ஏற்படுகிற எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும், கடவுளோடு எனக்குள்ள உறவும், அந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதும்தான் மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டவர், மகிமையானவர், என்னை உருவாக்கினவர், என்னை மீட்டவர். இந்த ஆண்டவருக்குத்தான், உண்மையுடன் தன்னிகரற்ற அன்புகாட்டுவதாகவும், அன்புடன் கீழ்ப்படிவைக் காட்டுவதாகவும், நிலைதடுமாறாத விசுவாசத்துடன் நம்புவதாகவும் நான் வாக்களித்திருக்கிறேன்.

ஆகவே, உங்களுடைய வேலை ஸ்தலத்தின் எஜமானுடைய முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தில் அது சம்பந்தமான சில விஷயங்களில் கூட்டிக்குறைத்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், கட்டாயம் நீங்கள் அப்படிச் செய்யவே கூடாது. ஏன் அப்படிச் செய்யக் கூடாது? உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று கட்டளையிட்டுள்ள கடவுளுக்கு (எபேசியர் 4:25) நீங்கள் கடமை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டி இருப்பதுதான் காரணம். இது ஒழுக்கரீதியான காரியங்களோடு சம்பந்தமுள்ளது என்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? ஒரு வாலிபன் தன்னுடைய இச்சைகளை நிறைவேற்றுகிறவிதமாக பெரும் சோதனையை எதிர்நோக்கலாம். தன்னோடு இருக்கிற ஒரு இளம் பெண்ணுடன் தன்னுடைய சரீர விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக அவனுடைய மனமெல்லாம் துடிக்கலாம். அவனுடைய மனமெல்லாம் அதுதான் தனக்கு மனநிறைவைத் தரும் என்று குமுறலாம். அதில் ஈடுபடலாம் என்று அவனுடைய சரீரமும் ஆர்வங்கொள்ளலாம். ஆனால் அந்த சூழ்நிலையில் ஆண்டவர் சொல்லுகிறார், “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி” (2 தீமோத்தேயு 2:22), “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” (1 கொரிந்தியர் 6:18) என்று. கடவுளுக்கான தன்னுடைய கடமை பொறுப்புகள் மற்றும் கடவுள் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தம்முடைய மகா கிருபையினால், அந்த சோதனையை மேற்கொள்ளவும், கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றவும் அவனுக்கு வலிமையை தந்திருக்கிறார் என்ற நம்பிக்கை அவனுடைய எண்ணத்தில் முதலிடம் பெறுகிறபோதே இதைச் செய்ய முடியும்.

எந்த உறவாக இருந்தாலும், எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும், தொடர்ச்சியாக நம்மை நாமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று, கடவுளுக்கான என்னுடைய கடமை பொறுப்புகளே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். கடவுளுக்குக் கீழ்ப்படிதலைப் பற்றியும் தொடர்ந்து நம்மை நாமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தையாகிய வேதத்திலுள்ள அவருடைய கட்டளைகளை தியானிக்கிறதும், தேடுகிறதுமாக, அவர் நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் பற்றிய புரிதலின் எல்லையை தொடர்ச்சியாக விரிவுபடுத்துவதாக இருக்க வேண்டும். இந்த உண்மையை நம்முடைய கண்ணுக்கு மறைக்கிற எதுவொன்றையும் விட்டுவிலகுவதற்கு தேவையான எல்லா கிருபைகளையும் தரும்படி நாம் தொடர்ந்து ஆண்டவரிடம் ஜெபிக்க வேண்டும்.

அன்பார்ந்த வாசகரே, நீங்கள் கிறிஸ்தவராக இல்லாதிருந்தால், இப்போது நீங்கள் வாழுகிற வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது என்பதற்கான விளக்கத்தை வேதத்திலிருந்து நான் இதோ தருகிறேன். ரோமர் 3:18, “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. நீங்கள் ஏன் இப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஏனென்றால், கடவுளுடைய மேன்மைகளின் ஆழங்களை நீங்கள் உணரவில்லை, அவருடைய பிரசன்னத்தின் எங்கும் படர்ந்தத் தன்மையை நீங்கள் உணரவில்லை, அவருக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள். ஆகவேதான்,

 • நீங்கள் பள்ளியிலோ, வேலை செய்கிற இடத்திலோ இலகுவாக மற்றவர்களை ஏமாற்றிவிடுகிறீர்கள்
 • உங்கள் பெற்றோரிடத்தில் பொய் சொல்லிவிடுகிறீர்கள்
 • உங்களுடைய வாயைத் திறந்து மற்றவர்களை சபிக்கிறீர்கள்
 • உங்களுடைய உடலை சிற்றின்பங்களுக்குக் கொடுத்துவிடுகிறீர்கள்
 • உங்களுக்காக வாழுவதையே நீங்கள் தெரிந்துகொள்ளுகிறீர்கள்

ஏன் இப்படி வாழுகிறீர்கள்? நான் மறுபடியும் சொல்லுகிறேன், ஏனென்றால், கடவுளுடைய மேன்மைகளின் ஆழங்களை நீங்கள் உணரவில்லை, அவருடைய வியாபித்திருக்கும் பிரசன்னத்தின் தன்மையை நீங்கள் உணரவில்லை, அவருக்கான உங்களுடைய கடமை பொறுப்புகளைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள்.

மனந்திரும்பாத வாசகர்களே, கடவுள்தாமே உங்களில் புதிய இருதயத்தை ஏற்படுத்தாத வரை நீங்கள் இதே வழியில்தான் போய்க்கொண்டிருப்பீர்கள். எரேமியா 32:39-40, “அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து”. இங்கு எரேமியா சொல்லுகிறார், புதிய உடன்படிக்கையில், ஆண்டவர் நம்முடைய இருதயத்தில் தம்மைப் பற்றிய பயத்தை வைப்பார். அதனிமித்தம் நாம் அவரைவிட்டு அகன்று போக மாட்டோம். தேவபயமில்லாத யாருடைய இருதயத்திலும் – ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, சிறுமியோ – பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் வருகிறதில்லை. உங்களில் தேவபயம் இல்லாமல் இருந்தால் உங்களில் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. கிறிஸ்துவினுடைய ஆவியைக் கொண்டிராத ஒருவன், அவருடையவனல்ல என்று வேதம் சொல்லுகிறது (ரோமர் 8:9). பரிசுத்த ஆவியானவர் நம்மில் வந்து தங்கியிருத்தல் என்பது நம்முடைய மன்றாட்டினால் நிகழ்வதல்ல. சமய சடங்களுக்காக எழுதப்பட்டுள்ள ஜெபங்களை மறுபடியும் மறுபடியும் வாசிப்பதினால் பரிசுத்த ஆவியைப் பெற முடியாது. கிருபையும் இரக்கமும் கொண்ட கடவுள், மனிதர்களுடைய இரட்சிப்பிற்கான அனைத்து காரியங்களையும் தம்முடைய குமாரனுக்குள் நிறைவேற்றி, தம்முடைய குமாரன் மூலமாக தம்மை நோக்கிப் பார்க்கிறவர்களுக்கு அதைத் தருகிறதாக கட்டளையிட்டிருக்கிறார். கடவுள் தம்முடைய கிருபையினால், உங்களுக்கு புதிய இருதயத்தைத் தரவும், தேவபயத்தின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரைத் தரவும், நீங்கள் அவரை நோக்கி கதற வேண்டுமென்று கட்டளையிடுகிறார். எசேக்கியேல் 36:25-27 வசனங்களில் தம்முடைய புதிய உடன்படிக்கையின் மூலமாக பாவிகளில் ஆண்டவர் வைக்கிற தம்முடைய ஆசீர்வாதங்களைப் பற்றிச் சொல்லுகிறார்,

26உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். (எசேக்கியேல் 36:25-27)

எனினும், அந்த ஆசீர்வாதங்களையெல்லாம் தருகிறதாக ஆண்டவர் சொல்லிய போதிலும், தொடர்ந்து ஆண்டவர் சொல்லுகிறார்,

“இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்” (எசேக்கியேல் 36:37).

One thought on “தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்

 1. Mr. BALA  SIR,GREETINGS. THANK YOU FOR REMINDING ME THROUGH ” THE FORGOTTEN FEAR OF GOD”YES, IT IS APPLICABLE TO ME. FROM TODAY I WILL START AGAIN TO SIT UNDER HIS FEET. VIVEK.S

  Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s