மார்டின் லூத்தர் சொன்னார், ‘போப்புக்கோ கார்டினலுக்கோ பயப்படுவதைவிட என்னுடைய இருதயத்திற்குத்தான் நான் அதிகம் பயப்படுகிறேன்’ என்று. அதற்குக் காரணம் எல்லாவித அசிங்கங்களும் இருதயத்தில் இருந்து புறப்படுவதால்தான். ‘நம்மில் இருக்கும் பாவம் தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைப் போன்றது. அது அமைதியாய் இருப்பதுபோல் தோன்றினாலும், காய்ந்த சருகுகளுக்கு அடியில் மறைந்திருக்கும் நெருப்பைப்போல் இருந்தாலும் சோதனைகளாகிய காற்று வீசுகின்றபோது அது எத்தனை வேகமாக குபீரென்று எரிந்து மகாமோசமான பாவங்களைச் செய்துவிடுகிறது. அதனால்தான் நாம் எப்போதும் கவனத்தோடு விழித்திருந்து வாழவேண்டும்’ என்று எழுதியிருக்கிறார் பியூரிட்டன் பெரியவர் தொமஸ் வொட்சன்.
மனிதர்கள் அதிகம் சிந்தித்துப் பார்க்க மறுக்கும் அம்சம் பாவம். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் பாவத்தின் ஆளுகைக்குள் இருந்து அதை மட்டுமே செய்து வருகிறவர்களாக இருக்கிறார்கள். பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை அடைந்திருக்கும் விசுவாசிகள் அதைப்பற்றி சிந்திக்காமலும், அதைத் தொடர்ந்து செய்யாமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் கருத்தோடு ஈடுபடாமலும் இருக்க முடியாது. ஆச்சரியமென்னவென்றால் விசுவாசிகளில் அநேகர் பாவத்தை சாதாரணமாகக் கருதி அலட்சியத்தோடிருந்து வருவதுதான். இதற்குக் காரணமில்லாமல் இல்லை. முக்கிய காரணம் பாவத்தைப் பற்றிய தெளிவான போதனைகள் இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் இல்லாமல் இருப்பதுதான். ‘கிருபையின் கீழ் இருக்கிறோம் அதனால் நாம் எப்படி வாழ்ந்தாலும் நம் பாவத்தை கிறிஸ்து பார்த்துக்கொள்ளுவார்’ என்று எண்ணி வாழ்கிறவர்கள் தொகை நம்மினத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏராளம். இவர்களுக்காகத்தான் பவுல் ரோமர் 6:1-2 வசனங்களில்,
ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமோ? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
ரோமர் 6:2ல் ‘அதிலே நாம் எப்படிப் பிழைப்போம்’ என்பதை, ‘அதை நாம் எப்படித் தொடர்ந்து செய்து வாழமுடியும்?’ என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த அதிகாரத்தில் கிறிஸ்துவோடு கிருபையின் மூலம் இணைக்கப்பட்டவர்கள் பாவத்தைத் தொடர்ந்து செய்து வாழமுடியாது என்று பவுல் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இந்த அதிகாரம் ‘கிறிஸ்துவோடு இணைந்திருத்தல்’ (Union with Christ) என்ற அருமையான சத்தியத்தை விளக்குகிறது. (இந்தப் போதனைக்கான தமிழ் விளக்கத்தை ‘இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு’ என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருக்கும் நூலில் பெற்றுக்கொள்ளலாம்). கிருபையால் கிறிஸ்துவோடிணைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்ந்து பாவத்தைச் செய்வதை வழக்கமாக வாழ்க்கையில் கொண்டிருக்க முடியாது என்பதுதான் இந்த அதிகாரத்தில் பவுலின் வாதம். கீழ் வரும் வசனங்களைக் கவனியுங்கள்.
6நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
12ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
மேலேயுள்ள வசனங்கள் கிறிஸ்தவன் தொடர்ந்து பாவத்தை செய்து வாழக்கூடாதென்பதை வலியுறுத்துகின்றன.
கிறிஸ்தவர்களில் பலர் பாவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுவதற்கு முக்கிய காரணம் அவர்கள் இந்த விஷயத்தில் தெளிவான இறையியல் போதனையைக் கொண்டிருக்கவில்லை என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். ஒரு முறை பாவத்தின் பண்பைப் பற்றி என்னுடைய சபையின் ஓய்வு நாள் வகுப்பில் நான் விளக்கிக்கொண்டிருந்தபோது என்னுடைய விளக்கங்கள் இரண்டுபேருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை நான் உணர்ந்தேன். அவர்களுக்கு உதவிசெய்வதற்காக பாவத்தின் மெய்ப்பண்பைப் பற்றி விளக்கி விசுவாசியில் தொடர்ந்து வாசம் செய்யும் பாவமும், அவிசுவாசியை ஆளும் பாவமும் தன்மையில் ஒன்றுதான் என்பதை உதாரணங்களோடு விளக்கினேன். அந்த இரண்டு பேரும் ஏதோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதுபோல் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ள பெரிதும் கஷ்டப்பட்டார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில் இந்த உண்மையை அவர்கள் அறிந்து விசுவாசித்து வளர்ந்திருக்கிறார்கள் என்று நான் அவர்களைப்பற்றித் தவறாக நினைத்திருந்தேன். அதற்குப்பிறகுதான் அவர்கள் பாவத்தைப்பற்றிய தவறான எண்ணங்களோடு தொடர்ந்திருந்து வந்திருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. அவிசுவாசியை ஆளும் பாவமும், விசுவாசியில் தொடர்ந்திருக்கும் பாவமும் அதன் பண்பைப் பொறுத்தவரையில் ஒன்றுதான் என்பதை இந்த ஆக்கத்தை வாசிக்கிறவர்களில் எத்தனைபேர் அறிந்திருக்கிறார்கள், ஒத்துக்கொள்ளுகிறார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து வாசியுங்கள், உங்கள் கண்கள் திறக்கப்படலாம்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பாவத்தின் பண்பு பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு அவர்களைப் பாதித்திருக்கும் இறையியல் போதனைகளே காரணம். பெலேஜியன் என்பவன் 4ம் நூற்றாண்டில் ஆதாம் வழிவரும் (மூல) பாவம் என்று ஒன்றில்லை என்றான். ஆகஸ்தீன் அன்று அவனுடைய போதனைகளைத் தோலுரித்துக்காட்டினார். பெலேஜியனின் பாவம் பற்றிய போதனைகள் திருச்சபையைத் தொடர்ந்தும் தாக்கி வருகின்றன. பெலேஜியன் அளவுக்குப் போகாமல் ரோமன் கத்தோலிக்க மதம் (செமி-பெலேஜியன்) பாவம் இருப்பதையும் தொடர்வதையும் ஏற்றுக்கொள்கிறபோதும் கர்த்தரும் மனிதனும் இணைந்து செயல்படுவதன் மூலம் ஒருவன் இரட்சிப்பை அடைகிறான் என்று போதிக்கிறது. ஆர்மீனியனிசமும் இந்த விஷயத்தில் செமி-பெலேஜியனிசமே. செமி-பெலேஜியனிசம் மூல பாவத்தை அங்கீகரித்தாலும் மனிதனைப்பிடித்திருக்கும் அந்தப் பாவம் அவனுடைய சித்தத்தைப் பாதிக்கவில்லை என்றும் அதனால் மனிதன் தன்னிச்சையாக சுயாதீனமாக இயங்கும் சித்தத்தைக் கொண்டிருந்து தன்னுடைய இரட்சிப்பிற்கான தீர்மானத்தை எடுக்கக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்கிறது. செமி-பெலேஜியனிசமும், ஆர்மீனியனிசமும் கிருபையினால் மட்டும் இரட்சிப்பு மனிதனுக்குக் கிடைக்காமல் மனிதனும், கர்த்தரும் இணைந்து செயல்படுவதன் மூலம் (Synergism) இரட்சிப்பு மனிதனுக்கு கிடைக்கிறது என்று விளக்குகின்றன. இவ்வாறே செமி-பெலேஜியனிசத்தின் ‘சுயாதீன சித்தம்’ ஆகிய போதனை உருவானது. மூலபாவம் தொடர்வதை இந்த இரண்டும் ஏற்றுக்கொண்டபோதும் மனிதனுக்கு அதிலிருந்து முழு விடுதலை கிடைப்பதற்கு இவை வழிகாட்டவில்லை. இந்தப் போதனைகளின் அடிப்படையில் மனிதன் இரட்சிப்பை அடையவும், அதை இழக்கவும் கூடிய வல்லமையை சுயாதீன சித்தத்தின் மூலம் தன்னில் கொண்டிருப்பதால் அவனால் சுயமாக பாவத்தை செய்யாமலிருக்கவும், செய்யவும் முடிகிறது. இந்த செயற்கையான விளக்கம் வேதம் போதிக்கும் இரட்சிப்பு பற்றிய அனைத்துப் போதனைகளையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
இதற்கும் ஒருபடி மேலாகப்போய் ஆண்டவராகிய கிறிஸ்து பாவத்தை அடியோடு தொலைக்க தியாகத்தோடு சிலுவையில் மரித்த சத்தியத்தையும் இந்தப் போதனைகள் கொச்சைப்படுத்தி விடுகின்றன. கிறிஸ்து பூரணமாக பாவத்தைப் போக்க மரித்திருப்பாரானால் அவரிடம் இரட்சிப்பைப் பெற்று பாவத்தில் இருந்து விடுதலை அடைந்தவன் மறுபடியும் இரட்சிப்பை இழந்து எப்படி பாவத்தில் தொடர்ந்து வாழமுடியும்? கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப் பொறுத்தவரையில் செமி-பெலேஜியனிசமும், ஆர்மீனியனிசமும் வேதபோதனைகளுக்கு முற்றிலும் முரண்பாடான விளக்கங்களைத் தருகின்றன. மூலபாவத்தை செமி-பெலேஜியனிசமும், ஆர்மீனியனிசமும் மறுதலிக்கவில்லை என்பதற்காக அவை பாவத்தின் கோரத்தைப் பற்றியும், அதிலிருந்து கிடைக்கும் விடுதலை பற்றிய போதனைகளிலும் வேதபூர்வமான விளக்கங்களுக்கு மாறான விளக்கங்களையே தருகின்றன என்பதை உணர்வது அவசியம். ஆர்மீனியனிசப் போதனைகளில் மூழ்கிப்போயிருக்கும் நம்மினத்துக் கிறிஸ்தவம் ஆர்மீனியனிச இறையியல் போதனைகள் எத்தனை மோசமானவை என்பதை இன்றும் உணராமல் இருந்து வருவதில் ஆச்சரியமில்லை.
பாவம் கிறிஸ்தவனை ஆள்வதில்லை
ரோமர் 6ம் அதிகாரத்தில் பவுல், கிறிஸ்தவன் பாவத்தின் ஆளுகையில் இருந்து முழு விடுதலையை அடைந்திருக்கிறான் என்று விளக்குகிறார். அதற்குக் காரணம் அவன் இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருப்பதுதான். இந்தவிதத்தில் அவன் இணைக்கப்படுவது திட்ப உறுதியான அழைப்பு கிருபையின் மூலம் அவனை வந்துசேர்ந்து மறுபிறப்பாகிய ஆவிக்குரிய ஜீவனை அடைந்தபோது நிகழ்ந்ததாக வேதம் விளக்குகிறது. இப்படி கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறவர்களில் பாவம் அவர்களைத் தொடர்ந்து ஆள வழியில்லை. கிறிஸ்து சிலுவையில் பாவத்துக்கு மரித்து உயிர்த்தெழுந்திருப்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மையானது இந்த கிறிஸ்துவோடு விசுவாசிகள் இணைக்கப்பட்டிருக்கும் கிருபையின் ஆசீர்வாதமும். இது நாம் ஆச்சரியப்பட்டு மனதளவில் மட்டும் வைத்திருக்க வேண்டிய வெறும் இறையியல் போதனையல்ல. இது நிதர்சனமான உண்மை. பாவத்தின் ஆளுகை கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவனில் அடியோடு அழிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பாவத்தின் மேல் அவனுக்கு ஆவியின் மூலம் வெற்றியும் கிடைத்திருக்கிறது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்.
ரோமர் 6:14
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
1 யோவான் 3:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
1 யோவான் 5:4, 18
4தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
18தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
பாவத்தின் ஆளுகை மீதான இந்த வெற்றி இனி அடைய வேண்டியதொன்றல்ல. முயற்சிகள் செய்து கிறிஸ்தவன் பெற்றுக்கொள்ள வேண்டியதுமல்ல. படிப்படியாக அடையவேண்டியதுமல்ல. கிறிஸ்துவில் ஒருவன் இணைக்கப்பட்டவுடனேயே இந்த வெற்றி கிறிஸ்தவனுக்கு கிடைத்திருக்கிறது. மறுபிறப்படைந்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் இந்த வெற்றிக்கு உரித்தானவனாக இருக்கிறான். கிறிஸ்து தன் மரணத்தினாலும், உயிர்த்தெழுதலாலும் பெற்றுத்தந்திருக்கும் இந்த வெற்றி கிறிஸ்தவனின் இரட்சிப்பு அவனுக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதம். பாவத்தின் ஆளுகை மீதான இந்த வெற்றியை நாம் புரிந்துணர்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் முழுப்பரிசுத்தத்தை இந்த உலகில் அடையலாம் என்று விளக்கும் ‘வெஸ்லியன் பூரணத்துவம்’ என்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்தமாக்குதல் கிறிஸ்தவனுக்கு அளித்திருக்கும் ஆசீர்வாதமாக இந்த வெற்றியை விளக்குவதில்லை. அவர்களும், பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் போதனையாளர்களும், வெஸ்லியன் முழுப்பூரணத்துவப் போதனையைத் தழுவி எழுந்திருக்கும் பரிசுத்தமாக்குதல் பற்றிய சகல போதனையாளர்களும் மூன்று விஷயங்களில் பெருந்தவறிழைக்கிறார்கள். இதை ஜோன் மரே பின்வருமாறு விளக்குகிறார்.
- பாவத்தின் ஆளுகை மீதான இந்த வெற்றியை ஒவ்வொரு விசுவாசியும் அடைந்திருக்கிறான் என்பதை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.
- இந்த வெற்றியை நீதிமானாக்குதலின் மூலமாக கிறிஸ்தவன் அடையாமல் அதற்குப் பிறகு அடைகிற ஆசீர்வாதமாக விளக்கி நீதிமானாக்குதலில் இருந்து இந்த வெற்றியைப் பிரித்துக் கணிக்கிறார்கள். இந்தத் தவறை அத்தனை பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் செய்து வருகிறார்கள்.
- வேத போதனைகளைப் பின்பற்றி இதை விளக்காமல் பாவத்தைச் செய்வதில் இருந்து ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றியாக இதை அவர்கள் விளக்குகிறார்கள்.
இவர்கள் விடும் இந்தத் தவறால் வேதம் போதிக்கும் பரிசுத்தமாக்குதலின் அடிப்படை சத்தியம் பாதிப்புக்குள்ளாகிறது. நீதிமானாக்குதலும், பரிசுத்தமாக்குதலும் கிறிஸ்தவனுக்கு பாவத்தின் ஆளுகையில் இருந்து மறுபிறப்பின் மூலமாக வெற்றியைத் தராமலிருக்குமானால் கிறிஸ்துவின் மரணத்தின் வெற்றி மற்றும், மறுபிறப்பின் வல்லமை ஆகியன கொச்சைப்படுத்தப்படுகின்றன. அத்தோடு இந்த வெற்றியை கிறிஸ்தவன் மறுபிறப்பின் மூலம் அடைந்திராதிருந்தால் அவன் பாவத்தோடு தொடர்ந்து போராடுகின்ற கடமைப்பாடு கிருபையினால் அடைந்த கடமைப்பாடாகவும் ஆசீர்வாதமாகவும் இருக்க முடியாது. ஆகவே, கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருக்கிறவர்கள் பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை அடைந்திருக்கிறார்கள் என்பதை நாம் உறுதியாக நம்பி விசுவாசிக்க வேண்டும். அது வேதம் ஆணித்தரமாக விளக்கும் சத்தியம். இது சீர்திருத்த சத்தியம் விளக்கும் பரிசுத்தமாகுதலாகிய இறையியல் போதனைக்கும் அடித்தளமாக இருக்கிறது.
கிறிஸ்தவனில் பாவம் தொடர்ந்திருக்கிறது
பாவத்தின் ஆளுகையில் இருந்து கிறிஸ்தவனுக்கு வெற்றி கிடைத்திருந்த போதும் பாவம் அவனில் தொடர்ந்திருக்கிறது. இரட்சிப்பு கிறிஸ்தவனுக்கு பெற்றுத்தந்திருக்கும் ஆசீர்வாதம் பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை. அவனைக் கர்த்தர் தொடர்ந்து குற்றவாளியாகப் பார்க்காமல் நீதிமானாகப் பார்க்கிறார். தேவகோபம் அவன் மேல் இறங்கியிருக்கவில்லை. அவன் தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கவில்லை. அவன் இப்போது கண்டனத்துக்குரியவனல்ல. அவன் கிறிஸ்துவின் பிள்ளை, தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தவன். அவன் ஆவியானவரினால் வழிநடத்தப்படுகிறவன். இரட்சிப்பு இத்தனை ஆசீர்வாதங்களையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறது. அவனை இப்போது ஆளுகிறவர் அவனில் குடியிருக்கும் கர்த்தரின் ஆவியானவர்.
இத்தனை ஆசீர்வாதங்களும் கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் நிதர்சனமான உண்மையாக இருந்தபோதும், அவனில் பாவம் தொடர்ந்தும் இருக்கிறது என்கிறது வேதம். இதுவே அநேகருக்கு குழப்பத்தை உண்டாக்குகிறது. பாவம் நம்மை ஆளுவதற்கும், அது நம்மில் குடியிருப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்வதில்லை. அவிழ்த்து விடப்பட்டிருக்கும் ஆக்கிரோஷமான ஒரு நாய் நம்மைத் துரத்தித் துரத்தி ஓடவைப்பதற்கும், அந்த நாய் கட்டிப் போடப்பட்டு ஒரு வளையத்துக்குள் மட்டும் சுற்றிவர முடிந்து அது துரத்தமுடியாதபடி நாம் சுதந்திரத்தோடு நடமாடுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறதல்லவா? பாவத்தின் தன்மையைப் பொறுத்தவரையில் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளுவது கிறிஸ்தவர்களின் பரிசுத்தமாகுதலாகிய கடமையைப் பொறுத்தவரையில் அத்தியாவசியமானது.
பவுல் அப்போஸ்தலன் ரோமர் 7:17ல் சொல்லுகிறார், “ஆதலால் நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.”
பவுல் ரோமர் 7ல் அளிக்கும் போதனையை சரியாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். நாம் எப்படி விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் படிப்படியாக விளக்கிவிட்டு, நீதிமான்களாக்கப்பட்டு கிருபையின் கீழிருக்கும் நாம் தொடர்ந்து பாவத்தைச் செய்யக்கூடாது என்பதை 6:1ல் சொல்லி, அதற்குக் காரணம் கிறிஸ்துவோடு நாம் இணைக்கப்பட்டிருப்பதுதான் என்பதை விளக்குகிறார். ரோமர் 6:9-14 வரையுள்ள வசனங்களைக் கவனியுங்கள். இதில் எத்தனை தடவை பவுல் நாம் பாவத்துக்கு மரித்திருக்கிறோம், பாவம் நம்மில் ஆளாதிருப்பதாக, அவயவங்களை பாவத்துக்கு ஒப்புக்கொடாதீர்கள், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது (ஆளமுடியாது அல்லது வெற்றிகொள்ள முடியாது) என்றெல்லாம் விளக்கியிருப்பதைக் கவனியுங்கள்.
9மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. 10அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
6:22ல் பவுல் சொல்லுகிறார், “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்” என்கிறார். இப்படியெல்லாம் பவுல் விளக்கியிருப்பதற்குக் காரணம் பாவத்தின் ஆளுகைக்கு முடிவுகட்டப்பட்டிருப்பதுதான். ஜெர்மனியின் ஹிட்லர் தன் அதிகாரத்தையும், ஆட்சியையும் இழந்ததுபோல், இத்தாலியின் முசோலினி அதிகார வீழ்ச்சியடைந்ததுபோல் பாவமும் தன்னுடைய ஆதிக்கத்தை மறுபிறப்படைந்த கிறிஸ்தவனில் இழந்திருக்கின்றது.
அதற்குப் பிறகு 7ம் அதிகாரத்தில் 1-13 வரையுள்ள வசனங்களில் பவுல் தன்னுடைய, கிருபையின் கீழில்லாதிருந்த கால அனுபவத்தை விளக்குகிறார். இப்போது கிறிஸ்தவராக இருக்கின்ற பவுல் தன் வாழ்க்கையைப் பின்னால் திரும்பிப் பார்த்து நல்லதாக இருந்த நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தி பாவம் தான் கிறிஸ்தவனாக இல்லாதிருந்த காலத்தில் தன்னில் எப்படிச் செயல்பட்டது என்பதை விளக்குகிறார்.
அடுத்து வரும் 14-25 வரையுள்ள வசனங்களில் கிறிஸ்தவனாகிய தன்னுடைய வாழ்க்கையில் பாவம் இப்போது எப்படி செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். இந்த இடத்திலேயே பவுல் 17ம் வசனத்திலும், 20ம் வசனத்திலும் ‘எனக்குள் வாசமாயிருக்கிற பாவம்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலமாக தன்னில் தொடர்ந்தும் பாவம் வாசமாயிருப்பதை அடையாளங்காட்டுகிறார். இதை ‘உள்ளிருக்கும் பாவம்’ அல்லது ‘தொடர்ந்திருக்கும் பாவம்’ என்ற வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் இறையியல் விளக்கங்களில் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் இதை Remaining sin or Indwelling sin என்று குறிப்பிடுகிறார்கள். பவுல் இந்தப் பகுதியில் தனக்குள் பாவம் தொடர்ந்தும் வாசம் செய்வதை விளக்கும்போது நல்லதை செய்ய நினைக்கின்ற தனக்கு தன்னில் வாசம் செய்யும் பாவம் தொடர்ந்து பிரச்சனை தந்து வருகிறது என்பதை விளக்குகிறார். ஆவிக்குரிய கிறிஸ்தவனான தான் சிலவேளைகளில் மாம்சத்தின் வழி நடந்துவிடுவதற்குக் காரணம் இதுவே என்பதை விளக்குகிறார். பாவத்துடனான இத்தகைய பிரச்சனை அல்லது போராட்டம் தன்னில் தொடர்ந்தபோதும் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன் (25) என்று பவுல் கூறுவதைக் கவனிக்கிறோம். பாவம் தன்னில் வாசம் செய்வதாகவும், அதோடு தனக்குத் தொடர்ந்தும் போராட்டம் இருந்து வருகிறதென்றும் பவுல் விளக்கியபோதும், தான் பாவத்துக்கு அடிமை என்றோ அல்லது தான் ஆவிக்குரியவனல்ல என்றோ எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆவிக்குரியவனாக பவுல் இருந்ததால்தான் பாவம் நியாயப்பிரமாணத்துக்கெதிராக மாம்சத்தில் செயல்பட முயற்சிப்பதை அவரால் அடையாளங்கண்டு உள்ளார்ந்த ஆவிக்குரிய மனிதனாக அதோடு போராட அவரால் முடிந்திருக்கிறது. பவுல் இந்தப்பகுதியில் விளக்குகின்ற அனுபவம் மறுபிறப்படைந்த அத்தனை கிறிஸ்தவர்களும் அனுபவிக்கின்ற அனுபவம்.
அப்போஸ்தலர்களுடைய காலத்துக்குப் பிறகு ஒரு சிலர் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் (14-25) இது கிறிஸ்தவனல்லாதவனுடைய அனுபவம் என்று கூறியபோதும் சீர்திருத்தவாதிகளில் பெரும்பாலானவர்களும், பியூரிட்டன் பெரியவர்களும், அதற்குப் பிறகு வந்த சீர்திருத்த இறையியலாளர்களின் பெருந்தொகையானவர்களும், லூத்தர், கல்வின், ஜோன் ஓவன், A.W. பின்க், ஹெல்டேன், ஜோன் சார்ள்ஸ் ரைல், ஸ்பர்ஜன், ஜோன் மரே போன்ற முக்கியஸ்தர்களும் இந்தப் பகுதியை பவுலின் கிறிஸ்தவ வாழ்க்கை அனுபவமாகவே கருதி விளக்கமளித்திருக்கின்றனர். 20ம் நூற்றாண்டில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் இந்த விளக்கத்திற்கு எதிராக புதுவிதமான விளக்கத்தைத் தந்தார். அதாவது இது உண்மையில் எவர் வாழ்க்கையில் நிகழாததொன்றென்றும், கற்பனையாக உருவகித்து பவுல் விசுவாசியாகவும் இல்லாமல் அவிசுவாசியாகவும் இல்லாமலிருக்கும் ஒரு மனிதன் பேசுவதுபோல் இதைத் தந்திருப்பதாக விளக்கியிருக்கிறார். பாவம் கிறிஸ்தவனில் வாசம் செய்கிறது என்பதை லொயிட் ஜோன்ஸ் ஏற்றுக்கொண்ட போதும் இந்தப் பகுதி ஒரு அவிசுவாசி கிறிஸ்தவனாக வருவதற்கு மிகவும் நெருங்கி வந்திருக்கும் நிலையில், அதே நேரம் இன்னும் விசுவாசியாக இல்லாத நிலையில் விளக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறார். அவருடைய விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த இடத்தில் சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன் பெரியவர்களும், பின்க், ஜோன் மரே, ஸ்பர்ஜன் போன்றவர்களின் கருத்தே சிறப்பானதாக, ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கமாகத் தெரிகிறது.
பாவத்தின் மெய்த்தன்மை
பாவத்தைப் பற்றிய வேதபூர்வமான விளக்கத்தை அநேகர் இன்று கொண்டிருக்கவில்லை என்று ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன். அதற்கு இறையியல் ரீதியாக முறையான வேதப்பிரசங்கம் நம்மத்தியில் பெருமளவில் இல்லாதிருப்பது பெருங்காரணம் என்றும் கூறியிருந்தேன். இப்போது பாவத்தின் மெய்த்தன்மையை நாம் ஆராய வேண்டியது அவசியமாகிறது. முதலில், அவிசுவாசியில் காணப்படும் பாவத்தை ஆராய்வோம். ஆதாமில் இருந்து வரும் மூலபாவத்தை சுமந்து வாழும் அவிசுவாசி பாவியாக பாவத்தின் பூரண ஆளுகையின் கீழ் வாழ்கிறான். அவனை இயக்குவது அவனில் இருக்கும் பாவமே. அவனுடைய அனைத்துப் பாகங்களும் பாவத்தினால் பாதிப்புக்குள்ளாகி கர்த்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த நன்மையையும் செய்ய வழியோ, ஆற்றலோ இல்லாதவனாக வாழ்ந்து வருகிறான். அதனால்தான் வேதம் அவனை மாம்சத்தில் இருக்கும் மனிதனாக வர்ணிக்கிறது. அவனுக்குள்ளிருக்கும் பாவம் அவனை முழுமையாக ஆளுகிறது, இயக்குகிறது, ஆட்டிவைக்கிறது. அதைப் பற்றிய உணர்வே இல்லாதவனாக பாவியாகிய மனிதன் இருந்துவருகிறான். அவிசுவாசியில் காணப்படும் பாவம் நூறுவீதம் அவனில் ஆதிக்கம் செலுத்தி பிசாசின் வழிகளில் அவனை வழிநடத்திச் செல்லுகிறது. இருந்தும் அவனில் தேவனின் சாயல் தொடர்ந்து காணப்படுகிறது. கர்த்தரின் சாயலின் காரணமாகவும், அவரின் பொதுவான கிருபையின் காரணமாகவுமே அவன் இன்னும் மானுடத்துக்குரிய குணாதிசயங்களைக் கொண்டு வாழ்ந்து முற்றிலும் மிருகமாகிவிடாதபடி இருக்கிறான்.
இதற்கு அடியோடு அடிப்படையில் மாறுபாடான நிலையில் கிறிஸ்தவன் இருக்கிறான். கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தின் மூலம் பாவமன்னிப்பை அடைந்திருக்கிறான். அவனுக்குக் கிடைத்திருக்கும் ஆவிக்குரிய நித்திய ஜீவன் அவனைப் பாவத்தின் ஆளுகைக்குள் இருந்து விடுவித்திருக்கிறது. பாவத்தின் ஆதிக்கம் அவனில் அடியோடு முறியடிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் அவனில் பாவம் தொடர்ந்தும் வாசம் செய்கிறது. அவிசுவாசியில் இருக்கும் பாவத்தின் தன்மையையும், விசுவாசியில் இருக்கும் பாவத்தின் தன்மையையும் சிந்தித்துப் பார்ப்பது இந்த இடத்தில் துணைபுரிவதாக இருக்கும். அவிசுவாசியிலும் விசுவாசியிலும் பாவம் தன்னுடைய தன்மையில் பாவமாகவே எப்போதும் இருக்கிறது. அது பொல்லாததாக, திருக்குள்ளதும் கேடுள்ளதுமாக இருந்து வருகிறது. அது எத்தனைக் கேட்டைச் செய்ய முடியுமோ அத்தனைக் கேட்டையும் செய்யக்கூடிய வல்லமையுள்ளதாக இருந்துவருகிறது.
கிருபையினால் விசுவாசிக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றம் பாவத்திற்கேற்பட்டதல்ல; அவிசுவாசியாக இருந்த விசுவாசியினுடைய வாழ்க்கையே மாறியிருக்கிறது. பாவத்திற்கு அடிமையாக இருந்த அவன் இப்போது அந்த அடிமைத்தளையில் இருந்தும் பாவத்தின் ஆதிக்கத்தில் இருந்தும் விடுதலையடைந்திருக்கிறான். அத்தோடு பாவத்தை ஆளவும், அதை அடித்து, ஒடுக்கி, அடக்கித் தன்கட்டுக்குள் வைத்திருக்கவும், ஏன், அதைத் தொடர்ந்து தன்னில் அழிக்கவும் கூடிய வல்லமையை ஆவியில் கொண்டிருக்கிறான். அவனில் கிறிஸ்துவுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆவிக்குரிய மாற்றம் இந்த ஆசீர்வாதத்தை அவனுக்கு அளித்திருக்கிறது. இருந்தாலும் அவனுள் தொடர்ந்திருக்கும் பாவம் எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டேயிருக்கும். அவனும் அதோடு போராடி அதை அடக்கிவைக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டேயிருப்பான். இதுவே விசுவாசியில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாற்றம். பாவம் அவிசுவாசியிலும் விசுவாசியிலும் தன் தன்மையைப் பொறுத்தவரையில் நூறுவீதம் பாவமாகத்தான் தொடர்ந்திருந்தபோதும், அவிசுவாசி விசுவாசியாக மாறுகிறபோது பாவத்தின் ஆளும் தன்மையிலும், விசுவாசியிலுமே மாற்றம் ஏற்படுகின்றது. அவிசுவாசியை பாவம் ஆளுகிறது; விசுவாசி பாவத்தை ஆளுகிறான்.
இந்த உண்மை நமக்குப் பாவத்தைப் பற்றிய சில முக்கியமானதும் அவசியமானதுமான உண்மைகளை விளக்குகின்றன:
(1) விசுவாசிகள் செய்கின்ற அனைத்துப் பாவங்களும் கர்த்தரின் பரிசுத்தத்திற்கு எதிரானவை; முரணானவை. விசுவாசிக்குள் இருக்கும் பாவம், அது விசுவாசிக்குள் இருக்கிறது என்பதினாலும், விசுவாசி அதைச் செய்திருக்கிறான் என்பதனாலும் தன்னுடைய குணத்தை, தன்மையை மாற்றிக்கொள்ளுவதில்லை. விசுவாசிக்குள் இருக்கின்றபோதும் அது தொடர்ந்தும் பாவமாகத்தான் இருக்கிறது. ‘சிங்கம் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டிருக்கலாம்; இருந்தும் அது தொடர்ந்து சிங்கமாகத்தான் இருக்கிறது’ என்கிறார் தொமஸ் வொட்சன். விசுவாசியில் இருக்கும் மூலபாவத்தை விளக்குகிற வொட்சன் சொல்லுகிறார், ‘மூலபாவம் நம் இருதயத்தில் மறைந்திருக்கின்ற போதும் நிலத்திற்குக் கீழ் ஒடுகின்ற அருவிபோலிருந்து சடுதியாக குபீரென்று வெளிப்பட்டு பெருகியோடும்.’ அவர் தொடர்ந்து ‘இவ்வுலக வாழ்வில் நாம் மூலபாவத்தை இல்லாமலாக்கிவிட முடியாது’ என்கிறார்.
கடவுளோடு விசுவாசிக்கு இப்போது புதிய உறவு இருக்கிறதென்பது உண்மைதான். கர்த்தரின் நீதியான கண்டனமும், அவருடைய நீதியான கோபமும் அந்த உறவின் காரணமாக இப்போது அவன் மீது இல்லை. இப்போது கர்த்தர் அவனுக்குத் தகப்பனாகவும் அவன் அவருடைய பிள்ளையாகவும் இருக்கிறான். இப்போது பரிசுத்த ஆவியானவர் அவனில் குடிபுகுந்திருக்கிறார்; அவனுக்குப் பரிந்துரை செய்கிறவராகவும் இருக்கிறார். அவனைப் பொறுத்தவரையில் இதெல்லாம் மறுதலிக்க முடியாத உண்மைகளாக இருந்தபோதும் விசுவாசிக்குள் இருக்கின்ற பாவமும், அவன் செய்கின்ற அனைத்துப் பாவங்களும் அவற்றின் தன்மையைப் பொறுத்தவரையில் கர்த்தரின் கோபத்தின் கீழும், தகப்பனாக இருந்து அவர் செய்யும் சிட்சையின் கீழாகவும் வருவதோடு அவருடைய முகத்தையும் சுளிக்கவைக்கின்றன. விசுவாசிக்குள்ளிருக்கும், தொடர்ந்திருக்கும் பாவம் மறுப்பிறப்படைந்து கர்த்தரின் பிள்ளையாக இருக்கும் அவனுடைய புதிய உறவுக்கெல்லாம் முற்றிலும் முரண்பாடானது. கர்த்தரின் சாயலுக்குள் அவன் படைக்கப்பட்டிருப்பதால் அது கர்த்தருக்கும் முற்றிலும் முரணானது. பாவத்தைப் பற்றிய இந்த உண்மை சத்தியமானதாக இருப்பதால்தான் யோவான், 1 யோவான் 3:1ல் தந்திருக்கும் அறிவுரை நமக்கு நடுக்கமூட்டுவதாக இருக்கிறது.
“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்” என்று யோவான் எழுதியிருக்கிறார். இதெல்லாம் நமக்குப் போதிப்பதென்ன. பாவம் தொடர்ந்தும் பாவமாக இருந்து வருவதால், அது விசுவாசிக்கு எப்போதுமே தலைவலியாக இருந்து வருவதால் விசுவாசி ஒருபோதும் பாவத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது; அதை உதாசீனப்படுத்தக்கூடாது; அலட்சியம் செய்யக்கூடாது. பாவத்தைப் பொறுத்தவரையில் அக்கறையற்றவனாயிருக்கக்கூடாது. ஒரு பியூரிட்டன் போதகரும், இறையியலறிஞரும் ‘பாவத்தின் பாவம்’ என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். அது பாவத்தை நாம் எப்போதுமே சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை விளக்குவதாக இருக்கிறது. யோவான், 1 யோவான் 3:3ல் சொல்லுகிறார், “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” என்றும், 2:16ல், “ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” என்றும் விளக்கியிருக்கிறார்.
(2) விசுவாசியில் இருக்கும் பாவம் அவனுடைய இருதயத்திலும் வாழ்க்கையிலும் முரண்பாட்டை உண்டாக்குகின்றது. அவனுக்குள் பாவம் தொடர்ந்து வாசம் செய்யுமானால் இத்தகைய முரண்பாடிருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட முடியாது. இத்தகைய முரண்பாடு அவனில் இருப்பது சகஜம் என்பதை மறுப்பதும் முட்டாள்தனமானது. பரிசுத்த ஆவி குடிபுகுந்திருக்கும் விசுவாசியில் ஆகக் குறைந்தளவுக்கு பாவம் செய்தாலும் அவனுடைய இருதயத்தில் அது முரண்பாட்டை, கலக்கத்தை உண்டாக்கும். மேலும் மேலும் அவன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவனாக கிருபையில் வளர்கின்றபோது கிறிஸ்துவின் சாயலுக்கு முரணானதாகத் தன்னில் காணப்படும் எதையும் குறித்து அவன் நடுக்கமடைவான். கர்த்தரின் மகா பரிசுத்தத்தை அவன் மேலும் மேலும் புரிந்துகொள்ளுகிறபோது, வைராக்கியத்தோடு அவருடைய அன்பில் அவன் மேலும் மேலும் வளர்கிறபோது, கிறிஸ்துவுக்குள் அவன் அடைய வேண்டிய பரிசுக்காக அவன் மேலும் மேலும் ஏக்கத்தோடு முன்னோக்கிப் போகிறபோது, தன்னில் இருக்கும் பாவத்தின் கோரத்தை அவன் இன்னும் அதிகமாக உணர்ந்து அதை இன்னும் அதிகமாக வெறுக்கிறவனாகவும், அதிலிருந்து முற்றாக விடுபடவேண்டும் என்ற துடிப்புள்ளவனாகவும் இருப்பான். அத்தகையவனின் கூக்குரலைத்தான் நாம் ரோமர் 7:24ல் வாசிக்கிறோம், “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
கர்த்தரின் மகா பரிசுத்தத்தின் அருகில் வந்து ருசிபார்க்கின்ற அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் பாதிப்பு இத்தகையதாகத்தான் இருக்கும். வேதபூர்வமான பரிசுத்தமாகுதலில் ஈடுபட்டிருக்கின்ற எவரும் பாவத்தை மிகச் சாதாரணமானதாகக் கருதி அசட்டையோடிருந்து விடமாட்டார்கள். என்றென்றும் பரிசுத்தமாக இருக்கின்ற கிறிஸ்துவின் சாயலை முற்றிலும் ஒத்திருப்பதற்கு இடையூறாக இருக்கும் எந்தப் பாவக்குறைபாட்டையும் வேதபூர்வமான பரிசுத்தமாகுதலில் ஈடுபட்டிருப்பவர்கள் சகஜமானதாகக் கருதி அசட்டை செய்யமாட்டார்கள். அதனால்தான் மத்தேயு 5:48ல் கீழ்வரும் வசனத்தை வாசிக்கிறோம், “ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.”
(3) பாவம் விசுவாசியில் தொடர்ந்திருக்கின்றபோதும் அது அவனை ஆளமுடியாது, வெல்ல முடியாது என்ற உண்மையை நாம் அடிக்கடி நினைவுபடுத்தி அதன் தாற்பரியத்தை உணர்ந்து களிப்படைவது அவசியம் (ரோமர் 6:14). ஆளுகின்ற பாவத்திற்கும், தொடர்ந்திருக்கும் பாவத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. மறுபிறப்படைந்திருக்கிறவர்கள் பாவத்தோடு முரண்படுவதற்கும், மறுபிறப்படையாதவர்கள் பாவஉணர்வின்றி அலட்சியமாக வாழ்வதற்கும் இடையில் பெரும் வேறுபாடிருக்கிறது. பாவம் நம்மில் தொடர்ந்திருப்பதற்கும், பாவத்தில் நாம் தொடர்ந்து வாழ்வதற்கும் இடையில் பெரும் வேறுபாடிருக்கிறதல்லவா?
விசுவாசியின் வாழ்நாள் இலட்சியமே பாவத்தைத் தொடர்ந்து தன் கட்டுக்குள் வைத்திருப்பதாகத்தான் இருக்கும். ஒரு புறம் அவன் கிறிஸ்தவ சந்தோஷத்திலும், கிருபையிலும், ஆவியின் அனுபவத்திலும் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவனாயிருக்கும்படி தொடர்ந்து வளர்கின்றபோதும் மறுபுறம் பாவத்தோடு மல்யுத்தம் செய்து அதை அழிக்கும் பணியில் வைராக்கியத்தோடு கடைசிவரை போராடிக்கொண்டேயிருப்பான். நம்முடைய பரிசுத்தமாகுதலாகிய பெரும் பணியில் ஒரு பக்கம் பாவத்தோடு தொடர்ந்து போராடுவதாகும். ஆவியின் துணையோடு ஆவிக்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி அந்தப்பணியை நாம் தொடர்ந்தும் செய்து வரவேண்டும். நம்மில் வாசம் செய்யும் பாவம் பல்லிழந்த பாம்புபோல இருந்தபோதும் அது தொடர்ந்தும் பெருந்துன்பங்களை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது என்பதை அறிந்திருக்கும் விசுவாசி தன்னுடைய ஆயுதங்களைத் தொடர்ந்தும் நல்ல நிலையில் வைத்திருந்து அவற்றைப் பயன்படுத்தி பாவத்தைத் தன்னில் அழிக்கும் பணியில் இன்னும் அதிக விசுவாசத்தோடும், கருத்தோடும், வைராக்கியத்தோடும் ஈடுபட்டு வருவான். அவன் வெற்றிகொள்ளும் ஒவ்வொரு சோதனையும், மாம்சத்தின் கிரியையும் அவனை ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னோக்கி அழைத்துப் போகும். இந்தவிதத்திலேயே அவன் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பானவனாக முழுப் பூரணத்துவத்தை (பரலோகத்தில்) எதிர்பார்த்து தன் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்திவருவான்.
ரோமர் 6:12-13 ஆகிய வசனங்களைக் கவனியுங்கள். பாவம் நம்மை ஆளமுடியாதபடி நாம் மறுபிறப்படைந்திருப்பதால் விசுவாசத்தின் மூலமாக கிருபையின் துணையோடும் ஆவியின் பலத்தோடும் நாம் தொடர்ந்திருக்கும் பாவத்தின் செயல்களை நாம் அன்றாடம் வெற்றிகொள்ள வேண்டும்.
ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.