இந்த வருடம் திருச்சபை சீர்திருத்தம் ஆரம்பமான 500வது வருடமாகும். அதை நினைவுகூரும்முகமாக சீர்திருத்த கிறிஸ்தவ திருச்சபைகள் பல நாடுகளில் ஆவிக்குரிய கூட்டங்களை நடத்துவார்கள். இந்த இதழின் அட்டைகூட அதை நினைவுகூரும் வகையிலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது. நம்மினத்துக் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோருக்கு சீர்திருத்த கிறிஸ்தவ வரலாறு தெரியாது. இன்றும் கத்தோலிக்க மதத்தை கிறிஸ்தவமாக எண்ணி வாழ்ந்துகொண்டிருக்கும் சுவிசேஷ கிறிஸ்தவ சபைகள் நம்மினத்தில் ஏராளம். அந்தளவுக்கு கிறிஸ்தவம் தாழ்ந்த நிலையில் தொடர்ந்திருந்து வருகிறது. 500 வருடங்களுக்கு முன் கர்த்தர் மார்டின் லூத்தர் மூலமாக கத்தோலிக்க மதத்தின் அச்சாணியைப் பிடுங்கி எடுத்தார். ஏனைய சீர்திருத்தவாதிகள் கத்தோலிக்க வண்டியின் சக்கரங்களைத் தெரித்தோட வைத்தார்கள். அந்த ஆவிக்குரிய எழுப்புதலே நமக்கு வேதப்புத்தகத்தை வாசிக்கும்படியாக நம் மொழியில் தந்தது. கிருபையின் மூலம் விசுவாசத்தினூடாக மட்டுமே இரட்சிப்பு என்ற சத்தியத்தைப் பட்டிதொட்டியெல்லாம் பரவவும் செய்தது. அடுத்த இதழில் சீர்திருத்தவாதத்தின் இந்த 500வது நினைவாண்டையொட்டிய ஆக்கங்கள் வரும்.
கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியமான தேவபயத்தையும், பக்திவைராக்கியத்தையும் வலியுறுத்தி அதுபற்றிய தொடர் ஆக்கங்களை போதகர்கள் அல்பர்ட் என் மார்டினும், டேவிட் மெரெக்கும் இந்த இதழில் எழுதி வருகிறார்கள். பாவத்தின் பண்பைப் பற்றிய ஒரு ஆக்கத்தை நான் இதில் எழுதியிருக்கிறேன். அதுபற்றிய சிந்தனைகள் அதிகமாக இருந்து, பக்திவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவ சமுதாயம் அதிகரிக்கின்றபோதே கர்த்தரின் மெய்யான எழுப்புதலை இந்த உலகத்தில் காணலாம். அத்தகைய காலப் பகுதிகளாகத்தான் சீர்திருத்தவாத காலமும், பியூரிட்டன்களின் காலமும் இந்த உலகில் இருந்திருக்கிறது. அக்காலங்களில் பக்திவைராக்கியமுள்ள கிறிஸ்தவ போதகர்களையும், தலைவர்களையும், கிறிஸ்தவ சமுதாயத்தையும் உலகம் கண்டிருப்பதற்குக் காரணம் அவர்கள் பாவத்தின் கோரத்தைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அதை அசட்டை செய்து வாழாமலிருந்ததுதான். இன்று நம்மத்தியில் பாவத்தை அசட்டைசெய்து வெறும் சங்கீதக் கச்சேரி நடத்தி வரும் ஆவியின் வல்லமையற்ற கிறிஸ்தவ சமுதாயத்தையே நாம் காண்கிறோம். ‘பாவத்தை அழித்து வாழ்; இல்லாவிட்டால் அது உன்னை அழித்துவிடும்’ என்றார் பியூரிட்டன் பெரியவர் ஜோன் ஓவன். – ஆர்