இறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)

நாம் ஒருபோதும் எந்தப் பெயரையும் வெறும் ‘லேபலாக’ பயன்படுத்தக்கூடாது. அதாவது வசதிக்காகவோ, சுயலாபத்திற்காகவோ, காரணங்கள் எதுவுமின்றியோ, பாப்திஸ்து, பிரெஸ்பிடீரியன், கல்வினிஸ்ட்டு, சீர்திருத்தவாதம் என்பவற்றையெல்லாம் எந்தவித ஆழ்ந்த இறையியல் புரிந்துணர்வோ, நம்பிக்கைகளோ இல்லாமல் பயன்படுத்திவருவது நம்மினத்தில் மிகச் சாதாரணமாக இருந்துவருகிறது. தமிழகத்தில் எனக்குப் பரிச்சயமான ஒரு சபைப்பிரிவு மேலைத்தேய நாட்டில் இயங்கி வரும் ஒருசபைப்பிரிவின் பெயரை, அது எந்த நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறது, ஏன் அந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டிருக்கிறது, அது வேதபூர்வமானதா, இல்லையா என்பதெதுவுமே தெரியாமலும், அறிந்துவைத்திராமலும் அந்தப் பெயரைச் சூட்டித் தன்னை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த மேலைத்தேய சபைப்பிரிவைத் திருப்திப்படுத்தி அவர்களிடம் வசதி பெறுவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டு அது இதைச் செய்துவருகிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரையில் அந்தப் பெயர் வசதிக்காகப் பயன்படுத்திக்கொள்ளுகிற வெறும் ‘லேபல்’ மட்டுமே.

சத்தியம் நமக்கு ‘லேபலாகி’விடக்கூடாது. என்றைக்கு அது நமக்கு வெறும் லேபலோ அன்றே ஆவியானவர் நம்மிடம் இல்லையென்றாகிவிடும். நான் விசுவாசிக்கின்ற சத்தியம் என்னுடைய ஆவிக்குரிய ஆழ்ந்த நம்பிக்கை; அதற்கு நான் அடிமை. உதாரணத்திற்கு, தேவன் ஒருவரே என்பதும், அவரில் மூன்று ஆள்தத்துவங்கள் உண்டு என்பதும், அம்மூன்று ஆள்தத்துவங்களும் ஒருவரே என்பதும் எனக்கு வெறும் பொருளற்ற வார்த்தைகளல்ல; அவை இறையாண்மையுள்ள கர்த்தரைப் பற்றிய அசைக்கமுடியாத வேத நம்பிக்கை. இதை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியமோ கட்டாயமோ எனக்கில்லை. இதில் நம்பிக்கையில்லாதவர்களை நான் உதறித்தள்ளமாட்டேன்; அதேநேரம் அவர்களுடைய உறவுக்காக இதைத் தியாகம் செய்யவும் மாட்டேன். இத்தகைய ஆழ்ந்த உறுதியான சத்திய நம்பிக்கையின்மையே அநேக சபைப்பிரிவுகளையும், சபைத் தலைவர்களையும் லிபரல் கோட்பாடுகளைப் பின்பற்றவும், நியோ ஓர்த்தடொக்ஸி (Neo-Orthodoxy) நிலைப்பாட்டை ஏற்கவும் பின்தள்ளியிருக்கிறது.

ஆழ்ந்த சத்திய நம்பிக்கையின் அவசியம்

ஆங்கிலத்தில் Conviction என்றொரு வார்த்தை உண்டு. இதற்கு க்ரியா சொற்பொருள் அகராதி ‘தீர்க்கம்’ அல்லது ‘தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு’ என்று பொருள் தருகிறது. இதை ஆழமான தீவிர நம்பிக்கை என்றும் கூறலாம். இத்தகைய உறுதியான தீர்க்கமான நிலைப்பாடு சத்தியத்தைப் பொறுத்தவரையில் நம்மினத்தில் அநேகரிடம் இன்று இல்லை. இத்தகைய நிலைப்பாடு இல்லாதவர்களாக பிரசங்கிகளும் போதகர்களும் இருக்கமுடியாது. ஆனால், இந்த நிலைப்பாட்டைக் கொண்டிராதவர்களே பெரும்பாலும் சபைகளிலும், மேடைகளிலும் கர்த்தரின் பெயரில் செய்தியளித்து வருகிறார்கள். உறுதியான ஆழமான இறையியல் நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஊழியப்பிழைப்பு நடத்த உதவாது என்பது பொதுவாகவே அநேகமான ஊழியர்களுடைய எண்ணமாக இருக்கிறது. வெளிப்படையாக இப்படிச் சொல்லி வாழ்கிறவர்களே நம்மினத்தில் ஏராளமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்தவனுக்கு இருக்கவேண்டிய ஆழமான தீவிர வேத நம்பிக்கையைப் (Conviction) பற்றி ஒரு எழுத்தாளர் பின்வருமாறு விளக்குகிறார், “ஒரு காரியம் உண்மையானது என்று அதைப்பற்றிய உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதே இந்தத் தீர்க்கமான நிலைப்பாடு; இதற்குப் பொருள் வலுவான நம்பிக்கையைக் கொண்டிருத்தல். இன்னொரு வகையில் சொல்லப்போனால் இந்த வலுவான நம்பிக்கை நம்பிக்கையின்மைக்கும், சந்தேக மனநிலைக்கும் முற்றிலும் எதிர்மறையானது. ஆழமான நம்பிக்கை கொண்ட மனிதனாக (Man of Conviction) ஒருவரை நாம் கருதும்போது, அவர் உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவராகவும், தான் போகிற பாதையைத் தெளிவாக உணர்ந்திருக்கிறவராகவும் கருதுகிறோம். அந்த மனிதனின் தீர்க்கமான நம்பிக்கைகள் அவன் வாழும் விதத்தையும், சிந்தனையையும், பேச்சையும், போகிற பாதையையும் அடியோடு மாற்றி அமைத்திருப்பதைக் காண்கிறோம். உறுதியான வேதநம்பிக்கைகள் கொண்ட மனிதனாக ஒருவனை நாம் கருதுகிறபோது அவனுடைய நம்பிக்கைகள் வேதத்தில் இருந்து மட்டும் வெளிப்படுகிறதையும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அவை பெருமாற்றங்களைக் கொண்டுவந்திருப்பதையும் குறிக்கிறோம்.” இத்தகைய தீர்க்கமான நம்பிக்கைகளைக் கொண்டிருக்க ஒருவன் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவனாகவும், தன்னுடைய வேதநம்பிக்கைகளைச் சரியாக வரையறுத்துக் கொண்டவனாகவும், அவற்றின்படி நடந்துசெல்லுவதற்கான தைரியத்தைக் கொண்டவனாகவும் இருக்கவேண்டும். (ரோமர் 4:18-22).

தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராத மனிதன் நல்ல பிரசங்கியாகவும், போதகனாகவும் இருக்கவழியில்லை. அத்தகைய மனிதன் சத்தியத்தில் தெளிவில்லாதவனாகவும், ஏராளமான முரண்பாடுகளைத் தன்னில் கொண்டவனாகவும் இருப்பான். அவன் நிலைதடுமாகிறவனாகவும், இரட்டை மனம் கொண்டவனாகவும் காணப்படுவான். இதைத்தானே நாடுபூறாவும் மேடை மேடையாகக் காண்கிறோம் என்பீர்கள், உண்மைதான். அதுவே நம்மினத்தைப் பிடித்திருக்கும் ஆவிக்குரிய பேராபத்து. திருச்சபை ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிற மனிதன் ஒருபோதும் தெளிவானதும் உறுதியானதுமான இறையியல் அடித்தளத்தை வாழ்க்கையில் கொண்டிராதவனாக இருக்கக்கூடாது; அவன் படிப்பறிவில்லாத கிராமத்து மக்களுக்குப் போதகனாக இருந்தாலும்கூட.

ஒரு போதகன் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் காலத்தில் தான் எதை விசுவாசிக்கிறோம் என்ற நம்பிக்கையில்லாதவனாக, எதை விசுவாசிக்க வேண்டும் என்பதைத் தேடியலைந்து கொண்டிருக்கும் இறையியல் நாடோடியாக (Theological nomad) இருக்கக்கூடாது. போதகனாக வருவதற்கு முன்பே இதிலெல்லாம் அவன் தெளிவான, உறுதியான நம்பிக்கைகளை அடைந்திருக்கவேண்டும். அதனால்தான் மேலைநாட்டில் குறைந்தளவு பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்களை இறையியல் கல்விப் பயிற்சிக்கு அனுமதிக்கமாட்டார்கள். இதில் விதிவிலக்குகள் இருந்துவிடலாம். இருந்தாலும் இந்தப் பொதுவான விதிக்குக் காரணம் கல்வியறிவு பெற்றிருப்பவனுக்கே எழுத வாசிக்கத் தெரிந்திருந்து நூற்றுக்கணக்கான ஆழமான இறையியல் நூல்களை நுண்ணுணர்வோடு வாசிக்கவும், ஆராயவும் முடியும் என்பதுதான். (நம்மூர் பட்டங்களெல்லாம் பல் துலக்கவும் உதவாது.) எப்போதும் ஆரம்ப இறையியல் பயிற்சி ஒருவன் எதை விசுவாசிக்கவேண்டும் என்பதை அவனில் ஆழமாகப் பதியச்செய்வதாக இருக்கவேண்டும். அதுவே அவனுடைய ஊழியத்தில் அவனுக்கு எதிர்கால வழிகாட்டி. இதை ஆத்துமாக்களுக்கு வழங்கக்கூடியதாக திருச்சபைகள் இருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தெளிவாகப் பிரசங்கிப்பதற்கு, பிரசங்கி அதில் தேர்ந்த ஞானத்தையும், ஆழமான நம்பிக்கையையும் கொண்டவனாக இருக்கவேண்டும். உதாரணத்திற்கு, வேதத்திற்கு முரணான ஆர்மீனியனிசப் போதனைகளை நம்புகிற ஒருவன் அத்தகைய நிலைப்பாடுள்ளதாகவே சுவிசேஷ செய்தியை அளிக்க முடியும். காலக்கூறு கோட்பாட்டை நம்புகிற ஒருவன் தான் இன்று திருச்சபை காலத்தில் (Church age) வாழவில்லை என்ற நிலைப்பாட்டோடு சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டு வருவான். கெரிஸ்மெட்டிக் நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசாதவர்களெல்லாம் ஆவியானவரைத் தங்களில் கொண்டிருக்கவில்லை என்றும் அவர்கள் விசுவாசிகளாக இருக்கமுடியாது என்ற நிலைப்பாட்டோடு இருந்து வருவார்கள். தவறான இறையியல் நம்பிக்கைகள் தவறானவிதத்தில் வேதத்தை விளக்கவும், பிரசங்கிக்கவும் வைத்துவிடும், ஆத்துமாக்களை வஞ்சிக்கவும் வைத்துவிடும். காரை ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே எங்குபோகப் போகிறோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் இல்லையா? அதை ஓட்டிக்கொண்டிருக்கும்போது போகவேண்டிய இடத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டோ, அதற்கான வழியைத் தேடிக்கொண்டோ இருப்பதில் இருக்கும் பெரும் சங்கடம் நமக்குத் தெரியாமலிருக்க முடியாது. இதுபோலத்தான் தீர்க்கமான உறுதியான வேத இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிராமல் இருப்பதும், வாழ்வதும், ஊழியம் செய்வதும்.

இறையியல் கல்லூரிகள் என்ற பெயரில் நம்மினத்தில் இருப்பதெல்லாம் அங்கு போகிறவர்களை தவறான இறையியல் போக்கில் வழிநடத்துவனவாகவே இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆணித்தரமாக சத்தியத்தை விளக்குகிற நிலைப்பாட்டைக் கொண்டிராமல் எந்தத் திருச்சபைப் பிரிவுக்கும் எதிரானதாக இல்லாத, எல்லோரையும் திருப்திப்படுத்துகிற இறையியல் போதனைகளை வழங்குகிற நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் இவற்றில் தீர்க்கமான உறுதியான நம்பத்தகுந்த இறையியல் போதனைகளை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. இத்தகைய கல்லூரிகளில் டிகிரி வாங்கியிருப்பவர்களே பெரும்பாலும் நம்மினத்து ஊழியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஆழமான நம்பத்தகுந்த போதனைகள் இவர்களிடம் இல்லாமலிருக்கின்றன. இவர்கள் வழிநடத்தும் ஆத்துமாக்கள் பருந்தின் கையில் அகப்பட்ட புறாவின் நிலையிலேயே இருந்து வருவார்கள்.

வேதம் மட்டுமே சத்தியமானது; அதன் போதனைகள் தவறற்றவை, அது மட்டுமே பூரணமான அதிகாரம் கொண்டது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சபைப்பிரிவுகளை சந்தோஷப்படுத்தும் நோக்கில் இல்லாமல் வேதபோதனைகளைக் கொடுக்கும் இறையியல் கல்லூரிகள் நம்மினத்தில் இல்லை. சமீபத்தில் ஒரு இந்திய இறையியல் கல்லூரி பேராசிரியரை சந்தித்தேன். இளைஞரான அவர் தான் எழுதப்போகும் இரண்டாவது பி. எச். டீ பட்டத்துக்கான பொருளை எனக்கு விளக்க விரும்பினார். எகிப்து நாட்டுக்கும் திராவிடத் தமிழகத்துக்கும் எத்தகைய தொடர்பு இருந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்வதே அவருடைய நோக்கமாக இருந்தது. இது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வேண்டுமானால் பயன்படும்; ஆவிக்குரிய திருச்சபைக்கு எந்தப்பயனையும் அளிக்கப்போவதில்லை என்று கூறி அவரை வேதசத்தியங்களை கருப்பொருளாகக் கொண்டு ஆய்வில் ஈடுபடும்படி அறிவுரை கொடுத்தேன். லிபரலிசம் எந்தளவுக்கு நம்மினத்து இறையியல் கல்லூரிகளைப் பாதித்து அங்கு போகிறவர்களை ஆத்மீக அழிவை நோக்கி வழிநடத்துகின்றன என்ற உணர்வுகூட நம்மினத்து கிறிஸ்தவத்தில் இல்லாமலிருக்கின்ற போக்கு வருத்தந்தருவதாக இருக்கிறது.

வேதமும் திருச்சபை வலாறும் சுட்டும் உதாரணங்கள்

தீர்க்கமான உறுதியான வேதநம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கு எண்ணிக்கையற்ற உதாரணங்களை வேதத்திலும், சபை வரலாற்றிலும் காணலாம். ஆண்டவர் இயேசு தான் வாழ்ந்த சமுதாயத்துக்கும், யூத மதத்துக்கும் தலை சாய்த்து நடக்காமல் தன் பிதா தனக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் மட்டுமே உறுதியாக இருந்தார். அவருடைய மலைப்பிரசங்கம் தீர்க்கமான ஆணித்தரமான வேத நம்பிக்கைகளை தெளிவாக ஆத்துமாக்கள் முன்வைக்கிறது. அதில் சமய சமரசத்தையோ, அடக்கி வாசிக்கின்ற அசிங்கப் பாணியையோ நாம் காண வழியில்லை. யூதமதமும், பரிசேயர்களும், சதுசேயர்களும், ஆலய நிர்வாகிகளும், ரோமர்களும் என்ன நினைப்பார்கள் என்ற கவலையெல்லாம் இல்லாமல் சத்தியத்தை சத்தியமாக தலைநிமிர்ந்து பிரசங்கித்த தேவகுமாரனை நாம் கிறிஸ்துவில் காண்கிறோம். சமயசமரசம் செய்ய எண்ணியிருந்தாலோ, சத்தியத்தை தோசையைத் திருப்பிப்போடுவதைப்போல திருப்பிப்போட்டுப் பிரசங்கிக்க நினைத்திருந்தாலோ, எந்த பயமும் இல்லாமல் யூதர்கள் மத்தியில் அவர் ‘பிதாவும் நானும் ஒருவரே’ என்றும், ஆபிரகாமுக்கு முன்பே நானிருந்தேன்’ என்றும் வைராக்கியத்தோடு பேசியிருப்பாரா? அப்படிச் சொன்னதால்தானே அவர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்லத் துடித்தார்கள். சிறுவயது முதலே இயேசு தன் மானுடத்தில் வேதநம்பிக்கைகளைத் தீர்க்கமாக, ஆழமாகக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம்.

இதேபோலத்தான் ஸ்தேவானையும், அப்போஸ்தலன் பவுலையும், பேதுருவையும், தீமோத்தேயுவையும், தீத்துவையும் காண்கிறோம். இவர்களெல்லோரும் இயேசுவைப்போலத் தீர்க்கமாக வேதநம்பிக்கைகளைத் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டு மனச்சாட்சியைச் சுத்தமாக வைத்திருந்து சத்தியத்தைப் பிரசங்கித்தும் போதித்தும் வந்திருக்கிறார்கள். இவர்களிடம் எந்தவிதமான சத்தியத் திருகுதாளமும் இருந்ததாக நாம் வேதத்தில் வாசிப்பதில்லையே. அப்போ 24:16ல் பவுல் சொல்லுகிறார், ‘இதனால் நான் தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.’ இதற்குக் காரணம் தனக்கு சத்தியத்தில் இருந்த தீர்க்கமான நம்பிக்கை என்பதை இதற்கு முன்வரும் வசனங்களில் பவுல் விளக்கியிருக்கிறார். சத்தியத்தில் தெளிவில்லாமல் வேதம் தெரிந்ததுபோல் போலியாக நடித்துப் பிரசங்கிக்கிறவர்களும், வயிற்றுப்பிழைப்புக்காக சத்தியத்தைத் தள்ளிவைத்துவிட்டு பொய்யைப் போதித்து வருகிறவர்களும் கறைபடிந்த மனச்சாட்சியோடும், தங்களைக் குற்றப்படுத்தும் மனச்சாட்சியோடும் கர்த்தருக்கு முன்பும், ஆத்துமாக்களுக்கு முன்பும் ஊழிய நாடகமாடி வருகிறார்கள்.

வேதம் மட்டுமல்லாமல் சபை வரலாறும் நமக்கு எண்ணற்ற தீர்க்கமான வேதநம்பிக்கைகளைக் கொண்ட ஆவிக்குரிய மனிதர்களை இனங்காட்டுகிறது. சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் இதற்கு பேருதாரணமாக இருந்தார். அதற்குக் காரணம் அவருடைய தீர்க்கமான வேத நம்பிக்கைகளை அவர் மிகவும் கடுமையான உயிர்ப்போராட்டத்தின் மத்தியில் வெளிப்படுத்த நேர்ந்ததுதான். கத்தோலிக்க போப்பும் அவரைச் சார்ந்தவர்களும், நாட்டரசனும் கத்தோலிக்க மதத்திற்கெதிரான 95 காரணங்களை அவர் எழுதியதற்கான காரணத்தை விளக்கும்படி ஒரு கூட்டத்திற்கு அவரை வரவழைத்து, அந்தக் கூட்டத்தில் அவருடைய காரணங்களை ஏற்றுக்கொள்ளாமல் தான் எழுதியதனைத்தையும் மறுதலித்து கத்தோலிக்க மதத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சொல்லச் சொன்னபோது, ‘என் மனச்சாட்சி வேதத்திற்குக் கட்டுப்பட்டது, என் மனச்சாட்சிக்கு எதிராக என்னால் நடக்க முடியாது’ என்று ஆணித்தரமாக உயிர்ப்பயமில்லாமல் அனைத்து எதிரிகள் முன்பும் மார்டின் லூத்தர் சொன்னதை எண்ணிப்பாருங்கள். இதை ஆழமான உறுதியான வேதநம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே செய்யமுடியும். இத்தகைய அசைக்கமுடியாத மெய்யான வேதநம்பிக்கை கொண்டிருக்கும் தீர்க்கமான மனிதர்களை நம்மினத்தில் எங்கு காணமுடிகிறது. விட்டால் இயேசுவையே விற்றுவிடத் தயாராக இருக்கின்ற போலிகள் நிரம்பியிருக்கும் நாடாக அல்லவா நம்நாடிருக்கிறது. 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தை நினைவுகூருகிற விசேஷ கூட்டங்கள் நடத்துகிற நம்மினத்து திருச்சபைகள் அதைச் செய்வதற்கு தங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதை ஒருதடவை நினைத்துப் பார்ப்பது நல்லது. வயிற்றுப்பிழைப்புக்கு சத்தியத்தை விற்று வாழ்க்கை நடத்துகிறவர்கள் எங்கே, மார்டின் லூத்தர் எங்கே?

திருச்சபை வரலாற்றில் சீர்திருத்த பாப்திஸ்து பிரசங்கியும் போதகருமான ஸ்பர்ஜனை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியாது. தன் காலத்தில் பாப்திஸ்து யூனியன் வேத நம்பிக்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர எத்தனித்து, விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேதவசனங்களை ஆய்வு செய்து நிரூபிக்கும் எத்தனிப்பில் ஈடுபாடு காட்டியபோது வரப்போகின்ற ஆபத்தைத் துல்லியமாக புரிந்துகொண்டிருந்த ஸ்பர்ஜன் அதை பாப்திஸ்து யூனியனுக்கு விளக்க அவர்கள் அதைப் புறந்தள்ளி எள்ளிநகைத்தபோது, தனியொருவராக தன்னுடைய திருச்சபையை பாப்திஸ்து யூனியனில் இருந்து விலக்கி தானும் தன் சபையும் எதை விசுவாசிக்கிறோம் என்பதை சந்தேகமற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக 1689 விசுவாச அறிக்கையை மறுபடியும் பதிப்பித்து வேதத்திற்கும், அதற்கும் மட்டுமே அடிபணிவோம் என்று பகிரங்கமாக பறைசாற்றித் தான் தீர்க்கமான ஆணித்தரமான வேதநம்பிக்கைகள் கொண்டவன் (Man of biblical conviction) என்பதை ஸ்பர்ஜன் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்தார். சுயலாபத்தில் மட்டும் அக்கறைகொண்டவராக இருந்திருந்தாலோ அல்லது பாப்திஸ்து யூனியனோடு ஒத்துப்போய் சத்தியம் பெரிதில்லை என்று எண்ணியிருந்தாலோ ஸ்பர்ஜன் இப்படி நடந்திருந்திருப்பாரா? ஆழமான, ஆணித்தரமான வேதநம்பிக்கையல்லவா அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது.

ஆழமான சத்திய நம்பிக்கைக்கு என்ன நடந்தது?

நமக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்; அது பற்றிய தீர்க்கமான அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கைகள் சத்தியத்தின் அடிப்படையில் அமைந்திராவிட்டால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு ஒரு கூட்டத்தில் கிறிஸ்துவுக்காக தீர்மானம் எடுத்ததன் மூலமோ கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறேன் என்று ஒருவர் நம்பிக்கொண்டிருந்தால் விசுவாசத்தைப் பற்றிய அவருடைய இறையியல் நம்பிக்கை அடிப்படையிலேயே தவறுதலானது என்று அர்த்தம். தவறான அந்த நம்பிக்கை அவரில் உறுதியாக இருந்தாலும் அதில் எந்தப் பயனும் இல்லை; ஏனெனில் அவரிடம் கிறிஸ்தவ விசுவாசம் உண்மையிலேயே இல்லை. இதிலிருந்து இறையியல் தவறு எத்தனை ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ளுவது நல்லது. சத்தியம் தொடர்பான எதிலும் நாம் தவறான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கக்கூடாது; அவை பற்றிய அரைகுறை அறிவும் அடியோடு உதவாது. பெரியவர் ஸ்பர்ஜன் ஒரு தடவை சொன்ன வார்த்தைகளை இங்கே நினைவுகூருவது பொருத்தமாயிருக்கும். அவர் சொன்னார், ‘சரியானதற்கும், முற்றிலும் தவறானதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்கமட்டுமல்ல நுணுக்கமான புரிந்துகொள்ளுதல் (Discernment); சரியானதற்கும், சரியானதைப் போலத் தோற்றமளிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை விளக்குவதே நுணுக்கமான புரிந்துகொள்ளுதல்.’ சரியானதைப் போலத் தோற்றமளிக்கும் போலிப்போதனைகள் இன்று இறையியல் போதனைகளைப் பொறுத்தவரையில் பரவலாகவே உலாவி வருகின்றன.

சத்தியம் பற்றிய சத்தியமான உண்மைகள் ஆரம்பக் கிறிஸ்தவனுக்கு மட்டுமல்ல, முதிர்ந்த கிறிஸ்தவனுக்கும் மிக அவசியமானது. அதனால்தான் சீர்திருத்தவாதிகள் சத்தியத்தை வினாவிடைப்போதனைகளாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக எழுதி வெளியிட்டார்கள். சிறுவர்களில் இருந்து பெரியவர்கள்வரை சத்தியத்தை சத்தியமாக ஆரம்பத்தில் இருந்தே அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் ஆணித்தரமாக உணர்ந்திருந்தார்கள். வினாவிடைப் போதனைகள் சத்தியத்தை அப்பட்டமாக துல்லியமாக நேரடியாக விளக்குபவை. அவற்றில் குளறுபடிகளுக்கோ, மலுப்பல்களுக்கோ இடமில்லை. அவற்றை வாசித்து மனதிலிருத்திக் கொள்ளும்போது சத்தியத்தால் நம் மனம் நிரம்புகிறது. இதை உணர்ந்ததால்தான் இங்கிலாந்தில் ரிச்சட் பெக்ஸ்டர் தான் பணிபுரிந்த கிடர்மின்ஸ்டர் ஊரில் வாழ்ந்த அத்தனை வீட்டாருக்கும் வினாவிடைப்போதனையில் பயிற்சியளித்திருந்தார். 16ம் நூற்றாண்டில் ஒல்லாந்து சீர்திருத்த சபைகள் ஆர்மீனியனிச போதனைகளுக்கு எதிராக சினொட் ஓவ் டோர்ட் என்ற தெளிவான அறிக்கையை வேத அடிப்படையில் தொகுத்து வெளியிட்டு திருச்சபைகளுக்கு சத்திய பாதுகாப்பளித்தன. பதினேழாம் நூற்றாண்டில் பியூரிட்டன் பெரியவர்கள் விசுவாச அறிக்கைகளை எழுதி வெளியிட்டனர். இவை நாம் விசுவாசிக்க வேண்டிய வேத சத்தியங்களை முறைப்படுத்தி தொகுத்து வெளிவந்தன. சத்தியம் பாதுகாக்கப்படவும், போலிப்போதனைகளைத் தவிர்த்துக்கொள்ளவுமே இவை வெளியிடப்பட்டன. இவற்றை ஆழமாக விசுவாசித்து, போதித்து திருச்சபைகளை வளர்க்கும்போது அங்கே இறையியல் பச்சோந்தித்தனத்திற்கு இடமிருக்காது. நம்மினத்தில் இன்று திரித்துவம் பற்றிய அடிப்படை சத்தியத்தை அறியாமல் பெரும்பாலான போதகர்களும், விசுவாசிகளும் இருந்து வருகிறார்கள். இவர்கள் திரித்துவ சத்தியத்தை அறியாமல் திரித்துவ தேவனை எப்படி வழிபட்டு வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இன்று ஓரளவுக்கு சத்தியத்தை அறிந்துவைத்திருக்கின்ற பலர் சத்தியத்தில் தெளிவான ஆழமான நம்பிக்கையில்லாதவர்களாக (lacking deep conviction) இருக்கிறார்கள். இதுவும் ஆபத்து. இவர்களே சத்தியம் தெரிந்திருந்தும் அதன்படி வாழாது உலகப்பிரகாரமாக வாழ்கிறவர்கள். இதன் ஆபத்தை இவர்கள் உணர்வதில்லை. இவர்களுக்கு சத்தியம் மனதளவில் மட்டுமே நிற்கிறது. அவர்களுடைய மனச்சாட்சியையும், வாழ்க்கையையும் அது பாதிக்கவில்லை. சத்தியம் தெரிந்திருந்தும் அதுபற்றிய தீர்க்கமான நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றவன் தனக்கும் பிறருக்கும் ஆபத்தானவன். அவனால் அறிந்துவைத்திருக்கின்ற எந்த சத்தியத்தையும் தீர்க்கமான நம்பிக்கையோடு ஆணித்தரமாக அறிக்கையிடவோ, விளக்கவோ, போதிக்கவோ முடியாது. இதைவிட சத்தியத்தை அறிந்திராமல் இருப்பது மேல். இத்தகையவர்களே சத்திய முரண்பாட்டுக்கு இடங்கொடுத்து மலுப்பல் ஆசாமிகளாக, இறையியல் பச்சோந்திகளாக (Theological Chameleons) இருந்துவருவார்கள். முரண்பாட்டுடன் வாழ்வதும், அதன் அடிப்படையில் எதையும் செய்வதும் இவர்களுக்கு கைவந்த கலையாகிவிடுகிறது. இத்தகையவர்களை யாக்கோபு இரட்டை மனம் கொண்டவர்களாகக் கணிக்கிறார். இவர்கள் சத்திய உறுதியற்றவர்கள்; இவர்கள் சத்தியத்துக்கு தூணாக இருக்க வழியில்லை.

பிரசங்கத்தைப் பற்றி விளக்குகின்ற டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ், ‘தத்துவரீதியில் நெருப்பாகப் பிரசங்கிப்பதே பிரசங்கம். நெருப்பாக இருக்கும் ஒரு மனிதன் மூலம் இறையியல் விளக்கங்கள் பாய்ந்து வருவதே பிரசங்கம். இதைச் செய்வதற்கு அவனுக்கு சத்தியம் தெளிவாகத் தெரிந்திருப்பதோடு அதை அவன் அனுபவித்தவனாகவும் இருக்கவேண்டும். நான் மறுபடியும் சொல்லுகிறேன், சத்தியத்தை அனுபவிக்காமல் அதோடு எந்தத் தொடர்பும் இல்லாதவிதத்தில் விளக்குகிற மனிதன் பிரசங்க மேடைப்பக்கம் வருவதற்குத் தகுதியில்லாதவன்; அவனைப் பிரசங்க மேடையில் ஏறவிடக்கூடாது’ என்கிறார்.

இன்று நம்மினத்தில் சீர்திருத்த சத்தியத்தை அறிந்துகொள்ள ஆர்வம் பலருக்கிருக்கிறது. அதிகரித்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களில் பலர் அரைகுறை அறிவோடு அதன் முழுத் தாற்பரியமும் தெரியாமல் இருந்துவருகிறார்கள். அநேகர் இதை சுயலாபத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள். சீர்திருத்தவாதத்தின் அரிச்சுவடி தெரியாதவர்களெல்லாம் அதன் 500வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவது சிரிப்பூட்டுகிற காரியமல்லவா? கடந்தவாரம் என் நண்பரொருவருக்கு அத்தகையதொரு கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு வந்தது. அந்தக் கூட்டம் பற்றி அவர் மேலும் கேள்விகள் கேட்டபோது அது ஒரு பிரஸ்பிடீரியன் சபை நடத்தும் கூட்டம் என்றும் அதில் பேசப்போகிறவர் ஒரு ரோமன் கத்தோலிக்க குரு என்றும் அறிந்து அவர் அதிர்ந்து போனார்.

தேவை இன்று ஆழ்ந்த சத்திய நம்பிக்கை

சீர்திருத்தவாதம் வெறும் ‘லேபலாகப்’ பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகமல்ல. அதன் வரலாற்றையும், வரலாற்று இறையியலில் அது வகிக்கும் பங்கையும், வேத இறையியலோடு அதற்கிருக்கும் பிரிக்கமுடியாத தொடர்பையும், திருச்சபைக் கோட்பாட்டில் அது வகிக்கும் அசைக்க முடியாத இடத்தையும், போதக இறையியலில் அது ஏற்படுத்துகின்ற அனுபவபூர்வமான மாற்றங்களையும் சபைவாழ்க்கையில் அறிந்து, உணர்ந்து அனுபவித்து இருதயத்திலும், வாழ்க்கையிலும் மாற்றத்தை அடையாதவர்களுக்கு அது வெறும் லேபலாக மட்டுமே இருக்கமுடியும்.

சீர்திருத்த இறையியல் இருதயத்தோடு சம்பந்தப்பட்ட, அதில் ஆவிக்குரிய மாற்றத்தை உண்டாக்குகின்ற தீர்க்கமான சத்தியம். அந்த சத்தியத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டுள்ள ஆவிக்குரிய மனிதனை அன்றாடம் மாற்றி பரலோகத்தை நோக்கி நம்பிக்கையோடு நடக்கவைக்கின்ற அனுபவ இறையியல் அது. சீர்திருத்த இறையியல் அனுபவபூர்வமாக ஒருவனில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அவனை அன்றாடம் கர்த்தர் முன் மண்டியிடச் செய்யும். தாழ்மையோடும், தேவபயத்தோடும் கிறிஸ்துவுக்கு ஒப்பானவனாக மாறும்படியாக அவனை மாற்றுகின்ற இறையியல் சத்தியம் அது. தாழ்மை அவனுக்கு நாடகக்காரன் பூசும் அரிதாரம் அல்ல; கர்த்தரின் சர்வ வல்லமைக்கு முன் அவன் தன்நிலை உணரும் குணாதிசயம். சீர்திருத்த இறையியல் நம்பிக்கைகளைக் கொண்டிருந்து அனுபவத்தில் அதை ருசிபார்த்து வருகின்ற மனிதன் வேறெவரையும்விட தன்னுடைய இருதயத்தின் பலவீனத்தையும், பாவத்தையும் அதிகமாக உணர்ந்திருப்பான். அத்தகைய பாவஉணர்வினால் அவன் ஆவியால் வழிநடத்தப்பட்டு அன்றாடம் தன் மாம்சத்தின் பாவத்தையும் பலவீனத்தையும் அடித்து அழித்து வாழ்கிறவனாக இருப்பான். அத்தோடு அவன் இறையாண்மையுள்ள கர்த்தரின் மகிமைக்காக மட்டுமே எதையும் செய்பவனாக, அவருடைய வார்த்தைகளை மட்டுமே பின்பற்றி வாழ்பவனாக இருப்பான். இதன் காரணமாக சீர்திருத்த விசுவாசம் வாழ்க்கை அனுபவத்தோடு ஆழ்ந்த தொடர்புடைய இறையியலாக இருக்கின்றது. இந்த உலகத்தில் பரலோக அனுபவத்தை அடையும்படியாக முழுமையாக வாழ்வில் அனுபவபூர்வமாக பின்பற்ற வேண்டிய வேதசத்தியம் அது. இத்தகைய அனுபவமாற்றத்தைக் கொண்டுவரும் இறையியலை வாழ்க்கையில் கொண்டிராத எவனும் வெறும் ‘காகித சீர்திருத்தவாதி’ (Paper reformers) மட்டுமே. அவன் எசேக்கியேல் 37 விளக்கும் ‘உலர்ந்த எலும்பு.’ அப்படிப்பட்டவன் சீர்திருத்த இறையியலை ஒருபோதும் அறிந்துணர்ந்து புரிந்துகொண்டிராதது மட்டுமல்ல சுயலாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிற மாயக்காரன் (மாற்கு 7:7). அவன் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய். அத்தகையவன் மெய்யான தேவஊழியனாக இருக்க வழியில்லை.

சீர்திருத்த சத்தியத்தை அறிந்து அதில் வளர ஆசைப்படுகிறீர்களா? முதலில் நீங்கள் மெய்யான மனந்திரும்புதலையும், கிறிஸ்துவில் வைக்கவேண்டிய விசுவாசத்தையும் கொண்டிருக்கவேண்டும். மெய்யான விசுவாசமில்லாத இருதயத்தில் எந்த சத்தியத்திற்கும் இடமிருக்க முடியாது. இதை வாசித்து நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், நம்மினத்தில் போலிக்கிறிஸ்தவம் வைரஸ்போல பரவியிருப்பதால் அநேகர் மெய்யான விசுவாசமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களைத் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித பரிசுத்த அடையாளங்களும், நடவடிக்கைகளும் இல்லாதிருப்பதே இவர்களுடைய வாழ்க்கையில் விசுவாசமில்லை என்பதற்கு முக்கிய அடையாளம். மெய்யான விசுவாசமே ஒருவனை பரிசுத்தப்படுத்தி பரிசுத்தமாக்குதலில் ஈடுபாட்டோடு ஈடுபடவைக்கிறது.

அடுத்ததாக, சீர்திருத்த விசுவாசத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து முழுமையாக கற்றுக்கொள்ள நீங்கள் உழைக்கவேண்டும். அதுபற்றி நீங்கள் அதிகம் வாசிக்க வேண்டும்; வாசித்தவற்றை சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாசிப்பு என்கிறபோது எந்தளவுக்கு அவசியமானவற்றை வாசிக்கலாமோ அதேபோல் தவிர்க்க வேண்டியவற்றையும் தயவு தாட்சண்யமில்லாமல் தவிர்க்க வேண்டும். சீர்திருத்த சத்தியங்கள் உங்கள் இருதயத்தில் ஆழமாகப் பதிந்து மனச்சாட்சியின் குரலாக மாறிவிடவேண்டும். அவற்றில் என்றும் அகன்றுவிடாத ஆழந்த நம்பிக்கை இருக்கவேண்டும். சீர்திருத்த இறையியல் போதனைகள் அறிவோடு மட்டும் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் அனுபவ இறையியலாக இருப்பதால் உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் அதனால் பாதிக்கப்பட்டு தேவ பயத்தையும் பக்தி வைராக்கியத்தையும் அது உங்களில் உண்டாக்க வேண்டும்.

சீர்திருத்த விசுவாசம் திருச்சபைக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் வேறெதிலும் பார்க்க முடியாது. சபை வாழ்க்கை இன்று நம்மினத்தில் பெட்டிக்கடை வியாபாரமாக இருக்கிறது. ஆராதனை உணர்ச்சிகளுக்கு தூபமூட்டும் வெறும் சுய ஆராதனை மட்டுமே. பிரசங்கத்தைப்பற்றிச் சொல்லத்தேவையில்லை. இந்நிலையில் சீர்திருத்த விசுவாசத்தில் ஆர்வம் காட்டுகிறவர்கள் தனி ஊழியம் செய்யாமலும், போலி சபைகளுக்கு அடிமையாகாமலும், நல்ல சபைகளை நாடி சபை வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும். அத்தகைய நல்ல சபைகள் நம்மினத்தில் வெகுசில என்பதும் எனக்குத் தெரியாமலில்லை. அத்தோடு நம்மினத்து பண்பாட்டு அசிங்கங்களை மனதிலும் வாழ்க்கையிலும் இருந்து அகற்றி குடும்பத்தை வேதபூர்வமாக கர்த்தரின் பாதையில் நடத்தவேண்டும். வேதவாசிப்பிலும், ஜெபத்திலும் உறுதியாகத் தரித்திருந்து சபையைக் கட்டுவேன் என்று சொன்ன சபை நாயகனாகிய நம்ஆண்டவர் நல்ல சபைகளை நம்மினத்தில் நிறுவ நாம் ஜெபிக்கவேண்டும். இதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நிதர்சனமாக நிகழ்கிறபோதே நீங்களும் வருங்காலத்தில் பத்தோடு பதினொன்றாக, இறையியல் பச்சோந்தியாக மாறிவிடாமலிருக்க முடியும்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s