பக்தி வைராக்கியம் – 5 – டேவிட் மெரெக்
ரோமர் 12:17 – 15:7 – ஒரு கண்ணோட்டம்
இது சம்பந்தமாக, ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் என்பவர் சொல்லிய ஒரு மேற்கோள் வாக்கியத்தை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
“பாவத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் விடுபட்டு கிறிஸ்துவிடம் பரிசுத்தமடையும்படியாக மாறுவதற்கு தீவிர ஆர்வமும் சுய அர்ப்பணிப்பும் அவசியம் என்ற போதனை அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்தே இங்குமங்குமாக சில இடங்களைத் தவிர்த்து பெரிதாக எங்கும் காணப்பட்டதில்லை என்ற எண்ணமுடையவர்கள், இதைப்பற்றிய போதுமான அறிவைப் பெற்றிருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.”
இங்கே ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ், திருச்சபையாக அதிலும் குறிப்பாக நற்செய்தி ஊழியர்களாக இருப்பவர்களுடைய உழைப்பின் முதன்மை நோக்கம் எதன்மீதிருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அது “பாவத்திலிருந்தும் சாத்தானிடமிருந்தும் விடுபட்டு கிறிஸ்துவிடம் பரிசுத்தத்திற்காக மாறுவதாகும்”. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் சுவிசேஷத்தைக் கேட்பதன் மூலமாக மட்டுமே மனமாற்றமடைய முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதிலேயே அவர்களுக்குத் தீவிர வைராக்கியம் இருக்க வேண்டும். அது கர்த்தருடைய பெரிய கட்டளை என்று அழைக்கப்படுகிறதன் மீதுள்ள வைராக்கியமாகும். எனினும், இன்னுமொரு உண்மையும் இங்கிருக்கிறது. இந்த மையக் கட்டளையிலிருந்து நாம் வழிதவறிச் செல்லக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய பல விஷயங்களும் இருக்கின்றன.
இந்த ஆக்கத்தில், நம்மில் காணப்படும் கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடியது அல்லது பெரிதும் குறைக்கக்கூடியதுமான நான்கு விஷயங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தப் போகிறோம். சென்ற ஆக்கத்தில், பக்தி வைராக்கியத்தை விளக்கும் மைய வசனத்தைச் சுற்றியுள்ள வசனங்களிலுள்ள நடைமுறை போதனைகளை விளக்கமாக படித்தோம். அந்த மைய வசனம் ரோமர் 12:11 “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்”. இந்த வசனத்தின் சந்தர்ப்ப சூழலைப் பற்றித்தான் கவனித்து வருகிறோம். அது ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் வரைபடத்தை நமக்குக் காண்பிக்கிறது. அது அவனிலுள்ள பல ஆவிக்குரிய அம்சங்களின் இணைப்பை நமக்குக் காட்டுகிறது, அதில் பக்தி வைராக்கியமும் ஒன்றாக இருக்கிறது. இவைகள் இல்லாமல் உங்களில் பக்தி வைராக்கியம் இருப்பதற்கு வழியில்லை. இவைகள் எங்கிருக்கிறதோ அங்கு பக்தி வைராக்கியமும் இருக்கும்.
இதுவரை நாம் ரோமர் 12:11ஐ சுற்றியுள்ள உடனடி சந்தர்ப்பதைப் பற்றி, அதாவது ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் கவனத்தைச் செலுத்தினோம். ஆனால் ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம், இந்த நடைமுறை விஷயங்கள் ரோமர் 15:7 வரைக்கும் தொடருகிறது என்பதை. ஆரம்பத்தில் நான் இந்தப் பாடத்தை 12:16 வரையுள்ள வசனங்களோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இதைத் தொடர்ந்துள்ள வசனங்களை நான் தியானித்தபோது, அவைகள் இந்த சந்தர்ப்பதை அடுத்துள்ளதாக இருந்தபோதும் அவைகளும் இந்தப் பாடத்திற்கு மிகவும் நெருக்கமானவை என்பதை உணர்ந்தேன். அதுவும் குறிப்பாக சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு மிகவும் பொருத்தமானவை என்பதை நான் உணர்ந்தேன். ரோமர் 12:17 முதல் 15:7 வரையுள்ள வசனங்கள் நம்முடைய கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய அல்லது பெரிதும் குறைக்கக்கூடியதுமான நான்கு விஷயங்களை அடையாளம் காட்டுகிறது. இந்தப் பெரிய பகுதியை சுருக்கமாக இந்த ஆக்கத்தில் நாம் படிக்கப் போகிறோம்.
கிறிஸ்தவ வைராக்கியத்தை அழிக்கக்கூடிய முதலாவது அம்சம். என்னவென்றால், நமக்கு எதிராக பாவம் செய்பவர்களுக்கு அன்பற்ற, மன்னிப்பற்ற, கசப்பான, பழிவாங்குதலை பதில் நடவடிக்கையைச் செய்வதாகும். வாசியுங்கள் ரோமர் 12:17-21. இந்த வசனத்தில் பவுல், நம்மை தவறாக அல்லது கேடாக நடத்துபவர்களுக்கு பக்தியுள்ள பதில் நடவடிக்கையை செய்யும்படி அழைக்கிறார். நாம் ஏற்கனவே பார்த்த 14வது வசனத்திலேயே இதை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதாவது, “உங்களை துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி சபியாதிருங்கள்” என்றார். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதினால் துன்பப்படுத்தப்படுவதைக் குறித்து இங்குச் சொல்லுகிறார். ஆனால் இப்போது, 17வது வசனத்தில் பவுல் மறுபடியுமாக அதே கருப்பொருளைக் குறிப்பிடுகிறார். தீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்று வலியுறுத்துகிறார். 20வது வசனத்தில் நம்முடைய விரோதிக்கு இரக்கம் காட்டும்படி சொல்லுகிறார். பிறகு 21வது வசனத்தில், தீமையினால் வெல்லப்படாமல் இருங்கள் என்று சொல்லி இதை முடிக்கிறார்.
பவுல் இந்த இடங்களிலெல்லாம், மக்கள் பெரும்பாலும் நமக்கு தீமை செய்வார் என்ற உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறார். மேலும், போதகர்களாக இருப்பவர்களும் நிச்சயமாக இந்த தீமைகளுக்கு விலக்கப்பட்டவர்களல்ல. அவிசுவாசிகளிடமிருந்து சில வேளைகளில் இவை வரலாம். விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களிடமிருந்தும் சில வேளைகளில் வரலாம். உங்களுடைய மதிப்பை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களுக்கு எதிரான வதந்திகளை பரப்பலாம். அந்த நபரின் வாழ்க்கையில் அக்கறைக்காட்டி அதிகமான நேரத்தை நீங்கள் அவருக்காக செலவிட்டிருக்கலாம். அவர்கள் உங்கள் நண்பர்கள் என்று எண்ணியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது அவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களையே தாக்கலாம். உங்களை ஏமாற்றலாம் அல்லது உங்களிடமிருந்து திருடலாம். உங்களிடம் பொய் பேசலாம் அல்லது உங்களை சரீரப்பிரகாரமாக தாக்கவும் செய்யலாம். வளர்ந்த பெரியவர்களானவர்களுக்கும் இப்படி நடக்கிறது. நம்மில் சிலர் சிறு வயதிலேயே இப்படியான இழிவான வகையில் நடத்தப்பட்டிருக்கலாம். கடுமையானதும் கொடூரமானதுமான வார்த்தைகளைக் கொண்டு நம்மை இழிவுபடுத்தியிருக்கலாம். நம்முடைய பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமே நம்மிடம் அன்புகாட்டாமல் இருக்கலாம். ஒருவேளை நாம் புறக்கணிக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட நிலையில் இருக்கலாம். வயதானவர்கள் அல்லது பெரியவர்கள் நம்மை பாவகரமான வகையில் நடத்தியிருக்கலாம். ஒருவேளை சரீரப்பிரகாரமாக அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகைய கேடான காரியங்கள் மற்றவர்களிடமிருந்து நமக்கு வரும்போது நம்முடைய இருதயத்தில் தொடர்ந்திருக்கும் பாவத்தின் இயற்கையான பதில் என்ன? தீய செயல்களின் மூலம் அதை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். இது பெரும்பாலும் அந்த நபரை சபிக்கும். இது பெரும்பாலும் நமக்கான சுய பாதுகாப்பை ஏற்படுத்தும்படி அவர்களிடமிருந்து தள்ளி நிற்கும்படி நம்மைச் சுற்றி ஒரு மதில் சுவரை எழுப்பிக்கொள்ளும். இந்தக் கேடுகளுக்கு நான் எப்படி உள்ளாக்கப்பட்டேன் என்று என்னுடைய இருதயம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். இதன் தொடர்ச்சியாக என்னுடைய இருதயத்தில் கோபம் அதிகரிக்கும். என்னுடைய ஆத்துமாவில் கசப்பு அதிகமாகும். எனக்கு நடந்த கேட்டிற்கு சமன் செய்யப் பார்ப்பேன். என்னால் முடியுமானால், எனக்கு அதற்கான தைரியம் இருக்குமானால், ஏதாவதொரு வழியில் அதற்கு பதில் செய்ய முயற்சிப்பேன். முடிவாக, எனக்கு கேடு செய்தபடியினால், அவர்கள் செய்ததற்குத் தக்க பலனை அடைய வேண்டும் என்று விரும்புவேன்.
உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த வகையில் உங்களுடைய பதில் நடவடிக்கை இருந்தால், மற்றவர்களை நேசிப்பதும் அவர்களுக்கு நன்மை செய்கிறதுமான பக்தி வைராக்கியத்தை உங்களில் எப்படிப் பார்ப்பது? இது பக்தி வைராக்கியத்தை அழித்துவிடும். மேலும், போதகராக இருக்கிறவர்கள் ஊழியத்தில் எந்த முயற்சி எடுத்தாலும், அது பலன்தராதது மட்டுமல்ல மற்றவர்களுக்கு கேடாகவுமே அமையும். நம்முடைய கசப்பான ஆத்துமா மற்றவர்களையும் நம்மையும்கூட விஷமாக்கிவிடும் (எபிரெயர் 12:15). நம்முடைய பாவகரமான பதில் நடவடிக்கையினால் தேவனுடைய ஆவியை நாம் துக்கப்படுத்துகிறவர்களாகவும் இருப்போம் (எபேசியர் 4:30-32).
எனவே மற்றவர்கள் நமக்கு தீங்குசெய்யும்போது நாம் செய்ய வேண்டியதென்ன? முதலாவதாக, நீதியை எதிர்பார்ப்பது தவறானதல்ல என்பதை பவுல் இங்கு தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். ஏனென்றால், நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் தேவன் நீதியின் தேவனாக இருக்கிறார். இருப்பினும், தவறுக்கான நீதியை நிறைவேற்றுவதை நம்முடைய கையில் எடுப்பது தவறானது என்பதையும் அவர் தெளிவாக விளக்கியிருக்கிறார். நான் ஒரு பெற்றோராகவோ அல்லது அரசாங்கமாகவோ இல்லாதபட்சத்தில் தவறுக்கான நீதியை நிறைவேற்றுவது என்னுடைய வேலையல்ல. பெற்றோருக்கும் அரசாங்கத்திற்கும் ஆண்டவர் ஒரு வரம்பிற்குட்பட்ட, நீதி வழங்குவதைக் கொடுத்திருக்கிறார். எனவே, எனக்கு எதிராக ஒருவன் தீங்கு செய்கிறபோது அதற்கான பதில் நடவடிக்கையாக நானும் தீங்கு செய்யப்பார்ப்பது தவறானது. அப்படியானால், நீதி என்னவாவது? 19வது வசனம் இதற்கான பதிலைத் தருகிறது. கடவுள் நீதியை நிறைவேற்றும்படி நாம் விட்டுவிட வேண்டும். பழிவாங்குவது கடவுளுக்குரியது. நாம் செய்வதைவிட அவர் சிறப்பான வகையில் நீதியை நிறைவேற்றுவார்.
கடவுளுடைய கையில் பழிவாங்கும் வேலையை நாம் விட்டுவிட்டால், நம்முடைய ஆத்துமா அவற்றிலிருந்து விடுவிக்கப்படுகிறது. கடவுளின் கிருபையினால், நாம் ஒப்புரவாக்கப்படும்படி விடுவிக்கப்படுகிறோம். நம்மால் இயன்றமட்டும் மன்னிக்கவும், சமாதானத்துடன் வாழவும் விடுவிக்கப்படுகிறோம் (வசனம் 18). அவர்களுக்கு இரக்கங்காட்ட விடுவிக்கப்படுகிறோம் (வசனம் 17, 20-21). தீமையை நன்மையினால் மேற்கொள்ள விடுவிக்கப்படுகிறோம். பக்தி வைராக்கியத்தை வெளிப்படுத்தி நாம் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்ய விடுவிக்கப்படுகிறோம்.
எனக்கு எதிராக தீமை செய்தவன், தன் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்துவிட்டால், எனக்கு எதிரான அவன் செய்த தீமைக்கான நீதியை அனுபவிக்காமலேயே போய்விடுவானே, இதற்கு என்ன செய்வது? நீதி என்னவாவது? ஓ, நாம் மறந்துவிட்டோமா? சிலுவையிடம் போங்கள். அவனுடைய பாவத்திற்கான தேவகோபத்தின் தண்டனையை தேவ ஆட்டுக்குட்டியானவர் சிலுவையில் அடைந்ததைப் பாருங்கள். அந்த நீதி போதுமானதில்லையா? இல்லையென்றால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பாவங்களுக்கு கிறிஸ்துவின் பலி தேவையாக இருக்குமானால் மற்றவர்களுக்கும் அப்படித்தானே. கிறிஸ்துவின் இரத்தம் உங்களுக்கு பாவ மன்னிப்பை வழங்கும், ஆனால் மற்றவர்களை நிராகரிக்கும் என்று நீங்கள் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லுவது பயங்கரமான மாய்மாலமாகும்.
2வது அம்சம். அரசியல் நடவடிக்கைகளில் தவறான முறையில் ஈடுபடுதல். வாசியுங்கள் ரோமர் 13:1-7. இந்த வசனங்களில் பவுல், நாட்டு அரசாங்கத்திற்கு நம்முடைய பக்தியுள்ள பதில் நடவடிக்கையை கோடிட்டுக் காட்டுகிறார். ரோமர் 12:10ல், ஒரு ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவன் மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மதிக்கிற தாழ்மையின் அன்பைக் கொண்டிருப்பான் என்பதை நாம் பார்த்தோம். இப்போது அந்த மதிப்பையும் முன்னுரிமையையும் நாட்டை ஆளுகிறவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று பவுல் சுட்டிக்காட்டுகிறார். உண்மையில் அவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகவே நாட்டை ஆளுகிறவர்களை தாழ்மையுடனும் மரியாதையுடனும் தேவ பயத்துடனும் நடத்த வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வற்புறுத்தினாலொழிய நாம் அவர்களை எதிர்க்கவோ கீழ்ப்படியாமல் போகவோ கூடாது (அப்போஸ்தலர் 4:18-19; 5:27-29). கடவுளுக்கு முன்பாக நல்ல மனச்சாட்சியைக் கொண்டிருக்கவும் தண்டனையைத் தவிர்க்கவும் நாம் அவர்களுக்கு அடங்கிப் போக வேண்டும். நாம் அவர்களுக்கு வரி செலுத்துகிறோம். நம்முடைய அரசாங்கத்தை சட்டவிரோதமான படைகளின் மூலமாக தூக்கியெறியப் பார்ப்பது அல்லது வேறு எந்த முயற்சியின் மூலமாக அரசாங்கத்தை மாற்றப் பார்ப்பது பாவகரமானது. சில கிறிஸ்தவர்கள் இது வாதத்திற்குரியது என்று எண்ணினாலும், நான் இதை உறுதியாக நம்புகிறேன்.
நாட்டு ஆட்சியாளர்களைப் பற்றிய இந்த வேத விதிமுறைகள் போதகர்களுக்கும் பொருந்தும். அவர்கள் எந்த அரசாங்கமாக இருந்தாலும் இது பொருந்தும். அரசாங்கத் தலைவர்களுக்குக் கீழ்ப்படியாமல் போவதும் (கடவுளுக்குக் கீழ்ப்படிவது முதன்மைபெறுகிற காரியங்களைத் தவிர்த்த ஏனையவற்றிற்கு) அவமதிப்பதும் கிறிஸ்தவர்களிடம் கட்டாயம் இருக்கக்கூடாது, போதகர்களிடமும் கூட. இப்படிக் கீழ்ப்படியாமல் போகும்படி நம்மை உந்தித்தள்ளும் எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாக பக்தி வைராக்கியமாக இருக்க முடியாது. மாறாக, இத்தகைய பாவகரமான செய்கை பக்தி வைராக்கியத்தை குறைக்கும் அல்லது அழித்துவிடும்.
அரசியல் நடவடிக்கையில், அவை சட்டப்பூர்வமானதும் பாவமற்றதாகவும் இருந்தபோதும், போதகர்கள் ஈடுபடுவது பக்தி வைராக்கியத்தோடு தொடர்புடைய ஒரு நுட்பமான ஆபத்திற்குள்ளாவார்கள். அந்த ஆபத்து என்னவென்றால், கடவுள் அவர்களுக்குக் கொடுத்துள்ள பணிகளிலிருந்து கவனம் சிதறி சமரசத்தில் போய் முடியும். அதனால் பக்தி வைராக்கியத்தின் ஒரு பகுதி நிச்சயம் குறையும். பவுல் தன்னுடைய உடன் ஊழியனான தீமோத்தேயுவுக்கு சொல்லிய வாக்கியங்களை நினைவுகூருங்கள், 2 தீமோத்தேயு 2:3-4: “நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச் சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.”
மேலும் நம்முடைய இறுதி எதிர்பார்ப்பு அற்புதமான ஒரு கிறிஸ்தவ அரசங்கம் ஏற்படுவதல்ல. மேகங்கள் மீது கிறிஸ்து வர வேண்டும் என்பதே நம்முடைய இறுதி எதிர்பார்ப்பு.
3வது அம்சம். மக்கள்மீது அன்புகாட்டுவதற்கு மாறாக பாவ இச்சைகளிலும் ஏனைய பாவங்களிலும் சிக்கிக்கொள்ளுதல். வாசியுங்கள் ரோமர் 13:8-14ஐ. இப்போது பவுல், ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் ஏற்கனவே நாம் பார்த்த ஆரோக்கியமான, பக்தியுள்ள ஒரு கிறிஸ்தவனில் காணப்படும் மிக முக்கியமான அம்சங்களை மீண்டும் எடுத்து மேலும் விரிவுபடுத்தி விளக்குகிறார். அந்தக் கருப்பொருள் நம்மை சுற்றியுள்ள மற்றவர்களிடம் காட்டும் அன்பு. இத்தகைய அன்பு பக்தி வைராக்கியத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பவுல் சொல்லியிருந்தபோதிலும், அது இந்த இடத்திலும் இணைக்கப்பட்டுள்ளதென்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பை நாம் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய கடனாக பவுல் இங்கு படம்பிடித்துக் காட்டுகிறார். இது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. ஆண்டவராகிய இயேசு இதையே இரண்டாவது பிரதான கட்டளையாக அடையாளம் காட்டுகிறார். அதாவது “உன்னிடத்தில் நீ அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக”.
எனினும், பவுல் மற்றவர்களிடத்தில் அன்புகூருவதைப் பற்றி பொதுப்படையாக இங்கு பேசவில்லை. அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இரண்டாவது பிரதான கட்டளை என்பது பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பகுதியின் சுருக்கமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். பத்துக்கட்டளைகளின் இரண்டாம் பகுதியை நாம் மீறுகிறபோது மற்றவர்களிடம் நாம் அன்புகாட்ட வேண்டும் என்கிற பொறுப்பை நாம் மீறுகிறோம் என்று பவுல் சொல்லுகிறார். வெறுப்பு, கொலை, விபச்சாரம் உட்பட எல்லாவகையான ஒழுக்கக்கேடு, மற்றவர்களைத் திருடுதல், மற்றவர்களிடத்தில் பொய் சொல்லுதல், மற்றவர்களுடையதை இச்சித்தல் ஆகியவற்றை கவனத்தோடு இருந்து தவிர்ப்பதையே அன்பு என்று வேதம் சொல்லுகிறது. இப்படியான நடவடிக்கைகள் நம்முடைய அயலானுக்கு கேடு உண்டாக்கும். ஆகவே அவர்கள் அன்பாக இருக்க முடியாது. அவர்கள் மெய்யான பக்தி வைராக்கியமுள்ளவர்களாகவும் இருக்க முடியாது.
நாம் விசுவாசித்த காலத்தைவிட இப்போது இயேசுவின் வருகை நெருங்கியிருப்பதினால் பவுல் தொடர்ந்து நம்மை எழுப்பிவிடுகிறார். அந்தகாரத்தின் கிரியைகளைக் களைந்துவிட்டு ஒளியின் ஆயுதங்களை தரித்துக்கொள்ளும்படி பவுல் நம்மை அழைக்கிறார். அவர் மறுபடியும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். களியாட்டையும் வெறியையும் விட வேண்டும் என்கிறார். எல்லாவித ஒழுக்கக்கேடுகளையும் இச்சைகளையும் விட வேண்டும் என்கிறார். மற்றவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பொறாமையையும் விட வேண்டும் என்கிறார். இவையாவும் மற்றவர்களுக்கு எதிராக நாம் பாவம் செய்வதற்கு வழிவகுக்கும். இவை அன்புக்கும், பக்தி வைராக்கியத்திற்கும் எதிரானவை. இவற்றிற்கு பதிலாக, விசுவாசத்தினாலே நம்முடைய இரட்சகரை தரித்துக்கொண்டு, நம்முடைய சரீரம் அதன் இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள வழி ஏற்படுத்தாமல் இருப்போமாக. உண்மையில் இயேசு, நம்முடைய இருதயத்திலுள்ள இச்சைகள் வெளியில் வருவதற்கு முன்பாக அவைகளிலிருந்து நாம் மனந்திரும்பி அவைகளை அழிக்க வேண்டும் என்கிறார். ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பதே இருதயத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று என்று சொல்லுகிறார் (மத்தேயு 8.27-30). உண்மையில் இத்தகைய பாவகரமான இச்சைகள் நம்முடைய இருதயத்தில் இருப்பது மற்றவர்களிடம் தேவபக்தியுள்ள அன்பைக் காட்டுவதற்கு எதிரானது. மேலும், இவ்விதமான இழிவான இச்சைகளை அதாவது பெண்ணிடம் சரீரப்பிரகாரமாக விபச்சாரத்தில் ஈடுபடாமலிருந்தாலும் அத்தகைய இருதயத்தில் பக்தி வைராக்கியம் நெடுநாள் நீடித்திருக்க முடியாது. இருதயம் மற்றும் கண்களின் இச்சைகள், சரீரப்பிரகாரமான ஒழுக்கக்கேடு, வெறி, களியாட்டு, பெருந்தீனி, சண்டை, மற்றவர்களுடையதை இச்சித்தல் மற்றும் எடுத்துக்கொள்ளுதல், நாம் விரும்பியதை மற்றவர்களிடமிருந்து பெற பொய் சொல்லுதல் ஆகிய இவைகள் நம்மிலுள்ள கிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தை அழித்துவிடும்.
நான் உங்களிடம் கேட்கிறேன், சகோதரரே, சரீரத்தின் இச்சைகளை நீங்கள் எப்படிக் களைந்து போடுகிறீர்கள்? இணையம் மற்றும் ஆபாச பாலியல் படங்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்? உங்களுடைய மனைவியை தவிர்த்த ஏனைய பெண்களை, சிறுமிகளை பார்க்கிற, நினைக்கிறவிதத்தில் எப்படி உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள்? பணமோ, உணவோ, உலக இன்பமோ உங்களுடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி நீங்கள் அவைகளை வணங்கும் கடவுளாக இருக்கிறதா? உங்களுடைய ஆத்துமாவினிமித்தம் நீங்கள் உண்மையாக இதற்கு பதில் காணுங்கள். மற்றவர்களினிமித்தமாகவும் இவைகளுக்கு உண்மையாக பதில் காணுங்கள். மற்றவர்கள் மீதான அன்பு இங்கு பணயமாகிறது என்பதினால் மட்டுமல்ல, ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கான பக்தி வைராக்கியமும் பணயமாகிறது.
4வது அம்சம். கடவுளுடைய வார்த்தையில் தெளிவாக சொல்லப்படாததும் அவரவர் விருப்பத்திற்கேற்ப விடப்பட்ட காரியங்களில் பாவகரமான நோக்கத்துடன் பதில் நடவடிக்கை செய்தல். ரோமர் 14:1 முதல் 15:7 வரையுள்ள நீண்ட பகுதியில் பவுல் விளக்கியிருக்கிற, கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படையாக கட்டளையிடப்படாத சந்தேகத்திற்குரிய விஷயங்கள் மற்றும் அபிப்பிராயங்கள் குறித்த காரியங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம். இந்த முழுப்பகுதியையும் நாம் இப்போது விளக்கமாக பார்க்கப் போகிறதில்லை. சில பகுதிகளை மட்டுமே பார்க்கலாம். பின்வரும் வசனங்களை வாசியுங்கள் & ரோமர் 14:1-4, 14-17; 15:5-7.
அன்பு மற்றும் தாழ்மையாகிய கருப்பொருளே மறுபடியும் இங்கே முன்னிறுத்தப்படுகிறது, அதாவது முன்பு பவுல் அடிக்கோடிட்டுக் காட்டிய ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் அம்சங்கள். அவரவரின் விருப்பத்தையொத்த குறிப்பிட்ட காரியங்களுக்கு, பவுல் ரோமர் 12:1-16 வரையுள்ள வசனங்களில் ஏற்கனவே அவர் சொல்லியவைகளையே இங்கும் குறிப்பிட்டு விரிவுபடுத்தி விளக்குகிறார். மற்றவர்களை மதித்து அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் சகோதர சிநேகத்தைக் குறித்துப் பேசியிருக்கிறார் (12:10). தன்னுடைய கருத்தே சிறந்தது என்றும் ஞானமானது என்றும் இல்லாமல் மனத்தாழ்மையோடு மற்றவர்களோடு ஒரே சிந்தையாயிருக்க வேண்டும் என்பதைக் குறித்து பேசியிருக்கிறார் (12:16). கடவுளால் நேரடியாக கட்டளையிடப்படாத எந்த விஷயங்களிலெல்லாம் கிறிஸ்தவர்கள் வேறுபட்டிருப்பார்கள் என்பதை குறிப்பாக இப்போது விளக்குகிறார்.
யூதர்கள் மற்றும் புறஜாதியாரிலிருந்து மனமாற்றமடைந்து கூடிவரும் சபையை இங்கு குறிப்பிடுகிறார். இன்னமும் யூதர்கள் சுத்தமாயிருத்தல், சுத்தமான உணவு மற்றும் அதைச் சார்ந்த காரியங்களில் பழைய உடன்படிக்கையின் கட்டளைகளிலேயே அவ்வப்போது தங்கியிருக்கிறார்கள். இங்கே அவர்களே பலவீனமான சகோதரர்கள். மறுபுறம், புறஜாதியார் இயேசு எல்லா உணவும் புதிய உடன்படிக்கையின் கீழ் சுத்தமானதுதான் என்று அறிவித்திருப்பதினால் அவர்கள் இத்தகைய காரியங்களை அனுபவிப்பதில் சுதந்திரம் கொண்டு மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறார்கள் (வசனம் 14). இவர்களே இங்கு பலமான சகோதரர்கள். இது போன்ற சூழ்நிலைகளில், ஒரு சவாலான காரியம் என்னவென்றால், பலவீனமான சகோதரர்கள் இது போன்ற விஷயங்கள் இன்னமும் பக்தியோடு தொடர்புடையதென்று நம்புகிறார்கள், அப்படி அவை இல்லாதிருந்தபோதும்.
இங்கே பலமான சகோதரர்கள் இன்னும் தெளிவடையாத பலவீனமான சகோதரர்களை அசட்டை செய்கிறதும் தாழ்வாகப் பார்க்கிறதுமாக இருந்து கொண்டிருந்தார்கள். அத்தோடு பலவீனமான சகோதரர்கள் பலமான சகோதரர்களை உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல என்று அவர்களை நியாயந்தீர்த்து கண்டனம் பண்ணினார்கள். இரண்டும் தவறானது என்று பவுல் சுட்டிக்காட்டினார். பலவீனமான சகோதரர்கள், கடவுள் மட்டுமே செய்யக்கூடிய நியாயத்தீர்ப்பை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது அவர்கள் செய்த தவறு. பலமான சகோதரர்கள், பலவீனமான சகோதரர்கள் மனச்சாட்சிக்கு எதிராக பாவம் செய்யும்படி அவர்களைத் தூண்டக் கூடிய காரியங்களில் ஈடுபட்டது அவர்கள் செய்த தவறு. ஆனால் தேவனுடைய ராஜ்யம் உணவு சம்மந்தப்பட்டதல்ல, பரிசுத்த ஆவிக்குள் நீதியையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் உள்ளடக்கியது. இருதரப்பினரும் தேவனை மகிமைப்படுத்துவதிலும் ஒருவரையொருவர் ஏற்பதிலும் இணைந்து ஒரே சிந்தையாயிருக்க வேண்டும்.
வேதத்தில் நேரடியாக போதிக்கப்படாத காரியங்களில் இன்றும் கிறிஸ்தவர்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். சிலர், மது கலப்பிருக்கிற எந்தவொரு குளிர்பானத்தையும் குடிக்கக்கூடாது என்று சொல்லுவார்கள், ஆனால் வேதமோ மதுபான வெறியனாயிருக்கக்கூடாது என்றுதான் சொல்லுகிறது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. மற்றவர்களை அசட்டை செய்வதும், மற்றவர்களின் வழியில் தடைகற்களைப் போடுவதும், அல்லது கிறிஸ்தவ சுதந்திரத்தை அனுபவிக்கிறவர்களை நியாயத்தீர்ப்பு செய்வதும் கண்டனம் பண்ணுவதும் அன்பிற்கும் மனத்தாழ்மைக்கும் எதிரானதாகும். இப்படியான காரியங்களில் கவனத்தை செலுத்துவது பக்தி வைராக்கியத்தை பெருமளவில் குறைப்பதிலோ அழிப்பதிலோதான் போய் முடியும். ஏனென்றால், ஆரோக்கியமான ஒரு கிறிஸ்தவனில் இருக்கும் அன்பும் தாழ்மையும் நெருக்கமாக இணைந்திருப்தே பக்தி வைராக்கியமாகும். இவைகளை அங்கீகரிக்கவும், கிறிஸ்தவ வைராக்கியத்தை பாதிக்கக் கூடிய இத்தகைய காரிங்களைத் தவிர்த்து கடவுளுக்கு மகிமையாகவும் மற்றவர்களுக்கு நன்மையாகவும் இருக்க ஆண்டவர்தாமே நமக்கு உதவுவாராக.